Thursday, July 31, 2008

நீங்க லேட்டா ஆஃபீசுக்குப் போறீங்களா?

இந்தப் பதிவு அவ்வளவு மொக்கையா இருக்காது-ங்கற உறுதிமொழியோட ஆரம்பிக்கறேன். (எல்லாம் நேத்திக்கு வாங்கின அடிதான். வடிவேலு சொல்றா மாதிரி.. என்னா அடி!)

----------------------

எங்க ஆஃபீஸ் நுழைவாயில்ல தாமதமா வர்றவங்க கையெழுத்துப் போட்டுட்டு போக, ஒரு லெட்ஜர் வைக்கலாம்ன்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி முடிவாச்சு. அதுக்கப்புறம் அது என்னாச்சு, வைக்கிறாங்களா... ஒண்ணுமே நான் அவ்வளவா கண்டுக்கல. இவ்ளோ நாள் அந்த லெட்ஜரை பாக்கவும் இல்ல.

ஏன்னா நான் எப்பவுமே, முன்னாடியே போய்ப் பழக்கம்ன்னு பீலா விடல. ஒண்ணு, அந்த லெட்ஜரை வைக்கறதுக்கு முன்னாடி போயிடுவேன். இல்லீன்னா, டைமுக்கு வர்றவங்க, லேட்டா வர்றவங்க எல்லாரும் வந்தபிறகு அந்த லெட்ஜரை எடுத்து வெச்சுடுவாங்களே, அப்புறம்தான் போவேன்! (2வதுதான் அதிகம்!) அப்படியே, அந்த லெட்ஜர் இருக்கும்போது போனாலும், ஏதோ கொஞ்சம் மரியாத இருக்கறதால உள்ள போய் பைக்கை நிறுத்தின உடனே யாராவது வந்து பஞ்ச்சிங் கார்டை வாங்கிட்டு போய் பஞ்ச் பண்ணீட்டு வர்றதால, கேட் பக்கம் இருக்கற அந்த நோட்டை பாக்கற வாய்ப்பே வர்ல.

எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னா, நேத்து அந்த லெட்ஜரைப் பார்த்தேன் என்னால சிரிப்பை அடக்க முடியல.

எல்லா பக்கத்திலும் பத்தி பிரிக்கப்பட்டு - பேர், செக்‌ஷன், தாமதமானதுக்கு காரணம், கையெழுத்துன்னு இருக்கும். மேல `I AM A LATE COMER’ ன்னு பெரிய ஸ்கெட்சுல எழுதியிருப்பாங்க. நேத்து முதல்ல லேட்டா வந்த ஆள் என்ன எழுதியிருந்தார்ன்னா.. பாருங்களேன்...

I AM A LATE COMER (இது HEADING)

1-YES (இவரு LATE COMERன்னு ஒத்துகிட்டாராம்!)
2 – '' '' (இதுக்கெல்லாமாடா டிட்டோ போடுவீங்க?)
3 - Late
4 - BUS LATE
5 - Bike repair
6 – Bus Repair (???)
7 – Bus (இதுதான் எழுதீருந்தாரு., மேல எழுதினத காப்பி பண்ணீருக்காரு, அதுல இருந்த ரிப்பேர்ங்கறது புரியல போலிருக்கு).
8 – Reason (லேட்டா வந்தா REASON எழுதுங்கன்னு சொன்னீங்களே-ம்பாரு!)
9. தாமதமாகிவிட்டது
10. NOT TOMORROW (நாளைக்கு கரெக்ட் டைமுக்கு வர்றேங்கறாரா?)

அப்புறம் நிறைய கிறுக்கல்தான் இருந்தது, என்னன்னே புரிஞ்சுக்க முடியாம.

அந்த முதல் காரணத்துக்கு டிட்டோ போட்டிருந்தத பாத்ததும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.


ஒரு அலுவலகத்துல இருந்த லேட் ரிஜிஸ்டரை பாத்துட்டிருந்த மேலதிகாரி, லேட்டா வந்த எல்லாரையும் அழைத்து “எப்போ ட்ரீட் வைக்கப்போறீங்க?”ன்னு கேட்டாராம். எல்லாரும் எதுக்குன்னு தெரியாம முழிக்க, அந்த லேட் ரிஜிஸ்டரைக் காட்டினாரு. அதுல முதல் ஆள் `என் மனைவிக்கு அதிகாலை ஆண்மகன் பிறந்தான். மருத்துவமனையிலிருந்து வர தாமதமாகிவிட்டது’ ன்னு எழுதியிருந்தாரு. லேட்டா வந்த எல்லாருமே அதுக்கு டிட்டோ போட்டிருந்தாங்களாம்!


அலுவலகத்துக்கு லேட்டா வர்றதுக்கு நம்ம சோம்போறித்தனம்தான் முதல் காரணம்ன்னு சொல்லுவேன்! எழுந்து கொள்வது நேரமாய் எழுந்தாலும், வேறு வேறு வேலைகளால் நேரத்திற்கு அலுவலகம் செல்வதில்லை நாம். இன்னொன்று நம்மள யாரு கேட்கப்போறாங்க என்ற எண்ணம்தான்.


எங்கள் அலுவலகத்தில் எப்போதாவது இந்த தாமத வருகை குறித்த மீட்டிங் போடும்போதெல்லாம், ஒரு கதை சொல்வதுண்டு. (அங்கயுமா? பாவம் அவங்க!)

ஒரு இந்திய ராணுவ சிறையில் மூணு பேர் இருந்தாங்க. ஒரு நிருபர் கேட்கறாரு. ”என்ன தப்பு செஞ்சீங்க?”ன்னு.

முதல் ஆள் சொல்றான். ‘நான் தினமும் தாமதமா வர்றதால எனக்கு பனிஷ்மெண்ட்’ன்னு.

ரெண்டாவது ஆள்: ‘நான் ஒரு நாள் குறிப்பிட்ட டைமுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். ஏதோ உளவு பாக்க வந்ததா சந்தேகப்பட்டு உள்ள போட்டுட்டாங்க’

மூணாவது ஆள் அழுதுட்டிருக்காரு. ஏன்னு கேட்டதுக்கு சொன்னாரு: “நான் 9 மணின்னா, டாண்ணு 9 மணிக்கு வந்துடுவேன். எப்பவுமே க்ரெக்டா வர்றானே, இவன் இந்தியனா இருக்க முடியாது’ன்னு சந்தேகப்பட்டு அரஸ்ட் பண்ணீட்டாங்க”

இப்படித்தான் ஒரு மீட்டிங்-ன்னு அவசரமா என்னை கூப்ட்டாங்க. நான் அப்ப வெளில இருந்தேன். வந்து மீட்டிங் ஆரம்பிச்சு, எம்.டி. பேசீட்டிருக்கும்போது, பக்கத்துல இருந்த ஒரு சீனியர் கேட்டாரு.. “ஏன் கிருஷ்ணா, ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்கலாம்ல. எம்.டி. ”கிருஷ்ணகுமார் எங்க.. கிருஷ்ணகுமார் எங்க”ன்னு பத்து தடவை கேட்டுட்டாரு. ஏன் `லேட்’ன்னு பேர் வாங்குறீங்க?”

நான் சொன்னேன். ”பைக்ல அங்கிருந்து வரவேண்டாமா? விடுங்க. கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க”

Wednesday, July 30, 2008

ஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 2

”ஏய்ய்ய்... இவங்க எங்க இங்க?” டைரக்டரும், இசையமைப்பாளாரும் ஒரே
சமயத்தில் அலறுகிறார்கள்..

“ஏற்கனவே தோனி வேணவே வேணம்னுட்டாரு, அப்படியும் கும்ப்ளே வேணும்ன்னு கூட்டீட்டு போய் இப்போ ஸ்ரீலங்காக் காரங்க காட்டுன காட்டுல, டீமிலிருந்து தூக்கீட்டாங்க. அங்கிருந்து கிளம்பி வந்து சென்னை ஏர்போர்ட்ல மும்பை, பெங்களூர், கல்கத்தா போக ஃப்ளைட் டிக்கெட்டுக்கு காசில்லாம நின்னுட்டிருந்தாங்க. நாமதான் `நான் பிச்சைக்காரன்’ எடுக்கறோமே... அதான் ஒரு நாள் வேலை செய்ங்க. பணம் தர்றேன்னு கூட்டி வந்துட்டேன்”

”சிச்சுவேஷன் ரெடியா” தயாரிப்பாளார் கேட்க..

டைரக்டர் மனதுக்குள்.. “சிச்சுவேஷன் மட்டும்தான் ரெடி. இனிமேதான் கத ரெடி பண்ணணும்”

இசையமைப்பாளார்: “சிச்சுவேஷனெல்லாம் வேணாம், நீங்களா எழுதுங்க. நான் யூஸ் பண்ணிக்கறேன்”

ட்ராவிட் உற்சாகமாகி...

“ஏ பந்தே... ஏ பந்தே
அவன் அடிச்சா சிக்ஸரு போகுற
நான் அடிச்சா ஃபீல்டரைத் தேடுற
பந்தே... ஏ பந்தே...”

“ஓ! அவங்க சிச்சுவேஷனுக்கு பாடுறாங்க... விடுங்க.. விடுங்க”

சச்சின்: “ஆக்சுவலி வாட் ஹேப்பண்ட்ன்னா... “

“யோவ்... என்ன மேன் ஆஃப் த மேட்ச்சா தர்றாங்க? பாடச் சொன்னா பேசற?”

“இல்லீங்க... அவருக்கு அப்பதான் மூட் வரும்”

கங்குலி ஒரு மூலையில் இறங்கி வந்து காற்றில் பேட்டை வீசி ப்ராக்டீஸ் செய்து கொண்டிருக்கிறார்.

“ஹலோ.. சவ்ரவ்... அங்க என்ன பண்றீங்க?”

“ஓ.. நானும் ஆட்டைல இருக்கேனா?”

“இவருக்கு பேட்டை எடுத்து பிட்சுல நிக்கும்போது கூட டீம்ல இருக்கேனா, இல்லையான்னு டவுட் வரும் போல”

கங்குலி: நான் பாடறேன் பாருங்க..

“வரவா.. வரவா.. வரவா...
சச்சினுக்கு வரவா?”

இங்க வரவா’ங்கறது இன்கம்.”


”சரி.. பாட்டு வரிய மட்டும் சொல்லுங்க. விளக்கமெல்லாம் எவனும் கேட்கமாட்டான்”

“வரவா.. வரவா.. வரவா..
சச்சினுக்கு வரவா...
வரவா வரவா.. நானும்
பெவிலியனுக்கு வரவா?”

”அது சரி.. இதெல்லாம் எப்படி பிச்சைக்காரன் படத்துல பாடுறா மாதிரி வரும்?”

”அதெல்லாம் கேக்கக்கூடாது. படத்துலயே லாஜிக் இல்ல... பாட்டுல எதுக்கு லாஜிக்கு?”

“என்னமோ பண்ணுங்க”

இந்த இடத்தில் பதிவர் வெண்பூ உள்ளே நுழைகிறார்.

“என்ன கூத்துய்யா நடக்குது இங்க? பாட்டெழுதறேன்... படுத்தறேன்னு பரிசல்காரனால முடியாதத செய்யச் சொல்றீங்க? நீங்களே படிச்சுப் பாருங்க. நேத்து எழுதினத மனுஷன் படிக்க முடியுமா? இதுல பார்ட் டூ வேற..”

அடுத்த நிமிடம் எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..

“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”

-----------------------------------

முக்கியக் குறிப்பு: இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர், பதிவர் புதுகை எம்.எம். அப்துல்லா (சென்னைக்கு வந்தால் பார்ட்டி தர்றேன் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால்) வளமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்!

Tuesday, July 29, 2008

ஒரு பாடல் உருவாகிறது

டைரக்டர் கிச்சுகிச்சா இசையமைப்பாளர் மீஜிக் மன்னாருடன் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்அமர்ந்திருக்கிறார்.

“என்ன டைரக்டரே, இன்னும் பாடலாசிரியரைக் காணோம்?”

“பாடலாசிரியருக்கா வெய்ட் பண்ணீட்டிருக்கீங்க? நான்கூட இன்னும் உங்களுக்கு வர்லியோன்னு நினைச்சேன்”

“வந்திருச்சேய்யா, இப்போதானே டாய்லெட் போய்..”

“இல்லீங்க... மூடு வர்லியோன்னு கேட்டேன்..”

“அது கிடக்குது கழுத. பாடலாசிரியர் எங்கீங்க?”

“ஹி..ஹி.. நாந்தான் இந்தப் படத்துக்கு எல்லாப் பாட்டையும் எழுதறேன்”

“என்னது? நீதான் எழுதறியா? கிழிஞ்சது போ! நீ எழுதற வசனத்தையே எவனும் புரிஞ்சுக்க மாட்டீங்கறான். இதுல பாட்டு வேற எழுத வந்துட்டியா?”

“நீங்க போடற ம்யூசிக்ல பாட்டெங்கே கேக்கப் போகுது?”

“சரி... என்னமோ.. எழுதறது உம் பாடு, கேக்கறது கேக்கறவன் பாடு... சிச்சுவேஷன சொல்லு”

“அந்தக் கிராமத்துல இருக்கற..”

“என்னது? கிராமமா? நேத்துதான் தயாரிப்பாளர்ட்ட இதுவரைக்கும் போகாத நாட்டுக்கெல்லாம் போகணும்ன்னு ஆஸ்திரியாவிக்கு விசாவெல்லாம் ரெடி பண்ணச் சொன்ன?”

“அங்கதாங்க போய் கிராமத்து செட் போடப்போறேன்..”

”அதுசரி! ஏன்யா இங்க இருக்கற கிராமமெல்லாம் என்னாச்சு?”

”இந்த கிராமங்களெல்லாம் தன் சுயத்தை இழந்துவிட்டன. மரங்களில் கூடு கட்டிக் கொண்டிருந்த குருவிகள், இன்று ஃப்ளாட் வெண்டிலேட்டர்களிலே..”

“யோவ்... என்ன கேமராவா ஓடுது? எதுக்கு இவ்ளோ எமோஷன்?”

“சாரிங்க.. ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணீட்டிருந்தேனா.. அதான்..”

“ஓஹோ... மனப்பாடம் பண்ணித்தான் பேசறியா? அன்னிக்கு ஒரு இண்டர்வ்யூல எல்லாமே என் மனசிலேர்ந்து வருதுன்ன?”

“மனப்பாடம் பண்ணினா, மனசுக்குள்ளதானே இருக்கும்?”

“உன்னையெல்லாம்.. சரி. என்ன சிச்சுவேஷன்?”

”சிச்சுவேஷன் என்னன்னா ஹீரோ உக்கார்ந்திருக்கற கோவில்ல...”

“நீ என்ன `நான்கடவுளா எடுக்கற? ஹீரோவை கோவில்ல உக்காரவெச்சிருக்க?”

”இல்லிங்க நானெடுக்கறது `நான் பிச்சைக்காரன்’”

”தயாரிப்பாளரை மனசுல வெச்சுட்டு எடுக்கற போல... சரி சொல்லு”

“அந்தக் கோவிலுக்கு ஹெராயின்.. ச்சே.. ஹீரோயின் வர்றா, வந்து ஒரு ரூபா ஹீரோவுக்கு போடறா, அப்போ ஒரு ரூபாய்ல என்ன வாங்க முடியும்ன்னு கொதிச்சுப் போய், ஹீரோ நாட்டு விலைவாசிய பாட்டா பாடறான்”

”அடா.. அடா... பிச்சைக்காரன்கூட கேக்கற அளவுக்கு ஆயிடுச்சா நாட்டு நிலைமை?”

“சார்.. பிச்சைக்காரங்கள அவ்வளவு தாழ்வா நினைச்சுடாதீங்க”

“சரி, ம்ம்ம்ம், இது ஓக்கேவான்னு பாரு, தனனா தனனா தனனா, தந்தானா தந்தானா”

“தந்தாளா”ன்னு தானே வரணும்? தந்தானா’ன்னா ஆண்பால் வருது”

“ஆண்பாலா? உன் வாயில கள்ளிப்பால ஊத்த. இது மெட்டுய்யா..”

”ஓ! சரி.. சரி.. தனனா.. தனனா..” (மனதுக்குள் பாடிப்பார்த்து) இந்த வரிகள் ஓக்கேவா பாருங்க...”

“சொல்லு”

“தகஜம் தகஜம் தகஜம், தம்கிடதம் தம்கிடதம்”

“யோவ்... என்ன நக்கலா? மியீசிக்கெல்லாம் நான் போட்டுக்கறேன். நீ பாட்டு வரிய சொல்லு”

“பாட்டு வரிதாங்க இது...”

“பிச்சைக்காரன் எதுக்குய்யா தகஜம்னெல்லாம் பாடணும்?”

“எனக்கு பாரதத்து மேல ஆர்வம் அதிகம்க”

“பாரதத்து மேலயா? அடுத்த ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா?”

“ச்சே.. பரதத்து மேல’ன்னு சொல்ல வந்தேன்”

“அடிங்க... வேற சொல்லுய்யா” என்றபோது தயாரிப்பாளர் உள்ளே நுழைகிறார்.

“டைரக்டரே... நீரொண்ணும் பாட்டு எழுதிக் கிழிக்க வேண்டாம். அதுக்கு புதுசா மூணு பேரைக் கூட்டியாந்திருக்கேன்” என்கிறார்.

இயக்குனரும், இசையமைப்பாளாரும் வாசலைப் பார்க்க...


அங்கே...

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட்!


-என் வலையுலக வரலாற்றில் (?) முதல் முறையாக
(தொடரும்)

-----------------------


டிஸ்கி 1: ஒண்ணுமில்ல.. எழுத எழுத இன்னைக்கு கொஞ்சம் நேரமா வரச்சொல்லி எம்.டி.-யிடமிருந்து ஃபோன். அதான் தொடரும் போட்டுட்டேன்.


டிஸ்கி 2: இந்தப் பின்குறிப்புகளை ‘டிஸ்கி’ன்னு ஏன் சொல்றாங்க? அதுக்கு என்ன அர்த்தம்? (அது தெரியாமயே இவ்ளோ நாள் எழுதீட்டிருந்திருக்கேன்!)

Monday, July 28, 2008

என் முதல் புகைப்பட அனுபவம்

எனக்கு புகைப்படங்கள் மீதும், புகைப்படக் கலை மீதும் சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததுண்டு. ஒரு நல்ல கேமரா வாங்க வேண்டும், புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே (இப்போதும்) புகைப்படக் கலைஞர்கள், அல்லது அதில் ஆர்வமிருப்பவர்களைக் கண்டால் `வாங்கறதுன்னா, என்ன கேமரா வாங்கலாம்?’ என்று கேட்டு வைப்பது என் வழக்கம்!

நான் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, (1997) கேமரா வாங்க ஆயத்தமாகி, இதேபோல விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே `பாரிஸ் கார்னர்’ என்ற `டியூட்டி பெய்ட் ஷாப்’பில் `YASHIKA-ELECTRO 35’ செகண்ட் ஹேண்ட் (தமிழில் என்னவென்று சொல்ல??) கேமரா ஒன்று விற்பனைக்கு இருந்தது. தளி ரோட்டில் மணி என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். (இருக்கிறார்) அவரிடம் அந்தக் கேமரா பற்றிக் கேட்டபோது, `நிறையபேர் மொத மொதல்ல வாங்கணும்ன்னு நினைக்கற கேமரா எலக்ட்ரோ 35 தான். வாங்கிக்கோ’ என்றார். வாங்கினேன். 2400 ரூபாய்! காசு அளவாக இருந்தது. கேமராவும், ரோலும் வாங்கவே கையைக் கடித்தது. வாங்கிவிட்டு நேராக எனது மாமா வீட்டிற்கு சென்றேன். (அப்போதும், இப்போதும் எனக்கு குழந்தைகளை படம் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.) அங்கே எனது மாமாவின் மகனை விதவிதமாகப் படம் பிடித்தேன். ஒரு ரோல் முழுவதும் பிடித்து, நேராக மணியிடம் சென்றேன். கேமராவை வாங்கிப் பார்த்து `நல்லாயிருக்கு’ என்றவர், ஃபோட்டோ எடுத்த விபரங்களைச் சொன்னதும்

“என்ன ஃப்ளாஷ் யூஸ் பண்ணின?” என்று கேட்டார்.

”ஃப்ளாஷ்னா?”

அப்போது அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வை இன்னும் கண்ணில் இருக்கிறது!

“ஃப்ளாஷ் தனியா வாங்கணும். இல்லீன்னா வீட்டுக்குள்ள எடுக்கறது, லைட் வெளிச்சத்துல எடுக்கறதெல்லாம் வராது”

நேஷனல் ஃப்ளாஷ் வாங்கச் சொல்லி அறிவுரை தந்தார். 700 ரூபாய் ஆகும் என்றார். என்னிடம் கொஞ்சம் கூட காசில்லை.

“அப்ப ஃப்ளாஷ் வாங்கற வரைக்கும் இதை உபயோகிக்க முடியாதா?”

“சூரிய வெளிச்சத்துல எடுக்கலாம்” என்றார். அவரிடமே மறுபடி ஒரு ரோல் வாங்கிக் கொண்டுபோய், அதே மாமா பையனை சூரிய வெளிச்சத்தில் சில ஃபோட்டோக்கள் எடுத்தேன்.

அவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேலிருந்து கண்ணாடி ஓட்டிலிருந்து சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அவனை அதற்கு நேராக உட்கார வைத்து, என் பாட்டுக்கு எடுத்துத் தள்ளினேன். அப்போது அவன் மேலே பார்க்க, வெளிச்சத்துக்கு கண் கூசி மூடிக் கொள்ள ஒரு அருமையான படம் வந்தது. (அந்தப் புகைப்படத்தைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!)

அப்போது ஜூனியர் விகடன் `விஷுவல் டேஸ்ட்’ என்று புகைப்படங்களை அனுப்பச் சொல்லி அறிவிப்பு வந்து. உடனே உற்சாகமாகி (ஆஹா, நம்ம கேமரா வாங்கினது அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கு!!) அந்த புகைப் படத்தை அனுப்ப, விஷுவல் டேஸ்ட் வெளியான முதல் வாரத்திலேயே அந்தப் புகைப்படம் ஜூ.வி.யில் வெளியானது.

அந்த சந்தோஷமே மாறாத நிலையில், இன்னொன்றும் நடந்தது. விஷுவல் டேஸ்ட் என்று வாரா வாரம் வெளியாகும் வாசகர்கள் எடுத்த புகைப்படங்களிலிருந்து, மாதத்திற்கு ஒரு சிறந்த புகைப்படத்தை ஏதேனும் பெரிய கேமராமேன்களைக் கொண்டு தெரிவு செய்து, அதை `சூப்பர் டேஸ்ட்’ என்று அந்த வாசகரின் பேட்டியோடு வெளியிடுவார்கள். அது முதல் மாதம் என்பதால் கேமரா ஜாம்பவானான பி.சி. ஸ்ரீராமை தேர்வு செய்யச் சொல்லியிருந்தார்கள். அவர் என்னுடைய புகைப்படத்தை சூப்பர் டேஸ்ட் என்று தேர்வு செய்திருந்தார்!

அந்த வாரத்தில் ஜூ.வி-யின் பின்னட்டையில் ஒரு பக்கம் பி.சி.ஸ்ரீராமும், ஒரு பக்கம் நானும் நடுவில் நான் எடுத்த அந்தப் புகைப்படமும் வெளியானது. அப்போது உடுமலையில் எந்தக் கடையைப் பார்த்தாலும் ஜூ.வி. தொங்கிக் கொண்டிருப்பதை ஒரு பார்வை பர்த்துவிட்டுத்தான் செல்வேன். நிறைய பேர் `இந்த வார ஜூ.வி.ல உங்க ஃபோட்டோ வந்திருக்குல்ல?’ என்று கேட்பார்கள். அந்த ஒரு வாரத்துக்கு நான் நடக்கவேயில்லை! பறந்துகொண்டிருந்தது போலவே இருக்கும்!

இப்படி நான் ஃப்ளாஷ் வாங்கக் காசில்லாமல் சூரிய வெளிச்சத்தில் எடுத்து, பரிசு வாங்கியதை மறக்கமுடியுமா?

----------------------------------------

சரி... இது எனது முதல் புகைப்படம். இதே போல உங்களுக்கும் எத்தனையோ `முதல்’ இருக்கும். அதில் சுவாரஸ்யமான `முதல்’ ஒன்றை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு தொடர் விளையாட்டாக இதை அறிவிக்கிறேன். ஆனால் இது எங்கெங்கோ சென்றால் தொடரே காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. (வடகரை வேலனின் காத்திருந்த காதலி இப்போது எங்கிருக்கிறாள்?) கீழே குறிப்பிட்ட வரிசையில் இது பாஸாக வேண்டும் என்றும் நானே அறிவித்து விடுகிறேன்! அதற்குப் பிறகு தொடர்வதும், நிறுத்துவதும் சென்ஷியின் விருப்பம்!

1. கோவி.கண்ணன்
2. வடகரைவேலன்
3. முத்துலெட்சுமி-கயல்விழி
4. லதானந்த்
5. கயல்விழி
6. வெயிலான்
7. ஆயில்யன்
8. தாமிரா
9. குசும்பன்
10. வெண்பூ
11. வெட்டியாபீசர் (rapp)
12. கிரி
13. VIKNESWARAN
14. புதுகை. எம்.எம்.அப்துல்லா
15. ஜெகதீசன்
16. ச்சின்னப்பையன்
17. ஜோசப் பால்ராஜ்
18. சென்ஷி


(இந்த வரிசை மாறாமலிருக்க இதை எல்லோருமே குறிப்பிடுங்கள்.. ப்ளீஸ்)


சில யோசனைகள்...

# என் முதல் டீச்சர்
# என் முதல் வாகனம்
# என் முதல் ஸ்கூல்
# என் முதல் ரயில் பயணம்
# என் முதல் காதல்
# என் முதல் வாரிசு
# என் முதல்....

இப்படி எது வேண்டுமானாலும். இதே மாதிரிதான் என்றில்லாமல் `நான் முதலில் வாங்கிய அடி’ `நான் முதலில் போலீஸ் ஸ்டேஷன் போன அனுபவம்’ அப்படியும் இருக்கலாம்!

கோவி.கண்ணன் ஜி... ரெடி.. ஸ்டார்ட் மீஜிக்.. ஆரம்பிங்க..

Sunday, July 27, 2008

ஒரு முக்கிய அறிவிப்பு!

நேத்திக்கு என்னோட ஆபரேஷன் சென்ஷிய படிச்ச எல்லாருக்கும் நன்றி! (முத்துலெட்சுமி கயலக்கா, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் வரல?)

சென்ஷி பயந்துபோய் பதில் பதிவு போட்டுட்டாரு! அதுக்காகத்தானே இத்தனை முயற்சிகளும்! என் முயற்சி வீண்போகல!

சென்ஷிகிட்டேர்ந்து இப்படி ஒரு எதிர்வினை வரும்ன்னு தெரிஞ்சு, அவசர அவசரமா காலைல அஞ்சு மணிக்கே எழுந்து படிச்சேன். என் இந்த ஜென்மத்துலயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அஞ்சு மணிக்கு எழுந்திருக்கறேன். வீட்ல உமா “நீங்க அஞ்சு மணிக்கு தூங்கப்போய் பாத்திருக்கேன். இதென்ன அதிசயமா அஞ்சு மணிக்கு எந்திரிச்சுட்டீங்க” ன்னு கேக்கறாங்க!

எதுக்கு இவ்ளோ நேரத்துல-ன்னு நீங்களும் கேக்கலாம். சொல்லீடறேன். திருப்பூர்ல இன்னைக்கு `பவர் ஹாலிடே’யாம்! இன்னைக்கு பூரா கரண்ட் இருக்காதாம்! அதுவும் இன்னைக்கு காலை 6 மணியிலேர்ந்து, திங்கள் காலை 6 மணி வரைக்கும் 24 மணிநேர பவர்கட்-ன்னு புரளி வேற! இன்னைக்கு ஒரு நாள்தான் ரிலாக்ஸா இருப்போம். அதுலயும் மண்ணு! ஆற்காடு வீராசாமி வாழ்க!


சென்ஷியோடப் பதிவைப் படிங்கன்னு சொல்றதுக்காகத்தான் இன்னைக்கு எழுதவந்தேன். பவர் கட்-டை கண்டித்து இன்னைக்கு பதிவே போடக்கூடாதுன்னு இருந்தேன். இருந்தாலும் என்னோட ஆபரேஷன் சென்ஷியைப் படிச்சுட்டு அரைலூஸானவங்க எல்லாம், முழுலூஸாக சென்ஷியோட பதிவையும் படிச்சுடுங்கன்னு சொல்லத்தான் இத எழுதறேன்!

பதிவா இல்லாம - ஒரு அறிவிப்பா, இத வெச்சுக்கங்க!

வர்ட்டா?

டிஸ்கி: எங்க கூத்தையெல்லாம் பாத்துட்டு என்னையும் சென்ஷியையும் பதிவுலகத்தைவிட்டு தூக்கப்போறதா ஒரு வசந்தி -ச்சே.. - வதந்தி பரவீட்டிருக்கு!

Saturday, July 26, 2008

ஆபரேஷன் சென்ஷி

அது ஒரு ஜூலை மாத மாலை.

கோவி.கண்ணன், முத்துலெட்சுமி கயல்விழி, வெண்பூ மற்றும் சில பதிவர்கள் அந்த காவல் நிலையத்திற்குள் செல்கின்றனர்.

“இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்”

‘வாங்க.. என்ன பிராது?’ வரவேற்கிறார் இன்ஸ்பெக்டர் வடகரைவேலன்.

”நாங்கெல்லாம் வலைப்பதிவர்கள்... பிளாக்கர்ஸ்ன்னு சொல்லுவாங்க” கோவியார் ஆரம்பிக்கிறார்.

“யாருலே சொல்லுதாக அப்பிடி?”

`ம்க்கும்! வெளங்குன மாதிரிதான்’ என்று மனசுக்குள் நினைத்த வெண்பூ, முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களைப் பார்த்து...

“கயலக்கா”

“அப்படிக் கூப்பிடாதீங்க”

“சரி.. சரி.. முத்தக்கா.. இந்த இன்ஸ்பெக்டர் ஏதாவது கோக்குமாக்கா கேக்கறதுக்கு முன்னாடி நீங்க எல்லாத்தையும் விலாவாரியா சொல்லீடுங்க”

”நாங்க இணையத்துல எங்க படைப்புகளை எழுதீட்டு இருக்கோம். எங்கள்ல ஒருத்தரான சென்ஷி-ங்கறவரை கொஞ்ச நாளா காணல. அது சம்பந்தமா ஒரு புகார் கொடுக்க வந்தோம்”

“ஓஹோ!” என்று புகாரை வாங்கி அவர்களை அனுப்பிவிட்டு ”வெயிலான்.. இங்க வாங்க” என்று அழைக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் வெயிலானிடம் புகாரை விளக்குறார் வேலன்.

“உங்களை நம்பி இந்தப் புகாரைக் குடுத்திருக்காங்க. இத கண்டுபிடிக்கலைன்னா உங்க மானம் கப்பலேறிடும்”

“நீ வேற கப்பல், கிப்பல்ன்னு பயமுறுத்தாதய்யா. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் வரப் போறாருல்ல. அவர்கிட்டயே இத ஒப்படைக்கலாம்”

அடுத்த சில மணிநேரங்களில்.. கௌபாய் மீஜிக் பின்னணியில் ஒலிக்க, பெரிய மீசையும் தொப்பியுமாய் தனது ஜீப்பில் வந்திறங்கினார் க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் லதானந்த். கூடவே அவரது பெட் கென்சி வாலாட்டியபடி வருகிறது.

வந்ததுமே இன்ஸ்பெக்டரை அழைக்கிறார்.

“ஏனுங்... எதுனா கேசு வந்துச்சுங்களாக்கும்?”

“ஆமாங்..“ என்று அவர் போலவே பேசவும் தனது மீசை துடிக்க ஒரு முறை முறைக்கிறார். உடனே வெயிலானை அழைத்து “அந்தப் புகாரை கொண்டாங்க” என்கிறார் வேலன்.

வெயிலான் அந்தப் புகாரோடு லதானந்திடம் வருகிறார்.

“அங்கிள்.....”

“அடக்கெரகமே.. என்னதிது.. இங்கிதம் இல்லாம... நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்? ச்சொம்மா அங்கிளு, ஆட்டுக்குட்டீன்னு. நானிப்போ ஆபீசர். தெரியுமில்ல?”

“சொரிங்க ஆபீசர்”

” `கெதக்’க்குங்குது எனக்கு. என்ரா சொன்ன?”

”சாரிங்க ஆபீசர்”

“ஆங்...” என்றபடி புகாரைப் படிக்கிறார். உதட்டைச் சுழித்தபடி “ம்க்கும்.. ஒரு எளவும் புரியல. என்னமோ வலைன்ராங்க, பதிவுன்ராங்க. தமிழ்மணம்ரானுங்க... நமக்கு வாய்மணம்தான் தெரியும்” என்று முனகியபடி தனது நண்பர் அப்பநாய்க்கம்பாளையம் அரங்கமுத்துசாமிக்கு தொலைபேசுகிறார்.

“அய்யா... இந்த வலைப்பதிவு, தமிழ்மணம்ங்கறதப்பத்தி ஒங்களுக்கு தெரியுமா”

“குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு காட்சி. தலைவன் தலைவியோடு ஊடல் கொள்கிறான். மலைகளும் மலைசார்ந்த இடமுமான..”

“இவரு வேற” என்று ஃபோனைத் துண்டித்தவராய் வெயிலானை அழைக்கிறாய்.

“வெயிலு... என்ன பண்ணலாம்?”

“நேரா ரூம் போட்டு, எனக்கு வோட்....” என்று சொல்ல ஆரம்பிக்க

“யோவ்... யோவ்.. வாய மூடு. அதெல்லாம் இங்கன பேசிராத. நம்ம இன்ஸ்பெக்டரைக் கூப்பிடு”

“இல்லீங்க. நமக்கு அந்தப் பழக்கமில்லைங்க” என்று வேலனின் குரல் பின்னால் கேட்கிறது.

“அட... அதில்ல. நீரு கம்ப்யூட்டர் சமாச்சாரத்துல கில்லாடியாச்சே... கொஞ்சம் இதெல்லாம் என்னன்னு பாரும்”

“அதத்தான் பாத்துட்டிருந்தேன்” என்று அவர்களை கம்ப்யூட்டர் அருகே அழைத்துச் செல்கிறார்.

“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.

பொறுமையாகப் பார்க்கிறார் லதானந்த். “இதென்ன... மட்டுறுத்தல், நடந்தது என்ன”

“அதெல்லாம் தொறந்துடாதீங்க. நமக்கு வேணாம். இதுல சென்ஷி-ங்கற பேரு இங்க இருக்கு பாருங்க”

“அட.. ஆமா...” என்று திறக்கிறார்கள். ஒரு சில பின்னூட்டங்களில் அவரது பெயர். அதில் ஒரு வலைப்பதிவருக்கு தொலைபேசுகிறார்.

”சென்ஷி வந்தாரா”

“இப்போதான் இங்க வந்து பின்னூட்டம் போட்டாரு. இதோ இருக்காரு. இருங்க லைன் தர்றேன்”

“வணக்கம்” என்கிறார் சென்ஷி.

“அட! ஆளப் புடிச்சுட்டனாட்ட இருக்கு” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் லதானந்த். `இது சென்ஷிதானான்னு தெரியலயே’ என்று வேலனிடம் சந்தேகமாய்க் கேட்டவாறு எதிர்முனையில் பேசுகிறார். “எங்க ராசா இருக்க நீ? ஒன்னையக் காணோமின்னு புகார் வந்திருக்கு ராசா”

“நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”

“அட.. எங்கன இருக்கன்னு தானப்பா கேட்டேன்”

“மீட்சிகளின் வழி கசியும் உதிரம்போல, காலச் சூழலும் இணையத்தொல்லைகளும் என்னை அடர் கானகத்தினுள் சிக்கிக்கொண்ட பெண்ணாய் தவித்து, பின்நவீனத்துவ”

“ஆஹா.. இது சென்ஷியேதாங்க” வேலன் உற்சாகமாகிறார்.


”எப்படிச் சொல்றீரு?”

“இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”

”சரி.. சரி.. இருங்க... என்ன சொல்றாருன்னு கேப்பம்”

“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”

”நிமிஷ கணமா? ஐய.. தல சுத்துதே ராசா”

“எதிராளியின் மீதும், எழுத்தின்மீதும் பழியைச் சுமத்தி தப்பித்துச் செல்லும் வழியில், தெளிந்த நீரோடையின் வடிவ உற்பத்தி வரும் பிரதிபலிப்பில் தொக்கித் தெரியும் நவீனத்துவம் எதேச்சாதிகாரமாய் ஒருத்தரிடமே ஒற்றைப்புள்ளியாய் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூழலில்...”

இங்கே லதானந்த்தின் செல்ஃபோன் வெடித்துச் சிதறுகிறது.

”அடக் கெரகமே.. பாலாஜிகிட்ட என்ன பதில் சொல்றது?” என்று உடைந்த ஃபோனை விரக்தியாய்ப் பார்த்தபடி “வேலன் சென்ஷி இப்படியாக என்ன காரணம்?” என்று கேட்க வேலன் அழைக்கிறார்.

“சார்... இங்கே பாருங்கள். தொலைதூர அடர் கானகத்தே வெளிச்சப் புள்ளியாய் ஒரு அடையாளம் தென்படுவதுபோல...”

“யோவ்... என்னாச்சுய்யா ஒனக்கு?”

“ச்சே” என்று தலையை சிலுப்பிக் கொள்கிறார் வேலன். “இதப் படிங்க” என்று ஒரு வலைப் பக்கத்தைக் காட்டுகிறார்.

படித்து, பிறகு கொஞ்ச நேரம் இணையத்தைப் புரட்டியவர் உற்சாகமாய் நிமிர்கிறார்.

“ஜீப்பை எடு.. வேலன் உக்காருங்க. அடரஸ் தெரியுமா?” என்று ஜீப்பில் தாவுகிறார்.

“வெயிலான் குடுத்தாப்ல” வேலன் சொல்ல, ஜீப் பயணிக்கிறது.

“வெரிகுட் வேலன். சரியான துப்பு கொடுத்தீங்க. ஒங்க சந்தேகம் நெசந்தேன். அவனப் புடிச்சு, முட்டிக்கு முட்டி தட்டினா எல்லாம் தெரியும்”

“ஆமா... சார். ஒழுங்கா கும்மி, மொக்கைன்னு இருந்தவரை கேள்விகேட்டு இப்படி ஆக்கிட்டான்”

“அதுமில்லாம அவன் எழுதியிருந்ததயெல்லாம் படிச்சீங்கள்ல? எப்பப் பாரு பழசையே பேசிகிட்டு, சரக்கே இல்லாத ஆசாமி அவன்” என்றவாறு அந்த வீட்டின் முன் நிறுத்தி காலிங்பெல்லை அழுத்துகிறார்.


------------------------------

பரிசல்காரன்: “ச்சே.. ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னா யாரோ வந்து கூப்பிடறாங்க.. இருங்க யாருன்னு பாத்துட்டு வர்றேன்”

Friday, July 25, 2008

அவியல் – ஜூலை 25

வர வர அவியல் எழுத மேட்டருக்காக அலைய வேண்டியதாயிருக்கு! இந்தவார மேட்டருக்காக ஒரு பேப்பர வெச்சுட்டு டெய்லி குட்டி குட்டியா குறிப்பெடுத்து வெச்சிருந்தேன். இன்னைக்கு தேடறேன்... சிக்கல. சின்னவ மேகா சொல்றா.. “நேத்துதான் `கம்ப்யூட்டர் முன்னாடி எவ்ளோ குப்பை பாரு’ன்னு அம்மா க்ளீன் பண்ணீட்டிருந்தாங்க”-ன்னு! ஹூம்!

----------------------------

ஃபயர்ஃபாக்ஸ் 3 – பதிவிறக்கம் பண்ணீட்டீங்களா? நல்ல வேகமா இருக்கு. அதுல TOOLS போய், ADD ONS-ல, RECOMMENDED ADD ONS ப்ரவ்ஸ் செய்தீர்களானால் FAST DIAL என்றொரு ADD ON இருக்கும். அதை பதிவிறக்கம் செய்து உங்கள் ஹோம் பேஜாக வைத்துக் கொள்ளலாம். (BLANK PAGE ஆக இருந்தால் FAST DIAL தானாக ஹோம் பேஜாக வரும்) முன் பக்கத்திலேயே நீங்கள் அடிக்கடி பார்க்கும் வலையை வைத்துக்கொள்ளலாம். 3x5 என்றால் முகப்பில் 15 விண்டோ தெரியும்! எதற்குப் போக வேண்டுமோ அதை க்ளிக்கிப் போகலாம். இவ்வாறு 100 விண்டோ வரை முகப்பிலேயே வரச் செய்யலாம்!

அதே போல இன்னொரு தளம் அடிக்கடி நாம் பார்க்கும் வெப் பேஜ்களை ஒட்டுமொத்தமாக கொடுத்திருக்கிறார்கள். அது www.allmyfaves.com.

---------------------------

திருப்பூரிலிருக்கும் இன்னொரு பதிவரை நானும் வெயிலானும் சந்தித்தோம். சாமினாதன். ஆள் பார்க்க வெகு ஸ்மார்ட்டாக இருந்தார். அடிக்கடி எழுத நேரமில்லை என்றார். பதிவெழுத நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது. உதாரணமாக சென்னை பார்க் ஷெரட்டான் ஹோட்டலைப் பற்றி அவர் சொன்னது... அங்கே இவர் போயிருந்தபோது அங்கிருக்கும் ஒரு டாக்ஸி ட்ரைவர் சொன்னாராம். “நைட் 9 மணிக்கு கைல பாட்டிலோட செல்ஃப் ட்ரைவிங்க்ல அவரு வருவாருங்க. கொஞ்ச நேரத்துல பின்னாடியே அவங்களும் வருவாங்க. காலைல 4 மணிக்குதான் ரெண்டு பேருமா போவாங்க” (அவரு, அவங்க யாருன்னு இவரு சொல்லவே இல்ல!)

அப்புறம் ஹோட்டல்ல இவருக்கு குடுத்த டாக்ஸில, ட்ரைவர் பின்னாடி பாக்கற ரிவர்வ்யூ மிர்ரர் இல்லியாம். ஹோட்டல்ல இருக்கற எந்தக் கார்லயும் இருக்காதாம். அதுக்கு அவர் சொன்ன காரணம் இன்னும் சுவாரஸ்யம். அது என்னன்னா...

வேணாம். விடுங்க. கோவிச்சுப்பாரு.

சாமினாதன் என்ன பேர்ல பதிவெழுதறாருன்னு கேக்கலியே நீங்க? ஈரவெங்காயம்!

-----------------------------------

இந்தவார விகடன்ல ஜே.கே.ரித்தீஷ் ஒரு கேள்விக்கு பதில் சொல்லீருந்தாரு.

கேள்வி: உங்க அழக கூட்டிக்கொள்ள, மூக்கை ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணப் போறீங்களாமே?

இவரு பதில்: ”நாமெல்லாம் இயற்கை அழகு உள்ள ஆளுங்க (அதுசரி) எதுக்கு அழகா இருக்கறத (???) கெடுக்க ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கணும். இங்கே நம்ம நடிப்பைப் பாக்கறாங்களா, (நடிப்பா? அப்ப கமல் பண்றதெல்லாம்??) இல்லே மூக்கைப் பாக்கறாங்களா? (ரெண்டையுமே பாக்கல!!)”

ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

-----------------------------------

எதிர்க்கட்சிகள்: `அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கெதிராக ஆர்பாட்டம் செய்வோம்!’

ஆளுங்கட்சி: `சரி.. இதோ அறிவிச்சுட்டோம். இனி டெய்லி கரண்ட் கட்டாகும்’

எதிர்க்கட்சி: `அப்படி வாங்க வழிக்கு! இப்ப சரி!’

மக்கள்: ?????????????????????

----------------------------------

யூத்ஃபுல்விகடன்.காமில் லப்டப் மீட்டர் என்று ஒன்று போட்டிருந்தார்கள். அதில் கிருஷ்ணா – உமா என்று போட்டுப் பார்த்தேன். காதலின் சதவிகிதம் 35% என்று வந்தது. பக்கத்தில் உமா என்னை முறைத்த முறைப்பில், `இருப்பா’ என்று, கிருஷ்ணகுமார்-உமாகௌரி என்று போட்டேன். 70% என்றது. மறுபடி எங்கள் பெயரை இனிஷியலோடு போட்டேன் 94.5% என்றது! சந்தோஷமாக எழுந்து போனாள்.

உமா போனபிறகு கிருஷ்ணகுமார் – நமீதா என்று போட்டுப் பார்த்தேன். 45% வந்தது! இதையெல்லாம் நம்பக்கூடாதுங்க!

-------------------------------------

போனவார விகடனில் தமிழ்மகள்-ங்கற தலைப்புல மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர் ம.கார்த்திக் எழுதி வெளிவந்த ஒரு கவிதை என்னை அசரவைத்தது. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே என்னையுமறியாமல் கைதட்டினேன்.. (ஸ்பூன்ல சில்லி பரோட்டா சாப்பிட்டுட்டு இருந்தேங்க!!)


நேற்று என் அப்பாவுக்கு
ஸ்போக்கன் இந்தி!
இன்று எனக்கு
ஸ்போக்கன் இங்கிலீஷ்!
நாளை என் மகளுக்கு
ஸ்போக்கன் தமிழ்!


இந்தக் கவிதை எனக்கு கவிதாயினி அ.வெண்ணிலா வெகுநாட்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதையை ஞாபகப் படுத்தியது...

பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ ப்ளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்.

Thursday, July 24, 2008

கொஞ்சம் கவிதைகள்…! கொஞ்சும் கவிதைகள்!!

நான் காதலிக்கும்போது அதிகமாகக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய கடிதங்களுக்கு நடுவே...


”உனக்காக
ஒரு ரோஜா கொடுத்தபோது
கேட்டாய்...
`இது எல்லா காதலர்களும்
அவரவர் காதலிக்கு கொடுப்பதுதானே’ என்று.

நான் சொன்னேன்..

`கொடுப்பது நானும்
பெறுவது நீயுமாதலால்
இது
தனித்துவம் வாய்ந்தது’ என்று”

இப்படி மொக்கையாக சில கவிதைகளும் இருக்கும். (இந்தக் கவிதையை படிச்சுட்டு மூணு நாள் என்கிட்ட உமா பேசவே இல்ல! அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவைக்க ரொம்ப சிரமப்பட்டேன். இனி ஒரு மூணு மாசத்துக்கு கவிதையே எழுதமாட்டேன் – ன்னு சொன்னப்பறம்தான் பேசவே சம்மதிச்சா!!)


அதுக்கப்புறம் சிலகவிதைகள் எழுதி, உமாகிட்ட கொஞ்சம் நல்லபேர் வாங்கினேன்னு வைங்க! `காதலுடன் சில கவிதைகளும்’ - ன்னு அதை பதிவுலகூட போட்டிருந்தேன். இப்போ... வேற சில ஜாம்பவானகள் எழுதின எனக்குப் பிடிச்ச சில காதல் கவிதைகள் உங்கள் பார்வைக்கு...

மரம் நடுங்கள்..
மரம் நடுங்கள்..
என் அவள்
இந்த வீதியில்தான் நடந்து போகிறாள்
மரம் நடுங்கள்!
-ராசி. அழகப்பன்

தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்.
நீ
நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-பழனி பாரதி

உன்னை
நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும்
எரித்துவிடச் சொல்கிறாய்
அப்படியானால்
நான்
தீக்குளிக்க வேண்டுமா?
-அ. சரவணராஜ்

புதைத்துப் பார்த்தேன்
முளைக்கிறது
எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது
கரைக்கலாம் என்றால்
மிதக்கிறது
சுமக்கலாம் என்றால்
கனக்கிறது.
பாவி
என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.
-(என் ஃபேவரைட்) ரவி சுப்பிரமணியன்

Wednesday, July 23, 2008

பலசரக்கு... பழைய சரக்கு!

கி.வா.ஜகந்நாதனைத் தெரியுமில்லையா உங்களுக்கு? சிலேடைப் பேச்சிலே வல்லவர்…! இனி மேலே (ச்சே...) கீழே படியுங்கள்..

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

********************

”எங்க தாத்தா செத்துட்டார். `காலமானார்’ பகுதியில விளம்பரம் கொடுக்கணும். எவ்வளவு செலவாகும்?”

”செண்டிமீட்டருக்கு 150 ரூபாய்”

“அடேங்கப்பா.. எங்க தாத்தா ஆறு அடி, மூணு செண்டிமீட்டராச்சே! கட்டுப்படியாகாது..”

****************************

குணாவும். ஜனாவும் வாடகைப் படகை எடுத்துக்கொண்டு ஏரியில் மீன் பிடிக்கப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைய மீனகள் கிடைக்க, குஷியானான் குணா. “டேய்.. ஜனா.. இந்த இடத்தைக் குறிச்சு வெச்சுக்கோ. நாளைக்கும் இங்கேயே வரலாம்” என்றான்.

மறுநாள்... படகுத்துறை நோக்கிப் போகும்போது “ஜனா.. நான் சொன்னமாதிரி அந்த இடத்தை நீ குறிச்சு வெச்சிருக்கதானே?” என்று கேட்டான் குணா.

“பின்னே? அந்தப் படகோட அடிப்பாகத்துல ஒரு பெருக்கல் குறி போட்டு வெச்சிருக்கேனே” என்று ஜனா சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் குணா. ரொம்ப டென்ஷனோடு கேட்டான்... “முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”

***************************

“குருவே.. நல்வாக்கு அருளுங்கள்” - சிஷ்யன் கேட்டான்.

“அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்” – புன்சிரிப்புடன் சொன்னார் குரு.

“என்ன குருவே... இதுவா நல்வாக்கு?”

“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி! வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளைடோ இறந்தால் எத்தனை துக்கம்?”

**********************

நெப்போலியன் : “என்னோட டிக்‌ஷனரியில IMPOSSIBLE என்கிற வார்த்தையே இல்லை!”

உடனே சொன்னான் நம்மாளு ஒருத்தன்.. “அதெல்லாம் டிக்‌ஷனரி வாங்கறப்பவே பாத்திருக்கணும்”

*************************

மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.

“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”

“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”

“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”

“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”

***********************


போலீஸ்காரங்க கோவிச்சுக்கக் கூடாது..!

காட்டுல ஒரு முரட்டுப் புலி. அதைப் பிடிக்க பலநாட்டுப் போலீசும் முயற்சிக்கறாங்க. தமிழ்நாட்டுப் போலீஸ் உள்ளே புகுந்த ஒரு மணி நேரத்துல புலியைப் பிடிச்சுட்டதா செய்தி பரவுது. டி.வி.காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் வேகமா காட்டுக்குள்ள போய்ப் பாத்தா...

தமிழ்நாட்டுப் போலீஸ் சுத்தி நிக்க, நடுவுல ஒரு கரடி பரிதாபமா மிரள மிரள நின்னுட்டிருந்ததாம். போலீஸ்காரங்க அத லத்திசார்ஜ் பண்ணிகிட்டே சொல்லீட்டிருந்தாங்க.....

“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”

-------------------------

இது ஒரு `ஏ’ ஜோக்.... வேணாங்கறவங்க படிக்காதீங்க..!

உள்ளாடை வாங்கிய இளம்பெண் கடைக்காரரைக் கேட்டாள்.

“இதுமேல எம்பிராய்டரில எழுதித் தரமுடியுமா?”

“சொல்லுங்க மேடம் என்னன்னு எழுதணும்?”

“`இங்கே எழுதியிருப்பதை நீ படிக்க முடிந்தால் நாம் மிக நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம்’ அப்படீன்னு எழுதணும்”

“ஆங்கிலத்திலா... ஹிந்தியிலா.. எந்த மொழியில எழுத?”

“ப்ரெய்லியில் எழுதுங்க”

Tuesday, July 22, 2008

******க் கதைகள் – 2

”கிருஷ்ணா, இந்த சீனுக்குண்டான டயலாக்-கை ஹீரோயினுக்கு சொல்லிக் குடு” – டைரக்டர் அவனிடம் சொல்ல, ஹீரோயின் மாலினியை நோக்கிச் சென்றான் அசிஸ்டெண்ட் டைரக்டர் கிருஷ்ணா. ஹீரோயின் அருகில் சென்றபோது தான் கவனித்தான், அவள் காலில் செருப்பணிந்துகொண்டு நின்றிருந்தாள்.

“மேடம்” தயக்கமாய் ஆரம்பித்தான் கிருஷ்ணா. மாலினி எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவாள்.

“அம்மன் கோயிலுக்கு முன்னாடி நிக்கறீங்க. செருப்போட..”

மாலினி கண்களில் எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தாள். “ஏய் மேன்... பூரா மண்ணா இருக்கு மேன்”

“மேடம் இது கிராமத்து கோவில் செட். டைல்ஸா போட முடியும்?”

“என்னா மேன் திமிரா பேசற? நான் செருப்பையெல்லாம் கழட்ட முடியாது”

“கோவில் சீன்ல யாராவது செருப்பு போட்டுட்டு..”

“யோவ்.. என்ன சீன் எடுக்கறாங்கன்னு எனக்கும் தெரியும். நான் சாமி கும்பிடற மாதிரி க்ளோஸ் அப் ஷாட்தானே? காலெல்லாம் தெரியாது.. போ..” மிகவும் எடுத்தெறிந்து பேச.., கோபம் வந்தது கிருஷ்ணாவுக்கு. அடக்கிக் கொண்டான்.

“இல்ல.. நான் என்ன சொல்ல வர்றேன்னா...”

“மேனேஜர்..” அவள் கத்திய கத்தலில் யூனிட்டே திரும்பிப் பார்த்தது.

பிறகு டைரக்டர் அவளை சமாதானப்படுத்தி, இனி படம் முழுவதும் கிருஷ்ணா அவளிடம் பேச வேண்டாம் என்று சொல்லி ஷூட்டிங்கை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டு, வருத்ததோடு இருந்த கிருஷ்ணாவிடம் வந்தார்.

“கிருஷ்ணா... விடுப்பா... இன்னைக்கு டாப் ஹீரோயின் அவ. அடுத்த செட்லயே அவளுக்காக காலைலேர்ந்து காத்திட்டு இருக்காங்க. ஏதோ நான் அறிமுகப்படுத்தினேன்னு நன்றிக்கடனுக்காக ஏர்ப்போர்ட்லேர்ந்து நேரா இங்க வந்துட்டா. கோவிச்சுட்டு போய்ட்டான்னா ஒரு வாரத்துக்கு வரமாட்டா. யோசிச்சுப் பாரு. அவ செருப்பப் போட்டா நமக்கென்ன... கழட்டினா நமக்கென்ன?”

காமிரா சுழல, செருப்பணிந்த காலோடு ஷாட்டுக்கு தயாரான மாலினி, கிருஷ்ணாவைப் பார்த்து ஏளனமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்.


***********

ஏழெட்டு வருடங்களுக்குப் பின்...


டைரக்டர் கிருஷ்ணா எல்லோருக்கும் சீனை விவரித்துக் கொண்டிருந்தார்.

”நீங்க குடும்பத்தோட பொண்ணு பாக்கற மாதிரி சீன்” என்று மேற்கொண்டு விவரித்துவிட்டு அசிஸ்டெண்ட்டை அழைத்து, "எல்லாருக்கும் கைல காபி டவரா குடு” என்று கூறி விட்டு நகர்ந்தார்.

ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன், கூட்டத்தில் ஒரு நடிகையாய் அமர்ந்திருந்த மாலினி அசிஸ்டெண்ட் டைரக்டரை அழைத்தாள்.

“தம்பி, காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலை. இதுல காபி குடுக்க மாட்டீங்களா?”

“ஏம்மா, நீ மொதல்ல வேணா பெரிய ஸ்டாரா இருந்திருக்கலாம். இப்ப பெரியம்மா கேரக்டர்ல நடிக்கற.. உனக்கு காபியா? இது க்ளோஸ் அப் ஷாட்டெல்லாம் இல்ல. வெறும் டவரா போதும். குடிக்கற மாதிரி நடிங்க”

“இல்ல தம்பி...” ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் டைரக்டர் கிருஷ்ணா அருகில் வர, முகத்தை மறைத்துக் கொண்டு திரும்பினாள்.

”மாலினி மேடம்” கிருஷ்ணா அழைத்தான்.

மாலினி தயக்கமாய்த் திரும்பினாள்.

“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”

அவள் கண்களில் தளும்பும் நீரை அடக்கிக் கொண்டு நடக்கும்போது அந்த வீட்டிலிருந்த அம்மன் படம் கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் நின்று, அடக்க முடியாமல் “ஓ” வென அழுதாள். இப்போதும் யூனிட் திரும்பிப் பார்க்க, அமைதியாய் இருந்தான் கிருஷ்ணா.

Monday, July 21, 2008

இவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்

நேற்று நான் சொன்ன `சும்மா’ இதழிலிருந்து...

**********

இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..

மணிரத்னம்:

மணி: ”காபி”

சுஹாசினி: ”நேரமாகும்”

”எனக்கு வேணும். இப்ப வேணும்..”

”முடியாது”

”ஏன்?”

”முடியாதுன்னா முடியாது”

”அதான் ஏன்?”

”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”

”நிறுத்து”

”எதை..எதை நிறுத்தறது?”

”சாம்பாரை நிறுத்து..”

”ஏன்?”

”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”


டி.ராஜேந்தர்:

டி.ஆர்: ”ஏய்..உஷா.. மழை வருது லேசா.. நான் நேத்துப் பாத்தேன் பாட்ஷா.. ஒரு காபி போடு பேஷா..”

உஷா: ”அடுப்புல சாப்பாடு, சாம்பார் வெந்துட்டிருக்கு”

”எடை போடணும்னா தராசுல நிறுத்துப் போடு. காபி போடணும்ன்னா ஏதோ ஒண்ணை நிறுத்திப் போடு”

“முடியாது. சாப்பாடு போடலைன்னா விரலால வித்தை காட்டுவேன்னு பயமுறுத்தறான் சிம்பு”

“சிம்புவா? சிம்புவா அப்படிச் சொன்னான்? (உடனே கண்களில் நீர் வருகிறது.. தலையைக் கோதி விட்டபடி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டே..) ஏய் சிம்பு.. நீ ரெண்டு வயசுல பொம்மை கேட்ட. வாங்கித்தந்தேன். பத்து வயசுல படத்துக்குப் போக காசு கேட்ட. குடுத்தேன். ஆனா... ஆனா இப்ப இந்த அப்பாவுக்கு ஒரு காபி கேட்டா...

(`யோவ்..’ என்றபடி சிம்பு வர.. ஓடுகிறார்)


விஜயகாந்த்:

”ஏஏஏஏஏய்ய்! ஒரு காபி குடு”

”அடுப்புல சாப்பாடும், சாம்பாரும் வேகுதுங்க”

“இன்னொரு கேஸ்ல, இன்னொரு அடுப்புல பத்தவெச்சு போடு”

“ஒரு கேஸ்தான் இருக்கு”

“தமிழ்நாட்டுக்கு ஒரு வீட்டுக்கு ரெண்டு சிலிண்டர் தரணும்ன்னு எந்த அரசியல்வாதியாவது நெனச்சானா? ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு மூணு காபி குடிக்கணும். வருஷத்துக்கு 1095 காபி. ஒருத்தன் சராசரியா 60 வருஷம் உயிரோட இருப்பான்னு வெச்சுகிட்டாலும் மொத்தம் 65700 காபி குடிக்கணும்ன்னா எத்தனை சிலிண்டர் வேணும்? ஒரு சிலிண்டருக்கு 100 காபி-ன்னாலும் 657 சிலிண்டர் வேணும்.. அப்படீன்னா”

(திரும்பினால் அவரது மனைவி, வேலைக்காரர்களெல்லாம் மீட்டை முடிச்சோடு மதுரைக்கு ஓடுகிறார்கள்)

ரஜினிகாந்த்:

ரஜினி: ”ஜில்லு.. காபி..காபி”

லதா: ”முடியாதுங்க“

“ஏன்..ஏன்..ஏன்?”

“அடுப்புல சாப்பாடு, சாம்பார் வேகுது”

விரலைச் சுழற்றுகிறார்... “நான் ஒரு சிலிண்டர் வாங்கினா...”

“ஒரு சிலிண்டர்தான். நூறு சிலிண்டர் எல்லாம் ஆகாது.”

”ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ்ஹாஆஆ” ஸடைலாகச் சிரிக்கிறார்.

Sunday, July 20, 2008

சும்மா!

திருப்பூரிலேயே இருந்தாலும் என் நண்பர் கனலியை எப்போதாவதுதான் சந்திக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல, பேச்சு என் எழுத்துக்கள் பற்றி வந்தபோது “ஒரு நிமிஷம் கிருஷ்ணா” என்று எங்கிருந்தோ ஒரு சூட்கேஸை எடுத்துவந்து, அதில் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு பையை என்னிடம் கொடுத்தார். உள்ளே திறந்து பார்த்தபோது...

(வீட்டில் கொசுவத்திச் சுருள் இருந்தால் எடுத்து முகத்துக்கு முன் காட்டி ரிவர்ஸில் சுற்றிக் கொள்ளவும்.. ஒரு ஃப்ளாஷ்பேக்!)

நான் திருப்பூருக்கு வந்து பணிபுரிந்து கொண்டு இருந்த புதிதில், அவர் உடுமலையில் கனலி கலைக்கூடம் என்கிற பெயரில் ஆர்ட்ஸ் நடத்திக் கொண்டிருந்தார். எப்போது ஊருக்கு போனாலும், தொலைபேசினாலும் “எழுதறத விடாதீங்க கிருஷ்ணா” என்பதை வழக்கமாய்ச் சொல்லுவார். நானும் சரியென்று தலையாட்டிவிட்டு வருவேன். அப்போது, ஒரு ஐடியா தோன்றி, நான் அவருக்கு அவ்வப்போது “சும்மா” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை போல எழுதி தபாலில் அனுப்பிக் கொண்டிருந்த்தேன். 1999ல் ஆரம்பித்து 2004 வரை இது தொடர்ந்தது! `ஆறு வருஷம்’ என்று யாரும் பிரமிக்க வேண்டாம். அந்த ஆறு வருஷங்களில் வெறும் பத்தோ, பதினொன்றோதான் எழுதி அனுப்பியிருக்கிறேன்.

(FLASHBACK END)

அந்தக் கடிதங்களைத் தான் கொடுத்தார்! படித்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பேசிய சில வசனங்களைப் போல, அப்போதே கறபனை செய்து எழுதியிருக்கிறேன். (இந்த இடத்தில் ஒரு விளக்கம். நான் அவ்வப்போது, இது அப்போ எழுதினது என்று வருடத்தைக் குறிப்பிடக்காரணம் அதற்குப் பிறகு அதுபோல வந்திருந்து, அதை நான் காப்பியடித்தது போலிருக்ககூடாது என்பதற்காக மட்டுமே! உதாரணத்திற்கு நானெழுதிய ஒரு சாமியார் உருவாகிறார், அதற்குப்பிறகு வந்த ரன் விவேக் காமெடியை ஒத்திருப்பதாக பல நண்பர்கள் சொன்னார்கள்)

வெறும் ஒன்று (அ) இரண்டு பக்கங்கள்தான் அவை இருந்திருக்கிறது! ஒரு இன்லாண்ட் லெட்டரில்கூட எழுதியிருக்கிறேன். ”சும்மா - ஒரே ஆசிரியர், ஒரே வாசகர்” என்பதுதான் கேப்ஷன்! ஒரு இதழில் (???) `சுமாரான கையெழுத்து, படிப்பதுங்கள் தலையெழுத்து’ என்றுகூட கேப்ஷன் குடுத்திருக்கிறேன்! இலவச இணைப்பெல்லாம்கூடக் கொடுத்திருக்கிறேன்! (பொருளெல்லாம் இல்லை, ஒரு பக்கம் கூடுதலாக எழுதியிருப்பேன்!)

இதையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்.. வேறென்ன, அதிலிருந்த சிலவற்றை இனிவரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்!

பின்னூட்ட ஐடியாக்கள்:-

# `உங்க பரண்ல இருக்கறது பத்தாதுன்னு இப்போ வீடு வீடா போய் சேகரிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? (இந்தப் பின்னூட்டம் கயல்விழி முத்துலெட்சுமி அக்காவுக்காக ரிசர்வ் செய்யப்படுகிறது!)

# ஆங்கில வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்திருக்கிறீர்கள். இருந்தாலும்... ஐடியாக்கள் = யோசனைகள், கேப்ஷன் – தலைப்பு, காமெடி – நகைச்சுவை, இன்லாண்ட் லெட்டர் – உள்நாட்டுக் கடிதம்.. இவற்றையும் தவிர்த்திருக்கலாம். (இந்தப் பின்னூட்டம் கோவி.கண்ணன் ஐயாவுக்காக ரிசர்வ்... ம்ஹூம்.. ஒதுக்கி வைக்கப்படுகிறது!, தலைவா, என்ன யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கிற்கு தெரியல!)

# உன்னையச் சொல்லி குத்தமில்ல, எடுத்து பத்திரமா வெச்சிருந்து குடுக்கறாரு பாரு அவரைச் சொல்லணும். எல்லாம் எங்க நேரம்!

# ரன் விவேக் காமெடி உங்களைப் பாத்து எழுதினார்ன்னு சொல்ல வர்றீங்களா? இது ரொம்ப ஓவர்!

# பதிவெழுதறதோட நிறுத்திக்கங்க. பின்னூட்டமும் நீங்களே எழுதிகிட்டா, நாங்க என்னதான் எழுதறதாம்?

# வேறு பின்னூட்டங்களிருந்தால் அதை, பின்னூட்டத்தில் குறிப்பிடவும்!

பின்குறிப்பு: நேற்றைய பதிவில் சொன்னபடி, இதை சனிக்கிழமை இரவே போட்டுவிட்டேன்! ஞாயிறு காலை இதை தமிழ்மணத்தில் சேர்க்கப் போகும் வலையுலக நண்பர் VIKNESWARAN நன்றியெல்லாம் சொல்லக்கூடாது என்றதால் அவருக்கு நன்றி சொல்லவில்லை!

Friday, July 18, 2008

அவியல் – ஜூலை 18

நேற்று முழுவதும் இணையம் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை! அப்படி ஒன்றிரண்டு முறை வந்தபோதும், இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததால் பலருக்கும் போய் பின்னூட்டம் போட முடியவில்லை. இதுபற்றி எழுதும் போது, நண்பர் சென்ஷி எனக்கெழுதிய ஒரு மடல் நினைவுக்கு வருகிறது. இதோ அது..


“சில நாட்களாக என்று சொல்ல முடியாமல் பல நாட்களாகவே இணையத்தொல்லை இருந்து வருகிறது.
பதிவை படித்துவிட்டு பின்னூட்டமிட செல்லும்போது இணையத்தொடர்பிலிருந்து பதிவுகள்
விடுபட்டு தன்னிச்சையாக அதிகாரம் புரியும் மோசமான சர்வாதிகாரியின் வாயிலிருந்து
வெளிவரும் சிகரெட் புகைபோல் மாறி மீண்டும் சுயாட்சியை தேடச்சொல்கிறது.

கடினம்தான். பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்லும் அவலநிலை
காதலியை தூர இருந்து ரசிக்கும் மனோபாவம் ஒத்ததை விட அவள் கணவனுடன் செல்லும்
துர்பாக்கியத்தை பெற்றவனாகவே கருதுவேன்.
எனினும்.. கலங்க வேண்டாம்.. கலக்கம்
வேண்டாம். ரோஜாவில் அமர்ந்து தன்னை அழகாக்கிக்கொண்ட அந்த பனித்துளியென்ற
உவமானத்தில்‌ உங்கள் பதிவில் எனது பின்னூட்டம். அந்த முத்து நீர் மொட்டுக்கள் சூரிய
வரவால் காற்றில் கலப்பதுபோல் நானும் என் பின்னூட்ட எழுத்துக்களுடன் உங்களை தேடி
வருவேன். வந்து கொண்டே இருப்பேன்.”

என்னடா இது, இவரு சாதரணமாப் பேசறதே இந்தமாதிரி பின்நவீனத்துவமாகத்தான் இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டேன். என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு எப்போதும் ஏதாவதொரு பதிலை, நன்றியைத் தெரிவிப்பது என் வழக்கம். எத்தனையோ பணிகளுக்கிடையே, நம்மை மதித்து வந்து போகிறார்களே என்ற அன்பில். நேற்று அதுவும் முடியவில்லை. இந்த சென்ஷியின் பதிலை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதோடு நான் என் பின்னூட்டத்திலேயே எழுதிய ஒன்றையும் இங்கே எடுத்து இடுகிறேன்.

இடையறாத பணியினாலும்,
இடையே வந்தபோதெல்லாம்
இடையூறு செய்த
இணையத்தொடர்பாலும்
இடைவிடாது
இங்குவந்து நன்றிசொல்ல
இயலாமைக்கு வருந்துகிறேன்!

---------------

”சுப்பிரமணியபுரம்” படம் பார்த்தேன்! என்ன ஒரு இயல்பான படம்! படத்தில் என்னை மிகக் கவர்ந்தவர் சசிக்குமார்! சச்சினும், சேவாக்கும் ஆடும்போது, சேவாக்கை அடித்து ஆடவிட்டு பார்ட்னர்ஷிப் கொடுத்துக் கொண்டே, சேவாக் அவுட் ஆனால், பிறகு சச்சின் வெளுத்துவாங்குவாரே, அதே போல ஜெய்யை முதலிலிருந்தே அடித்து ஆடவிட்டு, அவர் இறந்ததும் தூள் கிளப்பிவிட்டார்! சசிக்குமார் எந்த ஒரு ஃபிரேமிலும் படம் பார்ப்பவர்களை அவர் ஒரு நடிகரென்று நினைக்காத வண்ணம் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ! அப்புறம் அந்த ஹீரோயின் சுவாதி! எனக்கு நான் சைட்டடித்த பழைய ஃபிகர்களையெல்லாம் ஞாபகத்துவர வைத்துவிட்டார்! (அடுத்த படத்தில் இவரை அரைகுறை ஆடையோடு எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்!)

-------------------------------

சுப்பிரமணியபுரம் படம் பார்க்கும்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு பொறம்போக்கு கதையை சொல்லிக்கொண்டே வந்தான். வேண்டுமென்றே மாற்றி, மாற்றிச் சொன்னான். க்ளைமாக்ஸின் போது எனக்கும் அவனுக்கும் சண்டையாகி விட்டது. கேட்டால் `நான் என் ஃப்ரண்டுகிட்டதான் பேசினேன்.. நீங்க காதைப் பொத்திகிட்டு இருக்கலாம்ல’ என்று வேறு வியாக்கியானம் கொடுத்தான். வேறு சிலரும் எனக்கு சாதகமாகப் பேசியதால் மூடிக்கொண்டு போய்விட்டான். இந்த மாதிரி படத்தை ரசிக்க விடாமல், கதை சொல்லுபவர்களுக்கு பயந்தேதான் முதல் நாளிலேயே படம் பார்க்க விரைவேன்.

டிஸ்கி: என் பைக்கில் பாரதியார் படம் போட்டு `அச்சம் தவிர்’ என்று எழுதி வைத்துள்ளேன். அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.

-----------------------------------

இதுவும் சுப்பிரமணியபுரம் படம் பற்றித்தான். இசை ஜேம்ஸ் வசந்தன்! அருமை! `கண்கள் இரண்டால்’ பாடல் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இது எந்தப் பாடலின் சாயல் என்று தெரிகிறதா?

கவிக்குயில் படத்தில் தலைவர் இளையராஜா இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய `சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ பாடலின் சாயலிருக்கிறதா? ஒருவேளை அந்தப் பாடலின் ராகத்திலேயே (ரீத்திகௌலா) இதுவும் அமைக்கப்பட்டிருக்கிறதோ? தெரியல சாமி!

”சின்னக்கண்ணன் அழைக்கிறான்..
ராதையைப் பூங்கோதையை
அவள் மனக்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி..”

ச்சே! என்னா ஒரு பாட்டு!
---------------------

ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன சைஸ்தான் அழகு! எங்காவது பயணிக்கும்போது, ஈஸியாக எடுத்துச்சென்று படிக்க வசதியாய், கைக்கு அடக்கமாய் இருந்தது. இதுபற்றி பதிவுலக நண்பர் வடகரைவேலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது “அவங்களோட மத்த எல்லா பத்திரிகைகளும் பெரிய சைஸ்லதான் வருது. இதுமட்டும் ச்சின்னதா வர்றதுல டெக்னிக்கலா இழப்பிருக்கு. அதுனால மாத்தீருப்பாங்க” என்றார். ”அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன ஃபார்மெட் தானே?” என்று நான் கேட்பதற்குள் என் அலைபேசியில் பாட்டரி தீர்ந்துவிட்டது! ஆப்செட் ப்ரஸ் வைத்திருக்கும் அவர் இதுபற்றி விளக்குவார்!

--------------------------------------

சென்னை செல்வதற்காக என் கஸின் ப்ரதர் (கிரேசி கிரியின் அண்ணா) திருப்பூர் ரயில் நிலையம் வந்திருந்தார். ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அங்கேயிருந்த ஒரு அறிவிப்பை கவனித்தேன்.
`பயனிகள் கவணிக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

“பாருண்ணா, தமிழை எப்படிக் கொலைபண்ணியிருக்காங்கன்னு” என்று காட்டினேன். அவர் பார்த்துவிட்டுச் சொன்னார்.

“மூணு சுழி ண வரவேண்டிய இடத்துல ரெண்டு சுழி னவும், ரெண்டு சுழி ன வரவேண்டிய இடத்துல மூணு சுழி ண வும் வந்திருக்கறத சொல்றயா?”

“ஆமா”

“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”

சந்தோஷம்! மகிழ்ச்சி!

--------------------------

இன்றைக்கு நான் குறிப்பிடப் போகும் கவிதையும் `எங்கே இந்தக் கவிஞர்கள்’ வரிசையில் வராது. காரணம் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது அடிக்கடி பத்திரிகைகளில் வந்துகொண்டுதானிருக்கிறது. பலமுறை நான் சொன்னதுபோல எனக்கு மிகப் பிடித்த, மிக மிகப் பிடித்த கவிஞர் ரவிசுப்பிரமணியம் அவர்கள் மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இதோ!

மரித்துப் போனது
மனிதமனம்
பக்கத்துவீட்டு
மரணம்
எதிர்வீட்டுத்
திருட்டு
அடுத்தவீட்டுப் பெண்
ஓட்டம்
கோடி வீட்டுத்
தகராறு
நமக்கேன் வம்பு.
கதவை மூடு.


டிஸ்கி: கொஞ்சநாளாக தமிழ்மணத்தை திறக்கவே பயமாயிருக்கிறது!

------------------------


Thursday, July 17, 2008

க்யூவுல நின்னு சாவுங்க!

சமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.


ஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.


இந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ? இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு!) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை! (நல்லவேளை!) விட்டுவிடுவோமா? ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை! உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே!)


-------------------------------


ஊட்டி.


தற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...


“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”


”அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்!”


“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க? நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த? ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா?”


“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு?”


“அத ஏன் கேக்கற! என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”


“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே?”


இந்தப் பெயரைக் கேட்டதும் பின்னாலிருந்து ஒரு குரல்..


“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்!”


“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.


இப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.


”ஏம்ப்பா, இவ்ளோ லேட்டு?”


”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.


“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது?”


“அதுதான் எங்க ஓனர்!”


“ஓனர் உயிரோட இல்லையா?”


“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”


”அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.


”டிக்கெட் எவ்வளவுப்பா?”


“ஒண்ணு ஏழரை ரூவா”


“ஏழரையா? சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா?”


“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”


“50% தள்ளுபடியா?”


“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”


“ஓ! அதுதான் `தள்ளு’படியா?.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.


”யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற? சில்லறை குடுக்கறதுக்கென்ன?”


”இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”


“சரி.. இந்தா”


“என்ன 50 காசு குறையுது?”


“வரும்போது வாங்கிக்கயேன்”


“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”


“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”


“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..


“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”


அவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.


”ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”


போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”


"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”


“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்!)கொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....


“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”


“உயிர வாங்காமப் போறியா?”


அப்போது தூரத்தில் ஒரு பெண்....


“சண்முகம்.. ஐ லவ் யூ! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.


உடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..


“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.


“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..


“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்? உங்க ரூல்ஸ்படி டிக்கெட்
வாங்கினா திரும்பப் போகக்கூடதில்ல?”


கல்லா ஆசாமி சொல்கிறான்...


“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”


----------------------------------------


டிஸ்கி: உமாகிட்ட இதைக் காட்டும்போது முடிவு வேற மாதிரி, பதிவுல போடும்போது வேற மாதிரி! எப்படி? நாங்கல்லாம் யாரு!

Wednesday, July 16, 2008

ஊசி போன சம்பவங்கள்

ஹலோ, லதானந்த் அங்கிள்… தலைப்பைப் பார்த்துட்டு அப்பநாய்க்கன்பாளையம் அரங்கமுத்துசாமியோட சகவாச தோஷத்துல “ஐயையோ.. சந்திப் பிழை”-ன்னு திட்டாதீரும்!
இது “ஊசிப்போன சம்பவங்களி”ல்லை! ஊசி போன சம்பவங்கள்தான்!

------------------------------------


அந்தக் குழந்தை, யார் தூக்கினாலும் அழுது கொண்டேயிருந்தது. தூக்கும் போது அழுவதும், பின் கொஞ்ச நேரத்தில் அழுகையை நிறுத்துவதுமாக இருந்தது. மறுபடி இறக்கி வைக்கும்போதும் அழுதது. பெற்றோருக்கு ஒரே குழப்பமாகி, அருகிலிருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர்.

ஒரு சில பரிசோதனைகள் செய்தும் டாக்டருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

அவர் அந்தக் குழந்தையை எடுக்கிறார்.

குழந்தை வீறிட்டு அழுகிறது.

”இதுக்கு முன்னாடி இந்த மாதிரி அழுதிருக்கா?”

“இல்ல டாக்டர். இன்னைக்குதான். அவனுக்கு பர்த்டேன்னு புது ட்ரெஸ் போட்டதிலேர்ந்து இப்படித்தான்”

டாக்டருக்கு மூளைக்குள் ஃப்ளாஷ் அடிக்கிறது.

“இந்த டிரஸ்சைக் கழட்டுங்க”

கழட்டி சோதிக்கிறார். அந்தக் குழந்தை அணிந்திருந்த சட்டையின் underarm (அக்குள்) பகுதியில் ஒரு சின்னஞ்சிறிய உடைந்த ஊசி!

ஒவ்வொரு முறை அவனைத் தூக்கும்போதெல்லாம் அவன் அழுத காரணம் புரிகிறது பெற்றோருக்கு!

-----------------------------------------

அந்தச் சிறுமிக்கு இடது கன்னத்தின் கீழ்ப்பகுதியிலெல்லாம் ரத்தச் சிவப்பாய் சிவந்திருக்கிறது. அவளது பெற்றொருக்கு அதிர்ச்சி! மருத்துவரை நாடுகிறர்கள்.

பலவிதமான கேள்விகளுக்குப் பிறகு அவளது பெற்ரோரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் டாக்டர்.

எதேச்சையாக திரும்பிப் பார்க்கிறார். அந்தச் சிறுமி அணிந்திருந்த ஆடையின் காலர் பகுதியின் இடது நுனியை வாயில் இழுத்துக் கடித்தவாறு இருக்கிறாள்.

உடனே அந்த சட்டையைக் கழற்றி, பரிசோதிக்கிறார்.

காலரில், உள்ளே ஓரிடத்தில் உடைந்த, கூர்மையான ஊசி! அவள் காலரைக் கடிக்கும் போதெல்லாம் உராய்ந்து, உராய்ந்து ரத்தச் சிவப்பு நிறம் வந்துவிட்டிருக்கிறது!

---------------------------------------------

திருப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளெல்லாம் பலவிதமான தரக்கட்டுப்பாட்டு முறைகளைத் தாண்டிச் செல்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில் ஒன்று “NEEDLE DETECTION”. அதாவது துணியைத் தைக்கும்போது பயன்படுத்தும் ஊசியோ, அல்லது ஊசி போன்ற கூர்மையான பொருட்களோ ஆடைகளில் எங்கேனும் உள்ளதா என்று Needle Detector Machine-ல் சோதனை செய்தபிறகே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள்.
அவ்வாறு செய்யாமல் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளால், வெளிநாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் நீங்கள் மேலே படித்தது! இரண்டு, மூன்றாண்டுகளுக்கு முன், Needle Detection-ன் முக்கியத்துவத்தை உணர்த்த எங்களுக்கு ஸ்லைடு போட்டு காண்பித்து, ஆதாரத்துடன், பேப்பர் செய்தியுடன் இதைக் காண்பித்தார்கள்!


அதாவது ஊசி, (ஆயத்த ஆடைகளில்) போன சம்பவம்! என்ன சரிதானே?

Tuesday, July 15, 2008

****க் கதைகள் – 1

அனுசுயா தனது பங்களாவின் கேட்முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் செல்வி எங்கே என்று தேடியது. செல்வி, அனுசுயாவின் வீட்டிற்கு முன் எங்கோதான் குடியிருக்கிறாள். கொஞ்ச நேரத்தில், தூரத்தில் செல்வி வர அவளுக்கு உற்சாகமானது. கிழிந்த உடையும், எண்ணையற்ற தலையுமாய் அழுக்காய் இருந்தாள் செல்வி.


“ஏய்.. செல்வி.. எங்கடி போன?” உரிமையோடு கோபித்துக் கொண்டாள் அனுசுயா.


“இல்ல அனு. அப்பாவைக் காணோம்ன்னு அம்மா அளுதுச்சா.. அதான் தேடப் போனோம்”


அனுசுயாவுக்கு அது ஒன்றும் புரியவில்லை.


“ஏய்.. எங்க வீட்டுக்கு வர்றியா? உனக்கு நான் ஒண்ணு காட்டறேன்” என்று செல்வியை அழைத்தாள் அவள்.


”இல்ல. வாட்ச்மேன் விடமாட்டாரு. அப்படியே விட்டாலும் உள்ள உங்கம்மா பாத்தா திட்டும்”


அதைக் கேட்டதும் அனுசுயாவிற்கு முகம் சின்னதாகிப் போனது.


“சரி.. இப்படி உக்காரு” என்று கேட்டருகே உட்கார்ந்தார்கள் இருவரும்.


”அப்பா நேத்து நிறைய ஸ்டார்ஸ் வாங்கீட்டு வந்தாரு”


“ஐ! நட்சத்திரமா?” ஆச்சர்யமாகக் கேட்டாள் செல்வி.


“ஆமா! என் பெட்ரூம்ல மேல எல்லாத்தையும் ஒட்டி வெச்சிருக்காங்க. நைட் லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணினா எல்லாம் எப்படி மின்னுது தெரியுமா?”


“எப்படி அனு?”


”இதோ” – வாட்ச்மேன் பார்க்கிறானா என்று கவனித்தபடி தன் கையிலிருந்த நட்சத்திர ஸ்டிக்கர் ஒன்றை செல்வியிடம் கொடுத்தாள் அனு.


“நீயும் இதை ஒட்டிப் பாரு. லைட் அணைஞ்சதுக்கப்புறம் சூப்பரா இருக்கும் தெரியுமா?”


செல்வி அதை உற்சாகமாக வாங்கி கையில் மறைத்துக் கொண்டாள்.


”வாட்ச்மேன்.. அனு அங்க இருக்காளா” – வீட்டு போர்ட்டிகோவிலிருந்து அம்மாவின் குரல் கேட்க எழுந்தாள் அனு.


“அம்மா.. வந்துட்டேம்மா”


“அங்க என்ன பண்ற இந்நேரத்துல. மணி எட்டரையாகப் போகுது. சாப்பிட்டுட்டு தூங்கு..வா”


”செல்வி. நான் போய்ட்டு வர்றேன்” என்றுவிட்டு ஓடினாள் அனுசுயா.


அவள் போனதும் நேராக நடந்து தனது அம்மாவைப் பார்க்கப் போனாள் செல்வி.
குடித்துவிட்டு எங்கோ விழுந்துகிடந்த அப்பாவை ரிக்‌ஷாவில் கூட்டிவந்து, ரிக்‌ஷாக்காரனை அனுப்பிக் கொண்டிருந்தாள் அம்மா.


“அம்மா.. இங்க பாரேன்.. நட்சத்திரம். அனு குடுத்தா. ஒட்டி வெச்சுப் பார்த்தா லைட் ஆஃப் பண்ணினப்பறம் மின்னுமாம்”


“சும்மாயிருக்கியா கொஞ்சம். ஒட்டி வெச்சுப் பாக்கறாளாம்.. எங்க ஒட்டுவ?” எரிச்சலாய் கத்தினாள் அம்மா.


“இருந்த காசும் ரிக்‌ஷாவுக்குப் போச்சு. இன்னிக்கு வெறும் வயித்தோட படுக்க வேண்டியதுதான். பேசாம படு.” என்று எரிந்து விழுந்தவளாய், சுய நினைவற்ற தன் கணவனைப் படுக்கவைத்து சற்று தள்ளி அவளும் படுத்துக் கொண்டாள்.


‘மகளென்ன செய்வாள், பாவம்’ என்று தோன்ற “வா செல்வி. வந்து படு” என்றாள் அம்மா.


செல்வி அமைதியாக வந்து படுத்துக் கொண்டாள்.


பிளாட்பாரத்தில் இருந்த கொசுக்கடிக்காக, அம்மா, இருந்த ஒரே கிழிந்த போர்வையால் செல்வியை போர்த்தினாள்.


செல்வி கையில் நட்சத்திரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, மேலே பார்த்தாள்.


நிஜமான நட்சத்திரம் மின்னியது.

Monday, July 14, 2008

தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?

நேற்று கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு மிட்டாய், வடை, குலாப் ஜாமூன், சாப்பாடு, மஞ்சூர் ராஜாவின் அன்பு, மஞ்சூர் ராஜா அவர்களது மனைவி, மற்றும் உறவினர்களின் வார்த்தையில் விவரிக்க முடியாத விருந்தோம்பல், சில லட்சியவாதிப் பதிவர்கள் மற்றும் என் போன்ற சில மொக்கைப் பதிவர்கள் ஆகியோரால் சிறப்புற நடைபெற்றது.


சந்திப்பில் ஞானவெட்டியான் என்ற பதிவரது லட்சியத்தைக் கேட்டபோது பிரமிப்பாய் இருந்தது. “இன்னும் வாழும் காலத்திற்குள்ளாக, வெளிவராத பல நூல்கள் குறித்து எழுதியே தீருவேன்” என்றார். அவரது அந்த லட்சியத்தைக் கேட்டு மெய்றந்து, பேச்சற்றுப் போயிருந்தோம் நாங்கள்.நான் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும், அவரைப் பற்றி இன்னும் கேட்டுக் கொள்ள வேண்டும், அவரது நட்பு வேண்டும் என்று ஒருவரை நினைத்திருந்தேன். அவர் பேசியபோது நடுவே ஒன்று சொன்னார். “நான் தமிழ்மணத்துல எழுதறத விட்டுட்டேன். நான் எழுதறத நிறுத்தினதுக்கப்புறம் தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியாகிவிட்டது” என்றும் “நானும் (இன்னொரு நண்பரைச் சுட்டிக் காட்டி) அவரும் பொது மக்கள் பிரச்சினையை எழுதறோம். ஜ்யோவ்ராம் சுந்தர் மாதிரி எங்களுக்கும் திடீர்ன்னு மட்டுறுத்தல் வந்ததுன்னா என்ன பண்றது?” என்றும் ஆதங்கப்பட்டார்.மிகவும் வருத்தமாக இருந்தது, அவர் எழுதியதை நிறுத்தியது. இன்ஃபாக்ட், அதைப் பற்றி கேட்கவே நினைத்திருந்தேன், ஆனால் “இப்பல்லாம் வெறும் மொக்கைப் பதிவுதான் போடறாங்க” என்ற அவரது வார்த்தைகள் புதிதாக வலையில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.அங்கேயே, அவருக்கு முன் பேசிய லதானந்த் அங்கிள் சொன்னார். “எனக்கு தமிழை தூக்கி நிறுத்த வேண்டி எழுத வர்ல. திருப்பூர்லயெல்லாம் பார்த்தா இரவு, பகல் இல்லாத இயந்திர வாழ்க்கை. வெளிநாடுகள்ல இருக்கற பல தமிழர்களுக்கு ஏதோ கொஞ்ச நேர ரிலாக்ஸேஷனுக்காக நெட்ல வர்றாங்க.. அவங்கள மாதிரியானவிங்களுக்கு கொஞ்ச நேரம் சந்தோஷத்தை தர்றதுக்காக மட்டும்தான் நான் எழுதறேன்” ன்னார். சபாஷ் அங்கிள்!


நான் அங்கிருந்து ஒரு மரண விசாரிப்புக்குப் போக வேண்டியிருந்ததால், இந்த மொக்கைப் பதிவுகள் விசாரிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று ‘ஓசை’யில்லாமல் இருந்துவிட்டேன். அது மட்டுமின்றி, என் எழுத்துக்களை வைத்து என்னை எதிர்பார்ப்பவர்களுக்கு (யாரு உன்னை எதிர்பார்த்தாங்க?) என் உருவம் பார்த்தால் மதிக்கவே தோன்றாது. லதானந்த் அங்கிள் மாதிரி பார்த்தாலே சல்யூட் அடிக்கத் தோன்றும் உருவமோ, ஞானவெட்டியான், வாத்தியார் சுப்பையா மாதிரி ‘வணக்கம் சார்’ சொல்லத்தோன்றுகிற உருவமோ எனக்கில்லை. என்னைவிட வய்து குறைந்தவர்கள் என்னிடம் ‘அது வந்து தம்பி..’ என்று பேச ஆரம்பிக்கும்போதும் நான் அமைதியாக கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். `யோவ்.. எனக்கு 35 வயசாச்சு. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. ரெண்டு பொண்ணு இருக்கு. நான் 1991-லயே இந்த எழுத்து உலகத்துல..” என்றெல்லாம் ஜல்லியடித்து என்ன ஆகப் போகிறது என்று பேசாமல் இருந்துவிடுவேன். அதுவுமில்லாமல் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். எதுவும் தெரியாதவனாகவே இன்னும் இருக்கிறேன்.


எது மொக்கைப் பதிவு என்று யாருக்குமே ஒரு தெளிவான கருத்து இல்லை. என்னைப் பொறுத்தவரை ‘தனிமனித ஒழுக்கமே ஒரு சமூகத்தை உயர்த்தும்’ என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால் என் கருத்துகளை நீயும் கடைபிடி” என்று யாருக்கும் போதிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவே இல்லை. ஆகவே என் எழுத்துகளும் அதை ரொம்ப சீரியாஸாக உங்களுக்கு போதிக்காது. என் நோக்கமெல்லாம் எழுதும் நேரத்தில்
எனக்கிருக்கும் மகிழ்ச்சி, அதைப் படிக்கும் நேரத்தில் உங்களையும் தொற்றிக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே. இந்த ஒரே காரணத்தினால்தான் என் பதிவுகளில் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கிற பல விஷயங்களை நகைச்சுவை கலந்து, தேன் தடவி சொல்கிறேன். ”நான் இப்படி பண்ணி எனக்கு இந்த அனுபவம் கிடைச்சது, நீ என்ன பண்ணனும்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்பதே என் பாணி.


அதற்காக எல்லாப் பதிவையும் போதிக்கும் பதிவாக, சமூக நன்மைக்காக எழுதும் திராணியற்ற முதுகெலும்பில்லாத பதிவன் தான் நான். நீங்கள் அப்படி எழுதும் பதிவர், மொக்கைப் பதிவுகளுக்கு எதிரி என்பதில் மிகவும் அகமகிழ்கிறேன். உங்களுக்கு என் நமஸ்காரங்கள். ஆனால், உங்களைப் போன்றவர் எழுதாமல் விடுவதுதான் என் போன்ற மூன்றாம்தர மொக்கைப் பதிவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது!! இல்லையென்றால் எவனெவன் என்னைப் போல மொக்கைப் பதிவுகளை எழுகிறானோ, அவனுக்கெல்லாம்
போய் பின்னூட்டம் போட்டு `இப்படி எழுதாதே,, இப்படி எழுது’ என்று அறிவுறுத்தி அவனை செழுமைப் படுத்தி, தமிழ்மணத்துக்கு உதவலாமே? என்ன இருந்தாலும் அதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே? எங்களுக்கெல்லாம் வழிகாட்டுவதும் உங்களின் கடமைதானே?


இப்பொழுதுகூட, ஞானவெட்டியான் சொன்ன அரிய தகவல்கள் குறித்தோ, ஜோசப் பால்ராஜும், இந்த மொக்கைப் பதிவு குறித்து ஆதங்கப்பட்ட நண்பரும் அருமையாக விளக்கிய கணினித் தொழில்நுட்பம் குறித்தோ பதிவைப் போடாமல் தேவையில்லாமல் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு பதிவாய்ப் போடும் கீழாந்தர மூளைதான் எனக்கிருக்கிறது!!


”அவர் சொன்னது உன்னைப் பற்றி என்று நினைத்து ஏன் டென்ஷனாகற” என்று கேட்பவர்களுக்கு..


யாரைப் பற்றி என்றாலும் கேட்கணுமில்லையா? இதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே?

Sunday, July 13, 2008

உங்கள் பார்வைக்கு ஒரு புகைப்படம்!என்னுடைய ஒன்றிரண்டு புகைப்படங்களைப் பார்த்து நந்து f/o நிலா, ஜீவ்ஸ் ஆகியோர் பாராட்டி, பாராட்டி எனக்குள்ள இருந்த பி.சி.ஸ்ரீராமை தட்டி எழுப்பி விட்டார்கள்...


அதுனால நான் எடுத்ததுல `நல்லாயிருக்கு’-ன்னு நான் நம்பற இன்னொரு ஃபோட்டோ இதோ உங்கள் பார்வைக்கு..


படத்துல இடது ஓரம் இருக்கறது என் மனைவியோட அண்ணன் மகள் மஹிதா. பாக்கி ரெண்டு பேரை உங்களுக்கு அறிமுகப் படுத்தணுமா? (மேகா & மீரா)


இப்போ கோவை பதிவர் சந்திப்புக்கு கிளம்பறேன்..
நிறைய சுவாரஸ்யங்களான விஷயங்களோட உங்களை நாளை சந்திக்கறேன்..

Saturday, July 12, 2008

சென்ஷி இனி என் நண்பர் அல்ல!

நானொரு கேள்வி நண்பர் சென்ஷியைக் கேட்டதும், அவர் அதற்கு பதில் சொல்லி என்னை மூக்குடைத்ததும் நாடறிந்த விஷயம்!


சென்ஷியின் அந்தப் பதிவுக்கு நான் எப்போதும் போலல்லாமல் செம மூடில் ஒரு – ஸாரி – பல பின்னூட்டம் போட்டிருந்தேன். அது எத்தனை பேர் பார்வையில் பட்டதோ என்று தெரியாததாலும், அவற்றைத் திரட்டி ஒரு பதிவாகப் போடவேண்டுமென்று நானும் சென்ஷியும் நினைத்ததாலும், அவரு போடறதுக்கு முந்தி நான் போடணும்னு நினைப்பதாலும், இன்னைக்கு மேட்டர் எதுவும் கிடைக்காததாலும்..... (சரி... சரி... முடிஞ்சுடுச்சு!) அந்தப் பின்னுட்டங்களின் தொகுப்பே இங்கு பதிவாக..


என் கேள்விக்கு அவர் பதிலை படிச்சீங்கதானே?

இப்போ என் பின்னூட்டங்கள்:-


//ஐயா..அம்மா.. எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.. நம்ம சென்ஷி இப்படி ஆனதுக்கு நாந்தான் காரணம்.. இதுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்..
எந்த எடத்துல சென்ஷி இப்படி ஆயிட்டாருன்னு பாப்போம்.//


(கதாபாத்திரங்கள்:- ஒரு புது ப்ராக்டீஸ் பண்ற டாக்டர், நர்ஸ் & ஒரு சீஃப் டாக்டர்.)


//எனது உறவுச்சங்கிலியின் மிகமுக்கியமான வளையமாக நான் நினைக்கும் //

இப்ப நல்லா இருக்காரு.


//காரணம், கேள்வி என்ற குறிப்புகளின் வழி தொலைதூர எல்லைகளை கடக்க வேண்டிய பதில்கள் நமக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கின்றது//


அருமையாச் சொல்லிருக்கார்.. இங்க அவர் அறிவுபூர்வமா யோசிச்சுட்டு இருக்கார்..


//தெளிவான நீரில் நனையும் செருப்பில்லாத காலை காட்டுவதில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி //


என்ன ஒரு உவமை! இந்த ஒரு வரிக்காகவே இவரை குணப்படுத்த ஆகற செலவை நான் ஏத்துக்கறேன்!

Senshe.. From my heart I'm telling you, these lines broken me! Great!! (ஹூம்.. இத படிக்கற மனநிலைல அவரு இல்லையே!
!)


//இனி பரிசல்காரனுக்கான பதில் விரிவாக 50 வரிகளில்...

மனித நாகரிகத்தின் பரிணாமம் பேச்சிற்கு முன்பிருந்தே குறியீடுகளாக //


இங்கதான் லைட்டா அவருக்கு ஆரம்பிக்குது..


//எளிமையாகக்கூறும் முயற்சியில் ஈடுபட்டதில் கிடைத்த வார்த்தை "பாத்திரத்தில் நிரம்பிய நீராக நீர் இருக்கிறீர்".//


இப்போ மறுபடி நல்லாயிடறார்..


//குறியீட்டு வடிவங்கள் குறிப்பிடத்தகுந்த எழுத்துக்களை சிந்தனைகளின் வடிகாலாக சிதறடிக்கத்தொடங்கிய சமயத்திலும் எதிர்மாறான கருத்துக்கள் //


ஐயையோ.. ரிப்போர்ட் தாறுமாறா ஒடுது.. நர்ஸ் அவரைப் புடிச்சு பெட்ல படுக்க வைங்க..


//எழுதியவனின் மேலுள்ள குற்றத்தை எழுத்துக்களின் மேல் சுமத்தி கிழித்து எரிக்கின்ற புதிய சமுதாயம் வளர்ச்சியில் முன்னிலை கொண்டு அதிர்வுகளின் படியில் ஏறி அதிகாரத்தை அடைகிறது.//


இங்கதான் எனக்கு நம்பிக்கை போகுது.. ப்ச்..நம்ம கைல ஒண்ணுமில்ல..


//கரையோரம் கட்டப்பட்ட ஓட்டைப்படகில் சவாரி செய்யும் நிலையில் தப்பிக்க முயற்சிக்கிறான்//


சொல்லீருந்தா நான் கொண்டுபோய் சேர்த்திருப்பேன்ல.. நம்மளுது நல்லாத்தான் இருக்கு


// நிச்சயமற்ற சூழலில் கிடைக்கின்ற வார்த்தைகளின் வரிசைகள் எதேச்சதிகாரமாக தன்னை நிலைநிறுத்த அல்லது தனது படிம சூழலைக் கொண்டாட வைக்க கவர்ச்சியை அள்ளிப்பூசிக் //


நர்ஸ்.. சீஃப் டாக்டரைக் கூப்பிடுங்க..


//எழுத்துக்கள் சாக்கடையில் கிடந்தாலும் எழுத்தாளன் சந்தனத்தை ரசிக்கத்தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் //

//எங்களிடம் உள்ளது கழுதைதான் என்றாலும் அதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற நம்பிக்கை கிடைப்பதால்//


டாக்டர்..என்னமோ ஒரு பெரிய சோகம் இவருக்குள்ள இரூக்கு.. இருங்க என்னான்னு பாக்கலாம்


//நான் சமைத்ததை நானே சாப்பிட்டும் வாழ வேண்டிய இரு வேறு கொடுமைகள் இல்லாத காரணத்தாலும் //

//என்னுடைய காதலிகளின் வரிசைப்பட்டியலை மறந்து//


டாக்டர்.. இதுதான் காரணம் பார்த்தீங்களா? என்ன பிராக்டீஸ் பண்றீங்க நீங்க?


// மொக்கை கேள்வியை வலையுலக பெரிய கோணிஊசி திரு. லக்கிலுக்கிடம் //


நர்ஸ்.. சீக்கிரமா ஹாஸ்பிட்டலை விட்டு எல்லாரும் வெளில ஓடுங்க.. யாரைக் கூப்ப்ட்டுருக்காருன்னு பாத்தீங்கள்ல?


”ஐய்ய்ய் ஐஇய்ய்ய்.. ஒய்ய்ய்ய்”

நர்ஸ்; சார்... சார்.. சீஃப் டாக்டர் சட்டையை கழட்டீட்டு ஓடறாரு.. புடிங்க..இந்தளவு அவரைக் கலாய்த்ததோடு விடவில்லை நான்.. இவ்வளவுக்குப் பிறகும்...


// எப்புவுமே ஒரு பின்னூட்டம் வந்தாலே.. பதில் சொல்லுவாரு சென்ஷி.. இன்னும் ஆளைக் காணோம் பாத்தீங்களா//


என்று கேட்டிருந்தேன்...


இப்படியெல்லாம் ஒருத்தர் என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டிருந்தால் நான் தையாதக்கா என்று குதித்திருப்பேனோ என்னவோ... ஆனால் சென்ஷி கொஞ்சமும் கோபப்படாமல்..


// என் பதிவ விட உங்க கமெண்டுதான் இன்னிக்கு ஹிட்டு.. கலாய்ச்சி எடுத்துருக்கீங்க. அதுவும் கரெக்டா எந்த எடத்துல கவுக்கணுமோ அங்கனயே கவுத்து மேல பெஞ்சு போட்டு ஏறி நின்னு அடிக்கறீங்க பாருங்க ஒரு டான்ஸ்.. எனக்கு அந்து போச்சு//


என்று நகைச்சுவையாகவும், என்னைப் பாராட்டியும் பின்னூட்டமிட்டிருக்கிறார்!!


இப்படிப்பட்ட சென்ஷியை என் நண்பர் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை!


சென்ஷி....

இன்றுமுதல் நீ என்..

நண்பன்!

Friday, July 11, 2008

அவியல் – ஜூலை 11


தனது பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறாள் மீரா. ”நானும் பெரியவளாகி இந்த மாதிரியெல்லாம் எழுதுவேன்” என்கிறாள்.. விதி யாரை விட்டது!

-----------------------

சென்ற ஆகஸ்ட் 15 அன்று நடந்த சம்பவமொன்றை நண்பர் சௌந்தர் சொன்னார்.


இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஐந்து-ஆறு வயதுள்ள ஒரு சிறுவனுடன் வந்த பெண்ணொருத்தி பிச்சை கேட்டிருக்கிறாள். இவர் காசு கொடுத்ததும், அவள் அடுத்த ஆளிடம் போய்விட்டாள். ஆனால் அந்தச் சிறுவன் இவரை தொட்டு பாக்கெட்டை நோக்கிக் காட்டி எதையோ கேட்டிருக்கிறான். இவர் `இவனுக்கும் போடணுமா’ என்று சலித்தவாறே ஒரு ரூபாயை கொடுத்திருக்கிறார். அவன் வாங்கவில்லை. “என்னடா இவன்” என்று சலித்தவாறே நின்றிருக்கிறார். அவன் விடாமல், இவரை தொட்டுத் தொட்டு பாக்கெட்டை சுட்டிக் காட்டி ஏதோ கேட்டிருக்கிறான். இவர் கோபம் வந்தவராய் அவனது அம்மாவிடம் முறையிட்டிருக்கிறார். பக்கத்து ஆளிடம் கையேந்திக் கொண்டிருந்த அவளும் அந்தச் சிறுவனை இழுத்துப் போக முயன்றிருக்கிறார். அவன் நகராமல் அடம் பிடித்தவனாய் நிற்க இவர் வெறுப்புடன், இன்னும் ஒரு ரூபாய் சேர்த்து இரண்டு ரூபாயாகக் கொடுத்திருக்கிறார். அதையும் வாங்காமல் அவன் மறுபடி இவரது பாக்கெட்டைக் காட்டியிருக்கிறான்.இவருக்கு அப்போதுதான் புரிந்திருக்கிறது. அந்தச் சிறுவன் கேட்டது, அவரது பாக்கெட்டில் குத்தியிருந்த தேசியக் கொடியை!


இந்த இடத்தில் எனக்கு தமிழ்நெஞ்சன் (தீவின் தாகம் தொகுப்பில்) எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வருகிறது...கொடி தந்தீர்
குண்டூசி கொடுத்தீர்
சட்டை?


---------------------


சில பதிவுகளை எழுதிவிட்டு என்ன வகைப்படுத்துவது என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. நேற்று எழுதிய `வார்த்தை விளையாட்டு’ பதிவை அனுபவம் என்றிடுவதா, வகைப்படுத்தாதவை என்று விட்டுவிடலாமா என்றெல்லாம் ஒரே குழப்பமாகிவிட்டது. இப்படி வகைப்படுத்துவதன் சாதக, பாதகங்கள் குறித்து யாரேனும் சொன்னால் தேவலாம்..


---------------------மீரா, மேகாவின் பள்ளி டைரியின் முதல் பக்கத்தில் PERSONAL MEMORANDA என்றொரு பக்கம் இரண்டு பிரதிகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விஷயங்களைக் கேட்டிருக்கும் அந்தப் பக்கத்தை ஒரு பிரதி பள்ளிக்கும், ஒன்று டைரியிலேவும் இருக்கும். பள்ளியில் எதிலும் அவர்களது ஜாதியை நான் குறிப்பிடுவதில்லை. (குறைந்தபட்சம் `ஜாதி’யை ஒழிக்க நம்மாலான முயற்சி என்று சொன்னால் `கப்ஸாவப் பாரு' என்பீர்கள். எழுதியும் ஒரு ***ம் கிடைக்காது என்பதும் ஒரு காரணம்!) இதிலும் குறிப்பிடவில்லை. பாக்கி எல்லாம் ஃபில் பண்ணி விட்டேன். தினமும் கையெழுத்து வாங்குவார்களே, அதுபோல நேற்று கையெழுத்திடும்போதுதான் பார்த்தேன். இன்னொரு காலமும் (Column) பூர்த்தி செய்யாமல் கொடுத்திருக்க வேண்டும் நான். அது.. Monthly Income? என்றொரு கேள்வி...


”அதெல்லாம் எதுக்குடா உங்களுக்கு.. குழந்தைகளுக்கு கல்வியோட முக்கியத்துவத்தைவிட காசோட முக்கியத்துவத்தை ஏண்டா சொல்லித்தர்றீங்க?” என்று கேட்க வக்கில்லாமல் நானும் எழுதியிருக்கிறேன். ச்சே!


------------------ரஜினி அளவுக்கு கமல் ஏன் குழந்தைகளை கவரவில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம். ஒருத்தர் சொன்னார்..“ஆமா.. பின்ன..? ஒவ்வொரு படத்துல ஒவ்வொரு மாதிரி வர்றாரு. இப்ப என்னடான்னா ஒரே படத்துல வேற வேற மாதிரி வந்திருக்காரு. கமல் யாரு’ன்னு தெரிஞ்சுக்கவே அவங்கனால முடியறதில்ல. அது கூட காரணமாயிருக்கலாம்”


உண்மையோ?


-------------------------


`நாந்தான் பலசாலி. நாந்தான் உன்னை அரணாக நின்று காக்கிறேன்’ – பல் சொன்னது நாக்கிடம்.

நாக்கு அமைதி காத்தது.எதிரே ஒரு இளம் பெண்வர.. “சூப்பர் ஃபிகர்” என்றது நாக்கு.


அவள் விட்ட அறையில் கழன்றது இரு பற்கள்!


நீதி: நேரம் பார்த்து தாக்கு!(ஐய்ய்யா! நங்களும் மெசேஜ் சொல்லீட்டமே!)


----------------------------------


எங்கே இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்றைய கவிதையை சேர்க்கலாமா என்று தெரியவில்லை. ஏனென்றால் எங்கே இவரென்று எனக்குத் தெரியும்.


1994-ல் வெளியான “தொலைந்தவன்” என்ற தலைப்பில் வெளியான இந்தக்கவிதையை எழுதியவர் அனந்த்பாலா.கண்டிப்பாய் இருக்கிறது
ஆனால்காணவில்லை.
மகனுக்கு அப்பன்.
மனைவிக்கு புருஷன்
அதிகாரிக்கு அடிமை
நண்பனுக்கு நடமாடும் வங்கி.
இப்படியாகத்தான் அது..
கண்ணில் படுவதேயில்லை
நீங்கள் கண்டதுண்டா
நிஜமான என்னை?இவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியுமென்று சொன்னேனல்லவா.. ஒரு க்ளு..என் தாயார் பெயர்: அனந்தலட்சுமி
தந்தை பெயர்: பாலசுப்ரமணியன்


(எல்லாம் ஒரு விளம்பரம்தான்...!)

Thursday, July 10, 2008

வார்த்தை விளையாட்டு

நண்பர்களோடு இருந்தாய்

பேசமுடியவில்லை.

என்னோடு இருந்தாய்

பேசி முடியவில்லை.

-கற்றது தமிழ் விளம்பரத்தில்
..........

இரவில் நீ என்னை அணைக்க மறந்தால்

பகலில் நான் உன்னை அணைக்க நேரிடும்

-கேஸ் சிலிண்டர்

.......................

பக்கம் தந்த குமுதம், பக்கம் நின்ற வாசகர்கள் அனைவருக்கும் நன்றி!

-`கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’ தொடரின் முடிவில் குமுதத்தில் வைரமுத்து

...........................

வாக்குப் போட்டவனை சாவடிப்பதால்தான், அது வாக்குச்சாவடி!

-அப்துல்காதர் (அகடவிகடம்)

...........................

பெண்பார்க்க வந்த இடத்தில் மாப்பிள்ளை பெண்ணின் அண்ணனிடம் ஒரு டைரியைக் கொடுத்து..

“இது என்னோட past. இத என்னோட present-ஆ Future ல எனக்கு மனைவியாகப்போற உங்க தங்கச்சிகிட்ட குடுத்துடுங்க...

-பாலச்சந்தர் சீரியல் ஒன்றில்

...........................................

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, இன்சமாம், ஜெயசூர்யா, கவிஞர் வாலி இவங்க எல்லாரும் பத்தாயிரத்தைக் கடந்தவர்கள்அவர்கள் Bat-ஆல்... இவர் பாட்டால்!

-பிரகாஷ்ராஜ் (கவிஞர் வாலிக்கு நடந்த பாராட்டுவிழா ஒன்றில்)

.......................................

டி,வி.எஸ்ஸின் கார் விளம்பரம் ஒன்றில்..

We were in the car business, Before the car were in the business!

...................................

ஆடியபோது அசையாமல் பார்த்தேன்

அசையாமலிருந்தபோது ஆடிப்போனேன்

-நாட்டியப் பேரொளி பத்மினி மறைவின்போது வந்த எஸ்.எம்.எஸ்

..............................

என் தம்பி கிரேசி கிரியைப் பற்றி சொல்லியிருக்கிறேனல்லவா.. அவன் ஒரு விலாசம் தேடிப் போய்க்கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒருவரிடம் கேட்டிருக்கிறான்..

"இந்த அட்ரஸ் எங்கிருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்”

“நேராப் போனீங்கன்னா ஒரு Dead End வரும்”

“ஆமாமா.. DEAD ன்னாலே END தானே?”

”இல்லீங்க.. Dead End-ன்னா...”

“எல்லாருக்குமே End, Dead தாங்க”

அவரு அட்ரசை சொல்லாமயே போய்ட்டாராம்.

..............................................


கிரேசி கிரி மேட்டரை நாளைக்குப் போடப்போற அவியல்ல போடலாம்ன்னுதான் நினைச்சேன்.. அது ஒரு நல்ல வார்த்தை விளையாட்டு-ங்கறதால இதுலயே போட்டுட்டேன்.. இந்த மாதிரி நிறைய வார்த்தை விளையாட்டுகள் குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்.. உங்களுக்குப் பிடிச்சிருந்தா அப்பப்ப போடறேன்..

Wednesday, July 9, 2008

சென்ஷிக்கு மொக்கைக் கேள்வி... கோவி. கண்ணனுக்கு சூப்பர்(?) பதில்!!

தில்லானா மோகனாம்பாள்-ல ஆச்சி கேப்பாங்க-ள்ல “என்ன சிக்கலாரே”ன்னு. அதுதான் ஞாபகத்துக்கு வருது!


”என்ன கோவியாரே.. இப்போ சந்தோஷம் தானே?”

என்னை கேள்வி கேட்ட கோவி கண்ணன், இதை ஆரம்பிச்ச ஜெகதீசன்.. எல்லாரும் நல்லாயிருங்க!

இம்சை அரசனைவிட்டு துண்டைக் காணோம், துணியை காணோம்ன்னு அந்தக் காவலாளிகள் ஓடினதுபோல நானும் வலையுலகத்தை விட்டு ஓடிவிடுவேனென்று பகல் கனா கண்டீரோ? ம்ஹூம்! நடக்காது நண்பரே.. இதோ பிடியுங்கள் பதிலை!


(இதுவரைக்கும் அடிச்சுட்டேன்.. இதுக்கு மேல எப்படி நகர்த்தறதுன்னு தெரியல.. யாரோ சொல்லியிருக்காங்க.. ஒரு கதையோ, எதுவோ எழுத உக்காரும்போது முதல் வரியை மட்டும் நீங்க முடிவு பண்ணுங்க.. பாக்கியை அதுவே கொண்டு செல்லும்-ன்னு. இதைச் சொன்னவர் மட்டும் இப்போ கிடைச்சார்ன்னு வைங்க..)


(இந்த பதிலுக்கு ஹிண்ட் கொடுத்த கஸின் கிரேசி கிரிக்கு நன்றிகள் பல!!)


கேள்வி: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?


பதில்: இதுக்கு நேரடியான பதில் இருக்கா, என்னங்கறதெல்லாம் நிஜமாவே தெரியல! சிம்புதேவனைத்தான் கேட்கணும்.. என் சௌகரியத்துக்கு இப்படி வெச்சுக்கலாம்...


தட்டான்-ன்னா தங்க நகை ஆசாரி. (தட்டான் = பொற்கொல்லர். கழகத் தமிழ் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பக்கம் 206... எவ்ளோ ஆராய்ச்சியெல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா?) இல்லையா? பொற்கொல்லர் வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? தீயில, ஊதுகுழல் வெச்சுகிட்டு ஹீட்டான பொருட்களின் அருகிலிருந்து வேலை செய்வாரு. அப்படி வேலை செய்யறப்போ வேர்த்துவடியும். அதுனால ஆசாரி எப்பவுமே சட்டை போடாமதான் வேலை செஞ்சுட்டு இருப்பாரு. அவரு வேலை செஞ்சாதானே அவர் குடும்பம் பொழைக்கும்? (என்னா ஒரு கண்டுபிடிப்பு!!) அவருக்கு ஒரு பையன். கொஞ்சம் உயரம் கம்மியா இருப்பான். அதனால குட்டைப்பையன்-ன்னு சொல்லுவாங்க. (10)


அந்தத் தட்டான் கொஞ்சம் சோம்பேறி. அதுமில்லாம சுகவாசி. கொஞ்சநேரம் வேலை பாக்கவேண்டியது. அப்புறமா சட்டையைப் போட்டுட்டு ஊர்ல வேலை, வெட்டியில்லாம திரிவாங்களே.. அந்தப் பசங்களோட போய் வெட்டிநியாயம் பேசவேண்டியது. இப்படியே பண்ணீட்டிருந்தாரு. இதுனால அவருக்கு முறையான வருமானம் வராம இருந்தது. குறையான வருமானம்தான் வந்தது! குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டாங்க அவரோட மனைவி!


(அம்பது வரில பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ஜெகதீசன்? அதப் படிக்கறது அத விட கஷ்டம்!)


அவர் வீட்டுப் பிரச்சினை பஞ்சாயத்துக்கு வந்தது. (20) பஞ்சாயத்துல அவரை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க. ஜெகதீசன் மாதிரி மொக்கையா கேளுங்க-ன்னு யாரும் கண்டிஷன் போடல. அதுனால ஊர்ப் பெரியவங்க-ள்லாம் சேர்ந்து `ஏன்யா இப்படிப் பண்ற?’ `உன் குடும்பம் உனக்கு முக்கியமில்லையா?’ உன் பையன் வாழ்க்கையாவது நல்லா இருக்க வேண்டாமா’ (25 வரி ஆச்சா?) இப்படீன்னெல்லாம் கேள்வி கேட்டாங்க.


எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியல நம்ம தட்டானால. பேசாம நின்னாரு. தான் செய்யறது தப்புன்னு அவருக்கு தெரிஞ்சுடுச்சு. பஞ்சாயத்துல வெச்சு ஒரு உறுதிமொழி குடுத்தாரு. (30) `இனிமே நான்...” தொடர்ந்து பேச்சு வர்ல அவருக்கு. `என்னாச்சு?’ ஊர்ப்பெரியவங்க கேட்டாங்க. தட்டான் அமைதியா நின்னாரு. கூடியிருந்த ஊர் மக்கள் எல்லாம் திகைப்பா பாக்கறாங்க. `ஏன் என்னமோ சொல்ல வந்தத பாதில நிறுத்தின?’ - ன்னு கேட்டாங்க. எல்லாரையும் பாக்கறாரு தட்டான். `தொடர்ந்து சொல்லீட்டா பரிசல்காரனால அம்பது வரிக்கு ஜவ்விழு இழுக்க முடியாதே’ அப்படீன்னு மனசுக்குள்ள நினைக்கறாரு தட்டான். ஆனா வெளில சொல்ல முடியல. (பாருங்க... அவருக்கு கூட என்னோட கஷ்டம் தெரிஞ்சிருக்கு) தண்ணி குடிக்கறாரு. (40)

`இனிமே நான் வேலையை விட்டுட்டு வெட்டியா ஊரைச் சுத்தமாட்டேன். இத இந்த ஊர் ஜனங்க முன்னாடி சத்தியம் பண்ணி சொல்றேன்’ - ன்னு வாக்கு குடுத்துடறாரு. பஞ்சாயத்துல அம்மா அழுதுட்டே நிக்கறதையும், அப்பா எல்லார் முன்னாடியும் குற்றவாளிபோல நிக்கறதையும் பாத்துட்டே இருக்கான் குட்டைப்பையன்.


அடுத்தநாள்..


வழக்கம்போல தட்டான் வேலைக்குப் போறாரு.


ஒழுங்கா வேலை செஞ்சுட்டு இருக்காரு. அவர்கூட ஊர்சுத்தியே பழக்கப்பட்ட அவரோட ஃபிரண்டு ஒருத்தன் வர்றான். `டேய்.. பஞ்சாயத்து கிடக்குது. வாடா.. ஒரு ரவுண்டு போலாம்’ – ன்னு கூப்பிடறான். `நான் வர்லடா’ங்கறாரு தட்டான். (அப்பா.. 50 வரி ஆச்சு!) `ப்ச்.. சட்டையைப் போட்டுட்டு கிளம்புடா.. சும்மா பிகு பண்றான்’ ன்னு சொல்லிகிட்டே தட்டானுக்கு சட்டையப் போட்டுவிடப் பாக்கறான் அந்த ஃபிரண்டு. இதப் பாத்துட்டிருந்த குட்டைப்பையனுக்கு வந்ததே கோபம்.. `இவன மாதிரி ஆளுகளாலதானே அம்மா பஞ்சாயத்துல அழுதுட்டே நின்னாங்க’ -ன்னு ஆத்திரம் வர பக்கத்துல இருந்த ஒரு கட்டையை எடுத்து அப்பாவோட ஃபிரண்ட் மண்டைல போட்டான் ஒரு போடு!


தலைல ரத்தம் வழிய “ஐயையோ.. குட்டைப்பையன் கட்டையால அடிச்சுட்டான்’ ன்னு கத்திகிட்டே ஓடினான். ஊர்ல அதுக்கப்புறம் சொல்லிகிட்டாங்க.. “தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்”-ன்னு!

இதுதாங்க அது!

இந்த மொக்கை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?

ஜெகதீசன் & கோவி.கண்ணன்:- பிராக்கட்ல இருக்கற என்னோட கமெண்டையெல்லாம் கணக்குல சேர்த்தாமதான் எண்ணிருக்கேன்!

(எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)இனி.. என் கேள்வி... ரொம்ப நாளா என் பிளாக்குக்கு வராம டிமிக்கி குடுத்திட்டிருக்கற சென்ஷிக்கு!


”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”


இது அக்மார்க் சொந்த கேள்வி. (நேத்து நைட் ரெண்டு மணிவரைக்கும் தூங்கல.. நீங்களும் கிடந்து தவிங்க!!)

Tuesday, July 8, 2008

அவியல் – ஜூலை 08 - 2008

`என்னடா இவ்வளவு நாளாக அவியல் எழுதாமல் இருக்கிறாய்’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டதால்.... (வேற யாரு கேப்பா?) இன்று அவியல்...

-------------------------

பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்!

--------------------------------------


குசேலன் பாடல்கள் முதலில் கேட்பதற்கு `ஒண்ணும் பெரிசா சொல்றதுக்கில்லையே’ என்றிருந்தது. கேட்க, கேட்க பரவாயில்லை ரகம். `அட.. பரவாயில்லையே’ என்று தோன்ற இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருக்கலாம். எனக்கு மிகப் பிடித்தது `வெயிலோடு விளையாடி’ மியூசிக்கில், வேறு மெட்டில் ஜி.வி.பிரகாஷ் போட்டிருக்கும் `பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா’ என்ற பாடல். ரஜினி புகழ் பாடும் பாடல் என்றுதான் முதலில் நினைத்தேன். நன்றாக கேட்டபோது `அவர் தோழனே.. உனைப்பாடவே.. சுகம் கூடுதே’ என்ற வரிகள், இது, படத்தில் சிகை அலங்காரனாக நடிக்கும் பசுபதிக்காக எழுதப்பட்ட பாடல் என்பதைப் புர்ய வைக்கிறது. யுகபாரதி பின்னியெடுத்திருக்கிறார். ஏற்கனவே விகடனில் அவரெழுதிய தெருவாசகத்தில் இது போன்ற சாமான்யர்களை தன் கவிதையில் பெருமைப்படுத்தினார். (ஆனால் இதை எழுதும்போதுதான் எடுத்துப் பார்த்தேன். அதில் எழுதிய வார்த்தைகளை இந்தப் பாடலுக்கு அதிகமாக பயன்படுத்தவில்லை! சபாஷ் யுகபாரதி!!) நான் பாடல் வரிகளுக்காகவே பாடல்களை ரசிக்கும் ஜாதி. இதோ அந்தப் பாடலில் சில வரிகள்:

“இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி போகின்றோமே எந்நாளும்”

“பிறர் தலையின் கனமெல்லாம்.. இவனாலே குறையாதோ”

“அடுத்த மனிதன் வளர்ச்சி கண்டு
மகிழும் மனிதன் உன்போலே
எவருமில்லை உலகில் இங்கு
தலையும் தருவார் தன்னாலே”

”இவன் கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்புப் போட்டு செய்யும் தொழிலால் வாழ்பை வெல்பவன்”

அதேபோல `சொல்லம்மா சொல்லம்மா’ பாடலில் பா.விஜய்-ய்யின் வரிகளும் சூப்பர்.

“Insurance இல்லாம வாழும் நமக்கு
Installment வாங்காம இன்பம் இருக்கு”

--------------------------------

என் நெடுநாள் நண்பன் ரகுவை நேற்று சந்தித்தேன். நண்பனென்று யாரைச் சந்தித்தாலும் “ஐயா.. சாமி.. நான் பிளாக்-ல எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. படீங்க சாமீ” என்று கெஞ்சுவதுதானே முதல் வேலை? அதே போல அவனிடமும் சொன்னேன்.

“எப்படா எனக்கு கம்ப்யூட்டரும், நெட் கனெக்‌ஷனும் வாங்கித்தர்ற?” என்று கேட்டான்.

“நான் எதுக்குடா உனக்கு வாங்கித் தரணும்?”

“முதல்லயெல்லாம் உன்கதை குமுதத்துல வர்றப்ப, குமுதம் வாங்கித்தந்து படிக்கச் சொல்லுவியில்ல? அதேமாதிரி....”

அதுசரி!

-----------------------------------------

அப்பாவின் காரியங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான், கிரேசி கிரி, செந்தில், தம்பி ராம் எல்லாருமாக உட்கார்ந்து என் வலையெழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். (உனக்கு வேற வேலையே இல்லியாடா?) உள்ளே ஒரு அறையிலிருந்து “எல்லாத்தையும் விட அவியல்தான் நல்லாயிருக்கு” என்றும், “ஆனா அவியல்ல ஏன் முருங்கக்காய் இல்ல?” என்றெல்லாமும் குரல்கள் கேட்டது. `ஆஹா.. நம்ம அவியல்ல முருங்கக்காய் சமாச்சாரத்தை எதிர்பார்க்கிறார்கள் போல ‘ என்று அப்போது போட்ட ஒரு அவியலில் நமீதா படமெல்லாம் போட்டேன். அடுத்த நாள் சாப்பிடும்போது என் கஸின் சுதாக்கா ”எல்லாருக்கும் நான் பண்ணின அவியல்தாண்டா பிடிச்சிருக்கு”
என்றபோதுதான் எந்த அவியலைப்பற்றி பேசியிருக்கிறார்கள் என்று புரிந்தது.

-----------------------------------

"எங்கே இந்தக் கவிஞர்கள்?” வரிசையில் இன்று மேகவண்ணன்

மென்மையாகத்தான் கைகுலுக்கினான்
ஆனாலும் வலிக்கிறது
காதலியின் கணவன்.

Monday, July 7, 2008

ஒரு டைரிக்குறிப்பும், ஒரு காதல் மறுப்பும்


‘அந்த ஸ்கூட்டர் உன்னை நோக்கித்தான் வருகிறது’ என்று என் மூளை கண்டுகொண்டு, மூளை கைக்கும், காலுக்கும் ‘பிரேக்கைப் பிடி’ என்று செய்தி அனுப்பி, அது செயல்படுத்துமுன் அந்த விபத்து நடந்துவிட்டது.


எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த என் பைக், எதிரே வந்த ஸ்கூட்டரில் மோதி, அந்த ஸ்கூட்டரில் இருந்தவர் தடுமாறி, பின் சீட்டில் குழந்தையுடன் அமர்ந்த அவர் மனைவி தூக்கியெறியப்பட்டு, அவர் ஒரு புறமும், மனைவி ஒருபுறமும் விழுந்தனர். என் கண் முன்னே அவரது மனைவியுடன் அமர்ந்திருந்த மூன்று அல்லது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை பத்தடி உயரத்தில் பறந்து அருகிலிருந்த கல் குவியலில் விழுந்தது.


“அவ ரொம்ப உறுதியா இருக்காங்க. நீங்க சொன்னாலும் கேப்பா-ன்னு எனக்குத் தெரியல”

“ஏய்.. என்னடி சொல்ற நீ? அடிக்கற அடில கேப்பாளா இல்லயான்னு தெரிஞ்சுடும். நம்ம காதல் கல்யாணத்துனால சொத்தெல்லாம் விட்டுட்டு வந்து, இந்த இருபது வருஷமா கஷ்டப்பட்டு கார், பங்களான்னு வாங்கி ஊர்ல பெரிய மனுஷன்னு பேர் எடுத்திருக்கேன். நம்ம பொண்ணுக்கு எம்.எல்.ஏ பையனை முடிச்சு வைக்கணும்-ன்னு படாதபாடு பட்டு பேச்சுவார்த்தை நடத்தி எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல-அவ எவனோ ஊர் பேர் தெரியாதவன லவ் பண்ணுவாளாம், நான் அட்சதை போடணுமாம். வரட்டும். பேசிக்கறேன்”


முழுக்க முழுக்க என் தவறினால்தான் அந்த விபத்து நேர்ந்தது. ஆனால் எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை. எதிரே வண்டி ஓட்டியவருக்கும், அவரது மனைவிக்கும் கை, கால்களில் சிராய்ப்பு. ஆனால் தூக்கியெறியப்பட்ட குழந்தைக்கு கண்ணருகே பலத்த அடிபட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. என்னால்தான் அந்தக் குழந்தைக்கு இந்த நிலைமை என்றறிந்ததும் சேர்ந்த கூட்டம் என்னை அடிக்குமளவு வந்துவிட்டது. என் மனைவி அவசரமாய் பிரசவ வலியினால் பக்கத்து வீட்டுக்காரர்களால் மருத்துவமனை சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததால், அந்தப் பதட்டத்தில் பைக் ஓட்டியதால்தான் இது நேர்ந்ததாகச் சொன்னேன். அந்தக் குழந்தையின் தந்தை கூட்டத்தினரை சமாதானப் படுத்தி, ஒரு காரை அழைத்து குழந்தையை அவசரமாய் மருத்துவமனை அழைத்துச் செல்ல ஏறினார். அருகில் என் மனைவி சேர்க்கப்பட்டிருந்த பிரபல மருத்துவமனைக்கே காரை விடச் சொன்னேன் நான். அந்தக் குழந்தையின் வலது கண்ணருகே ரத்தம் வழிந்துகொண்டிருப்பதை பார்க்க, தாங்கவில்லை என்னால்.


“என்னப்பா.. இதென்ன பிஸினஸா? காதல் கல்யாணத்துனால உங்க வாழ்க்கைல எதை இழந்துட்டீங்க? இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு தேவையான பணத்தை சேர்த்தியாச்சு.. சொந்தக்காரங்களைப் பத்தி ஏன் கவலைப் படறீங்க? அவங்க என்ன செஞ்சாங்க உங்களுக்கு?”

“ஏய்.. என்ன எதிர்த்து எதிர்த்துப் பேசற?”


“ஐயோ.. என்னங்க இது.. வளர்ந்த புள்ளையை அடிக்கறீங்க?”.


“நீ சும்மா இருடி...”


“அப்பா.. என்னை அடிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி நான் தேர்ந்த்தெடுத்த ஆள் சரியானவரா, இல்லியா-ன்னு பாருங்க. அவரை கூட்டீட்டு வந்திருக்கேன். வெளிலதான் வெயிட் பண்றாரு. பேசுங்க”


மருத்துவமனையில் டாக்டர் சொன்னதைக் கேட்டதும் இடி இறங்கியது போல, மயங்கிச் சரிந்தார் அவரது மனைவி. வலது கண்ணருகே பலத்த அடி பட்டுவிட்டதால், கண்ணின் நரம்பு நேரடியாக பாதிக்கப் பட்டுவிட்டதாகவும் பார்வை திரும்பக் கிடைப்பது மிகவும் கஷ்டம்தானென்றும் கூறினார் டாக்டர். பிரசவ வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த என் மனைவியை சென்று பார்க்கக் கூட மனமில்லாமல் அமர்ந்திருந்தேன் நான். அந்தப் பையனின் அப்பாவோ.. சிறிது நேரம் அழுதவராய்.. என் அருகே வந்து “என் மேலயும் தப்பு இருக்குங்க.. என் விதி அப்படி. நீங்க உங்க மனைவியை பாருங்க. நாம அப்புறமா சந்திக்கலாம்” என்றார். அவரது நண்பர்களும், சொந்தங்களும் என்னை சபித்தபடி இருக்க நான் குனிந்த தலையுடன் என் மனைவியைப் பார்க்கச் சென்றேன்..


“வணக்கம் அங்கிள்”

“ம்..ம்..”

“என் பேர் விக்னேஸ்வர். சின்னதா ஒரு கார்மெண்ட் ஃபேக்டரி வெச்சிருக்கேன். எந்தவிதமான் கெட்ட பழக்கமும் இதுவரைக்கும் இல்ல. அம்மா அஞ்சு வருஷம் முன்னாடி தவறீட்டாங்க. அப்பா மட்டும்தான். என் காதல் அவருக்கு தெரியும். ரொம்ப நல்ல மனுஷன். அம்மா பேர்ல ஒரு டிரஸ்ட் வெச்சு நடத்தீட்டு வர்றார். எனக்கு மாசம் ஐம்பதாயிரத்துக்கு குறையாம வருமானம் வரும். சொந்த வீடு, கார் –ன்னு செட்டில் ஆகிட்டேன். ஆனா எனக்கொரு குறை இருக்கு..”

“விக்னேஷ்..”

“நீ பேசாம இரு ரம்யா. சார்.. உங்க பொண்ணுக்கு இதுபத்தி தெரியும்.. உங்ககிட்ட இப்போதைக்கு சொல்ல வேண்டாம்ன்னா.. ஆனா எனக்கு மறைக்க விருப்பமில்ல”

என் மனைவிக்கு பெண்குழந்தை பிறக்க, அதற்குப்பிறகு அன்றிரவு அவரை சந்தித்தேன். அவரது பையனுக்கு கண்பார்வை வர வாய்ப்பிலை என்றும், அப்போதைக்கு ஆர்ட்டிஃபீஷியலாக கண் பொருத்த முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார். மருத்துவசெலவுக்கு பணம் தருவதாக நான் சொன்ன போதும், கேஸ் போடச் சொல்லி அவர் தரப்பிலிருந்து பலபேர் சொன்ன போதும் எல்லாவற்றையும் மறுத்தார். என் வாழ்க்கையில் நான் செய்த இந்தப் பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறேன்?

“எனக்கு வலது கண் இல்ல. சார். நீங்க பார்க்கறது ஆர்ட்டிஃபீஷியல் கண்” என்றான் விக்னேஸ்வர்.

"நீ.. நீ.. அந்த விக்னேஸ்வரா? சோபாவை விட்டு எழுந்தார் ரம்யாவின் அப்பா.

Sunday, July 6, 2008

பார்வைக்கு கொஞ்சம் பொன்மொழிகள்

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
- காந்திஜி


Both optimists and pessimists contribute to society. The optimist invents the aeroplane, the pessimist, the parachute.
-George Bernardshaw


அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.
-ஒரு இடுகாட்டு வாக்கியம்


நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.
-ஜார்ஜ் ஸவைல்


ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.
-??


எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...
-ஈஸ்ட்மென்


விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.
-??


உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.
-??


It is so simple to be happy. But it is so difficult to be simple.
-??


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
-ஹிட்ச்சாக்


He who knows and knows not that he knows is asleep. Wake him.
He who knows and knows that he knows is wise. Follow him.
-??


உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.
-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்


மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.
-John. A. Skinler


இன்னைக்கு ஒரு மேட்டரும் கிடைக்கல!!
-கிருஷ்ணகுமார்.