Sunday, November 30, 2008

வீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்

1) சில குறிப்புகள்ல சில பதிவர்களைச் சொல்லிவிட முடியும்.. ‘சகா’-ன்னா கார்க்கி, குறுந்தொகைன்னா நர்சிம், அண்ணே-ன்னா அப்துல்லா.. இப்படி... அது மாதிரி சில குறிப்புகள் சொல்றேன். யாரிந்தப் பதிவர்கள்ன்னு சொல்லுங்க.

அ) ‘அடடே.. வாட் எ கோ இன்சிடென்ஸ்’

அதிஷா

ஆ) மீ த.. (அடுத்த வார்த்தையைச் சொல்லவே வேண்டாம்)

ராப் – வெட்டியாபீசர்

இ) என்னுடைய கார் அந்த இடத்தை அடைந்தபோது...

டோண்டூ


2) இரண்டு இரட்டைப் படை எண்கள். அவற்றைக் கூட்டினால் வரும் விடையை விட, மூன்று மடங்கு அவற்றைப் பெருக்கினால் வரும். அவை எவை?

4 & 12 (ஆறு, ஆறும் சரிதான். வெவ்வேறு எண்கள் என்று நான் குறிப்பிடாததால்!)


3) GTTTT – இது என்ன?

ஒரிஜினாலிடி


4) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

விதவை என்றாலே, அந்த ஒருவன் இறந்தவனாகிறான். ஆகவே நோ சான்ஸ்.
5) இந்த வார யோசிக்க வைக்கற கேள்வி. மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?


கரெக்டா சொல்லியிருந்தாங்க. ஒரு சுவிட்சை கொஞ்ச நேரம் போட்டிருந்து, அணைத்து விட்டு இன்னொரு சுவிட்சை போட்டுவிட்டு மேலே செல்ல வேண்டும். எரியும் பல்புக்கானது இப்போது போட்ட சுவிட்ச். மற்ற இரண்டு பல்புகளைத் தொட்டுப் பார்த்து கொஞ்சம் சூடாக இருப்பது முதலில் போட்ட சுவிட்ச். மூன்றாவது, தெரிந்துவிடுமே..


6) இதுவும் யோசிக்க வைக்கும்.

மூன்று வீடுகள் கொண்ட காம்பவுண்டிற்கு ஆப்பிள்காரி ஒருத்தி செல்கிறாள். தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதி + அரை ஆப்பிளை முதல் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். இப்போது அவள் கூடை காலி! அப்படியானால் அவள் கொண்டுவந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.

பாதி என்றால் பத்தில் பாதி ஐந்து. நாலில் பாதி இரண்டு.. இப்படி.

அரை என்பது ஒன்றை அறுத்தால் வரும் பாதி = அரை!

மறுபடி சொல்கிறேன்.. ஆப்பிளை நறுக்கக்கூடாது!

ஏழு ஆப்பிள். முதல் வீட்டிற்கு மூன்றரை + அரை = 4 ஆப்பிள். மீதமிருப்பது மூன்று. அதில் பாதி ஒன்றரை + அரை = 2. மீதமிருப்பது ஒன்று. அதில் பாதி, அரை + அரை = ஒன்று. ஓக்கே?

7) 1975 இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்ரிக்காவுக்குமான ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சாதனை நிகழ்ந்தது. அது..

அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

ஆ) உலகக் கோப்பையில் முதல் ஹாட்-ரிக் எடுக்கப்பட்டது.

இ) உலகக் கோப்பையில் முதல் செஞ்சுரி எடுக்கப்பட்டது.

ஈ) மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டமானது அடுத்தநாளும் தொடர்ந்தது.

விடை: அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

(காப்பிஅடித்து பதில் சொன்ன வெண்பூவுக்கு, ஒரு நாளைக்கு பிரியாணி கட் பண்ணுங்க சிஸ்டர்..)


8) இவர் பதிவர். இவரது பெயரின் கடைசி இரண்டெழுத்து வழக்கா... காசா? நல்லவர்.... சோ..இவருக்கு நிறைய நண்பர்கள்!

துக்ளக் மகேஷ்.


9) இவரும் பதிவர். அழகானவர். பெயரின் 2 மற்றும் மூன்றாவது எழுத்துக்களைச் சேர்த்தழைத்தால் மரியாதைக் குறைவாக எண்ணக்கூடும். அத்வானிக்கு இவரை ரொம்பப் பிடிக்குமோ?

இதற்குதான் யாரும் பதில் சொல்லவில்லை.

அழகானவர் – சுந்தர்

2வது, 3 வது எழுத்துகள் = யோவ்

அத்வானிக்குப் பிடிக்குமா = ராம்.

ஜ்யோவ்ராம் சுந்தர்!

10) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி. அதாவது ஒரு இண்டர்வ்யூவுல இந்தக் கேள்வியைக் கேட்டு நீங்க என்ன பதில் சொன்னா, உங்களுடைய அறிவு மெச்சப்படுமோ, அப்படி பதிலைச் சொல்லணும்.

ஒரு மழைநாளின் இரவு. நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பஸ் ஸ்டாப்பில் மூன்றுபேரைக் காண்கிறீர்கள்.

a) வயதான மூதாட்டி
b) ஒருமுறை உங்கள் உயிரையே காப்பாற்றிய நண்பர்
c) நீங்கள் வெகுநாள் ப்ராக்கெட் போட்டுக் கொண்டிருக்கும், ஓரளவு உங்களுக்கு சிக்னல் கிடைத்துவிட்ட உங்கள் கேர்ள்ப்ரெண்ட்.

உங்கள் காரில் ஒருவரை மட்டுமே ஏற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்வீர்கள்?

இதுக்கு கரெக்டா போட்டுத் தாக்கிருக்காங்கப்பா நம்ம ஆளுக. நண்பன்கிட்ட கார்சாவியைக் குடுத்து, பாட்டியை கூட்டீட்டு போகச் சொல்லி, கேர்ள்ஃப்ரெண்ட் கூட......
.
.
.
.
.
.
.
.
.
...பேசிகிட்டிருக்கலாம்.


நெக்ஸ்ட் வீக் கமெண்ட் மாடரேஷன் போட்டு, இன்னும் சுவாரஸ்யமான கேள்விகளால தாக்கீடுவோம்!

Saturday, November 29, 2008

வீக் எண்ட் புதிர்கள் – 29.11.08

சென்ற வார வீக் எண்ட் புதிர்களுக்கு எக்கச்சக்க வரவேற்பு. மொத்தம் ஏழு பேர் (ஆமா.. ஏஏஏஏஏழு பேர்!) வாரா வாரம் இதைத் தொடருங்கள்ன்னு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக இதோ இந்த வாரமும்..

மொதல்ல ஈஸியா ஆரம்பிக்கலாம்..

1) சில குறிப்புகள்ல சில பதிவர்களைச் சொல்லிவிட முடியும்.. ‘சகா’-ன்னா கார்க்கி, குறுந்தொகைன்னா நர்சிம், அண்ணே-ன்னா அப்துல்லா.. இப்படி... அது மாதிரி சில குறிப்புகள் சொல்றேன். யாரிந்தப் பதிவர்கள்ன்னு சொல்லுங்க.

அ) ‘அடடே.. வாட் எ கோ இன்சிடென்ஸ்’
ஆ) மீ த.. (அடுத்த வார்த்தையைச் சொல்லவே வேண்டாம்)
இ) என்னுடைய கார் அந்த இடத்தை அடைந்தபோது...


2) இரண்டு இரட்டைப் படை எண்கள். அவற்றைக் கூட்டினால் வரும் விடையை விட, மூன்று மடங்கு அவற்றைப் பெருக்கினால் வரும். அவை எவை?

3) GTTTT – இது என்ன?

4) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

5) இந்த வார யோசிக்க வைக்கற கேள்வி. மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?

6) இதுவும் யோசிக்க வைக்கும்.

மூன்று வீடுகள் கொண்ட காம்பவுண்டிற்கு ஆப்பிள்காரி ஒருத்தி செல்கிறாள். தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதி + அரை ஆப்பிளை முதல் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். இப்போது அவள் கூடை காலி! அப்படியானால் அவள் கொண்டுவந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.

பாதி என்றால் பத்தில் பாதி ஐந்து. நாலில் பாதி இரண்டு.. இப்படி.

அரை என்பது ஒன்றை அறுத்தால் வரும் பாதி = அரை!

மறுபடி சொல்கிறேன்.. ஆப்பிளை நறுக்கக்கூடாது!

7) 1975 இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்ரிக்காவுக்குமான ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சாதனை நிகழ்ந்தது. அது..

அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

ஆ) உலகக் கோப்பையில் முதல் ஹாட்-ரிக் எடுக்கப்பட்டது.

இ) உலகக் கோப்பையில் முதல் செஞ்சுரி எடுக்கப்பட்டது.

ஈ) மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டமானது அடுத்தநாளும் தொடர்ந்தது.

8) இவர் பதிவர். இவரது பெயரின் கடைசி இரண்டெழுத்து வழக்கா... காசா? நல்லவர்.... சோ..இவருக்கு நிறைய நண்பர்கள்!

9) இவரும் பதிவர். அழகானவர். பெயரின் 2 மற்றும் மூன்றாவது எழுத்துக்களைச் சேர்த்தழைத்தால் மரியாதைக் குறைவாக எண்ணக்கூடும். அத்வானிக்கு இவரை ரொம்பப் பிடிக்குமோ?

10) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி. அதாவது ஒரு இண்டர்வ்யூவுல இந்தக் கேள்வியைக் கேட்டு நீங்க என்ன பதில் சொன்னா, உங்களுடைய அறிவு மெச்சப்படுமோ, அப்படி பதிலைச் சொல்லணும்.

ஒரு மழைநாளின் இரவு. நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பஸ் ஸ்டாப்பில் மூன்றுபேரைக் காண்கிறீர்கள்.

a) வயதான மூதாட்டி
b) ஒருமுறை உங்கள் உயிரையே காப்பாற்றிய நண்பர்
c) நீங்கள் வெகுநாள் ப்ராக்கெட் போட்டுக் கொண்டிருக்கும், ஓரளவு உங்களுக்கு சிக்னல் கிடைத்துவிட்ட உங்கள் கேர்ள்ப்ரெண்ட்.

உங்கள் காரில் ஒருவரை மட்டுமே ஏற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்வீர்கள்?


ரெடி.. ஸ்டார்ட்.. மீஜிக்...

Thursday, November 27, 2008

ஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூடங்களும்“பையன் இனிமே எதுவும் குறும்பு பண்ணினா, ஒழுக்கக்கேடா எதாவது நடந்துகிட்டான்னா நடக்கவே முடியாதபடிக்கு அவன் முட்டிலயே அடிச்சு ரத்தக்காயத்தோட வீட்டுக்கு அனுப்புங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்.... “ -நான் ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும்போது என்னுடன் படித்த ஷாஜகான் என்ற மாணவனின் தந்தை எங்கள் வகுப்பாசிரியரிடம் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் இவை.

10 வகுப்பு வரை அவன் செய்த குறும்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஏரோ விடுவது, வகுப்புக்கு கட் அடிப்பது, தன்னை அடிக்கும் ஆசிரியர்களைப் பற்றி அவதூறாக பாத்ரூமில் எழுதுவது, சில வாத்தியார்களை அவர்களிடமே பயமின்றி எதிர்த்துப் பேசுவது என்று (இதெல்லாம் இப்போது வெகு சாதாரண குற்றங்கள் ஆகிவிட்டன. அப்போது தேசதுரோகம்!) ஒழுக்கக்கேடான செயல்களையே செய்து வந்தான்.

“படிப்புல பாஸோ, ஃபெயிலோ விடுங்க சார்.. இவன் பண்ற சேட்டைகளை நினைச்சா தறுதலையாப் போயிடுவானோன்னு கவலையா இருக்குங்க” என்று அவன் தந்தை சொன்னது மறக்கமுடியாது.

பலவருடங்களுக்கு முன் என் நண்பன் செந்திலைப் பார்க்க உடுமலை சென்றிருந்தபோது அவன் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. நான் செந்தில் வீட்டைக் கடக்கும்போது, அந்த வீடு கட்டும் இடத்திலிருந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து ‘கிருஷ்ணா... ‘ என்று அழைத்தபோது அடையாளம் தெரியவேயில்லை.

“ஷாஜகானோட அப்பாதானே நீங்க..” என்று கேட்டுவிட்டேன். எந்தப் புரட்டுமின்றி நிஜமாகச் சொல்கிறேன். அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன்....

“நான்தாண்டா ஷாஜகான்” என்றான் அவன்!

“ப்ச்.. எங்கப்பா சொன்னமாதிரி படிக்கலைன்னாலும் பரவாயில்லை. ஒழுக்கமாவாவது இருந்திருக்கலாம். எல்லா கெட்ட பழக்கமும் பழகி, இப்படி முப்பது வயசுலேயே கெழவனாய்ட்டேன். இப்போ இப்படி சித்தாள், மேஸ்திரி வேலைன்னு அலையறேன். ஸ்கூல்ல என்னை அடிச்ச வாத்தியார்கிட்ட எதுத்துப் பேசி, எதுத்துப் பேசி என்னை எந்த வாத்தியாருமே கண்டிக்கல. அதுக்கு இப்போ அனுபவிக்கறேன்” என்ற அவன் வார்த்தைகள் அவன் அனுபவம்!


இப்போதெல்லாம் ஆசிரியர் அடித்ததாக புகார் கூறும் பெற்றோர்களைப் பற்றியும், ஆசிரியராக இல்லாமல் சில்லறைத்தனமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் பற்றியும் தினசரிகளில் படிக்கும்போது நிஜமாகவே மனசு கனக்கிறது. வேறு எந்தத் தொழிலில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் ‘பார்த்தா படிச்சவனா இருக்க’ என்றோ ‘இவனெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா போயிருக்க மாட்டான்’ என்றோ சொல்கிறோம். அப்படி இருக்க அந்தக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே ஒழுக்கம் தவறி நடந்து கொண்டால்..?

ஓரிரு வாரங்களுக்கு முன் ஒரு செய்தி.. சங்ககிரி அருகே ஒரு ஆசிரிய காட்டுமிராண்டி, சக ஆசிரியையோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டிக்கிறது. அவனது மனைவியை பள்ளிக்கு வரச் சொல்லி, அவர் முன் அவனைக் கண்டித்து, அவனை பணி நீக்கமும் செய்கிறது. இந்தக் காட்டுமிராண்டி, அந்தப் பள்ளியின் பெயரைக் கெடுக்க திட்டம் தீட்டி அங்கே மூன்றாம் வகுப்பு படிக்கும் ‘மோனிஷா’ என்ற பிஞ்சுக் குழந்தையை ‘சாக்லேட் தரேன்’ என்று அழைத்துப் போய் அவள் மூச்சை நிறுத்திக் கொலை செய்துவிட்டு, உடம்பெங்கும் ஆசிட்டையும் வீசிவிட்டு வந்துவிட்டான். இவனெல்லாம் ஆசிரியப்பணி செய்துவந்திருக்கிறான். புடுங்கி..

இன்னொரு சம்பவம் ஆக்ராவில் உள்ள ‘ஹோல்மென்’ பள்ளியில். ஏதோ ‘பால்மேளா’ என்ற விழா நடத்தி பல போட்டிகள் வைத்து... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்ன பரிசு தெரியுமா..? நம்புங்கள்... பொய்யில்லை.. பீர் பாட்டிலும், சீட்டுக்கட்டும் பரிசாம்! கேட்டபோது பள்ளி நிர்வாகிகள் ‘எங்களுக்குத் தெரியாமல் இது நடந்தது’ என்கிறார்கள். மாணவர்கள் ‘என்ன போட்டி, என்ன பரிசு எல்லாவற்றையும் தீர்மானித்தது பள்ளி நிர்வாகம்தான்’ என்கிறார்கள். நாடு உருப்படுமா..

ஆசிரியர் அடித்துவிட்டார், தண்டித்துவிட்டார் என்று 9 வயதுக் குழந்தை மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துகொள்கிறது. ஆசிரியர் தண்டிக்காவிட்டால் படிக்கும் மாணவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை என்பதே என் எண்ணம். ஆனால் மேலே குறிப்பிட்டது போன்ற காட்டுமிராண்டி ஆ‘சிறியர்’களும், கண்மூடித்தனமான பள்ளிநிர்வாகமும் பெருகிவிட்ட சூழலில் எதைத் தான் நம்புவது?

ஆசிரியர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது இந்தக்காலத்தில்? ‘ஆசிரியர் தெருவில் ஒரு மூலையில் வருகிறாரென்றால் இங்கிருந்தே சைக்கிளை விட்டிறங்கி நடந்து போவேன்’ என்று சொன்னால் சிரிக்கிறார்கள் என் மகள்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஸ்கூல் டைரியில் ‘Today your daughter studied well’ என்றோ ‘Today she didn’t perform in the class’ என்றோ எப்போதுமே எழுதிக் கொடுத்ததாய் நினைவிலில்லை. ‘Pls pay fees on time, otherwise she won’t allow for exams’ ‘Van fees still balance. Pls clear soon’ என்றோதான் எழுதிக் கொடுக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் மீதும், பள்ளிமீதும் குழந்தைகளுக்கு எங்கே மரியாதை வரும்?

மீரா, மேகாவை காலையில் நான்தான் பள்ளிக்கு சென்று விட்டு வருகிறேன். திரும்பி வரும்போது மட்டும் பஸ். ஆகவே ஒரு ட்ரிப் என்று பாதி கட்டினால், ‘இல்லைங்க. சிங்கிள் ட்ரிப் என்றால் வேன் ஃபீஸில் 70% கட்ட வேண்டும்’ என்கிறார்கள். ஏனென்று கேட்டேன். ‘டீஸல் வெலையெல்லாம் கூடிப்போச்சுங்க’ என்று பதில் வந்தது. ‘யோவ் டுபுக்கு. எவ்ளோ கூடினா என்ன, வராத ட்ரிப்புக்கு டீசல் செலவாகுமா’ என்று கேட்டேன். ‘அந்த வழியாத்தான் வருது. உங்க பொண்ணுக வராதது எங்களுக்கு நஷ்டம்தானே’ என்று கேனத்தனமாக சொன்னார்கள். ‘அப்போ, என் வீட்டிலிருந்து 2 பேர் வர்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா டீசல் அடிச்சு வர்றீங்களா?’ என்று கத்தி ‘100ல பாதி 50ன்னு சொல்லிக்குடுக்கறதுக்கு பதிலா 100ல பாதி 70ன்னு சொல்லிக் குடுப்பீங்க போல’ என்று ரகளை செய்து கரஸ்பாண்டெண்ட் வரை பஞ்சாயத்து போய் ‘இந்தமாதிரியெல்லாம் பண்ணினா குழந்தைகளுக்கு கல்வியை விட காசு முக்கியம்ன்னு தோணாதா? இந்த எழவையெல்லாம் டைரில எழுதாம எங்கிட்ட ஃபோன்ல சொல்லலாமே’ என்று சண்டைகட்டி வரவேண்டியதாயிற்று. (இந்த வேன் ஃபீஸின் இன்னொரு கொடுமை 12 மாதங்களுக்குக் கட்ட வேண்டும்! எப்படிப் பார்த்தாலும் 10 மாதங்களுக்கு மேல் பள்ளி இல்லை. கேட்டால் ஒரே பதில் ‘அது அப்படித்தாங்க. எல்லா ஸ்கூல்லயும் அப்படித்தான்’)

இப்படி பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சம்பளம் 1800, 2000, 2500. அவ்வளவே. அவர்களுக்கு எப்படி அர்ப்பணிப்பு உணர்வு, இது புனிதப்பணி என்கிற எண்ணமெல்லாம் வரும்?

‘ப்ரைவேட் ஸ்கூலே வேண்டாம். அரசுப் பள்ளியே சரி’ என்றால் அவர்கள் நிலைமை இன்னும் மோசம். டாய்லெட் இல்லை, கம்ப்யூட்டர் இருக்கு, ஆனா கரெண்ட் கனெக்‌ஷன் இல்லை. டி.வி.டி இருக்கு. ஆனா எஜூகேஷனல் சி.டி. இன்னும் வர்ல. என்று அவர்கள் படும்பாடு படு கேவலம். பாதி மாணவர்கள் மரத்தடியில்தான் பயில்கிறார்கள். அங்கே நம் குழந்தைகளை விட நமக்கெப்படி மனம் வரும்? பணம், பணம் என்று நாம் ஓடும்போது நம் பிள்ளைகளை இப்படி அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளிகளில் சேர்த்து கஷ்டப்படுத்துவதை எப்படி ஒப்புக் கொள்ளத்தோன்றும்?

ஸ்ரீலங்காவில் எல்லாமே அரசுப் பள்ளிகள்தானாம். தனியார் பள்ளிக்கே அங்கே இடமில்லையாம். பண்டாரநாயகேவோ, யாரோ பிரதமராக இருந்தபோது அவ்ர் மகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் (ஒன்றிரண்டு மதிப்பெண் குறைவு என்று கல்லூரி இடமளிக்க மறுத்ததாம்) வேறெந்த நாட்டிற்கோ அனுப்பி மருத்துவம் பயில வைத்தாராம்.

வாங்கும் காசுக்கு ஒழுங்காகக் கற்றுத் தராமல் எல்லாவற்றையும் ஹோம் ஒர்க்கில் பார்த்துக் கொள்ளச் சொல்லும் பள்ளிகளும், புனிதமாவது மண்ணாங்கட்டியாவது என்று கடனுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களும், ஒத்துக் கொள்ள மனமுமில்லாமல், வேறு வழியுமில்லாமல் சமரசம் செய்து கொள்ளும் பெற்றோர்களும் (நான் உட்பட) இருக்கும்வரை இந்த கண் துடைப்புக் கல்விமுறை தொடரும். அதன் விளைவுகளின் பயங்கரம் இனிவரும் காலங்களில் எதிரொலிக்கும்.

Wednesday, November 26, 2008

எனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா?
நான் சந்திக்கற சில பிரச்சினைகள் உங்களுக்கும் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை...

அதே மாதிரி, சில விஷயங்களை நான் சந்திக்க நேரும்போது என் மனதில் உருவாகும் எண்ணங்கள் (ச்சே.. ரொம்ப ஃபார்மலா இருக்குப்பா வார்த்தைகள்) வித்தியாசமானதா தோணும். உமா சொல்லுவாங்க... ‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியும்’ன்னு. இல்லீன்னா.., ‘உங்களுக்கு மட்டும்தான் இப்படித் தோணும்’ன்னு சொல்வாங்க.

சரி.. நம்ம மக்களைக் கேட்டுப் பார்க்கலாமேன்னுதான் இந்தப் பதிவு....

----------------

a) தமிழ்மணத்துல பதிவை இணைக்க, நம்ம பதிவு தலைப்புல தெரியற தமிழ்மண விட்ஜெட்ல இருக்கற ‘அனுப்பு’வை ப்ரஸ் பண்ணினா தமிழ்மண விண்டோ ஓப்பன் ஆகி ‘ங்கொய்யால.. சேர்த்தாச்சுல்லடா? பின்ன எதுக்கு ச்சும்மா நொய் நொய்னு அமுக்கீட்டிருக்க? அஞ்சு நிமிஷம் பொறு.. ஒம்பதிவு தெரியும்’ங்குது. சரின்னு அடுத்தநாள் வேற பதிவு எழுதி, அதை நம்ம ப்ளாக் வழியா அனுப்பாம, தமிழ்மண முகப்புல இருக்கற ‘உங்கள் இடுகைகளைப் புதுப்பிக்க’வுல நம்ம யூ.ஆர்.எல்லை டைப்பி குடுத்தா ‘புதுசா என்னத்தை எழுதிக்கிழிச்ச? நீ கிழிச்சதையெல்லாம் இங்கன போட்டுட்டோம்ல’ன்னு மெரட்டுது.

மொத மாதிரி வகைப்படுத்தற ஆப்ஷனெல்லாம் இல்லியோ? உங்களுக்கும் இப்படித்தானா...?

b) எங்கியாவது சின்ன லெவல்ல சண்டை, சச்சரவுன்னா பைக்ல போயிட்டிருக்கறப்ப நின்னு வேடிக்கை பாக்கறவங்க மேல கோவம் வருது. ‘உன்னால அதைத் தடுக்கவோ, இல்ல போய் சமரசம் பேசவோ முடியும்னா நில்லு. ச்சும்மா நின்னு வேடிக்கை பார்த்து ஏன்யா கூட்டத்தைக் கூட்டறீங்க’ன்னு கேட்கத் தோணும். ஆனா அதை கேட்கமுடியாம கையாலாகாதவனா போய்ட்டே இருக்க மட்டுமே முடியுது.

c) இது உண்மையா வர்ற சிந்தனை. 'இது தப்பு, இப்படி நெனைக்கறியே ச்சீ’ன்னெல்லாம் திட்டக்கூடாது.

சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். உதாரணத்துக்கு போன பாரா-ல சொன்ன மாதிரி சூழ்நிலைகள்ல நின்னு சண்டையை சமரசம் பண்ணி அது வேற எக்ஸ்டண்டுக்குப் போகுமோங்கற திங்கிங்-ல பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.

கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? (சண்டையைத் தீர்க்கற மனோபாவத்தைச் சொல்லல. கல்யாணமாகாம இருந்திருக்கலாமே-ங்கற எண்ணம்.)

d) ஒரு நல்ல ஃபிகரைப் பார்த்து பேசறப்போ கண்ணைப் பார்த்து பேசறது பெண்களுக்குப் பிடிக்கும்’ன்னு (யாரு சொன்னா இதை?) கேள்விப்பட்டதால கண்ணைப் பார்த்து பேசிட்டிருப்பேன். ஆனா அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். உங்களுக்கும் அப்படியா?

(c-ஐயும், d-ஐயும் மிக்ஸ் பண்ணி குழப்பிக்காதீங்க..)

e) நல்ல ஒரு மேட்டர் ரெடி பண்ணி அது பத்தி பதிவெழுத ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டிருப்பேன். ஆனா அதுக்கான வரிகள் செட்டாகாது. சரி எப்படியாவது எழுதலாம்னு சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்தா திடீர்னு வேற எதுனா மொக்கையா சிந்தனை ஓடி, அது விஷயமா வார்த்தைகள் கடகடன்னு கொட்டி உடனடி பதிவாகி, உங்க கெட்ட நேரத்துக்கு அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும். உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?

f) யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்.

நீங்க இப்படி நெனைச்சதுண்டா?

g) சீரியல் பாக்கறது என்னமோ தெய்வகுத்தம்ன்னு பெண்களை விமர்சனம் பண்ணிகிட்டிருக்கேன். ஆனா சேனல் மாத்தும்போது, சீரியல்களின் சில சீன்களும் பின்னணில அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்.... ம்யூசிக்கும் என்னதான் சொல்றானுக இவனுக’ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்க வைக்குது.

உங்களுக்கும் இப்படித்தானா?

h) பதிவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் படித்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைந்துவிடுகிறது. அதே சமயம், சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன். (பலதடவை இதற்காக ‘ரெண்டு வார முந்தைய விகடன் எங்க’ என்ற ரீதியில் வீட்டைக் கலைத்துப் போட்டுத் தேடியிருக்கிறேன்)

சேம் ப்ளட்?

i) வாழ்க்கையில் பல விஷயங்களில் சமரசப்பட்டு போய்விடுகிறேன். அல்லது மாறிவிடுகிறேன். பிறகு அதற்கு சப்பையாக ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பிஸத்தை கேவலமாக நியாயப்படுத்துகிறேன்.

உதாரணத்திற்கு, குப்பையை பொதுவில் போடக்கூடாது, திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கக்கூடாது, வெளியில் உமிழக்கூடாது, சாலைவிதிகளை மீறக் கூடாது என்பது போன்ற குறைந்த பட்சம் என்னால் முடிந்த சில நியதிகளை கடைபிடித்து வருகிறேன். இந்த லிஸ்டில் திருட்டு டி.வி.டி வாங்கக் கூடாது என்ற ஒன்றும் இருந்தது. ஆனால், அதை பலமுறை மீறுகிறேன்.

அதிலும் ஒரு விதி வைத்திருக்கிறேன்.. தியேட்டரில் பார்த்த படத்திற்குதான் டி.வி.டி வாங்குவேனே தவிர, நேரடியாக டி.வி.டியிலேயே படம் பார்க்கும் வழக்கம் இல்லை.

இந்த தி.டி.வி.டி வாங்குவதை விவாதங்களின்போது நான் நியாயப்படுத்துவது விருமாண்டி படத்துக்குப் போன சம்பவத்தைச் சொல்லி...

40 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுத்தார்கள். வந்த ரௌத்ரத்தை அடக்கி, சரி என்று பொத்திக் கொண்டு போய் கொடுத்தபோது டிக்கெட் கிழிப்பவன் என் இரு மகள்களில் ஒருத்திக்கு நிச்சயமாய் டிக்கெட் வேண்டும் என்று சொல்லிவிடவே, மறுபடி டிக்கெட் வாங்கப் போனேன். அதே 40 ரூபாய் டிக்கெட் இப்போது 60 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தான். கவுண்டரில் இரண்டு, மூன்று பேர்தான் இருந்தனர். என் முறை வரும்போது, 60 ரூபாயா என்று நான் உரக்கக் கேட்டதும் ‘சரி.. கடைசி டிக்கெட்.. 50 ரூபா கொடுங்க போதும்’ என்றான்.

என்ன அநியாயம் இது என்று மேலாளர் வரை சென்று வம்பிழுத்து எந்த நியாயமும் கிடைக்காமல் அவமானப்பட்டு வந்து உட்கார்ந்தபோது பசுபதியின் மாட்டை கமல் அடக்கிமுடித்திருந்தார்.

அதே தியேட்டரில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபோது, வெறும் சப்பையாக இருக்கவே சில விசாரணை மேற்கொண்ட போது, அவர்களே டூப்ளிகேட்டாக தயாரிப்பதாய் சொன்னார்கள்.

இதையெல்லாம் சொல்லி, இப்படி இருந்தா திருட்டு டி.வி.டி-ல படம் பார்க்காம என்ன பண்றதாம் என்று கேட்பேன். ஆனால் தியேட்டர் எஃபெக்ட் கிடைப்பதில்லை என்பதால் முதல் முறை தியேட்டர்தான்.

நீங்களும் இப்ப்டி எதிலாவது உங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதுண்டா?

j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.

நீங்க?

k) பயணங்களின் போது, வீட்டில் இருக்கும் படிக்காத சில புத்தகங்களை எடுத்துப் போகிறேன். ஆனால் அவற்றைப் படிக்காமல், போன இடத்தில் வேறு சில புத்தகங்களை வாங்கி வந்துவிடுகிறேன்.

நீங்களும் இப்படியா?

l) ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ரோட்டோர இளநிக்கடையில் பைக்கை நிறுத்தினால்கூட எனக்கடுத்ததாய் நாலைந்து பேர் வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.

எனக்குத்தான் இப்படியா.. உங்களுக்குமா?


இப்போதைக்கு அவ்வளவுதான். பிற சந்தேகங்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்கப்படும்!

Monday, November 24, 2008

அவியல் 24.11.08

நம்ம இதயம் வலது பக்கம் இருக்கா, இடது பக்கம் இருக்கா-ன்னு ஒரு பையனுக்கு சந்தேகம். அப்பாகிட்ட கேட்டானாம். ‘இடது பக்கம்தான் இருக்கு’ன்னாரு. இவனுக்கு நம்பிக்கை வரல. சரின்னு அவங்கப்பா, அவரோட நண்பரான ஒரு மருத்துவர்கிட்ட கூட்டீட்டு போறார். அவரும் சொல்றார் இடது பக்கம்தான்னு. ‘நீங்க எங்கப்பாவோட ஃப்ரெண்டு. என்னவேணா சொல்லுவீங்க’ங்கறான் இவன்.

உடனே அவரு அந்த மருத்துவமனைல இருந்த ஒரு மெடிக்கல் ப்ரொஃபசர்கிட்ட கூட்டீட்டு போறார். அவரு படமெல்லாம் போட்டு விளக்கிக் காட்டியும் இவன் நம்பல. ‘சரி.. வாடா’ன்னு அவனை மார்ச்சுவரிக்கு கூட்டீட்டு போய், அங்க இருந்த ஒரு பிணத்தை அறுத்துக் காட்டி ;

“பார்த்தியா.. இதயம் இடது பக்கம் இருக்கு’ன்னாங்க.

பையன் சொன்னானாம். “அதுனாலதான் செத்துப் போயிருக்கான்..”

(குறும்பட இயக்குனர் சாரதாகுமார் சொல்லக்கேட்டது)

*****************************

ப்ளாக்ல நம்மளை ஃபாலோ பண்றவங்களைப் பத்தி பேச்சுவந்தது. சப்போஸ் யாராவது நம்மளை ஃபலோ பண்ணினதை நிறுத்தினாங்கன்னா யாருன்னு கண்டுபிடிக்கமுடியுமான்னு யாரோ கேட்டாங்க. முடியாதுன்னு சொன்னாங்க. ‘எனக்கு முடியும்’ன்னு சொன்னான் நண்பன் கார்க்கி. ‘எப்படி’ன்னு கேட்டதுக்கு அவன் ப்ளாக்கை ஃபாலோ பண்றவங்களை ப்ரிண்ட் எடுத்து லேமினேஷனெல்லாம் பண்ணி வெச்சிருக்கானாம். நம்மளையும் ஃபாலோ பண்றாங்களேன்னு.. ரொம்ப நல்ல மனசுடா ஒனக்கு!

----------

தமிழை வளர்க்க (க்கும்!) நானும் ஒரு ஐடியா பண்ணலாம் என்று யோசனை செய்து (?!?) நண்பர்களை அழைத்து, “ஹலோ, ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு ஒரு சேலஞ்ச். ஓக்கேவா?” என்று சவால் விட்டு.. ஒன்றைக் கூறினேன்.

“இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு அலைபேசியில் பேசும்போது ‘ஹலோ’வுக்கு பதிலாக வணக்கம் என்றும், ‘ஓகே’வுக்கு பதிலாக ‘சரி’ என்றும் மட்டுமே கூற வேண்டும். நம் நண்பர்கள் வட்டத்தில் யார் மற்றொருவர் இதற்கு மாற்றாகக் கூறினாலும், இன்னொருவர் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யார் அதிகமாக ஹலோவையும், ஓகேவையும் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த வார தேநீர் செலவை ஏற்க வேண்டும் என்றும் முடிவானது.

முதல் இரண்டு வாரம் தேநீர் செலவு என்னுடையதுதான் என்று சொல்லவும் வேண்டுமா...

கிண்டலை விடுங்கள்.. ஆழமாக யோசித்தால் இந்த இரண்டு வார்த்தைகள்தான் தொலைபேசும்போது அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகப் படுகிறது.

ஹலோ, என்ன நான் சொல்றது ஓகேதானே?

___________________________ஒரு சொகுசுக் காரைப் பற்றிய விமர்சனம் நடந்து கொண்டிருந்தது.

“அந்தக் கார்ல 140 வேகத்துல போனேண்டா. உள்ள இருக்கற யாருக்குமே ஒண்ணுமே தெரியல. அவ்ளோ ஸ்மூத்”

இன்னொருவன்: “நம்ம கார்ல 140ல போனா எல்லாருக்குமே தெரியும்”

“எப்படி?”

“அடுத்த நாள் பேப்பர்ல வருமே”


______________________

‘என்னைக்குப் ‘போக’ப் போறோம்ன்னு தெரியாது அதுனால நல்லவனா இருப்போம்’ என்பது பலரின் எண்ணம். அது சரிதான் என்பது தினசரிகளில் வரும் விபத்துச் செய்திகளைப் பார்த்தாலே தெரியும்.

ஒருத்தன் எத்தனை நல்லவனா இருந்து, அன்னைக்கு வெறுத்துப் போய் குடிக்க ஆரம்பிச்சவனா இருந்தாலும், வர்ற வழில எதுலயாவது அடிபட்டு செத்துட்டா ‘குடிகாரர் விபத்தில் பலி’ன்னு வரும். என்னமோ அவன் பரம்பரைக் குடிகாரன் மாதிரி!

ஒருத்தன் ஊரையே திருடி உலையில போட்டவனா இருப்பான். உலகத்துல இருக்கற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கும். ஆனா, அவன் மலைக்கு மாலை போட்டிருக்கும்போது இறந்தா ‘ஐயப்ப பக்தர் பலி’ன்னு வரும்.

காலேஜ் போறப்ப இறந்தா ‘கல்லூரி மாணவன் சாவு’ அதே பையன் கட் அடிச்சுட்டு காதலி கூட இருக்கும் போது இறந்தா ‘காதலன் மரணம். காதலி கதறல்’

அதுனால மகாஜனங்களே.. நல்லவனாவே இருங்க!


___________________________

பேருந்துகள்ல இருக்கைகள் அடையாளத்துக்காக ஆண்கள்-பெண்கள்ன்னு போடுவாங்க இல்லையா... சில பஸ்ல (‘சிலபஸ்ல’ இல்ல) வித்தியாசமா பார்த்திருக்கேன்.

‘மலர்கள்-மன்னர்கள்’
‘ராஜாக்கள்-ரோஜாக்கள்’... இப்படி.

என் நண்பன் ஒருத்தன்கிட்ட இது பத்தி பேசிட்டிருந்தப்ப, முந்தைய ஜெ. ஆட்சியின் போது அவங்க ஊர் பஸ்ல பெண்கள் பகுதியில ‘இந்நாள்’ன்னும், ஆண்கள் பகுதியில ‘முன்னாள்’ன்னும் எழுதலாம்ன்னு ஐடியா பண்ணப் பட்டதாகவும், அப்புறம் அந்த ஐடியா கைவிடப்பட்டதாகவும் சொன்னான்!

வித்தியாசமாத்தான் இருக்கு. ஆனா முன்னாளா இருந்த இந்நாளோட அந்நாள் ஆதரவாளர்கள்கிட்ட எந்நாள் அடிவாங்குவோமோன்னு விட்டிருப்பாங்க!

----------------------------------

கவித..கவித....

விடிகிற போது
எழுத உட்கார்ந்தேன்
வெயில் வந்துவிட்டது
இந்த வரியின் மேல்.

இந்த வரியை விட
அழகாக இருக்கிறது
எழுதாத வரியின் நிழல்.
-கல்யாண்ஜி


பி.கு: இந்த வார வலைச்சரம் ஆசிரியரா இருக்கறதால அங்கேயும் வந்து வாழ்த்தீட்டு போங்க...

Sunday, November 23, 2008

வீக் எண்ட் புதிர்களின் விடைகள்

நேத்தைக்கு வீக் எண்ட் புதிர்கள் போட்டாலும் போட்டேன்... எக்கச்சக்க மெயில்.. எனக்கு பதில் சொல்லு, எனக்கு பதில் சொல்லு-ன்னு...

இந்த சான்ஸை ஏன் விடுவானேன்னு ஒரு பதிவாவே போடலாம்ன்னுதான் இந்தப் பதிவு..

இனி விடைகள்...

1) இவரு நடிகரு. பேர்ல குளிருக்குத் தேவையானது இருக்கு. இவர் அண்ணன் இவரளவுக்கு ஃபேமஸாகல. (ஆனா வாளமீனை வளைச்சுப்போட்ட மேட்டர்ல மட்டும் ஃபேமஸானாரு.) யாரிவரு?

இதுக்கு விஷால்-ன்னு நிறைய பேர் சொல்லியிருந்தாங்க. அது தப்பான பதில் அல்ல. சரியான பதில்தான். (எதையுமே நேராப் பேசமாட்டியாடா நீ?) குளிருக்குத் தேவையானது = ஷால். (ஒரு மனுஷன் விக்’ரம்’னிருந்தார். அவருக்கு அண்ணன் இல்லாததாத பதில் செல்லுபடியாகல!!!)2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.

டாக்டர்.ப்ரூனோ.


3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!


ஆமாம் = யெஸ்.
சின்ன = பால
தேசியக்கவிஞர் = பாரதி


இதுக்கு விஜய்-ன்னு ஏன் பதில் சொன்னாங்கன்னு தெரியல. இவர் அஜீத் அல்ல-ன்னு ஏன் சொன்னேன்னா, பதிவுலகில இவர ‘தல’ம்பாங்க. தல-தான், ஆனா அஜீத் இல்லன்னு பொருள் கொள்க!


4) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?


இதுக்கு ஏன் சரியா பதில் சொல்லல-ன்னு ஆச்சர்யமா இருக்கு. மூணு சாக்ஸ்தான் சரியான பதில். குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் ஒரே நிறத்தில் ஜோடியாக கிடைக்கும் - என்பதே கேள்வி. ரெண்டை எடுத்தாலும் வெவ்வேறு வர வாய்ப்புண்டு. அதே மாதிரி எத்தனை ஜோடி சாக்ஸ்ன்னு கேக்கல. முதல்ல ஒண்ணு எடுத்து, ரெண்டாவது ஒண்ணை எடுத்தா வெவ்வேற கலராயிருந்தா, மூணாவது எடுக்கும்போது தான் மேட்சாகும். ரெண்டாவதே அதே கலராயிருக்கற சான்ஸ் மிஸ் ஆனாலும், மூணாவது கண்டிப்பா முதல்ல எடுத்த ரெண்டுல ஒண்ணுக்கு மேட்ச்சாகும்.

5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..

அ) டி.வி.காமிராக்கள் ஆன் செய்யப்படவில்லை.
ஆ) பெய்ல் காணாமல் போயிருந்தது
இ) இந்திய காப்டன் தங்கள்மீது சத்தியம் செய்ததாகக் கூறினார்கள்.
ஈ) பாகிஸ்தான் வீரர் ஒருவர் வரத் தாமதமாகியது.


‘இ’ தான் சரியான பதில்! ஆமா.. அப்ப இருந்த கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘உங்க மேல சத்தியமா’ன்னு ஏதோ அம்ப்யர்கிட்ட பேசிட்டார். அதுனால அவங்க புகார் பண்ணி... 11 நிமிஷம் தாமதமா தொடங்கினாங்க.


6) இவரும் பதிவர்தான். கார் வெச்சிருக்கற எல்லாருக்கும் கண்டிப்பா தேவை.

CAR KEY = கார்க்கி

7) இது கொஞ்சம் ஃபேமஸானதுதான். இருந்தாலும் கேட்கறேன்..

விஜய்க்கு இருக்கு, சூர்யாவுக்கு இருக்கு. ஏன் ஜெமினி ஹீரோயின் கிரணுக்குக் கூட இருக்கு. ஆனா ஜெமினி ஹீரோ விக்ரமுக்கு இல்ல. அது என்ன?

இதுக்கு பதில் சொல்லாததும் ஆச்சர்யம்! அது அவங்க பேர்ல இருக்கற டி.வி. சேனல்! (3-ங்கறது பொருந்தாது. விக்ரமுக்கு பேர்ல மூணெழுத்து இல்லையா? மூணு எழுத்து ‘மட்டும்’ வேணா இல்ல.)


8) இளம் அரசியல்வாதி. ராத்திரில குல்லால இருக்காரு.


ராகுல்.


9) இதுவும் பழசுதான்.

மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?

15 ரூபா கொடுத்ததுல 3 ரூபா பாக்கி வந்ததா? அப்ப 12 பில். பாக்கி மூணு ரூபாதான் ஆளுக்கொண்ணு வந்துடுச்சுல்ல. 12+3 = 15. சரியா?

புரியலயா...?

சரி.. பத்து ரூபா ஓனர்கிட்ட போயிடுச்சா? 3 ரூபா இவங்களுக்கு வந்துடுச்சா? பாக்கி ரெண்டு ரூபா சர்வர் ஆட்டையப் போட்டாரா... 10+3+2 = 15. சரியா?

(இது ஒரு கூக்ளி கொஸ்டின். அப்படித்தான் கொழப்பும்!

10) கொஞ்சம் யோசிக்க வைக்கற புதிர்..

மூடப்பட்ட மூணு பாக்ஸ். ஒண்ணுல ‘ஆப்பிள்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு. ஒண்ணுல ‘ஆரஞ்சு’ன்னு லேபிள் ஒடியிருக்கு. இன்னொண்ணுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு.

மூணுமே தப்புத் தப்பா ஒட்டிருக்கு. இப்போ நீங்க அதுல ஏதாவது ஒரு பாக்ஸ்ல இருக்கறதை மட்டும் கைவிட்டு எடுத்துப் பார்த்துட்டு, என்ன பழம்ன்னு பார்த்துக்கலாம். அதைப் பார்த்தபின்னாடி, நீங்க மூணு பாக்ஸ்லயும் என்னென்ன இருக்கும்ன்னு யோசிச்சு கரெக்டா லேபிள் ஒட்டீடணும். எப்படிக் கண்டுபிடிப்பீங்க?

ஆப்பிளும் ஆரஞ்சும்’ பாக்ஸ்ல கைவிட்டு எடுக்கணும். ஆரஞ்சு இருந்தா, அந்த பாக்ஸ் ஆரஞ்சு. ஆரஞ்சு பாக்ஸ் ஆப்பிள். இன்னொண்ணு ஆப்பிளும் ஆரஞ்சும். ஓக்கே?

Saturday, November 22, 2008

வீக் எண்ட் புதிர்கள்வீக் எண்ட்- டிற்காக நமீதாவையோ, நயன்தாராவையோ.. இருங்கள்... முழுசாகச் சொல்லி விடுகிறேன்... நமீதா ஃபோட்டோவையோ, நயன்தாரா ஃபோட்டோவையோ போடலாம் என்று நினைத்தேன். சரி.. அதுக்குத்தான் பாச்சிலர்கள் சென்ஷி, சஞ்சய் என்று இருக்கிறார்களே என்று புதிர்போடலாம் என்ற ஐடியா வந்தது...

ஒரு குறிப்பிட்ட வகை என்றில்லாமல் கலந்து கட்டி இருக்கும், ஈஸியாக இருக்கும், கஷ்டமாக இருக்கும், கடித்தனமாக இருக்கும், அறிவார்த்தமாக இருக்கும், லூசுத்தனமாக இருக்கும், பொறுத்துக்கோங்க. விடை எப்போ-ன்னு தெரியாது. ஜமாயுங்கள்.


1) இவரு நடிகரு. பேர்ல குளிருக்குத் தேவையானது இருக்கு. இவர் அண்ணன் இவரளவுக்கு ஃபேமஸாகல. (ஆனா வாளமீனை வளைச்சுப்போட்ட மேட்டர்ல மட்டும் ஃபேமஸானாரு.) யாரிவரு?

2) விஜய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் பதிவர் காபி வேண்டாம்கறார்.
கோவம் வந்தா பளார்'னு அறைஞ்சுடுவார்.
கண்டுபிடிங்க.

3) இவரும் பதிவர்தான். அஜீத் அல்ல.
ஆமாம். சின்னதேசியக்கவிஞர்!

4) ராஜேஷின் மேஜை டிராயரில் 20 ஜோடி சாக்ஸ்கள் இருந்தன. அதிலிருந்து ஒரே நிறத்தாலான ஒரு ஜோடியை அவன் எடுக்கவேண்டும். இரவு நேரம். மின்சாரமில்லை. குறைந்தது எத்தனை சாக்ஸ்களை எடுத்தால் அவன் கையில் ஒரே நிறத்தாலான ஒரு ஜோடி சாக்ஸ்கள் இருக்கும்?


5) 1978-79. இந்தியா-பாகிஸ்தான் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம். ஆட்டத்தை அம்பயர்களான ஷாகூர் ரானாவும், காலித் ஆசிஸும் பதினோரு நிமிடங்கள் நிறுத்திவைத்தார்கள். எதற்காக என்று யூகியுங்கள்..

அ) டி.வி.காமிராக்கள் ஆன் செய்யப்படவில்லை.
ஆ) பெய்ல் காணாமல் போயிருந்தது
இ) இந்திய காப்டன் தங்கள்மீது சத்தியம் செய்ததாகக் கூறினார்கள்.
ஈ) பாகிஸ்தான் வீரர் ஒருவர் வரத் தாமதமாகியது.

6) இவரும் பதிவர்தான். கார் வெச்சிருக்கற எல்லாருக்கும் கண்டிப்பா தேவை.

7) இது கொஞ்சம் ஃபேமஸானதுதான். இருந்தாலும் கேட்கறேன்..

விஜய்க்கு இருக்கு, சூர்யாவுக்கு இருக்கு. ஏன் ஜெமினி ஹீரோயின் கிரணுக்குக் கூட இருக்கு. ஆனா ஜெமினி ஹீரோ விக்ரமுக்கு இல்ல. அது என்ன?

8) இளம் அரசியல்வாதி. ராத்திரில குல்லால இருக்காரு.

9) இதுவும் பழசுதான்.

மூணு ஃபெரெண்ட்ஸ் சாப்பிட ஹோட்டலுக்குப் போறாங்க. 15 ரூபா பில். ஆளுக்கு அஞ்சு ரூபா குடுக்கறாங்க. சர்வர் கொண்டுபோய் கல்லால குடுக்கறப்ப, முதலாளி அவங்களுக்கு 5 ரூபா திருப்பிக் குடுத்துடு. டிஸ்கவுண்ட்ங்கறாரு. சர்வர், ரெண்டு ரூபாயைப் பாக்கெட்ல போட்டுட்டு, ஆளுக்கு ஒரு ரூபா மட்டும் குடுக்கறான்.

இப்போ அஞ்சு ரூபாயில ஒரு ரூபா பாக்கி வந்தா, ஆளுக்கு நாலு ரூபா குடுத்ததா கணக்கு வருதா? 4 X 3 = 12 ரூபாய் ஆச்சு. சர்வர் ஆட்டையப் போட்டது 2 ரூபா. 12+2 = 14 ரூபா.

அந்த ஒரு ரூபா எங்க?

10) கொஞ்சம் யோசிக்க வைக்கற புதிர்..

மூடப்பட்ட மூணு பாக்ஸ். ஒண்ணுல ‘ஆப்பிள்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு. ஒண்ணுல ‘ஆரஞ்சு’ன்னு லேபிள் ஒடியிருக்கு. இன்னொண்ணுல ‘ஆப்பிளும் ஆரஞ்சும்’ன்னு லேபிள் ஒட்டிருக்கு.

மூணுமே தப்புத் தப்பா ஒட்டிருக்கு. இப்போ நீங்க அதுல ஏதாவது ஒரு பாக்ஸ்ல இருக்கறதை மட்டும் கைவிட்டு எடுத்துப் பார்த்துட்டு, என்ன பழம்ன்னு பார்த்துக்கலாம். அதைப் பார்த்தபின்னாடி, நீங்க மூணு பாக்ஸ்லயும் என்னென்ன இருக்கும்ன்னு யோசிச்சு கரெக்டா லேபிள் ஒட்டீடணும். எப்படிக் கண்டுபிடிப்பீங்க?

***********************

ஒரு இண்ட்ரஸ்டிங்க் மேட்டர்...

93 டெஸ்ட் மாட்ச்களில் விளையாடி, 50+ பாட்டிங் ஆவரேஜில் இருந்த இவர் ஒரே ஒருநாள் போட்டிதான் விளையாடினார்.. அதில் எடுத்த ரன் - 0!

அவர்: கேரி சோபர்ஸ்!

*****************

மறுபடியும் சொல்றேன். பதிவோட தலைப்பை க்ளிக் பண்ணி, தம்ஸ் அப்ல ஓட்டுப் போடுங்க. ஆமா.....

Friday, November 21, 2008

லஞ்சப்பேய்!

“நீயெல்லாம் நல்லாயிருப்பியா? வெளங்குவியா? இந்தப் பச்சப் புள்ளைக்கு குடுத்ததையெல்லாம் தூக்கீட்டுப் போறீயே நீ பொம்பளையே இல்ல.. பேயி!” – பிள்ளை பெற்ற பச்சை உடம்புக்காரியின் கூக்குரலை “போம்மா.. இவ பெரிய சாமி.. சாபம் கொடுக்கறாளாம்..” என்று அலட்சியப்படுத்தி அவளுக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் ஹார்லிக்ஸ், ப்ரெட் பாக்கெட்களை கையில் எடுத்தபடி நகர்கிறாள் மருத்துவமனை ஊழியரான அந்த பெண்.

இடம்: கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை.

“இங்கெ இப்படித்தானுங்க. ஏதோ ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரின்னா செலவில்லைன்னுதானுங்க வர்றோம். ஆனா இங்கேயும் பொம்பளைப்புள்ள பொறந்தா 300, பையன்னா 500ன்னு குடுத்தே ஆகணும். குடுக்கறவரைக்கும் நல்லா இருந்தாலும் வீட்டுக்குப் போக விடமாட்டாங்க. குடுக்க முடியாதவங்ககிட்ட இதோ, இந்த மாதிரி அவங்களை பாக்க வர்றவங்க குழந்தைக்கு கொடுக்கற பழங்கள், ரொட்டீ-ன்னு எது இருந்தாலும் தூக்கீட்டுப் போவாங்க” என்கிறார்கள்.

மருத்துவர்களும் அதே வகைதான் என்கிறார்கள். ஏதாவது ஆபரேஷன் என்றால் ‘அந்த வசதி இல்லை. என் க்ளினிக்குக்கு வா. பதினைந்து, இருபது ஆயிரங்களில் முடிக்க வேண்டியதை ஐந்தாயிரத்தில் முடித்துத் தருகிறேன்’ என்று மார்க்கெட்டிங் பண்ணும் டாக்டர்களும் இருக்கிறார்கள்.

பிரசவ வார்டின் செவிலி முதல் சுடுகாட்டு வெட்டியான் வரை வகைதொகையில்லாமல் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது இந்த லஞ்சப் பேய்.
இதை ஒழிக்கவே முடியாதா?

“கண்டிப்பா முடியாதுங்க. வேணும்னா கம்மி பண்ணலாம். அது உங்க பேச்சுத்திறமையும், பழக்கவழக்கத்தையும் பொறுத்தது. எங்க ஆஃபீஸீக்காக நான் பல அரசு நிறுவனங்களுக்கும் போறேன். மத்தவங்களை விட கம்மியா லஞ்சம் கொடுக்கறேன். அதுக்கு நான் கொடுக்கற விலை என்னோட தன்மானம். என் வயசு, அனுபவம் எல்லாத்தையும் விட்டுட்டு கண்டவன் முன்னாடி கைகட்டி, அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டீட்டு வர்றேன். அங்கெல்லாம் என்னோட மானம், மரியாதையை லஞ்சமா கொடுக்கற மாதிரிதான். கஷ்டமா இருந்தாலும் வேற வழியில்லை. அதிகமா குடுக்கற சந்தர்ப்பம் வந்தா நான் வேலை செய்யற நிறுவனம் எனக்கே அதுல பங்கு இருக்கோ’ன்னு சந்தேகப்படும்” என்கிறார் கார்த்திகேயன். ஒரு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி.

மேலும் இவர் சொல்லும் இன்னொரு காரணம் யோசிக்க வைக்கிறது.

“தன்னோட பெற்றோரை வெச்சு காப்பாத்தணும்கற எண்ணம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை. ரிட்டயர்டானப்பறமோ அல்லது தன்னால வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்கற வயசு வந்தாலோ தன்னை, தன் மனைவியை தானேதான் பார்த்துக்கணும். அப்போ குறைஞ்சது 75 வயசு வரைக்கும் இருப்போம்னு ஒவ்வொருத்தனும் கணக்குப் போட்டு, வேலைக்குப் போக முடியாத கடைசி கால 20 வருஷத்துக்கும் சேர்த்து வேலைக்குப் போகும்போதே சமாதிக்கணும்ன்னா லஞ்சம் வாங்கறதைத் தவிர வேற வழியே இல்லை. அதுவும் இப்போதைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்குப் போட்டு, 20 வருஷத்துக்கப்பறம் என்னமாதிரி இருக்கும்-ங்கற பயத்துல கன்னாபின்னான்னு லஞ்சம் வாங்கி சேர்த்து வெச்சுக்கறாங்க” என்கிறார்.

இந்தியனில் சுஜாதா எழுதியிருப்பாரே... ‘மத்த பக்கமெல்லாம் செய்யற வேலையை மீறறதுக்குத்தான் லஞ்சம். இங்கே வேலை செய்யறதுக்கே லஞ்சம்’. அது உண்மைதான்.

நேற்று கோவை நீதிமன்றத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. ஒருவருக்கு ரூ.20000 அபராதமும், நான்காண்டு சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

நண்பர் கருணாகரனிடம் (கும்க்கி) பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “மத்த கேஸ்லயெல்லாம் வழக்கு பதிவானப்பறம் அதை நிரூபிக்கணும், ஆதாரம் வேணும் இப்படிப் பல சிக்கல் இருக்கு. ஆனா லஞ்சம் வாங்கின வழக்கு, சம்பவம் ஆதாரபூர்வமா நிரூபிக்கப்பட்ட பின்னாலதான் பதிவே ஆகுது. அதுல ஒருத்தன் மாட்டினான்னா அவ்ளோதான்”

இவ்வளவு வீரியமான விஷயமாக இருந்தும், லஞ்சம் வாங்குவதிலோ, கொடுப்பதிலோ சளைக்காமல் இருக்கும் அதிகாரிகளும், மக்களும் மாற வழியே இல்லை.

இல்லை. பேசாமல் அதையும் சட்டமாக்கிவிட்டுப் போங்கள் என்று சொல்வோர் சட்டமாக்கினாலும், ‘சட்டப்படி இந்த வேலைக்கு 500 ரூவா ஆகும், நீங்க பார்த்து செய்ங்க’ என்று கேட்கத் தொடங்குவார்கள்.

திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார். ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கியவரிலிருந்து, ஐம்பதாயிரம், லட்சம் என்று கேட்பவர்கள் வரை எந்தத் துறையாய் இருந்தாலும் இவரிடம் சொன்னால் மறைவாக வீடியோ எடுத்து அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து சந்தி சிரிக்க வைத்துவிடுகிறார்.

திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கருகே இருக்கும் கோயிலில் வைத்து ஒரு பெண் போலீஸ் லஞ்சம் வாங்குவதை இவர் வீடியோ எடுத்துவிட்டு, அந்த பெண்போலீஸ் அருகே போய் ‘நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம்’ என்று சொல்ல அவர் முகம் வெளிறி அந்தக் காசை தூக்கிப் போட்டு கர்ப்பகிரகத்துக்குள் சென்று ஒளிந்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

அதே போல வேறு சில போலீஸ் அதிகாரிகள் ‘இதெல்லாம் எதுக்கு? நாம சமாதானமாகலாம்’ என்று இவர் வீட்டுக்கு வந்து சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்து சமாதானம் பேச, பேசி முடிந்த பிறகு ‘எல்லாம் சரியா பதிவாகிருக்கா பார்த்துக்கோங்க’ என்று அவர்களுக்கு டி.வி-யில் போட்டுக் காட்டி ஓட வைத்திருக்கிறார். (இவரைச் சந்தித்து பேச ஆவலாயிருக்கிறேன். விரைவில் பேசி எழுதுகிறேன்)

குழந்தையிலிருந்தே இது ஆரம்பமாகிவிடுகிறது என்கிறார்கள் இதை உளவியல் ரீதியாகப் பார்ப்பவர்கள். விழுந்த இடத்தை அடித்து, குழந்தை அழுகையை நிறுத்தி அதற்குப் பழி வாங்கும் எண்ணத்தை விதைக்கும் பெற்றோர்கள், ஒண்ணைக் குடுத்து ஒண்ணை வாங்கிக்கோ’ என்ற ரீதியாக லஞ்சத்தையும் பழக்கி விடுகிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.

எது எப்படியோ, என்ன விலை கொடுத்தாவது இதை ஒழிக்க முடிந்தால் அதைக் கொடுக்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம் என்பதே உண்மை!
பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்குறிப்பு:-

தமிழ்மண மகுடத்துக்கு ஓட்டுப் போடச் சொன்னேன். எப்படின்னு சொல்லாம விட்டுட்டேன். எல்லாரும் போட்டு கவுத்துட்டாங்க. சொல்லாமலே இருந்திருக்கலாம்ன்னு நெனைக்கறேன்.. :-)

பதிவோட தலைப்புல ‘க்ளிக்'கினா தம்ப்ஸ் அப்' சிம்பல் வரும்ல அதுல க்ளிக்குங்க. அதை விட்டுட்டு தம்ஸ் டவுன்ல க்ளிக்கிடாதீங்க.

ஓக்கே? ஸ்டார்ட் மீஜிக்....

Thursday, November 20, 2008

ஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்
என்கிட்ட சிலபேர் பலதடவை ஒரு விஷயத்தைப் பத்தி சொல்றதுண்டு. அதாவது என் பதிவுகள்ல ‘அவர் இதைச் சொன்னார்... இவர் இதைச் சொன்னார்’ன்னு அடுத்தவங்க சொல்றதை ஏன் எழுதறேன்னு கேப்பாங்க. சில நல்ல விஷயங்களை, சுவாரஸ்யமானவற்றைப் பகிர்ந்துக்கணும்ன்னுதான். வேற ஒண்ணும் பெரிய காரணமெல்லாம் இல்லை. கல்யாண்ஜி கேப்பாரு.. ‘என்னுடையதை என்னுடையாதாகப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?’ என்று. அதனால் பல/சில சமயங்கள்ல அடுத்தவங்களோடதையும் என்னுடையதாகப் பார்க்கிறேன். அவ்வளவே...
***********************

இரண்டாம் தளத்தில் உள்ள அப்துல்லா அறைக்குச் செல்ல கீழே லிஃப்டிற்காகக் காத்திருக்கிறோம். ‘என்னா.. யூத் மாதிரி இருந்துகிட்டு, லிஃப்டுக்கு வெய்ட் பண்றீங்க? படியேற முடியாதா’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். உடனே சட்டென்று சொல்கிறான் சகா கார்க்கி..

“லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தறவன்தான் யூத். படியேறிப் போய் எனர்ஜியை வேஸ்ட் பண்றதெல்லாம் ஓல்டு!”

*************************

இது தன்னைக் கிழம் என்று சொல்லிக்கொள்ளும், இளமை எண்ணக்காரர் சொன்னது...

“நீ பாரு பரிசல்.. தமிழ்நாட்ல உன்னிகிருஷ்ணன்னு பேர் இருக்கற யாரோட அப்பா பேரும் ‘S’ ல ஆரம்பிக்காது. ‘S’-ல ஆரம்பிக்கற பேர் இருக்கற எந்த அப்பனும் தன் மகனுக்கு உன்னிகிருஷ்ணன்னு பேர் வைக்கமாட்டான்”

‘ஏண்ணா?’ என்று வெள்ளந்தியாய்க் கேட்டு திட்டுவாங்கிக் கட்டிக்கொண்டேன்!

************************

விவேக், வடிவேலு பற்றிப் பேச்சு வந்தது.

“என்ன இருந்தாலும் விவேக் இண்டலெக்ச்சுவல்தானே?”

“மக்களோட மனசைப் படிக்கணும்டா. இல்லாம சும்மா அறிவுரையே சொல்லிகிட்டிருந்தா அது மெண்டலெக்ச்சுவல்!”

***************************

நாங்கள் போன ஆட்டோக்காரன், பஸ்ஸுக்கும், காருக்கும் இடையில் புகமுடியாத ஒரு இடைவெளியில் தன் ஆட்டோவைச் செலுத்தியபோது..

“அமிதாப்பச்சன் சென்னைல இருந்தா அவன் காலுக்கடில கூட ஓட்டீட்டுப் போவானுக”

***************************

ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.

பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’

ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”


முக்கியக்குறிப்பு: இந்த மொக்கையை நானும் பலதடவை சொல்லியிருக்கிறேன். ‘ஏங்க.. பார்சல்னாலும் சாப்பிடத்தானே’ என்றோ ‘பார்சல்ன்னா சாப்பிடக்கூடாதா?’ என்றோ கேட்பேன். இவர் அவன் கேட்டதையே திருப்பிச் சொல்வதுபோல் இரண்டே வார்த்தையில் நச்சென்று சொல்லியதில்தான் சூட்சுமம் இருக்கிறது. சிறுகதை எழுத இந்தச் சொற்பிரயோகம் மிகமுக்கியம்!
***************************
அறையில் அப்துல்லா தனது கணீர்க்குரலில் ஒரு பாடல் பாடுகிறார். தண்ணிலையிலும் எல்லோரும் தன்னிலை மறந்து கைதட்ட, சிலர் அவரைப் பாராட்டிப் பேச.. ஒருத்தர் ‘உன் காலைக் கொண்டா.. விழணும் அதுல’ என்று இடையிடையே சொல்கிறார். அவரது குரல் எங்கள் பாராட்டுக்கிடையே சரியாகக் கேட்கப்படவில்லை. இப்போது அவர் உரத்தகுரலில்.. ‘உன் காலைக் கேட்கறேன்.. காமிக்க மாட்டீங்கற?’ என்கிறார்.

உடனே அங்கிருந்த நண்பர்-குறும்பட இயக்குனர்- சாரதாகுமார் சொல்கிறார்..

“அவரே நாங்க பாராட்டற பாராட்டுல ‘தலைகால்’ புரியாம இருக்காரு..”

**************************

ராசி பட இயக்குனர் முரளிஅப்பாஸ் வந்தார். பெயர்க்காரணம் கேட்டோம். அதன் அப்பா பெயரான அப்பாசாமி-யின் சுருக்கம்தான் அப்பாஸ் என்றார். ‘நான் ரம்பாவின் ரசிகன். நீங்க ரம்பாவை வெச்சுப் படம் எடுத்திருக்கீங்க’ என்று கைகொடுத்தேன். கொஞ்ச நேரப் பேச்சின்போது ஒரு கவிதைக்கு தொடைதட்டி ரசிக்க நண்பர் சந்தோஷ் சொன்னார்..

“ரம்பா ரசிகருல்ல, அதான் தொடைல தட்டறீங்க”

(ஆனா நான் என் தொடைலதானே தட்டினேன்....)

***************************

ஒரு நண்பரிடம் கேட்கப்படுகிறது..

“நீங்க பொறந்து வளர்ந்தது எங்க?”

அவர்: “வேலூர்”

உடனே கார்க்கி: “எந்த செல்லுல?”

******************

கார்க்கியை ‘டா’ போட்டு ஒரு நண்பர் அழைத்தபோது, இன்னொருவர் சொன்னார்.

“எனக்கும் கார்க்கியை அப்படிக் கூப்பிடணும்ன்னு தோணுது. ஆனா அவர் தப்பா நெனைப்பாரோன்னு யோசனையா இருக்கு”

“ஒரு ரவுண்டு முடியட்டும். நீங்க எப்படிக் கூப்பிடப் போறீங்கன்னு பாருங்க”

இந்த நேரத்தில் குறும்பட இயக்குனர் (அடடா.. இத எத்தனை தடவைடா சொல்லுவ..) சாரதாகுமார் ஒரு விஷயம் சொன்னார்..

“மதுரைல ஒரு தியேட்டர் இருந்துச்சு. அந்தக்காலத்துல படம் பார்க்க வர்றவங்களை டிக்கெட்டோட மதிப்பை வெச்சுத்தான் கூப்பிடுவாங்க.

‘ஒண்ணாரூவாயெல்லாம் வாங்கடா.. ரெண்டாரூவாயெல்லாம் வாங்கய்யா.. அஞ்சு ரூவாயெல்லாம் வாங்கசார்’ இப்படித்தான் கூப்பிடுவாங்க..”

**************************

ஒரு நண்பர் தவறாக ‘இளநி, பீர்ன்னெல்லாம் சொன்னா உதடு ஒட்டாது. ப்ராண்டி, ரம்-னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்’ என்று சொன்னார்.

“அதெப்படி பீர்-ன்னு சொன்னா உதடு ஒட்டாதுன்னு சொல்றீங்க?”

நர்சிம்: “குடிச்சுட்டுப் பேசினா வாய் குழறி ஒட்டாமச் சொல்வாங்களே.. அதைச் சொல்றாரு போல..”

இந்த இடத்தில் ஒருத்தர் மேடைப் பேச்சின்போது அ.தி.மு.க-வுக்காக பேசும்போது பேசியதைக் குறிப்பிட்டார்...

“கலைஞர், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், தயாளு, ராஜாத்தி என்ன சொன்னாலும் உதடு ஒட்டாது. ஆனா எம்.ஜி.ஆர், ராமச்சந்திரன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் இப்படி என்ன சொன்னாலும் உதடு ஒட்டும்”

உடனே யாரோ கேட்டார்கள்..

“இதச் சொன்னதுக்கு கைதட்டினாங்களா.. கையால தட்டினாங்களா...”

*************************
கவிதைகள் உட்பட இவைபோல இன்னும் சில உண்டு.
தொடரவா.. வேண்டாமா?
...........

ஒரு வேண்டுகோள்.... என்னவோ தமிழ்மண மகுடமாம். ஓட்டுப் போடணுமாம். மாஞ்சு மாஞ்சு எழுதறேனே... போட்டுத்தான் தொலைங்களேன்.


.

Wednesday, November 19, 2008

சென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்!

சனிக்கிழமை பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு திருப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸூக்காக காத்திருந்தபோது, ஒரு நல்ல சேதி (சென்னை நண்பர்களுக்கு) ஒலித்தது. ‘சென்னை எக்ஸ்ப்ரஸ் ரத்து செய்யப்பட்டது’ என்று. என்னைவிட வருத்தப்பட்டது என்னை வழியனுப்ப வந்த நண்பர் வெயிலான்தான். சிரமம் பார்க்காமல் ப்ளாட்பார மேம்பாலத்தில் ஏறி இறங்கி அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு, அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டிற்கான ஓப்பன் டிக்கெட் வாங்கி, நீலகிரி எக்ஸ்ப்ரஸ் டீ.டீ.ஆரிடம் பேசி பெர்த் கிடைக்க ஏற்பாடு செய்ததுவரை அவரது உதவி மறக்கமுடியாதது. (எல்லாத்துக்கும் அவர்தான் காரணமா என்று சென்னை நண்பர்கள் புலம்புவது கேட்கிறது!)

ஒரு சாதாரணனை வரவேற்க நர்சிம், அப்துல்லா என்ற இரு அசாதாரணமானவர்கள் (EXTRAORDINARY HUMANS!) அதிகாலை நாலேமுக்காலுக்கெல்லாம் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி! அந்த அதிகாலை வேளையில் ரயில் நிலையம் அருகே ரோட்டோரக் கடையில் குடித்த காபியும், அப்போதிலிருந்து கார்பார்க்கிங் வரும் வரை சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே இருந்ததும் என் சென்னைப் பயணத்தின் முக்கியத் தருணங்களில் ஒன்று.

அங்கிருந்து அப்துல்லாவின் அறைக்குச் செவதென்று தீர்மானிக்கப்பட்டது. கிளம்புமுன் “புத்தகம் ஏதாவது வேணுமா” என்று கேட்டார் நர்சிம். யாரைப் பார்த்து என்ன கேள்வி. உடனே ஓடிச் சென்று அவரது காருக்குப் போனேன். டிக்கி நிறைய சருவின் புத்தகங்கள். ஜீரோ டிகிரி ஏற்கனவே இருந்ததால், ராஸலீலாவை எடுத்துக் கொண்டேன். (ஏண்டா எடுத்தோம்னு இருக்கு இப்போ.. புக்கை கீழ வைக்க முடியல. அவ்ளோ பெரிசா இருக்கறதால ஆஃபீஸுக்கெல்லாம் எடுத்துட்டும் போக முடியல. சிந்தனை எழுத்து எல்லாத்துலயும் கண்ணாயிரம் பெருமாள் ஆக்ரமிக்கறாரு!)

அங்கிருந்து அப்துல்லாவுடன் அவரது அறைக்குப் பயணம். நான் விருந்தினர் பற்றி எழுதியிருந்ததாலோ என்னமோ, அங்கே இருந்த வேளைகளில் என் அறையில் அவர் இருந்தது போலத்தான் உணர்ந்தேன். அவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது. அவருக்கு என் நன்றி.

அதன்பிறகு அங்கிருந்து அவரது அலுவலகம் வந்தோம். கார்க் கதவை திறப்பது முதல் அவருக்கு அத்தனை மரியாதைகள். இதிலெல்லாம் தன்னிலை மாறாமல் இருப்பது அப்துல்லாவின் பண்பு என்றே சொல்லவேண்டும்!

‘வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை செஞ்சுக்கறேனே’ என்று அவர் கெஞ்ச போனாப் போகுது என்று அவரிடம் கேட்டு அலுவலகத்திலிருந்து ஒரு டூ வீலர் வாங்கிக் கொண்டு சிலபேரைச் சந்தித்து விட்டு பிறகு மறுபடி அவரிடமே வந்து அங்கிருந்து வெண்பூ இல்லம் நோக்கிப் பயணம்.(ஆதர்ஷ் அழகா.. அப்துல்லாவின் சிரிப்பழகா?)(ஆபீஸுக்குப் போகணும்.. சீக்கிரம் கிளம்புங்கய்யா - அப்துல்லா)

வெண்பூ வீட்டிலும் நான் அதையே உணர்ந்தேன். அடடே வாங்க வாங்க என்ற எந்த ஆர்ப்பரிப்புகள் ஏதுமின்றி இயல்பான வரவேற்பில் மிக மகிழ்ந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததை விட ஹெவியான சாப்பாடு! (ஆதர்ஷ்க்கு சுத்திப் போடுங்க சிஸ்டர். படுசுட்டி!)

மாலை பதிவர் சந்திப்பு.(பதிவர் குமுகாயம்)
(கேபிள் சங்கர் - சுஜாதா மன்னிச்சுட்டாரு!!!!)இரவு _____________________________!

(இரவின் சில சுவாரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பை ஓரிரு தினங்களில் பதிவிடுகிறேன்)

அடுத்தநாள் காலை நண்பர் அப்துல்லாவிடமிருந்து விடை பெற்று, ரமேஷ் வைத்யாவுடன் அவரது இல்லத்திற்குச் சென்று அவரிடமிருந்து சில பொக்கிஷங்களை அவர் அனுமதியோடு திருடி... நர்சிம் வர அவரோடு அவர் இல்லத்திற்கு பயணம்.

அங்கே இனிய மதிய உணவு. மறுபடி, மறுபடி அதே டயலாக்தான். இங்கேயும் என் வீடு போலத்தான் உணர்ந்தேன்!

லக்கியும் எங்களோடு சேர்ந்துகொள்ள... ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு.. (அரசு நிறுவனம் சில இப்படியெல்லாம் இருக்கும்ங்கறது எனக்குப் புதுசு! இது பத்தி தனிப் பதிவு எழுதணும்!)

சரி.. பதிவு எனக்கே புடிக்கல. வழவழன்னு இருக்கு. முக்கியமா நான்
ஒரு சிலரைத்தவிர... எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.

அந்த ஒரு சிலர்....

ஒரு பெரிய நிறுவனதோட இயக்குனர். சென்னையின் முக்கியமான ஒரு இடத்துல வீடு. பலதரப்பட்ட பெரிய மனுஷங்களோட பழக்கம். அரசியல்லயும் ஒரு முக்கியப் பொறுப்பு. டூ வீலர்ல போனா.. ‘சார்.. நீங்க ஏன் டூ வீலர்ல போறீங்க’ன்னு ஒரு அதிகாரி பதறி கேட்கற அளவு பெரிய பதவி. இதுல எதிலயும் தன்னோட தனித்தன்மை பாதிக்காத ஒரு மனுஷன் அப்துல்லா. ரம்பாவை வெச்சு படம் எடுத்த டைரக்டர் முரளி அப்பாஸை அறிமுகப்படுத்தினாரு. அவருக்கு நன்றி சொல்ல முடியாது.


நர்சிம். இவரும் அதேமாதிரிதான். ஒரு மிகப்பெரிய நிறுவனத்தோட மிகமிகப் பெரிய பொறுப்பு. சனிக்கிழமை காலைல இரயில்வே ஸ்டேஷனுக்கு இவர் வரவேண்டியதே இல்லை. அப்புறமா கூட சந்திக்கலாம். ஆனா எனக்காகவே வந்து காத்திட்டிருந்திருக்காரு. இவரை ஸ்டேஷன்ல பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேரைக் கஷ்டப்படுத்தறோம்ன்னு. கடைசிவரை இவர் என்கூட இருந்து, எங்க கூப்ட்டாலும் வந்து... (இவருக்கும் எனக்கும் பல விஷயங்கள்ல வேவ்லென்த் ஒரே மாதிரி இருக்கு. அதுல எனக்கு சந்தோஷம்)

அழகு, பணம், பதவி, அந்தஸ்து... எல்லாத்தையும் மீறி இவர்... மனுஷன்.

(பாஸூ.. நாளைக்கு நீங்க ஹீரோவானா டிஸ்கஷனுக்காவது என்னைக் கூப்பிடுங்க!)

வெண்பூ...

கலகலப்பான ஆள். இவரோட உடம்பு எனக்கிருந்தா நான் பெரிய ரௌடி ஆகிருப்பேன். ஆனா இவர் அவ்ளோ மென்மையான ஆசாமி. பீச்ல போலீஸ் எங்களை கூட்டம் போடாதேன்னு சொன்னப்ப கேட்ட ஒரே மனுஷன் இவருதான். இவர் வீட்ல சாப்பிடப்போனப்ப சிஸ்டர் பரிமாற வந்தப்ப ‘விடு..விடு.. அவங்களே போட்டு சாப்பிட்டுக்குவாங்க’ன்னு சொன்ன விதம் மத்தவங்களை எந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்காருன்னு ஆச்சர்யப்படுத்திச்சு!

லக்கிலுக்.

ஒரு காலத்துல இவரு கூட பேசமுடியுமான்னு நினைச்சிருக்கேன். ஆனா ‘யோவ்.. நான் உன் செட்டுய்யா’ன்னு சொல்லாம சொல்வாரு தன்னோட பழகும் தன்மைல. இவரோட விஷயஞானம் அளவிடற்கரியது. சினிமா பத்தியும், அரசியல் பத்தியும் எந்த சந்தேகம்ன்னாலும் இவர் விளக்கம் சொல்றாரு. ‘கோயம்பேடிலிருந்து மடிப்பாக்கம் போக ஒரு மணி நேரம் ஆகும். நீங்க போங்க லக்கி’ன்னு சொன்னாலும் கேட்காம என்னை பஸ் ஏற்றிவிட்டுத்தான் சென்றார். பஸ்ல ஏறின பிறகும் என்னால தூங்கவே முடியாம லக்கி எனக்காக அவ்ளோ நேரம் செலவிட்டதுதான் யோசனையாவே இருந்தது.


அப்புறம் கிழஞ்செழியன். இவரைப் பத்தித்தான் நான் நாலைந்து நாட்களாக யோசித்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறேன். இதுக்குமேலயும் சொன்னா ‘உதவிழும் ராஸ்கல்’ ம்பாரு. இவரைப் பத்தி தனியா ஒரு ப்ளாக்கே ஆரம்பிச்சு எழுதலாம்னு ஐடியா இருக்கு. பாக்கலாம்.


நான் ரொம்ப மதிக்கற தல யெஸ்.பாலபாரதி ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா’ன்னு கூப்பிட்டது காதுல கேட்டுட்டே இருக்கு. (ஒரு நல்ல ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்கிட்ட காமிங்கன்னு சொல்லக்கூடாது)

முரளிகண்ணன், தாமிரான்னு நம்ம செட் ஆளுக எல்லாருமே அந்த தினத்தை ஸ்பெஷலாக்கினாங்க. யாருமே தப்பா நினைக்கமாட்டாங்க-ங்கற நம்பிக்கைல சொல்றேன். அங்க சந்திச்சவங்கள்லயே என்னை நானே பார்த்தது கார்க்கிகிட்டதான். பலவருஷம் முன்னாடி எனக்குள்ள இருந்த வேகம், துறுதுறுப்பு எல்லாமே இவன்கிட்ட (சகா.. அப்படித்தான் வருது... ‘ர்’ வர்ல!) இருக்கு. இது நீர்த்துப் போகாம இருக்கவும், இன்னும் பல வெற்றிகளை பத்திரிகைகள்ல எழுதி இவன் பெறவும் எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்!

Tuesday, November 18, 2008

பதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும்

“சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையப்போ போலீஸ்தான் அப்படி வேடிக்கை பார்த்ததுன்னா பத்திரிகையாளர்கள்கூடவா சும்மா இருந்தீங்க?”

“ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க. பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சாவி ஒரு மேடையில பேசிட்டிருக்கும்போது மயங்கி விழறாரு. அப்போ சன் டி.வி. கேமராமேன் அங்க இருக்கார். இயல்பிலேயே புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கற அவன் ‘ஐயையோ.. ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் மயங்கி விழறாரு’ங்கற உந்துதல்ல கேமராவைத் தூக்கிப் போட்டுட்டு அவரைத் தாங்கறார். ஆஃபீஸ் வந்தப்ப கேக்கறாங்க... ‘சாவி மயங்கி விழுந்த விஷூவல் எங்கே?’ இல்லை! ஒரு மாசம் சஸ்பெண்ட்! லாஸ் ஆஃப் பே. சோத்துக்கு என்ன பண்ணுவான்? அவன் அவனுக்கு அவன் அவன் வேலை. அடுத்தவன் வேலையை அவன் எதுக்கு செய்யணும்? இது வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுது. ஹிரோஷிமாவுல அந்த குழந்தை வெளில வர்ற விஷூவல் எடுக்கலைன்னா அந்தப் போரோட கொடுமை வெளிலயே தெரிஞ்சிருக்காதே”

“சரிதான். நீங்க சொல்ற மாதிரி பத்திரிகையாளர்கள் போய் உதவிசெஞ்சு இவங்க அடிவாங்காம இருந்திருந்தா.. இவ்ளோ பெரிய அட்டூழியங்கள் அங்க நடக்கறது வெளியவே வந்திருக்காது. இப்போ இப்படிக் கேக்கற வாய் ‘இவனுக போனமா, நியூஸ் கலெக்ட் பண்ணினோமான்னு இல்லாம எதுக்கு அந்த ரௌடிக் கூட்டத்துக்குப் போய் உதவணும்?’ன்னு கேக்கும்”

“இன்னொரு விஷயம்.. அப்படியும் போலீஸ்கிட்ட ‘என்னவாவது பன்ணுங்கய்யா’ன்னு வாக்குவாதம் பண்ணிகிட்டிருந்தது பத்திரிகையாளர்கள்தான்”

*****************************

“இத்தனை பேர் இந்த மாதிரி கூட்டம் போடக்கூடாதுங்க. என்னங்க நடக்குது இங்கே?”

“நாங்க ஃப்ரெண்ட்ஸ்ங்க. பேசிகிட்டிருக்கோம்”

“அதெல்லாம் கூடாதுங்க”

“சரிங்க. நாங்க உங்களை மாதிரி (போலீஸ்) இருக்கோம்க”

“போலீஸ் மாதிரின்னா?”

“சும்மா நின்னுகிட்டிருக்கோம்ன்னு சொல்ல வந்தேன்”

************************************

“தல.. என்ன இது? தமிழ்நாட்ல பேச்சுரிமை இல்லியா?”

“சட்டக்கல்லூரி ப்ரச்னைக்குப் பிறகு ஓப்பன் ப்ளேஸ்ல கூடக்கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போடப் பட்டிருக்கு. அதுவும் காந்திசிலை தலைவா. ஏதாச்சும் ஆச்சுன்னா சீனாய்டும்க. என்ன பேசுவீங்க? என்ன பேசினாலும் அது அரசுக்கு எதிராத்தான் இருக்கும். சொல்லியாச்சு. அங்க பீச் சைட்ல போய் வட்டமா உக்கார்ந்து பேசலாம்”

***********************************

“நம்ம பாரிஅரசு எல்லாருக்கும் சாக்லேட், பிஸ்கெட் வாங்கிட்டு வந்திருக்காரு. எல்லாரும் சாப்பிடுங்க”

“எல்லாரும் பாரிஅரசுக்கு ‘ஓ’ போடுங்க”

“சரி.. யாராவது ஆரம்பீங்கப்பா”

“45 பேருக்கு மேல வந்திருக்கீங்க. எல்லாருக்கும் வணக்கம். மீடியா முழுக்க அந்தப் பசங்க ரெண்டு பேர் அடி வாங்கினதைப் போட்டுப் போட்டு ஒரு சீனை க்ரியேட் பண்ணீட்டாங்க. முக்கியமா அந்த பாரதிகண்ணன் கடைசிவரைக்கும் கத்தியை சுத்திகிட்டிருந்தது சரியா காண்பிக்கப்படல. கீழ விழுந்து அவன் அடி வாங்கினதுதான் காட்டப்பட்டது. வன்முறை எப்படிப் பார்த்தாலும் தவறுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் மிருகம் மாதிரி சித்தரிக்காங்க”

“மிருகம் மாதிரின்னு சொல்றதையே நான் எதிர்க்கறேன். புலி என்னைக்கும் புலியை அடிச்சதில்லை. இது காடுமிராண்டித்தனத்தையெல்லாம் மீறீன ஒரு செயல்”

“ஆனா அதுக்குப் பின்னாடி என்ன காரணம் இருக்கும்னு யோசிங்க?”

“என்ன?”

“டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி-ங்கறது பேரு. அந்தக் கல்லூரில விடுதி இருக்கு. அந்த விடுதி இல்லைன்னா, அந்த மாணவர்கள் எங்கயும் தங்கி படிக்கற அளவுக்கு பொருளாதாரப் பிண்னணி இல்லாதவங்க. ஆனா அந்த கல்லூரி குறிப்பிட்ட அந்த சமூகத்துக்கு எதிரான டீஸிங், அவங்களுக்கு ஏதாவது ஸ்காலர்ஷிப் சம்பந்தமா சர்குலர் வந்தா ஒரு மாதிரியா ட்ரீட் பண்றதுன்னு, அந்த சமூகத்து பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்ன்னு தொடர்ந்துட்டே இருக்கு. அப்பட்டமா தீண்டாமைதான்”

“இதுக்கு வெளி அரசியல்வாதிகளோட சப்போர்ட்....”

“இருக்கு. வெறும் முப்பது மாணவர்களே இருக்கற ஒரு பிரிவைச் சார்ந்த அவங்களுக்கு, ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் பின்புலமா இருக்கறாரு”

“ம்..”

“அன்னைக்கு காலைல சித்திரைச்செல்வன்-ங்கற மாணவரை இந்த ரெண்டு பசங்க சேர்த்து காதை வெட்டிருக்காங்க. அது எந்த மீடியாவும் பெரிசா காமிக்கல. அவனை எந்த அரசியல்வாதியும் பார்க்கல. அடிவாங்கின ரெண்டு பேரையும் பாவம் மாதிரி, தியாகி மாதிரி காமிக்கறாங்க..”

“சரி... இந்த இடத்துல ஒரு கேள்வி. போலீஸின் கடமை என்ன? அவங்க வேடிக்கை பார்த்தது தப்பா இல்லையா?”

“போலீஸ்மீது தப்பு, பத்திரிகையாளர்மீது தப்புங்கறது அவங்க அவங்க புரிதல். இங்கே அப்பட்டமான மனித உரிமை மீறல் நடந்திருக்கு. நான் சொல்றது ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டுமே தாக்குதல் நடந்திருக்குங்கறது மாதிரி காட்டறாங்க. அது தவறுன்னுதான் சொல்றேன். இரு சமூக மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்காங்க. ஆனா ஒரு சமூக மாணவர்கள் கண்டுகொள்ளப் படாமலே இருக்காங்க. அவங்க உரிமைக்காக இவங்க போராடி, இப்போ இந்த அரசியல்வாதிகளோட திட்டமிட்ட காய்நகர்த்தலால் அவங்க உரிமை முழுமையா கிடைக்காம போவதற்கான வாய்ப்புகள் உருவாகிட்டிருக்கு. அம்பேத்கர் பேரை எடுக்கணும், விடுதியை மூடணும்கறதெல்லாம் அதோட விளைவுதான். இது தீண்டாமை அல்லவா?”

“இதுக்கெல்லாம் காரணம் சாதிவெறிதானே?”

“ஆமா. அடிவாங்கி மரத்துல தொங்கின ஆறுமுகம் மேல 17 கிரிமினல் கேஸ் இருக்கு. பாரதிகண்ணன் கல்லூரிலயே சாதி அமைப்பு நடத்தி லீடரா இருந்திருக்கான். இதெல்லாம் சரியா?”

“’இவன்’ படத்துல பார்த்திபன் ஒரு வசனம் எழுதியிருப்பாரு. ‘படிக்காதவன் பண்ற எல்லாத் தப்புமே அவன் படிக்காதவன் –ங்கற தப்புலயே அடங்கீடுது’ன்னு. ஆனா படிச்சவன் இப்படிப் பண்ணினா நம்ம எஜூகேஷனல் சிஸ்டம் அப்படித்தான் இருக்கா?”


“இதுக்கு வலைப்பதிவர்களாகிய நாம என்ன பண்ணணும்?”

“ஏதாவது நடந்தா அதோட பின்புலத்தை தெரிஞ்சுகிட்டு அப்புறமா எழுத்துல கோவத்தைக் காட்டலாம்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்”

“என்னோட ஒரு வேண்டுகோள் இருக்கு”

“என்ன?”

“பசிக்குது. போய் ஒரு டீயோ, பாதாம்பாலோ சாப்பிடலாம் வாங்க”

Monday, November 17, 2008

பதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...


(வெண்பூ, காமிராவுடன் தாமிரா, அதிஷா, கும்க்கி)(மேலே: ரமேஷ்வைத்யா, முரளிகண்ணன், சந்தோஷ், பரிசல்காரன், பாலபாரதி, டாக்டர் ப்ரூனோ)

கீழ்வரிசை: குட்டிப்பிசாசு (அருண்), நர்சிம், கார்க்கி, வெண்பூ)(கேபிள் சங்கர், லக்கிலுக், டோண்டூ ராகவன்)(ஸ்ரீ, கார்க்கி, நர்சிம், தாமிரா, முரளிகண்ணன்)

(கார்க்கி, நர்சிம், ரமேஷ்வைத்யா, பாலபாரதி, சந்தோஷ்)(அப்துல்லா, வெண்பூ, கும்க்கி)(ப்ரூனோ, அக்னிப்பார்வை, குட்டிப்பிசாசு )
(_______________, சாரதாகுமார், பாலபாரதி, பரிசல்காரன், ரமேஷ்வைத்யா)(ரெண்டாவது நிக்கிறது நர்சிம், பாக்கியெல்லாம் அதே தல-தான்!)

(முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


பயணக் களைப்பினாலும், அலுவலகப் பணிகள் அழைப்பதாலும் விரிவாகப் பதிவெழுத இயலவில்லை. சந்திப்பு குறித்து வெளிவராத தகவல்களுடன் (நன்றி: லக்கி!) நாளை சந்திக்கிறேன்.

Saturday, November 15, 2008

நேர்ல வாங்க... ப்ளீஸ்..!

இன்று மாலை 6 மணியளவில் மெரினா கடற்கரை காந்திசிலைக்குப் பின்னால் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக மாற இருக்கிறது. தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த மனித குலத்தையே குலை நடுங்க வைத்த ஒரு சம்பவம் குறித்து வாத, விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

ஆரோக்யமான சந்திப்புகளாக பதிவர் சந்திப்புகள் நடைபெறுவதற்கான ஒரு முக்கியக் கட்டமாக இந்தச் சந்திப்பு நடைபெறுமென்பதில் ஐயமில்லை. இது குறித்து மேலும் அறிய லக்கிலுக்கின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.

வாருங்கள்.. நேரில் பேசலாம்.

Friday, November 14, 2008

சாகலாம்னு தோணுது...

அப்போது என்னிடம் லைசென்ஸ் இல்லை. இதே திருப்பூரில் தேவ்ஜி காலனி-யில் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். இருந்த ஒரு டி.வி.எஸ்-ஸை எனக்குக் கொடுத்துவிட்டு எங்கள் மேனேஜருக்கு எம் – 80 வாங்கினார்கள். அவருக்கு அதை ஓட்ட சிரமமாய் இருக்கவே மறுபடி அவர் டி.வி.எஸ்-ஸையே எடுத்துக் கொண்டார். அந்த எம்-80யில் சென்று கொண்டிருந்தபோது சங்கீதா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்த ட்ராஃபிக் போலீஸார் பிடித்து விட்டார்கள்.

“லைசென்ஸ் இருக்கா?”

எங்கேயிருந்துதான் அப்படி ஒரு ஐடியா ‘சட்’டென வந்தது என்று தெரியவில்லை. (மூளையிலிருந்துதான்!)

“இருக்குங்க. கம்பெனில வாங்கி வெச்சிருக்காங்க”

“ஸ்டேஷனுக்கு வந்து காமிச்சு வண்டியை எடுத்துட்டுப் போ. பேரைச் சொல்லு..” என்று அந்தப் பாழாப்போன பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“ராமசாமி”

“வயசு?”

“32”

12 வருடங்களுக்கு முன் நடந்தது இது. அப்போது எனக்கு வயசு வெறும் 23தான். அந்த கான்ஸ்டபிள் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இவ்ளோ சின்னப் பையனா இருக்க? 32ங்கற?” என்று கேட்டார்.

“பார்த்தா தெரியாதுங்க” என்று சொல்லி சமாளித்துவிட்டு அவர்கள் வண்டியை லாரியில் ஏற்றியபிறகு கம்பெனிக்குப் போனேன். மேலாளரிடம் விஷயத்தைச் சொல்ல நடுங்கிப் போனார் அவர். பின்ன? அவர் பேருதானே ராமசாமி? பத்து, பதினைஞ்சு வண்டில எது யாருதுன்னா பார்க்கப் போறாங்க என்று அவர் பெயரைக் கொடுத்துவிட்டேன். ஆனால் அவரோ பயந்துபோய் வர மறுத்துக் கொண்டிருந்தார். எங்கள் முதலாளி வந்து ‘பையன் புத்திசாலித்தனமா ஒரு வேலை பண்ணீட்டு வந்திருக்கான். போங்க.. போய் பேசி வண்டியை எடுத்துட்டு வந்துருங்க’ என்று சொன்னபிறகே வந்தார்.

ஸ்டேஷனில் போய் என்னைப் பிடித்த கான்ஸ்டபிள் வெளியே ஒரு மரத்தடியில் யாரிடமோ பேரம்பேசியபடி இருக்க, நேராக உள்ளே சார்ஜெண்டிடம் போய் அந்த மெமோவையும், வண்டியின் RC புத்தகம், லைசென்ஸ் எல்லாத்தையும் காட்ட, ‘வண்டில எப்பவுமே ஒரு காப்பி வெச்சுக்கணும்ங்க’ என்று சொல்லிவிட்டு ‘யோவ்.. இவங்க வண்டியை குடுத்துடு’ என்று சொல்ல வண்டியை எடுத்துக் கொண்டு, ஸ்டார்ட் செய்து நகர்த்த எங்களை நோக்கி வந்தார் என்னைப் பிடித்த அந்தக் கான்ஸ்டபிள்.

“ஏம்ப்பா... ஒம்பாட்டுக்குப் போற?” என்று பின்னால் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து கேட்க.. (என்னா ஞாபக சக்திப்பா!) நான் முகத்தை ரொம்ப சோகமாக வைத்துக் கொண்டு “உள்ள கவனிச்சுட்டு வந்துட்டேன் சார். லைசென்ஸை கொண்டு போகவேண்டியதுதானே எனக்கு அடி விழுகாத குறையா திட்டுசார் உங்களால” என்று சொல்லி விட்டு மேனேஜரை முதுகில் நோண்ட அவர் வண்டியை விரட்ட ‘எஸ்கேப்!’

********************************

கேபிள் சங்கர் எழுதச் சொல்லிதான் நேற்று முன்தினம் இதை எழுத ஆரம்பித்தேன். இது தவிர வேறு ஒன்றிரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு. ஆனால் நேற்றைக்கு சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்தபிறகு மனசு எதிலும் லயிக்க மறுக்கிறது. நேற்று காலை நர்சிம் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும். எங்கள் வீட்டுத் தொலைக்காட்சி பெரும்பாலும் ஆஃப் செய்யப்பட்டுத்தான் இருக்கும். அதனால் நேற்று முன்தினம் பார்க்கவில்லை. நேற்றைக்கு பதிவர் கிரியின் பதிவில் இருந்த யூ ட்யூப் வீடியோவில்தான் முழுமையாகப் பார்த்தேன்.

ஆறுமுகம் என்ற மாணவனை காட்டுமிராண்டிக் கும்பல் தாக்குகிறது. பதைபதைத்து ஓடி வருகிறான் சக மாணவன் பாரதிகண்ணன். அவனையும் தாக்குகிறது. கால்களிலும், உடம்பிலும் ஹாக்கி மட்டையால் சரமாரியாக முப்பதுக்கும் மேற்பட்ட அடிகள். அதுவும் பிங்க் பனியன் போட்ட ஒரு மிருகம்தான் இருவரையும் அதிகமாக அடித்தவன். இவனை நடுத்தெருவில் கட்டி வைத்து காலுக்குக் கீழே கல்லால் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதயமே இல்லாத கொடுங்கோல் மனசுக்கார பேய். இவனைப் பெற்ற பாவத்துக்கு இவன் பெற்றோர் எழுதிவைத்துவிட்டுச் சாகலாம்.

கேட்டருகே கிடந்த பாரதிகண்ணனின் கால்கள் இவன் அடித்த அடியில் துடிப்பதும், மறுபடி மறுபடி அவன் அடிப்பதும் தாங்கமுடியவில்லை. பாரதி கண்ணனுக்கோ, ஆறுமுகத்துக்கோ அண்ணன், தம்பியாக பிறந்த எவரும் இந்தச் செயலைப் பார்த்து நக்சலைட்டாக மாறி அந்தக் கும்பலை ஒழிக்க முற்பட்டால்கூட ஆச்சர்யமில்லை.

இந்தச் சாதிப் பிடியிலிருந்து தமிழகம் மீண்டு வராதவரை நமக்கு விடிவே இல்லை. இந்த லட்சணத்தில் பெரிய புடுங்கிகள் போல ஒவ்வொரு சாதிக்கும் தலைவராக இருக்கும் அரசியல்வாதிகள் பேட்டி மயிரு வேறு கொடுக்கிறார்கள். இவனுகள் வளர்த்துவிட்டதுதானே இது. நாசமாப்போக.

பார் கவுன்சில் விழாவுக்காக கோவையில் கிரண்பேடி வருகிறார். பார் கவுன்சிலில் இரு பிரிவாம். இன்னொரு பிரிவினர் கிரண்பேடியை கெரோ செய்து உள்ளே விடாமல், வேறு வழியின்றி கிரண்பேடி காரில் ஏறி சென்றுவிட வேறொரு ஹோட்டல் ஹாலில் விழா நடக்கிறது.

இவர்கள் மாணவர்கள் அல்ல. சீனியர் வக்கீல்கள். இவங்களே இப்படி புத்திகெட்டு அடிச்சுகிட்டா, அப்புறம் அந்தச் சட்டம் படிக்கற மாணவர்கள் அதைவிட கேவலமா காட்டுமிராண்டிகளாத்தான் இருப்பாங்க.

என்ன எழுதினாலும் மனசு ஆறமறுக்கிறது. கல்லூரி முதல்வர் எவ வீட்டுக்குப் போய் உக்கார்ந்துட்டிருந்தான்னு தெரியல. எல்லாம் முடிஞ்சு வந்து என்னத்தப் புடுங்கப் போறான்னும் தெரியல. போலீஸ் அவரு அனுமதி குடுக்கணும்ன்னு நின்னுகிட்டிருந்ததாம். போங்கடா.....

ஒரு வகையில பெண்ணின் கற்பும் ,ஆணின் வீரமும் ஒரே மாதிரி பார்க்கப் படுது. ஒரு ஆணை ஆறேழு பேர் அடிக்கறது, பெண்ணை பப்ளிக்ல ரேப் பண்றதுக்குச் சமம். அப்பவும் இந்த மாதிரி பார்த்துட்டு இருந்தா ஒத்துக்குவாங்களா? இல்ல.. அவ மேலயும் தப்பு இருக்கு, கவர்ச்சியா ட்ரெஸ் போட்டிருந்தா.. டீஸ் பண்ணிப் பேசினா.. அதுனாலதான் கற்பழிச்சாங்கன்னு சொல்லுவாங்களா?

போலீஸையும், வேடிக்கை பார்த்துட்டிருந்த மாணவர்களையும் விடுங்க. இந்த ரெண்டு பேரையும் அடிச்ச கும்பல்ல இருந்தவங்க உடம்பிலயும், என் உடம்பிலயும் ஓடறது ஒரே நிறத்தாலான ரத்தம்ங்கறத நினைக்கும்போது..

சாகலாமான்னு தோணுது.

Thursday, November 13, 2008

எல்லாரும் குமுதம் வாங்குங்கப்பூ..!

மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே

இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.

வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”

கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:

“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”

*******************


வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:

‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?

பலத்த கைதட்டல்.

திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.

“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”

இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!

******************************

வாலி எழுதியதை கண்ணதாசன் எழுதியதாகச் சொல்லப்படும் போது வாலி சந்தோஷப்படலாம். வாலியை விட அனுபவம், திறமை எல்லாம் கண்ணதாசனுக்குண்டு. ஆனால் நீங்களோ, நானோ வலைப்பதிவில் எழுதியது வேறொரு முகம் தெரியாதவரின் பேரில் வரும்போது நமக்கு கோபம் வருவது இயற்கை. ஆனால் கோபப்படாமல் அமைதியாக, பெறுமையாகவும் சிலர் இருக்கிறார்கள். வலைப்பதிவாளர்கள் சிலருக்கு அவர்கள் படைப்பு வருவதே தெரிவதில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமா? எல்லாரும் வாராவாரம் குமுதம் வாங்குங்கள்.

****************************

இந்த வார குமுதத்தில் 40ம் பக்கம் கடைசி பெஞ்ச் கிறுக்கல்கள் என்ற தலைப்பில் நம்ம பாஸ் நர்சிம்மின் படைப்பு வந்திருக்கிறது!

இந்தப் படைப்பை அச்சில் ஏற்றுமுன் நர்சிம்மை அழைத்து ‘சிறு திருத்தங்கள் செய்திருக்கிறோம்.. படித்துக் காட்டவா’ என்று கேட்டிருக்கிறார்கள்.

நர்சிம் சொல்கிறார்: “வேண்டாங்க. கடைசில ஒரு நாலு வார்த்தை இருக்குமே. அதை மட்டும் படிங்க”

“நாலு வார்த்தைல எதுவும் எழுதலியே”

“இருக்கும் பாருங்க. ந-ர்-சி-ம்..”

“ஓஹோ! இருக்கு.. இருக்கு.. உங்க பேர் இருக்கு கவலைப் படாதீங்க..”

அவர் கவலை அவருக்கு. ஏற்கனவே நர்சிம் எழுதிய ஒரு படைப்பு - ப்ரூப் ரீடர் சரியாகப் பார்க்கவில்லையோ என்னமோ – நாலு எழுத்துக்குப் பேருக்குப் பதிலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக ஏழெழுத்துப் பேரில் வந்துவிட்டது. எப்படியோ இந்த முறை சரியாக வந்துவிட்டது!

வாழ்த்துக்கள் பாஸ்!

அழுகிற பிள்ளைக்குத்தான் பால். இன்னும் பல பிள்ளைகள் அழாமலே, தாங்கள் கிள்ளப்பட்டது தெரியாமலே இருக்கிறார்கள்.

**************************

அந்த ஏழெழுத்துப் பேரில் வரும் படைப்புகள் எல்லாமே எழுதியவர் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்காகவே வருகிறதோ என்ற எண்ணம் எனக்கும், என் சில நண்பர்களுக்கும் உண்டு. எத்தனை நாள் இப்படிக் காலம் தள்ளப் போகிறார் அவர் என்று தெரியவில்லை. இதை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நலம். அவர் எழுத்தாளராக இல்லாமல், இப்படி எடுத்தாளராக இருத்தல் அவருக்கும் ,அவர் கற்பனா சக்திக்கும் நல்லதல்ல.

ஊதுற சங்கை ஊதியாச்சு. கேட்கறவங்க கேட்டா சந்தோஷம்!

************

டிஸ்கி: ஸாரி நர்சிம். சில விஷயங்களை நீங்க பெருந்தன்மையா சொல்ல வேண்டாம்ன்னாலும், என்னால சொல்லாம இருக்க முடியல!

Wednesday, November 12, 2008

அவியல் 12.11.2008 (NO SEX!)

சமீபத்தில் ஒரு ‘காரியமா’க சுடுகாட்டுக்குப் போயிருந்தேன். அங்கே இருந்த வெட்டியானோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் சொன்னார். உண்மையா என்று தெரியவில்லை.

அதாவது திருமணமாகாத இளம்பெண்ணின் உடல் மார்புப் பகுதியில் எரிவதற்கு நேரமாகுமாம். ‘ஏகப்பட்ட ஆசைகளை நெஞ்சில் புதைத்து வைத்திருப்பார்கள், அதனால்’ என்றார்.

‘இதேமாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பகுதி இருக்கா?’ என்று கேட்டேன்.

“அப்படி அதிகமா கவனிச்சுப் பார்த்ததில்லைங்க. ஆனா கால் பகுதி சரியா வேகலைன்னா அது போலீஸ்காரங்க ஒடம்புன்னு அடிச்சு சொல்லலாம்” என்றார். (அதை அடிச்சு வேற சொல்லணுமா?) “ஏன்னா அவங்க நிறையபேரைக் காலாலயே ஒதைப்பாங்க சாரே. அதுனாலதான்” என்று விளக்கம் வேறு சொன்னார். நமக்கென்ன தெரியும்?

************************

சொந்தக்காரர் ஒருத்தர் வாரிசு சான்றிதழ்க்காக அரசு அலுவலகம் போயிருக்காரு. அங்க இருக்கற ஒரு லேடி க்ளார்க் சீல் வெச்சு சர்டிஃபிகேட் குடுக்கறதுக்கு முன்னாடி ‘ஒண்ணும் இல்லையா சார்’ன்னு கேட்டிருக்காங்க. இவரும் நூறு ரூபாய் குடுத்து வாங்கீட்டு வந்துட்டார்.

வீட்ல வந்து பார்த்தா தன்னோட பேரை இனிஷியல விட்டுட்டு எழுதியிருந்தாங்க. அடுத்த நாள் போய் திருத்தித் தரச் சொல்லி கேட்டப்ப ‘இன்னும் ஐம்பது ரூபா குடுங்க’ன்னு கேட்டாங்களாம்.

“என்னங்க.. நேத்துதானே நூறு ரூபாய் குடுத்தேன்”

“அது பேருக்கு. இது இனிஷியலுக்கு!”

நல்லவேளை.. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியா வசூல் பண்ணலன்னு நெனைச்சுட்டு, வேலையை முடிச்சுட்டு வந்துட்டாரு இவரு!

***********************

இந்தவார கேரளா நியூஸ்:-

கேரளாவின் ஓணம் பண்டிகையின் நான்கு நாட்களிலும் சேர்ந்து விற்பனையான பால், தயிரின் மொத்தத் தொகை: முப்பத்து ஐந்து லட்சம். ஆனால், அதே நான்கு நாட்களில் விற்பனையான சரக்கின் தொகை: ஆறு கோடி! (என்ட குருவாயூரப்பா...!)

கடந்த ஆண்டைவிட இது 75 லட்சம் அதிகமாம்!

இன்னோரு இண்ட்ரஸ்டிங் மேட்டர்: ஆறு கோடிக்கு சரக்கு விற்பனையான அந்த நான்கு நாட்கள்ல சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டினதா கைதானவங்க வெறும் நாலே பேர்தான்!

என்ன வெளையாடறீங்களா?

*********************

தங்க நகைக்கடைகள்ல தங்க நாணயம் வாங்கறப்ப அதுல அவங்கவங்க கடையோட முத்திரை, பேரை பெரிசா அடிச்சுதான் தர்றாங்க. வெறும் ப்ளெய்ன் காயினா தர்றதில்ல. அப்படி அவங்க கடை விளம்பரம் அடிச்சு தர்ற காய்ன் விலை குறைச்சா என்ன? நாம ஏன் காசு குடுத்து அவங்க கடைக்கு விளமபரம் பண்ணணும்?

யாரும் கேட்க மாட்டீங்களாப்பா?

*******************

சமீபத்துல என் ஃப்ரெண்டை ஃபோன்ல கூப்ட்டேன். அவரோட தம்பிதான் எடுத்தான்.

“ஏன்ப்பா... அண்ணன் இல்லையா? OUT OF STATIONஆ?” ன்னு கேட்டேன்.

“OUT OF STATION இல்ல. அண்ணன் INSIDE STATION” ன்னான்.


கேட்டதுக்கு ஏதோ குடும்பத் தகராறுல ஸ்டேஷன் கூப்ட்டு போனாங்களாம்.

அவ்ளோ சோகத்துலயும், தம்பிக்கு வார்த்தை விளையாட்டு!

*******************

‘கண்ணு எரியுது’ன்னு டாகடர்கிட்ட போய்ட்டு வந்தார் என் கூட வேலை செய்யற நண்பர்.

“இப்ப எப்படி இருக்கு?” ன்னு கேட்டேன்.

“வயிறு எரியுது... சாதாரண க்ளினிக் வெச்சிருந்தார் அந்த கண் டாக்டர். பெரிய ஹாஸ்பிடலே கட்டீட்டாரு”

கண்ணு வெக்காதீங்க சார்!

*************************

உங்களுக்கு ஏன் வாலியை ரொம்பப் புடிக்கும்ன்னு கேக்கறாங்க. என்னமோ தெரியல. தலைமுறைகளைத் தாண்டிய அவரோட அனுபவம், சந்தத்துக்கு தகுந்த மாதிரி வார்த்தைகளை உட்கார வைக்கற லாவகம்.

ரெண்டு சம்பவம் சொல்றேன். ரெண்டுமே ஷங்கர் சம்பந்தப்பட்டது.

ஜெண்டில்மேன் படத்துக்கு பாடல்கள் எல்லாமே ‘வாலி’ன்னு முடிவாய்டுச்சு. படத்தோட ஆரம்ப விளம்பரங்கள்ல வாலி பேர் மட்டும்தான் இருக்கும். ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ பாடல் எழுதிக் குடுக்கறாரு. ஷங்கருக்கு அந்த வரிகள் பிடிக்கல.

“என்ன சார்.. சிக்கு புக்கு சிக்கு புக்கு-ன்னு ஒரு பல்லவி? என்னமோ மாதிரி இருக்கு..” - தயக்கமா சொல்றாரு ஷங்கர். முதல் படம் அல்லவா. பயம்.

“யோவ்.. நான் சொல்றேன். போடுய்யா. நிச்சயமா ஹிட் ஆகும்’-ங்கறாரு வாலி. ஷங்கர் ஒத்துக்கல. வேற பல்லவி கேட்கறாரு. உடனே கடகடன்னு எழுதிக் குடுக்கற திறமை இருந்தாலும், ஏனோ ‘சரி.. காலைல 10 மணிக்குத்தானே ரெக்கார்டிங்? எழுதிட்டு நேரா ரெக்கார்டிங் தியேட்டர் வர்றேன்’ன்னு சொல்லீட்டுப் போயிடறாரு.

அடுத்தநாள் ரெக்கார்டிங் தியேட்டர் போனாரு. உள்ள ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பல்லவியைப் பாடி ரிகர்சல் நடந்துகிட்டிருந்தது. ஷங்கர்கிட்ட கேட்கறாரு.

“ஏ.ஆர்.ரகுமான்-லேர்ந்து எல்லாருமே இந்த வரி ரொம்ப கேட்சியா இருக்குன்னு ஃபீல் பண்றாங்க. அதுனால இதையே வெச்சுக்கலாம்ன்னு முடிவாய்டுச்சு”ங்கறாரு ஷங்கர். வாலி கோபம் வந்து பாக்கெட்ல இருந்த வேற பல்லவிகளை எடுத்துக் கிழிச்சுப் போட்டு, “நான் சொன்னப்ப ஒனக்கு இது தெரியலையா? வேற பாட்டுகளுக்கு என்கிட்ட வராதே’ன்னு போய்ட்டாராம்.

‘சிக்கு புக்கு ரயிலே’ பாட்டுதான் விசிட்டிங் கார்டா இருந்து படத்தைக் கொண்டு போய்ச் சேர்த்துச்சு!


ங்கர் ஒரு நாட்டுக்கு ஷூட்டிங்க்குப் போறாரு. வெளிநாடு. ஏர்ப்போர்ட்ல பலத்த செக்கிங். இவரை பல கேள்விகள் கேட்கறாங்க. ‘டைரக்டர்’ன்னு சொல்றாரு. அப்ப ‘காதலன்’ வந்த சமயம். ஆனா அவங்களைப் புரிய வைக்க முடியல. எதேச்சையா ஒரு தமிழ் அதிகாரி இவரை அடையாளம் கண்டுகிட்டு அந்த அதிகாரிக்கு விளக்கம் குடுக்கறாரு. ‘முக்காலா முக்காப்லா”ன்னு பாடிக் காட்டறாரு.

“ஓ! தட் ஃபிலிம் டைரக்டர்? ஓக்கே..ஓக்கே..’ன்னு சகஜமா பேசி கைகுடுத்து அனுப்பினாராம்.

முக்காலா முக்காப்லா – காதலன்ல வாலி எழுதின ஒரே பாட்டு.
எங்க எந்த வார்த்தையை வைக்கணும்ன்னு தெரிஞ்சவர் அவர்.

‘மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ என்று காதலுக்கு கவிதையாகவும் எழுதுவார்.

‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ ‘ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்’ என்று கசிந்துருகுவார்.

‘தோஸ்த்து படா தோஸ்த்து.. தோஸ்த்துக்கில்லை வாஸ்த்து” என்று நட்புக்காகக் கலக்குவார்.

அந்த VERSATILITYதான் வாலி!

*****************

உனக்கு சொரணை
இருக்கிறதா
என்று கேட்டுவிட்டான்.
இருக்கிறது என்று
சொல்ல முடியவில்லை.
எல்லாவற்றையும் பார்த்து
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டிருப்பதால்.
-ந.முத்து
-'இருக்கு' தொகுப்பிலிருந்து.

(முத்துக்குமார் அல்ல)

Tuesday, November 11, 2008

செக்ஸ்தான் காரணமா?

அந்தப்பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஒரு மகள், ஒரு மகன். கணவன் திருப்பூரிலேயே ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்தவாரத்தில் ஒருநாள் மகளையும், மகனையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தனக்குப் பிடித்தமான வேறொருவனோடு - அவனும் மணமானவன் - போய்விட்டாள் அவள்.

“குழந்தைக ரெண்டு பேரையும் தம்பி வீட்டுல விட்டிருக்கேன்ணா. தம்பி சம்சாரம் காலைல சாப்பாடு செஞ்சு வெச்சுட்டு வேலைக்குப் போகணும்னு போய்ட்டா. குழந்தைகளை ஸ்கூலுக்குக் கிளப்பறதுக்குள்ள ரொம்ப சிரமப்பட்டுட்டேன்ணா. சின்னவன் யூனிஃபார்மே போடமாட்டீங்கறான்” என்றான். 'பொண்டாட்டியைத் தேடலியா' என்றதற்கு.. “ஸ்டேஷன்ல கம்ப்ளெண்ட் பண்ணியாச்சு. அவ எனக்கு வேணாம். ஆனா என்னமாச்சும் ஆய்டுச்சுன்னா நான் பொறுப்பில்லன்னு தெரியறதுக்காக ஸ்டேஷன் போனேன்”

“குழந்தைகளை உங்க ஊர்ல விடலாமே”

“எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே வயசாய்டுச்சு. கண்ணும் தெரியறதில்ல. அதுமில்லாம அவங்க ஊர்ல இருந்து வந்து இங்க இருக்க ஒத்துக்கவே மாட்டாங்க. நீங்க யோசிச்சு நான் என்ன பண்றதுன்னு சொல்லுங்கண்ணா” என்று அந்தக் கணவன் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனான். குழந்தைகளை ஹாஸ்டலில் தங்கவைக்கலாம் என்று விசாரித்ததில் சிறியவன் யூ.கே.ஜி. எங்கும் சேர்க்க மறுக்கிறார்கள். இப்போது மணி இரவு 12. இதுவரை என்னிடம் விடையில்லை.

திருப்பூர் என்றாலே இந்தமாதிரி சமாச்சாரங்கள் சர்வசாதாரணம் என்பது போலப் பேசுகிறார்கள் போலிஸ் ஸ்டேஷனில். இல்லை மற்ற ஊர்களிலும் இதே நிலைதானா எனத் தெரியவில்லை.

இங்கே வேலைக்கு வரும் பெண்களுக்கு ஆண் நட்பு எளிதில் கிடைத்துவிடுகிறது. படிப்பறிவு குறைந்த, வெளியுலகை அதிகம் பாராத பெண்கள் வெகு சுலபமாக ஆண்களின் வலைக்குள் விழுந்துவிடுகின்றனர். சொல்வதற்கும், கேட்பதற்கும் கஷ்டமாக இருந்தாலும் இன்னொரு முகத்தில் அறைகிற உண்மை, சில பெண்களும் சும்மாயிராமல் ஆண்களை சீண்டிவிடுவதும் நடக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் புகார்களை அவர்கள் எங்கே சொல்வார்கள்? எங்கள் நிறுவனம் உட்பட, பல நிறுவனங்களில் இதற்காக ANTI HARASSMENT COMMITTEE இருக்கிறது. செயல் ரீதியாகவோ (டிஃபன் பாக்ஸைப் பிடுங்குவது, தகாத இடங்களில் தொடுவது), சொல் ரீதியாகவோ (கமெண்ட் அடிப்பது..) வேறு வகையிலோ (விசில், சைகை) பெண்களை துன்புறுத்தும் ஆண்கள் குறித்து, அவர்கள் அந்தக் கமிட்டியில் புகார் அளிக்கலாம். அந்தக் குழுவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பெண்களும், தொழிலாளர்களைச் சார்ந்த பெண்களும் இடம் பெற்றிருப்பார்கள். அது மட்டுமின்றி, மாதம் ஒரு முறை மீட்டிங் நடத்தி நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் கலந்து பேசும்போதும் குறையிருப்பின் கூறலாம்.

ஆனால் சில உண்மைகள் வேறு மாதிரி முகத்தில் அறைகிறது.

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. ஒரு பிரிவில் பணி புரியும் 20 வயதுள்ள ஒரு பெண் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து ஒரு பெண்மணியின் பெயரைச் சொல்லி ‘அந்தம்மா இன்னைக்கு வேலைக்கு வந்திருக்காங்களான்னு பாருங்க சார்’ என்றாள். பார்த்தேன். இல்லை. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. காரணம் அந்தப் பெண்மணி எங்கள் நிர்வாகத்தின் பேருந்தில்தான் வருகிறார். விசாரித்ததில் அன்றைக்கும் பேருந்தில் ஏறியிருக்கிறார். ஆனால் உள்ளே வரவில்லை. மறுபடி அந்தப் பெண்ணை அழைத்துக் கேட்டபோது வேறொரு பிரிவில் பணிபுரியும் ஒரு ஆளின் பெயரைச் சொல்லி ‘அவரு இருக்காரான்னு பாருங்க’ என்றாள். இல்லை..

“அவரு தினமும் கம்பெனிக்கு முந்தின ஸ்டாப்ல நின்னுகிட்டு இந்தம்மாவை இறங்கச் சொல்லிகிட்டிருக்காரு. இன்னைக்கு இறங்கிடுச்சு. ரெண்டு பேருமா காங்கயம், சிவன்மலைன்னு சுத்தறாங்க’ என்றாள். கொடுமை என்னவென்றால் இருவரும் திருமணமானவர்கள். (தனித்தனியாக!)

இவள் பெயர் வரக்கூடாது என்று அடுத்தநாள் தனியாக விசாரணை நடத்தி, இருவரையும் பணியிலிருந்து நிறுத்தி விடுவது உத்தமம் என முடிவாகும் தறுவாயில் சம்பந்தப்பட்ட பெண்மணி என்னிடம் தனியாக எனக்கு தகவல் சொன்ன அந்த 20 வயதுப் பெண் பெயரைச் சொல்லி, ‘அவதான் வத்தி வெச்சிருப்பா. சிறுக்கி நாயி’ என்று திட்ட ஆரம்பித்தாள். எனக்கு கடும் கோபமாக வரவே ‘ஏம்மா, நீ கம்பெனி பஸ்ல வர்ற. இங்கெ வரேன்னு வேறெங்காவது போய் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்காளுக இங்க வந்துதானே கேள்வி கேப்பாங்க. நீ பஸ்ல வர்றது தெரியாதா எங்களுக்கு’ என்று திட்டினேன். பிறகு பேசிக்கொண்டே இருந்ததில் அவள் சொன்னாள்.. “அவன்கூட நான் ரெண்டு மூணு தபா போயிருக்கேன். இவளும்தான் கூட வருவா. கொஞ்ச நாளா என்னைத் தனியா கூட்டீட்டுப் போ’ன்னு இவன்கிட்ட கேட்டிருக்கா. இந்தாளு அவளை சும்மா துணைக்குத்தான் கூட்டீட்டுப் போவான். அவளைத் தனியா கூட்டீட்டுப் போகலைன்னு கோவத்துல வத்தி வெச்சுட்டா” என்றாள்.

பெண்கள் சிலரை விட்டு விசாரித்ததில் அது உண்மைதான் எனத் தெரியவந்தது. அந்தச் சின்னப் பெண் சொல்லியிருக்கிறாள்... “என்னையும் கூட்டீட்டுப் போவாங்க. சிவன்மலைல என்னைத் தனியா உட்கார வெச்சுட்டு அவங்க ரெண்டு பேரும் எங்காவது போய்ட்டு வருவாங்க. அதே மாதிரி சினிமா கூட்டீட்டுப் போகும்போது என்னைத் தள்ளி உட்காரச் சொல்லுவாங்க”


அந்தப் பெண்ணுக்கு முறையாக பெண்களை விட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டாள்.

இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

“செக்ஸ்தான்” என்கிறது ஒரு தரப்பு. தங்கள் வீட்டில் கணவனோ, மனைவியோ தராத சுகம் வேறு இடத்திலிருந்து கிடைக்கும்போது மனம் தாவுகிறது என்கிறார்கள்.

“அப்படியில்லை. கணவனால் கிடைக்காத ஆறுதலை வேறொருத்தன் தரும்போது அதை நட்பாக பாவிக்கத் தெரியாமல் அத்துமீறும்போதுதான் இது மாதிரியெல்லாம் நிகழ்கிறது” என்கிற சிலர் சொல்கிறார்கள்... “ரொம்ப கீழ்மட்டக் குடும்பங்கள்ல இதுமாதிரி அவன் பொண்டாட்டி கூட இவன், இவ புருஷன் கூட அவ – சமாச்சாரங்கள் நடந்தா அவங்க இதைக் கண்டுக்கறதே இல்ல. அதே மாதிரிதான் ரொம்ப மேல்மட்ட குடும்பங்கள்லயும். அதிகமா பாதிக்கப்படறது மிடில்க்ளால்-ங்கற நடுத்தரக் குடும்பங்கள்தான்.”

“ரெண்டு பேருக்கும் ஒத்துக்கல. அவங்களுக்குப் பிடிச்சவங்களோட போக வேண்டியதுதானே. எதுக்கு சமூகத்துக்காகன்னு பொய் வாழ்க்கை வாழணும்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

என்ன காரணம்? எது நியாயம்? என்ன தீர்வு?

ஆரோக்யமான ஒரு விவாதத்தை பின்னூட்டத்தில் நிகழ்த்துங்களேன்...

Monday, November 10, 2008

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்

விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.

ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.

சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.

அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்

வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.

அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.


சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.


இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.


வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.

குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.

அதிகாரிகளே...
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.


மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது.


சபாஷ் ராஜ்மோகன்.

அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.

விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.


குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ


பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?

என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..

காவிரிப்பிரச்னை
காவிரிப்ப்ரச்னை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு.


எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன். இந்த நேரத்தில் நமது சகபதிவர் கிழஞ்செழியன் எத்தனையோ வருடங்களுக்கு முன் ‘அதானே’ என்ற தலைப்பில் ஒரு நாளிதழில் தினமும் எழுதி வந்துகொண்டிருந்த குட்டிக்கவிதைகள் சில...என் காதல் கைகூடுமா
வேலை கிடைக்குமா என்றெல்லாம்
உள்ளூர் ஜோசியர் மூலம்
தகவல் சொல்வதற்காகவே
அகண்ட வானில்
சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களே
உங்கள் மற்ற வேலைகள்தான்
என்னென்ன?

*
தருமம் குறைந்தால்
தண்டிக்கவென்றே
தொடர்ந்து
அலை ஒற்றர்களை அனுப்பி
வேவு பார்த்துக்கொண்டேயிருக்கிறது
கடல் கடவுள்

(ஒரு ஆச்சர்யமான உண்மை:- இந்தக்கவிதை சுனாமி வருவதற்கு முன்பே எழுதியது!)
*

எங்கள் டிவியில்
எண்பது சேனல்
சாட்டலைட் கொடுக்கும்
தகவல் தொடர்பில்
உலக முகங்கள் பரிச்சயமாச்சு
உறவினர் முகங்கள் மறந்துபோச்சு

*
கடல் கரையில்
வாங்கிய சுண்டலில்
உப்பே இல்லை

*
கல்லுக்குள் இருக்கும்
தேரைக்கும் உணவு வைத்தான்
சரீ
கல்லுக்குள் கொண்டுபோய்
தேரையை ஏன் வைத்தான்?

*
புத்தரும் மகாவீரரும் கூட‌
நடுராத்திரியில்
சொல்லாமல் கொள்ளாமல்தான்
வெளியேற வேண்டியிருந்தது
எவ்வளவு பெரிய ஆளுக்கும்
கஷ்டம்தான் மனைவியை
கன்வின்ஸ் செய்வது

*
என் தெருவில் மெஸ் வைத்தாள்
கிட்டுமாமி
முதலிரவில் புருஷன் செத்த
கிட்டுமாமி
தோல்சிவந்த, உடல் திமிர்ந்த‌
கிட்டுமாமி
எவனெவனோ முயற்சி செய்தும்
புருஷனுக்காய் பொட்டுவைக்கும்
கிட்டுமாமி எவனுக்கும்
கிட்டாமாமி

*
பன்பட்டர் ஜாமும் பாலுகடை டீஒன்றும்
ஃபில்டர்கிங் கோல்ட்ஃப்ளேக்கும் நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகனே மேன்ஷன்லைஃப் கொல்லுதே நான்செட்டிலாகப் பெண்பார்த்துத் தா

*
நேரம் காலம் கிடையாது
எப்போ வருமோ தெரியாது
என்றாலும்
மழையின் வருகையை
மயில் அறியும்
மெட்ரோ வாட்டர் வருவது
என்
மனைவிக்குத் தெரியும்

*
திரியும் வண்டெல்லாம்
திருட்டு வண்டுகள்தான்
அதில்
சில வண்டுகள் மட்டும் ஏன்
சிறைப்படுகின்றன

கொட்டைக்குள் வண்டுபோல்
குடைகிறது கேள்வி

*
மொத்தமாய் அமைந்தால்
சிறகு
ஒத்தையாய்க் கிடந்தால்
இறகு
முன்னது பறக்க உதவும்
பின்னதால் காது குடையலாம்

*
அவளை
திங்கள் கிழமை பார்த்தான்
செவ்வாய்க் கிழமை கவனித்தான்
புதன்கிழமை சபலப்பட்டான்
வியாழக்கிழமை தீர்மானித்தான்
வெள்ளிக்கிழமை கடிதம் கொடுத்தான்
சனிக்கிழமை அவளுடைய அண்ணனிடம்
அடிவாங்கி அவமானப்பட்டான்

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை...

*
எத்தனை ஓட்டைகள் இருந்தாலும்
புல்லாங்குழலிலிருந்து
ஒழுகித் தீர்ந்துவிடுவதில்லை
இசை

(அபாரம் கவிஞரே..!)
*

'யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்"

''யாரிங்கே வரப் போகிறார்கள்?"
இதே வசனம் கேட்டு
நுரைப்புன்னகை பூக்கிறது
நூறுகோடி நூறுகோடி
காதலரைக் கண்ட கடல்!