Showing posts with label படைப்புத் திருடர்கள். Show all posts
Showing posts with label படைப்புத் திருடர்கள். Show all posts

Thursday, November 13, 2008

எல்லாரும் குமுதம் வாங்குங்கப்பூ..!

மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே

இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.

வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”

கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:

“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”

*******************


வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:

‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?

பலத்த கைதட்டல்.

திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.

“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”

இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!

******************************

வாலி எழுதியதை கண்ணதாசன் எழுதியதாகச் சொல்லப்படும் போது வாலி சந்தோஷப்படலாம். வாலியை விட அனுபவம், திறமை எல்லாம் கண்ணதாசனுக்குண்டு. ஆனால் நீங்களோ, நானோ வலைப்பதிவில் எழுதியது வேறொரு முகம் தெரியாதவரின் பேரில் வரும்போது நமக்கு கோபம் வருவது இயற்கை. ஆனால் கோபப்படாமல் அமைதியாக, பெறுமையாகவும் சிலர் இருக்கிறார்கள். வலைப்பதிவாளர்கள் சிலருக்கு அவர்கள் படைப்பு வருவதே தெரிவதில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமா? எல்லாரும் வாராவாரம் குமுதம் வாங்குங்கள்.

****************************

இந்த வார குமுதத்தில் 40ம் பக்கம் கடைசி பெஞ்ச் கிறுக்கல்கள் என்ற தலைப்பில் நம்ம பாஸ் நர்சிம்மின் படைப்பு வந்திருக்கிறது!

இந்தப் படைப்பை அச்சில் ஏற்றுமுன் நர்சிம்மை அழைத்து ‘சிறு திருத்தங்கள் செய்திருக்கிறோம்.. படித்துக் காட்டவா’ என்று கேட்டிருக்கிறார்கள்.

நர்சிம் சொல்கிறார்: “வேண்டாங்க. கடைசில ஒரு நாலு வார்த்தை இருக்குமே. அதை மட்டும் படிங்க”

“நாலு வார்த்தைல எதுவும் எழுதலியே”

“இருக்கும் பாருங்க. ந-ர்-சி-ம்..”

“ஓஹோ! இருக்கு.. இருக்கு.. உங்க பேர் இருக்கு கவலைப் படாதீங்க..”

அவர் கவலை அவருக்கு. ஏற்கனவே நர்சிம் எழுதிய ஒரு படைப்பு - ப்ரூப் ரீடர் சரியாகப் பார்க்கவில்லையோ என்னமோ – நாலு எழுத்துக்குப் பேருக்குப் பதிலாக ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக ஏழெழுத்துப் பேரில் வந்துவிட்டது. எப்படியோ இந்த முறை சரியாக வந்துவிட்டது!

வாழ்த்துக்கள் பாஸ்!

அழுகிற பிள்ளைக்குத்தான் பால். இன்னும் பல பிள்ளைகள் அழாமலே, தாங்கள் கிள்ளப்பட்டது தெரியாமலே இருக்கிறார்கள்.

**************************

அந்த ஏழெழுத்துப் பேரில் வரும் படைப்புகள் எல்லாமே எழுதியவர் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்காகவே வருகிறதோ என்ற எண்ணம் எனக்கும், என் சில நண்பர்களுக்கும் உண்டு. எத்தனை நாள் இப்படிக் காலம் தள்ளப் போகிறார் அவர் என்று தெரியவில்லை. இதை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நலம். அவர் எழுத்தாளராக இல்லாமல், இப்படி எடுத்தாளராக இருத்தல் அவருக்கும் ,அவர் கற்பனா சக்திக்கும் நல்லதல்ல.

ஊதுற சங்கை ஊதியாச்சு. கேட்கறவங்க கேட்டா சந்தோஷம்!

************

டிஸ்கி: ஸாரி நர்சிம். சில விஷயங்களை நீங்க பெருந்தன்மையா சொல்ல வேண்டாம்ன்னாலும், என்னால சொல்லாம இருக்க முடியல!