“ஏங்க.... சாம்பார்த் தூள் ரெண்டு பாக்கெட் எடுத்து கூடைல போடுங்க”
கணவன் இரண்டு பாக்கெட் சாம்பார் தூளை எடுத்துப் போடுகிறார்.
“என்னங்க... ஒண்ணு ஆச்சி மசாலா, இன்னொண்ணு சக்தி மசாலா? ஒரே ப்ராண்ட் எடுங்களேன்..”
“ஆச்சி மசாலா வாங்கலைன்னா ஆச்சி கோச்சுப்பாங்கள்ல?”
“அப்ப சக்தி மசாலா?”
கணவன் வழிந்தபடி சொன்னார்: “ஹி..ஹி.. அது தமன்னாவுக்காக..”
------------------
நண்பன் கூப்பிட்டான்: “டேய்... சரக்கு வாங்கலாம்னு டாஸ்மாக் போனேண்டா.. சரியான கூட்டம்..”
“டாஸ்மாக்ல கூடறதுன்னா அது தப்பான கூட்டம்டா.. அதெப்படி சரியான கூட்டமாகும்?”
ஃபோன் என்பதால் அடிக்க வரவில்லை. இந்த சரியான என்பதை எங்கெங்கே பயன்படுத்துகிறோம் என்று யோசித்தேன். சரியான கோவம் வந்தது.
“அவளைப் பார்த்தன்னு வையி... சரியான ஃபிகர்டா!”
“மேனேஜர்கிட்ட சொன்னேன். கேட்கவே இல்ல. சரியான முசுடு அந்தாளு..”
“உன்கிட்ட போய்ச் சொன்னேன்பாரு.. சரியான ஆளுடா நீ!” - இதே வேறு அர்த்தத்தில்... “உன்கிட்ட சொன்னதுனால ஆச்சு.. நீதாண்டா சரியான ஆளு”
இதே போல சம்பந்தமே இல்லாமல் நடுவே சேர்த்திக் கொள்கிற இன்னொரு வார்த்தை - பயங்கரம்!
“ப்பா.. பயங்கரக் கூட்டம்டா பஸ் ஸ்டாண்ட்ல”
“நீ பயங்கரமான ஆளுடா..!”
“சாம்பார் பயங்கர காரமா இருந்துச்சு” இதே வேறு விதமாய்.. “சாம்பார் பயங்கர டேஸ்ட்மா!”
இப்படி வார்த்தைகளை சம்பந்தமில்லாம பயன்படுத்தற யோசிச்சா சரியான கோவம் வருகிறது என்றேனா.. இப்ப பயங்கரமா கோவம் வருது!
----------------------------------
கோ பாடல்கள். சிடி கவர் பின்னால் பாடல்கள் / பாடியவர் / எழுதியவர்களைக் குறிப்பிட்டிருக்கும் ஐடியாவுக்கு ஒரு பூச்செண்டு!
கார்க்கி சொல்லியிருக்கற மாதிரி யுவனை முந்துகிறார் ஹாரிஸ். ஒரு கன்ஸிஸ்டென்ஸி இருக்கிறது. எனக்கு அமளிதுமளி அவ்வளவு பிடித்தது. நடுநடுவே வரும் ‘யய் யவ்டதை யவ்டதை யய்யே’ சூப்பர்! (அதுக்கென்ன பேரு... கொன்னக்கோல்.. சரிதானே?)
அப்பறம் அகநக பாடலில் பெண்குரல் ராப்பும் கவர்கிறது! என்னமோ ஏதோ பாடல் - காதை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் ஹாரிஸ் பாட்டு என்று!
சரி.. ஒரு புகார்:
எங்கேயும் காதல், சிறுத்தை, ஆடுகளம்.. இப்ப இதுன்னு வர வர யாரும் லிரிக் புக் அட்டாச் பண்றதில்லை.. ஏற்கனவே ஒரிஜினல் சிடி வாங்கறவங்க கம்மி.. இப்படி பண்ணா சரியில்லை.. சொல்லீட்டேன் ஆமா..
----------------------------------------

நண்பர் பகிர்ந்துகொண்ட இந்தப் போஸ்டரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. +2, 10வது மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி என்று மாணவர்களிடையே அரசியலைக் கலக்குவது வருத்தத்துக்குரிய விஷயம்.
----------------------
லொன்வபோ சொட்சொபி.
திட்டறேன்னு நெனைக்காதீங்க.. முடிஞ்சு போன சௌத் ஆஃப்ரிகா சீரிஸ்ல பிரகாசமான பௌலர். முதல் ஒன் டேல சச்சின் விக்கெட்டை எடுத்தவர்கிட்ட “சச்சின் விக்கெட்! எப்படி ஃபீல் பண்றீங்க?”ன்னு கேட்டிருக்காங்க. மனுஷன் வெவரம். “ஒண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணி பேசி அவர் கோவத்துக்கு ஆளாக விரும்பல”ன்னு சிரிச்சுட்டே சொன்னாராம். அப்பறம் ஒலங்காவுக்கு ஆன கதிதான்னு நெனைச்சிருப்பாரு!
ஓகே.. இன்னைக்கு மேட்ச்ல தோத்தாலும் நல்ல ரன்ரேட். அவங்க 46 ஓவர்ல 250. 5.43 RR. நாம 40.2 ஓவர்ல 234. RR - 5.80. என்ன விக்கெட் இல்லாமப் போச்சு, யூசுஃபோட ஃபார்ம் நல்ல விஷயம். பார்த்திவ், ரோகித்ன்னு இன்னைக்கு ஓபனிங் பண்ணவங்களுக்கு பதிலா உலகக் கோப்பைல காம்பீர், சேவக்ன்னு இறங்கும்போது பொறி பறக்காது? மிடில் ஆர்டர்ல ரெய்னாவோட அவுட் ஆஃப் ஃபார்ம்தான் கொஞ்சம் பயமுறுத்துது. டவுன் ஆர்டர்ல - லான்ஸ் க்ளூன்ஸ்னர் ஒருக்கா செஞ்ச மேஜிக்கை இந்த உலகக் கோப்பைல செய்ய யூசுஃப் பதான் இருக்காரு. போதாததுக்கு ஹர்பஜன் / ஜாகீர் நல்லா பார்ட்னர்ஷிப் தர்றாங்க.. அப்பறமென்ன?
Get Ready Folks!
---------------------------------
என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்ப்பார்க்கிறாய்
காதலையா?
-சுகிர்தராணி
.