Wednesday, January 11, 2012

பரிசல் டிக்‌ஷ்னரி


இணையம் – மனைவியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள கணவர்கள் தஞ்சமடையும் இடம்

ஃபேஸ்புக்:பெண்கள் அக்கவுண்டில் ‘ஃபோட்டோஸ்’ பகுதியை ஆண்கள்
ஆர்வமாகப் பார்க்கும் இடம்

ட்விட்டர் – பஸ் மூடியதால் பலர் தஞ்சமடையும் இடம்

கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து

பதிவர் – தனது அனுபவங்களை இணையத்தில் கன்னா பின்னாவென எழுதுபவர்

எழுத்தாளர் – அதையே அச்சில் புத்தகமாகப் போடுபவர்

ச்சாட் – ஆஃப் த ரெகார்ட் போட்டு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் இடம்

மெய்ல்: பெர்சனல் அக்கவுண்டிலேயே அஃபீஷியலாக ஒன்றும் ரொம்பவே பெர்சனலாக ஒன்றும் வைத்துக் கொள்வது

காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது

குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.

சினிமா விமர்சனம்: ஏதாவது பஞ்ச் லைனில் முடிவது

பின்னூட்டப் பெட்டி: அருமை , அட்டகாசம், ---------- டச் என்றுநண்பர்கள் எழுதும் இடம்

எதிரிகள்: மேற்கண்டவாறு எழுதாதவர்கள்

பொறாமை: அடுத்தவர் நம்மீது நல்ல விமர்சனம் வைக்கும்போது,
அவர்களைப் பற்றி நாம் சொல்ல பயன்படுத்துவது

காலை 9 மணி: அலுவலர்கள் வருவார்கள் என்று முதலாளிகள் எதிர்பார்க்கும் நேரம்

10 மணி: முதலாளி வந்துவிடுவாரோ என்று அலுவலர்கள் வேலை செய்வதாய் பாவ்லா காட்ட ஆரம்பிக்கும் நேரம்

11 மணி: கேண்டீன் டைம்.

கேண்டீன் - ஸ்டாஃப்ஸ் மீட்டிங் நடக்குமிடம்

கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப்ஸ் டீ/காஃபி சாப்பிடுமிடம்

பொங்கல்: கணவர்களுக்கு தினமும் கிடைப்பது

பூரிக்கட்டை: பூரி செய்யவும் இதை உபயோகப்படுத்தலாம் என்று மனைவியர் அறிந்து கொண்ட வஸ்து

ஜனாதிபதி - இந்தியாவின் முதல் குடிமகன்

கேப்டன் - தமிழகத்தின் முதல் குடிமகன்

வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வது

சூப்பர் ஹிட் - வெளியான இரண்டாம் மாதம் டிவியில் வரும் படம்

சீரியல் - பெண்களைத் திட்டிக் கொண்டே ஆண்கள் பார்ப்பது

க்ரிக்கெட் - ஆண்கள் பார்ப்பதாலேயே பெண்கள் வெறுப்பது

வேஷ்டி - சத்தியமூர்த்தி பவனைச் சுற்றியுள்ள கடைகளில் அதிகம் விற்பனையாவது

பஞ்சாயத்து – தவறு செய்தவன் பணம் கொடுக்கும் இடம்

போலிஸ் ஸ்டேஷன்: புகார் கொடுத்தவன் / தவறு செய்தவன் இருவரும்
பணம் கொடுக்கும் இடம்

ஹார்ன்: வாகன ஓட்டிகள் தேவையில்லாத போதெல்லாம் உபயோகிப்பது

ப்ரேக்: வாகன ஓட்டிகள் தேவையான போதெல்லாம் உபயோகிக்க மறப்பது.


-இப்போதைக்கு இவ்வளவுதான். தொடரலாம். சான்ஸ் இருக்கிறது..


.

Tuesday, January 10, 2012

நம்பிக்கை - சிறுகதை


பண்புடன் ஜனவரி இதழில் வெளியாகியிருக்கிற எனது சிறுகதை:

----------


ந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி ஷர்ட் அணிந்திருந்தார். 40+ வயது இருக்கக்கூடும். வலது கையில் ஒரு வாட்ச். கழுத்திலோ, கையிலோ ஆபரணங்கள் ஏதும் இருக்கவில்லை. நிமிடத்திற்கொரு முறை மூக்கைச் சுருக்கி சுவாசித்துக் கொண்டிருந்தார். அது அவரது மேனரிசமாக இருக்க வேண்டும்.

அவரது டேபிளின் இடதுபுறமிருந்த வித்தியாசமான கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் அமைதியில் அதன் டிக்-டிக் துல்லியமாகக் கேட்டது.

“ஸோ.. நீங்க சொல்ல வர்றது யாரும் உங்களை நம்ப மாட்டீங்கறாங்க. இல்லையா?”

“எஸ் டாக்டர்” என்ற அஷோக் ஜீன்ஸிற்குள் தனது ஆலன் சோலியை செலுத்தியிருந்தான். 25 வயது. பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரியும் திறமையான இளைஞன். ஒரே அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா வங்கி அதிகாரி.

”எப்போலேர்ந்து உங்களுக்கு இப்படி தோண ஆரம்பிச்சது?”

“ஒரு பத்து பதினஞ்சு நாளாவே இப்படித்தான் டாக்டர்”

“சரி.. இப்ப நான் சில கேள்விகள் கேட்கறேன். பதில் சொல்லுங்க”

அஷோக் டாக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து ‘கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்?” எனக் கேட்டான். டாக்டர் அவர் டேபிள் பக்கவாட்டில் இருந்த காலி டம்ளரை நிமிர்த்தி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை நிரப்பி அவனிடம் நீட்டினார்.

வாங்கிக் குடித்ததும் ‘கேளுங்க டாக்டர்’ என்றான்.

“எங்க வேலை செய்யறீங்க?”

சொன்னான்.

“உங்க பிறந்த தேதி என்ன?”

சொன்னான்.

“பிறந்த கிழமை?”

தாமதிக்காமல் உடனே சொன்னான்.

“உங்க அப்பா அம்மா திருமண நாள் ஞாபகமிருக்கா”

சொன்னான்.

“உங்க அக்கா திருமண நாள்?”

சொன்னான்.

“வெரிகுட். ஞாபக சக்தியெல்லாம் நல்லாவே இருக்கு. நீங்க நார்மலா இருக்கீங்க.. என்ற டாக்டர் தொடர்ந்தார்: “எந்த விஷயத்துல – யார் - உங்கள நம்பமாட்டீங்கறாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்க அஷோக்?”

“எந்த விஷயத்துலயும் யாரும் என்னை நம்பமாட்டீங்கறாங்க டாக்டர்”

“ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”

அஷோக் ஏதோ ஒரு மூலையை சில நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் அமைதியாக அவனையே பார்த்தவாறு இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.


-------------------

மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்: பண்புடன்


.


Friday, January 6, 2012

நல்ல விஷயத்தை நாலு பேர்கிட்ட சொன்னா தப்பில்ல...

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம்தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு.கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.


2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.

3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


கட்டுரை : சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 7 முதல் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும். யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.


2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ ) இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.


4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.


5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.


7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.


8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.


சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம். வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.

--

குறிப்பு: எழுத்து என்னுடையதல்ல. நண்பர் மெயிலில் பகிர்ந்ததை கட் பேஸ்ட் செய்திருக்கிறேன். நன்றி :)