Friday, May 13, 2011

தலைமையிலிருந்து ஓர் அவசர அறிக்கைநாடே பூரிக்கிறது... நற்றமிழ் வித்தகன் அவதார திருநாள்...! - மெஸ்மெரிகோ பால்பாண்டி அறிக்கை!

திருப்பூர்: தமிழிலக்கியத்தின் அச்சாணி பரிசல்காரனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பதிவருக்கொரு நாள் திரு நாள்...’ என்று கோவில்களில் ரிக்கார்டுகள் அலற, அவரது உதவியாளர் மெஸ்மெரிகோ பால்பாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையாவது:

கத்தாய தங்கம், நம் தானைத்தலைவன் பரிசல்காரன் பிறந்த இந்தச் சிறப்பான நாளில் தலைவரைப் பார்க்க யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என தலைவர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ஏன்னா அவரு சென்னைல இல்லியே!) அதற்காக, தலைவர் வெளிநாடு சென்று விட்டார் என்று கேனத்தனமாக எண்ண வேண்டாம். பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைத் தவிர, பாஸ்போர்ட் என்ற வஸ்துக்குக்கூட வழியற்ற வெங்கப்பயல்தான் நம் தலைவர். ஆகவே, வாசகர்கள் (படிப்பவர்கள்), நேயர்கள் (அவர் குரலைக் கேட்பவர்கள்), ரசிகர்கள் (முக நூல், பதிவுகளில் அவரை தரிசிப்பவர்கள்) மற்றும் நண்பர்கள் (இதெல்லாம் இல்லாமல் - தலைவர் ஒரு வெத்துச் சோறு என்று அறிந்தவர்கள்) ஆகியோர் இன்றைக்கும் பார்க்க முடியாதா என ஏங்கி எரிச்சல் ஆகி வேறு தலைமையைத் தேடாமல் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அவரவர் ஊரிலேயே இருந்து கொண்டாட சில வழிமுறைகளை தொண்டர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.


பக்தி மார்க்கம்

உங்கள் ஊரில் உள்ள கோவில்களில் மொட்டையடித்தல், காது குத்துதல், பால்குடம், தீர்த்தக் காவடி, சாதா காவடி, ஸ்பெஷல் காவடி, அலகு குத்தல், முதுகில் கம்பி குத்தி காவடி இழுத்தல் இன்னபிறவற்றை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் ஊருக்கு அருகேயுள்ள பிரபலமான திருத்தலங்களில் குடும்பத்தோடு (யார் குடும்பம் என்பது முக்கியம் அல்ல) சென்று திருமஞ்சனக் காப்பு, வெள்ளி அல்லது தங்கத் தேர், பட்ஜெட் இல்லையெனில் சாதா மரத்தேர் இழுத்தல் ஆகியவற்றை செய்யலாம். ஒவ்வொரு தங்கத்தேரிலும் தலைவர் வந்து அமர்வது இயலாத காரியம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை அவர் அறிவார் என்பதை நான் அறிவேன்.

காக்க காக்க சூழல் காக்க

லைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு சமுதாயம் சீர்கெடாமல் இருக்கும் பொருட்டு தலைவர் ஆணைக்கிணங்க, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விடுப்பு விடப்பட்டுள்ளன. அதற்காக நீங்கள் குடிக்காமல் இருந்து தொலைக்க வேண்டாம். முந்தைய நாள் இரவே மப்பைப் போட்டு விட்டு மத்தாப்பூ கொளுத்துங்கள். மறுநாள், ஹேங் ஓவர் நீங்கி வழக்கமான பணிகளைப் பாருங்கள். அல்லது தங்களைப் போன்ற மப்பு மகாதேவன்கள் முந்தைய நாள் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பதை பறித்துக் கொண்டு குஜாலாகுங்கள்.

அதே போலவே 5000, 10,000 மற்றும் 20,000 வாலாக்களின் சத்தம் இன்று முழுவதும் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும். உங்கள் அன்பைத் தலைவர் அறிந்தவர்தானெனினும், பக்கிகள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டாசுக்கு ஆகும் தொகையை தலைவர் அக்கவுண்டிற்கு பட்டுவாடா செய்தால் போதுமானது.


எதற்கும் வக்கற்றவர்களுக்கு

முன் சொன்ன எதைச் செய்யவும் வக்கற்ற பக்கிகளுக்காகவும் தலைவர் தாயுள்ளத்தோடு ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளார். ட்விட்டர்-1508, வலைப்பதிவு - 969, முகநூல் - 331, பஸ்ஸ் - 565 என்று தங்கம் விலைக்கணக்காக ஏறி எகிறிக் குதித்துக் கொண்டிருக்கும் பின்தொடர்வோர் அனைவரும் இன்று காலை சரியாக 9.32க்கு நாள் கிழக்கு நோக்கி நின்று கும்பிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்களை கவுரவப்படுத்தும் பொருட்டு தலைவர் எங்கிருந்தாலும் மேற்கு நோக்கி நின்று கும்பிடுவார். (சரியாக 9:32:00 லிருந்து 9:32:05 - ஐந்து செகண்டுகள் மட்டுமே)

முக்கியக் குறிப்பு: மேற்சொன்ன பின் தொடர்வோர் மட்டுமே கும்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர RSS ஃபீடர், கூகுள் ரீடர், மின்னஞ்சல் மூலம் தலைவர் வழிநடப்பவர்கள் பொறுத்தருளவும்.

வெளியாகிறது புதிய படம்

நீண்ட நாட்களாக தலைவரின் புகைப்படம் வெளியிடப்படாமல் இருப்பதால் அவரது மிகச் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிடுகிறேன். தலைவருக்கு இது பிடிக்காது எனினும், நானும் அவரது தீவிர ரசிகன் என்பதால் இதை அவர் அனுமதி இன்றி வெளியிடுகிறேன்.

ஏராளமான சலுகைகள் அறிவிப்பு

லைவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் பின்வருமாறு.

BATA காலணிகள் வாங்கும் அனைவருக்கும் ரூ.1/- திருப்பித் தரப்படும்.

ஜன நெருக்கடி மிகுந்த சாலைகளில் தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் யூ ட்யூபில் வில்பர் சர்குணராஜின் பாடல்களை ரசிகாஸ் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இன்று எல்லா நாளிதழ்களிலும் சப்ளிமெண்ட் தரப்படும்.

இன்று கடைக்கு வரும் எல்லா தமிழ் பத்திரிகைகளும் தமிழில் இருக்கும்.

இன்று ஒருநாள் மட்டும் சீமான் பற்களை நறநறக்காலும், தங்கர் பச்சான் பேட்டி கொடுக்காமலும், சென்ஷி கவிதை எழுதாமலும் இருப்பார்கள்.

ஐவர் குழு இன்று ஒருநாள் மட்டும் செயல்படாது.

தங்கத்தேர் இழுக்கும் முதல் ஐந்து நபர்களுக்கு டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் 5% சலுகை விலையில் தரப்படும்.

‘இருப்பதைக் கொடுத்திடு...! கொடுத்ததை மறந்திடு...!!’ எனும் அண்ணனின் கொள்கை வாசகங்களை உங்கள் டி சர்ட்டில் உங்கள் செலவில் எழுதிக்கொள்ள அனுமதி.


- தடுக்கி விழுந்த தமிழிலக்கியத்தை துடுப்பு போட்டு போட்டு நகர்த்திய தலைவன் பரிசல்காரன் வாழும் இந்த பூமியின் ஏதோ ஒரு மூலையில் , அவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமை ஒன்றே நம் சந்ததிகளுக்குப் போதும் என்கிற பெருமிதத்தோடு,

-தலைவரின் முதன்மை உதவியாளன்
மெஸ்மெரிகோ பால்பாண்டி
எதிர்க்கட்சிகள் செய்த சதியால் காணாமல் போன இந்தப் பதிவு இன்றைக்கு மறுபதிப்பு செய்யப்படுகிறது.

.


Wednesday, May 11, 2011

திருப்பூரில் என்ன நடக்கிறது?

திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று விரிவாக எழுத நிறைய இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

சின்ன நிறுவனங்களெல்லாம் பூட்டுப் போடப்பட்டன. பெரிய நிறுவனங்கள் தங்கள் சில கிளைகளை நிறுத்திக் கொண்டன. சின்ன நிறுவனங்களுக்கு கொடுத்த ஆர்டர்களைக் குறைத்துக் கொண்டன. பல தொழிலாளர்கள் பணியிழந்தனர். இதுவரை லட்சத்துக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகள் முகவரி மாற்றத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். பல பள்ளிகளில் இந்த ஆண்டு முடிந்ததுமே மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் காரணம்?

ஒன்று: சாய ஆலைப் பிரச்சினை

சாய நீர்க்கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் பல விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக, நீராதாரம் பாதிக்கும் இச்செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு சாயக் கழிவை முறையாக வெளியேற்றம் செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கோரியது. அது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை. சுத்திகரிக்கப்பட்ட சாயக்கழிவு நீரை கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு அரசைக் கோரியது. சுத்திகரிப்பை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கான இயந்திரங்களைப் பொருத்தி தங்கள் வேலையை முடித்துவிட்டன. ஆனால் கடலில் கலப்பது என்ற திட்டம் கூட ஓகே.. ஆனால் ZERO DISCHARGE எனப்படும் எந்த நாட்டிலுமே இல்லாத திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார்கள். ZERO DISCHARGE எனப்படுவது சாயக்கழிவை எங்கும் கலக்காமல் ஆவியாக்கும் திட்டம். கடலில் கலக்கும் திட்டத்திற்கு இரண்டாயிரம் கோடி செலவில் திட்டப்பணி தயாரான போதும் அரசு இதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை.

சாய ஆலைகள் பல மூடப்பட்ட நிலையில்- நிறுவனங்கள் பல, லூதியானா, ஃபரிதாபாத், அகமதாபாத், பாம்பே, கல்கத்தா, கூர்கான் போன்ற நகரங்களில் தங்கள் துணி சாயமிடும் பணிகளை மேற்கொண்டன. இதனால் திருப்பூரின் பல தொழிலாளர்கள் பணியிழந்தனர். துணி இல்லாததாலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் சிலவும் பூட்டுப் போட்டன. பெரிய நிறுவனங்களும் நேரத்திற்கு துணி இல்லாததால், குறைவான பணி நேரத்தையே வழங்க முடிந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் சொந்த ஊருக்கே புறப்பட்டனர்.

இரண்டு: நூல் விலையேற்றம்

விலையேற்றத்தில் நூல் - தங்கத்தோடு போட்டி போட ஆரம்பித்தது. நூல் விலையைக் காரணம் காட்டி பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு கேண்டி (356 கிலோ) நூல் 18000 ரூபாயிலிருந்து மூன்றே மாதத்தில் ரூ. 67000ஐத் தொட்டது. இதனால் நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஒப்புக் கொண்ட விலைப்புள்ளியில் பனியன் ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர் வெளியேற்றங்கள் நிகழ்ந்தன.

இப்போது நூல் விலை கீழிறங்கத் தொடங்கியுள்ளது. ஒரு கேண்டி ரூ.42000/- வரை எட்டியுள்ளது. இன்னும் குறையும். எனின், நூற்பாலை அதிகமுள்ள ஆந்திரா போன்ற இடங்களில் அதெப்படி நூல் விலையைக் குறைக்கலாம்? நாங்கள் நூல் நெய்வதற்கான மூலப்பொருட்களை வாங்கியாகி விட்டது ஆகவே பழைய விலையிலேயே கொடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றன. அதே நிறுவனங்கள் விலையேற்றத்துக்கு இந்த மாதிரிச் சொல்லவில்லை.

மூன்றாவதாக தொழிலாளர்கள் மனநிலையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். திருப்பூரின் இந்தச் சூழலிலும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களது மனப்பாங்கு அந்த வாரத்திற்கான செலவுக்கு காசு கிடைத்தால் சரி என்பதிலேயே இருக்கிறது. நிறுவனங்கள் சம்பள உயர்வை அறிவித்து, உயர்த்திக் கொடுத்தாலும் அதன்மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் கொண்டு முன்னேறுபவர்கள் வெகு சிலரே. பலர், தேவையற்ற விடுப்பு எடுக்கவே சம்பள உயர்வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் உற்பத்திக் குறைவு, பணத்தட்டுப்பாடு இரண்டையும் நிறுவனங்கள் சந்திக்கின்றன. தங்கள் திறன்பாட்டை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க ஒரு சில தொழிலாளர்கள் பாடுபட்டாலும், ஆயத்த ஆடைத் தயாரிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதால் அது எந்தப் பயனையும் தருவதில்லை.
உதாரணத்திற்கு, ஓர் உற்பத்தி வரிசையானது 24 தையல் கலைஞர்களைக் கொண்டது என வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வடிவிலான ஆடைத் தயாரிப்புப் பணியைத் தொடங்கி, அது முடியும் வரை அதிலுள்ள அனைவரும் விடுப்பின்றி வந்தால், ஒரே அளவிலான உற்பத்திப் பெருக்கம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட அளவு விடுமுறையோ, குறிப்பிட்ட அளவு சில தொழிலாளர்களின் பணிக்குறைவோ உற்பத்தியை பாதிக்காது. ஆனால் அந்த புதிய தயாரிப்பு ஆரம்பித்து முடிவடையும் இடைப்பட்ட காலத்தில் (ஆடை வடிவமைப்பைப் பொறுத்து ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை ஆகலாம்) தேவையற்ற விடுப்புகள், குறைந்த அளவிலான திறன்பாடு ஆகியவற்றால் தொழிலாளர்களை மாற்றி மாற்றி அந்த புதிய வரிசையில் அமர வைத்தால் ஒருவாரத்தில் முடிய வேண்டிய அத்தயாரிப்பு இரண்டு வாரங்களுக்கு நீள்கிறது. இதெல்லாம் தொழிலாளர்கள் மனநிலையால் நிர்வாகம் சந்திக்கிற பிரச்சினைகள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டியும் திருப்பூர் பிழைக்குமா?

நிச்சயம் எழும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். நிலைமை சீராகி, வெளிநாட்டு வர்த்தகர்கள் தாங்கள் கேட்கும் விலைபுள்ளியை ஏற்றுக் கொண்டு பணியைக் கொடுக்குமென்கிறார்கள். அப்போது திருப்பூருக்கு மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்வது உறுதி என்கின்றனர்.


இந்த இடத்தில் ஒரு சம்பவம்.


சென்ற வாரத்தில் ஒரு நாள். சாலையில் சென்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே ஒருவர் பைக்கில் மிகவும் மெதுவாக இடதுபுறக் கடைகளை நோட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்தார். பார்த்தால் பல வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த (பழைய)நிறுவனத்தில் தையற்கலைஞராக பணியில் சேர்ந்து, பின் காண்ட்ராக்டராக இருந்தவர்.

என்னைப் பார்த்ததும் ‘சார்.. நல்லா இருக்கீங்களா’ என்றபடி பைக்கை நிறுத்தினார். நானும் நிறுத்தினேன்.

“எப்படி இருக்கீங்க.. என்ன கடையைத் தேடிட்டிருக்கீங்க?” என்றேன்.

“இல்லைங்க.. ஆறேழு கிலோமீட்டர் வந்துட்டேன். நகை அடகுக் கடை எதாவது இருக்கான்னு பார்த்துட்டு. ஒண்ணும் இல்லை” என்றார்.

அன்றைக்கு சனிக்கிழமை. சம்பள நாள். காண்ட்ராக்டர்கள் தங்களிடம் பணி புரியும் 25-30 பேருக்கான சம்பளத்திற்காக அல்லாடும் நாள். அதுவும் சமீபத்திய நிலையில் நிறுவனங்கள் வாரச் சம்பளத்தை தாமதமாகவே தருகின்றன. ஆக அதைச் சமாளிக்க அடகுக் கடை தேடி அலைகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

‘ஒண்ணும் நிலைமை சரியில்லை இல்லியா? எப்படியாச்சும் இன்னைக்கு நீங்க சம்பளம் குடுத்துதானே ஆகணும்?’ என்று கேட்டேன்.

அவர் சொன்னார்: “இல்ல சார்.. நான் இப்ப காண்ட்ராக்டை விட்டுட்டேன். ஒரு வருஷமாச்சு.”

“ஓ…” – அப்ப வேலை இல்லாததால குடும்பத்தை சமாளிக்க அடகுக் கடை தேடறாரோ..?

என் எண்ணத்தில் இடைமறித்த அவர் சொன்னார்: ‘உங்களுக்குத் தெரிஞ்சு இந்த ஏரியாவுல எங்க அடகுக்கடை இருக்கு சார்?’ என்று கேட்டார்.

நான் சொன்னேன். “பானு மெடிக்கல் பக்கத்துல ஒண்ணு பார்த்தேன். அத விட்டா KVB தாண்டி ஒரு கடை பார்த்தமாதிரி ஞாபகம்”

“சரிங்க சார்.. அதே மாதிரி பார்த்தீங்கன்னா – உழவர் சந்தைக்கு எதிர்ல டாஸ்மாக் இருக்கு. பக்கத்துல எந்த புரோட்டா கடையும் இல்லை இல்லீங்களா?:” என்றார்.
இது சம்பந்தமில்லாத கேள்வியாகப் பட்டது எனக்கு. அடகுக் அடை தேடிக் கொண்டிருந்தவர் திடீரென்று புரோட்டாக் கடை பற்றி விசாரிக்கிறாரே என்று.

“தெரியலைங்க.. ஆமா.. எதுக்கு அடகுக்கடையும், புரோட்டா கடையையும் தேடறிங்க?”

“இல்ல.. திருப்பூர் டௌனாய்ட்டு வருது சார்.. இந்த காண்ட்ராக்ட் வேலையெல்லாம் ஆகாது இனி நமக்கு. இந்த ஏரியாவுல ஒரு அடகுக்கடையும், டிஃபன் ஸ்டாலும்நானும் அண்ணனும் சேர்ந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் சார்.. அதுதான் தேடறேன்”

ஆறேழு வருஷத்துக்கு முன் இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் திருப்பூர் வந்தவர். ‘சான்ஸ் கிடைச்சா போதும் சார்.. வேலையைக் கத்துகிட்டு நான் என் வாழ்க்கைல நல்ல இடத்துக்கு போவேன்’ என்றவர். இன்றைக்கு சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

இவரைப் போல உழைப்பாளர்களை கொண்டாடும் நகரம் திருப்பூர். இவரைப் போன்றவர்களால் முன்னேறியதுதான் திருப்பூர். ஆகவே இதற்கு அழிவில்லை.


.

Sunday, May 8, 2011

கணவனை பூரிக்கட்டையுடன் மனைவி முறைக்கும் 10 தருணங்கள்
எல்லாரும் வெளில கிளம்பறோம். நான் மட்டும் உட்கார்ந்து டிவி பார்த்துட்டிருப்பேன். அல்லது கம்ப்யூட்டர்ல உட்கார்ந்திருப்பேன்… அப்ப-


ஷாப்பிங் போவோம். அவங்க ஷாப்பிங் பண்றப்ப நான் அவங்க கூட இல்லாம –ஃபோன்ல இருப்பேன், அல்லது கொஞ்சம் தள்ளி வேற பக்கம் இருப்பேன். அப்ப –


செருப்பு வாங்கப் போவாங்க. (உலகத்துலயே கணவர்கள் சந்திக்கறதுல தர்மசங்கடமான அல்லது கஷ்டமான காரியங்களைப் பட்டியலிட்டா கண்டிப்பா இந்த மனைவிக்கு – அவங்க கூட போய் - செருப்பு வாங்கறது டாப் டென்ல வரும்.) செலக்ட் பண்ணி, செலக்ட் பண்ணி, செலக்ட் பண்ணீட்டிருப்பாங்க. ஒரு கட்டத்துல நாம பொறுமை இல்லாம ’கிளம்பலாமே’ன்னு சொல்லீடுவேன். அப்ப –


மதியம் சாப்பாடு கொண்டு போய் சாப்பிட்டிருக்க மாட்டேன். அன்னைக்கு ஏதாவது ஹெட் ஆஃபீஸ் மீட்டிங், அது இதுன்னு சாப்பாடை வெளில சாப்பிட்டிருப்பேன். வீட்டுக்கு வந்து ’சாம்பார் எப்படி இருந்துச்சு’ கேட்கறப்ப வழிஞ்சுட்டே ‘என் அசிஸ்டெண்ட் சாப்பிட்டான்’ம்பேன். அப்ப –


சீரியல் இடைவேளைல சானல் மாத்துவேன். க்றிஸ் கெய்லோ, வல்தாட்டியோ விளாசீட்டிருப்பாங்க. அந்த சுவாரஸ்யத்துல சீரியல மறந்துடுவேன். கொஞ்ச நேரம் கழிச்சு ‘சன் டி.வி வைங்க’ம்பாங்க. வெச்சா ‘இயக்கம்’ன்னு டைரக்டர் பேர் கருப்பு ப்ளாக்ரவுண்ட்ல வந்து இன்னைக்கு எபிசோட் முடிஞ்சுடுச்சுடான்னு சொல்லும். அப்ப –


இந்த ஞாயித்துக்கிழமை எதாவது ப்ரோக்ராம் இருக்கான்னு கேட்பாங்க. நானும் இல்லைம்பேன். அவங்க கேட்கறப்ப இருக்காதுதான். நான் சொன்னத நம்பி அவங்க எதாவது ப்ளான் பண்ணி வெச்சிருப்பாங்க. நம்ம நேரத்துக்கு அதுக்கப்பறம் எதாவது வேலை வந்து தொலைக்கும். சனிக்கிழமைதான் அது தெரியவரும். வந்து சொல்லுவேன். அப்ப –


சினிமா பார்த்துட்டிருப்போம். நமீதா டான்ஸோ, சீனோ ஓடிட்டிருக்கும். படத்துக்குள்ள முழுகிப் பார்த்திட்டிருப்பேன். யாரோ பார்க்கறாப்ல இருக்கேன்னு திரும்பிப் பார்த்தா அவங்க என்னைப் பார்த்துட்டிருப்பாங்க. அப்ப –


இதிது வாங்கீட்டு வாங்க, வந்து கணக்கு குடுங்கன்னு சொல்ல்ல்ல்லித்தான் அனுப்புவாங்க. நானும் எல்லாம் வாங்கிடுவேன். வந்து எல்லாத்தையும் பரப்பி வெச்சுட்டு கணக்கு கேட்பாங்க. எப்படிப் பார்த்தாலும் ஒரு முன்னூறுக்கோ, ஐநூறுக்கோ கணக்கு உதைக்கும். அப்ப –


இந்த சட்டைல நீங்க அழகா இருப்பீங்கன்னு சொல்லிச் சொல்லி அனுப்புவாங்க. நாலாவதோ அஞ்சாவதோ வாட்டி அதப் போட்டுட்டு போய்ட்டு வர்றப்ப அதுல கிழிசலோ, காஃபிக் கறையோ பண்ணிட்டு வருவேன். சத்தமில்லாம கழட்டிப் போட்டுடுவேன். அடுத்த நாள் துவைக்கறப்ப அதை எடுத்துட்டு என் முன்னாடி வந்து நிப்பாங்க.. அப்ப –


ஏதாவது முக்கியமான விஷயத்தை செய்யச் சொல்லி, சொல்லிருப்பாங்க. நான் வழக்கம்போல மறந்துடுவேன். வந்து அவங்க கேட்கறப்போ - நீ ஏன் ஞாபகப்படுத்தல-ம்பேன். அப்ப -


ஆமா - அப்ப உங்க வீட்ல?

.

Saturday, May 7, 2011

எங்கேயும் காதல்


டை
ட்டில் பாடலுக்கு பிரபுதேவாவே ஆடியிருக்கிறார். டான்ஸ் கிங். நன்றாகவே. அதுவும் இந்த மாதிரி மெலடிக்கு மூவ்மெண்ட்ஸ் அமைப்பது சிரமம். கலக்கியிருக்கிறார். பாடல் பாடும்போது கீழே ‘இந்தப் பாடல் நயன்தாராவிற்கு டெடிகேட் செய்யப்படுகிறது’ என்று போடாத குறைதான். ஒன்றும் தப்பில்லை பிரபு. இட்ஸ் ஓகே!

டக்கென்று ஆரம்பித்துவிட்டதோ விமர்சனம்? சரி போனால் போகிறது. படித்துவிடுங்கள்..

நாயகன் / நாயகியை அறிமுகப்படுத்தும் விதமும், ப்ரகாஷ்ராஜின் எண்ட்ரியும் ரசிக்கும்படி இருந்தது. காமெடி என்கிற வஸ்துதான் படத்தில் இல்லாமல் போய்விட்டது. ராஜூ சுந்தரம் படாத பாடு படு(த்து)கிறார். கொடுமை. அதுவும் அந்த கார் காமெடி. உவ்வேஏஏஏ… சென்சார் போர்டில் இந்த மாதிரி காமெடிகளையும் கத்திரி வெட்டி அனுப்பினால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.

பாடல்கள் ஹிட்தான். அதற்காக தொடர்ந்து பாடல்களேவா? கண்ணை மூடிக் கொண்டு உட்காந்தால், வீட்டில் ஆடியோ சிடி கேட்பது போலவே இருக்கிறது! ‘நங்காய்’ பாடல் அதிக பட்ச கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. அது படமாக்கப்பட்ட விதமும்.

ஜெயம் ரவி – ஓகே. ஹன்சிகா –அறிமுகம் என்று காட்டுகிறார்கள். அவரும் சும்மா காட்டாமல் நடித்திருப்பது ஆச்சர்யம். இடைவேளைக்குப் பின் - காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் - தன் திறமையை நிரூபித்திருக்கிறார். சில காட்சிகளில் நமீதாவை நினைவுபடுத்துகிறார். கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.

மற்றபடி, விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை. பாடல்களைத் தவிர கேமரா சூப்பரு, எடிட்டிங் தேவலாம், அந்த இந்தக் காட்சியில் இந்த மாதிரி அமைத்திருந்தால் அந்த மாதிரி இருக்கும் இந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சொல்ல அது பற்றித் தெரிந்த நம்ம கேபிள் சங்கர் இருக்கிறார்.

இனி படத்துக்கு சம்பந்தமில்லாத சில:

பிரபுதேவாவின் ரசிகைகளை நயன்தாராவுடனான அவரது காதலுக்கு முன் – காதலுக்குப் பின் என இருவகையாகப் பிரிக்கலாம். நிறைய பேருக்கு – குறிப்பாக அவரது பெண் ரசிகைகளுக்கு – அவர் ரம்லத்தை விட்டு நயன் கரம் பிடித்தது பிடிக்காமல் போய்விட்டது.

வழக்கம் போல குடும்பத்தோடுதான் நேற்றைக்கும் படத்துக்குப் போனோம். உமாவுக்கு முன்பெல்லாம் பிரபுதேவாவைப் பிடிக்கும். நயன் காதலுக்குப் பிறகு பிடிப்பதில்லை. அதே போல ப்ரகாஷ்ராஜையும். ஆனால் ப்ரகாஷ்ராஜைக் கூட கொஞ்சம் பிடிக்கும். பிரபுதேவாவை ஏனோ பிடிப்பதில்லை. (எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்கும். அதெல்லாம் தனிப்பதிவாகப் போடவேண்டிய விஷயம். இங்கே வேண்டாம்!) பிடிக்காது என்பதால் அரைமனதோடுதான் படம் பார்த்தார். படம் முன் பாதி சுமார். பின் பாதி கொஞ்சம் தேவலாம் என்பது அவர் விமர்சனம். மாப்பிள்ளை தந்த மரண அடியால் இது தேவலாம் ரேஞ்சுக்கு தேறிவிட்டது.


எங்கேயும் காதல் -

இளைஞர்களுக்கு:

தவறவிடாமல் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் - நீங்கள் ரொம்ப நாட்களாக ரூட் போட்டுக் கொண்டிருக்கும் நண்பி இந்தப் படத்துக்கு போலாமா என்று அழைத்தால்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பார்க்க வேண்டிய படம்: ஓசி டிக்கெட் கிடைத்தால்.

குடும்பஸ்தர்களுக்கு:

பார்க்கலாம்: போஸ்டரில் மட்டும்.முக்கியக் குறிப்பு:

1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்

2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.

3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.

4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)

ஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.

.
.

Friday, May 6, 2011

1 - 2 - 3

நாலைஞ்சு ஃப்ரெண்ட்ஸ் ஒரு இடத்துக்குப் போய்ட்டிருந்தோம். ஒருத்தர் வீட்டுக்கு. அட்ரஸ் சரியா தெரியல. வழியில டிப் டாப்பா பைக்ல சாஞ்சு நின்னுட்டு இருந்த ஒரு பெரிய மனுஷன்கிட்ட அட்ரஸ் கேட்டோம்.

“சார்.. இங்க மணியான் தோட்டம் எங்க இருக்கு?”

“அங்க யாரைப் பார்க்கணும்?”

அட்ரஸ் கேட்ட பாவத்துக்கு இவன்கிட்ட நாம எல்லா ஜாதகத்தையும், காரண காரியங்களையும் சொல்லணுமாங்கற மாதிரியே என் ஃப்ரெண்ட் என்னைப் பார்த்தான். சொல்லித் தொலைடான்னு நானும் பார்வையிலேயே சொன்னேன்.
(அதெப்படி பார்வையிலேயே சொல்லுவ?ன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் வேண்டாம்.. ஆமா..)

“அங்க யாரையும் பார்க்கலீங்க.. அதுக்கு பக்கத்து ரோடு வழியா போனா – நாங்க பார்க்கப் போறவர் பேரைச் சொல்லி – அவர் வீடு. அங்கதான் போகணும்”

“ஓ…” அப்படீன்னு ரிலாக்ஸ் பண்ணிட்டார் பைக் ஆசாமி.

கையை பாக்கெட்ல விட்டு சிகரெட் பாக்கெட் எடுக்கறாரு. சிகரெட்டை வாய்ல வைக்கறாரு. தீப்பெட்டியைத் தேடறாரு.. என் ஃப்ரெண்ட் என்னை ஒரு மாதிரி பார்க்கறான். நான் கூல் டவுன்’ன்னு பார்வையிலேயே (மறுபடியுமா?) சொல்லீட்டு அவர் பக்கத்துல போனேன்.

ஒரு வழியா சிகரெட்டையெல்லாம் பத்த வெச்சுட்டு அவர் அட்ரஸ் சொன்னாரு..
“நேராப் போனீங்கன்னா ஒரு ஐயங்கார் பேக்கரி இருக்கும். அதுல லெஃப்ட் எடுங்க..”

“ஐயங்கார் பேக்கரில கேக் இருக்கும், பன் இருக்கும். லெஃப்ட் இருக்குமா?’ன்னு நான் கேட்டதை - நல்ல வேளை - அவரு கவனிக்கல.

“அதே ரோட்ல போனீங்கன்னா ரோடு ரைட்ல திரும்பி மறுபடி லெஃப்ட் திரும்பும். அங்க சின்னதா ரோடு பிரியும். அதுல போய்ட்டே இருங்க. எங்கயும் நிறுத்தாதீங்க. அஞ்சு கிலோ மீட்டர் போனா ஒரு பாலம் வரும்.”

எனக்கு இப்பதான் ஒரு நம்பிக்கை வர்றாப்ல இருந்தது. ஏதோ குறிப்பிடறா மாதிரி அடையாளம் சொல்றாரேன்னு. அப்ப சொன்னாரு பாருங்க அந்தாளு..

“அந்தப் பாலத்துலேர்ந்து அரை கீலோ மீட்டர் முன்னாடிதான் நீங்க சொல்ற தோட்டம் இருக்கு”

“ஏங்க.. பாலம் வரைக்கும் போய்ட்டு அரைக் கிலோ மீட்டர் முன்னாடி வரணுமா? அதுக்கு முன்னாடியே தெரியற மாதிரி அட்ரஸ் சொல்லுங்களேன்”ன்னான் என் ஃப்ரெண்டு.

அதுக்கு அவரு சொல்றாரு: “அந்த தோட்டத்துக்கு அட்ரஸ் கேட்கறவங்களுக்கெல்லாம் நான் இதத்தான் சொல்றேன். எல்லாம் கரெக்டா போறாங்க.. நீங்கதான் இப்படி குறுக்குக் கேள்வி கேட்கறீங்க..”

அது சரி!!

---------------------

ஃபீஸ்ல எட்டு, ஒன்பது பேரு வேன்ல ஒரு கண்டொலென்ஸுக்கு - விசாரிக்கப் போய்ட்டிருந்தோம். வேன்லயே ஆளாளுக்கு - ஃபோன் வந்தப்ப - வித விதமான ரிங் டோன்ஸ். அதுனால இறங்கறப்ப ‘எல்லாரும் தயவு செஞ்சு அவங்கவங்க ஃபோனை சைலண்ட்ல போடுங்கப்பா’ன்னு சொல்லீட்டுதான் இறங்கினேன்.

போய், இறந்தவரோட அம்மாகிட்ட பேசிட்டிருந்தோம். ‘உடம்பு சரியானா அதே கம்பெனிக்குதாம்மா போவேன்னு சொல்லீட்டே இருந்தானே’ன்னு அந்தம்மா புலம்பறாங்க. அப்ப டகார்ன்னு என்கூட வந்த ஒருத்தனோட மொபைல் அலறிச்சு. “எங்கேயோ பார்த்த மயக்கம்”ன்னு. நல்ல பாட்டுதான். ஆனா எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல. சொல்லலைனாலும் பரவால்ல – சொல்லியும் கேட்காதவங்களை என்ன செய்யறது.. சொல்லுங்க?

------------------

மீபத்துல பஸ்ல போய்ட்டிருந்தேன். செமயான இளையராஜா சாங்க்ஸா போட்டுட்டிருந்தாங்க. பஸ்ல இருக்கற எல்லாருமே ரசிச்சு கேட்டுட்டே வந்தோம். ’கொட்டுக்களி கொட்டு நாயனம் கேட்குது…. ”ங்கற பாட்டு. பக்கத்துல நின்னுட்டிருந்த ஒருத்தர் ‘என்ன படம்க இது?’ன்னு கேட்கறாரு. இன்னொருத்தர் உடனே ‘உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்’ன்னாரு. நான் உடனே சும்மா இருக்காம “இல்லைங்க சின்னவர்”-ன்னேன்

உடனே அவருக்கு கோவம் வந்துருச்சு. ’எங்ககிட்டயேவா? இது உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்தான்”ன்னாரு.

“இல்லைங்க.. இதுக்கு முன்னாடி பாடிச்சுல்ல ‘என்னைத் தொட்டு அள்ளிச் சென்ற...’ அதுதான் நீங்க சொன்ன படம்.. இது சின்னவர்-ங்க”ன்னேன்.
அவரு கேட்கவே இல்லை. வேணும்னா கூகுள்ல அடிச்சுக் காட்டவான்னு செல்லை எடுத்தேன். ‘போய்யா.. அதயெல்லாம் நம்ப மாட்டேன். எனக்குத் தெரியும்’ன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சவர் டக்ன்னு பாட்டை கவனிச்சாரு.

அப்பத்தான் பல்லவி முடிஞ்சு சரணம் ஆரம்பிச்சிருந்தது. முதல் சரணத்துல முதல் வரி – ‘சின்னவரைப் பார்க்கும்போது..’ – இதக் கேட்ட உடனே அவரு சொல்றாரு…

“ஸாரி.. ஸாரி.. சின்னவருதான். இந்த வரியைக் கேட்கறப்பதன் ஞாபகம் வருது..’ன்னாரு,. அப்பாடான்னு இருந்தது.

நல்லவேளை..சின்னவரைப் பார்க்கும்போதுங்கறதுக்கு பதிலா கவிஞர் ‘உன்னைதினம் பார்க்கும்போது’ன்னு எழுதிருந்தா – நான் தீர்ந்தேன்.

-------------------


.