Friday, February 26, 2010

அவியல் 26.02.2010

விபத்தால் கிடைத்த ஓய்வுக்காக விபத்துக்கு நன்றி கூறுவது முட்டாள்தனமென்றாலும் நன்றி கூறத்தான் தோன்றுகிறது. அலைபேசினால் கவனம் சிதறும் என்ற உண்மையை உணர்ந்த நாள் அது. விபத்து நடக்கும் போது அலைபேசிக் கொண்டிருக்கவில்லையெனினும், அதற்கு சற்று முன் பேசியதன் கவனக் கலைப்பே காரணம் என்பதை மனசாட்சியோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

“இனியாவது ஃபோன் பேசறதை கொறைங்க” என்றார் உமா. இரண்டு மூன்று நாட்களாக அணைத்தே வைத்திருக்கிறேன் அலைபேசியை.

இந்த நான்கு நாட்களில் படித்தது சாருவின் ‘அருகில் வராதே’, ஜெயந்தனின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகள், எஸ்.ராவின் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ மற்றும் குமுதத்தில் வந்த வைரமுத்து கேள்வி பதில் தொகுப்பான பாற்கடல். இதில் நகுலன் வீட்டில் யாருமில்லை – குறுங்கதைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இரண்டாம் முறையாய்ப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

பாற்கடலும் பருகப் பருகச் சுவை தருகிறது!

**************************************
ழைப்பவர்களிடம் ‘ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ என்று புலம்புகிறார் உமா. ஒன்றிரண்டு முறை அலைபேசியபடியே மூன்றாம் மாடியிலிருக்கும் எங்கள் வீட்டுக்குப் பதிலாக, இரண்டாம் மாடி வீட்டு முன் கதவு தட்டிக் காத்திருந்ததை வேறு சாட்சிக்குச் சொல்கிறார்.

வைரமுத்துவின் கேள்வி பதில் தொகுப்பில், பொன்மணி அவரிடம் ‘நீங்கள் குடும்பம் நடத்துவதே தொலைபேசியோடுதான். குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதாய்ப் படித்தபோது அதைக் காண்பித்தேன்.

‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.

சரிதான்!

************************************

பிப். 14ல் என் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு வெளியானதல்லவா? தொகுப்பை இயக்குனர் அமுதன் வெளியிடுவதாய் இருந்தது. அவர் சிறிது தாமதமாய் வரவே அகநாழிகை வாசுதேவன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா ஆகியோரால் வெளியிடப்பட்டது.

வெளியிட்டபிறகு அஜயன்பாலா பேசும்போது அமைதியாக புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். நான் சொல்வதாய் அமைந்திருந்த முதல் கதையில் வருகிறது இந்த வாசகம்:-

‘நான் அமுதனைக் கொல்லப் போகிறேன்’

படிக்கல... படிக்கலன்னாரே.. படிச்சிருப்பாரோ???

*****************************************

ண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். அவரோடு பிழைகளைப் பற்றிப் பேசுவது ஒரு பேரனுபவம். சென்ற வாரத்தில் சமிக்ஞை என்ற வார்த்தை தவறு சமிக்கை அல்லது சமிஞ்ஞை - இந்த இரண்டும்தான் சரி என்றார். எங்கே சரிபார்க்கவென்று தெரியவில்லை. அதன் நீட்சியாய் வைரமுத்துவின் பாற்கடலில் சில பிழைகளைப் பற்றி கவிப்பேரரசு சொல்லியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.

பதட்டம் என்பது பிழை – பதற்றம் சரி
தூசி என்பது பிழை – தூசு சரி
வென்னீர், தேனீர் தவறு- வெந்நீர், தேநீர் சரி
'உடுத்தி' வந்தாள் தவறு – 'உடுத்து' வந்தாள் சரி
திருநிறைச்செல்வி பிழை – திருநிறைசெல்வி சரி
கோர்த்தான் பிழை – கோத்தான் சரி
சுவற்றில் தவறு – சுவரில் சரி

இவை தவறென்ற குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன் என்கிறீர்களா? இருங்கள்.. அங்கேதான் எனக்கு அதிர்ச்சி –

குற்றச்சாட்டு தவறு... குற்றச்சாற்று என்பதே சரி!

****************************************


ஆஸியுடனான 175ன்போதே 200ஐ தொடுவார் என்று டூ தவுசண்ட் வாலாவை பிரித்த எனக்கு அன்றைக்கு ஏமாற்றம். அதே டூ தவுசண்ட் வாலாவை வெடித்துக் கொண்டாடினேன் நேற்று முன்தினம். சர்ச்சைகளுக்கு ‘விளையாட்டாக’ பதில் சொல்வதில் சச்சின் – க்ரேட்! ரிடயர்மெண்ட்... ரிடயர்மெண்ட்... என்கிறார்களே.. அப்படீன்னா என்ன சச்சின்?

சச்சினின் இந்த சாதனைக்கு எழுத்தாளர் முகில் தன் வலையிலிட்டிருந்த புகைப்படமும் கமெண்டும் அசத்தல் ரகம். இங்கே போய்ப் பாருங்கள்!*******************************************************


Yuvakrishana - Athisha - Parisal Krishna


திருமண வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட அதிஷாவுக்கு வாழ்த்துகள். பாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று!

***************************************************************

இன்றைய விகடனில் என் இரு கவிதைகள் வந்துள்ளன. அனந்த்பாலா என்ற என் புனைப்பெயரில்.

இயந்திர அரசு

பிறப்பையும்
இறப்பையும்
பதிவு செய்யச் சொல்கிறது
அரசு.

இடையில் நேரும்
இன்ப துன்பங்களை
எங்கு பதிவு செய்ய?

**********************************

முகமன்

‘உங்க ஊர்ல தானிருக்கேன்’

வெகுநாள் கழித்த சந்திப்பென்று
அழைத்து வர கிளம்பினேன்
வரும் வழியில் பேச
நிறைய கதைகளோடு

கைகுலுக்கல்
கட்டியணைத்தலுக்குப் பிறகு
வீடு வரும் வரையில்
பேசிக்கொண்டே வந்தோம்

அவர் அலைபேசியில் அவரும்
என்னுடையதில் நானும்

**********************************

முக்கியக்குறிப்பு: மேலே உள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவைதான். ஆனால் இவையல்ல விகடனில் வந்தவை! அவற்றை விகடனில் படியுங்கள். அடுத்த வாரம் பதிவில் தருகிறேன்!

************************************

சன் ம்யூசிக்கில் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி நடிகை ஆடிக் கொண்டிருந்தார். கீழே நிகழ்ச்சியின் பெயரைப் போட்டார்கள். பார்த்தேன்: “ஹலோ குட்டீஸ்”

டவுட்: மடக்கிப் போட்டா கவிதையா வந்திருக்குமோ??.

Tuesday, February 23, 2010

ALL IZZ WELL!

ந்த இளம் டாக்டரைச் சுற்றி நான்கைந்து நர்ஸ்கள். ஒரு நர்ஸ் கேட்கிறார்:

“டாக்டர் உங்க ஷர்ட் என்ன ப்ராண்ட்?”

டாக்டர்: “Wrangler”

“ஓ... போன மாசம் பெங்க்ளூர்ல ஒரு கான்ஃப்ரன்ஸ் போனீங்களே.. அங்க எடுத்ததா?”

“இல்ல.. இங்க திருப்பூர்லயே ஷோரூம் இருக்கே....” என்றவர் இன்னொரு நர்ஸிடம் “ஃபோகஸ் லைட்டை கொஞ்சம் லெஃப்டுல திருப்பும்மா” என்கிறார்.

எதிர்புறம் நின்றுகொண்டிருந்த நர்ஸ்: “டாக்டர். அவ உங்களைத் திட்டறா” என்கிறார்.

“இல்ல டாக்டர்..” என்று பதறுகிறார் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்.

“ஏய்.. பழிப்புக் காட்டினத பார்த்தேனே நான்” என்கிறார் கோள்மூட்டிய நர்ஸ்.

நான்கு நர்ஸுகளும், ஒரு டாக்டரும் இப்படி ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்த இடம் திருப்பூரில் பிரபல மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு. படுக்கையில் இருந்து இந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்தது நான். போட்டிருந்த மஞ்சள் குர்தா சிகப்பாய் நிறம் மாறியிருக்க, அவர்கள் என் தலையில் இருந்த கிட்டத்தட்ட 10 செ.மீ. நீள வெட்டுக் காயத்தில் தையல் போட்டபடி இருந்தனர்.

*********************************************************

சென்ற சனிக்கிழமை மாலை மூன்று முப்பதுக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. ஒரு ப்ளட் டெஸ்டுக்காக அலுவலகத்திலிருந்து திருப்பூர் சென்று, நேரமாகிவிட்ட பதட்டத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். வரிசையாய் வாகனங்கள். முன்னே ஆட்டோ. அதற்கு முன்னே சுமோ. என்ன காரணத்திற்கோ சுமோ நிறுத்த அதில் ஆட்டோ இடித்து நிறுத்த ஒரு செகண்டில் ஒன்றும் செய்ய முடியாமல் நானும் ஆட்டோவில் இடிக்க என் காரின் பின்னால் யாரோ இடித்த சத்தம்தான் கேட்டது.

“சீட் பெல்ட் போடாம கார் ஓட்டாதீங்க” - அன்றே சொன்னார் அறிஞர் அப்துல்லா! அவருக்கு ஆன அதே மாதிரியான விபத்து. தலை கண்ணாடியில் மோதி தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தேன். யாராவது தம்புராவோடு ‘நாராயணா.. நாராயணா’ என்று சொல்லியபடி புராண காஸ்ட்யூமில் இருக்கிறார்களா என்று . இல்லை. ஓகே... ஆல் ஈஸ் வெல் என்று நினைத்தபடி காருக்குள்ளே தெறித்துப் பறந்த என் அலைபேசியைத் தேடினேன்.


காரின் எல்லா கண்ணாடிகள் வழியாகவும் முகங்கள். “மொதல்ல வெளில வாங்க” என்று கூக்குரல். “எனக்கு ஒண்ணுமில்ல.. பயப்பாடாதீங்க” என்கிறேன். ட்ரைவர் சைட் கதவு திறக்க முடியாதபடிக்கு லாக் ஆகிவிட்டது. இடது புறமாக எழுந்து வெளியே வந்தேன். ரத்தம் அதிக அளவில் கொட்டிக் கொண்டிருந்தது. பார்த்தவர்கள் பதட்டமடைகிறார்கள். “உங்களுக்கு ஒண்ணுமில்ல.. பயப்படாதீங்க” என்கிறார் ஒருவர். ‘இதைத்தாங்க நான் காருக்குள்ளேர்ந்து சொன்னேன்’ என்று மனதில் மட்டும் நினைத்தேன். எங்கிருந்தோ வந்த ஒருவர் என் தலையில் பெரிய துணியால் கட்டி ரத்தத்தை நிறுத்த முயற்சிக்கிறார். கட்டிய வேகத்தில் கம்யூனிஸ்டாகிறது துணியும்.

“காருக்குள்ள வேல்யபிள் திங்க்ஸ் ஏதுமிருக்கா” என்று கேட்கிறார் ஒருவர். உடனே ஓடிச் சென்று பார்த்த ஒருவர் உள்ளே இருந்த கேமராவைத் தூக்கி வ்ந்து என் கையில் கொடுக்கிறார். நான் ‘என் ஃபோன் உள்ள இருக்கு.. எடுத்துக் குடுங்க’ என்கிறேன். அதற்குள் என் நிறுவனத்தின் பெயரைச் சொல்கிறேன். உடனே பலரும் எனக்கு இவரைத் தெரியும்.. அவரைத் தெரியும் என்று அவரவர்கள் ஃபோனிலேயே அழைக்க ஆரம்பிக்கிறார்கள். மனிதம் என்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒருவர் “எனக்கு கிருஷ்ணகுமாரைத் தெரியும்” என்றார். “நாந்தாங்க அது” என்றதும்.. “ஐயையோ... ஃபோன்ல பேசிருக்கேன் சார். நாந்தான்..XXXX ”

“ஓஓஒ! ஹலோ க்ளாட் டு மீட் யூ” என்கிறேன் நான். கூட்டம் இன்னும் பதட்டமானது.

எங்கிருந்தோ வந்த ஆம்புலன்சில் ஏறச் சொன்னார்கள். “இல்லைங்க.. எங்க கம்பெனி ஆம்புலன்ஸ் வரும்.. அதுலயே போய்க்கறேன்” என்கிறேன். “வேணாங்க... ப்ளட் லாஸ் அதிகமா இருக்கு. மயக்கம் போட்டுடுவீங்க. இதுல போங்க” என்கிறார்கள். என்னை விட அவர்கள் பதட்டமடைவதையும், வீண் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க எண்ணி அந்த ஆம்புலன்சிலேயே ஏறுகிறேன். ஒருவர் வந்து என் செல்ஃபோனை என்னிடம் கொடுக்கிறார். “கூட வரணுமா” என்று கேட்கிறார்கள். “வேணாம்.. நான் நல்லா இருக்கேன்” என்றபடி தனியாளாய் ஆம்புலன்சில் போகிறேன்.

ஆம்புலன்சில் அமர்ந்ததும் வர ஆரம்பித்த அழைப்புகளுக்கு பதில் சொல்லுமுன் முதலில் உமாவை அழைத்து உரத்த உற்சாகமான குரலில் பேசுகிறேன். “பெரிசா ஒண்ணுமில்ல. பயப்படாத. நான் ஹாஸ்பிடல் போய்ட்டிருக்கேன்” என்கிறேன்.

“பெரிசா ஒண்ணுமில்லன்னா எதுக்கு ஹாஸ்பிடல்ல போறீங்க?” என்கிறார் அவர்.

“கேள்வி கேட்கறது ரொம்ப ஈஸி பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா” என்று சிரித்துச் சொல்லியபடி “சரி.. வா நேர்ல பேசுவோம்” என்று வைக்கிறேன். அதற்குள் பல அழைப்புகள். பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன். வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்.

மருத்துவமனை வாசலில் இறங்கி அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நடந்து சென்று அமர்கிறேன். பிறகு நடந்ததுதான் பதிவின் முதல் பத்தி!

***********************************************************

டாக்டர் கேட்டார்: “நீங்க ட்ரைவரா இருக்கீங்களா?”

“கார் ஓட்டும்போது எல்லாருமே ட்ரைவராத்தான் இருப்பாங்க டாக்டர். மத்தபடி ஆஃபீஸ்ல நான் ஏ.ஓ”

“உங்களுக்கு தலைல தையல் போடக்கூடாது.. வாய்ல போடணும். கடிக்கற கடில காதுல ரத்தம் வருது”

“அப்ப உங்க காதுலயும் தையல் போடணுமில்ல டாக்டர்? ரத்தம் நிக்க?”

முறைக்கிறார்.

*************************

சி.டி. ஸ்கேன் எடுத்து வந்து “பயப்படாதீங்க.. தலைல ஒண்ணுமில்ல”

“இதேதாங்க ஸ்கூல்ல படிக்கறப்ப எங்க டீச்சரும் சொல்லுவாங்க.. சரி டாக்டர், நீங்க எம் பி பி எஸ் பாஸ்... மேத்ஸ்ல ஃபெயிலா?”

“ஏன் கிருஷ்ணா?”

“பன்னெண்டு தையல் போட்டிருக்கீங்க.. கேட்டதுக்கு பத்துன்னீங்க?” னேன்.

கட்டை லேசாகத் தூக்கி எண்ணிப் பார்த்த அவர் “ஆமால்ல... எப்படிப் பார்த்தீங்க”

“ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்ததுன்னு எண்ணிப் பார்க்கும்போது கண்ணாடி முன்னாடி நின்னு இதையும் எண்ணிப் பார்த்தேன் டாக்டர்”னேன்.

“நர்ஸ்.. இவரை சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணுங்க” என்றார் முறைத்தபடி.

***************************************

ஞாயிற்றுக் கிழமை கூப்பிட்ட நண்பர் ஒருவர் “சார்.. நாளைக்கு இருப்பீங்களா?” என்றார்.

“நேத்து பொழச்சுட்டேன். நாளைக்கு இருப்பேன்னுதான் நினைக்கறேன்” என்றேன்.

“கடவுளே.. ஹாஸ்பிடல்ல இருப்பீங்களான்னு கேட்டேன். வந்து பார்க்கறதுக்கு” என்று கட் செய்தார்.

***************************************

டிஸ்சார்ஜ் செய்யும்போது டாக்டர் சொன்னார்: “இத்தனை பெரிய வெட்டுக்காயம்.. இவ்வளவு ரத்தம் லாஸ் ஆகி.. மயக்கம்போடாம வந்த பேஷண்ட் நீங்கதான். எப்படி இவ்ளோ லைட்டா எடுத்துக்கறீங்க?” என்றார். காமிராவை என்னை நோக்கி ஜூம் செய்யச் சொல்லி நண்பர்கள், வாசகர்களை நோக்கி விரல் நீட்டி “இவங்கதான் காரணம்” என்று சொன்னேன்.

துரத்திவிட்டார்கள் என்னை.

***************************************

கவே நண்பர்களே.. ALL IZZ WELL! அவ்வளவு ஈஸியாக நீங்கள் என்னிடமிருந்து தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை. இருந்தாலும் நான்கைந்து தினங்களுக்கு ரெஸ்ட். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் நீங்கள்.

ஓகே?.

Friday, February 19, 2010

மூன்று கடிதங்கள்...

முன்குறிப்பு:- கதைத் தொகுப்பு வெளியிட்டாயிற்று. அடுத்தது என்ன? வாசகர் கடிதம்தானே?

இதோ எனக்கு வந்த மூன்று கடிதங்கள்........

************************************
1)


அன்புள்ள உங்களுக்கு..

வாழ்த்துகள் பரிசல். உங்களுடைய சிறுகதைகள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். கிருஷ்ணகதா என்று புராணக்கதைகளையும் தவறாமல் படிப்பேன். சில மொக்கைகளும் தாங்கக்கூடியவையாய் இருந்தது. பிற்பாடு மொக்கைகளே முழுதுமாய் ஆக்ரமித்தது.

கவிதை உங்களுக்கான களம் அல்ல. என்னைப் பொறுத்தவரை நான் அப்படித்தான் நினைக்கிறேன். கவிதைகளில் நீங்கள் என்னைக் கவரவில்லை.

சிறுகதைதான் உங்கள் ஆடுகளம். கதையை ஆரம்பிக்கும் பாங்கு, விவரணைகள், கொஞ்சம் கொஞ்சமாக கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் விதம் எல்லாவற்றையும் விட எளிய - அதிசுவாரஸ்யமான மொழி நடை. இதுதான் கதைகளில் நீங்கள் வெற்றிகரமாய் இயங்குவதற்குக் காரணம்.

இப்போதும் ‘இன்றாவது ஒரு சிறுகதை இருக்காதா’ என்று உங்கள் வலைப்பூவைத் தேடி தினம்வருகிறேன் நான்.

அன்புடன்
........................................

பி.கு: லக்கியின் விமர்சனத்தோடு ஒத்துப்போகிறேன் நான். நல்லவன் இமேஜை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் எல்லை தாண்டியும் எழுதலாம்! :-)

அன்புடன்
XXXX


**********************************************************

2)


டியர் பரிசல்


காலையில் இருந்து மாலை வரை உங்கள் வலையையே திறந்துவெச்சுக்கிட்டு ஏதும் புதுசா வந்திருக்கா வந்திருக்கான்னு F5 அமுக்கி அமுக்கி பார்த்துக்கிட்டு இருப்பேன், இதோ இந்த இரண்டு வரி டைப் செய்யங்காட்டியும் இரண்டு முறை F5 இதே பக்கத்தை பழக்க தோசத்தில் அமுக்கி இரண்டு முறையும் டைப் செஞ்ச மெயில் காணாமல் போய்விட்டது. உங்கள் எழுத்துக்கள் என்றால் எனக்கு உயிர். காலையில் எழுந்து கக்கூஸ் போகும் முன்பு உங்க எழுத்தை படிச்சால் தான் பீரியா போய் வயிறு கிளீன் ஆவுது. இன்னும் எனக்கு தெளிவாக நினைவு இருக்கு. உங்கள் எழுத்தை முதன் முதல் நான் வாசித்தது வீட்டுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் வடை மடிச்சுக்கொடுத்த பேப்பரில் இருந்துதான். ஒரு பக்கம் படித்ததும் நான் வாழ்கையில் இவ்வளோ நாள் வீண் அடித்துவிட்டோமே தெரிஞ்சிருந்தால் 1வது படிக்கும் முதல் உங்க புத்தங்களை படிச்சிருக்கலாமே என்று வருந்தினேன். பிறகு மீதி பக்கங்களை படிக்க அன்று மட்டும் ஒரு 50 வடை சாப்பிட்டு இருப்பேன். கடைக்காரனுக்கு தெரிஞ்சு போய் பிறகுதான் சொன்னான் "ஏன்டா லூசு முன்னாடியே சொல்லியிருந்தால் அந்த புக்கையே கொடுத்திருப்பேனே" என்று. ஏன்னா அவருதான் உங்கள் புக்கை போட்ட புண்ணியவான் என்று தெரிஞ்சது.

அன்புடன்
உங்கள் உயிர் வாசகன்
XXXXX


***********************************************

3)


பதிவர்கள் புத்தகம் எழுதுவது அதிசயம் இல்லை. ஆனால் அவற்றை சேல்ஸ்
பிரமோஷன் செய்வது மிகவும் முக்கியம். நம் பதிவர்கள் இலக்கியத்தில்
பரிச்சியம் இருக்கும் அளவுக்கு மார்கெட்டிங்கில் பவர் இல்லாமல்
இருக்கிறார்கள். உங்கள் புத்தகத்தை விற்க நான் ஐந்து ஐடியாக்கள்
தருகிறேன். இதை நான் பதிவாக எழுதினால் என் வலைப்பூவில் வரும் இரண்டு
பேரும் வரமாட்டார்கள் என்பதால் மெயிலில் இதை மொழிகிறேன்.

ஐடியா ஒன்று :

வேறொரு எழுத்தாளரின் புத்தகம் வெளியிடும் வரை காத்திருந்து, வெளியிட்டவுடன் அதை பிடுங்கி நாலாக கிழித்து காறி உமிழவேண்டும். இது எல்லாம் ஒரு புத்தகமா என ஏக வசனத்தில் பேச வேண்டும். அப்பொழுது வாசக ஜன்மங்கள், ”நீ இப்படி விமர்சனம் செய்யும் அளவுக்கு என்ன எழுதி கிழிச்சே?” என உங்கள் புத்தகத்தை வாங்கி படிப்பார்கள்.ஐடியா இரண்டு :

புத்தக வெளியீட்டுக்கு வரும் வெண்பூவின் குழந்தை, கேபிளாரின் குழந்தை
ஆகியோர்களுடன் நின்று புகைபடம் எடுத்து அதை இணையத்தில் போட்டு, நான் இளைய தலைமுறைக்காக எழுதுகிறேன் என சவடால் விடலாம். பிறகு எல்.கே.ஜி பாடமாக உங்கள் சிறுகதை தொகுப்பை வைக்கச் சொல்லலாம்.

ஐடியா மூன்று :

புத்தக வெளியீட்டுக்கு தங்கமணி மற்றும் குடும்ப சகிதம் சென்று
கொண்டாடிவிட்டு,பிறகு இணையத்தில் என் எழுத்தை தங்கமணி படிப்பதே இல்லை எனலாம். இதனால் உங்கள் தங்கமணி படிக்காத கண்றாவியை பிறர் படிக்க முயற்சிப்பார்கள்.

ஐடியா நான்கு :

சிறுகதை தொகுப்பு வெளியிடுவதற்கு நான் தினமும் 20 மணி நேரம் எழுதினேன் ,
கக்கா மூச்சா கூட போகவில்லை. எழுத்து என் தவம், எழுத்து என் ஜபமாலை என
ஏதாவது தத்து பித்து என உளரலாம். புத்தகத்தில் இருக்கும் கதை படித்து
புரியாதவர்களுக்கு உங்கள் உளறல் புரிய வாய்ப்புண்டு.

ஐடியா ஐந்து :

ஏதாவது ஒரு சாமியாரைச் சந்தித்து பிறகு இரண்டு தினங்களில் உங்கள் வலைத்தளத்தில் பின்வருமாறு எழுதலாம், “ ஸ்வாமி XXXXஐ சந்தித்த பிறகு எனக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது, அதற்கு காரணம் நான் மெபைல் போனை வைபிரேஷன் மோடில் வைத்திருந்தேன். அவரை சந்தித்த பிறகு எனது புத்தகத்தை அண்டார்ட்டிக்காவில் உள்ள ஒஃந்ச்ஃஅஹ்ச்தி என்ற பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஏற்றுக்கொண்டார்கள். படுகர் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியில் என் நூல் மொழி பெயர்க்கப்படுகிறது. இம்மொழிகளுக்கு எழுத்து வடிவமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது......”என்ற நீண்ட கட்டுரை எழுதலாம். ஸ்வாமிகளின் பெயரை பயன்படுத்துவதற்கு கட்டணம் தனி ;) அதை அவரிடம் கொடுத்து விடலாம்.


இப்படிக்கு
XXXX


பின்குறிப்பு:- XXXX என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல. அப்படிக் குறிப்பிடுவது போல் தோன்றினால் அது தற்செயலானதே தவிர, வலிந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல!.

Wednesday, February 17, 2010

அன்பெனும் அதி பயங்கர ஆயுதம்(நண்பர் காவேரி கணேஷ் அன்பாடை போர்த்தியபோது)


ப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். சத்யசாய்பாபா சமிதியின் சார்பாக எங்கள் ஊரின் எல்லாப் பள்ளி மாணவர்களையும் இணைத்து எங்கள் பள்ளியில் சின்னச் சின்னதாய் பல போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, க்விஸ் என்று பல வகையான போட்டிகள். எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டேன். அந்த வார இறுதியில், ஒரு ஞாயிறில் கல்யாணமண்டபம் ஒன்றில் முடிவு அறிவிப்பு. பெற்றோருடன் எல்லா மாணவர்களும் கலந்து கொண்டோம்.

கட்டுரைப் போட்டி மூன்றாம் பரிசு என்று அறிவிக்க ஆரம்பிக்கிறார்கள். இரண்டாம் பரிசு.. முதல் பரிசு என்று என் பெயரைச் சொல்கிறார்கள். குதூகலமாய் மேடைக்கு ஓடி பரிசைப் பெற்றுக் கொண்டு, அதே வேகத்துடன் ஓடி வந்து அந்தப் பரிசை என் அம்மாவிடம் கொடுக்கிறேன். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை மின்னல். அடுத்த போட்டியிலும் முதல் பரிசு எனக்கே.. அதற்கடுத்த போட்டியிலும்… அம்மாவின் அருகிலிருந்த ஒருவர் ‘பேசாம உங்க பையனை மேடையிலே விட்டுடுங்க.. எல்லாம் அவன்தான் வாங்கீட்டு வருவான் போல’ என்கிறார். இப்படி எட்டு போட்டிகளில் முதல் பரிசை வாங்கிக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். இறுதியில் ஆகச் சிறந்த மாணவருக்கான கேடயம் உட்பட.

அன்றைக்கு என் அம்மாவின் முகத்தில் பார்த்த அதே மகிழ்ச்சியை ஞாயிறன்று எங்கள் புத்தக வெளியீட்டின் போது வந்திருந்த ஒவ்வொரு பதிவர்களின் முகத்திலும் காணமுடிந்தது. அன்பு ஒரு அதிபயங்கரமான ஆயுதம்தான்.

ஞாயிறு அதிகாலை சென்று இறங்கியதும் எங்களுக்காக காத்திருந்த அப்துல்லா, கார்க்கி, கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோரில் ஆரம்பித்தது அந்த ஆயுதத்தாலான வன்முறை. அதற்குப் பிறகு வீடு வந்து சேரும் போது கையசைத்துப் பிரிந்த சௌந்தர் வரை எல்லாரும் அந்த ஆயுதத்தால் குத்திக் கிழித்து இரண்டு நாட்களாக எதையும் எழுத இயலாமல் செய்து விட்டார்கள்.

ஒரு கால வரையறை கொடுத்து இதைப் பற்றி எழுது என்று சொன்னால் என்னால் அதை செய்ய இயலாமல் போகும். ஆனாலும் சவாலாக எடுத்துக் கொண்டு அதனை எப்படியேனும் எழுதி முடித்து விடுவேன்.

இந்தப் பயணத்தை, இவர்களின் அன்பை எழுத்தில் எப்படிக் கொண்டுவர என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். இறுதியாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. நண்பர்களே உங்கள் அன்பின்முன் நான் தோற்று நிற்கிறேன்.

*****************************************

ஞாயிறு மாலை கே.கே. நகர் சென்று சேர்ந்தபோது தந்தைக்குரிய வாஞ்சையோடு என்னை வரவேற்றார் டி.வி.ராதாகிருஷ்ணன். ‘பரிசலு’ என்று ட்ரேட் மார்க் அழைப்போடு உண்மைத்தமிழன்!

எனக்கு உடனேயே உள்ளே நடந்து போக ஆவலாய் இருந்தது. அதுவரை புத்தகத்தை கண்ணிலேயே பார்க்கவில்லை நான்! ஓடிச் சென்று ஸ்டாலில் அடுக்கி வைத்திருந்த என் புத்தகத்தை கையில் அள்ளி எடுத்துப் பார்த்தேன். மகிழ்வாய் இருந்தது.

விழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்து காத்திருந்தார்கள் பதிவுலக நண்பர்கள். சற்று நேரத்தில் எந்த பந்தாவும் இல்லாமல் அடக்கமாக வந்தமர்ந்தார்
பிரமிட் நடராஜன். அவர் வருவதற்கு சற்று முன் மைக் பிடித்த சுரேகா அருமையாக தொகுத்து, நேரமாவதை வந்திருந்தவர்கள் உணராமல் செய்தார். இவருக்கு ஸ்பெஷல் நன்றி.. (எதற்கு என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)


தொடர்ந்து அகநாழிகை வாசுதேவன், அஜயன்பாலா சித்தார்த் ஆகியோர் வர விழா களை கட்டியது. மூவருமாகவே எங்கள் இருவரது புத்தகங்களையும் வெளியிட்டார்கள்.பிரமிட் நடராஜனின் பேச்சு நெகிழ்வாய் இருந்தது. கேபிள் சங்கர் குடும்பத்துக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மிக அழகாய்ச் சொன்னார். சென்னை வந்து அவர் சங்கரின் தந்தை உதவியில்தான் தங்கினாராம். கேபிள் சங்கரின் தந்தை திரைத்துறையில் சாதிக்க மிகுந்த ஆவலாய் இருந்தாரென்றும் அதை சங்கர் மேல் நடத்திச் செல்கிறார் என்றும் சொன்னார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வந்தார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். வலைப்பதிவுகளை திரைத்துறையினர் எவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கினார். படத்தின் வெற்றிக்கு பதிவர்களும் காரணம். இங்கிருக்கும் ஒவ்வொரு பதிவரும் ஒரு லட்சம் மக்களின் பிரதிநிதியாய்க் காண்கிறேன் என்றார்.

அதன்பிறகு அஜயன் பாலா சித்தார்த் பேசினார். எழுத்துத் துறையில் அவரது பிரவேசம், அதற்கான பிரயத்தனங்களில் ஆரம்பித்தவர் கேபிளின் இரு கதைகளை வெகுவாக அலசி ஆராய்ந்தார்.

பிறகு அகநாழிகை வாசுதேவன், பதிப்பாளர்கள் எவ்வளவு சிரமங்களுக்கிடையில் புத்தகம் வெளியிடுகிறார்கள் என்று சொல்லி, அவர்களை ஊக்குவிக்கக் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு எனது ஏற்புரை, சங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இரண்டு நாட்களாக நண்பர்களின் அன்பையும், கவனிப்பையும் எண்ணி நெகிழ்ந்து போயிருக்கிறேன். அதனால்தான் சரிவர எழுத உட்காரவேயில்லை.


அடுத்த பதிவில் சென்னைப் பயணம் & விழாத்துளிகளை எழுதுகிறேன்...

.

Monday, February 15, 2010

நன்றி... நன்றி.. நன்றி!!!

மகிழ்ச்சியாயும் நெகிழ்ச்சியாயும் இருக்கிறேன். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.


அனைவரும் புத்தகத்தை வாங்கி, எழுத்தாளர்களையும் பதிப்பாளரையும் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...

பயணக்களைப்பிலும், மகிழ்ச்சித் திளைப்பிலும் இருக்கிறேன். ஓரிரு நாளில் பதிவிடுகிறேன்..

அப்புறம்........

பராக் ஒபாமா, டைகர் வூட்ஸ், குவைத் குசும்பன், அர்நால்ட் ஸ்வாஷ்செனகர், சங்கமம் இளா, ப்ரின்ஸ் சார்லஸ், சிங்கப்பூர் கோவி கண்ணன், மைக்கேல் ஷூ மேக்கர், சிங்கப்பூர் ‘மனசாட்சி’ கிரி, சிங்கப்பூர் ஜோசப் பால்ராஜ், ஹாலிவுட் பாலா, ஜெனிஃபர் லோபஸ், ஆசிப் அண்ணாச்சி, இலங்கை லோசன், ஹிலாரி க்ளிண்டன், மலேசியா விக்னேஷ்வரன், நைஜீரியா ராகவன், பில் கேட்ஸ், கத்தார் ஆயில்யன், குவைத் காயத்திரி, ஆஸ்திரேலியா கானா பிரபா, பான் கீன் மூன் உள்பட பல பேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க..

எங்களின் புத்தகங்களை வாங்குவதற்கான ஆன் லைன் லிங்க்:-

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக்குங்கள்:_
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=121


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்குங்கள்:-

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=122
.

Thursday, February 11, 2010

நான் ரெடி.. நீங்க ரெடியா?

சுஜாதா சொல்லுவாரு.. நாலைஞ்சு கதை எழுதின உடனே வடக்கு பார்த்து முகவாய்க்கட்டைல கை வெச்சுட்டு போஸ் குடுக்கறதும், தொகுப்பு வெளியிடறதும் தவிர்க்கவே முடியாதுன்னு.

ரெண்டையும் தவிர்க்கணும்னு நான் நெனைச்சேன்.. கேமராவை வெச்சுட்டு நோண்டீட்டே இருக்கறவங்க அழகான பசங்களைக் கண்டா சும்மாவே இருக்க மாட்டாங்கள்ல.. அப்படிதான் நம்ம ஆதியும். ஒரு நாள் அப்துல்லா வீட்ல வெச்சு நான் எதையோ சிந்திச்சிட்டிருக்கற தருணத்துல (ம்க்கும்!) க்ளிக்கிட்டார். என் ட்விட்டர் பேஜ்ல உலக மக்கள் ரசிச்சிட்டிருக்கற புகைப்படம்தான் அது.

சரி ஒண்ணு நடந்துடுச்சு. அது என்னோட போகட்டும். கதைத் தொகுதிங்கறது என் தனிப்பட்ட விஷயமில்லை. ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையும் பாதிக்கற விஷயம். அதுனால அப்படி ஒண்ணு நடக்கறதா இருந்தா யோசிச்சுதான் பண்ணனும்ன்னு நெனைச்சுட்டே இருந்தேன். பலதடவை பல பேர்கூட கேட்டிருக்காங்க.. (ப்ரூஃப் கேட்க மாட்டீங்கள்ல?) ‘எப்ப உங்க கதைகள் தொகுப்பா வருது’ன்னு. உலகம் எப்போ அழியும்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்கறாங்கன்னு நானும் ‘தெரியலயேப்பா’ன்னு சிவாஜி ஸ்டைல்ல சொல்லிகிட்டே இருந்தேன். ஏற்கனவே ஜோசியர் வேற 2010ல கண்டம் இருக்குன்னு சொல்லிருந்தாரு. எனக்கா, என்னைப் படிக்கறவங்களுக்கான்னு கேட்காம விட்டுட்டேன்.. இப்பத்தான் பதில் தெரிஞ்சது!

என்ன மொக்கை போட்டாலும் கடைசில விஷயத்துக்கு வந்துதானே ஆகணும்... ஆனா கடைசில வராம நான் நடுவுலயே விஷயத்துக்கு வர்றேன்... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வரும் பிப்ரவரி 14 அன்று வெளிவருகிறது. இந்த புத்தகம் அச்சில இருக்கும்போது பதிப்பாசிரியர் குகன் அலைபேசினார்:

‘உங்க புத்தகம் போடறது தெரிஞ்சவுடனே நிறைய ஃபோன் கால் வருது’

‘எதுக்கும் கொஞ்ச நாள் தலைமறைவா இருங்களேன்’ - இது நான்.

‘ஐயோ அதில்லைங்க.. வாங்கறதுக்குதான் கேட்கறாங்க’

நாளிதழ்கள்ல ஏதாவது பிடிக்காத நியூஸ் வந்தா அன்னைக்கு ஒரு பேப்பர், கடைல கிடைக்காது. எல்லாரும் வாங்கி, தீ வெச்சு எரிச்சிருப்பாங்க. அதுதான் எனக்கு சம்பந்தமில்லாம நினைவுக்கு வந்தது. சொன்னேன்.

‘அதெல்லாம் இல்லைங்க.. நிறைய பேர் உங்களைப் படிக்கறாங்க’ன்னாரு.

சார்லி ஜோசியரா இருக்கற ஒரு படத்துல ‘நான் சொன்னேன் பார்த்தியா’ன்னு அப்பா மகனைப் பார்த்து கேட்டுட்டே இருப்பார்ல.. அதுமாதிரி நிறைய பேர் வாங்கீட்டுப் போயி ‘பாரு.. இவன் புக்கெல்லாம் வர்றப்ப ஒனக்கென்னடா ராசா..’ன்னு கேட்டாலும் கேட்பாங்கன்னு நெனைச்சுட்டேன்.

எப்படியோ ஒரே புக் சிறுகதைத் தொகுப்பாகவும், இந்த மாதிரி மத்தவங்களுக்கு தன்னம்பிக்கை தர்றதால தன்னம்பிக்கை புத்தகமாகவும் வர்றது சரித்திரத்துல (இலக்கியத்துலன்னு வெச்சுக்கலாமா? வேணாம்.... அடிக்க வருவாங்க) இதுதான் முதல் தடவை!

*** *** ***

இதுக்கு நடுவுல நம்ம கேபிள் சங்கர் வேற ஸ்லைடு, விளம்பரம், பதிவுன்னு போட்டு கலக்கீட்டிருக்காரு. அதை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மறுபடி ஒரு கதை ஞாபகத்துக்கு வருது.

ஒரு காட்டுல ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் போய்ட்டிருக்கறப்போ, ரொம்ப தூரம் பின்னாடி புலி ஒண்ணு ஓடி வர்றதைப் பார்த்தாங்க. உடனே ஒரு ஃப்ரெண்ட் ஓடறதுக்கு தயாரானான். மத்தவன் கேட்டானாம்: ‘ஏண்டா.. புலியை விட வேகமா உன்னால ஓட முடியுமா’ன்னு. நம்மாளு சொன்னானாம்: ‘நான் ஏன் புலியை விட வேகமா ஓடணும்? உன்னை விட வேகமா ஓடினாப் போதாதா?’

ஆக.. எப்படியோ என்னை முந்தி ஓடிப் போய்.. என்னை மாட்டிவிடப்போறாரு கேபிள்ஜின்னு நான் சொன்னா அது நல்லா இருக்காது. ஏன்னா என் புத்தகத்துக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது கேபிள் சங்கர்தான். இப்ப வரைக்கும். அதே மாதிரியே அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளையும் வித்துத் தர்றேன்னிருக்காரு. இந்த அன்பு யாருக்கு வரும்? (‘அப்ப புக் படிச்சா நாங்க அடிக்க வேண்டியது அவரையா’ன்னு கேட்காதீங்க. அதுக்கு நான் பொறுப்பு!)

சாக்ரடீஸ் ஒரு ரேடியோ ப்ரோக்லாம்ல பேச நேரமாச்சுன்னு டாக்ஸி (அப்ப இருந்துச்சான்னு தெரியல.. கைவண்டின்னு கூட வெச்சுக்கங்க!) பிடிச்சாராம். அந்த ட்ரைவர் சொன்னாராம்: ‘இன்னும் பத்து நிமிஷத்துல ரேடியோல சாக்ரடீஸ் பேசப்போறாரு. அதக் கேட்கணும். அதுனால எங்கயும் வரமாட்டேன்’னாராம். அதே மாதிரி ட்ரெய்ன்ல எனக்கும் திருப்பூர் நண்பர்களுக்கும் டிக்கெட் புக் பண்ணலாம்னா ‘அன்னைக்கு சென்னைல ஏதோ புக் ரிலீஸ் ஃபங்ஷனாச்சே.. அதுனால சென்னை ட்ரெய்ன் ஃபுல்’ன்னாங்க. சென்னைல என் புக் ஃபங்ஷன்னா சென்னைலேர்ந்து வர்ற ட்ரெய்ன்தானே ஃபுல்லாகணும்ன்னு நெனைச்சுட்டேன்.

சரி... என்னதான் ரொம்ப ஜாலியா, சிரிச்சுட்டே இத எழுதினாலும் அப்பப்ப பதிப்பாளர் குகனோட அப்பாவியான முகம் வந்து ‘என்னைப் பத்தி கொஞ்சமாவது நெனைச்சுப் பார்த்தீங்களாடா’ன்னு கேட்குது. அவரோட அன்புக்கும், துணிச்சலுக்கும் மறுபடி நன்றி.

ஆகவே... அன்பர்களே நான் சொல்ல வர்றது என்னன்னா.. (இன்னும் சொல்லவே இல்லையா நீ?) வரும் ஞாயிறு சென்னைக்கு குடும்பத்தோட வர்றேன்! சென்னை நண்பர்கள் ‘உங்க குட்டீஸை (குழந்தைகள் எனப் பொருள் கொள்க!) கூட்டீட்டு வந்தாத்தான் தங்க இடம். இல்லைன்னா பித்தளை இடம்கூட கிடையாது’ன்னுட்டாங்க. அதுனால நிச்சயமா, கண்டிப்பா, மறக்காம, மறுக்காம, தவறாம.. இன்னும் என்னென்னவோ அதெல்லாம் போட்டுக்கங்க.. பிப்ரவரி 14ம்தேதி சென்னை மேற்கு கே.கே. நகர் (அட.. கிருஷ்ண குமார் நகர் இல்லைங்க.. இது வேற..) வந்துடுங்க. உங்க கூட உட்கார்ந்து நானும் நிகழ்ச்சியை ரசிக்கப் போறேன்.

தேதி : 14.02.10

நேரம் : மாலை 5.30

சிறப்பு விருந்தினர்கள் : நீங்கள்... மற்றும்

பிரமிட் நடராஜன் - நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் - இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா - எழுத்தாளர்
பொன்.வாசுதேவன் - பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78

பரிசல் காரன் : 9894747014
கேபிள் சங்கர் : 9840332666
குகன் : 9940448599

(பாருங்க.. என் பதிவுல என் பேருதானே முதல்ல வரணும்? அப்ப நான் கட் பேஸ்ட் பண்ணல.. ஓகேவா?)

இணைத்துள்ள சிலைடுக்கு நன்றி: தலைவர் வெயிலான்!


.

Tuesday, February 9, 2010

வாழ்நாள் இதழ்...!

அனஸ்தீஷியா கொடுக்க
அரசு அனுமதி வேண்டுமாம்.
பெண்ணே..
கண்ணை மூடிக் கொண்டு நட...

******************************************
வார மாத இதழ்களை
வாசிப்பதில்லை நான்...
வாழ்நாள் இதழை ருசித்தபின்..

*******************************************

இதய மாற்று அறுவை சிகிட்சைக்கு
எந்த மருத்துவமனை பிரபலம்?
வா போகலாம்...

*************************************

பிடித்த பெயர் எதுவென்றாய்
என் பெயர் என்றேன்
வியந்தாய்
அதுதானே
உன்பெயருக்குப் பின்னால் இருக்கிறது!

****************************************

உலக கோடீஸ்வரன் என்று
யார் யாரையோ சொல்கிறார்கள்
நீ என் சொத்து என்பதறியாமல்!

***************************************

மூன்றாம் உலகப் போர்
மூளுமென்கிறார்கள்
இளைஞர்களைக்
கடந்து செல்லாதே தேவதையே...

***********************************
யாராவது நினைத்துக் கொண்டால்
புரையேறுமாமே...
அப்படியானால் நீ
எப்போதும்
இருமிக்கொண்டே அல்லவா இருப்பாய்!

************************************
காலையில் உன் கையால்
காபி குடிப்பதில் இன்பம்.
கனவில் நீ இருப்பதால்
எழுந்திருப்பதே இல்லை தினமும்!

*************************************
கோயில் குளத்தில்
மீன்களில்லையாம்.
பாவம் கொக்குகள்
தாண்டும்போது எதற்கும்
உன் கண்களை மறைத்துச் செல்.

***************************************

இதற்கு மேல் கவிதை சொன்னால்
உதைப்பேன் என்கிறார்கள்
அப்படியானால்
இனி நான் உன்பெயர் சொல்லக் கூடாதா?

*********************************************


.

Saturday, February 6, 2010

அனுஜன்யாவிற்கு...

ரு கவிதை எழுத ஆரம்பித்து
முதல் வரியில் நிற்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக


ங்
கி

இரண்டாம் வரி வந்தபோது
அது ஐந்தாம் வரியாக
மாறிவிட்டிருந்தது.
அதற்குள்
முதல் வரியிலிருந்த
சந்திப்பிழை விலகி ஓடிவந்து
என்னைத் துரத்தவே
எழுதவேண்டிய கவிதையை
எழுதாமலே முடிக்கிறேன்.
அந்த இரண்டாம் வரி
ஐந்தாம் வரியானதை
எண்ணிச்
சரிபார்த்துக் கொண்டவர்களுக்கு
சமர்ப்பணத்துடன்....

Friday, February 5, 2010

ஒக்காந்து யோசிச்சது....

போன வாரத்துல ஒரு நாள் கோவையிலிருந்து திருப்பூர் வர்றப்ப காரை நிறுத்தச் சொல்லீட்டாங்க. கேட்டா ஸ்டாலின் ஏர்போர்ட் போய்ட்டிருக்கறதா சொன்னாங்க.

40 நிமிஷம் நின்னேன். ஸ்டாலின் கடந்து போனார். முன்னும் பின்னும் பாதுகாப்போட.

அவர் முன்னால பல கார்கள், பின்னால பல கார்கள் போச்சு.

ஓகே... இப்ப என் சந்தேகம்:-

சரியா அவர் காருக்கு முன்னால ரெண்டு காரும், பின்னால ரெண்டு காரும் போச்சு.


* *
*
* *

இப்படி.நடுவுல இருக்கறது ஸ்டாலின் கார்னு வெச்சுக்கோங்க.

இந்த ஸ்டார்கள்ல மேல ஆரம்பிச்சு ஒண்ணுக்கொண்ணு இடிக்காம ஒரு கோடு இழுத்தா, Z மாதிரி வருதா? அதுனால இதுதான் Z பிரிவு பாதுகாப்போ?


****************************************


வின்னர் படத்துல ஒரு கோவில்ல கிரணைப் பார்க்க பிரசாந்தும் வடிவேலுவும் போவாங்க. கல்லெறியறப்போ குண்டர்கள் வடிவேலுவைத் துரத்துவார்கள்.

மலைக்கோயிலிலிருந்து ஓடும் இவர், கீழே நீரில் விழுந்து தப்பிப்பார்.

அப்படி விழும்போது குதிச்சுடுடா கைப்புள்ள’ என்று சொல்லியபடி வேட்டியைக் கழட்டிகுதிப்பார்.

என் சந்தேகம்..

தண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு?

**********************************

சமீபத்துல குடும்ப நண்பர்களோட ஊருக்குப் போயிருந்தோம். நடுவுல நின்னு, ஒரு டீக்கடைல டீ குடிச்சோம். நல்லா இருந்தது. மாலை மயங்கும் நேரம் ஆட்கள் அதிகமில்லாம வயல்வெளிகளைப் பார்த்துட்டு சுத்தமான காத்தை சுவாசிச்சுட்டு தேநீர் அருந்தும் சுகம் - நல்ல அனுபவம்.

ஐயையோ.. பேச்சு எங்கயோ போகுது..

அங்க டீ சாப்பிடறப்போ எங்க க்ரூப்ல ரெண்டு பேர் ‘எங்களுக்கு சர்க்கரை இல்லாம குடுங்க’ன்னு வாங்கி சாப்டாங்க. மொத்தமா காசு எவ்ளோ கேட்டு குடுத்தோம். ‘ரெண்டு ரூவா சில்லறை இருந்தா குடுங்க’ன்னு கடைக்காரர் சொன்னார். நான் கேட்டேன்: ‘ரெண்டு டீ சர்க்கரை இல்லாமத்தானே குடுத்தீங்க? அப்ப ரெண்டு ரூபாய் கம்மியா வாங்கிக்கக் கூடாதா’ன்னு.

அவ்ளோதான்! என்னமோ ஆயிரத்தில் ஒருவன் நல்லா ஓடுதுன்னு சொன்னதுக்கு சிரிக்கற மாதிரி அப்படிச் சிரிக்கறாங்க!

என் சந்தேகம்:-

அப்படி என்னங்க தப்பா கேட்டுட்டேன்? சர்க்கரையெல்லாம் விலை ஏத்தீட்டாங்கன்னுதான் டீக்கும் விலை ஏத்தறாங்க? அப்ப சர்க்கரை போடாத டீக்கு ஏன் விலை கம்மியா வாங்கிக்கக் கூடாது? இதை ஏன் யாரும் கேட்கறதில்ல?

******************************************************

ஜனவரி 26 வந்ததில்லையா? குடியரசு தினம். எல்லாருக்கும் தெரியும்னு நெனைக்கறேன்.. ஆகஸ்ட் 15க்கு முன்னாடி இதுதான் வெள்ளையர்களுக்கு எதிரா நாம சுதந்திரமா இருக்கணும்னு சுதந்திர தினமா கொண்டாடப்பட்டு வந்தது. அன்னைக்கும் எனக்கு சில பல குடியரசு வாழ்த்து எஸ்ஸெம்மெஸ்கள் வந்தது.

ஓகே. என் சந்தேகம்...

காதலர் தினம், தீபாவளி, நியூ இயர்க்கெல்லாம் எஸ்ஸெம்மெஸ்ஸினா அம்பது காசுன்னு மிரட்டி, அதிகமா சம்பாதிக்கற அலைபேசி நிறுவனங்கள், குடியரசு தினத்தை விட்டுவெச்சது தேசப்பற்றா இல்லை ‘இதுக்கெல்லாம் இவனுக அனுப்பவா போறாங்க’ங்கற எண்ணமா?

**********************************

ரொம்ப வருஷம் முன்னாடி பைக்ல வீட்டுக்கு போய்ட்டிருந்தேன். ஒன்வே. ஆனா எதிர்ல வண்டி வருது. என்னடான்னு விசாரிச்சா ‘பத்து மணிக்கு மேல ஒன்வே - டூவே ஆகிடும். காலைல 7 வரைக்கும்’கறாங்க.

அதே இன்னொரு ஊர்ல கேட்டப்போ இங்க 11 டூ காலை 6ன்னாங்க.

இதுவரைக்கும் எத்தனையோ ஊர்கள்ல, சாலைப் பாதுகாப்பு வழிமுறை, Traffic Sign Boardsல பார்த்துட்டேன். எங்கயுமே ஒன்வே ரோட்ல ‘இந்த சாலை இத்தனை மணிலேர்ந்து இத்தனை மணிவரை இருவழிச் சாலையாக செயல்படும்’ அப்படீங்கற அறிவிப்பே இல்லை.

அப்படி ஒண்ணு அதிகார பூர்வமா இருக்கா? இருந்தா ஏன் அறிவிப்புப் பலகைகள்ல அதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை?


***********************

இப்போதைக்கு இவ்ளோதான்.

# ‘சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாட்டுல ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ வரிக்கு அர்த்தம் என்ன? கன்னி என்பதை மழைத்துளி அறிகிறதுங்கறத கவிப்பேரரசு என்ன பொருள்ல சொல்றாரு?

# விண்ணைத்தாண்டி வருவாயா ஹொசானா பாட்டுல ‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்? ஒருத்தனுக்கு ரெண்டு இதயமா?

# பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எஸ்.பி.பின்னு சொல்றோம். அவர் மகன் ஏன் SPB சரண்னு போடாம SP சரண்னு போட்டுக்கறாரு?

இந்த மாதிரி வேறு சில டவுட்ஸ் எல்லாம் இருக்கு. அங்கங்கே எழுதிட்டேன்.. இதுவரைக்கும் யாரும் பதில் சொல்லல!பார்க்கலாம்..


.

Wednesday, February 3, 2010

அவியல் 03.02.10

‘ஓடுங்க.. ஓடுங்க... அது நம்மளை நோக்கித்தான் வேகமா வருது’ - அப்படீங்கற ஆங்கிலப்பட விளம்பரம்போல கடைசியா (முதலா?) அது வந்தேவிட்டது அல்லது வரப்போகிறது! கேபிள் சங்கர் மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. ஆனா இங்க நீங்க ஓடவேண்டியது அதை நோக்கி.... அதை அள்ளிக் கொள்ள.. ஆதரவளிக்க! ரொம்ப நாள் உங்களை விட்டு பிரிஞ்சிருக்கற குழந்தை உங்களைப் பார்த்து ஓடிவந்தா எப்படி அள்ளி அணைச்சு அன்பு காட்டுவீங்களோ. .. அந்த உணர்வோடு வாருங்கள். வாங்குங்கள்!

விபரங்களுக்கு: கேபிள் சங்கரின் இந்தப் பதிவைப் படிக்கவும். (பார்க்கவும்ன்னா பார்த்துட்டு ஓடிடறாங்க!)வழக்கம்போல எல்லாருடைய ஆதரவையும், அன்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!

*******************************************

சமீபத்துல குடும்ப நண்பர்களோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த போயிருந்தோம். பத்தொன்பது பேர் இருந்தோம். குடும்பமாக உணவருந்த அமைக்கபட்டிருந்த அறை மூடப்பட்டிருந்தது. ‘திறக்கலாமே’ என்று கேட்டுக்கொண்டபோது மேலாளர் சொன்னார்:

“அங்க உட்கார்ந்தீங்கன்னா சர்விஸ் பண்றது கஷ்டம் சார்”

நான் சொன்னேன்: “கஷ்டமா இருந்தாலும் நீங்க பண்ணணும். அதுதான் சர்வீஸ்”

திறக்கலாம் என்று கொஞ்ச நஞ்சம் இருந்த எண்ணத்தையும் அவர் மூட்டை கட்டியிருப்பார்.

அதே போல எங்களோடு வந்த ஒரு நண்பர், மற்றொரு நண்பரிடம் ஒரு தொகை கொடுத்து (பயணத்தின் போது நடுவில் அவசரத்தேவைக்கு வாங்கியிருந்தார் போலும்) ‘எண்ணிப்பார்த்துக்கோங்க’ என்றார்.

இந்த நண்பர் எண்ணாமலே பாக்கெட்டில் வைத்தார். அவர் ‘எண்ணிப் பார்க்கலியா?’ என்று மறுபடி கேட்க நான் இடைமறித்துச் சொன்னேன்: ‘அவர் உங்ககூட பழகின பழக்கத்தை எண்ணிப் பார்த்ததால, எண்ணிப் பார்க்காம உள்ள வெச்சுட்டாரு”

அடுத்த ட்ரிப்புக்கு இவனைக் கூப்பிடவே கூடாதுன்னு முடிவு பண்ணிருப்பாங்க!

***********************************

பல கடைகளில் பில் கொடுக்காமல் வரி ஏய்ப்பு நடத்துகிறார்களல்லவா? சென்னை சென்ட்ரலில் ஒரு கடை முன் அறிவிப்பு ஒன்று பார்த்தேன். ‘இந்தக் கடையில் வாங்கும் பொருளுக்கு பில் தரப்படவில்லை என்று மேலாளரிடம் புகார் அளித்தீர்களானால் நீங்கள் வாங்கிய பொருளுக்குரிய பணம் திருப்பித் தரப்படும்’ என்று.

அரசாங்கத்தை ஏமாற்றக் கூடாதென்று செய்கிறாரா, தன்னை வேலை செய்பவன் ஏமாறக் கூடாது என்று செய்கிறாரா எனத் தெரியவில்லை.

***************************************

கார்க்கி இன்றைக்கு பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி என்றொரு பதிவு போட்டிருந்தார். அதில் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ் தேடினேன். இல்லை.

அது..

ஒரு பெண்ணிடம் இளைஞன் சொல்கிறான்:

“ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க. ஒரு ஸ்டில் எடுத்துக்கறேன்”

அவள்: “எதுக்கு?”

“நாளைக்கு நம்ம குழந்தை ‘அம்மாவை நீங்க மொதமொதல்ல பார்க்கறப்போ எப்படி இருந்தாங்க?’ன்னு கேட்டா காட்டணுமில்ல?”

வெரி நைஸ்! இவனுக்கு காதல் கைகூடாமலா இருக்கும்?


***************************************

நான்கைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. உள்ளுக்குள் ஃபீவர் என்கிறாற்போல ஏதோ சோர்வாகவே உணர்கிறேன். ட்விட்டர் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 140 வார்த்தைகளில் விளையாடுகிறார்கள் மக்கள். டக்ளஸோடு நடத்திய அந்தாதி ட்விட்டும் நன்றாக பொழுதுபோக உதவியது! டக்கென்று சொல்லும் வார்த்தை விளையாட்டுகள் கவர்கின்றன. ட்விட்டர் பற்றி தனிப் பதிவே எழுதலாம். இப்போதைக்கு நான் சமீபத்தில் ட்விட்டிய முத்துக்கள்:-

“நான் என்ற நினைப்பே கூடாதென நினைக்கிறேன். ஆனாலும் தினமும் டின்னருக்கு ’நான்’ தான் சாப்பிடுகிறேன். நான் நானை விட்டொழிப்பது எப்போது?


“உங்களுக்கு சர்க்கரை இல்லை” என்று டாக்டர் சொன்னால் சந்தோஷம். ரேஷன் கடைக்காரர் சொன்னால் சங்கடம்! என்ன உலகமடா இது!


“பார்சல் ஆர்டர் செய்தால் லேட்டாகுது? சீக்கிரம் கொண்டு வா என “ஆர்டர்” செய்தால் உடனே வருது!


“பாஸிடம் திருப்பதி போக லீவு கேட்டேன். “என்ன வேண்டிக்கப்போற?” என்றார். நீங்க லீவு தரணும்னு வேண்டிக்க பாஸ்’ என்றேன். லீவு சாங்க்‌ஷன்!”

“தமிழில் நடித்தபோது பிடிக்காத ப்ரியங்காவை கமீனேவிலிருந்து ரசிக்கிறேன். மாற்றான் தோட்டத்திலிருந்தால்தான் ரசிக்கத் தோன்றுமோ?”


“கடையில் என்ன வேண்டுமென்ற பேரரிடம் சொன்னேன்:- “ஐஸ்க்ரீம்” வரலேட்டானது. I Scream!!!. உடனே வந்தது.”


“கோவா பார்த்தவர்கள் தமிழ்ப்படம் பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படம் பார்த்தால் கோவா பார்த்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது!”

“கண்ணுக்கு போட்டாலும் அதை மூக்குக் கண்ணாடி என்பதேன்? கண்ணுக்காக அந்தக் கண்ணாடியைத் தாங்குவதால்தான்!”

இதுக்கு மேலயும் என்னை http://twitter.com/parisalkaaran - இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்!

**********************


.