அனுஷ்காவையும் தெரியாது போல அவனுக்கு.
****************************************
தோசை செய்யவா.. உப்புமாவா என்று கேட்டார் மனைவி.
மனைவி செய்யும் தோசை அவ்வளவு பிடிக்கும். இருந்தாலும் ‘உப்புமா’ என்றேன்.
“ஏன்.. அதிசயமா உப்புமா-ங்கறீங்க? எனக்கு வேலை கம்மியா ஆகும்னா?” என்றார்.
“அதுவும் ஒரு காரணம். இன்னொண்ணு அதோட முதல் & கடைசி எழுத்துகள்” என்றேன்.
அன்னைலேர்ந்து நாலு நாளைக்கு டெய்லி உப்புமாதான்!
************************************
கிரேஸிகிரியின் அண்ணன் மகேஷுக்கு ஒரு சந்தேகம் வந்ததாகச் சொன்னான் கிரி. தன்னம்பிக்கையை அதிகப்படுத்த எத்தனையோ புக்ஸ் வருதுல்ல... அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஓவர் தன்னம்பிக்கைல ஆடிகிட்டிருக்காராம். சொன்னாலும் கேட்கறதில்லையாம். அந்த மாதிரி ஓவரா இருக்கறவங்களுக்கு அதைக் குறைக்க ஏதாவது புக்ஸ் இருக்கான்னு கேட்டாரு.
தெரியலயேப்பா-ன்னு சொன்னேன்.
****************************************
நண்பரின் நண்பர் ஒருவர் மனைவிக்கு நகை வாங்கியிருக்கிறார். நேரடியாக மனைவியிடம் கொடுக்காமல், தனது அம்மாவிடம் நகையைக் காட்டியிருக்கிறார்.
“எவ்ளோடா?” - அம்மா
“நாப்பத்தஞ்சு ரூவா ஆச்சும்மா”
“ஏண்டா இதப் போய் வாங்கின? நம்ம கணேசன் கடைல ஆயிரத்து நூறுரூவாக்கு ஒரு செய்ன் பார்த்தேன். ஆறு மாசத்துக்கு கறுக்காது. இது ரெண்டே மாசத்துல பல்ல இளிச்சுடுமேடா”
“ஐயோ.. அம்மா... நாப்பத்தஞ்சுன்னா நாப்பத்தஞ்சாயிரம்மா. சுத்தத் தங்கம்மா”
சடாரென நகையை டேபிள் மேல் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாராம் அம்மா!
************************************
நேற்றைக்கு விஜய் டிவி நீயாநானாவில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் தத்தம் கணவர்களை வாங்கு வாங்கு என வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் 9000 சம்பாதிக்கும் ஒரு மனைவி, தன் 8000 சம்பாதிக்கும் கணவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தபோது காமராமேன் கருமமே கண்ணாக அந்தக் கணவனின் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அவர் கொஞ்ச நேரம் பேந்தப் பேந்த முழித்துவிட்டு ‘ஈகோதான் சார். சட்னு ஏத்துக்க முடியல. மாறறதுக்கு டைம் வேணும்’ என்றார்.
முழுவதும் பார்க்கவில்லை. என் வீட்டில் மான்குட்டீஸும், மயிலும் சண்டைபோட இடையிடையேதான் பார்த்தேன். இருந்தாலும் அந்த நிகழ்ச்சி ஒளி/ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின் தம்பதியினர் வீட்டுக்குச் செல்வதையும், வீட்டில் என்ன ஆச்சோ என்பதையும் நினைக்க பதைபதைத்தது.
ஒன்றுமாகாமல், சரவணபவனில் ரோஸ்ட், காஃபி சாப்பிட்டுவிட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டே போன தம்பதிகள் புண்யாத்மாக்கள்!
**********************************************
கலைஞர் டிவியில் திங்கள்-டூ வியாழன் இரவு 10 மணிக்கு விசாரணை தொடர் தவறாமல் பார்க்கிறேன். ராஜேஷ்குமார்! வாரம் ஒரு கதை.

9.30க்கு சன் டிவியின் ‘செல்லமே’வில் ராதிகாவை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, 10 மணிக்கு கலைஞர் டிவியில் வந்து கலக்கும் சாக்ஷிசிவா, விவேக் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம்! (கொஞ்சம் கனம் - ஆனாலும் கச்சிதம்!). எல்லா சீரியலிலும் முக்கியக் கதாபாத்திரத்திற்குக் கணவராய் வந்து கொண்டிருக்கிறார். நிறைய பெண் ரசிகர்களை சம்பாதித்திருப்பார். அதனால்தானோ என்னவோ, சென்ற வாரம் விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் இவரது திருமணத்தை ஒளிபரப்பி, தன்னைக் காத்துக் கொண்டார்!
பேசியதில் நிறைய பேருக்கு ராஜேஷ்குமாரின் இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை என்பதால், இந்த வெளம்பரம்!
*****************************************************
கொஞ்சம் ட்விட்டர் அப்டேட்ஸ்:-
ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன். #நித்யானந்தபயம்
மறுபடியும் கலைஞருக்கு விழாவாம். எதற்கு என்று கேட்டேன்: கலைஞர் டிவிக்கு அடுத்த மாசம் ரெண்டு சண்டேக்கு ப்ரோக்ராம் எதும் கிடைக்கலையாம்!
இன்றைக்கு பின் தேதியிட்ட காசோலை ஒன்றைக் கொடுத்தால் அதை முன் தேதியிடப்பட்ட காசோலை என்று ஏன் சொல்கிறார்கள்? #டவுட்டு
ஆஃபீஸ் வந்தவுடன் ஒரு நண்பர் ‘நான் வந்த பஸ் செம ஸ்பீடு. எங்கயுமே நிக்கல’ என்றார். குதிக்கும்போது அடிபடலையா என்றேன். அவருக்குப் புரியவில்லை.
//செம்மொழி மாநாட்டை ஒட்டி ஒரு மலர் வெளியிடுகிறார்கள். // ஒட்டி விட்டா எப்படிப் படிப்பாங்க? #லொள்ஸ்
ஷாரூக்கான் My Name Is Khan என்பதற்கு பதிலாக My Name Is Ram என்று வைத்திருந்தால் ‘மோர் உதைக்கறே’ என்ன பண்ணிருப்பார்?
விஜய் டிவில நடந்துட்டே பேசற கோபிநாத் ஒரு நிகழ்ச்சில மட்டும் நின்னுகிட்டு பேசறாரு.. ஏன்னு பார்த்தேன்.. நிகழ்ச்சி பேரு ‘நடந்தது என்ன?’வாம்..
பலருடைய பதிவுகளைப் படிக்கும்போதுதான் மௌஸில் ஸ்க்ரோல் பட்டன் வைத்தவனைப் பாராட்டத் தோன்றுகிறது! #வாய்க்கொழுப்பு
நண்பரின் ப்ரொஃபைலில் Business என்றிருந்தது. என்ன பிஸினஸ் என்று கேட்டதுக்கு மெட்ரிக் பள்ளி வைத்திருப்பதாய் சொன்னார். வருத்தமாக இருக்கிறது.
முன் செல்லும் பைக்கின் பின்னிருக்கும் ஃபிகரை ரசிக்கும்போதுதான், என் மனைவியுடன் செல்கையில் அவர் வேகமாப் போங்க என்பதன் அர்த்தம் புரிகிறது
KINGSXI PUNJABஐ HEROHONDA வாங்கியாச்சு. மொதல்ல அதை PREETY ZINTA வெச்சிருந்தாங்க என்றான் நண்பன். எனக்கு கரகாட்டக்காரன் நினைவுக்கு வந்தது.
*****************************************
மிக ரசித்த எஸ்ஸெம்மெஸ்:-
ஏதாவது தப்புதண்டா செய்கிறீர்கள் என்றால் சச்சின் விளையாடும்போது அதைச் செய்யுங்கள். அந்த நேரத்தில்தான் எதையும் கவனிக்காமல் கடவுள் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்.
.
மகளிர்க்கு மகளிர் தின வாழ்த்துகள். ஆடவர்க்கு, மகளிரை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
.


