Sunday, November 4, 2018

கதை... திரை(மறை)கதை... டைரக்‌ஷன்!


"இந்த இடத்துல இண்டர்வெல் விடறோம் சார்”

பிரபல தயாரிப்பாளர் வேணுவிடம் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அஷோக் ராஜாவின் அலைபேசி ஒலித்தது. அதை சைலண்ட்   செய்துவிட்டுத் தொடர்ந்தான்.

“நீங்க சொன்ன மாதிரி, ஸ்டார்ட்டிங்ல வெச்சிருந்த சீனை, இப்ப இண்டர்வெல்லுக்கு அப்பறம் மாத்திட்டேன். அதுபடி, ஹீரோ இப்ப என்ன பண்றார்னா...”

மறுபடியும் அலைபேசி அழைப்பு.

“அட்டெண்ட் பண்ணுங்க. ரெண்டு மூணு வாட்டி கூப்டறாங்க. எதும் அவசரமா இருக்கப்போவுது” தயாரிப்பாளர் வேணு சொன்னதும் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டுத் தள்ளி வந்தான்.

“டேய்.. எடுக்கலைன்னா புரிஞ்சுக்கடா. பத்து வருஷ கனவு. இவ்ளோ பெரிய தயாரிப்பாளர். ராக் ஸ்டார் ரமேஷ் டேட்ஸ்  இவருகிட்டதான் இருக்கு. அவர் சொன்ன சில மாற்றங்களோட ஃபைனலா கதை சொல்ல வந்திருக்கேன். உனக்கும் தெரியும். எத்தன வாட்டி கூப்பிடுவ?”

எதிர்முனையில், அழைத்த நண்பனின் குரலில் பதற்றம். “அது தெரிஞ்சுதான் கூப்டறேன். உடனே யூ ட்யூப் பாரு.  தீபாவளிக்கு வர்ற ராக் ஸ்டார் ரமேஷோட ‘மாணிக்’ பட டிரெய்லர் ரிலீஸாகிருக்கு”

“சரி. அதுக்கென்ன அவசரம்? இவர்கூட டிஸ்கஷன் முடிஞ்சு பார்த்துக்கறேன்.”
”சொன்னாக் கேளுடா. உடனே பாரு. ப்ளீஸ். நான் அங்க வந்துட்டிருக்கேன். அடுத்து என்ன பண்றதுனு பேசிக்கலாம்” சொல்லிவிட்டு உடனே போனைக் கட் செய்தான்  நண்பன்.

அஷோக் ராஜா, குழப்பத்துடனே தயாரிப்பாளர் வேணு அருகில் வந்தான். மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்த  வேணு, கண்ணாடியைக் கழற்றியபடி “அஷோக் ராஜா, இதக் கொஞ்சம் பாருங்க” என்று நீட்டினார்.  அது, இயக்குநர் விகேஷ் இயக்கத்தில் ராக் ஸ்டார் ரமேஷ் நடித்து வெளிவர இருக்கும் ’மாணிக்’ படத்தின் டிரெய்லர். ப்ளே பட்டனை அழுத்தி ஓடவிட்ட அஷோக் ராஜாவுக்குக் கொஞ்ச நேரத்தில் உடலெங்கும் கெமிக்கல் ரியாக்‌ஷன்கள் நிகழ, கையிலிருந்த செல்ஃபோன் நழுவுவது போல உணர்ந்தான்.

“என்னய்யாது.. நீங்க மூணு மாசமா என்கிட்ட சொல்லிட்டிருக்கற கதையைப் படமா எடுத்து வெச்சிருக்கான். நீ என்னடான்னா ஏதோ புது கதை மாதிரி அதை என்கிட்ட சொல்லிட்டிருக்க?” - அவர் வார்த்தைகளில் இருந்த மரியாதை குறைந்ததை கவனித்தான் அஷோக் ராஜா.

“சார்... இல்ல சார். இது என் கதை. 10 வருஷம் முந்தியே ரெஜிஸ்டர் பண்ணி வெச்ச  கதை. அந்த ஒன்லைன் மட்டும் சின்க் ஆகுது சார். மொத்தமா இப்படியானு தெரியல. நான் பேசிட்டு சொல்றேன் சார்.”

“மொத்தமா எப்படியோ... டிரெய்லர்ல இருக்கற எல்லாமே உன் கதைலயும் இருக்கு. அதெல்லாம் அப்பறம் உன்  கதைல ஒண்ணுமே இல்லையே? இப்ப என்ன பண்ணப்போற?”

“எழுத்தாளர் சங்கத்துல பேசணும் சார். கணேசமூர்த்தி சார்தான் இப்ப தலைவர். அவரு வந்தப்பறம் இந்த மாதிரி பிரச்னைக்கெல்லாம் ஒரு தீர்வு வரும்னு நாங்க எல்லாருமே நம்பிட்டிருக்கோம். மொதல்ல அவரைப் பார்த்துட்டு என்ன பண்றதுன்னு சொல்றேன் சார்”

---

ணேசமூர்த்தி பெருமூச்சு விட்டார்: “நல்லா புரியுதுய்யா. நீயும் ஃபீல்டுலதான இருக்க? டைரக்டர் விகேஷ், ராக்ஸ்டார் ரமேஷ்கூட இந்தப் படம் எப்போ அறிவிப்பு வந்துச்சு. ஆறேழு மாசமா ’மாணிக்’ பட வேலைலாம் நடந்துட்டிருக்கு. இதான் கதைன்னு உனக்குக் கொஞ்சம்கூடவா தகவல் வர்ல?”

“இல்ல சார்... நெஜம்மா எனக்குத் தெரியாது.”

“ அட.... போனவாரம் ‘பொறுக்குமா உலகமே... கனவெல்லாம் கலகமே... ’ பாட்டு வந்து கன்னா பின்னானு ஹிட்டாய்டுச்சு. அந்த வரிகளைக் கேட்டுமா உனக்கு டவுட் வர்ல? ரெண்டு வாரத்துல ரிலீஸை வெச்சுக்கிட்டு இப்பப் போய் என் கதைன்னா என்ன அர்த்தம்னு வேண்டாமா?”

“சார் .. நான்  ரெண்டு மூணு வருஷமா தெலுங்கு ஃபீல்ட்ல வொர்க் பண்ணிட்டிருக்கேன். இங்க இருக்கற அப்டேட்ஸலாம் நியூஸ், வெப்சைட்ஸ்ல பார்க்கறதோட சரி. பாட்டெல்லாம் நானும் கேட்டேன் சார். ஆனாலும் டிரெய்லர் பார்த்தப்பதான் இவ்ளோ ஒற்றுமை இருக்குனு தெரியும் சார்.  செயற்குழு கூட்டி,  சீல் பண்ணி வெச்சிருக்கற என் பவுண்டட் ஸ்கிரிப்ட் படிங்க சார். நான் ஏன் இவ்ளோ பேசறேன்னு உங்களுக்கே புரியும்.”

“சரி... புகாருக்கு உண்டான தொகையைக் கட்டிட்டு, புகாரை சங்கத்துல சப்மிட் பண்ணிடு. நான் ஈ.சி. மெம்பர்ஸ்கூட கலந்துகிட்டு என்ன பண்றதுனு சொல்றேன்.”
--
ன்னும் இரண்டு வாரங்களில் ‘மாணிக்’ ரிலீஸ். அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வேலைகளில் இருந்த விகேஷ், கணேசமூர்த்தியின் அழைப்பை மறுக்க முடியாமல், எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் அவரது அறைக்கு வந்தான்.

“உன்னோட  ஹீரோவுக்காக, இந்தக் கதையை சொல்லிட்டிருக்கான்யா அஷோக் ராஜா.  அவன் பத்து வருஷமா இந்தக் கதைய வெச்சுட்டுப் போராடிட்டிருக்கான். இப்ப தெலுங்குல கொண்டயராஜுகிட்ட அசோஷியேட்டா இருக்கான். தயாரிப்பாளர் வேணுகிட்டயும் பேசினேன்.   பையன் நல்ல பையன். க்ளீன். காசெல்லாம் அவனுக்கு மேட்டரே இல்லை. செழிப்பாதான் இருக்கான்.  அவனோட ஸ்கிரிப்ட்டை எக்ஸிக்யூட்டிவ் மெம்பர்ஸ் முன்னாடிதான் சீலையே ஒடைச்சுப் படிச்சோம்.”

“சார்.. ‘மாணிக்’ என்னோட கொழந்தை சார்.  ஒன்னரை வருஷமா, இஞ்ச் இஞ்ச்சா நானும் அசிஸ்டெண்ட்ஸும் உருவாக்கின கொழந்தை. இப்ப வந்து ஒருத்தன் அப்படிச்சொன்னா கேட்டுருவீங்களா சார்?”

“விகேஷ்... உனக்கு இது பத்தாவது படம். நீயும் ராக் ஸ்டாரும் அல்ரெடி மூணு ஹிட் கொடுத்தவங்க. தயாரிப்பு கருடா பிக்சர்ஸ் வேற. இதையெல்லாம் தெரியாம, உன் டைமை வேஸ்ட் பண்ண இங்க கூப்பிடலை. என் மேல உனக்கு மரியாதை இருக்கா இல்லையா?”

“நிச்சயமா இருக்கு சார்”

“அப்ப நீ மொதல்ல, அஷோக் ராஜாவோட இந்த பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படி. அப்பறம் பேசலாம்.”

சொல்லிவிட்டு இரண்டு காஃபி ஆர்டர் செய்தார்.  இரண்டு காஃபி, நான்கு ஆனபோனது விகேஷ் ஸ்கிரிப்ட்டை முடித்திருந்தான்.

தலைக்கு மேல் ஸ்டைலாக இருந்த கூலிங் க்ளாஸை, எடுத்து டேபிள் மேல் வைத்தான் விகேஷ். எழுந்தான். முகம் களையிழந்திருந்தது. டேபிள் மேலிருந்த ஏ.சி ரிமோட்டை எடுத்து டெம்ப்ரேச்சரைக் குறைத்தான். கணேசமூர்த்தி, ஓரக்கண்ணால் அவனை கவனித்தாலும், கவனிக்காதது போல செல்ஃபோனில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

“சார்..” கணேசமூர்த்தியை அழைத்துக் கொண்டே அவரருகில் வந்தான்
விகேஷ்.
---
டுத்தநாள் சமூக ஊடகங்களில் கணேச மூர்த்தி கையெழுத்துடன் எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளிவந்த கடிதம் வைரலானது. ` ‘மாணிக்’ படம் யாரோ அஷோக் ராஜா- அப்டின்றவர் கதையாமே?’, ‘யாரிந்த அஷோக் ராஜா?’ என்று ஆன் லைனில் ஆரூடங்கள் பறந்தன. இரண்டு மணி நேரத்தில் மொத்த யூ ட்யூப் சேனல்களும் கணேச மூர்த்தியின் வீடு, ஆஃபீஸ் என்று படையெடுத்தன. இரண்டு நாட்களுக்கு இணையம் முழுவதும் அவரது பேட்டிகள்.

“அஷோக் ராஜா கதையும், விகேஷின் கதையும் ஒன்றுதான். ஆனால் அதற்குப் பிறகான காட்சிகளில் வேறு சில சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த அடிப்படைக் கதையில் ஒற்றுமை இருக்கிறது.  அஷோக் ராஜா அதே ராக் ஸ்டார் ரமேஷை வைத்து இதை இயக்க தயாரிப்பாளரை ஃபிக்ஸ் செய்ததெல்லாமும் உண்மை. ஆனால் இப்போது அது முடியாது என்பதால், டைட்டிலில் அவருக்கு ஒரு கிரெடிட் கொடுக்க மட்டுமே சொன்னேன். அதற்கு விகேஷ் ஒப்புக்கொள்ளாததால், அஷோக் ராஜாவுக்கு எங்களால் உதவ முடியவில்லை. இப்போது அஷோக் ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 31ம் தேதி கோர்ட்டில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது.” - இதையே வேறு வேறு விதமான எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் கணேச மூர்த்தி.

இன்னொரு புறம் விகேஷ் பொங்கிக்கொண்டிருந்தான். “கணேச மூர்த்தி சொல்வதை ஏற்க முடியாது. இருவது வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய பல படங்களும் வேறு சில படங்களை ஒத்திருந்தவைதான். இப்போது நியாயவான் போல பேசும் அவர், அதையெல்லாமும் கருத்தில் கொண்டிருக்கலாம்” என்கிற ரீதியில் கணேச மூர்த்திக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

சமூக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அல்வா போல இந்தச் செய்திகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்தன. ராக் ஸ்டார் ரமேஷின் ரசிகர்கள், விகேஷுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் களமிறங்கினர். இன்னொரு பக்கம், விகேஷ் அதற்கு முன் இயக்கிய திரைப்படங்களெல்லாமே காப்பியடிக்கப்பட்டவை என்று ஆரம்பித்து அவனை வறுத்துக் கொண்டிருந்தனர்.

மீடியாவின் இன்னொரு டீம் யார் அந்த அஷோக் ராஜா என்று தேடிக் கொண்டிருந்தனர். ‘கோர்ட்டில் வழக்கு இருப்பதால் பேச மாட்டார்’ என்று அஷோக் ராஜாவின் வழக்கறிஞர் பேட்டி கொடுத்தார். அவனது முகம் கூட எதிலும் காட்டப்படவில்லை. ஆனால் பத்திரிகைகள் மோப்பம் பிடித்து தெலுங்கு  டைரக்டர்  கொண்டயராஜுவைப் பிடித்தார்கள். ஏர்போட்டில் மீடியாவிடம் ‘ஹி ஈஸ் டெஃபனட்லி டேலண்டட்.. என்னோட கடைசி மூணு படம் ஹிட்டடிச்சதுல அஷோக் ராஜாவுக்கு பங்குண்டு. மத்தபடி மாணிக் பிரச்னை பத்தி நான் ஒண்ணும் சொல்லமுடியாது’ என்று பேட்டி கொடுத்தார். 
--

செல்ஃபோனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த விகேஷ், ஒரு கட்டத்தில் தாங்காமல் ட்விட்டரிலிருந்து வெளிவந்தான். கணேச மூர்த்தியை அழைத்தான்.

“சார்... இதெல்லாம் எனக்குத் தேவையா சார்? இந்த ஒரு படம் மட்டுமில்லாம, எல்லாப் படமும் இப்படித்தான் அப்டிங்கற ரேஞ்சுக்குப் பேசறாங்க சார். என்கூட ஃப்ரெண்ட்ஸா இருந்தவங்களே எனக்கெதிரா இதை எடுத்துட்டுப் போறாங்க சார்.  நாம ப்ளான் பண்ணினது இப்படியெல்லாம் போகும்னு நான் எதிர்பார்க்கல சார்..”

எதிர்முனையில் கணேசமூர்த்தி மௌனமாய் இருந்தார். “ஸாரி விகேஷ். இதெல்லாம் நானும் எதிர்பார்க்காததுதான். எனக்கு மட்டும் என்ன? கூடவே இருக்கற எத்தனை பேர் எனக்கெதிரா பேசிட்டு இருக்காங்கன்னு பார்க்கறப்ப ஆச்சர்யமாவும் வெறுப்பாவும் இருக்கு. ஆனா ஒரு நல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சது இது. நம்மளைச் சுத்தி இருக்கறவங்களைப் புரிஞ்சுக்கற வாய்ப்பா மட்டும் இதைப் பார்க்கலாம் விகேஷ்.”

“ஓகே சார். நாளைக்கு 31ம் தேதி. கோர்ட்டுக்கு நான் வர்ல சார். நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு ஈவ்னிங், உங்களுக்கு ஒரு லெட்டர் குடுத்துடறேன். நாளைக்கு கோர்ட்ல வெச்சு அதை ரிலீஸ் பண்ணிக்கோங்க.”
--

டுத்தநாள். ஒட்டுமொத்த மீடியாவும் கோர்ட் முன் கூடியிருந்தன. விகேஷ் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதை, அஷோக்ராஜாவின் வழக்கறிஞர் சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் கணேச மூர்த்தி நின்று கொண்டிருக்க, அவரை நோக்கி நீண்டன மைக்குகள்.

“டைட்டிலில் அஷோக் ராஜாவின் பெயரை போடுவதாக விகேஷ் ஒப்புக்கொண்டு கடிதம் கொடுத்துவிட்டார். ஆகவே...” அவரைத் தொடரவிடாமல்  எல்லா நிருபர்களும் கூச்சலாக ஒரே கேள்வியைக் கேட்டனர். “சார்... அதெல்லாமே வக்கீல் சொல்லிட்டார்.. அஷோக் ராஜா எங்கே? அவர் என்ன சொல்கிறார்?”

சிறு புன்னகை இடைவெளி விட்டார் கணேச மூர்த்தி. பிறகு,  “இதோ இவர்தான் அஷோக் ராஜா.” கொஞ்சம் விலகி, பின்னால் நின்று கொண்டிருந்த அஷோக் ராஜாவை முன்னே தள்ளி நிறுத்தினார். “நீ பேசுப்பா” என்றார். ஒட்டுமொத்த மீடியாவும் அஷோக் ராஜாவை ஃபோகஸ் செய்தது. அடுத்தநாள் எல்லா நாளிதழ்களிலும் முன்பக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் அஷோஜ் ராஜா.
---

தீபாவளி களை கட்டிக்கொண்டிருந்தது. `மாணிக்’  இரண்டு ஷோக்கள் முடிந்ததும் சோஷியல் மீடியா படத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. ஆன்லைனில் ரெட் ஷர்ட் ரெமொ முதல் தட்டீஸ் தருண் வரை எல்லாரும் ஒருமித்தவகையில் ‘விகேஷ் - ரமேஷ் காம்போவில் இதுதான் ஆகச் சிறந்த படம். ப்ளாக் பஸ்டர்’ என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருந்தனர். நான்கு மணிக்கு, அஷோக் ராஜா, சத்யம் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் நிருபர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

“தேங்க்ஸ் கார்டுல உங்க பேருக்குக்கூட தியேட்டர்ல அவ்ளோ ரெஸ்பான்ஸ். படம் விஷுவலா எப்படி இருக்கு?”

“விகேஷ் சார் அவரோட சீனியாரிட்டியை நிரூபிச்சிருக்கார். ராக் ஸ்டார் ரமேஷுக்காக அவர் எழுதிருக்கற சில காட்சிகள், எனக்கு பாடம் மாதிரி இருந்தது. அதே பேஸ் லைன்லதான் நானும் யோசிச்சிருந்தேன்னாலும், அவர் மாதிரி சீன்ஸ் யோசிச்சிருக்கவே மாட்டேன். படம் வேற லெவல்ல இருக்கு” - அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே டைரக்டர் விகேஷிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. 

“உடனே கணேசமூர்த்தி சார் வீட்டுக்கு வா.”

---
ஷோக் ராஜா, கணேச மூர்த்தியின் அறைக்குள் நுழைந்தபோது அங்கே விகேஷ் அமர்ந்திருந்தான். விகேஷைப் பார்த்ததும் கைகூப்பியபடி “இப்ப்பதான் படம் பார்த்துட்டு வரேன் சார். என்ன சொல்றதுனு தெரியல. அடிப்படை ஒண்ணுதான் அப்டின்னாலும் உங்க ஸ்கிரீன் ப்ளேவும், காட்சியமைப்புகளும் தனியா தெரியுது சார். உங்களுக்கு எதிரா கேஸ் போட்டதுக்கு சாரி சார். எனக்கு அந்தச் சூழ்நிலைல....”

கணேச மூர்த்தி அவனைக் கையமர்த்தினார்.

“நான் சொல்லித்தானே கேஸ் போட்ட? உனக்கொண்ணு சொல்லவா? அன்னைக்கு ஸ்கிரிப்ட் படிச்சப்பவே விகேஷ், உன் பேரை டைட்டில்ல போடறேன்னு ஒத்துகிட்டார். உன் பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படிச்சுட்டு அவர் அவ்ளோ ஆச்சர்யப்பட்டார். இன்ஃபாக்ட், உன் ஸ்கிரிப்ட்ல இருந்த ஒண்ணு ரெண்டு சீன்ஸை, அச்சு அசலா அவர் படத்துல ஷுட் கூட பண்ணிருந்தார். ஆனா உன் ஸ்கிரிப்ட் படிச்சுட்டு அதையெல்லாம் எடுத்துட்டார்.”

”சார்.. என்ன சொல்றீங்க? அப்ப அவர் பேர் போட ஒத்துகிட்டார்னா எதுக்கு கேஸ் போடச் சொன்னீங்க. எத்தன பேர் வாய்ல பேச்சு வாங்கி, ஏன் இதுல்லாம்?”

“ஓகே.. சொல்றேன். அன்னைக்கு நீ என்கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டப்ப நீ காசு கேட்கல. அங்கீகாரம்தான் கேட்ட. கார்டுல பேர் போடறதால உனக்கு அங்கீகாரம் கிடைக்கும்தான். ஆனா எத்தனை பேருக்கு அதுனால உன்னைத் தெரியும்? நானும் விகேஷும், அதையெல்லாம் தாண்டி உன் பேர் ரசிகர்களுக்குப் போகணும்னு ஆசைப்பட்டோம். எந்த டைரக்டரும் முதல் ஸ்கிரிப்ட் இப்படி ஆச்சுன்னா, அவனை நிரூபிக்கறது ரொம்பவே கஷ்டம். ஃபீல்டுல தெரியலாம். பப்ளிக்குக்கு உன்னைத் தெரியணும்னா என்ன பண்ணலாம்னு யோசிச்சோம்”

இப்போது விகேஷ் குறுக்கிட்டான்.  “நம்ம மீடியாக்கு எப்பவுமே ஒரு விஷயம் கிடைச்சதுன்னா அதைப் பரபரப்பாக்கிடணும். அதை யோசிச்சுதான் கணேச மூர்த்தி சார்தான் இப்படி  ரியலா ஸ்கிரீன் ப்ளே பண்ணினாரு. அதுனாலதான் உன்கிட்டகூட சொல்லல. இப்ப நீ யார்னு தமிழ்நாட்ல எல்லாருக்குமே தெரியும். செயற்குழுவுக்குத் தெரியாம இதெல்லாம் பண்ணினதால, மனசாட்சி கேட்கலைன்னு ரிசைன் பண்றேன்னு சொல்றாரு...” - விகேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனது அலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் ராக் ஸ்டார் ரமேஷ்.

“என்னா டைரக்டரே... நம்ம காம்போவுல, நாலாவது படத்துலயும் சிக்ஸரே அடிச்சுட்டீங்களே..  இது ஹிட்டாச்சுன்னா அடுத்த படமும் உங்ககூடதான்னு ஏற்கெனவே சொன்னேன். இப்ப அஃபிஷியலாவே சொல்றேன். அடுத்த படமும் உங்ககூடதான். எப்ப கதை சொல்ல வர்றீங்க?”

“தேங்க்ஸ் ரமேஷ். அடுத்து உங்ககூட இயக்குநரா இணையல. தயாரிப்பாளரா இணையறேன். கதை சொல்ல நாளைக்கு டைரக்டர் வருவாரு”

“யாரு?”

“அஷோக் ராஜா” என்றான் விகேஷ்.
__

டிஸ்கி: இந்தக் கதை, டாபிகல் ஸ்டோரி என்ற ஜானரில் சமகால சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனைக் கதையே.   

Friday, January 5, 2018

எலி.. பூனை - ஒரு கூட்டணிக்கதை!

இன்னைக்கு ஒரு கதை சொல்றேன். தெரிஞ்சிருந்தாலும், வேற வழியில்லை. படிங்க. 

பொந்துக்குள் இருக்கிற எலி ஒன்று, வெளியே உலா போகலாமென்று எட்டிப்பார்க்கிறது. வெளியே ஒரு பூனை நின்றுகொண்டிருக்க, டபக்கென்று உள்ளே ஓடிவிடுகிறது எலி.

பூனை பொந்தின் அருகே வந்து, 'வாய்யா ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்’ என்று எலியை அழைக்கிறது.

“நோ. நான் உனக்கு இரை. நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கறது?” என்று மறுத்துவிடுகிறது எலி. அந்த நேரம் பார்த்து, வேடன் விரித்த வலை ஒன்றில் சிக்கிக்கொள்கிறது பூனை. 

இப்போது வெளியில் வருகிறது எலி. “யோவ்.. மாட்டிகிட்டேன்யா.. வலையைக் கடிச்சு, அறுத்து காப்பாத்து” என்று எலியைக் கேட்கிறது பூனை.

(இதை என் சின்னவயதில், எனக்குச் சொன்னவரிடம் ‘பூனையே கடிச்சுக்கவேண்டியதுதானே?’ என்று கேட்டேன். ‘போடா வெளில’ என்று அனுப்பிவிட்டார். பிறகு மகாபாரதக்கதை என்று கேள்விப்பட்டு தேடிப்படித்தேன் என்பது கிளைக்கதை.)

கதைக்கு வருவோம். இப்போது எலி சொல்கிறது.. “நான் உன்னைக் காப்பாத்தி வெளில கொண்டுவந்தா, என்னை நீ தின்னுப்புடுவ. போய்யா” என்று மறுத்தது. அந்த நேரம் பார்த்து கொஞ்ச தூரத்தில் பாம்பு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைத் துரத்திக்கொண்டு கீரியும்.

'அச்சச்சோ.. பாம்பு வருதே’ என்று எண்ணிய எலி உடனே பூனையுடன் ஒரு ஒப்பந்தம் போடுகிறது. ”இந்தாய்யா.. நான் வலையைக் கிழிச்சு உன்னையக் காப்பாத்தறேன். ஆனா அதுக்கு முன்ன, வலைக்கு மேலயே உன் சைடுல ஒளிஞ்சுக்கறேன். என்னிய ஒண்ணும் பண்ணிப்புடாத. பாம்பு வருது. அது போனதும்  வலையைக் கட் பண்ணி வுடறேன்” என்கிறது. பூனையும் ஒப்புக்கொள்கிறது. கொஞ்சநேரத்தில் பாம்பும், கீரியும் அந்த இடத்தைக் கடந்துவிட “சரி.. இப்ப கட் பண்ணு” என்கிறது பூனை.

“மாட்டேன்”

“டே... லூசு. வாக்கு குடுத்திருக்க.. மறந்துட்டியா?” என்று கேட்கிறது பூனை.

"குடுத்தேன், மறுக்கல.. மறக்கல. ஆனா இப்ப கட் பண்ண மாட்டேன். இரு வேடன் வரட்டும்” என்கிறது எலி.

“ஏன்யா இந்தக் கொலவெறி?”

“அப்படிலாம் இல்லை. வேடன் பக்கத்துல வர்றப்ப, அறுத்துவிட்டா, அவன்கிட்ட இருந்து தப்பிக்கறதுலதான் உன் கவனம் இருக்கும். நானும் ஓடிரலாம். அதுனால அப்பத்தான் கட் பண்ணுவேன்” என்று தீர்க்கமாகச் சொல்கிறது எலி. அதேபோல, வேடன் அருகே வரவர.. வலையை அறுத்துவிடுகிறது எலி. பூனையும் வெளியே வந்ததும் ஓடிவிடுகிறது.

மீண்டும் கொஞ்சநேரத்தில் எலிப்பொந்தில் அருகே வருகிறது பூனை. “நீயும் எனக்கொரு ஹெல்ப் பண்ணிருக்க.. நானும் ஒரு ஹெல்ப் பண்ணிருக்கேன். வெள்ல வாயேன். நாம ஃப்ரெண்ட்ஸா இருப்போம்” என்று கேட்கிறது.

“நொட்டு! இந்த வேலைலாம் என்கிட்ட வேண்டாம். உனக்கும் எனக்கும் ஒரு தேவை இருந்தது. ரெண்டுபேருமே பரஸ்பரம் உதவியா இருந்துட்டோம். ரெண்டுபேருக்குமே அப்படி இன்னொரு சந்தர்ப்பம் வந்தா பார்க்கலாம். மத்தபடி நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கறதெல்லாம் வாய்ப்பே இல்லை. கெளம்பு கெளம்பு” என்றுவிட்டது எலி.

அவ்ளதான். அப்பறம்.. இதை ஏன் இப்பச் சொல்றேன்னு நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க! 

Tuesday, January 2, 2018

ஸ்க்ரீன் டைம் - ஒரு விளக்கம்

 “பரிசல், இரண்டு நாள்களுக்கு முன் எழுதிய பதிவில் ‘ஸ்கிரீன் டைம் அதிகமாகிவிட்டது’ என்று எழுதியிருந்தீர்கள். மொபைல் பார்த்துக்கொண்டிருப்பதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிந்தது. அதிகம் என்பதை எப்படிக் கணக்கிட்டுச் சொல்கிறீர்கள்?”


கீழே ‘வாசுதேவன், மணச்சநல்லூர்’ என்று போட்டால் உட்டாலக்கடி என்பீர்கள். ஆனால் நிஜமாகவே சிலர் அழைத்தும், இன்பாக்ஸிலும் கேட்ட கேள்வி இது.

ஸ்கிரீன் டைம் என்பது மொபைலைப் பார்ப்பது மட்டும் அல்ல. ஒளி உமிழும் எந்தத் திரையையும் பார்த்துக்கொண்டிருப்பது ஸ்கிரீன் டைம்தான்.

டெலிவிஷன், கம்ப்யூட்டர், வீடியோ கேம் கேட்ஜெட்ஸ், மொபைல் ஃபோன் என்று எல்லாமே.

மருத்துவர்கள் ஒருநாளின் அதிகபட்ச ஐடியல் ஸ்கிரீன் டைம் என்பது 2 மணிநேரங்கள் மட்டுமே என்று தயவுதாட்சண்யம் இல்லாமல் சொல்கிறார்கள். ’டாக்டர்.. இந்த ஆய்வெல்லாம் எந்தக் காலத்துல பண்ணிருப்பாங்க. இந்தக் காலத்துல போய் வெறும் 2 மணிநேரம் மட்டுமே ஸ்கிரீனைப் பார்த்துட்டிருக்கணுமா சாத்தியமா’ என்று கேட்டால் ‘20-20-20 ரூல் ஃபாலோ பண்ணு’ என்றார்.

அதென்ன 20-20-20?

ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும், திரையிலிருந்து 20 அடிகள் தள்ளிப்போய், 20 செகண்ட்ஸ் வேறு எதையாவது பார்ப்பதுதான் 20-20-20 ரூல். அது கண்ணுக்கு நல்லது.

தொடர்ச்சியாக ஒளி உமிழ்திரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் கண் எரிச்சல், கண் வலி, தூக்கமின்மை, கழுத்து-தோள்பட்டை வலி, அடிக்‌ஷன், Mood disability என்பதில் ஆரம்பித்து சிலபலவற்றை பட்டியல் இடுகிறார்கள்.


மீண்டும் சொல்கிறேன். கிண்டில் அதிக ஒளி உமிழ்வதில்லை. புத்தகங்கள் இன்னும் பெட்டர். எத்தனை டிவைஸ்கள் வந்தாலும், எல்லாவற்றிலும் படித்தாலும் இன்னமும் நான் புத்தகக் கட்சிதான். அதுதரும் ஆதாரசுகம், ஈடில்லாதது.

சும்மா ஓடிக்கொண்டிருக்கும் டிவியை அணைத்துவைப்பது, அலுவலகத்தில் வேலையைத் தாண்டி எதற்கும் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருப்பது, சாப்பிடும்போது, பேசும்போதெல்லாம் மொபைல் குட்டிச்சாத்தானை பாக்கெட்டை விட்டு எடுக்காமல் இருப்பது, ஓவியம் இசை என்று வேறேதாவதொன்றில் தீவிர கவனம் செலுத்துவது என்று இதிலிருந்து தப்பிக்க குட்டிக்குட்டியாயும், பெரிதாயும் நிறைய வழிகள் உண்டு.

இவையெல்லாவற்றையும்விட முக்கியமாகத் தேவை, இதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற மனம். தாலிகட்டுவதையோ, பிடித்த ஆளுமையைச் சந்திப்பதையோகூட நேருக்கு நேர் பார்க்காமல் மொபைல் ஸ்கிரீன் வழியாகத்தான் பார்க்கிறோம். அத்தியாவசியமாகிவிட்டவைகளுக்கு வேறு வழியில்லை. சிலவற்றை நிச்சயம் மாற்றலாம்.

மொபைல் ஸ்கிரீன் டைமை கண்காணிக்க, மொபைலிலேயே (:-)) நிறைய Apps உள்ளன. நான் வைத்திருப்ப்பது Moment எனும் ஆப். ப்ரீமியம் மெம்பர்ஷிப் (400 ஓவா!) கட்டி கோச்சிங் எல்லாம் எடுத்தேன். திடீரென்று முதல்நாள் இரவு, ‘நாளைக்கு காலையில் 11 மணிவரை ஃபோனைக் கையில் எடுக்காதே’ என்று மிரட்டும். இப்படிச் சில. அதன் சுவாரஸ்யம் கருதிப் பின்பற்றினேன். ‘குட்நைட் சொல்லல, என் மெசேஜையே பாக்கல, Blah Blah’க்கள் எல்லாம் அரங்கேறின. அதுதந்த திரில்லுக்காகவே அவ்வப்போது தொடர்ந்தேன்.

இந்தப் பதிவை எழுதும்போது, அந்த App-ல் எனது வீக்லி ரிப்போர்ட் பார்த்தேன். சராசரியாக ஒருநாளைக்கு 6 மணிநேரம் 35 நிமிஷம் மொபல் ஸ்கிரீனைப் பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளுக்கு 107 முறை ஃபோனைக் கையில் எடுக்கிறேன் என்கிறது அது.

இன்றைக்கு மட்டும் - இதை எழுதிய நேரம் காலை 9.30 மணி - இதுவரை 2 மணிநேரம் 22 நிமிஷம் உபயோகித்திருக்கிறேன். இதைத் தாண்டியும், 2 சிறுகதைகள் (சுப்ரமணிய ராஜு... வாவ்...!) படித்திருக்கிறேன். Communication குறித்த ஆங்கிலப்புத்தகம் ஒன்றில் 12 பக்கம் படித்திருக்கிறேன். இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

'முன்னமாதிரி படிக்கவெல்லாம் நேரம் இல்லை’ என்று எவராவது சொன்னால் என் சார்பில் அவர் மண்டையில் நறுக்கென்று கொட்டுங்கள்.. ப்ளீஸ்.

Monday, January 1, 2018

இனிய இரண்டாயிரத்துப் பதினெட்டு!

நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே யாருக்காவது அட்வைஸிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது அல்லது ‘அட்வைஸ்லாம் இல்ல’ என்று எதையாவது உளறிக்கொண்டிருக்கிறோம். நேற்றைக்கு #வாசகசாலை க் கூட்டத்தில் இறுதி உரை - அதாவது அந்த நிகழ்வின் இறுதி உரை - வழங்கச் சொல்லி, மைக் கொடுக்கப்பட்டபோது அப்படித்தான் ஒரு அறிவுரையை அள்ளிவழங்கினேன். காந்திஜி சிறுவனுக்கு ‘அதிகம் சர்க்கரை திங்காதே’ என்று அறிவுறுத்திய கதை போல, அது கிட்டத்தட்ட சென்ற வருடம் நான் கடைபிடித்தது என்பதால் கொஞ்சம் உறுதியாகவே அந்த விஷயத்தைச் சொன்னேன். 2018ல் இதை எல்லாரும் கடைபிடிக்கவேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
நம் நியூரான்களில் பரபரவென்று ஓடும் கருத்தோஃபோபியாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கச் சொன்னதுதான் அது. நாட்டில் என்ன நடந்தாலும் உடனடியாக அதைப்பற்றி நாலு வரிகளோ, நாற்பது வரிகளோ எழுதிக் கொட்டாவிட்டால் மனசு அடங்காமல் திரிகிறது.
நிஜத்தில் நம் கருத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பதே நிஜம். அப்படியும் கருத்துச் சொல்லும் Urge இருந்ததென்றால் தோன்றுவதை எழுதி டிராஃப்டில் போட்டு வையுங்கள். பிறகு அதைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குறைந்தது 24 மணிநேரங்கள் கவனியுங்கள். ‘அட... இதத்தானே நான் நெனைச்சேன். மொதல்லயே போட்டிருந்தா எனக்கு இந்த 500 லைக்ஸ் கிடைச்சிருக்குமே’ என்று தோன்றும். அப்படிக் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் ஒவ்வொரு லைக்ஸிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அது நீங்கள் எப்போது எழுதினாலும் கிடைக்கும். முதலில்எழுதி, ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேசமயம், ஒருவிஷயத்தில் உங்களுக்கு தீவிரமான, தெளிவான கருத்து இருந்து அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்களென்றால் எழுதலாம். இல்லாதபட்சம், அதைப் பற்றிய அறிவும், தெளிவும் உள்ளவர்கள் எழுதியதைப் படியுங்கள். விவாதங்களைக் கேளுங்கள். இணையப் பரிச்சயம் இல்லாத சக நண்பர்களிடம் அதுபற்றி உரையாடுங்கள். 24 மணிநேரம் கழித்து அதைப் பற்றி எழுதும்போது இன்னும் தெளிவும் தீவிரமும் கிடைக்கும்.
இந்த ஒரு சுய ஒழுங்கை மட்டும் கடைபிடித்தால்.. அட்லீஸ்ட் என்னுடைய டைம்லைனாவது நியூஸ் பொல்யூஷனால் பாதிக்காமல் இருக்கும் என்ற சின்ன ஆசைதான் காரணம்.
மற்றபடி, இந்த 2018-ல் இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ் இல்லாமல் சினிமா டிக்கெட் புக் செய்யவும், அவரசமாக ஆஃபீஸ் போகும்போது சிக்னலில் சிவப்பு விழாமலிருக்கவும், லேட்டாக வீட்டுக்குப் போகும்போது சிரித்தபடி மனைவி கதவு திறக்கவும், கேட்டதுக்கு டபுள் மடங்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிஃப்ட் தரவும், பர்ஸை கையில் கொடுக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் அமையவும், நீங்கள் நிற்கும் க்யூ வேகமாக நகரவும், இன்னபிற இனிமைகள் நடக்கவும் வாழ்த்துகள்!

2017 - கற்றுக்கொண்டதும்.. பெற்றுக்கொண்டதும்!

2017. எல்லா வருடங்களையும்போலவே எதையெதையோ கற்றுக்கொண்ட ஆண்டு.
எப்போதும்போலவே எனக்குள் புதுப்புது திறப்புகளை இசையும் வாசிப்பும் திறந்தன. அதேபோல மனிதர்களும்.
ட்விட்டர், ஃபேஸ்புக் மோகமெல்லாம் ஒழிந்து வருடங்களாகிவிட்டது. இந்த இடங்களில்லெல்லாம் லைக்ஸை எண்ணாமல் ஒரு பார்வையாளனாகக் கடந்துபோகும் மனம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள இவற்றை நாடுகிறேன் என்பதில் சந்தேகமில்லை. நேரடியாக லைக்கோ, கமெண்டோ இல்லாவிட்டாலும் இன்னாருடைய கண்கள் இந்தப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கும் என்ற உணர்வே போதுமானதாக இருக்கிறது. ஒரு வாழ்த்தைப் பெற்றதைப் போல உணரவைக்கிறது.
ட்விட்டரில் #135DaysOfKalyanji என்றொரு Hashtag ஆரம்பித்து 135 நாட்களுக்கு கல்யாண்ஜியின் புத்தகங்களில் இருந்து எனக்குப் பிடித்த Quotesஐப் பகிர்ந்து கொண்டேன். கைப்பட எழுதி, லே அவுட் செய்து தினமுமொன்றாகப் பகிர்ந்தேன். மனத்திருப்தியாக அமைந்த நாட்கள் அவை. இப்போதும் கூகுளில் #135DaysOfKalyanji என்று தேடினால் கிடைக்கும். கல்யாண்ஜியிடம் அதை யாரோ பகிர ‘என் கையெழுத்துதான் இது’ என்றிருக்கிறார். நான் அவரிடம் ‘அது என் கையெழுத்து’ என்று சொன்னபோது ஆச்சர்யப்பட்டார். என்னுடையது போலவே இருந்ததே என்றார்.
ஸ்கிரீன் டைம் எப்போதும்போல அதிகம்தான். 2018லாவது குறைத்துக்கொள்ள பிரயத்தனப்படலாமென்றிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல வெறித்தன வாசிப்பைத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமாக சிறுகதைகள். லாசரா, ரேமண்ட் கார்வர், யங் ஹா கிம், அரவிந்த் அடிகா, தஞ்சை பிரகாஷ், எஸ்ரா, ஜெமோ, கந்தவர்வன், சர்வாகன், டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், ஜெயந்தன் என்று கலந்து கட்டிய வரிசை. ஒரு புத்தகம் என்றெல்லாம் இல்லாமல், ஒரு நாளைக்கு இரண்டு சிறுகதைகள் என்ற இலக்கில் பறக்கிறது குதிரை. நல்ல காபிக்குப் பிறகு சில மணி நேரங்கள் ஒன்றுமே குடிக்காமல் இருப்போமே, அப்படி ஒரு சில கதைகளின் தாக்கத்தால், சில நாட்களுக்கு ஒன்றுமட்டும்தான். கிண்டில், நல்லதொரு துணைவனானது இந்த வருடம்தான்.
நண்பன் கட்டதுரை ‘30 Days Walking Challenge’ என்ற ஒன்றை ஆரம்பிக்க, 5 கிமீ, 10 கீமீ என்று தினமும் நடைப்பழக்கம் ஆரம்பித்தது. அதுவும் மழையில் இயர்ஃபோனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நடக்கும் அனுபவமெல்லாம் கிடைத்தது. ஒருநாளைக்கு - 3 தவணைகளில் - 33 கிமீ நடந்ததெல்லாம்.. நடந்தது.. நடக்கும்போது, ஆடியோ புக்ஸ் கேட்பது, சில நல்ல உரைகளைக் கேட்பது என்று அந்த நேரமும் பயனுள்ளதாய் அமைவது டபுள் தமாக்கா! கூடவே அவன் பரிசளித்த்த அடிடாஸ் ஷூவும்.
பாட்டு கேட்பதில் புதிய உத்திகளை இந்த வருடம் முயன்றேன். ஒரு பாடலை, அதில் வரும் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை மட்டும் உன்னிப்பாக கவனித்து ஏழெட்டு முறை கேட்பது.. அதைத் தொடர்ந்து அந்த இசைக்கருவி வேறு பாடல்களில் எப்படியெப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சங்கிலித்தொடர் போல கேட்பது இப்படி. கோரஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறும் பாடல்கள் என்னென்ன இருக்கின்றன, எப்படியெப்படியெல்லாம் கோரஸ் பாடப்பட்டிருக்கின்றன.. இப்படி. இப்படித்தான் ‘இசையில் தொடங்குதம்மா’வும், ‘மகராஜனோடு ராணி வந்து சேரும்’ பாடலும் கடந்த ஒரு வாரமாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

​எப்போதும்போல மனிதர்கள் நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காலமெல்லாம் கற்றுக்கொண்டாலும் நமக்குப் போதவில்லை. சின்னத் துணுக்குறலுக்கும் ‘என்ன ஆச்சு கிருஷ்ணா?’ என்று கேட்கும் நண்பர்களையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவர எண்ணி, சில எழுதினேன். எழுதியவற்றில் இரண்டுதான் எனக்குப் பிடித்தது. மற்றவற்றை மீண்டும் படிக்க எண்ணி, ஓரம்கட்டி வைத்தேன். ஒரு சில எழுத்துக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்ந்து கொண்டேன்.
1993லிருந்து எனக்குக் கனவாக இருக்கும் ஆனந்தவிகடனில் பணி என்பது நேரடியாக நிறைவேறியது இந்த ஆண்டுதான். பணியின்பொருட்டே நிறைய படிக்க நேர்ந்ததும், மகிழ்ச்சியான விஷயம். ஏஜண்ட் வீட்டுக்கே சென்று முதல் ஆளாக வாங்கிய ஒரு பத்திரிகையின் ஒவ்வொரு பக்கங்களையும் வெளிவரும் முன்னே ரசித்துப் படித்து கருத்தைப் பகிர்ந்து என்று.. மனநிறைவான விஷயம். பணியையும் தாண்டி, அதில் என் பெயரும் வரவேண்டும் என்று அவ்வப்போது எழுதியும் கொண்டிருந்தேன். ஒரே இதழில் ஆறு படைப்புகளெல்லாம் வந்தது இந்த வருடம்தான். இந்த வருடத்தின் ஆகச்சிறந்த மனநிறைவு.. இந்த விஷயம் எனலாம்.
2018ல் இன்னும் படைப்பு சார்ந்து தீவிரமாக இயங்கும் எண்ணம் இருக்கிறது. சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவருவது சர்வ நிச்சயம். குறைந்த பட்ச இலக்காக, ஒன்று இருக்கிறது.
நாளைக்குத் தேதி எழுதும்போது, 2017 என்று முடிக்காமல் இருக்க வேண்டும்.

எழுதிய நாள்: 31.12.2017

ஒரு மொட்டையின் கதை!


டிசம்பர் 29 2017
--- 
"வரியெல்லாம் சேர்த்து மொத்தமா 1000 ரூவாய்க்குள்ள சொல்லுங்கம்மா” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அது ஒரு யுனிசெக்ஸ் சலூன். ஹேர்கட் செய்ய நான் அங்கு சென்றிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் அவரது மகள்.

”அப்படின்னா இந்த Pack போட்டுக்கோங்க” என்று எதையோ காட்டினார். “டேக்ஸ்லாம் சேர்த்து 890 ரூவா வரும்”

அந்த அம்மா தலையாட்ட, மகள் முகத்தில் அதிருப்தி. “அதெல்லாம் போதும்ப்பா. போ” என்று அம்மா சொல்ல, உள்ளே சென்றார் மகள்.

சோபாவில் அமர்ந்திருக்கும்போது, அந்த அம்மாவின் முகம் வாடியிருந்தது. நிலைமையைச் சமாளிக்கப் பேச்சுக்குடுத்தேன். கொட்டித்தீர்த்தார் அவர்.

“எல்லாம் என் தப்புதான். சின்ன வயசுல நல்லா விளையாடறானு கோ-கோ விளையாடவிட்டேன். இப்ப என்னடான்னா இவ்ளோ கறுத்துட்டா ” என்று அங்கலாய்த்தபடி ஆரம்பித்தார்.

விஷயம் இதுதான். அவரது மகள் கறுப்பாக இருந்தார். அதில் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. “இப்ப காலேஜ் படிக்கறா. கோ-கோல ஸ்டேட் லெவல்ல விளையாடிருக்கா. ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவா. இவளே கொரியோகிராஃபும் பண்ணுவா. இப்ப காலேஜ்ல ஏதோ ஃபங்ஷனுக்கு டெய்லி ப்ராக்டீஸ் போகுது. ’கறுப்பா இருக்க. அதுனால நீ சொல்லிக்குடுத்துட்டு, ஆடறப்ப நாலாவது வரிசைல போய் ஆடு’னு சொல்லிட்டாங்கனு இன்னைக்கு ஒரே புலம்பல். அதான் வந்தோம்” என்றார்.

நானும், அந்த சலூனில் பொறுப்பில் இருந்த பெண்மணியும் அவருக்கு எடுத்துச் சொன்னோம். ‘அழகுன்றது வெளில இல்லம்மா.. கறுப்புங்கறது வெறும் நிறம்தான்’ போன்ற எல்லா க்ளிஷே வசனங்களையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தோம். “எல்லாம் நானும் சொல்லிருக்கேன் தம்பி. யாரோ ஒருத்தர் டெய்லியும் கிண்டல் பண்றாங்க. ‘ஏண்டி இவ்ளோ கறுப்பா இருக்க?’ன்னு கேட்கறாங்கனு சொல்லுவா.” என்றார் அந்த அம்மா. அந்த சலூன் பொறுப்பாளினி, ‘அப்பப்ப இங்க கூட்டிட்டு வாங்கம்மா, சர்வீஸ்க்கு அல்ல.. நான் பேசறேன் அவங்ககிட்ட” என்றார். 

நான் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. அங்கிருந்து ஹேர்கட் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். குளித்து முடித்து, இந்த விஷயத்தைச் சொன்னேன். “யாரோ என்னமோ சொல்லணும்னு இருக்கணும். அதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா?” என்று உரையாடல் தொடர்ந்தது. எனக்கு போனமாசமே மொட்டை போட ஆசை இருந்தது. அப்போது ‘எதுக்கு? சும்மா இருங்க’ என்ற உமா, “இப்ப போட்டுக்கவா?” என்று கேட்டதும் ‘ஓகே... உங்க இஷ்டம்’ என்றார்.

சட்டென்று கிளம்பி, கீழே வந்து ஒரு பார்பர் கடையில் மொட்டை போட்டுக்கொண்டேன்.
இரண்டு நாட்களாக ‘எதுக்கு மொட்டை.. எந்தக் கோயில்... அய்ய.. நல்லாவே இல்ல. பார்க்கவே சகிக்கல. உங்க மொத்த அழகும் முடில மட்டும்தான் இருந்தது போலயே’ என்று எக்கச்சக்க கமெண்ட்ஸ்!

ஒரே மாதிரி இருக்கறதுல என்ன த்ரில் இருக்கப்போவுது? ல்ல?

.