2017. எல்லா வருடங்களையும்போலவே எதையெதையோ கற்றுக்கொண்ட ஆண்டு.
எப்போதும்போலவே எனக்குள் புதுப்புது திறப்புகளை இசையும் வாசிப்பும் திறந்தன. அதேபோல மனிதர்களும்.
ட்விட்டர், ஃபேஸ்புக் மோகமெல்லாம் ஒழிந்து வருடங்களாகிவிட்டது. இந்த இடங்களில்லெல்லாம் லைக்ஸை எண்ணாமல் ஒரு பார்வையாளனாகக் கடந்துபோகும் மனம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள இவற்றை நாடுகிறேன் என்பதில் சந்தேகமில்லை. நேரடியாக லைக்கோ, கமெண்டோ இல்லாவிட்டாலும் இன்னாருடைய கண்கள் இந்தப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கும் என்ற உணர்வே போதுமானதாக இருக்கிறது. ஒரு வாழ்த்தைப் பெற்றதைப் போல உணரவைக்கிறது.
ட்விட்டரில் #135DaysOfKalyanji என்றொரு Hashtag ஆரம்பித்து 135 நாட்களுக்கு கல்யாண்ஜியின் புத்தகங்களில் இருந்து எனக்குப் பிடித்த Quotesஐப் பகிர்ந்து கொண்டேன். கைப்பட எழுதி, லே அவுட் செய்து தினமுமொன்றாகப் பகிர்ந்தேன். மனத்திருப்தியாக அமைந்த நாட்கள் அவை. இப்போதும் கூகுளில் #135DaysOfKalyanji என்று தேடினால் கிடைக்கும். கல்யாண்ஜியிடம் அதை யாரோ பகிர ‘என் கையெழுத்துதான் இது’ என்றிருக்கிறார். நான் அவரிடம் ‘அது என் கையெழுத்து’ என்று சொன்னபோது ஆச்சர்யப்பட்டார். என்னுடையது போலவே இருந்ததே என்றார்.
ஸ்கிரீன் டைம் எப்போதும்போல அதிகம்தான். 2018லாவது குறைத்துக்கொள்ள பிரயத்தனப்படலாமென்றிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல வெறித்தன வாசிப்பைத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமாக சிறுகதைகள். லாசரா, ரேமண்ட் கார்வர், யங் ஹா கிம், அரவிந்த் அடிகா, தஞ்சை பிரகாஷ், எஸ்ரா, ஜெமோ, கந்தவர்வன், சர்வாகன், டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், ஜெயந்தன் என்று கலந்து கட்டிய வரிசை. ஒரு புத்தகம் என்றெல்லாம் இல்லாமல், ஒரு நாளைக்கு இரண்டு சிறுகதைகள் என்ற இலக்கில் பறக்கிறது குதிரை. நல்ல காபிக்குப் பிறகு சில மணி நேரங்கள் ஒன்றுமே குடிக்காமல் இருப்போமே, அப்படி ஒரு சில கதைகளின் தாக்கத்தால், சில நாட்களுக்கு ஒன்றுமட்டும்தான். கிண்டில், நல்லதொரு துணைவனானது இந்த வருடம்தான்.
நண்பன் கட்டதுரை ‘30 Days Walking Challenge’ என்ற ஒன்றை ஆரம்பிக்க, 5 கிமீ, 10 கீமீ என்று தினமும் நடைப்பழக்கம் ஆரம்பித்தது. அதுவும் மழையில் இயர்ஃபோனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நடக்கும் அனுபவமெல்லாம் கிடைத்தது. ஒருநாளைக்கு - 3 தவணைகளில் - 33 கிமீ நடந்ததெல்லாம்.. நடந்தது.. நடக்கும்போது, ஆடியோ புக்ஸ் கேட்பது, சில நல்ல உரைகளைக் கேட்பது என்று அந்த நேரமும் பயனுள்ளதாய் அமைவது டபுள் தமாக்கா! கூடவே அவன் பரிசளித்த்த அடிடாஸ் ஷூவும்.
பாட்டு கேட்பதில் புதிய உத்திகளை இந்த வருடம் முயன்றேன். ஒரு பாடலை, அதில் வரும் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை மட்டும் உன்னிப்பாக கவனித்து ஏழெட்டு முறை கேட்பது.. அதைத் தொடர்ந்து அந்த இசைக்கருவி வேறு பாடல்களில் எப்படியெப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சங்கிலித்தொடர் போல கேட்பது இப்படி. கோரஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறும் பாடல்கள் என்னென்ன இருக்கின்றன, எப்படியெப்படியெல்லாம் கோரஸ் பாடப்பட்டிருக்கின்றன.. இப்படி. இப்படித்தான் ‘இசையில் தொடங்குதம்மா’வும், ‘மகராஜனோடு ராணி வந்து சேரும்’ பாடலும் கடந்த ஒரு வாரமாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
எப்போதும்போல மனிதர்கள் நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காலமெல்லாம் கற்றுக்கொண்டாலும் நமக்குப் போதவில்லை. சின்னத் துணுக்குறலுக்கும் ‘என்ன ஆச்சு கிருஷ்ணா?’ என்று கேட்கும் நண்பர்களையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவர எண்ணி, சில எழுதினேன். எழுதியவற்றில் இரண்டுதான் எனக்குப் பிடித்தது. மற்றவற்றை மீண்டும் படிக்க எண்ணி, ஓரம்கட்டி வைத்தேன். ஒரு சில எழுத்துக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்ந்து கொண்டேன்.
1993லிருந்து எனக்குக் கனவாக இருக்கும் ஆனந்தவிகடனில் பணி என்பது நேரடியாக நிறைவேறியது இந்த ஆண்டுதான். பணியின்பொருட்டே நிறைய படிக்க நேர்ந்ததும், மகிழ்ச்சியான விஷயம். ஏஜண்ட் வீட்டுக்கே சென்று முதல் ஆளாக வாங்கிய ஒரு பத்திரிகையின் ஒவ்வொரு பக்கங்களையும் வெளிவரும் முன்னே ரசித்துப் படித்து கருத்தைப் பகிர்ந்து என்று.. மனநிறைவான விஷயம். பணியையும் தாண்டி, அதில் என் பெயரும் வரவேண்டும் என்று அவ்வப்போது எழுதியும் கொண்டிருந்தேன். ஒரே இதழில் ஆறு படைப்புகளெல்லாம் வந்தது இந்த வருடம்தான். இந்த வருடத்தின் ஆகச்சிறந்த மனநிறைவு.. இந்த விஷயம் எனலாம்.
2018ல் இன்னும் படைப்பு சார்ந்து தீவிரமாக இயங்கும் எண்ணம் இருக்கிறது. சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவருவது சர்வ நிச்சயம். குறைந்த பட்ச இலக்காக, ஒன்று இருக்கிறது.
நாளைக்குத் தேதி எழுதும்போது, 2017 என்று முடிக்காமல் இருக்க வேண்டும்.
எழுதிய நாள்: 31.12.2017
எழுதிய நாள்: 31.12.2017
No comments:
Post a Comment