Thursday, April 30, 2009

ஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப்....

இது எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு கடிதம்.

பயப்படாதீங்க.. வழக்கமான கடிதம் அல்ல.

உண்மையா என்று தெரியவில்லை... ஜேப்பியார் என்றொரு ப்ரொஃபசர் இருந்தாராம். அவர் ஆங்கிலத்தில் கொல்வதை... ச்சே.. சொல்வதையெல்லாம் தொகுத்து அவரது மாணவர்கள் புத்தகமே வெளியிட்டிருக்கிறார்களாம். அதிலிருந்து சில பகுதிகள்..


****************************

# க்ரவுண்டில்....

“All of you stand in a straight circle”

“There is no wind in the balloon.”

“The girl with the mirror please comes her front” (கண்ணாடி போட்ட பொண்ண முன்னாடி வரச்சொல்றாராம்!)

***************************

# ஒரு பையன்கிட்ட ரொம்பக் கோவமா....:

“I talk , he talk , why you middle middle talk?”

**************************

# மாணவர்களை தண்டிக்கும்போது..:

“You , rotate the ground four times...” (க்ரவுண்ட நாலு தடவை சுத்தச் சொல்றாரு!)

“You , go and understand the tree...”

“You three of you stand together separately.”

“Why are you late - say YES or NO ......”

***************************

# ட்ரஸ் கோடுல தலைவர் ரொம்ப ஸ்டிரிக்டாம். அது சம்பந்தமா பேசும்போது...


“Every body should wear dress to college
Boys no proplum
Girls are pig proplum . (pig=big)
Girls should wear only slawar no nitee.
Girls should not wear T shirt , U shirt , V shirt.. but if you want to wear .... remove it when inside the campus and put it out side the campus”

***************************

க்ளாஸ் (CLASS!)ல அவரோட சில Class பேச்சுகள்...

“Open the doors of the window. Let the atmosphere come in.”

“Open the doors of the window. Let the Air Force come in.”

“Cut an apple into two halves - I will take the bigger half.”

“Shhh...Quiet , boys...the principal JUST PASSED AWAY in the corridor”

“You , meet me behind the class. (Meaning AFTER the class..)”

"Both of u three get out of the class."

“Close the doors of the windows please. I have winter in my nose today.”

“Take Copper Wire of any metal especially of Silver..... Take 5 cm wire of any length....”

****************************

சார் ஒரு விழாவுக்கு லேட்டா வர்றாரு.... நேரா மேடைக்குப் போய் மைக்ல பேசறாரு...

“Sorry.. I am late , because on the way my car hit 2 muttons (Meaning goats).


**********************

ஒரு காலேஜ்ல புதுசா சேர்ந்த மாணவர்கள்கிட்ட...

"This college strict, u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"


"No ragging this college. Anybody rag we arrest the police "


*******************

# அவரது ஆகச் சிறந்த பேச்சு....

சார் ஒரு சினிமாக்கு போயிருக்காரு.. மனைவி கூட. அங்க இவரோட ஸ்டூடண்டைப் பார்த்துட்டாரு. அவன் இவரைப் பாக்கல. அடுத்த நாள் க்ளாஸ்ல...

"Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theater"



.


முடியல!




.

Wednesday, April 29, 2009

(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009

இந்த அவியல் நான் எழுதியதுதான் எனவும் நான் என்பது பரிசல்காரன் ஆகிய என்னைத்தான் குறிக்கும் என்பதையும், என்னை என நான் குறிப்பிடுவது கிருஷ்ணகுமார் ஆகிய...

சரி விடுங்க... கற்பூரம் அடிச்சு சத்தியமா பண்ண முடியும்? நம்புங்கப்பா...

*************************************

ரெண்டு வாரம் முன்னாடி படிச்ச ஒரு நியூஸ். த்ரிஷா நடிச்ச டப்பிங் படம் ஒண்ணு ‘பட்டுக்கோட்டை அழகிரி’ என்கிற பெயரில் வெளிவருவதாக வந்த அறிவிப்பை அடுத்து, பலர் அந்தப் பெயர் நிஜமான பட்டுக்கோட்டை அழகிரியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகக் கருதியதால் பெயரை மாற்றிவிட்டார்களாம். புதிய பெயரைக் கேள்விப்பட்டதும் என் ரத்தம் கொதித்தது.. இந்தப் பெயர் நிஜமாகவே நம்ம நண்பர் அப்துல்லாவைக் குறிக்கிறதே என்று. உடனே இதுகுறித்து பதிவுலக நண்பர்களிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

படத்தின் புதிய பெயர்: புதுக்கோட்டை அழகன்.

*************************************************

ஜெயா டி.வி-யில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் வி.பி.எல். (வெட்டிப் பேச்சு லீக்) வயிற்று வலிக்கு காரணியாய் இருக்கிறது. பாஸ்கி, நீலுவை விட நீலுவுக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் (பேரென்னப்பா?) நபர் ரகளை தருகிறார். ஆங்கிலம் என்று அவர் பேசுவதும், நீலு டென்ஷனாவதும் நிஜம் போலவே இருக்கிறது. ஆனால் நீலுவின் முகம் காட்டும் கடுமை நடிப்பல்ல என்று சொல்கிறது.

இரண்டு நாள் முன் தனிமனித ஒழுக்கம் குறித்த விவாதம் நடந்தது அதில். நீலு ஒரு சம்பவம் சொன்னார். அவர் பல வருடங்களுக்கு முன் ப்ரான்ஸ் சென்றிருந்த போது அவர் நண்பர் காரோட்டிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவு. சாலையில் யாருமே இல்லை. இருந்தும் ரெட் சிக்னலுக்கு நின்று சென்றாராம் நண்பர்.

இதைக் கேட்ட நாணா (சரியா இவர் பெயர்? பாஸ்கிக்கு வலதுபுறம் இருப்பவர்) ‘இது பரவால்ல நான் ரஷ்யா போயிருந்தேன். நானும் ஃப்ரெண்டும் நடந்து போய்ட்டு இருந்தோம். ரோட்ல யாருமே இல்ல. ஆனாலும் ரெட் சிக்னல் பார்த்து ஃப்ரெண்ட் நின்னு போனான்’ என்றார்.

உடனே நம்ம இங்க்லீஷ்காரர் சொன்னார்.

“இது பரவால்ல. நான் செக்கோஸ்லோவாக்கியா போய்ட்டிருந்தேன். ஃப்ளைட்ல. கீழ ரெட் சிக்னல் விழுந்தது. ரோட்ல தானே ரெட் சிக்னல்னு அலட்சியப்படுத்தாம பைலட் நடு வானத்துல அந்தரத்துல ஃப்ளைட்டை நிறுத்தினாரு”

அரை மணிநேரத்துக்கு இடைவிடாமல் சிரித்தேன்!

**********************************************

தமிழ் விளம்பரங்களில் பிரபலங்களின் டப்பிங் குரல் தருவது யார் யார் என்று ஏன் எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைளும் எழுதுவதில்லை? சச்சின், அமிதாப், ஷாருக் எல்லாரும் தமிழில் பேசினால் எப்படிப் பேசுவார்களோ அதே மாடுலேஷன், குரலில் பேசுவது பாராட்டுக்குரியதல்லவா?

பாவம் இந்தக் கலைஞர்கள்.. 100% பெர்ஃபக்‌ஷன் குடுத்தும் மீடியாக்களில் அடிபடாமல் ஒரு பாராட்டு கூட இல்லாமல் உழைப்பது வேதனைதான்.

எல்லார்க்கும் என் சார்பில் பூச்செண்டுகள்!

***********************************

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய நண்பன். இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது. சமீபமாக அவனுடன் வெளியில் செல்லும் போது பர்சை ஒன்றுக்கு பலமுறை திறந்து பார்த்துக் கொள்வதைக் கவனித்தேன்.

‘தம்பி... என்னத அப்படி அடிக்கடி பார்த்துக்கற?” நேரடியாகவே கேட்டேன்..

பர்சைத் திறந்து அதை எடுத்தான். 10000, மற்றும் 1000 ருபையா (இந்தோனேஷியன் கரன்ஸி) நோட்டுகள்.

“கல்யாணத்து வந்த எங்க சொந்தக்காரர் குடுத்தார் சார். இந்தியன் ருபீஸா மாத்தற வரைக்கும் பத்திரமா வெச்சுக்கணும்ல சார். எவ்வளவு சார் வரும் ரூபாய்ல?” என்று கேட்டார்.

“பார்த்து சொல்றேன்” என்று அலுவலகம் வந்து xe.com பார்த்தேன்.

11000 இந்தோனேஷியா ருபையா = 50.78 இந்தியன் ரூபாய்கள் என்று வந்தது.

வெறும் அம்பது ரூபாய் 78 காசு!

சொன்னேன்.

“அடுத்த லீவுக்கு அந்தாளு வரட்டும் சார்” என்றான்.

“அப்படியெல்லாம் சொல்லாதப்பா” என்றதுக்கு சொன்னான்.


“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.

பாவமாய் இருந்தது!

*************************
இன்றைக்கு தனது புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தும் அண்ணாச்சி வடகரை வேலனது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் தழைத்தோங்க வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்!

*******************

இனி...

கவிதை – ம்ம்ம்ம்.. சரி வேணாம் சில ஜோக்ஸ்...

நாய் வளர்த்துட்டிருந்த ஒருத்தர் அது குட்டியே போடலன்னு நண்பர்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினாராம். நண்பர் சொன்னாராம்..

“நாயைத் தூக்கி காலி பாத்திரத்துல வெச்சுட்டு காலைல திறந்து பாரு”ன்னாராம் நண்பர்.

இவர் அதே மாதிரி பண்ணி, காலைல பார்த்தா பாத்திரத்துக்கு உள்ளே ஏகப்பட்ட நாய்கள்!

எப்படி?

‘எம்ட்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்!’ (EMPTY VESSELS MAKES MORE NOISE)

************

ஊர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.

ரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா?”

இவன் சொன்னான்:

“இல்ல சார். டெத்”

***************
மூணாவது.. ஹலோ.. ஹலோ.. சரி விடுங்க சொல்லல...

.

Tuesday, April 28, 2009

வாங்கிமுடிக்காத ஒன்று!

கடனின் அசல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது..
வட்டி அதிலிருந்து வந்து கறுப்புப் பணமாய் சேர்கிறது.


இந்த வாசகத்தைப் படித்துவிட்டு என்னை அழைக்கிறாய்.

‘எத்தனை கொடூரமானவன் நீ..?’

தொடர உன்னிடம் வார்த்தைகளில்லை. என்னிடமும் பதிலாகத் தர ஏதுமில்லை. நாம் பேசி எத்தனை மாதங்களிருக்கும்.. ஸாரி, வருடங்களிருக்கும்? இல்லை. யுகங்களாகிவிட்டன தோழா. நன் குடுத்த கடனை நீ திருப்பிக் கொடுக்காமல் ஆளனுப்பி வெறும் வட்டி வாங்கி வட்டி வாங்கியே நான் பணக்காரனானது உனக்கு வயிற்றெரிச்சலைத் தந்திருக்காலாம். அது வேறு உலகம், வேறு காலம். அங்கிருந்தது நீயல்ல.. அவன் இறந்து போய்விட்டான்.

கடன்காரன் என்பது வேறு. நண்பன் என்பது வேறு. நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் கடன்காரர்களிடெமெல்லாம் பாக்கெட்டை, பர்சை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது. இவன் இன்னும் எத்தனை வங்கிகளில் பணம் வைத்திருப்பான் என்று அது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. பணம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆனால் என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்தது கடன்.. வேறு வழியின்றி அசல் கிடக்காமல் வட்டியைத் தின்றே பெருத்துவிட்டது. அது ஆயிற்று எத்தனையோ வருடங்கள். உறவிருப்பதாய் எண்ணினால் அந்த வட்டியின் சதவிகிதத்தைக் கூட்டலாம்



காரணங்களா? அதன் தேவையென்ன இப்போது? விந்தையானது இந்த வாழ்க்கை.! பணத்தையெல்லாம் தனியார் வங்கிகளும், க்ரெடிட் கார்டு காரர்களுமே அடித்துச் செல்கின்றன. இந்த வாசகம் எப்படி உன்னில் என்னை நினைவூட்டியது? உன்னுடன் வரவு செலவு செய்துகொண்டிருந்த போது கடன் ஒரு தளிராகத்தான் இருந்தது.

வட்டிகள் பல வகைப்படலாம். கடனின் ஐ.பிநோட்டீஸாகவும் அது இருக்கிறது, அரஸ்ட் வாரண்டின் விலங்காகவும் அது இருக்கிறது. அப்போது ஐ.பி.நோட்டீஸை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். கடனை ஒழுங்காகக் கட்டி வட்டியை நீ குறைத்திருக்கவேண்டும். ஆனால் உனக்கு கடன் கொடுத்தபோது கொல்லப்பட்டபோது நான் வட்டி வாங்கியே உன்னைக்கொன்றேன். அசல் தனித்துவிடப்பட்டது. மனது பணப்பேய் பிடித்து தனித்தே திரண்டு வளர்ந்திருக்கும் இப்போது உனது அழைப்பு.. கண்ணியமா? அப்படியென்றால்.? நான் உன் பாங்க் பாலன்ஸ் பார்த்தே பேசுவேன்..

“ரெடிகேஷ், இல்லைன்னா செக்கா?"

*
Photo Courtesy: www.myspace.com

*************************

(மக்கள்ஸ்... இது ஒண்ணும் புரியலன்னா ஆதிமூலகிருஷ்ணனோட இந்தப் பதிவப் படிங்க..)

ஆதி.. ஸாரி!


.

Monday, April 27, 2009

பக்கத்து வீடு

பதினேழு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது.

ஒரு புத்தகத் தயாரிப்புக்காக சென்னை செல்ல வேண்டி வந்தது. முதல்முறையாக தனியாக சென்னை பயணம். தங்குவதற்காக எனது அத்தை விட்டிற்கு சென்றேன். போக் ரோட்டில் சிண்டிகேட் அபார்ட்மெண்டில் வீடு. 3வது மாடியோ, நான்காவது மாடியோ. அபார்ட்மெண்ட் என்ற பிரமாண்டத்தின் உள்ளே முதன்முறையாக செல்லும் பிரமிப்பில் எத்தனையாவது மாடியில் இருக்கிறோம் என்ற ப்ரக்ஞை இல்லாமல் ஒரு வீட்டின் அழைப்புமணியை அழுத்தி விட்டேன். திறந்தது யாரோ. அரைக் கோணத்தில் திறக்கப்பட்ட கதவில், கதவுக்கும் சுவற்றுமாக ஊசலாடும் ஒரு சங்கிலி.

“இது செகண்ட் ஃப்ளோர் E ப்ளாக் இல்லையா?”

“இல்லை” – சடாரென்று பதில் வந்தது.

“செகண்ட் ஃப்ளோர் E ப்ளாக் எங்கிருக்கு?”

“இது C ப்ளாக். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” சொன்ன சொல் காற்றில் கரையும் முன் அறைந்து சாத்தப்பட்டது கதவு. அப்புறமாய்த் தெரிந்தது.. அதே மாடியில்தான் அத்தை வீடு E ப்ளாக் இருக்கிறதென்று.

சென்னைப் பயணம் முடிந்து வரும் வரை ‘என்னதிது... ஒரே அபார்ட்மெண்டில் ஒரே மாடியில் அருகிலிருக்கும் வீட்டின் முகவரி கேட்டால் தெரியாது என்று சொல்லுமளவு அண்டை விட்டாரின் பழக்க வழக்கங்கள் குறைந்துவருகிறதா’ என்று மனதில் கேள்வி.

இன்றைக்கு இந்த அண்டை வீட்டாரைப் பகைக்கும் பழக்கம் வேரூன்றி, கிளைவிட்டு, பூத்துக் குலுங்கி நச்சுப் பழங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து தேசத்தைப் பகைத்து, பக்கத்து நாட்டைப் பகைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இதொன்றும் கண்டிக்கத் தக்க செயலே அல்லவே!

திருப்பூர் மாவட்டமானபோது எனது சொந்த ஊரான உடுமலைப்பேட்டையில் பல போராட்டங்கள். உடுமலைப்பேட்டையை திருப்பூரோடு இணைக்க வேண்டாம், கோவை மாவட்ட்த்திலேயே நாங்கள் தொடர்வோம் என்று. எல்லைகள் எப்படிப் பிரிக்கப்பட்டாலும் எல்லார்க்கும் சமமான சலுகைகள், சரியான முறையில் கிடைக்க வேண்டிய வசதி வாய்ப்புகளை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வழங்குவார்களேயானால் ஏனிந்தக் கூப்பாடுகள் நடக்கப் போகிறது? அவர்கள்மீதான நம்பிக்கையின்மைதானே இது மாதிரியான பிரச்சினைகளுக்குக் காரணம்?

சரி.. பக்கத்து வீட்டு பிரச்சினைக்கு வருவோம்:




அகராதி என்ன சொல்கிறது? NEIGHBOURHOOD என்றால் அண்மை, அருகாமை; NEIGHBOURLINES என்றால் நட்பு, நேசம், நன்மனம்: NEIGHBOURLY என்றால் ஆதரவான, நேசமுள்ள.

அப்படியெல்லாமா இருக்கிறது இன்றைக்கு அண்டைவீட்டாரோடான நட்பு? இருக்கிறதுதான். சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறதல்லவா?

எனது நண்பன். திருமணமாகி தனிக்குடித்தனம் போன காம்பவுண்டில் இவனுக்கு ஆதரவாக பக்கத்துவீட்டு குடும்பம் ஒன்று பழகிவந்தது. இரு வீட்டாருக்குமே ஒன்றரை வருடங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.

ஓரிரு வாரங்களுக்கு முன் அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பனின் மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே அமர்ந்தபோது, ஏற்கனவே வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு பெண்மணியும், அவரது அன்னையும் சடாரென வீட்டிற்குள் சென்று கதவு சாத்தினர்.

அவர்கள் செயல் வித்தியாசமாய்த் தோன்றவே வினவினேன்.

நண்பனது மகன் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்து விட்டானாம். அவர்கள் மகன் இவனுக்கு ஓரிரு மாதங்கள் மூத்தவனாக இருந்தும், இன்னும் நடக்கவில்லையாம். அதைப் பலமுறை பலவாறாகச் சொல்லி ‘உங்க கண்ணுபட்டுதான் இவன் நடக்கல’ என்பது போல எதுவோ பேசி, நண்பன் மகனைக் கண்டாலே கதவைச் சாத்திக் கொள்கிறார்களாம்.

வெறும் ஒன்றரை வயதுக் குழந்தை மேல் எல்லாம் வெறுப்பைக் காட்ட முடியுமா? என்றெனக்கு வியப்பாய் இருந்தது.

இது இப்படியென்றால் இன்னொரு சம்பவம்:

என் நெருங்கிய உறவினரின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தம்பதி. திருமணமாகி ஏழெட்டு வருடங்களாகியும் குழந்தை இல்லை. உறவினருக்கு ஒரு மகள். இரண்டாவதாய் மகன் ஜனித்தபோது அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி மிகுந்த நெருக்கம் காட்டியிருக்கிறாள். அந்த மகனை அவ்வப்போது அவர் வீட்டுக்குக் கொண்டு செல்வது, உறவினர் வேலையாய் எங்காவது செல்லும்போது ‘நான் பாத்துக்கறேன்’ என்று குழந்தையை வாங்கி வைத்துக் கொள்வது என்று இது தொடர்ந்திருக்கிறது.

நானும், உமாவும் ஒவ்வொரு முறை அங்கே செல்லும்போதும், அந்தக் குழந்தையை அவள் தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு கதவைத் தாளிட்டுக் கொள்வாள். வெறும் ஐந்து, பத்து நிமிடங்கள்தான் வந்து காட்டுவாள். விசாரித்ததில் ‘அந்தப் பெண்மணி குழந்தைமேல் மிகுந்த பாசம் வைத்திருக்கிறாள். நாங்கள் வைத்த பேரை விடுத்து அவளாக ‘பாலாஜி’ என்ற பெயரில்தான் குழந்தையை அழைக்கிறாள்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘எனக்கு இது பிடிக்கவில்லை, வண்டி தவறான வழியில் செல்கிறது’ என்றுவிட்டு வந்தேன். கடைசியில் அந்த உறவினரின் மனைவி, தான் செய்துகொண்டிருந்த வேலையை விட வேண்டிய அளவுக்கு இது வளர்ந்தது. ஆம், அந்த மகன் சொந்த தாயிடமும், தந்தையிடமும் வரமாட்டான். அந்தப் பெண்மணி இவன் பெயரை பாலாஜி எனவும், தனது மகன் என்றும் அங்கங்கே சொல்லி வைத்திருக்கிறாள். கோவிலுக்குக் கூட்டீட்டுப் போறேன்’ என்று சொல்லி, தனது உறவுகள் வீட்டுக்கெல்லாம் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியிருக்கிறாள். இப்போது அந்த உறவினரின் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டோடே இருந்து குழந்தையைக் கவனித்துக் கொள்கிறார்.

டெல்லியில் இதுபோல ஒரு சம்பவம் நடந்து DNA டெஸ்ட் வரை போனது. வழக்கில் நிஜ பெற்றோருக்கே வெற்றி. ஆனாலும் சம்பந்தப்பட்ட குழந்தை பக்கத்து வீட்டு ஃபோர்ஜரி பெண்மணியில்லாமல் சாப்பிடாது, தூங்காது என்ற நிலைக்கு வந்தது. அவளை மறக்கடிக்க அரசு வேலையை உதறிவிட்டு, ஆறு வருடங்கள் மாற்றலாகி வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டார்கள் ஒரு தம்பதியர்.

ஆக சிரிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தயக்கம் காட்டுகிற பக்கத்து வீட்டு மனோபாவமும் வேண்டாம். நீயும் நானும் ஒண்ணு என்று ஒட்டி உறவாடவும் வேண்டாம். எதிர்ப்படும்போது ஒரு புன்னகை. தேவைப்படும்போது உதவி. ஸ்பெஷலான நாட்களில் பலகாரப் பரிமாற்றங்கள் என்றிருந்தாலே போதும்.

கரண்ட் கட்டா?

‘உடனே பக்கத்துவீட்டில் பாரு.’

பார்ப்பதொன்றும் தவறில்லை. நமது ஃப்யூஸ் மட்டும் போயிருந்தால் சரிசெய்து கொள்ளலாமே என்றுதானே பார்க்கிறோம்!

இரண்டு வீட்டிலும் கரண்ட் இல்லையா? சந்தோஷம் என்று வீட்டிற்குள்ளே போகாதீர்கள்.

“சார்.. மேடம்.. கொஞ்சம் வெளில வாங்க” என்றழையுங்கள்.

நான்கைந்து நாற்காலிகளை வீட்டுமுன் எடுத்துப் போடுங்கள்.

எல்லாருமாய் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு பாடுங்கள். பழங்கதை பேசுங்கள். அலுவலக நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் சார்!

*********************

ரவிசுப்பிரமணியன் எழுதிய எனக்குப் பிடித்த ஒரு கவிதையோடு இதை முடிக்கிறேன்:

மனிதாபிமானம்

மரித்துப் போனது
மனிதமனம்.
பக்கத்துவீட்டு
மரணம்
எதிர்வீட்டுத்
திருட்டு
அடுத்த வீட்டுப்பெண்
ஓட்டம்
கோடிவீட்டுத்
தகராறு.

நமக்கேன் வம்பு
கதவை மூடு.


.

Saturday, April 25, 2009

கடிதம் (கடி தம் அல்ல…!)

அன்புள்ள பரிசல்காரன்

வணக்கம்.

நீங்கள் வலைப்பூ எழுதவந்த நாளிலிருந்து உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (மே 2008?) ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு தொடர்ந்து இல்லையென்றாலும் சுவாரஸ்யம் குன்றாமல் வலைப்பூவை நடத்திவருகிறீர்கள்.

உங்கள் பதிவுகளில் முதலில் என்னைக் கவர்ந்தது ‘தந்தை எனக்கெழுதிய கடிதம்’தான். அதேபோல ’உமாவுக்கு’. இரண்டுமே சீரியசான விஷயத்தை அழகுணர்ச்சியோடு சொல்லும் கடிதங்கள். அதுவும் தந்தை உங்களுக்கெழுதிய கடிதத்தின் கடைசி வரி… இன்னும் மறக்கமுடியாது.

சீரியசான எழுத்துகளில் நர்சிம் உங்களை அழைத்த ஏதாவது செய்யணும் பாஸ் எனக்குப் பிடித்த ஒன்று. தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் என்பதில் எனக்கும் உடன்பாடு என்பதால் அது பிடித்திருக்கலாம். மின்சார காண்டம் என்ற பெயரில் எழுதிய மின்பற்றாக்குறை பற்றிய கட்டுரையும் பிடிக்கும்.

ஆனால் நீங்கள் சீரியசான விஷயங்களை ஏன் அதிகமாக எழுதுவதில்லை? அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளும் உங்களிடமிருந்து வருவதில்லை. இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதுவதில்லை. (உங்களுக்கு இசை பிடிக்கும் என்பதை சர்வேசன், தேன்கிண்ணம் பதிவுகளில் உங்கள் சில பின்னூட்டங்களின் மூலம் அறிவேன்)

அதேபோல சில விவாதங்களில் உங்கள் வழவழ கொழகொழா போக்கும் பிடிக்கவில்லை. அதனால் உங்கள் கருத்து என்னவென்பதையே என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. யார் சண்டைக்கு வந்தாலும் உடனே அடங்கிப் போகிறீர்கள்.
பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல நேரமில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவருக்கும் விரிவாய் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரே வாரத்தில் பிஸி மாறி ப்ரீயாகிவிட்டீர்களா என்ன? (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)

உங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது பரிசல்காரருக்கு நன்றி, அவரால்தான் நான் எழுதுகிறேன் என்று பதிவு ஆரம்பிப்பதுதான்.

1. இந்தக் கடிதத்தை வெளியிடும்போது தயவுசெய்து எழுத்துப் பிழைகளை சரிசெய்து வெளியிடவும்.

2. மெய்ல் ஐ.டியிலுள்ள என் பெயரைக் குறிப்பிடவேண்டாம். கீழே உள்ள பெயரையே குறிப்பிடவும். காரணம் கடிதத்தை வெளியிட்ட பின் சொல்கிறேன்.

3. உங்கள் மின்னஞ்சலின்போது அளவில்லா அன்போடு என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு.

வாழ்க வளமுடன்
-சந்திரசேகர்.

*********************

முதலில் இந்த மாதிரி கடிதங்களை வெளியிட்டு சொந்த விஷயங்களை பிரஸ்தாபித்துக் கொள்வதைப் பொறுத்து படித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி. இன்றைக்கு வேறொரு பக்கம் பிஸியாக இருப்பதாலும், பதிவெழுத வேறு மேட்டர் இல்லாததாலும் இதை வெளியிடவேண்டியதாயிற்று. அதுவுமில்லாமல் இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு….

என்னுடம் நெருக்கமாக இருக்கும் பதிவுலக நண்பர்கள் என்னைப் பற்றி அதிகம் அறிவார்கள். நேரடியாய் இல்லாமல் எழுத்தின் மூலம் மட்டுமே என்னை அறிந்த பலருக்கும் இதுபோன்ற பல கேள்விகள் இருக்கலாம். இதுபோல விளக்கம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கும் தெளிவு கிடைக்கும் என்பதால்.. (டேய்.. போதும்.. மேட்டருக்கு வா…)

சீரியஸான விஷயங்களை நான் எழுதுவதில்லை என்பதற்கு காரணம் நான் சீரியஸானவன் இல்லை என்பது மட்டுமே காரணம். அரசியல் குறித்தும் கட்சிகள் குறித்தும் எனக்கு எந்த தெளிவான சிந்தனையும் கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொள்கிறேன். ஏதாவது அரைகுறையாய் எழுதி மாட்டிக்கொள்வானேன் என்பதும் ஒரு காரணம். ‘எக்ஸ் என்ற அரசியல்வாதி இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று நான் எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது. இந்த நிலையில் நான் என்ன எழுத அரசியல் பற்றி?

இசை பற்றி..

நான் ஒரு இசை ப்ரியன். ஆனால் உயிர்மையில் ஷாஜி போன்றோரது கட்டுரைகளைப் படித்து விட்டு நானும் இசை பற்றி எழுதுகிறேன் என்று எழுதுகிறது துணிவு எவருக்கும் வருமா என்ன? எனக்குத் தெரிந்தது இசையில் வெறும் .0001% கூட இருக்காது! இளையராஜா பற்றி எழுத மிகுந்த ஆவலுண்டு. டாக்டர்.புரூனோ YYY என்பாரோ என்ற பயமும் காரணம்! (டாக்டர் சார்.. ச்சும்மா….!)

விவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.

பின்னூட்டத்திற்கு பதில் சொல்வது குசும்பன், வால்பையன் உள்ளிட்ட நண்பர்களின் அறிவுரைகளினால்தான். அது அல்லாமல் வேறொரு காரணமும் உண்டு:

நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை! இன்னொன்று நெருங்கிய நண்பர் ஒருவரே ‘ஓ.. லக்கி மாதிரி நீங்களும் பதில் சொல்றதை குறைச்சுட்டீங்களா?’ என்று கேட்டது! லக்கி பதில் எழுதுவதில்லை என்றால் அந்த நேரத்தை அச்சு எழுத்துக்காக ஒதுக்கி உருப்படியாக புத்தகம் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாம பதில் கூட சொல்லலைன்னா எப்படி?

********
என்னைப் பார்த்து பதிவெழுத வந்தார்கள் என்றால் ‘இப்படி எழுதறவனெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன?’ என்ற காரணமும் இருக்கலாம். ஆதிமூலகிருஷ்ணனை உங்களை சிறுகதை எழுத தூண்டுவது எது என்றால் சில வார இதழ்களில் சிறுகதை என்ற பெயரில் வரும் கதைகள்தான் என்பார். அதுபோல…

சரிதானே?


அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

Thursday, April 23, 2009

ஆட்டோக்காரர் சொன்ன ஆவிக்கதை Part 2

“என்னது... பெரியப்பா இறந்துட்டாரா? அப்பறம் அவர்கிட்ட பேசப்போறேன்னு சொல்றீங்க?”

“அவர்கிட்டன்னா அவரோட ஆவிகிட்ட”

“எதுக்காக?”

இதற்கு ஆட்டோக்காரர் சொன்ன கதை அதைவிட சுவாரஸ்யம்.

இவரது அப்பாவும், பெரியப்பாவும் (அதாவது அண்ணன், தம்பி) ரொம்ப நெருக்கமாம். கொடுக்கல் வாங்கல் எல்லாம் கணக்கு வழக்கில்லாமல் நடக்குமாம். பெரியப்பா ஏதோ அரசு உத்தியோகத்திலிருந்து ரிடர்யர்டாகி கிடைத்த பல லட்சங்களை (கிட்டத்தட்ட 6 லட்சம் என்றார்) அங்கங்கே முதலீடு செய்திருக்கிறார். திடகாத்திரமாக இருந்த அவர் ஒரு நாள் வழக்கமான டெம்ப்ளேட் இறப்பைப் போலவே (தண்ணி கேட்டாருங்க..போய்க் கொண்டு வர்றதுக்குள்ள பேச்சு மூச்சையே காணோம்க) இறந்துவிட்டாராம்.

இவரது பெரியப்பாவுக்கு ஒரே மகள். ஆட்டோக்காரரின் அப்பாதான் அவர்கள் குடும்பத்துக்கு காட்ஃபாதர் மாதிரி. எல்லாருமாய் கணக்குப் பார்த்ததில் இவரது சேமிப்பு, ரிடயர்மெண்ட் பணம், அது இது என்று கிட்டத்தட்ட 15 லட்சம் இருக்க வேண்டிய பணம், வெறும் பத்து லட்சத்துக்குதான் கணக்கு வந்ததாம். “அவன் கணக்கு எழுதிவெக்காமதான் கடன் குடுப்பான். யாருக்கு குடுத்திருப்பான்னு தெரிஞ்சுதுன்னா போதும்” என்று இவரது அப்பா யோசித்து ....

“கோயமுத்தூர்ல எனக்குத் தெரிஞ்ச மீடியம் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட பேசிட்டேன். போய்ப் பேசிட்டு வரலாம்” என்று இறந்தவர் மகள், இவர் எல்லாருமாய் கோவை போயிருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆட்டோக்காரரும் கிளம்பிச் செல்கிறாராம்.

“அவங்க நேத்தே போய்ட்டாங்க சார். எனக்கு இதுலயெல்லாம் நம்பிக்கை இல்லை. அப்பா திட்டி வரச்சொன்னார்” என்றார்.

எனக்குள் இருந்த 007 ‘இவன்தான் அதுல பல லட்சத்துல ஆட்டையப் போட்டவன்’ என்று சொன்னது. ஆனால் கேட்கவில்லை. (ஒரு சிறுகதையின் கருவை வெளியே சொல்லிவிட்டேனோ?

ஆவிகளுடன் பேசுபவர்களை மீடியம் என்று அழைப்பார்கள். இதுகுறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி பிறிதொரு முறை எழுதுகிறேன். (என்னது மறுபடியுமா?)

உடுமலையில் நான் இருக்கும்போது ‘அமுதராணி தியேட்டர்கிட்ட ஆவிகிட்ட பேசறவர் ஒருத்தர் இருக்காரு. போலாமா’ என்று நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள். பிறகு நான் கன்னாபின்னாவென கமெண்ட் அடிப்பதற்கு பயந்து என்னை அழைத்துச் செல்லவில்லை.

அவர் ஏ,பி,சி,டி என்று எழுதப்பட்ட கட்டம் எல்லாம் போட்டு அதன் மேல் ஒரு டம்ளரை வைப்பாராம். டம்ளருக்குள்ளே கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் இருக்கும். வந்திருக்கும் இறந்தவருடைய சொந்தக்காரர் அந்த டம்ளர்மேல் ஒரு விரலை வைத்தால் சிறிதுநேரத்தில் அந்த டம்ளர் ஒவ்வொரு எழுத்தாக நகருமாம். அதாவது இறந்தவர் குமார் என்றால் K-U-M-A-R இப்படி.

‘யட்சகுஞ்சர நாளகத்தி பிஸிபேளாஹூளி சாமுத்ரிகா லட்சண சுந்தரவராந்திர குடமுருட்டி சீதா லட்சுமி நரசிம்மன்’ என்றொருத்தரை எனக்குத் தெரியும். அவர் இறந்தால் அவரது பெயரிலுள்ள எழுத்துகளில் நகர்ந்து நகர்ந்து டம்ளர் தேய்ந்தே போய்விடாதா என்ற யோசனை வந்தது.

Jokes apart, அந்தப் பெயர் எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் வந்த பெயர். எஸ்.வி.சேகர் அவரது அப்பாவின் ஆவியுடன் அடிக்கடி பேசுவாராம். பல பேட்டிகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘ஃபேமலில ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கணும்னா அவர்கிட்ட கேட்பேன். சரியா கைடு பண்ணுவாரு. இதுவரைக்கும் அவர் சொன்ன எதுவுமே தப்பி நடந்ததில்லை’ என்பார்.

எஸ்.வி.சேகர் நாடிஜோசியத்தை மிகவும் நம்புபவர். அது இன்னொரு கூத்து! இது பற்றியும் விரைவில் உங்கள் பரிசல்காரனின் வலைப்பூவில் எதிர்பார்க்கலாம்! (ம்ஹூம்.. இதுக்கெல்லாம் அழக்கூடாது. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்!)

இதில் புரியாத புதிர் என்னவென்றால் ஆவிகளின் மீடியமாக பேசுபவர் இறந்தவரின் மேனரிசங்களையும், ஸ்டைலையும் அப்படியே பிரதிபலிப்பாராம். அவர் சம்பந்தப்பட்ட சில தனிப்பட்ட ரகசியங்களைச் சொல்வாராம். இதே போல ஒரு மீடியத்திடம் பேசச் சென்றபோது இறந்தவரின் உறவினர் ஒருத்தரைப் பார்த்து ‘டேய் தனசேகரா.. நம்ம ஊர் ஆலமரத்துக்குப் பின்னாடி லட்சுமி கைய நீ புடிச்சு இழுத்தத கடைசிவரைக்கும் நான் யார்கிட்டயும் சொல்லவேல்லியேடா’ என்று மீடியம் சொன்னதாம். என்னைப் பொறுத்தவரை அந்த தனசேகரன் இதை மீடியத்தைப் பார்க்கப் போன இடத்திலோ, இறந்தவர் பற்றி புலம்பும்போதோ சொல்லியிருக்கலாம். அதைவைத்து மீடியம் சொல்லியிருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

(மேற்கண்ட தனசேகரன்-லட்சுமி சம்பவம் ஒரு உதாரண உடான்ஸ்தான்)

*********************

நேற்றைய ஆவி சம்பவங்கள் சிறுகதையா, உடான்ஸா என்றெல்லாம் கேட்டு லட்சக்கணக்கான விசாரிப்புகள். (ஒன்று = ஒரு லட்சம் எனக்கொள்க!) சம்பவங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால் ஆவி உண்மையா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

தெரியாத பாஷை பேசுவார்கள் என்பது நானே கண்ட உண்மை.

இதுகுறித்து நேற்று என்னிடம் பேசியதில் இரண்டு முக்கிய அழைப்புகளை இங்கே பதிவு செய்கிறேன். (இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா-னெல்லாம் புலம்பக்கூடாது.. ஆமா...)

“நீங்க எழுதினது உண்மைதான் கிருஷ்ணா. என் சொந்தக்காரரோட பொண்ணுக்கு அவங்க அப்பாவோட ஆவி உள்ள புகுந்துடுச்சு. அப்போ அந்தப் பொண்ணு அவங்க குடிக்கற மாதிரியே பீடி கேட்டு வாங்கிக் குடிச்சுது. அதுமட்டுமில்லாம அவங்கம்மாகிட்ட ரொம்ப அந்நியோந்நியமா பேசிச்சு. குரலெல்லாம் மாறி அவங்கப்பா மாதிரியே மாடுலேஷன்ல பேசிச்சு. அதுமட்டுமில்லாம அவங்க அம்மாகிட்ட சொன்ன சில தனிப்பட்ட விஷயம் பத்தியெல்லாம் பேசிச்சு. நானே கண்ணால பார்த்தேன்”

Again இதுவும் அந்த மகளிடம் தாயே இது உனக்கும் எங்கப்பாவுக்கும் மட்டும் தெரியும் என்று விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். மகள் அப்பாவின் பாடி லேங்கிவேஜையும், மாடுலேஷனையும் பேசுவது பெரியவிஷயமில்லையே...

மற்றொரு ஃபோன் இன்னும் சுவாரஸ்யம்:

“எல்லரையும் சமமா பார்க்கற தன்மை உங்ககிட்ட இல்ல கிருஷ்ணா”
“என்ன சொல்றீங்க.. புரியல”

“பதிவுல பொண்ணுக பேரை மாத்தி எழுதினீங்கள்ல? அவங்க மேல இருக்கற அந்த அக்கறை ஏன் உங்களுக்கு ஆவிகள் மேல இல்ல?”

“.....................”

“அதெப்படி அந்த ராஜன் ஆவி பத்தின ரகசியத்தை நீங்க பேரோட வெளில சொல்லலாம்? அதுவும் மிஸ்டர்.ராஜன் சார்’ன்னு பேரை எழுதினதுலயே நக்கல் வேற. இதெல்லாம் சரின்னு படுதா உங்களுக்கு? இதுதான் நடுநிலைமையா?”

நல்லவேளை ஃபோன் பண்ணினது நண்பர்தான். ஆவியெல்லாம் இல்ல!

Wednesday, April 22, 2009

ஆட்டோக்காரர் சொன்ன ‘ஆவி’க்கதை

பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை - காரணம் இதுவரை இவற்றில் எதையும் கண்டதில்லை, உணர்ந்ததில்லை.

இதில் ஆவி மட்டும் அவ்வப்போது என் சந்தேகத்தை கிளப்பிச் செல்லும்.

இரண்டொரு வருடங்களுக்கு முன் என்னுடம் பணி புரிந்த நண்பர் ஒருவரது மகள் கொஞ்ச நாட்களாகவே ‘எனக்கு கப்பக்கிழங்கு வேணும்’ ‘டீ வேண்டாம். கட்டங்காபி போதும்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள். பத்தாவது படிக்கும் அவளுடைய இந்த நடவடிக்கை மாறுதல்களைப் பார்த்து நண்பர் புலம்ப ‘கூட படிக்கற பொண்ணுக யாராவது மலையாளீஸ் இருப்பாங்க. அவ வீட்டுக்குப் போய் பழகியிருக்கலாம்’ என்று சமாதானப் படுத்தினோம்.

அடுத்த ஒரு சில நாட்களில் நண்பருக்கு அவரது மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. போய்ப் பார்த்ததில் மதிய உணவுக்கு உட்கார்ந்த மகள் தட்டில் இருந்த சோறை வீசி எறிந்து ‘எனக்கு புழுங்கலிரிசிதான் பிடிக்கும்னு ஒனக்குத் தெரியாதா? எத்தனை நாளா இந்த கேடுகெட்ட சாப்பாட்டை சாப்பிடறது?’ என்று கத்தியிருக்கிறாள். கத்தியது சுத்தமான மலையாளத்தில். நண்பருக்கோ, அவரது வீட்டாருக்கோ மலையாளம் தெரியவே தெரியாது. குரல் வேறு அடியோடு மாறிவிட்டிருந்தது.

உடனே பயந்து போய் அவர்கள் வீட்டாரும், அக்கம்பக்கத்தவரும் என்னென்னவொ சொல்ல நாங்கள் ‘நல்ல சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டீட்டுப் போங்க’ என்று அட்வைஸினோம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று க்ளூக்கோஸ் ஏற்றிக் கொண்டிருக்கும்போது (அந்தப் பெண் மயங்கிவிட்டிருந்தாள்) திடீரென விழித்துக் கொண்ட அவள் ‘அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு. அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு’ என்று கூச்சல் போட்டாள். (Again மலையாளத்தில்தான்)

என்னவென்று நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது நண்பரின் நண்பர் சர்ச்சிலிருந்து பாதிரியாரை அழைத்து வந்திருந்தார். பாதிரியாரும் அறையினுள் காலடி எடுத்து வைக்க மறுத்து (ரொம்ப கெட்ட சாத்தான் அவகிட்ட இருக்கு. நீங்க சாயந்திரமா ஜெபக்கூட்டத்துக்கு அவளை எப்படியாவது கூட்டீட்டு வாங்க) திரும்பச் சென்று விட்டார்.

அதற்குப் பிறகு நாங்கள் விசாரித்ததில் வந்த பேயின் பெயர் மிஸ்டர்.ராஜன். பூர்வீகம் கோழிக்கோடாம். அவர் காதலித்த பெண்ணை வேறு யாருக்கோ கல்யாணம் செய்து வைத்ததால் மிஸ்டர்.ராஜன் சார் தற்கொலை செய்து கொண்டாராம். இவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மிஸ்டர். ராஜன் சாரின் முன்னாள் காதலியும், அன்னாள் யாரோவின் மனைவியுமான அந்த அபலைப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாளாம். தற்கொலை செய்து கொண்ட தனது முன்னாள் காதலியைத் தேடி மிஸ்டர்.ராஜன் சார் ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறாராம். நண்பரின் மகள் சற்றேறக்குறைய மிஸ்டர்.ராஜன் சாரின் முன்னாள் காதலியின் சாயலை ஒத்து இருப்பதால் கொஞ்ச நாள் தங்கிவிட்டுப் போக வந்தாராம்.

“‘ஏண்டா டோங்கிரி.. காதலியை வாழ விடாம முட்டாள் தனமா தற்கொலைக்குத் தூண்டி சாகடிச்சுட்டு, ஆவியான பின்னாடியும் கள்ளக்காதலாடா?’ என்று கேட்டீர்களா அவனை?” என்று கேள்வி கேட்டபோது டரியலாகிப்போன பாதிரியார்..

“அப்படிச் சொல்லி சாத்தானை நாம் உசுப்பேற்றக் கூடாது. ‘இதோ பார்.. இந்தப் பெண் உன் காதலியின் சாயலில் இருக்கிறாளல்லவா.. இவளை நீ இப்படித் துன்புறுத்தலாமா’ என்று கேட்டு சாந்தப்படுத்தி அனுப்பினோம்” என்றார்.
.
’டீ காபி குடுத்து அனுப்ச்சீங்களா’ என்று கேட்க நினைத்து எதுக்கு வம்பு.. அந்த காதலியின் புருஷன் என் சாயலில் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்காமல் வந்துவிட்டேன்.

இன்னொரு சம்பவம் மிகச் சமீபத்தில் நடந்தது.

ஒரு ஞாயிறு. நிறுவனத்தில் பணி புரியும் சௌந்தர்யா என்ற பெண் அவரது அறையில் திடீரென காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் அவசர அழைப்பு வரவே சென்றோம். அந்தப் பெண் சௌந்தர்யா அவளது அறை முன் நின்றுகொண்டு அவள் முன் நின்று கொண்டிருந்த அவளது துறை நிர்வாகியைப் பார்த்து... (விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்தார்)

“ஏண்டா.. சௌந்தர்யா லேட்டா வந்தாலோ, லீவு போட்டாலோ என்ன ஏதுன்னு கேட்காம திட்டுவியா நீ? என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? அவ என்கிட்ட எப்படி அழுதா தெரியுமா? அவளுக்காகத்தாண்டா நான் வந்திருக்கேன்” என்று ஏசிக் கொண்டிருந்தாள்.

அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஃப்ரெண்டு பேய் அமெரிக்கன் இங்க்லீஷில் ஏசியது. அந்தப் பெண் சௌந்தர்யாவுக்கோ ஏ,பி,சி,டியைத் தவிர ஈயிலிருந்து இசட் வரை ஒன்றுமே தெரியாது!

நான் போய் ‘வெல்கம் டூ திருப்பூர். நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா’ என்று கேட்டபோது

“என் பேர் சங்கவி சார். என்னை உங்களுக்குத் தெரியலியா?” என்றாள்/றது.

‘தெரியல’ என்று சொன்னல் என் மீது பாய்ந்து வந்து ’இப்பத் தெரியுதா’ என்று கேட்கும் அபாயம் இருந்ததால்..

“சரி.. நீ ஏன்ம்மா சௌந்தர்யாவுக்காக வந்த? விடு நாங்க பார்த்துக்கறோம்” என்றதுக்கு கன்னா பின்னான்னு எங்களையும் வறுத்தெடுத்தாள்/தது.

கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருக்கும் எங்கள் HR மேனேஜர் ஒரு மிரட்டு மிரட்டவே ‘சரி எனக்கு அரியர்ஸ் பணம் குடுங்க. அப்பத்தான் போவேன்’ என்றாள்/றது.

“எந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு? செக்கா குடுக்கலாமா?” என்று நான் கேட்டதற்கு.. மீண்டும் என்னை முறைத்தாள்/தது.

“அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம், நீ மொதல்ல வண்டில ஏறு” என்றதற்கு “சரி.. செட்டில்மெண்டாவது குடுங்க. நான் செட்டில்மெண்ட் வாங்காம போய்ட்டேன் அப்போ” என்று அவள் சொல்ல, மேலும் மிரட்டி காரில் ஏற்றி அவள் (சௌந்தர்யா) வீட்டில் கொண்டு போய் விட்டோம்.

அந்த ஃப்ரெண்டு பேய் சொன்ன க்ளூவை வைத்து இன்க்ரிமெண்ட் சமயத்தில் அரியர்ஸும் வாங்காமல், செட்டில்மெண்டும் வாங்காமல் நின்றவர்களில் சங்கவி என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா என்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

(சங்கவி, சௌந்தர்யா என்ற பெயர்கள் மாற்றப்பட்ட பெயர்களே)

கொஞ்சம் கூட ஆங்கில அறிவே இல்லாத அந்தப் பெண் அமெரிக்கன் ஸ்லாங்கில் பேசியது எப்படி?

இதை எழுதும்போது கடந்த வருடம் நடந்த சம்பவம் ஒன்றும் ஞாபகத்திற்கு வருகிறது.

சென்னையோ, பெங்களூரோ சென்று விட்டு திருப்பூரிலிருந்து அதிகாலையில் நான் இருக்கும் இடத்துக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். திருப்பூரிலிருந்து 7, 8 கிலோ மீட்டர். வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்ததில்

“இந்த சவாரி முடிச்சுட்டு கோயமுத்தூர் அர்ஜெண்டா போகணும்க” என்றார்.

“ஏன்.. காலங்காத்தாலயேவா? அப்பறம் ஏன் சவாரி வந்தீங்க?” இது நான்.

“பல்லடத்துல ஃப்ரெண்டு வெய்ட் பண்றார்ங்க. உங்க ஏரியா வழியாத்தானே போகணும். அதான்...” என்றவரிடம் “கோயமுத்தூர்ல என்ன அர்ஜெண்ட் வேலை” எனக் கேட்க... சொன்னார்..

“எங்க பெரியப்பாகிட்ட பேசணும்”

“ஓ.. கோயமுத்தூர்ல அவர் எங்க இருக்கார்?”

“எங்க பெரியப்பா கோயமுத்தூர் இல்லைங்க. திருப்பூர்தான்”

“அங்க போயிருக்காரா?”

“இல்லைல்லங்க. எங்க பெரியப்பா செத்துட்டார்ங்க”

(சீரியலிலும், மர்மக் கதைகளிலும் தொடரும்போட கிடைக்கும் நல்லதொரு இடத்தை தவறவிடக்கூடாது. அதனாலும் ஆட்டோக்காரர் சொன்ன கதையை முழுவதுமாய் எழுதினால் ‘எனக்குப் போட்டியா?’ என்று உண்மைத்தமிழன் கோபித்துக் கொள்ளும் அளவு பெரியதாக வந்துவிடும் என்பதாலும்...)


-நாளை தொடரும்

Tuesday, April 21, 2009

கார்க்கியின் அவியலும் பரிசலின் காக்டெய்லும்

நல்லவங்க எல்லாருக்கும் வணக்கம்.

தலைப்பை பார்த்த உடனே புரிஞ்சு தலை சொறிஞ்சிகிட்டு அசடு வழிஞ்சுகிட்டு இருக்கற உங்க எல்லார்கிட்டயும் பெரிசா ஸாரி கேட்டுக்கறோம். (றோம்? நானும் கார்க்கியும்தான்!)

கொஞ்சம் பழங்கதைகள் பேசுவோமா?

சார்லி சாப்ளின் ஒரு தடவை கார்ல போய்கிட்டிருக்கறப்போ மாறுவேடப் போட்டின்னு கேள்விப்பட்டு ஒரு அரங்கத்துக்கு உள்ள புகுந்தாராம். சார்லி சாப்ளின் மாதிரி யார் சிறப்பா வேடமிட்டு வர்றாங்க’ என்பதற்கான மாறுவேடப் போட்டி. இவரு போய் கலந்துகிட்டாராம். இவருக்கு மூணாவது பரிசுதான் கிடைச்சுதாம்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு கவியரங்கத்துல போய்க் கலந்துகிட்டப்போ ‘டக்’னு இவருகூட உட்கார்ந்திருந்த மற்றொரு கவிஞர்கிட்ட இவர் எழுதிட்டு போன கவிதைச் சீட்டைக் குடுத்துட்டு அந்தக் கவிஞரோடதை இவர் வாங்கிகிட்டாராம். மேடைல இவருக்கு கன்னாபின்னான்னு கைதட்டலாம். அவர் கவிதைக்கு அவ்வளவா வரவேற்பில்லையாம்!

சரி... புரிஞ்சுடுச்சுதானே என்ன சொல்ல வர்றேன்னு..

இப்படி வெறுமனே ப்ளாக் எழுதிட்டு இருந்தாலும் எப்படி வரலாறுல இடம்பிடிக்கறதுன்னு பாத்ரூம்ல உட்கார்ந்து சிந்திச்சிகிட்டிருந்தப்போ கணநேரத்தில் தோன்றிய யோசனைதான் அது. உடனே (வெளில வந்துதாங்க..) கார்க்கியை அழைத்தேன்.

“சகா.. நாம எழுதற மேட்டர் நல்லா இருந்தாலும் இல்லைன்னாலும் பாராட்டுவாங்களா?”

“அப்படி இல்ல சகா” – இது கார்க்கி “நல்லா இல்லைன்னா நம்ம வட்டாரத்துல சுட்டிக் காட்டுவாங்க”

“சரி... ஒரு தடவை சுஜாதா சொன்னார். அட்டையைக் கிழித்துவிட்டால் எல்லா பத்திரிகையும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு. அது மாதிரி நாம என்ன எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கா?” – இது நான்.
இதுக்கு நாயகன் கமல் பதில்தான் கார்க்கியிடமிருந்து வந்த்து. “தெரியலயேப்பா..”

“சரி.. சோதிச்சு பார்த்துடுவோமா?”

“எப்படி?”

“அடுத்தவார காக்டெயிலை என் மெயிலுக்கு அனுப்பு. நான் அவியலை உன் மெயிலுக்கு அனுப்பறேன். நீ காக்டெய்ல்ல என் அவியலைப் போடு. நான் அவியல்ல உன் காக்டெய்ல் மேட்டர்களைப் போடறேன். கண்டுபிடிக்கறாங்களான்னு பார்ப்போம்”

“ஒகே டன்”

கார்க்கி ஒப்புக்கொள்ள எக்சேஞ்ச் ஆஃபரில் ஆபரேஷன் அவியல் ஆரம்பமானது. அதன்படி ஞாயிறு இரவு அவர் எனக்கனுப்ப, நான் அவருக்கனுப்ப..


நேற்று நீங்கள் காக்டெயிலில் படித்தது என் அவியல். இங்கே அவியலில் படித்தது அவரது காக்டெய்ல்! (சரி.. சரி.. அசடு வழிஞ்சது போதும்...)


பஸ்ஸின் பின்னால் விளம்பரம், பிரபுவின் நடிப்பு, ஞானக்கூத்தன் கவிதை, ரயில்வே ஸ்டேஷன் ரசனை, ஐ.பி.எல்லின் மாஸ், குருவியார் கேள்விகள் – எல்லாம் என் படைப்பு.

ஆனா...

படு சுவாரஸ்யமா போச்சுங்க நேத்து!

7 மணிக்கு அப்லோடு பண்ணீட்டு அலுவலகம் வந்து பார்த்தா எனக்கு 21 கமெண்ட். கார்க்கிக்கு வெறும் அஞ்சு கமெண்ட்.

பதினோரு மணிக்கு கார்க்கிகிட்டேர்ந்து ஃபோன்..

“சகா ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்னப்பா?”

“உங்க அவியல் சூடான இடுகைக்கு போட்ட ரெண்டே மணி நேரத்துல வந்துடுச்சு”

“காக்டெய்ல்?”

“ம்ஹூம்” - இதச் சொல்லும்போது அவ்ளோ சந்தோஷம் அவருக்கு.

நானும் பார்க்கறேன்.. பார்க்கறேன்.. யாராவது என் ஸ்டைலை வெச்சு கண்டுபிடிச்சு (அப்படின்னு ஒண்ணு இருந்தாத்தானே???) காக்டெய்ல்ல ஏதாவது கமெண்ட் போடுவாங்கன்னு பார்த்தா ம்ஹூம்..

கார்க்கி வேணும்னே அஜீத் மேட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தார். நானும் பின்னூட்டங்கள்ல சிற்சில க்ளூ குடுத்திருந்தேன். அப்படியும் யாரும் கண்டுபிடிக்கல.

இதுல நர்சிம் கூப்ட்டு பேசும்போது வேற “காக்டெய்ல் படிச்சீங்களா”ன்னு கேட்டேன். “அருமையா எழுதிருக்கான் பார்த்தீங்கள்ல.. எழுத்துல ஒரு மெச்சூரிட்டி வந்துடுச்சு. ஆஹா.. ஒஹோ” ன்னு ஒரே புகழ்ச்சி. உடனே கார்க்கிக்கு கான்ஃப்ரென்ஸ் போட்டு அவனையும் கேட்க வெச்சு, நர்சிம் சந்தேகப்பட்டப்போ (யோவ்.. என்ன..ஏதோ உள்குத்து போல இருக்கு.. இன்னைக்கு நான் மாட்டினேனா) சமாளிச்சு...

கார்க்கி நேத்து பெங்களூர்ல இருந்த்தால ப்ளாக் பக்கம் வரமுடியல. அவியலுக்கு (அதாவது கார்க்கியோட படைப்புகளுக்கு) வந்த கமெண்ட் எதுவும் பார்க்க முடியல. அவருக்கு (அதாவது என் படைப்புகளுக்கு) வந்த கமெண்ட்ஸ்-ஐ மெய்ல் மூலமா பார்த்துகிட்டிருந்தாராம்! அவருக்கும் அப்பப்போ எனக்கு வந்த கமெண்ட்ஸையெல்லாம் சொல்லி...

இன்னொண்ணும் தோணிச்சு...

எழுத்துல இன்னும் எவ்ளோ தூரம் போகவேண்டியிருக்குன்னு. நம்ம எழுத்தை தனித்து அடையாளம் காண்கிறாற்போல எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன? (சீரியஸா யோசிக்கறேனோ? சரி.. விடுங்க!)

வழக்கமாவே இருந்தா அதுல என்ன சுவாரஸ்யம்க? அப்பப்போ இப்படி சின்னச் சின்ன குறும்புகள் செஞ்சு லைவ்லியா வாழறதுதான் எனக்கு இஷ்டம்.

அந்த வகையில இந்தத் திட்ட்த்துக்கு ஒப்புக்கொண்ட கார்க்கிக்கு நன்றியும்,

ஏமாத்தீட்டியேன்னு கோவிச்சுகிட்டீங்கன்னா ஸாரியும்,

‘ஏய்ய்ய்.. யூ’ன்னு செல்லமா குத்து விட ஆசைப்படறவங்களுக்கு என் தோள்களும்...

Monday, April 20, 2009

அவியல் 20.04.2009

எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வட இந்திய நண்பர் ஒருவர் தமிழ் கற்று வருகிறார்.

ஒரு நாள் வேகமாக வந்தவர் ‘என்ன means what ?’ என்றார். நானும் ‘என்ன means what’ என்றேன். இரண்டு முறை இதையே சொன்னதும் சிரித்தவர், ‘ஓ என்ன மீன்ஸ் க்யாவா’ என்றபடி சென்றுவிட்டார்.

மற்றொரு நாள், நீர் மாசுபடுவதால் எற்படும் பாதிப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆண்டுதோறும் 1 மில்லியன் குழந்தைகள் அசுத்த நீரால் இறப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது என்றேன். ‘Who said this?’ என்றார். நானும் ‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.

WHO என்றால் World Health Organization.

*************************

நண்பர்களுடன் உணவகத்தில் சென்றிருந்தபோது நடந்தது இது. சிக்கனை வெட்டிய நண்பன், மீன் வேண்டாமென்றான். அவனுக்கு sea food பிடிக்காதாம். அடுத்தவனை, சீ ஃபுட் சாப்பிடுவியா எனக் கேட்டா போது “sea food மட்டுமல்ல், see food எல்லாத்தையும் சாப்பிடுவேன்” என்றான். வடிவேலு நினைவுக்கு வந்தார்.

இது கடலெண்ணய்தானே???????

*******************************************************

ஐ.பி.எல். அதிரடியாய் தொடங்கிட்டது என்றுதான் முதலில் டைப் செய்ய நினைத்தேன். முதல்நாள் ஆட்ட்டங்களில் அதிரடி இல்லை. தென்னாப்ரிக்கா மைதானங்கள் அப்படி. ஆனால் நான் சொல்ல வந்தது, களமிறங்கும் முன் உத்தப்பா செய்ததை கவனித்தீர்களா? காலால் தரையில் சிலுவை போட்டு கும்பிட்டுவிட்டு வந்தார். நம்ம ஸ்ரீகாந்த் சூரியனை பார்த்து கும்பிடுவார். யாரோ ஒரு நடிகர் கூட தன் அலுவலகத்தில் தாம்ஸ் ஆல்வா எடிசனின் படத்தை மாட்டி வைத்திருப்பதாக படித்த ஞாபகம்.

நான் தினமும் கும்பிடுவது சார்லஸ் பாபேஜ்.

இது நல்லெண்ணய்தானே??????

*****************************************************

கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.1987ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது கபிலின் தலைமையிலான இந்திய அணி. இரண்டாம் டெஸ்ட்டில் ஸ்ரீகாந்திற்கு பதிலாய் சப்ஸ்டியூட் ஒருவர் ஃபீல்டிங் செய்தார். சில ஓவர்களில் ஸ்ரீகாந்த் வந்துவிட இவர் வெளியே செல்ல மறந்துவிட்டார். 12 பேருடன் சில ஓவர்களும் வீசப்பட்டன. நடுவர் கண்டறிந்து சொல்ல, இருவரும் வெளியேறினார்கள்.

வெறும் 10 பேருடன் ஒரு பந்து வீசப்பட்டது.

இது வெளக்கெண்ணய்தானே??????

*************************************

அன்புமணி இனி மந்திரி ஆகவே முடியாது என்பது சினிமாக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. இனி நானும் திரையில் சிகரெட் பிடிப்பது போல நடிக்க மாட்டேன் என்ற ’அசல்’ ஹீரோ அஜித் சுருட்டுடன் ஒளிர்கிறார் அசல் ஸ்டில்களில். பூஜைக்கு வந்த சூப்பர்ஸ்டாரும் அந்தப் படங்களை பார்த்துவிட்டு அசல் ஹீரோ அஜித் என்றாராம்.

நல்லவேளை வில்லன் பூஜைக்கு சூப்பர்ஸ்டார் வரவில்லை.

இது தேங்காயெண்ணய்தானே????? (தலைக்கு தடவுவதால்)

*******************************************

கவிதை வேண்டாமென்றுதான் நினைத்தேன். பசுவய்யாவின் இந்தக்
கவிதை..ம்ம்ம்

வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்

நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்


இது என்ன எண்ணெய்?

**********

Saturday, April 18, 2009

கடிதங்கள்

எத்தனை வேலைகளுக்கிடையிலும் எழுத என்னைத் தூண்டுவது எது? எழுத்தின் மீதெனக்குள்ள காதல் என்பது சரிதானெனினும் பலரின் ஊக்கமும்தான். அது இல்லாவிட்டால் சூன்யவெளியில் தனித்தலையும் மனிதனாய் தவித்து ஒரு கட்ட்த்தில் இயக்கமற்றுப் போயிருப்பேன்.

பல அலைபேசி அழைப்புகள் என் தீதும் நன்றும் சொல்லி என்னைச் செலுத்திக் கொண்டிருந்தாலும் அவற்றை பதிவு செய்ததில்லை. ஆனால் ஒரு சில கடிதங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணம்...

இன்று மூன்று கடிதங்கள்..


**************************

பரிசல்காரன்..

தங்களின் பதிவை சமீப காலமாக படித்து வருகிறேன். ஏற்கனவெ ஒரு முறை பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன் (முத்தையாவிற்கு ......). இன்று தனியாக மின்னஞ்சலில் எழுதுவதற்கு காரணம். தங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் என் மனத்தில் இருப்பவைதான். என் மனைவிடம் உங்கள் பதிவை படிக்க சொன்னேன்.

படித்த பிறகு அவள் சொன்னாள் “அந்த ஆளுக்கு நடந்த, நடப்பதெல்லாம்

உங்களுக்கும் நடந்திருக்கிறதே” என்று. எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது. எனக்கு 45 வயது ஆகிறது. தங்களுக்கு குறைவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் வெள்ளி கொலுசு மணி பாடல் பிடிபபது, அதில் நடிப்பவர்கள் சரியாக ஞாபகத்துக்கு வராமல் இருப்பது (படம் பொங்கி வரும் காவேரி). பார்த்திபன் குழந்தைகள் பற்றியதும். மனைவி பற்றி எழுதுவது எல்லாம் கிட்டத்தட்ட பொருந்துகிறது.

(இப்படி உங்களைப் போலவே என்ன எழுதுவது என்று தெரியாமல் குழம்பி முடிப்பது வரை)


நன்றாக இருக்கிறது.


-முத்தையா ரத்தினசபாபதி


இந்தக் கடித்த்தில் என்ன ஸ்பெஷல்? அவ்வளவு தூரம் பாராட்டியவர் முடிக்கும்போது சடாரென்று ஒரு யூடர்ன் அடிக்கிறார் பாருங்கள் பல பதிவுகளின் முடிவுகள் தொக்கி நிற்பதைக் குறிப்பிட்டு... அங்க நிக்கறாரு அவரு!

*******************************

அடுத்த கடிதம் விவகாரமான கடிதம். எதிர்கருத்துகளை பதிவு செய்ய வேண்டுமென்ற காரணத்தால் இந்தக் கடித்ததை வெளியிடுகிறேன். தனிமனித தாக்குதலும், அநாகரிக வார்த்தைகளுமின்றி ஆரோக்கியமாக உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் விவாதியுங்கள்.


வணக்கம் திரு பரிசல்காரன் அவர்களே

அன்பே சிவம் , உங்கள்ளுக்கு பிடிச்ச படம்ன்னு சொல்றீங்க , ..... என்னோட ஒரு அலசல்.

படம் , கதை , அதை நாங்க எடுத்தோம், சுவாரசியமாக இருந்ததுன்னு எடுத்துட்டு அப்படியே போயிடலாம், .... ஆனால் படம் ரீலீஸ் ஆகும் சமயத்தில கமல் டி.வி ல வந்து.... சமணர்கள் கழிவிரக்கம் செய்தார்கள்,....சிராபள்ளி ஒரு சமணர் ஊரு, ( திருச்சிராபள்ளி ) , லட்சக் கணக்குல கொலை பண்ணினாங்க .... அப்படின்னு அந்த படத்தோட வில்லன் ஏன் ஒரு சிவனடியார் , அவ்வளவு கொடூரமான ஆள்ன்னு சொல்வார். ..

இது ஒரு கதை , கதை படி ஒரு சிவனடியார் ( அல்லது சிவ பக்தர் ) ரொம்ப மோசமான ஆளு , ...அதுக்கு ஏன் வரலாற்றை தூக்கி பிடிக்கணும், அப்படி பார்த்தால், வரலாற்றிலும் சரி, நிஜ வாழ்கையிலும், மொகலாய சாம்ராஜ்யத்தை பாருங்க , அல்லது இப்ப உள்ள பாகிஸ்தானை பாருங்க, இல்ல ஆப்கானிஸ்தானை பாருங்க , .... underworld எனப்படும் , கருப்பான சாம்ராஜ்யத்தில் , பிறப்பால் முஸ்லிமான ஆட்கள் நிறைய உண்டு. இப்பவும் மலை மலப்புரம் ஜில்லாவுல , கடத்தல் ஆளுங்க யார் நிறைய பேர்ன்னு கேட்டுப் பாருங்க ... விடை கிடைக்கும், அது போல அந்த சினிமாவில் கட்டியது போல், எத்தனையோ கடவுள் பக்தி உள்ள, கோவிலுக்கு போகும், பட்டை , நாமம் எல்லாம் போட்ட மிக மோசமானவர்கள் நமக்குள் - நம்மை சுற்றி - இருக்காங்க... ஆனால் அதற்கும் மேல் நல்லவங்களும் அதை விட நிறைய இருக்காங்க .


அது போல அந்த கிறிஸ்துவ சிஸ்டர் , ஒரு தேவதை போலவும் ... தன்னலமற்றவர், சேவை, மட்டுமே அவரது நோக்கம் என்று காமிப்பார்கள், அது எப்படி.. இந்து சாமியார்னா , அது பொறுக்கி, மொள்ளமாரி ....


அப்பறம், அந்த கம்யூனிஸ சித்தாந்தம் , ... வரிக்கு வரி, பாட்டுக்கு பாட்டு, வசனத்ல, இப்படி எல்லாத்லயும் அமெரிக்காவை ஏசி, ஆனா சொந்தமா தன்னோட தனி பட்ட வாழ்கையில் , imported கார் வைச்சுக்கிறது , ( made in இத்தாலி , ஜெர்மனி அல்லது இங்கிலாந்து ). மேக் அப் பற்றி படிக்க ஹாலிவூட் போறது, மேக் அப் பொருட்கள் எல்லாம் அங்கிருந்து தான் வாங்குவது, , மேக் அப் மேன் கூட அங்கிருந்து தான் வருவார். ..மகளை படிக்க அங்கு தான் அனுப்புவது .குறைந்த பட்சம் ஒரு ஜட்டியாவது ரஷ்யாவில் இருந்து வாங்கணும், அப்பறம் இது மாத்ரி எல்லாம் பாடம் / படம் எடுக்கணும்.


சினிமா வேற , அது ஒரு கற்பனை உலகம் ... அதுக்கு சப்பைகட்டலாம் வேண்டாம், சினிமாவுல யார் வேணும்னாலும் வில்லனாய் இருக்கலாம் ... நிஜம் வேற.


அன்புடன்
சுந்தர்
--------------------------------
நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சமுதாயத்திலும், எல்லா குடும்பத்திலும் உண்டு சுந்தர். எதற்கு இத்தனை உணர்ச்சிவசப்படல் என்று புரியவில்லை. நல்ல/கெட்ட என்று அமைந்த கலவைதானே ஒவ்வொரு மனிதனும். இதில் ஏன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்து நண்பர்களை அண்டர்வேர்ல்ட் டான்களாகச் சொல்லி கோபப்பட்டிருக்கிறீர்கள் என புரியவில்லை!

*******************************

அடுத்த்து ICANANENUE என்ற பெயரில் எனக்கு அடிக்கடி பின்னூட்டமிடும் நண்பரிடமிருந்து... ஏதோ ஃபாரினர் என்று நினைத்தால் அவர் பெயருக்கான காரணமும், அவர் செய்து வரும் சேவையும் பிரமிக்க வைக்கிறது!

Hi KK

I've been meaning to write you for some time.

You are having simple and elegant writing style which i admire. My wife says your success lies in your ability to make the reader to identify himself/herself very easily with you.

I'm from coimbatore. Worked in Tirupur, Bangalore and now living in London for few years (5 to be precise) and my parents have moved to our native (Dharapuram).

You have spelt ICANAVENUE correctly in Tamil.

I'm running a small helping centre in Dharapuram where I sponser educational expenses to poor students and my intention is to help atleast 10000 students in next 5 years(now thare are about 20!). Icanavenue is the name of the helping centre and the message I always give to the students is:

Incanavenue is a place where people believe in being part of supreme universe. Here everything is possible, every body is loved, every body is understood and every body's presence in life is appreciated. Nothing stops us in getting what we want. Here people are kind. Kind to each other, kind to parents, kind to friends, kind to foes and kind to nature.

Hopefully oneday, I'll learn to write like Selvendran or yourselves in the near future.

Congratulations and keep up the good work.

Best regards
Sreeranga


எப்படீ? எங்களுக்கும் இங்கிலீசுல லெட்டர் வருமுல்ல? நாங்களும் ரௌடிதான்.. ரௌடிதான். ரௌடிதான்....

Friday, April 17, 2009

கிருஷ்ணகதா – நேரம் காலம்...

மகாபாரதக் கதைகள் மிகுந்த சுவாரஸ்யமிக்கவை. ராமாயணக்கதைகளும்தான்.

அவ்வப்போது மகாபாரதம் அல்லது ராமாயணத்திலிருந்து சில சுவையான கதைகளை பகிர்ந்து கொள்ள சித்தமாய் இருக்கிறேன். (நல்லாத்தாண்டா போய்ட்டிருந்தது???)

அவ்வப்போது பைபிள், குரானிலிருந்தும் வரலாம். எதுவாயிருப்பினும் கிருஷ்ணகதா-தான் தலைப்பு. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்வதால். (நாட்ல இந்த நடிகனுங்க தொல்ல தாங்கலடா.. அவனவன் பொறந்த நாளுக்கு அவனவனே போஸ்டர் அடிச்சுக்கறான் பாரு-ங்கறாமாதிரிதான் இது. பொறுத்தருள்க.)

******************************

அடிக்கடி நாம் உபயோகப்படுத்தும் வாக்கியத்திலொன்று ‘நேரம் ரொம்ப முக்கியம்’ என்பது.

வடிவங்கள் வேறுவேறாயிருப்பினும் அடிக்கடி வெவ்வேறு வகைகளில் இந்த வாக்கியம் வந்துவிழுகிறது.

‘டைம் பார்த்துக்கப்பா.. லேட் பண்ணிடாத’

‘இன்னைக்கு விட்டா அவ்ளோதான்’

‘லாஸ்ட் மினிட்ல ஏண்டா அவசர அவசரமா ஓடறீங்க.. மொதல்லயே ப்ளான் பண்றதில்லையா’

‘அரைமணி நேரம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்’

இன்னும் எத்தனை எத்தனை வடிவங்களில் நேரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் அலுவலகத்தில் எப்போது மீட்டிங் என்றாலும் வெவ்வேறு ஃபேக்டரிகளிலிருந்து வந்து சேர்கிறவர்களால் தாமதமாகும். கஷடப்பட்டு, வேண்டுமென்றே முன்கூட்டிச் சொல்லி நாம் நினைத்த நேரத்துக்கு எல்லாரும் வந்துவிட்டால் எம்.டி. அன்று தாமதப்படுத்துவார். குறித்த கணத்தில் ஆரம்பித்த மீட்டிங் 10%கூட இருக்காது. அதேபோலத்தான் குறித்த நேரத்தில் முடிப்பதும். (பெரும்பாலும் மீட்டிங்கின் முடிவு நேரம் குறிப்பிடுவதில்லை. பலசமயம் மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களின் வேலை முடிவுதான் மீட்டிங்கில் தீர்மானிக்கப்படுகிறது!!)

அமெரிக்க ஜனாதிபதி நேர மேலாண்மைக்காக இரண்டு வழிகளைக் கடைபிடிக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

யாரையாவது சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தால் சந்திக்க வருகிறவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட 10 நிமிடமோ, 15 நிமிடமோ அந்த அறைக்கு ஜனாதிபதியே வந்து பேசிவிட்டு எழுந்து சென்று விடுவார். சந்திக்க வருகிறவர்கள் அதன்பின் குறிப்பிட்ட நேரம் வரை இருப்பதென்றால் இருக்கலாம், போவதென்றால் போகலாம். தமது அறைக்கு அழைத்து, ’டைமாச்சு போங்க’ என்று சொல்லவேண்டிய வேலை இல்லை.

அதேபோல அவரது அறையின் நாற்காலியின் அமரும்பகுதி சற்றே முன்பக்க சாய்மானத்தில் அமைக்கப்பட்டிருக்குமாம். (ஸ்லோப்-பாக) அதாவது உட்கார்ந்தால் முன்னோக்கி லேசாக வழுக்கும் அமைப்பில். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே எழுந்து போகலாம் என்று தோன்றுமாம்.

தமிழகத்தின் தொழிலதிபர் ஒருவரது அறையில் ‘எனக்கு இன்றைக்கு முடிக்க வேண்டிய நிறைய வேலைகள் காத்திருக்கிறது. உங்களுக்கு?’ என்றொரு அறிவிப்பை மேஜையிலேயே வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சரி.. இப்போது அந்த மகாபாரதக் கதை...(ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது!)



திண்ணையில் அமர்ந்திருந்த தருமரிடம் பிச்சை கேட்கிறான் ஒருவன். ஏதோ வேலையாய் இருந்த அவர் ‘நாளைக்கு வாப்பா’ என்கிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் உடனே முரசை எடுத்துக் கொண்டுபோய் கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு முரசடிக்கிறான்.


“தம்பி... என்னப்பா செய்கிறாய்? எதற்கு இப்போது முரசடித்து ஊரைக்கூட்டுகிறாய்?” என்று கேட்கிறார் தர்மர்.


“எங்கள் அண்ணன் காலத்தை வென்று விட்டான்’ என்று இந்த ஊருக்கு அறிவிக்கப்போகிறேன் அண்ணா..”

தருமருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “காலத்தை வென்றேனா.. நானா..?” குழப்பத்தோடே கேட்கிறார்.

“ஆமாம் அண்ணா. பிச்சைக்காரரை நாளைக்கு வரச் சொன்னீர்களே? நீங்கள் நாளைக்கு இருப்பீர்களா? அவன் நாளைக்கு இருப்பானா? நீங்கள் இருந்தால் பிச்சையிடும் மனோபாவம் உங்களுக்கு இருக்குமா? அவன் இருந்தால் நாளைக்கும் அவன் பிச்சைக்காரனாகவே இருப்பானா? நாளைக்கு உங்கள் இருவரின் சந்திப்பு நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் பிச்சை போடுவீர்களா? எவ்வளவு நிச்சயமாய் இத்தனை கேள்விகளின் சாத்தியங்களை உணர்ந்து நாளை அவனை வரச் சொன்னீர்கள்? அப்படியானால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்? என்னை விடுங்கள். இப்போதோ இதை ஊராருக்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இந்த கணத்தை நான் தவறவிட்டால் அடுத்த கணம் நிச்சயமாய் என் வசமில்லை. அதனால்தான் இப்போதே அறிவிக்கிறேன் என்று அவசரப்படுகிறேன்” என்றான் பீமன்.

“பொறு தம்பி. தவறுதான். அவனை அழை. இப்போதே உதவுகிறேன். நாளை என்ன அடுத்த நிமிஷமே நிஜமில்லைதான்” என்று சொல்கிறார் தருமர்.


ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!

Thursday, April 16, 2009

”நீங்க லவ் மேரேஜா?” (குசும்பன் ஸ்பெஷல்)



நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சத தம்பதியர் இந்தக் கேள்வியை சந்தித்திருப்பார்கள். என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் நான் திருப்பிக் கேட்கும் ஒரே கேள்வி.. “ஏன்.. நீங்க பிடிக்காமலே ஒத்துக்கிட்டீங்களா?”

கேள்வி கேட்பவர் மணமாகி இருந்தால் மட்டுமே இந்த பதில் அல்லது எதிர்கேள்வி. இல்லையெனில் ஒரு சின்னப் புன்னகையோடு ‘ஆமாங்க’ மட்டுமே.

கேள்வி கேட்பது இளைஞனாகவோ, இளைஞியாகவோ இருக்கும் பட்சத்தில் நமது ‘ஆமாங்க’ அவர்கள் முகத்தில் ஏற்படுத்தும் நம்பிக்கைக்காக இரண்டாவது முறையும் சொல்வேன்.. ‘ஆமாங்க’ என்று.


காதல் என்பது விமர்சிப்பதல்ல. உணர்வது. மைக்கேல் ஜாக்சனின் புகழ்மிக்க வாசகம் ஒன்று உண்டு. ‘என்னை விமர்சிக்கும் முன் என்மீது அன்பு செலுத்துங்கள்’

அதையேதான் காதலுக்கும் சொல்வேன். காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள். காதல் என்பது எல்லையற்றது.


“பாருங்க.. லவ் மேரேஜ் பண்ணிகிட்டா உங்களுக்கு ஒண்ணுன்னா யாரும் வரமாட்டாங்க”

அதெல்லாம் ச்சும்மா. ஆனால் அதே சமயம் பெற்றோர் ஆசியோடு அவர்களுக்கு மரியாதை தந்து அவர்கள் வாழ்த்த திருமணம் செய்துகொள்வதை நான் வரவேற்கிறேன். உங்கள் காதல் உறுதியான, உண்மையான காதலாயிருக்கும் பட்சத்தில் அதிகபட்ச பெற்றோர்கள் அதை எதிர்ப்பதில்லை.

“ஆரம்பத்துல நல்லாத்தான் இருக்கும். அப்பறம் போகப் போக சண்டை அதிகமாகும்”

அது எல்லா கல்யாணத்துலயும் நடக்கும். ஏன் காதல் கல்யாணத்துல மட்டும்தான் நடக்கும்கற மாதிரி சொல்றீங்க? சொல்லப்போனா இந்த ரேஷியோ காதல் கல்யாணத்துல கம்மின்னு கூட சொல்லலாம். ‘எனக்கு இவளை விட்டா யாரிருக்கா? என்னை நம்பி வந்தவ’ என்று கணவனும் ‘இவனுக்காகத் தானே பலதையும் பொறுத்துகிட்டோம்’ன்னு மனைவியும் விட்டுக் கொடுத்து போறதை பல காதல் தம்பதிகள்கிட்ட பார்த்திருக்கேன்.

உங்கள் மனைவிக்கு பிடிச்சது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா-ன்னு என்கிட்ட கேட்டா.. தெரியாது. ஆனா அவங்களுக்குப் பிடிக்காதது என்னான்னு கேட்டா சொல்லுவேன். அவங்களுக்குப் பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதுமே... நிம்மதியான வாழ்க்கை கேரண்டி!

திருமண வாழ்க்கை தரும் சில நல்தருணங்கள் மதிப்பு வாய்ந்தவை..

எதையோ விடிய விடிய எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பீர்கள். “போதும்க. காலைல பார்த்துக்கலாம். வந்து தூங்கப் போறீங்களா இல்லையா” என்று கேட்கும் குரல் எவ்வளவு சுகம்!

அலுவலகத்தில் ஏதோ டென்ஷன். வீட்டிற்குள் நுழைந்து நம் முகம் பார்த்ததும் எதையோ உணர்ந்து கொண்டவராய் “என்ன ஆச்சுங்க” என்று மனைவி கேட்கையில் உள்ளுக்குள் நெகிழாதவன் மனிதனாக இருக்க முடியாது.

“என்ன இது ட்ரெஸ்? இதப் போட்டுட்டுதான் ஆஃபீஸ் போவீங்களா? இருங்க வரேன்” என்று வேறு உடை எடுத்து வந்து உங்கள் சட்டையைக் கழற்றும் விரல்களில் இதயத்தை உணர்ந்ததுண்டா நீங்கள்?

“நல்ல பசி” என்று ஹாட்பேகில் இருக்கும் அத்தனை இட்லியையும் காலி செய்துவிட்டு கடைசி இட்லியின் கடைசி துண்டை விழுங்கும் உங்களை விழி விரியப் பார்த்துக் கொண்டே இருக்கும் அவளிடம் எதையோ உணர்ந்தவனாய் “ஆமா... நீ சாப்டியா” எனக் கேட்கையில் அவள் முகத்தில் சாப்பிடாமலே தெரியும் சந்தோஷத்தை உங்கள் காசோ, தங்கமோ, வேறெதுவுமோ ஈடு செய்ய முடியுமா?

எத்தனை கார் வைத்திருங்கள். பைக் வைத்திருங்கள். சிறிய கூடையுடன் அரைக் கிலோ வெங்காயமோ, தக்காளியோ வாங்க அவள் புறப்படும்போது “இருப்பா.. நானும் வரேன்” என்று எந்த வேலையிருப்பினும் தள்ளிவைத்து அவளோடு நடந்து போய்ப் பாருங்கள். அந்த கணங்கள் அவள் முகத்தில் தரும் மலர்ச்சியை நீங்கள் எதனாலும் ஒப்பிட முடியாது.


சரி.. பீடிகை போதும். இப்ப எதுக்கு இந்தப் பதிவு..

கீழ இருக்கற ஃபோட்டோவைப் பாருங்க...





ஒண்ணுந்தெரியாத மனுஷனாட்டம் கையக் கட்டிகிட்டு போஸ் குடுத்திருக்காரே.. நம்ம குசும்பன்.. அவருக்கு இன்னையோட திருமணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு!

“தண்டனைக் காலத்துல ஒரு வருஷம் முடிஞ்சுருச்சு” அப்படீன்னு கிண்டல் பண்றார். ‘நாளைக்கு முழுவதும் என்னை பதிவு, பின்னூட்டம், மெயில் பக்கம் பார்க்க முடியாது’ங்கறார்.

நீங்க வராட்டி என்ன? நாங்க உங்களை வாழ்த்தறோம்..

“இனிய மணநாள் நல்வாழ்த்துகள் நண்பா”

Tuesday, April 14, 2009

'மார்னிங்'-னா சாயந்திரம் இல்லையா?




எதையாவது சம்பந்தப்படுத்தி எழுதுவதொரு கலை என்றால் சம்பந்தமில்லாமல் எழுதுவதென்பதும் ஒரு கலைதான். அதைவிட சம்பந்தமின்றி ஆனால் சம்பந்தமாக எழுதுவதும் ஒரு சிறப்பான கலைதான்.வெறுமனே எதையாவது எழுதுவதே கலை எனும்போது இப்படியெல்லாம் எழுதுவதையும் கலை என்று சொல்வதில் என்ன தப்பு?

தப்பு எனும் வார்த்தைப் பிரயோகம் தப்பாட்டம் என்ற கலையையும் குறிப்பிடுவதாகும். கிராமிய இசையின் முக்கியக் கலையாக விளங்கும் இது இன்றும் புகழடைந்த கலையாக விளங்கிவருகிறது.

கலை அப்படிச் சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கலைச் செல்வனை நாங்கள் கலை என்று பல வருடங்களாக அழைத்து வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன் கலா என்ற பெண் எங்கள் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து அவளும் கலை என்றழைக்கப்படுகையில் நேற்று நான் ‘கலை.. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது’ என்று நான் ஏதோ கோபத்தில் கலாவைப் பார்த்து திட்டியதை ஏதோ அவனைத்தான் நான் மறைமுகமாகத் திட்டினேன் என்று ஆஃபீஸ் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிகிறான். அவனைத் திட்டுவதென்றால் நேரடியாகவே திட்டுவேனே.. இவனுக்கெல்லாம் பயப்படுவேனா நான்?

பயப்படுவதென்றால் அது தேவகிதான். அவளுக்கு எல்லாப் பெண்களைப் போலவும் கரப்பான் பூச்சி என்றால் மிகவும் பயம். அன்றைக்கு அப்படித்தான் அலுவலக ரிசப்ஷனில் அவள் நின்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பறந்துவந்த கரப்பான் பூச்சி அவள் காலுக்கருகில் விழ.. காலை அவள் உதறியதில் வெள்ளிக்கொலுசு கழன்று..

‘வெள்ளிக்கொலுசு மணி.. வேலான கண்ணுமணி’ என்ற பாடல் அப்போதெல்லாம் அடிக்கடி ஒலிபரப்பப்படும் பாடல்களில் ஒன்று. என்ன படம் இது? சரிவர ஞாபகமில்லை. ராம்கி என்று ஞாபகம்.. ஹீரோயின் கவுதமியா? கவுதமியும், ராம்கியும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா என்ன?

நடிப்புன்னா அது நம்ம சீனியர் சீனிதான். அன்னைக்கு மீட்டிங்ல ஜாலியா சினிமா நியாயம் பேசிக்கிட்டிருந்தாரு. திடீர்னு வந்த எம்.டி. ‘போன வருஷம் இதே ஆர்டரை நாம 40 நாள்ல முடிச்சோம். இப்ப எதுனால டிலே’ன்னு கத்தினப்போ ‘சேம் திங் ஐயம் கொஸ்டினிங் தெம் நவ்’ன்னு ப்ளேட்டை மாத்தினாரே..

ப்ளேட்டை மாத்தினாலும் சரிவரல. அந்தப் ப்ளேட்லயும் கருப்பா ஏதோ கறை மாதிரி இருந்தது. சரி.. பரவால்லன்னு அதுலயே சாப்பிட்டுக்கறேன்னேன். என்ன பண்றது.. பசி காதை அடைக்குதுல்ல..

காதை அடைச்சாலும் அவன் கோரமா பாடறது என் காதுல ஒலிச்சுகிட்டேதான் இருந்தது. ‘போதும்டா நீ நல்லா பாடற’ன்னு சொன்னாலும் நிறுத்தற மாதிரி தெரியல அவன். மினிமம் ஒரு ஆஃப் அல்லது குவாட்டரை கமுத்திருப்பான்னு தெரிஞ்சது. அவ்ளோ போதைல இருந்தான்.

அவ்ளோ போதைலயும் அவரு பாடிகிட்டே கெணத்து மேல நடந்துகிட்டே.. ஜெயப்ரதாவை ஒரு லுக்கு விடுவார் பாரு. என்னா ஆக்டிங்கு.. ச்சான்ஸே இல்ல மச்சி...

சான்ஸ் இல்லன்னா உடனே மனசு விட்டுடறதா? எத்தினி பேர் எத்தினி வர்ஷமா ட்ரை பண்ணிகினு இருக்கானுக? ஒரே வருஷத்துல ஈரோவாகி ஒப்பனிங் சாங் குடுக்க முடியுமா? அவ்ளோ சுளுவுன்னு நெனைச்சுகினியா நீ? இன்னும் ஒரு மாசம், ரெண்டு மாசத்துக்கு அந்த டைரக்டர் கண்ல பட்டுகினே இரு. எதுனா ஆப்டுச்சுன்னு வையி... டபக்குன்னு புட்ச்சுக்கோ. அப்பாலிக்கா உன்னிய எவனும் தொடமுடியாதுங்கறேன்..

தொடறதுன்னா ஒவ்வொரு தடவை ஒவ்வொரு அர்த்தம் வருதுல்ல? அவன் என்னைத் தொட்டுட்டான்னு ஒரு பொண்ணு சொன்னா ‘ரேப் பண்ணீட்டான்’னு அர்த்தம்கூட வருது. கோவைல பல இடங்கள்ல செருப்பு போடறத ‘செருப்பத் தொட்டுகிட்டயா?’னுதான் கேட்கறாங்க.

கேட்கறதுன்னா உடனே கேட்டா நல்லாருக்கும். இவ்ளோ நாள் கழிச்சு கேட்டு, அவ இன்னும் ஞாபகம் வெச்சிருப்பா... அவ மனசைத் தொடறேனா இல்லியானு சவால் விட்டா...

சவால்னாலே சரத்பாபு கமல்தான் ஞாபகத்துக்கு வர்றாங்க. சரத்பாபு எல்லா படத்துலயும் ஃப்ரெண்டாவே வர்றாரு.. நல்ல கேரக்டர். மாதவியும் நல்லா நடிச்சிருப்பாங்க. நெஞ்சைத் தொடற நடிப்புன்னு பார்த்தா அது கமல்தான்.


தொடறதுன்னா அப்படி வலிக்கற மாதிரி இல்ல. மெதுவா.. மெதுவா.. ஆங்.. அப்படித்தான். ம்ம்.. இப்படி மெதுவா தொட்டாலே வலிக்குது தெரியுமா? நல்ல அடின்னு நெனைக்கறேன். ஜவ்வு கிவ்வு கிழிஞ்சிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.

சந்தேகம்னு வந்தப்பறம் யாரையும் அதே கண்ணோட்டத்துலதான் பார்க்கச் சொல்லும். ராமர் சீதாவையே சந்தேகப்படலியா?

சீதா இப்போ என்ன பண்றாங்க? கீர்த்தனா அவங்கப்பா கூட இருக்கான்னு கேள்விப்பட்டேன். இன்னொரு பொண்ணு.. அபியா என்னவோ பேரு... யார்கூட இருக்கா? என்ன பண்றா? ரெண்டுக்கப்பறமும் ராக்கின்னு ஒரு பையனை தத்து எடுத்தாங்களே.. அவன் வயசென்ன இப்போ.. என்ன பண்றான்? இதை யாராவது நிருபர்ங்க எடுத்துப் பண்ணலாம்.

நிருபருங்க பாடு திண்டாட்டம்தான் போல. இந்த வாரம் விகடன்ல ஆரம்பிச்ச நிருபன் தொடர் நல்லாப் போகும்னு தோணுது. நாங்கூட கேள்விப்பட்டேன். யாரோ ஒரு நடிகை ‘கம் மார்னிங் ஃபைவ்’ன்னு ஒரு நிருபர்கிட்ட சொன்னாங்களாம். இவரு அதிகாலை அஞ்சு மணிக்குப் போனா வேறொரு நடிகர் அந்த வீட்லேர்ந்து இவரை கோபமா பார்த்துகிட்டே வெளில வந்தாராம். நடிகை வந்து நிருபரை முறைச்சுகிட்டே ‘சாயந்திரம்தானே வரச்சொன்னேன்’னு திட்டினாராம். இல்லீங்க.. மார்னிங்குன்னுதான் சொன்னீங்கன்னு சொன்னதுக்கு அந்த நடிகை சொல்லீச்சாம்..

‘ஐயையோ.. மார்னிங்க்னா சாயந்திரம் இல்லியா?’


**********************************

1) செண்டர்ஃப்ரெஷ்ஷின் ரேடியோ விளம்பரத்தைக் கேட்ட பாதிப்பில் எழுதியது.

2) படித்துவிட்டு வரும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

3) இதையே எனது படைப்பின் இறுதித் தகுதியாக பாவிக்க வேண்டாம். இன்னும் பல மொக்கைகளோ, பின்நவீனத்துவங்களோ, கோக்குமாக்குகளோ, நல்லபதிவோ வந்து சேரலாம். எதுவும் என் கையில் இல்லை.

4) சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

5) இன்னைக்கு லீவு. அதுனால வெளில குடும்பத்தோட போறேன். பின்னூட்டங்களுக்கு உடனே உடனே பதில் சொல்றது கஷ்டம். ஒட்டுமொத்தமா வந்து பதில் போடறேன். ஒக்கே?

6) அவ்ளோதான்.

Monday, April 13, 2009

அவியல் 13.04.2009

அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது என்று சொன்னார் ஒரு நண்பர். எப்படி என்று கேட்டேன். மிகவும் சுலபமாக துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைத்துவிடுகிறது. தடை செய்யப்பட்ட இடத்தில் சிகரெட் பிடித்தால் உடனடியாக ஆஜராகிற போலீஸ், யாராவது துப்பாக்கி வைத்திருந்தால் அதிகமாக ஆராயாமல் விட்டுவிடும் என்றார். ‘அதுதான் சட்டம் இருக்கிறதே’ என்றால் ‘அது சில சமயம் முட்டாள்தனமாக செயல்படுகிறது’ என்று சொல்லி ஒரு உதாரணம் சொன்னார்.

ஒரு பெண்மணி மெக். டொனால்டில் ஒரு காஃபி வாங்குகிறார். வாங்கி காலுக்கிடையில் வைத்துக்கொண்டு காரை ஓட்டிக் கொண்டுபோகிறார். சூடான காஃபி காலுக்கிடையில் கொட்டுகிறது. அவர் அடுத்த நாள் கோர்ட்டில் கேஸ் போடுகிறார். “கண்ட இடத்தில் கொட்டிய காஃபியால் அன்று இரவு தாம்பத்தியத்தில் சரிவர ஈடுபட முடியவில்லை. காஃபி அவ்வளவு சூடு. ‘கவனமாகக் கையாளவேண்டும்’ என்ற எந்த எச்சரிக்கை வாசகமும் காஃபி கப்பில் எழுதவில்லை” என்று வழக்குப் போட்டு நீதிபதியும் ‘ஆமாமாம்’ என்று மெக்டொனால்டிற்கு நஷ்டஈடு விதித்தாராம். என்ன கொடுமை சார் இது? கேட்டால் நுகர்வோருக்கு அவ்வளவு மரியாதை என்றார்கள்.

எனக்கு நேற்றைக்கு தியேட்டரில் நடந்தது ஞாபகம் வந்தது.

***********************
அயன் படத்திற்குப் போயிருந்தேன். சிலர் சொல்வது போல ‘ஆஹா.. ஓஹோ’வெல்லாம் இல்லை. கே.வி. ஆனந்த்-தின் கனாகண்டேன் என்னைக் கவர்ந்ததில் முக்கால் பாகம்கூட அயன் கவரவில்லை. ஓகே.. தியேட்டரில் இடைவேளையில் கொறிக்க முட்டை போண்டா வாங்கினேன். 7 ரூபாய் என்பது முட்டை போண்டாவிற்கு டபுள் ரேட். சரி போகட்டும். நன்றாக இருந்ததால் மீண்டும் போய் ஒன்று வாங்கினேன். அப்போது 8 ரூபாய் என்று பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)

‘என்னங்க... அப்பவே 7 ரூபாய்னு சொன்னீங்க? இப்போ 8 ரூபாய் ஆய்டுச்சா? ஒருவேளை கால்மணிநேரத்துல விலைவாசி ஏறிடுச்சா?’ என்றேன்.

அவர் என்னை ஒருமாதிரிப் பார்த்தபடி ஒரு ரூபாய்க்கு இன்னொரு சின்ன சாக்லெட் கொடுத்தார்.

எனக்கு கோபம் அதிகமானது.

‘கத்தி ஏதாவது வெச்சிருக்கீங்களா?’

‘எதுக்கு’ என்பதுபோல தலையுயர்த்தினார் கேண்டீன்காரர்.

‘இல்ல.. கத்தி இருந்ததுன்னா கழுத்துல வெச்சு சில்லறைய புடுங்கிக்க வேண்டியதுதானே? அதவிடக் கொடுமை பண்றீங்க’ என்று சொல்லி விட்டு வந்தேன்.

ஏதோ... என்னால் முடிந்தது அவ்வளவுதான்.

*********************************
ஒரு சிலர் பின்னூட்டம் போடும்போது கிழே பெயர் எழுதுவது எதற்கென்று புரியாமலே இருந்தேன். நர்சிம்மைக் கூட ஒருமுறை ‘அதுதான் மேல நர்சிம்னு வருதுல்ல. எதுக்கு எல்லாத்துக்கும் கீழ பேரு போட்டுக்கறீங்க’ என்று கேட்டேன்.

நவயுவக் கவிஞர் அனுஜன்யாவிடம் இதுபற்றிக் கேட்டபோது ‘இல்லப்பா. சில பதிவுகளைத் திறந்தா பின்னூட்டம் போட்டவங்க பேரு ‘)))))’ இப்படித் தெரியும்லியா. அதுக்காகத்தான்’ என்றார். ‘ச்சே.. இது தெரியாமப் போச்சே நமக்கு’ என்று நினைத்துக் கொண்டேன். நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது....

சில வருடங்களுக்கு முன் என் வழக்கறிஞ நண்பரின் வாட்ச் கடை ஒன்றுக்கு நீதிபதி ஒருவர் வந்தார். ஒரு திருமணத்திற்கு பரிசளிக்க வாட்ச் ஒன்றை வாங்கினார். கிஃப்ட் பேக் செய்யுமுன் விலையை அழிக்க முயன்றபோது ‘வேண்டாம்.. வேண்டாம்’ என்றார். கேட்டபோது சொன்னார்..

“இல்லப்பா. இவரு ஜட்ஜ்., இவரு குடுத்த வாட்ச் இவ்ளோ இருக்கும். அவ்ளோ இருக்கும்னு அவங்களா பெரிசா நெனைச்சுக்கக் கூடாதுல்ல. என்னால இவ்ளோதான் முடியும்’னு தெரியட்டுமே.. என்ன தப்பு” என்றார்.

வித்தியாசமான கோணமாக இருந்தது.

**********************************
எழுத்தாளார் அகதாகிறிஸ்டியின் கணவர் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். உங்க கணவரைப்பத்தி.. ‘ என்று நிருபர்கள் கேட்டபோது சொன்னாராம்.. “வழக்கமா கணவர்களுக்கு நாளாக நாளாக மனைவியின்மீது ப்ரியம் கம்மியாகும். ஆனா இவரு தொல்பொருள் ப்ரியர் அல்லவா. அதுனால நான் பழசானா இன்னும் ப்ரியம் அதிகமாகுமே” என்றாராம்!

*****************************

தீப்பெட்டி திறந்தால்
பிஞ்சு விரல்கள்
-ஸ்ரீகுமாரன்

வண்ணத்துப் பூச்சி
மழையில் நனைகிறது
ஐயோ வர்ணங்கள்
-நா.விச்வநாதன்

மழை போல் மனசு
கடல் போல்
துயரம்
-விக்ரமாதித்யன்

(கணையாழி – ஏப்ரல் ’91)

Friday, April 10, 2009

முத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்

முத்தையா...

ஞாபகம் இருக்கிறதா என்ற சம்பிரதாயக் கேள்வியை உன்னிடம் கேட்க முடியாது. உனக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ... உன்னை பலருக்கும் ஞாபகம் இருக்கிறது. பார்... நீ என் நண்பன் என்பதையறிந்து உன்பெயரில்தான் எத்தனை எத்தனை கடிதங்கள் எனக்கு. ஆனால் நீ மட்டும் ஒரே கடிதத்தோடு முடித்துக் கொண்டாய். அதற்குப் பிறகு எழுதவே இல்லை இன்னும்.

அலைபேசியைக் கண்டுபிடித்தவனும், மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவனும் பலருக்குக் கடவுள்போல. ஆனால் எனக்கு அவன்தான் எதிரி.

உன்னிடம் நான் எத்தனை முறை பேசியிருப்பேன். இருந்தாலும் ஒரு கடிதம் தரும் அண்மையை இந்த அலைபேசி அழைப்போ, மின்னஞ்சல் பரிமாற்றமோ தருவதேயில்லையா நண்பா.. அது ஏன்? நாம் டெக்னிகலாக பின்தங்கி இருக்கிறோமா.. அல்லது எமோஷனல் இடியட்ஸாகிவிட்டோமா?

கார்த்திக்கை ஞாபகம் இருக்கிறதா? அப்போது நமக்கு 18, 19 வயதிருக்கும். அவன் யோகா, தியானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பான். ஒருமுறை உன்னையும், என்னையும் அழைத்துக் கொண்டு பழனி மலை போகர் சமாதிக்கு முன் அமர்ந்து தியானம் சொல்லித்தருகிறேன் என்றான். கண்மூடி அமர்ந்து புருவமத்தியில் கவனம் செலுத்தி...

அவன் சொன்னது நினைவுக்கு வந்தது..

‘முதுகுத்தண்டில் குண்டலினிய சக்தியை உணரமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக அது மேலேறி...’

எனக்கு ஏதோ முதுகுத்தண்டில் மேல்நோக்கிச் சென்றது என்றபோது கார்த்திக் சொன்னான்: ‘எறும்பா இருக்கும். அவ்ளோ ஈஸியால்லாம் வராது சாலமா...’

அவனோடு சவால்விட்டு எத்தனை குருக்களைத் தேடினேன் நான்.. ஓஷோ, சாய்பாபா, ரவிஷங்கர் (இவரு வேற..) என்று பயணித்து ஜக்கியில் நிற்கிறது இது இப்போது. ஆனாலும் எனக்கான குரு இன்னும் கிடைக்கவில்லை முத்தையா.

அப்போதெல்லாம் நீ எவ்வளவு ப்ராக்டிகலாகப் பேசுவாய். அன்று பழனிமலைக்கு கீழே நீ சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கிறது..

“சாலமா... கார்த்திக் சொல்றான்.. நீ சொல்றன்னெல்லாம் என்னால எதுவும் செய்ய முடியாது. கேள்விகள் அதிகம் எனக்கு. ‘நான் ஏன் இப்படி உக்காரணும்.. எனக்கு சாயந்திரம் டீக்கு ஒரு ரூபாகூட என்கிட்ட இல்ல. இப்படி உக்கார்ந்து குண்டலினிய ஏத்தி என்ன சாதிக்கப்போறோம்’ இதெல்லாம் என் மனசுல ஓடுது” என்று எப்படி வாதிட்டாய் கார்த்திகிடமும் என்னிடமும். உனக்கிருந்த வெளிப்படையான தர்க்ககுணம் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை நண்பா.

எனக்கு அப்போதைய காலகட்டத்தில் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்த்த ஒரே நண்பன் நீதான் முத்தையா. ஞாபகமிருக்கிறதா.. (ச்சே.. இந்தக் கேள்வியை கேட்காமல் ஒரு கடிதமாவது எழுதித் தொலைக்கமுடிகிறதா..) பொள்ளாச்சி முழுவதும் ‘இருபுள்ளிகளுக்கிடையே ஒரு கோடு’ தொகுப்பை நீயும் நானும் தேடியலைந்ததெல்லாம்? எப்படி மறப்பாய் நீ? எஸ்.கே.துரைசாமி எழுதிய அந்தத் தொகுப்பின் கவிதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அலைந்து திரிந்து கிடைக்காமலே போய்விட்டது. பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் வைகறை என்ற இதழொன்றில் அந்தத் தொகுப்பில் வராத கவிதை ஒன்றிருக்கிறது என்று அதை மட்டும் வாங்கிவந்தோம். இப்போதும் அந்த எஸ்.கே.துரைசாமியின் தொகுப்பை தேடிக்கொண்டே இருக்கிறேன். எஸ்.கே.துரைசாமி-தான் நகுலன் என்று எத்தனை பேருக்குத் தெரியும் நண்பா...! அவரது

‘எல்லாம்தான் எல்லாருந்தான்
தானேதான் தன்னானத் தானே
தான்
தான் தான் தான் தன்னானத்
தானேதான்' கவிதையை மறக்கமுடியாமல் எத்தனை நாள் தவித்துக் கொண்டிருந்தோம்!

(இதோ இதை எழுதும்போது மனைவி திட்டத் திட்ட பழைய புத்தகங்களைக் கிளறி அந்த வைகறையைக் கண்டுபிடித்து பார்க்கும்போது மலையாளக் கவிஞர் குஞ்ஞுண்ணியின் கவிதைகள் இரண்டு சட்டென கண்ணில் படுகிறது..

விரிந்த பூவைக் கண்டதுண்டு
பூ விரிவது கண்டதில்லை

எனினும் நான் அகங்கரிக்கிறேன்

நானொரு கவியாம்!

சிறகடி ஓசை எழுப்பாது

பறக்கும் பட்சிக்கு
ஒரு சிறகு ஆகாயம்
மறுசிறகு எதெனத் தெரியாது
தெரிவது வரையும்

அரைக்கவிதை இக்கவிதை)

அந்த சமயங்களில்தான் நாம் ஞானக்கூத்தனை அப்படிப் படிக்க ஆரம்பித்தோம். ‘டேய்.. என்னடா நாம நினைக்கறத நினைக்க முடியாதத எல்லாம் இந்தாளு 1970க்கு முன்னாடியே எழுதீட்டாரு’ என்று சிலாகித்துக் கொண்டிப்போம் நினைவிருக்கிறதா? இன்றும் 1968லோ, 69லோ அவர் எழுதிய

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவுபோகாமல் இருக்க கையருகே வை


என்று மனதில் நின்ற கவிதை தரும் தாக்கம் அப்படியே இருக்கிறதே நண்பா... நமக்கு வயசாகிவிட்டதா?

ஆத்மாநாமின்

‘என்னைக் களைந்தேன்
என் உடல் இருந்தது

என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்

வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை’


அப்புறம் பசுவய்யாவின் கவிதைகள், தருமு சிவராம் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருந்த நாம் எங்கே தேங்கினோம் என்று இப்போதும் புரியவில்லை முத்தையா.. வாழ்க்கையில் அடுத்த வேளை சோறு உறுதியென்ற பின்தான் இலக்கியம், கதை, கவிதை என்று உடுமலை ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்தில் அமர்ந்து முடிவெடுத்தோமே..


ஒரு வருடங்களுக்கு முன் நம் நண்பர்களில் ஒருவனான சதீஷைப் பார்த்தேன். ‘உன்னையும் முத்தையாவையும் பார்த்தா பொறாமையா இருக்குடா.. எவ்ளோ படிக்கறீங்க.. எவ்ளோ விவாதிக்கறீங்க. எனக்கு எதுவுமே புரிய மாட்டீங்குதுடா. வாழ்க்கைய ரசிச்சு வாழறதுன்னா உங்ககிட்ட கத்துக்கணும்’ என்று அந்த பௌர்ணமி இரவில் வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து கொண்டு நம்மிடம் புலம்பினானே அவனேதான். சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ-வாம். அவன் விசிட்டிங் கார்டுக்கு முன்னாலேயே நான் நிற்கமுடியவில்லை. அவனுக்கு முன்னால் நிற்கவே கூசியது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-க்கு கோவையில ஸ்டிக்கர் டிசைன் செய்ய வந்தேன் என்றான். வாயைப் பிளந்து ஸ்கார்ப்பியோவா என்று கேட்டபோது.. ‘இது எக்ஸ்ட்ராவா வேணும்னு வாங்கினது. எனக்கு என் வொய்ஃப் லாண்ட் க்ரூசர் ப்ரசண்ட் பண்ணிருக்கா’ என்றான். பதிலுக்கு உன் வண்டி எங்க என்று கேட்டுத் தொலைக்கப் போகிறானோ.. எங்கே என் சர்வீஸுக்கு விடாத பைக்கைப் பார்த்துவிடுவானோ என்று பயந்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. ‘இன்னும் அதே கதை, கவிதை, உலகசினிமா ஞாயம் நடக்குதா’ என்று கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் போனான்.

அவன் கிடக்கிறான்! வாழ்க்கை என்பது கிளம்பி, நோகாமல் கியர் மாற்றி சேஃப்டியாக சென்று சேரும் பயணமாக இருப்பதில் என்ன ஆனந்தம் இருக்கிறது நண்பா? நாலைந்து வளைவுகளில் திருப்பி, கைகால்கள் சிராய்த்துக் கொண்டு ஒன்றிரண்டு வண்டிகளை ஓவர்டேக் செய்து.. முந்த முடியாத வண்டிகளைப் பார்த்து பிரமித்துக் கொண்டு...

ஒரு கையில் காயமும், இன்னொரு கையில் பூக்களுமாக ‘வாவ்’ என்று பிரமித்துச் செல்வதுதான் வாழ்க்கை நண்பா. அதைப் பகிர்ந்துகொள்ள உன்னைவிட எனக்கு யாரிருக்கிறார்கள்?

எனவே எங்கிருந்தாலும் வா...

அளவில்லா அன்போடு
-சாலமன்

***************************************************





தலைப்பு எவ்வளவு அதிகாரத்தனம்... இது கடைசி கடிதம் என்றும், முத்தையா சாலமன் கடித தொடர் இதோடு முடிகிறது என்றும் சொல்ல நான் யார்? அது தொடரட்டும் எங்காவது... அதுசரி... முத்தையாக்களின்/சாலமன்களின் மனைவிகளுக்கும் சொல்ல எவ்வளவோ இருக்கும். ஒருவேளை இவர்களுக்கு மனைவிகள் இருந்து அவர்களுக்குள் கடிதம் எழுதிக்கொண்டால் எப்படி இருக்கும்?

அதை தோழி.ஸ்ரீமதியும், புதுகைத் தென்றலும் ஆளுக்கு ஒரு கடிதம் எழுதி உணர்த்துவார்கள்..

விளையாட்டின் விதி.... அப்படியேதும் இல்லை! ஆம்.. எதுவுமே இல்லை.

Tuesday, April 7, 2009

அர்ஜூனன்-கிருஷ்ணன்-கர்ணன்


‘உன்னிலிருந்து ஒரு கெட்ட பழக்கத்தை எடுத்துக் கொள்வதானால் எதை எடுக்க’ என்றென்னைக் கேட்டால் ‘என் சோம்பேறித்தனத்தை’ என்று சோம்பலே இல்லாமல் சொல்வேன். அப்ப்டி ஒரு சோம்பேறி நான்.

எதற்குச் சொல்கிறேனென்றால் நம்ம யூத் அனுஜன்யாவுக்கு ஒரு புத்தகம் அனுப்பவேண்டும் என்று ரொம்ப நாள் திட்டம். கல்யாண்ஜியின் கடிதங்களை. (அதாவது அந்தத் தொகுப்பை!) திருப்பூரில் கிடைக்காமல் என் நண்பன் ஒருவனிடம் சொல்லி (அவரை அவன் என்று எழுதுவதற்கு மன்னிக்கவும். அவன் என்றெழுதும்போது உணர்கிற நெருக்கத்தை அவர் தரவில்லை என்பதை அவர் அறிவார் என இவன் உணர்கிறேன்) கோவையில் வாங்க ஏற்பாடு செய்தேன். கூடவே நகுலனின் கவிதைத் தொகுப்பும். சரோஜாதேவி புத்தகங்கள் என்ன தலைப்பில் என்றாலும் உடனே கிடைத்துவிடும் இந்த திவ்யதேசத்தில் நகுலனின் கவிதைகள் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருக்கவே நண்பனும் அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

‘சரி.. அதிருக்கட்டும். கல்யாண்ஜியின் புத்தகம் வாங்கியாயிற்றல்லவா.. அதை எனக்கு அனுப்புங்கள். அனுஜன்யாவுக்கு கொரியர் செய்ய வேண்டும்’ என்றேன். சரி என்றான்.

நேற்று காலை அவனிடமிருந்து அலைபேசி வந்தது. (அலைபேசின்னா அலைபேசியே அல்ல. அழைப்பு வந்தது.) ‘அனுஜன்யாவின் அட்ரஸைக் குடுங்களேன். நானே இங்கிருந்து அனுப்பிவிடுகிறேன். நான் உங்களுக்கு அனுப்பி.. நீங்கள் அவருக்கு அனுப்பி.. ஏனிந்த வீண் சிரமம்’ என்று கேட்டான். எனக்கு சுரீரென்றது.

‘ஹூம்! ‘என்ன இருந்தாலும் உன்னை விட கர்ணன் தானப்பிரபு’ன்னு கிருஷ்ணர் அர்ஜூனருக்குச் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது நண்பா’ என்றேன்.

அதென்ன?

கிருஷ்ணரிடம் ஒருமுறை அர்ஜூனன் (இதே கதையை தருமன், பீமன் என்று எல்லாரை வைத்தும் சொல்வார்கள். கிருஷ்ணரிடம் இது பற்றிக் கேட்டபோது ‘அந்த டைம் அர்ஜூனன் வாஸ் வித் மீ கிருஷ்ணா (இது நான்). மத்ததெல்லாம் உங்காளுக கெளப்பினது’ என்றார்) ‘கிச்சா... நீ எல்லாத்துக்கும் எங்க அஞ்சு பேருக்குத்தான் சப்போர்ட் பண்ற. ஆனா தானதர்மம்ன்னா ஒடனே ‘கர்ணன்தான் தானப் பிரபு’ன்னுடற. எங்களையெல்லாம் துரியோதனன் இப்படி காட்டுக்குள்ள விரட்டிட்டான். தானதர்மம் பண்ண எங்களால எப்படி முடியும். ஆக அவனைவிட நாங்க செல்வத்துல கீழ்நிலைல இருக்கச்சொல்லோ, நீ கம்பேரிசன் பண்றது தப்பு’ன்னான்.

கிருஷ்ணர் சிரிச்சுகிட்டே ‘சரிதான். சம அளவு செல்வம் இருந்தாலும் இன் தட் மேட்டர் ஐ வில் சப்போர்ட் கர்ணா ஒன்லி’ என்றார் கிருஷ்ணர்.

சொன்னதோடு நிற்காமல் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திலேயே வெள்ளியினாலான மலைக்குன்று ஒன்றையும், தங்கத்தினாலான மலைக்குன்று ஒன்றையும் உருவாக்கினார்.

“அர்ஜூனா.. இதோ இந்த இரண்டு மலைகளும் உனது. இதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்” என்றார்.

அர்ஜூனன் பூரிப்படைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அந்தக் காட்டில் யார் வருவார்கள்? அருகிலுள்ள கிராமமொன்றிற்குச் சென்று எல்லாரிடமும் அறிவித்து எல்லாரையும் அங்கே வரச் செய்து ‘யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ன்னான்.

ஆளாளுக்கு தங்க, வெள்ளி மலைகளை வெட்டி வெட்டி எடுத்துக் கொண்டு போக மலை கரைந்து குண்டூசி முனையளவு தங்கமும், வெள்ளியும் மீதமிருந்தது.


“பார்த்தியா கிச்சா.. எல்லாரும் என்னை தானப் பிரபு’ன்னு புகழ்ந்துட்டு போறத’ என்றான்.

‘சரி..சரி’ என்று சிரித்த கிருஷ்ணர் கிராஃபிக்ஸ் எதுவும் இல்லாமல் சட்டென்று மீண்டும் அதேபோல இரண்டு மலைகளை உருவாக்கினார். கர்ணனை அந்தக் காட்டுக்குள் அழைத்தார். (ஏர்செல்.. எப்பொழுதும்.. எங்கிருந்தாலும்..)

வந்தான் கர்ணன்.

“கர்ணா.. இதோ உனக்கு முன்னால் இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று தங்கத்தாலானது. இன்னொன்று வெள்ளியினாலாதது”

“பார்த்தாலே தெரியுது. மேட்டருக்கு வாங்க”

“இவையிரண்டும் உனக்குத்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்றார்.

கர்ணன் பார்த்தான். காடு. அவன், அர்ஜூனன், கிருஷ்ணரைத் தவிர யாருமங்கில்லை. அடுத்த நொடி சொன்னான்.

“அர்ஜூனா.. நீ ஒரு மலையை எடுத்துக் கொள். கிருஷ்ணா (இது நானில்ல. கடவுள்) நீ ஒன்றை எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு ‘டைமாச்சு. நிறைய ஃபைல் கையெழுத்துக்காக வெய்ட்டிங். பை’ என்று சொல்லி போயே விட்டான்.

கிருஷ்ணர் கேட்டார்...

“பார்த்தாயா அர்ஜூனா.. கொடுப்பது என்று முடிவானபின் இவன் கடவுள் இவனுக்கேன் கொடுக்க வேண்டும் என்றோ... இவன் என் எதிரி இவனுக்கேன் கொடுக்க வேண்டும் என்றோ.. இவர்களை விட இல்லாதவர்க்குக் கொடுக்கலாம் என்றோ.. யாருக்கு எதைக் கொடுக்க என்றோ, எவ்வளவு கொடுக்க என்றோ எதையாவது சிந்தித்தானா கர்ணன்? கணநேரத்தில் கொடுத்துவிட்டுப் பறந்துவிட்டான் பார்த்தாயா.. அந்தப் பண்புதான் கொடுப்பதில் இருக்க வேண்டும். நௌ யூ அண்டர்ஸ்டேண்ட் வொய் ஐயம் சப்போர்ட்டிங் ஹிம்?”

*** *** *** *** *** *** ***
அனுஜன்யாவிற்கு புத்தகத்தை அனுப்ப நினைத்த நான் நண்பனிடம் ‘வாங்கி அனுப்பிடுங்க’ என்று சொல்லியிருந்தாலே போதும். நான் வாங்கி ட்யூப்லைட்டில வெளிச்சத்தை மறைத்து பேரெழுதிக் கொள்வதுபோல பேரெழுதி என் கையாலதான் அனுப்பவேண்டும் என்று நினைத்ததால்தானே அது எனக்குத் தோன்றவில்லை? சட்டென்று கேட்ட அந்த நண்பனின் மனதின் விசாலம் இதனால் புரிபடுகிறதல்லவா?

அந்த நண்பர் – செல்வேந்திரன்.

1) அந்தப் புராணக்கதையை ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன். நானொன்றும் கர்ணனோ, அர்ஜூனனோ அவர்களுக்கு அருகில் நினைத்துப் பார்க்கக்கூட முடிகிற தகுதியுள்ள கொடையாளி அல்ல. யாரும் அதை நம்பி புத்தகம் கேட்கவேண்டாம்! (கொடுத்தா வாங்கிக்கத் தயார். அதுவும் அந்த நகுலன் கவிதைத் தொகுப்பு அனுப்பித்தந்தீங்கன்னா** உங்க வீட்டுப்பக்கம் கூம்புவடிவ மைக் யாரும் கட்டாமலிருக்க எல்லாம் வல்ல ஸ்ரீரங்கரங்கநாதரைப் பிரார்த்திப்பேன்.)

2) இவ்வளவு நாள் பதிவுக்கு வராம, வந்தாலும் மத்தவங்க பின்னூட்டத்தை எனக்குப் போடற, ஃபோன் பண்ணினாலும் எடுக்காத ‘நவயுவக்கவிஞர்’ அனுஜன்யா அறிவது: பதிவைப் படிச்சுட்டு கொரியர்காரனை எதிர்பார்த்து வாசல்லயே உட்காராதீங்க. இன்னைக்குத்தான் செல்வா அனுப்பறார். நான் அட்ரஸைக் கொடுக்க ரொம்ப லேட் பண்ணீட்டேன். (முதல் பாராவை மீண்டும் ரெஃபர் பண்ணிக் கொள்ளவும்)

** சென்னை நண்பர்களைத் தவிர யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தை அனுப்புவதாகச் சொல்லுங்கள். நம்புவேன். சென்னை நண்பர்கள் அனுப்புவதாக இருந்தால் சொல்லாதீர்கள். சொல்லாமல் அனுப்புங்கள். அப்படி புத்தகம் அனுப்பவதாகச் சொன்னால் அது நடப்பதே இல்லை. (என் ராசி அப்படி) சொல்லாமல் அனுப்பினால் நான் எங்கிருந்தாலும் ‘அண்ணே’ என்று என்னை வந்து சேர்ந்துவிடுகிறது.

3) அந்தப் புராணக்கதையில் மசாலா கலந்ததற்கு ஸ்வாமி ஓம்கார் மன்னிப்பாராக.

4) மேலே புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே.

5) ஒண்ணுமில்ல.

Monday, April 6, 2009

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்ப்பா....

டிசம்பர்-ல நடந்தது இது…

ஏதோ ஒரு அவியலில் வாரணம் ஆயிரம் படம் பற்றி எழுதியிருந்தபோது, திருப்பூர் தியேட்டர் பெயர்களைச் சொல்லி 'எங்கே பார்த்தீங்க' என்று பின்னூட்டம் போட்டிருந்தார் நாடோடி இலக்கியன். மனுஷன் திருப்பூர்லதான் இருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. பதிவர்ன்னு ஒருத்தர் சிக்கினா விட்டுடுவோமா நாம? உடனே மெய்ல் பண்ணச் சொல்லி, வெயிலான், சாமிநாதன் (ஈரவெங்காயம்) எல்லார்கிட்டயும் கலந்துபேசி, டிசம்பர் 3ம் தேதி நைட் ஒரு சந்திப்பைப் போட்டோம்! (அத ஏண்டா இப்ப எழுதறன்னு கேட்டா... பொறுமையா படிங்க – தெரியும்.)

இரவு உணவு விடுதில ரெண்டு பீர், ரெண்டு ஒயினோட காத்திருந்தோம். (ஒரு முக்கியமான விஷயம்.. வந்தவங்கள்ல ஒருத்தர் ஒரு பீரும், ஒயினும் மிக்ஸ் பண்ணி சாப்ட்டார், இன்னொருத்தர் ஒரு ஒயின் மட்டும், மூணாமவர் ஒரு பீர் மட்டும். ஒருத்தர் ஒண்ணுமே சாப்பிடல. நான் என் வீட்ல நான்தான் ஒண்ணுமே சாப்பிடாதவன்-னு சொல்லிகிட்டமாதிரி மத்தவங்களும் நான்தான் அந்த நாலாவது ஆள்னு சொல்லிக்கங்கப்பா. அதுக்காகத்தான் இதைச் சொல்றேன்..)

வந்தார் நாடோடி இலக்கியன்.




நாடோடி இலக்கியன்

(எங்க மூஞ்சியை எத்தனை தடவைதான் பார்ப்பீங்க.. அதுனால CROP செய்யப்பட்டது)

நல்ல உயரம். தீர்க்கமான பார்வை. சரி.. சரி.. சிறுகதை மாதிரி வருது. நேரா விஷயத்துக்கு வருவோம்..

கொரியாவில் மென்பொறியாளராய் பணிபுரிந்து இப்போது இந்தியா வந்திருக்கிறார். (செந்தழல் ரவி.. உங்களுக்குத் தெரியுமா இவரை?) சென்னைல இருந்து திருப்பூர் வர்றப்ப ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் நடந்திருக்கு.

அதை முதலில் சொல்ல?

சரி... கெட்ட விஷயம்:- ட்ரெய்ன்ல வர்றப்ப இவர் பையை வெச்சுட்டு கதவோரம் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கார். அந்த நேரத்துல இவர் பைல இருந்த எல்லா சர்ட்டிஃபிகேட்ஸும் அடங்கின ஃபைலை எவனோ அடிச்சுட்டுப் போய்ட்டான். 10-வதிலிருந்து, கடைசியா வேலை செஞ்ச கம்பெனில குடுத்த சர்டிஃபிகெட்ஸ் வரைக்கும் எல்லாம் போச்சாம். கஷ்டமா இருந்தது. புகார் குடுத்திருக்கார்.

நல்ல விஷயம்: எடுத்துட்டுப் போனவன் லேப்டாப்பை விட்டுட்டுப் போய்ட்டான். ப்ச்.. அதகூட இன்னொண்ணு வாங்கிக்கலாம். இனி இவர் அலைஞ்சு, டூப்ளிகேட் சர்டிஃபிகேட் வாங்கறதுக்குள்ள ரெண்டு, மூணு மாசம் ஓடிடும்!!!!

(இதை எழுதிய நாளில் கிடைக்காத அந்த சான்றிதழ்கள்... இந்தப் பதிவை பதிவேற்றும் இன்றைய தினம் பாடுபட்டு டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்கிவிட்டார்)


சந்திப்பில பல சுவாரஸ்யமான விஷயங்கள் அலசப்பட்டன.

சாமிநாதன் கேட்டார்.. ‘உங்களுக்கு முதன்முதலில் பின்னூட்டம் போட்டது யாரு'ன்னு.

எனக்கு 'அம்பி'-ன்னேன். ஆனா வந்து பாக்கறப்ப தெரியுது. எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது என் நண்பன் ஜெய்சக்திவேல்-கிட்டேர்ந்து. மூணாவது போஸ்ட்டுக்கு. ஆனா அம்பி ஏன் ஞாபகம் இருக்குன்னா, முதல் போஸ்ட்டுக்கு முதல் கமெண்ட் அவர்தான். லேட்டா பத்து நாள் கழிச்சு போட்டிருக்கார்!!

சாமிநாதனுக்கு.... லதானந்த்.

வெயிலான் - தங்கமாங்கனி.

நாடோடி இலக்கியன் - ஏதோ NICE BLOG என்ற பெயரில் யாரோ பின்னூட்டியதாகச் சொன்னார்.

(பேச்சுசிட்டில் (பேச்சுவாக்கில் அல்ல)

காதலோடு காத்திருந்தேன் நீ வருவாய் என
வந்தவுடன் கேட்டாய் ‘உன் வருவாய் என்ன?'


என்ற அவரது கவுஜயை ஞாபகப் படுத்தி டரியலாக்கினார்.)

**********************

சரி.. இப்போ கரண்ட் மேட்டருக்கு வருவோம்... நமக்கெல்லாம் பின்னூட்டம் என்பது மிக முக்கியமாக ஒரு ஊக்கம்.

ஆனால் பின்னூட்டம் என்றால் பிடரியில் கால்பட ஓடுமளவு ஆக்கினார் கணேஷ் என்கிற புண்ணியவான். அவியலில் வால்பையன் வேறு, ஒரு கேள்வி கேட்டு எல்லாப் பின்னூட்டத்தைப் போலவே இதையும் பார்க்காமல் போவீர்களா’ என்று கேட்டிருக்கிறார்.

ஐயா.. பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலளிக்காவிட்டால் பார்க்காமலே ரிலீஸ் செய்கிறேன் என்று அர்த்தமா?

எத்தனையோ முறை சொல்லியாயிற்று. அலுவலகத்தில் எனக்கு இணையம் பக்கம் போக அவ்வப்போதுதான் முடியும். அந்த நேரத்தில் பிறரது பதிவுகளை மேய்வேன். கணேஷ் வைத்த ஆப்பால் இப்போது மாடரேஷன் வேறு போட்டுத் தொலைக்கவேண்டியிருப்பதால், அதை ரிலீஸ் செய்வதில் நேரம் போகிறது. (ஐயா கணேஷா.. ‘அஞ்சாதே. ஒண்ணும் பண்ணமாட்டேன்’ன்னு அபயக்கரம் நீட்டக்கூடாதா?)

கணேஷா.. நீங்கள் செய்ததால் என்னென்ன கஷ்டம் தெரியுமா?

எனக்கு பதிவெழுத ஆகும் நேரத்தை விட அதை சிந்திக்கத்தான் நேரம் அதிகமாகும். மனதில் சிந்தனை ஓடி ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டால் 20 நிமிடங்களில் பதிவு ரெடி. இப்போது அந்த சிந்தனைகளில் பெரும்பகுதியை ‘யார் யார் பின்னூட்டம் போட்டு வெய்ட் பண்றாங்களோ.. பாவம். போய் ரிலீஸ் பண்ணணுமே’ என்ற கவலை அரித்துத் தொலைக்கிறது!

வால்பையன்.... என்னைப் புரிந்து கொள்வீர்களா? ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், 50 பேரின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை விட பின்னூட்டம் போடாமல் படிக்கும் 450 பேருக்காக அடுத்த நாளின் பதிவுக்காக உழைப்பதுதானே ஒரு பதிவனாய் என் கடமை?

நானென்ன வேண்டுமென்றா ‘உனக்கென்ன நான் பதில் சொல்வது’ மனோபாவத்தோடு இருக்கிறேன் நண்பா? இதோ.. இப்போதுகூட உங்கள் ஒரு பின்னூட்டத்துக்கு பின்னூட்டத்தில் இல்லாமல் பதிவிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்!

ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி எவ்வளவு சூப்பரோ சூப்பர் வாலு.. நீங்க கேட்டது என்ன?

டுவிட்டர் என்பது என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு பதிவு போட முடியுமா?

இல்லை மற்ற பின்னூட்டங்களை போலவே இதையும் கண்டுக்கா போயிருவிங்களா?


இதுதான். நானே ட்விட்டர்ன்னா என்னான்னு தெரியல்-ங்கறேன். அதை கட் பேஸ்ட் பண்ணி நீங்களே போட்டிருக்கீங்க... அப்பறம் என்கிட்டபோய் அதப்பத்தி விளக்கப் பதிவு போடுங்க-ங்கறீங்க. அதுவும் என் பதிவோட பின்னூட்டத்திலேயே டெக்னிகலி ஸ்ட்ராங் சர்வேசன் சார் பதிவும் போட்டு, லிங்கும் கொடுத்திருக்கறதப் பார்க்காமயே!

ஓகே.


பின்னூட்டம், பதிவு எழுதுதல் இதெல்லாம் போக ‘ப்ளாக்ல எழுதி என்னத்தைக் கிழிச்ச’ என்ற நியாயமான கேள்வி கேட்பவர்களுக்காக அச்சு இதழில் எழுதிக் காட்டவேண்டிய கடமை வேறு துரத்துகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். 15 நாட்களுக்கு முன் என்னில் உருவான ஒரு நல்ல கரு.. இதுவரை பத்து வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. நேரம்.. நேரம்.. நேரம்..

கணேஷ்...

இதெல்லாம் எனது/எங்களது கஷ்டங்கள்.

உங்களுக்கென்ன.. நாம ஒரு நாலஞ்சு பேருக்கு பாடம் புகட்டீட்டோம்கற ரேஞ்சுக்கு எல்லாரும் மாடரேஷன் போட்டதை ரசிச்சுப் பாராட்டீட்டு இருக்கீங்க!

உங்க ரசனை, திறமைகளை வேற பக்கம் திருப்பக் கூடாதா?

ஓகே.. இனிமேலும் இத வளர்க்க மாட்டீங்கன்னு நம்பறேன்.

இதையெல்லாம் சொல்வதால் உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனாலும்

முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான்; எட்டிப் பழுத்து
ஆயினும் ஆமோ அறை

என்ற நன்னெறி போல.. கோபத்திலும் எங்களுக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன்.


.

Friday, April 3, 2009

அவியல் – 03 ஏப்ரல் 2009




எழுத்தாளர் ச.நா. கண்ணன் (கிழக்கு பதிப்பகம்) திருமணத்திற்குச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.

நான், நண்பர்கள் வெயிலான், ஈரவெங்காயம் ஆகியோருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் எழுதிக் கொண்டிருந்த ஒருத்தர் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்தது போல இருந்தது. ‘இவர்தானே எழுத்தாளர் ..............., கிழக்கு பதிப்பகத்துல அந்த புத்தகம் கூட எழுதினாரே என்று நான் கேட்க வெயிலான் மையமாகத் தலையசைத்தார். அவரோ இன்னொருவரோடு பேசிக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சினிடையே ‘கிழக்கு.. கிழக்கு’ என்ற வார்த்தை பலமுறை கேட்டது.

அவர் என்னைப் பார்த்து ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று சைகையாகக் கேட்க..

‘பரிசல்காரன்’ என்றேன்.

‘ஓ!’ என்று சிரித்தார்.

சாப்பிட்டு முடிந்து கைகழுவிய பிறகு அவரைத் தேடிப் போய்.. ‘நீங்க..’ என்று இழுத்தோம்..

‘நந்தகுமார்’ என்றார்.

‘என்ன புத்தகம் எழுதிருக்கீங்க..’

‘புத்தகமா? நானா’ என்றார். நாங்கள் ஒருமாதிரி டரியலாகி ‘நீங்க எழுத்தாளரில்லையா’ என்றோம்.

‘இல்லையே..’

‘அப்ப கிழக்கு.. கிழக்குன்னு எதுவோ பேசிட்டிருந்தீங்களே..’

‘என்கூட இருக்கறவர் அவர் வீட்டு முகவரி சொல்லிட்டிருந்தார். கிழக்காலயா.. மேக்காலயான்னு பேசிகிட்டிருந்தோம்’

‘அப்ப கிழக்கு பதிப்பகம் பத்தி பேசலியா?’

இதற்கு அவர் கேட்ட கேள்விதான் மண்டபத்திலிருந்து தலைதெறிக்க எங்களை ஓடவைத்தது.

‘பதிப்பகமா.. அப்படீன்னா..?’

*********************************

வட இந்திய முதலாளி என்பதால் இந்தி ஓரளவு கற்றுக் கொண்டாயிற்று. அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை.. ‘பக்கா’

‘பக்காவா பண்ணி முடிச்சுடு’

‘அஞ்சு மணிக்குதானே... பக்காவா வந்துடறேன்’ என்று சர்வசாதாரணமாக அதைப் பயன்படுத்துகிறோம்.

இன்றைக்குத்தான் அகராதியைப் புரட்டும்போது பார்த்தேன். பக்கா ஒரு பக்கா ஆங்கிலச் சொல்!

Pucka – முதல்தரமான, உறுதியான, நிரந்தரமான (First Class, Permanent,

என்றிருக்கிறது.

இல்லை.. அது இந்திதானா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...

**************************

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.

‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.

அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!

இதேதான் மூன்றாவது நாளும்.

நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.

ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!

**********************************

ஆதிமூலகிருஷ்ணன் பத்தின மேட்டர் இல்லாம அவியலா?

நம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.

‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!

******************************

ஃபாலோயர்கள் பற்றி.... (ஆரம்பிச்சுட்டாண்டா...) 250 ஃபாலோயர் வந்துட்டாங்க பரிசல்’ என்று நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அப்போதுதான் பார்த்தேன். 251 எட்டியிருந்தது.

நேற்றைக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. 247லிருந்து 4 பேர் புதிதாக சேர்ந்து 251 ஆகிவிட்டிருக்கிறது! நான் எழுதும் நாட்களில் ஒன்றிரண்டு பேர் சேர்கிறார்கள். எழுதாத நாட்களில் கொத்துக் கொத்தாக 4,5 என்று சேர்கிறார்கள். இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...

வேண்டாம். விடுங்க.

அதேபோல எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர். அதை என் தளத்திலிருந்தே எடுத்து விட்டேன். அதில் நான் ஆக்டீவாகவும் இல்லை. ஆனாலும் வாரத்துக்கு 4 பேர் என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்வதாக மின்னஞ்சல்கள் வருகிறது.

விசித்திரம்தான்!

*******************************

தேவதச்சனின் கடைசி டினோசர் (கவிதைத் தொகுப்பு) படித்துக் கொண்டிருக்கிறேன். (உயிர்மை – ரூ.85)

சாம்பிளுக்கு ஒன்று.

எனக்கு

எனக்கு
ஏழுகழுதை வயசாகியும்
கண்ணாடியை நான்
பார்த்ததில்லை. ஒவ்வொரு
முறையும்
எதிரில் நிற்கையில்
என் முகரக்கட்டைதான் தெரிகிறது.
கண்ணாடியைக் காணோம்.
உடைத்தும் பார்த்தேன்
உடைந்த ஒவ்வொரு
துண்டிலும் ஒரு
உடையாத கண்ணாடி.
லேசான வெட்கம் எனக்கு.
பார்க்க முடியாத
கண்ணாடியைத்தான்
பார்க்க முடிகிறது.


கவிதையைப் படித்து விட்டீர்களா..

இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?


.