Thursday, April 16, 2009

”நீங்க லவ் மேரேஜா?” (குசும்பன் ஸ்பெஷல்)நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சத தம்பதியர் இந்தக் கேள்வியை சந்தித்திருப்பார்கள். என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் நான் திருப்பிக் கேட்கும் ஒரே கேள்வி.. “ஏன்.. நீங்க பிடிக்காமலே ஒத்துக்கிட்டீங்களா?”

கேள்வி கேட்பவர் மணமாகி இருந்தால் மட்டுமே இந்த பதில் அல்லது எதிர்கேள்வி. இல்லையெனில் ஒரு சின்னப் புன்னகையோடு ‘ஆமாங்க’ மட்டுமே.

கேள்வி கேட்பது இளைஞனாகவோ, இளைஞியாகவோ இருக்கும் பட்சத்தில் நமது ‘ஆமாங்க’ அவர்கள் முகத்தில் ஏற்படுத்தும் நம்பிக்கைக்காக இரண்டாவது முறையும் சொல்வேன்.. ‘ஆமாங்க’ என்று.


காதல் என்பது விமர்சிப்பதல்ல. உணர்வது. மைக்கேல் ஜாக்சனின் புகழ்மிக்க வாசகம் ஒன்று உண்டு. ‘என்னை விமர்சிக்கும் முன் என்மீது அன்பு செலுத்துங்கள்’

அதையேதான் காதலுக்கும் சொல்வேன். காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள். காதல் என்பது எல்லையற்றது.


“பாருங்க.. லவ் மேரேஜ் பண்ணிகிட்டா உங்களுக்கு ஒண்ணுன்னா யாரும் வரமாட்டாங்க”

அதெல்லாம் ச்சும்மா. ஆனால் அதே சமயம் பெற்றோர் ஆசியோடு அவர்களுக்கு மரியாதை தந்து அவர்கள் வாழ்த்த திருமணம் செய்துகொள்வதை நான் வரவேற்கிறேன். உங்கள் காதல் உறுதியான, உண்மையான காதலாயிருக்கும் பட்சத்தில் அதிகபட்ச பெற்றோர்கள் அதை எதிர்ப்பதில்லை.

“ஆரம்பத்துல நல்லாத்தான் இருக்கும். அப்பறம் போகப் போக சண்டை அதிகமாகும்”

அது எல்லா கல்யாணத்துலயும் நடக்கும். ஏன் காதல் கல்யாணத்துல மட்டும்தான் நடக்கும்கற மாதிரி சொல்றீங்க? சொல்லப்போனா இந்த ரேஷியோ காதல் கல்யாணத்துல கம்மின்னு கூட சொல்லலாம். ‘எனக்கு இவளை விட்டா யாரிருக்கா? என்னை நம்பி வந்தவ’ என்று கணவனும் ‘இவனுக்காகத் தானே பலதையும் பொறுத்துகிட்டோம்’ன்னு மனைவியும் விட்டுக் கொடுத்து போறதை பல காதல் தம்பதிகள்கிட்ட பார்த்திருக்கேன்.

உங்கள் மனைவிக்கு பிடிச்சது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா-ன்னு என்கிட்ட கேட்டா.. தெரியாது. ஆனா அவங்களுக்குப் பிடிக்காதது என்னான்னு கேட்டா சொல்லுவேன். அவங்களுக்குப் பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதுமே... நிம்மதியான வாழ்க்கை கேரண்டி!

திருமண வாழ்க்கை தரும் சில நல்தருணங்கள் மதிப்பு வாய்ந்தவை..

எதையோ விடிய விடிய எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பீர்கள். “போதும்க. காலைல பார்த்துக்கலாம். வந்து தூங்கப் போறீங்களா இல்லையா” என்று கேட்கும் குரல் எவ்வளவு சுகம்!

அலுவலகத்தில் ஏதோ டென்ஷன். வீட்டிற்குள் நுழைந்து நம் முகம் பார்த்ததும் எதையோ உணர்ந்து கொண்டவராய் “என்ன ஆச்சுங்க” என்று மனைவி கேட்கையில் உள்ளுக்குள் நெகிழாதவன் மனிதனாக இருக்க முடியாது.

“என்ன இது ட்ரெஸ்? இதப் போட்டுட்டுதான் ஆஃபீஸ் போவீங்களா? இருங்க வரேன்” என்று வேறு உடை எடுத்து வந்து உங்கள் சட்டையைக் கழற்றும் விரல்களில் இதயத்தை உணர்ந்ததுண்டா நீங்கள்?

“நல்ல பசி” என்று ஹாட்பேகில் இருக்கும் அத்தனை இட்லியையும் காலி செய்துவிட்டு கடைசி இட்லியின் கடைசி துண்டை விழுங்கும் உங்களை விழி விரியப் பார்த்துக் கொண்டே இருக்கும் அவளிடம் எதையோ உணர்ந்தவனாய் “ஆமா... நீ சாப்டியா” எனக் கேட்கையில் அவள் முகத்தில் சாப்பிடாமலே தெரியும் சந்தோஷத்தை உங்கள் காசோ, தங்கமோ, வேறெதுவுமோ ஈடு செய்ய முடியுமா?

எத்தனை கார் வைத்திருங்கள். பைக் வைத்திருங்கள். சிறிய கூடையுடன் அரைக் கிலோ வெங்காயமோ, தக்காளியோ வாங்க அவள் புறப்படும்போது “இருப்பா.. நானும் வரேன்” என்று எந்த வேலையிருப்பினும் தள்ளிவைத்து அவளோடு நடந்து போய்ப் பாருங்கள். அந்த கணங்கள் அவள் முகத்தில் தரும் மலர்ச்சியை நீங்கள் எதனாலும் ஒப்பிட முடியாது.


சரி.. பீடிகை போதும். இப்ப எதுக்கு இந்தப் பதிவு..

கீழ இருக்கற ஃபோட்டோவைப் பாருங்க...

ஒண்ணுந்தெரியாத மனுஷனாட்டம் கையக் கட்டிகிட்டு போஸ் குடுத்திருக்காரே.. நம்ம குசும்பன்.. அவருக்கு இன்னையோட திருமணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு!

“தண்டனைக் காலத்துல ஒரு வருஷம் முடிஞ்சுருச்சு” அப்படீன்னு கிண்டல் பண்றார். ‘நாளைக்கு முழுவதும் என்னை பதிவு, பின்னூட்டம், மெயில் பக்கம் பார்க்க முடியாது’ங்கறார்.

நீங்க வராட்டி என்ன? நாங்க உங்களை வாழ்த்தறோம்..

“இனிய மணநாள் நல்வாழ்த்துகள் நண்பா”

66 comments:

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் குசும்பன்:)

Mahesh said...

இறைவன் எல்லா நலமும் வளமும் அளிக்க வேண்டுகிறோம் !!

வாழ்த்துகள் சரவணன் !!

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் குசும்பரே

மேவி... said...

வாழ்த்துக்கள் குசும்பன்

கணினி தேசம் said...

வாழ்த்துகள் குசும்பன் (a) சரவணன்

:))))

சிவக்குமரன் said...

வாழ்த்துக்கள்!!

தராசு said...

//காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள். காதல் என்பது எல்லையற்றது.//

ஒரே ஃபீலிங்ஸ் ஆப் தி இண்டியா வா இருக்கு.

//அவங்களுக்குப் பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதுமே... நிம்மதியான வாழ்க்கை கேரண்டி!//

இங்க பார்றா, இப்பத்தான புரியுது, நீங்க அதையெல்லாம் ஏன் செய்யறதில்லைன்னு

ஸ்வாமி ஓம்கார் said...

இந்த இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த ஈக்கு வேலை இல்லை. :)


பரிசல், நமது நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்திருக்கிறேன். உங்களுக்கு எனது நன்றிகள்.

Thamiz Priyan said...

அண்ணா, அண்ணிக்கு வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் சரவணன் மஞ்சு..

பரிசல் நல்ல பதிவு..

பரிசல்காரன் said...

நன்றி

வித்யா
மகேஷ்
முரளிகண்ணன்
மேவீ
கணினிதேசம்
இரா.சிவக்குமரன்
தராசு
ஸ்வாமிஜி
தமிழ்ப்ரியன்

பரிசல்காரன் said...

மிக்க நன்றி முத்துலட்சுமி மேடம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் குசும்பன்

Cable சங்கர் said...

//“நல்ல பசி” என்று ஹாட்பேகில் இருக்கும் அத்தனை இட்லியையும் காலி செய்துவிட்டு கடைசி இட்லியின் கடைசி துண்டை விழுங்கும் உங்களை விழி விரியப் பார்த்துக் கொண்டே இருக்கும் அவளிடம் எதையோ உணர்ந்தவனாய் “ஆமா... நீ சாப்டியா” எனக் கேட்கையில் அவள் முகத்தில் சாப்பிடாமலே தெரியும் சந்தோஷத்தை உங்கள் காசோ, தங்கமோ, வேறெதுவுமோ ஈடு செய்ய முடியுமா//

என்ன ஓரு நெகிழ்வான தருணம்.. அசத்திட்டீங்க.. பரிசல்..

வாழ்த்துக்கள் குசும்பன்.

கே.என்.சிவராமன் said...

நண்பர்கள் திரு & திருமதி குசும்பனுக்கும், திரு & திருமதி அய்யனாருக்கும் திருமண வாழ்த்துகள்.

இரண்டு பேருக்கும் ஒரேநாள்தான் திருமணம் நடந்தது.

மணமக்கள் நூறாண்டுகள் சந்தோஷமாக வாழ வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

anujanya said...

சரவணன்-மஞ்சு தம்பதியருக்கு வாழ்த்துகள்.

நல்ல பதிவு கே.கே.

அனுஜன்யா

anujanya said...

அய்யனாருக்கும் இன்று தான் திருமண நாளா? தெரியாமல் போச்சே.

அய்ஸ் மற்றும் அவர் துணைவியாருக்கும் வாழ்த்துகள். தெரிஞ்சிருந்தா, சென்ஷிய விட்டு ஒரு கொலைவெறிக் கவித எழுதியிருக்கலாம் :)

பை.காரன் - நன்றி தகவலுக்கு

அனுஜன்யா

கோவி.கண்ணன் said...

//உங்கள் மனைவிக்கு பிடிச்சது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா-ன்னு என்கிட்ட கேட்டா.. தெரியாது. ஆனா அவங்களுக்குப் பிடிக்காதது என்னான்னு கேட்டா சொல்லுவேன். அவங்களுக்குப் பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதுமே... நிம்மதியான வாழ்க்கை கேரண்டி//

இருவருக்கும் ஒன்றையே பிடிக்கனும், கருத்தொற்றுமை இருக்கனும் என்று ஏன் எதிர்ப்பார்க்கிறீர்கள் ? என்பதாக சிவசங்கரி அம்மா ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருந்தார்கள். அவரவர் விருப்பங்களை ஏற்காவிட்டாலும் மதிப்பது என்ற நிலையில் இருந்தால் கருத்தொற்றுமை இன்மை என்கிற பேச்சுக்கே இடமில்லை. இட்லி பிடிக்கிறவர்கள் இட்லி தான் சிறந்த உணவு என்று சொன்னால் அது தவறுதான். கணவருக்கு இட்லி பிடித்தால் மனைவிக்கு பொங்கல், நாளைக்கு (வேறு) ஒரு உணவு என உணவே பல தரப்பட்ட சுவையாக ஆகும் போது. மாற்றுக் கருத்துக்கள், எதிர்கருத்துக்கள் என்பதை கருத்தொற்றுமை இல்லை என்பதாக் நினைப்பது தவறான முடிவு / அனுமானம் என்பதாக சொல்லி இருந்தார்கள்.

குசும்பன் இணையர்களுக்கு நானும் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்

கே.என்.சிவராமன் said...

நண்பர் கோவி. கண்ணனின் பின்னூட்டம் நச்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா :)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குசும்பனுக்குத் திருமண நாள் வாழ்த்துகள்

பரிசல்காரன் said...

நன்றி ரா.கி. ஐயா..

நன்றி கேபிள்ஜி.

மிகவும் நன்றி பைத்தியக்காரன் சார். அய்யனாருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

கோவி.ஜி.. 100% ஒத்துப்போகிறேன்!

நன்றி தோழி ஸ்ரீ!

நன்றி சுந்தர்ஜி!

G3 said...

குசும்பன் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

ஜோசப் பால்ராஜ் said...

மிக நெகிழ்வான பதிவு அண்ணா.
என்னால எதுவும் சொல்ல முடியல.

என் அருமை நண்பணுக்கும் , தங்கைக்கும் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//அதையேதான் காதலுக்கும் சொல்வேன். காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள்.//

அதனால தான் சொல்றேன் காதல் ஒரு டுபாக்கூர்

அவ்வ்வ்வ்வ்வ்வ்

உங்க வீட்லயெல்லாம் பூரிகட்டை இல்லையா!

பரிசல்காரன் said...

நன்றி க்3!

நன்றி ஜோசப் தம்பி!!!

பரிசல்காரன் said...

@ வாலு

ஒழுங்கா இருந்தா ஏன் பூரிக்கட்டை பறக்குது?

:-))) நன்றி நண்பா.

வால்பையன் said...

//“போதும்க. காலைல பார்த்துக்கலாம். வந்து தூங்கப் போறீங்களா இல்லையா” என்று கேட்கும் குரல் எவ்வளவு சுகம்!//

அப்பவே எந்திரிச்சு போயிட்டா சுகம்!

முதலில் ஒரு குரல் கேட்க்கும்
பின் சில தட்டுகள் விழும் சத்தம்
அதன் பின் அந்த தட்டுகள் நம்மை நோக்கி பறந்து வரும்!

வால்பையன் said...

//அலுவலகத்தில் ஏதோ டென்ஷன். வீட்டிற்குள் நுழைந்து நம் முகம் பார்த்ததும் எதையோ உணர்ந்து கொண்டவராய் “என்ன ஆச்சுங்க” என்று மனைவி கேட்கையில்//

வேற ஒரு பெரிய செலவு காத்துகிட்டு இருக்குன்னு அர்த்தம்!

Thamira said...

குசும்பன், அய்யனார் தம்பதியினருக்கு வாழ்த்துகள்.!

நீங்கள் விவரித்திருந்த திருமணவாழ்க்கையின் நல்தருணங்கள் கொள்ள்ளை அழகு பரிசல்.! (என்ன குளிர் விட்டுப்போச்சா? எதிர்பதிவு போடணுமா? ஜாக்கிரதை..)

வால்பையன் said...

//“என்ன இது ட்ரெஸ்? இதப் போட்டுட்டுதான் ஆஃபீஸ் போவீங்களா? இருங்க வரேன்”//

அன்னைக்கு சம்பள நாள்ன்னு அர்த்தம்!

Thamira said...

அப்புறம் காரணம் சொல்லமாட்டேன்.. சொன்னா ஓடிடுவீங்க.. கொஞ்சம் கடைபக்கம் வாங்களேன்..

வால்பையன் said...

//அரைக் கிலோ வெங்காயமோ, தக்காளியோ வாங்க அவள் புறப்படும்போது “இருப்பா.. நானும் வரேன்” என்று எந்த வேலையிருப்பினும் தள்ளிவைத்து அவளோடு நடந்து போய்ப் பாருங்கள்.//

எதுக்கு இந்த சொந்த செலவில் சூன்யம்!

தனியா போன அரைகிலோ தக்காளி
கூட போன ஒரு மாசத்துக்கு தேவையான மார்கெட் வீட்ல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//“தண்டனைக் காலத்துல ஒரு வருஷம் முடிஞ்சுருச்சு” அப்படீன்னு கிண்டல் பண்றார்.//

அவரு எங்க பக்கமுங்க!

வால்பையன் said...

இந்த மாதிரி கும்மி அடிச்சு எம்புட்டு நாளாச்சு!

பரிசல்காரன் said...

வாலு..

அடி ரொம்ப பலமோ....?

@ ஆதி

உங்க கடைக்கு வந்து பின்னூட்டியாச்சு ஏறக்னவே.. பாக்கலியா???

//என்ன குளிர் விட்டுப்போச்சா? எதிர்பதிவு போடணுமா? ஜாக்கிரதை.//

கன்னாபின்னான்னு சிரிச்சேன் ஆதி!

Kumky said...

:-))

பரிசல்காரன் said...

என்ன சிரிப்பு கும்க்கி?

தலைவர் said...

தல, என்னுடைய தலைவன்,தலைவிக்கு வாழ்த்துக்கள்... சும்மா குஜ்ஜலா இரு தல...

சென்ஷி said...

இங்கும் இரண்டு நண்பர்களுக்கும் வாழ்த்து சொல்லிக்கொள்கின்றேன் :-)

Anonymous said...

வாழ்த்துகள் குசும்பன்:)

பரிசல்காரன் said...

நன்றி தலைவர்

நன்றி சென்ஷி

நன்றி Globen

பாண்டி-பரணி said...

வாழ்த்துக்கள் குசும்பன்

narsim said...

வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

இங்கையும் ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன் ;-)

Anonymous said...

மணநாள் வாழ்த்துக்கள் திரு & திருமதி குசும்பன் மற்றும் திரு & திருமதி அய்யனார்

மணிகண்டன் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் for குசும்பர் அண்ட் Mrs குசும்பர்.

கோவி :- உங்க கருத்து எழுத மற்றும் படிக்க பயங்கர "நச்" !

pudugaithendral said...

இங்கேயும் என் வாழ்த்தை பதிஞ்சிக்கறேன்.

(அதுக்கு முன்னாடி உங்க பதிவில் சொல்லியிருக்கிற கருத்துக்களுக்கு பாராட்டு பரிசல்.)

பரிசல்காரன் said...

நன்றி பாண்டி பரணி

நன்றி நர்சிம்

நன்றி கோபிநாத்

நன்றி சின்ன அம்மணி

நன்றி மணிகண்டன்

நன்றி புதுகை தென்றல்

மணிகண்டன் said...

me the 50th !

Kathir said...

குசும்பனுக்கும் அய்யனாருக்கும் வாழ்த்துக்கள்...

prabhu said...

// காதல் என்பது விமர்சிப்பதல்ல. உணர்வது. மைக்கேல் ஜாக்சனின் புகழ்மிக்க வாசகம் ஒன்று உண்டு. ‘என்னை விமர்சிக்கும் முன் என்மீது அன்பு செலுத்துங்கள்’

அதையேதான் காதலுக்கும் சொல்வேன். காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள். காதல் என்பது எல்லையற்றது. //


அற்புதமான வரிகள்... நினைத்தாலே இனிக்கிறது உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்... அருமையான பதிவு....

காதல், காதலித்தால் மட்டுமே உணரமுடியும்...
பிரபு சேது

prabhu said...

// காதல் என்பது விமர்சிப்பதல்ல. உணர்வது. மைக்கேல் ஜாக்சனின் புகழ்மிக்க வாசகம் ஒன்று உண்டு. ‘என்னை விமர்சிக்கும் முன் என்மீது அன்பு செலுத்துங்கள்’

அதையேதான் காதலுக்கும் சொல்வேன். காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள். காதல் என்பது எல்லையற்றது. //


அற்புதமான வரிகள்... நினைத்தாலே இனிக்கிறது உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்... அருமையான பதிவு....

காதல், காதலித்தால் மட்டுமே உணரமுடியும்...
பிரபு சேது

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் சரவணன் & மஞ்சு

மங்களூர் சிவா said...

/
“நல்ல பசி” என்று ஹாட்பேகில் இருக்கும் அத்தனை இட்லியையும் காலி செய்துவிட்டு கடைசி இட்லியின் கடைசி துண்டை விழுங்கும் உங்களை விழி விரியப் பார்த்துக் கொண்டே இருக்கும் அவளிடம் எதையோ உணர்ந்தவனாய் “ஆமா... நீ சாப்டியா” எனக் கேட்கையில் அவள் முகத்தில் சாப்பிடாமலே தெரியும் சந்தோஷத்தை உங்கள் காசோ, தங்கமோ, வேறெதுவுமோ ஈடு செய்ய முடியுமா?
/

சரி சரி சஞ்சயையும், கார்க்கியையும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்னா இப்படி எல்லாம் சொல்றதுல தப்பே இல்லை

:)))))))))))))

வாசகி said...

வாழ்த்துக்கள்!

குடும்ப வாழ்க்கையின் நல் தருணங்களை வாசிக்கையில் சந்தோசமாகத்தான் இருக்கின்றது. காலம் வரூம் போது உண்மையா பொய்யா என பார்க்கிறேனே..

cheena (சீனா) said...

அருமைச் சரவணனுக்கும் மஞ்சுவிற்கும் இனிய மண நாள் நல்வாழ்த்துகள்

பரிசல்காரன் said...

மீண்டும் நன்றி மணிகண்டன்

உணர்வுக்கு நன்றி பிரபுசேது.

நன்றி வாசகி

நன்றி மங்களூர் சிவா (கோர்த்துவிட்டுட்டீங்களே..)

நன்றி அன்பின் சீனா!

புருனோ Bruno said...

//எதையோ விடிய விடிய எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பீர்கள். “போதும்க. காலைல பார்த்துக்கலாம். வந்து தூங்கப் போறீங்களா இல்லையா” என்று கேட்கும் குரல் எவ்வளவு சுகம்!//

பாடப்புத்தகம் / சஞ்சிகைகள் படித்தாலோ அலுவலக கோப்புகளை எழுதினாலோ கேட்கும் குரல் சுகம்தான்

ஆனால்

வலைப்பதிவு படிக்கும் போது / எழுதும் போது கேட்கும் குரல்................

Prabhu said...

மாப்பிள்ளை ஃபோட்டோல ரொம்ப வெட்கப் படுறாரே!

Arasi Raj said...

அழகா எழுதி இருக்குறீங்க பரிசல்...

இந்த மாதிரி எல்லாம் நினச்சாரன்னு இன்னிக்கு கேட்டே ஆகணும்....வர்ர்ட்டா

பரிசல்காரன் said...

சரியா கணிச்சு சொல்லியிருக்கீங்க டாக்டர் சார்!

நன்றி பப்பு( எல்லாம் நடிப்பூஊஊஊஊ!)

@ நிலாவும் அம்மாவும்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பட்டாம்பூச்சி said...

காதலை உணரும்படி எவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள்!!
ரசனையுடன் அனுபவித்த வரிகள்.
"நீங்க லவ் மேரேஜா?" கேள்வி என்னையும் மிகவும் கடுப்பேற்றும் விசயம்தான்(கேள்வியின் தொனி அப்படி).
குசும்பன் அண்ணனுக்கும் அய்யனார் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

நன்றி பட்டாம்பூச்சி!

குசும்பன் said...

பரிசல் போஸ்ட் மிக அருமை!

வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

தென்னை மரத்தின் பயன்களை படித்துவிட்டு போனவன் பசுமாட்டை பற்றி கட்டுரை எழுதும் பொழுது இவ்வளோ பயன் உடைய தென்னை மரத்தில் பசுவை கட்டுவார்கள் என்று முடிப்பானாம் அதுபோல் உருகி உருகி காதலை பற்றி எழுதிவிட்டு குசும்பனுக்கு வாழ்த்து சொல்லுவோம் என்று முடிச்சுட்டீங்க:))))

Sanjai Gandhi said...

//தண்டனைக் காலத்துல ஒரு வருஷம் முடிஞ்சுருச்சு//

சரி தான். ஆனா இவருக்கில்ல. மஞ்சுவுக்கு தான் தண்டனைக் காலம். :(