
நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சத தம்பதியர் இந்தக் கேள்வியை சந்தித்திருப்பார்கள். என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் நான் திருப்பிக் கேட்கும் ஒரே கேள்வி.. “ஏன்.. நீங்க பிடிக்காமலே ஒத்துக்கிட்டீங்களா?”
கேள்வி கேட்பவர் மணமாகி இருந்தால் மட்டுமே இந்த பதில் அல்லது எதிர்கேள்வி. இல்லையெனில் ஒரு சின்னப் புன்னகையோடு ‘ஆமாங்க’ மட்டுமே.
கேள்வி கேட்பது இளைஞனாகவோ, இளைஞியாகவோ இருக்கும் பட்சத்தில் நமது ‘ஆமாங்க’ அவர்கள் முகத்தில் ஏற்படுத்தும் நம்பிக்கைக்காக இரண்டாவது முறையும் சொல்வேன்.. ‘ஆமாங்க’ என்று.
காதல் என்பது விமர்சிப்பதல்ல. உணர்வது. மைக்கேல் ஜாக்சனின் புகழ்மிக்க வாசகம் ஒன்று உண்டு. ‘என்னை விமர்சிக்கும் முன் என்மீது அன்பு செலுத்துங்கள்’
அதையேதான் காதலுக்கும் சொல்வேன். காதலை விமர்சிக்கும் முன்.. காதலியுங்கள். காதல் என்பது எல்லையற்றது.
“பாருங்க.. லவ் மேரேஜ் பண்ணிகிட்டா உங்களுக்கு ஒண்ணுன்னா யாரும் வரமாட்டாங்க”
அதெல்லாம் ச்சும்மா. ஆனால் அதே சமயம் பெற்றோர் ஆசியோடு அவர்களுக்கு மரியாதை தந்து அவர்கள் வாழ்த்த திருமணம் செய்துகொள்வதை நான் வரவேற்கிறேன். உங்கள் காதல் உறுதியான, உண்மையான காதலாயிருக்கும் பட்சத்தில் அதிகபட்ச பெற்றோர்கள் அதை எதிர்ப்பதில்லை.
“ஆரம்பத்துல நல்லாத்தான் இருக்கும். அப்பறம் போகப் போக சண்டை அதிகமாகும்”
அது எல்லா கல்யாணத்துலயும் நடக்கும். ஏன் காதல் கல்யாணத்துல மட்டும்தான் நடக்கும்கற மாதிரி சொல்றீங்க? சொல்லப்போனா இந்த ரேஷியோ காதல் கல்யாணத்துல கம்மின்னு கூட சொல்லலாம். ‘எனக்கு இவளை விட்டா யாரிருக்கா? என்னை நம்பி வந்தவ’ என்று கணவனும் ‘இவனுக்காகத் தானே பலதையும் பொறுத்துகிட்டோம்’ன்னு மனைவியும் விட்டுக் கொடுத்து போறதை பல காதல் தம்பதிகள்கிட்ட பார்த்திருக்கேன்.
உங்கள் மனைவிக்கு பிடிச்சது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா-ன்னு என்கிட்ட கேட்டா.. தெரியாது. ஆனா அவங்களுக்குப் பிடிக்காதது என்னான்னு கேட்டா சொல்லுவேன். அவங்களுக்குப் பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதுமே... நிம்மதியான வாழ்க்கை கேரண்டி!
திருமண வாழ்க்கை தரும் சில நல்தருணங்கள் மதிப்பு வாய்ந்தவை..
எதையோ விடிய விடிய எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பீர்கள். “போதும்க. காலைல பார்த்துக்கலாம். வந்து தூங்கப் போறீங்களா இல்லையா” என்று கேட்கும் குரல் எவ்வளவு சுகம்!
அலுவலகத்தில் ஏதோ டென்ஷன். வீட்டிற்குள் நுழைந்து நம் முகம் பார்த்ததும் எதையோ உணர்ந்து கொண்டவராய் “என்ன ஆச்சுங்க” என்று மனைவி கேட்கையில் உள்ளுக்குள் நெகிழாதவன் மனிதனாக இருக்க முடியாது.
“என்ன இது ட்ரெஸ்? இதப் போட்டுட்டுதான் ஆஃபீஸ் போவீங்களா? இருங்க வரேன்” என்று வேறு உடை எடுத்து வந்து உங்கள் சட்டையைக் கழற்றும் விரல்களில் இதயத்தை உணர்ந்ததுண்டா நீங்கள்?
“நல்ல பசி” என்று ஹாட்பேகில் இருக்கும் அத்தனை இட்லியையும் காலி செய்துவிட்டு கடைசி இட்லியின் கடைசி துண்டை விழுங்கும் உங்களை விழி விரியப் பார்த்துக் கொண்டே இருக்கும் அவளிடம் எதையோ உணர்ந்தவனாய் “ஆமா... நீ சாப்டியா” எனக் கேட்கையில் அவள் முகத்தில் சாப்பிடாமலே தெரியும் சந்தோஷத்தை உங்கள் காசோ, தங்கமோ, வேறெதுவுமோ ஈடு செய்ய முடியுமா?
எத்தனை கார் வைத்திருங்கள். பைக் வைத்திருங்கள். சிறிய கூடையுடன் அரைக் கிலோ வெங்காயமோ, தக்காளியோ வாங்க அவள் புறப்படும்போது “இருப்பா.. நானும் வரேன்” என்று எந்த வேலையிருப்பினும் தள்ளிவைத்து அவளோடு நடந்து போய்ப் பாருங்கள். அந்த கணங்கள் அவள் முகத்தில் தரும் மலர்ச்சியை நீங்கள் எதனாலும் ஒப்பிட முடியாது.
சரி.. பீடிகை போதும். இப்ப எதுக்கு இந்தப் பதிவு..
கீழ இருக்கற ஃபோட்டோவைப் பாருங்க...

ஒண்ணுந்தெரியாத மனுஷனாட்டம் கையக் கட்டிகிட்டு போஸ் குடுத்திருக்காரே.. நம்ம குசும்பன்.. அவருக்கு இன்னையோட திருமணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு!
“தண்டனைக் காலத்துல ஒரு வருஷம் முடிஞ்சுருச்சு” அப்படீன்னு கிண்டல் பண்றார். ‘நாளைக்கு முழுவதும் என்னை பதிவு, பின்னூட்டம், மெயில் பக்கம் பார்க்க முடியாது’ங்கறார்.
நீங்க வராட்டி என்ன? நாங்க உங்களை வாழ்த்தறோம்..
“இனிய மணநாள் நல்வாழ்த்துகள் நண்பா”