Tuesday, July 30, 2013

விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டவை


சிகப்பாய் இருப்பதே சிறப்பு.

நற்குணம், தீய பழக்கங்களின்மை, ஒழுக்கம் இவற்றையெல்லாம் விட நூறு ரூபாய் பெர்ஃப்யூம் ஆண்களுக்கு அவசியம்.

பெண்கள் அனைவரும் ஆண்களால் கவரப்படுவதற்கும், ஆண்களைக் கவர்வதற்காகவுமே படைக்கப்பட்டவர்கள்.

இரயிலில் தலைவலி வந்தால், உடன் பயணிக்கும் ஆண்ட்டி உதவுவார்.

நாட்டில், இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் உபயோகித்தே பயணிக்கின்றனர்.

ஷாம்பூ உபயோகித்தால் முடி உதிரவே உதிராது.

டூத்பேஸ்ட், டிடர்ஜெண்ட் ஆகியவைகளை முறையாக ஆராய்ச்சிக்கூடத்தில் போட்டி ப்ராண்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இந்தியாவின் டெண்டிஸ்டுகளுக்கு டூத்பேஸ்ட்டை பரிந்துரைப்பதுதான் தலையாய பணி.

வெள்ளை சட்டை வாங்குபவர்கள் அதைத் டிடர்ஜெண்ட் பவுடர் மூலம் துவைத்து துவைத்து புதியது போல வெண்மையாக்கிக் கொள்ளலாம். புதியது எடுக்கவே தேவையில்லை.

வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை விட, சில குறிப்பிட்ட சோப் உபயோகிக்காததால் வரும் ‘ப்ராப்ளம்’கள் நம் மன உறுதியைக் குறைக்கும்.

எவரது உடையிலும் எந்தக் கறையுமே இருக்காது. நாட்டில் விற்கப்படும் டிடர்ஜெண்ட்கள் எல்லாமே, எல்லாக் கறையையும் எடுக்கவல்லது.

பெண்களின் தன்னம்பிக்கையின்மைக்கும், சமூகத்தில் – பணியிடத்தில் அவர்கள் பின்தங்கி இருப்பதற்கும் அவர்களின் மாதவிடாய்ப் பிரச்சினையே காரணம்.

நாம் குடிக்கின்ற எந்த நீரும் பாதுகாப்பானதல்ல.

திரைக்கு வரும் எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள்தான். எல்லாப் படங்களுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகின்றன.

எந்தப் பாலிசியையும் வற்புறுத்தலின் பேரிலோ, மூளைச் சலவை செய்யப்பட்டோ வாடிக்கையாளார் எடுப்பதில்லை.

குளிர்பானங்கள் குடித்தால் தாகம் தீருமா எனத் தெரியாது. ஆனால் பெண்ணை மயக்கலாம், டான்ஸ் ஆடலாம்.

நைட்டி போடும் பெண்கள் குடும்பப் பெண்கள்.

ஆண்களின் வீரம் ஜட்டி, பனியனிலும் – மரியாதை வேட்டியிலும் இருக்கிறது.

பேக்பைப்பர், கிங் ஃபிஷர் போன்றவை தண்ணீர் (அல்லது) சோடா தயாரிக்கும் நிறுவனங்கள்.

நகைக்கடைகள் எவற்றிற்கும் லாபநோக்கே இல்லை. வாங்கிய விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர்.

....

Wednesday, July 24, 2013

செல்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கான சில விதிகள்


உங்கள் கையிலிருக்கும் செல்ஃபோன் சைஸ் மற்றவர்களுக்கு சவால் விடுவதாய் இருக்கவேண்டும். ரொம்பவுமே சிறியதாக அல்லது பெரியதாக. எல்லாரிடமும் இருப்பது போல இருந்தால் கவனம் ஈர்க்கப்படாது.

செல்ஃபோன் என்னதான் டுபாக்கூராக, இருந்தாலும் அதன் கவர் / கேஸ் புதியதுபோல ஸ்டைலிஷாக இருக்க வேண்டும்,

போலவே, ஸ்க்ரீன் கார்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளவேண்டும். அது செல்ஃபோன் புதியதாக இருக்குமொரு தோற்றத்தைத் தரும்.

பஸ், இரயில் போன்ற பயணங்களில் / பொது இடங்களில் ஸ்பீக்கரில் உரக்கப் பாட்டுப் போட்டுக் கேட்கவேண்டும். தவறியும் இயர்ஃபோன் வைத்துக் கேட்கக்கூடாது. உங்களுக்கு பத்து பதினைந்து அடி தள்ளி வேறொரு பிரகஸ்பதியும் அதே போல பாட்டுப் போட்டு வெறுப்பேற்ற முயலலாம். அதற்கெல்லாம் நீங்கள் அஞ்சக்கூடாது. அவர் பாட்டும், உங்கள் பாட்டுமாய் கலந்து கட்டி உடன் பயணிக்கும் / உடன் இருக்கும் பிறரை கொலைவெறிக்குத் தள்ளுவதொன்றே உங்களது லட்சியமாக இருக்க வேண்டும்.

உங்கள் ரிங்டோன், அருகிலிருப்பவர்களை ஒரு செகண்டுக்கு பயத்தில் துள்ள வைக்கும் ரிங்டோனாக இருப்பது மிக அவசியம்.

பிறரது அலுவலகம், கோவில், நூலகம் என்று எங்கு சென்றாலும் சைலண்ட் மோடில் போடாமல் செல்ல வேண்டும். அங்கே நமது செல்ஃபோன் அலறும்போது, பதறுவதுபோல் பதறி எடுத்து ஒலியைக் குறைக்கவோ, சைலண்ட் போடவோ செய்ய வேண்டும்.

முந்தைய விதி, நண்பர்களுடனோ, சக ஊழியர்களுடனோ, தியேட்டரிலோ இருக்கும்போது செல்லாது. அந்தத் தருணங்களில் உங்கள் ஃபோன் அலறினால் சா--கா--மா- எடுத்து, யார் அழைப்பது என்று நி-தா--மா-கப் பார்த்து, முகத்தில் ஒரு சலிப்பைக் காட்டிவிட்டு பிறகு என்னவும் செய்து கொள்ளலாம். இது, உடனிருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவு பிஸியான மனிதர் என்பதையும், நீங்கள் நினைத்தால் ஓர் அழைப்பை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டும்.

போகுமிடமெல்லாம் சார்ஜரை எடுத்துக் கொண்டு, ‘சார்ஜ் போட்டுக்கவாஎன்று கேட்டுக் கொண்டே, சம்மந்தப்பட்டவர் சரி சொல்லுமுன் ப்ளக்கில் மாட்டிவிட வேண்டும்.
  
பொது இடங்களில் செல்ஃபோனை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. கையில் வைத்துக்கொண்டு நோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் ஃபோனில் நெட்கார்ட் இருக்காது, ஒரு மிஸ்ட் கால் இருக்காது, ஒரு மெசேஜ் இருக்காது.. இருந்தாலும் என்னமோ முக்கியமான அஃபீஷியல் மெய்ல் அனுப்புவது போல, நோண்டியபடி செட்டிங்ஸையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்

ஒருவேளை பாக்கெட்டில் இருந்தால், அழைப்பே வரவில்லையெனினும் அவ்வப்போது எடுத்து பொத்தானை அழுத்தி செல்ஃபோனைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் ஃபோன் உங்களை விட்டு ஓடிவிடும்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களில் எவருக்கேனும் அழைப்பு வருமாயின், உடனேயே நீங்கள் உங்கள் ஃபோனை எடுத்து ஒரு முறைப்பு முறைத்துவிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் மெசேஜ் அனுப்ப நேர்ந்தால் அங்கங்கே பார்த்தபடி டகடகவென்று இரண்டு கைவிரல்களாலும் டைப்ப வேண்டும். இது நீங்கள் ஒரு அப்பாடக்கர் என்று காட்டிக் கொள்ள உதவும்.

சக மனிதர்களோடு உரையாட நேர்கையில், ஃபேஸ்புக், ட்விட்டரோடு -  ‘வாட்ஸப்ல ஃபோட்டோ அனுப்பு, வீ-ச்சாட்ல வா, ஃப்ரிங்ல கனெக்ட் பண்ணு போன்று பேசி நீங்கள் வைத்துள்ளது ஸ்மார்ட் ஃபோன் எனவும், பல அப்ளிகேஷன்களை டவுன்லோடி அப்டேட்டாக இருக்கிறீர்கள் எனவும் உணர்த்தவேண்டியது அவசியம்.

உங்களுக்கு அழைத்தவர் துபாயிலோ, சிங்கப்பூரிலோ இருப்பதுபோலவும், ஒருவேளை அழைப்பு துண்டிக்கப்பட்டாலும் அவருக்கு காதுகேட்கும் என்பதுபோல, அதி உச்சக் குரலிலேயே பேசவேண்டும்

ஆஃபீஸ் மீட்டிங் போன்ற செல்ஃபோனைத் தவிர்க்க வேண்டிய இடங்களில், ஃபோனை சைலண்ட் மோடில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது அதன் ஸ்க்ரீனைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.

உலகத்திலேயே நம்பர் ஒன் ஃப்ராட் நீங்களாக இருப்பினும், உங்கள் ரிங்டோன், ‘உள்ளம் உருகுதைய்யா’, ‘நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய’, ‘கௌசல்யா சுப்ரஜா ராமா’ போன்று சுற்றியிருப்பவர்களுக்கு உங்களை ஒரு ஒழுக்கசீலராக காட்டுவதாய் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தால், குடிக்கலாம், சிகரெட் பிடிக்கலாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் ரிங்டோன் மட்டும் சரணமய்யப்பா என்று கதற வேண்டும்.

மனைவியின் பெயரை, ‘டார்லிங்’, ‘ஸ்வீட்ஹார்ட்’ என்று ஐஸ் வைக்கும் விதமாய் காண்டாக்ஸில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் அழைப்பு வந்தால், பிஸியாக இருப்பதாய் எடுக்காமலிருக்கவோ, கட் செய்யவோ வேண்டும். அல்லது மூஞ்சியை இஞ்சிக் கஷாயம் குடித்த எதுவோ போல வைத்துக் கொண்டு சலித்தபடி, பிறர் முன் மனைவியை ஒரு திட்டு திட்டிவிட்டு அட்டெண்ட் செய்ய வேண்டும்.

பொதுஇடங்களில் நண்பரிடமிருந்து உங்களுக்கு ஏதும் அழைப்பு வந்தால், ’யெஸ்.. டெல் மீ ப்ரோ’ என்று பீட்டரில் ஆரம்பித்து, பிறரை விட்டு விலகி வந்தபின், வழக்கமான, ‘அந்தக் கஸ்மாலம் பண்ற வேலை கீதே மச்சி’ என்று லோக்கலுக்குத் தாவவேண்டும்.


கடைசியாக

இதுபோன்று பற்பல செல்ஃபோன் கேனத்தனங்களைச் செய்தாலும், அதையே ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு, அன்றைக்கு முழுவதும் கமெண்ட்ஸ் என்ன, லைக் எத்தனை என்பதை செல்ஃபோனிலேயே எடுத்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்


• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• 444 44நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.


* நீங்கள் பயணிக்கும் தூரம் 5 கிலோமீட்டருக்குள் இருந்தால் விபத்து எதுவும் சம்பவிக்காது. ஹெல்மெட் போட வேண்டிய அவசியமில்லை.