Monday, December 10, 2012

அவியல் 10.12.2012


ழுதி நாளாகிறது. லேப்டாப் இன்மை, நெட் கார்ட் பேலன்ஸ் இன்மை, கரண்ட் இன்மை என்று பல காரணங்கள் சொன்னாலும் - சோம்பேறித்தனம்தான் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு முதலிடம் பெறும் காரணியாக இருக்கிறது. கிட்டத்தட்ட, காணாமல் போன ப்ளாக்கராகிவிட்ட நிலையிலும், அவ்வப்போது அழைத்துப் பேசும் சிலரது அன்பைச் சம்பாதித்திருப்பது, வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. 

--------------------

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’  படத்தை மிஸ் பண்ணிடாதீங்க என்று பலரும் சொல்லவே, வியாழன் இரவு திருப்பூர் வாரணாசி தியேட்டருக்கு சென்றிருந்தேன். காசி, லிங்கம், வாரணாசி என்று மூன்று தியேட்டர்கள். 9.20க்கெல்லாம் போய் நிற்க, 9.45க்குதாங்க டிக்கெட் தருவாங்கஎன்றார்கள். நண்பர் முரளியும் வந்திருந்தார். மற்ற இரண்டு தியேட்டர்களில், ‘தொடாம விடமாட்டேன்’ (ஆமாங்க.. படம் பேருதான்) ஒன்றிலும், 'லைஃப் ஆஃப் பை’ மற்றொன்றிலும் போட்டிருந்தார்கள்.

9.45க்கு டிக்கெட் கொடுக்கும் மகானுபாவன் வர, கவுண்டரில் கை நீட்டி ந.கொ.ப.கா-வுக்கு டிக்கெட் கேட்டதும், “அந்தப் படம் நைட் ஷோ இல்லைங்க. சிவாஜி 3-டிக்கு வேலை நடந்துட்டிருக்குஎன்றார் கூலாக. “ஏங்க.. வெளில எழுதிப் போட்டிருக்கலாம்ல? வேற தியேட்டருக்காவது போயிருப்போம்ல?என்று கேட்க, “எனக்கே இப்பதாங்க தெரியும்என்றார்.

கொள்கையாவது மண்ணாவது, திருட்டு டிவிடிக்கு என் நிபந்தனையற்ற ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. இந்தப் பத்தியைப் படிக்கும் கேபிள் சங்கர் போன்ற, திரைத்துறையினரிடம்  செல்வாக்கு பெற்றிருக்கும் நண்பர்கள் இதற்கான பிராயச்சித்தமாக, தயாரிப்பாளரிடம் இந்தப் புகாரைத் தெரிவித்து, நகொபகா படத்தின் தெளிவான திருட்டி டிவிடி-யை நஷ்டஈடாகப் பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.  
------------
டத்துக்கு வந்த முரளி இன்னொரு விஷயம் சொன்னார். இதே தியேட்டருக்கு ‘சன் ஆஃப் சர்தார்பார்க்க, நண்பருடன் வந்தாராம். “இதுவரைக்கும் 7 பேர்தான் டிக்கெட் கேட்டிருக்காங்க. மினிமம் 15 பேர் வந்தாத்தான் படம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆட்கள் வராததால், கேன்சலாகவே, வேறுவழியில்லாமல் அதே காம்ப்ளக்ஸில் ஓடிய ‘அம்மாவின் கைபேசிபடத்துக்குப் போயிருக்கிறார். படம் போட்ட இருவதாவது நிமிடத்தில் நவதுவாரங்களிலும் ரத்தம் வர, தட்டுத்தடுமாறி எழுந்து, நைசாக பக்கத்து தியேட்டரில் நுழைந்திருக்கிறார்கள். அமர்ந்திருந்த தியேட்டர் ஊழியர் கேட்டிருக்கிறார்...

“என்ன இந்தப் பக்கம்?

“மன்னிச்சுக்கோங்க. தாங்கமுடியல. இந்த தியேட்டர்ல உட்கார்ந்துக்கறோம்

“என்ன? அம்மாவின் கைபேசியா?

“ஆமாங்க

“அங்கயாச்சும் இருவது நிமிஷம் தாக்குப்பிடிச்சீங்க. இங்க ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுவீங்க. பேசாம அங்கயே போங்கஎன்றிருக்கிறார்.

அந்தத் தியேட்டரில் ஓடிய படம் போடாபோடி.
-------------------------
ந்த இடத்தில் அதே போடாபோடி பற்றி கார்க்கி அடித்த கமெண்ட்:

நண்பன் ஒருவனின் தாயாருக்கு அறுவை சிகிட்சை. சிகிட்சை முடிந்து நலமாயிருக்கும் அவரைக் காணச் சென்றிருந்தோம். நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னான்: “மேஜர் ஆபரேஷன் மாப்ள. பயமுறுத்தீட்டாங்கடா. 12 மணிக்கு ஆபரேஷன் தியேட்டர் போனவங்க, நாலரை வரைக்கும் அறுவை சிகிட்சை பண்ணாங்கஎன்றான். டக்கென்று சொன்னான் கார்க்கி: “சிம்புவே பரவால்ல. 2.30 மணிநேரம் அறுத்துட்டு விட்டுட்டாரு!

-------------------------------------
லுவலக நண்பர் அவர். B Tech ஃபேஷன் டிசைனிங் முடித்தவர். அவரைக் காண, அவரது கல்லூரி ப்ரொஃபசர் இருவர் வந்திருந்தனர். ரொம்பவும் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தவரை, ஒரு ப்ரொஃபசர் வியப்போடே பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் போனதும் கேட்டேன். “என்னப்பா.. அந்த ப்ரொஃபசர் அப்டிப் பார்த்துட்டிருந்தாரு உன்னை?”. அதற்கு நண்பர் சொன்ன சம்பவம் நகைக்க வைத்தது.

அந்தப் ப்ரொஃபசருக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தமாம். காரணம் ஒரு சம்பவம் என்றார்.

ஃபேஷன் டிசைனிங் என்பதால், ஃபேண்ட் தைத்துக் கொண்டு வரச்சொல்லி, ப்ராக்டிகலில் சொல்லியிருக்கிறார்கள். எல்லாரும் தைத்து வைத்திருக்க, நண்பரும் வைத்திருக்கிறார். எல்லாரையும் பாராட்டிக் கொண்டே வந்தவர், நண்பர் வைத்திருந்த ஃபேண்டை பாராட்டிக் கொண்டே எடுத்திருக்கிறார். டக்கென்று, ஃபேண்டை வீசியெறிந்துகெட் அவுட்என்று திட்டினாராம். ‘அதற்குப் பிறகு, அவர் க்ளாஸ் என்றாலே எனக்கு ஆகாதுஎன்றார்.

அப்டி என்னய்யா இருந்த்து அந்த ஃபேண்ட்ல?என்றேன்.

நண்பர் சொன்னார்: “அதை தைச்சு வாங்கின கடையோட பில்லு

---------------------------

சிறுகதைப்போட்டி  எப்போது  என்று கேட்டு குவியும் மெயில்களால்  ஜி மெயில் கெப்பாசிட்டி  இன்றித் தவிக்கிறது. (யாருப்பா சிரிக்கறது?) விரைவில் அறிவிப்பு வெளிவரும்.

------------------------------

விஸ்வரூபம் படத்தை டிடிஹெச்-சில் வெளியிடுவதற்கு எனது ஆதரவு. (ஒன்ன எவன் கேட்டான்?) தியேட்டர்காரர்களின் அட்டூழியத்தால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். தவிரவும், ‘திருட்டு விசிடியையெல்லாம் உங்களால் ஒழிக்க முடியாது. நான்கைந்து வருடங்களில்  எல்லார் வீட்டிலும் டிவிடி இருக்கும் என்று பற்பல வருடங்களுக்கு முன்னே சொன்னவர் கமலஹாசன். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே - அட்வான்ஸாக சிந்திப்பதில் கமல் எப்போதுமே முன்னோடி.

இன்னொரு விஷயம்: டிடிஹெச்-ல் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணமாம். நான் சத்தியமாக தியேட்டரில் போய்த்தான் பார்ப்பேன். தியேட்டர்காரர்கள் கவலைப்படவேண்டாம். ஆனால் - இந்த முன்னேற்றத்தை வரவேற்றே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.

---------------------

ஒருவழியாக, இருவிழியாக சனிக்கிழமை இரவு நகொபகா படம் பார்த்தேன். அருமையான வசனங்கள், கதைக்களன். ஆனால் நடுவுல கொஞ்சம் தூக்கம் வந்து தொலைத்துவிட்டது. பாலாஜி & டீம் செய்வன திருந்தச் செய்திருக்கிறார்கள். சபாஷ்! ஆனாலும் - வெங்கட் பிரபு டீமிடம் போயிருந்தால் இன்னும் க்ரிஸ்பாக கொண்டுபோய் இருப்பார்கள் என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.

--------------------

Sunday, September 30, 2012

சினிமா விமர்சனம் அல்ல

"ஏங்க.. மீராவைக் கூட்டீட்டு வந்தாச்சா?”

“ஓ.. அதுக்குதானே லீவு போட்டேன்... வந்தாச்சு..”

“படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா?”

“நேத்தே பண்ணீட்டேன். கிரி வந்திருக்கான். 5 டிக்கெட் புக் பண்ணியாச்சு”

“எத்தனை மணிக்கு ஷோ?”

“நைட் 9.45. ஸ்ரீ சக்தி.”

“என்னைக் கூட்டீட்டு போக வருவீங்கதானே? நான் பஸ் ஏறி வர்றதா இருந்தா டின்னருக்கு டைம் இருக்காது..”

“வர்றேன். வர்றப்ப கூப்டறேன்..”

“சரிங்க..”

------------

“என்னண்ணா ரொமப் நேரமா யாருக்கோ ஃபோன் ட்ரை பண்ணீட்டிருக்க?”

“இல்ல கிரி... பைக்ல அஞ்சு பேர் போக முடியாது. ஃப்ரெண்ட்கிட்ட பைக் கேட்கலாம்னு கூப்டறேன். நாட் ரீச்சபிளாவே வருது”

“நான் வேணா பஸ்ல வர்றேனே..”

“போறப்ப பஸ் இருக்கும். நைட் ஷோ முடிஞ்சு ரிட்டர்ன் வர்றப்ப என்ன பண்றது?

“ஆட்டோ?”

“15 கிலோ மீட்டர். நைட்டும்பான். 250 ரூவா கேட்பான். இரு... மேல போய் ஹவுஸ் ஓனர்கிட்ட அவரு டிவிஎஸ் கேட்டுப் பார்க்கறேன்..”

---------

“ஏங்க.. கிளம்பியாச்சா?”

“கிளம்பீட்டே இருக்கோம்.. ஹவுஸ் ஓனர் வண்டில கிரியும், மேகாவும் வர்றாங்க. நானும் மீராவும் பைக்ல வர்றோம்”

“கம்பெனி வர்றீங்கதானே என்னைக் கூட்டீட்டு போக?”

“இங்கிருந்து 32 கிலோ மீட்டர் வரணும். பஸ்ல வர்றியா..? ஆப்போசிட்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்”

“இப்ப சொல்லுங்க. மொதல்லயே சொல்லீருந்தா பர்மிஷன் போட்டு கெள்மபீருப்பேன்ல? வர்றதாதானே சொன்னீங்க?”

“சரி.. சரி.. இவங்க மூணு பேரையும் பிக் பஜார்ல வெய்ட் பண்ணச் சொல்றேன். நான் வந்து உன்னைக் கூட்டீட்டு - அப்பறமா வந்து டின்னர் சாப்பிட்டுட்டு எல்லாருமா போலாம்”

“சரி வாங்க”

“உள்ள வர டைம் இல்ல.. பத்து நிமிஷத்துல ஃபேக்டரி முன்னாடி வந்து நில்லு..”

----------

கஸின் ப்ரதர் கிரி + மேகா டிவிஎஸ்ஸிலும், நானும் மீராவும் பைக்கிலும் போனோம். பிக் பஜாரில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும், போய் உமாவைக் கூட்டிக் கொண்டு வந்தேன். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர். வரும் வழியில் பைக் ஆட்டம் கண்டது.

“என்னாச்சு.. ஏன் வண்டிய நிறுத்தினீங்க?”

நான் உமாவை இறங்கச் சொல்லிவிட்டு, பின் பக்க டயர் பார்த்தேன். பஞ்சர்.

“மணி 9 ஆகப்போகுது.. ஒண்ணு பண்லாம்க.. அவங்க மூணு பேரையும் பக்கத்துல சரவணபவன் போய் சாப்பிடச் சொல்லீடலாம். நாம பஞ்சர் கடை எங்கிருக்குன்னு தேடி, பஞ்சர் ஒட்டீட்டு போலாம்”

அப்படியே முடிவானது. “வண்டிய பிக் பஜார் பார்க்கிங்லயே விட்டுட்டு போகச் சொல்லு. இல்லைன்னா திரும்ப பார்க் வீதி சுத்திதான் தியேட்டர் வரணும்”

200 அடி தூரம், பைக்கை மூச்சிரைக்க தள்ளிக் கொண்டு போன பிறகு பஞ்சர் கடையைக் கண்டோம். நேரமாகிக் கொண்டிருந்தது. கடைக்காரர் நடுநடுவே வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். “ண்ணா..சாப்ட்டுட்டு படத்துக்கு போகணும். கொஞ்சம் சீக்கிரம்” என்றதற்கு, மேலும் கீழும் பார்த்தார்.

ரெடியாகி வண்டியை எடுக்கும்போது மணி ஒன்பதே காலை தாண்டியிருந்தது. வேகமாக ஹோட்டலை நோக்கி செலுத்தினேன். தம்பியும், மகள்களும் சாப்பிட்டு முடித்து அங்கே காத்திருந்தனர். நாங்கள் அவசர அவசரமாக ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.

“சரி. கிரி.. நீ மீராவை கூட்டீட்டு போ. வண்டிய எம்ஜிபி பக்கத்து ரோட்ல விடு. இந்தப் பக்கம் வந்தா அப்பறம் சுத்திதான் போகணும். நானும், அண்ணியும், மேகாவும் பைக்ல வர்றோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

தியேட்டர் போய் சேரும்போது மேகா, “அச்சச்சோ” என்றாள். “பிக் பஜார்ல மாமா வண்டிய நிறுத்தின டோக்கன் எங்கிட்ட இருக்குப்பா”

அதுவரை பொறுமை காத்த எனக்கு லைட்டாக கடுப்பு எட்டிப் பார்த்தது. அவளிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பைக்கை விரட்டினேன். பிக் பஜார் செக்யூரிட்டியிடம், “தம்பி பைக் எடுக்க போயிருக்காரு. டோக்கன் எங்கிட்ட மாட்டிகிச்சு” என்று சொன்னதும் அவர் இரண்டு செகண்டுகள் பார்த்தார். பின் டக் என்று ஏதோ நினைவு வந்தவர் போல, “இப்பதான் போனாங்க.. மேனேஜர்கிட்ட கேட்டு வண்டியக் குடுத்துட்டோம் சார்” என்றார். நன்றி சொல்லிவிட்டு மறுபடி தியேட்டருக்கு போனேன்.

மணி ஒன்பதே முக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனக்கு எந்தப் படமானாலும் டைட்டிலிலிருந்து பார்த்துத் தொலைய வேண்டும். அவசரம். பதட்டம். பைக் ஸ்டாண்டில் பைக் நிறுத்த இடம் இருக்க வில்லை. ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவாறு நிறுத்திவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு கவுண்டர் நோக்கி மூச்சிரைக்க ஓடினேன்.

கவுண்டரில் டிக்கெட் புக்கிங் எண்ணைச் சொன்னேன்.

“ப்ரூஃப்?”

அவசரத்தில் அண்டாவுக்குள்ளும் கை போகாது என்பார்கள். எனக்கு பாக்கெட்டில் கை போகவில்லை. போராடி, பர்ஸை எடுத்து பான் கார்டை காட்டி டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.

“வாங்க வாங்க டைமாச்சு” -நின்று கொண்டிருந்த குடும்பத்தாரை அவசரப்படுத்தினேன்.

“படம் போட்டாச்சாம்” - மனைவி சொன்னதும் உற்சாகம் வடிந்தது. “சரி வாங்க” என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு டிக்கெட் காண்பித்து சீட் நம்பர் தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கும்போது சந்தானம் தண்ணி டம்ளரைக் கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.

----

இது படம் பார்க்க ஒரு மிடில் க்ளாஸ் மாரோன் படும் ஆரம்ப அவஸ்தைளின் சிறு சாம்பிள். சம்பவங்கள் முன் பின் மாறலாம். ஆனால் என்னைப் போன்றோர்க்கு படம் பார்க்கச் செல்லும்போது, இதுபோன்ற போராட்டங்கள் சற்றேறக்குறைய சமம் தான். டிக்கெட் விலை, பாப்கார்ன், காஃபி, பார்க்கிங் என்று எப்படியும் ஐநூறைத் தாண்டும் செலவு. இடைவேளையின் காஃபி டோக்கனைக் குடுத்து சிந்தாமல் காஃபி வாங்குவது ஆயகலைகளில் சேர்க்கப் படாத கலை. போலவே ஷோ முடிந்து வண்டியை எடுப்பதும்.

எல்லாம் முடிந்து வெளியே வந்து ஃபோனில் ட்விட்டரையோ, கூகுள் ப்ளஸ்ஸையோ, ஃபேஸ்புக்கையோ திறந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட்டு பார்த்த படத்தின் டோரண்ட் லிங்கை ஒரு நண்பர் கேட்க, ‘இந்தா பாரு..” என்று பலர் LINKசாமிகளாக அள்ளிவழங்கிக் கொண்டிருப்பர்.

ஆக.. இவ்வளவு சிரமப்பட்டு, லோல் பட்டு, அல்லோல கல்லோலப்பட்டு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் என்னைப் போன்றோர்க்கு, “தியேட்டருக்கு சென்று மட்டுமே சினிமா பார்க்கவும்” என்று கூப்பாடு போடும் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன?


வால்துண்டு:

‘தாண்டவம்’ நல்லா இருக்கா, இல்லையான்னு சொல்ல முடியாத ஒரு படம். முகமூடி போட்டுட்டு வந்து மிஷ்கின் அடிச்ச அடிக்கு, விக்ரமும் விஜயும் ஆடின தாண்டவம் Far Better.

இந்தப் படத்துல ஒரே ஒரு கேள்விதான் எனக்கு இருக்கு.

படத்துல எதுக்குய்யா எமி ஜாக்சன் கேரக்டர்?


.

Friday, September 28, 2012

ராஜ நாயகன்!
2005ம் வருடம். திருப்பூர் அரிமா சங்கம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஏற்பாடு செய்திருந்த ஒரு குறும்பட நிகழ்வு. நானும் சென்றிருந்தேன். ஒவ்வொரு குறும்படமாக ஒளிபரப்பப்பட, அதை பார்வையாளர்கள் விமர்சிக்கலாம். நான் ஒவ்வொரு குறும்படத்துக்கும், விதவிதமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு கலந்துரையாடல் மாதிரி, பிற பார்வையாளர்களும் அவர்களது கோணத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு குறும்படத்திற்கு, நான் ஏதோ கருத்து சொல்ல எனக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அதற்கு மாற்றுக் கருத்து வைத்தார். நான் என கருத்தை மீண்டும் வலியுறுத்த, அவர் அவரது கருத்தை முன்வைக்க ஒரு விவாதமாக அது அமைந்தது.


நான்கைந்து குறும்படங்கள் திரையிட்ட பிறகு, நன்றியுரை சொன்ன சுப்ரபாரதி மணியன், “சிறப்பாக விமர்சனக் கருத்துகளை முன்வைத்த ஒருவருக்கு பரிசு கொடுக்க உள்ளோம்..” என்று சொல்லிவிட்டு சடாரென முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “உங்க பேரு?” என்று கேட்க ஒரு மகிழ்ச்சியோடு என் பெயர் சொன்னேன்.


‘கிருஷ்ணகுமாருக்கு பரிசளிக்க R.P. ராஜநாயஹம் அவர்களை அழைக்கிறேன்’ என்றார்.


ராஜநாயஹம். ஆர்.பி.ராஜநாயஹம். அந்தப் பெயரை அடிக்கடி இலக்கியப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது போக சில எழுத்தாளர்களின் எழுத்தில் அடிபடும் அந்தப் பெயருக்குரியவரா எனக்கு பரிசளிக்கப் போகிறார் என்று ஒருவித ஆர்வமோடு அவரை எதிர்பார்க்க...


எனக்கு இரண்டு வரிசை பின்னால் இருந்து, என்னோடு விவாதித்தவரே எழுந்து வந்து, அந்தப் பரிசை எனக்கு அளித்தார். அவர்தான் ஆர்.பி.ராஜநாயஹம் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.


நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்தித்து, “சார்... நீங்கன்னு தெரியாம விவாதிக்கறப்ப அதும் இதும் பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க. உங்களைப் பத்தி நிறைய பத்திரிகைகள்ல படிச்சிருக்கேன்” என்றேன். அவர் சிரித்துவிட்டு, “அச்சச்சோ... அதெல்லாம் இல்லைங்க. கருத்துப் பரிமாற்றம்ங்கறப்ப விவாதங்களும் வரத்தானே செய்யும்” என்று சொல்லிவிட்டு அவரது நூல் விமர்சனங்கள் வந்த ஒன்றிரண்டு நகல்களைப் பகிர்ந்து கொண்டார்.

----

அதன்பிறகு வெகுநாள் கழித்து, 2008ல் அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதத்தொடங்கியதும் “சார்.. உங்களை எனக்கு தெரியும்.. சந்திச்சிருக்கேன்” என்று கேனத்தனமாக ஒரு பின்னூட்டமெல்லாம் போட்டேன். அவ்வளவு பெரிய ஆள் பதிலெல்லாம் போடுவாரா என்று விட்டு விட்டேன்.


சமீபத்தில் திருப்பூர் புத்தகக்கண்காட்சியின்போது எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். எதேச்சையாக ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களும் அங்கே செல்ல எஸ்.ரா அவரைப் பார்த்து அளவளாவியிருக்கிறார். (ராஜநாயஹத்தை அறியாத எழுத்தாளர்களே இல்லை) அப்போது, எஸ்.ரா., தன்னுடன் இருந்த சேர்தளம் நண்பர்களை ‘இவர் வெயிலான்... இவர் முரளிகுமார் பத்மநாபன்” என்று அறிமுகப்படுத்த ராஜநாயஹம் ‘பரிசல்காரன் இருக்காரா?’ என்று கேட்டிருக்கிறார். முரளி “இனிமேதான் வருவார்” என்றாராம். இதை நண்பர்கள் சொன்னபோதும். ‘அவ்ளோ பெரிய ஆளு என்னையக் கேட்கறாரா? ஓட்டாதீங்க” என்று விட்டுவிட்டேன்.


கொஞ்ச நாட்களாக ட்விட்டரிலும் எழுதிவருகிறார் ராஜநாயஹம். ஒரு முறை “திருப்பூரில் நான் சந்திக்க விரும்பும் நபர் பரிசல்காரன்” என்று அவர் ட்விட்டவே,  “சார்.. அப்டிலாம் சொல்லாதீங்க. வா-ன்னா வர்றேன்” என்று சொன்னேன். அதன்பிறகு போனவாரம் என் தளத்திலிருந்து என் எண்ணைப் பிடித்து எனக்கு அழைத்து என்னோடு பேசினார். அப்போது நான் ஒரிசாவில் இருந்தேன். அங்கே சந்தித்த சவாலை (அது வரும் பதிவில்..) குறித்து பேசினார். “பத்திரமா இருங்க கிருஷ்ணா” என்று அக்கறையோடு சொன்னார்.

நேற்று மாலை அவர் வீடு இருக்கும் பகுதி வழியே சென்றபோது, ‘இங்கேதானே எங்கோ அவர் வீடு இருக்கிறது?’ என்ற சிந்தனை எழவே, ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருந்த விலாசத்தை, விசாரித்துக் கொண்டே அவர் வீட்டு முன் நின்றேன். கொஞ்ச நேர, “சார்.. மேடம்..”களுக்குப் பிறகு அவருக்கு அலைபேசியில் அழைத்தேன்.

நான்: “சார்.. வெளில இருக்கீங்களா?”

அவர்: “இல்லைங்க.. வீட்ல இருக்கேன்”

நான்: “நான் வெளில இருக்கேன்”

அவர்: “ஓ.. இன்னும் வீட்டுக்கு போகலியா?”

நான்: “அதில்லைங்க.. நான் உங்க வீட்டுக்கு வெளில இருக்கேன். காலிங்பெல் வேலை செய்யல” என்றேன்.

அவர் பதட்டப்படுவது தெரிந்தது. “அச்சச்சோ.. இருங்க வர்றேன்” என்று கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார்.

கொஞ்ச நேரம் நான் வெளியில் நின்றதற்கு வருத்தப்பட்டுக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார். 

“என்ன சாப்பிடறீங்க? சப்பாத்தியா பூரியா?” என்றார். வழக்கமாக ‘காஃபியா டீயா என்றுதானே கேட்பாங்க?’ என்று ஆச்சர்யப்பட ”இல்லைங்க.. நான் இரவு டின்னருக்கு கேட்டேன். கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்” என்றார். 

“சார்.. சும்மா இருங்க.. வீட்ல சின்ன மக லீவுக்கு வந்து தனியா இருக்கா. நீங்க வேற” என்று மறுத்தேன். 

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேச  ஆரம்பித்தார். கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து காண்பித்தார்.

கிரா, அசோகமித்திரன், தர்மு சிவராம் (பிரமிள்), ஜெமினி கணேசன், திருப்பூர் கிருஷ்ணன், ஜெயந்தன், மதுரை முன்னாள் மேயர் முத்து என்று பலரோடு பல சமயங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். இலக்கிய உலகில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. வாசிப்பில் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஊட்டி சந்திப்பில் ஜெயமோகனோடு நடந்த விவாதம், சாரு என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்.  

பிரமிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் மனைவி முந்திரி பக்கோடாவும், இனிப்பும் கொண்டு வந்து, காப்பியோடு வைத்துவிட்டு உபசரித்தார். 

பிற எழுத்தாளார்கள், சினிமா, இலக்கியம் என்று அவர் பேசுவதையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தேன். நேரமாகிவிட்டதால் புறப்பட எத்தனிக்க, மேசையில் அந்த மாத ‘காட்சிப் பிழை’ பத்திரிகை.  எடுத்துப் புரட்ட, அதில் இவர் எழுதிய ‘என்னத்தே கண்ணையா’ பற்றிய கட்டுரை கண்ணில் பட்டது. 

'சாப்பிடாம போறீங்க.. ' என்று அவரும் அவர் மனைவியும் குறைபட்டுக் கொண்டே வழியனுப்பினர். அவர் மனைவி ஒருபடி மேலே போய்... --  வாசலில் ஒரு படி கீழே வந்து -- “ஆப்பிள் குழந்தைகளுக்கு எடுத்துப் போங்க” என்றார். விடைபெற்று வந்தபின்னும் அவர் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.


இப்பேர்ப்பட்டவர் திருப்பூரிலா என்று நினைக்கும்போது அண்ணன் ரமேஷ் வைத்யா-வின் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.


உயரங்களின் ரசிகன் நான்

என் சுவடுகளில் மிதிபடும்
முகடுகளில் எனக்கொரு
பரவசம்

சங்கீதத்தில் மேல் சட்ஜமம்
சாலையில் டாப்கியர்
காகிதங்களில் காற்றாடி

மலையென்றால் சிகரம்
வீடென்றால் மாடி
கோயிலென்றால் எனக்கு கோபுரம்தான்

அடித்தளங்கள் அவசியமானாலும்
ஈர்த்ததில்லை என்னை அவை

உயரங்களின் ரசிகன் நான்

நடப்பதை காட்டிலும் பறக்கவே பிரியம்
புதைவதை காட்டிலும் எரிதல் விருப்பம்
கவிஞன் என்கிற கித்தாய்ப்பு பிடிக்கும்

க்ளார்க்காய் இருக்கிறேன்
வயிற்றின் அபத்தம்..
.

Wednesday, September 12, 2012

தைரியலட்சுமிஅன்றைக்கு வியாழக்கிழமை. (இப்படித்தான் ஒரு பதிவை ஆரம்பிக்கவேண்டும். அது என்ன தேதி என்றோ அன்றைக்கு வியாழன்தானா என்றோ யாரும் சரிபார்த்து நோட்டீஸ் அனுப்ப முடியாது.)

அலுவலக வேலையாக, வெளியில் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தேன். மணி, மாலை நான்கு இருக்கும்.

சாலையில் ஓரத்தில் நான்கைந்து பள்ளிக் குழந்தைகள் விளையாடியபடி சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு குட்டிப்பையன் மட்டும், அந்த நான்கைந்து பேருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தான். தோளில் ஒரு பக்கமாக சாய்ந்த பள்ளிப்பையுடன் விளையாட்டாக தத்தக்கா – பித்தக்கா என்று ஓட்டமுமில்லாமல், நடையுமில்லாமல் ஒரு மாதிரி போய்க் கொண்டிருந்தான். அவனைக் கடந்து பைக்கை செலுத்தியபின், முதுகில் பள்ளிப் பையும், அவன் சாய்ந்த நடையும் ஒரு மாதிரி கவரவே பைக்கை நிறுத்தி ஒரு ஃபோட்டோ எடுக்கும் ஆசை வந்தது. பைக்கை நிறுத்தினேன்.

அவன் என்னைத் தாண்டியதும், ஃபோட்டோ எடுப்பதற்காக, ஃபோனை கையிலெடுத்து வைத்துக் கொண்டேன். ரிவர்வ்யூ மிர்ரரில் அவனும், அவனுக்குப் பின்னால் பிற குட்டீஸும் வருவது தெரிந்தது. நான் ஃபோனில் கேமராவை ‘ஆன்’ செய்துவிட்டு காத்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்களாகியும் அவனோ, அவர்களோ வராதது கண்டு ரிவர்வ்யூ மிர்ரரைப் பார்த்தேன். அவர்களெல்லாருமே நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

திரும்பிப் பார்த்தேன்.

என் பைக்கிலிருந்து, பத்தடி பின்னால் அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களும், ஓடிவந்து அவனோடு நின்று கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் பெரியவளான ஒரு சிறுமி – பத்து வயதிருக்கும் – ஓரடி முன்னால் வந்தாள்.

“அண்ணா.. வேணாம்ணா.. போயிருங்க. எங்க வீடு அதோ, அங்கதான் இருக்கு. அப்பாகிட்ட சொல்லீருவேன்” என்றாள். குரலில் கொஞ்சம் பயமும், கொஞ்சம் தைரியமும் கலந்திருந்தது.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது.. நான் ஏதோ அவர்களைக் கடத்தவோ வேறு ஏதோ செய்யவோ வந்திருக்கும் சமூக விரோதக் கும்பலில் ஒருவனாக நினைத்துத்தான், அவர்கள் அப்படி நின்றிருக்கிறார்கள் என்பது.

நான் பைக்கை விட்டு இறங்கினேன். சடாரென, - சாலையில் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அவர்கள் - ஒரு விதமாக கூக்குரலிட்டபடி சாலையைக் கடந்து, அந்தப் பக்கம் போய் நின்றனர்.

“ஒண்ணுமில்ல பாப்பா. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன். பையன் நடந்துவந்தது அழகா இருந்துச்சு.. அதான்..” என்றேன் நான்.


அந்தப் பெண் மறுபடி, முன்னைவிட சற்றே உரத்தகுரலில் “வேணாம்ணா… போய்டுங்க. எங்க சித்தப்பா போலீஸ்ல இருக்காரு. சொன்னேன்னா அவ்வளவுதான்” என்றாள்.


கொஞ்சம் சுவாரஸ்யம் உந்தவே, சில அடிகள் அவர்களை நோக்கி எடுத்து வைத்தபடி ‘இல்ல பாப்பா..’ என்று சொல்ல அவர்கள் கோரஸாக ‘ஆஆஆஆஆஆஆஆஆஆ’ என்று கத்தினார்கள்.

அவ்வளவுதான்.

நான் நின்றிருந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு பைக், அந்தக் கூக்குரல் கேட்டு திரும்பி வந்தது. பைக்கில் இருவர் இருந்தனர்.

வந்து, வண்டியை நிறுத்தியதும் “ஏன்ம்மா.. என்னாச்சு” என்றார் பைக்கை ஓட்டி வந்தவர். அவர் மீசை கொஞ்சம் பயமுறுத்தியது. பின்னால் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் இளமையாக இருந்தார்.

“மாமா.. இவரு வண்டியை நிறுத்தீட்டு எங்களை என்னமோ பண்ண வர்றாரு. போகச் சொன்னா கேட்க மாட்டீங்கறாரு..” என்று புகார் செய்தாள் அந்தப் பெண்.

பில்லியன் ஆசாமி, “டேய்.. என்னடா.. யார் நீ?” என்றான் எடுத்ததுமே.

“ஹலோ.. மரியாதையா பேசு. சும்மா ஒரு ஃபோட்டோ எடுக்கறதுக்காக நிறுத்தினேன். என்னமோ சின்னப் பொண்ணு சொல்லுதுன்னு வாய்க்கு வந்தபடி பேசற?” என்றேன் நானும் கொஞ்சம் எகிறலான குரலில்.

வண்டி ஓட்டியவர் போன ஜென்மத்தில் கோடுபோட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து பஞ்சாயத்து பண்ணிப் பழக்கட்டவராக இருக்க வேண்டும். அவனைப் பார்த்து, ‘ஏய்.. இப்படித்தான் எடுத்த உடனே மரியாதையில்லாம பேசுவியா?” என்று அதட்டிவிட்டு, என்னை நோக்கி, ‘தம்பி எங்கிருந்து வர்றீங்க?” என்றார்.

நான் சொல்ல வாயெடுக்கும் சமயத்தில்தான் கவனித்தேன். அந்தக் குழந்தைகளிடம், பாப்பா எதுவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அதில் மிகவும் சின்னவனான – நான் ஃபோட்டோ எடுக்க நினைத்தவனின் – கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தாள். ஒரு நொடியில் என்ன சமிக்ஞை செய்தாளோ, ஐந்தாறு பேரும் ஓட்டப்பந்தயத்திற்கு போகும் வீரர்கள் போல சடாரெனப் புறப்பட்டு, படு ஸ்பீடாக அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போதும், அந்தச் சிறுவனை ஒரு கையில் பற்றியபடி, பள்ளிப் பை முதுகில் ஆட அவள் ஓடிய விதத்தை புகைப்படமாக்க கை துடித்தது.


கொஞ்ச தூரம் போனபிறகு அவள் திரும்பிப் பார்த்தாள்.  ஓட்டத்தை நிறுத்திவிட்டு,  மூச்சு வாங்க வேகவேகமாக நடக்க ஆரம்பித்தாள். எதையோ சாதித்துவிட்டதைப் போல திரும்பி நாங்கள் நிற்குமிடத்தை ஒரு வெற்றிப் பார்வை பார்த்தாள்.

நான் என் ஐ.டி. கார்டை பஞ்சாயத்துப் பேச வந்தவர்களிடம் காட்டி, ‘ஒண்ணுமில்லைங்க. குட்டீஸ் ஸ்கூல் பேகோட போனது பார்க்க நல்லா இருந்துச்சு. ச்சும்மா ஃபோட்டோ எடுக்கலாம்னு நிறுத்தினேன். அதுக்குள்ள அந்தப் பாப்பா கத்தி, கூச்சல் போட்டு..” அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு புறம் அந்தச் சிறுமியின் செய்கை என் மனதை ஆக்ரமித்தபடியே இருந்தது. பைக் ஓட்டி, “இந்தக் காலத்துப் பசங்க எவ்ளோ வெவரமா இருக்காங்க பாருங்க தம்பி…” என்று ஆச்சர்யப்பட்டபடி பைக்கை ஸ்டார்ட் செய்தார்.

நான் அவரிடம் சிரித்தபடி விடை பெற்றேன்.


-------

போனவாரத்தில் ஒருநாள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ‘சார் வெளில என் மனைவி, குழந்தை வந்திருக்காங்க.. கேண்டீன் வரைக்கும் விடுங்க சார். பேசிட்டு போய்டுவாங்க” என்றார். நான் செக்யூரிட்டியை அழைத்து, அனுமதிக்கச் சொன்னேன்.

ஐந்து நிமிடம் கழித்து, கேண்டீன் போனபோதுதான் கவனித்தேன். அவரது குழந்தைதான் – அந்தப் பாப்பா. அப்பா, மனைவியையும், அந்தப் பாப்பாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

”சாருக்கு குட் ஈவ்னிங் சொல்லு” என்றார் அவர் மனைவி. அவளோ என்னையே பார்த்தபடி இருந்தாள். அப்பா சொன்னார்.. “வெளில வந்தா இப்படித்தாங்க. ரொம்ப அமைதியா இருப்பா. ஒரு வார்த்தை பேசமாட்டா. எல்லா வாலும் வீட்டுக்குள்ளதான்”

“ஆமாமாம்.. பொண்ணுகன்னா அப்டித்தான்” என்றேன் அவளது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி.

-------------------

Tuesday, September 11, 2012

அவியல் 11/09/2012

ழுதுவது குறைந்துவிட்டது. புதுப்படங்களோ, பார்ப்பதே இல்லை. ஆனாலும் இந்த மிஷ்கின்-தான் ஏதோ அகிரா குரோசோவா ரேஞ்சுக்கு பேட்டி எல்லாம் கொடுத்தாரே என்று நம்பி, வித்தியாசமாக இருக்கும் என்று ‘முகமூடி’ படத்துக்குப் போய் ஏமாந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்துப் பார்த்த தமிழ்ப்படம் - இப்படி நோகடித்துவிட்டது!

மிஷ்கினின் எந்தப் படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை. அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், நந்தலாலா எல்லாவற்றையும் டிவியில்தான் பார்த்தேன். அதுவும் யுத்தம் செய் பார்த்துவிட்டு ‘செம டைரக்‌ஷன்.. எப்படி மிஸ் பண்ணினோம்’ என்று வேறு நினைத்தேன்.

முகமூடிக்கு வருவோம்.


படம் ஆரம்பிச்சதும் ஒரு போலிஸ் ஜீப் வருது. அப்போது எனக்கு ஒரு ஃபோன். எடுத்துட்டுப் போய், கொஞ்சநேரம் கழிச்சு வந்து உட்கார்ந்து மனைவிகிட்ட ‘என்ன ஆச்சு’ன்னு கேட்டேன். “அந்த போலீஸ் ஜீப் ரைட்ல உள்ள போச்சு. இப்ப ஒரு குப்பை வண்டி வந்துட்டிருக்கு’ என்றார். ‘என்ன விளையாடறியா? இவ்ளோ நேரம் பேசிட்டு வர்றேன்…’ என்றேன். ‘சத்தியமாங்க’ என்றார்.

அப்பறம்தான் தெரிந்தது. அவர் சொன்னது உண்மைதான். சென்னையில் ஷூட்டிங் என்றால் கோயம்புத்தூரிலிருந்து கேமரா வைத்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற பல எரிச்சல்கள். வில்லன் என்கிற பேரில் வீட்டுக்கு வீடு ஆணியடிக்க காண்ட்ராக்ட் எடுத்த மாதிரி நரேன் சுத்தியலோடே சுத்துகிறார். சேஸிங் என்ற பெயரில் அரை மணிநேர நீளத்துக்கு ஒரு சீன். சிறுவர்கள் விளையாடும் அட்டாக் விளையாட்டு போல அடிக்கடி பல கேரக்டர் பேஸ்த் அடித்ததுபோல ஸ்டில்லாக நிற்கிறார்கள்.

திராபை!

முக்கியக் குறிப்பு: அந்த டாஸ்மாக் பாடலில் ‘தன்னானா’ என்ற குரல் வரும்போதெல்லாம் என் விழிகள் சாருவின் விரல்களைத் தேடின.

----------------

நண்பர் ஒருவருக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர், நம் கலாச்சார வழக்கப்படி ஒரு சரக்கு பாட்டிலை பரிசளித்துள்ளார். இவரும் வாங்கி, இரண்டு லார்ஜ் அடித்துவிட்டு பாட்டில் ;லேபிளை ஆராய்ந்திருக்கிறார். 'For Overseas Export Only' என்று போட்டு, பொடி எழுத்தில் ’Distilled, blended & bottled by RADICO KHAITHAN LIMITED, RAMPUR (U.P), Made in India.’ என்றிருந்ததாம்!


-------------

எந்தப் படங்களின் ஆடியோ சிடியும் வாங்கவே பயமாக இருக்கிறது. 5க்கு இரண்டு கூட தேறமாட்டேனென்கிறது. முகமூடி - வாயமூடி சமீபத்தில் கவர்ந்த, பலமுறை கேட்ட பாடல்.

இணைய சர்ச்சைகளுக்கு நடுவில் நீதானே என் பொன்வசந்தம் கேட்க நேர்ந்தது.

‘முதன்முறை பார்த்த ஞாபகம்’ - பாடலின் வயலின் ஆதிக்கம் செமயாக இருந்தது. ‘சாய்ந்து சாய்ந்து’ - குட்டி மெலடி. ‘காற்றைக் கொஞ்சம்’ ஹிட்டடிக்குமென்றாலும் ‘என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்’ டிபிகல் இளைஞர்களின் பாடல். கேட்கக் கேட்க கவர்ந்து, செம ஹிட்டடிப்பது உறுதி என்று கூறுகிறது. நா.முத்துகுமாரின் வரிகள் - ஓஹோ ரகம்.

(அதிஷா - யுவா: இந்தப் பத்திக்கு நோ கமெண்ட்ஸ்னு மட்டும் போடுங்கய்யா...)

----------

இமாம் அண்ணாச்சி கலக்குகிறார். சொல்லுங்கண்ணே சொல்லுங்க-வில். மனதுவிட்டு சிரிக்க முடிகிறது.

தமிழ் மாதங்கள் கேட்க - ஒரு பெண் சொல்கிறார்:  “ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜுலை, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, டிசம்பர்.....” என்று அடுக்குகிறார்.

தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார் என்ற கேள்விக்கு, “பா.விஜய், வைரமுத்து, திருவள்ளுவர் என்று பதில்கள் சிரிக்காமல் வந்து விழுகிறது.

தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை எழுதியவர் பரிமேலர் (அப்படித்தான் சொன்னார்கள்), இந்தியாவின் வடக்கே இருப்பது கோயமுத்தூர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் நூலில் உள்ளது - இப்படி நாமே எதிர்பார்க்காத பதில்கள். தெரியாது என்று சொல்வதற்கு பதில் இப்படியெல்லாம்கூட சொல்வார்களா என்று நினைக்கவைக்கும் பதில்கள்.

ஆனால், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  வெகுசீக்கிரமே போரடிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால்.. அவர்கள் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.

(இணையத்தின் ஒரே பயன் இதுதான். சகட்டுமேனிக்கு யாருக்கு வேணா அட்வைஸ் பண்லாம்!)

வர்ட்டா!

---

Wednesday, April 25, 2012

துப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ்?“உங்க பேரென்ன சொன்னீங்க” என்று கேட்ட பெண்மணியிடம் மூன்றாவது முறையாக என் பெயரைச் சொன்னேன்.

நாற்பதைத் தொடும் வயதிலிருந்த அவர், கண் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டபடி “பாலிசி நம்பர்?” என்று கேட்டார்.

ஏற்கனவே அவரிடம் கொடுத்த துண்டுச்சீட்டு, அவரது கணினிக்கருகே இருந்ததைச் சுட்டிக் காட்டி சொன்னேன். “அதோ அந்தப் பேப்பர்ல இருக்குங்க”

ஒரு மாதிரி சலித்தபடி முகத்தை வைத்துக் கொண்டு, “குடுத்திருந்தா? சொல்ல மாட்டீங்களா? உங்க பாலிசி நம்பரை ஞாபகம் வெச்சுக்க முடியாதா?” என்றார்.

‘எழுதிக் கொடுத்த பேப்பரை வைத்துக் கொண்டே இவனிடம் கேட்டுவிட்டோமே’ என்ற ஆற்றாமையில் அவர் கேட்பது புரிந்தது.

நான் எதுவும் பேசவில்லை.

அவர் பேப்பரிலிருந்த பாலிசி எண்களை கணினியில் தட்டிவிட்டு, ‘நெக்ஸ்ட் ப்ரீமியம் ஜூலைலதானே” என்றார்.

“நான் ப்ரீமியம் எப்பன்னு கேட்கலீங்களே…”

“அப்பறம் என்ன வேணும் உங்களுக்கு?”

“என் ரினீவ்ட் பாலிஸி போஸ்டல்ல அனுப்ச்சது எனக்கு வரலைங்க. போஸ்ட் ஆஃபீஸ்ல கேட்டா ரிட்டர்ன் அனுப்சாச்சுன்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் வந்தேன்” என்றேன்.

“அதுக்கு என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க?” என்றவரிடம் மேலே தொங்கிக்கொண்டிருந்த போர்டைக் காட்டினேன். “மே ஐ ஹெல்ப் யூ” என்றது அந்த போர்ட்.

அவர் என்னை ஏற இறங்க ‘அற்பனே’ என்பதாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு “நேராப்போனீங்கன்னா ப்ளூஷர்ட்ல ஒருத்தர் இருப்பாரு. அவரைப் பாருங்க” என்றார்.

நேராய்ப்போனேன்.

அந்த அலுவலக அறை கொஞ்சம் பெரிய அளவிலானது. ஏகப்பட்ட க்யூபிக்கல்கள் இருந்தன. இடது புறம் ஒற்றை க்யூபிக்கல்கள். வலதுபுறம் பெரிய சைஸ் க்யூபிக்கலில், நான்கைந்து நாற்காலி, டேபிள்கள் என்று ஒருமாதிரியான அமைப்பில் இருந்தது அந்த நீளமான ஹால். அவர் காட்டிய ‘நேராப்போனீங்கன்னா’ கிட்டத்தட்ட ஒரு இருபத்தி ஐந்து அடி தாண்டி இருந்தது.

அந்த இடத்தை அடைவதற்குள் இரண்டு ப்ளூஷர்ட்கள் என்னைக் கடந்து செல்லவே கொஞ்சம் குழப்பமான பார்வையுடனே அவர்களைக் கடந்தேன். கடைசியிலும் ஒரு ப்ளூஷர்ட் இருக்கவே அவரிடம் சென்றேன்.

“சார்… என்னோட பாலிசி போன வாரம் வந்து ரினியூ பண்ணீருந்தேன். போஸ்ட்ல அனுப்பறதா சொன்னாங்க. போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து திருப்பி அனுப்ச்சிட்டதா சொன்னாங்க. முன்னாடி ஒரு மேடம் உங்ககிட்ட கேட்கச் சொன்னாங்க…”

“……………….”

அவர் நான் சொன்னதைக் கேட்டதற்கான எந்த அறிகுறியும் அவர் முகத்தில் தென்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு சூஃபி ஞானி ரேஞ்சுக்கு எந்த ரியாக்ஷனையும் காட்டாத அமைதி அவர் முகத்தில்.

“சார்…”

“லெஃப்ட்ல ப்ளூஷர்ட் போட்டுட்டு ஒரு சார் ஒக்கார்ந்திருப்பாரு. அவர்கிட்ட கேளுங்க”

நல்லவேளை. நான் சொன்னது கேட்டிருக்கிறது.

அவர் சொன்ன லெஃப்டில் இன்னுமொரு ப்ளூ ஷர்ட் சார். அவரிடமும் விவரம் சொன்னேன்.

“நீங்க AGMஐக் கேட்கணும்” என்றார்.

அவர் குறிப்பிட்ட ஏ ஜி எம் அடுத்த க்யூபிக்கலில் இருந்தார். கொஞ்சம் பணிவாக அவர் முன் போய் நின்றேன்.

1…2…3..4…5 நிமிடங்களுக்கு அவருக்கு என் உருவமே தட்டுப்படவில்லை. இத்தனைக்கும் என்னைத்தாண்டி அவர் பார்வை போவதையும், சில ஃபைல்களை நகர்த்த அங்குமிங்கும் நகர்வதுமாய்த்தான் இருந்தார். சிறிதுநேரப் பொறுமைக்குப் பிறகு தணிந்த குரலில் “சார்” என்றேன்.

“வந்தீங்கன்னா எதுக்கு வந்தீங்கன்னு நீங்கதான் சொல்லணும்.. சும்மாவே நின்னுகிட்டிருந்தா?” என்றார் அவர், காலையில் மனைவி காஃபி கொடுக்காமல் அனுப்பிவிட்ட மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு..

“இல்ல சார்.. நீங்க எதோ ஃபைலைப் பார்த்துட்டிருந்தீங்க..” என்று தயக்கமாக இழுக்கவே அவர் என்னை “தள்ளி நின்னு சொல்லுங்க” என்றார்.

நான் நின்றிருந்த இடத்தைவிட்டு கொஞ்சம் வலதுபுறமாக தள்ளி நின்றபடி “என் பாலிசி ரிட்டர்ன் ஆகி.. “ என்று என் பல்லவியை சொல்லிக் கொண்டே கவனித்தேன். நான் முன்பு நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராக ஒரு மஞ்சள் சேலை ஆண்ட்டி அமர்ந்திருந்தார். அன்னார் அவரைத்தான் சைட் அடித்துக் கொண்டிருந்தார் போலும்.

நான் சொன்ன முழுவதையும் கேட்ட அவர் வெறிகொண்டு எழுந்தார். “அதுக்கு ஏங்க என்னை வந்து தொல்லை பண்றீங்க? ரைட்ல ப்ளூஷர்ட் போட்டுட்டு..”

“அவர்தாங்க உங்களைப் பார்க்கச் சொன்னாரு..” அவர் முடிக்கும் முன்னே சொன்னேன் நான்.

கண்ணாயிரம்..

அவர் கத்திய கத்துக்கு அந்த ப்ளூஷர்ட் அலறி அடித்து ஓடிவருவார் என்று எதிர்பார்த்தேன். ரொம்பவும் கூலாக உட்கார்ந்த இடத்திலிருந்து “என்னா சார்” என்றார் அந்த கண்ணாயிரம்.

“இவரு பாலிசி ரிட்டர்ன் வந்திருக்கான்னு பார்த்துச் சொல்லுய்யா.. என்கிட்ட ஏன் அனுப்பற?”

“நீங்க சொல்லாம நான் எப்டி பார்க்கறது?” என்று அவருக்கு பதிலுரைத்து விட்டு “இப்டி வாங்க சார்” என்றார் என்னைப் பார்த்து.

நான் மறுபடி அந்த ப்ளூ ஷர்ட்….. கண்ணாயிரத்திடம் போனேன்.

“நாங்க என்னைக்கு அனுப்பிருந்தோம்?” – ரொம்பவும் அறிவுபூர்வமாய்க் கேட்டார்.

“அது எனக்கு எப்டி தெரியும் சார்? நேத்து போஸ்ட் ஆஃபீஸ்ல கேட்டப்ப ரிட்டர்ன் ஆச்சுன்னு சொன்னாங்க”

“பாலிசி எந்த பேர்ல இருக்கு?”

சொன்னேன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, அவர் கைகள் மேஜை மேலிருந்த பேப்பரில் ஒரு மரம் வரைந்துகொண்டிருந்தது. நான் சொன்னதையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிறாரா என்பதும் எனக்குப் புரியவில்லை.

அடுத்ததாக என்ன கேட்கலாம் என்று அவர் யோசனையோடு என் முகத்தை ஏறிட்ட விநாடி என்னை கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு ஓர் உருவம் அவர் டேபிள் முன் நின்றது. “கண்ணா… தயிர்வடை போட்ருப்பான்.. போலாமா” – மெதுவாகத்தான் கேட்டார் வந்தவர். என் காதில் விழுந்துவிட்டது. இருந்தும் கேட்காதது போல நின்றேன்.

கண்ணாயிரம் எழுந்தார். “மேல சார் கூப்டறாராம். இருங்க வர்றேன்…”

“சரி சார்”

“அப்டி வந்து முன்னாடி பெஞ்ச் இருக்கும் உட்காருங்க… பத்து நிமிஷத்துல வர்றேன்”

“சரி சார்..”

நான் அவருடனே நடந்து முன்னால் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் அமர்ந்தேன். சற்று அருகே அமர்ந்திருந்தவர் கையில் ஜூனியர் விகடனை வைத்து விசிறிக்கொண்டிருந்தார். கொஞ்சம் அதிகமாக அவர் வீசியதால் காற்று என்மீதும் பட்டது. அதை தெரிந்து கொண்டாரோ என்னமோ கொஞ்ச நேரத்தில் அவர் வீசும் வேகம் குறைந்தது.

ஐந்து, பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் கூட்டம் சேர ஆரம்பித்தது. பெஞ்ச் நிறைந்து, சிலர் நிற்க ஆரம்பித்தனர்.

நான் முதலில் சொன்ன, ‘மே ஐ ஹெல்ப் யூ’ பெண்மணி என்னை அழைத்தார்.

“இங்க வாங்க…”

“எஸ் மேடம்”

“நீங்க பாலிசி ரிட்டர்-ன்னு வந்தவர்தானே?”

“ஆமா மேடம்..”

“இங்க என்ன பண்றீங்க”

“நீங்க உள்ள ப்ளூ ஷர்ட்காரரைப் பார்க்கச் சொன்னீங்கள்ல..” என்று நான் ஆரம்பிக்க..

“எதுக்கு இங்க ஒக்கார்ந்திருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க. கூட்டம் சேர்ந்தா ஜி.எம்.வந்து திட்டுவாரு. சும்மா வளவளன்னு பேசாதீங்க..” என்றார்.

“அதான் சொல்ல வந்தேன் மேடம். நீங்க உள்ள ப்ளூஷர்ட் காரரைப் பார்க்கச் சொன்னீங்கள்ல..”

“சார்.. வேணும்னே பேசறீங்களா… ஏன் இங்க ஒக்கார்ந்திருக்கீங்கன்னு தானே கேட்டேன்..”

“அதான் மேடம் சொல்ல வர்றேன்.. உள்ள அந்த ப்ளூஷர்ட்காரரைப் பார்க்கச் சொன்னிங்கள்ல..” –இதற்குள் என்னைச் சுற்றி நின்றிருந்த ஐந்தாறு பேர் என்னையும் அந்த மேடத்தைச் சுற்றியிருந்த அலுவலர்கள் அவரையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். எனக்கு ஒருமாதிரி சங்கடமாய்ப் போய்விட்டது.

நான் தொடர்வதற்குள் அந்த மேடத்தின் அருகே அமர்ந்திருந்த இன்னொருவர் “பாலிசி ரிட்டர்னுக்கு வந்திருக்கீங்கனா நேராப் போனீங்கன்னா ப்ளூஷர்ட் போட்டுட்டு ஒருத்தர் இருப்பார். அவரைப் பார்த்தீங்கன்னா போதுமே.. எல்லாரும் இங்க நின்னுட்டிருந்தா கூட்டமாகுதுல்ல சார்…”

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கண்ணாயிரம் பெரும்பாலான நாட்களில் ப்ளூ ஷர்ட்டில்தான் வருகிறார்.

“சார்.. ஒங்களைத்தான்…”

“இல்லைங்க. அவர்தான் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னாருங்க” – நான் இந்த பதிலைச் சொல்வதற்கும் அந்த இடம் ஒரு சிறிய பரபரப்பை எதிர்கொள்வதற்கும் சரியாக இருந்தது.

“ஜி எம் வர்றாரு.. எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்றார் உள்ளே வந்த ஒரு செக்யூரிட்டி.

அவ்வளவுதான். தபதபவென எல்லாரும் நகர, அந்த மேடம் உட்பட எல்லாரும் தத்தம் வேலைகளில் பிஸியாகினர். அந்த மேடம் முன்னால் நின்றிருந்தவர்கள் வரிசையாக நிற்க ஆரம்பித்தனர்.

அப்போது உள்ளே சஃபாரி சூட்டுடன் ஒருவர் வர, அவருடனே இன்னொருவர் அவரது சூட்கேஸைத் தாங்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் உள்ளே செல்லும் ஒருநொடி முன், என்னைப் பார்த்து நின்றார்.

ஹெல்ப் டெஸ்க்குக்கு முன் க்யூ நிற்க, வேறு சிலர் பெஞ்சில் அமர்ந்திருக்க.. நான் மட்டும் தனித்து நின்றுகொண்டிருந்தேன் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

அவர் என்னைப் பார்த்து நிற்பதை கவனித்த ஹெல்ப் டெஸ்க் அம்மணி “சார்… லைன்ல நில்லுங்க.. இல்லைன்னா பெஞ்ச்ல உட்காருங்க.. இப்டி வழில ஏன் நிக்கறீங்க?” என்றார்.

‘நான் அங்கதானேங்க உட்கார்ந்திருந்தேன்’ என்று மனதில் நினைத்தவாறே என்னைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஜி.எம்மைப் பார்த்தேன். ஹெல்ப் டெஸ்க் அம்மணி என்னிடம் சொன்ன தோரணையில் இவன் ஏதோ ப்ரச்சினை பண்றான் போல என்று நினைத்தாரோ என்னமோ என்னைப் பார்த்து “எதுக்காக வெய்ட் பண்றீங்க? என்ன விஷயம்?” என்றார். குரலில் தெளிவான அதிகாரத்தொனி.

நான் அவரை பொறுமையாகப் பார்த்தேன். சொன்னேன்.

“துப்பாக்கி ஒண்ணு வெச்சுக்கணும் சார். அதுக்கு லைசென்ஸ் எடுக்கணும். அதான் என்ன ப்ரொசீஜர்ஸ்ன்னு கேட்க வந்தேன்”

............

Thursday, April 19, 2012

அவியல் 19.04.2012


பெரியவள் மீரா விஜய் ரசிகை. சின்னவள் சூர்யா. அவர்கள் படுக்கையறையில் பத்திரிகைகளிலிருந்து வெட்டப்பட்ட ப்ரிய நடிகர்கள் இருவரது படங்களும் அங்கங்கே இருக்கும். பெரிதாக வாள் போரோ, வாய்போரோ எல்லாம் நடக்காது எனினும் அவ்வப்போது நைஸாக இருவரும் பரஸ்பரம் வாரிக் கொள்வது வழக்கம். எனக்கு போரடித்தால் நான் யாரோ ஒருவரை வம்புக்கிழுத்து கொஞ்ச நேரம் கலாய்ப்பதும் உண்டு.

சென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில் விஜய் நடித்த ‘தமிழன்’. விஜய்க்கு தபால்தலை எல்லாம் வெளியிடுவது போன்ற காட்சி வந்ததும் மீராவைப் பார்த்து, “இதெல்லாம் ஓவராத் தெரியலியா?” என்று வம்புக்கு இழுத்தேன். அவள் என்னை முறைப்பது போலப் பார்க்க, சின்னவள் மேகா, “அவ்ளோ நல்ல பேரு வாங்கீருக்காருல்ல. அதான் ஸ்டாம்ப் வெளியிடறாங்க” என்றாள்.
‘என்ன அதிசயம்? இவள் விஜய்க்கு சப்போர்ட் பண்றாளே’ என்பதாய் நானும், ஆச்சர்யம் தாங்காமல் மீராவும், மேகாவைப் பார்க்க அவள் அப்பாவி போல் அமர்ந்திருந்தாள்.

படம் ஐந்து நிமிடம் ஓடிக்கொண்டிருந்த போதுதான், எங்களுக்கு விஷயம் புரிந்தது. படத்தில் விஜய் பேர் சூர்யா!

** ** ** ** ** 

சிவகார்த்திகேயனின் டைமிங் சென்ஸ் பிரமிக்க வைக்கிறது. அது இது எது நிகழ்ச்சியை அவருக்காகவே விரும்பிப் பார்ப்பது உண்டு. சமீபத்தில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’யில் பங்கு கொண்ட அவர் பண்ணிய அதகளம் அபாரம். ‘நமக்கு பொதுவாவே அறிவில்ல.. பொது அறிவும் இல்ல’ என்பது போன்ற அவரது வெடி டைமிங்கள் ‘சிவா’ரஸ்யம்!   நிகழ்ச்சியின் மற்றொரு பங்கேற்பாளரான கோபிநாத் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்பாவைப் பற்றிப் பேசியபின் அவர் கொஞ்சம் அமைதியாகிவிட்டதாய்த் தோன்றியது. நேர்மையான, அமைதியான, அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற கோபியும் தன்பங்குக்கு சிக்ஸர்களாக விளாசினார். சரியான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் சொன்ன லாஜிக்குகள் பாராட்ட வைத்தன.  

இங்கே ஒரு அவதானிப்பு. விஜய் டிவி நிர்வாகத்தினர் தனிநபர் திறமைகள் அங்கீகரிக்கும் விதமும், அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்று தேதி வாங்கும் காமெடி நடிகர் சந்தானம் விஜய் டிவியினால் வளர்ந்தவர் என்பதை மறுக்க முடியாது.

இப்போது ஒரு கேள்வி: இதே விஜய் டிவியில் ‘அசத்தப்போவது யாரு’-வில் அசத்திக் கொண்டிருந்து பிறகு சடாரென்று சன் டிவிக்குத் தாவிய, வெடிச்சிரிப்புகளை இடைவிடாது உதிர்க்கும் மதுரை முத்து என்னவானார்?

** ** ** ** **

கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து கொண்டிருக்கிறது வீட்டுவேலை. ‘இன்னும் முடியலையா’ என்று கேட்பவர்களிடம் ‘இன்னும் ஆரம்பிக்கலையான்னு கேளுங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அங்கே இங்கே என்றலைந்து ஒரு வங்கியில் கடனுக்கு ஏற்பாடாகி விட்டது.
அந்த வங்கியில் கடனை அனுமதிக்கும் முன் ஒரு நேர்முகம் என்று அழைத்திருந்தார்கள். எல்லா கேள்விகளுக்குப் பிறகு என்னுடைய பாலிசி பத்திரத்தையும் வங்கியில் ஒப்படைக்கச் சொன்னார்கள். சரி என்று கொடுக்க, வாங்கிக் கொண்ட அதிகாரி ‘வேற எதாவது பாலிசி வெச்சிருக்கீங்களா’ என்று கேட்டார்.

“நாலைஞ்சு பாலிஸி வெச்சிருக்கேன் சார். ட்ராஃபிக் சிக்னலை மதிக்கணும்.. ஸ்டாப்லைனைத் தாண்டி நிக்கக்கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது.. சிகரெட்டுக்காக யாருக்கும் காசும் கொடுக்கக்கூடாது, நல்லது பண்ணாட்டியும் கூடுமானவரை கெட்டது பண்ணக்கூடாது..” என்று சொல்ல நினைத்து வாயை அடக்கிக் கொண்டு, “இல்லை” என்றேன்.


கிடைக்கறதும் கிடைக்காமப் போச்சுன்னா என்ன பண்றது?!?


** ** ** ** **

து ஒன்று அல்லது ஒன்றரை வருஷம் முன்பு நடந்தது. எங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் பெரிய பொறுப்பில் இருக்கிறவர் அவர். ஒருநாள் காலை 9 மணிக்கு அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி. “அவசரமாக சொந்த வேலையாக வங்கிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அரை நாள் விடுப்பு”.

பத்து மணி அளவில் அலுவலகம் வந்த எங்கள் நிர்வாக இயக்குனர் என்னை அவர் அறைக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது, அந்த உற்பத்திப் பிரிவு அதிகாரியை அழைக்கச் சொன்னார்.
“அவர் அரைநாள் லீவு சார். பேங்க் வேலையா போயிருக்கார்” என்றேன் நான். அவருக்கு கொஞ்சம் முகம் சுருங்கிவிட்டது. ‘நான் வர்றேன்னு சொல்லீருந்தேனே. அப்படியும் எப்படி லீவு எடுக்கலாம்’ என்று அந்த நண்பரை அலைபேசியில் அழைத்து ‘ஏன் லீவு எடுத்தீங்க’ என்பதாய் ஏதோ பேச ஆரம்பித்து என்னை நோக்கி, ‘உள்ளதான் இருக்காராமே?’ என்றார். நான் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை நிர்வாக இயக்குனருக்குக் காட்டிக் கொண்டிருக்க, அந்த உற்பத்திப் பிரிவு அதிகாரி உள்ளே வந்தார். 

“நான் லீவுன்னு எங்க சொன்னேன்.. ஏன் இப்படி ராங் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மெண்டுக்குக் கொடுக்கறீங்க?’ என்று முகம் சிவக்கக் கேட்டார்.

நிர்வாக இயக்குனர் குறுக்கிட்டு “நீதான்யா மெசேஜ் அனுப்பீருக்க…” என்று சொல்ல என் மொபைலை வாங்கிப் பார்த்த அவர், “இது எனக்கு ஃபேப்ரிக் இன்சார்ஜ் அனுப்ச்ச மெசேஜ். HRல இன்ஃபர்ம் பண்ணனுமேன்னு நான் அதை ஃபார்வேர்ட் பண்ணினேன். அதெப்படி நான்னு நீங்க நினைக்கலாம்?” என்று மறுபடி கேட்டார். 


“சார்.. நீங்க மெசேஜை ஃபார்வேர்ட் பண்ணினா உங்க நம்பர்லேர்ந்துதான் வரும். வேறொருத்தர் அனுப்ச்சதுன்னு எனக்கெப்படி தெரியும்?” என்று எவ்வளவோ சொல்லியும் அவர் புரிந்து கொள்ளவே இல்லை.

ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ஒருமுறை என்னிடம் அவர் கேட்டார். “நல்ல மொபைல் ஒண்ணு வாங்கணும். சஜஷன் சொல்லுங்களேன்”

“உங்களுக்கா?”

“ஆமாம்”

“ஜி-ஃபைவ்னு ஒரு மாடல் 700-800 ரூவாய்க்கு கிடைக்குது. அருமையா இருக்கும்”

“800 ரூவாயா? அதுல பேச மட்டும்தான் முடியும்தான் போலிருக்கே” என்றவரிடம் “வேற.. ஃபோன்ல என்ன பண்ண முடியும் உங்களால” என்று கேட்க ஒன்றுமே பேசவில்லை அவர்.  

** ** ** ** **  
  

Wednesday, April 4, 2012

ஒரு வார்த்தை

ரெண்டு வாரமா நான் சொல்லீட்டிருக்கேன். ரேஷன் கார்ட்ல அட்ரஸ் மாத்தணும். பேங்க் பாஸ்புக்ல அட்ரஸ் மாத்தணும்னு. யாரைப் பார்க்கணும்.. என்ன பண்ணனும்னு யாருகிட்டயாவது கேட்டீங்களான்னா இதுவரைக்கும் ஒரு பதிலில்லை”

“அ..”

“அதுக்கெங்க நேரம்ன்னு ஒடனே ஆரம்பிச்சிடாதீங்க. இந்த மாதிரி வீட்டு வேலைன்னா மட்டும்தான் உங்களுக்கு நேரம் இருக்காது..”

“ஆ..”

‘ஆஃபீஸ்ல லீவில்ல.. பர்மிஷன் கிடைக்காது – அதே பல்லவிதானே? எங்க யாரைப் பார்க்கணும்னு சொன்னா நான் போய்ப் பார்க்கறேன்.. அதக்கூட விசாரிச்சுச் சொல்லலைன்னா நான் என்னதான் பண்றதாம்?

“இ..”

“இப்படிப் புலம்பீட்டே இருக்கறதே எனக்கு வேலையாப் போச்சு. ஒரு காரியமும் முடிஞ்ச பாட்டைக் காணோம்.. இத விடுங்க.. ஒரு நாளைக்காவது வந்து புள்ளைங்ககிட்ட ‘இன்னைக்கு என்ன படிச்ச.. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க’ன்னு கேட்டதுண்டா?”

“எ..”

“ஒடனே ‘எதுக்கு கேட்கணும்.. அதான் நீ நல்லா பார்த்துக்கறியேன்னு ஐஸ் வைக்க வேண்டியது. நானும் கேட்டுட்டு அப்போதைக்கு பேசமாப் போய்டணும்.. இதானே ஒங்க நினைப்பு.. இன்னைக்கு விடறதாயில்லைங்க.. நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சே ஆகணும்”

“ஒ..”

“காலைல எந்திரிக்க வேண்டியது.. பேப்பர் பார்க்க வேண்டியது.. ஆஃபீஸ் போக வேண்டியது. நைட் வந்து டிவி பார்க்க வேண்டியது.. படுத்துத் தூங்கவேண்டியது…”

நா…

காலைலேருந்து நைட் வரைக்கும் நான் எவ்வளவு வேலை செய்ய வேண்டிருக்கு. ஒரு நாளைக்காவது கிச்சன் பக்கம் வந்து எதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்கத் தெரியுதா?

அ..

அப்படிக் கேட்டு நான் சொல்லீட்டாலும் ஹெல்ப் பண்ணின மாதிரிதான்.. அன்னைக்கு அப்படித்தான் ஃப்ரென்ச் ஃப்ரை செஞ்சு தர்றேன்னு கிச்சனை வந்து நாசம் பண்ணீட்டுப் போனீங்களே.. அப்படித்தான் நடக்கும்..

எ..

எப்பன்னு கேட்காதீங்க.. ஒரு சண்டே அன்னைக்குச் செஞ்சீங்களே.. அப்ப்ப்பா! மொளகாத்தூள் எல்லாத்தையும் கொட்டி, எண்ணையெல்லாம் கொட்டி கேஸ் ஸ்டவ்வை க்ளீன் பண்றதுக்கே எனக்கு நாலு நாளாச்சு

இ..”

“’இதுக்குதான் நான் சமையலறைப் பக்கமே வர்றதில்ல’ன்னு சாக்கு சொல்லாதீங்க ஒடனே.. உதவி பண்றதை ஒழுங்கா பண்ணனும்”

“நா..”

“ஏதாவது சொல்லீட்டா மட்டும் கோவம் வரும். உம்முன்னு இருந்துடுவீங்க. நான் மட்டும்தான் எல்லாத்தையும் தலைல போட்டுக்கணும். இவருக்கு எதைப் பத்தியும் கவலை கெடையாது”

“ஆ..”

“ஆஃபீஸைப் பார்க்கறதா, வீட்டைப் பார்க்கறதான்னு, என்னமோ இவருதான் ஆஃபீஸ்ல எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச் செய்யற மாதிரி ஒரு கேள்வி வருமே இப்ப..”

“எ..”

“என்னதான் பண்ணச் சொல்ற இப்பன்னு கேளுங்க. வழக்கமான பல்லவிதானே நான் பாடறேன்… உங்களுக்கு ஒறைக்கவா போகுது”

“………………….”

“அரை மணி நேரமா கத்திகிட்டிருக்கேன். உங்கப்பா வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசறாரான்னு பார்த்தியா? எல்லாம் என் தலையெழுத்து!”

Monday, February 13, 2012

விகடனுக்கு நன்றி!


ந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடனில் உலகத்திலேயே மிகச் சிறந்த எழுத்தாளுமை மிக்க, அறிவான, அழகான, நல்ல வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘வலையோசை’ என்கிற பகுதி ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதில் கொங்கு மண்டல இணைப்பில், நான் மேற்கூறிய தகுதிகளோடிருக்கும் வலைப்பதிவாளர்கள் யாரும் இல்லாததால், என் வலைப்பூ பற்றிய செய்தி வந்திருக்கிறது.

இதைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறுகையில், ‘வலைப்பூ பற்றிய அறிமுகம் என்கிற வகையில் இது மிகச் சிறந்த அங்கீகாரம். வாழ்த்துகள்’ என்றார்.

கமலஹாசனுடன் பேசும் போது ‘உன் மூஞ்சிய எல்லாம் அட்டைப்படத்துல போட்டுட்டாங்களா! அட! நல்லாரு’ என்றார். பவர் ஸ்டார் சீனிவாசன் (அவர் வீட்டு மாடிப்படியில்) ஒரு படி மேலே போய் 'அடங்கொண்ணியா.. நடுப்பக்கத்துல ரெண்டு பக்கமா! இதே ப்ளேபாய்ல நடுப்பக்கம் வந்திருந்தாகூட அஞ்சோ பத்தோ (கோடியாம்) பார்த்திருக்கலாம்.. ஹும்.. ஒனக்கெல்லாம் நேரம்டா’ என்று வாழ்த்தி வசை பாடினார்.

எழுத்தாளரும், சிந்தனாவாதியுமான சாருநிவேதிதா ‘நோ கமெண்ட்ஸ். நீங்க வலைல எழுதறதெல்லாம் குப்பை. நான் அதையெல்லாம் படிக்கறதே இல்ல. அவியல்னு ஒரு குப்பை எழுதறீங்க. நகைச்சுவைங்கற பேர்ல பல குப்பைகளை எழுதித் தள்றீங்க. அதெல்லாம் படிக்கறதே இல்ல நான். என்னோட எக்ஸைல் புக் ஓசியில கெடச்சதா எங்கயோ எழுதிருந்தீங்க. அதப் படிச்சு விமர்சனம் போடாத உங்க வலைப்பூ பத்தியெல்லாம் அவங்க எழுதறாங்கன்னா.. அதுக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னு தெரியாததாலயே நோ கமெண்ட்ஸ்’ என்றார். மேலும் இது குறித்து நேயதேவப்பாணாவர் அரங்கில் நடக்கும் கூட்டத்தில் தான் பேசப்போவதில்லை என்றும் குறிப்பிடச் சொன்னார்.

மேலும் பலர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்:

ஜெயலலிதா: வாழ்த்துகள். ஆறு டூ ஒன்பது கரண்ட் இல்லாததால் இன்னும் அந்த விகடனைப் படிக்க முடியவில்லை. 9 மணிக்கு கரண்ட் வந்தால், சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கு நான் உறங்கச் செல்வது வழக்கம். அதனால் பகலில் படித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன். பகலில், கரண்ட் இல்லாமல் ஏசி வேலை செய்யாவிட்டால் புழுக்கத்தில் படிக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி: பரிசல் வாழ்க. சென்ற ஆட்சியிலேயே இதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன. சில கருங்காலிகள் செய்த சதியால் அது தாமதமாகிவிட்டது. என் ஆட்சியாக இருந்தால் இந்தச் செய்தி மெய்ன் விகடனில் வந்திருக்கும். எனினும் மகிழ்ச்சியே.

கேப்டன் விஜய்காந்த்: ஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

விஜய்: ‘ ’

அஜீத்: நான் பேஸ்மாட்டேன்.மேலும் கார்க்கி, ஆதிமூலகிருஷ்ணன், லக்கி, அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் ஆகியோர் முறையே ‘வாவ்’ ‘அட’ ‘ஆஹா’ ‘ச்சே’ ‘ம்ம்!’ ‘ஓஹோ’ என்று வாழ்த்தினார்கள்.

அனைவருக்கும்

‘ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்..
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்..
அனா நான்தான்.. ஆவன்னா நீங்கள்..
நீங்களில்லாமல் நானிங்கு இல்லை இல்லை’ என்ற பாடலைப் பாடி / ஆடி சிடி அனுப்புகிறேன்.

---------------

பி.கு: விகடன் வாங்கி, அதில் என் பேரை பேனாவில் எழுதி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்.. இப்ப அந்த விகடன்லயே... (போதும்டா நிறுத்து..!) ஆகவே - விகடனுக்கு நன்றி!.

Wednesday, January 11, 2012

பரிசல் டிக்‌ஷ்னரி


இணையம் – மனைவியிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள கணவர்கள் தஞ்சமடையும் இடம்

ஃபேஸ்புக்:பெண்கள் அக்கவுண்டில் ‘ஃபோட்டோஸ்’ பகுதியை ஆண்கள்
ஆர்வமாகப் பார்க்கும் இடம்

ட்விட்டர் – பஸ் மூடியதால் பலர் தஞ்சமடையும் இடம்

கூகுள் ப்ளஸ் – இன்னமும் இன்னதென்று தெரியாத ஒரு வஸ்து

பதிவர் – தனது அனுபவங்களை இணையத்தில் கன்னா பின்னாவென எழுதுபவர்

எழுத்தாளர் – அதையே அச்சில் புத்தகமாகப் போடுபவர்

ச்சாட் – ஆஃப் த ரெகார்ட் போட்டு ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளும் இடம்

மெய்ல்: பெர்சனல் அக்கவுண்டிலேயே அஃபீஷியலாக ஒன்றும் ரொம்பவே பெர்சனலாக ஒன்றும் வைத்துக் கொள்வது

காலை வணக்கம்: அருகிலிருப்பவருக்கு சொல்லாமல் அண்டார்டிக்காவில் இருப்பவர்களுக்கு சொல்வது

குட் நைட்: அதிகாலை 3 மணிக்கு சொல்லிக் கொள்வது.

சினிமா விமர்சனம்: ஏதாவது பஞ்ச் லைனில் முடிவது

பின்னூட்டப் பெட்டி: அருமை , அட்டகாசம், ---------- டச் என்றுநண்பர்கள் எழுதும் இடம்

எதிரிகள்: மேற்கண்டவாறு எழுதாதவர்கள்

பொறாமை: அடுத்தவர் நம்மீது நல்ல விமர்சனம் வைக்கும்போது,
அவர்களைப் பற்றி நாம் சொல்ல பயன்படுத்துவது

காலை 9 மணி: அலுவலர்கள் வருவார்கள் என்று முதலாளிகள் எதிர்பார்க்கும் நேரம்

10 மணி: முதலாளி வந்துவிடுவாரோ என்று அலுவலர்கள் வேலை செய்வதாய் பாவ்லா காட்ட ஆரம்பிக்கும் நேரம்

11 மணி: கேண்டீன் டைம்.

கேண்டீன் - ஸ்டாஃப்ஸ் மீட்டிங் நடக்குமிடம்

கான்ப்ரன்ஸ் ஹால் - ஸ்டாஃப்ஸ் டீ/காஃபி சாப்பிடுமிடம்

பொங்கல்: கணவர்களுக்கு தினமும் கிடைப்பது

பூரிக்கட்டை: பூரி செய்யவும் இதை உபயோகப்படுத்தலாம் என்று மனைவியர் அறிந்து கொண்ட வஸ்து

ஜனாதிபதி - இந்தியாவின் முதல் குடிமகன்

கேப்டன் - தமிழகத்தின் முதல் குடிமகன்

வெற்றிகரம் - ஒரு படம் இரண்டாவது நாள் ஓடினால் தயாரிப்பாளர்கள் சொல்வது

சூப்பர் ஹிட் - வெளியான இரண்டாம் மாதம் டிவியில் வரும் படம்

சீரியல் - பெண்களைத் திட்டிக் கொண்டே ஆண்கள் பார்ப்பது

க்ரிக்கெட் - ஆண்கள் பார்ப்பதாலேயே பெண்கள் வெறுப்பது

வேஷ்டி - சத்தியமூர்த்தி பவனைச் சுற்றியுள்ள கடைகளில் அதிகம் விற்பனையாவது

பஞ்சாயத்து – தவறு செய்தவன் பணம் கொடுக்கும் இடம்

போலிஸ் ஸ்டேஷன்: புகார் கொடுத்தவன் / தவறு செய்தவன் இருவரும்
பணம் கொடுக்கும் இடம்

ஹார்ன்: வாகன ஓட்டிகள் தேவையில்லாத போதெல்லாம் உபயோகிப்பது

ப்ரேக்: வாகன ஓட்டிகள் தேவையான போதெல்லாம் உபயோகிக்க மறப்பது.


-இப்போதைக்கு இவ்வளவுதான். தொடரலாம். சான்ஸ் இருக்கிறது..


.

Tuesday, January 10, 2012

நம்பிக்கை - சிறுகதை


பண்புடன் ஜனவரி இதழில் வெளியாகியிருக்கிற எனது சிறுகதை:

----------


ந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி ஷர்ட் அணிந்திருந்தார். 40+ வயது இருக்கக்கூடும். வலது கையில் ஒரு வாட்ச். கழுத்திலோ, கையிலோ ஆபரணங்கள் ஏதும் இருக்கவில்லை. நிமிடத்திற்கொரு முறை மூக்கைச் சுருக்கி சுவாசித்துக் கொண்டிருந்தார். அது அவரது மேனரிசமாக இருக்க வேண்டும்.

அவரது டேபிளின் இடதுபுறமிருந்த வித்தியாசமான கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் அமைதியில் அதன் டிக்-டிக் துல்லியமாகக் கேட்டது.

“ஸோ.. நீங்க சொல்ல வர்றது யாரும் உங்களை நம்ப மாட்டீங்கறாங்க. இல்லையா?”

“எஸ் டாக்டர்” என்ற அஷோக் ஜீன்ஸிற்குள் தனது ஆலன் சோலியை செலுத்தியிருந்தான். 25 வயது. பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரியும் திறமையான இளைஞன். ஒரே அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா வங்கி அதிகாரி.

”எப்போலேர்ந்து உங்களுக்கு இப்படி தோண ஆரம்பிச்சது?”

“ஒரு பத்து பதினஞ்சு நாளாவே இப்படித்தான் டாக்டர்”

“சரி.. இப்ப நான் சில கேள்விகள் கேட்கறேன். பதில் சொல்லுங்க”

அஷோக் டாக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து ‘கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்?” எனக் கேட்டான். டாக்டர் அவர் டேபிள் பக்கவாட்டில் இருந்த காலி டம்ளரை நிமிர்த்தி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை நிரப்பி அவனிடம் நீட்டினார்.

வாங்கிக் குடித்ததும் ‘கேளுங்க டாக்டர்’ என்றான்.

“எங்க வேலை செய்யறீங்க?”

சொன்னான்.

“உங்க பிறந்த தேதி என்ன?”

சொன்னான்.

“பிறந்த கிழமை?”

தாமதிக்காமல் உடனே சொன்னான்.

“உங்க அப்பா அம்மா திருமண நாள் ஞாபகமிருக்கா”

சொன்னான்.

“உங்க அக்கா திருமண நாள்?”

சொன்னான்.

“வெரிகுட். ஞாபக சக்தியெல்லாம் நல்லாவே இருக்கு. நீங்க நார்மலா இருக்கீங்க.. என்ற டாக்டர் தொடர்ந்தார்: “எந்த விஷயத்துல – யார் - உங்கள நம்பமாட்டீங்கறாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்க அஷோக்?”

“எந்த விஷயத்துலயும் யாரும் என்னை நம்பமாட்டீங்கறாங்க டாக்டர்”

“ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”

அஷோக் ஏதோ ஒரு மூலையை சில நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் அமைதியாக அவனையே பார்த்தவாறு இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.


-------------------

மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்: பண்புடன்


.