எல்லோருக்கும் போலவே எனக்கும் முதன் முதலாக பள்ளிக்கூடம் படிக்கும்போது (அல்லது போகும்போது) பலப்பம் எனப்படும் சிலேட்டுக் குச்சியும் சிலேட்டும்தான் தரப்பட்டது. ஒரு நீளமான சிலேட்டுக் குச்சி ஒன்றை வாங்கி, அதை நான்காக உடைத்து ஒன்றை என்னிடம் தந்தார் என் தந்தை. முழுசாத் தந்தா என்ன என்று நினைத்திருக்கக் கூடும் நான் அப்போது. எழுதுபொருட்கள் மீது எனக்கிருந்த ஆசை அத்தகையது.
நினைவடுக்குகளில் விரல்களால் துழாவும்போது ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. எப்போதோ ஒரு முறை வெள்ளை நிற ஒல்லியான - நீளமான - முழு சிலேட்டுக் குச்சி ஒன்றை தந்தையிடம் சொல்லி (ஓரியாடி?) வாங்கி பத்திரமாக பள்ளிக்குக் கொண்டு சென்று, பெருமையாக எல்லாருக்கும் முன் எழுதி, எழுதி பார்வைப் பொருளாக்கிப் பெருமை பட்டுக் கொண்டிருந்தபோது சுப்புலட்சுமி டீச்சர் “இவ்ளோ பெரிசா வெச்சு எழுதாதே” என்று வெடுக்கெனப் பிடுங்கி மூன்று துண்டுகளாக்கி ஒன்றை என்னிடம் கொடுத்து ”ரெண்டை பத்திரமா பையில வெச்சுக்க” என்றபோது துடிக்கும் உதடுகளோடு, வந்த அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டதும், அப்போது ஆனந்தி என்னை சிரிப்பாக பார்த்த பார்வையும் இன்னும் நினைவிலிருக்கிறது.
ஐந்தாவது வகுப்பில்தான் பேனா அனுமதி. அதுவும் பால் பாய்ண்ட் பேனாக்களுக்கு அனுமதியில்லை. இங்க் பேனா என்றால் கேமலின் பேனாதான் உச்சம். அதி உச்ச நட்சத்திரம் உங்கள் எல்லாருக்கும் தெரிந்த ஹீரோ பேனா!
கேமலின் பேனா வாங்குமளவெல்லாம் வசதியிருக்கவில்லை அப்போது. வேறேதோ (வாட்டர்மென் என்று ஞாபகம்) பேனாதான் வாங்கித் தரப்பட்டது எனக்கு. கேமலின் பேனாவில் மூடியின் முடிவில் சில்வர் கவர் செய்யப்பட்ட பேனாவொன்று தான் எப்போதும் என் தந்தை வைத்திருப்பார். அதன் மீது எனக்கு அலாதி பிரியம். ஏழாவது வகுப்பு போனபோதுதான் அதே போன்றவொன்றை வாங்கித்தந்தார் அவர்.
அப்போதும் ஹீரோ பேனா மீதான மோகம் அப்படியேதான் இருந்தது. ‘அதெல்லாம் நமக்கு கிடைக்காதுப்பா’ என்று அந்த ஆசையை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். அதிலும் எட்டாவது படிக்கும்போது சரவணமூர்த்தி என்ற மாணவன் ஹீரோ பேனாவிலேயே மேலும் கீழும் தங்கமாய் ஜொலிக்கும் ஒரு பேனாவை வாங்கி வந்து மாணவர் மத்தியில் திடீர் பிரபலமனான். எங்கோ வெளிநாட்டில் வசிக்கும் அவனது சொந்தக்காரர் வாங்கி வந்தது என்று சொன்னதாக ஞாபகம்.
ஒன்பதாவது படிக்கும்போது என் மாமா ஒருவர் எனக்கு ஹீரோ பேனா பரிசாய் அளித்தார். (எதற்கு என்று நினைவிலில்லை) அந்த ஒரு வாரத்துக்கு என் எழுத்து அழகானது. என் வீட்டுப் பாடங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. அடித்தல் திருத்தல்கள் குறைந்தன. எல்லாம் பேனா மீதான ஆசைதான்.
அதன்பிறகு பல எழுதுகோல்கள் பற்றி கேள்விப்பட்டு, சிலதை வாங்கவும் செய்திருக்கிறேன். என் நண்பனொருவன், தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு ஃபாரின் பேனா இருப்பதாகவும் அதில் ஒரு பெண்ணின் படம் இருக்குமெனவும், மை குறையக் குறைய அந்தப் பெண்ணின் உடலிலிருக்கும் உடை காணாமல் போகுமெனவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டதில்லை!
ஒருமுறை விடுமுறைக்கு சென்னையில் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னோடு என் கஸினும் இருந்தான். என் உறவினர் ஒரு பேனாவையும், பாக்கெட் கால்குலேட்டரையும் வாங்கி வந்து யாருக்கு எது வேணும்?’ என்று கேட்டார். என் கஸின் அவசரமாக ஓடி “எனக்கு கால்குலேட்டர்” என்று எடுத்துக் கொண்டான். எனக்கு சிரிப்பாக வந்தது.. எனக்கு பேனாதாண்டா பிடிக்கும் என்று மனதிற்குள் நினைத்தவாறே அதை எடுத்துக் கொண்டேன்.
பலவகையான பேனாக்களை வாங்குவதில் இப்போதும் எனக்கு ஆர்வம் அதிகம். மூன்று நிறங்களில் எழுதும் பால்பாய்ண்ட் பேனா ஒன்றை வெகுகாலமாக வைத்திருந்தேன். அதன் சிறப்பு என்னவென்றால் பேனாவின் மேலே பக்கவாட்டில் கருப்பு, சிவப்பு, நீலம் என புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்தப் புள்ளியை நீங்கள் உங்கள் எதிர் பக்கம் நோக்கிவைத்து எழுதுகிறீர்களோ அந்த நிறத்தில் எழுதும். அதாவது நீலத்தில் எழுத நீலப் புள்ளி உங்களுக்கு எதிரிலிருப்பருக்குத் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும். (இதுபோன்ற டெக்னிகலான பேனாக்களை பிரித்து மேய்வதிலும் விருப்பமுண்டு.)
பேனா இரவல் வாங்குவதும், கொடுப்பதும் நமது தீராத வியாதிகளில் ஒன்று. மூடியோடு பேனாவைக் கொடுத்தால் திருப்பித்தர/திரும்ப வாங்க மறந்துவிட நேர்கிறதென்பதால் மூடியை கழட்டி வைத்துக் கொண்டு பேனாவை இரவல் கொடுக்கும் வழக்கம் உடைய ஒருத்தன் வீட்டில்- அப்படிக் கொடுத்துக் கொடுத்து – மூடிகள் மட்டும் நிறைய சேர்ந்ததென்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியும் யாரும் திருப்பித் தருவதில்லையாம்! நான் பேனாவை இரவல் வாங்கினாலோ, அல்லது யாராவது மறந்துவிட்டுச் சென்றாலோ கூப்பிட்டுக் கொடுத்துவிடுவது வழக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் அதிகமான என் பேனாக்கள் தொலைவதில்லை என்று ஒரு நம்பிக்கை! அதேசமயம் யாராவது வைத்திருக்கும் பேனா மிகப் பிடித்தமானதாக இருந்தால் ‘வெச்சுக்கட்டுமா’ என்று கேட்டு எடுத்துக் கொள்ளவும் தயங்கியதில்லை!
என்னிடம் கையெழுத்து (AUTOGRAPH அல்ல. அலுவல் ரீதியான SIGN!) கேட்டு வருபவர்கள் நல்ல பேனாவைத்திருந்தால் சிரித்தபடி போட்டுக் கொடுக்கிறேன். கையெழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பேனாவை ஒருமுறை உற்றுப் பார்த்தால் “வெச்சுக்கோங்க சார்” என்று சொல்லப்பட்டிருக்கிறேன். (ஆனால் சிரித்தபடி திருப்பிக் கொடுத்துவிடுவேன்) அப்படியொரு பேனா மோகம்.
நான்கைந்து முறை எனக்கு Parker பேனா பரிசாய் வந்திருக்கிறது. ஆனால் அதன் பெயருக்கும், புகழுக்கும் என்ன காரணம் என்று எனக்குத் தெரியவே இல்லை. அப்படியொன்றும் எழுதினால் மகிழ்ச்சியாயிருக்குமளவு ஒன்றும் நன்றாக எழுதுகிற பேனாவல்ல அது. பார்க்கரில் ஒரே ஒரு மாடல் மட்டும் ஓரளவு வழுக்கியவாறு எழுதும். அதற்கு Uniball எவ்வளவோ மேல்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாராவது எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், வேலைப்பாடுள்ள, நன்றாக எழுதக்கூடிய, பேனாக்களை (PLURAL!) பரிசளிக்கலாம். கருப்பு வண்ணமாயிருத்தல் உசிதம். முகவரி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!
உபரித்தகவல்: இப்போது நான் உபயோகித்துவருவது REYNOLS நிறுவனத்தின் TRIMAX எனும் Fluid Ink பேனா. தொடர்ந்து மூன்று பேனா வாங்கிவிட்டேன். அவ்வளவு பிடித்திருக்கிறது!
.