Showing posts with label Aviyal. Show all posts
Showing posts with label Aviyal. Show all posts

Monday, January 26, 2015

அவியல் 26 ஜனவரி 2015

ந்தக் குடியரசு தினம் வந்தாலும், போய் நெட்டில் இரண்டு விஷயங்களைத் தேடுவோம்.

1. இது எத்தனையாவது குடியரசு தினம்?
2. சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

இதை இரண்டையும் தெரிந்து கொண்டு கொஞ்சம் மானே தேனே போட்டு குடியரசு தினத்தைக் கொண்டாடிவிட்டு வந்தாச்சு.


 ‘டேஏஏஏஏஏஏஏஏய்.... ஒரு இந்தியன் இப்டி எப்டிச் சொல்லப் போச்சு?’ என்று குத்தவராதீர்கள். இந்தியன் என்றால் உண்மையைச் சொல்லலாம் இல்லையா?

____________________

தொட்டால் தொடரும்
............................................

ண்பர் கேபிள் சங்கர் டைரக்‌ஷன், வசனம், இன்னொரு நண்பன் கார்க்கி இயக்கம் - வசனத்தில் உதவி என்று வந்திருக்கும் படம்.

நல்ல கதை. நல்ல வசனம், மோசமான திரைக்கதை, படு கடுப்பேற்றும் பின்னணி இசை. ஹீரோயின், வேறொரு ஃபோட்டோவை எடுத்து தன் ஃபோட்டோவை வைக்கும் இடத்தில் படம் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த விறுவிறுப்பை கொண்டு போனபடியே மற்றவற்றை ஃப்ளேஷ்பேக்கில் காட்டியிருக்கலாம். பாலாஜியின் நடிப்பும் வசனங்களும் நன்று. தமன் / அருந்ததி நடிப்பும் நிறைவு. 

பழம் தின்று கொட்டை போட்ட சிலர் எடுக்கும் படங்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது சீனிலேயே கொட்டாவி வர வைக்கிற சமயத்தில் முதல் படமாக இது பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம் கேபிள்!

-------------------------------


டனடி கருத்து சொல்கிற வியாதி ஒன்று படுமோசமாக பரவி வருகிறது. எல்லாவற்றிற்கும் உடனடி கருத்து. செய்திகளை முந்தித் தருவதாய் எண்ணி கே.பாலச்சந்தர் இறப்பதற்கு முன்னரே RIP போட ஆரம்பித்துவிட்டார்கள் வாட்ஸப்பில். ரஜினிகாந்துக்கு இவர்களே பத்மபூஷன் குடுத்துவிட்டார்கள். இப்படி நிறைய. 

ஒரு 99 நாள் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் க்ரூப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

அதுவரை இங்கே மட்டும் எழுதுவதாய் உத்தேசம். பார்க்கலாம்.

.  

Tuesday, September 16, 2014

அவியல் 16-9.2014

‘ஐ’ பட இசைத்தட்டை சக நண்பர் அர்னால்ட் ஸ்வாஷ்ஸ்னகர் வந்து ரிலீஸ் செய்துவிட்டார். இனி மாதம் மும்மாரி பொழிவதுடன், தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சினை உள்ளிட்டவைகள் தீர்ந்துவிடும் என்று நம்புவோமாக.

என்னதான் இப்படி நக்கலடித்தாலும், ஷங்கர் தன் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றிவிட்டார் என்றே கூறவேண்டும். நாடு முழுவதும் ‘ஐ’ ஜுரம்தான். டீசரும் வெளியாகிவிட்டது. பத்து ஸ்க்ரோலிங்கில் ‘இதான்பா கதை’ என்றொன்று வாட்ஸப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஏ.. இந்தாரு, எந்திரன் மாதிரியே செவப்புச்சாரி, மல்லிப்பூ’ என்றொரு படம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கவனித்தது இன்றைய தினசரிகளில் அர்னால்ட்டின் இரண்டு படங்கள்.

அர்னால்ட், யாரோ பூக்கடை துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் தோளில் கைபோட்டு ஜாலியாக பேசியதை ‘தி இந்து’வெளியிட்டிருந்தது. பொது இடங்களில் எதிர்ப்படும் முகங்களைப் பார்த்து புன்னகைப்பதும், ஹலோ சொல்வதும் அவர்களுக்குண்டான பழக்கம்தான். பக்கத்து வீட்டினரையே முறைத்தபடி கடக்கும் நமக்கு இது கண்டிப்பாக நியூஸ்தான். நான் அமெரிக்கா சென்றிருந்தபோதும், பாரீஸில் வேலை நிமித்தம் இருந்தபோதும், அதேபோல லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில்..

சரி விடுங்க. நான் ஜாலி வாலி ஜாதி. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை.

இரண்டாவது அம்மாவும் அர்னால்டும் புகைப்படம். கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அம்மா ஹாயாக சாய்ந்திருக்க, நான்குமுறை மிஸ்டர் யுனிவர்ஸும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியாவும் வென்ற பாடி பில்டர் அர்னால்ட், சாயாமல் வெகு பவ்யமாக அமர்ந்திருந்தார்.

யாரோ சொல்ல்ல்லி, அனுப்ச்சிருக்காங்க!
------------------------------

இன்று காலை கன்னாபின்னாவென்று கோவை நோக்கி பேருந்துகள் பறந்து கொண்டிருந்தன. பல தனியார் பேருந்துகள். உள்ளே ஓரிருவர் கூட இல்லை. விசாரித்தால் கோவையில் முதல்வர் விழாவுக்காம்.

‘அதுக்கேன்யா காலியா போவுது?’ என்று கேட்டேன்.

‘கணக்கு காட்டத்தான். ஹெலிகாப்டர்லேர்ந்து அம்மா பார்த்தா பூரா பஸ்ஸா தெரியணும். அதுக்குத்தான்”

உடனே நான்..

ப்ச். வேணாம். அர்னால்டே அவ்ளோ பவ்யம்னுட்டு நான் பேசினா அவ்ளோதான்.

-------

ஸ்டார் மகாபாரதம். இதிகாசத்தை சீரியலாக்கி இருக்கிறார்கள். அபிமன்யு வதமெல்லாம் “கர்ண” கொடூரம்! எந்த மொழியிலும் இப்படி எழுதப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் என்னென்ன நிகழப்போகிறதோ!

கிருஷ்ணா!!!
------------


நேற்று முன்தினம் YCI சார்பாக, உடுமலையில் IMA ஹாலில் பேசியபோது, உடுமலை இரயில்நிலையம் காணாமலே போய்விட்டது என்று அங்கலாய்த்தேன். எனக்குப் பின் பேசிய டாக்டர் பாலசுப்ரமணியம், உடுமலை மக்கள் பேரவை அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் இன்னும் நான்கு மாத காலத்திற்குள்ளாக இரயில் நிலையம் செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி.

போலவே என்னைக் கடுப்புக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம், உடுமலையின் ஒரு சாலை விடாமல் எல்லாச் சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பாதாள சாக்கடையாம். பேசாமல் பூமிக்கு கீழேயே வழியமைத்து புரட்சி பண்ணலாம். அத்தனை குழிகள். என்றைக்கு சரி செய்வார்களோ!

--------------


Monday, January 21, 2013

அவியல் 21.01.2013

லுவலக விஷயமாக ஒரு ஃப்ளக்ஸ் கடைக்குப் போயிருந்தேன். ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் அவரது பேனருக்கு டிசைன் சொல்லிக் கொண்டிருந்தார். 

டிசைனர்: “என்ன சைஸ் வேணும்?”

வாடிக்கையாளர்: ‘நேத்து அவரு என்ன சைஸ் போட்டாரு?”

“அஞ்சுக்கு பத்து”

வாடிக்கையாளர் திரும்பி, அவருடன் வந்தவரிடன் “அப்ப நாம எட்டுக்குப் பத்து போடுவமா?” என்று விட்டு “எட்டுக்கு பத்துங்க” என்கிறார்.

டிசைனர் ஃபோட்டோஷாப்பில் சைஸ் செட் செய்துவிட்டு “என்ன படம் போடணும்?”

“நேத்து அவரு போட்ட படத்தை விடக் கலக்கலா இருக்கணும். அதுக்கு பத்திருபது அடி தள்ளித்தான் இந்த ஃப்ளக்ஸ் வைக்கப்போறோம். எல்லாரும் இதப்பத்திதான் பேசணும். அந்த மாதிரி படம் வைங்க”

டிசைனர்: “போனவருஷம் நீங்க ரெண்டு பேரும் ஒரே பேனர்தானே வெச்சீங்க?” என்று கேட்க - வாடிக்கையாளர்

“ஆமாங்க. இந்த வாட்டி நான் தனியா வைக்கறேன். சண்டையாகிடுச்சு. அந்தாளை விட நான் கூட்டம் சேர்த்துக் காமிக்கணும்” என்கிறார்.

இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று யூகிக்க முடிகிறதா?

கட்சியெல்லாம் இல்லை. ஐயப்ப பக்தர்கள் குழுவாம். இந்த வருடம் இரண்டு குழுவாகப் பிரிந்து, அன்னதான விழாவை போட்டியாக நடத்தி, மைக் செட்-பேனர்கள் என்று விளம்பரம் செய்து...

கூடிய சீக்கிரம் நம்மை நாத்திகனாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.


** ** ** ** ** ** ** ** 

மேலே உள்ள பத்தி நான் முகநூலில் எழுதியது. ’ப்ளாக்ல ஏன் அதிகமா எழுதறதில்ல’ என்ற கேள்விகளால் அவ்வப்போது தோன்றுவதை முகநூலிலேயே எழுதிவருகிறேன். (http://www.facebook.com/Parisalkaaran) ஆனால் பலருக்கு முகநூல் கணக்கு இல்லை. என் நண்பனும், வலையுலகின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவருமான வெண்பூ அமெரிக்கவாசியாகிவிட்டாலும் இன்றும் முகநூல் கணக்கு இல்லை அவருக்கு. 

‘நீ பாட்டுக்கு அங்க எழுதினா நானெப்படி படிக்க?” என்று கேட்கிறார்.  ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், டம்ப்ளர் என்று பலபக்கம் எழுதினால் இதுதான் ப்ரச்சினை. ஆக, இனி அங்கிருப்பவற்றையும், இங்கே எழுதியவற்றையும் மாற்றி மாற்றிக் கொட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

** ** ** ** ** ** ** ** ** 


ற்பல வருடங்களுக்கு முன் குமுதம் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் ‘லைட்ஸ் ஆன்’ (சினிமா துணுக்குப் பகுதி) விரும்பிப் படிப்பதுண்டு. வினோத் என்ற புனைப் பெயரில் ரா.கி.ரங்கராஜன் அசத்தலான நடையில் எழுதியிருப்பார். ஒவ்வொரு துணுக்கிலும் ‘நச்’சென்ற ஆங்கிலச் சொற்றொடர்கள் வேறு. 

அவற்றைத் தொகுத்து, தங்கத்தாமரை பதிப்பத்தில் புத்தகமாகப் போட்டதை அறிந்து, விபிபி-யில் வாங்கினேன். படித்தேன். 

எல்லாம் சரி. ஆனால் தொகுத்தவர்கள் ஏன் அவை வெளியான தேதியை (குறைந்த பட்சம் வருஷத்தையாவது) குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. பதிப்பாளர்களின் அசிரத்தையையே அது காட்டுகிறது. உதாரணமாக ஷர்மிலி, ஷாலினியைப் பற்றி விமர்சிப்பதைக் குறித்து ஒரு பத்தியை இப்போது படிக்கும் எனக்கு, ‘அட.. எப்ப நடந்துச்சு இது?’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்தானே? 

ப்ச்! போங்க சார்!


** ** ** ** ** ** ** ** ** ** **


http://www.parisalkaaran.com/2008/11/blog-post_19.html 

மேற்கண்ட போஸ்டில் கடைசி பாராவைப் படிக்கவும். 2008-ல் கார்க்கியை முதன்முதலில் பார்த்தபோது எழுதிய வரிகள். நண்பர்களுக்கு அருகில் இருக்கவேண்டும், வேலைக்கு வேலையும் செய்து, Passionஆன எழுத்தையும் நண்பர்களோடு கலந்து பேசி கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நான் சென்னை சென்று செட்டிலாவேன் என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறேன். ஆனால், இந்தக் கார்க்கி திருப்பூர்வாசியாவான் என்று கனவிலும் நினைத்ததில்லை. 

ஆகியிருக்கிறான். சில காலம் இங்கேதான் என்கிறான். எங்கள் ஊரில், என் தெருவில், என் வீட்டுக்கடுத்த வீட்டில் குடிவந்திருக்கிறான். அடிக்கடி ராஜன் வேறு வந்துபோகிறான். ‘டிஸ்கஷன் வாங்க பாஸ்’ என்று என்னை வேறு கூப்பிட்டு உட்கார வைத்துக் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என்னாங்கடா நடக்குது?’ என்றால் மையமாகச் சிரிக்கிறார்கள்.

என்னமோ திட்டம் இருக்கு!

** ** ** ** ** ** ** ** ** ** **

ன்னொரு முகநூல் பகிர்வு:

எவரையும் கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லைதான். அவரையும்தான். ஆனால் அவரது கிறுக்குத்தனங்களையெல்லாம் இனி ‘தன்னம்பிக்கை’டா என்று ஏற்றி விடுவதிலும் உடன்பாடில்லை.

படம் ஜெயிச்சுடுச்சு. (அப்படித்தானே?) இதுவரை அவர் பொதுவெளியில் செய்த கோட்டித்தனம், கோமாளித்தனத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு - இனி, காமெடியைத் தன் மூலதனமாகக் கொண்டு திரையில் மட்டும் அதையெல்லாம் வெளிப்படுத்தினால் தெலுங்கு ப்ரம்மானந்தம் ரேஞ்சுக்கு அவர் வரமுடியும்.

வாழ்த்துகள் சீனி சார்!

** ** ** ** ** ** ** ** ** ** ** 

ன. 25-ல் இருந்து ஆரம்பமாகப்போகிறது புத்தகக் கண்காட்சி. திருப்பூரில். ஒவ்வொரு வருடம் போலவே மாதக் கடைசியில் ஆரம்பித்து, சம்பளம் கைக்கு வருவதற்கு முன் முடிந்துவிடும். வேடிக்கை பார்க்க மட்டுமே போக முடிகிற சூழலிலிருந்து, திருப்பூர் வலைப்பதிவர்கள் அமைப்பான சேர்தளம் விலக்கு அளித்திருக்கிறது. சென்ற வருடத்திலிருந்து வேடிக்கை பார்க்க மட்டுமல்லாமல், வருபவர்களை வரவேற்கவும், இணையத்தில் எழுதுவது குறித்தும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்க, ஃபோட்டோக்ராஃப் எடுக்க விரும்பும் நேய/ரசிக/வாசகப் பெருமக்கள் தினமும் மாலை சந்திக்க வரலாம். 


** ** ** ** ** ** ** ** ** ** **

மாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். சிக்னலுக்காக முன்னால் சென்ற பேருந்து நிற்கவே, நானும் நிறுத்தினேன். என் பின்னால் கைனடிக் ஹோண்டாவில் வந்து கொண்டிருந்த  வயதானவர் ஒருவர், ‘போங்க சார்’ என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னது, அந்தப் பேருந்தின் வலதுபுறம் இருந்த இடைவெளியில் போகச் சொல்லி. அந்த வழியே சிலர் நடந்து வந்து கொண்டிருக்கவே, ‘ஆளுக வந்துட்டிருக்காங்க சார்’ என்றேன். அவர் கொஞ்சம் கோபமாக, ‘நமக்குத்தாங்க வழி. வந்துட்டிருக்காங்கன்னு நின்னா, நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான்’ என்று கோவமாய்ச் சொன்னபடி, என்னைத்தாண்டிச் சென்றார்.


எனக்குக் கடுப்பானது. ‘எப்டிச் சொல்றாரு பாரு? கொஞ்சம் கூட ரோட் சென்ஸ் இல்லாம. அங்க போய் நிக்கத்தானே போறாரு. இல்ல, ‘நமக்குத்தான் வழி’ன்னு ட்ராஃபிக் போலீஸை இடிச்சுட்டே போகப்போறாரா?’ என்று புலம்பினேன்.

உமா சொன்னார்: ‘விடுங்க. வயசானாலே கண்டதுக்கும் கோவம் வரத்தான் செய்யும்”

நான்: “ஆமாமா. கரெக்ட். என்னமா கோவப்படறான் அந்தாளு” என்றதும், உமா மறுபடி சொன்னார்: 

‘நான் அவரைச் சொல்லலைங்க”

ஙே! 

** ** ** ** ** ** ** ** ** **


Wednesday, December 28, 2011

அவியல் 28.12.2011

லகம் அழியாமல் எப்படி சுழல்கிறது? நாட்டில் - பெரும்பாலும் -குறித்த நேரத்தில் மழை பொழிந்து நாடும் நாட்டு மக்களும் எப்படி சுபிட்சமாக இருக்கிறார்கள்? என்னதான் ஒருபுறம் இயற்கை சீற்றங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், பேராபத்துகளேதுமின்றி அதது அதனதன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது.. இதெல்லாம் எப்படி என்பதற்கு நேற்றெனக்கு விடை கிடைத்தது.

அது என்ன என்பதைக் கடைசி பத்தி படித்து அறிந்து, கொல்லவும். (எ.பி.அல்ல)

-----------------

மூணு, நண்பன், ராஜபாட்டை, கழுகுன்னு போனவாரம் பூரா இசை வேட்டைதான். ஆங்.. வேட்டை வேற.. அத விட்டுட்டேன் பாருங்க..இந்த அஞ்சுல மூணு யுவன்.

என்னது…. மூணு அனிருத்-தா? ஹலோ.. அஞ்சு படங்கள்ல மூணு படம் யுவன் இசைன்னு சொல்றேன்.

அதுல ராஜபாட்டை ‘பொடிப்பையன் போலவே’, ‘பனியே பனிப்பூவே’-வை விடவும் ‘வில்லாதி வில்லன்கள்’ செம ரெட்ரோ சாங். அதோட ட்ரம்ஸுக்காக அத கேட்டுட்டே இருந்தேன்.

வேட்டைல ‘வெச்சுக்கவா உன்னை மட்டும்’ ம்யூசிக்ல தொடங்கி, ’ஆறு’ படத்துல வர்ற ‘சோடா பாட்டில் கைல’ பாட்டோட மெட்டுல வர்ற ‘பப்பபப்பா பப்பபா” நல்லாருக்கு. இன்னொரு சுவாரஸ்யம்: இந்தப் படத்துல வர்ற பாட்டோட ஆரம்பமெல்லாமே கவனிச்சீங்களா? தம் தம் தம் / டம்ம டம்ம டம்மா / பப்ப பப்ப பப்ப்பா / தையத் தக்கா தக்கா - ன்னு ஒரே மாதிரி இல்ல?

யுவன் ம்யூசிக்ல வந்த இந்த மூணு படத்துலயும் கழுகுதான் பெஸ்ட். எல்லாமே நல்லா இருக்கு. (அல்லது நல்லா இருக்கற மாதிரி இருக்கு) யுவன் குரல்ல ‘பாதகத்தி கண்ணுபட்டு’ டிபிகல் யுவன் சாங்! ‘ஆத்தாடி மனசுதான்’, இளையராஜா பாடல் மாதிரியான மெலடி. (கார்த்திக் ராஜா குரல்)

3. அனிருத் கொலவெறியோட காணாமப் போற ஆளில்லைன்னு நினைக்கறேன். எல்லா பாட்டுமே நல்லாத்தான் இருக்கு. கம் ஆன் கேர்ள்ஸ், இதழின் ஓரம் எல்லாமே. கொலவெறி நான் கேட்கவே இல்லை. சலிச்சுட்டுது. மோஹித் சௌகான் & அனிருத் சேர்ந்து (யுவன் ஸ்டைல்ல) பாடின போ நீ போ – வாவ் ரகம். நிச்சயமா கேளுங்க.

நண்பன்: ஹாரிஸ் –சங்கர் கூட்டணி எப்பவும் போலவே ஏமாத்தல. அதுவும் அஸ்க லஸ்கா – அஸ்கா! விஜய் ப்ரகாஷ் - சின்மயி!

சின்மயியை விட, விஜய் ப்ரகாஷ் பாடறப்ப அந்த ‘சிந்தா சிந்தா / ப்யாரோ ப்யாரோ-வுல ஒரு துள்ளல் தெறிக்குது பாருங்க.. சூப்பர்!

இந்தப் பாட்டோட வரிகள்... இந்த மாதிரி எழுதறப்பதான் ஒரு கவிஞர் தன்னோட இடத்தை கெட்டியா பிடிச்சுக்கறார். வரிகளை கவனிச்சு, ரசிக்கற என்னை மாதிரி ஆனவங்களுக்கு மதன் கார்க்கியோட வரவு – வரம். சும்மா இல்லாம, பல மொழிகள்ல காதல்ங்கற வார்த்தையை கோர்த்து எழுதிருக்கற இந்தப் பாட்டுல

“முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்” - அபார கற்பனை! (இப்படிச் சொல்லிக் குடுத்திருந்தா ஜ்யாமெண்ட்ரில ஆஹா ஓஹோன்னு மார்க் வாங்கீருப்பேனே..)

அதே பாட்ல ரெண்டாவது சரணத்துல வர்ற

‘புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே’ -

வாவ்!

பதினாறு பதினாறா பல அடிகள் தாண்டப்போகுது இந்தக் குட்டி!

----

போன வாரம் ஒரு பிரபலத்தை அழைத்தேன்.

“பிஸிங்களா.. பேசலாமா? ஜி.நாகராஜன் படிச்சிட்டிருக்கேன். உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு”

“இல்ல.. சொல்லு பரிசல். விகடனுக்காக நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை கேட்டிருக்காங்க. எழுதிட்டிருந்தேன்’ என்றார்.

“ஓ! சூப்பர்ங்க” என்றுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார்: “சரி பரிசல்.. நீ எப்ப நட்சத்திர எழுத்தாளரா மாறப்போற”

அன்னா ஹசாரே, ஆஸ்திரேலியா டெஸ்ட், இளையராஜா இசைவிழா என்று அவர் கவனத்தை திசை திருப்பிப் பேசிவிட்டு வைத்துவிட்டேன்.

கிறிஸ்துமஸ் டைம். ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

--

விஜய் டிவி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- நிகழ்ச்சிக்காக சூர்யா கேட்கும் கேள்விகள் அடடா.. அபாரம். இதுபற்றி ட்விட்டரில் போட்டுக் கிழிக்கப்பட்டது. இப்படிக் கூட கேட்பார்கள் என்று. அவற்றில் நானெழுதிய சில கேள்விகள்:

சமீபத்தில் ஒன்-டேவில் இரட்டை சதம் அடித்த வீரர்
1) விஸ்வநாதன் ஆன்ந்த் 2) மைக் டைசன் 3) சேவக் 4) பிடிஉஷா

ஜனகனமண என்பது நம்
1) தேசியப் பறவை 2) தேசியக்கொடி 3) தேசிய விலங்கு 4) தேசிய கீதம்

சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட உலக அழகி
1) கொல்லங்குடி கருப்பாயி 2) ஐஸ்வர்யா ராய் 3) சௌகார் ஜானகி 4) பரவை முனியம்மா


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயற்பெயர்
1) சாந்தி 2) பூந்தி 3) காந்தி 4) சிவாஜிராவ் கெய்க்வாட்

இரட்டை ஆஸ்கார் வாங்கிய தமிழன் / இசையமைப்பாளர் யார்?
1) கே.ஆர்.விஜயா 2) ஏ.ஆர்.ரஹ்மான் 3)எம்.ஆர்.ராதா 4) ஜி.ஆர்.தங்கமாளிகை

தமிழக ஆட்சி மாற்றத்தில் தன்னை அணில் என்று விளித்துக் கொண்ட நடிகர்
1) என்னத்தே கண்ணையா 2) டாம்க்ரூஸ் 3) ஜாக்கிஜான் 4) விஜய்

ஜெயலலிதாவால் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழி பெயர்
1) சசி 2) பசி 3) குஷி 4) மஷி

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த படம்
1) பாட்ஷா 2) முத்து 3) படையப்பா 4) தசாவதாரம்

--------------------


நேற்று மதியம் ஒருவர் அழைத்தார்.

“பரிசல்.. ஏன் இப்பல்லாம் எழுதறதே இல்லை?”

வழக்கம் போல நான் அசடு வழிந்ததை, அந்த அழைப்பு வீடியோ காலிங் அல்லாததால் அவரால் பார்க்க முடியவில்லை.

“இது ரொம்ப தப்பு பரிசல். நீங்கள்லாம் எழுதாம இருக்கறது ரொம்பவே தப்பு. ஒரு கட்டத்துக்கு மேல நிறுத்திடறீங்க. நானும் உங்க பழைய போஸ்ட் ஒவ்வொண்ணா எத்தனை நாள்தான் படிக்கறது?” என்று கேட்டார். பாவமாகத்தான் இருந்தது. என்னாலேயே அதில் பலவற்றைப் படிக்க முடிவதில்லை.

“இல்லைங்க.. வேலை..” என்று ஆரம்பிக்கப் போனவனை ஒரு அதட்டலாக இடைமறித்தார். “அதெல்லாம் சோம்பேறிக சொல்றது பரிசல்” (அப்பறம் நான் யாரு? ரொம்பச் சுறுசுறுப்பானவனா? அதுசரி!) “எஸ்.ரா, ஜெ.மோ இவங்களையெல்லாம் எடுத்துக்கோங்க. அவங்களுக்கு இல்லாத வேலைப்பளுவா உங்களுக்கு இருந்துடப் போகுது? அவங்கள்லாம் எவ்ளோ படிக்கறாங்க.. எவ்ளோ உலகப்படங்கள் பார்க்கறாங்க.. அவங்க எழுதறதில்லையா?”

“அவங்க கூட என்னை ஒப்பிடறதா..” என்று கேட்கவும் மறுபடி பொங்கினார்.

“அப்படி ஒரு நெனைப்பு வேறயா? அவ்ளோ பிஸி ஷெட்யூல்ஸ் இருக்கறவங்களே எழுதறப்ப உங்களுக்கென்ன கேடுன்னு சொல்ல வந்தேன்” என்றவர் “கண்டிப்பா வாரம் ரெண்டு மூணாவது எழுதுங்க பரிசல்.. ஆமா சொல்லீட்டேன்” என்று என் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.

நான் எழுதணும்னு ஒரு ஜீவன் இப்படிக் கிடந்து துடிக்கும்போது, உலகம் சுழலாம என்ன பண்ணும்!


---

Thursday, July 28, 2011

அவியல் 28.07.2011

வர் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அன்றைக்கு புதிதாக ஒரு பெண், அலுவலகத்துக்கு வரவே அனைவரும் 'ஹாய் ப்ரியா… ஹாய் ப்ரியா’ என்று வரவேற்றிருக்கிறார்கள். நம்மவரும், பழைய ரிப்போர்டர் போல என்று நினைத்துக் கொண்டு ‘பிரியா நீ.. வாங்கித்தருவியா பிரியாணி’ என்று மொக்கையாகச் சொல்லிவிட்டு இவர் சொன்னதுக்கு இவரே சிரித்து ரசித்திருக்கிறார்.

அந்தப் பெண் சட்டை செய்யாமல் நேராக மேனேஜர் சீட்டுக்குப் போக அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

நம்மவர் பயந்தவாறே பக்கத்து சீட்டில் விசாரிக்க ‘அவங்கதான் ஓனர் பொண்ணு’ என்றார்களாம்.

‘நாளைக்கு வேலை இருக்கான்னு தெரியல.. என்னடா பண்றது நான்?’ என்று கேட்டார்.

”நேராப்போய் சொல்லுங்க. ‘மொத்தமா மூணு தப்பு நடந்திருக்கு. நீங்க மொதலாளி பொண்ணா பொறந்தது மொத தப்பு. உங்க பேரை ப்ரியான்னு வெச்சுகிட்டது ரெண்டாவது தப்பு. வேற பேரா இருந்திருந்தா எனக்கு அந்த ரைமிங் வந்திருக்காது. மூணாவது தப்பு நான் உங்களை அப்படிக் கலாய்ச்சது. ரெண்டு தப்ப உங்க மேல வெச்சுட்டு ஒரு தப்புக்காக என்னைத் தண்டிக்கப்போறீங்களா?’ன்னு கேளுங்கன்னேன்.

என்ன ஆச்சோ! ஒரு வாரமா ஃபோனையும் காணோம். கூப்டாலும் எடுக்கலை.

--

ப்போதோ அவியலில் ம்யூசிக் சேனல்களில் பாடலைக் குறிப்பிடுவதோடு, பாடல் எழுதியவரையும், இசையமைப்பாளரையும் குறிப்பிட்டால் என்ன என்று கேட்டதாக ஞாபகம். சில சேனல்களில் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இப்போது வேணாம்டா என்று சொல்லத் தோன்றுகிறது. அதுவும் சன் ம்யூசிக் செய்கிற கொடுமை தாங்கமாட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.


காதலின் தீபமொன்று பாடல் வைரமுத்து எழுதியதாகக் காட்டுகிறார்கள். அது பஞ்சு அருணாசலம் எழுதியது. இதைக் கூட மன்னித்துவிடலாம். நல்ல வரிகள் – ஆகவே ஒரு பிரபல கவிஞர் ஞாபகத்துக்கு வரலாம். இன்னொன்றைப் பார்த்துதான் நான் ஆடிப்போனேன். ஒரு முறை அல்ல, ஒன்றிரண்டு முறைகளுக்கு மேல் இந்தப் பாடல் போடும்போதெல்லாம் இப்படித்தான் போடுகிறார்கள்.

அது:

பாடல்:மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: சுந்தர் சி பாபு.

ங்கொய்யால.. கோர்ட்ல இருக்கற கேஸ்கூட கேஸா, இதுக்கும் ஒண்ணு போடலாம்னான்னு பார்க்கறேன்.

** **

ண்பன் ஒருத்தன் அவன் அப்பாவைப் பற்றி எப்போதுமே - ‘எனக்கு அவர் எந்த கஷ்டமும் வெச்சதே இல்ல' என்பதாய் - பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான்.

“எனக்கு தேதிகளை ஞாபகம் வெச்சுக்கற சிரமம் கூட இல்லைப்பா-ன்னு எங்கப்பாகிட்ட சொல்லீட்டே இருப்பேன். அவர் பொறந்தது ஜனவரி 1, நான் பொறந்தது ஆகஸ்ட் 15. இந்த மாதிரி ஸ்பெஷல் தேதிகளா அமைஞ்சிருக்கு பாரு” என்பான்.

சில வருடங்கள் கழித்து சென்ற வாரம் கோவை வரும் வழியில் யார் யாரிடமோ விசாரித்து என் நம்பர் கண்டுபிடித்து என்னை வந்து சந்தித்துச் சென்றான்.

“அப்பா இறந்துட்டார்டா. தெரியுமா?” என்றான். “இல்லைடா.. எப்ப என்றேன்?”

“போன வருஷம் ஃபெப்ரவரி 14 அன்னைக்கு”

எனக்கு என் அப்பா இறந்த தேதி ஞாபகம் வந்தது. 07.07.07

** ** **

சிக்னலின் வாகனத்தை நிறுத்தும் போது சிக்னல் டைமர் 45 செகன்டுக்கு மேல் காண்பித்தால் பெட்ரோல் சேமிக்க, உங்கள் வாகனத்தை அணைத்துவிடுவது உசிதம். 45 செகன்டுக்கு கம்மியாக இருந்து வாகனத்தை அணைத்தால், திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோல், அணைத்தபோது சேமித்த பெட்ரோலைவிட அதிகமாகத்தான் இருக்கும் - என்று எப்போதோ / எதிலோ படித்த ஞாபகம்.

இதுபற்றி ஆட்டோமொபைல் துறையிலிருக்கும் நண்பனிடம் கேட்டபோது ‘அதெல்லாம் அப்ப. இப்ப அட்வான்ஸ் மாடல் இஞ்ஜின்தான். பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.

அப்படியா?


** **


தெய்வத்திருமகள் பார்த்த ஒரு நண்பர் பேசும்போது ‘படத்துல நிலாவைப் பார்க்கறப்ப எல்லாம் மீரா ஞாபகம் வருது. ஏன்னு தெரியல’ என்றார். இன்னொரு நண்பர் மெய்ல் அனுப்பியிருந்தார் ‘நிலாவைப் பார்க்கறப்ப மேகா ஞாபகம் வந்துச்சு’ என்று.

படத்தில் நிலாவின் அப்பா பெயர் கிருஷ்ணா என்றிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதை விடவும் ஆழந்து யோசித்தால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நாயகனும் - சாலை விதிகளையெல்லாம் மதித்துக் கொண்டு - என்னைப் போலவே கொஞ்சம் மெண்டலாகத்தான் இருக்கிறான்.

** ** **




.

Tuesday, July 19, 2011

அவியல் 19.07.2011

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி விட்டதால் காவல்துறை அங்கங்கே எச்சரிக்கை தட்டிகளை வைத்து பொதுமக்களை உஷார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தட்டியில் ‘உங்கள் வாகனங்கள் திருடு போகாமல் இருக்க பத்திரமாக பூட்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் – இப்படிக்கு உங்கள் நண்பன், காவல்துறை” என்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோ ஹோண்டா வாகனங்கள் என்று வேறு!

பல இடங்களில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக நான் செல்லும் பாதையில் ஒரு வெள்ளுடை வேந்தர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நிறுத்தியதும் நான் சொன்னேன்:

“நீங்க எதிர்பார்த்தது என்கிட்ட கிடைக்காது சார்”

அவர் என்னை ஒரு மார்க்கமாக – சிக்கினாண்டா சிவகிரி என்பது போல – பார்த்து “லைசென்ஸ், ஆர்சி, இன்ஷ்யூரன்ஸ் எதுவுமே இல்லையா?” என்று கேட்டார்.

“அதில்லை சார்.. எல்லாம் இருக்குன்னு சொல்ல வந்தேன்”

ஒரு நிமிடம் யோசித்தவர் டக்கென்று தோளில் தட்டி சிரித்து “போய்யா.. போ..” என்றார். ரசனைக்காரர்!

** **

சௌ
ந்தர் என்ற என் நண்பரைப் பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா? (இல்லையா?) நேற்று அவரைச் சந்தித்தேன். சூரியன் பண்பலையில் ஏதோ க்ளோபல் வார்மிங் சம்பந்தமான கவிதை போட்டி ஒன்று அறிவித்தார்களாம். வைரமுத்து நடுவர். அதற்கொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றார். (சௌந்தர் நன்றாக கவிதை எழுதுவார் – என்னை விட – என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

“சொல்லட்டுமா?” என்றார். சொன்னார்.

‘மனிதா...’ என்று ஆரம்பித்தார்.

‘ஏ மனிதா’ இல்லையா? இந்த மாதிரி கவிதை எல்லாம் ‘ஏ மனிதா-ன்னு ஆரம்பிக்கணுமே’ என்றேன். இல்லை என்றார். சரி.. அவர் அழைக்கும் மனிதனின் அப்பா பெயர் A வில் ஆரம்பிக்காது போல என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லுங்கள்’ என்றேன்.

உண்மையாகவே அவர் கவிதை நன்றாகவே இருந்தது. முன்னர் சொன்ன ‘ஏ மனிதா..’ கிண்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டவர், ‘நிஜம்ம்ம்ம்ம்மா நல்லா இருக்குய்யா’ என்றபோது கிண்டல் பண்ணாதீங்க என்றார். போட்டி முடிவு வந்தபின், அவர் கவிதை தேர்வானாலும், ஆகாவிட்டாலும் ஒருநாள் என் பதிவில் எழுதுகிறேன். நீங்களே சொல்லுங்கள்.

** **

மே
ற்கண்ட பத்தி பற்றிய இன்னொரு விஷயம்: கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர் அலுவலகத்திலிருந்துதான் பண்பலை கேட்டிருக்கிறார் சௌந்தர். அவர் நண்பர்தான் எழுதத் தூண்டியிருக்கிறார். அடுத்தநாள் – புதன் – கடைசி நாள். ‘இன்னைக்கு எழுதி நாளைக்கு அனுப்பணும். சான்ஸ் இல்லை’ என்றிருக்கிறார் சௌந்தர். ‘நீங்க எழுதுங்க. கொண்டு போய் சேர்த்தறது என் வேலை’ என்றிருக்கிறார் நண்பர்.

செவ்வாய் இரவு எழுதி, புதன் அதிகாலை நண்பர் அலுவலகத்தில் ஜன்னலைத் திறந்து போட்டுவிட்டு வந்துவிட்டாராம். நண்பர் சூரியன் அலுவலகத்திற்கு தொலைபேசி கேட்டு, புதன் மதியத்துக்குள் கோவை சென்று நேரடியாக சமர்ப்பித்து விட்டு வந்தாராம்.

”வைரமுத்து செலக்ட் பண்றாரோ இல்லையோ.. உங்க ஃப்ரெண்டு இவ்ளோ சிரமமெடுத்தார் பாருங்க உங்க கவிதைக்கு... அதுவே உங்களுக்கு கிடைச்ச பரிசுதான்” என்றேன். சரிதானே?

** **

ட்சி மாற்றம் நடந்தபின் நீதிமன்றம், வழக்குகள் என்று நிறைய காட்சிகள் நடப்பது வழக்கம். நித்தியானந்தா, ரஞ்சிதா கோஷ்டி ப்ரஸ் மீட், கமிஷனர் ஆஃபீஸ் என்று பிஸியாக இருக்கிறார்கள். நான் அவர்கள் சம்பந்தப்பட்ட பேட்டிகள், காட்சிகள் எதுவும் பார்க்கவில்லை. (அதாவது, இப்போது.) நேற்று ஒரு வார இதழில் ரஞ்சிதாவின் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நித்தி மேல் கோபத்தோடு கொஞ்சம் பொறாமையும் வந்தது. நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.

இந்த கோர்ட் சீன்களில் அயர்ச்சியைத் தருவது சமச்சீர் கல்வி தொடர்பான இவர்களின் பந்தாடல். நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில், ‘இல்ல்ல்ல.. நாங்க சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று அட்வகேட் ஜெனரல் டெல்லி கிளம்பி சென்று விட்டார் அப்பீல் செய்ய. குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ஃபீஸும் கட்டிவிட்டு ஒன்றும் அவர்கள் சொல்லிக் கொடுக்காமல் இப்படி இழுத்தடிப்பது எரிச்சலையே தருகிறது. அடுத்த வாரம் MID TERM எக்ஸாமாம். என்ன கேள்வி கேட்க என்று ஆசிரியர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

எல்லா பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து புரட்சியில் இறங்காதவரை இதற்கு விடிவில்லை. சென்ற முறை ஏதோ கமிஷன் வாங்கிக் கொண்டு.. ச்சே... கமிஷன் அமைத்து இவ்வளவுதான் கட்டணம் என்றார்கள். ஒன்றும் பெரிய மாற்றமிருக்கவில்லை. இப்போது இது. விடிவே இல்லையா நமக்கு?

** **

தெய்வத்திருமகள் படம் பார்க்கும்போது இரண்டு மூன்று இடங்களில் தொண்டை அடைத்தது உண்மை. பெண்களும், குழந்தைகளுக்கும் கண்ணீர் வருகிறது. அந்த மாதிரி ஒரு காட்சியின் போது, முன் சீட் அம்மணி கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண்மணி கேவிக் கொண்டிருந்தார். (வீட்டில் என்ன ப்ரச்சினையோ...)

க்ளைமாக்ஸில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அவ்ளோ பெரிய மனிதருக்கு விக்ரமை வீட்டில் வைத்துக் கொள்வதில் என்ன ப்ரச்சினை? அனுஷ்கா தனியாக இருப்பாரே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்தாரா.. அல்லது இந்த மாதிரியான உணர்ச்சிமயமான படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியா?

** **

வழக்கம்போல சட் சட்டென சொல்ல வந்ததைச் சொல்ல முடிவதால் ட்விட்டரிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

சில ட்விட்டர் அப்டேட்ஸ்:


‘நீ நடுத்தெருவுலதான் நிப்ப’ என்று திட்டுவாங்கியவர்கள்தான் இன்றைக்கு மினி பஸ் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.


பதிவுல கமெண்ட் மாடரேஷன் போல, மனைவி நம்மகிட்ட பேசறப்ப மாடரேட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்? வேணுங்கறத மட்டும் ரிலீஸ் பண்ணிக்கலாம்!

தூங்கப்போகிறேன். நான்கு நாட்களாக ஒரு தொடர் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்றைக்கு பகுதி 5. க்ளைமாக்ஸாக இருக்கலாம்.

இப்பல்லாம் துணையில்லாம யாருமே டூ வீலர் ஓட்றதில்ல. எல்லா வண்டிலயும் யாரோ ஒருத்தர் 'துணை'.

விஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே! நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.

கலைஞர் TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை.

கோபம் வந்தால் ஐந்து நிமிடம் அமைதியாக இருங்கள். #அடிங்... அது முடிஞ்சா நான் ஏண்டா கோபப்படப்போறேன்?

நாம் கேட்ட சரக்கைத் தராத டாஸ்மாக் உள்ளவரை தமிழகம் தன்னிறைவை அடைந்ததென்பதை ஏற்கமுடியாது.

‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.


ட்விட்டரில் தொடர: http://twitter.com/#!/iParisal


** **



.

Thursday, April 28, 2011

அவியல் 28.04.2011


அவன் இவன் - யுவன்

ஒவ்வொரு புதிய ஆல்பம் வெளியிடப்படும்போது ஆர்வமாக அதற்காகக் காத்திருந்து ஒரிஜினல் சி.டி வாங்குவதில் எனக்கொரு அலாதி ஆர்வம். ஆனால் என்னைப் போன்றவர்களின் ஆர்வத்திற்கு ஒரு சில ஆலபங்களே சரியான தீனி போடுகின்றன. சில ஏமாற்றத்தையும், சில வெறுப்பையுமே தருகின்றன. யாரோ சொன்னார்கள் என்று ‘சேவல்’ பட ஆல்பத்தையெல்லாம் முதல் நாளே வாங்கிய மஹானுபாவன் நான். போலவே – திட்டாதீர்கள் – ஜக்குபாய், மாப்பிள்ளை, தூங்கா நகரம் ஒலிப்பேழைகள்.


மேற்குறிப்பிட்டவை போல வாங்கும் குப்பைகளைக்கெல்லாம் பிராயச்சித்தமாக எப்போதாவது அகஸ்மாத்தாக சில முத்துகளும் கிடைக்கும். இப்போதப்படி அமைந்தது அவன் இவன் பட ஒலிப்பேழை. யுவன் ம்யூசிக்.

ராசாத்தி போல என்று ஹரிசரண் குரல் ஆரம்பித்து அந்த துள்ளலிசை துவங்கும்போது செமயாக இருக்கிறது!

வரிகள் இல்லாத டையா டையா டோல் – உருமியில் ஆரம்பித்து உடுக்கையில் தொடர்ந்து தப்பு, தாரை, பறை என்று செவிப்பறையைக் கிழித்து அலப்பறை தரும் இந்த இசை – இனி எல்லா இடங்களிலும் கேட்கலாம். டாப்!

அவனைப் பத்தி நான் பாடப்போறேன் – தத்துவம் கலந்த அதிரடி சரவெடி. ஒரு மலையோரம் – நல்ல மெலடி. முதல்முறை – சோகப்பாடல்.

ராசாத்தியும், டையா டையா டோலும், அவனைப்பத்தியும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தமிழகத்தையே கலக்கப் போகிறது!

--------

வி

கோ

கே.வி.ஆனந்தை எனக்கு பிடிக்கும். மாத நாவல்களின் அட்டைப் படத்தில் அவரது க்ரியேட்டிவ் ஸ்டில்களைப் பார்த்து அவருக்கு கடிதமெழுதி, அவரும் ஒன்றிரண்டு பதிலெல்லாம் போட்டு (அது கெடைச்சா விடுவேனா உங்கள…) - அப்போதிலிருந்து பழக்கம் – அல்லது தெரியும்!

கனா கண்டேன், அயன் என்று மேக்கிங்கில் சிரத்தை காட்டும் இவரது டைரக்ஷனில் வரும் கோ-வை எதிர்பார்க்கக் காரணம் அவரது ப்ரொஃபஷனான அல்லது அவர் ஆசைப்பட்ட ஃபோட்டோக்ராஃபி ஜர்னலிசத்தை சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பதால்.

கதை எல்லாம் வேண்டாம். விமர்சனத்தில் கதை சொல்ல மாட்டேன் என்று இதோ இந்த என் கம்ப்யூட்டர் டேபிள் மேல் சத்தியம் செய்திருக்கிறேன்.

ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், டைரக்டர் என்று கைதட்டுவார்கள். இதில் ஸ்டில்ஸுக்காக நிறைய கைதட்டல்கள். அதே போல அமளி துமளி பாட்டின் லொகேஷன் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. (நார்வேயாமே.. அப்படியா?)

அந்த பத்திரிகை எடிட்டர் கதாபாத்திரத்துக்கு வைத்திருக்கும் பெயரில் கே.வி.ஆனந்த் என்னைக் கவர்கிறார். குட்!

ஜீவா-ஓகே. கார்த்திகா – நல்ல ஸ்ட்ரக்சர். படத்தில் எல்லாரையும் – என்னையும் – கவர்ந்தவர் பியா. க்யூட்.

பிரகாஷ்ராஜ் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அல்லது அவர் கதாபாத்திரம் கலைஞரை நினைவு படுத்துவதால் கத்தரிபட்டிருக்கிறார்.

எது எப்படியாயினும், அரசியலுக்கு தகுதியான இளைஞர் வருவதை கொஞ்சம் நெகடீவாகக் காட்டியதால் ஆனந்திற்கு – என் கண்டனம்.

----------------


நேற்றிரவு அலுவல் விட்டு, திருப்பூர் பிக் பஜாரைத் தாண்டி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன். இடது புறம் நான். எனக்கு வலது புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கார். இரண்டுக்கும் இடையே புகுந்த மினி ஆட்டோ ஒன்றின் மூக்கு முன்னால் செல்ல, கொஞ்சம் அகன்ற அதன் பாடி என் பைக்கை உரசி நான் பறந்து போய் விழுந்தேன். கிட்டத்தட்ட பத்தடிக்கு தரையில் நீச்சலடிப்பது போல தேய்த்தபடி போனேன். ஹெல்மெட் வாழ்க. அதன் தாடைப்பகுதியைப் பார்த்தால் தெரியும். அதுதான் என்னைக் காப்பாற்றியது.

ஆட்டோக்காரன் கொஞ்சம் முன்னே சென்று நிறுத்த, நான் கூட்டத்தை விலக்கி அவனைப் பிடி பிடி என்று சண்டைபிடித்துவிட்டு வந்தேன். பான் அமெரிக்கா – 1500 ரூ – சட்டை பாழ்! கை கால்களில் சிராய்ப்பு. பைக் முன்புறம் அடி.

திரும்பி வந்து பைக் எடுக்கும்போது கூட்டத்திலிருந்தவர்கள் எல்லாருமே ஹெல்மெட்டுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும் என்றனர். சொல்லீட்டேங்க என்றேன் அதை கையில் வைத்து ஒரு போஸ் கொடுத்தபடி.

ஒரு வாட்ச்மேன் வந்து ‘எதாவது மிஸ் ஆகுதுங்களா.. செல், பர்ஸ்..’ என்று கேட்டு ‘கைல வாட்ச் கட்டிருந்தீங்களா’ என்று இரண்டு மூன்று முறை வினவினார். இல்லைங்க என்று சொல்லி அவரைக் கவனித்தேன். டைட்டான் வாட்ச் ஷோரூமின் வாட்ச்மேன். அதான்!

இன்னொரு ALL IZZ WELL பதிவு வந்திருக்கும். தப்பிச்சீங்க!

--------------

ல்

ப்ருத்விராஜ் கல்யாணத்தால் மனமுடைந்திருக்கும் கன்னி ராசி கன்னியர்களே.. உங்களை மேலும் கலவரப்படுத்தும் செய்தியாக சூர்யா தம்பி, கார்த்திக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாம்.

பொண்ணு எப்படி இருக்காங்கன்னு இங்க போய்ப் பார்த்துக்குங்க.

அப்பாடா.. கொஞ்சம் நிம்மதி..

----

அவ்ளோதான்.

கொஞ்ச நாளாகவே சிஸ்டம் ப்ராப்ளம். இந்த நான்கு பக்கம் அடிப்பதற்கும் மூன்று முறை ரீ ஸ்டார்ட் ஆகிறது. ஆகவே இதை டாக்டரிடம் அனுப்புகிறேன். திரும்பி வரும் வரை பதிவிருக்காது. ‘இல்லை.. நீங்க எழுதியே ஆகணும்’ என்று அடம்பிடிப்பவர்கள் லேட்டஸ்டாக மார்க்கெட்டில் வந்திருக்கும் லேப் டாப் வாங்கிப் பரிசளிக்கலாம்.

குறிப்பு: வரிவிலக்கு உண்டு.


---------

.

Friday, April 15, 2011

அவியல் 15.04.2011


ந்த விஷயத்தை ஏற்கனவே அவியலில் எழுதிவிட்டேனா என்று தெரியவில்லை. எழுதி, நீங்கள் படித்திருந்தால் டக்கென்று ஸ்க்ரோல் செய்து அடுத்த பத்திக்குப் போகலாம். (!!!)

ஒருமுறை என் பைக்கை ட்ராஃபிக் போலீஸ் பிடித்துவிட்டார்கள். நான் தவறு செய்திருந்தேன். ஆகவே வண்டியை ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு அடுத்த நாள் எடுக்கச் சென்றேன். தீபாவளி நேரம். கோர்ட்டுக்கு அலையவிட முயற்சி செய்தார்கள். அவரை இவரைப் பிடித்து 2000 ரூ தருவது என்று பேரம் பேசி முடிவாகி கொடுக்கும்போது ஒரு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தேன்.

‘எதுக்கு தம்பி 2001 தர்றீங்க?’ என்றார் அவர்.

‘அது என் வண்டி நம்பர். நீங்க மறக்காம இருக்க’ என்றேன் நான்.

------------------------

ன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. யானை தும்பிக்கை வைக்கும்போது பயப்படுகிற குழந்தை, யானையை டிவியில் பார்த்தால்கூட தன்னிச்சையாக நடுங்குமல்லவா.. அப்படி ஒவ்வொரு முறை இந்தப் பட ட்ரெய்லர் டிவியில் போடப்படும்போதும் கை நடுங்க, வீட்டில் எல்லாருமே ரிமோட்டை அவசர கதியில் தேடி ம்யூட் போடவும், சேனல் மாற்றவும் செய்துகொண்டிருக்கிறோம். எந்தவித சுவாரஸ்யத்துக்காகவும் இப்படி எழுதவில்லை. சத்தியமான உண்மை. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?)

ஒருநாள் சாட்டில் வந்த ஃப்ரெண்ட் ஒருவர், இன்றைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போகிறேன் என்றார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல். சரி பார்த்துவிட்டு என் விமர்சனம் சரியா என்று உண்மையாகச் சொல்லுங்கள் என்றேன். இரண்டு நாட்களாக அவரிடமிருந்து பதில் இல்லை.

படம் பார்க்குமுன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லச் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்திருந்தபோது சாட்டில் வந்தார். 30 நிமிடங்கள் பார்த்துவிட்டு மூடிவிட்டாராம் லேப்டாப்பை. (டவுன்லோடிப் பார்த்திருக்கிறார். அதற்கும்கூட தகுதியில்லாத படம்) HORRIBLE என்றார் ஒரே வார்த்தையில். குசேலன் ,குருவியைக் கூட மன்னிக்கலாம் என்றார்.

இந்திய உலகக் கோப்பை வெற்றி, அன்னா ஹசாரே, ஓட்டளிப்பது ஜனநாயகக் கடமை - இதிலெல்லாம் காட்டிய அதே ஒற்றுமையை தமிழர்கள் மாப்பிள்ளையை எதிர்ப்பதிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் சந்தித்ததில் ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை.

ரஜினியைப் பார்த்து கமல் கற்றுக் கொள்ளவேண்டும். கமலின் மகளை கைபிடிக்கப் போகிறவரிடம் கமல் வாங்கும் வாக்குறுதி ‘என் எந்தப் படத்தையும் ரீமேக்கக் கூடாது’ என்பதாக இருக்க வேண்டும்.
------------------------------
திருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.

அடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது!)

-----------------------------

டவுள் என்றொருவர் இருக்கிறாரா என்று கேள்வி பலமுறை நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு வரும். பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் மகள் இறப்பைக் கேள்விப்பட்டதும் இந்தக் கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

திருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு சித்ரா தம்பதியினருக்கு ஜனித்த அந்தக் குழந்தை, நேற்று UAEல் ஒரு நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டதாம்.

கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் பாடவேண்டுமென்றால் கூட வெட்கப்படுபவர் சித்ரா. அவ்வளவு அமைதியான சுபாவம் கொண்டவருக்கு இப்படி ஒரு நிகழ்வா என்று வருத்தமாகவே இருக்கிறது.

:-(

குழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

--------------

சில மாதங்களுக்கு முன் ஒரு வெப்சைட் நிறுவனம் தன் வெப்சைட்டின் PROMOவுக்காக தோனியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் தோனியின் ஒரு புத்தகம் வெளியிட்டது. ஒரு புத்தகத்தின் விலை ஒரு ரூபாய். லட்ச / கோடிக் கணக்கில் விற்பனையாகும் என்பது திட்டம். விற்றதோ ஆயிரத்துச் சொச்சம் மட்டுமே.

பிறகு காரணத்தை அலசியபோது அவர்களுக்கு கிடைத்த விடை: அணியின் வெற்றியை தோனி என்கிற தனிமனிதனின் சாதனையாக மக்கள் அங்கீகரிக்கவில்லை. அணியின் வெற்றியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று புரிந்ததாம். தனிப்பட்ட சாதனையாளர்களின் சுயசரிதையைத்தான் மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

--------------------

றை நல்லது என்பதுபோல கரண்ட் கட் நல்லது என்று சொல்ல வைத்து விட்டார்கள் ஒரு சில நாட்களுக்கு முன். மின்சாரத்தைத் துண்டித்து, அந்த நேரத்தில் வீடு வீடாக பணப்பட்டுவாடா நடந்ததாம். எங்கள் பகுதியில் இந்தச் செய்தி வேகமாகப் பரவ கரண்ட் கட்டானபோது பல வீடுகளும் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கும் ஒரு கவர் கிடைக்குமென எதிர்பார்த்தேன். கிடைக்காத ஆத்திரத்தில் இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று முடிவெடுத்தேன்!

Jokes apart, சில ஊர்களில் கவர் கொடுக்க வந்த கட்சியினரை தேர்தல் கமிஷனிடம் மாட்டிவிட்ட மாற்றுக் கட்சியினர் மீது மக்களே கோவமாக இருந்ததைக் காணமுடிந்ததாம். ‘நமக்கு கொடுக்க வர்றதை தடுக்கறான் பாரு’ என்று காசு கொடுக்காமலே தங்கள் கட்சிக்கு ஓட்டு வாங்கிவிட்டார்களாம் கவரோடு வந்தவர்கள். கில்லாடிகள்தான்! எனக்குத் தெரிந்து ஓர் ஊரில் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு பணப் பட்டுவாடா நடந்ததாம்.

இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நடத்திக் காட்டிய தேர்தல் கமிஷன் பாவம்தான். படித்தவர்களின் மாநிலமாகப் போற்றப்படும் கேரளாவைவிட அதிக சதவிகித வாக்குப் பதிவானதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

----------------


.

Monday, March 21, 2011

அவியல் 21 மார்ச் 2011

சென்ற மாதத்தில் ஒருநாள் திருவண்ணாமலை அருகே ஓர் ஊரில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள்.

தாய்மார்களா? டாஸ்மாக் வேண்டும் என்றா? – ஆமாம்.

காரணம் – கடைசியில்!

-----------------------------

வீடு கட்ட லோன் அப்ளிகேஷனில் விவரங்கள் எழுதும்போது தெரிஞ்சவங்க நம்பர் குடுங்க என்றார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு விஷயம் சொன்னார். ஒரு வாடிக்கையாளர் தனக்குத் தெரிந்தவர் என்று ஒரு நண்பரின் பெயரைக் கொடுத்தாராம். வங்கி நபர் அந்தக் குறிப்பிட்ட நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ‘செல்வராஜையும் தெரியாது.. ஒரு மங்கா மடையனையும் தெரியாது’ என்று அவர் கட் செய்து விட்டாராம். வங்கி நபர், உடனே விண்ணப்பதாரரைத் தொடர்பு கொண்டு ‘அவரு தெரியாதுங்கறாரே’ என்று கேட்டதும் ’ஒரு நிமிஷம் இருங்க’ என்று வங்கி நபரையும் லைனில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நண்பருக்கு அலைபேசி டக்கென்று கான்ஃப்ரென்ஸ் கால் போட்டிருக்கிறார். அழைப்பு போனதும் அந்த நண்பர் பேசியது:

‘ஏய்.. செல்வராஜு... சொல்லுடா மாப்ள.. என்ன திடீர்னு..’

‘இல்ல மாம்ஸ்... ஹவுசிங் லோன் போட்டிருக்கேன்.. உன் நம்பர் குடுத்திருக்கேன். பேங்க்லேர்ந்து கூப்பிடுவாங்க..’

‘அதுதான் நேத்தே சொன்னியே மாப்ள... கூப்டா பேசிடறேன் சரியா.. வேற எதுனா இருக்கா?’

இல்லை என்ற விண்ணப்பதாரர் லைனைக் (நண்பரையும்?) கட் செய்துவிட்டு, வங்கி அப்ளிகேஷனில் வேறு நண்பர் பெயரை எழுதிக் கொடுத்தாராம்.

-----------------------

சின்ன மகளின் வகுப்பில் ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை. அவளது தோழி ஒருத்தி மார்க் கம்மியாகிவிட்டதாம். பஸ்ஸில் வரும்போது அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏன் கம்மியாச்சு என்று கேட்டதற்கு ‘நான் எக்ஸாமுக்கு முந்தி ஒருவாட்டி சுவாதியை உதைச்சேன்ல.. அதுனாலதான்’ என்றாளாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறாள் பெரியவள். நாம் யாரையாவது உதைத்தால் அவர்கள் புத்தி நமக்கு வரும்.. நம்ம அறிவு அவங்களுக்குப் போகுமாம்’ என்றிருக்கிறாள். இதை அவர்கள் விளையாட்டாகச் சொல்ல நான் கேட்க நினைத்தேன்: ‘அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?’

ஆனால் கேட்கவில்லை. சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..

------------------

லகக்கோப்பை க்ரிக்கெட் காலிறுதிக்கு வந்துவிட்டது. என்னமோ ஏதோ என்று விளையாடுகிறார்கள் என்று இந்திய அணியை விமர்சிக்கிறார்கள் சிலர். இருக்கலாம். ஆனாலும் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் முன்னூறுக்கு மேலெடுத்து, எதிரணியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்வார்களென்பதும் கற்பனை சுகம் மட்டும்தான்.

அஸ்வினை சரிவரப் பயன்படுத்தாமை, மிடில் ஆர்டர் சொதப்பல்கள் என்று தோனி கவனிக்க வேண்டியவற்றை கவனித்து அணியைச் செலுத்தினால் ஆஸியை ஜெயிக்கலாம். ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் வழிந்து, ஜெயிச்சா ஜெயிக்கட்டும்.. இல்லைன்னா விடுங்க என்றே பார்ப்பதாய்ப் படுகிறது. உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!

இந்த உலகக் கோப்பையில் உண்மையாகவே கவனிக்கப்பட வேண்டிய அணி - அயர்லார்ந்து! இங்கிலாந்தின் இமாலய ஸ்கோரை போகிற போக்கில் எடுத்து ஜெயித்ததும், கடைசி லீக் மேட்சில் நெதர்லாந்தின் 306ஐ துரத்தி எடுத்ததும் சாதாரண விஷயமில்லை. 2015ல் பத்து அணிகள்தான் என்பதால் அயர்லாந்து வருமா வராதா என்கிற ஐயமிருக்கிறது. வரவேண்டும்!

-------------------------


ரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞர் க்ரைண்டர் அல்லது மிக்ஸி என்றால் ஜெயலலிதா என்ன தருவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தொடர்ந்து தடையில்லா மின்சாரம் போன்ற சில காமெடி அறிவிப்புகள் இருந்தாலும், தேர்தல் அறிக்கையை மிகக் கவர்ச்சியாக அறிவிப்பதில் திமுக கவனமாகவே இருக்கிறது.

என்னுடைய ஏமாற்றம் குஷ்பூவுக்கு சீட் கொடுக்காதது. இதைத் தட்டிக் கேட்க ஒருவர் கூடவா இல்லை? என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்! ச்சே..

வைகோவுக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டியதில்லை. ஜெயிக்கிற குதிரைக்குத்தான் பணம் என்பதுபோல தேமுதிகவை அழைத்துப் பேசிய அம்ம்ம்ம்ம்மா, கூடவே ஐந்து வருடம் இருந்த வைகோவை நடத்திய விதம் கண்டிக்க வேண்டியது. நானெல்லாம் கண்டித்து ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப் போவதில்லை என்பது வேறுவிஷயம்! நண்பர் ஒருவர் கூறியதைப் போல ஜெ கூட்டணியில் வைகோ / நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்கள் யாருமே இல்லை என்பதே நிஜம்.

----------

முதல் பாராவில் கேட்டதற்கான பதில்: அவர்கள் ஊரில் டாஸ்மாக் இல்லாததால் ரொம்ப தூரம் போகிறார்களாம் கணவன்மார்கள். திரும்பி வருகையில் விபத்து நேர்கிறதாம். தொடர்ந்து பலரையும் இழந்திருக்கிறார்கள். ‘குடிக்கறத நிறுத்துங்கன்னா கேட்கப்போறதில்ல.. ஊருக்குள்ளாறயே ஒரு டாஸ்மாக் இருந்தா இங்கனயே குடிச்சுட்டு இங்கனயே கெடப்பாங்கள்ல’ என்று ஒரு தாய்க்குலம் மீடியா நீட்டிய மைக்கில் உச்சஸ்தாயியில் சொல்ல - வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். லேடரல் திங்கிங்!


-----------------

Thursday, March 3, 2011

அவியல் 03 மார்ச்.2011

னித வளத்துறையில் பணிபுரியும்நண்பர் பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நேர்முகத்தேர்வு செய்துகொண்டிருந்தார். வழக்கமாக, வேலைக்கு வருபவர்களின் ரெஸ்யூமைப் பார்த்து பலவித அட்வைஸ்களை அள்ளி வழங்கும் குணம் கொண்டவர் அவர். அன்றைக்கு சீக்கிரமே இண்டர்வ்யூவை முடித்துவிட நான் கேட்டேன்.. ‘நான் வந்துட்டேன்னு அவசர அவசரமா முடிச்சீங்களா?’

“ஐய.. இல்ல கிருஷ்ணா.. போன மாசம் ஒருத்தன் வந்தான். ரெண்டு ரெண்டு வருஷத்துக்கு ஒரு கம்பெனி மாறிட்டிருந்தான். நல்ல கேண்டிடேட். ஏழு வருஷத்துல நாலு கம்பெனியா-ன்னு அவனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணினேன். செலக்ட்டும் ஆய்ட்டான். அடுத்த நாள் வர்ல. ஃபோன் பண்ணிக் கேட்டா, ‘ஒரே கம்பெனில வேலை செய்யணும்ன்னு நீங்க அட்வைஸ் பண்ணினத ராத்திரி பூரா யோசிச்சேன் சார். ஐநூறு ஆயிரத்துக்காக அடிக்கடி கம்பெனி மாற்றது எவ்ளோ முட்டாள்தனம்ன்னு புரிஞ்சது சார்.. அதான் பழைய கம்பெனிக்கே போய் ரீ-ஜாய்ன் பண்ணிட்டேன்’ங்கறான். எங்க டைரக்டர் என்னைத் திட்டாத குறை. அதுலேர்ந்து அட்வைஸ் பண்றதைக் கொறச்சுட்டேன்” – என்றார்.

ஓவர் அட்வைஸ் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது!

---------------------

லகக் கோப்பை சூடுபிடித்திருக்கிறது. இருப்பினும் முந்தைய வருடங்களில் இருந்த பரபர சுவாரஸ்யம் குறைவு. அட்டவணையை வீட்டுச் சுவற்றில் ஒட்டி, யூகங்களோடு உண்மை ரிசல்ட்டை ஒப்பிடுவது, நகத்தைக் கடித்துக் கொண்டு எல்லா மேட்சையும் பார்ப்பது குறைந்துவிட்டது. ஆயினும் முக்கிய மேட்ச்களைத் தவற விடுவதில்லை.

இந்திய – இங்கிலாந்து மேட்ச் ஒரு த்ரில்லர். முடிவு எதிர்பாராதது. மேட்ச் நம் பக்கமும், அவர்கள் பக்கமும் சாய்ந்து சாய்ந்து கடைசியாக சமநிலையில் முடிந்தது. ‘எப்படிடா ட்ரா ஆச்சு?’ என்று கேட்ட நண்பனிடம் சொன்னேன்:

‘சச்சின் செஞ்சுரி போட்டா தோக்கும்ன்னு பேசுவாங்க. யுவராஜ் ஃபிஃப்டி போட்டா ஜெயிக்கும்ன்னு சொல்லுவாங்க. இந்த மேட்ச்ல ரெண்டுமே நடந்துச்சா.. அதான் இப்டி’

எனக்கு இரண்டிலுமே நம்பிக்கையில்லை!

நேற்றைய இங்கிலாந்து-அயர்லாந்து மேட்ச் சரவெடி. ஓ-ப்ரெய்ன் 50 பந்துகளில் சதமடித்து கதி கலங்க வைத்துவிட்டார். அயர்லாந்து நேற்று செய்த அதே வேலையைத் தான், ஞாயிறு நமக்கெதிராக இங்கிலாந்து செய்தது. ஆயினும் முக்கியக் கட்டத்தில் விக்கெட்டுகள் விழ, ஆட்டம் மாறுவதை உணர்ந்துகொண்டு அட்லீஸ்ட் ட்ராவேனும் செய்து காட்டிய தோனிக்கு சபாஷ்.

---------------------------

பெ
ரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் கணிப்பைக் கேட்டேன். தி.மு.க-வின் சாதனை என்னவென்று கேட்டேன்.

“மக்களின் சகிப்புத்தன்மையை அதிகரிச்சதுதான் அவங்க சாதனை” என்றார்.

நான்: ‘அப்டீன்னா?’

“ஒரு மணி நேரம் கரண்ட் கட்டா? மொதல்ல கொஞ்சம் எதிர்த்தாங்க. 2 மணி நேரமாச்சு. போங்கடான்னு சகிச்சுட்டாங்க. இப்ப 4 மணி நேரம், 5 மணி நேரம்கூட கரண்ட் கட். எவனும் கேட்கறதில்லை. தலையெழுத்துன்னு சகிச்சுட்டுப் போய்டறான். மொதல்ல எல்லாம் ஆந்திராவைப் பாரீர், கர்நாடகாவைப் பாரீர்ன்னு கலைஞர் அறிக்கை விடுவார். இப்ப எவனும் கேட்கறதுமில்ல. அவரும் கண்டுக்கறதில்லை. விலைவாசி எவ்ளோ எகிறினாலும், தன்னோட வாழ்க்கை ஸ்டைலை மாத்திக்கறானே ஒழிய எதிர்க்கறதில்ல. எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் சகிச்சுப் போகணும்கற மனநிலைக்கு தன்னை தயார்படுத்திகிட்டான் பார்த்தியா?”

நான் ஒன்றுமே பேசவில்லை.

-----------------------------

தி
ருச்சிக்கு பிரகாஷ்ராஜும், ராதாமோகனும் வந்திருக்கிறார்கள். ஹலோ எஃப் எம்மில் பணிபுரியும் நண்பர் ராஜா அவர்களை நிற்க வைத்து சுற்றிப் போடுவதுபோல செய்திருக்கிறார். ‘ஏன் செல்லம்?” என்று கேட்ட பிரகாஷ்ராஜிடம் ‘பரிசல்காரன்னு ஒருத்தர் பயணம் விமர்சனத்துல எழுதிருந்தாருங்க.. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து நிக்க வெச்சு சுத்திப்போடச் சொல்லி’ என்றாராம்.

நன்றி ராஜா.

-------------------

ழுதுவதைக் குறைத்துக் கொண்டு வாசிப்பை அதிகப்படுத்தியிருக்கிறேன். வேலைப்பளு, நேரமின்மை என்பது போன்ற டிஃபால்ட் காரணங்கள் ஒருபுறம்... மற்றொரு காரணம்: முன்பெல்லாம் நான் எழுதும் மளிகை லிஸ்ட் கூட எனக்கே அவ்வளவு பிடித்திருந்தது. உடனேயே அதற்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேல்ஸ்மேனிடமும், கேஷ் கவுண்டர் ஆசாமியிடமும் பின்னூட்டம் வாங்கும் ஆவலும் இருந்தது. இப்போதெல்லாம் என்ன எழுதினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. (உனக்குமா-ன்னு கேட்காதீங்க!) ஆக அவ்வப்போது எழுதினால் போதுமென்று முடிவு கட்டிவிட்டேன்.

கடந்த மாதம் படித்த புத்தகம்: மணல்கடிகை. எம். கோபாலகிருஷ்ணன். திருப்பூரில் சாதாரணச் சிறுவர்கள் ஐவரின் வாழ்வில் நடக்கும் சகல சம்பவங்களையும் அழகாகக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர். வெகுநாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படித்திருக்கிறேன். படிக்கும்போது நடந்த சுவாரஸ்ய விஷயம்: கதையில் சிலர் திருப்பூரிலிருந்து சிவன்மலைக்குச் செல்லும் கட்டம் வருகிறது. அந்த அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது நான் கம்பெனி காரில் சிவன்மலையிலிருந்து திருப்பூர் வந்துகொண்டிருந்தேன். அவர்கள் படியூரைத் தாண்டி வாகனத்தில் செல்லும் வரியை நான் படித்துக் கொண்டிருந்தபோது, நானும் அதே படியூரைத் தாண்டி வந்து கொண்டிருந்தேன்!

தற்போது இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டிருப்பது.. சுஜாதாவின் ‘பதவிக்காக’. படிக்க ஆரம்பித்த அன்று சுஜாதாவும், பா.ராகவனும் சேர்ந்து என் கனவில் வந்தார்கள். நானும் வெயிலானும் சாமிநாதனும் அன்னபூர்ணாவில் அவர்களோடு காஃபி சாப்பிட்டுக் கொண்டிருக்க, பா.ராகவன், சுஜாதாவிடம் ‘அங்க போய்ட்டு வந்துடலாமா?’ என்று கேட்கிறார். சுஜாதா என்னைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்து ‘வெய்ட் பண்ணுங்க.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவேன்’ என்றுவிட்டுச் சென்றார். இன்னமும் காத்திருக்கிறேன்.. கனவிலாவது வருவாரென.

இதில் என் மண்டையைக் குழப்புகிற விஷயம் என்னவென்றால், நான் பார்க்க வேண்டும் என்று துடித்த / நான் பார்த்தே இராத என் ஆதர்சமான சுஜாதா என்னை என்ன சொல்லி அழைத்தார் என்பதை எத்தனை முறை யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை. கிருஷ்ணா என்றாரா.. பரிசல் என்றாரா? அடுத்த முறை வரும்போது கேட்க வேண்டும்.


.

Thursday, February 17, 2011

அவியல் 16 ஃபிப்ரவரி 2011

யணம் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதெல்லாம் ஓகே. அதீத ஆர்வத்தால் படத்தில் என் மனதை நெருடிய ஒரு விஷயத்தை விமர்சனத்தில் குறிப்பிட மறந்துவிட்டேன்.

படத்தில் ஒரு கேரக்டர். மறைந்து டாய்லெட்டுக்குள் சென்று போதைப் பவுடர் நுகர்ந்து தனி உலகத்தில் திரிகிற ஒரு தாடிவாலா. இன்னொரு கேரக்டர். குமரவேல். கண்முன் நடக்கும் அநீதிகளை முடிந்தவரைத் தட்டிக் கேட்கிறான்.

ஒரு கதாபாத்திரங்களும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சுடப்படுகிறார்கள். போதைப் பவுடர் கேஸ், தப்பித்து ஓடும்போது தீவிரவாதியால் சுடப்படுகிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிழைத்துவிடுகிறான். கடைசி க்ளிப்பிங்கில் ஜன்னல் வெளிச்சம் முகத்தில் விழ சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் - அநீதிகளைத் தட்டிக் கேட்பவன், பொட்டெனச் சுடப்பட்டு சட்டென்று பரலோகம் போகிறான்.

இது என்ன நியாயம் ராதாமோகன்? எனக்குப் பிடிக்கவில்லை.

--------------------------

“டீமிற்கு பதினான்கு பேர் எடுத்தாகிவிட்டது. ஓர் ஆள் உன் சாய்ஸ்” -செலக்‌ஷன் கமிட்டியிலிருந்து தென்னாப்ரிக்காவில் இருக்கும் தோனிக்கு அழைப்பு போனது. தோனி உடனே சொன்ன பெயர்: ‘பீயுஷ் சாவ்லா’

‘அறிவே இல்லை. இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரையேனும் எடுத்திருக்கலாம். ஏற்கனவே ஹர்பஜன், அஷ்வின் என்று ஸ்பின்னர்கள். போதாக்குறைக்கு யுவராஜ், ரெய்னா, சேவக், சச்சின் என்று பார்ட் டைம் பவுலர்கள் வேறு இருக்கையில் – சாவ்லாவை ஏன் எடுத்தார் தோனி?’ என்று கண்டனக்குரல்கள்.

அப்போதெல்லாம் எந்த அறிக்கையும் விடவில்லை மனுஷன். ஆஸியுடனான வார்ம் அப் மேட்சில் பதில் சொல்லிவிட்டார் தோனி.

அதேபோல - தோனி தன் பழைய அதிரடி ஆட்டத்தை ஆடினால் நன்றாக இருக்கும் என்று ஏதோ ஒரு புண்ணியவான் திருவாய் மலர்ந்தார். இதோ - நேற்றைக்கு நடந்த நியூஸியுடனான மேட்சில் 62 பந்துகளில் செஞ்சுரி!

நீ கலக்கு ராசா! உனக்கு மச்சம் உச்சத்துல இருக்கு!

----------------------------------------

ரவு அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன். லேட்டாகிவிட்டிருந்தது. ஓர் இடத்தில், மூச்சு வாங்க ஒருத்தன் ஓடிச் சென்று கொண்டிருந்தான். என் பைக் அருகில் வந்ததும் லிஃப்ட் கேட்டான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, ஏதாவது டவுன் பஸ்ஸை பிடிக்கப் போகிறானோ என்று ஏற்றிக் கொண்டேன். ஐம்பதடி தூரம் போனதும் நிறுத்தச் சொன்னான். நிறுத்தியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவனிறங்கி ஓடியது - அருகிலிருந்த டாஸ்மாக்குக்கு. 10 மணிக்கு மூடிவிடுவார்களே!

டாஸ்மாக்கிற்கு அருகாமையில் வண்டி ஓட்டிச் செல்வது அவ்வளவு சவாலாக இருக்கிறது. குடிக்க வருபவர்கள் அவரச கதியில் வருகிறார்கள். குடித்து விட்டுச் சாலை தாண்டிச் செல்வபர்கள் எந்த அவசரமுமில்லாமல் ஜாலியாக தாண்டிச் சென்ற வண்ணமிருக்கிறார்கள்.

இந்த அவலங்களையெல்லாம் தாண்டி வந்து புலம்புவதற்குப் பதிலாக, நானும் வண்டி நிறுத்தி போய் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாமா என்று யோசித்ததுண்டு. வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது!

------------------------------------------

ரு ட்ரெய்னிங் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. மனிதவளத்துறையின் மகத்துவம், அதன் சவால்களை ஒருத்தர் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். சொன்னதையே நான்கைந்து முறை சொல்வது, சப்பையான உதாரணங்கள் என்று நடத்தியவர் எல்லார் காதுகளிலும், கழுத்துகளிலும் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தார். குறிப்பிடப்பட்ட நேரம் தாண்டியும் வகுப்பு போய்க் கொண்டிருந்தது. மொத்தம் 30 பேர் அமர்ந்திருந்தோம். மனிதவளத்துறையினர் தங்களிடம் வரும் குறைகளுக்கு உடனுடனேயே பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்றவர் தொடர்ந்து சொன்னார்.

‘ஒருத்தனை திருப்தியில்லாத இதயத்தோடு அனுப்பினீர்களானால் அவன் ஒரு நாளில் 27 திருப்தியில்லாத இதயங்களை உருவாக்குவான். இது உண்மை’ என்றார்.

எங்களில் ஒரு குரல் சொன்னது: “சார்.. இப்ப நீங்க சீக்கிரம் இந்த க்ளாஸை முடிக்கலைன்னா 30 திருப்தியில்லாத இதயங்களை ஒரே நாள்ல உருவாக்குவீங்க”

-----------------------

எஸ் எம் எஸ்:

பாருக்குச் சென்ற கொஞ்சம் கூச்சசுபாவியான அவன் ஒரு டேபிளில் அழகான இளம்பெண் அமர்ந்திருப்பதைக் காண்கிறான். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாய் அவளருகில் சென்று ‘இங்கே அமர்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லையே’ என்கிறான் தணிந்த குரலில். அவள் உரத்த குரலில் சொல்கிறாள்: “இன்றிரவை உன்னுடன் கழிக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று. சுற்றியிருப்பவர்கள் இவனை ஒரு மாதிரி பார்க்க - அதிர்ச்சியுடனும், தர்மசங்கடத்துடனும் வேறொரு டேபிளில் சென்றமர்கிறான்.

சிறிது நேரத்தில் அவனருகில் வந்த அந்த அழகி, மெதுவான குரலில் சொல்கிறாள்: ‘மன்னித்து விடு. நான் ஒரு சைக்காலஜி மாணவி. தர்மசங்கடமான சூழ்நிலைகளை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான்...’ என்று இழுக்க இவன் மிக உரத்த குரலில் கத்துகிறான்: “என்னது? மூவாயிரம் ரூவாயா..! ரொம்பவே அதிகம்!”

ஹும்! யாருகிட்ட!!

------------------

ந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் வந்தது. ஃபோனில் பெண் குரல்: ”சார் இம்மீடியட்டா நடேசன் தெரு, பத்தாம் நம்பர் வீட்டுக்கு வாங்க.. ஒரு பூனை என்னையே பார்த்துட்டிருக்கு”

“என்னம்மா பூனைக்கெல்லாம் பயந்துட்டு? நீங்க யார்.. உங்க பேரென்ன”

“என் பேரு பப்பி. நான் இந்த வீட்ல வளர்ற கிளி”

--------------------

ஒரு கவிதை:

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

-ஆத்மாநாம்

.

Sunday, January 23, 2011

அவியல் 24 ஜனவரி 2011

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பொருட்களைப் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருக்கும்போது, முன் சென்ற ஒரு குடும்பத்தில் நடந்தது:

“ஏங்க.... சாம்பார்த் தூள் ரெண்டு பாக்கெட் எடுத்து கூடைல போடுங்க”

கணவன் இரண்டு பாக்கெட் சாம்பார் தூளை எடுத்துப் போடுகிறார்.

“என்னங்க... ஒண்ணு ஆச்சி மசாலா, இன்னொண்ணு சக்தி மசாலா? ஒரே ப்ராண்ட் எடுங்களேன்..”

“ஆச்சி மசாலா வாங்கலைன்னா ஆச்சி கோச்சுப்பாங்கள்ல?”

“அப்ப சக்தி மசாலா?”

கணவன் வழிந்தபடி சொன்னார்: “ஹி..ஹி.. அது தமன்னாவுக்காக..”

------------------

ண்பன் கூப்பிட்டான்: “டேய்... சரக்கு வாங்கலாம்னு டாஸ்மாக் போனேண்டா.. சரியான கூட்டம்..”

“டாஸ்மாக்ல கூடறதுன்னா அது தப்பான கூட்டம்டா.. அதெப்படி சரியான கூட்டமாகும்?”

ஃபோன் என்பதால் அடிக்க வரவில்லை. இந்த சரியான என்பதை எங்கெங்கே பயன்படுத்துகிறோம் என்று யோசித்தேன். சரியான கோவம் வந்தது.

“அவளைப் பார்த்தன்னு வையி... சரியான ஃபிகர்டா!”

“மேனேஜர்கிட்ட சொன்னேன். கேட்கவே இல்ல. சரியான முசுடு அந்தாளு..”

“உன்கிட்ட போய்ச் சொன்னேன்பாரு.. சரியான ஆளுடா நீ!” - இதே வேறு அர்த்தத்தில்... “உன்கிட்ட சொன்னதுனால ஆச்சு.. நீதாண்டா சரியான ஆளு”

இதே போல சம்பந்தமே இல்லாமல் நடுவே சேர்த்திக் கொள்கிற இன்னொரு வார்த்தை - பயங்கரம்!

“ப்பா.. பயங்கரக் கூட்டம்டா பஸ் ஸ்டாண்ட்ல”

“நீ பயங்கரமான ஆளுடா..!”

“சாம்பார் பயங்கர காரமா இருந்துச்சு” இதே வேறு விதமாய்.. “சாம்பார் பயங்கர டேஸ்ட்மா!”

இப்படி வார்த்தைகளை சம்பந்தமில்லாம பயன்படுத்தற யோசிச்சா சரியான கோவம் வருகிறது என்றேனா.. இப்ப பயங்கரமா கோவம் வருது!

----------------------------------

கோ பாடல்கள். சிடி கவர் பின்னால் பாடல்கள் / பாடியவர் / எழுதியவர்களைக் குறிப்பிட்டிருக்கும் ஐடியாவுக்கு ஒரு பூச்செண்டு!

கார்க்கி சொல்லியிருக்கற மாதிரி யுவனை முந்துகிறார் ஹாரிஸ். ஒரு கன்ஸிஸ்டென்ஸி இருக்கிறது. எனக்கு அமளிதுமளி அவ்வளவு பிடித்தது. நடுநடுவே வரும் ‘யய் யவ்டதை யவ்டதை யய்யே’ சூப்பர்! (அதுக்கென்ன பேரு... கொன்னக்கோல்.. சரிதானே?)

அப்பறம் அகநக பாடலில் பெண்குரல் ராப்பும் கவர்கிறது! என்னமோ ஏதோ பாடல் - காதை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் ஹாரிஸ் பாட்டு என்று!

சரி.. ஒரு புகார்:

எங்கேயும் காதல், சிறுத்தை, ஆடுகளம்.. இப்ப இதுன்னு வர வர யாரும் லிரிக் புக் அட்டாச் பண்றதில்லை.. ஏற்கனவே ஒரிஜினல் சிடி வாங்கறவங்க கம்மி.. இப்படி பண்ணா சரியில்லை.. சொல்லீட்டேன் ஆமா..


----------------------------------------



நண்பர் பகிர்ந்துகொண்ட இந்தப் போஸ்டரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. +2, 10வது மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி என்று மாணவர்களிடையே அரசியலைக் கலக்குவது வருத்தத்துக்குரிய விஷயம்.

----------------------

லொ
ன்வபோ சொட்சொபி.

திட்டறேன்னு நெனைக்காதீங்க.. முடிஞ்சு போன சௌத் ஆஃப்ரிகா சீரிஸ்ல பிரகாசமான பௌலர். முதல் ஒன் டேல சச்சின் விக்கெட்டை எடுத்தவர்கிட்ட “சச்சின் விக்கெட்! எப்படி ஃபீல் பண்றீங்க?”ன்னு கேட்டிருக்காங்க. மனுஷன் வெவரம். “ஒண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணி பேசி அவர் கோவத்துக்கு ஆளாக விரும்பல”ன்னு சிரிச்சுட்டே சொன்னாராம். அப்பறம் ஒலங்காவுக்கு ஆன கதிதான்னு நெனைச்சிருப்பாரு!

ஓகே.. இன்னைக்கு மேட்ச்ல தோத்தாலும் நல்ல ரன்ரேட். அவங்க 46 ஓவர்ல 250. 5.43 RR. நாம 40.2 ஓவர்ல 234. RR - 5.80. என்ன விக்கெட் இல்லாமப் போச்சு, யூசுஃபோட ஃபார்ம் நல்ல விஷயம். பார்த்திவ், ரோகித்ன்னு இன்னைக்கு ஓபனிங் பண்ணவங்களுக்கு பதிலா உலகக் கோப்பைல காம்பீர், சேவக்ன்னு இறங்கும்போது பொறி பறக்காது? மிடில் ஆர்டர்ல ரெய்னாவோட அவுட் ஆஃப் ஃபார்ம்தான் கொஞ்சம் பயமுறுத்துது. டவுன் ஆர்டர்ல - லான்ஸ் க்ளூன்ஸ்னர் ஒருக்கா செஞ்ச மேஜிக்கை இந்த உலகக் கோப்பைல செய்ய யூசுஃப் பதான் இருக்காரு. போதாததுக்கு ஹர்பஜன் / ஜாகீர் நல்லா பார்ட்னர்ஷிப் தர்றாங்க.. அப்பறமென்ன?

Get Ready Folks!

---------------------------------

ன்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்துக்கு வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்ப்பார்க்கிறாய்

காதலையா?


-சுகிர்தராணி


.

Thursday, January 20, 2011

அவியல் 20 ஜனவரி 2011

பொங்கல் விடுமுறை முடிந்து நண்பர் பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார். டிக்கெட் எடுக்கும்போது, இவருக்கு முன் சீட்டில் தன் ஐந்து -ஆறு வயது மதிக்கத்தக்க மகனுடன் அமர்ந்திருந்த குடும்பத்தலைவர் இரண்டரை டிக்கெட் என்று கேட்டிருக்கிறார். கண்டக்டர் ‘மூணு டிக்கெட்டா எடுத்துட்டீங்கன்னா பையன் நல்லா உட்கார்ந்துட்டு வரலாம். அரை டிக்கெட் எடுத்தீங்கன்னா இன்னொருத்தரை உட்கார வைக்க வேண்டிவரும். இல்லீன்னா செக்கிங் இன்ஸ்பெக்டருக்கு நான் பதில் சொல்லணும்’ என்றிருக்கிறார்.

அவ்வளவுதான். பயங்கரமாகக் கத்த ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. ‘அத்தனை லட்சம் கொள்ளையடிக்கறாங்க... இந்த அரைடிக்கெட்லதான் நாட்டைக் காப்பாத்தப் போற நீ’ என்று ஒரே அர்ச்சனையாம். சகட்டு மேனிக்கு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து ‘அரை டிக்கெட்டு என்னாய்யா இந்தாளு கவுன்சிலர்லேர்ந்து ஒபாமா வரைக்கு எல்லாரையும் இழுக்கறாரு?’ என்று பிற பயணிகளும் சலசலக்க ஆரம்பிக்க அவர் மனைவி படாரென எழுந்து ‘இப்ப அவரு சொன்னமாதிரி டிக்கெட் எடுங்க.. இல்லைன்னா கம்னு உட்காருங்க.. என்னாத்துக்கு இந்த வாயி?” என்று கத்த பொட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டாராம் அந்தப் பயணி.

சம்சாரம் அது மின்சாரம்!

----------------------------------

துவும் பஸ்ஸில் (கூகுள் பஸ் அல்ல. பேருந்து!) நடந்த விஷயம்.

அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படத் தயாராக நிற்கிற பேருந்தில் ஏறுகிறார் அவர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றியில் பட்டை. ‘அன்பர்களே.. நான் சிங்காரச் சென்னையிலிருந்து பழனி செல்வதற்காக வந்திருக்கிறேன். அங்கங்கே உங்களைப் போன்றவர்கள் செய்யும் தானத்தைப் பெற்று முருகனை தரிசிக்கப் போகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. தானம் இடுபவர்கள் இடலாம்’ என்று கம்பீரமாக அறிவித்துவிட்டு ஒவ்வொருத்தர் அருகிலும் போய் நிற்கிறார். அருகில் நிற்கும்போதுதான் அவர் சுவாசத்தில் டாஸ்மாக் வாசனை ரொம்பவே ஓவராக இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஒருவரும் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. நடந்து நடந்து பின் படிக்கட்டுக்கு வந்தவர் சத்தமாகச் சொன்னாராம்:

“ஒருத்தரும் போடலியா? சரி.. சரி.. பார்த்துப் போங்க.. சபரிமலை ஞாபகமிருக்கில்ல? அந்த மாதிரி ஆகாம இருந்தாச் சரி”

அடப்பாவிகளா..!

-----------------------

ட்விட்டரில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது கீழே உள்ள புகைப்படம்:




(பெரிதாகப் பார்க்க: http://www.ibelieveinadv.com/commons/enjoy-the-wait.jpg)

காத்திருக்கும் நேரத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார்கள். பலே யோசனை இது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கீழிருந்து ஒரு கதை ஆரம்பித்து மேலே முடிவது போலிருக்கும் அந்த ஐந்தாவது யோசனை ஆஹா! எத்தனை இடைவெளிவிட்டு அழகாக நகரும் க்யூ!

இந்தியாவுலயும் ஆராச்சும் செய்ங்கப்பா இந்த மாதிரி யோசனையெல்லாம்!

-------------------------------------------

ரு டெக்னிகல் மேட்டர்: ட்விட்டரில் பலர் அடிக்கடி வந்து ‘இங்க்லீஷ்ல டைப்புங்க. நான் மொபைல்ல படிக்கறேன். தமிழ்ல அடிச்சா படிக்க முடியாது’ என்கிறார்கள். நீங்கள் ஓபரா மினியில் உலவுபவராக இருந்தால் தமிழில் படிக்க முடியும்..

ஓபரா மினி அட்ரஸ் பாரில் www எல்லாம் இல்லாமல் டைரக்டாக config: என்று டைப்பி ஓகே கொடுக்கவும். செட்டிங்ஸ் பகுதி வரும். அதில் கடைசியாக 'use bitmap fonts....' என்று முழ நீளத்துக்கு ஒரு கேள்வி இருக்கும். அது ‘NO’ என்றிருக்கும். அதை ‘YES’ என்று மாற்றுங்கள். இனி நீங்கள் உங்கள் வலை, ட்விட்டர், மின்னஞ்சல்களை தமிழிலேயே படிக்கலாம்!

------------------------------

மொபைல் நம்பரை மாற்றாமல் சர்வீஸ் ப்ரொவைடரை மாற்றும் வசதி இன்னும் கொஞ்சநாட்களில் வரவிருக்கிறது. 19 ரூபாய்க்கு ஓர் எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டால் நீங்கள் வேறு நெட்வொர்க்குக்குத் தாவலாமாம். ஆனால் முக்கிய விஷயம் பழைய நெட்வொர்க் கணக்கில் உங்களிடம் பாக்கி ஏதும் இருந்தால் அது புது நெட்வொர்க்கில் கணக்கில் வராது.

வரவர இந்த மொபைல் ஃபோன்காரர்கள் - சிம்கார்டு விற்பவர்கள் என்று இவர்களது வளர்ச்சி ஏகபோகமாய் ஏறிக்கொண்டிருக்கிறது. அன்றொருநாள் புதுப்பட இசைத்தட்டு ஒன்று வாங்க அலைந்து கொண்டிருந்தேன். அவிநாசியில். ஒரு சி.டி கடைகூட இல்லை. இருந்த ஒன்றிரண்டு கடைகளிலும் ஒரிஜினல் ஆடியோ சி.டி இல்லை. ‘அதெல்லாம் வருதா இப்ப?’ என்று ஒரு கடைக்காரர் கேட்டது அதிர்ச்சி!அதே நேரம் பத்து கடைகளுக்கு ஒரு கடை சிம்கார்டு, செல்ஃபோன் கடையாக இருந்தது.

என் நண்பர் ஒருவர் புத்தாண்டு அன்று way to smsலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘இன்று முதல் நான் அலைபேசி உபயோகிப்பதிலை என்று முடிவு செய்திருக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி இது:........................ நான் தங்களைத் தொடர்புகொண்டு ஏதேனும் சொல்ல விரும்பினால் way to sms இருந்து தொடர்பு கொள்கிறேன். நீங்கள் என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்பினால் ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள்’ என்று.

பொறாமையாக இருந்தது அவரெடுத்த முடிவு கண்டு!

-----------------------------------

மெக்கானிக் ஷாப் ஒன்றில் கண்ட வாசகம்:

மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.

----------------------


.

Monday, January 3, 2011

அவியல் 03.01.2011

கோவையில் டிச. 19 அன்று விஷணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அ.மாதவனுக்கு பரிசளித்த விழாவிற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே வெயிலான், கோபி ராமமூர்த்தி, நண்பர் சௌந்தருடன் சென்றேன். ஜெயமோகனும், மணிரத்னமும் ஒரு ஃப்ளாட்டில் இருக்க சுற்றிலும் வாசகர் கூட்டம். ராமசந்திர ஷர்மா எனும் இளைஞர் கர்நாடக சங்கீதத்தில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். அருகில் சென்றமர்ந்தோம்.

மணிரத்னத்தின் அருகில் அமர்ந்திருந்த நண்பர் சுரேஷிடம் சிலர் ‘நீங்களும் பாடுவீங்கள்ல.. பாடுங்களேன்’ என்று சொல்ல அவர் ‘ஐயையோ.. எனக்கு அவரை கர்நாடக சங்கீதமெல்லாம் பாட வராதுங்க.. சாதாரண சினிமாப்பாட்டுதான் தெரியும்’ என்று சொன்னார். உடனே நிஜமான ’திடுக்’கிடலோடு சிரித்துக் கொண்டே கேட்டார் மணிரத்னம். “என்னது? ‘சாதாரண’ சினிமாப்பாட்டா?’.

அறையிலிருந்தோர் சிரிப்பை நிறுத்த அரைநிமிடமானது.

அங்கே இருந்த இரண்டு மணி நேரத்தில் மணிரத்னம் இரண்டாவது முறை பேசியது நான் கேமராவின் லென்ஸை கழட்டாமல் ஃபோட்டோ எடுக்க முயல ‘லென்ஸ்’ என்று என்னைப் பார்த்துச் சொன்னது. யாரோ ‘ட்விட்டர் உங்களுக்காகத்தான் வந்திருக்கும் போல’ என்றபோதுகூட சிரிப்புதான். எல்லாரும் எழுதுவதும் சொல்வதும் நூறு சதம் நிஜம். அளவாகத்தான் பேசுகிறார். ஆனால் எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனிக்கிறார். ஜெயிக்க வேண்டுமென்றால் அவரை மாதிரி பேசாமல் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டதை, அடுத்த நாள் முதல் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் மாய்ந்து மாய்ந்து பேசியபடியே இருந்தேன்.

மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மொபைலில் அலுவலக நண்பனிடம் காண்பித்தேன். சிலிர்த்துப் போனவன், கொஞ்ச நேரத்தில் அருகில் வந்த மற்றொருவரிடம் சொன்னான். “ஹேய்.. இங்க பாரு.. நேத்து பாலசந்தரைப் போய்ப் பார்த்துட்டு வந்திருக்காரு..” நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

இதை இங்கு சொல்லக் காரணம் அவன் தந்தை பிரபல தியேட்டரொன்றில் ஆபரேட்டர் வேலையை மனமுவந்து செய்கிறவர்!

-----------------------------------------

ஜெ
னரல் மோட்டார் கம்பெனி, ஆசிய மார்க்கெட்டைக் கைப்பற்ற ஷாங்காயில் ஒரு ப்ரமோ-ஈவெண்ட் நடத்தியது. அதிகம் விற்பனையாகும் தன் கெடில்லாக் ப்ராண்ட் கார்களை வைத்து. V-Day என்றழைக்கப்பட்ட அந்த நாளின் நடந்த நிகழ்வின் வீடியோ பதிவு கீழே. தவறாமல் முழுமையாகப் பார்க்கவும். நான் மிக ரசிக்கும் வீடியோக்களில் ஒன்று..




என்ன.. பார்க்கும்போது ஒருமுறையேனும் இதயத்துடிப்பு அதிகரித்ததா இல்லையா? Great Na?

-------------------------------------------------

2011ல் என்ன சபதம் என்று ட்விட்டர்லும், சாட்டிலும் சில நண்பர்கள் கேட்கிறார்கள். சபதம் எடுப்பதில் அபத்தமே அதிகம் என்று நினைக்கும் கட்சி நான். எடுக்கும் சபதமெதுவும் பின்பற்ற முடிவதில்லை.

இந்த வருஷம் ஒரே விஷயம். வாங்கியவை, ஓசியில் வந்தவை என்று பல புத்தகங்கள் சேர்ந்து விட்டன. ஒரு மாதமாக எழுதாமல் இருந்த காலத்தில் மூன்று நான்கு புத்தகங்களைப் படிக்க முடிந்தது. இந்த வருட முற்பாதிக்குள் இப்போது வரை படிக்காமல் வைத்திருக்கும் சில புத்தகங்களை படித்து முடிக்கப் போகிறேன். அதற்குப் பிறகுதான் புதிய புத்தகங்கள் வாங்கப்போகிறேன்... ‘வாங்கினால் அடிவிழும்’ என்று மிரட்டல் வீட்டில். பார்ப்போம்! இது சபதமெல்லாம் இல்லை சாமி!

டிக்‌ஷ்னரி வாங்கி முப்பது வருஷத்துக்கு மேலாகிவிட்டது.. அதையெல்லாம் படிச்சியா என்ன என்று கேட்காதீர்கள். ஐ’ம் பாவம்!

--------------------------------------------------

பாருங்களேன்.. போன பாராவை எழுதி முடித்தது நேற்று. இன்று காலை புத்தக ஸ்டால் வைத்திருக்கும் நண்பரிடமிருந்து ஃபோன். ‘வாலி 1000 வந்துடுச்சு’ ரெண்டு தொகுதி 440/-. எனக்கு இத்தொகுப்பு வெளியாகிறது என்ற செய்தி கேட்ட நாளிலிருந்தே வாங்க ஆசை. பல பாடல்கள் வாலியா, கண்ணதாசனா என்று குழம்பிக் கொண்டிருப்பேன். போலவே, வைரமுத்துவும் ஆயிரம் பாட்டுக்களைத் தொகுத்துவிட்டார்.

சபதமாவது மண்ணாங்கட்டியாவது, வாங்கித்தான் ஆகவேண்டும். போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் புத்தகக் கண்காட்சி வருகிறது திருப்பூரில்! நம்மெல்லாம் என்னைக்குச் சொல்பேச்சு கேட்டிருக்கோம்.. ஹூம்!

---------------------

Twitter Updates:

ன்னைப் பின் தொடரும் 2322 (Twitterல் 1058, Blogல் 882, BUZZல் 382) பேருக்கும் (கட்சி ஆரம்பிச்சுடலாம் போலிருக்கே) புத்தாண்டு வாழ்த்துகள்!

மொத்த க்ரிக்கெட் ராமாயணத்தில் ராமர் சச்சின்தான். ஆனால் டெஸ்ட்டில் மட்டும் லட்சுமணன்தான் ராமர்!


லாண்ட்க்ரூஸரில் ஒருத்தர். அருகில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு ஒரு மினிடோர். எது விலையுயர்ந்த வண்டி என்பதில் குழப்பமேற்படுகிறது எனக்கு.


பாஸுடன் டின்னர் சாப்பிடுகையில், ஆனியன் ரோஸ்ட் ஆர்டர் செய்ய பயமாயிருக்கிறது. ரொம்பப் பணக்காரன் என்று நினைத்துவிடுவாரோ என்று..

காதலிக்கும்போதும் தூக்கம் வருவதில்லை. கல்யாணம் ஆனபிறகும் தூக்கம் வருவதில்லை. ஆனால் இரண்டுக்குமான காரணங்கள்தான் வேறு வேறு..

நாளை கார்த்திகையாம். தீபமேற்றமேண்டுமாம். கண் சிமிட்டாமல் இருக்கச் சொல்ல வேண்டும் தோழியை.

த்தன் டாடா DOn't COme for MOre-ன்னு ராசாகிட்ட சொன்னதுதான் DO CO MO -வோ?


வேலை தேடும் இளைஞர்களை சி.பி.ஐ-க்கு சேர்த்து விடுங்கள். அவ்வளவு ஆட்கள் தேவைப்படுமளவு ஊழல்கள் பெருகிவிட்டன. (அதுக்கும் லஞ்சம் கேட்பாங்களோ?)


நூல் விலையுயர்வைக் கண்டித்து நாளை உண்ணாவிரதம். நானும் கலந்து கொள்ளப்போகிறேன் என்றேன் ‘ லஞ்ச் என்ன செய்ய?’ என்கிறாள் மனைவி.

--------

Tuesday, September 28, 2010

28 செப்டம்பர் 2010



நிறுவனத்தின் வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை ட்ராஃபிக் போலீஸ் பிடித்து ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அவரும் காண்பித்திருக்கிறார். காண்பிக்கும்போது ‘டைமாச்சு சார்.. கொஞ்சம் டெலிவரி அர்ஜெண்ட்’ என்று ஏதோ பேசியிருப்பார் போல. சார்ஜெண்டுக்குக் கோவம் வந்து ‘உன் மேல கேஸ் போடாம விடக்கூடாதுய்யா' என்று வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்து எதையெதையோ குறிப்பெடுத்துக் கொண்டாராம். ட்ரைவர் மறுபடியும் ‘என்னத்தை சார் தேடறீங்க.. எல்லாம் கரெக்டாதானே இருக்கு’ என்று கேட்கவும் ‘எங்க கரெக்டா இருக்கு? நீ ஷேவிங் பண்ணாம வந்திருக்கியே’ என்று சொன்னாராம். கடைசியில் விளக்கு முகப்பில் கறுப்பு ஸ்டிக்கர் இல்லாததற்கு ஃபைன் கட்டச் சொன்னாராம்.

அலுவலகத்தில் இதுபற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்கையில், காவலர் செய்தது சரிதான் என்றும்... வாகனம் ஓட்டுகையில் ட்ரைவர் முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்டம் சொல்கிறது என்றும் சொன்னார் சக நண்பர் ஒருவர். அப்படியா? யாருக்காவது இதுபற்றித் தெரியுமா?

*** *** *** *** ***

வி


ஒரு நண்பர்.. ஒரு வாக்கியத்தில் இரண்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது எண்ணினேன்.. பதினைந்து நிமிடப் பேச்சில் பதினெட்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ வந்துபோனது. ‘அதை மட்டும் சொல்றதை நிறுத்தினீங்கன்னா உங்க எனர்ஜி நிறைய சேவ் ஆகும் சார்’ என்று அவரிடமே கூறினேன்.

‘கரெக்ட்தான் கிருஷ்ணா.. ஆனா அது.. வந்து பாத்தீங்கன்னா.. அப்படி சட்னு ஆகறதில்லை. ஏன்னு.. வந்து பாத்தீங்கன்னா.. எனக்கே தெரியாம அது வருது.. வீட்ல.. வந்து பாத்தீங்கன்னா.. அவங்களும் இதைச் சொல்லுவாங்க.. ஆனா.. வந்து பாத்தீங்கன்னா..’

‘கொஞ்சம் வேலையிருக்கு சார். இப்ப வந்துடறேன்’ என்று வந்துவிட்டேன். பிறகு வந்து பார்க்கவேயில்லை அவரை!

நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை ‘சரியா’ அல்லது ‘புரிஞ்சுதா’. என் நண்பன் ஒருவர் ‘பக்கா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். இன்னொருவர்.. ‘சான்ஸே இல்ல’. அதிகம் பேர் இந்த சான்ஸே இல்லையைத்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். சகா கார்க்கி இந்த சான்ஸே இல்லையை அழகாக ‘வாய்ப்பே இல்ல சகா’ என்பான்.

நீங்க எந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

*** *** ** *** *** ***



ரசித்த எஸ்ஸெம்மெஸ்:

‘நேத்து ஒரு பொண்ணை ரேப்லேர்ந்து காப்பாத்தீட்டேண்டா..’

‘வெரிகுட்ரா! எப்படி?’

‘செல்ஃப் கண்ட்ரோல் மச்சி.. செல்ஃப் கண்ட்ரோல்!’



ரசித்த கேள்வி பதில்:

‘சூர்யா – கார்த்தி இருவருக்குமான போட்டியில் ஜெயிப்பது யார்?’

‘சிவகுமார்’

(தினகரன் – நாட்டாமை பதில்கள்)

ரசித்த பதிவு:


ரமேஷ் வைத்யாவின் ‘ஐயடிகள் காடவர்கோன் தொடர்கதை’


ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:


‘இறகைப் போலே அலைகிறேனே’ – நான் மகான் அல்ல


ரசிக்கும் விஷயம்:

எங்கள் சவால் சிறுகதைப் போட்டிக்கு நண்பர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவர்களின் வித விதமான வித்தியாசமான கதைகளும்!


ல்


ட்விட்டர் அப்டேட்ஸ்:

# கிருஷ்ணஜெயந்திக்கு அவரை வீட்டுக்கு அழைக்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அவரை கடலில் போடுகிறார்கள். பாச்சுலர்ஸை யாருமே மதிக்கறதில்லைப்பா!

# பொண்ணுக்கு 25க்கு மேல இருந்தா கல்யாணம் என்றார். வயசு ஜாஸ்தியா இருக்கே என்றேன். நான் சொன்னது சம்பளம் என்கிறார். #பேராசை

# செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது. ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.

# ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்

# திருமணநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பர் சொன்னார்: ‘உனக்கு வாழ்த்துக்கள்.. சிஸ்டருக்கு ஆறுதல்கள்’ #தெளிவாத்தான் யோசிக்கறாங்கப்பா..!

# அசின் நீச்சலுடையில் நடிக்கிறார் என்று நினைத்து விட்டேன். ‘அரசின் சிக்கன நடவடிக்கை’ என்பதை ”அசின்” சிக்கன நடவடிக்கை என்று படித்து...

# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!

# ராஜபக்‌ஷே அத்தனை குண்டு வீசி அத்தனை பேரோட ஆயுளைக் குறைச்சப்ப வராத கோவம் ரந்தீவ் ஒரு நோபால் வீசி ஒரு செஞ்சுரியைக் குறைச்சதுக்கு வருது!


***************************************************

வேண்டுகோள்:

கேபிள் சங்கரின் இந்தப் பதிவில் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் விஷயத்திற்கு உதவப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றி!


.

Thursday, September 16, 2010

அவியல் 16.09.2010


ந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பான அன்று க்ரேசி கிரி அழைத்துக் கேட்டான்: ‘ஏண்ணா.. இந்தப் படத்துக்குப் போஸ்டர் ஒட்டறதையும் விழாவா எடுத்து அதையும் ஒளிபரப்புவாங்களா?’

நான் சொன்னேன்: ‘அதையும் அதற்குப் பிறகுபோஸ்டர் ஒட்டும் விழா உருவான விதத்தையும் ஒளிபரப்புவார்கள்.

ஆனால் ட்ரெய்லர் மிரட்டுகிறது. நிச்சயமாக ஹாலிவுட் படங்களில் கண்ட அளவுக்கு க்ராஃபிக்ஸ் கலக்கல்.

விழாவில் வைரமுத்து சொன்ன ரஜினி-அபிதாப்-ஒபாமா-போப்பாண்டவர் கதை கேட்டீர்கள்தானே? கேட்டிருப்பீர்கள்.. அதனால் இங்கு வேறு ஒரு கதை சொல்கிறேன். எழுத்தாளர் சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது:

ஒரு பணக்காரன், ஒரு கவிஞனிடம்என்னைப் புகழ்ந்து பாடுஎன்றானாம். கவிஞன்சும்மா பாடச் சொன்னால் எப்படி?’ என்று கேட்க பணக்காரனும்சரி என் சொத்தில் 20 சதவிகிதம் உனக்கு.. இப்போது பாடுஎன்றானாம். கவிஞன் மறுத்துச் சொன்னானாம். ‘இப்படிக் கிள்ளிக் குடுக்கும் உன்னை வள்ளல் என்றெப்படிப் பாட?’

பணக்காரன் விடவில்லை: ‘சரி.. என் சொத்தில் பாதி உனக்கு.. எங்கே பாடுஇப்போது கவிஞன்இப்போது நீயும் நானும் சரி நிகர் சமானமாகிவிட்டோம். எதற்குப் பாட வேண்டும்?’ என்றானாம் இறுமாப்போடு. பணக்காரன் உடனே.. ‘சரி என் சொத்து முழுவதையும் தருகிறேன்.. என்னைப் புகழ்ந்து பாடுஎன்றான்.

கவிஞன் சொன்னானாம்:

அப்படியானால் இப்போது நீயல்லவா என்னைப் பாடவேண்டும்?”

** ** ** ** ** **

மஹா RX100 வைத்திருக்கும் நண்பரை ஞாயிறன்று சந்தித்தேன். பளபளவென்றிருந்தது வண்டி. ‘போனவாரம்தான் 28000 ரூவா செலவு பண்ணினேன்என்றார் மிக சந்தோஷமாய். நானெல்லாம் டூ வீலர் கற்றுக் கொண்டது யமஹாவில்தான். வாங்கினால் இதைத்தான் வாங்க வேண்டும் என்று நினைத்தது ஒரு காலம்.

யமஹாவின் சைலன்சரிடமிருந்து வரும் சத்தத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் (லோயர் எண்ட் டூவீலர்களில் சொல்கிறேன்.. புல்லட் போன்றவை அடுத்தபட்சம்) இருசக்கர வாகனம் வைத்திருப்போரில் யமஹா RX100 சொந்தக்காரர்களைப் போல பெருமைப் பட்டுக் கொள்பவர்கள் யாருமில்லை. அதனை பார்த்துப் பார்த்து பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.

** ** ** ** ** ** **

ற்பல வருடங்களுக்கு முன்... உடுமலையில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருந்தேன். டிக்கெட் எடுத்தது போக, பாக்கெட்டில் கொஞ்சம்தான் காசு இருந்தது. அது கோவையிலிருந்து மதுரை செல்லும் பேருந்து. ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்கிறது. பக்கத்தில் ஒரு டீக் கடையில் ஏசுதாஸின் குரல். கேட்டதுமே இறங்கி நின்றுவிட்டேன்.

‘பிறக்கும்போதும் பேரில்லை..
இறக்கும்போதும் பேரில்லை..
இடையில்தானே குழப்பங்கள்..
வாழ்க்கையோடு வழக்குகள்..

சோகமென்ன தோழனே..
சூழ்ச்சி வெல்வாய் வீரனே..
எதிர்த்து நின்று போரிடு..
இன்று ஓய்வெடு...’

வரிகளை நினைவிலிருந்துதான் எழுதுகிறேன். என்னவோ செய்தது அந்தப் பாடல். என் கண்முன்னே நான் போக வேண்டிய பேருந்து போவதைக் கண்டும் என்னால் நகர முடியவில்லை. அங்கேயே நின்று முழுப்பாடலையும் கேட்கிறேன். முடிந்தபிறகும் அந்தப் பாடலுக்காக பேருந்தை விட்டதைப் பெருமையாக அந்த டீக்கடைக்காரரிடம் சொல்லி ‘இன்னொரு வாட்டி போடுங்க அந்தப் பாட்டை’ என்று கேட்கிறேன். அவரும் சம்மதித்து போடுகிறார்..


‘என்ன தேசமோ.. இது என்ன தேசமோ..’

இதேபோலத்தான். உடுமலையிலிருந்து பேருந்து ஏறுகிறேன். கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும் நான். பேருந்து ஏறிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பாடல் ஒலிபரப்பாகிறது. இளையராஜா என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன படம் என்று தெரியவில்லை. கேட்டேன். சந்திரலேகா என்றார்கள். முதல் பாட்டு முடிந்து இரண்டாம் பாட்டு ஆரம்பிக்கிறது. ‘அரும்பும் தளிரே.. தளிர்தூங்கிடும்..’ அருண்மொழி குரல். பாடல் பாதிதான் முடிந்திருக்கும். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது.

ஆனால் நான் இறங்கவில்லை. அந்தப் பாடல் முழுவதையும் கேட்க ஆவலாயிருந்தேன். அதனால் அந்த நிறுத்தத்தில் இறங்காமல், மறுபடி டிக்கெட் வாங்கி தேவையில்லாமல் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி இறங்கினேன்.

அதேபோல பலவித மனக்கவலைகளோடு பயணம் செய்துகொண்டிருந்த என்னை ’புன்னைவனத்துக் குயிலே..’ பாடல் ஆற்றியிருக்கிறது. இவையெல்லாம் சிற்சில உதாரணங்கள்தான். இப்படி எத்தனையெத்தனையோ...

இதெல்லாம் நினைவுக்கு வரக்காரணம் -

பின்னணி இசைக்கான தேசிய விருது பழசிராஜா படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பிரிவு இந்த வருடம்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் விருது ராஜாவுக்குதான்.

நேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நீ ராஜா!

** ** ** ** ** ** ** ** ** ** * ** **

நிஜம், யூகம் - இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டியது மிக அவசியம்.

கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்:

சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான். செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர். உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.

** ** ** ** ** ** ** ** **



.