Monday, January 26, 2015

அவியல் 26 ஜனவரி 2015

ந்தக் குடியரசு தினம் வந்தாலும், போய் நெட்டில் இரண்டு விஷயங்களைத் தேடுவோம்.

1. இது எத்தனையாவது குடியரசு தினம்?
2. சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

இதை இரண்டையும் தெரிந்து கொண்டு கொஞ்சம் மானே தேனே போட்டு குடியரசு தினத்தைக் கொண்டாடிவிட்டு வந்தாச்சு.


 ‘டேஏஏஏஏஏஏஏஏய்.... ஒரு இந்தியன் இப்டி எப்டிச் சொல்லப் போச்சு?’ என்று குத்தவராதீர்கள். இந்தியன் என்றால் உண்மையைச் சொல்லலாம் இல்லையா?

____________________

தொட்டால் தொடரும்
............................................

ண்பர் கேபிள் சங்கர் டைரக்‌ஷன், வசனம், இன்னொரு நண்பன் கார்க்கி இயக்கம் - வசனத்தில் உதவி என்று வந்திருக்கும் படம்.

நல்ல கதை. நல்ல வசனம், மோசமான திரைக்கதை, படு கடுப்பேற்றும் பின்னணி இசை. ஹீரோயின், வேறொரு ஃபோட்டோவை எடுத்து தன் ஃபோட்டோவை வைக்கும் இடத்தில் படம் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த விறுவிறுப்பை கொண்டு போனபடியே மற்றவற்றை ஃப்ளேஷ்பேக்கில் காட்டியிருக்கலாம். பாலாஜியின் நடிப்பும் வசனங்களும் நன்று. தமன் / அருந்ததி நடிப்பும் நிறைவு. 

பழம் தின்று கொட்டை போட்ட சிலர் எடுக்கும் படங்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது சீனிலேயே கொட்டாவி வர வைக்கிற சமயத்தில் முதல் படமாக இது பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம் கேபிள்!

-------------------------------


டனடி கருத்து சொல்கிற வியாதி ஒன்று படுமோசமாக பரவி வருகிறது. எல்லாவற்றிற்கும் உடனடி கருத்து. செய்திகளை முந்தித் தருவதாய் எண்ணி கே.பாலச்சந்தர் இறப்பதற்கு முன்னரே RIP போட ஆரம்பித்துவிட்டார்கள் வாட்ஸப்பில். ரஜினிகாந்துக்கு இவர்களே பத்மபூஷன் குடுத்துவிட்டார்கள். இப்படி நிறைய. 

ஒரு 99 நாள் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் க்ரூப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

அதுவரை இங்கே மட்டும் எழுதுவதாய் உத்தேசம். பார்க்கலாம்.

.  

No comments: