Saturday, August 30, 2008

ஏதாவது செய்வோம் பாஸ்!


இதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. பதிவர் நர்சிம்மை எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது ஜூ.வி என் பதிவை வெளியிட்டபோது அவர் ஒரு பதிவு போட்டபோதுதான்! “ஏண்டா... ஒருத்தர் உன்னைப் பற்றி எழுதினால்தான் கவனிப்பாயா” என்று கேட்டால் தலைகுனிவதைத் தவிர வேறு பதிலில்லை!

இன்றைக்கு அவர் ஒரு பதிவைப் போட்டு “போட்டிக்கு வாடா ராசா” என்று அழைத்திருக்கிறார். பெரும் பதிவர்களோடு என்னையும் அவர் அழைத்திருப்பது மகிழ்ச்சி.

அதற்கு ‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்று பதில் பதிவு போட்டுவிட்டார் தோழர் லக்கிலுக். என் கருத்துக்களைச் சொல்வதில் இப்போது கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கிறது. ஏனென்று சொல்லிவிடுகிறேன்.

நான் வலைப்பூவை ஆரம்பித்தபோது எழுத வேண்டும் என்று நினைத்த பல விஷயங்களை நான் எழுதவே இல்லை. தனிமனிதத் தாக்குதலுக்குப் பயந்துதான்! சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதுதான் உண்மை!

அலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இங்கேயும் யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ளத் தயக்கம்!

அதையும் மீறி எழுதுடா என்றழைத்த நர்சிம் அவர்களுக்காக (பெரிய பதவில இருக்காருன்னு பயமுறுத்தீருக்காரு லக்கிலுக்!) என் சில சிந்தனைகள்...

தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் தனிமனித ஒழுக்கம் என்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?

ஹெல்மெட் கட்டாயம் என்று சட்டம் போட்டால், அதை எதிர்த்து அரசையே குழப்பி, எப்படியோ சாவுங்கடா என்று அரசே கண்டுகொள்ளாத அளவிற்கு அதைப் பின்பற்றுவதில் சுணக்கம் காட்டினார்கள் மக்கள்.

பொது இடங்களில் புகைக்காதே என்றால் அந்த சட்டம் எழுதப்பட்ட ஜி.ஓ-வையே எரித்து புகைபிடித்து, அதைக் கொண்டுவந்தவர் முகத்திலேயே ஊதவும் தயங்காத மக்கள்.

போதை வஸ்துக்களுக்குத் தடை என்றால் எந்த பயமுமின்றி பான்பராக், கணேஷ், ஹான்ஸ் என்று எல்லாக் கடைகளிலும் விற்பதும் மக்கள். வாங்குவதும் மக்கள்.

ரோட்டில் குப்பை போடுவதோ, எச்சில் துப்புவதோ நம்மவர்களை ஜெயிக்க வேறு யாருமில்லை! அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று! இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை! இது தவறில்லை என்று விகடன் போன்ற பெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா? (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான்!)

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, திருட்டு டி.வி.டி. பார்ப்பது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது, டிராஃபிக் ரூல்ஸை மீறுவது, பிளாஸ்டிக் உபயோகம் என்று இது ஒரு எல்லையில்லாப் பட்டியல்.

நான் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை இது. டிராஃபிக் சிக்னலின் போது பச்சை விளக்கு எரிந்தால்தான் நான் பைக்கை எடுப்பது வழக்கம். ஆனால் எப்போதுமே பின்னாலிருப்பவர்களிடம் நான் திட்டுவாங்கிக் கொள்வது வாடிக்கை. அவர்களுக்கு சிக்னல் மீட்டர் 4ஐக் காட்டும்போதே பறந்துவிட வேண்டும்! நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு! மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம்! ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு? நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல?’ என்று லொள்ளுபேசுவேன் நான்!

நான் இதையெல்லாம் செய்யாத ஒழுக்கசீலன் என்று சொல்லவரவில்லை. பிளாஸ்டிக் உபயோகம், திருட்டு டி.வி.டி.யைத் தவிர மற்றவை என் லிஸ்டில் இல்லை. ஒருவேளை அதுவும் நாளை வரக்கூடுமோ என்கிற பயமும் இருக்கிறது. காரணம் திருட்டு டி.வி.டியையும் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தேன். இப்போது மாறிவிட்டேன்:-(

என் முதலாளி நாங்களிருக்கும் பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கோடு, அவ்விஷயங்களில் ஆர்வமான ஒரு பொதுவான NGO வை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்கள் இருவரும் கிராம பஞ்சாயத்து ப்ரசிடெண்ட்டைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதாய் சொன்னாலும்கூட அதை உபயோகிக்க அந்த கிராம மக்கள் ‘பழகவில்லை’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ச்சியாய் இருந்தது. அப்போதுதான் என்னோடு வந்த நண்பர் சொன்னார்... தமிழகத்தில் கழிப்பறை உபயோகிப்பவர்கள் சதவீதம் வெறும் 35-40%தானாம்! சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம்! கேவலமாக இருந்தது அவர் சொன்னதைக் கேட்டு!

அதேபோல அந்தப் பஞ்சாயத்தில் 32 கிராமங்கள். 32 கிராமங்களுக்கு ஐந்து குப்பை வண்டியாம். எல்லா குப்பைகளையும் எடுத்துவந்து அதற்கான குப்பைக் கிடங்கில் கொட்ட அரசாங்கம் நியமித்துள்ள நபர் - (நம்புங்கள்) ஒரே ஒருவர்தான்!

‘மக்கள் ஒழுங்காக குறிப்பிட்டிருக்கும் இடங்களில் குப்பை கொட்டினால் அவருக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஆனா அப்படிப் பண்றதில்லையே சார்’ என்று ஆதங்கப்பட்டார் அவர்!

பலப் பொழுதும் இந்த தனிமனித ஒழுக்கத்தால் நானும், நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மாறியிருக்கிறோமா? பஸ்ஸில் நாம் இறங்கும்போது முண்டியடித்து ஏறும் கூட்டத்தைப் பார்த்து திட்டிவிட்டு, அடுத்த பஸ்சுக்குள் நாமும் அதே பாணியில் இறங்குபவர்களை முட்டித்தள்ளி, முண்டியடித்து ஏறாமலா இருக்கிறோம்?

எனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.
இது நிச்சயம்!


கண்டிப்பா... ஏதாவது செய்வோம் பாஸ்!

Friday, August 29, 2008

எழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க!

“நல்ல பதிவர் தான். என்ன பதிவுகள் கொஞ்சம் அதிகம்..” நீங்கள் வலைப்பூ திறக்கும்போது பதிவுலகத்தில் விசாரிக்கும்போது இதுபோல எந்தப் பதிவரைப் பற்றியாவது சொல்லியிருப்பார்கள். வலைப்பூ இருப்பது பெரிய குற்றமில்லை தான். அப்படியென்றால் அதிக பதிவெழுதுவது மட்டும் அவ்வளவு பெரிய குற்றமா என்ன?

தமிழ்மணத்தில் எழுதிய லக்கிலுக்குக்கு வாயே இல்லாமல் தானிருந்தது. தமிழ்மணம் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்த பதிவர் தெய்வமாக லக்கிலுக் வாழ்ந்து வந்தார். பலரது தலைப்பை மட்டுறுத்திய தமிழ்மணத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. . கடைசி வரைக்கும் லக்கிலுக் அப்படியே இருந்திருந்தால் அவரை இன்று பதிவர் தலைவனாக கொண்டாடியிருப்போமா என்ன?

காட்டமாக “தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்” என்று எழுதியதால் தானே தமிழ்மணத்துக்கு நீதி வழுவியது புரிந்தது? லக்கிக்கும், அவரது ஜட்டிக்கும் (தலைப்புங்க...) தமிழ்மணத்தில் இடம் கிடைத்தது? இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை எழுதியே தீரவேண்டும். எழுதாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். தேவையற்றதை எழுதுபவர்களும் படுதோல்வி அடைகிறார்கள்.

எழுதாவிட்டாலும் தோல்வி, அதிகமாக எழுதினாலும் தோல்வி! என்னதான் செய்வது என்கிறீர்களா? எழுதுங்கள், இதைப்பற்றி நாலு பதிவு எழுதுங்கள். நாலு பேர் பின்னூட்டத்தை கண்கொடுத்துப் பாருங்கள். எழுதுவதற்கு தான் கையும், படிப்பதற்கு தான் கண்ணும் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதை எங்கே எழுதவேண்டும்? எப்படி எழுத வேண்டும்? ஏன் எழுதவேண்டும்? என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். மகிழ்ச்சி, வெற்றி, குதூகலம், அன்பு, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாமே உங்களை தேடிவரும். நீங்கள் தேடி அலையவேண்டியதில்லை.


எழுதுவது தான் பல பேருக்கே தொழில் தெரியுமா?

வாத்தியார் சுப்பையா எழுதாவிட்டால் பல்சுவையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாம். டாக்டர் புரூனோ எழுதாவிட்டால் அவரது வாசகர்கள் கதி அதோகதிதான். லக்கிலுக் எழுதாவிட்டால் யார் தலைவனாக இருப்பது? கோவி.கண்ணன் எதிவினைப் பதிவுபோடாமல், பதிவர் சந்திப்பு நடத்தாமல் காலத்தைக் கடத்தினால் உங்கள் மண்டை வெடித்துவிடும். அதிஷா, ச்சின்னப்பையன், ஆயில்யன், மங்களூர் சிவா, நாமக்கல் சிபி, வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, வால்பையன், முத்துலெட்சுமி கயல்விழி, தாமிரா, வடகரை வேலன், மைஃப்ரெண்ட் இவர்கள் எழுதுவதை நீங்களோ, நீங்கள் எழுதுவதை அவர்களோ படிக்காமல் ஏதாவது ஆக வாய்ப்பிருக்கிறதா? அதுவும் குசும்பன் கமெண்ட் பதிவு போடாவிட்டால் வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்குநூறாக வெடித்து விடுமே? அதுபோல அவரது வாசகர்களுக்கு தலை வெடித்துவிடுமாம் தெரியுமா?

முன்பெல்லாம் மளிகை லிஸ்ட், காய்கறி லிஸ்ட் என்று எழுதுவார்களாம் இல்லத்தரசிகள், இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு சமையல் குறிப்புகளை எழுதிக் கொண்டே போகிறார்கள்!

வலைப்பூ வந்தாலும் வந்தது. எல்லோரும், எப்போதும், எதையாவது எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். நின்றால் பதிவு, நடந்தால் பதிவு, படுத்தால் பதிவு. நாமெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதால் தான் பல திரட்டிகள் பதிவுகளாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், சேதுசமுத்திர திட்டம் என்று எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் அரசியல் கட்சிகள் நாடுதழுவிய பந்த் நடத்துகிறார்கள். ஒரே ஒருநாள் யாரும் எந்தப் பதிவும் எழுதமாட்டோம் என்று பதிவர்களாக சேர்ந்து பந்த் நடத்தினால் என்னவாகும்? கட்சிகள் நடத்தும் நாடுதழுவிய பந்தை விட கூடுதல் கவன ஈர்ப்பை பெறும் அல்லவா?


பதிவு என்றாலே நம்ம ஆட்களுக்கு பொண்டாட்டி தான் நினைவுக்கு வருகிறார்கள். பொண்டாட்டிகள் ஒரு கருத்து வங்கி. எதைப் பற்றி பேசினாலும் நாலு, ஐந்து பக்கத்துக்கு கருத்து சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்று தோன்றும். ஆனாலும் தெரியாத விஷயத்தையும், தெரிந்தது போல பேசுவதுதான் பொண்டாட்டிகள் வேலை. காலையில் அலுவலக நேரத்தில் பார்க்கலாம், பைக் பில்லியன்களில் உட்கார்ந்துகொண்டே பேசிக்கொண்டே இருப்பார்கள். மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது. லக்கிலுக்கின் நண்பர் ஒருவரின் மனைவி இதுபோல ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கை. அப்படி என்னதான்யா உன் பொண்டாட்டி உங்கிட்டே ஓயாம பேசுது என்று ஒருநாள் அவர் கேட்டார். அவ என்ன பேசுறான்னு எனக்கெப்படி தெரியும்? ஹெல்மெட்டுக்குள்ள நைசா ஹியர் போனை மாட்டிட்டு நான் எஃப்.எம்.முல்லே கேட்டுக்கிட்டிருக்கேன் என்று பதிலளித்தார். அதையும் தன் பதிவில் எழுதிவிட்டார் லக்கி! இப்படி நண்பர்கள் பேசுவதும், சணடையிடுவதும் எல்லாமே பதிவுதான் பதிவர்களுக்கு!


காலையில் ரெண்டு பேனாவை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நாள் முழுவதும் எழுதாவிரதம் கூட இருந்துவிடலாம். இப்பொதெல்லாம் எழுதும் விரதமும் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். எழுதாமல் இருப்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும். உரிமைகளை கேட்கவும், உணர்வுகளை சொல்லவும், உறவாடவும், நட்பினை கொண்டாடவும், மகிழ்ச்சியை – சோகத்தை பகிர்ந்துக் கொள்ளவும், எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் எழுதவேண்டியது அவசியமாகிறது. வாள்முனையைவிட பேனாமுனை வலிமையானது என்று சும்மாவா சொன்னார்கள்?

எழுதுவதென்றால் வெட்டியாக கீபேட் உடைய, கை வலிக்க எவ்வளவோ எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் உருப்படியாக, உபயோகமாக, வலைநாகரிகமறிந்து, சரியான சந்தர்ப்பத்தில், சரியான இடத்தில், சரியானவர்களிடம் சரியாக எழுதுவது எப்படி? இதைத்தான் யாராவது எழுதுவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். எழுதி, எழுதி எனக்கு கை வலிக்கிறது, யாராவது கொஞ்சநேரம் எதையாவது பின்னூட்டமாய் எழுதுங்களேன்!!


டிஸ்கி 1: லக்கிலுக் நேற்று எழுதிய பதிவின் எதிர்வினைப் பதிவு இது.

டிஸ்கி 2: வேறு நல்லதொரு பதிவு எழுதிக் கொண்டுதான் இருந்தேன். நேற்று இரவும், இன்றும் காலையும் நான் வழக்கமாக பதிவெழுதும் நேரங்களில் மின்சாரம் தடை பட்டதால் வேறு வழியின்றி அலுவலகத்தில் வந்து ’வெரி சிம்பிள், வெரி எஃபக்டீவ்’ என்றழைக்கப்படும் இந்தப் பதிவைப் போட வேண்டியதாய்ப் போய்விட்டது.

அவியல் – 29.08.08

பின்னூட்டங்களில் குபீரென்று சிரிப்பை வரவைக்கும் விதமாக எழுதுவதில் குசும்பனுக்கும், மங்களூர் சிவாவுக்கும் கடும் போட்டியே நடக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பின்னூட்டப் போட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிருவரின் பின்னூட்டங்களைத் தொகுத்தாலே, ஓரிரு மாதத்துக்கான பதிவுகளை தயார் செய்துவிட முடியும்! இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் என்பதில் எனக்கு பெருமையோ பெருமை!


பின்னூட்டங்களைப் பற்றி குறிப்பிடும்போது நாம் கண்டிப்பாக நினைக்க வேண்டிய இன்னொருவர் rapp என்ற வெட்டியாபீசர்! எங்கே இவர்? பதிவின் நீளத்துக்கு இருக்கும் இவரது பின்னூட்டங்களுக்கு பதிவூட்டம் என்றே ஒருமுறை ஒரு பிரபலம் குறிப்பிட்டார் (நான்தான்.. ஹி...ஹி...) வெட்டியாய் இல்லாமல் பின்னூட்டங்களிலேயே ஆரோக்கியமாக விவாதமும் செய்து வந்தார். கும்மிகளிலும் சளைக்காமல் கலந்து கொள்வார். ஆணித்தரமாக தமது கருத்துக்களையும் சொல்வார். 31 ஜூலை 2008க்குப் பிறகு சொல்லாமல் கொள்ளாமல் ஆள் எங்கோ போய் விட்டார்! காணவில்லை என்று கிண்டலாக ஒரு பதிவு போடலாமா என்று கூட நினைத்தேன். மனசு கேட்கவில்லை. என்னமோ.. ஏதோ.


நானும் அவரும் ஒரே மாதத்தில்தான் (மே 08) பதிவுலகுக்கு வந்தோம். 28 பதிவுகள் போட்டார். அவற்றில் பல அருமையான பொருள் பொதிந்த பதிவுகள்தான். கடைசி சில பதிவுகளுக்கு தொடர்ந்து செஞ்சுரி பின்னூட்டங்கள் பெற்றார். ராப்.. எங்க இருக்கீங்க....? ப்ளீஸ் வந்து கல(ந்து)க்குங்க. பின்னூட்ட கும்மி இல்லீன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவு போடுங்க!



நீங்க கவனிச்சிருக்கீங்களா? மதியம் நண்பர்களை, சக ஊழியர்களைப் பார்த்து சாப்பிட்டாச்சா? என்று கேட்போமில்லையா? ஆண்கள் அதோடு நிறுத்திக் கொள்வார்கள். ‘சாப்பிட்டாச்சு என்றால் பெண்கள் மட்டும் ‘என்ன சாம்பார், என்ன பொரியல் என்று விலாவாரியாக (விலாவாரி என்று ஏன் சொல்கிறார்கள்?) கேட்பார்கள். நான் என் தோழிகளிடம் “அதென்ன நீங்க மட்டும் சாப்பிட்டாச்சுன்னா விடாம, டீட்டெய்ல் எல்லாம் கேட்கறீங்க?என்று கேட்பதுண்டு. சென்றவாரம் இதற்கு ஒரு தோழி விடை கொடுத்தார்.


“அதொண்ணுமில்லண்ணா, நாங்க சமைச்சுட்டு வந்து அடுத்த நாள் என்ன கொழம்பு வைக்க, என்ன பொரியல் வைக்க-ன்னு மனசுல நினைச்சுட்டே இருப்போம். இந்தமாதிரி அடுத்தவங்ககிட்ட கேட்கறப்ப ஒரு ஐடியா வருமில்ல அதுக்குத்தான்என்றார். அப்படியா?


ஆகஸ்ட் மாதம் நிறைய விசேஷங்களோடு கடந்தது. ஆகஸ்ட் 17 வடகரை வேலன் மகள் பிறந்த தினம், ஆகஸ்ட் 20 தல யெஸ்.பாலபாரதி திருமணம், ஆக 22 என் திருமண நாள், அதே 22 மலேசியா விக்கியின் அன்னையின் பிறந்தநாள், 24 லக்கிலுக் பிறந்தநாள், 27 ச்சின்னப்பையன் செல்லப்பொண்ணு சஹானா பிறந்தநாள், அதே நாள் வெண்பூவின் செல்லக்குட்டி ஆதர்ஷ் பிறந்தநாள். (யாரோடதாவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்கப்பா, நோட் பண்ணிக்கறேன்...)


அதுமட்டுமன்று குசும்பனின் படைப்பும், எனது படைப்பும் ஜூ.வி-யில் வந்ததும் இந்த ஆகஸ்டின் விசேஷமே!



குமுதத்தில் சுஜாதா பொறுப்பாசிரியராயிருந்தபோது வெளிவந்த சில ஜோக்குகள் மறுபடி சுஜாதா நினைவை மனதில் தந்து வதைத்தது. கார்ட்டூனோடு ஒரு வரி மட்டுமே இருக்கும். படத்தைப் பார்த்தால்தான் நகைச்சுவை புரியும்.


காணாமல் போனவர்கள் என்ற கவுண்டரில் இருக்கும் ஆசாமியிடம் ஒருத்தன் சொல்லிக் கொண்டிருப்பான், “அடுத்த புதன் கிழமையிலிருந்து என் மனைவி காணாமப் போயிடுவான்னு நினைக்கறேன்என்று. படத்தில் அந்த ஆள் வலது கை முதுகுக்குப் பின்னால் கோடாரியிடன் இருக்கும்!


ஒருத்தன் தன் நண்பனிடம் “எங்கப்பா என்னைத் திட்டறாரா? ஏன்?என்று கேட்டுக் கொண்டிருப்பான். படத்தில் அவன் கையில் மதுக்கோப்பையும், கக்கத்தில் விஸ்கி பாட்டிலும், உதட்டில் புகையும் சிகரெட்டும், ஒரு கையால் ஒரு குஜிலியை அணைத்துக் கொண்டும் இருப்பான்!


ஒருத்தன் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான். ஸ்டூலை அப்போதுதான் தள்ளி விட்டிருப்பான். மனதிற்குள் நினைக்கிறான்.. “என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்னு எழுதி வைக்க மறந்துட்டேனே?


“உங்கள் கம்பெனியில் வாங்கிய பாராசூட் சரியாகத் திறக்கவில்லைஎன்று ஒருத்தன் பறந்தபடி புகார் கடிதம் எழுதிக் கொண்டிருப்பான். அவன் முதுகில் திறக்காத பாராசூட்!


மனைவி: (கோபமாக) என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணிகிட்டே வந்தான்ங்க

கணவன்: (கூலாக) “ஏதாவது பைத்தியமாயிருக்கும். விடு


மிகவும் ஃபேமஸான இந்த ஜோக்கும் சுஜாதா பொறுப்பாசிரியராக இருந்தபோது வந்ததுதான்!


எப்பேர்ப்பட்ட மனுஷனை இழந்துவிட்டோம் நாம்! :-(



நானும் கிசுகிசு ட்ரை பண்ணட்டுமா?

மீன்தான் பேட்டரியாவா என்று அதிர்ஷ்டப்பார்வைக்காரர் திரி கொளுத்திய மர்மம் என்னவென்று வலையுலகமே அதிர்ந்து போயிருந்தது. திடீரென்று அதை வாபஸ் வாங்கிக் கொண்டதும் ஏனென்று யாருக்கும் புரியவில்லை! சந்தேகம் தீர்ந்ததா அதிர்ஷ்டப்பார்வைக்காரரே?



அவன்-அது=அவள் புத்தகம் ஆர். நாகப்பன் அவர்களுக்கு அனுப்பியாச்சு. (வந்துடுச்சா சார்?) புதுகைத் தென்றலுக்கு இன்றுஅனுப்பப்படும். அதிஷா இன்னும் முகவரி தராமலிருக்கிறார். அதை விக்னேஸ்வரனுக்கு அனுப்பச் சொன்னார். விக்கி... எங்கே உங்க முகவரி?


----------------------------


இந்த வாரம் முழுவதும் கரண்ட் கட் இப்படித்தான் என்றில்லாமல் வதைக்கிறது. இதோ, இந்த வரியை ஆரம்பிக்கும்போது இருக்கும் மின்சாரம் முடிக்கும் போது இருக்குமா என்பது நிச்சயமில்லை. இந்தத் தொல்லையாலேயே நேற்று முன் தினம் இரவு ஒன்றும் எழுத முடியவில்லை. நேற்று காலையும் திடீரென்று (இதோ இதை எழுத எழுத கரண்ட் போய்விட்டது! சத்தியமாக! ச்சே!) போய்விட்டது!


பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு இதோ கரண்ட் மீண்டும் வந்துவிட்டது. என்ன எழவு இது என்று புரியவேயில்லை! அதுவும் இரவு நேரங்களில் மகா கொடுமை!


************************************


வெகுநாட்களாயிற்று எங்கே இந்தக் கவிஞர்கள் எழுதி. இதோ இன்று நிமோஷினி

தரிசனம்


எனக்கு

எப்போதுமே

தட்டுப்படுவது

ஆராதனைத் தட்டு

சார்த்தின மாலைகள்

கம்பிகள் வயிற்றில் பதிய

எக்கினதில்

அர்ச்சகத் தொந்திகள்

பூணூல் பதிந்த

வியர்வை முதுகுகள்தான்.

ஒருமுறையேனும்

அம்மன் இல்லை

உன் முகம் தவிர்த்து..



Thursday, August 28, 2008

பதிவெழுதப் போவதில்லை!

































































































































நேற்று என் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,
நம்ம தலை யெஸ்.பாலபாரதிக்கு திருமணம் (ஙொக்கமக்க... நெஜமாங்க!) நடந்ததை முன்னிட்டும் இன்று என் பதிவுக்கு விடுமுறை! (இன்னைக்கு மட்டும்தானா என்று நீங்கள் அழுவது கேட்கிறது... என்ன செய்ய?)

அப்படியே மேல வலது மூலைல போய் பாலாவை வாழ்த்திடுங்க!

(போரடிச்சதுன்னா வடகரை வேலன் என்னைப் பத்தி எழுதினதைப் படிச்சு சிரிச்சுட்டுப் போங்க!)

Tuesday, August 26, 2008

வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!




நான் "தலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்” என்றொரு போட்டி அறிவித்திருந்தேனல்லவா.. அதில் வென்றவர்களை அறிவிக்கும் பதிவுதான் இது.


கொஞ்சம் சுயபுராணத்தோடு இதை எழுதுகிறேனே.. ப்ளீஸ்.. நேற்று சில தலபுராணத்தைப் படித்த நீங்கள் இந்த சுய புராணத்தையும் படியுங்கள்.

*****************

உடுமலைப்பேட்டையில் நானிருந்தபோது எனக்கு இருந்த நண்பர்கள் பலரும் ஆர்டிஸ்ட்தான். ஆர்டிஸ்ட் என்றால் நடிகர்களல்ல. வண்ணக்கலைஞர்கள். ஜனனி ஆர்ட்ஸ்-வெங்கடாசலம், கனலி கலைக்கூடம் - கனலி, ஸஸி ஆர்ட்ஸ் - சசி, பாக்யா ஆர்ட்ஸ் (தற்போது பாரதி கலைக்கூடம்) நாகராஜ், தமிழி கலைக்கூடம் - முத்து, ஜீவன் ஆர்ட்ஸ் - சௌந்தர், பாலு என்று எல்லா நண்பர்களும் கலைத்துறையிலிருந்தார்கள்!

அப்படி அவர்களோடு இருந்தபோது வரும் விளம்பரங்களுக்கு ஏதேனும் கேப்ஷன்
சொல்ல என்னை கலந்தாலோசிப்பார்கள். க்ரியேடீவ்வாக சிந்திக்க உகந்த களமென்பதில் எனக்கும் மிக விருப்பம்.

‘துணிக்கடைகளில் இது தனிக்கடை’, ‘தரம் 100% தள்ளுபடி 50%’, ‘ஆரவாரமான ஆரம்பம்’, ‘வண்ணங்கள் பேசும்போது வார்த்தைகள் எதற்கு’, டைட்டானிக் வந்தபோது அந்த தியேட்டர்முன் வைக்கப்பட்ட ஒரு பேனரில் ‘உண்மையான காதலுக்கு டைட்டானிக், உறுதியான தையலுக்கு பெஸ்ட் டெய்லர்ஸ்’, 'இளமையை விரும்பும் இளைஞர்களுக்காக’ போன்ற பல அப்போது தோன்றி சொன்னவைதான். அவற்றில் பல இப்போது பிரபல வாக்கியங்கள். இதையெல்லாம் நான்தான் சொன்னேனென்று சொல்லவரவில்லை. ஆனால் அப்போது சொன்னபோது நான் கேள்விப்படாத புதியவைகளை தான் சொல்லியிருக்கிறேன்.


என் நண்பர் கனலி (தற்போது திருப்பூர்வாசி) தனது கலைக்கூட போர்டில் ஒரு விரலில் வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருக்கும் ஸ்டில்லை வரைந்துவிட்டு “இதற்கு ஏற்ற மாதிரியும், ஆர்ட்ஸுக்கு ஏற்ற மாதிரியும் ஒரு கேப்ஷன் குடுங்க கிருஷ்ணா” என்றார். சட்டெனறு சொன்னேன் என்றால் ‘புருடாவைப் பாருடா’ என்பீர்கள். சட்டென்றெல்லாம் சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்து ‘விரல் நுனியில் விஷயங்கள்’ என்றேன். விரல் நுனியில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி படத்துக்கும், விரல் நுனியில் ப்ரஷ்ஷை வைத்து வரையும் வண்ணக் கலைஞர்க்கும் அது பொருந்திற்று.

நகைக்கடை வைத்திருக்கும் வேறொரு நண்பனான செந்தில் தனது கடையின் பர்ஸைத் திறக்கும்போது உள்ளே தெரியும் வண்ணம் ஒரு வாசகம் கேட்க, ‘இனி உங்களுக்கு பொற்காலம்’ என்ற கேப்ஷன் கொடுத்தேன். பலராலும் பாராட்டுப் பெற்றது அது!


ஒரு சிறுவன் அம்பெய்துவது போல ஒரு படம் வரைந்து வாடிக்கையாளர்களை கவர்வது போல கேப்ஷன் கேட்க, ‘வச்ச குறி தப்பாது’ என்று எழுதினோம். இன்னொரு நண்பர் தனது கடைக்கு வித்தியாசமான வாழ்த்து வேணுங்க என்றார்.
அவரிடம் சொல்லாமலே ‘வித்தியாசமான வாழ்த்துக்களோடு’ என்றே எழுதிவைத்தோம்! ‘என்னய்யா இது வித்தியாசமான வாழ்த்து?’ என்று கேட்டவர்களிடம் ‘இது வித்தியாசமான வாழ்த்து இல்லைன்னு யாரும் சொல்ல முடியாதுங்களே’ என்றோம்!


அப்போது ஏதாவது பேனரில் எழுதி விட்டு, இது என்ன கடைக்கான விளம்பரம் என்று மக்களை கொஞ்சநாள் பார்க்கவைத்துவிட்டு, பிறகு எழுதும் ட்ரெண்ட் ஆரம்பமாகி இருந்தது. பொள்ளாச்சியில் ஒரு கடைக்காக இப்படி ஒரு சில பேனர்கள்வைத்துவிட்டு ஒன்றுமே எழுதாமல் என்னை அழைத்து ‘எதுனா சொல்லுப்பா ஒரு வாரம் கழிச்சுதான் கடையைப் பத்தி எழுதணும். அதுவரைக்கும் எல்லாரும் பாக்கறா மாதிரி’ என்று நண்பர் கேட்க ஒரு இடத்தில் ‘நாளைக்கு இந்த விளம்பரத்தைப் பாருங்கள்’ என்று எழுதினோம். (ஏழு நாளும் அதுதான்!)


என்னுடைய இந்த விளம்பர ஆர்வம் நான் டூ-வீலர் வாங்கியபோதும் விடவில்லை. ஸ்ப்ளெண்டர் பைக் வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வரும் வரை எல்லோரையும் போல FOR REGN என்று எழுதாமல் சினிமா விளம்பரம் போல

RTO வழங்கும்


REGN. No.


விரைவில்
....



என்று எழுதி வைத்திருந்தேன். ஒரு ட்ராஃபிக் சார்ஜெண்ட் நிறுத்தி

படித்து ரசித்துப் பாராட்டினார் அதை!



சரி... போதும்டா உன் புராணம் என்பது கேட்கிறது. இனி போட்டி முடிவுகளுக்கு வருவோம்!

இரு கைகள் இணைந்திருக்கும்(அந்தக் கைகள் இரண்டுமே உமாவின் கைகள்தான்) அந்தப் படத்திற்கு பதிவு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே வந்து ‘இணைந்த கைகள்’ என்று கேப்ஷன் கொடுத்து ‘புதுகைத்தென்றல்’ என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார்! புதுக்கோட்டையிலிருந்து, சென்னைக்காரரை மணம்புரிந்து தற்போது ஹைதராபாத்வாசியாகிவிட்ட இவருக்கு பரிசு கொடுக்காவிட்டால் நியாயமே இல்லை!

என் ச்சாய்ஸ் புதுகைத்தென்றல்தான்!


வாசகர்கள் ச்சாய்ஸ் அதிஷா! MEETடாத கைகளும் அருமை! (ஒக்கார்ந்து ஓட்டுப்போட்டாரோ? கடைசி நாள் டக டகன்னு ஓட்டு ஏறிடுச்சு இவருக்கு. ஒருவேளை அதுக்கு முன்தினம் பெங்களூர் சென்று கேன்வாஸ் செய்ததன் பலனா?)


ஏற்கனவே NATHAS மற்றும் ஆர்.நாகப்பன் இருவருக்கும் சிறப்பு பரிசு என்றிருந்தேன்.

அதில் NATHAS வெளிநாட்டில் இருப்பதால் அந்தப் பணத்தை வறியவர்களுக்கு உதவ உபயோகித்துக் கொள்ளுங்கள்.. நான் இந்தியா வரும்போது அவன்-அது=அவள் புத்தகத்தை வாங்கிப் படித்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அவரது எண்ணத்துக்கு எல்லோர் சார்பாகவும் கைகுலுக்கல்கள்! அருகிலுள்ள ஒரு பள்ளியில் நோட்டுப் புத்தகம் வாங்க இயலாமல் இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு நோட்டுகள் வாங்கிக் கொடுக்கலாமென்றிருக்கிறேன்.


ஆர்.நாகப்பன் சென்னைக்காரர். அவருக்கு புத்தகம் நேற்று கொரியரில் அனுப்பப்பட்டு விட்டது. ஒரு ஆச்சரியம் அவர் இருப்பது திருப்பூர் குமரன் சாலை!


ஆகவே புதுகைத்தென்றலும், அதிஷாவும் எனது மின்னஞ்சலுக்கு (kbkk007@gmail.com) தங்களது முகவரியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புத்தகம் பேக் செய்யப்பட்டுவிட்டது. அட்ரஸ் ஒட்டி அனுப்புவதுதான் பாக்கி!


ஒரு முக்கியமான வேண்டுகோள்: ஆர்.நாகப்பன், அதிஷா இருவரும் 31ம்தேதி
நடைபெறும் அவன்-அது=அவள் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு சென்று ஆசிரியரிடம் புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! அதிஷா கண்டிப்பா போவாரு.. நாகப்பன் சார் நீங்க?

Monday, August 25, 2008

கோயில் சொல்லும் கதைகள்




திருமுருகன்பூண்டி முருகன் கோவில்


*************************************************

சமீப நாட்களாக நான் சில கோவில்களுக்கு சென்று வருகிறேன். அதனால் நானொன்றும் மிகப்பெரிய பக்திப்புலி கிடையாது. சுத்தமாக நம்பிக்கையில்லை என்றும் சொல்வதற்கில்லை.


இதுபோல கோவில்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை அந்தக் கோவில்களின் தலபுராணத்தைக் கேட்பது வழக்கம். அப்படிச் சொல்லப்படும் ஐதீகப் புனைவுகளை மிக மிக ரசிப்பேன் நான். அது உண்மையா, இல்லையா போன்ற அரசியல்களுக்கு நான் போவதில்லை!


*****************************

வெகுவருடங்களுக்கு முன் சுசீந்திரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கேதான் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக ‘தாணுமாலயன்’ என்று காட்சியளிக்கிறார்கள். (தாணு=சிவன், மால் = திருமால், அயன் = பிரம்மா)


அந்தக் கோவிலில் ஒரு வழக்கத்தைச் சொன்னார்கள். அந்தக் கோவிலுக்கு இரவு தேவர் தலைவன் இந்திரன் வந்து தாணுமாலயனுக்கு பூஜைகள் செய்வாராம். ஆகவே அந்தக் கோவிலின் அர்ச்சகர் இரவு நடை சாத்துமுன் பூஜை செய்ய வரும் இந்திரனுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துவைத்துவிட்டுத்தான் செல்வாராம்.


அப்படி முதல்நாள் பூஜைப் பொருட்களை வைத்த அர்ச்சகர் மறுநாள் நடைதிறக்க வரமாட்டார். வரவும் கூடாதாம். வேறு அர்ச்சகர் வந்து நடைதிறந்து ஒழுங்குபடுத்தியபின்தான், முந்தைய நாள் இரவு நடைசாத்திய அர்ச்சகர் உள்ளே வருவாராம்.


ஏனென்றால் இரவு நடை சாத்திய அர்ச்சகரே காலையிலும் திறந்தால், இரவு அவர் வைத்த பூஜைப் பொருட்களெல்லாம் வைத்தது வைத்தபடியே இருக்குமானால் அவருக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இந்த நடைமுறையாம்!

********************

திருப்பூர்,, அவினாசி அருகே திருமுருகன்பூண்டி முருகன் கோவில் பிரசித்தமானது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சிவனும், முருகனுன் இங்கேயுள்ள சந்நிதானத்தில் காட்சியளிக்கிறார்கள். சிவன் மேற்கு நோக்கியும், முருகன் தெற்கு நோக்கியும் அமர்ந்துள்ள இந்தக் கோவிலில் முருகன் ஆறுமுகத்துடன் இருக்கிறார். (அர்ச்சகர் தீபாராதனையை சிலைக்குப் பின்னால் ஏன் காட்டுகிறார் என்று கேட்டபோது இது தெரிந்தது) சுந்தரமூர்த்தி நாயனார் இந்த வழியே வந்து, இந்தக் கோவிலைத் தாண்டிப் போய் ஒரு விநாயகர் கோவிலில் அமர்ந்திருந்தாராம்.. “அதெப்படி என்னைக் கண்டுக்காம போவ நீ” என்று கோவம் கொண்ட சிவன் மாறுவேடத்தில் போய் அவரது பொருட்களைத் திருடி, ஒவ்வொரு பொருளாய் இறைத்துக் கொண்டே போனாராம். அந்தப் பொருட்களைத் தொடர்ந்துகொண்டே சுந்தரர் சென்றபோது இந்தக் கோவிலைக் கண்டாராம்.


முருகனுக்கே புத்திசுவாதீனம் வந்து, இந்தக் கோவில் பிரம்மதீர்த்தத்தால்தான் நிவர்த்தியாயிற்று என்று ஒரு அர்ச்சகர் சொன்னார். அதனால் புத்திப் பிசகு உள்ளவர்களை இந்தக் கோவில் கிணற்று நீரில் குளிக்கவைக்கிறார்கள். அதேபோல படிப்பு வரமல், தீயொழுக்கத்துடன் திரியும் பயல்களை இந்தக்கோவிலில் 12 நாட்களுக்கு தங்க வைக்கின்றார்கள். அவர்கள் நல்லொழுக்கத்துடனும், புத்தியுடனும் திரும்பிச் செல்கிறார்களாம்!


இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பாஷணை:-

நான்: (மகள்களிடம்):- “இதுதான் தட்சிணாமூர்த்தி சந்நிதி. கடவுள்கள்ல இவருதான் எஜூகேஷனல் மினிஸ்டர். நல்லா படிப்பு வரணும்ன்னு வேண்டிக்கோங்க”


குழந்தைகள் வேண்டிக்கொண்டு வந்தபின் உமா கேட்டார்... “அப்படியே குறும்பு பண்ணக் கூடாதுன்னும் வேண்டினீங்களா?”

மேகா: “ஆனா அவரு படிப்புக்குத்தானே கடவுள். குறும்புக்கு இல்லையே”


***********************

உடுமலைப்பேட்டை அருகே செஞ்சேரிமலை முருகன் கோவிலும் பிரசித்தம். ஆனால் நான் இதுவரை சென்றதில்லை. என்னோடு பூண்டி கோவிலுக்கு வந்த நண்பன் செந்தில் இதைச் சொன்னான்.


பூண்டி கோவிலைப் போலவே இங்கும் முருகன் ஆறுதலைகளுடன் காட்சி தருகிறார். முருகன் இங்கே மயில் மேலமர்ந்துள்ளார்.


பழங்காலத்தில் இந்தக் கோவிலமைந்துள்ள பகுதியில் இரவு வேளையில் மயில் அகவும் ஒலி கேட்டுள்ளது. இது தொடரவே, அந்த ஊரைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே அமர்ந்து கண்காணித்தபோது தினமும் இரவு முருகன் மயிலோடு நைட் ரவுண்ட்ஸ் போனதைப் பார்த்தார்களாம். எங்கே இப்படியே பறந்து நம்மை விட்டுப் போய்விடுவாரோ என்றஞ்சிய ஊர்மக்கள் அடுத்தநாள் அந்த மயிலின் ஒரு காலை, பறக்க இயலாதவாறு காயப்படுத்திவிட்டார்களாம்!


இப்போதும் அங்கிருக்கும் சிலையில் கால்பகுதி சிதைந்து, காயப்பட்டிருப்பது இதனால்தானாம்!



இந்தியன் கிரிக்கெட்டும், வலைப்பதிவர்களும்

நம்ம இந்தியன் கிரிக்கெட் டீம் ஒரு மேட்ச்ல ஜெயிக்கறதும், ஒரு மேட்ச்ல தோக்கறதும்ன்னு விளையாடிட்டு இருக்காங்க. நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்!


ஒரு வேளை நம்ம பதிவுலக பெருந்தலைகள் டீம்ல இருந்து, தொடர்ச்சியா சில மேட்ச் தோத்தா அவங்களுக்கு என்ன மாதிரி வார்னிங் மெய்ல் பி.சி.சி.ஐ-லேர்ந்து வரும்?


ஒரு கற்பனை:-

******************

லக்கிலுக்:

நல்ல ஸ்டார் பேட்ஸ்மேன் நீங்க. அடிக்கடி ‘கிட்னி கார்ட் மாத்தணும், ஜட்டி கிழிஞ்சிடுச்சு, ட்ரவுசர் கிழிஞ்சிடுச்சு’ன்னு பெவிலியன் போறது நல்லால்ல. அதே மாதிரி அடிக்கடி அதிஷா கூட ஷகீலா படம், சோனா படம்ன்னு போய் கன்செண்ட்ரேஷனை குறைச்சுக்கறீங்க.


கோவி.கண்ணன்:

நீங்க திடீர் திடீர்னு லக்கிலுக் அடிச்ச ஷாட்டையே ரிபீட் பண்ணி அவரை வம்புக்கு இழுக்கறீங்க. அதேமாதிரி அடிக்கடி பேட்ஸ்மேன் சந்திப்பு நடத்தி உங்க ப்ராக்டீஸை மிஸ் பண்றீங்க. சிங்கப்பூர்ல மேட்ச் நடந்தப்போ தேவதர்ஷினி, தீபாவெங்கட்டை நீங்க பார்க்கப் போனதுக்கு புகைப்பட ஆதாரம் இப்போ மீடியா கையில சிக்கீருக்கு!


முத்துலெட்சுமி-கயல்விழி

என்ன மேடம் நீங்க. உங்க நம்பர் 11. தென்னாப்பிரிக்காவுல ஒருத்தருக்கு இதே நம்பர் இருக்குன்னு பின்னாடி இருக்கற ஒண்ணை முன்னாடியும், முன்னாடி இருக்கற ஒண்ணை பின்னாடியும் போட்டுக் குடுங்கன்னு கோவிச்சுட்டு சரியா விளையாடலைன்னா எப்படி? எப்படிப் போட்டாலும் உங்களை ரசிகர்களுக்குத் தெரியாதா என்ன?


SP.VR.சுப்பையா:-

சார்.. நீங்க விளையாடத்தானே வந்திருக்கீங்க. அடிக்கடி அம்பயர்கிட்ட போய் பேசீட்டே இருந்தா எப்படி? கோவைல நடந்த மேட்ச்ல நீங்களும், அம்பயரும் ரொம்ப சுவாரஸ்யமா பேசீட்டே இருந்ததுல ஒரு மணிநேரமா மேட்ச் நின்னதுகூட உங்களுக்கு தெரியல. பேசாம... இல்லல்ல.... பேசீட்டே நீங்க வர்ணணையாளரா வந்துடுங்க!


ச்சின்னப்பையன்:

எப்பப்பார்த்தாலும் விளையாடற எல்லாரும் மென்பொருள் நிபுணரானால் என்ன பண்ணுவாங்க-ன்னு சிந்திச்சுட்டே இருக்கீங்க நீங்க. பொழுது போகலைன்னா என்ன பண்றதுன்னு கலவை வேற உங்களுக்கு. ஏதாவது சொல்லீட்டா பெவிலியனைப் பார்த்து முதுகுகாட்டி ஃபோட்டோ எடுத்துட்டு `என் பின்னாடி ஃபுல் க்ரவுடும் இருக்குன்னு மிரட்டறீங்க.


சென்ஷி:

என்ன சொல்றது? வர வர நீங்க மேட்ச்சுக்கே வர்றதில்ல. அப்பப்ப தண்ணி கொண்டுவந்து குடுத்துட்டு போயிடறீங்க. இப்பல்லாம் 5, 10 ன்னு ரன் அடிச்சாலும் க்ளாஸிக் ஷாட்டாதான் அடிக்கறீங்க. ஆனா அடிச்சு ஆடறதில்ல!


மங்களூர் சிவா:

நீங்க தனியா ரன் எடுக்கணும் சிவா. உங்களுக்கு முன்னாடி விளையாடறவங்க ரன் எடுக்கறப்ப `ரிப்பீட்டேய்’ன்னு கத்திட்டே இருக்கறதால உங்களுக்கு ஸ்கோர் கார்டுல ரன் ஏறாது.



நாமக்கல் சிபி:

நல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.


வால்பையன்:

முதல்ல மாதிரி நைட் பார்டீஸ் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டோம். நல்லது. ஆனா, க்ரவுண்டல லக்கிலுக்கைப் பார்த்து ‘நான் ஷாட் அடிச்சப்போ ஏன் கைதட்டலை?’ன்னு அவரை வம்புக்கு இழுக்கறது நல்லால்ல.


குசும்பன்:

ரொம்ப குசும்பு ஜாஸ்தியாயிருச்சு உங்களுக்கு. எங்களையே கிண்டல் பண்ணி கார்ட்டூனெல்லாம் போடறீங்க.


தமிழன்;

எல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.


தமிழ்பிரியன்:

மேட்சுக்கு முன்னாடி தேசிய கீதம் பாடறப்ப யார் யார் கூடப் பாடறாங்கன்னு கவனிச்சுட்டு, கவலைப் பட்டுட்டே இருக்கீங்க. அதனால உங்க விளையாட்டுல கவனம் கம்மியாய்டுச்சு! அதுவும் கவலைகள் இப்போல்லாம் உங்களுக்கு கலவையா வருது!


நிஜமா நல்லவன்:

போன மேட்ச்சுக்கு அப்புறம் ‘எல்லாரும் நல்லா விளையாடினாங்க. நானும் ஏதோ விளையாடினேன். இனிமே வர்ல’ன்னு ரிட்டயர்மெண்ட் அறிவிக்கறீங்க. முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். இதுவரைக்கும் உங்ககிட்டேர்ந்து விளக்கம் வர்ல. இது சரியில்ல. அடுத்த மேட்ச்ல இறங்கி விளையாடலைன்னா ரசிகர்கள் கோவத்துக்கு ஆளாய்டுவீங்க.


பரிசல்காரன்:

நல்லா விளையாடீட்டு இருக்கறப்ப ‘எல்லா பாலையும் அடிச்சு ஆடாதீங்க, டிஃபென்ஸும் பண்ணுங்க’-ன்னா பேட்டைப் போட்டுட்டு பெவிலியன் வந்துடறதா? அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.

Sunday, August 24, 2008

பிறந்தநாள் வாழ்த்துகள் லக்கிலுக்!

இன்று பிறந்தநாள் கொண்டு ஆடும் பதிவர் லக்கிலுக் நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமுமாய் சிறப்புற வாழ எல்லாம் வல்ல திண்டல்மலை முருகனை பிரார்த்திக்கிறேன்!



அவர் பேர் ராசி அவருக்கு இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுத்தருமென்பதில் ஐயமில்லை!

Saturday, August 23, 2008

அவியல் – 23.08.08

வாரா வாரம் வெள்ளிக்கிழமை அவியல் எழுதுவேன். நேற்று திருமணநாளென்பதால் அந்த சோப்புப் பதிவைப் போட்டேன். (நன்றி: யட்சன்) நாம அவியல் எழுதலியே, சூரியன் உதிக்காதோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல!

----------------------

திருமண நாள் பரிசாக PIT-ல் என் புகைப்படம் ஒன்று சிறந்ததாக முதல்கட்டத்தில் தேர்வாகி இருப்பதைக் கருதுகிறேன். அடுத்தகட்டமாக பெரிய தலைகளுடன் மோத வேண்டுமாம். இப்போதே கேமராவும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறேன்! நேற்று நந்து (நிலா அப்பா) வேறு ”வாங்க.. அங்க கவனிச்சுக்கறேன் உங்களை” என்று ஒரு பெரிய கேமராவைக் காட்டி மிரட்டினார்.

--------------------------------

நேற்றைய பதிவைப் பார்த்துவிட்டு நான் மிக மதிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் தொலைபேசியிலழைத்துப் பாராட்டினார். மகிழ்ச்சியாக இருந்தது. “உன்னை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்ங்கறதால சொல்றேன். அதுல இருக்கறதெல்லாம் நீ பண்றதில்ல. இல்லையா?” என்றார். “ஆமா சார்’ என்று ஆமோதித்தேன். அது ஒரு கலவை. படிச்சுட்டு ‘நம்ம தப்பையும் சொல்லீருக்கானே’ ன்னு படிக்கறவங்களை நினைக்க வைக்கறது.

அந்தப் பதிவுல இருக்கற எல்லா தப்பையும் பண்ற ஆம்பிளைங்க கண்டிப்பா இருக்க மாட்டாங்க! அந்த மாதிரி இருந்தா அது இல்லறமா இருக்காது. நான் அப்படிப் பட்டவனுமல்ல. நான் உருவாக்கி, உமா உருவேற்றிய பதிவு அது! கணவர்கள் தங்கள் மனைவிகிட்ட எதிர்பார்க்கற எத்தனையோ விஷயங்களுமிருக்கு. அதை எழுதவும் தைரியம் வேணும். தாமிரா மாதிரி! (தாமிராவோட இந்தப் பதிவை அவங்க தங்கமணி படிக்காமலிருக்கப் பிரார்த்திப்போமாக!)

------------------------------

நேற்று முன்தினம் ஒரு போட்டி வெச்சேனில்லையா? ரொம்ப கஷ்டம்க பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கறது! நிறையப் புடிச்சிருந்தது.

புதுகைத் தென்றல்: இணைந்த கைகள்

ரமேஷ் வைத்யா: கை கொடுக்கும் கை

அதிஷா: `மீட்’டாத கைகள் (சிலேடை அருமை)

குசும்பன்: பிரியாத வரம் வேண்டும்

மோகன் கந்தசாமி: மூடு மந்திரம்

இந்த அஞ்சும் எனக்கு புடிச்சது. (இதுல மோகன் கந்தசாமி புக் வேண்டாம்ன்னு சொல்லீட்டாரு.) இந்த அஞ்சுல அது பெஸ்ட்ன்னு மேல வலது மூலைல போய் ஓட்டுப் போடுங்க.

இது இல்லாம ஆர்.நாகப்பன் முதல் படத்துக்கு குடுத்திருந்த ‘OUTGOING கால்கள்’ ங்கற தலைப்பும், அவரே மூன்றாவது படத்துக்கு குடுத்திருந்த ‘மழை திறக்கும் மழலை’ தலைப்பும் எகஸலெண்ட்! NATHAS மூன்றாவது படத்துக்கு குடுத்திருந்த ‘குழாய்க்குள் மழை’ யும் அருமை!

ஆகவே ஆர்.நாகப்பன், NATHAS இரண்டு பேருக்குமே சிறப்புப் பரிசா அவன்–அது=அவள் புத்தகம் அனுப்பப் போறேன். அவங்க தயவு செஞ்சு என் மெய்ல் ஐ.டி.க்கு அவங்க முகவரியை அனுப்புமாறு கேட்டுக்கறேன். (வெளிநாட்டினரா இருந்தா இந்தியாவுல எங்க அனுப்பணும்ன்னு சொல்லுங்க சாரே.. ப்ளீஸ், பட்ஜெட் பத்தாது! - kbkk007@gmail.com)

--------------

ஒரு வாரமாக நடந்த 2011-க்கான முதல்வர் பதவிக்காக நம்ம ப்ளாக்ல நடத்துன எலக்‌ஷன் ரிசல்ட்:-

மொத்த ஓட்டுகள்: 144

யெஸ்.பாலபாரதி = 19 (13%)
லக்கிலுக் = 42 (29%)
குசும்பன் = 73 (50%)
நாமக்கல் சிபி = 10 (6%)

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா எப்பப்பாத்தாலும் ப்ளாக்ல இருந்துகிட்டே மொக்கை போடறதுல யார் நெம்பர் ஒன்-னு தெரியுது. அநியாயமா எனக்குப் போயி பகிரங்கக் கடிதம் எழுதீட்டாங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு இருக்கறதுல நாமக்கல் சிபி முதலிடத்திலயும், பாலா ரெண்டாவது இடத்துலயும் இருக்காங்க!

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

ஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்! என்னத்த சொல்ல!

Friday, August 22, 2008

உமாவுக்கு....



எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.

என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.


பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.

எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.


என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!


அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.


இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!


என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.


ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டுத் தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.


நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.


என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.


பலருக்கு நடுவே உன் குழந்தை பாராட்டுப் பெறும் போது ‘அவங்கப்பாவோட மூளை அப்படியே’ என்று சொல்வதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால் உன்னை எங்கும் நான் முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை.

எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.


நம் குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கங்களில் உனக்குத்தான் அதிகப் பங்கு. அதற்குப் பாராட்டாத நான்... ஏதேனும் அவர்கள் குறும்பாய் செய்துவிட்டால் திட்டுவதற்கு மட்டுமே உன்னை அழைக்கிறேன்.


எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.


பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.


அவரைக்காய் பொரியல் வைக்கும்போது மட்டும் சிவப்பு மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.


என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.


ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.


உமா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...


அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!

என் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்
உன் கணவனாய் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்
-கிருஷ்ணா

Thursday, August 21, 2008

தலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்!

கனாக் காணும் கண்கள்



*****************
கிழக்கே போகும் ரயில்




**********************
தண்ணீர்... தண்ணீர்



*****************************

கடலோரக் கவிதைகள்



*****************************

?



*****************

என்ன எல்லாப் படத்தையும் பார்த்தாச்சா? (என்னது.. ஏற்கனவே தியேட்டர்ல பார்த்தாச்சா...?)

கடைசி புகைப்படத்துக்கு என்ன தலைப்பு குடுக்கலாம்?

சொல்லுங்கள்...

என் அன்பெனும் அரிய பரிசை தட்டிச் செல்லுங்கள்!

சரி... வேணாம்.. அன்பை வெச்சுட்டு என்னத்தப் பண்ண முடியும்....

கடைசி படத்திற்கு ஒரு பொருத்தமான தலைப்பும், மற்ற படங்களுக்கு நான் சொன்னதைவிட நல்ல தலைப்புகளும் சொல்லுங்க. தேர்ந்தடுக்கற பொறுப்பு நம்மளுதில்ல. அதுவும் நீங்கதான்! நாளைக்கு காலை வரை நீங்க சொல்ற தலைப்புகள் நாளை அவியலில் வரும். அதில் சிறந்ததை உங்ககிட்டயே தனித்தனியா கேட்டு, சிறந்த கேப்ஷன் குடுத்தவங்களுக்கு தல யெஸ்.பாலபாரதியோட அவன் - அது = அவள் புத்தகம் பரிசளிக்கப்படும். (நெஜமாவேங்க...) வென்றவரிடம் அந்தப் புத்தகம் இருந்தால் வேறு புத்தகம் அளிக்கப்படும்!

சொல்லுங்கள்... வெல்லுங்கள்!

Wednesday, August 20, 2008

நீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா?

ஒருத்தரிடம் காசே இல்லையென்றாலும் அவரால் ஒன்றை வாங்கமுடியும். அது கடன்தான்! கடன் குடுப்பதோ, வாங்குவதோ தவறில்லை. ஆனால் ஒப்புக்கொண்ட தேதியில் கடனை திருப்பிக் கொடுப்பதும், அப்படி சொன்ன தேதியில் திருப்பிக் கொடுப்பவருக்கு கடன் கொடுப்பதும் முக்கியம்!

நேற்று என் ஆஃபீஸ் பாய் ஒருத்தன் “சார்.. ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்க” என்றான். அவன் ஏற்கனவே எனக்கு நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. அது இரண்டு மாசங்களுக்கு முன். இரண்டு மாசத்தில் நான் கேட்காததால் மறந்துவிட்டேன் என்று நினைத்தானோ என்னமோ. ஆனால் நான் அதை சொல்லி “ஏற்கனவே வாங்கினதைக் குடுக்கல இல்லியா? அதனால இப்ப தரமாட்டேன்” என்று பயமுறுத்திவிட்டு, மனசு கேட்காமல் ”வேறொருத்தன் எனக்கு தரணும் அவன் தந்தால் தர்றேன்” என்று சொல்லி கொடுத்தும் விட்டேன். “கண்டிப்பா 200 ரூபாயும் திருப்பிக் குடுத்துடுவேன்” என்றிருக்கிறான். பார்க்கலாம்!

நான் மிக உயரிய பதவியிலிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நல்ல பதவிதான். என் போன்றவர்களுக்கு சங்கடமான விஷயம் கீழே பணிபுரிபவர்கள் இது போன்ற சின்ன சின்ன கடன் கேட்பதும், அதை மறந்துவிடுவதும்தான்! (குடுத்தவங்க இல்ல. வாங்கினவங்க மறந்துடறாங்க!)

அதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” என்று வாங்கியவர்கள் அரசல் புரசலாக பேசுவதுதான்!

இப்போதெல்லாம் பிச்சைகாரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. அதேபோல 100 ரூபாய் கடன் குடுத்தால் அது திரும்பி வருவதேயில்லை!

இப்படித்தான் பேனா மூடியோடு கொடுத்தால் திரும்பி வராது என்று மூடியை கழட்டி விட்டுத்தான் கொடுப்பானாம் ஒருத்தன். “இப்பெல்லாம் பேனா திரும்பி வந்துடுதா?” என்று கேட்டால் ”எங்க? வீடு பூரா மூடியா இருக்கு” என்றானாம்!

இதை எழுதும்போதுதான் உட்கார்ந்து யோசித்தேன். அப்படி இப்படி என்று ச்சின்னக் கடன்களிலேயே எனக்கு 2450 ரூபாய் வெளியே நிற்கிறது! என்ன கொடுமை இது!

நான் எப்போதோ கல்கிக்கு ஒரு பொன்மொழி எழுதி அனுப்பினேன்.

“உங்கள் நண்பன் உண்மையானவனா என்று சோதிக்க வேண்டுமா? அவனிடம் கடன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் உங்கள் நண்பனுக்கு உண்மையானவனாக இருக்க வேண்டுமா? கடன் கொடுக்காதீர்கள்!”

கடன் கொடுப்பதில் இல்லை என்று சொல்லும் கலை ரொம்ப முக்கியம்! அதில் வடக்கத்தியர்கள் கை தேர்ந்தவர்கள். உடனே கொடுக்க மாட்டார்கள். நாளைக்கு, நாளைக்கு என்று இழுத்தடிப்பார்கள். அந்த இடைவெளியில் நிஜமான காரணமா, திருப்பிக் கொடுப்பதில் தேர்ந்தவனா என்றெல்லாம் எடை போட்டு விடுவார்கள்! கொடுக்கக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான். என்ன கொஞ்சிக் கூத்தாடினாலும் பைசா கூட அவர்களிடமிருந்து வாங்க முடியாது!

கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பதிலும் சரி, வாங்கினதை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பதிலும் சரி நம்மவர்கள் திறமைசாலிகள்!

நான் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, தளிரோட்டில், முனிசிபல் காம்ப்ளக்ஸில் எங்கள் ஸ்கூலருகே `க்ரவுன் காபி பார்’ என்றொரு பேக்கரி இருந்தது. கடைக்காரருடன் நல்ல நட்பு. நாங்கள் அருகிலுள்ள கேரம் க்ளப்பில் விளையாடுவதும், இவர் கடையில் அரட்டையடிப்பதுமாக ரொம்பவும் பிஸியாக இருந்த காலம் அது. கடையின் விலைப்பட்டியலை ஒரு சார்ட் பேப்பரில் எழுதித் தரச் சொன்னார். (என் கையெழுத்து அப்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கும்!) எழுதிக் கொடுத்தேன். ‘கடன் அன்பை முறிக்கும்’ என்றும் எழுதச் சொன்னார். நாமதான் அடுத்தவன் சொல்றத கேட்கவே மாட்டோமே? ‘அது வேண்டாம்ண்ணே’ என்று சொல்லி, வித்தியாசமாக இருக்கணும் என்று ‘ஊசி நுழைந்து பிரிக்க முடியாத நட்பையும், காசு நுழைந்து பிரித்துவிடும்’ என்று எழுதிக் கொடுத்தேன்.

பிறகு 1992ல் திருப்பூரில் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த போது ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த க்ரவுன் காபி பார் ஓனரிடமிருந்து ஒரு இன்லேண்ட் லெட்டர் வந்தது. அவர் கடையில் என் அக்கவுண்டில் 192 ரூபாய் இருந்தது. (ரொம்ப முக்கியமான கேள்வி: பேங்க்ல அக்கவுண்ட்ல இருக்குன்னா, அது நம்ம பணம்! டீக்கடைல அக்கவுண்ட்ல இருக்குன்னா அது கடன்! ஏன் இப்படி?) அதைக் குறிப்பிட்டும், நீ எங்க இருந்து டீ சொன்னாலும் அனுப்பிக் கொடுத்தேனே’ என்றெல்லாம் வருத்தப்பட்டு எப்ப தருவ?’ என்று கேட்டிருந்த அந்த லெட்டரை அவர் நான் எழுதிய பொன்மொழியையே எழுதி முடித்திருந்தார்! நான் தூங்காத இரவில் அந்த இரவும் ஒன்று!

என் தந்தை பணிபுரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் அவரது முதலாளி (சேட்) தனது மேசைமேல் வைத்திருந்த ஒரு குறிப்பு:-


YOU ASK ME CREDIT
I GIVE NO MONEY
YOU GET MAD.

I GIVE CREDIT.
YOU DIDN’T PAY.
I GET MAD.

BETTER
YOU GET MAD.

Tuesday, August 19, 2008

ஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு?

சமீபகாலமாக நடிகர் ஜே.கே.ரித்தீஷை ஏகத்துக்கும் கலாய்ப்பதில் வலையுலகம் (நான் உட்பட) முனைப்பாக இருக்கிறது. பதிவர்கள் தங்களுக்குள்ளேயே அவருக்காக ரசிகர் சங்கம் உருவாக்கிக் கொள்வதும், நான் தலைவர், நான் பொருளாளர், நான் கொ.ப.செ என்று சொல்லிக்கொள்வதும் பரவலாக நடந்துவருகிறது!

ஜே.கே.ரித்தீஷ் அடிப்படையில் தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே அவரைப் பற்றி கேட்கப்படும் எந்தவொரு கிண்டலான கேள்விக்கும் அவர் கோவப்படுவதில்லை! அவர் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன். தி.மு.க.வின் உறுப்பினர். செல்வாக்கான பின்புலம் இருப்பினும் ”உலகத்துக்குத்தான் நான் ரித்தீஷ். ஊருக்கும் எப்பவுமே அதே முகவை.குமார்தான்” என்று சொல்கிறார்.

இவரிடம் தனது கானல் நீர் படத்தைப் பற்றி கேட்டபோது அவர் சொன்னது என்ன?

''கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். அது என் நண்பர் சின்னிஜெயந்த்தின் அன்புக்காகப் பண்ணியது. நான் சின்ன வயசுல எத்தனையோ படங்களைப் பார்த்து செம கிண்டல் பண்ணி இருக்கேன். கடைசியில நாலு பேரு என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி என் முதல் படம் அமைஞ்சுபோச்சு. இத்தனைக்கும் 'கானல் நீர்' பட போஸ்டர்ல 'A True Punishment'னு கேப்ஷன்லாம் கொடுத்தேன். அந்த கேப்ஷனைப் பார்த்தாவது ஜனங்க உஷாராகட்டுமேன்னு!''

இவ்வளவு வெளிப்படையாக ஒரு நடிகர் பேசி நாம் கண்டதில்லை. இவரது இதுபோன்ற பேட்டிகளே இவரை நாம் கவனிக்க வைத்தது எனலாம்!


இவர் கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்கு போட்டுக் காட்டவில்லை என்று கேட்டதற்கு ”அவருக்கு உடம்புக்குச் சரியில்லாத நேரத்துல போட்டுக்காட்டி, அவரை ஏன் சிரமப்படுத்தணும்னுதான் படம் காட்டலை. எனக்குத் தெரியாதா... என் படம் எப்படி இருக்கும்னு!'' என்கிறார்!

இவரை கிண்டல் செய்வதற்கு இவர் செய்யும் பந்தா காரணமாக இருக்கிறது என்றொரு கூற்று இருக்கிறது. யார்தான் சார் பந்தா பண்ணல? நம்ம அங்கிள் சொல்வது மாதிரி Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்பாடுதான் இவை. எல்லாருக்குமே தங்களை பிறர் கவனிக்க வேண்டுமென்று இருக்காதா என்ன? அதுவும் ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் வசதியான குடும்பத்தில்தான் பிறந்திருகிறார். 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. மூன்று ஒயின் ஷாப்புகளுக்கு ஓனராக வேறு இருந்திருக்கிறார்! இவர் பந்தா பண்ணுவதில் என்ன தவறு? தனக்குத்தானே போஸ்டர் அடித்துக்கொண்ட பல பேரை நாம் மறந்துவிடக்கூடாது!

‘உங்க ஊர்ல படம் ஓடணும்ன்னு பிரியாணியும் 100 ரூபாய் பணமும் கொடுத்தது நிஜம்தானே’ என்றால் ‘ஆமாங்க. சொந்த ஊர்ல மண்ணைக்கவ்வக் கூடாதுல்ல?’ என்கிறார்! எத்தனை பேருக்கு இப்படி உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபாவம் இருக்கிறது?

இவை எல்லாவற்றையும் விட ரித்தீஷைக் குறை கூறுபவர்கள் சொல்வது ‘ஃபேமஸ் பட டைட்டிலை பயன்படுத்தறார்’ என்பது. நாம் மட்டும் என்ன? லக்கிலுக் ஒரு பதிவு எழுதினால் அதே தலைப்பில் எழுதுவது, லக்கிலுக்கையோ, யெஸ்.பாலபாரதியையோ தலைப்பில் எழுதி கவர்வது. தமிழ்மணத்தை வம்புக்கு இழுப்பதுபோல தலைப்பு எழுதுவது, பரிசல்காரனை.. (ஓ.. அது நாந்தான் இல்ல?) இதெல்லாம் எதற்கு செய்கிறோம்? பிறர் கவனத்தை நம் பக்கம் திருப்பத்தான். அதை ரித்தீஷ் செய்யும்போதுமட்டும் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம்?

இன்று கூட லக்கிலுக் எழுதிய நாயகன் திரை விமர்சனத்தை ரித்தீஷின் பட விமர்சனம் என்று நம்பித்தான் 100% பேரும் படிக்கப் போகிறார்கள்... இதுவே லக்கிலுக்கின்... ச்சே.. ஜே.கே.ரித்தீஷின் வெற்றி!

தேவையில்லாத பின்குறிப்பு: சமீபத்தில் நான் ஜே.கே.ரித்தீஷின் (தற்காலிக) கொ.ப.செ.வாக புதுகை எம்.எம்.அப்துல்லா-வால் அறிவிக்கப்பட்டதற்காக எழுதப்பட்ட பதிவு இது.

ஆனாலும் இந்தப் பதிவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்!

Friday, August 15, 2008

அவியல் 15.08.2008

எல்லோருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!

(நடுவுல இருக்கறது தெரியலன்னா செலக்ட் பண்ணிப் பார்த்துக்கோங்க!)

எல்லா சுதந்திர தினத்திலும் இது எனக்கு நடக்கும். அதாவது யாரோ ஒருத்தர் கொடியைத் தலைகீழாக குத்திக்கொண்டு இருப்பார். இன்று காலை மீரா, மேகாவை ஸ்கூலில் விட்டுவிட்டு உமாவை அழைத்துவர திரும்பி வந்தபோது ஸ்கூல் கேட் அருகே ஒருத்தர் தலைகீழாய் கொடியைக் குத்திக் கொண்டிருந்தார். அவரது பையனுக்கும் தலைகீழாய்க் குத்திவிட்டிருந்தார்.

“சார். கொடி தப்பா இருக்கு. பச்சை நிறம் கீழ வரணும்” என்றேன்.

“அப்படீங்களா? வாட்ச்மேன் இத சொல்லாம அப்படியே குடுத்துட்டான்”

“ஏங்க.. இது நமக்கா தெரிய வேண்டாமா?” என்றபோது ‘ஞாபகமிருக்கறதில்லீங்க’ என்றவருக்கு ஒரு டிப்ஸ் குடுத்தேன்.

“செவ்வானம், பசுமையான பூமின்னு ஞாபகம் வெச்சுக்கோங்க” என்றேன்.

வானம் மேலே. பூமி கீழே!

-------------------


NECC (National Egg Co-Ordination Committee) வெளியிட்டிருந்த ஒரு பேப்பர் விளம்பரம் பார்த்தேன். சச்சின், ஜாகீர்கானெல்லாம் இருக்கும் அதில் வெளியிட்டிருந்த வாசகம் கிறுக்குத்தனமாக இருந்தது. `இன்று உங்களுடைய முட்டையை சாப்பிட்டீர்களா?’ – இதுதான் வாசகம். இப்படியா கேட்பார்கள்? `இன்று உங்களுக்கான முட்டையை சாப்பிட்டீர்களா?’ என்றிருந்திருக்கலாம்.

அதைப் படிக்கும்போது சினிமாத் துறையில் இருந்த என் நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது. வெங்கடாசலம் என்ற அவர் ஜனனி ஆர்ட்ஸ் என்று உடுமலையில் நடத்தி வருகிறார். சென்னையில் இருந்தபோது ஆர். பார்த்திபன் பொண்டாட்டி தேவை படம் ஆரம்பித்த சமயம் அந்தப் படத்திற்காக சில விளம்பர டிசைன்கள் எழுதிக் கொண்டுபோயிருக்கிறார். `ஆர். பார்த்திபனின் பொண்டாட்டி தேவை’ என்று! பிறகு பார்த்திபன் சுட்டிக் காட்ட, `ஐயோ..ஸாரிங்க’ என்று. பார்த்திபன் சொன்னாராம்.

”என் குருவே இந்தத் தப்பைப் பண்ணியிருக்காரு. அவரு டைரக்ட் பண்ணின சின்ன வீடு படத்துக்கு மொதல்ல `ஏ.வி.எம்-மின் சின்னவீடு’ ன்னுதான் எழுதினாங்க. அப்புறம்தான் `ஏ.வி.எம். அளிக்கும் சின்னவீடு’ ன்னு மாத்தினாங்க”

-----------------------

எனக்கு கோவையில் ஒரு கடையில் பேண்ட், ஷர்ட் எடுத்து ட்ரையல் பார்க்கும் போது எப்போதும் போல டரையல் ரூம் முன் நின்றிருந்த உமாவிடம் கருத்து கேட்டபோது `திரும்புங்க’ என்று பார்த்தார். ரொம்ப நாளாக கேட்க வேண்டுமென்று நினைத்திருந்த கேள்வியை உமாவிடம் கேட்டேன்.

“எப்போ புது ட்ரெஸ் போட்டுக் காட்டினாலும் பின்னாடி பார்த்து கருத்து சொல்றியே.. ஏன்? முன்னாடிதானே எல்லாரும் பார்ப்பாங்க?”

“முன் பக்கம் ஆம்பிளைங்கதான் பார்ப்பாங்க. அவங்க டேஸ்ட் உங்களுக்கு தெரியும். ஆனா பெண்கள் ஆண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது ஸ்ட்ரெய்ட்டா பேசீட்டு போய்டுவாங்க. சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்”

பேச்சிலர்ஸ் நோட் பண்ணிக்கங்கப்பா!

-------------------------------


நேற்று பரிசல்காரனுக்கான பெயர்க் காரணம் சொன்னதற்குப் பிறகு பல வலையுலக நண்பர்களிடமிருந்து அழைப்புகள்! ‘அந்த பரிசல் அமைப்புல என்னென்ன செய்றீங்க’ என்று கேட்டு ‘என்னையும் கூப்பிடுங்க. என்னால முடிஞ்ச என்ன உதவின்னாலும் செய்யறேன்’ என்றார்கள். என் பரிசல் நண்பர்கள் ‘ஏன் கிருஷ்ணா எழுதினீங்க?’ என்று லேசாக வருத்தப்பட்டார்கள். அவர்கள் வருத்தத்துக்கு காரணம் இப்படி ஆரம்பித்தபோதே இதை விளம்பரப்படுத்தவே கூடாது என்று பேசிவைத்திருந்தோம். உதவி செய்வது என்பது நிர்பந்தமாக ஆகிவிடாமல், போகிற போக்கில் செய்துவிட்டுப் போவது போல இருக்கவேண்டும் என்பதால். ஆனால் எனக்கழைத்த நண்பர்களின் கருத்தும் அப்படியேதான் இருந்தது. இதில் நான் சொல்லக்கூடாத, ஆனால் சொல்ல வேண்டிய விஷயம். அவர்களது பெயர்கள்!

ஆம்! அழைத்த எல்லாருமே சொல்லிவைத்த மாதிரி `என்ன காரணம் கொண்டும் என் பெயரை சொல்லக்கூடாது’ என்றார்கள்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!
----------------------------


இந்தவாரம் எனக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அரசிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல்! தமிழக அரசுதான் நம்மளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கல! இது அமெரிக்கா அரசிடமிருந்து வந்தது! Jokes apart அமெரிக்காவில் இருந்து அரசு செல்லையா என்றவரிடமிருந்து `பரிசல்காரன் என்று எழுதுவது நீங்கள்தானே?’ என்று ஆரம்பித்து ஒரு அஞ்சல். ‘உன்னைத்தாண்டா தேடீட்டிருக்கேன்’ என்று அடுத்தவரி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஏகத்துக்கும் பாராட்டி எழுதியிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதுவும் போதாதென்று இரு நாட்களுக்கு முன் அலைபேசியில் அழைத்துப் பேசினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சொல்ல மறந்துவிட்டேன். அவர் அமெரிக்காவில் கடந்த 23 ஆண்டுகாலம் வாழ்ந்து வருகிறார். மருத்துவ உயிரியல் துறை (Biomedical sciences) பல ஆண்டுகள் ஆய்வு செய்து, தற்போது ஆசிரியப்பணி செய்கிறார்.
அவருக்கு இங்கே ஒரு ஸ்பெஷல் நன்றியைச் சொல்லவே இதை இங்கே எழுதுகிறேன்!

நன்றி ஐயா!

-----------------------

(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா?)

Thursday, August 14, 2008

நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்

நான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது! (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்!) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்!

எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....

அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!

பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!

1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.

போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.

இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.

பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!

நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!

எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!

என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!

இறுதியாக...

சே.பிருந்தா என்றொரு கவிதாயினி எழுதிய கவிதை:-


நேரே கண்பார்க்க தயங்கி
தரை பார்ப்பினும் கண்கூசும்
உன் வீட்டு பளிங்கு தரை


சற்றே கோணம் திரும்ப
சுவரின் உயர்தர டிஸ்டம்பர்
கண்ணில் உறுத்தும்


பலபக்கம் வியூகம் வைத்து
எனை மூலையில் தள்ளிடும்
உன் வீடு.


என் கம்பீரம் குன்றி..
சிற்றெறும்பாய் சிறுத்து....


எனை நானாய்
என் வீட்டிலேயே இருக்கவிடு!



படிச்ச சந்தோஷத்தோட மேல வலது மூலையில போய் ஒட்டுப் போட்டு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுங்க!

(நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்திய குசும்பனுக்கு வாழ்த்துக்கள்!!)


Wednesday, August 13, 2008

வால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அன்புள்ள வால்பையன்!

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் பீர் போத்தலையும், சைட் டிஷ்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்துத் தொலைக்கவில்லை! மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம், உங்களது பதிவுகளை வேறு வழியில்லாமல் வாசித்து வருகிறேன்.

அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.

கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது சமீபத்திய சந்திப்பு ஒன்று. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார். 6.6%க்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சரக்கையடித்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமென்று!

ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த சரக்கடிப்பது என்பது ஒண்ணாம் நெம்பர் கெடுதலான பழக்கம். எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.

ஆனால் நீங்கள் போதை என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.

உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில், எப்போதாவது பீர், பிராண்டி மற்ற எல்லா சரக்குகளையும் அடியுங்கள். நல்ல வெளிநாட்டு மதுவகையை நாடுங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு சரக்கு மாஸ்டராகக்கூட வரமுடியும். (கோட்டர் கோயிந்தசாமி கோவை வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)

போதையுலகு ஒரு மிரேஜ். சில சரக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ஒருத்தன் சரக்கடித்து உளறும்போது அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மட்டையானால், தங்கள் போதைக்கு அடுத்த ஊறுகாய் தேடிப் போய் விடுவார்கள். அதைப் போல எல்லா பார்களிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் முதன் முதலில் பீரடித்த போதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.

சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1) காலையில் எழுந்தது முதல் இன்று என்ன சரக்கடிப்பது. எதை சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?

2) எத்தனை பேர் நமது பக்கத்து பெஞ்சில் என்ன சரக்கடிக்கிறார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?

3) கோவிலில் கழிக்கும் நேரம் நீங்கலாக மற்ற அனைத்து நேரமும் மப்பிலேயே வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?

5) எப்போதடா டாஸ்மாக்கில் போய் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?

6) உங்கள் குவாட்டரை சிந்தாமல் அடிக்க முடிகிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.

இரவில் நெடு நேரம் உங்களை டாஸ்மாக்கில் காண முடிகிறது.

(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் டாஸ்மாக்கில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இல்லை. இருந்தாலும் சொல்ல முடியாது.)

இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious டாஸ்மாக்குக்கல்ல.

பகல் பூராவும் முதலாளி கார்த்திக்கின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த டாஸ்மாக்கில் நடமாடுவது நியாயமா?

எனக்குத் தெரிந்து டாஸ்மாக்கில் கணக்குப் பிள்ளையாயிருந்த எவனோ ஒருத்தன் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கல்லாவை காலி பண்ணி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறான்.

ஒரு பெண் தேவதையைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவளுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரியாக அவள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.

அவ்வப்போது சரக்கடியுங்கள். அதிகமா சரக்கடிப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.

வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு ஸ்பான்சர் கிடைத்து பாரும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது குடித்துக் கொண்டிருப்பவர்கள்.

குடிப்பதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது குடிக்காவிட்டால் … (சரி வேண்டாம்.)

இன்னும் சிலர் டாஸ்மாக்கிலேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு குவாட்டர் பாட்டில் ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது குடிப்பார்கள்

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் குடிகார நாயே என்று திட்ட வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களுக்கு குவாட்டருக்கு மேல் வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.

இன்னும் சிலர் மேல்தட்டு குடிகாரர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஒரு பீர். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! குடிப்பதைவிட குடிகாரர்களை அவதானிப்பவர்கள்.

பீர்முகம்மது போன்றோர் மாதிரி அளவாக, ராவாக மாதம் ஒரு முறை அல்லது வருடம் இருமுறை முறை குடியுங்கள்.

Kindly be a balanced man. Don’t get excited!

எல்லாருக்குமே தான் மப்பில் இருக்க வேண்டுமென்ற உந்துதல் இருக்கும்.

குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.

தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?

ஒரு முறை கோட்டர் கோயிந்தசாமியிடம் கேட்டேன்.

“ஐயா! விஸ்கியும், பிராண்டியும் இவ்வளவு ராவாய் அடிக்கிறீர்கள். ஊற்றியும் கொடுக்கிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு பார் ஆரம்பித்து அதில் குடித்துக் கொண்டேயிருக்கக்கூடாது?”

“அதிகம் கோட்டர் கிடைக்காத டாஸ்மாக் ஊழியன் தனது இல்லக் கிழத்தியை வைத்து சாராயம் காய்ச்சும் பணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.

கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். அன்றிலிருந்து 4 நாட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.

வால்பையன்! மீண்டும் சொல்கிறேன். போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். உடல்நலம் கெடுவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் டாஸ்மாக் உலகம்!


பின்குறிப்புகள்:

1. நேற்று முழுதும் இருந்த இறுக்க மனநிலை தவிர்க்கவே இந்த மொக்கை!

2. இப்படி ஒரு மொக்கை வரும் என்று எழுதும் முன்னும், எழுதியபின்னும் வால்பையனுக்கு தெரிவிக்கப்பட்டது.

3. லதானந்த் அங்கிளுக்கும், ஐயா உங்க லெட்டரைப் போல நானும் ஒண்ணு எழுதீருக்கேன். கிண்டல் பண்ணினதா நெனச்சுக்காதீங்க என்று அலைபேசியிலழைத்துச் சொல்லப்பட்டது! “போட்டுக்கடா மாப்ளே” என்று அனுமதி கொடுத்த அவருக்கும் நன்றி!

4. நான் ஒரு நாளில் இணையத்தில் அமர்வது 45 நிமிடம் முதல் இரண்டு மணி நேரங்கள். என் உமாவின் அனுமதியுடன், ஞாயிறு ஒன்பது மணிக்குள் பதிவிட்டபின், அந்த தினம் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே!

5. இந்தக் கடிதம் கிண்டலடிக்கும் தொனியில் எழுதப்பட்டாலும் வால்பையன் வாரம் இருநாள் தவிர்க்க இயலாமல் சென்றுவரும் டாஸ்மாக் பயணத்தை நிறுத்தும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. (அவரிடம் அனுமதி பெற்று)

6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.

7. நான் கெட்ட கேட்டுக்கு அடுத்த பதிவு 100ஐத் தொடுது! அதுல என்ன தலைப்புல எழுதறதுன்னு உங்களையே கேட்டிருக்கேன். சைடுல இருக்கற POLL ல க்ளிக்கி ஓட்டுப் போடுங்க.

8. ”ஒண்ணும் எழுதாதே”ங்கற ஆப்ஷன் குடுக்கல. குடுத்தா அதுதான் அதிக ஓட்டு வாங்கும்ன்னு தெரியும்!

(டேய்... ப்ளாக்குல போறவனே, வாரத்துக்கு ஒண்ணு எழுதுடான்னா, அந்த ஒண்ணையே ஏழு பதிவோட நீளத்துக்கு எழுதுவியா நீ? இரு..இரு.. உனக்கு அடுத்த கடிதம் தயாராய்கிட்டே இருக்கு!!)

இந்தப் பதிவிற்கான லேபிள்: (200 கேரக்டருக்குமேல் BLOG ஏற்றுக்கொள்ளவில்லை. என் கேரக்டருக்கு அது ஒத்துவராத்தால் இங்கே கொடுக்கிறேன்!)

மொக்கை, சீரியஸ், உயிர்த்தெழுதல், வால்பையன், சரக்கு, அங்கிள் கோவப்படமாட்டார், இவன் திருந்தமாட்டான், எக்கேடோ கெட்டு ஒழிங்கடா, என்ன கொடுமை பரிசல் இது, என்ன கொடுமை அங்கிள் இது? முத்துதங்கச்சிக்கு நன்றி, வேலண்ணனுக்கு நன்றி, மை ஃப்ரண்டுக்கு நன்றி, அதிஷாவுக்கு நன்றி, ஜிம்ஷாவுக்கு நன்றி, நாமக்கல் சிபிக்கு நன்றி, குசும்பனுக்கு நன்றி, சஞ்சய்க்கு நன்றி, ஈரோடு கார்த்திக்கு நன்றி, வால்பையனுக்கு நன்றி, லக்கிலுக்குக்கு நன்றி, சென்ஷிக்கு நன்றி, கோவியாருக்கு நன்றி, எல்லாருக்கும் நன்றி

Monday, August 11, 2008

சீரியஸா எடுத்துக்காதீங்கப்பா!

இதைப் படிச்சுட்டு தமிழை யாருடா இனி காப்பாத்துவா-ன்னு யாரும் வருத்தப்பட்டுக்க வேண்டாம்!

என்மீது அக்கறை கொண்டுள்ள ஓரிரண்டு பேரின் அறிவுரைக்கேற்ப வலைப்பதிவில் இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்!

நான் என் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும், லதானந்த் அங்கிள் பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டார்!

என் மீது அக்கறை கொண்டு என் பதிவுகளைப் படித்து, பின்னூட்டமிட்ட எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி! என்ன செய்தாலும் உங்களுக்கு கைமாறு செய்துவிட என்னால் முடியாது.


அவ்வப்போது மட்டும்தான் இனி எழுதுவேன். (இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒன்றா? என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த பரிசல்காரன் கேட்கிறான்!)

இதற்கு இடப்படும் பின்னூட்டங்களைக்கூட நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை!

என் மெய்ல் பாக்ஸை மட்டுமே இனி பார்ப்பேன் என நினைக்கிறேன்.

அளவில்லா அன்போடு-
பரிசல்காரனாக இருந்த
கிருஷ்ணகுமார் K.B.
(kbkk007@gmail.com)

(ஐயா.. சாமீ... இதுக்கு முன்னாடி போட்ட தலைப்பு, மேட்டரையெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க..)

(இவனைத் திருத்தவே முடியாதுப்பா....!)

இனிமையான ஈரோட்டுப் பயணம்

சனிக்கிழமையன்று ஈரோடு சென்றதைப் பற்றி நேற்று பதிவு போட்டு, பதிவர் வால்பையனின் புகைப்படத்தையும் கொடுத்திருந்தேன்.

அந்தப் பதிவிலேயே, என் புகைப்படத்தை (முதன்முதலாக) பார்த்த பல லட்சக்கணக்கான... சரி..சரி... சில நண்பர்கள் “யோவ்.. அது நீதானா? கல்யாணம் ஆயிடுச்சுன்னு புருடா விட்டயா?” என்றெல்லாம் கேட்டு காய்ச்சி எடுத்து விட்டார்கள்!

எனக்கு உங்ககிட்ட வயசைச் சொல்றதுல எந்த வருத்தமும் இல்ல!

13.05.1974 – நான் பிறந்ததேதி.
22.08.1997 – திருமணமான நாள்! (23 வயசுலேயே!)

****************

ஓக்கே, மேட்டருக்கு வருவோம்!

வெயிலானுடன் அவர் நண்பர் நந்தகோபால், கார்த்திக் மற்றும் எங்கள் தேரின் சாரதியாக நண்பர் ராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள்.



(வெயிலான், நந்தகோபால், ராஜ், கார்த்திக் (தொழிலதிபர்)

நந்தகோபால் ஒரு விஷயஞானி! எந்த சப்ஜெக்டைப் பற்றி என்றாலும் பேசித் தள்ளுகிறார். ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும், ஓஷோவைப் பற்றியும் அவர் பேசியதைப் பற்றி தனிப்பதிவே போடலாம்!

கார்த்திக் ஒரு தொழிலதிபர். (நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா) ஒண்ணுமே பேசாமலே வந்தார். மூன்று மணிக்கு கிளம்பி இரவு ஒரு மணிவரை சேர்ந்திருந்த இவர், பதினோரு மணிக்கு ஒரு கேள்வி கேட்டார் பாருங்க..

“ஆமா.. இவரு யாரு? எங்கிருந்து வந்திருக்காரு?”ன்னு, அதுவும் என்னைப் பாத்து கேட்டுட்டாரு!

ராஜ் எந்தக் கும்மியிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தார். எங்கள் மொக்கைகளைக் கேட்டுக்கொண்டே பொறுமையாக காரோடியதற்கு இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! (இதில் நடுநடுவே நந்தகோபால் வேறு அவருக்கு காரோட்ட ஐடியா குடுத்துக் கொண்டிருந்தார்!)



ஊத்துக்குளிக்கு முன் விஜயமங்கலத்தில் ஒரு மிகப் பெரிய பாலம் கட்டியிருந்தார்கள். அங்கே நிறுத்தி சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். அந்தப் பாலம் எப்போது கட்டினார்கள், எப்போது திறந்தார்கள் என்று விரல் நுனியில் விஷயம் வைத்திருந்து எடுத்துவிட்டார் நம்ம நந்தகோபால்!




(நந்தகோபால், ராஜ், அடியேன்)

ஈரோடு நெருங்குமுன், வால்பையனுக்கு தமிழ்மணத்திலிருந்து பேசுவதாகவும், நட்சத்திரப் பதிவராய் நீங்கள் தேர்வாகியிருக்கிறீர்களென்றும் சொல்லி கலாய்த்து, அவர் அதை நம்பி மிகப் பெரிய லெக்சர் ஒன்று கொடுக்க நான் மண்டை காய்ந்து போய், உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று!

ஈரோட்டில் காரை நிறுத்திக் காத்திருந்து, வால்பையன் வர முதன்முதலாக அவரைச் சந்தித்தோம். காலையிலிருந்து வேலை தந்த அலைச்சலால் சோர்ந்துபோய்க் காணப்பட்டார் வால்பையன். கொஞ்சநேரத்துக்கு வெயிலானைப் பரிசல்காரன் எனவும், நான் வெயிலான் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். ரொம்ப டீடெய்லா அவர் சில விஷயங்கள் கேட்கவே குட்டை உடைத்துவிட்டோம்!



(வால்பையன், வெயிலான்)

வால்பையன் ஈரோட்டில் செல்வாக்கு மிக்கவர் என்பது பார்த்தால் தெரிவதில்லை. அரசுக்கு சொந்தமான பல இடங்களுக்கு அனாயாசமாக அவர் செல்வதிலிருந்தும், அங்கிருக்கும் அரசு ஊழியர்களை அவர் வேலை வாங்குவதிலிருந்தும்தான் தெரிகிறது! அவரோடு வேறொரு இடத்துக்குப் போய் பல உலக விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். விஜய் டி.வி. நீயா நானா பற்றி பேச்சு வந்தபோது ”கோபிநாத் அடுத்தவங்க சொல்றத வெச்சு ப்ரோக்ராம் நடத்தறாரு” என்று நந்தகோபால் சொல்லிவிட, விவாதம் காரசாரமானது!

நடுவில் கார்த்திக் வந்தார். இவரும் ஒரு பதிவர். ரகசிய கனவுகள் என்ற வலைப்பூ எழுதி வருகிறார். உலக சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறார்.

“என் வலைப்பூவுல நிறைய பேரோட ப்ளாக்குக்கு சுட்டி குடுத்திருக்கேன். உங்களுக்குக் குடுக்கல. ஏன்னா எப்பப் பார்த்தாலும் ச்சும்மா மொக்கையாவே எழுதறீங்க” என்றார். சென்ஷிதான் பிடித்த பதிவராம். அய்யனாரையும் விடாமல் படிப்பாராம். ”உங்க பதிவுகளைப் படிக்கறப்ப நீங்க சென்ஷிக்கு கொஞ்சமாவது நண்பர்ன்னு நெனைக்கறேன். அந்த மரியாதைக்குதான் உங்ககிட்ட பேசறேன்” என்றவர்..

”உங்களுக்கு நகைச்சுவை ரொம்ப சரளமா வருது. நீங்க சினிமாவுக்குப் போகலாமே” என்றார். ”வாரா வாரம் போய்ட்டுதான் இருக்கேன்” என்றேன் நான்.

அவர் என் வலைப்பூவிற்கு சுட்டி கொடுக்காத கோபத்தில் அவரை நேரடியாகப் படமெடுக்காமல், முதுகை மட்டும் படமெடுத்தேன்!




(பதிவர் கார்த்திக்கின் முதுகு)

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், கார்த்திக் வால்பையனின் முதலாளியாம்! ஆனால் வால்பையனுக்கு எல்லா பணிவிடையும் இவர்தான் செய்துகொண்டிருந்தார். போதாதென்று வால்பையனை, `பாஸ்’ என்றுதான் அழைக்கிறார். அவர்கள் இருவரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது!

இடையே நந்து f/o நிலா வந்தார். “புத்தகக் கண்காட்சிக்கு போய்ட்டு வந்துடுங்க. டின்னருக்கு உங்ககூட நான் கலந்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். உடனே நாங்கள் புறப்பட்டு புத்தக் கண்காட்சிக்குப் போனோம். (புத்தகக் கண்காட்சியும், புத்தகங்களும் பற்றி நாளை எழுதுகிறேன்!)

புத்தகக் கண்காட்சியில் இருக்கும்போதே, நந்து f/o நிலா அழைத்து டின்னருக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, எல்லாருக்குமே டிஃபன் வாங்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவரது அன்பிற்கு அடிபணிந்து நாங்கள் சீக்கிரமாகவே கிளம்பி சாப்பிடப் போனோம்! அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். இடையிடையே ஒரு சில விஷயங்களுக்காக அவர் என்னை உரிமையோடு திட்டவும் செய்தார். அங்கிருந்தே ஆழியூரான், ரமேஷ் வைத்யா, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, லதானந்த், (வடகரைவேலன் ஃபோனை எடுக்கல!) ஆகியோரோடு தொலைபேசியிலும் பேசி சுவையாகப் பலவிஷயங்களை விவாதித்தோம்!




(நந்து f/o நிலா, வெயிலான்)
ஒவ்வொரு பயணங்களின் போதும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்கிறேன் நான். இந்தப் பயணத்தில் வெயிலான் & தொழிலதிபர் கார்த்திக்கின் அமைதி, நந்தகோபாலின் விஷயஞானம் தந்த பிரமிப்பு, வால்பையனின் குழந்தைத் தனமான அன்பு, அவரது பாஸ் கார்த்திக்கின் ரசிப்புத்திறன் & பொறுமை, நந்து f/o நிலாவின் சகலகலா திறமை ஆகியவைகள் என்னை இன்னும் விட்டு விலகாமல் இருக்கின்றது!

வால்பையனுக்கு ஒரு வேண்டுகோள்: உடம்பைப் பார்த்துக்குங்க தலைவா!

கடைசியாக நந்து f/o நிலா சொன்ன ஒரு விஷயம் என்னை எக்கச்சக்கமாய் சிந்திக்க வைத்தது. நீங்களும் இதைப் பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.

“ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். சுதாரிச்சுக்கங்க” என்றார்.

இந்த வாய்ப்பை எனக்கு தந்த வெயிலானுக்கும், எங்கள் பயணத்தை இனிமையாக்கிய சாரதி ராஜுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!

Sunday, August 10, 2008

பதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)

நேற்று வெயிலான் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குப் போகலாமா என்று கூப்பிட்டதோடு மட்டுமின்றி காரை எடுத்துக் கொண்டு வந்தும் விட்டார். காரோடு, ஈரோடு போனோம்!




(வெள்ளைச் சட்டை - வெயிலான், வெள்ளை மனசு - அடியேன்!)

ஈரோடு என்றதுமே, வெயிலானின் செல்லிலிருந்து வால்பையனை அழைத்தேன். அந்த சம்பாஷணையை நீங்களும் கேளுங்க..

“வால்பையன்-ங்களா?”

“ஆமாங்க. நான் சசிக்குமார் பேசறேங்க”

“எங்கிருந்து?”

“தமிழ்மணத்துலயிருந்து”

மனுஷன் அந்தப் பக்கம் எழுந்துட்டாரு! “சார்.. சொல்லுங்க சொல்லுங்க”

“இந்த வாரம் நட்சரத்திரப் பதிவரா உங்களை தேர்வு செஞ்சிருக்கோம். எழுத முடியுமா?”

அவ்வளவுதான். ஏங்க, ஒரு மனுஷன் `எப்படி தமிழ்மணத்துக்கு என் நம்பர் கிடைக்கும்’ன்னு கூடவா யோசிக்க மாட்டாரு? அநியாயத்துக்கு நல்லவரா இருந்தாரு! உடனே “சார்... ரொம்ப நன்றிங்க. நான் என்னோட தொழிலைப் பத்தின நிறைய விஷயங்களை பதிவா போடணும்ன்னு நெனைச்சிருக்கேன். போன வாரம்தான் எங்க பாஸ்கிட்ட நட்சத்திரப் பதிவரா செலக்ட் ஆன மாதிரி கனவு கண்டேன்ன்னு சொல்லீட்டிருந்தேன். இப்ப பலிச்சிடுச்சு” அப்படி ஆரம்பிச்சு நான் `ஹலோ ஹலோ’ ன்னு கத்தினதைக் கூட கேக்காம பூரிச்சுப் போய் புளகாங்கிதமாகி...

எனக்கு ஏண்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு!

நேர்ல பாத்தப்ப ஒரே பக்திமானா இருந்தாரு. கோவிலுக்குப் போலாம், கோவிலுக்குப் போலாம்ன்னு ஒரே நச்சரிப்பு! புத்தகக் கண்காட்சிக்கு முதல்ல போலாம்ன்னதக் கூட கேக்கல!

அவ்ளோ நல்லவரு ஃபோட்டோ எடுத்தப்ப, ”என் ஃபோட்டோவைப் போடதீங்க”ன்னு சொன்னாரு!

அவரு திட்டினாலும் பரவால்லன்னு அவரு ஃபோட்டோ போடறேன்.


ஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றியும், அதற்கு முன்னும், பின்னும் நாங்கள் போன புனிதத் தலங்கள் பற்றியும் நாளைக்கு எழுதறேன்.


ஓக்கேவா?

ஸாரிங்க வால்பையன் உங்க பேச்சைக் கேக்காம உங்க ஃபோட்டோ போடறதுக்கு!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*