நான் இணையத்தில் எழுதுவதற்கு எப்பேர்ப்பட்ட விஷயங்களையெல்லாம் தியாகம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை சொன்னால் இன்று முழுவதும் போதாது. அப்படி இப்படி ஆஃபீஸில் ஓபியடித்து, வீட்டில் விளக்குமாற்றால் அடிவாங்கி என்று பல குட்டிக்கரணங்களைப் போட்டு தமிழுக்குச் சேவையாற்றிக் கொண்டிருந்த கட்டகாலத்தில்.. மன்னிக்கவும் காலகட்டத்தில் நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாகப் போட ஒருவர் முன்வந்தார்.
சிறுகதைத் தொகுப்பு குறித்த பேச்சு ஆரம்பிக்கும் பொழுதே நான் அவரிடம் கேட்டது: “தொலைபேசியில் அழைத்து அனுமதி கேட்கிறீர்களே... ரஜினிகாந்திடம் இதே போல அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்புப் போட ஃபோனில்தான் அனுமதி கேட்பீர்களா?”
அவருக்கு பதிலளிக்க முடியவில்லை. ஃபோன் கட்டானது. சரி.. பேலன்ஸ் இல்லாமலிருந்திருக்கலாம். அது இல்லை என் விசனம். என்னைப் பார்த்து இப்படி போகிற போக்கில் கேட்டுவிட்டாரே என்பதுதான்.
அவர் செய்த அந்த அவமானத்தையும் மறந்து புத்தகம் போட அனுமதி அளித்தேன். வெளியீட்டு விழா நடத்தும் பேச்சு வந்தபோது நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான் ‘எந்தக் காரணம் கொண்டும் என் புத்தக வெளியீடு கலைஞருக்கோ, ரஜினிக்கோ தெரியக்கூடாது’ என்பதே அது. அவர்களுக்குத் தெரிந்தால் அனைத்து அலுவல்களையும் ஓரங்கட்டி விட்டு என்மீதும், என் எழுத்தின் மீதிருக்கும் அன்பிற்காக ஓடோடி வந்துவிடுவார்கள் என்பது தெரியும்.
புத்தகம் வெளியானது. பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுகள். அந்த நேரத்தில் செல்வேந்திரன் என் புத்தகத்தைக் காட்டமாக விமர்சித்து ஒரு பதிவு எழுதுகிறார். வெலவெலத்துப் போகிறேன் நான். ஒரு நாளின் 26 மணி நேரத்தையும் எழுத்துக்காக அர்ப்பணித்தவனுத்துக்கு இவர்கள் தரும் பரிசு.. கிண்டலும் கேலியுமா?
இவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஊட்டி மசினகுடிக்கு அருகே தெரியும் ஒற்றையடிப்பாதை வழியே சரியாக நாற்பத்தி ஆறேகால் நிமிடம் நடந்தால் தெரியும் பழங்குடியினரிடம் என்னுடைய எழுத்தைப் பற்றிக் கேட்டால் சொல்வார்கள் ‘க்க்வா ச்சா ம்மா ச்சே க்கீ க்கூ’ என்று. எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த சந்ததி அவர்களுடையது. இன்றைக்கும் அவர்களுடைய ஒவ்வொரு முக்கியமான பிரச்சினைகளுக்கும் என்னை அழைக்காமல் விட்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் என் எழுத்தை மதிக்க நாதியில்லை. நாற்பத்தி எட்டாயிரம் ஓவாய்க்கு ஒரு கைக்கடிகாரம் அணிந்து கொண்டு அடுத்த வேளைச் சோற்றுக்குப் பிச்சை எடுக்கும் தலையெழுத்து தமிழ் எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்த்திருக்கும்.
இதையெல்லாம் இங்கே சொல்லக் காரணம்?
நேற்றைக்கு என் பதிப்பாளர் அழைத்தார். எனக்கும் அவருக்குமான உரையாடல்:

“சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது”
“நான் எழுதிய டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறதா?”
“ஆமாம் பரிசல்.. ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறது. ஆனால் இதை நீங்கள் உங்கள் பதிவில் போடவேண்டாம்”
எனக்குப் புரிந்துவிட்டது. இருந்தாலும் கேட்டேன்.
“நான் எழுதிய டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதை ஏன் எழுதவேண்டாம் என்கிறீர்கள்?”
“புத்தகக் கண்காட்சி 17ம் தேதி வரைக்கும்தான் நடக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதைப் பதிவில் எழுதினால் அசுர கதியில் அவை விற்றுத்தீரும் பட்சத்தில் உடனடியாக அடுத்தடுத்த பதிப்புகள் போட முடியாதே அதனால்தான் சொன்னேன்”
நான் ஃபோனை அணைத்துவிட்டேன். என்ன கொடுமை பாருங்கள்.
சிலி நாட்டின் MEKRE TOZXCO (இதை மெக்ரே டோழ்ஸ்கோ என்று உச்சரிப்பார்கள் சிலர். ஆனால் இவர் பெயரை கேம்சே ஓஸ்கோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று நான். இன்னொன்று அவரது அம்மா) புத்தகம் வெளியானபோது வெளியான அன்றே விற்றுத்தீர அந்நாட்டின் அதிபர் தலையிட்டு ஒரே நாளில் தலா 5 பிரதிகள் கொண்ட நாற்பது பதிப்புகளை அச்சிட்டுக் கொடுத்தாராம். இங்கேதான் இந்தநிலை!
இதைப்பற்றி மேலும் பேசி என் இதயத்துடிப்பை அதிகரித்துக் கொள்ள விருப்பமில்லை. இரவு ரெண்டு இட்லி வாங்க வழியில்லை. கிம் கி டுக்கின் திருட்டு டிவிடியை நண்பர் பார்க்கக் கூப்பிட்டிருக்கிறார். அவரது பி எம் டபிள்யூவுக்காக வெய்ட்டிங். பிறகு சந்திக்கிறேன்.
.

