Wednesday, November 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - முடிவுகள்

அன்புக்குரிய 'சவால் சிறுகதைப் போட்டி' பங்கேற்பாளர்களே,

இப்படியானதொரு போட்டியின் நடுவர்களாக இருக்க வாய்ப்பளித்து சுவாரசியமான அனுபவத்தைத் தந்தமைக்கு பரிசல்காரன் மற்றும் ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் முதல் நன்றி. அனுபவம் நிறைய சிரமங்களையும் கொண்டிருந்தது என்பதே உண்மை. போட்டி குறித்த போதுமான தகவல்கள் நேற்றே இந்தத் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவிட்ட நிலையில் சில குறிப்புகளுடன் முடிவை இங்கே அறிவிக்கிறோம்.

பங்கு பெற்ற கதைகளில் நிறைய எழுத்துப்பிழைகள் காணப்பட்டன. இருக்கும் ஏராள விதிமுறைகளில் இன்னும் இறுக்கம் செய்வது தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் அவை பெரும்பாலும் பொருட்படுத்தப்படவில்லை. புதிய தளங்களை முயன்றவர்கள்/ நல்ல சிறுகதை அனுபவத்தை தந்தவர்கள் கொடுக்கப்பட்ட 'வரிகளை' வலிந்து திணித்திருப்பதாய் எங்களுக்குத் தோன்றியது. இங்கே கதையைப் பார்ப்பதா, விதிகளைப் பார்ப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.

கொஞ்சம் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் - க‌தையில் வ‌ர‌வேண்டும் என்று போட்டி விதிக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ மூன்று வ‌ரிக‌ளையும் க‌தையும் மெயின் ஃப்ளோவில் இல்லாம‌ல் "பார்த்துக் கொண்டிருக்கும் டிவி சீரிய‌லில் வ‌ருவ‌து", "சினிமாவில் வ‌ருவ‌து", "துண்டு சீட்டில் வருவ‌து" என்று ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌. க‌தையில் வ‌ர‌வேண்டும் என்ப‌துதானே விதி, க‌தையின் மெயின் ஃப்ளோவில் வ‌ர‌வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று கேட்க‌லாம்.

அப்ப‌டி பார்த்தால் இதுவ‌ரை அனைத்து மொழிக‌ளிலும் எழுத‌ப்ப‌ட்ட‌ + எழுத‌ப்ப‌ட‌ப்போகும் பில்லிய‌ன் க‌ண‌க்கான‌ அனைத்து க‌தைக‌ளிலும் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளை சேர்க்க‌ முடியும்.

உதார‌ண‌மாக‌ "என் இனிய‌ இய‌ந்திரா" நாவ‌லில்
"ஜீவாவைப் பார்க்க‌ முண்டிய‌டித்துக் கொண்டு சென்ற‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் அருகே இருந்த‌ லேச‌ர் விள‌ம்ப‌ர‌ போர்டில் இருந்த‌ க‌தைப்போட்டியை க‌ண்டு கொள்ள‌வே இல்லை. அதில்

கீழ்க‌ண்ட‌ வ‌ரிக‌ளுட‌ன் க‌தை எழுதுங்க‌ள், ஒரு கோடி ப‌ரிசை வெல்லுங்க‌ள்.

1......................
2...............................
3.......................................


என்றிருந்தது.” என்று எழுத‌ முடியும். எந்த‌ ஆங்கில‌ நாவ‌லிலும் "Something was written on the piece of paper in some indian language.....

1...........................

2...............................

3......................................."

என்றும் எழுத‌ முடியும். அப்ப‌டி விதிமுறைக‌ள் புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டால் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளும் இருக்க‌ வேண்டும் என்ற‌ விதியே தேவை இல்லை. அந்த‌ வ‌ரிக‌ளை அக‌ற்றினாலும் க‌தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றால் எத‌ற்காக‌ இந்த‌ போட்டிக்கு அந்த‌ க‌தைக‌ள்?

ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது.

வரிகளுக்குப் பொருத்தமாக இருந்த கதைகள் புதுமையாக இல்லாமலிருந்தன. அப்படியும் இருந்தால் நடை மிகவும் சோர்வடையச் செய்வதாய் இருந்தன. ஆனால் - ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் இந்தக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

நாங்களும் உங்களில் மூவர்தான் என்பதால் எங்களின் முடிவு இறுதியானதாக இருக்கமுடியாது. எங்களின் அளவுகோல்கள் உங்களின் இந்தக்கதையை மதிப்பிடத்தானே தவிர உங்களின் திறனை மதிப்பிடத் தகுந்தவை அல்ல. ஆகவே வெற்றியைத் தவறவிட்டவர்கள் தொடர்ந்து கதைகள் புனைந்து பதிவுலகில் பயணிக்க எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள். அனைத்து கதைகளுக்கும் முடிந்தவரை சுருக்கி எழுதப்பட்ட விமர்சனங்களை இந்த (ஒன்று, இரண்டு, மூன்று) பதிவுகளில் காணலாம்.

கலந்துகொண்ட 84 கதைகளிலிருந்து முதல் கட்டத் தேர்வில் இறுதிக்கட்டத்துக்கு வந்த 15 கதைகள் :

(அகர வரிசைப்படி... )

1. அதே நாள் அதே இடம் - சத்யா

2. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

3. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா

4. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

5. கம் ஆன், காமினி - அனு (இவருக்கு வலைப்பூ இல்லாததால், கதை பரிசல்காரனின் வலையில் வெளியிடப்பட்டது. கதாசிரியரின் ப்ரொஃபைலைக் காண அவரது பெயரைக் க்ளிக்கவும்)

6. கமான்.. கமான்.. காமினி - வித்யா

7.
காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

8. காட்சிப்பிழை - செல்வகுமார்

9. சவால் - புதுவை பிரபா

10. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்

11. டைமண்ட் - முகிலன்

12. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

13. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

14. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

15. வைர விழா - R V S


இதிலிருந்து பரிசுகளை வென்றவை :-

முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தாமல் மூன்று சிறப்பான கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சமமான மதிப்பெண்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தேர்வாகி தலா ரூ.400/- மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி....)


முதலிடத்துக்கான போட்டியை இறுக்கம் செய்த, ஆறுதல் பரிசுகளைப் பெறும் 2 கதைகள் (ரூ. 250 மதிப்புள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுக்கும்)


மீண்டும் ஒரு முறை பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.! பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.!

அன்புடன் -
வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, ஜீவ்ஸ்
--------------------------------------------------------------


போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.

பி.கு : போட்டியில் கலந்துகொண்ட கதைகள் 84. இதுவரை 83 எனக் குறிப்பிடப்பட்டது தவறு. எனது கதைத் தொகுப்பு இணைப்பில் கடைசி இரண்டு கதைகளுக்கு 83 என ஒரே எண் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. விமர்சனப்பதிவுகளில் நீங்கள் 85 கதைகளைக் காணமுடியும். 53ம் எண் கொண்ட ஒரு கதை போட்டிக்குரியதல்ல, தவறுதலாக நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதாகும்.

.

(Thanks For the Image to: http://www.designniac.com)

Tuesday, November 16, 2010

சவால் போட்டியின் பின்னிருந்த சவால்

சவால் சிறுகதைப் போட்டிகளின் ஒரு சில கதைகளுக்கான விமர்சனங்கள் - நேற்றைய என் இந்தப் பதிவில் காணலாம்.

மேலும் சில கதைகளுக்கான விமர்சனங்களை ஆதிமூலகிருஷ்ணனின் இன்றைய பதிவில் - இங்கே காணலாம்.


**** ***** **** **** ****

சவால் சிறுகதைப் போட்டி குறித்து ஆதி எனக்கெழுதிய அனுப்பிய பதிவு இன்றைக்கு இங்கே...

--------------------------- --------------------------------

டந்த ஆகஸ்டில் 'என்ன செய்யப்போகிறாய் மினி?' என்றதொரு மினி கிரைம் தொடரை எனது வலைப்பூவில் எழுதினேன். தொடர்ந்தது நண்பர் பரிசல்காரனின் 'மிஸ்.யாமினி' என்ற மினி கிரைம் தொடர் அவரது வலைப்பூவில். இரண்டுக்கும் நீங்கள் தந்த 'பரபர' ஆதரவைத் தொடர்ந்து ஒரு நாள் நானும், பரிசலும் கதையெழுதிய அழகினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நண்பருக்குத் தோன்றிய ஆசையே இப்படியான குறிப்புகளைத் தந்து கதைப்போட்டி அறிவிக்கும் யோசனை. 'காமினி' உருவானாள். என்னென்ன மாதிரியான எதிர்வினைகளெல்லாம் வரும் என்று நான் கருத்துச்சொன்னபோது, 'அப்படியெல்லாம் பார்த்தால் நீங்களெல்லாம்தான் இதற்குள் எழுதுவதை மூட்டைகட்டியிருக்க வேண்டும்..' என்று வாயை அடைத்தார். இருவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு போட்டியை அறிவித்தோம். வாசகங்கள் கொஞ்சம் கடுமையாகவே இருந்ததாகத் எனக்குத் தோன்றியது. ஹிஹி.. அவை பரிசல்காரனுடையவை.

'சவால் சிறுகதைப்போட்டி' என்று தலைப்பிட்டு அறிவித்துவிட்டோமே தவிர அதற்குப்பின்னால் எங்களுக்காகக் காத்திருந்த பெரிய சவால் அப்போது தெரியவில்லை. அழுத்தமான பணிச்சூழல், இருவருக்குமே இருக்கும் (தங்க)மணிச்சூழல் (இருவரும் அவ்வப்போது 'Same same.. puppy same' என்று தொலைபேசியில் பாடிக்கொள்வதுண்டு) தெரிந்தும் நாங்கள் இதில் இறங்கியிருக்கக்கூடாதோ என்று ஒரு கட்டத்தில் மலைப்பாகிவிட்டது. ஏனெனில் எனது கணிப்பாக 25 கதைகள், அதிகபட்சமாக கடைசி நேர விறுவிறுப்பில் 35 கதைகள் வரலாம் என எதிர்பார்த்தேன். நண்பரின் கணிப்பும் ஓரளவு அவ்வாறே இருந்தது. ஆனால் எங்கள் கணிப்பு தகர்ந்தது. சில விளையாட்டுகளையும் சேர்த்து 83 கதைகள் போட்டிக்கு வரும் என்று நிச்சயமாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வந்துகொண்டிருக்கும் கதைகளைப் படிப்பது, ஒரே கோப்பாக தகுந்த எண்களிட்டுக் கோர்த்துவைப்பது, நடுவர்களுக்கு மின்னஞ்சல், மற்றும் பிரிண்ட் அவுட்களை அனுப்பி வைப்பது என்பதே மிகுந்த நேரம் எடுக்கும் செயலானது. நண்பர்களின் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதே ஒரு தனி வேலையாக இருந்தது.

இவற்றிற்கெல்லாம் முதலாக நடுவர் தேர்வு ஒரு சிக்கலான தலையாய விஷயமாக இருந்தது எங்களுக்கு. நிச்சயமாகக் கொஞ்சமேனும் பிரபலமாகியிருக்கும் எழுத்தாள நண்பர்களை அணுகியிருக்க முடியும். எங்களுக்கும், எங்கள் நண்பர்களுக்கும் நண்பர்களாக சிலர் இருப்பது வசதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த 'ஸ்டார் வேல்யூ' வழியை மறுத்து 'பதிவர்களுக்குப் பதிவர்களால்..' கொள்கைப் படி பதிவர்களையே நடுவர்களாக்க முடிவுசெய்து சில பிரபல பதிவர்களை அணுகினோம். நாங்கள் தேர்வு செய்தவர்கள் ஸ்டார் வேல்யூ இருப்பவர்கள் என்பதைவிட நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எங்கள் எண்ணப்படி இருந்தார்கள். அவர்களில் கணிசமான நேரம் செலவிடத் தயாராக இருந்த மூவர் குழு போட்டியின் நடுவர்களாக இருக்கச் சம்மதம் சொன்னார்கள்.

முதலாமவர் வெண்பூ.

வெண்பூ அவரது வீட்டுச்சூழல், அலுவலகச் சூழலால் தொடர்ந்து பதிவெழுதுபவராய் இல்லாவிடினும் பதிவுலகை தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வருபவராய் உள்ளார். மேலும் எழுதுவதைவிடவும் தற்போது வாசிப்பதிலேயே மிகவும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். நாளடைவில் நிறைய எழுதுவார் என நம்பலாம். சிறுகதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். துவக்கத்தில் நிறைய கதைகள் எழுதியவர். விகடனில் இவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டாமவர் எம்.எம்.அப்துல்லா.

பதிவுலகில் துவக்ககாலத்திலிருந்தே எங்கள் நண்பர். மேற்சொன்னவை அப்படியே இவருக்கும் பொருந்தும். நண்பர்களில் நிச்சயம் அதிகம் பிஸியாக இருக்கும் நபர் என இவரைச்சொல்லலாம், ஏனெனில் பணி அப்படி. ஆயினும் மிக விருப்பத்தோடு இதில் கலந்துகொண்டார். எனக்குத் தெரிந்து பதிவுலகில் இவரது படுக்கையறையில்தான் அதிகபட்ச புத்தகங்களைக் கண்டிருக்கிறேன்.

மூன்றாமவர் ஜீவ்ஸ்.

இப்போதும் நான் ஏதும் கதைகள் என்ற பெயரில் எழுதினால் அதைப்பற்றி மெனக்கெட்டு போன் செய்து அபிப்பிராயம் கேட்கும் முதல் நபராக இருப்பவர் நண்பர் ஜீவ்ஸ். மிகச்சிறந்த ஒரு புகைப்படக்காரராக இருக்கும் அதே நேரம் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாதாமாதம் புகைப்படப் போட்டிகளை நடத்தும் 'பிட்' குழுவிலிருக்கும் அனுபவம் வாய்ந்தவர்.

ஏற்கனவே இருந்த எங்களின் எதிர்பார்ப்புகளோடு இன்னும் இறுக்கமாக, நேர்மையாக விதிகளைப் புனைந்துகொண்டனர் நம் நடுவர்கள். நாங்கள் இருவர் உட்பட யாரும் பெரும்பாலும் கதைகள் எழுதியவர்களின் வலைப்பூக்களில் சென்று பின்னூட்டமிடவில்லை. கதைகளுக்கு எண்கள் தரப்பட்டன. எழுதியவர் யாரென்ற தகவல் நடுவர்களுக்குத் தரப்படாமல் அந்த எண்கள் தரப்பட்டன. கதைகளை நிதானமாகப் படித்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் மூவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆகவே எனது தேர்வான 'முடிவுகள் தேதி : நவம்பர் 1' என்பதை முதலிலேயே அனைவரும் நிராகரித்துவிட்டனர். கணினியில் வாசிப்பதை விட ஃபீல் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் கதைகளைப் பிரிண்ட்அவுட் எடுத்தே வாசித்தார்கள். அதுவும் சென்னையிருக்கும் அப்துல்லாவுக்காக பிரிண்ட்அவுட்டுகளை எடுத்துக்கொண்டு மெனக்கெட்டு தாம்பரத்திலிருந்து சிட்டிக்குள் போன கதையெல்லாம் வேறு நடந்தது. அந்தக் கதையை தனிப் பதிவாகவே எழுதலாம். பதிவுலகுக்காக செலவு செய்யும் சில மணி நேரங்களையும் பல நாட்கள் இந்தப் பணிக்காகவே நாங்களும், நடுவர்களும் செலவு செய்ய நேர்ந்தது எனில் அது மிகையாகாது. தகுந்த இணைப்புகளுடன் கதைகளின் விமர்சனங்களைக் கோர்த்தது பரிசலின் சாதனை என்று கூட சொல்லலாம், ஏனெனில் அவரது வீட்டு இணைய இணைப்பின் வேகம் அத்தகையது. கடந்த நாட்களில் அவர் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கையும், பிறர் பதிவுகளில் அவர் நடமாட்டமும் இதன் சாட்சி.

அதுவும் நடுவர்கள் ஒரு நாளில் சுமார் 5 கதைகளை மட்டுமே வாசித்துக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இதனால் தொடர்ந்து வாசிப்பதால் ஏற்படும் சோர்வைப் போக்கவும், ஆர்வத்தைத் தக்கவைத்து முழு ஈடுபாட்டுடன் பணியை மேற்கொள்ளவும் ஏதுவாயிற்று. மேலும் முழுமையான, திருப்தியான முடிவையும், அத்தனைக் கதைகளின் சுருக்கமான விமர்சனங்களையும் அவர்களால் தரமுடிந்தது.

முதலாவது முக்கிய விதியாக கொடுக்கப்பட்ட விதிகளுக்குள் கதை அமைந்திருக்கிறதா எனப் பார்த்தார்கள். பின் கதைக்களம், நடை, சுவாரசியம் போன்ற அடிப்படையில் தனித்தனியாக மதிப்பெண்கள் தந்து முதலிடம் பெற்ற கதைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலிடம் பெற்ற பதினைந்து கதைகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவற்றுள் பரிசுக்குரியவற்றை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை பங்குபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடுவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோருக்கு எங்கள் அன்பு.

பதிவர்கள் என்றில்லாமல் பின்னூட்டம் போடும் வாசகர்களையும், வலைப்பூவே இல்லாதவர்களையும் எழுத வைத்ததுதான் இந்தப் போட்டியின் வெற்றி என்று எங்களிடம் தெரிவித்த - எங்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பை அளித்த - பிரபலங்கள் பலருக்கும் இந்த நேரத்தில் எங்கள் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான். முதல் கதை முயற்சி என்று சொல்லி எழுதிய பலரும் மேலும் முயன்று, இன்னும் பல சிறப்பான படைப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி.

-ஆதிமூலகிருஷ்ணன்


.

Monday, November 15, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள்

நாங்களோ, நடுவர்களோ எதிர்பார்த்தது போல அத்தனை சுலபமானதாக இல்லை முடிவுகளை அறிவிப்பது! குறிப்பிட்டிருந்த நாள் கடந்து கொண்டிக்கிறதே என்று அவசர அவசரமாக அறிவிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுக்கும் சுருக் - விமர்சனங்களை நடுவர்கள் அனுப்பிவிட்டனர். கடைசி கட்ட தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

விமர்சனங்களைப் பதிவிட்டபின் முடிவு அறிவிக்கப்படும்.

நிச்சயமாக இந்தவாரத்தில்!

தாமதத்திற்கு தலை குனிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

*****************************

இனி விமர்சனங்கள்

*** **** ***


1. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

ஆரம்பிக்கும்பொழுது நன்றாக இருப்பதாக தோன்றினாலும் நடைபுரண்டு சிறுகதைக்கான அழுத்தத்தை தரவில்லை. சிவா என்று மூன்றாம் மனிதராக ஆரம்பிப்பது நடுவில் நான் என்று மாறி மீண்டும் சிவா என்று மாறுகிறது. சுத்த தமிழிலும் இல்லாமல் வழக்குத் தமிழிலும் இல்லாமல் முற்றிலும் வேறு விதமான வார்த்தைகள் அந்நியப்பட்டு நிற்கின்றன. அதேபோல் முடிவில் எதற்காக பரந்தாமன் & காமினிகளின் தற்கொலைகள் சரியாக ஜஸ்டிஃபை செய்யப்படவில்லை.

*** *** ***

2. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

நல்ல முயற்சி. இந்த மூன்று வரிகளையும் ஒரு சீரியல் கதாசிரியர் எழுதி குழப்படைவதைப் போல முடித்திருப்பது நல்ல எதிர்பாராத திருப்பம். என்னதான் போட்டியின் விதிமுறையில் எத்தனை வரிகள் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் டெவலப் செய்திருந்தால் அருமையாக வந்திருக்கும். நல்ல முயற்சி.

*** *** *** ***

3) மணிகண்டன் விஸ்வநாதன் எழுதிய கதைக்கான விமர்சனம் (என் இந்த போஸ்டில் ஒன்பதாவது கதை)

பரிசல் கொடுத்திருந்த மூன்று வரிகளை மட்டுமே எழுதி முற்றும் போட்டிருக்கிறார் நண்பர். பள்ளிக்கூடம் / காலேஜில் படிக்காமல் எக்ஸாமிற்கு போய் கேள்வியை மட்டும் நாலு தடவை எழுதி பக்கத்தை நிரப்புவது நினைவுக்கு வருகிறது.. :)

ஒருவேளை கதையை படிப்பவர்களே இந்த வரிகளைச் சுற்றி கதையை கட்டமைத்துக்கொள்ளும் சுதந்திரத்துடன் எழுதப்பட்ட பின்நவீனத்துவ கதையா என்றும் சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை :)

*** *** *** ***


4) காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

காமினியை ஒரு துப்பறியும் புலியாக காட்டி அதற்கு நமக்கு தெரிந்த கதாபாத்திரங்களை உதாரணத்துடன் முதல் பத்தி : ஒரு நல்ல ஆரம்பம். நடை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். எழுத்துப்பிழைகளை மறுவாசிப்பில் திருத்தி இருந்தால் (உலவு, விரம்) இன்னும் நன்றாக இருந்திருக்கும். வைரம் என்பதை அந்த பெயரில் உள்ள சிறுவனைக் கடத்த முயல்வதாகக் காட்டி இருப்பது நல்ல முயற்சி

5. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

கொடுக்கப்பட்ட மூன்று வரிகளையும் அப்படியே எழுதி நான்காவதாக இன்னொரு வரியை சேர்த்து கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். சுமார் 50 வரிகளிலாவது சொல்ல வேண்டியதை இரண்டே வரிகளில் சொல்ல முயற்சிப்பதால் ஒருமுறை படித்து புரிந்து கொள்ள இயலவில்லை. கதை புரிந்து கொள்ளவே மறுவாசிப்பு தேவைப்படுகிறது. விரிவான சிறுகதையாக எழுதியிருந்தால் நல்ல முயற்சியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

6.
விபூதி வாசனை - விதூஷ்

பதிலளிக்கப்படாத பல கேள்விகள். மலையடிவாரத்தில் வந்தவர் யார்? சிவாவை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் டாக்டர் ஏன் அவரை முதலிலேயே பிடிக்கவில்லை. கதையோ அல்லது அதன் நடையோ புரியவில்லை. கழுத்து நெறிபட்டு சாவின் விளிம்பில் மர்மக்குரல்கள் கேட்பதும் அது நிஜத்தில் நடப்பதும்
என்று நல்ல தீம், சரியாக டெவலப் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

7. காமினி - கோபி ராமமூர்த்தி


பதிவுலகின் கதைப்போட்டிக்கு பதிவர்களையே கதாபாத்திரங்கள் ஆக்கியிருப்பது அழகு. அதிலும் ஒவ்வொருவரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் பொருத்திப் பார்க்க முடிகிறது.. ஆனால் ஆதியை கமிஷ்னராக... ஹி..ஹி..

மைனஸ் பாயிண்ட்: கதாபாத்திரங்களில் பதிவர் பெயர்களுக்கு பதில் வேறு பெயர்களைப் போட்டால் கதை படு மொக்கையாக காட்சியளிக்கிறது. இதை ஒரு ’சிரி’யஸ் முயற்சியாக இருந்தாலும் சீரியஸ் முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

8. காமினி என் காதலி - ஆசியா உமர்

ரயிலில் ஆரம்பிக்கும் கதை லேசாக வேகமெடுப்பதுபோல் தோன்றும்போது போட்டிக்கான முதல் வரி வந்ததுமே டீரெயில் ஆகிவிடுவது போன்ற தோற்றம். மூன்று வரிகளையும் அப்படியே வரிசைக்கிரமமாக எழுதி மேலும் கீழும் கதையை ஒட்டி சாண்ட்விச் செய்யும் முயற்சி அவ்வளவு விறுவிறுப்பை தரவில்லை. சொல்ல வந்திருக்கும் கதை (ரயிலில் டைமண்ட், சேர்க்க முடியாமல் தடைகள்) என்று அழகாக தெரிந்தாலும் அதை சொன்ன விதம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக / விரிவாக இருந்திருக்கலாம். ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங்... என்று வடிவேலு பாணியில் சொல்லலாம்.

9. டைமண்ட் - முகிலன்


ஒரு வெற்றிகரமான முயற்சி என்றே சொல்லலாம். ஒரு நல்ல துப்பறியும் கதைக்கான களன். ஆஸ்பத்திரியில் டைமன்ட் கடத்துறாங்களா? அதுக்கு காமினி உதவியா? போட்டி விதிகளின் படி காமினியைத்தான் கெட்டவளா காட்டகூடாதே என்று நமக்கு தோன்றுவதை எல்லாம் அழகாக க்ளைமாக்ஸில் புறந்தள்ளுகிறார். மருத்துவமனையில் நோயாளிகளின் பார்ட்டை திருடி விற்கும் கும்பல், டைமண்ட் என்பது கிட்னிக்கான கோட்வேர்ட் என்று நன்றாக சிந்தித்திருக்கிறார்.

மைனஸ்: ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணப்படவேண்டிய கிட்னியை இப்படி பார்சல் செய்யப்பட்ட குலோப் ஜாமூன் கணக்காக இடுப்பில் கட்டிக்கொண்டு ஜன்னலில் குதிப்பது, ஆட்டோவில் போவது, சண்டை போடுவது எல்லாம் சினிமாத்தனம்.

10. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

காமினியை நடிகையாகவும் அவளுக்கு கோவில் கட்ட அவள் ரசிகர்கள் முயற்சி எடுக்க, அவளது புதிய படத்தில் வருவதாக போட்டிக்கான மூன்று வரிகளும் காட்டப்படுகின்றது. பொருந்தவில்லை. முக்கியமாக காமினி சோகமாக இருப்பதால் அந்த காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். மூன்றாவது வசனத்திற்கு எதற்காக காமினி சோகப்படவேண்டும் என்று புரியவில்லை. உண்மையில் அந்த சினிமாவின் கதையை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதை எதிர்பாராத முடிவு என்று சொல்லலாம், ஆனால் போட்டிக்கு பொருத்தமாக இல்லை.

11. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்


நல்ல முயற்சி... எதிர்பாராத முடிவாக காமினியை காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. எதிர்பாராத முடிவுடனான ஒருபக்க கதைக்கு நல்ல ஆப்ஷன் இது.

12. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

ஒரு துப்பறியும் கதைக்கான திருப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் சாதாரணமாக அவ்வளவு வலுவில்லாமல் இருப்பது போன்ற தோற்றம். காமினி போலீஸின் ஆள் என்றால் போலீஸ் ஏன் சிவாவை வைத்து வைரத்தை திருட வேண்டும் என்ற முக்கியமான கேள்விக்கு பதில் இல்லை, அதேபோல் முதலில் வரும் விமானக்கடத்தலும் கதையோடு ஒட்டவில்லை (கதையில் போட்டிக்கான முதல்வரியை கொண்டுவர முனைந்து சேர்க்கப்பட்டதால் தனியாக தெரிகிறது). சிவாவை ஒரே ஒரு முறை பார்த்தவருக்கு எதற்கு கிளைமாக்ஸில் அவரைப் பார்த்து வெட்கப்படவேண்டும்.

எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். (பதினைத்து, பிளாட்டில்)

13. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

போட்டியின் விதியான ”காமினியை கெட்டவராக சித்தரிக்கக் கூடாது” என்பது இதில் அடிபட்டு போய்விட்டது. கதை நன்றாக இருந்தாலும் விதிமுறைக்குள் வராத காரணத்தால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது

14.எஸ்கேப் - ரோமியோ

கதை ஆரம்பிக்கும்போது பாலகிருஷ்ணன் பார்வையில் அவர் சொல்வது போல் ஆரம்பித்து சடாரென வாசகர் பார்வைக்கு மாறுவது சறுக்கல். கதையுடன் ஒன்ற முடியவில்லை. அதை சரி செய்வதற்காக கிளைமாக்ஸில் பாலகிருஷ்ணன் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற ரீதியில் கொண்டு செல்கிறார். கதை எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்று எதுவும் தெளிவாக இல்லை. இன்னும் சிறப்பாக முயற்சிக்கலாம்.

15. காமினி - பலா பட்டறை ஷங்கர்

சயின்ஸ் ஃபிகஷன் முயற்சி.. காமினி மனித இனமே இல்லை, ரோபோ போல என்ற ரீதியில் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் எல்லாரும் எல்லார் பார்ப்பதையும் பார்க்க முடிவது, யாரும் யார் போலவும் மாறுவது என்று சராசரி வாசகனுக்கு குழப்பம் அதிகமாக வர வைக்கிறது. காமினி நல்லவளா / கெட்டவளா என்பதே புரியவில்லை. நல்லவளாக காட்ட வேண்டும் என்ற விதி அடிபட்டு போகிறதா என்பதும் புரியவில்லை. இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம்.

16. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

இரண்டு காமினிகள் : ஒருவர் நடிகை மற்றவர் மாடல் அழகி... நடிகை ஏர்போர்ட்டில் நடித்துக் கொண்டிருக்க, அதில் குழப்பம் விளைவித்து மற்றொரு காமினியின் மூலம் வைரம் கடத்த முயற்சி என்று ஒன்லைனர் அழகாக இருக்கிறது. ஆனால் இன்னும் சிறப்பாக டெவலம் செய்திருக்கப்பட வேண்டிய கதை. முதலில் வரும் மருத்துவமனைப் பகுதி கதையுடன் ஒட்டவில்லை, போட்டிக்கான வரியை கொண்டு வர முனைந்து சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. நல்ல கரு.. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்

17. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். கதை எந்த ஒரு இம்பேக்ட்டையும் ஏற்படுத்தாமல் மிகவும் ப்ளெயினாக இருக்கிறது. போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. இந்த போட்டிக்கு இந்த கதை பொருத்தமாக இல்லை என்பதே உண்மை.


18. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி


போட்டிக்கான மூன்று வரிகளை அடுத்தடுத்து எழுதி மேலும் கீழும் கதையை சேண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை இது. கதைக்கான வரிகள் மட்டுமில்லாமல் கதைப்போட்டிக்கான விதிமுறைகளையும் உரைநடையில் கொடுத்து முடிவில் நவம்பர் 15க்குள் தங்களுக்குத் தேவையான கதை கிடைத்துவிடும் என்று முடித்திருக்கிறார். இது சீரியஸ் முயற்சியும் இல்லை, சிரிக்க வைக்கவும் இல்லை.


19. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

இந்த கதை எழுதியவரை எழுத்தாளர் சுபா மிகவும் இம்ப்ரெஸ் பண்ணியிருப்பது தெரிகிறது. காமினி - வைஜ், சிவா - நரேன், பரந்தாமன் - ராமதாஸ் என்று பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் கதையிலும் நடையிலும் அந்த துள்ளலும், திருப்பங்களும் மிஸ்ஸிங். கடைசியில் அவர்கள் வைரம் என்று எதைச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை, சத்தியசீலனை சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெளிவாக பொருந்தவில்லை.


20. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

டைமண்ட் என்பதை வைரமணி என்ற பெண் என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கிறது. வழக்கமான துப்பறியும் கதைக்களன். ஆனால் திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ புத்திசாலித்தனமான மூவ்களோ இல்லாமல் ப்ளையினாக இருக்கிறது. அடுத்து என்ன வரும் என்று யூகிக்க முடிகிற நடை. இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம்.


21. டைமண்ட் 2 - முகிலன்


டைமண்ட் என்பது நாய், அது போலீஸ் என்ற பைத்தியக்காரனிடம் சிக்கி விட்டது, காப்பாற்றி டாக்டரிடம் அழைத்து வருகிறார்கள் என்ற ரீதியில் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இருக்குறது. நல்ல முயற்சி என்ற அளவில் பாராட்டலாம். நடையிலும் கருவிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்
ஆனால் போட்டி விதிமுறைகளின் படி கதையில் கனவு வரக்கூடாது. போட்டிக்கான முதல் வரி கனவில் வருவது போல் இருப்பதால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது


22. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்


ஒரு வைரக்கடத்தல் அதன் ஊடான குழப்பங்கள் என்று கதையும் குழப்பமாகவே நகர்கிறது. கதையில் இரண்டு சிவா வருவது வேறு குழப்பத்தை அதிகப்படுத்துகிறது (அல்லது ஒரே சிவாதானா?). காமினியை நல்லவளாக காட்டவேண்டும் என்ற நிபந்தனைக்காக அவளை பரந்தாமன் ப்ளாக்மெய்ல் செய்வதாக சொல்லியிருப்பது ஒட்டவில்லை. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


23. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்


முற்றிலும் வித்தியாசமான கதைக் களன். பூமியில் எக்ஸ்டிங்க்‌ஷன் ஆரம்பிக்கும் தருணத்திற்கு முன்னால் உயிரினம் தழைக்க பரந்தாமன் + சிவா (இந்துக் கடவுள்கள்?) எடுக்கும் முயற்சி, உயிரினங்களை புதிய பூமிக்கு தாங்களே கொண்டு செல்லாமல் அவர்களையே தங்களுக்கான இடத்தை தேர்வு / தெரிவு செய்துக் கொள்ள வைப்பது என்று புதிய வாசிப்பனுப்பவத்தை இந்த கதை கொடுக்கிறது எனலாம்.

டாக்டர் வில்கின்ஸை பிரம்மாவாக உருவகப்படுத்தி இருக்கலாம். அல்லது ஏற்கனவே அப்படித்தானா? :)

கதையின் சிறு சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. கதையில் இந்து மித்தாலஜி, டெக்னாலஜி என்று கலந்து கட்டி அடித்திருப்பது ஒரு மாதிரி புரியாத மனநிலையில் வாசகனை இருக்க வைக்கிறது. ஒரு செல்லில் இருந்து உயிரினம் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்ற அறிவியல் கூற்றை மறுப்பது போல் நேரடியா உயிரினங்கள் பூமியில் உருவானதாக சொல்லும் அதே நேரம் காமினி என்ற புதிய இனம் உருவாவதே டெக்நாலஜியால் என்றும் சொல்லியிருப்பது கதாசிரியர் அறிவியலை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை தெளிவாக சொல்லாமல் குழப்புகிறார் என்றே தோன்றுகிறது.
ஒரு சிறந்த முயற்சி இந்த கதை. பாராட்டுகள்.

24. காமினி - மயில் ராவணன்


நல்ல முயற்சி... போட்டிக்கான மூன்று வரிகளுக்கும் வித்தியாசமான அர்த்தம் கொடுத்ததற்கு பாராட்டுகள். முக்கியமாக “காமினி.. வெல்டன்” என்பதற்கான அர்த்தம் வாசிக்கும்போது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர்த்து கதை பெரிய அளவில் கவரவில்லை. வைரம் கடத்தும் தந்தையை காதலன் உதவியுடன் காட்டிக் கொடுக்கும் பெண் என்ற ஒன்லைனர் மிகவும் ப்ளைனாக இருக்கிறது.


25. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

ஒரு நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் போல இருப்பதே இதன் குறை. சொல்ல வந்த கதை இந்த ஃபார்மேட்டினால சரியாக வாசகனை அடையவில்லை போன்ற தோற்றம். அயோத்தி பிரச்சினையைத் / அதைப் போன்ற ஒன்றை தொட்டிருப்பது கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. கடைசியில் காமினி வருத்தப்படவேண்டிய அவசியமும் இல்லை, மீண்டும் சிவாவை சந்தித்து விளக்கி இருக்க முடியாதா?


26. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை


சீரியலை மட்டுமே பார்த்துக்கொண்டு குடும்பத்தைக் கவனிக்காத அம்மா, அதனாலயே அன்புக்கு ஏங்கி வீட்டை விட்டு போகும் மகள் என்று ஒரு வாரமலர் டைப் கதை. போட்டிக்கான மூன்று வரிகளும் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் சீரியலுக்குள் இருப்பது மைனஸ். முக்கியமாக மூன்றாவது வரி அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. இன்னும் நன்றாக முயற்சித்து இருக்கலாம்.


27. இனிமேல் வசந்தம் - வானதி

போட்டிக்கான வரிகளை கதையின் முக்கிய ஃப்ளோவில் உபயோகித்து எழுதப்பட்டுள்ள கதை. அதுவே இந்த கதையின் பலமும் கூட. அடுத்ததாக போட்டிக்கான வரிகளைப் படிக்கும் எவருக்கும் கதை நடப்பது ஒரு மேல்தட்டு குடும்பத்தில் / ஆட்களிடம் என்ற தோற்றம் தோன்றும். ஆனால் அதே வரிகளை வைத்து ஒரு மீனவ குடும்பத்து கதையை எழுதியிருப்பது நல்ல முயற்சி..

விறுவிறுப்பில்லாத நடையும் யூகிக்க முடிகிற முடிவும் இதன் மைனஸ்.

28. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

போட்டிக்கான வரிகளை எழுதி மேலும் கீழும் வேறு கதையை எழுதி வந்துள்ள இன்னொரு சாண்ட்விச் கதை. ஒரு எழுத்தாளனின் மன ஓட்டத்தை எழுத்தில் கொண்டுவரும் முயற்சி என்பதாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே தெறிக்கும் நக்கல் புன்னகைக்க வைக்கிறது.


29. காட்சிப்பிழை - செல்வகுமார்

துப்பறியும் + சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம அளவில் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் கதை.. போட்டிக்கு சிறப்பான முயற்சி. வைரக் கடத்தல் கும்பலைப் பிடிக்க கும்பலுக்குள் நுழையும் காமினி போலீஸால் சுடப்பட அறிவியல் கண்டுபிடிப்பின் மூலம் குற்றவாளிகளை மடக்கும் போலீஸின் கதை. விறுவிறுப்பான நடையும் தெளிவாக விளக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்பும், சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் போட்டிக்கான வரிகளும் பாராட்டப்படவேண்டியவை.


30. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

வித்தியாசமாக ஆரம்பித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு அதை சரியாக தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். முக்கியமாக போட்டிக்கான வரிகள் கொஞ்சமும் கதையில் ஒட்டவில்லை. தனித்து தெரிகிறது. அதே மாதிரி இவர் இந்து சம்பிரதாயங்களை நக்கல் அடிக்கிறாரா அல்லது விளம்பரப்படுத்துகிறா என்பதும் சரியாக புரியவில்லை. வித்தியாசமான தளம், இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.

31. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

தலைப்பே சொல்லி விடுகிறது, இது மெசேஜ் சொல்வதற்காகவே எழுதப்பட்ட கதை என்பது. பதிவர்களை பாத்திரங்களாக வைத்து எழுதப்பட்டுள்ள மற்றொரு கதை, பைரசி தவறு என்பதை அழுத்திச் சொல்கிறது. போட்டிக்கான வரிகளை வரிசையாக எழுதி மேலும் கீழும் கதையை எழுதியுள்ள சாண்ட்விச் கதை, ஆனாலும் அந்த வரிகள் சரியாகவே உபயோகப்பட்டிருக்கின்றன. சட்டென்று கதை முடிந்ததைப் போன்ற உணர்வு. இன்னும் கொஞ்சம் நடையை விறுவிறுப்பாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்


32. கமான்.. கமான்.. காமினி - வித்யா

முதல் பாதியில் எழுதப்பட்டுள்ள கதை அட்டகாசம். அதை அப்படியே கண்டின்யூ செய்து முடித்திருந்தால் முதல் மூன்று இடத்திற்கான போட்டியில் கட்டாயம் இருந்திருக்கும் என்ற ரீதியில் விறுவிறுப்பு, சயின்ஸ் பிக்‌ஷன், யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று எக்ஸ்ப்ரஸ் செல்லும் கதை, இரண்டாவது பாதியில் டீரெயில் ஆவது என்னவோ உண்மை. நமக்கு பழக்கப்பட்ட கதாபாத்திரங்களை (கணேஷ், வசந்த், கோகுல்நாத்) என்று கொடுத்திருப்பது கதையை வாகனுக்கு நெருக்கமாக உணரவைக்கிறது. வசந்த் சொல்வது போல், கதையின் முடிவையும் வாசகனே யூகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது, :-)


33. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

உண்மையில் பெரும்பாலான கதைகளில் காட்டப்பட்டிருக்கும் வித்தியாசத்தை (அந்த மூன்று வரிகளை எப்படி எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை) அழகாக தொகுத்திருக்கிறார். வெறுமனே விளக்கமாக இல்லாமல் ஒரு கதையினூடே இதை சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது. முடிவு கொஞ்சம் மொக்கையாக இருப்பது நிஜம்..


34. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்


கதையின் தலைப்பைப் போலவே கதையின் க்ளைமாக்ஸ்ம் புரியவில்லை. ராபிட் ஐ மூவ்மெண்ட்டுக்கு பதில் கதையின் கடைசி மூன்று வரிகளை விளக்கி இருக்கலாம்.


35. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

புதையலில் கிடைத்த வைரம் திருடப்பட அதை மீட்க உதவும் ஆட்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்ற ஒன்லைன் அழகாக இருந்தாலும் கதை துண்டு துண்டாக இருப்பதாக தோன்றுகிறது. நடை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.


36. காமினி - ராஜகுரு பழனிசாமி

சவால் சிறுகதைப் போட்டியினால் மறை கழண்டு போகும் ஒருவன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.


37. டைமண்ட் - குகன்

போட்டியின் மூன்று வரிகளை அப்படியே ப்ளையினாக டெவலப் செய்திருக்கும் கதை. காமினி ஆஸ்பத்திரியில் இருந்து டைமண்டை திருடி வர சிவா அதை திருட முயல அவனைக் கொன்று பரந்தாமனிடம் சேர்க்கும்போது போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து காமினியைப் பாராட்டுகிறார்கள். தொய்வில்லாத நடை. ஆனால் எதிர்பார்த்த திருப்பங்களும் யூகிக்க முடிக்கிற முடிவும் விறுவிறுப்பு குறைந்த நடையும் மைனஸ்


38. ளவாளி - குகன்

இதற்கு முந்தைய கதையும் (டைமண்ட்) இந்த கதையும் ஒரே வரிகளுடன் உள்ளது... ஆனால் இந்த கதையில் வரிகள் போட்டிக்கான அதே வரிசையில் வரவில்லை, அதனால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது

39. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

கதையின் ஃப்ளோ கொஞ்சமும் சரியாக கருத்தை சொல்லவில்லை.துண்டு துண்டாக விறுவிறுப்பு குறைவாக இருக்கிறது. எழுத்துப்பிழைகளையும் தவிர்த்திருக்கலாம்.


40. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

துப்பறியும் கதைக்கான கரு என்ற அளவில் ஓகே.. நடை மிகவும் தொய்வாக இருக்கிறது, இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். முதலில் நடிகரைப் பற்றி சொல்லிவிட்டு பிறகு கடைசியில் கிளைமாக்ஸில் காமினி கதையுடன் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது. நல்ல முயற்சி.


*********** *********** ************ **********

மற்ற விமர்சனங்கள் அடுத்த பதிவில்.


.

Wednesday, November 3, 2010

Twitter!

22 ஜூலை 2008.

நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த நாள்.

எப்படி கரெக்டாகத் தெரிகிறது? இதோ இங்கே போனால் உங்கள் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப் பட்ட தேதியைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் யாருடைய வலைப்பூவிலேயோ இந்த ட்விட்டரைப் பார்த்து ஏதோ சாட்டிங் சமாச்சாரம் என்று நானும் இணைத்தேன். ஆனால் தொட்ர்ந்து அதில் இயங்கவில்லை. அதன் சூட்சுமம் புரியவே இல்லை. அப்புறம் அதைத் தூக்கிவிட்டேன்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பற்றி அறியவந்து ஆர்வமானேன். ‘140 எழுத்துகள் உனக்கு. எடுத்துக்கோ. என்ன வேணும்னாலும் எழுது’ என்று சொல்கிறது ட்விட்டர். ‘கலைஞன் ஒரு காட்டாறு அவனுக்கு அணைபோட நீ யார்?’ என்று கேள்வி கேட்பவர்கள் ஒரு ஓரமாக குந்திக் கொள்ள, இளைஞர் கூட்டம் ட்விட்டருக்குப் பின்னால் படையெடுத்தது. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு!

இன்றைக்கு நாளேடுகளில் ட்விட்டரைப் பற்றி ஒரு செய்தியேனும் வராத நாட்கள் மிகக் குறைவு. ட்விட்டரில் நமீதா சேர்ந்தால் செய்தி. சச்சின் சேர்ந்தால் சாதனை. ஷாருக்கான் தினமும் 'குளிக்க சோப்பும், டவலும் எடுத்துகொண்டேன்' என்பதிலிருந்து ட்விட்டி மகிழ்கிறார். கோவா ஆட்டத்தின் போது அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே ட்விட்டரில் ‘மழையால் இன்னைக்கு ஆட்டத்துக்கு ஆப்பு’ என்று சொன்ன ரோகித் ஷர்மா, யுவராஜ் சிங்கின் கைங்கர்யத்தால் ஆட்ட நாளின் போது ட்விட்ட வீரர்களுக்குத் தடை.. விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ ஹீரோயின் ஹன்சிகா ‘கவலைப் படாதீங்க.. கூடிய சீக்கிரம் விஜய்யை ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பிக்க வைக்கிறேன்’ என்கிறார். இப்படி எங்கெங்கு காணிணும் ட்விட்டர் புராணம்.

இந்தியாவில் ட்விட்டரை பிரபலப்படுத்திய பெருமை சசி தரூரையே சாரும். விமானப் பயணத்தின் போது ‘எகானமி க்ளாஸ் மாட்டுத் தொழுவம் போலிருக்கிறது’ என்று சொல்லித் தொலைக்க, ‘அப்ப அதுல வர்றவங்க மாடுகளா?’ என்று - அதில் வருபவர்கள் கேட்டார்களோ இல்லையோ - எதிர்கட்சிகள் கேட்க, ட்விட்டர் என்றால் என்ன என்று பொதுஜனம் முதற்கொண்டு கேட்க ஆரம்பித்தார்கள். அதன்பிறகும் அடிக்கடி ட்விட்டரில் ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

வாராந்திர இதழ்கள் சுவையான ட்வீட்களை அள்ளி எடுத்துக் கொஞ்சி மகிழ்கிறது.

‘உங்க ட்விட்ட விகடன்ல பார்த்தேன். அதுமூலமாத்தான் உங்களை ஃபாலோ பண்ணினேன்’ என்று என்னிடம் சொல்பவர்கள் நிறைய பேர்.

வலைஞர்கள் (வலைப்பதிவர்கள்) போல, ட்விட்டர்கள் ட்வீப்பிள்ஸ் என்றழைக்கப்பட்டு, செல்லுமிடமெல்லாம் சந்தித்துக் கொள்கிறார்கள். பேச்சும் 140 வார்த்தைகளுக்குள்ளா என்று தெரியவில்லை!

எது எப்படியோ ட்விட்டரின் வடிவமும், எதையும் சுருங்க சுவாரஸ்யமாய்ச் சொல்ல வைக்கும் அதன் விதியும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இத்தனை பீடிகையும் எதற்கு? நான் சமீபத்தில் எழுதிய சில ட்விட்களைப் பகிர்ந்து கொள்ளத்தான்.

(என்னை ட்விட்டரில் தொடர இந்த வலைப்பூவின் இடது பக்கத்தில் உள்ள குருவியைக் க்ளிக்குங்கள்.)

***************************** ********************** ******************

‘நேரம் சரியில்லை கெடா வெட்டணும்’ என்கிறார்கள். பாவம், அந்த ஆட்டுக்குத்தான் நேரம் சரியில்லை.

*
ரசியல் பத்தி எப்பக் கேட்டாலும் ஒரு தடவை சொன்னதையேதான் நூறு தடவையும் சொல்றாரு சூப்பர்ஸ்டாரு! #வருவியா வரமாட்டியா வரலேன்னா உம்பேச்சு கா!

*

‘எத்தனை தூரம் வேண்டுமானாலும் அடித்து விளையாடுங்கள்’ - இது ஒரு ப்ரா விளம்பரம்! ஹ்ஹூம்!

*

னைவி: ‘சாப்பிட்டாச்சா?’ நான்: ’ஓ!’ மனைவி: ‘கொழம்பு எப்படி இருக்கு?’ நான்: ‘அருமை!’ மனைவி: ’இன்னைக்கு வெறும் லெமன் ரைஸ்தான் வெச்சேன்’ #ஙே

*

ன் மனைவி சுடிதாருக்கு மேட்சா ஷால் கிடைக்கறதுக்குள்ள விஜயகாந்துக்கு கூட்டணி கிடைச்சுடும் போலிருக்கு. #ஷாப்பிங் டார்ச்சர்ஸ்

*

ண்ணின்னாலே எப்பவுமே சண்டைதான் #காவிரி #முல்லைப்பெரியாறு #குழாயடி #டாஸ்மாக்

*

ஃபீஸுக்கு வந்தால் வீட்டு வேலைகளின் பாக்கியும், வீட்டுக்குவந்தால் ஆஃபீஸின் பெண்டிங் வேலைகளும் ஞாபகத்துக்கு வருகிறது. #நாராயணா

*

லபார் கோல்ட் விளம்பரத்தில் இளையராஜா. #தங்கமான ராசா

*

பேருந்தில், ரயிலில் தனித்தனியே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு கேட்போரின் செல்ஃபோன்களைப் பறிமுதல் செய்ய அவசரச் சட்டம் கொண்டு வா ஆண்டவா!

*

“நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன... நீதான் எந்தன் ஒளிவிளக்கு.. (தோழி அப்டேட் அல்ல..ஃப்லிப்ஸ் ட்யூப்லைட்டைப் பார்த்து பாடியது)

*

தூத்துக்குடி டாஸ்மாக் முன் இருந்த “இங்கே பார் வசதி உண்டு’ என்பதில் ‘ச’வை மட்டும் விட்டுப் படித்து ஒரு கணம் திடுக்கிட்டேன்.

*

துரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இலவச கழிப்பிடம்/குளியலறை. 5 பைசா வாங்கவில்லை. அவ்வளவு சுத்தமாக இருக்கிறது!

*

வாழ்க்கையிலேயே முதல்முறையாக பாத்ரூமில் பாத்டப்-பிற்கு மேல் சீலிங் ஃபேனைப் பார்க்கிறேன். #சுகம் ஹோட்டல்ஸ், தூத்துக்குடி.

*

மெனக்கெட்டு ரோடு போட்டு, ரோடு போட்டதுக்கு பாராட்டு விழாக்கு வர்றவங்களை வரவேற்று பேனர் வைக்க அந்த ரோட்டையே தோண்டறாங்க.#கொடுமைடா சாமி

*

ந்தியா செகண்ட் பேட்டிங் என்று தெரிந்ததும் பர்மிஷனைக் கேன்சல் செய்து ஆஃபீஸ் நெட்டில் ஸ்கோர் பார்ப்பவனே புத்திசாலி #சாமர்த்தியன் சொல்

*

ழகான பெண்கள் ஓவர் டேக் செய்ய முயலும்போது வழி விட்டு ரசிப்பவனே புத்திசாலி #சாமர்த்தியன் சொல்

*

ஃபீஸுக்கு 15 நிமிடம் லேட்டானால் வேறு சில ஆஃபீஸ் வேலைகளையும் முடித்து ஒரு மணி நேரம் லேட்டாகச் சென்று ரிப்போர்ட் செய்பவனே
புத்திசாலி #சா.சொ

*

ளம்பெண் லிஃப்ட் கேட்கும்போது, மாட்டியிருக்கும் Back Bagஐ கழற்றி பைக் முன்னால் வைத்துக் கொள்பவனே புத்திசாலி! #சாமர்த்தியன் சொல்

*

விக்ரம், த்ரிஷா, விஜய், மம்முட்டி... இப்போதெல்லாம் பல நிறுவனங்களின் ப்ராண்ட் அம்பாசிடர்கள் - க்ராண்ட் அம்பாசிடர்களாக இருக்கின்றனர்.

*

புள் செஞ்சுரியை மகளுக்கு அர்ப்பணிக்கிறார் சச்சின். நானும் நேத்து ஆஃபீஸ்ல வாங்கின பாராட்டை என் மகளுக்கு அர்ப்பணிச்சுக்கறேன்.

*

நாளைக்கு ஆயுதபூஜையாம். பலபேரை வீழ்த்திய உன் கண்களுக்கு மறக்காமல் கற்பூரம் காட்டு #தோழி அப்டேட்ஸ்

*

பைக்கில் செல்லும்போது கன்னிப் பெண்களைக் கடக்கும்போதுதான் ரிவர்வ்யூ மிர்ரர் சரியான பொசிஷனில் இல்லையென்பதைக் கவனிக்க முடிகிறது.

*

காமன்வெல்த் முடியும்போது, கம்பெனியில் போனஸ் போட்டுவிடுவார்கள். நானும் தங்கத்துக்காக ஓடவேண்டியிருக்கும். #மனைவி சொல்லே மந்திரம்

*
ன்னையின் தாலாட்டும், இளையராஜாவின் பாடல்களும் தரமுடியாத ஆழ்ந்த நித்திரையை ஆஃபீஸ் மீட்டிங்குகள் தருகின்றன #நிதர்சனம்

*

களிர் டென்னிஸ், மகளிர் டேபிள் டென்னிஸெல்லாம் பார்க்கும்போதுதான் ‘காமன்’வெல்த்துக்கு அர்த்தம் புரிகிறது..! #ஆணாதிக்க ட்வீட்

*

ஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்களைவிடவும் ரயில் நிலையத்தில் காணும் கன்னிகள் மனதைக் கவர்கிறார்கள். #அவதானிப்பு


*** *** *** *** ***

Tuesday, November 2, 2010

இணைய ஜோக்காளி - ஹ்யூமர் க்ளப்

சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தபோது நகைச்சுவைக்கு அதிக இடம் கொடுத்தார். நகைச்சுவை என்றால் காலாவதியான ஜோக்ஸ் அல்ல. சிந்தனையை தூண்டும் ஜோக்ஸ், க்ரியேட்டிவான ஜோக்ஸ் இப்படி... கேட்டவையாகத்தான் இருக்கும். ஆனாலும் அதைச் சொல்லும் விதத்தில் வித்தியாசப்படுத்தியிருப்பார்கள்.

அதில் ஹ்யூமர் க்ளப் என்றொரு பகுதி வரும். ஒரு க்ளப்புக்கு வந்து எல்லாரும் ஜோக்ஸ் சொல்வார்கள். இளையஜோக்காளி என்றொரு கதாபாத்திரம் எல்லாரையும் கலாய்ப்பார். (நிஜமாகவே வாராவாரம் அந்த க்ளப் நடந்தது என்று கேள்வி)

அதே போல நாமும் ஒரு ஹ்யூமர் க்ளப் நடத்தி, இளைய ஜோக்காளிக்கு பதிலாக இணைய ஜோக்காளி என்றொரு கதாபாத்திரத்தைக் கொண்டு வந்து ஒரு ஹ்யூமர் க்ளப் நடத்தினால் என்ன என்று நேற்றிரவு 12.18க்கு ஒரு சிந்தனை பிறந்ததன் விளைவே இந்தப் பதிவு.

இது ஒரு சோதனை முயற்சி. யாருக்குச் சோதனை என்பது இன்றிரவுக்குள் தெரிந்துவிடும்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







க்ளப் ஆரம்பிக்கிறது... வந்த எல்லாரையும் ‘வாங்க.. வாங்க’ என்று வரவேற்கிறான் இணைய ஜோக்காளி.

“சரி யாரு மொதல்ல ஜோக் சொல்றது?”

ஒருத்தர் கைதூக்குகிறார். “நான் சொல்றேன்”

“உடனே ஜோக்’ன்னு சொல்லீட்டு ஜோக் சொல்லீட்டேன்னு சொன்னீங்கன்னா அப்படியே தூக்கிக் கொண்டு போய் கூவத்துல போட்டுடுவேன்” என்று மிரட்டுகிறான் இ.ஜோ.

“அந்த மாதிரி உங்க அளவுக்கெல்லாம் கடிக்க மாட்டேன் இஜோ. நிஜமாவே ஒரு ஜோக் சொல்றேன்.. ஒரு பஸ்ஸூல உட்கார்ந்துட்டிருந்த ஸ்கூல் பையன் ஸ்கூல் பேக், ஜாமெட்ரி பாக்ஸ்ன்னு திறந்து ஏதோ தேடிகிட்டிருந்தான். கண்டக்டர் என்னான்னு கேட்க, “டிக்கெட் எடுக்க பத்து ரூவா வெச்சிருந்தேன் சார்.. காணோம்”ன்னான். சரி எங்க போவணும்ன்னு கேட்ட கண்டக்டர் அவன் போற ஸ்டாப்புக்கு அஞ்சரை ரூவா டிக்கெட்டைக் கிழிச்சுக் கொடுத்துட்டு நகர்ந்தாராம். உடனே அந்தப் பையன் கேட்டான். “பாக்கி நாலரை ரூவா?”

கூட்டத்துக்கு வந்ததில் பாதிபேர் ஐந்து செண்டிமீட்டரும், பாக்கி பேர் ரெண்டு செண்டிமீட்டரும் சிரித்தார்கள். இ.ஜோ, “பதிவுல மொத ஜோக்.. கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்” என்றுவிட்டு, “சரி.. அடுத்த டாபிக் கணவன் மனைவி” என்கிறான்.

“நான் சொல்றேன்” என்று கூட்டத்திற்கு வந்த ஒரு முப்பது வயதுக்காரர் எழுந்தார். இணைய ஜோக்காளி கேட்டான்: “உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?”

“ஆமா ஆய்டுச்சு..”

“சரி சரி.. என் ஆறுதல்கள்.. இப்ப ஜோக்கைச் சொல்லும்”

“ஒரு திருவிழாவுக்குப் போயிருந்த கணவன் மனைவில மனைவியைக் கூட்டத்துல காணலை. ரொம்ப வருத்தப்பட்ட அவன், பக்கத்தில் இருந்த ராமன் கோயிலுக்குப் போய் வேண்டினானாம். ‘ராமா.. எப்படியாச்சும் என் பொண்டாட்டியைக் கண்டுபிடிச்சுக் குடு’ன்னு. ராமர் டகார்ன்னு அவன் முன்னாடி வந்து சொன்னாராம்: ‘நேராப் போய் லெஃப்டுல திரும்பினின்னா ஒரு ஆஞ்சநேயர் கோயில் வரும். அங்க போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணு. ஏன்னா என் பொண்டாட்டி தொலைஞ்சப்பவே அவருதான் கண்டுபிடிச்சார்’ன்னு!”

இந்த ஜோக்குக்கு நாலு பேர் விசிலடித்தார்கள். இணைய ஜோக்காளிக்கு கொஞ்சம் உற்சாகம் வந்துவிட்டது. “சரி.. இன்னொரு கணவன் மனைவி ஜோக் பார்சல்...” என்று ஆர்டர் செய்தான் இஜோ.

கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தொந்தி பெருத்த ஆசாமி, தொண்டையைச் செருமிக் கொண்டு, “அவைக்கு வந்திருக்கும் இணைய ஜோக்காளிக்கு என் முதற்கண் வணக்கத்தை..” என்று ஆரம்பிக்க இஜோ அவசர அவசரமாக இடைமறித்து.. “அந்த ஈரவெங்காயம் எதுவுமே இந்தக் கூட்டத்துக்கு வேணாம். ஒழுங்கா ஜோக்கை மட்டும் சொல்லீட்டு அப்படிக்கா போய் குந்திக்கணும்” என்று சொன்னான்.

சரி என்ற அவர் சொன்னார்: “ஒரு பொண்ணு அவளோட ஜாதகத்தை ஜோசியக்காரர்கிட்ட காட்டினா. ஜோசியக்காரர் பார்த்துட்டு ‘உங்க ராசிப்படி உங்களுக்குப் பெரிய இடத்திலேர்ந்து நிறைய சொத்து சொகத்தொட ஒரு புருஷன் கிடைப்பான்’ன்னு சொன்னாரு. இவ கேட்டாளாம்: “அப்ப இப்ப இருக்கற புருஷனை என்ன பண்றது?”

ஒரே ஒருத்தர் கைதட்ட, இஜோ தொந்தியாசாமியை முறைத்தபடி “ஜோக்கு சொல்றேன்னு எந்திரிச்சா ஜோக்கு சொல்லணும்.. இப்படிக் கொல்லப்படாது.. சரியா?” என்றுவிட்டு திரும்ப ஓர் இளைஞன் சொன்னான். “சார் நான் ஒரு
ஜோக்....”

“சொல்லு” என்றான் இஜோ.

‘ஒருத்தன் கார் வெச்சிருந்தான். அவன் ஃப்ரெண்டுகிட்ட சொன்னான். “டேய்.. நான் கார் வாங்கினதிலேர்ந்து இப்ப வரைக்கும் ரிப்பேருக்குன்னு ஒரு காசுகூட குடுத்ததில்லை”ன்னு. அதுக்கு அவன் ஃப்ரெண்ட் சொன்னான்.. “ஆமாமா மெக்கானிக் கூடச் சொன்னாரு”

இஜோ மட்டும் சிரிக்க, மற்றவர்கள் ஐந்து நிமிடம் கழிந்து, சிரிக்கத் தொடங்கினார்கள்.

‘சரி கடைசியா ஒரு ஜோக் சொல்றேன்’ என்றான் இஜோ. க்ளப்புக்கு வந்திருந்தவர்கள் ஓடத் தயாரானார்கள்.

“என் ஃப்ரெண்ட் ராஜான்னு ஒருத்தன் ஆஃபீஸ் பார்ட்டி முடிஞ்சு, கொஞ்சம் போதையோட அவன் காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போய்ட்டிருந்தான். வழில போலீஸ் புடிச்சிடுச்சு. இறங்கி, அவனை ஸ்மெல் டெஸ்ட் பண்ணிகிட்டிருக்கறப்ப, கொஞ்ச தூரத்துல ஒரு திருடனை அஞ்சாறு பேர் தொரத்தறைப் பார்த்தாங்க போலீஸ்காரங்க”

“ஆஆஆவ்வ்வ்..” என்று ஒரு கொட்டாவி சத்தம் வரவே, இஜோ கடுப்பாகி ‘நடுவுல தூங்கறவங்களுக்கு காஃபி கட்’என்றுவிட்டு தொடர்ந்தான்.

“உடனே போலீஸ் ராஜாகிட்ட ‘இங்கயே இரு.. இப்ப வந்துடறோம்’ன்னு சொல்லீட்டு அந்த்த் திருடனைப் பிடிக்க ஓடறாங்க. அரைமணி நேரம் நின்னு பார்த்த ராஜா, போங்கடான்னு காரை எடுத்துட்டு வீட்டுக்கு வந்து ஷெட்ல நிறுத்தி அம்மாகிட்ட “யாராவது வந்து கேட்டா எனக்கு உடம்பு சரியில்ல.. நாலு நாளா பெட்ல இருக்கேன்னு சொல்லு” அப்டீன்னு சொல்லீட்டு மப்போட போய் பெட்ரூம்ல போய்த் தூங்கிடறான்”

“ஜோக் சொல்லச் சொன்னா சிறுகதை சொல்றீங்களே..” என்று வந்த குரலை அதட்டிவிட்டுத் தொடர்கிறான் இஜோ.

“கொஞ்ச நேரத்தில் போலீஸ் அவன் வீட்டுக்கு வருது. அம்மாவும் அவன் சொன்ன மாதிரியே சொல்றாங்க. அதுக்கு போலீஸ்.. ‘அதெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல கார்ஷெட்டைத் திறந்து காமிங்க’ன்னு சொல்றாங்க. திறந்து பார்த்தா.. அங்க பளபளன்னு சிகப்பு சைரனோட நின்னுகிட்டிருந்துச்சு போலீஸ் கார்!”

சொல்லிமுடித்து, ‘கைதட்டுபவர்களுக்கு தீபாவளிக்குப் பட்டாசு பாக்ஸ் ஃப்ரீ’ என்று இஜோ சொல்ல அனைவரும் படபடவென கைதட்டினர்.


.