
அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் ரம்யா. (இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள எல்லாமே மாற்றப்பட்ட பெயர்களே) நல்ல உழைப்பாளி. எதையும் சட்டென கிரகித்துக் கொள்ளும் மூளைக்காரி. தென்மாவட்டமொன்றிலிருந்து வந்து சகோதரியுடனும், வேறு உறவுப் பெண்கள் இருவருடனும் வசித்து, பணிபுரிந்து வந்தாள். அவளது தந்தையும் அதே தெருவில் இரண்டு வீடு தள்ளி இருந்தார். தாய் ஊரில்.
ஒரு ஞாயிறு காலை எட்டு மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவளது தந்தை அழைத்தார்.
“ரம்யா உங்க வீட்டுப் பக்கம் ஏதாவது வந்தாளா சார்” என்று கேட்டார். ரம்யா என் மனைவியை விட சிறியவளானாலும், என் மனைவிக்கு நல்லதொரு தோழி. “இல்லையே...” என்ற நான் “என்னாச்சுங்கய்யா” எனக் கேட்டேன். “காலை ஆறு மணிக்கே எங்கோ கிளம்பிப் போய்விட்டதாகச் சொன்னார்..
நான் ‘வந்துடுவாங்கய்யா...’ என்று ஃபோனை வைத்துவிட்டு, உமாவிடம் (இது மாற்றப்பட்ட பெயரல்ல மக்களே!) ரம்யாவைப் பற்றிக் கேட்டேன்.
“கம்பெனிலயே யார் யார் கூடவோ பேசறதா பேச்சு அடிபடுது. அவங்கம்மா ஒவ்வொரு தடவை வர்றப்பவும் நீங்க இருக்கற தைரியத்துலதான் இருக்கேன்’ன்னுட்டுப் போறாங்க.. இந்த தடவை அவங்கம்மா வந்தா கூட்டீட்டுப் போகச் சொல்லிடணும்” என்று புலம்பினாள்.
இதென்ன புதுக் குழப்பம் என்று நான் நினைத்துவிட்டு, வேறு வேலைகளில் நான் மூழ்கிவிட, கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து என் மனைவியின் அலைபேசி பிஸியாகத் தொடங்கியது.
“ரம்யா காலைல போனவ, இன்னும் வரலியாம்.. ஒனக்குத் தெரியுமாக்கா..”
“ரம்யா அவகூட வேலை செய்யற ஒரு பையன்கூட கொஞ்ச நாளா அங்கங்க பேசிகிட்டிருந்த பார்த்திருக்காங்க”
“இவ கழுத்துல இருந்த செய்ன் பத்து நாளா இவகிட்ட இல்லை தெரியுமா? அத எங்கயாவது அடகு வெச்சு, காசு வாங்கிட்டு அவன்கூட போய்ட்டாளோ..?”
“இன்னைக்கு அவளோட அக்கா ஊர்லேர்ந்து வர்றா. அவ ஒருத்திக்குதான் இவ பயப்படுவா... அவளுக்கு பயந்துதான் எங்கயோ போய்ட்டா போல...”
இப்படியாக ஆளாளுக்கு அவர்கள் கேள்விப்பட்டதை வைத்து என் மனைவியிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
விசாரித்ததில் மேலே சொல்லப்பட்ட எல்லாமே உண்மைதானெனத் தெரியவந்தது. அந்த அடகு மேட்டரைத் தவிர. அடகு வைத்ததற்கு மட்டும் சரியான ஆதாரம் சிக்கவில்லை.
பனிரெண்டு மணிக்கு, விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.... அவளது அப்பா மிகுந்த பதட்டத்தோடு வந்தார்.
“சார்... ரம்யா ஒருபையன் கூட தெனமும் பேசிகிட்டிருந்தான்ங்றாங்க. கொஞ்சம் விசாரிங்களேன்...”
அலைபேசியிலேயே விசாரித்தேன். அவன் பெயர் குணா. அடுத்த அதிர்ச்சி - அவன் நான்கு நாட்களாக பணிக்கு வரவேயில்லை! ஞாயிறென்பதால் அவனது அலைபேசி எண் பற்றிய தகவலும் யாரிமிருந்தும் பெற இயலவில்லை.
இதென்னடா வம்பாக இருக்கிறதே என்று நினைத்தவாறே அவரை சமாதானப்படுத்தி அவரது அறையில் விட்டுவிட்டு (ரெண்டு மணிநேரத்துல வர்றேன். நீங்க பதட்டப்படாம இருங்க) என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
இதுபோன்ற பதட்டமான சமயங்களில் எல்லாம், சம்பந்தப்பட்ட சம்பவத்தை முழுதும் மறந்து அரை மணி நேரம் கேரம் போர்ட் விளையாடவோ, க்ரிக்கெட் பார்க்கவோ செய்துவிட்டு மீண்டும் தெளிவான மனதுடன் அதைச் சந்திப்பது வழக்கம். அதேபோல அன்றைக்கும் வீட்டுக்குச் சென்றேன். உமாவைக் கலவரப்படுத்தவேண்டாம் என்பதால் ஒன்றூம் சொல்லவில்லை.
அரைமணி நேரம் மனதை வேறு விஷயங்களில் செலுத்திவிட்டு, பிறகு குணாவின் விலாசம் கண்டுபிடித்து - அவன் வீட்டுக்குப் போனேன்.
அவன் பாட்டி இறந்து நான்கு தினங்களாகி இருந்தன. அதற்காகத்தான் லீவு போட்டிருக்கிறான் அவன்!
ரம்யாவைப் பற்றிய பேச்சை முதலிலேயே ஆரம்பிக்காமல், “இந்த வழியா வந்தேன்பா.. உங்க பாட்டி தவறீட்டாங்கன்னாங்க. அதான் விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்தேன்” என்று பேச்சுக் கொடுத்தேன்.
கிளம்புமுன் எதேச்சையாகக் கேட்பதுபோல “கம்பெனிலேர்ந்து யாராவது வந்தாங்களா?” என்று கேட்டேன்.
“இல்லை” என்றவன் ”சார்.. ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்றான். ”என்னப்பா” என்றேன்.
“என்கூட வேலை செய்யற ரம்யா, அவ செய்ன் அறுந்துபோச்சுன்னு பத்த வைக்க எங்கிட்ட குடுத்தா சார். என் பக்கத்து வீட்லயே ஆசாரி இருக்காருங்கறதால நானும் வாங்கி அவர்கிட்ட குடுத்தேன். அவ நேரம் பாருங்க.. அடுத்த நாள், அந்த ஆசாரி - ஊர்ல அவர் வீடு மழைல இடிஞ்சிடுச்சுன்னு சொல்லாம கொள்ளாம ஊருக்குப் போய்ட்டாரு. அவ டெய்லி என்கிட்ட வந்து ‘அக்கா வர்றதுக்குள்ள வேணும்’னு சண்டை போட்டுட்டே இருந்தா. அதுக்குள்ள எங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு லீவு போட்டுட்டேன். அந்த செய்னை வாங்கித் தர்றேன்.. குடுத்துடறீங்களா சார்” என்றான்.
“சரி.. வாங்கிட்டு வா” என்று சொல்லி, அவன் அந்த ஆசாரி வீட்டுக்குப் போக நான் காத்திருக்க ஆரம்பித்தேன்.
அப்போது ஒலித்தது என் அலைபேசி.
உமாதான்.
“ஏங்க... ஒண்ணுமில்ல. ரம்யா அந்தப் பையன்கிட்ட அவ நகையை பத்தவைக்க குடுத்திருக்கா. அக்கா வர்றதுக்குள்ள வாங்கணும்னு அந்தப் பையன் வீட்டுக்கு ஃப்ரெண்டுகூட போலாம்னு ஹாஸ்டல்ல இருக்கற அவளோட ஃப்ரெண்டு ரூமுக்கு போயிருக்கா, அவ ஃப்ரெண்டு நைட் ஷிப்ட் முடிச்சு வந்ததால, பத்து மணி வரைக்கும் தூங்கீட்டு போலாம்டின்னு சொல்லிருக்கா. இவளும் படுத்து நல்லா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிட்டா. இப்பதான் எழுந்திருக்காங்க. மணி ரெண்டாச்சுன்னு பயந்து வீட்டுக்கு வந்துட்டாங்களாம். வேற ஒண்ணுமில்லைங்க. அவங்கப்பா உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு.. ஆமா நீங்க எங்க இருக்கீங்க?”
“ஃப்ரெண்டு வீட்டுக்கு வந்தேன். இதோ வந்துடறேன்”
நான் ஃபோனை வைத்ததும் குணா சங்கிலியை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தான்.
“மறக்காம குடுத்துடுங்க சார். பாவம் ரம்யா” என்றான்.
சிரித்தபடி விடைபெற்றேன் நான்.
.