Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, October 5, 2014

அர-மெட்-ஜீ-பேங்!

சமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்!

1. அரண்மணை:
மூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம்பிப் போனோம்.

சந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.

‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா?” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.

“படம் எப்டி?” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா? இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.
--------------

2. மெட்ராஸ்:

நல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.

ரஞ்சித் - Waiting For Your Hat trick Movie!
---------------------------------------

3. ஜீவா:

சமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா!.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா!’


குறியீடுகள் என்று பார்த்தால், இதிலும்.  கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல!

பாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.

OUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு? “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.


ச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
-----------

4. BANG BANG

மெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா!
.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்!



ஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!

வேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது...?


வழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி... ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.

விஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.



அனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!

முதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.

படத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா! குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு!) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு!

விஜய்?

ஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக்கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்....

சீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி - க்ளாஸ்! அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது!

வசனங்கள் - பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.

இசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல!) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்‌ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.

இடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் - விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்!


வேட்டைக்காரன் - 42%



.

Saturday, September 19, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்


மேலே படத்தில் காண்பது நீங்கள்..நான் உட்பட நம்மைப் போல் ஒருவன்தான். மும்பையில், கோவையில், சென்னையில் குண்டு வெடிக்கிறதா அது நமக்கு வெறும் செய்திதான். கொஞ்சம் தெரிந்த ஆசாமிகள் ஏதாவது மரணமடைந்தவர்கள் லிஸ்டில் இருந்தால் ஒரு எக்ஸ்ட்ரா ‘உச்’ உறுதி. அதேபோல தியாக மரணம் (உன்னிகிருஷ்ணன், ஹேமந்த் கார்க்கரே) என்றால் அதன் காரணமாக இருக்கும் தீவிரவாதத்தை எதிர்த்த கவிதைகளும், விவாதங்களும் சூடுபறக்கும். கொஞ்ச நாள் கழித்து எந்திரன் ஸ்டில்களோ, வேட்டைக்காரன் வெளியீட்டுத் தேதியோ மீடியாக்களில் முந்திக் கொள்ளும்.


இப்படி இருக்கும் சாமான்யன் - COMMON MAN - கொஞ்சம் வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்தால்?



சாதாரணமான ஒரு காலை நேரம். நகரின் முக்கியமான போலீஸ் ஸ்டேஷன் உட்பட ஆறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்துவிட்டு வீட்டுக்கு காய்கறியும், வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள ஒரு மிகப்பெரிய கட்டிட மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு போலீஸ் கமிஷனரை ஆட்டு விக்கிறான் ஒரு பொதுஜனம். அவனது கோரிக்கை, கைது செய்து வைத்திருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்பதே.

கமிஷனர் இதை எப்படிக் கையாளுகிறார், அவன் கமிஷனரை எப்படி ஆட்டுவிக்கிறான் என்பதே உன்னைப் போல் ஒருவன்!

ஒரு நாள். காலை ஏழு டூ மாலை ஏழுதான் முழுக்கதையும்.

பின்னி எடுத்துவிட்டார்கள்! ஒரே ஸ்க்ரீனில் பத்து உடை, உடல்மொழியோடு அசத்திய கமலுக்கு ஒரே உடை. சாதாரணப் பொதுஜனத்தின் பயத்தை ஒரு ஷாட்டில் தன் உடல்மொழிமூலம் காட்டியிருப்பார் (போலீஸ் ஜீப்பைப் பார்க்கும் அந்தக் கடைசி காட்சி) - Class!

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் - இரண்டு. வசனங்கள் & இசை.

கமிஷனர் மோகன்லாலுக்கும், ஹோம் செக்ரட்டரி லக்‌ஷ்மிக்கும் நடக்கும் விவாதம் - மிகவும் குறிப்பிடத்தக்கது. (Blaming, Responsibility)

அதேபோல கமலுக்கும், மோகன்லாலுக்கும் நடக்கும் Common Man, Super Man, Invisible Man விவாதமும்.

இந்தப் படத்திற்கு காமெடி தேவையில்லை என்றாலும் பரத் ரெட்டி தன் மனைவியிடம் ‘எதுக்காவது நீ யெஸ்னு சொல்லியிருக்கியா’ எனும்போது கையிலிருக்கும் குழந்தையைக் காட்டி ‘இதுக்கு?’ என்பது, எம்.எஸ். பாஸ்கரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசும் வசனங்கள் உட்பட பல வசனங்களில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

இன்னொன்று பின்னணி இசை. ஸ்ருதி கலக்கியிருக்கிறார். முக்கியமாக இரண்டு இடங்களைக் கவனியுங்கள். ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாஷ் ரூமில் பாமை கமல் வைக்கும்போது வரும் பின்னணி இசை. இன்னொன்று கமல் அந்தக் கட்டத்தின் மேலேறிப் போகும் சீன். அத்தனை பெரிய மாடி ஒவ்வொன்றாய் ஏறுவதை சலிக்காமல் ரசிகனைப் பார்க்க வைப்பது இசை. குறிப்பிட்ட இடத்தில் இசை நின்று, அவர் படியேறுவதன் சப்தங்களை மட்டும் கொடுத்து, மாடியை அடையும்போது மீண்டும் பின்னணி இசை கொடுத்து.... ஸ்ருதி.. ஹாட்ஸ் ஆஃப் டு யூ!

மோகன்லால், லக்‌ஷ்மி, பரத் ரெட்டி, கணேஷ், அனுஜா ஐயர் அந்த கம்ப்யூட்டர் இளைஞன் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் - A MUST WATCH MOVIE

கேபிள் சங்கர்ஜிக்கு:- அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே?


.

Saturday, March 7, 2009

யாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)



*****
வாஆஆஆஆஆஆஆவ்!


எத்தனை நாளாச்சு இப்படி ஒரு கலக்கலான திகில் படம் பார்த்து!

*****

மாதவனின் கர்ப்பவதி மனைவி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமாகியும் டாக்டர்கள் திட்டவட்டமாக ஒன்றும் கூறாமல் இருக்க, மாதவனின் குடும்பமே அவள் பிழைப்பாளா, கர்ப்பம் கலைந்திருக்குமோ என்று கலங்கி நிற்க.. மாதவன் மணி பார்க்கிறார்.

மதியம் ஒன்று.

‘யாவரும் நலம்’ என்ற சீரியல் போடப்படும் நேரம். அவசர அவசரமாக அந்த சீரியல் பார்க்க வீட்டிற்கு காரில் பறக்கிறார் மாதவன்.

மனைவி ஐ.சி.யு-வில். கணவன் சீரியல் பார்க்க ஒடுகிறானா... நம்பமுடிகிறதா?

ஆம். அந்த சீரியலைப் பார்த்து, தன் மனைவி பிழைப்பாளா மாட்டாளா என அறிந்து கொள்கிறார்.

நம்பமுடிகிறதா?

நமது வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட தொலைக்காட்சியில் உங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் அச்சு அசலாக – ஆள் மட்டும் வேறாக – ஒளிபரப்பட்டால் எப்படி இருக்கும்?

அதுதான் நடக்கிறது மாதவனுக்கு.

அண்ணன், அண்ணி, அவரது குழந்தைகள், தனது மனைவி, தங்கை, அம்மா- என அழகான குடும்பம். புதியதாக கடனில் வாங்கிய ஃப்ளாட்டில் குடிபோகிறார்கள். ஃப்ளாட் நம்பர் 13 B. லிஃப்ட் மாதவன் போகும்போது மட்டும் வேலை செய்வதில்லை. பூஜையறை சுவற்றில் ஆணி அடித்து சாமி படம் மாட்டமுடியவில்லை. செல்ஃபோனில் தனது படத்தை எடுத்தால் கோணல்மாணலாக வருகிறது. இதையெல்லாம் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்வுகளாகத்தான் எடுத்துக் கொள்கிறார் மாதவன்.

குடிபோன அன்றே மதியம் ஒரு மணிக்கு (அதாவது டிஜிட்டல் கடிகாரம் 13 எனக்காட்டும்போது!), சீரியல் பார்க்க அம்மா, மாதவன் மனைவி, அண்ணி உட்கார சேனல் 13ல் நிற்கிறது. வேறு சேனலை மாற்ற முடியவில்லை. சரி என்று பார்க்க, யாவரும் நலம் என்ற சீரியல் ஒரு குடும்பம் புதிய வீட்டிற்க்கு வருவதில் ஆரம்பமாகிறது.

மாதவன் ஒரு நாள் அந்த சீரியலைப் பார்க்க நேர்கையில், இவர் வீட்டில் நடந்த சம்பவங்களே அதில் காட்டப்படுவதை கவனிக்கிறார். அந்த நாளில் சீரியலில் அண்ணனாக வரும் கதாபாத்திரம் தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்.

வீட்டிற்கு வரும் மாதவனின் அண்ணன் அதே போல தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்ல திகிலடிக்கிறது மாதவனுக்கு.

தொடர்ந்து பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் கண்ணில்லாதவரின் நாய் தன் வீட்டு வாசலுக்குள் வராமல் குரைத்துக் கொண்டே இருக்க.. சந்தேகமடைந்த மாதவன் வீட்டு வாசலுக்கு வெளியே நின்று தனது செல்லில் தன்னையே படம் பிடிக்கிறார். நன்றாக இருக்கிறது. அரையடி பின்னே வந்து வீட்டிற்குள் நின்று படம் பிடிக்கிறார். கோணல் மாணலாகிறது. வீட்டிற்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார் மாதவன்.

இடையிடையே அந்த சீரியல் சம்பவங்கள் அதனதன் படியே தனது குடும்பத்தில் நடக்க.. சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போகிறார். அங்கே குஷ்பு வேறொரு ஜாக்பாட் டைப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். மணி 1. சந்தேகமடைந்த மாதவன் அருகிலுள்ள ஷோரூம் ஒன்றிக்கு சென்று அந்தக் குறிப்பிட்ட சேனலைப் போட அது ‘யாவரும் நலம்’ என்ற பெயரில் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சிதான். சீரியல் அல்ல. மாதவனின் வீட்டில் மட்டும்தான் அது சீரியலாகத் தெரிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தனது போலீஸ் நண்பன் துணையுடன் துப்பறிகிறார். அந்த சீரியலில் தனது குடும்பமே கொல்லப்பட்டதாய்க் காண்பிக்கப்படுவதை அறிந்த மாதவன்.. அது நடக்காமல் காப்பாற்றினாரா என்பதை வெள்ளித்திரையில் நிச்சயமாகக் காண்க.

மாதவனுக்கு அசத்தலான வேடம். ஹீரோ என்ற எந்த கிரீடமுமில்லாமல் ஒரு குடும்ப வேடத்தை கன கச்சிதமாகச் செய்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தனது வீட்டை அமானுஷ்யம் ஆட்டிப்படைக்கிறது என அறியும்போது முகபாவங்களில் அதிர்ச்சியைக் காண்பிப்பதிலாகட்டும், சீரியலில் தனது குடும்பமே சுத்தியலால் அடிக்கப்பட்டு கொலையாவதை அறிந்த அவர், க்ளைமாக்ஸ் பார்க்கும்போது அந்தக் கொலைகாரன் அவர்தான் என்பதை சீரியலில் பார்த்து, தன்னால் தன் குடும்பத்திற்கு நேரும் ஆபத்தைத் தவிர்க்கப் போராடுவதிலாகட்டும்.. மாதவன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வேறு எல்லா கேரக்டர்களும் அவரவர்கள் பணியை அற்புதமாக எந்த மிகையுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சீரியல் விஷயத்தைச் கேட்ட மாதவனின் போலீஸ் நண்பன் சிரிக்கிறார். மாதவன் அவரை நம்ப வைக்க மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சீரியலில் தம்பி கதாபாத்திரம் அவனது போலீஸ் நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் காண்பிகிறார்கள். அடுத்த சீன் அந்த போலீஸ் நண்பன் மனைவிக்கு ஏதோ ஆபத்து நிகழ்வதாய்க் காண்பிக்கப்பட, மாதவன் நண்பனை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு செல்ல... அங்கே கேஸ் அடுப்பு லீக் ஆகி வீடுமுழுவதும் வாசனை!

போலீஸ் நண்பன் மாதவனிடம் சொல்கிறார்: “டேய் அந்த சீரியல்ல போலீஸ் கேரக்டருக்கு என்ன ஆகுதுன்னு டெய்லி கேட்டு சொல்டா. அந்த கேரக்டர் வர்ற நேரம் காய் நறுக்கப் போகவேண்டாம்னு சொல்டா” என்பது கலகல.


இசை – சங்கர் எஷான் லாய். திகிலாகத்தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அளவுக்கதிகமான இரைச்சல். ஒளிப்பதிவு படத்தின் திகிலூட்டலுக்கு நல்ல உறுதுணை புரிந்திருக்கிறது. அதுவும் 1977களில் நடக்கும் ஃப்ளாஷ்பாக் சீன்களில் காமிரா..விளையாடியிருக்கிறது. (பி.சி.ஸ்ரீராம்க! சும்மாவா!!)

நான் உமா, மீரா மேகாவோடு போனேன். குழந்தைகள் பயந்து பயந்து விழுகிறார்கள். க்ளைமாக்ஸில் உமாவும் கண்ணைமூடி, காதைமூடி உட்கார்ந்து விட்டார். குழந்தைகளை அழைத்துப் போகாவிட்டாலும், மனைவியை அழைத்துப் போங்கள். நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)


ஒரே நேரத்தில் ஹிந்தியில் 13B, என்ற பெயரிலும், தமிழில் யாவரும் நலம் என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் விக்ரம்.கே.குமார். இப்படி ஒரு கதையை 90% லாஜிக்கோடு கொண்டு சென்றது இயக்குனரின் பலம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்... கைகுடுங்க விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. ஆவி, அமானுஷ்யங்கள் குறித்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் எந்தக் குறையும் இல்லை.

மாதவன் தனது வீட்டின் கதை என்று உணர்ந்தை அவர் குடும்பம் உணராதது ஏன்? சீரியலை தனது உறவினரோடு பகிர்ந்து கொள்ளும் சரண்யாவுக்கு மற்ற வீடுகளில் இந்த சீரியல் இல்லை என்பது தெரியாமல் போனது எப்படி, அது ஏன் லிஃப்ட், செல்ஃபோன் தொந்தரவுகள் மாதவனுக்கு மட்டும்? – போன்ற லாஜிக் ஓட்டைகளை தாராளமாக மன்னித்து படத்தைப் பார்த்து பயந்து நடுங்கி வரலாம்.

யாவரும் நலம் – யாவரும் பார்க்க.

Saturday, January 17, 2009

படிக்காதவன் – விமர்சனம்


விஜய்க்கு போக்கிரி ஹேங் ஓவர் போல தனுஷின் டீமுக்கு பொல்லாதவன் ஹேங் ஓவர்.

படிக்காத ஹீரோ, படித்த பெண்ணை காதலித்து அவரை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளும், இடைவரும் இடையூறுகளை வெல்வதும்தான்... ஹாஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... படிக்காதவன்.

படிக்காத தனுஷ், அவர்கள் வீட்டினரிடம் நல்லபேர் வாங்கிக் கொண்டு அப்பா பிரதாப்போத்தனிடம் திட்டு வாங்கும்போது ‘ஆஹா’ படம் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் அந்தப் படம் போல் அப்பாவுக்கு அடங்கியிராமல் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுகிறார். ‘ஒண்ணு அவன் வீட்டில் இருக்கணும். இல்ல நான் இருக்கணும்’ என்று (எல்லா தனுஷ் பட அப்பாக்கள் போலவே) பிரதாப்போத்தன் சொல்லும்போது அம்மா மீராகிருஷ்ணனிடம் ‘அப்பாவைப் போகச் சொல்லும்மா’ என்பதிலிருந்து ஒவ்வொரு முறையும் அவரை டீஸ் செய்கிறார். படிக்காதவன் என்று திட்டுவதால் ரோஷம் வந்து டிகிரி வாங்க டுடோரியல் காலேஜ் போய், காலேஜை மூட வைக்கிறார்.

“நீ ஒரு பொண்ணைக் காதலிக்கற. அவ பேர் கீதான்னு வெச்சுக்க. அவள நீ கல்யாணம் பண்ணிகிட்டு அவ ஐ.ஏ.எஸ். படிச்சா கீதா ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ன்னு போடுவாங்க. அப்போ, நீ படிக்காமயே உம் பேருக்குப் பின்னாடி டிகிரி வருமில்ல?” என்று அசத்தலான ஐடியா தருகிறார்கள் நண்பர்கள். (சபாஷ்: வசனகர்த்தா சுராஜ்)

அதன்படி தமன்னாவைக் காதலித்து பல கஷ்டங்களுக்குப் பின் (அவருக்கல்ல.. நமக்கு!) கைபிடிக்கிறார்.

சிம்புபோல ஓவர் பந்தா விடாமல் ‘நான் சின்னப்பையன்ணா” என்று சொல்லிகொண்டே ஃபைட் செய்வதிலிருந்து பல விஷயங்களை தனுஷிடம் ரசிக்க முடிகிறது. பல இடங்களில் அவரது எக்ஸ்ப்ரஷனுக்கு கைதட்டல். டான்ஸிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

தமன்னா. கேடியிலும், வியாபாரியிலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளதை தியேட்டர் கரகோஷங்களில் உணரமுடிகிறது. ஸ்ட்ரெக்ச்சர் மெய்ன்டெய்னில் ஸ்ரேயாவை விட ஒரு பாய்ண்ட் முன்னே நிற்கிறார். ஒரு சில ஆங்கிளில் சிம்ரனை நினைவுபடுத்துகிறார். (முகத்தில் அல்ல. உடலில்) முயற்சித்தால் பெரிய ரவுண்ட் வரலாம்.

காஃபி ஷாபில் வில்லன்கள் தனுஷை அடிப்பதுபோல காட்டி, அது தமன்னாவின் ஆட்கள் என்று தனுஷ் நினைப்பது போல ஒரு ஸ்க்ரீன்ப்ளே பண்ணியிருக்கலாமே, அதைவிடுத்து அவரே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் அரதப்பழசான ஐடியாவை ஏன் எடுத்தார்கள் என்று சலித்துக் கொண்டிருக்கும் நமக்கு இடைவேளையின் ட்விஸ்ட் உண்மையிலேயே சூப்பர். ஆனால் இடைவேளைக்குப் பின் படத்தை ஆந்திராவுக்குக் கொண்டுபோய், நமக்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். இடைவேளைக்குப் பின்தான் விவேக் என்ட்ரியே என்பதால் படம் தொய்வில்லாமல் போகும் என்று நினைத்தால் அதிலும் மண். தன் பாணியில் அட்வைஸ் சொல்வதா, வடிவேலு பாணியில் அடிவாங்கிச் செல்வதா என்று விவேக் தடுமாறிக் கொண்டிருக்கிறார். செல் முருகா.... ப்ளீஸ்... காப்பாத்து!

பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாமே இடைவேளை வரை ஓடினால் போதும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எடுக்கப்பட்டதா?

யப்பா.... டைரக்டர்களா.. ஒரு வில்லன் போதும்ப்பா.. வர வர எல்லாருமே ரெண்டு மூணு வில்லன்களைக் காமிச்சு, ஹீரோவை டார்ச்சர் பண்றதுக்கு பதிலா எங்களை டார்ச்சர் பண்றீங்கப்பா.. அதுவும் எல்லாருக்குமே திடீர்னு தெலுங்குப் பாசம்வேற.. முடியல!

சுமனுக்கும், சாயாஜி ஷிண்டேவுக்குமான சண்டை எதற்கு என்பது ‘நீ என் பையனைக் கொன்னுட்ட’ என்று ஒரு வரியில் சொல்லப்பட்டதால் ரசிகர்களிடம் அதற்கான பதற்றம் இல்லை. எப்போதும் அவர்கள் ஆட்கள் பார்த்துக் கொண்டாலும் ரமானந்த் சாகரின் ராமாயண சீன் போல எதிரெதிராக மோதிக் கொள்ளும் (மோதிக் கொல்லும்) அளவுக்கான பகையை ஒன்றிரண்டு சீன்கள் மூலம் ரசிகர்கள் மனதில் கொண்டுசெல்லத் தவறிவிட்டார் டைரக்டர். அதேபோல சுமனை நல்லவன் என்று காட்ட டைரக்டர் முயற்சிப்பது ஏனென்று புரியவில்லை. படம் முடிந்த மாதிரி இருக்கும்போது, அடுல் குல்கர்ணியைக் கொண்டுவந்து தனுஷையும், படம் பார்க்கும் நம்மையும் அநியாயத்துக்கு சோதிக்கிறார்.

வழக்கமான தனுஷ் படம்போலவே, அவருடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டையிட்டு ஜெயித்து... படம் முடிஞ்சுடுச்சா என்று நாம் நினைக்க நினைக்க படம் முடிந்துவிடுகிறது.

படிக்காதாவன் – இடைவேளைக்குப் பின் பிடிக்காதவன்.

Tuesday, January 13, 2009

வில்லு - விமர்சனம்




விஜய் பிரபுதேவா காம்பினேஷன். போக்கிரியின் ஹேங் ஓவர் இன்னும் போகவில்லை. கிட்டத்தட்ட அதே முகங்கள்.

ராணுவத்தில் மேஜரான தனது அப்பா விஜய்யை கொன்று தேசத்துரோகி பட்டம் கட்டிய பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வில்லன் க்ரூப்பை மகன் விஜய் பழிவாங்கும் அக்மார்க் தெலுங்குக் கதை.

விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.

ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...

தான் அமைக்கும் டான்ஸ் ஸ்டெப்களில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை அடிக்கடி காட்டும் பிரபுதேவா இதில் டைட்டில் சாங்கில் ஆரம்பித்து பல இடங்களில் தானொரு எம்.ஜி.ஆர்.ரசிகன் என்று பறைசாற்றியிருக்கிறார். (எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா என்பது டைட்டிலுக்கு முன் 'உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்' என்று நற்பணிமன்றக் கொடியைக் காட்டுவதால் சந்தேகம் வருகிறது.)

இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான். ஆனால் ஃப்ளாஷ்பேக்குக்கு அப்புறம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. குருவியில் மண்ணுக்குள் போன ஹீரோ ஆற்றுக்குள் இருந்து வருவது போல, இதில் புதையுண்ட பிறகு புயல் வந்து மண்ணை விலக்கி.. போதும்டா சாமி. ஏம்ப்பா.. இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா? கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருந்தா கில்லியாகக் கூடிய கதையை எப்படிக் கொண்டு போக என்று தெரியாமல் சொதப்பிவிட்டார்கள். இடைவேளையின்போது நல்லாத்தானே இருக்கு என்று தோன்றிய படம் க்ளைமாக்ஸின் ஜவ்வால் ‘ஆளை விட்டாப் போதும்’ என்று சொல்ல வைக்கிறது.

நயன்தாரா-ளம். அவ்வப்போது சோர்ந்துவிடும் ரசிகர்களை உயிர்ப்போடு வைக்கிறார் நயன்தாரா. முகபாவனைகள், உடைக் குறைப்பு என்று இளைஞர்களைத் தாறுமாறாகப் பந்தாடுகிறார். போதாத குறைக்கு சரக்கடித்து விஜயுடன் மல்லுக்கு நிற்கிறார்.

வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்த அளவுக்கு சீன்கள் அமைக்க டைரக்டர் திணறியிருப்பது அந்த மாட்டு ஃபைட்டிலேயே தெரிகிறது. இடைவேளைக்கு முன் ஓரளவுக்கு இருந்தவரை இடைவேளைக்குப் பின் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

படத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் இசை. பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழக்கமான தெலுங்குவாடை இருப்பினும் துள்ளலாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் வரும் பல காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பில்லாவை நினைவுபடுத்துகின்றன.

பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ படம் திருப்தியா என்றால் 50-50தான். ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது. குருவியால் இதற்கு நல்லபேர். அவ்வளவுதான் சொல்லமுடியும். (என்ன இருந்தாலும் அந்த அளவுக்கு போரடிக்கல என்று ரசிகர்கள் பேசிச் செல்வதைக் கேட்க முடிந்தது.)

வில்லு - குறி தவறிவிட்டது.

Monday, December 22, 2008

அபியும் நானும் - விமர்சனம்

ஒரு மகளைப்பெற்ற தந்தையான பிரகாஷ்ராஜ் வாக்கிங்போகும்போது அங்கே சந்திக்கும் பிரித்விராஜிடம் தான் மகளைப் பெற்று வளர்த்த கதையை – நிஜத்தை – பகிர்ந்துகொள்ளுகிறார். இதுதான் அபியும் நானும்.


இதுதானா என்றால் இதுதான். இடையில் எந்த ஒரு திடுக்கிடும் திருப்பங்களோ, அதிர்ச்சிகளோ ஒன்றுமே இல்லை. ஏன் க்ளைமாக்ஸ்கூட இல்லை. இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு நல்ல பதிவு என்று சொல்லலாம். ஒரு மகள்-தந்தையின் பாசப்பிணைப்பை பதிவு செய்திருக்கிறார் ராதாமோகன்.

மகள் த்ரிஷா – ரொம்ப ப்ராக்டிகல்லான மகள். அப்பா ப்ரகாஷ்ராஜ்தான் பாசம் பாசம் என்று கொட்டுகிறார். அதை முதலில் வரும் வெந்நீர் கொட்டிவிடுகிற சீனிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது, இவர்தான் அழுகிறார். மகள் சிரித்தபடி (அப்போது அவள் கைகாட்டுவது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. ச்சோ.. ச்ச்வீட்ட்ட்!) டாட்டா காட்டி பள்ளி செல்கிறார்.

பெரியவளானதும் சைக்கிள் வாங்கிக் கொடுத்து, சரியாக ஓட்டுவாளோ என்று பயந்தபடி ஜீப்பில் பின்தொடரும்போது, மகள் நிறுத்தி “I KNOW WHAT I AM DOING” என்று திட்டி அனுப்பிவிடுகிறார். அது பிரகாஷ்ராஜூக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி படத்தில் அங்கங்கே “I KNOW WHAT I AM DOING” சீன்கள்.
அங்கங்கே பிரகாஷ்ராஜூக்கு அதிர்ச்சி தரப்படுவதாய் சொல்லப்படும் இவை எதுவுமே நமக்கு அதிர்ச்சியைத் தரவில்லை என்பதே படத்தின் குறை.

விஜி இல்லாமல், ராதாமோகனும் அங்கங்கே நகைச்சுவையை தெறித்திருக்கிறார். மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க பிரகாஷ்ராஜும், ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சி, மகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை வீடு, அறை ஏன் கொசுவலை கூட பிங்க் நிறத்தில் வைத்திருப்பது என்று படத்தில் டைரக்டர் அங்கங்கே தெரிகிறார்.

ஐஸ்வர்யாவிற்கு அம்மா கேரக்டர். நிறைவாய் செய்திருக்கிறார். எதிர்பார்த்தது போலவே திருமணமாகிப் போகும் சீனில் அழுகிறார்.

முஸ்தபாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர். ஒரு பிச்சைக்காரனான அவரை தன் சின்னவயதில் த்ரிஷா பார்த்து, வீட்டோடு வைத்துக் கொண்டு, அவரை பிரகாஷ்ராஜின் திருமணநாளின் போது பெரியதொரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று (முஸ்தபா ஹோட்டலை பிரமிப்பாய் பார்க்கும்போது பின்னணி இசை அருமை!) எல்லாருமாய் சாப்பிடும்போது, த்ரிஷாவைப் (3 வயது) பார்த்து முஸ்தபா ‘இது என் அம்மா சார்’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் கண் கலங்கினேன். சபாஷ் முஸ்தபா!

மனோபாலாவின் (எனக்கு மனோபாலாவின் பாடி லேங்குவேஜை பார்க்கும்போது எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வந்தார்) கேரக்டரை வைத்து ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தால் கடைசிவரை ஒன்றுமே செய்யாமால் விட்டுவிட்டார்கள். இப்படி படத்தில் எதிர்பார்த்த எதுவும் நடக்காது. இயல்பாக வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. சினிமாத்தனம் என்று எந்த திருப்பமும் இல்லை! வேண்டுமானால் அந்த ஏர்போர்ட் சீனில் தன் மகளில் காதலனாக யாரையோ எதிர்பார்த்திருக்க, ஒரு டர்பன் கட்டிய சிங் வந்து பிரகாஷ்ராஜிடம் ஹலோ சொல்வதை வேண்டுமானால் ஆச்சர்யப்படுத்தும் சீன் என்று சொல்லலாம்!

மொத்தத்தில் படம் நல்லாயில்லையா?

அப்படியெல்லாம் இல்லை. நிச்சயமாய் நல்ல படம். குடும்பத்தோடு பார்க்கலாம். ஆனால் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் என்ற கூட்டணிக்கு என்னைப் போன்ற ஆட்களிடமிருக்கும் எதிர்பார்ப்பை முழுமை செய்ததா?

படத்தில் முஸ்தபாவின் காதலியாக வரும் ஒரு கேரக்டர் சாரி எடுக்கும்போது, துணிக்கடையில் தூரத்தில் நின்றிருக்கும் முஸ்தபாவிடம் ‘நல்லாயிருக்கா’ என்று சைகையில் கேட்பார். அப்போது முஸ்தபா இரண்டாவது சாரிக்கு காட்டும் சைகைதான் முந்தைய கேள்விக்கு பதில்!

Friday, September 19, 2008

பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!



டைட்டிலில் இருந்து ஆரம்பமாகிறது அதகளம். தென்னை மரத்தில் பலா, புஷ்ஷூடன் கை குலுக்கும் பின் லேடன், பூச்செடிகளுக்கு நீரூற்றும் பீரங்கி வண்டி (நல்ல கற்பனை!), நிலாவில் விவசாயி என்று டைட்டில் போடும் போதே போஸ்ட் கார்ட் படங்களில் சிரிக்க வைக்க ஆரம்பிக்கிறார்கள். அதில் டாப் க்ளாஸ் இன்னொரு விமானத்தை ‘டோ’ பண்ணியபடி பறக்கும் விமானம்!

டைட்டில் அதகளம் என்றால் ஆரம்பக் காட்சி அமர்க்களம். சாவு வீட்டில் சைட்டடிக்கும் இளைஞர்கள், எழவு விசாரிக்க வந்த அப்பாவின் நண்பரிடம் ‘சார், நேத்து மேட்ச் பார்த்தீங்களா’ என விசாரிக்கும் இறந்தவரின் இரண்டாவது மகன். மகளோ, “அம்மா இந்த ட்ரஸ் நல்லாயிருக்கா. இன்னைக்கு சண்டே. அப்பா வேற செத்திருக்காரு. நிறைய பேரு வருவாங்கள்ல வீட்டுக்கு..” என்று அம்மாவைக் கேட்கிறாள். அம்மாவோ, “சீக்கிரம் காரியம் முடிஞ்சா பரவால்ல. பதினோரு மணிக்கு சீரியல் போட்டுடுவான்” என்று கவலைப் படுகிறாள். மூத்த மகனோ கார் சாவியைத் தேடி, ‘இந்த அப்பா எப்பவும் இப்படித்தான். கார் சாவியை பாக்கெட்ல வெச்சிருப்பாரு’ என்று புலம்பியபடி வெள்ளைத் துணி போர்த்தியபடி கிடக்கும் அப்பாவின் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.

நல்ல குடும்பம்டா சாமீ... என்று நாம் சிரித்தபடி படம் பார்க்கத் தொடங்கலாம்!

ப்ளாட் வாங்குவதே கனவாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத் தந்தை, (நெடுமுடி வேணு) அவரது இரண்டு மகன்கள், (கார்த்திக் & ஓம்) அவரை ஏமாற்றும் பேபி சார், (நாசர்), அதை ஆசிப் அலி (பாஸ்கி)யுடன் சேர்ந்து கார்த்திக் எப்படி பழிவாங்கி முறியடிக்கிறார் என்பதே கதை.

கதையை விடுங்கள். அதை நகைச்சுவை தேன் கலந்து தந்தவிதம் சூப்பர். இடைவேளை வரை சிரிக்க வைத்தவர்கள், இடைவேளைக்குப் பிறகு விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.

தம்பி ஓமின் நடிப்பு பிரமாதம். அவர்தான் கிட்டத்தட்ட ஹீரோ. தங்கள் இடத்தில் நாசர் கட்டிய காம்பவுண்டைத் தகர்க்க ரௌடி கும்பலை அவர் அழைத்து வருவது காமெடி தர்பார். ‘நாங்கள்லாம் யாரு? சும்மாவா.. டெர்ரர்ல?’ என்றபடி வரும் அந்த ரௌடி கும்பல் தலைவன் தனது சாகசங்கள் அடங்கிய போர்ட்ஃபோலியோவைக் காட்டுவது சிரிப்பென்றால், காம்பவுண்டை இடிக்கும்போது, ஒரு ஃபோட்டொகிராஃபர் சுற்றி சுற்றி வந்து படம் பிடிப்பது சிரிப்போ சிரிப்பு!

ஹீரோயின் ஏதோ ஒரு விளம்பரத்தில் வருபவர் என்பது தெரிகிறது. ஹீரோவும், ஹீரோயினும் உட்கார்ந்து காபி சாப்பிடும் காட்சிகள் விளம்பரம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நெடுமுடி வேணு மனைவி கேரக்டரில் நடிப்பவரின் டயலாக் டெலிவரி, அசல் சீரியல் டைப்! பல சீன்கள் தொடர்நாடக எஃபெக்டில் இருப்பது மைனஸ் பாய்ன்ட்.

அதுவும் ஹீரோ தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கிக்கு நடித்துக் கொடுத்திருப்பார் போல.. அஞ்சு பைசாவுக்கு கூட அவர் முகத்தில் குஷியே இல்லை. வேண்டா வெறுப்பாக இருப்பது போல ஒரு உம்மணாமூஞ்சி கதாபாத்திரம். ஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது ஹீரோவுக்கு வர வேண்டுமே.. ம்ஹூம்! ஹீரோவின் பாத்திரப் படைப்பில் சறுக்கிவிட்டார் டைரக்டர்!

இடைவேளைக்குப் பிறகு படம் நால்வரின் ரணகளத்திலேயே நேரம் போவதே தெரியாமல் ஆக்கிவிடுகிறது! நாசர், அவரது பி.ஏ.வாக வரும் ஜான்விஜய் (தகவல் நன்றி: லக்கி), மௌலி, அவரது பி.ஏ.வாக வரும் பாலாஜி (ஜெயா டி.வி. காம்பியரர்)

நாசர்: எத்தனை நாளாச்சு இப்படி இவரைப் பார்த்து. அதுவும் குடித்துவிட்டு சேடடை பண்ணும் காட்சியில் ஒன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார். சிரித்து, சிரித்து வயிறு வலித்துத் தொலைக்கிறது!

ஜான்விஜய்: அசால்ட்டான நடிப்பு. ஒரு ஃப்ராடின் பி.ஏ.வுக்குரிய அத்தனை பாடி லேங்குவேஜையும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் ஸ்டேஷனில் நெடுமுடிவேணுவிடம் “பேபி சாருக்கு ஒன்ன ரொம்பப் புடிச்சுப் போச்சுய்யா” என்று சிரித்தபடி பேசும் காட்சி டாப். டயலாக் டெலிவரிக்கு ஸ்பெஷல் ஷொட்டு!

மௌலி: கேட்கவே வேண்டாம். நடிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. நடிக்க வராதது போல நடிக்கும் சீன்களில் சபாஷ் பெறுகிறார். ‘நான் என் மகளுக்காக இதைச் செய்யறேன்’ என்று சொல்லிவிட்டு, ஹீரோ தலையாட்டி முடிக்கும் முன், ‘அவ உனக்காகச் செய்யறா’ என்று சொல்வது உட்பட பல இடங்களில் தந்தைப் பாசத்தை அழகாக காட்டியிருக்கிறார். காசு வாங்கிவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் ‘மொதல்ல தண்ணி குடுங்கப்பா’ என்று கேட்கிறாரே.. எத்தனை பேர் கவனித்தார்களோ!

பாலாஜி: புதுமுகமா? ஆனாலும் சபாஷ் சாரே! ஃபிஷ்ரிஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமிகளை விரட்டும் இடத்தில் விலா நோக வைக்கிறார்!


நெடுமுடிவேணு நடிப்பும் சொல்லியே ஆகவேண்டிய ஒன்று. சோகம் ததும்பியே இருக்கும் (30 லட்சத்தை முழுசா கோட்டைவிட்டா வேற எப்படி இருக்கும்?) இவரது சீன்களில் எல்லாம் மலையாள ஆர்ட் பட வாசனை! பீட்சாவுக்கு சட்னி, சாம்பார் கேட்கும் இவர், மௌலி பணம் வேண்டாம் என்று திரும்பி வரும்போது சந்தோஷமாக அவரைக் கவனிக்கும் பாங்கில் நெடுமுடியின் கேரக்டரைப் பதியவைத்து விடுகிறார் இயக்குனர்!


பாஸ்கிக்கு சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு படம்.


க்ளைமேக்ஸ்?

அப்படின்னு ஒண்ணு இல்லைங்க!

நான் புதனன்று இந்தப் படம் பார்க்கும் போது என்னுடன் சேர்த்து முதல் க்ளாஸில் 20 பேரும், கீழே 68 பேரும் ஆக மொத்தம் 88 பேர்தான் தியேட்டரில்! கஷ்டமாக இருந்தது. (மெனக்கெட்டு எண்ணினோம்ல?)

குசேலன், குருவி என்று ஸ்டார்களைப் போட்டு, நம்மை சோதிப்பதற்குப் பதிலாக இந்த மாதிரி நகைச்சுவையுடன் கூடிய படங்கள் அவசியமாய் தேவைப்படுகிறது.

ஆனால் வசனங்கள், காட்சிகள் எல்லாமே காமெடி சீரியல் பார்க்கும் எஃபெக்டைத் தருவதால், தமிழக மக்களுக்கு இந்தப் ப்டம் பிடிக்குமா, இங்கே இந்தப் படம் எதிர்பார்த்த (யாரு? என்னை மாதிரி ஆளுக எதிர்பார்த்த) வெற்றியைப் பெறுமா என்று எங்களைக் கேட்டால்.......


பொய் சொல்லப் போறோம்....வெற்றிபெறும்!

Saturday, June 21, 2008

குசேலன் - முதல் விமர்சனம்!!

படம் ஆரம்பித்ததுமே எப்போது சூப்பர் ஸ்டார் வருவார் என்கிற ஆவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது..

படத்தில் ரஜினிக்கு இணையாக நாம் பாராட்ட நினைப்பது பசுபதியின் கேரக்டர்.. அந்த கேரக்டருக்கு இவரை விட்டால் வேறு யாரையும் நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை! முடிவெட்டும் தொழிலாளியாய் வாழ்ந்திருக்கிறார். தனது தொழில் கொஞ்சம் சுணக்கம் அடையும் போது, மனசுக்குள் வருந்துவதை முகத்தில் காட்டாமல் மனைவியிடம் நடிக்கும் காட்சிகளில் நான் மனதில் பதிகிறார். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாமல் மருகும் போதும், தனது ஊருக்கு வரும் பால்ய நண்பர் சூப்பர் ஸ்டாரிடம் உதவி கேட்க தயங்கி போகாமலே விடும்போதும் தனது கூத்துப் பட்டறை அனுபவ நடிப்பால் எல்லோரையும் கலங்கடிக்கிறார். சபாஷ் பசுபதி..

ரொம்ப நாளைக்குப் பிறகு மீனா!! இவ்வளவு நாள் ஏன் இந்த அழகான.. திறமையான நடிகையை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் சினிமா என்று நினைக்க வைக்கிறது.. நிச்சயம் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல செகண்ட் இன்னிங்க்சை துவக்கும்..

ரஜினி! படத்தில் இவர் வந்த பிறகு படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்! அதுவும் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் நிச்சயம் அவரது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாய் வசனங்கள் அமைத்திருப்பது பி.வாசுவின் சாமர்த்தியம்!

இறுதிக் காட்சியில் பள்ளியில் அவரது உரையை முடித்துக் கொண்டு பசுபதியை தேடுவதும், பசுபதியை அவரது வீட்டிற்கே சென்று சந்திப்பதும் நாம்மை நெகிழ வைக்கும் காட்சிகள்..

இசை.. ஜி.வி.பிரகாஷ்குமார்! சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு இசையமைக்கிறோம் என்கிற பதட்டமிலாமல் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்! ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்ட "சினிமா சினிமா சினிமாதான்" பாடலின் இசையும், வரிகளும் (வாலி!!) நம்மை கட்டிப் போடுகின்றன. அந்தப் பாடலை தியேட்டரில் சரியாக கேட்கவே முடிவதில்லை! விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் , த்ரிஷா என்று நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரைப் பிளக்கிறது!

மொத்தத்தில்.. ரஜினி நடித்து பி.வாசு டைரக்ஷனில் வெளிவந்திருக்கும் பசுபதி படம்!

(இப்போ என்ன பண்ணுவீங்க??)

Sunday, June 15, 2008

தசாவதாரம்-ஒரு விரிவான விமர்சனம்

பிளாக் எழுதும் எல்லோருமே தசாவதராம் விமர்சனத்தை எழுதாவிட்டால் ஏதோ நாடு கடத்திவிடுவார்கள்போல. இதோ நானும்.. (கதையை கேட்காதீர்கள்.. எனக்கு கோர்வையா சொல்ல வராது!)

முதலில் ஒரு ராயல் சல்யூட்-வசனகர்த்தா கமலுக்கு! ஏனென்ற விளக்கம் பின்னால்..

சோழர்காலத்தில் துவங்கி, சுனாமியில் முடியும் படத்தில் எல்லா இடங்களிலும் ஹாலிவுட் வேகமும், கமலின் விவேகமும் தெரிகிறது.
சோழர் காலத்தில் ஆரம்பிக்கும் படத்தில் வைணவ இளைஞன் நம்பி கதாபாத்திரத்தில் டேக் ஆஃப் ஆகும் கமல் எங்கும் நிற்காமல் புகுந்து விளையாடியிருக்கிறார்!

விஷ்ணு சிலையை கடலில் தூக்கிப் போடும் முன், அந்த சிலைக்கு முன் நின்று "அரங்கநாதா.. உனக்கே இந்த கதியா?" என்று பார்வையிலேயே கேட்கும் கமலில் நடிப்பு கண்ணை விட்டு அகல மறுக்கிறது. (சோழமன்னனாக வரும் நெப்பொலியனின் தமிழ் உச்சரிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை!) கல்லை மட்டும் கண்டால் பாடலில் வாலி தன் சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார். சிவனைவிட, விஷ்ணுவே உயர்ந்த கடவுள் என்று ஹரிஹரன் குரலில் கமல் பாடும் அந்தப் பாடலில் "ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்.. அந்த ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்" என்றொரு வரி. கமலஹாசனின் பெற்றோர் பெயர் ராஜலக்ஷ்மி-ஸ்ரீனிவாசன்! அட.. இப்படியெல்லாம் எழுத வாலியை விட்டால் யார் என்று நாம் பாராட்ட நினைக்கையில் - அடுத்த வரி.. "நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான், ராஜனுக்கு ராஜனிந்த ரங்கராஜன்தான்!" வாலியின் இயற்பெயர் - ரங்கராஜன்! நீங்கள் சத்தியமாக பாட்டெழுதும் ராஜர்களுக்கெல்லாம் ராஜன்தான் வாலியண்ணா! படத்தில் ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் எத்தனை கமல் இருக்கிறார்கள் என்று பார்க்கும் சுவாரஸ்யம் தமிழ்-சாரி-இந்திய.. ஏன் உலக சினிமாவிற்கே புதியதாகத்தான் இருக்கும்! அதிலும் இண்டர்வெல்லுக்கு மேல் வரும் ஆஸ்பிட்டல் காட்சியில் கலிபுல்லாகான், வில்லன் ப்ளெட்ச்சர், அவ்தார் சிங், விஞ்ஞானி கோவிந்த், உளவுத்துறை அதிகாரி நாயுடு என்று எல்லாருமாய் அதகளம் பண்ணியிருக்கிறார் கமல்!

வின்சென்ட் பூவராகன் - நம்மை நிமிர வைத்து இறுதியில் நெகிழ வைக்கும் பாத்திரம். இந்த கதாபாத்திரத்தை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வில்லன் கமல் - இந்தியன் தாத்தா பாடிலேங்வேஜோடு இருக்கிறார். வயது முதிர்ந்த பாட்டி அவ்வை சண்முகியை நினைவுபடுத்துகிறார் என்றெல்லாம் கூறுவது குறை அல்ல. எல்லா பரீட்சார்த்த முயற்சிகளையும் ஏற்கனவே செய்துவிட்ட ஒரு கலைஞனுக்கு இந்த மாதிரி விமர்சனங்கள் சகஜம்!
ஒவ்வொரு கமலுக்கும் நடையிலும் கூட வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் கமலுக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்காவிட்டால், கமிட்டியில் அரசியல் விளையாடுவது நிரூபணமாகிவிடும். விருதுகளுக்கு அப்பாற்பட்ட இந்தக் கலைஞனுக்கு, அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது!

வசனகர்த்தா கமல்! என்ன கூர்மையான வசனங்கள்.. எவ்வளவு ஹ்யூமரான வசனங்கள்! சாம்பிளுக்கு..
## விஷ்ணு சிலையை கடலில் போட உத்தரவிட்டு, வைஷ்ணவ நம்பி கமலைப் பார்த்து சோழ மன்னனாக வரும் நெப்போலியன்.."உன்னை சிவமந்திரம் சொல்ல வைக்கும் சூழ்ச்சியும் யாமறிவோம்.. " என்று ஆரம்பித்து யாமறிவோம், யாமறிவோம் என்று சில வசனங்கள் பேச.. நம்பி "பார்.. சிவனடியான உன்னையே எத்தனை முறை "அரி-ஓம்" சொல்ல வைத்துவிட்டான் என் ஹரி"
## உளவுத்துறை அதிகாரி நாயுடு, தனது அஸிஸ்டெண்ட் அப்பாராவுடன், கூரியர் இளைஞன் நரசிம்ம ராவையும் போகச்சொல்லும் போது.. "ராவோடு ராவா போய்..."
## போராட்ட தலித் இளைஞன் பூவராகனை மணல் மாஃபியா சந்தானபாரதி சாந்தப்படுத்தும் விதமாக தொடும்போது, சட்டென விலகி "உங்களுக்கு வேணும்னா தொடுவீங்க.. வேணாம்னா தொடமாட்டீங்க"
## "உங்களுக்கு அழகிய சிங்கர் தெரியுமா?"

"அழகிய சிங்கர்னா.. மடோனாவா?"

## தனது அம்மாவுக்கு ரத்தம் தரவிருக்கும் விஞ்ஞானி கமலிடம், எட்டடி கமல்.. "நீங்கதான் ரத்தத்தின் ரத்தமாகப் போறிங்களே.." "நானா.. எப்போ.. யாரு சொன்னா?"

## எட்டடி கமலிடம் உளவுத்துறை அதிகாரி நாயுடு "இவ்ளோ உயரமா ஏணி மாதிரி இருக்க? உன் பேர் பின்"லேடனா"?
"இல்லீங்க.. கலிபுல்லாகான்"
"ஓ.. அதுதான் ஃபுல்லா இருக்கியா?"

## அமெரிக்க வில்லன் ஜப்பானிய கமலிடம்" "ரிமெம்பர் ஹிரோஷிமா" ஜப்பானிய கமல் உடனே "யு ரிமெம்பர் பேர்ல் ஹார்பர்"

தொழில்நுட்பத்தில் இனி தசாவதாரத்தை மிஞ்சும் படம் பண்ண, எல்லாருக்கும் சவால் விடப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொரு கமலுக்கும் ஒவ்வொரு முறை பார்க்கவேண்டும்!
மொத்தத்தில் "உலகமெங்கிலும் உன்னை விஞ்சிட யாரு..உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!"
முக்கியமான பின் குறிப்பு: நான் அக்மார்க் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன்!

Monday, May 26, 2008

விபரீத முடிவு!

இந்தப் பதிவு நம்ம தல லக்கிலுக் அவர்களுக்கு சமர்ப்பணம்!

அவன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பான் என்று யாருமே எதிபார்க்கவில்லை. மனைவி, மகள்கள் எல்லாரும் அவனது நண்பர்களுக்கு போன் போட்டு, உதவி கேட்டு வருத்தப் பட்டுக்கொண்டிருந்தார்கள். அவனது பெற்றோருக்கு கூப்பிட்டு மனைவி சொன்ன போது பொரிந்து தள்ளிவிட்டார் அவன் தந்தை..

"ப்ளஸ் டூ-வுல பெயில் ஆனப்போ அவன் தூக்குல தொங்கப் போனான்.. அப்போ கூட நான் இந்த அளவுக்கு வருத்தப்படல.. எப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தானோ, இனிமே அவன என் மகன்-ன்னு எப்படி சொல்லிக்கறது?" என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.

மனைவி வேறு வழியில்லாமல் அவன் உற்ற நண்பன் செந்திலுக்கு போன் பண்ணி, விஷயத்தை சொன்ன போது அவனால் நம்ப முடியவில்லை..

"அவன் எப்படி இப்படி ஒரு முடிவை துணிஞ்சு எடுத்தான்-ன்னு தெரியலையே.. நீ கவலைப் படாதம்மா.. நான் இப்பவே அவன்கிட்ட பேசறேன்"

அவனை அழைத்துகேட்டபோது அவன் யார் பேச்சையும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பது தெரிந்தது..

"என் மனச மாத்த முயற்சி பண்ணாதே செந்தில்.. யார் என்ன சொன்னாலும் நான் எடுத்த முடிவுல மாற்றம் இருக்காது.."

"இல்லடா .. ஏற்கனவே இதுனால எத்தனையோ பேர் பாதிக்கப் பட்டு இன்னும் மீள முடியல.. இப்போ"

"போனை வை செந்தில்.. என்ன ஆனாலும் நான் பின் வாங்கப்போறதில்லை" சொன்ன படியே நுழைந்தான் "குருவி" படம் போட்டிருந்த தியேட்டருக்குள்!

Thursday, May 15, 2008

குருவி - விமர்சனம்

May 15, 2008

ரொம்ப ரொம்ப ஆசையா குருவி ரிலீஸ் ஆன அன்னைக்கு நைட் ஷோ கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, தரணி -விஜய் கூட்டணியாச்சே-ன்னு பொண்டாட்டிய வேற கூட்டிட்டு போனா…

ஏன்பா இவங்க படம் எடுத்த பின்னாடி , போட்டு பாக்க மாட்டாங்களா? கில்லில - கபடி , ATM-ல running race, இதுல car race - லேட்டா வந்து ஜெயிக்கறது - ஏன் சார் இந்த கொடும? சரி படமாவது கொஞ்சம் பெட்டரா பண்ணிருக்கலாமே சார்? நாங்க என்ன பாவம் பண்ணினோம்? எப்படி எடுத்தாலும் பாப்பாங்கடா - இவங்க ரொம்ப நல்லவங்க-டா"ன்னு எடுத்திருப்பாங்க போல!

ஏன் விவேக் சார், இந்த கொடும நமக்கு வேணாம்னு தானே பாதி படத்துல நீங்க கழண்டுட்டீங்க? சரி நாமளும் அந்த மாதிரி போலாம் -னு interval ல கேட்டா, வெளிய விட மாட்டீனுட்டாங்க!

தரணி சார், ஒரு வேளை ரொம்ப tension-ஆகி தொலையுது -ன்னு படம் எடுத்தீங்களா? வேண்டாம் சார், ஒரு பேரரசு போதும் தமிழ்நாட்டுக்கு , இப்படி எல்லாரும் கிளம்பினா நாங்க எங்க போய் அழறது?

1. நல்லா யோசிச்சு பாருங்க, MALASIA ஷூட்டிங் தேவையே இல்ல. குருவி-ன்னு பேர் வெச்சதுக்காக விஜய்,விவேக்க மலேசியா அனுப்பி, திரும்ப அங்கிருந்து வந்து ...

2. அவ்ளோ பெரிய தாதா, பணக்காரன் கோட்சா -வோட தங்கச்சி flight travel பண்ணினதே இல்ல! . அப்படி flight travel கூட பண்ணாத ஒரு பொண்ணு, ஒரு பையனுக்காக தனியா சென்னை வருது. ரொம்ப சூப்பர் சார்!

3. By the way, "குருவியோட பாட்டு" ல 'ஏன் சாப்பாட்டில் உப்புகல்லு நீயடா, ஏன் வீட்டுக்கு செங்கல்லு நீயடா" ன்னு வருது. விஜய் வீட்டுக்கு ரசிகர்கள் செங்கல்லா இருக்கறதா? "நான் வீட்டுல நிம்மதியா இருப்பேன், நீ செங்கல்லா கஷ்டப்படு " ன்னு ஹீரோ பாடலாமா? Instead of that, உன் வீட்டுக்கு செங்கல்லு நானடா'-ன்னு எழுதி இருக்கலாமே!

வேற சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!