படம் ஆரம்பித்ததுமே எப்போது சூப்பர் ஸ்டார் வருவார் என்கிற ஆவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது..
படத்தில் ரஜினிக்கு இணையாக நாம் பாராட்ட நினைப்பது பசுபதியின் கேரக்டர்.. அந்த கேரக்டருக்கு இவரை விட்டால் வேறு யாரையும் நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை! முடிவெட்டும் தொழிலாளியாய் வாழ்ந்திருக்கிறார். தனது தொழில் கொஞ்சம் சுணக்கம் அடையும் போது, மனசுக்குள் வருந்துவதை முகத்தில் காட்டாமல் மனைவியிடம் நடிக்கும் காட்சிகளில் நான் மனதில் பதிகிறார். குழந்தையின் பள்ளிக் கட்டணத்தை கட்ட முடியாமல் மருகும் போதும், தனது ஊருக்கு வரும் பால்ய நண்பர் சூப்பர் ஸ்டாரிடம் உதவி கேட்க தயங்கி போகாமலே விடும்போதும் தனது கூத்துப் பட்டறை அனுபவ நடிப்பால் எல்லோரையும் கலங்கடிக்கிறார். சபாஷ் பசுபதி..
ரொம்ப நாளைக்குப் பிறகு மீனா!! இவ்வளவு நாள் ஏன் இந்த அழகான.. திறமையான நடிகையை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் சினிமா என்று நினைக்க வைக்கிறது.. நிச்சயம் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல செகண்ட் இன்னிங்க்சை துவக்கும்..
ரஜினி! படத்தில் இவர் வந்த பிறகு படம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்! அதுவும் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார் என்றால் சும்மாவா? அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் நிச்சயம் அவரது உண்மையான கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாய் வசனங்கள் அமைத்திருப்பது பி.வாசுவின் சாமர்த்தியம்!
இறுதிக் காட்சியில் பள்ளியில் அவரது உரையை முடித்துக் கொண்டு பசுபதியை தேடுவதும், பசுபதியை அவரது வீட்டிற்கே சென்று சந்திப்பதும் நாம்மை நெகிழ வைக்கும் காட்சிகள்..
இசை.. ஜி.வி.பிரகாஷ்குமார்! சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு இசையமைக்கிறோம் என்கிற பதட்டமிலாமல் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்! ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்ட "சினிமா சினிமா சினிமாதான்" பாடலின் இசையும், வரிகளும் (வாலி!!) நம்மை கட்டிப் போடுகின்றன. அந்தப் பாடலை தியேட்டரில் சரியாக கேட்கவே முடிவதில்லை! விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் , த்ரிஷா என்று நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருப்பதால் ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரைப் பிளக்கிறது!
மொத்தத்தில்.. ரஜினி நடித்து பி.வாசு டைரக்ஷனில் வெளிவந்திருக்கும் பசுபதி படம்!
(இப்போ என்ன பண்ணுவீங்க??)