Thursday, February 17, 2011

அவியல் 16 ஃபிப்ரவரி 2011

யணம் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதெல்லாம் ஓகே. அதீத ஆர்வத்தால் படத்தில் என் மனதை நெருடிய ஒரு விஷயத்தை விமர்சனத்தில் குறிப்பிட மறந்துவிட்டேன்.

படத்தில் ஒரு கேரக்டர். மறைந்து டாய்லெட்டுக்குள் சென்று போதைப் பவுடர் நுகர்ந்து தனி உலகத்தில் திரிகிற ஒரு தாடிவாலா. இன்னொரு கேரக்டர். குமரவேல். கண்முன் நடக்கும் அநீதிகளை முடிந்தவரைத் தட்டிக் கேட்கிறான்.

ஒரு கதாபாத்திரங்களும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சுடப்படுகிறார்கள். போதைப் பவுடர் கேஸ், தப்பித்து ஓடும்போது தீவிரவாதியால் சுடப்படுகிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிழைத்துவிடுகிறான். கடைசி க்ளிப்பிங்கில் ஜன்னல் வெளிச்சம் முகத்தில் விழ சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் - அநீதிகளைத் தட்டிக் கேட்பவன், பொட்டெனச் சுடப்பட்டு சட்டென்று பரலோகம் போகிறான்.

இது என்ன நியாயம் ராதாமோகன்? எனக்குப் பிடிக்கவில்லை.

--------------------------

“டீமிற்கு பதினான்கு பேர் எடுத்தாகிவிட்டது. ஓர் ஆள் உன் சாய்ஸ்” -செலக்‌ஷன் கமிட்டியிலிருந்து தென்னாப்ரிக்காவில் இருக்கும் தோனிக்கு அழைப்பு போனது. தோனி உடனே சொன்ன பெயர்: ‘பீயுஷ் சாவ்லா’

‘அறிவே இல்லை. இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரையேனும் எடுத்திருக்கலாம். ஏற்கனவே ஹர்பஜன், அஷ்வின் என்று ஸ்பின்னர்கள். போதாக்குறைக்கு யுவராஜ், ரெய்னா, சேவக், சச்சின் என்று பார்ட் டைம் பவுலர்கள் வேறு இருக்கையில் – சாவ்லாவை ஏன் எடுத்தார் தோனி?’ என்று கண்டனக்குரல்கள்.

அப்போதெல்லாம் எந்த அறிக்கையும் விடவில்லை மனுஷன். ஆஸியுடனான வார்ம் அப் மேட்சில் பதில் சொல்லிவிட்டார் தோனி.

அதேபோல - தோனி தன் பழைய அதிரடி ஆட்டத்தை ஆடினால் நன்றாக இருக்கும் என்று ஏதோ ஒரு புண்ணியவான் திருவாய் மலர்ந்தார். இதோ - நேற்றைக்கு நடந்த நியூஸியுடனான மேட்சில் 62 பந்துகளில் செஞ்சுரி!

நீ கலக்கு ராசா! உனக்கு மச்சம் உச்சத்துல இருக்கு!

----------------------------------------

ரவு அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன். லேட்டாகிவிட்டிருந்தது. ஓர் இடத்தில், மூச்சு வாங்க ஒருத்தன் ஓடிச் சென்று கொண்டிருந்தான். என் பைக் அருகில் வந்ததும் லிஃப்ட் கேட்டான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, ஏதாவது டவுன் பஸ்ஸை பிடிக்கப் போகிறானோ என்று ஏற்றிக் கொண்டேன். ஐம்பதடி தூரம் போனதும் நிறுத்தச் சொன்னான். நிறுத்தியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவனிறங்கி ஓடியது - அருகிலிருந்த டாஸ்மாக்குக்கு. 10 மணிக்கு மூடிவிடுவார்களே!

டாஸ்மாக்கிற்கு அருகாமையில் வண்டி ஓட்டிச் செல்வது அவ்வளவு சவாலாக இருக்கிறது. குடிக்க வருபவர்கள் அவரச கதியில் வருகிறார்கள். குடித்து விட்டுச் சாலை தாண்டிச் செல்வபர்கள் எந்த அவசரமுமில்லாமல் ஜாலியாக தாண்டிச் சென்ற வண்ணமிருக்கிறார்கள்.

இந்த அவலங்களையெல்லாம் தாண்டி வந்து புலம்புவதற்குப் பதிலாக, நானும் வண்டி நிறுத்தி போய் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாமா என்று யோசித்ததுண்டு. வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது!

------------------------------------------

ரு ட்ரெய்னிங் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. மனிதவளத்துறையின் மகத்துவம், அதன் சவால்களை ஒருத்தர் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். சொன்னதையே நான்கைந்து முறை சொல்வது, சப்பையான உதாரணங்கள் என்று நடத்தியவர் எல்லார் காதுகளிலும், கழுத்துகளிலும் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தார். குறிப்பிடப்பட்ட நேரம் தாண்டியும் வகுப்பு போய்க் கொண்டிருந்தது. மொத்தம் 30 பேர் அமர்ந்திருந்தோம். மனிதவளத்துறையினர் தங்களிடம் வரும் குறைகளுக்கு உடனுடனேயே பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்றவர் தொடர்ந்து சொன்னார்.

‘ஒருத்தனை திருப்தியில்லாத இதயத்தோடு அனுப்பினீர்களானால் அவன் ஒரு நாளில் 27 திருப்தியில்லாத இதயங்களை உருவாக்குவான். இது உண்மை’ என்றார்.

எங்களில் ஒரு குரல் சொன்னது: “சார்.. இப்ப நீங்க சீக்கிரம் இந்த க்ளாஸை முடிக்கலைன்னா 30 திருப்தியில்லாத இதயங்களை ஒரே நாள்ல உருவாக்குவீங்க”

-----------------------

எஸ் எம் எஸ்:

பாருக்குச் சென்ற கொஞ்சம் கூச்சசுபாவியான அவன் ஒரு டேபிளில் அழகான இளம்பெண் அமர்ந்திருப்பதைக் காண்கிறான். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாய் அவளருகில் சென்று ‘இங்கே அமர்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லையே’ என்கிறான் தணிந்த குரலில். அவள் உரத்த குரலில் சொல்கிறாள்: “இன்றிரவை உன்னுடன் கழிக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று. சுற்றியிருப்பவர்கள் இவனை ஒரு மாதிரி பார்க்க - அதிர்ச்சியுடனும், தர்மசங்கடத்துடனும் வேறொரு டேபிளில் சென்றமர்கிறான்.

சிறிது நேரத்தில் அவனருகில் வந்த அந்த அழகி, மெதுவான குரலில் சொல்கிறாள்: ‘மன்னித்து விடு. நான் ஒரு சைக்காலஜி மாணவி. தர்மசங்கடமான சூழ்நிலைகளை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான்...’ என்று இழுக்க இவன் மிக உரத்த குரலில் கத்துகிறான்: “என்னது? மூவாயிரம் ரூவாயா..! ரொம்பவே அதிகம்!”

ஹும்! யாருகிட்ட!!

------------------

ந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் வந்தது. ஃபோனில் பெண் குரல்: ”சார் இம்மீடியட்டா நடேசன் தெரு, பத்தாம் நம்பர் வீட்டுக்கு வாங்க.. ஒரு பூனை என்னையே பார்த்துட்டிருக்கு”

“என்னம்மா பூனைக்கெல்லாம் பயந்துட்டு? நீங்க யார்.. உங்க பேரென்ன”

“என் பேரு பப்பி. நான் இந்த வீட்ல வளர்ற கிளி”

--------------------

ஒரு கவிதை:

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

-ஆத்மாநாம்

.

Sunday, February 13, 2011

இலக்கை அடைந்த பயணம்

யக்குனர்களில் நான் ராதாமோகனின் பரம விசிறி. அவர் படமென்றால் நம்பிப் போகலாம் என்று நினைக்கிற ரகம். இதுவரை அவரும் என்னை ஏமாற்றியதில்லை. அழகிய தீயே ட்ரெய்லரின் போதே ‘ஆஹா... இந்தாளு வித்தியாசமான ஆளு’ என்று நினைக்க வைத்தவர். (அந்த ட்ரெய்லர் யு ட்யூப்பில் கிடைக்கவில்லை. எங்காவது கிடைத்தால் சுட்டி தாருங்களேன்..) போலவே அந்தப் படமும் அதை நிரூபித்தது. மொழி எல்லோரையும் சென்றடைந்தது. அபியும் நானும் பலரையும் பேசவைத்தது. இப்போது பயணம்.

எந்தக் கலைஞனுக்கும் அவன் மனதுக்கு ஒத்த சக கலைஞனின் ஆரோக்யமான தோழமை கிடைப்பின் ரசிகர்கள் பாக்யவான்களாவார்கள். வைரமுத்து-இளையராஜா பிரிவை இன்றும் ஏமாற்றமாய்ப் பேசுகிற பலர் இருக்கிறார்கள். கலையுலகில் இந்த மாதிரிக் கூட்டணிகள் இருப்பது ஆரோக்யமான போக்கு. இளையராஜா-வைரமுத்துவிற்குப் பிறகு ரசிகர்கள் இந்த மாதிரி கூட்டணி எதிர்பார்த்துப் பேசியது மணிரத்னத்தில் இயக்கத்தில் பி சி ஸ்ரீராமின் காமிரா என்று நினைக்கிறேன். இப்போது பலரையும் அப்படிப் பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் யுவனின் இசை, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரையின் வரிகள் என்று சாதாரண ரசிகனினும் ஒருபடி நிலை தாண்டி, இவற்றையெல்லாம் கவனிக்கிற ரசிகர்கள் கூட்டத்திற்கு ராதாமோகன்-ப்ரகாஷ்ராஜ் கூட்டணி இதுவரை குறைவைத்ததில்லை. இந்த விமர்சனத்தை இவர்களிருவரில் யாரேனும், அல்லது அவர்களுக்கு நெருக்கமான எவரேனும் வாசிக்க நேர்ந்தால், யாரிடமேனும் சொல்லி, இருவரையும் கூட்டாக நிற்கவைத்து திருஷ்டிகழியுங்கள். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை எனினும் – நல்லவை சிலவற்றிக்கு நம்பிக்கை அவசியமில்லை.

த.செ.ஞானவேல். ஈஷா விழா சம்பந்தமாக ப்ரகாஷ்ராஜ் திருப்பூர் வந்திருந்தபோது, உடன் வந்திருந்தார். ஏற்கனவே நண்பர் செல்வேந்திரன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன் அவர் மீது. அப்போது சந்தித்தவரின் பேனா இப்படியெல்லாம் எழுதுமென்று எள்ளளவும் நினைக்கவில்லை. குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்றெல்லாம் இல்லை. இந்தப்படத்தின் வசனம் பல தலைமுறை அனுபவஸ்தன் எழுதியாற்போலே அவ்வளவு நேர்த்தி. ஒரு வார்த்தை அதிகமில்லை. ஒரு வார்த்தை குறைவில்லை. இது ஞானவேலுக்கு எத்தனையாவது படமென்ற புள்ளிவிவரமெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நபரிலிருந்து, பால்கனியில் அமர்ந்திருக்கும் நபர் வரை அனைத்துத் தரப்பினரும் புரிந்து வியந்து கைதட்டக்கூடிய வசனங்கள். ஞானவேல்தான் படத்தின் நாயகன். நாகார்ஜூன், பிரகாஷ்ராஜெல்லாம் கதாபாத்திரங்கள்தான். ஞானவேல் – உங்களுக்கு என் அன்பு.

வசனங்களை எழுதியது ஞானவேல்... இந்த இடத்தில் இந்த மாதிரியான வசனம் வரவேண்டும் என்று சொல்லியிருப்பது ராதாமோகனாக இருக்கக் கூடும். அவரை நேரில் பார்த்தால் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, ‘நீங்க பக்கோடா சாப்பிடுங்க சார்’ என்றொரு வசனம் வருகிறது. ப்ரகாஷ்ராஜ் சொல்கிறார். நன்றாக திரையில் கவனியுங்கள். அது சொல்லப்பட்ட காட்சி, சொல்லப்பட்ட நேரம் என் கைகளைத் தட்டித் தட்டிச் சிவக்க வைத்துவிட்டது. போலவே பல வசனங்களும். எழுத வேண்டாமென்று விட்டுவிடுகிறேன்.

ஒரு கதையெழுதுகையில் ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். படத்திற்கும் அப்படித்தான். இந்தப் படத்தின் ஆரம்பம் நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், அவர்களின் மனநிலையும் படத்தின் முதல் சில நிமிடங்களில் காட்டி, நம்மையும் அவர்களுடன் அந்த விமானப்பயணத்தில் இணைக்கிறது ராதாமோகனின் திறமை.

ராதாமோகனுக்கு சராசரித் தமிழ்ப் படங்களின் மீதுள்ள கோபம் படம் நெடுகத் தெரிகிறது. இதற்காக அவர் திரையுலகில் சிலரின் எதிர்ப்பையும், முணுமுணுப்பையும் இந்நேரம் பெற்றிருக்கக் கூடும். ஆயினும் திரையரங்கில் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குகளின் போதும் ஒலிக்கிற கைதட்டல் ஒலி, ரசிகர்களும் ராதாமோகன் பக்கம்தான் என்று பறைசாற்றுகிறது. அவர்களும் இந்தக் க்ளிஷேப் படங்களிலிருந்து மீள நினைக்கிறார்கள்தான். ஆனாலும், சரியான நேரத்தில், க்ளைமாக்ஸில் ஒரு காட்சி மூலம் ஹீரோக்களின் கோவத்திலிருந்து தப்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கையில் வழக்கமான தமிழ்ச்சினிமா விதிகளிலிருந்து ராதாமோகனும் தப்பமுடியாது என்று நினைத்துக் கொண்டேன்!

எத்தனை சீரியஸான படம்! ஏறக்குறைய உன்னைப் போல் ஒருவன். ஆனால் குறிப்பிட்ட இடைவேளைகளில் கைதட்டலும், வெடிச்சிரிப்புமாய்த்தான் இருக்கிறது தியேட்டரில். சில வசனங்கள் (குறிப்பாக ப்ருத்விராஜிடம், அவர் ரசிகனான சாம்ஸ் பேசும் காட்சிகள்) கைதட்டல் ஒலியினால் கேட்கவே இல்லை.

சின்னச் சின்னக் காட்சிகளில் கதை சொல்வது ராதாமோகனின் ஸ்பெஷாலிட்டி. இதிலும் அதைப் பல இடங்களில் செய்திருக்கிறார். எவையெவை என்று விவரிக்க மனம் மறுக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

அந்த சர்ச் பெல். ரொம்பச் சின்ன விஷயம்தான். பாலசந்தர் அதில் விற்பன்னன். படத்திற்கு சம்பந்தமில்லாத எதையும் காட்ட மாட்டார். காட்டினால் எங்காவது அதைச் சம்பந்தப்படுத்தி அட போட வைப்பார். ராதாமோகனும் அவ்வாறே. சர்ச் பெல் கேட்டதும், அருகில் சர்ச் இருக்கிறது என்று பாதிரியார் ப்ரார்த்தனையில் ஈடுபடுவதோடு நின்று விடாமல், அதை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து இணைத்த விஷயத்தில் ராதாமோகன் என்னைக் கவர்கிறார். அதேபோல டி ஆர் பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் செய்யும் வேலைகளைத் துகிலுரித்ததிலும் இயக்குனர் ஜொலிக்கிறார்.

கதாபாத்திரங்கள்? ப்ரகாஷ்ராஜ், நாகார்ஜூன், எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், தலைவாசல் விஜய், ப்ருத்விராஜ், ப்ரம்மானந்தம், மோகன்ராம், படவா கோபி, மனோபாலா, சாம்ஸ் கோஷ்டிகளையெல்லாம் விடுங்கள். விமானத்தின் டாய்லெட்டை சுத்தப்படுத்துகிற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருக்கிறார். ஏர்ஹோஸ்டஸாக ஒரு பெண். காக்காவலிப்பு வருகிற ‘ஜூனியர் ஆர்டிஸ்ட்’ கேரக்டரில் ஒருவர் நடித்திருக்கிறார்.
இவர்களையெல்லாம் இப்படி நடிக்க வைக்க முடிவது இயக்குனரின் திறமையன்றி வேறென்ன. டீலா நோ டீலா ரிஷி, சனா கான் இவர்களெல்லாம் இப்படியும் நடிப்பார்களா என்ன? ராதாமோகன் – You are Rocking Man!

நான் டிக்கெட் முன்பதிவு செய்கையில், இருவர் ‘படம் எப்படின்னு தெரியலயே’ என்று யோசித்துக் கொண்டிருக்க.. ‘நம்பிப் போலாம்க’ என்றேன். இடைவேளையின்போது அவர்களிருவரும் என்னைப் பார்த்து நன்றி சொன்னதே படத்தின் வெற்றிக்கு சாட்சி. ‘செம ஜாலியாப் போவுதுங்க’ என்று ஒரு சீரியஸ் ஜானர் படம் பெயர் வாங்குவதென்பது நான் இதுவரை கேட்டிராதது!

ஒவ்வொரு படத்திலும் புதிய கருவை எடுத்துக் கொண்டு அதை செவ்வனே செதுக்கி கச்சிதமாக நமக்கு விருந்து வைப்பதில் ராதாமோகன் ஜெயித்துக் கொண்டே வருகிறார். வழக்கமான படங்கள் எத்தனை வந்தாலும் - பாடல்களின்றி, பறபறக்கும் சண்டைக் காட்சிகளின்றி, தொப்புள் தெரியும் நாட்டியமின்றி மாறுபட்டு படமெடுக்கும் இவரது படங்களை வெற்றி பெற வைப்பது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில் அல்லது நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் கூட்டணி - வெற்றி, தோல்விகளைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. இந்நேரம் அடுத்த படைப்புக்கான தேடலில் இறங்கியிருப்பார் ராதாமோகன். ஆனால் இதுபோன்ற படமெடுப்பவர்களுக்கு உரிய அங்கீகாரமளிப்பது நம் கடமை என்று நம்புகிறேன் நான்.

என் சார்பாக படக்குழுவினருக்கு – பல நூறு பூங்கொத்துகள்.


.

Friday, February 11, 2011

1...2...3...

1.

ன்றைக்கு எனக்கு அலுவலகத்தில் ஏதோ டென்ஷன் தினம். அடுத்த நாளும் அந்த டென்ஷன் தொடரும் நிலைமை. இரவு வீட்டுக்கு வந்து இந்திய அணியின் மேட்ச் - லைவ் - பார்க்கிறேன். இந்தியா 190க்கு ஆல் அவுட். ஐயகோ என்று தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கையும் பார்க்கிறேன். 152க்கு ஐந்து. 39 ரன்கள் மட்டுமே வேண்டும். ஐந்து விக்கெட்டுகள். வழக்கம்போல ‘இவனுக எப்பவுமே இப்படித்தான்’ என்று படுத்து உறங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி என்று நியூஸ் என்னை எழுப்ப, அன்றைக்கு முழுதும் உற்சாகமாய் இருந்தேன். ஒருத்தனின் மனநிலையையே மாற்றுகிறது இந்திய அணியின் வெற்றி!

உலகக் கோப்பை க்ரிக்கெட். என் போன்ற க்ரிக்கெட் ரசிகர்களின் கனவு தினங்கள் வெகு அருகில். ஓர் இந்தியக் க்ரிக்கெட் ரசிகனாக இந்த உலகக் கோப்பை வெகு ஸ்பெஷல். சரியான ஃபார்மில் இருக்கும் டீம். அதுவும் சொந்த ஊரில்.

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் விளம்பரங்கள். வேர்ல்ட் கப்புக்காக ஸ்பெஷல் விளம்பரங்கள் அணிவகுக்கும். பெப்ஸியின் ஹெலிகாப்டர் ஷாட் (தோனி), தூஸ்ரா (ஹர்பஜன்), பல்ட்டி ஹிட் (கெவின் பீட்டர்ஸன்) போன்ற விளம்பரங்கள் சுவாரஸ்யம்.

எரிச்சலூட்டும் விஷயம் – இந்த விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பும் விதம். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். மொத்த ஸ்க்ரீனில் க்ரிக்கெட்டைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளிவிட்டு மீதி முழுவதுமாய் ஆக்ரமிக்கும் பைக் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தரினும் வேண்டேன். போலவே பவுண்டரியைத் தொட்டுப் பறந்த ஆறாவது பந்து கயிற்றுக்கு முன் தொட்டு நான்கானதா, கொஞ்சம் பின் தொட்டு ஆறானதா என்று முடிவாவதற்கு முன் வரும் விளம்பரப் பொருட்களுக்கும் மனதளவில் தடாதான்.

சம்பந்தமில்லாத – அல்லது - சம்பந்தம் இருக்கிற ஒரு தகவல். கூகுளில் க்ரிக் இன்ஃபோவைத் தேட Cri என்று ஆரம்பித்தால் தானியங்கி குறிச்சொல் காட்டும் சொல்:

Criminal Minds!


-----------------------------------------------------
2.

ஸ்ஸெம்மெஸ் கலாட்டாக்கள் சில சமயம் க்ளுக்கென சிரிக்க வைக்கும். கொஞ்சமாய் சிந்திக்க வைக்கும்.

சமீபத்தில் வந்து என்னைக் கவர்ந்த எஸ்ஸெம்மெஸ் சில:

--

அந்த வகுப்பறைக்குள் நுழைகிறார் கலைஞர். மாணவர்களிடம் கேட்கிறார்: ‘பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் ராமு. எனக்கு இரண்டு கேள்விகள்’

கலைஞர்: “கேளு ராமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

“மிகவும் தைரியமான கேள்வி! இதற்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறேன்”

----இடைவேளை ----

மீண்டும் கலைஞர்: “பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’

கலைஞர்: “கேளு சோமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

கலைஞர்: “மூணாவது கேள்வி?”

சோமு: “ராமு எங்கீங்க ஐயா?”

****************

இன்னொன்று:

||ஜெய் ஸ்ரீ ரஜினிகாந்தாய நமஹ:||

இந்த எஸ்ஸெம்மெஸ்ஸை குறைந்தது 9 பேருக்கு அனுப்புங்கள். படிக்காமலே நீங்கள் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள். உதாசீனப்படுத்த வேண்டாம். ஒரு முறை இதை உதாசீனப்படுத்தி டெலீட் செய்த ப்ளஸ் டூ மாணவனின், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஃபெய்ல் என்று மாறியது!

****************

மூன்றாவது:

மனைவி: “டின்னருக்கு என்ன வேணும்க?”

கணவன்: “பருப்பும் சாதமும்...”
மனைவி: “நேத்துதாங்க அது வெச்சேன்?”

கணவன்: “சரி... கத்திரிக்காக் கொழம்பு”
மனைவி: “ஐய.. உங்க பையன் சாப்பிடவே மாட்டான்”

கணவன்: “முட்டைக் கொழம்பு?”
மனைவி: “ ஆளப்பாரு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை..”

கணவன்: “பூரி?”
மனைவி: “இந்நேரத்துக்கு பூரியா? ஏங்க இப்டி?”

கணவன்: “சரி.. பேசாம நான் ஹோட்டல்ல பார்சல் வாங்கியாரவா?”
மனைவி: “அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்க.. உங்களுக்காகத்தானே சொல்றேன்..”

கணவன்: “அப்ப மோர்க்குழம்பு வை”
மனைவி: ”அதுக்கு மோர் வேணும். வீட்ல இல்லை”

கணவன்: “இட்லி சாம்பார் வெச்சுடேன் பேசாம?”
மனைவி: “கரெக்டுங்க.. ஆனா மொதல்லயே சொல்லிருந்தா மாவு அரைச்சு வெச்சிருப்பேங்க”

கணவன்: “கம்முன்னு மேகி செஞ்சுடு. அதான் கரெக்ட்”
மனைவி: “அது உங்களுக்குப் பத்தாதுங்க. நீங்க நைட் தான் ஹெவியாச் சாப்பிடுவீங்க”

கணவன்:”வேற என்னதான் செய்வ?”
மனைவி: “இதென்னங்க என்னைக் கேட்டுட்டு? நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம்?”

இந்தப் பொண்டாட்டிகளே இப்படித்தான் பாஸ்!

-----------

3.


கூகுள் பஸ்தான் தற்போதைய என் சோர்வு நீக்கி. அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். பலரும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸில் கிடைக்கிற கேப்பில் ஆட்டோ, லாரி மட்டுமில்லாது குசும்பன் போன்றவர்கள் ஃப்ளைட்டே ஒட்டுகிறார்கள்.

http://www.google.com/buzz/yesbalabharathi/YaczwFPPDjA/%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8

தல பாலபாரதியின் இந்த பஸ்ஸில் குசும்பனின் அளவிலா நக்கலின் ஒரு இடத்திலாவது நீங்கள் சிரிக்கவில்லையென்றால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும்.


.

Tuesday, February 1, 2011

சிறப்புச் சிறுகதை

கடந்த மாதத்தின் ஒரு மாலையில் நண்பர் வெண்பூ அழைத்திருந்தார்.

“பரிசல்.. ஃப்ரீயா இருக்கியா?”

நாயகன் ஸ்டைலில் ‘தெரியலயேப்பா’ என்றேன்.

அதீதம் முதல் இதழில் அவரது கதையைப் பற்றிப் பேசினார்.

“நல்ல ரெஸ்பான்ஸுன்னு இந்த இதழிலும் எழுதச் சொல்லிக் கேட்டிருக்காங்க” என்றார்.

“சூப்பர்..!” என்றேன். அவர் கேட்டார்: “அதீதத்துக்கு நீ ஏதும் எழுதலியா?”

“ரெண்டு மூணு மெய்ல் வந்துச்சு. ஆனா வழக்கம்போல டைம் இல்ல. எதுவும் திருப்தியா அமையல” என்றேன்.

“சரி.. நான் ஒரு கரு வெச்சிருக்கேன்.. ஆஃபீஸ்ல ஏக டென்ஷன். அதை நீ டெவலப் பண்ண முடியுமா?”

அன்றைக்கு சூரியன் மேற்கே உதித்திருக்க வேண்டும். அமைதியாக வேறெந்த இடையூறும் இல்லாமல் அவர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

முழுக் கருவையும் சொன்னார்.

“நல்லாருக்கு. ஏதாவது-இப்படித்தான் வரணும்-ன்னு ஐடியா வெச்சிருக்கியா?” - கேட்டேன்.

“அதெல்லாம் இல்ல பரிசல். இது கரு. இதை எப்படி வேணா உன் ஸ்டைல்ல டெவலப் பண்ணி எழுது. உன் பேர்லயே வந்தாலும் சரி...”

அன்றைக்கு இரவுக்குள் மனதுக்குள் முழு ட்ராஃப்டும் ரெடியாக - எழுதி வெண்பூவுக்கு அனுப்பினேன்.

“வாவ்! செம.. நான் நெனைச்சதை விட நல்லாவே வந்திருக்கு பரிசல்..” என்று சின்னச் சின்ன மாற்றமும் சொன்னார்.

இந்த இதழ் அதீதத்தில் வெளியாகியிருக்கிற அந்தக் கதை.. இதோ உங்களுக்காக..

---------------------------------------------
இறப்புக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் (வெண்பூ - பரிசல்)

கரு: வெண்பூ
கதையாக்கம்: பரிசல்காரன்

ஹைதராபாத்தின் சம்சாபாத் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. மாடர்ன் உடைகளில் இளைஞர்கள் / இளைஞிகள் ஃப்ளைட் செல்லவிருக்கும் லண்டனை இங்கேயே நினைவுபடுத்தினர். தொப்புள் தெரியும் லோ ஹிப் சேலைகளில் பணக்காரப் பெண்கள். தொப்பையும், சஃபாரியுமாய் சிலர். அருகிலிருந்தவர்களைப் பற்றிய கவலையில்லாமல் அலைபேசியில் பலர்.

லேப்டாப் பேக்குடன் அமர்ந்திருந்த கிரிதர் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். அவன் கண்களில் ஒரு வெறுமை அமர்ந்திருந்தது. டைட்டான டீ ஷர்ட்டில் க்ளிவேஜ் தெரிய ஸ்டைலாக நடந்து வந்து இவனருகில் அமர்ந்து ஸ்னேகமாய்ப் புன்னகைத்தவளுக்கு பதில் புன்னகையளிக்கும்போதும் அவன் உதட்டில் உயிர்ப்பில்லாமல் இருந்தது. அவளை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் அதைப் பற்றி யோசிக்கும் மனநிலையில் அவனில்லை.

ஜோதிடர் நாகமாணிக்கம் அவனிடம் சொன்னது அவனுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

“கிரி... நான் ஜோசியத்தைத் தொழிலாப் பண்றவனில்லன்னு உனக்குத் தெரியும். உங்கம்மா இறப்பு, தொழில்ல நீயும் அண்ணனும் வந்து அப்பாக்கு எவ்ளோ பக்கபலமா இருப்பீங்கன்னது முதற்கொண்டு பலதும் நான் சொன்ன மாதிரியே நடந்திருக்கு. ஆனா.. நான் பல வருஷமா உன்கிட்ட சொல்லாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போறேன்” என்ற பீடிகையோடு அவர் சொன்ன விஷயம்தான் இன்றைக்கு கிரிதரின் இந்த மனநிலைக்குக் காரணம்.

“கிரி.. என் கணிப்பு இதுவரைக்கும் பொய்யாப்போனதில்ல. உன் ஜாதகப்படி வர்ற ஜனவரி 31 உனக்கு கடைசி நாள். இதை உங்கப்பா, அண்ணன்கிட்ட சொல்லப் போறதில்ல. உன்கிட்டயும் சொல்லணும்ன்னு நினைக்கல. நீ ஏதாவது ஆசைப்பட்டிருந்தா செஞ்சுக்கோ. அவ்ளோதான் சொல்லமுடியும். நானும் ஒரு வருஷமா இது சரியான்னு எல்லா வகையிலையும் ஆராய்ஞ்சுட்டேன். எல்லாமே இதைத்தான் சொல்லுது”

“ஹாய் மிஸ் பூர்ணிகா.. வாழ்வே வசந்தம் சீரியல்ல பின்றீங்க!”” உற்சாகக் குரலொன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. அப்போதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது. அருகில் வந்தமர்ந்தவள் டி வி நடிகை. ஜீன்ஸும், சிகப்பு ரிப் நெக் டீ ஷர்ட்டுமாய் அவளைப் பாராட்டியபடி கைகுலுக்கிக் கொண்டிருந்தவன் “எக்ஸ்யூஸ் மி.. இஃப் யு டோண்ட் மைண்ட்...” என்று கிரிதரை ஒரு சீட் தள்ளியமரச் செய்து அந்த டிவி நடிகையிடம் நட்பு பாராட்டலானான்.

அவள் அதை விரும்பாதவளாய் அவனிடம் எக்ஸ்க்யூஸிவிட்டு எழுந்து வேறிடம் சென்றாள். ஜீன்ஸ் இளைஞன் கிரிதர் பக்கம் திரும்பினான்.. "த‌மிழ்?" என்று நெற்றியை சுருக்கினான். கிரித‌ர் த‌லையாட்டிவுட‌ன் அவ‌ன், “பாருங்க பாஸு.. சீரியல்ல அழுமூஞ்சி. நேர்ல செம ஃபிகரா இருக்கா. கரெக்ட் பண்ணலாம்னா எஸ்கேப் ஆய்ட்டா..” என்று சிரித்தபடி சொல்லி “ஐ’ம் ஆண்ட்ரூஸ்..” என்று கை நீட்டினான். “ஐ’ம் கிரிதர்” என்று இவன் கைநீட்ட, பற்றி குலுக்கி “லண்டன் வர்ற வரைக்கும் இதே மாதிரி உர்ர்னுதான் மூஞ்சியை வெச்சுக்கப் போறீங்களா?” என்று கேட்டான். அவன் கையில் ஒரு டின் இருந்தது. பேச்சில் பிஸ்கட் வாசனை. உயர்ரக மதுவாக இருக்க வேண்டும்.

ஃப்ளைட் வரும் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் உற்சாகக் குவியலாய் இருந்த ஆண்ட்ரூஸுடன் கொஞ்சம் நெருக்கமானான் கிரிதர். ஃப்ளைட்டில் ஏறி அருகருகே அமரும் நிமிடத்தில் தன்னைப் பற்றி ஆண்ட்ரூஸிடம் முழுவதுமாகச் சொல்லிவிட்டிருந்தான்.

“ஹெஹ்ஹெஹ்ஹே..... ஜோக் ஆஃப் த இயர். நீங்க நாளைக்குள்ள சாகப்போறீங்களா? வாட் எ ரப்பிஷ் திங் மிஸ்டர் கிரிதர்...? எந்த யுகத்துல வாழ்ந்துட்டிருக்கீங்கன்னு தெரியுமா” என்றவன் தொடர்ந்து கேட்டான்: “சரி.. நாளைக்குச் சாகப்போறீங்கன்னா இன்னைக்கு எதுக்கு ஃப்ளைட்ல லண்டன் ட்ராவல்?”

“சொன்னா முட்டாள்தனமா இருக்கும். தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் அஞ்சரை மணிநேர வித்தியாசம். அப்படீன்னா நாளைக்கு நைட் இங்க பன்னெண்டு மணின்னா அங்க இன்னும் அஞ்சரை எக்ஸ்ட்ரா ஆகணும் அந்த நேரம் வர. ஆக என் மரணத்தை கொஞ்ச நேரமாவது தள்ளிப்போடறேன்.. புரியுதா?”

“புரியுது.. ஆனா செம காமெடியா இருக்கு. சரி சாகப்போறீங்க.. எதுக்கு லேப்டாப்?”

“எனக்கும் மனசுல ஒரு ஓரமா துளியூண்டு நம்பிக்கை இருக்கு ஆண்ட்ரூஸ்... ஒருவேளை சாகலைன்னா.. கம்யூனிகேஷனுக்கு என்ன பண்றது?“ என்று முத‌ல்முறையாக‌ வாய்விட்டு சிரித்தான்.

ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. கிரிதர் தன் வாட்சில் மணி பார்த்தான் 10.45.

“கிரிதர்.. இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருக்கற ஆளை நான் இப்பத்தான் பார்க்கறேன். யு ஆர் க்ரேஸி!” என்றான் ஆண்ட்ரூஸ்.

“ஆண்ட்ரூஸ்.. இதுவரைக்கும் அந்த ஜோசியர் சொன்னது தப்பினதே இல்லை. அதுவுமில்லாம அவரு ஜோசியத்தைத் தொழிலாப் பண்றவரில்லை. ஜோசியம் பொய்ன்னு நிரூபிக்கறதுக்காக ஜோசியம் படிக்க ஆரம்பிச்சவர் விஞ்ஞான ரீதியா அதை அலசி ஆராய்ஞ்சிருக்கார். தினமும் பகல்ல பலரையும் சந்திச்சுப் பேசி இரவு முழுக்க தன் ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களை கம்ப்யூட்டர்ல போட்டு சேமிச்சு... அவரைப் பார்த்துப் பேசினீங்கன்னா இப்படிச் சொல்ல மாட்டீங்க”

“ஓகே கிரிதர்.. என்னோட பிறந்த நேரத்தை வெச்சு என்னைப் பத்தி சொல்லுவாரா?” எனக் கேட்டான் ஆண்ட்ரூஸ்.

“நிச்சயமா..”என்றவன் தன் லேப்டாப்பை ஆன் செய்து விமானத்தின் சீட்டில் இணைக்கப்பட்டிருந்த டேட்டா கார்டை சொருகி இணைய இணைப்பைக் கொடுத்தான்.

“மொதல்லெல்லாம் ஃப்ளைட்ல நெட் கனெக்ட் பண்ண முடியாது. ஏன் போனமாசம் கூட இல்ல.. இப்ப அதெல்லாம் வந்துடுச்சு. இந்தக் காலத்துல போய் ஜோசியம் கீசியம்ன்னுட்டு” என்ற ஆண்ட்ரூஸிடம் “மணி பதினொண்ணே கால் ஆகுது.. அவர் இப்ப ஆன்லைன்ல இருந்தா இப்பவே கேட்டுச் சொல்றேன்.. வெய்ட்” என்று தன் மெயிலை உயிப்பித்த போது ஜோசியரின் பெயரருகே பச்சை நிறமொளிர்ந்து கொண்டிருந்தது.

“குட்.. ஆன்லைன்ல இருக்காரு..” என்றவன் ஜோசியரை சாட்டுக்கு அழைத்தான்.

“ஹை டெக் ஜோசியர்தான் போல.. ஒத்துக்கறேன்..” என்ற ஆண்ட்ரூஸ் தன் பிறந்த நாள், நேரம், இடத்தைச் சொன்னான்.

சில பல நல விசாரிப்புகள் ‘ச்சாட்’டில் நிகழ்ந்து கொண்டிருந்தது. ‘நீ என்ன செய்தாலும் ஜாதகத்தை ஏமாற்றவோ, மாற்றவோ முடியாது கிரிதர்’ என்ற வரிகளை மட்டும் எட்டிப் படித்தான் ஆண்ட்ரூஸ்.

“உங்களைப் பத்திச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கேன். கொஞ்ச நேரத்துல ரிப்ளை மெய்ல் வரும்.. ‘நீ இப்ப எதைக் கேட்டாலும் செய்யறேன்’ங்கறார்” என்றான் கிரிதர் ஒருவித செயற்கைப் புன்னகையோடே.

ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு வெரி அர்ஜெண்ட் என்ற சப்ஜெக்டுடன் ஜோசியரிடமிருந்து மெய்ல் வந்திருந்தது. திறந்தான் கிரிதர்.

‘கிரிதர்.. இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். உனக்கு நாளை இறுதிநாள் என்றேனல்லவா.. என் ஜோசியம் பொய்க்காதெனின் உன் சக பயணிக்கு இன்றைக்கு இறுதிநாள். இதில் மாற்றமில்லை’ – இவ்வளவுதான் இருந்தது.

ஆண்ட்ரூஸிடம் காண்பித்தான். ‘ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஹ்ஹாஆ’ என்று அவன் சிரித்த குரலுக்கு முன் சீட் பயணிகள் திரும்ப.. “ஸாரி.. ஸாரி” என்று வழிந்து, “என்ன கிரிதர் தமாஷ் பண்றாரு உங்காளு?” என்றபடி கிரிதரின் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தான். 11.45. “இன்னும் கால் மணிநேரத்துக்குள்ள் நான் சாகப்போறேனா? ஃபூலிஷ்!” என்றபடி எழுந்து “எக்ஸ்க்யூஸ் மி.. வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்” என்று நகர்ந்தான். ஆண்ட்ரூஸின் முகம் தற்போது கொஞ்சம் களையிழந்ததாய்ப் பட்டது கிரிதருக்கு. ‘இல்லை நாந்தான் நினைத்துக் கொள்கிறேனோ?’ என்றும் சமாதானப்படுத்திக் கொண்டான்.

நிமிடங்கள் கரைய... திரும்பி வந்தமர்ந்தான் ஆண்ட்ரூஸ். கிரிதரின் மணிக்க‌ட்டைத் திருப்பி வாட்சில் மணி பார்த்தான். 11.59. “இன்னும் ஒரு நிமிஷம் க‌ழிச்சும் நான் இருந்தா.. உங்க ஜோசியம் பொய்.. சரிதானே?” என்று அவன் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் இருந்தான் கிரிதர்.

11:59:55

11:59:56

11:59:57

11:59:58

11:59:59
..
..
..
..
..
..
..
..
..
..
..


ஐ!! அதெப்படி பூராக்கதையையும் இங்கயே படிக்க முடியுமா? கதையைத் தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக்கவும்! பின்னூட்டத்துல கருத்து தெரிவிக்கவும்!


.