Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, January 2, 2018

ஸ்க்ரீன் டைம் - ஒரு விளக்கம்

 “பரிசல், இரண்டு நாள்களுக்கு முன் எழுதிய பதிவில் ‘ஸ்கிரீன் டைம் அதிகமாகிவிட்டது’ என்று எழுதியிருந்தீர்கள். மொபைல் பார்த்துக்கொண்டிருப்பதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிந்தது. அதிகம் என்பதை எப்படிக் கணக்கிட்டுச் சொல்கிறீர்கள்?”


கீழே ‘வாசுதேவன், மணச்சநல்லூர்’ என்று போட்டால் உட்டாலக்கடி என்பீர்கள். ஆனால் நிஜமாகவே சிலர் அழைத்தும், இன்பாக்ஸிலும் கேட்ட கேள்வி இது.

ஸ்கிரீன் டைம் என்பது மொபைலைப் பார்ப்பது மட்டும் அல்ல. ஒளி உமிழும் எந்தத் திரையையும் பார்த்துக்கொண்டிருப்பது ஸ்கிரீன் டைம்தான்.

டெலிவிஷன், கம்ப்யூட்டர், வீடியோ கேம் கேட்ஜெட்ஸ், மொபைல் ஃபோன் என்று எல்லாமே.

மருத்துவர்கள் ஒருநாளின் அதிகபட்ச ஐடியல் ஸ்கிரீன் டைம் என்பது 2 மணிநேரங்கள் மட்டுமே என்று தயவுதாட்சண்யம் இல்லாமல் சொல்கிறார்கள். ’டாக்டர்.. இந்த ஆய்வெல்லாம் எந்தக் காலத்துல பண்ணிருப்பாங்க. இந்தக் காலத்துல போய் வெறும் 2 மணிநேரம் மட்டுமே ஸ்கிரீனைப் பார்த்துட்டிருக்கணுமா சாத்தியமா’ என்று கேட்டால் ‘20-20-20 ரூல் ஃபாலோ பண்ணு’ என்றார்.

அதென்ன 20-20-20?

ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும், திரையிலிருந்து 20 அடிகள் தள்ளிப்போய், 20 செகண்ட்ஸ் வேறு எதையாவது பார்ப்பதுதான் 20-20-20 ரூல். அது கண்ணுக்கு நல்லது.

தொடர்ச்சியாக ஒளி உமிழ்திரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் கண் எரிச்சல், கண் வலி, தூக்கமின்மை, கழுத்து-தோள்பட்டை வலி, அடிக்‌ஷன், Mood disability என்பதில் ஆரம்பித்து சிலபலவற்றை பட்டியல் இடுகிறார்கள்.


மீண்டும் சொல்கிறேன். கிண்டில் அதிக ஒளி உமிழ்வதில்லை. புத்தகங்கள் இன்னும் பெட்டர். எத்தனை டிவைஸ்கள் வந்தாலும், எல்லாவற்றிலும் படித்தாலும் இன்னமும் நான் புத்தகக் கட்சிதான். அதுதரும் ஆதாரசுகம், ஈடில்லாதது.

சும்மா ஓடிக்கொண்டிருக்கும் டிவியை அணைத்துவைப்பது, அலுவலகத்தில் வேலையைத் தாண்டி எதற்கும் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருப்பது, சாப்பிடும்போது, பேசும்போதெல்லாம் மொபைல் குட்டிச்சாத்தானை பாக்கெட்டை விட்டு எடுக்காமல் இருப்பது, ஓவியம் இசை என்று வேறேதாவதொன்றில் தீவிர கவனம் செலுத்துவது என்று இதிலிருந்து தப்பிக்க குட்டிக்குட்டியாயும், பெரிதாயும் நிறைய வழிகள் உண்டு.

இவையெல்லாவற்றையும்விட முக்கியமாகத் தேவை, இதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற மனம். தாலிகட்டுவதையோ, பிடித்த ஆளுமையைச் சந்திப்பதையோகூட நேருக்கு நேர் பார்க்காமல் மொபைல் ஸ்கிரீன் வழியாகத்தான் பார்க்கிறோம். அத்தியாவசியமாகிவிட்டவைகளுக்கு வேறு வழியில்லை. சிலவற்றை நிச்சயம் மாற்றலாம்.

மொபைல் ஸ்கிரீன் டைமை கண்காணிக்க, மொபைலிலேயே (:-)) நிறைய Apps உள்ளன. நான் வைத்திருப்ப்பது Moment எனும் ஆப். ப்ரீமியம் மெம்பர்ஷிப் (400 ஓவா!) கட்டி கோச்சிங் எல்லாம் எடுத்தேன். திடீரென்று முதல்நாள் இரவு, ‘நாளைக்கு காலையில் 11 மணிவரை ஃபோனைக் கையில் எடுக்காதே’ என்று மிரட்டும். இப்படிச் சில. அதன் சுவாரஸ்யம் கருதிப் பின்பற்றினேன். ‘குட்நைட் சொல்லல, என் மெசேஜையே பாக்கல, Blah Blah’க்கள் எல்லாம் அரங்கேறின. அதுதந்த திரில்லுக்காகவே அவ்வப்போது தொடர்ந்தேன்.

இந்தப் பதிவை எழுதும்போது, அந்த App-ல் எனது வீக்லி ரிப்போர்ட் பார்த்தேன். சராசரியாக ஒருநாளைக்கு 6 மணிநேரம் 35 நிமிஷம் மொபல் ஸ்கிரீனைப் பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளுக்கு 107 முறை ஃபோனைக் கையில் எடுக்கிறேன் என்கிறது அது.

இன்றைக்கு மட்டும் - இதை எழுதிய நேரம் காலை 9.30 மணி - இதுவரை 2 மணிநேரம் 22 நிமிஷம் உபயோகித்திருக்கிறேன். இதைத் தாண்டியும், 2 சிறுகதைகள் (சுப்ரமணிய ராஜு... வாவ்...!) படித்திருக்கிறேன். Communication குறித்த ஆங்கிலப்புத்தகம் ஒன்றில் 12 பக்கம் படித்திருக்கிறேன். இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

'முன்னமாதிரி படிக்கவெல்லாம் நேரம் இல்லை’ என்று எவராவது சொன்னால் என் சார்பில் அவர் மண்டையில் நறுக்கென்று கொட்டுங்கள்.. ப்ளீஸ்.

Monday, January 1, 2018

இனிய இரண்டாயிரத்துப் பதினெட்டு!

நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே யாருக்காவது அட்வைஸிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது அல்லது ‘அட்வைஸ்லாம் இல்ல’ என்று எதையாவது உளறிக்கொண்டிருக்கிறோம். நேற்றைக்கு #வாசகசாலை க் கூட்டத்தில் இறுதி உரை - அதாவது அந்த நிகழ்வின் இறுதி உரை - வழங்கச் சொல்லி, மைக் கொடுக்கப்பட்டபோது அப்படித்தான் ஒரு அறிவுரையை அள்ளிவழங்கினேன். காந்திஜி சிறுவனுக்கு ‘அதிகம் சர்க்கரை திங்காதே’ என்று அறிவுறுத்திய கதை போல, அது கிட்டத்தட்ட சென்ற வருடம் நான் கடைபிடித்தது என்பதால் கொஞ்சம் உறுதியாகவே அந்த விஷயத்தைச் சொன்னேன். 2018ல் இதை எல்லாரும் கடைபிடிக்கவேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
நம் நியூரான்களில் பரபரவென்று ஓடும் கருத்தோஃபோபியாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கச் சொன்னதுதான் அது. நாட்டில் என்ன நடந்தாலும் உடனடியாக அதைப்பற்றி நாலு வரிகளோ, நாற்பது வரிகளோ எழுதிக் கொட்டாவிட்டால் மனசு அடங்காமல் திரிகிறது.
நிஜத்தில் நம் கருத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பதே நிஜம். அப்படியும் கருத்துச் சொல்லும் Urge இருந்ததென்றால் தோன்றுவதை எழுதி டிராஃப்டில் போட்டு வையுங்கள். பிறகு அதைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குறைந்தது 24 மணிநேரங்கள் கவனியுங்கள். ‘அட... இதத்தானே நான் நெனைச்சேன். மொதல்லயே போட்டிருந்தா எனக்கு இந்த 500 லைக்ஸ் கிடைச்சிருக்குமே’ என்று தோன்றும். அப்படிக் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் ஒவ்வொரு லைக்ஸிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அது நீங்கள் எப்போது எழுதினாலும் கிடைக்கும். முதலில்எழுதி, ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேசமயம், ஒருவிஷயத்தில் உங்களுக்கு தீவிரமான, தெளிவான கருத்து இருந்து அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்களென்றால் எழுதலாம். இல்லாதபட்சம், அதைப் பற்றிய அறிவும், தெளிவும் உள்ளவர்கள் எழுதியதைப் படியுங்கள். விவாதங்களைக் கேளுங்கள். இணையப் பரிச்சயம் இல்லாத சக நண்பர்களிடம் அதுபற்றி உரையாடுங்கள். 24 மணிநேரம் கழித்து அதைப் பற்றி எழுதும்போது இன்னும் தெளிவும் தீவிரமும் கிடைக்கும்.
இந்த ஒரு சுய ஒழுங்கை மட்டும் கடைபிடித்தால்.. அட்லீஸ்ட் என்னுடைய டைம்லைனாவது நியூஸ் பொல்யூஷனால் பாதிக்காமல் இருக்கும் என்ற சின்ன ஆசைதான் காரணம்.
மற்றபடி, இந்த 2018-ல் இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ் இல்லாமல் சினிமா டிக்கெட் புக் செய்யவும், அவரசமாக ஆஃபீஸ் போகும்போது சிக்னலில் சிவப்பு விழாமலிருக்கவும், லேட்டாக வீட்டுக்குப் போகும்போது சிரித்தபடி மனைவி கதவு திறக்கவும், கேட்டதுக்கு டபுள் மடங்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிஃப்ட் தரவும், பர்ஸை கையில் கொடுக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் அமையவும், நீங்கள் நிற்கும் க்யூ வேகமாக நகரவும், இன்னபிற இனிமைகள் நடக்கவும் வாழ்த்துகள்!

2017 - கற்றுக்கொண்டதும்.. பெற்றுக்கொண்டதும்!

2017. எல்லா வருடங்களையும்போலவே எதையெதையோ கற்றுக்கொண்ட ஆண்டு.
எப்போதும்போலவே எனக்குள் புதுப்புது திறப்புகளை இசையும் வாசிப்பும் திறந்தன. அதேபோல மனிதர்களும்.
ட்விட்டர், ஃபேஸ்புக் மோகமெல்லாம் ஒழிந்து வருடங்களாகிவிட்டது. இந்த இடங்களில்லெல்லாம் லைக்ஸை எண்ணாமல் ஒரு பார்வையாளனாகக் கடந்துபோகும் மனம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள இவற்றை நாடுகிறேன் என்பதில் சந்தேகமில்லை. நேரடியாக லைக்கோ, கமெண்டோ இல்லாவிட்டாலும் இன்னாருடைய கண்கள் இந்தப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கும் என்ற உணர்வே போதுமானதாக இருக்கிறது. ஒரு வாழ்த்தைப் பெற்றதைப் போல உணரவைக்கிறது.
ட்விட்டரில் #135DaysOfKalyanji என்றொரு Hashtag ஆரம்பித்து 135 நாட்களுக்கு கல்யாண்ஜியின் புத்தகங்களில் இருந்து எனக்குப் பிடித்த Quotesஐப் பகிர்ந்து கொண்டேன். கைப்பட எழுதி, லே அவுட் செய்து தினமுமொன்றாகப் பகிர்ந்தேன். மனத்திருப்தியாக அமைந்த நாட்கள் அவை. இப்போதும் கூகுளில் #135DaysOfKalyanji என்று தேடினால் கிடைக்கும். கல்யாண்ஜியிடம் அதை யாரோ பகிர ‘என் கையெழுத்துதான் இது’ என்றிருக்கிறார். நான் அவரிடம் ‘அது என் கையெழுத்து’ என்று சொன்னபோது ஆச்சர்யப்பட்டார். என்னுடையது போலவே இருந்ததே என்றார்.
ஸ்கிரீன் டைம் எப்போதும்போல அதிகம்தான். 2018லாவது குறைத்துக்கொள்ள பிரயத்தனப்படலாமென்றிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல வெறித்தன வாசிப்பைத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமாக சிறுகதைகள். லாசரா, ரேமண்ட் கார்வர், யங் ஹா கிம், அரவிந்த் அடிகா, தஞ்சை பிரகாஷ், எஸ்ரா, ஜெமோ, கந்தவர்வன், சர்வாகன், டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், ஜெயந்தன் என்று கலந்து கட்டிய வரிசை. ஒரு புத்தகம் என்றெல்லாம் இல்லாமல், ஒரு நாளைக்கு இரண்டு சிறுகதைகள் என்ற இலக்கில் பறக்கிறது குதிரை. நல்ல காபிக்குப் பிறகு சில மணி நேரங்கள் ஒன்றுமே குடிக்காமல் இருப்போமே, அப்படி ஒரு சில கதைகளின் தாக்கத்தால், சில நாட்களுக்கு ஒன்றுமட்டும்தான். கிண்டில், நல்லதொரு துணைவனானது இந்த வருடம்தான்.
நண்பன் கட்டதுரை ‘30 Days Walking Challenge’ என்ற ஒன்றை ஆரம்பிக்க, 5 கிமீ, 10 கீமீ என்று தினமும் நடைப்பழக்கம் ஆரம்பித்தது. அதுவும் மழையில் இயர்ஃபோனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நடக்கும் அனுபவமெல்லாம் கிடைத்தது. ஒருநாளைக்கு - 3 தவணைகளில் - 33 கிமீ நடந்ததெல்லாம்.. நடந்தது.. நடக்கும்போது, ஆடியோ புக்ஸ் கேட்பது, சில நல்ல உரைகளைக் கேட்பது என்று அந்த நேரமும் பயனுள்ளதாய் அமைவது டபுள் தமாக்கா! கூடவே அவன் பரிசளித்த்த அடிடாஸ் ஷூவும்.
பாட்டு கேட்பதில் புதிய உத்திகளை இந்த வருடம் முயன்றேன். ஒரு பாடலை, அதில் வரும் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை மட்டும் உன்னிப்பாக கவனித்து ஏழெட்டு முறை கேட்பது.. அதைத் தொடர்ந்து அந்த இசைக்கருவி வேறு பாடல்களில் எப்படியெப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சங்கிலித்தொடர் போல கேட்பது இப்படி. கோரஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறும் பாடல்கள் என்னென்ன இருக்கின்றன, எப்படியெப்படியெல்லாம் கோரஸ் பாடப்பட்டிருக்கின்றன.. இப்படி. இப்படித்தான் ‘இசையில் தொடங்குதம்மா’வும், ‘மகராஜனோடு ராணி வந்து சேரும்’ பாடலும் கடந்த ஒரு வாரமாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

​எப்போதும்போல மனிதர்கள் நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காலமெல்லாம் கற்றுக்கொண்டாலும் நமக்குப் போதவில்லை. சின்னத் துணுக்குறலுக்கும் ‘என்ன ஆச்சு கிருஷ்ணா?’ என்று கேட்கும் நண்பர்களையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவர எண்ணி, சில எழுதினேன். எழுதியவற்றில் இரண்டுதான் எனக்குப் பிடித்தது. மற்றவற்றை மீண்டும் படிக்க எண்ணி, ஓரம்கட்டி வைத்தேன். ஒரு சில எழுத்துக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்ந்து கொண்டேன்.
1993லிருந்து எனக்குக் கனவாக இருக்கும் ஆனந்தவிகடனில் பணி என்பது நேரடியாக நிறைவேறியது இந்த ஆண்டுதான். பணியின்பொருட்டே நிறைய படிக்க நேர்ந்ததும், மகிழ்ச்சியான விஷயம். ஏஜண்ட் வீட்டுக்கே சென்று முதல் ஆளாக வாங்கிய ஒரு பத்திரிகையின் ஒவ்வொரு பக்கங்களையும் வெளிவரும் முன்னே ரசித்துப் படித்து கருத்தைப் பகிர்ந்து என்று.. மனநிறைவான விஷயம். பணியையும் தாண்டி, அதில் என் பெயரும் வரவேண்டும் என்று அவ்வப்போது எழுதியும் கொண்டிருந்தேன். ஒரே இதழில் ஆறு படைப்புகளெல்லாம் வந்தது இந்த வருடம்தான். இந்த வருடத்தின் ஆகச்சிறந்த மனநிறைவு.. இந்த விஷயம் எனலாம்.
2018ல் இன்னும் படைப்பு சார்ந்து தீவிரமாக இயங்கும் எண்ணம் இருக்கிறது. சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவருவது சர்வ நிச்சயம். குறைந்த பட்ச இலக்காக, ஒன்று இருக்கிறது.
நாளைக்குத் தேதி எழுதும்போது, 2017 என்று முடிக்காமல் இருக்க வேண்டும்.

எழுதிய நாள்: 31.12.2017

ஒரு மொட்டையின் கதை!


டிசம்பர் 29 2017
--- 
"வரியெல்லாம் சேர்த்து மொத்தமா 1000 ரூவாய்க்குள்ள சொல்லுங்கம்மா” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அது ஒரு யுனிசெக்ஸ் சலூன். ஹேர்கட் செய்ய நான் அங்கு சென்றிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் அவரது மகள்.

”அப்படின்னா இந்த Pack போட்டுக்கோங்க” என்று எதையோ காட்டினார். “டேக்ஸ்லாம் சேர்த்து 890 ரூவா வரும்”

அந்த அம்மா தலையாட்ட, மகள் முகத்தில் அதிருப்தி. “அதெல்லாம் போதும்ப்பா. போ” என்று அம்மா சொல்ல, உள்ளே சென்றார் மகள்.

சோபாவில் அமர்ந்திருக்கும்போது, அந்த அம்மாவின் முகம் வாடியிருந்தது. நிலைமையைச் சமாளிக்கப் பேச்சுக்குடுத்தேன். கொட்டித்தீர்த்தார் அவர்.

“எல்லாம் என் தப்புதான். சின்ன வயசுல நல்லா விளையாடறானு கோ-கோ விளையாடவிட்டேன். இப்ப என்னடான்னா இவ்ளோ கறுத்துட்டா ” என்று அங்கலாய்த்தபடி ஆரம்பித்தார்.

விஷயம் இதுதான். அவரது மகள் கறுப்பாக இருந்தார். அதில் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. “இப்ப காலேஜ் படிக்கறா. கோ-கோல ஸ்டேட் லெவல்ல விளையாடிருக்கா. ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவா. இவளே கொரியோகிராஃபும் பண்ணுவா. இப்ப காலேஜ்ல ஏதோ ஃபங்ஷனுக்கு டெய்லி ப்ராக்டீஸ் போகுது. ’கறுப்பா இருக்க. அதுனால நீ சொல்லிக்குடுத்துட்டு, ஆடறப்ப நாலாவது வரிசைல போய் ஆடு’னு சொல்லிட்டாங்கனு இன்னைக்கு ஒரே புலம்பல். அதான் வந்தோம்” என்றார்.

நானும், அந்த சலூனில் பொறுப்பில் இருந்த பெண்மணியும் அவருக்கு எடுத்துச் சொன்னோம். ‘அழகுன்றது வெளில இல்லம்மா.. கறுப்புங்கறது வெறும் நிறம்தான்’ போன்ற எல்லா க்ளிஷே வசனங்களையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தோம். “எல்லாம் நானும் சொல்லிருக்கேன் தம்பி. யாரோ ஒருத்தர் டெய்லியும் கிண்டல் பண்றாங்க. ‘ஏண்டி இவ்ளோ கறுப்பா இருக்க?’ன்னு கேட்கறாங்கனு சொல்லுவா.” என்றார் அந்த அம்மா. அந்த சலூன் பொறுப்பாளினி, ‘அப்பப்ப இங்க கூட்டிட்டு வாங்கம்மா, சர்வீஸ்க்கு அல்ல.. நான் பேசறேன் அவங்ககிட்ட” என்றார். 

நான் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. அங்கிருந்து ஹேர்கட் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். குளித்து முடித்து, இந்த விஷயத்தைச் சொன்னேன். “யாரோ என்னமோ சொல்லணும்னு இருக்கணும். அதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா?” என்று உரையாடல் தொடர்ந்தது. எனக்கு போனமாசமே மொட்டை போட ஆசை இருந்தது. அப்போது ‘எதுக்கு? சும்மா இருங்க’ என்ற உமா, “இப்ப போட்டுக்கவா?” என்று கேட்டதும் ‘ஓகே... உங்க இஷ்டம்’ என்றார்.

சட்டென்று கிளம்பி, கீழே வந்து ஒரு பார்பர் கடையில் மொட்டை போட்டுக்கொண்டேன்.




இரண்டு நாட்களாக ‘எதுக்கு மொட்டை.. எந்தக் கோயில்... அய்ய.. நல்லாவே இல்ல. பார்க்கவே சகிக்கல. உங்க மொத்த அழகும் முடில மட்டும்தான் இருந்தது போலயே’ என்று எக்கச்சக்க கமெண்ட்ஸ்!

ஒரே மாதிரி இருக்கறதுல என்ன த்ரில் இருக்கப்போவுது? ல்ல?

.

Wednesday, February 11, 2015

போஸ்ட் ஆஃபீஸ்

99 நாள் ஃப்ரீடம் என்றொரு சமாச்சாரத்தில் இருக்கிறேன். 99 நாட்களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் குழுக்களிலெல்லாம் இல்லை. “ஓ.. அதான் ப்ளாக்ல அப்டேட்ஸா?” என்று புருவமுயர்த்துபவர்களுக்கு ஒரு புன்னகை. படிக்க சேர்ந்துவிட்ட புத்தகங்களின் மிரட்டலும், இங்கே அதிகமாக எழுதவேண்டுமென்றும்தான் இந்த விரதமே.

இந்த 99 நாட்களுக்காக மட்டுமல்லாமல் ரொம்ப நாள் ஆசையாக, ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறேன். கடிதமெழுதுவது. எழுதுவது என்றால் எழுதுவது. மின்னஞ்சல் அல்ல.

ஏற்கனவே ஆரம்பித்து, சிலபேருக்கு எழுதியும் ஆயிற்று. வித்யாசமான க்ராஃப் ஷீட், கலர் கலர் பேனாக்கள் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.

***

ரண்டு நாட்கள் முன்னர் போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நண்பருக்கு ஒரு புக் பார்சல் அனுப்ப வேண்டியிருந்தது. முன் அறையில் பார்வைச்சவால் நிறைந்த ஒருவரும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

”ஸ்பீட் போஸ்ட் பண்ணணும்”

“உள்ள ரெண்டாவது கவுண்ட்டர்” - என்றார் அந்தப் பெண்.

உள்ளே ஐந்து கவுண்ட்டர்கள் இருந்தன. அமர்ந்திருந்தவர்களில் நான்கு பேர் இந்த வருடத்திற்குள் ரிட்டயர்டாக இருப்பவர்களாக இருக்கலாம். இரண்டாவது கவுண்ட்டரில் விசாரித்தபோது, “இங்க ஸ்டாம்ப் மட்டும்தான். ஸ்பீட் போஸ்ட் அடுத்த கவுண்ட்டர்” என்றார்.

நான்கடி நகர்ந்து பின்னுக்கு வந்து நின்றேன். மொத்தம் எத்தனை கவுண்டர்கள் என்று மீண்டும் எண்ணினேன்.

ஐந்து.

ஆக, எந்தப் பக்கத்திலிருர்ந்து எண்ணினாலும் ஸ்பீட்போஸ்ட் இரண்டாவது கவுண்டரில்லை. மூன்றாவது. அல்லது நட்டநடு கவுண்டர் என்று சொல்லியிருக்கலாம் அந்த முன்னறைப் பெண். சரி, அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.

புத்தகத்தைக் கொடுத்து, எத்தனை ரூபாய்க்கு ஸ்டாம்ப் என்று கேட்டேன். அவர் எடை பார்த்துவிட்டு, சுற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு, வாட்ச்சில் மணி பார்த்துவிட்டு, டிரங்க் பெட்டியின் பூட்டை சரிபார்த்துவிட்டு, கணினியில் எதையோ பார்த்துவிட்டு

-101 ரூபாய் என்றார்.

இந்த நேரத்திற்குள், முன்னறையில் இருந்த பார்வைச் சவால் நிறைந்த அந்த நபர் வந்தார்.  குறிப்பிட்ட சில இடங்களில் நடையை எண்ணி, சரியாக அந்தப் பெண்மணிக்கு சற்றுப் பின்னால் வந்து நின்றார்.

“சித்ரா” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றார்.

ஸ்பீட்போஸ்ட் பெண்மணி ஒன்றும் பேசவில்லை.

“சித்ரா”

அப்போதும் இந்த அம்மணியிடமிருந்து பேச்சேதும் இல்லை.

“ஓ.. அம்மாங்களா” என்றார் அவர். “சித்ரா இல்லீங்களா?”

“இல்ல” என்றார் இவர். அந்த நபர் நூறுரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுத்து, நூறு ரூபாயா என்று தடவித் தடவி சரி பார்த்து “சித்ராகிட்ட குடுக்கணும்” என்றார்.

ஸ்பீட்போஸ்ட் அம்மணி பக்கத்து கவுண்ட்டரி்ல் கொடுக்கச் சொல்ல அந்த நபர் “சரிங்க.. நான் நாளைக்கே குடுத்துடறேன்” என்று திரும்பி ஸ்டெப் வைத்து நடந்துபோனார்.

ஒரு பார்வையற்ற நபரின் குரலுக்கு முதல்தடவையிலேயே பதில் சொல்ல என்ன வந்தது இவருக்கு? இவர் அமைதியாக பதில் சொல்லாமல் இருப்பது கண்டு, அந்த நபரே “ஓ.. நீங்களா” என்று கேட்கிறார். உள்ளே பணிபுரியும் சக அலுவலருக்கே ரெஸ்பான்ஸ் இல்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஸ்பீட் போஸ்ட் வேலையை முடித்ததும் - திடீரென்று ஒன்று தோன்றியது.

85க்குப் பின் அல்லது 90களில் பிறந்தவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். அதில் கடிதம் சென்றிருக்குமா அவர்களுக்கு?

பக்கத்து கவுண்ட்டரில் கேட்டேன்.

“இன்லாண்ட் லெட்டர் இல்லீங்க”

“ஓ... நாளைக்கு வரும்களா?”

“தெரியலைங்க”

“இல்ல மேடம்.. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் கடிதம் எழுதறதுன்னு நாலைஞ்சு பேர் முடிவு பண்ணீருக்கோம். அதுக்காக..”

“நல்ல விஷயம். பண்ணுங்க. இன்லாண்ட் இல்லை”

நான் வெளியில் வந்துவிட்டேன்.

**

நேற்றைக்கு வேறொரு போஸ்ட் ஆஃபீஸில் விசாரித்தபோதும் “இன்லாண்ட் இல்லை” என்ற பதிலே வந்தது.

“ஏப்ரலுக்கப்பறம்தான் வரும் சார். எந்த போஸ்ட் ஆஃபீஸ்லயும் இல்லை” என்றார்.

வெளியில் வந்தபோது, கையில் பேப்பர்களுடன் ஒருத்தர் நின்றிருந்தார். கோடுபோட்டப்பட்ட பேப்பரில் பலரின் கையெழுத்துகள். என்னவென்று கேட்டேன்.


“சார்... BSNL தனியார் மயமாக்கக்கூடாதுன்னு ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். பப்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கறோம். ப்ளீஸ் ஒரு கையெழுத்து போடுங்களேன்”

*******

Saturday, February 7, 2015

சென்னை!

“ஜப்பான், அமெரிக்கா, சீனா மூணு பேரும் இவனுக ஒருத்தனையும் விட்றாதீங்க. எல்லாவனையும் சாவடிங்க. ஒரு தமிழனும் இருக்கக்கூடாது. இவனுகள்ல ஒருத்தனுக்கும் அறிவில்ல. சுயநலம் பிடிச்சவனுக. எல்லாத்தையும் அழிக்கணும்.. விடக்கூடாது” - காந்திசிலைக்குக் கொஞ்சம் தள்ளி நடந்தபோது கையில் பிரம்புடன் ஒருவர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார். கலைந்த, அழுக்கு உடை. பழுப்பான கண்களில் ஏதோ வெறி. குரல்மட்டும் அத்தனை தீர்க்கம். அதுவும் வாகன இரைச்சல்களற்ற அந்த அதிகாலை ஆறுமணிக்கு தெளிவாக நூறு அடிவரை அவர் குரல் கேட்ட இடம் மெரினா. 

**
த்தனையாவது  முறை என்று தெரியவில்லை. ஜனவரி 30-31 சென்னை சென்றிருந்தேன். சென்னையைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அது என் ஊர் என்கிறாற்போல ஒரு நெருக்கத்தை உணர்கிறேன். சனிக்கிழமை காலையில், மெரினா சென்று இரண்டு மணிநேரங்களை செலவிட்டேன். மக்கள். மக்கள். மக்கள். “நைட் கொஞ்சம் ஏறிடுச்சு மாமூ” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அருகம்புல் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். யுவன் - யுவதிகள் காதில் இயர்ஃபோன். அங்கங்கே சின்னஞ்சிறார்கள், கோச்சுடன் வந்திருந்தார்கள். ஒரு கோச், ‘லேட்டா வந்தியில்ல, அவன் பேக்கையும் நீ தூக்கீட்டு ஓடு’ என்று தண்டனையாய்ச் சொன்னதை லேட்டாய் வந்த பையன் உற்சாகமாய் செய்ததைக் காணமுடிந்தது.





‘கைவிரல் தரைல தொடணும். அப்டியே இடதுபக்கம் தலையை மட்டும் திருப்புங்க. அப்டியே நிமிந்து, மறுக்கா விரல் தொட குமிஞ்சு வலது பக்கம் திரும்புங்க. டென் டைம்ஸ்’ என்ற குரல் கேட்ட இடத்தில் குழுவாக நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞனுக்கு வலதும் இடதுமாய் இளைஞிகள் இருக்க, முழு உற்சாகமாய் இருபுறமும் திரும்பிக் கொண்டிருந்தான். 


“அம்பது கிலோ மூட்டை. அப்டியே இப்டிக்கா தூக்கி, அப்டிக்கா அடுக்குவேன். இன்னா நென்ச்ச நீயி?” இளநீர்க் கடையொன்றின் முன் நான்கைந்து பெருசுகள் அமர்ந்திருக்க, ஒருவர் அவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டவர் அத்தனை ஒல்லி. ‘ஒடம்பு இருந்தா பலம் இருக்குன்னு அர்த்தமாக்கும்?’ என்றார் அவர். ‘சரி சரி போ.. ஒனக்கு ஆள் வந்துடுச்சு’ என்று அமர்ந்திருந்தவர் சொல்ல. கிட்டத்தட்ட அவர் சைஸுக்கு ஐந்து மடங்கிருந்த ஒரு பெண்மணி மூச்சிரைக்க நடந்து வந்து, ‘என்னாங்குது ஓமக்குச்சி?’ என்று இவர்களைப் பார்த்து கேட்டுவிட்டு ‘வாய்யா போலாம்’ என்று நடந்தார்.

**

ஃபீனிக்ஸ் மால் LUXE திரையரங்கு. 150 ரூபாய் டிக்கெட். நிச்சயமாகக் கொடுக்கலாம், அந்தத் திரையரங்குக்கு. ஒவ்வொரு அடியிலும் உங்களைக் கவர ஏதோ ஒன்றை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தில், சத்யராஜ் சுருட்டு பற்ற வைக்கும்போதெல்லாம் சுருட்டின் பேப்பர் கருகும் ஓசை காதுக்கருகில் கேட்கிறது. ஒலி அத்தனை துல்லியம். இந்தத் தியேட்டரில், நாயகி சாவித்திரியின் தொப்புளைக் காண்பித்த சைஸில்தான் சி செண்டர் டூரிங் டாக்கீஸ்களின் மொத்தத் திரையே இருக்கும்போல. (ஒரு குறிப்பு: தொப்புள் ரசிகரான கே.எஸ்.ரவிகுமாருக்கு சரியான போட்டி எஸ்.ஜே.சூர்யா என்றால் அது.... அதென்னது... ஆங்.. மிகையாகாது!)

வ்வொரு கடையையும் சுற்றிவரவே, நேரம் சரியாக இருக்கிறது. யார் போனாலும் HIDESIGN கடைக்குச் செல்ல மறக்காதீர்கள். ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் தோத்தார்கள்!

**
ருகாலத்தில் மந்திரமாய் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘ஸ்பென்சர் ப்ளாஸா’ மார்க்கெட் இழந்த நடிகையாக (படு மொக்கையான, பல பேர் சொன்ன உதாரணம்) பொலிவிழந்து நிற்க, அதைத் தாண்டி எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. இதைப் போன்ற மால்களை மக்கம் ஈக்களாய் மொய்க்க, சுத்தமும், சுதந்தரமும்தான். போலவே, கஸ்டமர் கேர். எந்தக் கடையிலாவது ‘இது என்ன விலையிருக்கும்?’ என்று உங்கள் மனதுக்குள் நினைத்தால் ‘நைன் ஹண்ட்ரண்ட் சார்’ என்று தோளுக்கருகே குரல் கேட்கும். வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவர்கள் முகம் அஷ்டகோணலாவதுமில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு கடை விடாமல் போய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்று கூட வாங்காமல். ஒரு கடையிலும் அவரை தடுக்கவோ, வேண்டாமென்று சொல்லவோ இல்லை.

**

த்தனை முறை  சென்றாலும் இடங்கள், வழிகள் என்றால் எனக்கு தடுமாற்றம்தான். முகவரி கேட்டால் ஆட்டோகாரர்கள் அத்தனை பாந்தமாக உதவுகிறார்கள். "உட்லண்ட்ஸ்னா நியூ உட்லண்ட்ஸா? நேரா போங்க. யாரையும் கேட்கவேணாம். ஒண்ணு, ரெண்டு, மூணு... நாலாவது சிக்னலாண்ட லெஃப்ட். அங்கிருந்து நேரப்போனீங்கன்னா.. ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சாவது சிக்னலாண்ட லெஃப்ட் எடுங்க. ஃப்ளை ஓவர் வரும். அதுல போகக்கூடாது. கீழ போனீங்கன்னா... ஆமா எங்கிருந்து வர்றீங்க?"

"திருப்பூர்"

"அப்ப வேணாம். கஷ்டம்.. நீங்க என்ன பண்றீங்க.. நேராப் போய்ட்டேஏஏஏஏ இருங்க. நாலாவது சிக்னல்ல லெஃப்ட் எடுங்க. யாரையும் கேட்கவேணாம்... " என்று தொடர்ந்தார்.

வழி சொல்கிற அனைவரின் வாயிலும் "யாரையும் கேட்கவேணாம்" தவறாமல் வருகிறது. 

சனிக்கிழமை காலை மெரினா வாக்கிங் போனேன் அல்லவா? அன்று மாலை நண்பர் அப்துல்லாவைச் சந்தித்தபோது “அண்ணே.. நாளைக்கு சாந்தோம் பீச் போலாம்னிருக்கேன். எப்டிப் போறதுண்ணே?” என்றேன். 

“இன்னைக்கு எங்க போனீங்க?”

“வீரமா முனிவர் சிலைக்குப் பக்கத்துல காரை நிறுத்தீட்டு, ஒரு கிலோ மீட்டர் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போனேன்”

“அதாண்ணே சாந்தோம் பீச்”

ஓஹோ என்று வழிந்துவிட்டு வந்தேன். 

ஞாயிறு திரும்பும்போதுதான் ஞாபகம் வந்தது. நான் கேட்க நினைத்தது பெசண்ட் நகர் பீச். 

****



Thursday, January 22, 2015

இதை எதுல எழுதுவீங்க?

“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.

ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ..  ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.


“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”

உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”

“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”

“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.

“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”

இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.

“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.

புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.

உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.

 “தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப  ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”

“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”

“நீங்க நிருபரா?”

“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”

“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”

“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”

“புரியலையே தம்பி...”

“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”

“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”

“ஐயா உங்க பேர் கேட்டேனே...”

“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”

“சரி..  உதவின்னா காசு வாங்குவீங்களா?”

அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.

“சில்லறை இல்லீங்களா?”

“இல்லீங்களே”

இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.

“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.

“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.

வாங்கியவர்,  அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.

 “ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.

 “கறாரா வாங்கீடுவீங்க போல?”

“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி.  ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”

அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.

“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”

“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.

“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”

“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”

“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”

“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.

“சரிங்க” என்றேன்.

“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”

“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதுங்களே..”

“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”

“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”

“சரிங்கய்யா”

“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.

“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”

நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.

“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.

 “அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.

“நீங்க?”

“நான் இங்கதான் இருக்கேன்”

“எங்க?”

“இதே ஊர்ல..”

“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“சும்மாதான் இருக்கேன்” என்றான்.

>>>

Monday, January 19, 2015

இந்த நாடும்...

“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”

முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.

நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.

இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.

இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.

“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.

வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.

எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.

எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:

1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?

2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?

3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?

4. &$%&க் கொழுப்பு.

இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?

ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.

என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.

ஆமென். 

Saturday, September 27, 2014

கற்காததினால் ஆய பயன்...

ப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.

போய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

உடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.

அடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.

“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க?”

“வெளில, ஹோட்டலுக்குத்தான்”

“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே?”

“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே?” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.

அப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.

*

டெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.

காரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.

அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.

காரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

நேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.

கற்றதினால் ஆன பயனென் கொல்?

Saturday, August 2, 2014

வரம்!

அலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.

அசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.

வந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு?; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.

ஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-

“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா?”

“தெரியும்” - ஏஞ்சலின்.

“பாடு?”

பாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்கு:-

கண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.

நமக்கு?

தோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.

செந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.
.

Friday, March 8, 2013

முதல்கதை எழுதிய கதை

1993-1994 இருக்கும். கதை, கட்டுரைகளை சுவாசம் போல வாசித்துக் கொண்டிருந்த காலகட்டம். சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கமெல்லாம் படித்து - பிடித்த வரிகளையெல்லாம் அடிக்கோடிட்டு, ஒரு கட்டத்தில் ரூல்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட புத்தகம் போல ஆகிவிட்டது அது. டைரியில் அவ்வப்போது சிலபலவற்றைக் கிறுக்கி வைத்திருக்க, அதைப் பார்த்த நண்பர்கள், ‘உன் நடையே நல்லாத்தான் இருக்கு. நீயும் எழுதலாமே’ என்று ஊக்குவித்தார்கள். அவர்கள் சொன்னது எழுத்து நடையை.

எதற்கு கதை எழுதிப்போடுவது என்று குழப்பம். அப்போது திருப்பூரில் கரும்பு என்றொரு கையெழுத்துப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. நூலகங்களில் கிடக்கும். (கிடைக்கும் அல்ல. கிடக்கும்தான்) நான் பார்த்ததுண்டு. யாரைத் தொடர்பு கொண்டேன், எப்படி எழுதி அனுப்பினேன் என்றெல்லாம் நினைவுச்சங்கிலியில் இல்லை. என் சொந்தக் கையெழுத்தில், அந்தப் பத்திரிகையில் முதன்முதலாக ஒரு கதை வந்தது. அதாவது, சேர்க்கப்பட்டது.

அடுத்தநாள் நூலகம் போனபோது அதை அறிந்து கொண்டேன். கடைசியாகக் கோர்க்கப்பட்டிருந்தது எனது கதை. பெரியவர் என்று தலைப்பு. அந்தக் கதைக்குப் பிறகு இரண்டு வெற்றுத்தாள்கள், வாசகர் கருத்துகளுக்காக விடப்பட்டிருந்த்து.


நான், அதை எடுத்துப் படித்தேன். நாலைந்து முறை படித்திருப்பேன். பின்னணியில் இளையராஜாவின் வயலின் இசையோடு படித்தேன். அப்படி ஒரு போதை. பிறகு அதை புத்தகங்கள் கிடந்த டேபிளிலேயே போட்டுவிட்டேன். 

புழுக்கமாக இருந்ததால் ஒரு ஜன்னலோரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்த டேபிள் பார்வைக்குப் படுமாறு அமர்ந்து கொண்டேன்.  கையெழுத்துப் பிரதியை யாராவது எடுக்கிறார்களா / படிக்கிறார்களா என்று ஆவலோடு. இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த நூலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அந்தக் கதையைப் படித்து, குறிப்புகளுக்கான பக்கத்தில் அதைப் பாராட்டி, யாரிந்த கே.பி. கிருஷ்ணகுமார் என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு.....

ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. கையில் ஒரு நாளிதழையும் மறைத்துக் கொண்டு –அதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். யாரும் சீண்டியபாடில்லை.

என்ன குறை என்று போய்ப் பார்த்தேன்.

பெரிய டேபிள். சுற்றிலும் நாற்காலிகள் முழுக்க ஆட்கள். படிக்க விரும்பும் புத்தகங்களைத் தேடித்தேடி அங்கங்கே கலைந்த புத்தகங்கள். அதில் பலராலும் விலக்கி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் ஓர் ஓரமாய்ச் சேர்ந்திருந்தன. நல்ல புத்தகங்கள்தான். ஆனாலும் அவற்றைத் தேடுபவர்கள் குறைவு. அதில் - ராமகிருஷ்ண விஜயம், சைவ சிந்தாந்தப் புத்தகங்களுக்குப் பக்கமாக அது கிடந்தது. மார்க்கெட்டிங் சரியில்லை என்று நினைத்து, அந்தக் கையெழுத்துப் பத்திரிகையைக் கையில் எடுத்தேன். நைஸாக வேறு எதையோ தேடுவது போல - அப்போது கிடந்த விகடன், குமுதம் வகையறாக்கள் இருந்த சைடில் – அதைப் போட்டேன். பிறகு மீண்டும் வந்து தூரமாக அமர்ந்து கொண்டேன்.

ஐந்து நிமிடம்.

பத்து நிமிடம்.

பதினைந்து நிமிடம்.

இருபது நிமிடம்.

ம்ஹும். யாரும் அதை எடுத்துப் படிக்கவில்லை. நான் ரொம்ப நேரமாக அங்கேயே இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி வேறு உந்த, போகலாமா என்று எழுந்தேன். அப்போதுதான் – ஒருவர் அவசர அவசரமாக வேறொரு நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அந்த கையெழுத்துப் பத்திரிகையை எடுத்தார். தொடர்ந்து படிக்கும் வாசகர் என்று நினைத்துக் கொண்டேன். காரணம், பெயரையெல்லாம் பார்க்கவில்லை. அதை எடுக்க என்றே வந்ததைப் போல, அவசரமாக எடுத்துச் சென்று தூரமாக ஒரு நாற்காலியில் அமரச் சென்றார்.

இந்த நேரத்தில், ஓரிருவர் என்னைக் கடந்து சென்றனர். அந்தப் பிரதியை எடுத்த நபர் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். பெரிய அறை. அப்போதெல்லாம் நூலகங்களில் நல்ல கூட்டம் வேறு இருக்கும். ஆஹா.. அந்த வாசகரை விட்டுவிட்டுமோ என்று மனம் பதற – அவரைத் தேடினேன். ஒவ்வொரு நாற்காலியாக அமர்ந்திருந்தவர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன். ஆள் அடையாளம் தெரியாது. கையில் அந்தப் பத்திரிகை இருக்கும். முழுக்க முழுக்க வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட, நோஞ்சானாய்த் தெரியும் கையெழுத்துப் பத்திரிகை. அதை வைத்துத்தான் பார்க்க வேண்டும்.


சில நொடிகளுக்குப் பிறகு, எனக்கு நேரே ஒரு நாற்காலி கண்ணை மறைக்க –அதையும் தாண்டி, அவர் கை மட்டும் என் கண்ணில்பட்டது. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையோடு தெரிந்த கை. ஆர்வமாக, எழுந்து பார்த்தேன்.

கண்கள் சொருக, அதை வைத்து விசிறிக்கொண்டிருந்தார் அவர்.
.

Friday, December 30, 2011

காலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்

காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் வந்தாள்.

“டாடா ஸ்கை ஷோ கேஸ்ல ரா-ஒன் போட்டிருக்காங்க. ஆர்டர் பண்ணீட்டு போங்க. நாங்க பார்க்கணும்”

தெரியாதவர்களுக்கு: டாடா ஸ்கை டிஷ் இணைப்பில், ஷோ கேஸ் என்று புதிய படங்கள் காண்பிப்பார்கள். ஒரு படம் 50ரூ, 75 ரூ என்று நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். நாம் பதிவு செய்திருக்கும் அலைபேசியிலிருந்து, அந்த ஷோ கேஸ் திரையில் காண்பிக்கப்படும் குறியீட்டு எண்ணை, அவர்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால், அது சேர்ந்த அடுத்த நொடி, நம் தொலைக்காட்சித் திரையில் அந்தப் படம் ஒளிபரப்பாகும். ஒரு நாளைக்கும் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நமக்கு வசதிப்பட்ட நேரம் பார்த்துக் கொள்ளலாம். என் இணைப்பிற்கு வருடத்திற்கு 12 படங்கள் இலவசம். பெரும்பாலும் இந்திப் படங்கள்தான்.

நான் டாடா ஸ்கையில் அந்த சேனலை ஆன் செய்து, அதில் குறிப்பிட்டிருந்த குறியீட்டு எண்ணை, டாடா ஸ்கைக்கு எஸ்ஸெம்மெஸினேன். அப்படி அனுப்பும்போதே, கொஞ்சம் பெருமையாக “பாரு.. இந்த மெசேஜ் டெலிவரி ஆச்சுங்கறதுக்கு அடையாளமா என் மொபைல்ல டொய்ங் சவுண்ட் வர்றதுக்கு முந்தி, சேனல்ல படம் வரும்பாரு” என்றேன்.

ம்ஹும். என்னமோ வரவில்லை.

வழக்கமாக அடுத்த நொடியே வரும்.. இதென்ன இப்படின்னு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு காத்திருந்தேன். அலுவலகத்திற்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது.

என் மகள் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள். ‘என்னமோ சொன்னீங்க?’ என்றது அவள் கண்.

அவ்வளவுதான். நாமதான் ஏற்கனவே இந்த கஸ்டமர் கேர் ஆளுகன்னாலே ஆய் ஊய்னு திட்டுவோமே… இதென்ன இப்படிப் பண்றாங்க’ன்னு எனக்கு கோவம் வேற வந்துச்சு.

அடிச்சேன் டாடா ஸ்கை கஸ்டமர் கேர்-க்கு.

“ஹலோ.. குட் மார்னிங்” – அந்தப்புற அழகி குரல்.

“வாட் குட்மார்னிங்? ஐ’ம் டோட்டலி டிஸ் அப்பாய்ண்ட் வித் யுவர் சர்வீஸ்” – நான். கோவமா இருக்கேனாம்.

“ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் சார்” அப்படி ஒரு குழைவு குரல்ல. பாவமாத்தான் இருந்துச்சு. என்னன்னே சொல்லாம இப்படி எகிறுனா என்னதான் பண்ணுவாங்க பாவம்.. அதுக்காக சும்மா விடமுடியுமா? கஸ்டமர்!!!

சொன்னேன்: “ஷோ கேஸ்ல ஒரு படம் ஆர்டர் பண்ணினேன். வழக்கமா எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்ச அடுத்த நொடி சேனல்ல படம் வந்துடும். இப்ப ஆர்டர் பண்ணி கால் மணி நேரமாச்சு. இதுவரைக்கும் வர்ல”

மறுபடியும் அந்தப் பொண்ணு மன்னிக்கச் சொன்னாங்க. சில விபரங்கள் வேணும்னாங்க. “யெஸ் டெல் மீ”ன்னேன் கடுமையான குரல்ல. கோவமா இருக்கோம்ல!

“ஆம் ஐ ஸ்பீக்கிங் டு கிருஷ்ணகுமார்?”

“ஆமா”

“யுவர் டாடா ஸ்கை ஐடி ஈஸ் 104142……….?”

“ஆமா”

“யு ஆர் காலிங் ஃப்ரம் யுவர் ரெஜிஸ்டர்ட் மொபைல் நம்பர். ஆம் ஐ ரைட்?”
‘ஆமாம்மா ஆமாம்’னு கத்தினேன். கீழ வந்து பார்த்த ஹவுஸ் ஓவர் “எப்ப வீட்டைக் காலி பண்ணப் போறீங்க’ன்னு கண்லயே கேட்டுட்டுப் போனார்.

அந்தப் பொண்ணு, இந்த விபரமெல்லாம் சொன்னதுக்கு நன்றி சொன்னாங்க. ‘ம்ம்.. சரி சரி.. எனக்கு என்ன நீதி வழங்கப் போறீங்க?’ங்கற பாணில ‘இட்ஸ் ஓகே..”ன்னு முறுக்கீட்டு “மொதல்ல சாதாரண டாடா ஸ்கை வெச்சிருந்தப்ப உடனே படம் வந்துடும். இப்ப டாடா ஸ்கை ப்ளஸ். ஹும்! ஆக்சுவலி இது டாடா ஸ்கை மைனஸ்’ன்னுதான் சொல்லணும்’ன்னேன்.

கலாய்ச்சுட்டேனாம். சொன்னது அந்தப் பொண்ணுக்கு சுருக்னிருக்கும். மறுபடியும் இடைஞ்சலுக்கு வருத்தப்பட்டாங்க. .

சிஸ்டம்ல டீடெய்ல்ஸ் பார்த்திட்டிருந்தாங்கபோல. பார்த்துட்டு கேட்டுச்சு.

“நீங்க ரா-ஒன் படம் ஆர்டர் பண்ணீருக்கீங்க. கரெக்ட்?”

“ஆமாம்”

“உங்க ரெஜிஸ்டர்ட் மொபைல்லேர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்சிருக்கீங்க.. கரெக்ட்?”

‘உஸ்ஸ்…. முடியலடா’ன்னு நினைச்சுட்டே ஆமாம்னேன்.

“டிவி ஆன்ல இருக்கா சார்?”

“ஆமாம். ஆன்லதான் இருக்கு..”

“ஷோ டைம் என்ன போட்டிருக்கு சார் அந்த ஷோ கேஸ் சேனல்ல”

“எத்தனை கேள்விதான் கேட்பீங்க? இண்டர்வ்யூ பண்றீங்களா? இட்ஸ் டூ மச்’ன்னு கடுமையா சொன்னேன். நாம யாரு! கஸ்டமர். இப்படித்தான் நம்ம உரிமைக்காக போராடணும்.

“சாரி சார். கேன் யூ டெல் மி த ஷோ டைம் விச் ஈஸ் ஷோயிங் இன் யுவர் சேனல்?”ன்னாங்க.

மறுபடி கோவமா சொன்னேன்” “9 மணின்னு போட்டிருக்கு”

“நாவ் வாட் ஈஸ் த டைம்சார்?”

“எட்டேகாலாச்சு. அதுக்கென்ன?”ன்னேன்.

“தட்ஸிட் சார். அவர் ஷோ ஸ்டார்ட்ஸ் அட் 9 ஏ.எம் சார். இன்னும் முக்கால் மணி நேரத்துல படம் வரும் சார்”னு சொல்லீட்டே ‘எனிதிங் கேன் ஐ ஹெல்ப் யூ சார்”ன்னுச்சு.




எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வழிஞ்சு ஸாரி சொல்லீட்டு ஃபோனை கட் பண்ணீட்டேன்.

அங்க, அந்த கஸ்டமர் கேர் பொண்ணு பக்கத்து சீட்ல இருக்கற ஃப்ரெண்டுகிட்ட சொல்லீட்டிருப்பாங்க:

‘அவ்ளோ தெளிவா சேனல்ல ஷோ ஸ்டார்ட் டைம் 9 மணின்னு போட்டிருக்கோம். அப்றமும் கூப்ட்டு கேட்கறான் கேனைப்பய. இந்த லட்சணத்துல ப்ளஸ், மைனஸுன்னு கலாய்க்க வேற செஞ்சான். இவனுகளையெல்லாம்….”

புறப்படறப்ப பைக் ரிவர்வ்யூ மிர்ரர்ல என்னைப் பார்த்து நானே கேட்டுகிட்டேன்:

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா?’


.


Thursday, September 22, 2011

ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை

போனவாரத்தில் ஒரு நாள். நிறுவனத்தின் வாசல் அருகே “சரி.. கிளம்பறேன்” என்று நான் ஆயத்தமானபோதுதான் அவன் வந்தான்.

“சார்.. சார்.. எங்க போறீங்க?”

“திருப்பூர் வரைக்கும் ஒரு வேலையா போறேன்.. நாலு மணிக்குள்ள போகணும். போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன்”

“சார்... அப்டியே XXXX பேங்ல இந்தப் பணத்தைப் போட்டுடுங்க சார்.. ஊர்ல மாமா எடுத்துக்குவார்”

“லேட்டாகுமா?”

“ச்சே.. இல்ல சார்.. அந்த பேங்ல கூட்டமே இருக்காது. போனா அஞ்சு நிமிஷத்து வேலை”

** ** **

சொன்னது போலவே கூட்டம் இருக்கவில்லை. இரண்டே பேர் தான் அமர்ந்திருந்தனர்.

இடது வலது புறங்களில் இருந்த நாற்காலிகளை வயசான சிலர் ஆக்ரமித்திருக்க, ஓரிருவரே இளம் வயதினராக இருந்தனர். இரண்டு கவுண்டர்கள் இருக்க நான் எதில் பணம் கட்ட என்று தெரியாமல் அருகே சென்றேன். அமர்ந்திருந்த ஒருவர் தடுத்தார்.

“ஹலோ... உட்கார்ந்திருக்கோம்ல”

‘இப்ப என்ன நின்னுட்டிருக்கன்னா சொன்னோம்?’ என்று நினைத்தவாறே, “அதான் கவுண்டர்ல யாரும் இல்லீங்களே” என்று கேட்டேன்.

“அவர்தான் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றார் கவுண்டர் ஆசாமியைக் காட்டி.

நான் அமர்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைத் தடுத்த அந்த வாடிக்கையாளர் “எவ்ளோ பணம் எடுக்கறீங்க?” என்று கேட்டார்.

“பணம் எடுக்கலைங்க.. டெபாஸிட் பண்ண வந்தேன்”

“ஓ.. ஸாரி.. ஸாரி.. அப்ப அந்த செகண்ட் கவுண்டர் போங்க” என்று வழிந்தார்.

இரண்டாவது கவுண்டர் அருகே சென்றேன். கெச்சலாக ஒடிந்த உருவத்தில் ஒரு வயசானவர் அமர்ந்திருந்தார். குனிந்து கீபோர்டில் எழுத்துகளைத் தேடித் தேடி ஒற்றைவிரலால் தட்டிக் கொண்டிருந்த அவரின் தலை மேலிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது.

சிறிது விநாடிகள் நின்ற நான், அவர் தலை உயராததால் “எக்ஸ்யூஸ்மீ” என்றேன்.

-மெ
-து
-வா
-க

நிமிர்ந்தார். ‘என்ன?’ என்றார் கண்களால்.

நான் நிரப்பப்பட்ட செலானை நீட்டினேன். இரண்டாயிரத்து முப்பது ரூபாய். நான்கு ஐநூறு ரூபாயும், மூன்று பத்து ரூபாயும் இருந்தன.

வாங்கியவர், கண்ணாடியை மேலே ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு ரூபாயாக எண்ணினார்.

“ரெண்டாயிரத்து முப்பதா?”

“ஆமா சார்”

மறுபடி இரண்டு முறை ஒவ்வொரு நோட்டையும் எண்ணினார். அதில் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் தனியே எடுத்தார். ஒவ்வொரு நோட்டையும் தலைக்கு மேல் தூக்கிப் பார்த்தார். தடவிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த ஒரு மெஷினில் வைத்து சோதித்தார். பத்து ரூபாய் நோட்டுகளை கையாலேயே தடவிக் கொடுத்தார். மீண்டும் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து எண்ணினார்.

“ரெண்டாயிரத்து முப்பது. இல்லையா?”

நான்: “ஆமா சார்”

நான் கொடுத்த செலானை எடுத்தார். டேபிளில் எதையோ தேடினார். பேனா. எல்லாவற்றையும் எடுத்து தேடினார். ட்ராவைத் திறந்து பார்த்தார். கீபோர்டை நகர்த்திப் பார்த்தார். ம்ஹூம். கையைலிருந்த பணத்தை டேபிளில் வைத்து ஒரு பேபப்ர் வெய்ட்டை அதன் மீது வைத்துவிட்டு, நாற்காலியைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி, கீழே தேடினார். விழுந்திருந்தது போலும். ஒரு பெருமூச்சை உதிர்த்தவாறே குனிந்தார். அவர் கைகளுக்கு அந்தப் பேனா எட்டவில்லை.

நாற்காலியை விட்டு எழுந்தார். குனிந்து அந்தப் பேனாவை எடுத்தார். அதை டேபிளின் மேல் வைத்துவிட்டு, நின்றவாறே பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்தார். முன் நெற்றியை அழுந்தத் துடைத்துக் கொண்டார். கைக்குட்டையை இருந்த மடிப்பு கலையாமல் அதே மாதிரி மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். கம்பிகளைத் தாண்டி, கவுண்டருக்கு வெளியே யார் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டார். அவர் பார்வைக்கு மறைக்காமல் இருக்க நான் கொஞ்சம் நகர்ந்தேன். முழுவதும் நோட்டமிட்டுவிட்டு அமர்ந்தார்.

பேப்பர் வெய்ட்டை நகர்த்தி, மறுபடி ஒருமுறை அந்த ஏழு நோட்டுகளையும் எண்ணினார். செலானை எடுத்து, அதில் இருந்த டினாமினேஷனை சரிபார்த்து டிக் அடித்தார்.

கண்ணாடியை கொஞ்சம் இறக்கி விட்டு கணினித் திரையைப் பார்த்தார். கணினியில் எதையோ டைப்பினார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார். மறுபடி எதையோ டைப்பியவர், செலானில் இருந்த வங்கிக் கணக்கு எண்ணை, ஒவ்வொரு இலக்கமாய் மிகப் பொறுமையாய் சரிபார்த்து சரிபார்த்து அடித்தார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார்.

செலானையும், கணினித் திரையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ஒண்ணு.. ஒண்ணு. மூணு.. ஆறு..” என்று கணக்கு எண் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே சரிபார்த்தார். செலானிலும், கணினியிலும் தெரியும் பெயரை சரிபார்த்தார்.

மீண்டும் செலானைப் பார்த்தவர் கேட்டார்: “ரெண்டாயிரத்து முப்பது?”

நான்: “ஆமா சார்”


இப்போது தொகையை கணினியில் அடிக்கும் முறை. ஒவ்வொரு எண்ணையும் பொறுமையாக அடித்தார். கண்ணாடியை இறக்கிக் கொண்டார். செலானையும் கணினித் திரையையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லிக் கொண்டார்.

கண்ணாடியை சரிசெய்தவாறே என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்து ‘ஆமா சார்’ என்று பதில் சொல்ல தயாராய் இருந்தேன். ம்ஹூம்.

மீண்டும் செலானின் இடது வலப் புறங்களில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவாறே தேதி, கணக்கு எண், பெயர், தொகை, கையொப்பம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து டிக் அடித்தார். வலப்புறம் இருந்த சீல் ஒன்றை எடுத்து டமார் டமார் என்று டேபிள் அதிர சீல் வைத்தார். சீல் மேல் கையொப்பமிட்டார்.

செலானின் மறுபாதியைக் கிழித்தார். என்னிடம் கொடுக்க நீட்டியவர், மீண்டும் கையை இழுத்துக் கொண்டார். கையில் மறுபாதியைப் பிடித்தவாறே கணினித் திரையில் எதையோ சரிபார்த்தார். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு என்னிடம் நீட்டினார்.

வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

** ** **

நேற்றைக்கு அலுவல் வேலையாக வெளியே போக பைக்கை எடுத்தேன். அவன் ஓடிவந்தான். ‘சார்.. ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை’ என்றான்.

“நான் எங்கயும் போகலைப்பா. வண்டில காத்து இருக்கான்னு பார்க்க எடுத்தேன்” என்றபடி மறுபடியும் பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினேன்.

** ** **

Friday, September 9, 2011

கண்ணம்மா

“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.

பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.

நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”

“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”

“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.

மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.

நான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.

நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.

“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.

அவரிடம் சொல்லி, கேட்டேன்.

“எந்த பாலுங்க?”

“என்ர மவன்தான்”

உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.

“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.

“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.

அதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.

என்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.

அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.

அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.

“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர் “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.

நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.


.

Tuesday, August 23, 2011

எம கிங்கிரர்கள்

ரு நாளைக்கு 24 மணி நேரம்னா அந்த 24 மணிநேரத்துல நான் பைக் ஓட்டறது வெறும் ஒண்ணரை மணி நேரம். சில நாள் அங்க இங்க போகன்னு வேலை அதிகமானாக் கூட, அதிக பட்சம் நாலு மணி நேரத்தைத் தாண்டாது. ஆனா அந்த கொஞ்ச நேரம் நான் படற டென்ஷன் இருக்கே.. அப்ப்பப்பா! இந்த ஆளுகளாலயே டென்ஷன் ஆகி ஒரு வழி ஆகிடுவோம் நாம. அதுல சில ஆளுகளைப் பத்தி இங்கே:

டர்னிங் டார்ச்சர்மேன்: வலது பக்கம் திரும்பறானா, இடது பக்கம் திரும்பறானான்னு தெரியாது. ஒரு சைஸா உடம்பை வளைப்பானுக. அத வெச்சு ‘ஓஹோ.. சார் திரும்பப் போறார்’னு நாம தெரிஞ்சுக்கணும். ஏண்டா.. இண்டிகேட்டர் போட்டா அப்படி கரண்ட் செலவாகுமாடா உங்களுக்கு?

பில்லியன் பிசாசு: வண்டி ஒருத்தன் ஓட்டுவான். பின்னாடி உட்கார்ந்திருக்கறவன் கை காட்ட ஆரம்பிப்பான். இவன் கை காமிக்கறதுக்கு அரை கிலோ மீட்டர் தள்ளிதான் திரும்ப வேண்டிய இடம் இருக்கும். உட்கார்ந்திருக்கறவன் வலது பக்கம் கை காமிச்சான்-ன்னா,ஓட்டறவன் திரும்பாம லெஃப்ட்ல வண்டிய நிறுத்துவான். அதுக்கு பின்னாடி நீங்க இருந்தீங்கன்னா கொஞ்ச நேரத்துக்கு சீஸோபெர்னியா ஸ்டேஜ்ல இருக்க வேண்டிருக்கும். இதுல க்ராஸ் பண்ணலாமான்னு யோசிச்சு நாம ஸ்லோ பண்ணினா ‘போடா போடா’ன்னு அலட்சியமா நமக்கு கை காட்டுவானுக பாருங்க.. ச்சப்-ன்னு அப்பத் தோணும்.

மெமரிலாஸ் கஜினி: ரைட் இண்டிகேட்டர் போட்டிருப்பான். ‘சார் திரும்பப்போறார்’னு பின்னாடி வர்ற நாம ஸ்லோ பண்ணுவோம். அவன் திரும்பாம நேரா போவான். ‘அட’ன்னு நாம லெஃப்ட்ல ஓவர் டேக் பண்ணி போலாம்னு போனா, சள்ள்ள்-ன்னு அவன் வண்டி லெஃப்ட் ஒதுங்கும்.. சரின்னு ரைட் வந்தா, அவனுதும் ரைட். ஒரு அரை கிலோ மீட்டர்க்கு இந்த விளையாட்டு ஆடி முடிச்சப்பறம் அவனை முந்தும்போது ‘யோவ்.. இண்டிகேட்டர்’ன்னு சொன்னா.. ‘ஓ...!’ன்னு ஆஃப் பண்ணுவான்!

ச்சீப் சின்ஸாமி: வண்டி ஓட்டீட்டே இருப்பீங்க. முன்னாடி போற பைக்ல இருக்கறவன் சடார்னு எச்சில் உமிழ குமிவான். பின்னாடி வண்டி வருதா.. ஆள் இருக்கா எதைப் பத்தியும் அவனுக்கு கவலையில்லை. என்னைக் கேட்டா எமதர்மன்கிட்ட சொல்லி, இந்தச் செயலுக்கு மட்டும் கன்னாபின்னான்னு பனிஷ்மெண்ட் கேட்டகிரியை இன்னும் அதிகப்படுத்தச் சொல்லுவேன். படுபாவிக. எழுதறதுக்கே கேவலமான விஷயமாயிருக்கு இது!


திடீர் ராமசாமி: இது இந்த டவுன் பஸ் & மினி பஸ்காரனுக பண்ற கொடுமை. போய்ட்டே இருப்பானுக. ரோட்டோரம்லாம் இல்லாம திடீர்னு நடு ரோட்ல நிறுத்துவானுக. பின்னாடி அனுமார் வாலா ட்ராஃபிக் நீண்டாலும் கவலைப்படறதில்லை. பொறுமையா நிறுத்தி ஏத்தி அப்பறம்தான் போவானுக. (இந்த கேப்-ல நம்ம பின்னாடி நிக்கற பிரகஸ்பதிகள் ஹார்ன் அடிச்சே சாவடிக்கறது வேற நடக்கும்)


வழிவிடு முருகா: ஃப்ரீ லெஃப்ட்-ன்னு போர்ட் இருக்கும். அதப் பத்தி அவனுகளுக்கென்ன? சிக்னல் போட்டிருக்கும். நேரா நிக்கறவனையெல்லாம் தாண்டி முன்னாடி நிக்கறேன் பேர்வழின்னு இடது பக்கம் போறவனை, போக விடாதபடிக்கு நின்னுக்குவான்.


முந்திரிக்கொட்டை: சிக்னல்ல நின்னுட்டிருப்பீங்க. பச்சை விளக்கு வர்றதுக்கு நாலஞ்சு செகண்ட் முன்னாலயே பின்னாடி நின்னுட்டு கதற ஆரம்பிப்பாங்க. அட இன்னும் ஒண்ணு ரெண்டு செகண்ட்தானே-ன்னு நாம அவனைப் பார்த்தா - அவன் ஏதோ பூரா ட்ரஸ் போட்டிருக்கறமாதிரியும் நாமதான் நிர்வாணமா இருக்கற மாதிரியும் நம்மளை ஒரு பார்வை பார்ப்பானுக பாருங்க.... ம்ஹும்!


சவுண்ட் பார்ட்டி: உச்சபட்ச எரிச்சல் இதான். முன்னாடி போறவனும் போய்ட்டுதான் இருப்பான். நாமளும் போய்ட்டுதான் இருப்போம். திடீர்னு பின்னாடிலிருந்து ஹார்ன் சத்தம் விடாம கேட்கும். என்னமோ எல்லாரும் நடுரோட்ல நின்னு செஸ் ஆடீட்டிருக்கற மாதிரியும், இவரு மட்டும் வண்டி ஓட்டற மாதிரியும்.
வெளிநாடுகள்ல ஒருத்தன் அதிகபட்சமா – ரோட்ல யாராவது விதி மீறலா நடந்துட்டு - கோவம் வந்தா திட்டறதுக்குதான் ஹார்ன் யூஸ் பண்ணுவாங்களாம். இவனுக எதுக்கெடுத்தாலும் ஹார்ன்தான். ஸ்டியரிங்/ஹேண்டில்லேர்ர்ந்து கை எடுத்தாலும் எடுப்பானுக. ஹார்ன்லேர்ந்து கை எடுக்க மாட்டானுக. இவனுகளை ஒரு சவுண்ட் ப்ரூஃப் ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு, சுத்திலும் வித விதமான ஹார்ன் சவுண்ட் ஒலிக்க விட்டு ஒரு நாள் முழுக்க கேட்க வைக்கணும். லூசுங்க…


இதெல்லாம் போக பக்கத்துல வந்து முந்தறது, இடதுபக்கமா முந்தறது, கண்ணை உறுத்தற மாதிரி லைட் போட்டுட்டு டிம் பண்ணாம எதிர்ல வர்றது, அடுத்தவன் வந்து எப்படி நிறுத்துவான்னு யோசிக்காம வண்டியை பார்க் பண்ணீட்டு போறதுன்னு நிறைய இருக்குங்க.. எல்லாம் எழுதினா ப்ளாக்கர் தாங்காது!


.




Wednesday, August 3, 2011

மனுஷனாப் பொறந்தா..


“ஹலோ XXXX பேங்க்-லேர்ந்து பேசறோம்... கேன் ஐ டாக் டு..................?”

“யெஸ்.. ஸ்பீக்கிங். சொல்லுங்க”
“ஹவுசிங் லோன் அப்ளை பண்ணீருந்திங்கல்லியா? அதுவிஷயமா என்கொயரி பண்ணக் கூப்ட்டோம். நான் கேட்கற விஷயங்களை சொல்லுங்க”

“ஆனா மேடம்.. ஏற்கனவே இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டு, வெரிஃபிகேஷனும் வந்துட்டுப் போய்ட்டாங்க..”

“பரவால்ல சொல்லுங்க... உங்க பேரு..”

“......”

”கல்யாணமாய்டுச்சா?”

“ஆமாங்க”

“உங்க மனைவி பேரு?”

“........”

“உங்க சம்பளம்?”

“.........”

“உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு?”

“.....”

“ஓகே.. உங்க மனைவி வேலைக்குப் போறாங்களா.. அவங்க ஏர்னிங் எவ்வளவு?”

“மேடம் கோச்சுக்காதீங்க.. நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். தவிரவும் இதே கேள்விகளை ஏற்கனவே பலதடவை கேட்டுட்டாங்க. ஒவ்வொருக்காவும் லோன் டூ வீக்ஸ்ல வந்துடும்கறாங்க. சைட்டையும்கூட டெக்னிகல் விசிட் வந்து பார்த்துட்டு போய்ட்டாங்க.”

“ஹலோ.. என்னங்க மரியாதை இல்லாம எரிஞ்சு விழறீங்க? லோன் அப்ளை பண்ணீருக்கதானே.. அப்ப எத்தனை தடவை கேட்டாலும் சொல்லித்தான் ஆகணும்!”

“மேடம் நான் எங்க எரிஞ்சு விழுந்தேன்?”

“இதோ இப்ப கோவமா பேசறீங்கதானே?”

“என்னங்க பிரச்னை உங்களுக்கு? நாலைஞ்சு வாட்டி இந்த டீடெய்ல்ஸ் கேட்டுட்டாங்க. தவிரவும் வீட்டுக்கும் ஆஃபீஸுக்கும் ரெண்டு வாட்டி வெரிஃபிகேஷனும் வந்துட்டாங்க. அதுனால எப்ப சாங்க்‌ஷன் பண்ணுவீங்கன்னு கேட்கறேன். அவ்வளவுதான்”

“சரிங்க நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். போதுமா?”

“என்னதுக்கு மேடம் இப்ப கோச்சுக்கறீங்க?”

“ஹலோ.. லோன் வேணும்னா கேட்கறதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும். எத்தனை தடவை கேட்டாலும் சொல்லணும்”

“என்னங்க மேடம் இது! லோன் அப்ளை பண்ணீருக்கேன்தான். அதுக்காக ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி பேசலாமான்னு கூட கேட்காம நீங்கபாட்டுக்கு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்பீங்களா? லோன் அப்ளை பண்ணினா அவன் மனுஷன் கிடையாதா?”

“சரி.. நீங்க ஒண்ணும் சொல்லவேணாம்...”

“ஹலோ.. ஹலோ..”

“சார்.. என்ன சார்.. டென்ஷனாகறீங்க?”

“பேசப் பேச ஃபோனை வெச்சுட்டா. லோன் வாங்கினா நான் மனுஷன் இல்லையா? மனுஷன்னா ரோஷம் வரணும் சார். நான் மனுஷன். ரொம்ப ச்சீப்பா பேசறா.. அதான் ரோஷம் வந்துச்சு. கத்தினேன்...”

** **

“லோன் என்னாச்சுங்க? பேங்க் போனீங்களா?”

“ம்ம்... வந்துடும். ஏதோ பேப்பர் கேட்டாங்கன்னு இஞ்சினியர் சொன்னாரு.. வர்ற மண்டே குடுத்துடுவாராம். எப்படியும் அடுத்த வாரம் லோன் ஓகே ஆகிடும்”

“இப்படியேதான் ரெண்டு மூணு வாரமா சொல்றீங்க..”

“அடுத்தவாரம் கண்டிப்பா ஆகிடும்..”

“ம்க்கும்!”

“என்ன என்னடி பண்ணச் சொல்ற? பேங்க்காரன் வந்து வாங்கிக்கன்னு சொல்லி நான் போகாத மாதிரி. நீயும் எரிஞ்சு விழு..”

“ம்ம். என்கிட்ட காமிங்க உங்க ரோஷத்தையும் கோவத்தையும்... பேங்க்காரன்கிட்டயும், ப்ரமோட்டர்ஸ்கிட்டயும் காமிச்சு வேலைய முடிக்கற வழியக் காணோம். நான் கேட்டா மட்டும் கோவம் மூக்கு மேல வரும்”

“இதுக்குதான் நான் சாப்பிட உட்கார்றதே இல்லை. சாப்பிட உட்காந்தாத்தான் இந்தக் கதையெல்லாம் பேசுவ”

“என்னத்தக் கேட்டுட்டேன்னு இப்ப சாப்பாட்டு மேல கோவத்தை காட்டறீங்க? எனக்கென்ன? ரெண்டு தோசை போதும்னா நான் சுடறத நிறுத்தீட்டுப் போறேன். யாருக்கென்ன வந்தது..”

“ஆமா.. போதும் நீ ஒண்ணும் சுட வேண்டாம்..”

** **

“சார்.. நான் ..................... என் ஹவுசிங் லோன் விஷயமா பேசணும்னு வந்தேன்..”

“உங்க லோன் நம்பர்?”

“...........”

“ஓ.. நீங்கதானா அது? ஏன் சார்... பேங்க்ல கூப்ட்டு டீட்டெய்ல்ஸ் கேட்டா குடுக்கமுடியாதுன்னு சொல்லுவீங்களா?”

“ஐயோ சார்.. அப்படியெல்லாம் சொல்லல சார். நாலைஞ்சு தடவைக்கு மேல டீட்டெய்ல் டீட்டெய்ல்னு அதையேதான் கேட்கறாங்க..”

“ஹலோ நான் பேசீட்டிருக்கேன்.. ஏன் குறுக்க பேசறீங்க?”

“இல்ல சார்.. நீங்க கேட்டீங்கன்னு பதில் சொல்ல வந்..”

“ப்ச்.. மறுபடியும் நடுவுல பேசறீங்க.. லோன் அப்ளை பண்ணினா ஒண்ணுக்கு நூறுதடவை விசாரிக்கத்தான் செய்வாங்க. அதுக்கு கன்னாபின்னான்னு பேசறதா?”

“சார்.. கன்னாபின்னானெல்லாம் பேசலை சார்.. அந்தப் பொண்ணு ரொம்ப கோவமா ஹலோ ஹலோன்னு ஹார்ஷா கேட்கவும்”

“ஓ.. லோன் வாங்கறதுக்கு முன்னாடியே எங்க ஸ்டாஃபை கம்ப்ளெய்ண்ட் பண்றீங்களா நீங்க?”

“சார்.. என்ன சார்... எதச் சொன்னாலும் கோவமாவே பேசறீங்க? வீட்லயும் ப்ரச்னை சார். இன்ஜினியரும் வேலையை கிட்டத்தட்ட நிறுத்திட்டார். நீங்களும் இப்படி கோவமா பிஹேவ் பண்ணினா..”

”“ஹலோ மிஸ்டர்.. எங்க பேங்க்லேர்ந்து கூப்ட்டு கேட்ட்துக்கு நீங்க சரியா டீட்டெய்ல்ஸ் குடுக்கலை.. அதக் கேட்டா என் பிஹேவியரையே குறை சொல்வீங்களா?”

“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை சார்..”

“ம்ஹும்.. நீங்க சரியில்லை. என் சீனியர்கிட்ட உங்களை கம்ப்ளெய்ண்ட் பண்றேன். இங்கயே இருங்க. இப்படி உட்காருங்க..”

“இல்ல பரவால்ல சார். நான் நின்னுட்டே இருக்கேன்.. சார்.. ப்ளீஸ் நான் கோவமா எதுவுமே பேசலை சார்.. புரிஞ்சுக்கோங்க”

“நோ நோ.. .வெய்ட்.. பேங்க்காரங்கன்னா உங்களுக்கு அப்படி ஆய்டுச்சு”

“சார் ப்ளீஸ் அப்ப்டிலாம் இல்லை சார்..”

“இங்க முன்னாடி நிக்காதீங்க. அங்க வெய்ட்டர்ஸ் சேர்ல உட்காருங்க. நான் கூப்பிடறப்போ வாங்க”

** ** **

“ஹலோ மிஸ்டர்............... என்ன இங்க?”

“இல்ல சார்.. ஹவுசிங் லோன் விஷயமா வந்தேன் சார். பேங்க்ல கூப்ட்டு என்கொய்ரி பண்ணாங்க. அப்ப மன்த்லி மீட்டிங்ல இருந்தேன்.. சரியா பேசலைன்னு கம்ப்ளெய்ண்ட் போல.மேனேஜரைப் பார்க்கணும்கறாங்க..”

“இவனுக இப்படித்தான் பண்ணுவானுக சார்.. இந்த மேனேஜரை போன மாசம் ஒரு செக் திருப்பி விட்டான்னு வாங்கு வாங்குன்னு வாங்கீட்டேன் நான். என் கம்பெனி அக்கவுண்ட் இத்தனை வருஷமா வெச்சிருக்கேன்.. எவ்ளோ டீலிங் நடக்குது. ஒரு இன்ஃபர்மேஷன்கூட இல்லாம எப்படி செக் ரிட்டர்ன் பண்லாம்னு போட்டு தாளிச்சுட்டேன். என்னைக் கண்டாலே பயந்துக்குவார். வாங்க போய் ரெண்டுல ஒண்ணு கேட்கலாம்”

“ஐயையோ.. வேணாங்க. நான் வெய்ட் பண்றேன். சண்டை வேணாம். அவர் கூப்டாலும் சாரி கேட்டுட்டு ஆக வேண்டியதப் பார்க்கப்போறேன்”

“என்ன சார்.. இப்படி இருக்கீங்க? மனுஷனா பொறந்தா ரோஷம் வேணும் சார்”


“கரெக்ட்தான். அதவிட- மனுஷனா பொறந்தா பணம் வேணும் சார்”

* * *

Friday, May 6, 2011

1 - 2 - 3

நாலைஞ்சு ஃப்ரெண்ட்ஸ் ஒரு இடத்துக்குப் போய்ட்டிருந்தோம். ஒருத்தர் வீட்டுக்கு. அட்ரஸ் சரியா தெரியல. வழியில டிப் டாப்பா பைக்ல சாஞ்சு நின்னுட்டு இருந்த ஒரு பெரிய மனுஷன்கிட்ட அட்ரஸ் கேட்டோம்.

“சார்.. இங்க மணியான் தோட்டம் எங்க இருக்கு?”

“அங்க யாரைப் பார்க்கணும்?”

அட்ரஸ் கேட்ட பாவத்துக்கு இவன்கிட்ட நாம எல்லா ஜாதகத்தையும், காரண காரியங்களையும் சொல்லணுமாங்கற மாதிரியே என் ஃப்ரெண்ட் என்னைப் பார்த்தான். சொல்லித் தொலைடான்னு நானும் பார்வையிலேயே சொன்னேன்.
(அதெப்படி பார்வையிலேயே சொல்லுவ?ன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் வேண்டாம்.. ஆமா..)

“அங்க யாரையும் பார்க்கலீங்க.. அதுக்கு பக்கத்து ரோடு வழியா போனா – நாங்க பார்க்கப் போறவர் பேரைச் சொல்லி – அவர் வீடு. அங்கதான் போகணும்”

“ஓ…” அப்படீன்னு ரிலாக்ஸ் பண்ணிட்டார் பைக் ஆசாமி.

கையை பாக்கெட்ல விட்டு சிகரெட் பாக்கெட் எடுக்கறாரு. சிகரெட்டை வாய்ல வைக்கறாரு. தீப்பெட்டியைத் தேடறாரு.. என் ஃப்ரெண்ட் என்னை ஒரு மாதிரி பார்க்கறான். நான் கூல் டவுன்’ன்னு பார்வையிலேயே (மறுபடியுமா?) சொல்லீட்டு அவர் பக்கத்துல போனேன்.

ஒரு வழியா சிகரெட்டையெல்லாம் பத்த வெச்சுட்டு அவர் அட்ரஸ் சொன்னாரு..
“நேராப் போனீங்கன்னா ஒரு ஐயங்கார் பேக்கரி இருக்கும். அதுல லெஃப்ட் எடுங்க..”

“ஐயங்கார் பேக்கரில கேக் இருக்கும், பன் இருக்கும். லெஃப்ட் இருக்குமா?’ன்னு நான் கேட்டதை - நல்ல வேளை - அவரு கவனிக்கல.

“அதே ரோட்ல போனீங்கன்னா ரோடு ரைட்ல திரும்பி மறுபடி லெஃப்ட் திரும்பும். அங்க சின்னதா ரோடு பிரியும். அதுல போய்ட்டே இருங்க. எங்கயும் நிறுத்தாதீங்க. அஞ்சு கிலோ மீட்டர் போனா ஒரு பாலம் வரும்.”

எனக்கு இப்பதான் ஒரு நம்பிக்கை வர்றாப்ல இருந்தது. ஏதோ குறிப்பிடறா மாதிரி அடையாளம் சொல்றாரேன்னு. அப்ப சொன்னாரு பாருங்க அந்தாளு..

“அந்தப் பாலத்துலேர்ந்து அரை கீலோ மீட்டர் முன்னாடிதான் நீங்க சொல்ற தோட்டம் இருக்கு”

“ஏங்க.. பாலம் வரைக்கும் போய்ட்டு அரைக் கிலோ மீட்டர் முன்னாடி வரணுமா? அதுக்கு முன்னாடியே தெரியற மாதிரி அட்ரஸ் சொல்லுங்களேன்”ன்னான் என் ஃப்ரெண்டு.

அதுக்கு அவரு சொல்றாரு: “அந்த தோட்டத்துக்கு அட்ரஸ் கேட்கறவங்களுக்கெல்லாம் நான் இதத்தான் சொல்றேன். எல்லாம் கரெக்டா போறாங்க.. நீங்கதான் இப்படி குறுக்குக் கேள்வி கேட்கறீங்க..”

அது சரி!!

---------------------

ஃபீஸ்ல எட்டு, ஒன்பது பேரு வேன்ல ஒரு கண்டொலென்ஸுக்கு - விசாரிக்கப் போய்ட்டிருந்தோம். வேன்லயே ஆளாளுக்கு - ஃபோன் வந்தப்ப - வித விதமான ரிங் டோன்ஸ். அதுனால இறங்கறப்ப ‘எல்லாரும் தயவு செஞ்சு அவங்கவங்க ஃபோனை சைலண்ட்ல போடுங்கப்பா’ன்னு சொல்லீட்டுதான் இறங்கினேன்.

போய், இறந்தவரோட அம்மாகிட்ட பேசிட்டிருந்தோம். ‘உடம்பு சரியானா அதே கம்பெனிக்குதாம்மா போவேன்னு சொல்லீட்டே இருந்தானே’ன்னு அந்தம்மா புலம்பறாங்க. அப்ப டகார்ன்னு என்கூட வந்த ஒருத்தனோட மொபைல் அலறிச்சு. “எங்கேயோ பார்த்த மயக்கம்”ன்னு. நல்ல பாட்டுதான். ஆனா எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல. சொல்லலைனாலும் பரவால்ல – சொல்லியும் கேட்காதவங்களை என்ன செய்யறது.. சொல்லுங்க?

------------------

மீபத்துல பஸ்ல போய்ட்டிருந்தேன். செமயான இளையராஜா சாங்க்ஸா போட்டுட்டிருந்தாங்க. பஸ்ல இருக்கற எல்லாருமே ரசிச்சு கேட்டுட்டே வந்தோம். ’கொட்டுக்களி கொட்டு நாயனம் கேட்குது…. ”ங்கற பாட்டு. பக்கத்துல நின்னுட்டிருந்த ஒருத்தர் ‘என்ன படம்க இது?’ன்னு கேட்கறாரு. இன்னொருத்தர் உடனே ‘உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்’ன்னாரு. நான் உடனே சும்மா இருக்காம “இல்லைங்க சின்னவர்”-ன்னேன்

உடனே அவருக்கு கோவம் வந்துருச்சு. ’எங்ககிட்டயேவா? இது உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்தான்”ன்னாரு.

“இல்லைங்க.. இதுக்கு முன்னாடி பாடிச்சுல்ல ‘என்னைத் தொட்டு அள்ளிச் சென்ற...’ அதுதான் நீங்க சொன்ன படம்.. இது சின்னவர்-ங்க”ன்னேன்.
அவரு கேட்கவே இல்லை. வேணும்னா கூகுள்ல அடிச்சுக் காட்டவான்னு செல்லை எடுத்தேன். ‘போய்யா.. அதயெல்லாம் நம்ப மாட்டேன். எனக்குத் தெரியும்’ன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சவர் டக்ன்னு பாட்டை கவனிச்சாரு.

அப்பத்தான் பல்லவி முடிஞ்சு சரணம் ஆரம்பிச்சிருந்தது. முதல் சரணத்துல முதல் வரி – ‘சின்னவரைப் பார்க்கும்போது..’ – இதக் கேட்ட உடனே அவரு சொல்றாரு…

“ஸாரி.. ஸாரி.. சின்னவருதான். இந்த வரியைக் கேட்கறப்பதன் ஞாபகம் வருது..’ன்னாரு,. அப்பாடான்னு இருந்தது.

நல்லவேளை..சின்னவரைப் பார்க்கும்போதுங்கறதுக்கு பதிலா கவிஞர் ‘உன்னைதினம் பார்க்கும்போது’ன்னு எழுதிருந்தா – நான் தீர்ந்தேன்.

-------------------


.

Monday, March 21, 2011

அவியல் 21 மார்ச் 2011

சென்ற மாதத்தில் ஒருநாள் திருவண்ணாமலை அருகே ஓர் ஊரில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள்.

தாய்மார்களா? டாஸ்மாக் வேண்டும் என்றா? – ஆமாம்.

காரணம் – கடைசியில்!

-----------------------------

வீடு கட்ட லோன் அப்ளிகேஷனில் விவரங்கள் எழுதும்போது தெரிஞ்சவங்க நம்பர் குடுங்க என்றார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு விஷயம் சொன்னார். ஒரு வாடிக்கையாளர் தனக்குத் தெரிந்தவர் என்று ஒரு நண்பரின் பெயரைக் கொடுத்தாராம். வங்கி நபர் அந்தக் குறிப்பிட்ட நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ‘செல்வராஜையும் தெரியாது.. ஒரு மங்கா மடையனையும் தெரியாது’ என்று அவர் கட் செய்து விட்டாராம். வங்கி நபர், உடனே விண்ணப்பதாரரைத் தொடர்பு கொண்டு ‘அவரு தெரியாதுங்கறாரே’ என்று கேட்டதும் ’ஒரு நிமிஷம் இருங்க’ என்று வங்கி நபரையும் லைனில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நண்பருக்கு அலைபேசி டக்கென்று கான்ஃப்ரென்ஸ் கால் போட்டிருக்கிறார். அழைப்பு போனதும் அந்த நண்பர் பேசியது:

‘ஏய்.. செல்வராஜு... சொல்லுடா மாப்ள.. என்ன திடீர்னு..’

‘இல்ல மாம்ஸ்... ஹவுசிங் லோன் போட்டிருக்கேன்.. உன் நம்பர் குடுத்திருக்கேன். பேங்க்லேர்ந்து கூப்பிடுவாங்க..’

‘அதுதான் நேத்தே சொன்னியே மாப்ள... கூப்டா பேசிடறேன் சரியா.. வேற எதுனா இருக்கா?’

இல்லை என்ற விண்ணப்பதாரர் லைனைக் (நண்பரையும்?) கட் செய்துவிட்டு, வங்கி அப்ளிகேஷனில் வேறு நண்பர் பெயரை எழுதிக் கொடுத்தாராம்.

-----------------------

சின்ன மகளின் வகுப்பில் ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை. அவளது தோழி ஒருத்தி மார்க் கம்மியாகிவிட்டதாம். பஸ்ஸில் வரும்போது அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏன் கம்மியாச்சு என்று கேட்டதற்கு ‘நான் எக்ஸாமுக்கு முந்தி ஒருவாட்டி சுவாதியை உதைச்சேன்ல.. அதுனாலதான்’ என்றாளாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறாள் பெரியவள். நாம் யாரையாவது உதைத்தால் அவர்கள் புத்தி நமக்கு வரும்.. நம்ம அறிவு அவங்களுக்குப் போகுமாம்’ என்றிருக்கிறாள். இதை அவர்கள் விளையாட்டாகச் சொல்ல நான் கேட்க நினைத்தேன்: ‘அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?’

ஆனால் கேட்கவில்லை. சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..

------------------

லகக்கோப்பை க்ரிக்கெட் காலிறுதிக்கு வந்துவிட்டது. என்னமோ ஏதோ என்று விளையாடுகிறார்கள் என்று இந்திய அணியை விமர்சிக்கிறார்கள் சிலர். இருக்கலாம். ஆனாலும் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் முன்னூறுக்கு மேலெடுத்து, எதிரணியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்வார்களென்பதும் கற்பனை சுகம் மட்டும்தான்.

அஸ்வினை சரிவரப் பயன்படுத்தாமை, மிடில் ஆர்டர் சொதப்பல்கள் என்று தோனி கவனிக்க வேண்டியவற்றை கவனித்து அணியைச் செலுத்தினால் ஆஸியை ஜெயிக்கலாம். ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் வழிந்து, ஜெயிச்சா ஜெயிக்கட்டும்.. இல்லைன்னா விடுங்க என்றே பார்ப்பதாய்ப் படுகிறது. உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!

இந்த உலகக் கோப்பையில் உண்மையாகவே கவனிக்கப்பட வேண்டிய அணி - அயர்லார்ந்து! இங்கிலாந்தின் இமாலய ஸ்கோரை போகிற போக்கில் எடுத்து ஜெயித்ததும், கடைசி லீக் மேட்சில் நெதர்லாந்தின் 306ஐ துரத்தி எடுத்ததும் சாதாரண விஷயமில்லை. 2015ல் பத்து அணிகள்தான் என்பதால் அயர்லாந்து வருமா வராதா என்கிற ஐயமிருக்கிறது. வரவேண்டும்!

-------------------------


ரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞர் க்ரைண்டர் அல்லது மிக்ஸி என்றால் ஜெயலலிதா என்ன தருவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தொடர்ந்து தடையில்லா மின்சாரம் போன்ற சில காமெடி அறிவிப்புகள் இருந்தாலும், தேர்தல் அறிக்கையை மிகக் கவர்ச்சியாக அறிவிப்பதில் திமுக கவனமாகவே இருக்கிறது.

என்னுடைய ஏமாற்றம் குஷ்பூவுக்கு சீட் கொடுக்காதது. இதைத் தட்டிக் கேட்க ஒருவர் கூடவா இல்லை? என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்! ச்சே..

வைகோவுக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டியதில்லை. ஜெயிக்கிற குதிரைக்குத்தான் பணம் என்பதுபோல தேமுதிகவை அழைத்துப் பேசிய அம்ம்ம்ம்ம்மா, கூடவே ஐந்து வருடம் இருந்த வைகோவை நடத்திய விதம் கண்டிக்க வேண்டியது. நானெல்லாம் கண்டித்து ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப் போவதில்லை என்பது வேறுவிஷயம்! நண்பர் ஒருவர் கூறியதைப் போல ஜெ கூட்டணியில் வைகோ / நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்கள் யாருமே இல்லை என்பதே நிஜம்.

----------

முதல் பாராவில் கேட்டதற்கான பதில்: அவர்கள் ஊரில் டாஸ்மாக் இல்லாததால் ரொம்ப தூரம் போகிறார்களாம் கணவன்மார்கள். திரும்பி வருகையில் விபத்து நேர்கிறதாம். தொடர்ந்து பலரையும் இழந்திருக்கிறார்கள். ‘குடிக்கறத நிறுத்துங்கன்னா கேட்கப்போறதில்ல.. ஊருக்குள்ளாறயே ஒரு டாஸ்மாக் இருந்தா இங்கனயே குடிச்சுட்டு இங்கனயே கெடப்பாங்கள்ல’ என்று ஒரு தாய்க்குலம் மீடியா நீட்டிய மைக்கில் உச்சஸ்தாயியில் சொல்ல - வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். லேடரல் திங்கிங்!


-----------------

Thursday, February 17, 2011

அவியல் 16 ஃபிப்ரவரி 2011

யணம் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதெல்லாம் ஓகே. அதீத ஆர்வத்தால் படத்தில் என் மனதை நெருடிய ஒரு விஷயத்தை விமர்சனத்தில் குறிப்பிட மறந்துவிட்டேன்.

படத்தில் ஒரு கேரக்டர். மறைந்து டாய்லெட்டுக்குள் சென்று போதைப் பவுடர் நுகர்ந்து தனி உலகத்தில் திரிகிற ஒரு தாடிவாலா. இன்னொரு கேரக்டர். குமரவேல். கண்முன் நடக்கும் அநீதிகளை முடிந்தவரைத் தட்டிக் கேட்கிறான்.

ஒரு கதாபாத்திரங்களும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சுடப்படுகிறார்கள். போதைப் பவுடர் கேஸ், தப்பித்து ஓடும்போது தீவிரவாதியால் சுடப்படுகிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிழைத்துவிடுகிறான். கடைசி க்ளிப்பிங்கில் ஜன்னல் வெளிச்சம் முகத்தில் விழ சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் - அநீதிகளைத் தட்டிக் கேட்பவன், பொட்டெனச் சுடப்பட்டு சட்டென்று பரலோகம் போகிறான்.

இது என்ன நியாயம் ராதாமோகன்? எனக்குப் பிடிக்கவில்லை.

--------------------------

“டீமிற்கு பதினான்கு பேர் எடுத்தாகிவிட்டது. ஓர் ஆள் உன் சாய்ஸ்” -செலக்‌ஷன் கமிட்டியிலிருந்து தென்னாப்ரிக்காவில் இருக்கும் தோனிக்கு அழைப்பு போனது. தோனி உடனே சொன்ன பெயர்: ‘பீயுஷ் சாவ்லா’

‘அறிவே இல்லை. இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரையேனும் எடுத்திருக்கலாம். ஏற்கனவே ஹர்பஜன், அஷ்வின் என்று ஸ்பின்னர்கள். போதாக்குறைக்கு யுவராஜ், ரெய்னா, சேவக், சச்சின் என்று பார்ட் டைம் பவுலர்கள் வேறு இருக்கையில் – சாவ்லாவை ஏன் எடுத்தார் தோனி?’ என்று கண்டனக்குரல்கள்.

அப்போதெல்லாம் எந்த அறிக்கையும் விடவில்லை மனுஷன். ஆஸியுடனான வார்ம் அப் மேட்சில் பதில் சொல்லிவிட்டார் தோனி.

அதேபோல - தோனி தன் பழைய அதிரடி ஆட்டத்தை ஆடினால் நன்றாக இருக்கும் என்று ஏதோ ஒரு புண்ணியவான் திருவாய் மலர்ந்தார். இதோ - நேற்றைக்கு நடந்த நியூஸியுடனான மேட்சில் 62 பந்துகளில் செஞ்சுரி!

நீ கலக்கு ராசா! உனக்கு மச்சம் உச்சத்துல இருக்கு!

----------------------------------------

ரவு அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன். லேட்டாகிவிட்டிருந்தது. ஓர் இடத்தில், மூச்சு வாங்க ஒருத்தன் ஓடிச் சென்று கொண்டிருந்தான். என் பைக் அருகில் வந்ததும் லிஃப்ட் கேட்டான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, ஏதாவது டவுன் பஸ்ஸை பிடிக்கப் போகிறானோ என்று ஏற்றிக் கொண்டேன். ஐம்பதடி தூரம் போனதும் நிறுத்தச் சொன்னான். நிறுத்தியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவனிறங்கி ஓடியது - அருகிலிருந்த டாஸ்மாக்குக்கு. 10 மணிக்கு மூடிவிடுவார்களே!

டாஸ்மாக்கிற்கு அருகாமையில் வண்டி ஓட்டிச் செல்வது அவ்வளவு சவாலாக இருக்கிறது. குடிக்க வருபவர்கள் அவரச கதியில் வருகிறார்கள். குடித்து விட்டுச் சாலை தாண்டிச் செல்வபர்கள் எந்த அவசரமுமில்லாமல் ஜாலியாக தாண்டிச் சென்ற வண்ணமிருக்கிறார்கள்.

இந்த அவலங்களையெல்லாம் தாண்டி வந்து புலம்புவதற்குப் பதிலாக, நானும் வண்டி நிறுத்தி போய் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாமா என்று யோசித்ததுண்டு. வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது!

------------------------------------------

ரு ட்ரெய்னிங் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. மனிதவளத்துறையின் மகத்துவம், அதன் சவால்களை ஒருத்தர் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். சொன்னதையே நான்கைந்து முறை சொல்வது, சப்பையான உதாரணங்கள் என்று நடத்தியவர் எல்லார் காதுகளிலும், கழுத்துகளிலும் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தார். குறிப்பிடப்பட்ட நேரம் தாண்டியும் வகுப்பு போய்க் கொண்டிருந்தது. மொத்தம் 30 பேர் அமர்ந்திருந்தோம். மனிதவளத்துறையினர் தங்களிடம் வரும் குறைகளுக்கு உடனுடனேயே பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்றவர் தொடர்ந்து சொன்னார்.

‘ஒருத்தனை திருப்தியில்லாத இதயத்தோடு அனுப்பினீர்களானால் அவன் ஒரு நாளில் 27 திருப்தியில்லாத இதயங்களை உருவாக்குவான். இது உண்மை’ என்றார்.

எங்களில் ஒரு குரல் சொன்னது: “சார்.. இப்ப நீங்க சீக்கிரம் இந்த க்ளாஸை முடிக்கலைன்னா 30 திருப்தியில்லாத இதயங்களை ஒரே நாள்ல உருவாக்குவீங்க”

-----------------------

எஸ் எம் எஸ்:

பாருக்குச் சென்ற கொஞ்சம் கூச்சசுபாவியான அவன் ஒரு டேபிளில் அழகான இளம்பெண் அமர்ந்திருப்பதைக் காண்கிறான். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாய் அவளருகில் சென்று ‘இங்கே அமர்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லையே’ என்கிறான் தணிந்த குரலில். அவள் உரத்த குரலில் சொல்கிறாள்: “இன்றிரவை உன்னுடன் கழிக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று. சுற்றியிருப்பவர்கள் இவனை ஒரு மாதிரி பார்க்க - அதிர்ச்சியுடனும், தர்மசங்கடத்துடனும் வேறொரு டேபிளில் சென்றமர்கிறான்.

சிறிது நேரத்தில் அவனருகில் வந்த அந்த அழகி, மெதுவான குரலில் சொல்கிறாள்: ‘மன்னித்து விடு. நான் ஒரு சைக்காலஜி மாணவி. தர்மசங்கடமான சூழ்நிலைகளை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான்...’ என்று இழுக்க இவன் மிக உரத்த குரலில் கத்துகிறான்: “என்னது? மூவாயிரம் ரூவாயா..! ரொம்பவே அதிகம்!”

ஹும்! யாருகிட்ட!!

------------------

ந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் வந்தது. ஃபோனில் பெண் குரல்: ”சார் இம்மீடியட்டா நடேசன் தெரு, பத்தாம் நம்பர் வீட்டுக்கு வாங்க.. ஒரு பூனை என்னையே பார்த்துட்டிருக்கு”

“என்னம்மா பூனைக்கெல்லாம் பயந்துட்டு? நீங்க யார்.. உங்க பேரென்ன”

“என் பேரு பப்பி. நான் இந்த வீட்ல வளர்ற கிளி”

--------------------

ஒரு கவிதை:

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

-ஆத்மாநாம்

.

Friday, February 11, 2011

1...2...3...

1.

ன்றைக்கு எனக்கு அலுவலகத்தில் ஏதோ டென்ஷன் தினம். அடுத்த நாளும் அந்த டென்ஷன் தொடரும் நிலைமை. இரவு வீட்டுக்கு வந்து இந்திய அணியின் மேட்ச் - லைவ் - பார்க்கிறேன். இந்தியா 190க்கு ஆல் அவுட். ஐயகோ என்று தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கையும் பார்க்கிறேன். 152க்கு ஐந்து. 39 ரன்கள் மட்டுமே வேண்டும். ஐந்து விக்கெட்டுகள். வழக்கம்போல ‘இவனுக எப்பவுமே இப்படித்தான்’ என்று படுத்து உறங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி என்று நியூஸ் என்னை எழுப்ப, அன்றைக்கு முழுதும் உற்சாகமாய் இருந்தேன். ஒருத்தனின் மனநிலையையே மாற்றுகிறது இந்திய அணியின் வெற்றி!

உலகக் கோப்பை க்ரிக்கெட். என் போன்ற க்ரிக்கெட் ரசிகர்களின் கனவு தினங்கள் வெகு அருகில். ஓர் இந்தியக் க்ரிக்கெட் ரசிகனாக இந்த உலகக் கோப்பை வெகு ஸ்பெஷல். சரியான ஃபார்மில் இருக்கும் டீம். அதுவும் சொந்த ஊரில்.

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் விளம்பரங்கள். வேர்ல்ட் கப்புக்காக ஸ்பெஷல் விளம்பரங்கள் அணிவகுக்கும். பெப்ஸியின் ஹெலிகாப்டர் ஷாட் (தோனி), தூஸ்ரா (ஹர்பஜன்), பல்ட்டி ஹிட் (கெவின் பீட்டர்ஸன்) போன்ற விளம்பரங்கள் சுவாரஸ்யம்.

எரிச்சலூட்டும் விஷயம் – இந்த விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பும் விதம். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். மொத்த ஸ்க்ரீனில் க்ரிக்கெட்டைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளிவிட்டு மீதி முழுவதுமாய் ஆக்ரமிக்கும் பைக் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தரினும் வேண்டேன். போலவே பவுண்டரியைத் தொட்டுப் பறந்த ஆறாவது பந்து கயிற்றுக்கு முன் தொட்டு நான்கானதா, கொஞ்சம் பின் தொட்டு ஆறானதா என்று முடிவாவதற்கு முன் வரும் விளம்பரப் பொருட்களுக்கும் மனதளவில் தடாதான்.

சம்பந்தமில்லாத – அல்லது - சம்பந்தம் இருக்கிற ஒரு தகவல். கூகுளில் க்ரிக் இன்ஃபோவைத் தேட Cri என்று ஆரம்பித்தால் தானியங்கி குறிச்சொல் காட்டும் சொல்:

Criminal Minds!


-----------------------------------------------------
2.

ஸ்ஸெம்மெஸ் கலாட்டாக்கள் சில சமயம் க்ளுக்கென சிரிக்க வைக்கும். கொஞ்சமாய் சிந்திக்க வைக்கும்.

சமீபத்தில் வந்து என்னைக் கவர்ந்த எஸ்ஸெம்மெஸ் சில:

--

அந்த வகுப்பறைக்குள் நுழைகிறார் கலைஞர். மாணவர்களிடம் கேட்கிறார்: ‘பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் ராமு. எனக்கு இரண்டு கேள்விகள்’

கலைஞர்: “கேளு ராமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

“மிகவும் தைரியமான கேள்வி! இதற்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறேன்”

----இடைவேளை ----

மீண்டும் கலைஞர்: “பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’

கலைஞர்: “கேளு சோமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

கலைஞர்: “மூணாவது கேள்வி?”

சோமு: “ராமு எங்கீங்க ஐயா?”

****************

இன்னொன்று:

||ஜெய் ஸ்ரீ ரஜினிகாந்தாய நமஹ:||

இந்த எஸ்ஸெம்மெஸ்ஸை குறைந்தது 9 பேருக்கு அனுப்புங்கள். படிக்காமலே நீங்கள் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள். உதாசீனப்படுத்த வேண்டாம். ஒரு முறை இதை உதாசீனப்படுத்தி டெலீட் செய்த ப்ளஸ் டூ மாணவனின், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஃபெய்ல் என்று மாறியது!

****************

மூன்றாவது:

மனைவி: “டின்னருக்கு என்ன வேணும்க?”

கணவன்: “பருப்பும் சாதமும்...”
மனைவி: “நேத்துதாங்க அது வெச்சேன்?”

கணவன்: “சரி... கத்திரிக்காக் கொழம்பு”
மனைவி: “ஐய.. உங்க பையன் சாப்பிடவே மாட்டான்”

கணவன்: “முட்டைக் கொழம்பு?”
மனைவி: “ ஆளப்பாரு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை..”

கணவன்: “பூரி?”
மனைவி: “இந்நேரத்துக்கு பூரியா? ஏங்க இப்டி?”

கணவன்: “சரி.. பேசாம நான் ஹோட்டல்ல பார்சல் வாங்கியாரவா?”
மனைவி: “அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்க.. உங்களுக்காகத்தானே சொல்றேன்..”

கணவன்: “அப்ப மோர்க்குழம்பு வை”
மனைவி: ”அதுக்கு மோர் வேணும். வீட்ல இல்லை”

கணவன்: “இட்லி சாம்பார் வெச்சுடேன் பேசாம?”
மனைவி: “கரெக்டுங்க.. ஆனா மொதல்லயே சொல்லிருந்தா மாவு அரைச்சு வெச்சிருப்பேங்க”

கணவன்: “கம்முன்னு மேகி செஞ்சுடு. அதான் கரெக்ட்”
மனைவி: “அது உங்களுக்குப் பத்தாதுங்க. நீங்க நைட் தான் ஹெவியாச் சாப்பிடுவீங்க”

கணவன்:”வேற என்னதான் செய்வ?”
மனைவி: “இதென்னங்க என்னைக் கேட்டுட்டு? நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம்?”

இந்தப் பொண்டாட்டிகளே இப்படித்தான் பாஸ்!

-----------

3.


கூகுள் பஸ்தான் தற்போதைய என் சோர்வு நீக்கி. அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். பலரும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸில் கிடைக்கிற கேப்பில் ஆட்டோ, லாரி மட்டுமில்லாது குசும்பன் போன்றவர்கள் ஃப்ளைட்டே ஒட்டுகிறார்கள்.

http://www.google.com/buzz/yesbalabharathi/YaczwFPPDjA/%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8

தல பாலபாரதியின் இந்த பஸ்ஸில் குசும்பனின் அளவிலா நக்கலின் ஒரு இடத்திலாவது நீங்கள் சிரிக்கவில்லையென்றால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும்.


.