முக்கியமா சொல்லணும்னா – பெரிசா எதுவும் நடந்துடல. ஆனா பெரிசா சொல்லணும்னா முக்கியமா பலவிஷயம் நடந்தது.
அதுல ஒரு நாலு மேட்டரை வரிசைப்படுத்தறேன். படிக்கற நெருங்கிய நண்பர்கள் இதை ஏன் இவ்ளோ நாளா என்கிட்ட சொல்லலன்னு திட்டாதீங்க.. ப்ளீஸ்...
*************************************
யுவன் ஷங்கர் ராஜாவைச் சந்திச்சது:
அரவிந்தன் பட இசை வெளியிட்டப்போ என் நண்பன்கிட்ட சொன்னேன்: “டேய்.. கார்த்திக் ராஜாவை விட யுவன் பெரிய ஆளா வருவாரு பாருடா”ன்னேன். (சந்தேகமிருக்கறவங்க எனக்கு மெயில் அனுப்பினா அந்த நண்பனோட நம்பர் தர்றேன். ஆமாம்பான் அவன்.) அதே மாதிரி எங்கெங்கயோ போயி இதோ பையா வரைக்கும் கலக்கீட்டு இருக்காரு.
எப்படியாவது அவரைச் சந்திக்கணும்னு பலமுறை முயற்சி பண்ணி போன மே மாசம் சென்னை போயிருந்தப்ப அது நடந்துச்சு. ஆனா சரியா பேசமுடியல. அவர் ஸ்டுடியோவுக்கு ராத்திரி நேரம்தான் வருவாருன்னு நம்ம நண்பர் சொல்ல, காத்திருந்து சரியா 11.45க்கு சிரிச்சுட்டே வர்றாரு. ‘ஹாய் கிருஷ்ணா.. ஸாரி கொஞ்சம் லேட்’ங்கறாரு. என்கிட்ட இல்ல. வேறொரு கிருஷ்ணாகிட்ட. எங்களைக் கூட்டீட்டு போனவரைப் பார்த்து சிரிக்கறாரு. அவரும் என்னைக் காமிச்சு ‘உங்களோட ஃபேன்’ன்னு சொல்றாரு. ‘ஓ’ன்னு சிரிச்சுட்டு கை குடுத்தாரு. அப்புறம் உள்ள போய்ட்டாரு. நான் ரெண்டு வார்த்தை பேசலாம்னு நெனைச்சேன். ஆனா முடியல. விடிய விடிய ரெகார்டிங் நடக்கும்னாங்க. நான் தூரத்திலேர்ந்து அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துட்டேன்.
*****
ச்ச்சின் டெண்டுல்கர் - ஒரு பயணமும், ஆட்டோக்ராஃபும்
என்னதான் சொல்லுங்க. சச்சின் சச்சின்தான். அந்தாளுமேல என்ன விமர்சனக் கணையை செலுத்தினாலும் சிக்ஸருக்கும், ஃபோருக்கும் அனுப்பீட்டே இருக்காரு. அந்த வகைல நான் சச்சினோட மிகப்பெரிய ஃபேன். அவரு கொச்சின் வந்திருந்தார் ஏதோ ஒரு விளம்பர ஷூட்டிங்குக்கு. எனக்கு அந்த விளம்பர கம்பெனியோட ப்ரொடக்ஷன் மேனேஜர் பயங்கர ஃப்ரெண்டு. சின்ன வயசுல 25 ரூபா கடன் வாங்கிட்டு இன்னமும் தர்ல. ‘அந்த நன்றிக்கடனை எப்படியாவது அடைக்கறேண்டா’ன்னு சொல்லீட்டே இருப்பான். அத இந்த காரியம் மூலமா செஞ்சும் காமிச்சுட்டான்!

ச்ச்சின் கொச்சின் (என்னா ரைமிங்கு) வர்றதுக்கு ரெண்டு வாரம் முன்னாடியே எனக்கு தகவல் சொல்லீட்டான். “டேய் நண்பா... ரொம்ப ரகசியமான மேட்டர். நீ மட்டும் வந்துடு. யார்கிட்டயும் சொல்லிடாத”ன்னு. அதே மாதிரி ‘ரொம்ப எதிர்பார்த்துட்டும் இருக்காத. ஒருவேளை டூப் வெச்சு எடுக்கறா மாதிரி இருந்தா அவர் வர்றது கேன்சலாகறதுக்கும் சான்ஸ் இருக்கு’ன்னான்.
நமக்கென்ன, போலாம் முடிஞ்சா பார்க்கலாம்.. இல்லையா கேரளால பார்க்கறதுக்கு ஃபிகரா இல்ல? ரசிச்சுட்டு ரிட்டர்ன் அடிக்கலாம்னு முடிவு பண்ணி போனேன். ஹோட்டல்ல தங்கியிருந்தேன். அந்த நாளும் வந்தது. என் நண்பன் சொன்னான்: ‘சச்சின் வர்றது ஆல்மோஸ்ட் கன்ஃபர்ம் ஆயிடுச்சு. ஏழரைக்கு ஃப்ளைட்”ன்னு. டைமே ஏழரையா? அதுசரின்னு நெனைச்சுட்டேன். ஏழரை, எட்டு, எட்டரை, ஒம்பது.. ம்ஹூம். என் ஃபெரெண்டுகிட்டேர்ந்து ஒரு ஃபோனும் வர்ல. ரெண்டு மூணு வாட்டி ஃபோன் பண்ணினேன். ரிங் போகுது எடுக்கல. திடீர்னு சுவிட்ச் ஆஃப். ஆஹா’ன்னு கமுந்தடிச்சு படுக்கப் போனா, ஹோட்டல் ரூமுக்கு ஃபோன். எடுத்தா அவன்தான். ‘சீக்கிரம் கீழ வாடா. ரிசப்ஷன்லதான் இருக்கேன்’ன்னு.
அவசர அவசரமா ஓடினா அவன் என்னை இழுத்துட்டு வெளில நின்னுட்டிருந்த காரைப் பார்த்து ஓடி, கார்க்கதவைத் திறந்து என்னை தள்ளி, அவன் முன்னாடி ஏறிட்டான். “எங்கடா இப்படி அவசரமா கூட்டீட்டு போற? சச்சின் வந்தாச்சா வர்லியா”ன்னு கேட்டேன். “உஷ்ஷ்ஷ்ஷ்”ன்னு கத்தினவன் பின்சீட்ல என் பக்கத்துல இருந்தவர்கிட்ட “ஸாரி ஸார்”ன்னு சொல்லும்போதுதான் அவரைப் பார்த்தேன்.
சச்சின்!
ஏர்போர்ட்டுக்கு அவருக்கு அனுப்பின கார் ப்ரேக் டவுன் ஆகவும், இவனை கார்ல் அனுப்பிருக்காங்க. போற வழிலதான் என் ஃப்ரெண்ட் தங்கீருக்கற ஹோட்டல் இருக்கு’ன்னுருக்கான். அதுக்கு சச்சின் ‘வரட்டும் நோ ப்ராப்ளம்”னுருக்காரு, அதுமட்டுமில்லாம “டோண்ட் டெல் நவ். வி வில் பிக் அப் ஹிம் அண்ட் லெட்டஸ் கிவ் ஹிம் எ சர்ப்ரைஸ்”ன்னிருக்காரு.

என்ன ஒரு மனுஷன். அந்த இருவது நிமிட கார் பயணமும் விடிய விடிய ஷூட்டிங்கில் அவரோடு இருந்த அனுபவமும். அவர்கிட்ட வாங்கின ஆட்டோக்ராஃபும்.... மறக்கமுடிகிற விஷயமா என்ன!
***********************************
ப்ரகாஷ்ராஜ் எனும் அற்புதக் கலைஞன் சந்திப்பு
ஈஷா யோக மையம் சார்பாக திருப்பூரில் 25000 மரக்கன்றுகள் நடும்விழா. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் எங்கள் முதலாளியின் கெஸ்ட் ஹவுசில் தங்குவதாக ஏற்பாடு. சத்குரு அவர்கள் இங்கே தங்கியிருக்கும் விஷயமறிந்த பிரகாஷ்ராஜ் அதிகாலை அந்த கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். உடன் வந்தவரிடம் நான்தான் முகவரி சொல்கிறேன். வாசலுக்கு வந்து வரவேற்கிறேன். ‘ஹாய் செல்லம்’ என்றபடி இறங்குகிறான் அந்த மகா கலைஞன். உடன் ஸ்ரேயா. அந்த வாரம்தான் கந்தசாமி வந்த வாரம்.
’யார் வீடு இது.. இவ்வளவு அழகாய்.. நேர்த்தியாய் என்று கேட்கிறார். நான் ஆங்கிலத்தில் பேச் ஆரம்பிக்கிறேன். “உங்களுக்கு தமிழ் தெரியும்னா அதுலயே பேசலாம். எனக்கு அதுதான் பிடிக்கும்” என்கிறார். சந்தோஷமாய் பேசுகிறேன்.
இரண்டு மணிநேரம் அந்த விழாவுக்குப் போய் வந்ததுபோக, மற்ற நேரம் முழுவதும் எங்களோடு கழித்தார்கள். பழகுவதற்கு இனியவராய் இருந்த அந்தக் கலைஞன் தேசியவிருதுகளுக்கு அப்பாற்பட்ட கலைஞன் என்பதை மட்டும் அறிந்தேன்.
*******************
இளையராஜாவுடன் ஒரு அலைபேசிப் பாடல்
இது நெஜமா நடந்ததான்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. மூணு நாலு மாசத்துக்கு முந்தி ஒரு நாள். என் சென்னை நண்பர் கூப்டாரு. “கிருஷ்ணா.. அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ இந்தப் பாட்டை பாடமுடியுமா?” ன்னு கேட்டாரு. உடனே நாலைஞ்சு வரி பாடினேன்.
உடனே அவரு ‘இப்ப இல்லை. கரெக்டா காலைல ஏழரைக்கு. (இங்கயுமா ஏழரை?) சார் ஏழு மணிக்கு ஸ்டுடியோ வருவாரு. அரைமணி நேரம் கழிச்சு பாடிக்காமி. ஃபோன்ல”ன்னார். “யாருக்கு பாடிக்காட்டணும்? அவரென்ன இளையராஜாவா பாடிக்காட்ட?’ன்னு கிண்டலா கேட்டேன். அவர் “ஆமா ராஜா சாருக்குத்தான்”ன்னாரு பாருங்க. தூக்கி வாரிப்போட்டுது எனக்கு! ரெண்டு மாசம் கழிச்சு துபாய்ல ஏதோ ஷோ இருக்காம். அதுக்கு இந்தப் பாட்டை மட்டும் பாட ஒரு புது வாய்ஸ் கேட்கணும்னாரு”ன்னார். சும்மா சொல்றாரு போலன்னு நெனைச்சேன்.
ஆனா கரெக்டா அடுத்த நாள் கூப்டுட்டார் அந்த நண்பர். ரொம்ப மரியாதையா – மெல்லிசா - பேசினாரு. “இரு சார்கிட்ட தர்றேன்னான்” எனக்கு ஒரு மண்ணும் புரியல. பேசாம இருந்தேன். திடீர்னு அவரோட கரகர மேஜிக் வாய்ஸ்..“பாடு தம்பி”ன்னுது. அவ்ளோதான்.. தொண்டைலேர்ந்து வெறும் காத்துதான் எனக்கு வந்தது. சமாளிச்சுட்டு ‘அமுதே தமிழே’ன்னு ஆரம்பிச்சேன். ரெண்டே வரிதான். ‘சரணம் பாடு’ன்னாரு. ‘தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்...’ன்னு ஆரம்பிச்சேன். ‘போதும் போதும்ப்பா’ன்னுட்டு இந்தான்னு என் ஃப்ரெண்டுகிட்ட ஃபோனைக் குடுத்துட்டாரு.
ரெண்டு மணிநேரம் கழிச்சு என் ஃப்ரெண்டு ஃபோன் பண்ணி “ஸாரிப்பா. ராஜா சாருக்கு திருப்திப்படல”னாரு. போய்த் தொலையுது. எப்பேர்ப்பட்ட கலைஞன்கிட்ட பேசினேன் நான்-ங்கற சந்தோஷம் போதாதா எனக்கு!
2010ல?
ஒரே ஒரு ஆசைதான்.
இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி, எல்லாமே சொல்லிக்கறா மாதிரி நடக்கணும். அவ்ளோதாங்க!
.