Showing posts with label tamil short story. Show all posts
Showing posts with label tamil short story. Show all posts

Saturday, January 19, 2013

சார்பு -சிறுகதை

“ஏங்க கேஸ் புக் பண்ணச் சொல்லி எவ்ளோ நாளாச்சு? இன்னும் பண்லியா?”

"இல்ல”

“நாலு நாளா சொல்லிகிட்டிருக்கேன். ஒரு ஃபோன் பண்ணி புக் பண்ண முடியலயா?”

“கடுப்பைக் கெளப்பாத. எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா? ஒவ்வொரு தடவையும் என்கிட்டயே சொல்லாட்டி என்ன? வீட்லதான் ஃபோன் இருக்குல்ல? கேஸ் புக் எடுத்து, நம்பர் பார்த்து ஃபோன் பண்ணி ஆர்டர் பண்ணிக்கறதுக்கென்ன? இனிமே இதையெல்லாம் சொல்லிகிட்டே இருக்காதே. நீயே பண்ணக் கத்துக்கோ”


----------------------------

“சண்டே என்ன ப்ரோக்ராம்ங்க?”

“தெரியல. வேலை இருந்தாலும் இருக்கும். ஏன்?”

“டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போகணும். கொஞ்சம் திங்க்ஸ்லாம் வாங்கணும்”

“எத்தனை வாட்டிப்பா சொல்றது? ஒவ்வொண்ணுக்கும் நான் வேணும் ஒனக்கு. பஸ் ஸ்டாப் - இதோ - இங்க இருக்கு. ஏதோ ஒரு நாள் மதியம் போனா ஈவ்னிங் வாங்கீட்டு வந்துடலாம். எனக்கு ஆஃபீஸ்ல ஏகப்பட்ட வேலை இருக்கு. என்னையே எதிர்பார்க்காதே”

------------------------

“ஏங்க.. தண்ணி வர்லிங்க”

“ஏன்? என்னாச்சு? மோட்டர் போடலியா?”

“கீழ்வீட்டுக்காரங்க பொங்கல் லீவுக்குப் போய்ட்டாங்க. நீங்க வேற ஆஃபீஸ் போய்ட்டீங்க. இன்னைக்கு மோட்டர் போடல”

“அதான் அன்னைலேர்ந்து சொல்லிகிட்டிருக்கேன். நம்ம டேங்க் எது, லிவரை எப்படிப் பார்த்து திருப்பி வைக்கணும் எல்லாம் சொல்லித்தர்றேன் வா-ன்னு. வேணாம் வேணாம்ன. இப்பப்பாரு. தண்ணியில்லாம... நான் இருக்கறப்ப கரண்ட் இருக்காது. நீயா எதையும் செய்யக் கத்துக்கவே மாட்டியா? ச்சே!”

-----------------------

“அயர்ன் பண்ண வேண்டிய ட்ரெஸ் கட்டைப்பையில வெச்சிருக்கேன். போறப்ப குடுத்துட்டுப் போய்டுங்க”

“எட்டரைக்கு நான் ஆஃபீஸ்ல இருக்கணும். இதையெல்லாம் நாந்தான் பண்ணணுமா?”

“ஏங்க.. அவ்ளோ பெரிய பையை எப்டிங்க கொண்டுபோறது நான்?”

“ஆமா... இவ்ளோ சேரற வரைக்கும் விட்டுட்டு என்னை வேலை வாங்கு. எத்தனை வாட்டி சொல்லீருக்கேன். நாலைஞ்சு சேர்ந்த உடனே, இப்டி பொடிநடையா போய் குடுத்துட்டு வந்துடு.., எனக்கெப்ப நேரமிருக்கும்னு தெரியாதுன்னு. கேட்கறதே இல்ல நீ. நானே எல்லாம் பண்ணணும்... ச்சே”

------------------

“ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே-க்கு வரச் சொல்லிருக்காங்க. வருவீங்கதானே?”

“தெரியல. வேலை எப்டி இருக்கும்னு..”

“தெரியலையா? அப்ப நான் தனியா போகணுமா?”

“ஆரம்பிச்சுட்டியா? தனியா ஒண்ணும் போகவேண்டாம். நிறைய பேர் வருவாங்க பஸ்ல. போய்ப் பழகு”

“டீச்சர்ஸ் எதாவது சொல்லுவாங்க புள்ளைங்களைப் பத்தி. நீங்க வந்து கேட்டா...”

“ஏன் இப்டி பயந்துக்கறே? ஒண்ணும் ஆகாது. ஒரு மீட் நீ தனியாத்தான் போய்ப்பாரு.. என்னையே எதிர்பார்க்காம..”

----------------------

“ஸ்ஸ்ஸ்ஸ்.....”

“அச்சச்சோ.. என்னாச்சுங்க?”

“மொளகாயக் கடிச்சுட்டேன்”

“சீக்கிரம் தண்ணியக் குடிங்க”

“கிச்சன்லேர்ந்தே ஆர்டர் போடு. வா.. வாட்டர் பாட்டிலை வந்து எடுத்துக்குடு. சாப்பிடறப்ப பக்கத்துல வெச்சா என்னவாம்? நானேவா எடுத்துக்க முடியும்?”

அவள் வந்து எடுத்துக் கொடுத்த வாட்டர் பாட்டில், அவனிடமிருந்து ஐந்தடி தூரத்தில் ஒரு ஸ்டூலில் இருந்தது.

--------


Wednesday, December 23, 2009

சேட்டைக்காரன்

நான் ஆசையாய் மறுபடி ஒருமுறை கண்ணாடியில் என் மீசையைப் பார்த்துவிட்டு - மழிக்கத் துவங்கினேன்.

இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?

அந்த விபரம் கூறுமுன் - என்னைப் பற்றிக் கொஞ்சம்...

சார்லி. சிறுவயதில் முதல் மகனாய் என்னைப் பெற்ற உடன் இறந்துவிட்ட அம்மா, நான் கல்லூரியில் படிக்கும்போதே கிராமத்தில் இறந்த அப்பா... இதெல்லாம் உங்களுக்கு போரடிக்கும்.

நான் கல்லூரிப்படிப்பு முடிந்து எத்தனையோ இண்டர்வ்யூக்களுக்குப் போயும் வேலை கிடைக்கவில்லை என்றுதான் தொழிலதிபர் கார்வண்ணனைச் சந்திக்க முடிவெடுத்தேன். வெளியே அவர் அந்தத் தொழில் செய்கிறார், இந்தத் தொழில் செய்கிறார் என்று பெயர் கொஞ்சம் ரிப்பேரானவர்தான் என்றாலும் அவரிடம் சென்று என் நிலையை எடுத்துக் கூறினால் அவருக்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏதாவதொரு வேலை தருவாரென்ற நம்பிக்கையில் நேற்று அவர் பங்களாவிற்குப் போனேன்.

வாட்ச்மேன், தோட்டக்காரனுடன் சமையல்காரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்க டபாய்த்துவிட்டு உட்புகுந்தேன்.

வேலை கேட்பது போல பவ்யமாய்ப் போனால் மதிப்பிருக்காதென்பதால், நான்கைந்து பேர் அமர்ந்திருக்கும் பெரிய போர்டிகோவில் நின்று கொண்டிருந்த வீட்டு வேலைக்காரன் ஒருவனிடம் ‘சார் இருக்காரா?’ என்று கேட்டேன்.

யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியே வந்தபிறகு பார்க்கலாமென்று அவன் சொல்லவே, சும்மா அந்தக் கட்டத்தில் உலாவினேன்.

அப்போதுதான் - ஒரு அறையின் கொஞ்சமாய்த் திறந்த ஜன்னலூடே அந்த சம்பாஷணை கேட்டது.

“மிஸ்டர் கார்வண்ணன்.. இது எட்டு லட்ச ரூபாய் விவகாரம். நாளைக்கு கோல்டன் ஹார்வெஸ்டுக்கு யாரை அனுப்பறீங்க?”

“நீங்க கவலையே படாதீங்க பெரிய நாயகம். நான் காலைல எட்டு மணிக்கு மணிமாறனை அனுப்பறேன். கழுத்துல நங்கூரம் டிசைன் செஞ்ச தங்க செய்ன் போட்டிருப்பான். மீசை இருக்காது. அதுவுமில்லாம நாந்தான் சொன்னேனே... ஆள் வந்த உடனே ‘வெல்கம்’ ன்னு நீங்க சொல்லுங்க. அவன் உடனே வேறெதுவும் சொல்லாம ‘யெஸ் வி கேன்’ன்னு சொல்லுவான். அதான் நமக்குள்ள கோடிங். வழக்கம்போல ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுதானே.. பணத்தை குடுங்க. சரக்கு அடுத்த நாளே வந்து சேரும்”

-அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை நான். நங்கூர டாலருடன் செய்ன் ரெடி பண்ண வேண்டுமே!

புரிந்ததல்லவா என் திட்டம்? வேலையத் தேடி வேட்டைக்காரனாக இருப்பதை விட, ஒரே நாள் சேட்டைக்காரனாகி எட்டு லட்சத்தை கைப்படுத்த முடிவெடுத்தேன். இரவோடிரவாக செய்ன் ரெடி செய்துவிட்டேன். இதோ காலை ஏழு மணி. மீசையையும் எடுத்தாயிற்று. அவன் எட்டு மணிக்குத்தானே போவான்.. கொஞ்சம் முந்திச் சென்று எட்டு லட்சத்தை லபக்கி வரலாமென்று புறப்பட்டேன்.

***

ஹோட்டல் கோல்டன் ஹார்வெஸ்ட் பணக்காரத் திமிருடன் இருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த நூற்றி ஒன்றைத் தேடிப் போய்த் தட்டினேன்.

கதவு திறந்து ‘வெல்கம்’ என்றார் அந்த யாரோ.

உடனே ஞாபகமாய் ‘யெஸ் வி கேன்’ என்றேன்.

“நீதான் மணிமாறனா? கார்வண்ணனோட ரைட் ஹாண்ட்?”

“யெஸ்” பந்தாவாய் சொல்லியபடி நங்கூர டிசைன் செய்னை காஷுவாலாக எடுத்து டீ ஷர்டின் வெளியே விட்டேன். ‘இந்தா எட்டு லட்சம்’ என்று பெட்டியைத் தருவாரென எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ-




“யுவார் அண்டர் அரெஸ்ட்” என்றார் சினிமா க்ளைமாக்ஸ் போல.

திடுக்கிடலோடு ஓட நினைத்துத் திரும்பினேன்.

போட்டிருந்த காக்கி உடைக்கு விசுவாசமாய் கறுப்பு ராட்சஷனை கையிலேந்தி இருவர் நின்றிருந்தனர்.

***

“சொல்லுடா.. எங்களுக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீ ஏழு கொலை பண்ணிருக்க... அது போக கார்வண்ணனோட சேர்ந்து வேற என்னென்ன சமூக விரோதம்லாம் செஞ்சிருக்க?”

என்னைப் பிடித்த அதிகாரி பின்மண்டையில் தட்டியவாறே கேட்டுக் கொண்டிருக்க, எதிரிலிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி விளக்கம் கொடுத்தார்... “நேத்து எங்களுக்குக் கிடைச்ச நியூஸ்படி நாங்க அவசரமா நைட்டே கார்வண்ணனை வீட்டுல வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிச்சுட்டோம். ஏழு கொலையையும் உன் மூலமா அவர் செஞ்சதை இன்னைக்கு அதிகாலைலதான் ஒப்புகிட்டார். கடைசியா அவர் சொன்னது நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வர்ற விஷயம் பத்தித்தான். அதுனாலதானே உன்னைப் பிடிக்க முடிஞ்சது?”

நான் ஈனமான குரலில் கதறினேன்..

“நான் கார்வண்ணனைப் பார்க்கணும். இல்லைன்னா நீங்களே அவர்கிட்ட என்னைக் கூட்டீட்டுப் போங்க. ‘இவன்தான் மணிமாறனா?’ன்னு கேளுங்க” என் குரல் உடைந்திருந்தது.

“ஏண்டா.. அவர்தான் ஜீப்லேர்ந்து குதிச்சு லாரில அடிபட்டு இறந்துட்டாரே.. டாரே என்ன இறந்துட்டானே.. அவன என்ன கூப்டறது? நீ சொல்டா நாயே..”

அவர் அடித்த அடியில் என் டீ ஷர்ட் சிவப்பானது.

ஸார்.. நீங்களாவது சொல்லுங்க சார் நான் மணிமாறனில்லை, சார்லீன்னு....


.

(நான் எத்தனையோ வருடங்களுக்கு முன்னெழுதி பத்திரிகையொன்றில் வந்த கதை. கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து டாபிகல் தலைப்போடு.. இங்கு.
)

.

Thursday, October 22, 2009

Butterfly Effect - சிறுகதை


வாட்சைப் பார்த்தேன். மணி எட்டேமுக்கால் என்றது. அலுவலகத்திலிருந்து கிளம்பி, பஸ் ஸ்டாப் போனேன். உமா வேலை முடிந்து பஸ்ஸில் வந்திறங்கி, எனக்காக காத்துக்கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்.

வீட்டினுள் சென்றதும் வீடு இருந்த கோலத்தைக் கண்டு முகம் மாறினாள்.


"மீரா”

“என்னம்மா?”

“ஆறாங்க்ளாஸ் போற நீ... இன்னும் சின்னக் குழந்தை மாதிரி வீட்ல ஒரு வேலையும் செய்யாம வீட்டை எப்படி வெச்சிருக்க பாரு.”

“இல்லம்மா.. ஹோம் வொர்க் செய்ய லேட் ஆயிடுச்சு.. அதுமில்லாம ஏழு மணிக்கு போன கரண்ட் இப்போதாம்மா வந்தது..”



"இங்க பாரு.. டீப்பாய் எந்த இடத்துல இருக்குன்னு.. ஏன் இப்படி நடுக்கூடத்துக்கு வந்துது?"



"இல்லம்மா, கரண்ட் போனப்ப எமர்ஜன்சி லைட்-கிட்ட வெச்சு எழுதறதுக்காக நான்தான் தள்ளி வெச்சேன்"



"ஐயோ... என்னடி இது டிரெஸ்ஸை கழ்ட்டி வாஷிங் மிஷின்ல போடாம இப்படி பெட் மேல போட்டு வெச்சிருக்க?"



"இதோ.. எடுத்துப் போட்டுடறேன்மா"



உமா ஒவ்வொன்றாகத் திட்ட மீரா பயத்துடனும், நடுக்கத்துடனும் அவள் சொன்ன வேலைகளை செய்து கொண்டே இருந்தாள்.



எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. சின்னவள் மேகா எங்கே அடுத்து தனக்கு ஏதாவது திட்டு விழுமோ என்று பரிதாபமாக அக்கா செய்யும் வேலைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.


உடை மாற்றி விட்டு சமையலறைக்குள் போன உமா மீண்டும் "மீரா" என கத்தினாள்.



இந்தமுறை மீரா வந்து நின்றபோது அவள் கால்கள் நடுங்கியதை நான் கவனித்தேன்.



"எ..எ..என்னம்மா" மீராவின் குரல் உடைந்திருந்தது.



"லஞ்ச் பாக்சைகூட க்ளியர் பண்லியா நீ?"



"அம்.. அம்மா.. ப்ளீஸ்மா.. ஒரு பத்து நிமிஷம் சோபால உக்காரும்மா. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிடறேன்"



"போ.. மீரா" வெறுப்புடன் சொல்லிவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு சோபாவில் போய் அமர்ந்த அம்மாவைப் பார்த்து கண்ணில் நீர்வர நின்றுகொண்டிருந்தாள் மீரா.



"ஏம்ப்பா.. குழ்ந்தையை திட்டற?" நான் வாய் திறந்தேன்.



"காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கெல்லாம் ரெடி பண்ணிட்டு ஏழு மணிக்கு கிளம்பி வேலைக்குப் போய், நைட் ஒம்பது மணிக்கு வந்து வீடு இந்தக் கோலத்துல இருந்தா நான் பேசாம இருக்கணும். அப்படித்தானே?"



நான் ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டேன்.



மீரா டிபன் பாக்சை சிங்க்-ல் போட்டுவிட்டு, வீடு முழுவதும் பெருக்கினாள். அம்மாவின் பக்கமே செல்லாமல் அக்கா பின்னாலேயே நடந்து, அவள் கூட்டும் போது, அங்கங்கே இருக்கும் பொருட்களை எடுத்து வைத்து உதவிக் கொண்டிருந்தாள் மேகா.



அவள் எல்லா வேலைகளையும் செய்து விட்டு சோபாவில் கண்மூடிப் படுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் போய்.. "அம்மா.. எழுந்திரும்மா.." என்று எழுப்பினாள். உமா எழுந்து சமையலறை சென்றுவிட, தனியாக நின்று கொண்டிருந்த மீராவை என்னருகில் அழைத்து அமரச் சொன்னேன்.



"ஏன் குட்டிம்மா.. எப்பவுமே அம்மாகிட்ட எவ்ளோ நல்ல பேர் வாங்குவ.. இன்னைக்கு ஏன் இப்படி திட்டு வாங்கற?"



நான் கேட்டதை கவனிக்காமல் அவள் கண்கள் எங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.. அவள் கண்கள் பார்த்த திசையை நோக்கினேன்..



ஒரு பட்டாம்பூச்சி வீடு முழுவதும் சுற்றுவதும், ட்யூப்லைட்-ல் அமர்வதுமாய் விளையாடிக் கொண்டிருந்தது.



"மீரா" நான் அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயற்சித்தேன்..



"என்னப்பா"


"ஏன்ப்பா இப்படி அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கற-ன்னு கேட்டேன்"

"இல்லப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு, ட்யூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் இதெல்லாம் பண்ணீடுவேன். இன்னைக்கு என்னாச்சுன்னா.." சொல்லிக் கொண்டே வந்தவள் திடீரென கண்கள் விரிய..


"மேகா.. மேகா. அங்க பாரு அந்த பட்டர்ப்ளை உன்னோட ஸ்கூல்பேக்-ல உக்காந்துடுச்சு"


"ஐ!" - மேகா உற்சாகமானாள்.


"இன்னைக்கு என்னாச்சு? என்னமோ சொல்ல வந்த?"


"இதோ.. இந்த பட்டர்ப்ளை இருக்குல்லப்பா.. அது வீட்டு முழுக்க பறந்துட்டு இருந்ததுப்பா.. அதப் பார்த்துட்டு இருந்ததுல பண்ணாம விட்டுட்டேன்ப்பா.. அதுக்கப்புறம் கரண்ட் வேற போச்சா.. பண்ண முடியல" என்றவள்...


"ஐ! மேகா.. இப்போ அது உள்ள போகுது.. என்னோட பேக்-ல உக்காருதா-ன்னு பாக்கலாம் வா" என்று எழுந்து ஓடினாள்.


எனக்கு பேச்சே வரவில்லை.

***********************

# வழக்கம் போல பதிவுகள் எழுதாததால், வழக்கம்போல இது ஒரு மீள்பதிவு.

# வழக்கம்போல பதிவுகள் நாளை வரலாம். அல்லது வழக்கம்போல வராமல் போகலாம். வழக்கம்போல வந்தாலும், அது வழக்கம்போல இல்லாமல் சற்றே சிறப்பாக இருந்தால் நலமென்பதால், வழக்கம்போல எழுதாமல் காலதாமதமாகிறது!


**************************

.

Friday, March 6, 2009

ஒரு கதை.. ஒரு கவிதை



‘எதிர் வீட்டுப் பெண் பார்ப்பாள்
சட்டையை அயர்ன் பண்ணிப் போடு’

‘பேனா எழுதவில்லை’
அதனாலென்ன பந்தாவாயிருக்கும்
பாக்கெட்டில் குத்து.

தெருவில் பார்ப்பவர்கள்
பிரமிக்க வேண்டாமா?
அசத்தும்படி உடையணி.

நண்பர்கள் கேலி செய்வார்கள்
முதலில் செருப்பை மாற்று.
‘காசிருக்கும்போது
ஒரு ஷூவும் கூலிங் க்ளாஸும்
வாங்கிவிடு’

அனைத்தையும் கவனித்த
என் உள்மனசு
பதில் சொல்லமுடியாக் கேள்வியொன்றை
எகத்தாளமாய்க் கேட்டது

‘எல்லாம் சரியப்பா..
நீ
உனக்காய் வாழ்வதெப்போ?’

-அனந்த்பாலா

(ஜூன் 1995ல் வெளியான எனது கவிதை)

***************************************************************

கைதி
அவன் ஏறி கதவைச் சாத்திக் கொண்டதும், நான் கியரை மாற்றி காரை விரட்டியபடி அவனை ஆராய்ந்தேன்.

க்ரே கலர் ஷர்ட்டை-கறுப்பு ஜீன்ஸுக்குள் திணித்திருந்தான். காலில் சாதாரண ஹவாய் ஸ்லிப்பர். கழுத்தில் ஒற்றைச் சங்கிலி. வலது கையில் பிடித்திருந்த வெள்ளை பெட்ரோல் கேனை காலுக்கடியில் வைத்தபடி – ஸ்டியரிங் பிடித்திருந்த என்னை ஏறிட்டான்.

“நல்லவேளை... நீங்க நிறுத்தினீங்க” – அவன் குரலில் அசாதாரண முரட்டுத்தனம் இருந்தது. “என் கார் உள்ளே – மண்ல நின்னுடுச்சு”

“ரேடியோ போடலாங்களா?” என்றான்.

கார் ரேடியோவை ஆன் செய்தேன்.

“தனியாவா வந்தீங்க?” கேட்டேன்.

“ஆமாங்க” என்றவன் “ஹோட்டல் எதுனா இருந்தா நிறுத்துங்க. தலை வலிக்குது. காபி சாப்பிட்டுட்டு போகலாம்”

நான் ரேடியோவை செவிமடுத்தேன்.

“கோவை ஜெயிலிலிருந்து தூக்கு தண்டனைக் கைதி ஆரிஸ்பாபு நேற்றிரவு தப்பிவிட்டான்” என்ற செய்தியோடு ஆரிஸ்பாபுவின் அங்க அடையாளங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அவனைப் பார்த்தேன்.

எனக்குள் அந்தச் சந்தேகம் துளிர்விட்டது.

ஒருவேளை.. இவன்....

“சார்... அதோ ஒரு ஹோட்டல்..” என்றான் அவன். ஹோட்டல் கேட்டினுள் செலுத்தினேன்.

எதிர் எதிராய் டேபிளில் அமர்ந்தோம். எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்த அவனை நோக்கினேன்.

“இப்ப வர்றேன்” என்று எழுந்தான்.

எனக்குள் எதுவோ ‘கிறீச்’சிட்டது.

இவன்... இவன்....

நான் எழுந்து அவன் கண்ணில் படாதவாறு வெளியே வந்தேன். காரை ஸ்டார்ட் செய்தபோது...

அந்த க்ரே ஷர்ட்-கறுப்பு ஜீன்ஸ்காரன் சிரித்தபடி கையில் துப்பாக்கி பிடித்து நின்றிருந்தான்.

“உன்னைத் தேடித்தாண்டா காட்டுக்குள்ள போனேன். பெட்ரோல் தீர்ந்துடுச்சுன்னு ரோட்டுக்கு வந்தா, நீயா மாட்டிகிட்ட. கட்டிங் பண்ணி, கண்ணாடி மாட்டி திருட்டுக் கார்ல வந்தா அடையாளம் மாறிடுமா? இப்ப ஓடப் பார்த்தா ‘ஆரிஸ்பாபு சுடப்பட்டு இறந்தான்’னு காலைல நியூஸ் வரும்” – என்றான்.

நான் மெனமாய்- விலங்கிற்காய் - கை நீட்டினேன்.

(ஜனவரி 1996ல் வெளியான எனது கதை)