Friday, October 31, 2008

ஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?

‘எதை எழுதறதுன்னாலும் நீட்டி முழக்கித்தான் எழுதுவியா? சுருக்கமா, சூப்பரா ச்சின்னப்பையன் மாதிரி எழுதத் தெரியாதா ஒனக்கு?’ - இது என்னைப் பார்த்து என் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி. அவருகிட்ட பதிவுலகம் பத்தி சொல்லி, நான் படிக்கற பதிவுகள் சிலதைச் சொல்லி, இதையெல்லாம் படிங்கன்னு சொல்லியிருந்தேன். இப்ப எனக்கே அவரு ஆப்பு வைக்கறாரு. சரி... உண்மையைச் சொன்னா ஒத்துக்கத்தானே வேணும்!

*****************************

ம்யூசிக் சேனல்கள்ல ஃபோன்ல நேயர்கள் கூப்பிடறதும், காம்பியரர்ஸ் அதுக்கு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுகிட்டே வழக்கமான பேச்சுகளை பேசறதையும் பார்க்கறப்போ பல சமயம் கடுப்பாகுது. யாராவது நேயர்கள் வித்தியாசமா பேசமாட்டாங்களான்னு எதிர்பார்ப்பு வருது.

கீழ்க்கண்ட மாதிரியான உரையாடல்கள் வராதான்னு ஏக்கமா இருக்கு...


********************

தொகுப்பாளினி: “யாருக்கு வாழ்த்துச் சொல்லணும்?”

நேயர்: “என் பேரு ஆறுமுகம். ஆறுமுகம்ங்கற பேர் இருக்கற எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லணும்!”

*********************

தொகுப்பாளினி: “உங்க டி.வி. வால்யூமைக் கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன்”

நேயர்: “சரிங்க..” என்றுவிட்டு வீட்டில் சொல்கிறார். மனைவியின் குரல் கேட்கிறது.. “நீங்க அவகூட கடலை போடறதுக்கு நான் எதுக்கு சவுண்டைக் கம்மி பண்ணனும்?”

நேயர் ஃபோனைத் துண்டிக்கும் ஒலி கேட்க, தொகுப்பாளினி வழிகிறார்.

**********************

தொகுப்பாளினி: “உங்களுக்கு என்ன பாட்டு வேணும்”

நேயர்: “எந்தப் பாட்டும் வேண்டாம். ஒரு பாட்டு ஒளிபரப்பாகற அஞ்சு நிமிஷத்துக்கு உங்க சேனல்ல ஒண்ணுமே ஒளிபரப்பாம ப்ளாங்கா காமிங்களேன். ப்ளீஸ்..”

************************

நேயர்: “ஹலோ...”

தொகுப்பாளினி: “ஹலோ”

நேயர்: “ஹலோ”

தொ: “ஹலோ.. சொல்லுங்க. கேக்குது. சன் ம்யூசிக் ஹலோ உங்களுடன்”

நேயர்: “என்னது.. சன் ம்யூசிக்கா?”

தொ: “ஆமாங்க. நான் ப்ரியா பேசறேன்’

நேயர்: “ஸாரிங்க. தப்பா டயல் பண்ணீட்டேன்” என்றுவிட்டு டொக்கென்று தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்.

***********************
இது பத்தி பேசும்போது நம்ம தல சுஜாதா எழுதினதுதான் ஞாபகத்துக்கு வருது..

தொகுப்பாளினி: “ஹலோ.. நான் ப்ரியா பேசறேன்”

நேயர்: “ஹலோ... ப்ரியாவா? ஐயோ நம்பவே முடியலைங்க. நான் உங்களை நாலஞ்சு வருஷமா ட்ரை பண்றேன். இப்போதான் லைன் கிடைச்சது...”

Wednesday, October 29, 2008

I AM BACK!


தீபாவளிக்கு என்ன ப்ரோக்ராம்? (தொலைக்காட்சியில் அல்ல. வீட்டில் கேட்ட

கேள்வி)

சனிக்கிழமை கோவை போய் மச்சினன் வீட்டில இருந்துட்டு, ஞாயிற்றுக்கிழமை உடுமலைப்பேட்டை போய் ரெண்டு நாள் இருந்துவிட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பி வரலாம் என்று முடிவானது. (முடிவானது-ங்கறதிலிருந்தே யாரோட முடிவுன்னு தெரிஞ்சிருக்கும்)

இரண்டு நாட்கள் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் என் அலைபேசி இருந்ததால் நானும், ஐந்து நாட்கள் நான் வலைப்பதிவுகள் பக்கம் வராததால் நீங்களும் நலமாயிருந்தது நாடறிந்த விஷயம்!
**************************************

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிவகுமாரின் பெண்மை பற்றிய பேச்சை விஜய் டி.வி-யில் கேட்டேன். (கொடுமை என்னவென்றால் அந்த நிகழ்ச்சி திருப்பூரில்தான் பதிவானது. நேரில் பார்க்கவில்லை!) அப்புறம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி. ஜெயாமேக்ஸிலும், இசையருவியிலும் மாறி மாறிப் பார்த்தேன். ஜெயா மேக்ஸில் ஹரிஹரனின் ஒரு நிகழ்ச்சி! (அபாரமாக இருந்தது! பாடிய எல்லாமே Rare Hits!) மக்கள் டி.வி-யில் புதிய கோணங்கிகளும், சந்தானத்தின் காமெடிகளும்!
*********************************************

கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!

எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...

என்ன கொடுமை குருவாயூரப்பா இது?
****************************

அண்மையில் ஒரு பள்ளிக் கூடத்துக்கு சில தகவல்களுக்காகச் சென்றிருந்தோம், அடிப்படைக் கழிப்பிடவசதி இல்லாமல் இருந்தது. தமிழகத்தின் பல அரசு பள்ளிக்கூடங்களின் கதி இது என்று என்னோடு வந்தவர் புலம்ப, மற்றொருவர் சொன்னார். தமிழகமல்ல. இந்தியா முழுவதும் அரசு பள்ளிகள் ஒரே மாதிரிதான் என்றார்.

‘டாய்லெட் கட்டிக் கொடுக்க யாரும் முன்வரவில்லையா’ என்று கேட்டதற்கு தலைமை ஆசிரியர் சொன்னார்:-

“பக்கத்துல உள்ள சில நிறுவனங்கள் ஐந்தாறு வகுப்பறைகள் கட்டித் தரதா சொல்லிருக்காங்க”

“அதுதான் ஓரளவு போதுமானதா இருக்கே. வகுப்பறைகளுக்குப் பதிலா கழிப்பறகள் கட்டித்தரச் சொல்லிக் கேட்கலாமே”

“கேட்டோம். அவங்க ஒத்துக்கொள்ளவில்லை”

“ஏன்”

“வகுப்பறைகள் கட்டி முன்னாடி அவங்க நிறுவனத்தோட பேர் போடணுமாம். கழிப்பறை கட்டினா அதுல பேர் போடறது நல்லாயிருக்காதாம்”

எங்களுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
***********************************

பெரிய அரசியல் தலைவர்கள் பிறந்தநாள்கள் வரும்போதெல்லாம், ‘அந்தக் காலத்துல இவர் மிகவும் நேர்மையாக இருந்தார்’ என்று சொல்லி ஏதேனும் சம்பவத்தை உதாரணமாகக் காட்டுவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும்:

எனக்குத் தெரிந்து ஒரு ஊரின் சப்-ரெஜிஸ்ட்ரார் வரும் மக்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பார். தனது அலைபேசி எண்ணை அலுவலகம் எங்கும் ஒட்டி வைத்திருப்பார். எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள் என்பார். பத்திரம் பதிய வருபவர்கள் கைகட்டி நின்றால் “ஏன் பெரியவரே என்னைப் பாவத்தை சுமக்க வைக்கறீங்க? கையைக் கட்டாதீங்க’ என்பார். பொதுமக்கள் யாரும் நிற்கக் கூடாது. உட்காரணும் என்பார். நடுவே டீ சாப்பிட வெளியே போகும்போது, பத்திரம் பதிய வந்திருக்கும் ஏதாவது பொதுஜனத்தின் தோளில் கைபோட்டுக் கொண்டு ‘வாய்யா, டீ சாப்பிடலாம்’ என்று போவார்.

அவரது நடவடிக்கைகளால் மிகவும் கவரப்பட்டு, அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். பிறிதொரு நாளில் ஒரு ஹோட்டல் முன் அவரைச் சந்தித்த போது நான்தான் அந்தக் கடிதம் அனுப்பியவன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு “உங்களைப் பற்றி சொல்லுங்களேன். பத்திரிகைல போடணும்” என்று சொன்னதற்கு பதறி “ஐயையோ.. வேணாம் தம்பி. பிரச்சினை வந்துடும். இப்படியெல்லாம் நான் பண்றது யாருக்கும் பிடிக்காது” என்று மறுத்துவிட்டார்!

‘இந்தக் காலத்துல நல்லவனா இருக்கறதுக்குப் பயப்பட வேண்டியிருக்கு’ என்று நினைத்துக் கொண்டே விடைபெற்றேன்.

ஓரிருவாரங்களுக்கு பிறகு அந்த ஊர்ப்பக்கம் போனபோது பத்திர ஆஃபீஸுக்குப் போனேன். முன்னால் போடப்பட்டிருந்த பெஞ்சுகள் எல்லாம் காணாமல் போய், சூழலே மாறியிருந்தது. அந்த மனிதரின் பேரைச் சொல்லிக் கேட்டபோது ஒரு உதவியாளன் பீடியைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து வாயில் வைத்தபடி கேட்டான். “அந்தாளு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வெகு நாளாச்சு. ஒனக்கு என்ன வேணும்?”

“நீதி வேணும். அவரை ஏன் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினாங்க? ” என்று நினைத்தவாறே.. “ஒண்ணுமில்ல” என்று புறப்பட்டேன்.
**************************

எங்க ஊருக்குப் போயிருந்தப்ப கிளி ஜோசியம் பார்க்கறவர்கிட்ட போன எலக்‌ஷனப்ப பேசிகிட்டிருந்தது ஞாபகம் வந்தது. சும்மா பேசிகிட்டிருக்கறப்ப ‘விருத்தாச்சலமும் வி, விஜயகாந்தும் வி. அதுனால அங்க விஜயகாந்த்தான் ஜெயிப்பாரு’ன்னு சொல்லி, அதே மாதிரி ஆனப்ப கிழிஞ்சு போன காலரை இதுக்காகவே மாத்தி, தூக்கிவிட்டுகிட்டிருந்தாரு.

போனவாரம் அவரைப் பார்த்து, ‘இப்போ அதே தொகுதில வடிவேலுவும் நிக்கப் போறதா சொல்லியிருக்காரே. அவரும் வி-தானே?’ன்னு கேட்டுவெச்சேன்.
‘கிளி லீவு. நாளைக்கு வாங்க. சொல்றேன்’ன்னு தப்பிச்சுட்டாரு. கிளி இன்னும் லேட்டஸ்ட் நியூஸைப் படிச்சிருக்காதுன்னு நெனைக்கறேன்.
************************************

தமிழைப் பேசி கொலை பண்றவங்க மாதிரி, எழுதிக் கொலை பண்றவங்கள்ல பலவகை. (அதுல நானும் ஒருவகையோ?) அதாவது கடைகளுக்கு முன்னாடி வைக்கற A போர்டு-ங்கற ஸ்டேண்ட் போர்டுல இடப் பிரச்சினையால எழுத்த பிரிச்சுப் பிரிச்சு எழுதறாங்க பாருங்க.. கொடுமை.

ரஞ்சனி செப்பல்ஸ்-ஐ

ரஞ்சனி
செப்
பல்
ஸ்

அப்படின்னும்,
டிஃபன் ரெடியை..

டி
பன்
ரெ
டி – ன்னும் எழுதறாங்க.

இதுலயும் கொடுமை ஒரு இடத்துல அந்த ரெடியை ஒத்தைக் கொம்பு மேல, ர கீழ், அதுக்குக் கீழ டி-ன்னு எழுதியிருக்காங்க.

எப்படிய்யா படிப்பாங்க?
*********************************

கேரளா அடிமாலியில் கடந்த மாதத்தில் ஒரு நாள் 52 பயணிகளை ஏற்றிக்கொண்டு எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் போய்க் கொண்டிருந்த பேருந்தில் ஒரு சீட் அப்படியே பெயர்ந்து பஸ்ஸுக்கு அடியில் விழுந்துவிட்டது.

அந்த சீட்டில் பயணி இருந்தாரா? பயணி இல்லை! வேறொருவர் இருந்தார்.. ட்ரைவர்!

ஆம். ட்ரைவர் சீட்தான் அப்படிப் பெயர்ந்தது!

உடனே சுதாரித்த ட்ரைவர் ஸ்டியரிங்கைப் பிடித்துத் தொங்கியபடி காலால் ப்ரேக்கை அழுத்திப் பிடித்து பயணிகளைக் காப்பாற்றிவிட்டார்!

பஸ் அப்போது ஒரு அபாயகரமான வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது என்பது கொசுறுச் செய்தி!

*******************************

பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கவிதை. எம்.எஸ்.நரேந்திரன் என்பவர் எழுதியது.. கடைசி வரியின் அர்த்தம் புரிபடுகிறதாவென யோசியுங்கள்!

வீட்டுக் கூடத்தில் துப்பாக்கி
புதுச்சேலையும் பல்லுமாய் பழைய வேலைக்காரி
ஆயில்பாத், இனிப்பு, போனஸ், லேகியம்
சின்னப்பெட்டியில் காஞ்சி சின்ன சாமியார்
பழக்கமான குரல்களுடன் வழக்கமான படிமன்றம்
சொறிந்த தலையுடன் யூனிஃபார்மில் தபால்காரன்
வெடிச்சத்தம், மழை, வாசனையுடன் புதுச்சட்டை
லெட்சுமி வெடித்த கைக்கட்டுடன் தம்பி
பக்கத்து வீடுகளுக்காகவே பட்டுடன் அம்மா
அதே கிழிந்த பனியனில் அப்பா
வீதியெங்கும் சிதறிய சிவகாசித் தாள்கள்
நாளைக்குப் பள்ளிக்குப் போகவேண்டும்.

Thursday, October 23, 2008

என் கதை!

எனக்கு கதை எழுதத் தெரியாதுன்னு இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்கு கதை எழுதத் தெரியும்னு நான் தெரிஞ்சுகிட்டது எப்போ-ன்னு யோசிச்சுப் பார்த்தேன். நாம மொத மொதல்ல லீவு லெட்டர் எழுதறோம்ல, அப்பவே கதை எழுதற பழக்கம் நமக்கு ஆரம்பிச்சாச்சுன்னு நெனைக்கறேன்!

பள்ளிக்கூடத்துல படிக்கும்போது (அல்லது பள்ளிக்கூடத்துக்கு போகும்போது..) தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.

அப்புறம் பத்திரிகைகள் படிக்கற பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து வந்தது. (பத்திரிகை படிச்சுட்டு, கல்யாணதுக்கு போவீங்களா-ன்னு பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது) அப்போவெல்லாம் வாசகர் கடிதம் மட்டும்தான் எழுதிப் போடுவேன். ரொம்பப் பிடிச்ச நாவலுக்கு, விரிவா விமர்சனம் எழுதி அனுப்புவேன்.

நமக்கு தல’ன்னா அது சந்தேகத்துக்கு இடமின்றி சுஜாதா-தான்! ஆனா அவருக்கு கடிதமெல்லாம் எழுத பயம். ஒரு பத்து தடவை எழுதி, கிழிச்சுப் போட்டிருக்கேன். அதே மாதிரி ஒரு கட்டத்துல பாலகுமாரன். என்னமோ அவர் எழுத்து படிக்கறப்ப கைகட்டிகிட்டு கேட்கறமாதிரி உணர்வு வரும். ‘காதலன்’ல எஸ்.பி.பி. கேரக்டர்தான் அவர்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். அப்போ, ரெகுலரா மாசத்துக்கு ரெண்டு, மூணு கடிதம் அவருக்கு அனுப்புவேன். ஒரு தடவை அவர், பதில் கடிதம் போட்டப்ப ‘உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் ஏன் கதை எழுதக்கூடாது?’ன்னு கேட்டிருந்தார். (இப்போ என் எழுத்துக்களை படிச்சிருந்தார்னா இதுக்கு பதில் அவருக்கு தெரிஞ்சிருக்கும்..!) ஆஹா... ஆரம்பிடா’ன்னு சகட்டு மேனிக்கு (இதுக்கு என்னங்க அர்த்தம்?) எழுத ஆரம்பிச்சேன்.

எழுதி அனுப்பின எல்லா கதையும் வந்தது.. திரும்ப போஸ்ட்ல. கூடவே ஒரு துண்டுக் கடிதமும் வைப்பாங்க. ‘இதுவே உங்கள் படைப்பு குறித்த இறுதி முடிவு அல்ல.’ (இதைவிடவும் கேவலமா எழுதுவடா நீ-ங்கறதுதான் அதுக்கு அர்த்தம்!) தொடர்ந்து முயற்சிக்கவும்’ அப்படீன்னு. அது கொஞ்சம் உற்சாகத்தைத் தரும்.

அப்போ திருப்பூர்ல ‘கரும்பு’ன்னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நூலகத்துல பார்த்தேன். அதுல கடைசி ரெண்டு, மூணு பக்கம் வெற்றுத்தாளா விட்டிருப்பாங்க. நம்ம படைப்பை எழுதலாம்.

‘அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன். நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்’ங்கறதை பிரிச்சுப் பிரிச்சு, ஆச்சர்யக்குறியோட முடிச்சு கவிதையெல்லாம் பண்ணி வெச்சிருப்பாங்க. அந்தக் கொடுமைக்கெல்லாம் நடுவுல நானும் ஒரு கொடுமையா கதை ஒண்ணை எழுதி வெச்சேன். காசா.. பணமா..

அடுத்தநாள் அதைப் போய்ப் பார்த்தப்போ, பலபேர் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. (ரெண்டு பேர்ன்னா, ‘பல’ போடலாம்ல?) ஒரே சந்தோஷமா இருந்துச்சு.

அதுக்கப்புறம் 1993ல உங்கள் ஜூனியர்ல ஒரு சிறுகதைப் போட்டி வெச்சிருந்தப்ப, அந்தக் கதையை கொஞ்சம் மெருகேத்தி அனுப்பினேன். அது ‘முள்ளுக்கும் மலர் சூடு’ங்கற தலைப்புல சிறப்புச் சிறுகதையா வந்தது.

உடுமலைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல சாரதா புக் ஸ்டால்ல ‘உங்கள் ஜூனியர்’ புத்தகத்தை வாங்கி அதுல என் கதையைப் படிச்சப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்தது. எதிர்ல வர்றவங்ககிட்டயெல்லாம் அதைக் காமிக்கணும்ன்னு தோணிச்சு. மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும்? அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா? அப்படி இருந்தது. அதுக்கடுத்து என் மனைவிக்கு முதல் தடவை பிரசவமாகி, அவங்க முகத்தைப் பார்ட்த்துட்டு வெளியே வர்றப்போ இந்த உணர்வு இருந்தது.

இதையெல்லாம் இப்போ யோசிக்கறதுக்கு காரணம், கொஞ்ச நாள் முன்னாடி என் தம்பி வந்து ஒரு பத்து பதினைஞ்சு கவர் குடுத்தான். அதுல எப்பவோ நான் பத்திரிகைகளுக்கு அனுப்பி, திரும்பி வந்த கதைகள் இருந்தது. சுஜாதா சொல்லுவார், ‘ஒரு கதையை எழுதி வெச்சுட்டு, நீங்களே ஒருவாரம், பத்துநாள் கழிச்சு படிச்சுப் பாருங்க. எங்கெங்க தப்பு பண்ணியிருக்கோம்னு தெரியும்’னு. அது எவ்ளோ சத்தியமான வார்த்தைன்னு தெரிஞ்சுது. படிக்கப் படிக்கவே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன். எந்தச் சந்தர்ப்பத்திலயும், ‘இன்னைக்கு மேட்டர் இல்ல. இதைப் போடலாம்’ன்னு தோணி, ப்ளாக்ல போட்டுடுவேனோ’ங்கற பயம்தான் காரணம்.

இப்போ வலையில எழுதறவங்கள்ல, நான் படிச்சவங்கள்ல சிறுகதையில வெண்பூவும், சாருவே, ‘இவரைப் பாருவே’ன்னு சொன்ன நர்சிம்-மும் என்னை ரொம்ப வெக்கப்பட வைக்கறாங்க. எந்தவிதமான ஐஸுக்காகவும் இதைச் சொல்லல. படிச்சவங்களுக்குத் தெரியும். ஆரம்பத்துல நான் எழுதறப்போ எனக்குள்ள இருந்த வேகம், பொறி எல்லாத்தையும் இவங்க எழுத்துல பார்க்கறப்போ அவ்ளோ சந்தோஷமாவும், பொறாமையாவும் இருக்கும். கதையெழுத ஒவ்வொரு கரு கிடைக்கறப்பவும், இதை எப்படி எழுத... எப்படி ஆரம்பிக்கன்னு யோசிச்சுட்டே இருக்கறப்போ, பணிச்சுமை, வேற டென்ஷன்னு மனசு ஒருமைப்படாம அலையறப்போ, கதையெழுதற மூடுக்கு என்னைக் கொண்டுவர்றதுக்கு, வீட்ல இருந்தா சுஜாதாவைப் படிப்பேன். சிஸ்டத்துல உட்கார்ந்திருந்தேன்னா, வெண்பூ, நர்சிம்-மோட கதைகளை மேய்வேன். அப்படி ஆய்டிச்சு!

இதெல்லாம் யோசிக்கக் காரணம், நான் மதிக்கற இன்னொரு நண்பர் ‘ஒரு கதை எழுதியிருக்கேன். உங்க பார்வைல எப்படி இருக்குன்னு சொல்லுங்க’ன்னார். எனக்கு சோகக்கதைகள் 1%கூடப் பிடிக்காது. என்னமோ அது அப்படித்தான். அவர் குடுத்தது சோகக்கதை. அதுனால சொல்ல கஷ்டமா இருந்தது. இருந்தாலும் அவர் ரொம்ப கேட்டுகிட்டதால சொல்லீட்டேன். ரெண்டு நாளா ‘அவரை நாம டிஸ்கரேஜ் பண்ணீட்டமோ’ன்னு கஷ்டமா இருக்கு. ஏன்னா, கதையெழுதறவங்களுக்கு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு அவங்களை நீர்த்துப் போகச் செய்யறவங்களைக் கண்டாலே ஆகாது எனக்கு. எனக்கு சிலது பிடிக்கலைன்னாலும், அதுல பிடிச்சதை எழுதி, ‘இது சூப்பர். இந்தமாதிரி முயற்சிக்கவும்’ன்னு மைனஸைச் சொல்லாம ப்ளஸ்ஸை மட்டும் சொல்லீட்டு வந்துடுவேன். (ஆனாலும், ரொம்ப நேரம் ஃபோனே வர்லீன்னா, என்னமோ மாதிரி ஆகி, ஏதாவது கால் வந்ததா’ன்னு ஃபோன் ஸ்க்ரீனை எடுத்துப் பார்த்துப்போமே... அந்தமாதிரி எப்பவாச்சும் எங்கயாச்சும் போய் அறிவுரை சொல்லீட்டும் வர்றதுண்டு!) இல்லீன்னா, லதானந்த் அங்கிள் மாதிரி சீனியர் ரைட்டர்ஸ்கிட்ட ‘இது சரியா வருமா அங்கிள்’ன்னு நம்ம நெனைச்சதை விவாதிக்கலாம்.

கடைசியா ஒரு சின்ன அட்வைஸ்..

விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.

இது கதை எழுதறவங்களுக்கு இல்ல. அவங்களுக்கு அறிவுரை சொல்றவங்களுக்கு!

அவியல்....!எப்போதும் நான் ரோட்டோர வண்டிகளில் பொருள் வாங்குவது வழக்கம். ஏதோ உழைக்கும் மக்களுக்கு உதவலாமே என்று. அண்மையில் கோவை காந்திபுரத்தில் ஆப்பிள் வாங்க ஒரு தள்ளுவண்டிக் கடைக்கு சென்றிருந்தபோது அவர் வைத்திருந்த தராசைப் பார்த்து ஆடிப்போய்விட்டேன். தராசு ஒரு தட்டில் இருக்க பொருள் வைக்கும் தட்டு கீழ் நோக்கி இழுக்கும்படி ஒரு ரப்பர் பேண்டைக் கட்டியிருந்தார்கள். தட்டில் ஒன்றுமில்லாதபோது கல்லின் எடைக்கு வெறும் தட்டு மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. ஆனால் இரண்டு, மூன்று ஆப்பிள்களை வைத்தாலே, ரப்பர் பேண்ட் இருப்பதால்/இழுப்பதால் எடை கம்மியாய் இருந்தாலும் மேல் நோக்கிப் போவதில்லை. ஒரு தடவைக்கு 100 கிராமாவது இதனால் அவர்களுக்கு மிச்சமாகிறது. கிட்டத்தட்ட எல்லா பழவண்டிகளிலும் இதே கதைதான்!

உஷாரய்யா உஷாரேய்ய்ய்ய்ய்ய்ய்!

-----------------------

ஷாப்பிங் சமயக் கணிப்பு ஒன்றைச் சொன்னான் என் நண்பன். அதாவது கணவன் மனைவி ஷாப்பிங் முடித்து வருவதை வைத்து அவர்கள் வீட்டில் மதுரை ஆட்சியா, சிதம்பரமா என்று கணிக்க முடியும் என்றான்.

அதாவது நடக்கும்போது மனைவி முன்னால் நடக்க பின்னால் வேர்க்க விறுவிறுக்க கணவன் நடந்தால் அவர்கள் வீட்டில் மனைவின் கை ஓங்கியிருக்குமாம். (அடிக்கவா-ன்னு கேக்கக்கூடாது!!) கணவன் அவசர அவசரமாய் நடக்க மனைவி தொடர்ந்தால் கணவன் ராஜாங்கமாம்.

இருவரும் ஒன்றாக நடந்தால்..?

அப்போதுதான் மணமாகியிருக்கும் என்றான்.

இதெல்லாம் சுத்த ஹம்பக் என்று எனக்கு நேற்று தெரிந்தது. நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்!


-------------------

சன் நியூசில் ஒரு செய்தியைக் காட்டினார்கள். அதாவது தீபாவளி பயண நெரிசலைத் தவிர்ப்பதற்காக பத்து சிறப்பு ரயில்கள் விடப்பட்டதாம். காலை 7 மணிக்கு அதற்கான புக்கிங் ஆரம்பமானது. க்யூவில் நின்று கொண்டிருந்த ஒருத்தர் முன்னேறி டிக்கெட் கேட்கிறார். மணி 07.06. அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் 206 வந்ததாம்! எல்லா டிக்கெட்டும் இண்டர்நெட்டிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது!

ஜனத்தொகை, டெக்னாலஜி முன்னேற்றம், ட்ராவல் ஏஜண்ட்களின் அட்டகாசம் என்று எல்லா கோணங்களையும் விட்டு விட்டு இன்னொன்றை யோசியுங்கள்...

பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் சென்று வாழும் மக்கள் எக்கச்சக்கமாய் ஆகிவிட்டார்கள் என்பதுதானே அது? அவரவர் ஊரில் வேலை பார்ப்பவர்கள் சதவிகிதம் மிகக் குறைந்து வருகிறதோ?


--------------------------

பேருந்தில் பயணித்துவிட்டு ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சுக்குள் போனேன். அங்கே எஸ்கலேட்டரைப் பார்த்ததும் தோன்றியது....

'பேருந்தில், படியில் பயணிக்க வேண்டாம் என்கிறார்கள். இங்கே படியே பயணிக்கிறதே!'

ஐயையோ... அடிக்க வராங்களே...

---------------------------

'தீவிரவாதிகளிடம் போலீஸார் தீவிர விசாரணை' என்ற வாக்கியம் செய்திகளில் அடிக்கடி அடிபடுகிறது! அவர்கள் தங்கள் கொள்கையில் தீவிரமாய் இருந்ததால்தான் தீவிரவாதிகள். அப்படி என்றால் விசாரணையில் தீவிரமாய் இருக்கும் போலீஸாரும் தீவிரவாதிகளா?

இதையெல்லாம் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கும் நானும், தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும்...

வேண்டாம். பொடா சட்டம் வேறு வரப்போகிறதென்று பயமுறுத்துகிறார்கள். நான் பாட்டுக்கு எதாவது சொல்லப்போய்...

-----------------------
ஷங்கர் 'எந்திரன்' என்று பெயர் வைக்க என்ன காரணம்/ வரிவிலக்கா? இருக்காது என்று நினைகத்தோன்றுகிறது நான் கேட்ட ஒரு டயலாக்..

'ஜெண்டில்மேன்ல ஆரம்பிச்சு 'ன்'ல முடியற அவரோட எல்லா படமும் சூப்பர்ஹிட்!

பாய்ஸ் அவ்வளவா வெற்றி பெறல. சிவாஜில கூட ஷங்கர், ரஜினி எதிர்பார்த்த ஹிட் இல்ல. அதான் ரோபோவை எந்திரன்'ன்னு மாத்திட்டாரு!'


எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா.. ஒருவேளை உண்மையா இருக்குமோ...

----------------------------------------

இரண்டு நாட்களுக்கு முன் ஷாப்பிங் செய்துவிட்டு, கடையிலிருந்து பைக்கை எடுத்து கிளம்பினேன். வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் பைக்கைச் செலுத்தி, சாலைக்கு போகவிருந்தேன். வேனின் சைடில் வலதுபுறமாக வந்த ஒருத்தரின் பைக், என் பைக்கில் மோதி நின்றது. அவர் வந்தது வலதுபுறம். நான் நின்றிருந்தது இடதுபுறம். தவறு அவர்மீதுதான். ஆனாலும், என்னைப் பார்த்து ‘என்ன சார்.. திடீர்னு வர்றீங்க?’ என்று கேட்டார். வலதுபுறம் வாகனம் வரும் என்று நான் கண்டேனா? கோவம் வந்தது. ஆனாலும் பொறுமையாகக் கேட்டேன்..

“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா?”

பைக்கை முடுக்கி காதில் புகை வரக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்!

------------------------------------------


Tuesday, October 21, 2008

எல்லாரும் ஓடி வாங்க.....

புதுகைத் தென்றல் ஒரு தொடர் பதிவுக்கு என்னை எழுதச் சொல்லி கூப்பிட்டிருக்காங்க. அதை அப்புறமா எழுதறேன்.

அதுக்கு முன்னாடி, இனி தொடர் பதிவு எழுதவோ, அதுக்கு வேற யாரையும் கூப்பிடவோ வேண்டாம்-ன்னு கேட்டுக்கலாம்னு இருக்கேன். மூளை செத்துப் போகுது. பத்து நாளா எதுவுமே யோசிக்க முடியலை. மண்டை காயுது.. எனக்கே இப்படி இருக்குன்னா, என்னை படிக்கறவங்க எவ்ளோ மண்டை காஞ்சு போயிருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.

அதுனால் இனி கொஞ்ச நாளைக்கு தொடர் விளையாட்டு வேண்டாம்.
இதை வழிமொழியறவங்க... இந்தப் பதிவை அப்படியே COPY PASTE பண்ணி, புதுசா 25 பேரைக் கூப்பிடணும். நான் கூப்ட்ட ஆளுக யாரையும் திரும்பக் கூப்பிடக் கூடாது.


நான் கூப்பிடறவங்க...

லக்கிலுக்
அதிஷா
வெண்பூ
அப்துல்லா
நர்சிம்
ஜ்யோவ்ராம் சுந்தர்
நந்து f/o நிலா
வடகரைவேலன்
லதானந்த்
வெயிலான்
சஞ்சய் (எ) பொடியன்
குசும்பன்
ராப்
மங்களூர் சிவா
நிஜமா நல்லவன்
நாமக்கல் சிபி
கார்க்கி
ஈரவெங்காயம் சாமிநாதன்
செந்தழல் ரவி
கோவி.கண்ணன்
கிரி
விஜய் ஆனந்த்
ஜோசப் பால்ராஜ்
கூடுதுறை
யெஸ். பாலபாரதி
டாக்டர்.ப்ரூனோ
முரளிகண்ணன்
வால்பையன்
ரமேஷ்வைத்யா
செல்வேந்திரன்
ச்சின்னப்பையன்
தாமிரா
சிம்பா
யட்சன்
முத்துலட்சுமி கயல்விழி
கயல்விழி
புதுகைத்தென்றல்
ராமலெட்சுமி
துளசிடீச்சர்
விக்னேஸ்வரன்
மைஃப்ரண்ட்
ஜிம்ஷா
அனுஜன்யா
ஆயில்யன்
தமிழன் (கறுப்பி)
தமிழ்பிரியன்
மகேஷ் (துக்ளக்)
வேளராசி
ப்ளீச்சிங் பவுடர்
சந்தனமுல்லை
தூயா
ரமேஷ்
திவ்யா
ப்ரியா
ஓவியா

.
.
.
.
.
.
.
போதுமா...?

என்னமோ பண்ணுங்க....

ஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...

சினிமாத் தொடர் பதிவுகளைப் பார்த்து வெறுத்துப் போய்த்தான் தூயா இந்தப்பதிவை எழுதி இருப்பார் என நினைக்கிறேன். பாலா அண்ணா சொன்னார் என்று சைடு பாரில் நமது உணர்வைக் காண்பித்ததோடு மட்டுமல்லாது, தூயாவின் கட்டளைக் கிணங்க, இந்தத் தொடரில் பங்கேற்பதும் மிக முக்கியம் என்று தோன்றியதால் இன்றைக்கே இந்தப் பதிவை இடுகிறேன்.


1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?


அவ்வளவாகத் தெரியாது என்றா உண்மையைச் சொல்வதில் உள்ள சங்கடத்தை உணர்கிறேன்.


பள்ளியில் படிக்கும்போது, இலங்கையில் கலவரம், போர் நடக்கும் சமயத்தில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி ஸ்ட்ரைக் செய்தார்கள். அபோதுதான் ஈழம் பற்றி சிந்திக்க வைத்தது.


கன்னத்தில் முத்தமிட்டால் படமும் என்னுள் ஈழம் பற்றி தாக்கத்தை ஏற்படுத்தியது எனப்தை மறுப்பதற்கியலாது.2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?


தமிழ் ஈழம் ஒரு சுதந்திர நாடாக, போர்களற்ற தேசமாக மலர்ந்து எம் குழந்தைகள் கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் பதில் புன்னகையைச் சிந்தும் நாளை எல்லோரும்போலவே நானும் மிக எதிர்பார்க்கிறேன்.


3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?


காசி ஆனந்தனின் கவிதைகள் மிகப் பிடிக்கும். அவர் உடுமலைப்பேட்டையில், அவரது ‘நறுக்குகள்’ நூலை வெளியிட வந்தபோது சந்தித்திருக்கிறேன்.

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வை.கோ. என யார் ஈழம் பற்றி எழுதியிருந்தாலும் படிப்பதுண்டு.

ஈழத்து செய்திகளை ஈழத்தில் இருந்தவர்கள் எழுத்தில் படித்தால்தான் அதன் வலியும், உணர்வும் புரிபடும் என்பதை உங்கள் (தூயா) நானும் என் ஈழமும் படிக்கும்போது உணர்ந்தேன்.


4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?என்னால் என் வலைப்பூவில் ஒரு WIDGETஐ மட்டுமே இணைக்க முடிகிறது. ஆனால் அரசியல்வாதிகளால், அரசால் இப்போது செய்வதை விட இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. செய்ய வேண்டும் என்னும் ஆதங்கமும் உண்டு.


5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?


உங்கள் கண்ணீர் நின்றுபோகும் வரை போராடுங்கள் என்று ஊக்கப்படுத்தலாம். எந்தச் சூழலிலும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள் என்று ஆதரவாய்ப் பேசலாம். வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


வையமெல்லாம் பகைவர்


நமைமோதும் வேளை - உன்


கையிரண்டும் களத்தில்


ஏந்தாதா வாளை?

-காசி.ஆனந்தன்

இந்தத் தொடரை எழுத முன்று பேரை அழைக்கச் சொல்லியிருக்கிறார்.

நான் அழைப்பது..

1) LOSHAN

2) செயபால்

Monday, October 20, 2008

ப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்

யார் இந்த ப்ளீச்சிங் பவுடர்?

இந்தப் ப்ரச்சினை எப்படி ஆரம்பித்தது? எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்கிற ஆராய்ச்சியையெல்லாம் விட்டுவிடுவோம். முடியும் கட்டத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.


ப்ளீச்சிங் பவுடரின் உண்மையான பெயர் அருண்குமார். (இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்பையனின் பெயர் அருண்ராஜ்!) ஹைதராபாத்தில் சத்யத்தில் பணிபுரிந்தவர், தற்போது பெங்களூரில் ஒரு MNC நிறுவனத்தில் NETWORK ENGINEER பணிபுரிகிறார்.

பதிவுகளையும், பதிவுலகத்தைப் பற்றியும் மூன்று நான்கு மாதங்களாகத்தான் தெரியும் அவருக்கு.

“ஒரு சில விஷயங்களைத் தவிர லக்கிலுக்கின் எழுத்துக்கு நான் ஒரு தீவிர வாசகன். ஆனால் நியாயமான சில விஷயங்களை அவர் மறைப்பதும், வெளியிடாததும் என்னை பாதித்தது. அந்தக் கோபத்தைத்தான் பதிவெழுதி தீர்த்துக் கொண்டேன்” என்கிறார்.

“அவர் என்றில்லை. நீங்கள் சொல்வதில் சில விஷயங்கள் பிடிக்காதபோதும் வெளிப்படுத்தினேன். என்னுடைய கோபமெல்லாம் ஒரு நாளைக்குத்தான். அடுத்தநாள் அதை மறந்து விடுவேன்” என்றார்.

எந்தெந்த பதிவுகளைப் படிக்கிறார்?

“இன்றைக்கும் என்னுடைய ஃபேவரைட் லிஸ்டில் இட்லிவடை, லக்கிலுக், பரிசல்காரன், கார்க்கி நான்குபேர்தான் இருக்கிறார்கள். இப்போதுதான் வால்பையன், நல்லதந்தியை சேர்த்திருக்கிறேன்” என்று சொல்லும் இவர் “இந்தப் ப்ரச்சினையில் வால்பையன் பேரை இழுத்துவிட்டது ஆரம்பத்துல எனக்கு விளையாட்டாத்தான் இருந்துச்சு. ஆனா போகப்போக ஜோசப் பால்ராஜ் மாதிரியான சீனியர் பதிவர்களே, அதை நம்பற மாதிரி பின்னூட்டம் போட்டபோது என்னால வால்பையன் கஷ்டப்படுவாரோ’ன்னு தோணிச்சு” என்கிறார்.

‘இந்தப் ப்ரச்சினையை தீர்க்க, என் வலைப்பூவையே அழித்துவிடுகிறேன்’ என்று வால்பையனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். நல்லவேளையாக எனக்கும் CC அனுப்பியிருந்தார். ‘இப்படியே கொஞ்ச நாள் விளையாடுவோமே’ என்று வால்பையன் ஆசைப்பட, எனக்கு அது பிடிக்கவில்லை. இது பெரிதாகி, வேறு ப்ரச்சினைகளில் போய் முடியவும் வாய்ப்புண்டு என்பதால் நான் ப்ளீச்சிங் பவுடரிடம், ‘உங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடவா’ என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார் ப்ளீச்சிங் பவுடர். ‘புகைப்படம் மட்டும் போடவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

“என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் என்ன சங்கடம் என்றால், என் நண்பர்கள் யார் என்ன எழுதினாலும், என்னால் எதிர்க்கருத்து சொல்ல முடியவில்லை” என்கிறார்.

பதிவுலகில் நல்ல நட்பான சூழல்தானே நிலவுகிறது என்று கேட்டதற்கு... “அது நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிறைய நண்பர்களை பெற்றிருப்பவர்கள், சீரியசான விஷயங்களிலும், அரசியல் சம்மந்தமான விவாதங்களிலும், தங்களுடைய கருத்தை கூறினால் எங்கே நட்பு பாதிக்குமோ என்று ஒதுங்கியே இருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் வேற யாரு.. நீங்கள் தான் பரிசல்!” என்று வெளிப்படையாகக் கூறினார்.

என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வால்பையனாகட்டும், ப்ளீச்சிங் பவுடர் ஆகட்டும்... உங்களுக்கு பிடிக்காத கருத்தை எதிர்ப்பதில் உங்களின் உரிமையை யாரும் மறுக்க முடியாது. அது தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலாக மற்றவர்களால் விமர்சிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆரோக்யமாகவே வெளிப்படையாகவே விமர்சிக்கலாம்.

நான் ரஜினிகாந்த் பற்றி பாராட்டி எழுதியது பிடிக்கவில்லையா, அதை நேரடியாக விமர்சியுங்கள். உனக்கு எப்படி ரஜினிகாந்தைப் பிடிக்கலாம் என்று கேட்பது என் உரிமையில் கை வைக்கும் செயலாகி விடுகிறது! (ஒரு உதாரணத்துக்கு சொல்றேங்க... நீங்க இப்படிச் செய்றீங்கன்னு சொல்லல..)


சிங்கைப் பதிவர்களிடம் இந்தப் பண்பை நான் பார்த்திருக்கிறேன். நேருக்கு நேர் என்று கருத்து மோதல்கள் மட்டும் செய்து, அந்த மோதலை ஆரோக்யமான விவாதமாக மாற்ற வேண்டும்.


அதேபோல ப்ளீச்சிங்பவுடரின் சில பார்வைகள் பிரமிப்பூட்டுபவை, வால்பையனின் சில எழுத்துகளும், தனக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கும் தெளிவும் பாராட்டக் கூடியது.

மற்றபடி, நட்புக்காக என்று எதையும் எதிர்த்துப் பேசத் தயங்குகிறீர்கள் என்று என்னைப் பற்றி ப்ளீச்சிங் பவுடர் சொன்னதும் உண்மைதான். இல்லையென்று வாதிட்டு ப்ளீச்சிங் பவுடரின் நட்பை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை! உண்மையில், வலையுலகில் எழுதுவதால் பணம் சேர்க்கவோ, புரட்சி பண்ணவோ முடிவதில்லை. நட்பைத்தான் சேர்க்க முடிகிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்!


“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தை கூறுவதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்” -வால்டேர்.

.

Saturday, October 18, 2008

பழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்தும்

நக்கல், நையாண்டியத்தவிர வேற உருப்படியா எதுவும் உன் வலைப்பூவுல எழுதற ஐடியா இல்லையா? என்று கேட்ட தம்பி ராமகிருஷ்ணா.. இந்தா புடிச்சுக்கோ!


-----------------------------------------------------------------
கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

நம் கையால் கன்னத்தை தாங்க்க்கூடாது என்பதாய் இதற்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். அதுவல்ல அர்த்தம்!

அந்தக் காலத்திலெல்லாம் பர்மா, ரங்கூன் என்று கடல் கடந்து பொருளீட்ட வீட்டுத்தலைவர்கள் செல்வார்கள். ஒரு ஊரிலிருந்து நான்கைந்து பேர் கூட்டாக சென்று ஐந்து வருடம், பத்து வருடம் என்று உழைத்து சம்பாதித்துவிட்டு சம்பாதித்த பணத்தை பொன்னும், வைரமுமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருவார்ர்கள். அப்படி வரும்போது சில சமயம் கடல் சீற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து ஈட்டிய பொருளெல்லாம் இழந்து விடுவார்கள். தப்பித்து கரை சேரும் சிலர், ‘இவ்வளவு காலம் உழைத்துச் சம்பாதித்ததெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே.. இனி நம் ஊருக்கு என்ன கொண்டு செல்ல?’ என்ற விரக்தியில் கூட்டு சேர்ந்து ‘கன்னம் வைத்து’ திருட திட்டம் போடுவார்கள். (ஒரு ஆள் புகும் அளவுக்கு சுவரில் துளை போட்டு திருடுவதற்கு ‘கன்னம் வைத்தல்’ என்று பொருள்)

அதனால், ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னம் வைக்கும் தொழிலில் ஈடுபடக்கூடாது’ என்ற அர்த்தத்தில் ‘கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்லப்பட்டது, இப்போது வேறு அர்த்தம் கொண்டு உலவி வருகிறது!
---------------------------------------------------------------------------------------------

ஆயிரம்
பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்

சித்த மருத்துவம்தான் நமது பண்டைய மருத்துவம். மூலிகைகளால் குணமடையச் செய்யும் சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், மூலிகைச் செடிகளின் வகைகளை கண்டறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள செல்லும் சீடர்களுக்கு, குருக்கள் ஒரு கட்டத்தில் practical test போல காடுகளுக்கு சென்று மூலிகைச் செடிகளைப் பறித்து, அந்தச் செடிகளின் பெயர், அதன் பலன்களை சொல்லச் சொல்வார்கள். அந்தக் காலத்தில், ‘ஆயிரம் வேரை கொணர்ந்தவன் அரை வைத்தியன்’ என்று சொல்லி வந்தார்கள். அதாவது ஆயிரம் செடிகளை வேரோடு பறித்து, கொண்டு வந்து, அவை எந்தெந்த வகை என்று குருவிடம் சொன்னால், அவன் அரை வைத்தியனுக்கு சமம் என்று கூறுவார்கள். அது திரிந்து இப்படி ஆகிவிட்டது!
---------------------------------------------------------------------------------------------

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க


பயப்படாதீங்க.. இதுக்கு கதையெல்லாம் இல்ல! இறைவனின் ‘திருவடி’ என்பதுதான், வெறும் ‘அடி’ யாக மாறிவிட்டது!
--------------------------------------------------------------------------
[இதுதான் நீ உருப்படியா மேட்டர் எழுதற லட்சணமா-ன்னு கேக்காதீங்க! ஆக்சுவலா விலைவாசியை குறைப்பது எப்படின்னுதான் எழுதினேன். அத என்னதுக்கு எல்லாருக்கும் சொல்லீட்டு-ன்னு நேரா நம்ம பி.சி. சாருக்கு (பி.சி.ஸ்ரீராமில்லைங்க.. பி.சிதம்பரம் சார்!) அனுப்பீட்டேன்!]

****************************************

விருந்தும் மருந்தும்

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..


அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..


1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "


1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."


1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க.."


1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.."


2000 - "எப்போ ஊருக்கு போறிங்க? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்.."


2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"


2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."


2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.."

Friday, October 17, 2008

அப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்

குமரகம். நான்கு வருடங்கள் முன்பு ஏக்கர் ரூ. 50000-லிருந்து 1 லட்சம் வரை மட்டுமே இருந்த இந்த இடம், ஸ்ரீலங்காவின் சிரிமாவே பண்டாநாயகா வருகிறார். மீடியா குவிகிறது. அடுத்ததாக வாஜ்பாய். அதற்குப்பிறகு குமரகம் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத்தளமாகி விட்டது. இப்போது அந்த இடத்தில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய்!

இயற்கையால் சூழப்பட்ட அங்கே சென்று வந்திருக்கிறார் நமது நண்பர் புதுகை அப்துல்லா. அங்கே சென்று வந்ததை கடவுளின் சொந்த தேசம் என்ற பதிவிலும், சில புகைப்படங்களை இந்தப் பதிவிலும் போட்டுவிட்டாலும் முழுமையாக சில விஷயங்களைச் சொல்லவில்லை என்றிருக்கிறார்.

பரிசலின் அண்ணன்தான் போட்! ஆகவே போட் ஹவுஸில் தங்கிய அப்துல்லாவின் அனுபவத்தை பரிசல்காரன் பேட்டி எடுத்தால் என்ன என்று தோன்றியது. இதோ...

நீங்க தங்கினது போட் ஹவுஸ் யாரோடது?

இயக்குனர் ஃபாசில், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் ஜெயராம் மூணுபேருக்கு சொந்தமானது. அவங்களுக்கு மொத்தம் 20 போட் ஹவுஸ் இந்த மாதிரி இருக்கு. நான் போனது ரெயின்போ க்ரூஸ்.

போட் எப்படி இருந்தது?

அருமைண்ணே. நார்மல் கேட்டகிரி, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ். எதுவா இருந்தாலும் ஏ.ஸி.தான். ஒரு நாள் வாடகை 4500 ரூபாய்லிருந்து 15000 வரை வேறுபடுது. ஒரு ரூம், ரெண்டு ரூம்ன்னு அஞ்சு ரூம் வரைக்கும் இருக்கற போட் ஹவுஸ் இருக்கு. கான்ஃப்ரென்ஸ், மீட்டிங் நடத்தறதுக்கு கூட போட் இருக்கு.

நார்மல் போட்ல லிவிங் ரூம், பெட்ரூம். டாய்லெட் தனியா. டீலக்ஸ்ன்னா வ்யூவிங் ரூம், பெட்ரூம் டாய்லெட் அட்டாச்ட். சூப்பர் டீலக்ஸ்ன்னா டைனிங் ரூம் எக்ஸ்ட்ராவா தனியா இருக்கு. அதுனால் நாம குடும்பத்தோட ஃப்ரீயா இருக்கலாம்.

நீங்க எத்தனை நாள் போட் ஹவுஸ்ல இருந்தீங்க?

ரெண்டு நாள். ஒரு நாள்ன்னா காலைல 11 மணிக்கு ஏறினோம்னா, அடுத்த நாள் காலைல 10 மணிக்கு கொண்டுவந்துவிடறாங்க. ஒரே நாள்ல வரணும்னா காலைல 10 மணிக்கு கூட்டீட்டு போய் மாலை 6 மணிக்கு வந்து விட்டுடறாங்க.

கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் அளவிலான பேக்வாட்டர் ஏரியால பயணிக்குது. பேக்வாட்டர் சில இடத்துல ஏரியா, சில இடங்கள்ல ஓடையா இருக்கு. வயல்வெளிகள் தண்ணீரோட லெவலுக்கு ரெண்டு அடிக்கு கீழ இருக்கு! இப்ப்டி ஒரு அமைப்பு உலகத்துலயே ஆம்ஸ்டர்டாம்லயும்தான் இருக்கு.

ம்ஜான் நோன்பு முடிஞ்சதும் ‘தண்ணி’ல பயணமா? ம்ம்ம்.. இருக்கட்டும். பயணம் எப்படி இருந்தது?

அருமையா இருந்ததுண்ணே. வெறும் தண்ணிக்குள்ள-ன்னு இல்ல. உள்ள நிறைய குட்டிக் குட்டித் தீவுகள் இருக்குண்ணே. அவங்களுக்கு டவுன்பஸ் மாதிரி சின்ன சின்ன போட் சரிவீஸ் கவர்மெண்டே விடறாங்க. ஆஸ்பெட்டாஸ் ஷீட் வெச்சு கட்டி, அதுக்கடில போட்டை நிறுத்தி வெச்சிருக்காங்க. பஸ் ஸ்டாப் மாதிரியே போட் ஸ்டாப் இருக்கு. கண்டக்டர் இருக்காரு.

ஒரே வித்தியாசம் சில்லறை இல்லாமப் போனா இறக்கிவிடமாட்டாரு இல்லியா?

(சிரிக்கிறார்..) ஆமாண்ணே.


நீங்க போன போட் ஹவுஸ்ல எத்தனைபேர் சர்வீஸூக்கு இருந்தாங்க?

4 பேர்ண்ணே. ரெண்டு ட்ரைவர் (பரிசல்காரன் கூடவே இருந்திருக்காரு!) சர்வீஸுக்கு ஒருத்தர். சமையல்காரர் ஒருத்தர். மதியம் 12.30 மணிக்கு ஒரு இடத்துல நிறுத்தறாங்க. சமையலுக்கு தேவையான மீன், சிக்கன் மற்ற ஐட்டமெல்லாம் வருது. நான் சைவம்ங்கறதால சைவ சாப்பாடுதான். கொஞ்ச நேரம் அங்கிருந்துட்டு 1.45க்கு சாப்பாடு ரெடியாய்டும். போட் ஸ்டார்ட் ஆகி, போய்ட்டே சாப்டறோம். ஆறு மணிக்கு ஒரு குறிப்பிட இடம் இருக்கு. இந்த மாதிரி வர்ற போட் எல்லாம் அங்க நிக்குது. வயல்வெளியெல்லாம் இருக்கற கிராமம் மாதிரியான இடம். எல்லா போட்ல இருந்து வர்றவங்களும் அங்க இறங்கி, காலாற நடந்து சுத்திப் பார்க்கலாம். இரவு அங்கயேதான் தங்கல்.

அடுத்தநாள் காலைல 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு டிஃபன். நல்ல கவனிப்புண்ணே. கண்டிபபா ஒரு தடவை போய்ட்டு வாங்க!

உங்களை மாதிரி பெரிய ஆளுக போகலாம். சாதாரணமானவங்க...

நிச்சயமா போகலாம்ணே. சுற்றுலா-ன்னா மத்த இடங்களுக்குப் போனா இங்க போகணுமே, அங்க போகணுமே-ங்கற டென்ஷனும், ரெண்டு நாள்ல எல்லா இடத்துலயும் சுத்திப் பாக்கணும்ங்கற டென்ஷனும் இருக்கும். இங்க அது இல்லவே இல்ல! அலைச்சலே இல்ல. போட்ல உக்கார்ந்து அவங்களே எல்லா எடத்துக்கும் கூட்டீட்டுப் போயிடறாங்க!

ரெண்டுநாள் டூர் மாதிரின்னா (அதாவது 24 மணிநேரம் போட்ல இருக்கலாம். காலைல 11 மணில இருந்து 10 மணிவரை) போட் வாடகை சேர்த்து 7000லிருந்து 10000 வரை ஆகும். அவ்ளோதான்! நீங்க எங்க இருந்து போறீங்களோ அதைப் பொறுத்து.

அதேமாதிரி எக்ஸ்ட்ரா ரூம் இருக்கற போட் ஹவுஸைத் தேர்ந்தெடுத்துப் போனீங்கன்னா, கூட 500 அல்லது 1000தான் எக்ஸ்ட்ரா வரும். ரெண்டு ஃபேமிலி போகலாம். செலவை ஷேர் பண்ணிக்கலாம்!

இயற்கையை மட்டும்தான் ரசிக்கப் போறீங்க. ஒண்ணும் வாங்கப்போறதில்ல! நிச்சயமா எல்லாரும் போகவேண்டிய இடம்ணே!

***********************

ஒரு பூலோக சொர்க்கத்துக்கு போய்வந்த மனநிறைவோடு பேட்டியை முடிக்கிறார் அப்துல்லா!இவரோடு நடந்த ஒரு மணிநேரப் பேட்டியில் நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம்..


செந்திலுக்கு அடுத்தபடி (செந்திலாவது கவுண்டமணியை மட்டும்தான் அப்படி விளிப்பார்.) அவரை விட அதிகமாகவே அண்ணேவை பயன்படுத்து இவர்தான்!

Thursday, October 16, 2008

எல்லோர்க்கும் நன்றி! (விடைபெறும் பதிவு அல்ல!)


பலருடைய பதிவுகள்ல இதை நீங்க பாத்திருக்கலாம். FOLLOWERSன்னு இருக்கும். அதுக்கு வேற சிலபேர் வெச்சு போட்டிருப்பாங்க. நான் என்கூட நீங்களும் வர்றீங்களா’ன்னு கேட்டிருப்பேன். வலது பக்க சைடு பார்ல இருக்கும். (யாருய்யா அது.. அனுமதி பெற்ற பாரா?-ன்னு கேக்கறது?)

மொத மொதல்ல நான் இந்த WIDGETஐ போட்டப்ப நந்து f/o நிலா-வும் முதலாகவாவும், லக்கிலுக் இரண்டாவதாவும் என் ஃபாலோயரா வந்தாங்க. லக்கிலுக்கை தொடர்ந்து மூணாவதா வந்தது யாரு தெரியுமா? Any Guess?


அதுல FOLLOW THIS BLOGஐ க்ளிக் பண்ணி என் ப்ளாக்கை நீங்க ஃபாலோ பண்ணினா, நான் எந்த போஸ்ட் போட்டாலும் உடனே உங்க டாஷ்போர்டுல தெரியும். (கார் வெச்சிருக்கறவங்க உடனே அந்த டாஷ்போர்டுல பார்த்து தெரியலையேன்னு கேட்கக்கூடாது...)

எனக்கென்ன வசதின்னா, நான் உங்களை அடிக்கடி பார்க்கணும்ன்னா, உங்க பதிவைப் படிக்கணும்ன்னா, நீங்க என் ஃபாலோவராய்ட்டீங்கன்னா, உங்க படத்துல க்ளிக்கினா ஈஸியா போயிடும்!

என்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்ன்னா, ரெண்டுநாள் முன்னாடி என் 47வது ஃபாலோவரா டாக்டர்.ருத்ரன் வந்திருக்காரு. எனக்கு சந்தோஷம் தாங்காம கத்துன கத்துல டாக்டர் ருத்ரன்கிட்ட கூட்டீட்டு போகணும்போல-ன்னு ஆஃபீஸ்ல இருக்கறவங்க சொன்னாங்க. நான் கத்தறதே அவராலதான்னு சொன்னேன்! :-)

அவரோட வாழ நினைத்தால் வாழலாம் புத்தகம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு புத்தகம். என் துணைவி உமா, (மேரேஜுக்கும் - காதலிக்கறதுக்கும் முன்னாடி) அந்தப் புத்தகத்தைத்தான் எனக்கு முதல்ல பரிசா குடுத்தாங்க. படிச்சுட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். எப்போ மனசுக்கு ஆறுதல் தேவைன்னாலும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்.

அந்தப் புத்தகத்தை குடுத்துட்டு படிச்சாச்சா, படிச்சாச்சா-ன்னு பலதடவை உமா என்கிட்ட கேட்டாங்க. ‘ஓ'ன்னு சில அத்தியாயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். சுரத்தேயில்லாம கேட்பாங்க. எனக்கு ஏண்டா, எவ்ளோ இண்ட்ரஸ்ட் இல்லாம கேக்கறாங்க'ன்னு தோணும்.

அப்பறம் காதலை பரிமாறிகிட்டு ரொம்பநாள் கழிச்சு அந்தப் புத்தகத்தை கொண்டுவரச் சொல்லி காட்டினாங்க. அதுல ‘இதுவும் இன்னமும் வர உடனிருக்கும் உமாவுக்கு'ன்னு டாக்டர் சமர்ப்பணம் பண்ணியிருப்பாரு. நம்ம மரமண்டைக்கு அப்பதான், ஓஹோ.. இதுதான் மேட்டரா-ன்னு வெளங்கிச்சு!

அப்பறம் அவரோட பல புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சேன். என் ப்ரதர்-இன் -லா வோட பையன் பேரு ருத்ரேஷ். அதுவும் டாக்டரோட தாக்கம்தான். பேர் வைக்கறப்ப இதுதான் வேணும்னு அடம்பிடிச்சு வெச்சோம்!

இதுனால என்ன சொல வர்றேன்னா, அந்த ஃபாலோயர்ஸ்ல நீங்களும் கலந்துக்குங்க...! (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..!) எனக்கும் உங்க பதிவுப் பக்கம் வர ஈஸியா இருக்கும்ல!

லக்கிலுக்கைத் தொடர்ந்து மூணாவதா வந்தது யாரா இருக்கும்னு நிறையபேர் கண்டுபிடிச்சிருப்பீங்க. யெஸ்... வால்பையன்!


இந்த நேரத்துல நந்து, லக்கிலுக், வால்பையன், வெண்பூ, விஜய், கார்க்கி, வீரசுந்தர், முரளிகண்ணன், வெட்டிப்பயல், கார்த்திக், கூடுதுறை, வடகரை வேலன், சிம்பா, விக்னேஸ்வரன், தாமிரா, பொடியன், குசும்பன் ,சர்வேசன், karthik, அகநாழிகை, வெயிலான், அதிஷா, தியாகராஜன், தென்றல், ஜிம்ஷா, மதுசூதனா, TBCD, புதுகைத்தென்றல், கணேஷ், Ara, முத்துலெட்சுமி-கயல்விழி, திவ்யா, கும்க்கி, ரமேஷ், மதுரை நண்பன், விலெகா, ஜீவன், sen, ரோஜா காதலன், நர்சிம், கேபிள் சங்கர், Raj, Pondy-Barani, இராம், கோவி.கண்ணன், டாக்டர்.ருத்ரன், Busy, Pradeep எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் நன்றி!

(இதப்படிக்கறவங்களுக்கு இத்தனை பேரை ஏன் எழுதி அறுக்கணும்ன்னு தோணலாம்... பதிவெழுதாம படிக்க மட்டும் செய்யற நிறையபேர் இதுல இருக்காங்க. அவங்களுக்கு ஒரு சின்ன நன்றிக்கடன்!)


ரெண்டாவது முக்கியமான விஷயம், இந்த தமிழிஷ் டூல்பார். இதோ இதுல நம்ம பதிவுலயே இணைச்சுட்டா எல்லாரும் ஓட்டுப் போடுவாங்கன்னு பார்த்தா, ஒருத்தரும் போடறதில்ல! ஓட்டுப் போடறதுன்னாலே சோம்பேறித்தனம்தானே. என்னமோ உங்க இஷ்டம்... பார்த்து பண்ணுங்க!


முக்கியமான பின்குறிப்பு:-

இதப் படிச்சவங்க இதையும் போய்ப் படிங்க. சமீபத்துல நான் படிச்சதுலயே எனக்கு மிகப் பிடிச்சது!

காணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்

அந்த டைரியை நான் நான்கு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.. 2005-ம் வருட டைரி என்று ஞாபகம்..

கடந்த வியாழக்கிழமை அதை நான் புத்தக பீரோவில் தேடிக்கொண்டிருந்த போது என் மகள் மீரா வந்து "என்னப்பா நாலு நாளா கிடந்து தேடிகிட்டிருக்கீங்க?" என்று கேட்டாள். ஐந்திலிருந்து ஆறாவது போய்விட்டாள்.. என்னைப் போலவே புகழ் பெற்ற நிருபராகும் ஆசை அவளுக்கு இருக்கிறது.(புளித்துப் போன இந்த காமெடிக்கு மன்னிக்கவும்.. நானும் புகழ் பெற்ற நிருபனாகும் ஆசையோடு இருந்தேன்) நான்கு நாளாக நான் டைரி தேடுவதை கவனித்திருக்கிறாள்..

"பழைய டைரி ஒண்ண தேடிட்டிருக்கேன் மீரா.."

"எதுக்குப்பா?"

நான் இந்த வலைப் பக்கத்தைப் பற்றி அவளுக்குச் சொன்னேன்.. "நாம என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. இதுக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. விகடன்ல கூட வாராவாரம் ஒரு வலைப்பூ பத்தி எழுதறாங்க"

"சரிப்பா.. அதுக்கும், நீங்க டைரி தேடறதுக்கும் என்னப்பா சம்பந்தம்?"

"நானும் அந்த மாதிரி ஒரு blog ஆரம்பிச்சிருக்கேன். அந்த 2005-ம் வருட டைரில சில கவிதைகள், கதைக் கருக்கள் எழுதி வெச்சிருந்தேன். அதை என்னோட blog-ல போடலாம்னுதான் தேடறேன்"

நான் இதை சொன்னதிலிருந்து அவளும் என்னோடு தேட ஆரம்பித்தாள். ஆனால் டைரி கிடைத்தபாடில்லை.

"அப்பா.. அம்மாகிட்ட கேட்டுப்பாக்கலாம்பா.. அதுல அம்மா வீட்டுக்கணக்கெல்லாம் எழுதிட்டிருந்ததா ஞாபகம்"

இருக்கலாம். என் மனைவிக்கு வீட்டை ஒழுங்குபடுத்தி வைப்பதில் ஆர்வம் அதிகம். அப்படி ஒழுங்குபடுத்தும் போது எங்காவது எடுத்து வைத்திருக்கலாம்.

மனைவியை அழைத்துக் கேட்டேன்..

"நீங்க வருஷத்துக்கு நாலஞ்சு டைரி கொன்டு வரீங்க.. எது-ன்னு யாருக்கு தெரியும்?"

"2005-ன்னு நேராவும், தலைகீழாவும் ப்ரிண்ட் பண்ணீருப்பாங்க"

"என்ன கலர்?"

"சாம்பல் நிறம் மாதிரி இருக்கும்"

என் மகள் மீரா இடைமறித்துச் சொன்னாள்.. "நீ கூட அதுல கணக்கெல்லாம் போடுவம்மா.. போன தடவை என் ஸ்கூல் ஃபீஸ் எவ்ளோன்னு அதுலதான் பாத்துச் சொன்ன.." - சொல்லிவிட்டு ‘எப்படி?’ என்பது போல என்னை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. நான் பாராட்டும் விதமாக அவள் தோளில் தட்டிக்கொடுத்தேன்.

"ஓ.. அது உங்க ஃப்ரண்ட் உசேன் ப்ரசண்ட் பண்ணின டைரிதானே?" - மனைவி கேட்டபோது புல்லரித்துப் போனது எனக்கு.. ‘ஆஹா.. எவ்வளவு ஞாபகசக்தி இவளுக்கு..! இவளை மனைவியாய் அடைய நான் குடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தவாறே Feelings of India-வுக்கு பிரேக் விட்டுவிட்டு "ஆமா..ஆமா.. அதேதான்.." என்றேன் உற்சாகமாய்.

"இருங்க வரேன்" என்று உள்ளே போனாள். நானும் என் மகளும் சந்தோஷமாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம்.

சிறிது நேரம் கழித்து வ்ந்த மனைவியின் கையில் கக்கூஸ் டப்பா இருந்தது! "ஏய்.. அதை எதுக்கு கையில தூக்கிட்டு வர்ற?"

"இல்லீங்க.. போன சண்டே பிளாஸ்டிக்காரனுக்கு பேப்பர், புக் எல்லாம் போட்டு டாய்லெட்டுக்கு பக்கெட் வாங்கினேன்ல?"

"ஆமா.. அவன் வந்தப்ப தான் நான் சலூனுக்கு கிளம்பிட்டிருந்தேன்.." சொல்லும்போதே எனக்கு வயிற்றை கலக்கியது..

"கரெக்ட்.. எல்லாத்தையும் போட்டுட்டு பக்கெட் வாங்கினேனா.. கூட மேட்சிங்கா இந்த டப்பாவையும் கேட்டதுக்கு இன்னும் எதாவது புக்ஸ் போடுங்கம்மா’ன்னான்.. அதான் பரண்ல இருந்த சில புக்ஸ போட்டேன்.
அந்த டைரி அது கூடத்தான் இருந்தது"

எனக்கு சினிமாவில் கிராபிக்ஸில் முகம் நான்கைந்தாக பிளக்குமே.. அப்படி ஆனது!

Wednesday, October 15, 2008

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்


“என்னது.. பொணம் கையை ஆட்டிக் கூப்பிட்டுதா?”ன்னு ஆச்சர்யமா பயத்தோட கேட்டேன் நான். கான்ஸ்டபிள் சொன்னாரு. “நானும் அப்படித்தான் நெனச்சு பயந்து நடுங்கிட்டேன். ஒருவேளை உயிரிருக்குமோன்னுகூட தோணிச்சு. அப்புறம் பயந்து பயந்து பக்கத்துல போய்ப் பார்த்தா, இறந்தவன் போட்டிருந்த முழுக்கை சட்டை கிழிஞ்சு காத்துல ஆடிகிட்டிருந்தது. எனக்குத்தான் அவனே கூப்பிடறமாதிரி மனப்ரமையா இருந்திருக்கு’ன்னார். நான் கேட்டேன் ‘ஏதோ ஒரு நாளைக்குத்தானே அப்படியாகும். மத்தநாள் எல்லாம் ஜாலிதானே?’ அவரு சொன்னார்... ‘அந்த ஏதோ ஒரு நாள் இன்னைக்குத்தானா-ன்னு தெனமும் பயந்துகிட்டேதான் பயணிக்கறோம்’

இப்போ சொல்லுங்க எல்லா வேலையிலயும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத்தானே செய்யுது?”

இந்த இடத்தில் நிறுத்தினார் அவர்.


அவர்?
(கருணாகரனுடன் பரிசல்காரன்)


கருணாகரன். கும்க்கி என்கிற பெயரில் பின்னூட்டங்கள் போடுகிறார். கிருஷ்ணகிரியில், கூட்டுறவு வங்கியில் செகரட்டெரியாக இருக்கிறார்.


ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே என்னைச் சந்திக்க வேண்டும் என அலைபேசிக் கொண்டே இருந்தார். (அப்புறம் எப்பதான் வெச்சார்?) சனிக்கிழமை வருவதாகவும், ஞாயிறு மாலை திரும்புவேன் என்றும் கூறினார்.

சனிக்கிழமை ஈரோடு போய் வால்பையனைச் சந்தித்துவிட்டு, வாலோடு திருப்பூர் வந்தார்! மதியமே வந்துவிட்டார். வழக்கம்போல ஆபத்பாந்தவன், அனாதரட்சகன், நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய என் உற்ற தோழன், ஆருயிர் நண்பன் (எல்லாம் ஒண்ணுதாண்டா) வெயிலானை அழைத்து ‘ஹி..ஹி.. இந்த மாதிரி இந்த மாதிரி.. இந்த மாதிரி..இந்த மாதிரி..’ என்று சொல்ல, “ஒனக்கு இதே பொழப்பாப் போச்சுய்யா.. ஒனக்காகப் பண்ணல. ஒன்ன நம்பி வர்றவங்களுக்காகவும், திருப்பூரோட சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் போய் ரிசீவ் பண்றேன்” என்று திட்டிவிட்டு இந்தியா ஹவுஸ் லாட்ஜூக்குப் போய் அவர்களோடு ஐக்கியமானார்.

சற்று நேரத்த்தில் சாமிநாதன் ஒரு பரிசுப்பொருளோடு போய் அவர்களைச் சந்தித்திருக்கிறார். நானும் சரியாகச் சொன்ன நேரத்தில் (இரவு 9 மணி!) அவர்களைச் சந்தித்தேன். தொழிலதிபர் சாமிநாதன் சனிக்கிழமை என்பதால் அவரது நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கச் சென்றுவிட்டார்.

நண்பர் (அஜ்மன் புகழ்) நந்தகோபால் வந்தார். அவர் கருணாகரனுடன் சேர்ந்து ஆன்மிக விஷயங்கள் பேசினார். கருணாகரனின் கைலாஷ் யாத்திரை அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்!

12 மணிக்குப் பிறகுதான் என்னோடு பேச ஆரம்பித்தார் கருணாகரன். அரசு சம்பந்தமான அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அரசு இயந்திரங்கள் குறித்து அவர் பேசியது தனித்தனிப் பதிவாகப் போடலாம்! இப்போது எழுதாதீர்கள்... இன்னும் விவரம் தருகிறேன் என்றிருக்கிறார். அவரே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதினால் அது ஒரு சிறப்பான துறை சார்ந்த வலைப்பூவாக மிளிரும் என்பதில் ஐயமே இல்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவரோடு அளவளாவிவிட்டு, கிளம்பும்போது பார்த்தேன். ஒரு பெரிய BAG கொண்டுவந்திருந்தார்.

“என்னங்க.. ரெண்டு நாளைக்கு இவ்ளோ பெரிய பேக்?”

“ஒரு நிமிஷம் இருங்க” என்றவர் பேகைத் திறந்தார்.

புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்....

கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான புத்தகங்கள்!

“ஒவ்வொண்ணாத்தாங்க படிக்க முடியும். ஒண்ணைப் படிச்சுட்டு தர்றேன். அப்புறமா அடுத்தத குடுங்க” என்றேன்.

“மெதுவாப் படிங்க. எல்லாமே உங்களுக்குத்தான்”

எனக்கு பேச்சே வரவில்லை.

இரவு இரண்டு மணிக்கு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றேன்.

அடுத்தநாள் அவர் வால்பையனோடும், இன்னொரு நண்பர் பிலாலோடும் நான் பணிபுரியும் இடத்துக்கே வந்து சென்றார்.


அவர் கிளம்பும் நேரம் ஃபோன் வந்தது. முன்பெல்லாம் பதிவெழுதிக் கொண்டிருந்த.. இப்போது பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் பாலராஜன்கீதா தம்பதி சமேதராக திருப்பூர் வந்திருந்தார்கள். புதுகை அப்துல்லா மூலமாக என்னை சென்னையில் கிளம்பும்போதே தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் வருவதாகச் சொல்லி அலைபேசினார்கள். சரியாக கும்க்கி, வால்பையனோடு நான் நின்றிருந்த இடத்தில் பாலராஜன் சார் வந்திறங்கினார். (இவரோடு ஆன சந்திப்பு நாளைக்குச் சொல்றேன்...!!)

நான் அறிமுகப்படுத்தினேன்.

“இவர்தாங்க வால்பையன்”

“நிஜமாவா? உங்க பதிவுகள்ல நீங்க மத்தவங்களை கலாய்க்கற மாதிரி கலாய்க்கலியே?”

“இல்லல்ல. இவரு வால்பையன்ங்கறது உண்மை. ஆனா இவரு ‘அவரா’ன்னு தெரியல”

வால்பையன் அடக்கமுடியாமல் சிரிக்க... விடை பெற்றார்கள்.

கும்க்கி (எ) கருணாகரனை பத்திரமாக அழைத்துவந்து என்னைச் சந்திக்கச் செய்த வால்பையனுக்கும், வால்பையனை பத்திரமாக அழைத்துவந்த கருணாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அரசு வேலைகள் குறித்து கருணாகரன் சொன்ன ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

“பப்ளிக்குக்கு அரசு வேலைகள் சம்பந்தமா யாரைப் பார்க்கணும்ன்னு தெரியாததுதான் பெரிய தப்பு. அதுனால ஒரு நாள்ல முடிக்க வேண்டிய வேலைக்கு மக்கள் மாதக்கணக்கா அலையறாங்க. அரசு எவ்வளவோ செலவு பண்ணுது. ஒவ்வொரு அரசு அலுவலகங்கள்லயும் அந்தத் துறைல என்ன வேலை நடக்குது.. எதெதுக்கு யாரைப் பார்க்கணும், குறைந்தது எத்தனை நாள் ஆகும் என்பது மாதிரியான விளக்கக் கையேடு இருந்தா எவ்வளவோ ப்ரச்சினைகள் தீரும். பத்து பேர்ல ஒருத்தனாவது “இது உங்க வேலை. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டிய வேலையை பத்து நாளா இழுக்கறீங்க”ன்னு தைரியமா போய்க் கேட்பாங்க. ஆனா நாம கேக்கறது தப்போ-ங்கற பயத்துலயே யாரும் ஒண்ணும் கேக்கறதில்ல. இந்த மாதிரி கையேடு வர்றதால அவங்க வேலை அதிகமாகும்ங்கறதும் வராம இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். யாராவது பப்ளிக் இண்ட்ரெஸ்ட்டுக்காகவாவது இதப் பண்ணலாம்” என்றார்.


கும்க்கி, ப்ளீஸ் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நீங்களே அரசுத் துறைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்க. இது வேண்டுகோள் இல்லை.

கட்டளை!

Tuesday, October 14, 2008

அக்டோபர் மாத PIT போட்டிக்கு...பெரியோர்களே, தாய்மார்களே, அன்பு உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய வாசகப் பெருமக்களே...

அக்டோபர் மாத PIT போட்டிக்கு தலைப்பு விளம்பரமாம். புகுந்து விளையாடலாம். ஆனா, ஃபோட்டோஷாப்ல பரிச்சயமில்லை. அதுனால ஏதோ முயன்றிருக்கேன்.

பாத்து, கமெண்டைப் போட்டுத் தாக்குங்க!

படம் சரியா தெரியலைன்னா க்ளிக்கிப் பெரிசாப் பாருங்க.

தூக்கம் வருது! வர்ட்டா?

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி


சிலர் இருக்கிறார்கள். சாதாரணமாகத் தெரிவார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமையும், அறிவும் அவர்களே அறியாததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரைச் சந்தித்தேன் சமீபத்தில்.

என்னைப் பார்க்க வேண்டும் என்றே அவரது ஊரிலிருந்து வந்திருந்தார். அலுவலின் காரணமாய் அவரை வரவேற்கவோ, முழுமையாக அவரோடு இருக்கவோ வக்கற்று இருந்தேன் நான். அவரோடு பேசியதிலிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டேன் நான்.

அவரோடு உரையாடியதிலிருந்து.....


உங்களுக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய நண்பர் திரு. ராஜகாந்தன். கரூரில் NHல் பணிபுரிகிறார். அவர்தான் எனக்கு BLOGGER எனப்படும் பதிவுலகைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்தினார்.

அதற்கு முன்பு வாசிக்கும் பழக்கம்...

மிகவும் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன்.


உங்கள் நண்பர் பதிவுலகில் எதை அறிமுகப்படுத்தினார்?

முதல்ல தமிழ்மணத்தைத்தான் அறிமுகப்படுத்தினார். தமிழ்மணம் மூலமா உங்களுடைய பதிவு ஏதோ ஒன்றைத்தான் முதல்ல படிச்சேன். அப்புறம் பலருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிச்சேன். தமிழ்மணம் மூலமா போனா எக்கச்சக்கமா இருக்குன்னு இப்போ நேரடியாவே சிலருடைய பதிவுகளை மட்டும்தான் படிக்கறேன்.

என்னுடைய பதிவுல எது புடிச்சது?

அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவு சிறப்பானதாக எதுவும் மனதில் இல்லை! ஆனா சுவாரஸ்யமா எழுதற நீங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் சீரியஸ் எழுத்துக்கு பயணிக்கணும்ங்கறது என்னுடைய தாழ்மையான, தனிப்பட்ட கருத்து.


யார் யாருடைய பதிவுகளைப் படிப்பீங்க?

உங்களுடையது (பரிசல்காரன்), லக்கிலுக் (கொஞ்சம் இடை வலி விட்டு...) வால்பையன், தாமிரா, வடகரைவேலன், அதிஷா ஆகியோருடையதைத் தவறாமல் படிப்பேன். அதுதவிர தமிழரங்கம் நிச்சயமாக படிப்பேன்.

ஜெயமோகன், பாமரனும் படிப்பேன்.

நீங்க வலைப்பூ ஆரம்பிச்சாச்சா?

இன்னும் இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு பின்னூட்டம் மட்டுமே போட்டுட்டு இருக்கேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். எழுதமுடியுமான்னு தெரியல. எழுதினாலும் சரியா வருமான்னு தெரியல.

பதிவர்களுடன் நேரடி அறிமுகம் உண்டா?

இதுதான் முதல். அலைபேசியிலும் உங்களோடுதான் முதலில் பேசினேன். பிறகு கார்க்கியுடன் பேசினேன். அப்புறம் வால்பையன்.

ப்ளாக்ல சீரியஸ் எழுத்துக்கள் படிப்பதுண்டா?

ப்ளாக்ல இன்னும் அந்த அளவு இறங்கல தோழர். சீரியஸ் எழுத்துக்கள் இருக்கான்னே தெரியல.

ப்ளாக்-கை விட்டுடுங்க.. படிக்கற வேற எழுத்தாளர்கள்?

நாஞ்சில் நாடன் மிகவும் பிடிக்கும். ரமேஷ்-ப்ரேம் படிப்பேன். ப்ரேம் என்னுடைய நண்பர் ராஜகாந்தனுக்குப் பழக்கம். அவர் மூலமாக ப்ரேமுடன் சிறிய அளவில் பழக்கமுண்டு. முதலில் ரவிகுமார் (எம்.எல்.ஏ)வின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். எப்போதும் அ.மார்க்ஸ்-சின் கட்டுரைகளை தேடி, தொடர்ந்து படிப்பேன். எந்த ஒரு ப்ரச்சினையையும் தனிமனிதனாக நின்று போராடும் குணமுடைய மனிதர். வண்ணதாசனும் பிடிக்கும்! பூமணி என்ற (குறைந்த அளவில் எழுதிக்கொண்டிருக்கும்) மதுரையைச் சார்ந்த எழுத்தாளரும் பிடிக்கும்.

இலக்கிய உலகில் பழக்கமானவர்கள்?

ரமேஷ்(ப்ரேம்) பழக்கம். ஆதவன் தீட்சண்யா நெருங்கிய நண்பர். டெலிஃபோன்-ஸில் பணிபுரிகிறார். த.மு.எ.ச.வில் முக்கியப் பொறுப்பாளர். கதை, கவிதைகள் அற்புதமாக இருக்கும்! உ.பி-யில் மாயாவதி அரசால் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இலக்கியம்தான் முதல் அவருக்கு. குடும்பம், வேலைகூட இரண்டாம்பட்சம்தான் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை, இலக்கியம், செயல்பாடும் ஒரே எண்ணத்தில் இருக்கும். எந்தத் தீயபழக்கமும் இல்லாத, இலக்கியத்துக்காக தன்னை முழுக்க அர்ப்பணித்த ஒரு போராட்ட குணம் படைத்த அற்புத மனிதர்!

ப்ளாக் வந்தபிறகும் படிக்கும் பழக்கம் தொடர்கிறதா?

இல்லை. குறைந்துவிட்டது. இணையத்திலேயே முழுநேரமும் போய்விடுகிறது.

அது உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

இல்லவே இல்லை. இணையத்தில் சீரியஸ் எழுத்துகளை அவ்வளவாக தேடிப் படிக்க ஆரம்பிக்கவில்லை தோழர்.

நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறீர்கள். அரசாங்க உத்தியோகம் என்றால் சுமையற்றது இல்லையா?

(சிரிக்கிறார்..)

ஒருமுறை நான் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். இரவுப் பயணம். மைசூர் எக்ஸ்பிரஸ். சேலத்துல ரயில்வே போலீஸ் ரெண்டுபேரு இருந்தாங்க. ஏட்டு ஒருத்தரு. கான்ஸ்டபிள் ஒருத்தர். ஏட்டு ‘சீட் காலியா இருக்கா.. கொஞ்சம் தூங்கிக்கறேன்னார். கான்ஸ்டபிள் என்கூடப் பேசிக்கிட்டு இருந்தார்..

“ரொம்பக் கொடுமைங்க இந்த ரயில்வே போலிஸ் உத்தியோகம். எதிரிக்கும் கூட இந்த நிலைமை வரக் கூடாதுங்க. நாங்க ரெண்டுபேரும் ஜாலியா கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா சுத்திகிட்டிருக்கோம்ன்னு நெனைப்பீங்க. மூணு (அ) நாலு ஸ்டேஷன் சேர்ந்தது ஒரு பீட். ஒரு பீட்டிலிருந்து அடுத்த பீட் வரைக்கும் ரெண்டு போலீஸ் ட்ரெய்ன்ல போகணும். அடுத்த பீட்ல ரெண்டு பேர் ஏறுவாங்க. இப்படி மாறி மாறிப் போகணும்”

இதுல என்ன கஷ்டம்ங்க-ன்னு கேட்டேன் நான். போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து சொன்னார்...

“ஹூம்! நடுவுல நைட்ல இருட்டுல யாராவது அடிபட்டுட்டாங்கன்னா அவ்வளவுதான். ஒரு போலீஸை இறக்கிவிட்டுட்டு, கையில ஒரு லாந்தரைக் குடுத்துட்டு ட்ரெய்ன் போயிடும். அந்தப் போலீஸ் விடிய விடிய அடிபட்டு கிடக்கற உடம்புக்கு காவல் காக்கணும். விட்டுட்டுப் போய்ட்டா நாயோ, நரியோ கடிச்சுடும். ஆம்புலன்ஸோ, டாகட்ரோ அடுத்தநாள்தான் வருவாங்க. யாருமே இரவோட இரவா வரமாட்டாங்க. நான் இப்படி ஒரு தடவை ஒரு ‘பாடி’க்கு காவல் காத்தேன். இரவு ஒரு மணிக்கு ஒருத்தன் அடிபட்டு இறந்துட்டான். காவலுக்கு என்னை இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க. அப்பப்ப பிணத்தைக் கடிக்க வந்த நாய்களை விரட்டிகிட்டிருந்தேன். விடிகாலை மூன்று மணி. கும்மிருட்டு. பிணத்தைப் பார்த்தா பயம் வரும் என்று லாந்தரை பிணத்தருகே வைத்துவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திரும்பிப் பார்த்தால் அந்தப் பிணத்தின் கைமட்டும் உயர்ந்து என்னைக் கூப்பிட்டுச்சு...”

(தொடரும்)


டிஸ்கி:- அவர் யாரென்பதையும், அரசு வேலைகள் குறித்த அவரது பார்வையையும் நாளை சொல்கிறேன். அதுவரை அவர் யாரென்று தெரிந்தவர்களும் சொல்லவேண்டாம்.. ப்ளீஸ்.

Monday, October 13, 2008

சினிமா - மலரும் நினைவுகள்

எல்லாம் ஒரு அரைநாள் லீவு போடுங்கப்பா... ஒரு மகாப்பெரிய பதிவு எழுதியிருக்கேன்!


லக்கிலுக் இந்தத் தொடரில் அதிஷா, முரளிகண்ணன், நர்சிம் ஆகிய மூன்றுபேரையும் அழைக்கும்போதே, இந்த மூவரில் யாராவது ஒருத்தர் என்னை அழைப்பார் என்று அல்பையாகக் காத்திருந்தேன், அப்படி அழைக்காவிட்டாலும் சாருநிவேதிதாவுக்கு பதில் நான் – என்று தலைப்பிட்டு நானே எழுதலாம் என்று நினைத்தேன். காரணம் – வெரி சிம்பிள்:- எனக்குப் பிடித்திருந்தது.

அழைத்த முரளிகண்ணனுக்கு நன்றி...

______________________


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது நினைவில்லை. குடும்பத்தோடு போன ராணுவவீரன்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. உடுமலைப்பேட்டை கல்பனா திரையரங்கில். அந்த ஒற்றைக்கண் வில்லன் சிரஞ்சீவியைப் பார்த்து, பயந்துபோயிருக்கிறேன்.2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. மிக ரசித்துப் பார்த்தேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தன்மாத்ரா. (ஒரிஜினல் டி.வி.டி!)

எந்த இடத்திலாவது ஒரு பாட்டு வந்து மோகன்லாலின் மகன் கலெக்டராகி, மோகன்லால் குணமாகி மீராவாசுதேவுடன் டூயட் பாடிக்கொண்டு கேமராவைப் பார்த்து எல்லோரும் சிரிக்க சுபம் போடமாட்டார்களா என்று இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மகாநதி.

இன்னொன்றைச் சொல்லலாம் என்றால் உயர்ந்த உள்ளம். கமல் ஏமாற்றப்பட்டு நிற்கும்போது நானும் அழுதிருக்கிறேன். அப்புறம் பேர் சொல்லும் பிள்ளை. எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் தவிர்க்காமல் பார்ப்பேன். ஒவ்வொரு சீனும், வசனமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிப்பதில்லை.

மூன்றுமே கமல் படங்கள். எழுதியபின்தான் பார்க்கிறேன். (நான் ஒரு ரஜினி ரசிகன்!)


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

விருமாண்டி சர்ச்சை.

இதற்கெல்லாம் பிரச்சினை செய்யும் அரசியல்வாதிகளை என்ன செய்தால் தகும் என்று கோபமாய் வந்தது. அதேபோல ஒரு சீனின் ஏதாவது இருந்தால் ‘டாக்டர்களைப் பற்றி தப்பாய் சொல்லி விட்டார்கள்’ ‘வக்கீல்களைப் பற்றி தப்பாய் சொல்லிவிட்டார்கள்’ என்று தடை கோருபவர்களைக் கண்டால் இப்போதும் கோபமும், சிரிப்பும் வரும்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு! இன்னும் வியக்கிறேன்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிச்சயமாக. குமுதம் லைட்ஸ் ஆனின் ரசிகன் நான். விகடனில் கதிர்வேலனின் எழுத்துக்களும் மிகப் பிடிக்கும்.

முன்பு ஃபிலிமாலயா, சினிமா எக்ஸ்ப்ரஸ் விடாமல் படிப்பேன்.

அவ்வளவு சீரியஸாக கேட்கப்படும் கேள்விகளுக்காகவே தினத்திந்தி சினிமா கேள்விபதிலையும் படிப்பேன். (குருவியாரே.. ப்ரியாமணியின் வலது கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆசை – டைப் கேள்விகள்!!! எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் நகைச்சுவைகளையும் மிஞ்சும் கேள்விகள்!)

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜாவின் அதிதீவிர ரசிகன் நான். எதற்காகவும் அவரை விட்டுக் கொடுக்காத அளவுக்கு!

பாடல் வரிகளை உன்னிப்பாக கவனித்து ரசிப்பேன்!

இப்போது ஹாரிஸ் ஜெயராஜையும் விரும்பிக் கேட்கிறேன். லேட்டஸ்ட்:- வாரணம் ஆயிரம் – முன்தினம் பார்த்தேனே அடிக்கடி கேட்கிறேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தன்மாத்ரா (மலையாளம்) பார்த்துவிட்டு டைரக்டரை கன்னாபின்னாவென திட்டினேன். ஒரு படம் பார்த்து விட்டு இப்படி மனசைப் பிழியச் செய்கிறார்களே, இந்தத் தாக்கத்திலிருந்து எப்படா வெளிவருவேன் என்ற கோபத்தில் திட்டிய திட்டு! மோகன்லாலில் நடிப்பு – சான்ஸே இல்லை!

சம்சாரா (திபெத்) – பான் நளின் இயக்கம். துல்லிய ஒளிப்பதிவு. இறுதிக்காட்சியில் “புத்தரைப் பற்றி எல்லாரும் பேசுங்க. அவர் தனியா விட்டுட்டுப் போய்ட்ட யசோதராவைப் பற்றி யார் யோசிச்சீங்க? அவளை மாதிரி என்னால சன்னியாசியா போக முடியாது” என்று ஆரம்பித்து நாயகி பேசும் கடைசிக் காட்சி வசனம் பலமுறை திரும்பத்திரும்ப பார்க்க/கேட்க வைத்தது. அதன் தாக்கத்தில் பான் நளின் இயக்கிய படங்களைத் தேடி – VALLEY OF FLOWERS – வாங்கி வைத்தேன். இன்னும் பார்க்கவில்லை.

செழியனின் உலக சினிமாப் புத்தகத் தொகுப்பு வாங்கி, அதில் சில படங்களைத் தேர்வு செய்து வாங்கிவைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும். அதில் முதலில் பார்க்க நினைப்பது WHERE IS MY FRIEND’S HOME


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கொஞ்சம் விரிவான பதிலைப் பொறுத்தருள்க.

அப்போது உடுமலைப்பேட்டையில் இருந்தேன். யாரோ என்னைத் தேடி வந்து, “நீங்க வார மாதப் பத்திரிகைகள்ல கதையெல்லாம் எழுதிட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். குமுதம் ஏஜண்ட் மூலமா உங்களைப் பத்தி கேட்டு வந்தோம். ராஜீவ்மேனன்- ஐஸ்வர்யாராய், மம்மூட்டியெல்லாம் வெச்சு ஒரு படம் எடுத்துட்டிருக்காரு. நாளைக்கு ஆனந்த் லாட்ஜ்ல குறிப்பிட்ட சிலருக்கு போட்டுக்காட்டி க்ளைமாக்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணப் போறாங்க. நீங்களும் வரணும்” என்றார். ‘சரி.. சரி’ என்று அவரை அனுப்பி, மம்முட்டிய வெச்சு ராஜீவ் மேனன் பண்றபடத்துக்கு என்கிட்ட ஐடியா கேக்கறாங்களாம்.. என்னமா புருடா விடறாங்க என்று அதை மறந்தே விட்டேன். ஓரிரு வாரங்களுக்குப் பின் ஜூனியர் விகடனில் ‘உடுமலைப்பேட்டையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை சிலருக்கு திரையிட்டுக் காட்டி க்ளைமாக்ஸ் பற்றி விவாதித்தார் இயக்குனர் ராஜீவ்மேனன்’ என்று படித்தபோது தவறவிட்டுவிட்டதை உணர்ந்தேன்!

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த என் நண்பர் ஜனனி ஆர்ட்ஸ் வெங்கடாசலம் ஓரிரு படங்களுக்கு டைட்டில்ஸ் எழுதியுள்ளார். (வாழ்க்கைச் சக்கரம், அவசர போலீஸ் 115) இவர் மணிவண்ணன், சுந்தர்.சி-யோடு தங்கியிருந்த அனுபவங்களைச் சொல்வார். சபாஷ் மீனாவை உல்டா பண்ணியதை சுந்தர்.சி-யே மேட்டுக்குடி ஷூட்டிங்குக்கு பொள்ளாச்சி வந்தபோது சொல்லி ரசித்ததை வெங்கடாசலம் பகிர்ந்துகொள்வார். சுந்தர்.சி – குஷ்புவைத் திருமணம் செய்துகொண்ட செய்தி வந்த அன்று இரண்டு ஃபுல் அடித்தார் வெங்கடாசலம்!

இன்னொரு நண்பர் சுந்தர்ராஜன் (சுந்தர்கோல்ட்ஸ்மித் ன்னு டைட்டில்ல வரும் என்பார். நான் பார்த்ததேயில்லை!) ப்ரவீண்காந்திடம் அஸிஸ்டெண்டாக இருந்தார். இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ‘ரட்சகன்னு பேரு. ஏ.ஆர். ம்யூசிக்கு. நாகார்ஜூன் சுஷ்மிதா. படம் வரட்டும். எங்க டைரக்டர் எங்கியோ போயிடுவாரு’ என்று கொஞ்சம்போல கதையைச் சொல்வார். (எனக்குத் தெரிந்து குஞ்சுமோன்தான் ‘எங்கியோ’ போனார்.) விடைபெறும்போது ‘ஒரு அம்பது ரூபா இருந்தா குடு கிருஷ்ணா’ என்று வாங்கிப்போவார்.

அடுத்தமுறை வந்தபோது ‘ப்ரசாந்த்-ஜோதிகா கால்ஷீட் கன்ஃபார்ம்! அதே ஏ.ஆர்தான் ம்யூசிக்.’ என்று கதையைச் சொல்வார். இந்தமுறை கொஞ்சம் முன்னேறியிருந்தார். நூறு ரூபாய் கேட்டார்.

என் மீது அன்பு வைத்திருந்த நல்ல மனுஷன். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

பல்லடம் ஜி.பி.டீலக்ஸ் தியேட்டர் அதிபர் மகன் வசீகரன் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற படத்தில் நடித்திருந்தார். ஓரிரு வருடங்களுக்கு முன், அந்த தியேட்டர் அதிபரின் தம்பியோ, அண்ணனோ தன் மகனை வைத்து மலரே மௌனமா என்ற படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் திருப்பூர் மார்க்கெட்டில் இருக்கும் இன்னொருவரை சந்திக்க வரப் போவதாகவும், அங்கே என்னை வரச் சொல்லியும் ஒரு நணப்ர் அழைத்தார். அந்த ஹீரோவும் வந்திருந்தார். அப்போது என்னை அழைத்த நண்பர் நானென்னவோ பெரிய எழுத்தாளர் என்ற ரேஞ்சுக்கு சொல்லிவைத்திருந்தார். அங்கே இருந்த ஒரு தொழிலதிபர் அவருக்கு ஷாலினியின் தந்தையை மிகவும் பழக்கமென்றும், அஜீத் தொடர் தோல்விகளால் விரக்தியில் இருப்பதாகவும் சொல்லி, “அஜீத்துக்கு சூப்பர் ஹிட் தர்ற மாதிரி ஒரு கதையைச் சொல்லுங்க தம்பி. ஃபுல் அண்ட் ஃபுல் கமர்ஷியலா இருக்கணும்” என்றார்.

ஒரு பக்கம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு (என்னையும் நம்பி இதெல்லாம் கேட்கறாங்களே..) ஒரு அரைமணிநேரம் காலாற நடந்துவிட்டு போய் கதை சொன்னேன். அஜீத் ஒரு கார்ப்பந்தய வீரர். இடையில் சில காதல் காட்சிகள். சில காரணங்களுக்காக கார் ரேஸ் பக்கம் போகக்கூடாது என்று சத்தியம் வாங்கிறாள் காதலி. தாயின் கட்டளைக்காக, தாயைக் காப்பாற்ற காதலி சொல்லை மீறி க்ளைமேக்ஸில் மலேசியாவில் நடக்கும் முக்கியப் போட்டியில் அஜீத் கலந்துகொள்கிறார். இவர் இருந்தால் ஜெயிக்க முடியாதென்று வில்லன் சதித்திட்டம் தீட்டுகிறான். அதை எப்படி அஜீத் முறியடிக்கிறார்...?

‘க்ளைமேக்ஸ் முக்காமணிநேரம் கார் ரேஸ்லயே காட்டறோம்க. இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஸ்பீடுதான்’ என்று நான் சிரிக்காமல் கலாய்த்ததை நம்பிக் கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் புளகாங்கிதமெல்லாம் அடைந்துபோய் (நம்ம சொன்னவிதம் அப்படி!) ‘கதையை ஒரு ஸ்க்ரிப்ட்டா எழுதிக் கொண்டாங்க. அஜீத்தை நேர்ல பாத்து நீங்களே கதையைச் சொல்லுங்க’ என்றார்கள்.


“என் பேரு K.B. கிருஷ்ணகுமார்ங்க. இனிஷியல் கவனிச்சீங்கள்ல. K.B.-ங்க. K. பாலசந்தர், K. பாரதிராஜா, K.பாக்யராஜ், K.பாலசந்திரமேனன்னு எல்லா K.B.க்கும் நான்தான் கலையுலக வாரிசு. ஒண்ணும் கவலைப்படாதீங்க. அசத்தீடலாம்”என்று சொன்னதற்கு ஆச்சர்யப்பட்டு இரண்டு புரோட்டா எக்ஸ்ட்ராவாக ஆர்டர் பண்ணினார்கள். சாப்பிட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன்.

அதற்கப்புறம் நாலைந்துமுறை ஃபோன் பண்ணிக் கேட்டார்கள். எனக்குள்ளிருக்கும் சோம்பேறியும், சில நண்பர்களின் அனுபவமும் என்னை எழுதவே விடவில்லை. 'வரலாறு' ஹிட் ஆனபிறகுதான் ஆளைவிட்டார்கள். (என்னையும், அஜீத்தையும்!)

கபடிக்குப் பதிலாக கார் ரேஸை நுழைத்து, கில்லியை உல்டா பண்ணியதுகூடவா இவங்களுக்குத் தெரியல என்று இன்றைக்கும் வியப்பாக இருக்கும்!

மேலே கண்ட எதுவும் தமிழ்சினிமா மேம்பட உதவாது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒன்றே ஒன்று, அந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் விவாதத்தில் ராஜீவ்மேனன் நேரடியாக இருந்தாரா என்று தெரியாது. இருந்திருந்தால், நான் போய் கலந்துகொண்டு பேசியிருந்தால் நிச்சயமாக அவரது உதவியாளனாகும் வாய்ப்பை என் பேச்சின் மூலம் பெற்றிருப்பேன் என்று தோன்றும். அப்படிப் பெற்றிருந்தால் ராதாமோகனைப் போன்ற இன்னொரு டைரக்டரை த்மிழ்சினிமா பெற்றிருக்கும்! (ரொம்பத்தான்...)


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், சசிகுமார், வெங்கட்பிரபு, ராதாமோகன், மிஷ்கின் நம்பிக்கை தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவையோடு உணர்வுகளை/உறவுகளைச் சொல்லும் படங்கள் அதிகம் வரவேண்டும்.

ஒரு படத்தை எடுத்தோமா, கொடுத்தோமா என்பதில் தமிழ்சினிமா கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இரண்டாண்டு, மூன்றாண்டு என்றால் கடுப்பாக இருக்கிறது.


டெக்னிக்கலாக முன்னேறி இந்தியச் சினிமா என்றால் இந்தி மட்டுமே அடையாளம் காட்டப்படுவதைத் தூரம் தள்ளி, தமிழ்சினிமாவை முன்னிறுத்த பெரிய தலைகள் ஏதாவது செய்யணும் பாஸ்!


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அதிகம் நேரமெடுக்க வைத்த, மிகவும் சுவாரஸ்யமான கேள்வி!

இன்னும் 365 நாட்களே என்று டி.வி.க்களில் கவுண்ட் டவுன் காண்பிக்க ஆரம்பிப்பார்கள். சென்னையில், நடிக, நடிகையரை அடிக்கடி பொது இடங்களில் பார்க்கலாம். பலபேர் வெளிநாடு ஓடிவிடுவார்கள்.

திரைத்துறையினர் கூடிப்பேசி நேரடி நாடகங்கள் நடத்தலாம், ரஜினி, கமல் போன்றோர் நாடகத்தில் நடிக்கலாம். இந்த ஒருவருட இடைவேளையை நாடகத்துறையை மேம்படுத்த திரையினர் உதவலாம்.

ஒரு ஆண்டு என்பது கம்மிதான். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு இதுபோல தடை இருக்கலாம் என்று சிலருக்கு தோன்றும். திரைத்துறையினரே கூடி, ஐந்து (அ) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இப்படி இடைவெளி விடலாம் என்று தீர்மானிக்கக்கூடும்!

புத்தகவாசிப்பு அதிகப்படும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமாகவே இருக்கும். ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணரப்போகிறோம் என்ற சந்தோஷமே அது. ஆனால் இதில் பேசக்கூடாது என்ற விதி இல்லை. ஆகவே நான், முரளிகண்ணன், லக்கிலுக், நர்சிம், அதிஷா, கேபிள் சங்கர் என்று பலரும் மாதமொருமுறை கூடி சினிமா விவாதம் நடத்த முற்படுவோம். சிறப்பு விருந்தினராய் சசிகுமாரை, ராதாமோகனை, யூகிசேதுவை அழைப்போம்!


தமிழர்கள் அவரவர் ஹீரோக்களை அரசியலுக்கு அழைப்பார்கள். ஒரு வருஷம் சும்மாத்தானே இருக்கோம் என்று சிலர் ஆரம்பிக்கவும் கூடும். செய்திகளில் பெயர்வராமல் இருந்தால் பலருக்கு தூக்கம் வரப்போவதில்லை. அதற்காகவே நடிகர், நடிகைகள் பொதுச்சேவை என்று இறங்குவார்கள். ரசிகர்கள், தொண்டர்கள் என்ற பெயரில் உலாவுவார்கள்.

இதுக்கு ஐந்துபேரைக் கூப்பிடணுமா.. யாரையும் விட மனசில்ல... இருந்தாலும்...


வெயிலான் (எத்தனை நாள் எழுதாம டிமிக்கி குடுப்பீங்க?)
வெண்பூ (மாசத் துவக்கம்தானே... எழுதுங்க பார்ட்னர்)
ச்சின்னப்பையன் (லீவு முடிஞ்சுடுச்சில்ல?)
குசும்பன் (உங்க பாணில கலக்குங்க...!)
மைஃப்ரெண்ட் (மாட்டிகிட்டீங்களா..?)

Saturday, October 11, 2008

அறிவில்லையா உங்களுக்கு? மனிதாபிமானமே இல்லையா?


வெள்ளிக்கிழமை.

பேருந்து நிறுத்த மக்கள், காலணி தைக்கும் தாத்தா, இளநீரை லாவகமாகப் பிடித்து வெட்டும் பெண் தொழிலாளி, முடியைப் பின்னாமல் ஃப்ரீ ஹேரில் சென்று கொண்டிருக்கும் கேரளத்துப் பெண்கள், சாலையோரக் கோயிலில் கூட்டம் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே வாகனம் ஓட்டிக் கொண்டு வந்தான் அவன்.

வந்து கொண்டிருக்கும்போதே... கொஞ்சம் தூரத்தில் சிறுகூட்டம் கூடுவதைக் கவனித்தான்.

பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினான்.

ஒரு டி.வி.எஸ். தாங்கவே தாங்காத பாரத்தோடு குப்புறக்கிடந்தது. இரண்டு இளைஞர்கள் அதைத் தூக்கி சரிப்படுத்தி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். தென்னைமர ஈர்க்குச்சியால் நெய்யப்பட்ட விளக்குமாறு பாரம்.

கொஞ்சம் தள்ளி, 45-50 வயதுக்குட்பட்ட மனிதர் உட்கார்ந்த வாக்கில் முதுகு காண்பித்து கிடந்தார். அவ்வளவாகக் கூட்டம் சேரவில்லை. அவருக்கு அருகில் நான்கைந்து பேர் ‘உயிர் இருக்கோ... இல்லையோ’ என்று முனகியபடி பக்கத்திலே போகவே பயந்து நின்றிருந்தனர்.

இவன் தயங்காமல் அவர் அருகில் என்று அவரது முகத்தைத் தூக்கினான். அவர் கண்களை மெதுவாகத் திறந்தார். முகம் பீதியில் உறைந்திருந்தது. கை பதட்டத்தில் நடுங்கியபடி இருந்தது.

‘உங்களுக்கு ஒண்ணுமில்லண்ணா. பயப்படாதீங்க. ..” என்றபடியே அவரது தலையில் எங்காவது அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தான்.

இல்லை.

“அடிச்சுட்டுப் போய்ட்டான்.. வேணும்னே என் வண்டி மேல மோதறமாதிரி வந்து என்னைக் குப்புறத் தள்ளீட்டான்” என்று புலம்பினார் அவர்.

“என்ன வண்டிண்ணா?”

“பைக்” - இப்போது அவர் குரல் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. இதற்குள் ஒன்றிரண்டுபேர் தண்ணீர் பாட்டில் கொண்டு வர அவர் தண்ணீர் குடித்தார்.

இவன் பேசிக் கொண்டே அவரது கை, கால்களைப் பரிசோதித்தான். சிராய்ப்புக் காயங்களிலிருந்து சின்ன அளவில் ரத்தம் வந்துகொண்டிருந்தது.

“டி.வி.எஸ் ல இவ்ளோ சுமையை ஏத்தலாமா? வண்டியை எடுத்து நிறுத்தவே முடியல. எப்படி ஓட்டீட்டு வந்தீங்க?” - அந்த இளைஞரில் ஒருவன் கேட்டான்.


“டெய்லி இந்தமாதிரிதான் வர்றேன்க. ஒரு பைக்-காரன் சைடு குடுக்காம மெதுவாப் போனான்னு முந்தினேன். அவன் கோவப்பட்டு என் பக்கத்துல வந்து ஒளட்டிவிட்ட்டுட்டுப் போய்ட்டான்” என்றார்.

அவ்வளவு பாரம் அதிகம்தான். ஆனால் அந்த பாரம்தான் அவரைக் காப்பாற்றியது என்றார் கூட்டத்தில் வந்து நின்ற பக்கத்து கம்பெனியின் வாட்ச்மேன். வண்டி இரண்டுமுறை பல்டி அடித்ததைப் பார்த்திருக்கிறார். வண்டியின் இருபுறமும் விளக்குமாறு நீட்டிக் கொண்டிருந்ததால் அது ‘பம்பர்’ போல இவர்மீது நேரடி அடி படாமல் காத்திருக்கிறது!

“சரி.. உங்க ஃப்ரெண்டு நம்பர் சொல்லுங்க. கூப்பிடறேன். அவர்கூடப்
போங்க” என்கிறான் இவன்.

“99********. இது என் பையன் நம்பர்ங்க. கூப்பிடுங்க” என்றார் அவர்.

இவன் அழைத்தான்.

“தம்பி.. உங்க அப்பா வண்டி இங்க பாலு எக்ஸ்போர்ட்ஸ் பக்கத்துல பெட்ரோல் இல்லாம ட்ரை ஆகி நின்னுடுச்சு. வண்டில பாரம் இருக்கறதால தள்ளவும் முடியல. அவரு காலைல சாப்பிடலயாம். ரொம்ப ட்யர்டா இருக்காரு,வந்து கூட்டீட்டுப் போறியா?”

“நீங்க யாருங்க?”

இவன் பெயர் சொன்னான். “இந்தப் பக்கமா வந்துகிட்டிருந்தேன். என் வண்டிலயும் பெட்ரோல் இல்ல. இருந்தாலும் உங்கப்பா வண்டி பெட்ரோல் டேங்க்கே தெரியாத அளவுக்கு பாரம் இருக்கு”

“சரிங்க.. பத்து நிமிஷத்துல வர்றேன்”

நின்று கொண்டிருந்த பத்து பதினைந்துபேர் கலைந்துபோக ஆரம்பித்தனர். இவனும், இன்னும் இருவரும் மட்டுமே இருந்தனர்.

“சார்.. இவரை அந்தப் பக்கம் மர நிழல்ல உட்காரச் சொல்லுங்க” என்றார்கள் அவர்கள். சொன்னதோடன்றி அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று மர நிழலில் அமரவைத்துவிட்டு இவனிடம் வந்தார்கள்.

“சார்.. ஆஃபீஸூக்கு நேரமாச்சு. நாங்க கிளம்பறோம்” என்றபடி சென்றனர். இப்போது இவன் மட்டுமே.

இவன் அவரிடம் சென்றான்.

“டீ சாப்பிடறீங்களா?”

“இல்ல. வேண்டாம் தம்பி. நல்லவேளையா உயிர் பொழச்சேன். பின்னாடி லாரியோ, பஸ்ஸோ வந்திருந்தா நான் காலி”

“கெட்டநேரத்துலயும் ஒரு நல்ல நேரம். இல்லீங்களா?” என்றபடி மணிபார்த்தான். 9.15.

“உங்களுக்கு நேரமாச்சுன்னா கிளம்புங்க தம்பி. என் பையன் வந்துடுவான்ல”

“இல்லீங்க. பரவால்ல” இன்னும் பத்து நிமிஷம் வெய்ட் பண்றேன்”

9.30.

ரோட்டில் இவனது மேனேஜிங் டைரக்டரின் கார் இவன் நிற்குமிடத்தைக் கடந்து சென்றது. இவன் பதட்டமானான். அவரது மகனுக்கு தொலைபேசினான்.

“வீரபாண்டிகிட்ட வந்துகிட்டிருக்கேன்” என்ற பதில் கிடைத்தது. எப்படியும் குறைந்தது 20 நிமிடமாகும். இவரைத் தனியே விட்டுப் போகவும் மனமில்லை. கடந்துசென்ற இவன் எம்.டி. இவனைப் பார்த்திருந்தால்கூடத் தேவலாம். இந்தக் காரியத்துக்காக தாமதம் என்று தெரியவரும். ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இன்றைக்கு எனப்பார்த்து ஒரு முக்கியப் புள்ளியுடனான மீட்டிங்-குக்காக சரியாக ஒன்பதரைக்குப் போகிறார். இவனும் கண்டிப்பாக அங்கே இருக்கவேண்டும்.

யோசித்துக்கொண்டிருக்கும்போதே அலைபேசி ஒலித்தது. எம்.டி-யின் ரிங்டோன்.

“அண்ணா, நான் கிளம்பவா... ஸாரிங்க. ஓனர் ஆஃபீஸ்க்கு வந்துட்டாரு, கூப்பிடறாரு”

“ஐயையோ.. அதான் அப்பவே கிளம்புங்கன்னு சொன்னேனே. பையன் வந்துடுவான். நான் பார்த்துக்கறேன். ஒண்ணும் பிரச்சினையில்ல” என்றார் அவர்.

“சரிங்க. பையன் வந்த தகவலுக்கு எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்றபடி பைக்கை எடுத்துப் பறந்தான் இவன்.

அலுவலகம் சென்று மீட்டிங் முடித்தான். வேறு சில அவசரப் பணிகளும் இருந்தது. வழக்கம்போலவே இவன் ஞாபகமறதி நன்றாக வேலை செய்யவே காலைச் சம்பவத்தை மறந்தே போனான்.

மதியம் மூன்று மணி. யாருக்கோ ஃபோன் பண்ண வேண்டி டயல் செய்திருந்த நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் காலையில் அழைத்த அந்தப் நபரின் மகன் எண் தட்டுப்பட்டது.

‘அடடா.. வந்து கூட்டீட்டுப் போயிருப்பான்ல’ என்று நினைத்தபடி அந்த நம்பரை அழைத்தான்.

“தம்பி.. நாந்தான் _______________ பேசறேன். அப்பாவைக் கூப்டுட்டுப் போய்ட்டீங்களா?”

அடுத்த நிமிடம் அந்தத் ‘தம்பி’ வெகு சூடானான்.

“என்னய்யா நெனைச்சுட்டிருக்கீங்க? அறிவில்லை உங்களுக்கு? அவரு ஆக்ஸிடெண்ட்டாகி விழுந்திருக்காரு. அப்படியே விட்டுட்டுப் போயிருக்கீங்க? நான் வர்ற வரைக்கும் கூட வெய்ட் பண்ணமுடியாதா உங்களுக்கு? ச்சே.. மனிதாபமானமே இல்லியா... என்ன மனுஷங்க நீங்க? ஒரு டீ கூட வாங்கித் தர்ல.. ஒரு சோடா வாங்கித்தர்ல”

இவன் “ஸாரிங்க.. தப்புதான்.. மன்னிச்சுடுங்க..” என்று இடையிடையே சொல்லிக் கொண்டிருந்தான்.

“மன்னிப்பு வேற கேட்கறீங்க பண்ணின காரியத்துக்கு. ச்சீ” என்றபடி இணைப்பைக் கோபமாய்த் துண்டித்தான் அந்தத் தம்பி.

இவன் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தான்.

Friday, October 10, 2008

ரொம்ப தொந்தரவு பண்றேனோ...வர வர செல்ஃபோனால வர்ற தொந்தரவுகளைத் தாங்கவே முடியறதில்ல. எனக்கு ஃபோன் வர்றதைச் சொல்லவே இல்ல.

நான் ஃபோன் பண்ணி அறுக்கறேன்னு ஒரு எழுத்தாளர் நேத்து சொன்னார். அவருகிட்ட ஃபோன் பண்ணி பேசிகிட்டிருக்கறப்ப கேட்டாரு.

“இதுதான் ஒரு எழுத்தாளரை அழைக்கும் முறையா”

“யாருன்னாலும் இப்படித்தாங்க அழைக்க முடியும். இவரு எழுத்தாளர்ன்னு செல்ஃபோன்ல பச்சை பட்டனுக்கு பதிலா வித்தியாசமா செவப்பு பட்டனை அமுக்கினா கால் கட்டாகிடுமே”ன்னு அப்பாவியா நான் சொன்னதுக்கு கெட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டீட்டு ஃபோனை வெச்சுட்டாரு அந்த ரைட்டர்! இருடி.. வெச்சுக்கறேன்.

வேற ஒரு தொல்லை.. இந்த ரிங்டோன்!

ஆஃபீஸ்ல ஒரு தோழி. ஒருதடவை அவங்க செல்ஃபோனை டேபிள்ல தேடிகிட்டிருக்கறப்ப ‘இரு.. நான் கூப்ட்டுப் பார்க்கறேன்’ன்னு கூப்பிட்டப்போ ‘சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்.. ஒன்ன நெஞ்சில் வெச்சுக்கிட்டேன்’ பாட்டு! அவங்க நார்மல் ரிங்டோன் வேற.

“என்ன.. ரிங் டோனை மாத்தீட்டியா”ன்னு கேட்டா, “இது உங்களுக்குன்னு வெச்ச ரிங்டோன்”ன்னாங்க.

“இது ரிங்குடோனில்ல. சங்குடோனு! நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.

அப்புறம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா வெச்சுகிட்டாங்க. முன்னைக்கு இது பரவால்லன்னு விட்டுட்டேன்!

என் ஃப்ரெண்டோட மாமா இறந்துட்டாரு. ஃப்ரெண்ட்ஸ்கிட்டயெல்லாம் கூப்பிட்டு சொன்னான். அவன் குடுத்த நம்பருக்கெல்லாம் கூப்பிட்டப்போ... ஒவ்வொருத்தன் Dialer Tone வெச்சிருந்தானே...


‘நம்ம காட்டுல மழ பெய்யுது...’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”


‘என்ன சொல்லப் போகிறாய்’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”

‘வேறென்ன வேறென்ன வேண்டும்.. ஒருமுறை சொன்னால் போதும்’

நான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”


இன்னும் என்னென்னமோ வெச்சிருந்தாங்க. ஞாபகத்துக்கு வரல.

அதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. என்னமோ அவங்கதான் அந்த ட்யூனை கம்ப்போஸ் பண்ணினா மாதிரி ஒருவித மிதப்போட, சுத்தியும் எல்லாரும் பார்க்கறதைப் பார்த்துட்டே.. ரொம்ப சாவகாசமா ஆன் பண்ணிப் பேசுவாங்க.

சமீபமா லேடீஸ் வாய்ஸ்ல சில DIALER TONE வந்திருக்கு. கூப்பிட்ட உடனே ‘நான் உங்களை காய்கறி வாங்கீட்டு வரச் சொன்னேனே... அப்படியே ஹார்லிக்ஸ் அரைக் கிலோ வாங்கீட்டு வந்துடுங்க...’ன்னு ஆரம்பிச்சு ஒரு லிஸ்ட்டே போடுது அந்தக் குரல். என் ஆஃபீஸ்ல ஒரு ட்ரைவர் அந்த டோன் வெச்சிருக்காரு. எல்லா மனைவிமார்கள் குரல்லயும், ஒரு வித மிரட்டல் தொனி இருக்குமே, அந்த மாதிரியே இருக்கும் அந்தக் குரல். ஒரு விஷயம் என்னான்னா, ரெண்டு நாளா நான் ஆஃபீஸ் விட்டு வர்றப்ப ஒரு தடவை அவருக்கு ஃபோன் பண்ணி அந்த டோனைக் கேட்டுட்டுதான் வர்றேன். மனைவி ஏதாவது சொல்லிவிட்டிருந்து மறந்திருந்தாக் கூட அந்தக் குரல் திட்டுற திட்டுற ஞாபகத்துக்கு வந்துடுது!

சில மாதங்களுக்கு முன்னாடி ஒரு கேரளா நம்பர் எல்லார்கிட்டயும் சுத்திகிட்டிருந்தது. ‘இந்த நம்பருக்கு கூப்ட்டா பேய் பேசுது’ன்னு. ‘ஏண்டா ஞானசூன்யங்களா, அந்தப் பக்கம் பேசறது பேய்தான்னு எப்படிடா தெரியும்?’ன்னா குரல்லயே தெரியுதுங்கறாங்க.

அதே மாதிரி ‘ஹிட்லர் கடைசியா பேசினது’ன்னு ஒரு நம்பர் சுத்திகிட்டிருந்தது. அதே நம்பர் இன்னொருத்தன் குடுத்து ‘ஆப்ரஹாம் லிங்கன் பேசினது’ன்னான். இன்னும் நம்ம எம்.ஜி.ஆர், சிவாஜியை வெச்சு இந்த விளையாட்டை ஆரம்பிக்கல இவங்க!

ஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்!

Thursday, October 9, 2008

கோவி.கண்ணனைக் கண்டிக்கிறேன் !


நான் போன பதிவுல (போன-ன்னவுடனே ரெண்டு மூணு நாள் முன்னாடின்னு நெனைச்சுடாதீங்க. காலைல போட்ட பதிவுல) ஆஃபீஸ்ல மீட்டிங் ஹாலுக்கு போறதுக்கு முந்தி வானத்துல மேகத்தை ரசிச்சு, என் செல்ஃபோன்லயே படம் எடுத்தேன்-ன்னு எழுதியிருந்தேன். இதோ அந்த வரிகள் மீண்டும்.... (பேசாம இன்னைக்கும் ஆயுத பூஜையா இருந்து, இவன் எழுதாமலே இருந்திருக்கலாம்ன்னு தோணுதா... )

நேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்துட்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்!!) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல! சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன்! (இன்னும் இருக்கு அந்தப் படம்!)

நெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்கார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு!

முடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது! :-(

இந்த வரிகளைப் படிச்சுட்டு அந்தப் பதிவுல போட்ட படம்தான், நான் எடுத்த படம்ன்னு நெனைச்சுட்டாங்க பலபேர். என் மெய்ல்பாக்ஸைத் திறந்தா நூறு மெயிலுக்கு மேல, அந்தப் படம் இதா? இல்ல வேறயா-ன்னு ஒரே ரசிகர்கள் தொந்தரவு! (நெனைப்புதான்..)

அந்தப் பதிவில இருந்த படம் சுட்டபடம்.

இதோ இந்தப் பதிவுல இருக்கறபடம்தான் நான் எடுத்த படம்!

என்ன, நல்லாயிருக்கா?

பி.கு: தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம எழுதியும்,
கோவி.கண்ணனை வம்புக்கு இழுத்தும் ரொம்ப நாளாச்சு.. அதான் இப்படி. சிங்கை சின்னத்திரை சிவாஜி கோவி.ஜி கோவிக்கமாட்டாருன்னு நம்பறேன்!

குவியல் - 09.10.2008அப்துல்லாவால் உதவப்பட்ட சதுரங்க வீராங்கனை மோகனப்ரியா, நாக்பூரில் நடந்த, ஏழு காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்! “அப்துல்லா, எல்லாம் நீங்க டைமர் கொடுத்த டைமோ?” என்று பகடியதற்கு அவர் சிரித்தார். “அண்ணே.. சும்மா இருங்க… இது மொத பதக்கமா என்ன? திறமை இருக்குண்ணே.. இதெல்லாம் ஜூஜூபி அந்தப் பொண்ணுக்கு” என்றார்.

வாழ்த்துக்கள் மோகனப்ரியா!

*************************************

நமீதா நடித்த பிரம்மாண்டம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நேற்று போகலாம் என்று நினைத்தேன். போஸ்டரைப் பார்த்ததற்கே மனைவி இரண்டு மணிநேரமாக ‘உம்’மென்றிருந்தார். யாராவது சீக்கிரம் விமர்சனம் எழுதுங்கப்பா. நல்ல ஸ்டில்லோட.

இப்போதான் நமீதா அவங்களுக்கு ஏத்த பேருள்ள ஒரு படத்துல நடிச்சிருக்காங்க! பிரம்மாண்டம்!

***************************************

நேத்து ஆயுத பூஜைன்னு கம்ப்யூட்டர், மௌஸ் எல்லாத்தையும் வெச்சு சாமிகும்பிட்டோம். நான் சின்னவனா இருந்தப்ப ஸ்கூல் புக் எல்லாம் எடுத்து வெச்சுட்டு, படிக்கவே கூடாதும்பாங்க. ரெண்டு நாள் செம ஜாலியா இருக்கும். நேத்து அதே மாதிரி ‘இன்னைக்கு சிஸ்டத்துல உட்காரக்கூடாது’ன்னாங்க. (நீங்க சிஸ்டத்துலயா உட்காருவீங்க? நான் சேர்லதான் உட்காருவேன்’ன்னு மொக்கையா பின்னூட்டினா, அடி விழும்!) சரின்னு சிஸ்டம் பக்கமே வர்ல. அதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருந்துச்சு. அப்படியும், பூஜை முடிஞ்சு தமிழ்மணம் திறந்து நல்லபடியா ஒண்ணு ரெண்டு பேருக்கு கமெண்டீட்டு, க்ளோஸ் பண்ணீட்டேன்!

**************************************

இன்னைக்கு ஆஸ்திரேலியாகூட டெஸ்ட் க்ரிக்கெட் ஆரம்பிக்குது. ஏனோ முன்னைப் போல சுவாரஸ்யமே இல்ல. ஒரு வேளை மேட்ச் ஜெயிச்சா மறுபடி சுவாரஸ்யம் வரலாம். ஜெயிப்பாங்களா.. பார்க்கலாம்!

**************************************

முந்தாநாள் என்னோட பின்னூட்டத்துல வேலண்ணா ஒரு பின்னூட்டம் போட்டதுக்கு, பதிலா ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருந்தேன். பதிவு எவ்வளவு மொககையோ, அதுக்கு நேர் மாறா நல்லா இருந்துச்சுப்பா’ ன்னு அதிஷா பாராட்டியிருந்தார். அது இதுதான்...அண்ணா, நேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்!!) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல! சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன்! (இன்னும் இருக்கு அந்தப் படம்!)

நெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்கார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு!

முடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது! :-(


ஏதாவது மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்! எனக்கென்னவோ மேகம் மேல கொஞ்சம் காதல் அதிகம். வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? ஒரே தமாஷாக, வியப்பாக இருக்கும். சிலசமயம் ஒரு காதலனை விட்டு காதலி தயக்கமாய்ப் பிரிவது போல ஒரு பெரிய சைஸ் மேகத்திலிருந்து சின்ன மேகம் கலைந்து போகும். சிலசமயம் நண்பனோடு சண்டை போட்டு பிரிவது போல சின்ன மேகமொன்று சடாரென்று வேகமெடுத்து தனியாய்ப் பயணிக்கும். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நண்பன் முன்னால் நின்று ‘இரு.. இப்ப நீ என்ன சொல்ல வர்ற’
என்று கேட்பது போல, ஒரு மேகம் பிரிந்து வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று விடும். இப்படி நிறைய...

கொஞ்சம் ரசித்துத்தான் பாருங்களேன்.

*****************************

இந்தக் கவிதையை ரசியுங்கள்.


உனக்கு
எழுதுகிறபோதே
இரண்டொரு சொல்லை
தப்பிதமாய்
எழுதிவிடுகிறேன்.


பிழைகள்
பற்றியாவது
பேசுவாயில்லையா-யுகபாரதி
(பஞ்சாரம்)

***************************

Tuesday, October 7, 2008

அபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை

‘அபியும் நானும்’ படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கறேன். கண்டிப்பா அது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்ங்கறதுல சந்தேகமே இல்ல. மொழி டீம். ராதாமோகன் அழகிய தீயே-விலிருந்தே என்னைக் கவர்ந்துட்டார். அபியும் நானும் மகள்-தந்தை உறவைச் சொல்லும் படம். எனக்கும் மகள்கள் இருக்கறதால, எப்படா படம் வரும்ன்னு காத்துகிட்டிருக்கேன்.


இந்தப் படத்தோட பாடல்கள் வெளியிட்டாயிற்றுன்னு கேள்விப்பட்டேன். ஆனா ரெண்டு வாரமா வர்ல. போனவாரம் ப்ரகாஷ்ராஜைக் கூப்பிட்டு கேட்டப்போ, கண்டிப்பா அடுத்த வாரம் வரும்ன்னாரு. ராதா மோகன் வேற வைரமுத்து வரிகள்ல பின்னியிருக்கரு கிருஷ்ணா. கண்டிப்பா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னாரு, அதுனால காத்திருந்து, காத்திருந்து ஞாயிறன்னைக்கு வாங்கீட்டேன்.

குடுத்த 99 ரூபாய் சி.டி-யோட வடிவமைப்புக்கே போயிடுச்சு!


தொறந்தா இடது பக்கம் ஒரு ஸ்கூல் பேக், வலது பக்கம் ஒரு ஸ்கூல் பேக் டைப்ல இருந்தது. கூட மொழி டி.வி.டி.இலவசம் வேற!


உள்ளுக்குள்ள குழந்தைகள் கலர் அடிக்க ஒரு பேப்பர் இருந்துச்சு. அப்புறம் ரெண்டு லேபிள்.., ஒரு போட்டிக்காக அபி நமக்கு எழுதின லெட்டர் எல்லாம் இருந்துச்சு.


பாடல்களை நீங்க கேளுங்க. நான் சொல்லவந்தது வேற...


ப்ரகாஷ்ராஜ் ஒவ்வொரு பாடலுக்கும் நடுவில் பேசியிருக்கும் வசனங்களுக்காகவே கேசட் வாங்கவேண்டும். உறவுகளைக் கொண்டாட ஒரு படம் எடுத்திருக்கோம் என்று ஆரம்பிக்கிறார் பிரகாஷ் ராஜ்.

“நாம எப்பவாவாது பஸ்ல பயணம் செய்யும்போது சில பேர் நம்ம பக்கத்துல உக்கார்ந்து, தோள்ல தூங்கி விழுந்து அடிக்கடி பொசிஷனை மாத்தி இம்சை பண்ணுவாங்க. இப்படி அரை மணிநேரம், ஒரு மணிநேரப் பயணத்துலயே சக மனிதனைச் சகிச்சுக்க முடியாத நாம வாழ்க்கைப் பயணத்துல உறவு சொல்லும் மனிதர்களை எப்படிச் சகிச்சுக்கறோம்? ஒரே வார்த்தை.. குடும்பம்.”


“உங்களை நீங்க ஃபோட்டோவுல பார்த்திருப்பீங்க. கண்ணாடில பார்த்திருப்பீங்க. உறவினர் வீட்டு கல்யாண வீடியோவுல பார்த்திருப்பீங்க. சினிமாவுல பார்த்திருக்கீங்களா? பார்க்கப் போறீங்க.”


“ஒரு அப்பாவுக்கும், மகளுக்குமான கதையில நமக்கு என்ன சம்பந்தம்ன்னு நெனைக்கறீங்களா? உங்க அம்மா, தோழி, காதலி, மனைவி-ன்னு உங்க வாழ்க்கையில வர்ற பெண்களெல்லாம் யாரோ ஒருத்தரோட மகள்தானே?”


“வாழ்க்கை இன்னைக்கு இயந்திரத்தனமா, அவசரமா ஓடிகிட்டிருக்கு. நின்னு மனசொன்றொ ரெண்டு நிமிஷம் சாமியைக் கும்பிட நேரமில்லாம, வண்டிய ஓட்டிகிட்டே சாமிக்கு ஹலோ சொல்றோம். டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டே எஸ்.எம்.எஸ். அனுப்பறோம். கல்யாணத்தன்னைக்குக் கூட சென்ஃபோன் ஹேண்ட்ஸ்ஃப்ரீயைக் கழட்ட முடியல. திரும்பிப் பார்த்தா முதல் காதல், முதல் முத்தம், முதல் வெற்றி இப்படி முப்பது வருஷ வாழ்க்கைல மொத்தமா முப்பது நிமிஷம் மட்டும்தான் வாழ்ந்ததா சொல்லலாம். அதுல முக்கியமான நிமிஷம் தந்தையாகவோ, தாயாகவோ மாறுகிற தருணம். பிறந்த குழந்தையை மொத மொதல்ல கையில ஏந்தின அந்த நிமிஷம், இதுவா என் குழந்தைன்னு நம்பமுடியாம பார்த்த அந்த நிமிஷம். கல்யாணம் ஆகாதவங்க அவங்க அப்பா அம்மாகிட்ட உங்களைப் பார்த்த அந்த மொத நிமிஷத்துல அவங்களுக்குள்ள ஓடின சிலிர்ப்பு எப்ப்டி இருந்துச்சுன்னு கேட்டுப் பாருங்களேன். வார்த்தை கிடைக்காம அல்லாடுவாங்க”


“நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான பருவம் பால்ய பருவம். ஏன் தெரியுமா? நீங்க மழையில நனைஞ்சு எவ்ளோ நாளாச்சு, நிமிர்ந்து நிலாவை எப்ப பார்த்தீங்க, கடலலைல கால் நனைச்சது கடைசியா எப்ப? எல்லாரும் சின்ன வயசுலன்னு சொல்லுவீங்க. ஏன்? இன்னைக்கும் அதே மழைதானே? நாம இப்ப ஓடினாலும் கூடவே ஓடிவரும் நிலா. தொட்டு விளையாட்டுல தோத்துப் போன அதே கடல்தானே இன்னைக்கும் இருக்கு? எல்லாக் காலத்துலயும் இயற்கை இயற்கையாத்தான் இருக்கு. நாமதான் மாறிக்கிட்டிருக்கோம். இயற்கைதான் பெஸ்ட் டீச்சர். இந்த உலகத்தையும், நம்மையும் படைச்ச இயற்கைகிட்ட கத்துக்காம இண்டர்நெட்ல என்னத்த கத்துக்கப் போறோம்?”

“நம்ம வாழ்க்கைல விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ இருக்கு... வார்த்தை பழகாத குழந்தையும் குழந்தையும் ஏதோ சிரிச்சுப் பேசிப்பாங்களே... என்ன பேசிக்குவாங்க? ப்ளாட்ஃபார்ம்ல வாழற குழந்தைக்கு வீடுன்னு சொன்னதும் என்ன விஷுவல் வரும்? அவசரமா எங்கியோ போகும்போது மட்டும் ஏன் வண்டி பஞ்சராகுது? தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு தரும்போது கடவுள் என்ன நினைப்பாரு? ஒரு ரூபாய்க்கு கடலை வாங்கும்போது கூட கடைசி கடலை மட்டும் ஏன் சொத்தையா இருக்கு? இப்படி சின்னதும் பெரிசுமா நம்ம வாழ்க்கை முழுக்க கேள்வியா இருகு. அப்ப விடை என்னாங்கறீங்களா? வாழ்ந்து பார்க்கறதுதான்!”

“ஒரு பூ உதிர்வதும் இன்னொரு பூ மலர்வதும் மாதிரி உறவும் பிரிவும் இருக்கு. நாம நேசிச்ச உறவையும் திடீர்னு பங்கு போட யாராவது வரத்தான் செய்வாங்க. பெரிய அதிர்ச்சியா இருந்தாலும் அப்புறம் ஏத்துகக் பழகிடுவோம். நம்மளை விட்டி இவங்க போய்ட்டா என்ன பண்ணுவோம்ன்னு நெனைக்கறப்ப மனசுல வர்ற பயம் இருக்கே.. அப்பப்பா.. அதுதான் நரகம். ஒரே பிள்ளையா இருக்கறப்போ புதுசா தம்பிப் பாப்பா வர்ற போதும், வெரிகுட்ன்னு தட்டிக் குடுத்த டீச்சர் புதுசா வர்றவனையும் தட்டிக் குடுக்கறப்பவும், நம்ம தோழி அவ தோழனை அறிமுகப் படுத்தும்போதும்... ஏன் குழந்தைக கிட்ட அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமான்னு கேக்கும்போதும் நிலவு மாதிரி பயமும் கூடவே வரும்.”


இந்தமாதிரி அவரோட ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு கவிதை!!!

என் ஒரே வேண்டுகோள் தயவுசெஞ்சு இந்த சி.டியை எல்லாரும் காசு கொடுத்து வாங்குங்க...! ப்ளீஸ்!பி.கு: பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் நண்பர்கள் பெயரை மாற்றி எழுதியிருக்கிறேன்.. ஹி..ஹி.. கண்டுக்காதீங்க!

Monday, October 6, 2008

மனசுக்குள் மரணம்
எனக்கு இது அதிசயமாக – ஆச்சர்யமாக – நம்பமுடியாததாக இருந்தது. இது, இன்றைக்கு மட்டுமில்லை. கடந்த சில வாரங்களின், சில நாட்களிலும் இப்படித்தான்...

ஸாரி... என்ன விஷயமென்றே கூறாமல் பேச்சை வளர்க்கிறேன் அல்லவா?

போன மாதத் துவக்கத்தில் ஒருநாள். காலை உறக்கம் கலைந்து எழுமுன், எழ மனமின்றி ஹாயாக கண்ணயருவோமே, அப்படிப்பட்ட கணத்தில் என் கனவில் – கனவென்றும் கூற முடியுமா தெரியவில்லை – ஒரு முகம் மின்னி மறைந்தது.

அதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாலை செய்தித்தாளில் அந்தச் செய்தியைப் பார்க்கும் வரை. அதில் விபத்தில் இறந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வந்திருந்தது.. அவன் காலை என் மூளைக்குள் மின்னிய முகத்துக்கு சொந்தக்காரன்!

அன்று முழுவதும் இது என் மனதைக் குடைந்து கொண்டேயிருக்க, அப்புறம் அதை மறந்துவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து மறுபடி மனசுக்குள் ஒரு காட்சி.

எனக்குப் பின்னே வரும் யாரோ ஒருவனுக்கு வலது கால் துண்டாகி.... அவ்வளவுதான் அந்தக் காட்சி. ச்சே. முகமெல்லாம் தெரியவில்லை.

அன்று முழுவதும் எனக்கு குழப்பமாகவே இருந்தது. பிறகு ஊரிலிருந்து என் நண்பன் வரவே அதை மறந்து அவனோடு அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே கடைத் தெருவுக்குப் போனோம்.

டாஸ்மாக்கிலேயேவா, வாங்கி வீட்டுக்குப் போகலாமா என்று குழப்பப் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே கொஞ்ச தூரத்தில் ஏதோ விபத்து நிகழ கூட்டம் கூட ஆரம்பித்தது. பார்க்க ஓடிப்போய் திரும்பிவந்த நண்பனிடம் கேட்டேன்..

“என்னாச்சுடா... கால் போச்சா?” என்ற என்னை வியப்பாய்ப் பார்த்து திரும்பத் திரும்பக் கேட்டான் “எப்படிடா சொன்ன?” என்று. நான் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு பயம் வர ஆரம்பித்தது.

இதென்ன ஈ.எஸ்.பி. என்பார்களே.. அந்த மாதிரி எதாவதா? இருந்து தொலைக்கட்டுமே, நல்ல விஷயமாய் இருந்தாலென்னவாம்?

அதற்குப்பிறகு கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு சம்பவங்கள். எல்லாமே நடந்துவேறு தொலைக்கிறது.

சரி.. இப்போது இன்றைய குழப்பத்திற்கு வருவோம்.

இன்று அதிகாலை கனவுக்குள் கண்ட காட்சி...

நான் என் அறையை விட்டு இறாங்கி நடக்கிறேன். எனக்கு எதிரே வரும் உருவம் மீது, பின்னாலிலிருந்து வந்த லாரி மோதப்பட்டு... தூக்கி எறியப்பட....

அந்த முகமும், உடலும் எனக்கு மிகப் பரிச்சயமானது. ஆனால் உற்று கவனிக்குமும் கனவு கலைந்துவிட்டது.

நான் உடனேயே உடம்பு உதற எழுந்து, இதோ இந்த ஐந்து மணிவரை வெளியில் செல்வதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன்.

இன்று சினிமாவுக்குப் போகலாம் என்று அழைத்த நண்பன் வந்தால், புறப்பட்டுப் போகலாம், நடப்பது நடக்கட்டும். இது மட்டும் நடந்துவிட்டால்.. இனி மறைக்கக் கூடாது. ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டைப் பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி சிகிட்சை எடுக்க ஆரம்பிக்கலாம். பிறகு பத்திரிகைகளுக்கும் விஷயத்தைத் தெரிவித்துவிடவேண்டும்.

இந்தத் தீர்மானத்தில் நான் இருக்க.. இதோ வந்துவிட்டான் என் நண்பன்.

“டேய்.. புறப்படுடா. மணி அஞ்சாயிடுச்சு. இன்னும் கிளம்பலியா?”

“வர்றேன்” என் பதட்டம் மறைத்துச் சொன்னேன்.

“சரி.. ட்ரெஸ் மாத்து. ஆமா, பக்கத்துல சலூன் வரப் போகுதா?”

“ஆமா, யுவர்ஸ் ஹேர் ட்ரஸ்ஸர்ஸ்-ன்னு அடுத்த தெருவுல இருந்ததுல்ல. அதை இங்க ஷிப்ட் பண்றாங்க. ஏண்டா?” உடை மாற்றிக் கொண்டே கேட்டேன்.

“இல்ல. சாமானெல்லாம் கொண்டு வந்துட்டிருக்காங்க. அதான் கேட்டேன். சரி கிளம்பு”

என் எதிரில் வரப்போகும் துரதிருஷ்டசாலிக்கு அனுதாபம் தெரிவித்தபடி ரூம் பூட்டி குனிந்த தலையோடே தெருவில் இறங்கினேன்.

எதுவோ வாகனச் சத்தம் க்றீச்சிட படாரெனத் தலை உயர்த்தினேன்...

அடுத்த நொடி.. என் நண்பன் “டே......ய்” அலறலோடு என் கைபிடித்து இழுக்க, கை நழுவ, சுற்றி இருந்த சிலரின் திகில் பார்வையும் என்னைச் சூழ, நிலை தடுமாறிய லாரி ஒன்று என் பின்னால் இடித்து, முன் சக்கரத்தை உடம்பில் ஏற்றி....

உயிர் பிரியும் கடைசி நொடியில் நான் கண்ட காட்சி..

எனக்கெதிரில் வந்து கொண்டிருந்த இருவர் தூக்கிவந்த ஆளுயர நிலைக்கண்ணாடியைப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்ததுதான்.