Showing posts with label blog reader. Show all posts
Showing posts with label blog reader. Show all posts

Thursday, October 16, 2008

எல்லோர்க்கும் நன்றி! (விடைபெறும் பதிவு அல்ல!)


பலருடைய பதிவுகள்ல இதை நீங்க பாத்திருக்கலாம். FOLLOWERSன்னு இருக்கும். அதுக்கு வேற சிலபேர் வெச்சு போட்டிருப்பாங்க. நான் என்கூட நீங்களும் வர்றீங்களா’ன்னு கேட்டிருப்பேன். வலது பக்க சைடு பார்ல இருக்கும். (யாருய்யா அது.. அனுமதி பெற்ற பாரா?-ன்னு கேக்கறது?)

மொத மொதல்ல நான் இந்த WIDGETஐ போட்டப்ப நந்து f/o நிலா-வும் முதலாகவாவும், லக்கிலுக் இரண்டாவதாவும் என் ஃபாலோயரா வந்தாங்க. லக்கிலுக்கை தொடர்ந்து மூணாவதா வந்தது யாரு தெரியுமா? Any Guess?


அதுல FOLLOW THIS BLOGஐ க்ளிக் பண்ணி என் ப்ளாக்கை நீங்க ஃபாலோ பண்ணினா, நான் எந்த போஸ்ட் போட்டாலும் உடனே உங்க டாஷ்போர்டுல தெரியும். (கார் வெச்சிருக்கறவங்க உடனே அந்த டாஷ்போர்டுல பார்த்து தெரியலையேன்னு கேட்கக்கூடாது...)

எனக்கென்ன வசதின்னா, நான் உங்களை அடிக்கடி பார்க்கணும்ன்னா, உங்க பதிவைப் படிக்கணும்ன்னா, நீங்க என் ஃபாலோவராய்ட்டீங்கன்னா, உங்க படத்துல க்ளிக்கினா ஈஸியா போயிடும்!

என்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்ன்னா, ரெண்டுநாள் முன்னாடி என் 47வது ஃபாலோவரா டாக்டர்.ருத்ரன் வந்திருக்காரு. எனக்கு சந்தோஷம் தாங்காம கத்துன கத்துல டாக்டர் ருத்ரன்கிட்ட கூட்டீட்டு போகணும்போல-ன்னு ஆஃபீஸ்ல இருக்கறவங்க சொன்னாங்க. நான் கத்தறதே அவராலதான்னு சொன்னேன்! :-)

அவரோட வாழ நினைத்தால் வாழலாம் புத்தகம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு புத்தகம். என் துணைவி உமா, (மேரேஜுக்கும் - காதலிக்கறதுக்கும் முன்னாடி) அந்தப் புத்தகத்தைத்தான் எனக்கு முதல்ல பரிசா குடுத்தாங்க. படிச்சுட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். எப்போ மனசுக்கு ஆறுதல் தேவைன்னாலும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்.

அந்தப் புத்தகத்தை குடுத்துட்டு படிச்சாச்சா, படிச்சாச்சா-ன்னு பலதடவை உமா என்கிட்ட கேட்டாங்க. ‘ஓ'ன்னு சில அத்தியாயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். சுரத்தேயில்லாம கேட்பாங்க. எனக்கு ஏண்டா, எவ்ளோ இண்ட்ரஸ்ட் இல்லாம கேக்கறாங்க'ன்னு தோணும்.

அப்பறம் காதலை பரிமாறிகிட்டு ரொம்பநாள் கழிச்சு அந்தப் புத்தகத்தை கொண்டுவரச் சொல்லி காட்டினாங்க. அதுல ‘இதுவும் இன்னமும் வர உடனிருக்கும் உமாவுக்கு'ன்னு டாக்டர் சமர்ப்பணம் பண்ணியிருப்பாரு. நம்ம மரமண்டைக்கு அப்பதான், ஓஹோ.. இதுதான் மேட்டரா-ன்னு வெளங்கிச்சு!

அப்பறம் அவரோட பல புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சேன். என் ப்ரதர்-இன் -லா வோட பையன் பேரு ருத்ரேஷ். அதுவும் டாக்டரோட தாக்கம்தான். பேர் வைக்கறப்ப இதுதான் வேணும்னு அடம்பிடிச்சு வெச்சோம்!

இதுனால என்ன சொல வர்றேன்னா, அந்த ஃபாலோயர்ஸ்ல நீங்களும் கலந்துக்குங்க...! (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..!) எனக்கும் உங்க பதிவுப் பக்கம் வர ஈஸியா இருக்கும்ல!

லக்கிலுக்கைத் தொடர்ந்து மூணாவதா வந்தது யாரா இருக்கும்னு நிறையபேர் கண்டுபிடிச்சிருப்பீங்க. யெஸ்... வால்பையன்!


இந்த நேரத்துல நந்து, லக்கிலுக், வால்பையன், வெண்பூ, விஜய், கார்க்கி, வீரசுந்தர், முரளிகண்ணன், வெட்டிப்பயல், கார்த்திக், கூடுதுறை, வடகரை வேலன், சிம்பா, விக்னேஸ்வரன், தாமிரா, பொடியன், குசும்பன் ,சர்வேசன், karthik, அகநாழிகை, வெயிலான், அதிஷா, தியாகராஜன், தென்றல், ஜிம்ஷா, மதுசூதனா, TBCD, புதுகைத்தென்றல், கணேஷ், Ara, முத்துலெட்சுமி-கயல்விழி, திவ்யா, கும்க்கி, ரமேஷ், மதுரை நண்பன், விலெகா, ஜீவன், sen, ரோஜா காதலன், நர்சிம், கேபிள் சங்கர், Raj, Pondy-Barani, இராம், கோவி.கண்ணன், டாக்டர்.ருத்ரன், Busy, Pradeep எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் நன்றி!

(இதப்படிக்கறவங்களுக்கு இத்தனை பேரை ஏன் எழுதி அறுக்கணும்ன்னு தோணலாம்... பதிவெழுதாம படிக்க மட்டும் செய்யற நிறையபேர் இதுல இருக்காங்க. அவங்களுக்கு ஒரு சின்ன நன்றிக்கடன்!)


ரெண்டாவது முக்கியமான விஷயம், இந்த தமிழிஷ் டூல்பார். இதோ இதுல நம்ம பதிவுலயே இணைச்சுட்டா எல்லாரும் ஓட்டுப் போடுவாங்கன்னு பார்த்தா, ஒருத்தரும் போடறதில்ல! ஓட்டுப் போடறதுன்னாலே சோம்பேறித்தனம்தானே. என்னமோ உங்க இஷ்டம்... பார்த்து பண்ணுங்க!


முக்கியமான பின்குறிப்பு:-

இதப் படிச்சவங்க இதையும் போய்ப் படிங்க. சமீபத்துல நான் படிச்சதுலயே எனக்கு மிகப் பிடிச்சது!

Wednesday, October 15, 2008

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்


“என்னது.. பொணம் கையை ஆட்டிக் கூப்பிட்டுதா?”ன்னு ஆச்சர்யமா பயத்தோட கேட்டேன் நான். கான்ஸ்டபிள் சொன்னாரு. “நானும் அப்படித்தான் நெனச்சு பயந்து நடுங்கிட்டேன். ஒருவேளை உயிரிருக்குமோன்னுகூட தோணிச்சு. அப்புறம் பயந்து பயந்து பக்கத்துல போய்ப் பார்த்தா, இறந்தவன் போட்டிருந்த முழுக்கை சட்டை கிழிஞ்சு காத்துல ஆடிகிட்டிருந்தது. எனக்குத்தான் அவனே கூப்பிடறமாதிரி மனப்ரமையா இருந்திருக்கு’ன்னார். நான் கேட்டேன் ‘ஏதோ ஒரு நாளைக்குத்தானே அப்படியாகும். மத்தநாள் எல்லாம் ஜாலிதானே?’ அவரு சொன்னார்... ‘அந்த ஏதோ ஒரு நாள் இன்னைக்குத்தானா-ன்னு தெனமும் பயந்துகிட்டேதான் பயணிக்கறோம்’

இப்போ சொல்லுங்க எல்லா வேலையிலயும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத்தானே செய்யுது?”

இந்த இடத்தில் நிறுத்தினார் அவர்.


அவர்?




(கருணாகரனுடன் பரிசல்காரன்)


கருணாகரன். கும்க்கி என்கிற பெயரில் பின்னூட்டங்கள் போடுகிறார். கிருஷ்ணகிரியில், கூட்டுறவு வங்கியில் செகரட்டெரியாக இருக்கிறார்.


ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே என்னைச் சந்திக்க வேண்டும் என அலைபேசிக் கொண்டே இருந்தார். (அப்புறம் எப்பதான் வெச்சார்?) சனிக்கிழமை வருவதாகவும், ஞாயிறு மாலை திரும்புவேன் என்றும் கூறினார்.

சனிக்கிழமை ஈரோடு போய் வால்பையனைச் சந்தித்துவிட்டு, வாலோடு திருப்பூர் வந்தார்! மதியமே வந்துவிட்டார். வழக்கம்போல ஆபத்பாந்தவன், அனாதரட்சகன், நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய என் உற்ற தோழன், ஆருயிர் நண்பன் (எல்லாம் ஒண்ணுதாண்டா) வெயிலானை அழைத்து ‘ஹி..ஹி.. இந்த மாதிரி இந்த மாதிரி.. இந்த மாதிரி..இந்த மாதிரி..’ என்று சொல்ல, “ஒனக்கு இதே பொழப்பாப் போச்சுய்யா.. ஒனக்காகப் பண்ணல. ஒன்ன நம்பி வர்றவங்களுக்காகவும், திருப்பூரோட சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் போய் ரிசீவ் பண்றேன்” என்று திட்டிவிட்டு இந்தியா ஹவுஸ் லாட்ஜூக்குப் போய் அவர்களோடு ஐக்கியமானார்.

சற்று நேரத்த்தில் சாமிநாதன் ஒரு பரிசுப்பொருளோடு போய் அவர்களைச் சந்தித்திருக்கிறார். நானும் சரியாகச் சொன்ன நேரத்தில் (இரவு 9 மணி!) அவர்களைச் சந்தித்தேன். தொழிலதிபர் சாமிநாதன் சனிக்கிழமை என்பதால் அவரது நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கச் சென்றுவிட்டார்.

நண்பர் (அஜ்மன் புகழ்) நந்தகோபால் வந்தார். அவர் கருணாகரனுடன் சேர்ந்து ஆன்மிக விஷயங்கள் பேசினார். கருணாகரனின் கைலாஷ் யாத்திரை அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்!

12 மணிக்குப் பிறகுதான் என்னோடு பேச ஆரம்பித்தார் கருணாகரன். அரசு சம்பந்தமான அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அரசு இயந்திரங்கள் குறித்து அவர் பேசியது தனித்தனிப் பதிவாகப் போடலாம்! இப்போது எழுதாதீர்கள்... இன்னும் விவரம் தருகிறேன் என்றிருக்கிறார். அவரே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதினால் அது ஒரு சிறப்பான துறை சார்ந்த வலைப்பூவாக மிளிரும் என்பதில் ஐயமே இல்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவரோடு அளவளாவிவிட்டு, கிளம்பும்போது பார்த்தேன். ஒரு பெரிய BAG கொண்டுவந்திருந்தார்.

“என்னங்க.. ரெண்டு நாளைக்கு இவ்ளோ பெரிய பேக்?”

“ஒரு நிமிஷம் இருங்க” என்றவர் பேகைத் திறந்தார்.

புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள்....

கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான புத்தகங்கள்!

“ஒவ்வொண்ணாத்தாங்க படிக்க முடியும். ஒண்ணைப் படிச்சுட்டு தர்றேன். அப்புறமா அடுத்தத குடுங்க” என்றேன்.

“மெதுவாப் படிங்க. எல்லாமே உங்களுக்குத்தான்”

எனக்கு பேச்சே வரவில்லை.

இரவு இரண்டு மணிக்கு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றேன்.

அடுத்தநாள் அவர் வால்பையனோடும், இன்னொரு நண்பர் பிலாலோடும் நான் பணிபுரியும் இடத்துக்கே வந்து சென்றார்.


அவர் கிளம்பும் நேரம் ஃபோன் வந்தது. முன்பெல்லாம் பதிவெழுதிக் கொண்டிருந்த.. இப்போது பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் பாலராஜன்கீதா தம்பதி சமேதராக திருப்பூர் வந்திருந்தார்கள். புதுகை அப்துல்லா மூலமாக என்னை சென்னையில் கிளம்பும்போதே தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் வருவதாகச் சொல்லி அலைபேசினார்கள். சரியாக கும்க்கி, வால்பையனோடு நான் நின்றிருந்த இடத்தில் பாலராஜன் சார் வந்திறங்கினார். (இவரோடு ஆன சந்திப்பு நாளைக்குச் சொல்றேன்...!!)

நான் அறிமுகப்படுத்தினேன்.

“இவர்தாங்க வால்பையன்”

“நிஜமாவா? உங்க பதிவுகள்ல நீங்க மத்தவங்களை கலாய்க்கற மாதிரி கலாய்க்கலியே?”

“இல்லல்ல. இவரு வால்பையன்ங்கறது உண்மை. ஆனா இவரு ‘அவரா’ன்னு தெரியல”

வால்பையன் அடக்கமுடியாமல் சிரிக்க... விடை பெற்றார்கள்.

கும்க்கி (எ) கருணாகரனை பத்திரமாக அழைத்துவந்து என்னைச் சந்திக்கச் செய்த வால்பையனுக்கும், வால்பையனை பத்திரமாக அழைத்துவந்த கருணாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அரசு வேலைகள் குறித்து கருணாகரன் சொன்ன ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

“பப்ளிக்குக்கு அரசு வேலைகள் சம்பந்தமா யாரைப் பார்க்கணும்ன்னு தெரியாததுதான் பெரிய தப்பு. அதுனால ஒரு நாள்ல முடிக்க வேண்டிய வேலைக்கு மக்கள் மாதக்கணக்கா அலையறாங்க. அரசு எவ்வளவோ செலவு பண்ணுது. ஒவ்வொரு அரசு அலுவலகங்கள்லயும் அந்தத் துறைல என்ன வேலை நடக்குது.. எதெதுக்கு யாரைப் பார்க்கணும், குறைந்தது எத்தனை நாள் ஆகும் என்பது மாதிரியான விளக்கக் கையேடு இருந்தா எவ்வளவோ ப்ரச்சினைகள் தீரும். பத்து பேர்ல ஒருத்தனாவது “இது உங்க வேலை. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டிய வேலையை பத்து நாளா இழுக்கறீங்க”ன்னு தைரியமா போய்க் கேட்பாங்க. ஆனா நாம கேக்கறது தப்போ-ங்கற பயத்துலயே யாரும் ஒண்ணும் கேக்கறதில்ல. இந்த மாதிரி கையேடு வர்றதால அவங்க வேலை அதிகமாகும்ங்கறதும் வராம இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். யாராவது பப்ளிக் இண்ட்ரெஸ்ட்டுக்காகவாவது இதப் பண்ணலாம்” என்றார்.


கும்க்கி, ப்ளீஸ் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நீங்களே அரசுத் துறைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்க. இது வேண்டுகோள் இல்லை.

கட்டளை!

Tuesday, October 14, 2008

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி


சிலர் இருக்கிறார்கள். சாதாரணமாகத் தெரிவார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமையும், அறிவும் அவர்களே அறியாததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரைச் சந்தித்தேன் சமீபத்தில்.

என்னைப் பார்க்க வேண்டும் என்றே அவரது ஊரிலிருந்து வந்திருந்தார். அலுவலின் காரணமாய் அவரை வரவேற்கவோ, முழுமையாக அவரோடு இருக்கவோ வக்கற்று இருந்தேன் நான். அவரோடு பேசியதிலிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டேன் நான்.

அவரோடு உரையாடியதிலிருந்து.....


உங்களுக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய நண்பர் திரு. ராஜகாந்தன். கரூரில் NHல் பணிபுரிகிறார். அவர்தான் எனக்கு BLOGGER எனப்படும் பதிவுலகைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்தினார்.

அதற்கு முன்பு வாசிக்கும் பழக்கம்...

மிகவும் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன்.


உங்கள் நண்பர் பதிவுலகில் எதை அறிமுகப்படுத்தினார்?

முதல்ல தமிழ்மணத்தைத்தான் அறிமுகப்படுத்தினார். தமிழ்மணம் மூலமா உங்களுடைய பதிவு ஏதோ ஒன்றைத்தான் முதல்ல படிச்சேன். அப்புறம் பலருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிச்சேன். தமிழ்மணம் மூலமா போனா எக்கச்சக்கமா இருக்குன்னு இப்போ நேரடியாவே சிலருடைய பதிவுகளை மட்டும்தான் படிக்கறேன்.

என்னுடைய பதிவுல எது புடிச்சது?

அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவு சிறப்பானதாக எதுவும் மனதில் இல்லை! ஆனா சுவாரஸ்யமா எழுதற நீங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் சீரியஸ் எழுத்துக்கு பயணிக்கணும்ங்கறது என்னுடைய தாழ்மையான, தனிப்பட்ட கருத்து.


யார் யாருடைய பதிவுகளைப் படிப்பீங்க?

உங்களுடையது (பரிசல்காரன்), லக்கிலுக் (கொஞ்சம் இடை வலி விட்டு...) வால்பையன், தாமிரா, வடகரைவேலன், அதிஷா ஆகியோருடையதைத் தவறாமல் படிப்பேன். அதுதவிர தமிழரங்கம் நிச்சயமாக படிப்பேன்.

ஜெயமோகன், பாமரனும் படிப்பேன்.

நீங்க வலைப்பூ ஆரம்பிச்சாச்சா?

இன்னும் இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு பின்னூட்டம் மட்டுமே போட்டுட்டு இருக்கேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். எழுதமுடியுமான்னு தெரியல. எழுதினாலும் சரியா வருமான்னு தெரியல.

பதிவர்களுடன் நேரடி அறிமுகம் உண்டா?

இதுதான் முதல். அலைபேசியிலும் உங்களோடுதான் முதலில் பேசினேன். பிறகு கார்க்கியுடன் பேசினேன். அப்புறம் வால்பையன்.

ப்ளாக்ல சீரியஸ் எழுத்துக்கள் படிப்பதுண்டா?

ப்ளாக்ல இன்னும் அந்த அளவு இறங்கல தோழர். சீரியஸ் எழுத்துக்கள் இருக்கான்னே தெரியல.

ப்ளாக்-கை விட்டுடுங்க.. படிக்கற வேற எழுத்தாளர்கள்?

நாஞ்சில் நாடன் மிகவும் பிடிக்கும். ரமேஷ்-ப்ரேம் படிப்பேன். ப்ரேம் என்னுடைய நண்பர் ராஜகாந்தனுக்குப் பழக்கம். அவர் மூலமாக ப்ரேமுடன் சிறிய அளவில் பழக்கமுண்டு. முதலில் ரவிகுமார் (எம்.எல்.ஏ)வின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். எப்போதும் அ.மார்க்ஸ்-சின் கட்டுரைகளை தேடி, தொடர்ந்து படிப்பேன். எந்த ஒரு ப்ரச்சினையையும் தனிமனிதனாக நின்று போராடும் குணமுடைய மனிதர். வண்ணதாசனும் பிடிக்கும்! பூமணி என்ற (குறைந்த அளவில் எழுதிக்கொண்டிருக்கும்) மதுரையைச் சார்ந்த எழுத்தாளரும் பிடிக்கும்.

இலக்கிய உலகில் பழக்கமானவர்கள்?

ரமேஷ்(ப்ரேம்) பழக்கம். ஆதவன் தீட்சண்யா நெருங்கிய நண்பர். டெலிஃபோன்-ஸில் பணிபுரிகிறார். த.மு.எ.ச.வில் முக்கியப் பொறுப்பாளர். கதை, கவிதைகள் அற்புதமாக இருக்கும்! உ.பி-யில் மாயாவதி அரசால் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இலக்கியம்தான் முதல் அவருக்கு. குடும்பம், வேலைகூட இரண்டாம்பட்சம்தான் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை, இலக்கியம், செயல்பாடும் ஒரே எண்ணத்தில் இருக்கும். எந்தத் தீயபழக்கமும் இல்லாத, இலக்கியத்துக்காக தன்னை முழுக்க அர்ப்பணித்த ஒரு போராட்ட குணம் படைத்த அற்புத மனிதர்!

ப்ளாக் வந்தபிறகும் படிக்கும் பழக்கம் தொடர்கிறதா?

இல்லை. குறைந்துவிட்டது. இணையத்திலேயே முழுநேரமும் போய்விடுகிறது.

அது உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

இல்லவே இல்லை. இணையத்தில் சீரியஸ் எழுத்துகளை அவ்வளவாக தேடிப் படிக்க ஆரம்பிக்கவில்லை தோழர்.

நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறீர்கள். அரசாங்க உத்தியோகம் என்றால் சுமையற்றது இல்லையா?

(சிரிக்கிறார்..)

ஒருமுறை நான் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். இரவுப் பயணம். மைசூர் எக்ஸ்பிரஸ். சேலத்துல ரயில்வே போலீஸ் ரெண்டுபேரு இருந்தாங்க. ஏட்டு ஒருத்தரு. கான்ஸ்டபிள் ஒருத்தர். ஏட்டு ‘சீட் காலியா இருக்கா.. கொஞ்சம் தூங்கிக்கறேன்னார். கான்ஸ்டபிள் என்கூடப் பேசிக்கிட்டு இருந்தார்..

“ரொம்பக் கொடுமைங்க இந்த ரயில்வே போலிஸ் உத்தியோகம். எதிரிக்கும் கூட இந்த நிலைமை வரக் கூடாதுங்க. நாங்க ரெண்டுபேரும் ஜாலியா கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா சுத்திகிட்டிருக்கோம்ன்னு நெனைப்பீங்க. மூணு (அ) நாலு ஸ்டேஷன் சேர்ந்தது ஒரு பீட். ஒரு பீட்டிலிருந்து அடுத்த பீட் வரைக்கும் ரெண்டு போலீஸ் ட்ரெய்ன்ல போகணும். அடுத்த பீட்ல ரெண்டு பேர் ஏறுவாங்க. இப்படி மாறி மாறிப் போகணும்”

இதுல என்ன கஷ்டம்ங்க-ன்னு கேட்டேன் நான். போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து சொன்னார்...

“ஹூம்! நடுவுல நைட்ல இருட்டுல யாராவது அடிபட்டுட்டாங்கன்னா அவ்வளவுதான். ஒரு போலீஸை இறக்கிவிட்டுட்டு, கையில ஒரு லாந்தரைக் குடுத்துட்டு ட்ரெய்ன் போயிடும். அந்தப் போலீஸ் விடிய விடிய அடிபட்டு கிடக்கற உடம்புக்கு காவல் காக்கணும். விட்டுட்டுப் போய்ட்டா நாயோ, நரியோ கடிச்சுடும். ஆம்புலன்ஸோ, டாகட்ரோ அடுத்தநாள்தான் வருவாங்க. யாருமே இரவோட இரவா வரமாட்டாங்க. நான் இப்படி ஒரு தடவை ஒரு ‘பாடி’க்கு காவல் காத்தேன். இரவு ஒரு மணிக்கு ஒருத்தன் அடிபட்டு இறந்துட்டான். காவலுக்கு என்னை இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க. அப்பப்ப பிணத்தைக் கடிக்க வந்த நாய்களை விரட்டிகிட்டிருந்தேன். விடிகாலை மூன்று மணி. கும்மிருட்டு. பிணத்தைப் பார்த்தா பயம் வரும் என்று லாந்தரை பிணத்தருகே வைத்துவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திரும்பிப் பார்த்தால் அந்தப் பிணத்தின் கைமட்டும் உயர்ந்து என்னைக் கூப்பிட்டுச்சு...”

(தொடரும்)


டிஸ்கி:- அவர் யாரென்பதையும், அரசு வேலைகள் குறித்த அவரது பார்வையையும் நாளை சொல்கிறேன். அதுவரை அவர் யாரென்று தெரிந்தவர்களும் சொல்லவேண்டாம்.. ப்ளீஸ்.