Saturday, September 27, 2014

கற்காததினால் ஆய பயன்...

ப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.

போய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

உடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.

அடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.

“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க?”

“வெளில, ஹோட்டலுக்குத்தான்”

“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே?”

“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே?” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.

அப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.

*

டெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.

காரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.

அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.

காரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

நேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.

கற்றதினால் ஆன பயனென் கொல்?

Tuesday, September 16, 2014

அவியல் 16-9.2014

‘ஐ’ பட இசைத்தட்டை சக நண்பர் அர்னால்ட் ஸ்வாஷ்ஸ்னகர் வந்து ரிலீஸ் செய்துவிட்டார். இனி மாதம் மும்மாரி பொழிவதுடன், தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சினை உள்ளிட்டவைகள் தீர்ந்துவிடும் என்று நம்புவோமாக.

என்னதான் இப்படி நக்கலடித்தாலும், ஷங்கர் தன் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றிவிட்டார் என்றே கூறவேண்டும். நாடு முழுவதும் ‘ஐ’ ஜுரம்தான். டீசரும் வெளியாகிவிட்டது. பத்து ஸ்க்ரோலிங்கில் ‘இதான்பா கதை’ என்றொன்று வாட்ஸப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஏ.. இந்தாரு, எந்திரன் மாதிரியே செவப்புச்சாரி, மல்லிப்பூ’ என்றொரு படம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கவனித்தது இன்றைய தினசரிகளில் அர்னால்ட்டின் இரண்டு படங்கள்.

அர்னால்ட், யாரோ பூக்கடை துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் தோளில் கைபோட்டு ஜாலியாக பேசியதை ‘தி இந்து’வெளியிட்டிருந்தது. பொது இடங்களில் எதிர்ப்படும் முகங்களைப் பார்த்து புன்னகைப்பதும், ஹலோ சொல்வதும் அவர்களுக்குண்டான பழக்கம்தான். பக்கத்து வீட்டினரையே முறைத்தபடி கடக்கும் நமக்கு இது கண்டிப்பாக நியூஸ்தான். நான் அமெரிக்கா சென்றிருந்தபோதும், பாரீஸில் வேலை நிமித்தம் இருந்தபோதும், அதேபோல லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில்..

சரி விடுங்க. நான் ஜாலி வாலி ஜாதி. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை.

இரண்டாவது அம்மாவும் அர்னால்டும் புகைப்படம். கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அம்மா ஹாயாக சாய்ந்திருக்க, நான்குமுறை மிஸ்டர் யுனிவர்ஸும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியாவும் வென்ற பாடி பில்டர் அர்னால்ட், சாயாமல் வெகு பவ்யமாக அமர்ந்திருந்தார்.

யாரோ சொல்ல்ல்லி, அனுப்ச்சிருக்காங்க!
------------------------------

இன்று காலை கன்னாபின்னாவென்று கோவை நோக்கி பேருந்துகள் பறந்து கொண்டிருந்தன. பல தனியார் பேருந்துகள். உள்ளே ஓரிருவர் கூட இல்லை. விசாரித்தால் கோவையில் முதல்வர் விழாவுக்காம்.

‘அதுக்கேன்யா காலியா போவுது?’ என்று கேட்டேன்.

‘கணக்கு காட்டத்தான். ஹெலிகாப்டர்லேர்ந்து அம்மா பார்த்தா பூரா பஸ்ஸா தெரியணும். அதுக்குத்தான்”

உடனே நான்..

ப்ச். வேணாம். அர்னால்டே அவ்ளோ பவ்யம்னுட்டு நான் பேசினா அவ்ளோதான்.

-------

ஸ்டார் மகாபாரதம். இதிகாசத்தை சீரியலாக்கி இருக்கிறார்கள். அபிமன்யு வதமெல்லாம் “கர்ண” கொடூரம்! எந்த மொழியிலும் இப்படி எழுதப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் என்னென்ன நிகழப்போகிறதோ!

கிருஷ்ணா!!!
------------


நேற்று முன்தினம் YCI சார்பாக, உடுமலையில் IMA ஹாலில் பேசியபோது, உடுமலை இரயில்நிலையம் காணாமலே போய்விட்டது என்று அங்கலாய்த்தேன். எனக்குப் பின் பேசிய டாக்டர் பாலசுப்ரமணியம், உடுமலை மக்கள் பேரவை அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் இன்னும் நான்கு மாத காலத்திற்குள்ளாக இரயில் நிலையம் செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி.

போலவே என்னைக் கடுப்புக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம், உடுமலையின் ஒரு சாலை விடாமல் எல்லாச் சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பாதாள சாக்கடையாம். பேசாமல் பூமிக்கு கீழேயே வழியமைத்து புரட்சி பண்ணலாம். அத்தனை குழிகள். என்றைக்கு சரி செய்வார்களோ!

--------------


Friday, September 12, 2014

வரு-மானம்

நண்பனோடு அந்த உணவகத்தில் டின்னரில் இருந்தபோது, ரேடியோ போன்றொரு ஒலி கேட்டது.

‘நால்ரோடு சிக்னல் நால்ரோடு சிக்னல்’

நிமிர்ந்தால் வாக்கிடாக்கியுடன் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரர் உள்ளே வந்தமர்ந்தார். கொஞ்சமே கொஞ்சம் அந்த வாக்கி டாக்கியின் சத்தத்தைக் குறைத்தார். வாஷ் பேசினில் போய்க் கைகழுவி வந்தவர், “ஏம்ப்பா டிஷ்யூ பேப்பர் இல்லையா?’ என்றார். நார்மலாக இந்த எழுத்து 12 ஃபாண்ட் சைஸ் என்றால், அவர் கேட்டதை ஃபாண்ட் சைஸ் 30ல் எழுதலாம் அவ்வளவு ச-த்-த-மா-க-க் கேட்டார்.

‘இல்லை சார்’ என்று மிகவும் தன்மையாக பதில் சொன்ன சர்வர், இடதுபுறச் சுவற்றைப் பார்த்தார். அங்கே டிஷ்யூ பேப்பர் உபயோகத்தால் அழியும் மரங்களைப் பற்றிய ஒரு சிறிய போஸ்டர் இருந்தது. போக்குவரத்து காவல்துறை நண்பர் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.

“என்ன இருக்கு?” என்றார். அதே 30 ஃபாண்ட் சைஸ் குரல்.

ஆர்டர் செய்துவிட்டு, வாக்கி டாக்கியின் சப்தத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, ஃபோனை எடுத்தார்.

“அப்பறம் மாப்ள? எங்க இருக்க?”

“..............................” - எதிர்முனையின் பேசியது - நல்லவேளை - கேட்கவில்லை.

“நான் இங்க சாப்டுட்டு இருக்கேன் மாப்ள. கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கெல்லாம் போகாமயே டூட்டீல ஜாய் பண்ணீட்ட போல?”

அவரது குரலுக்கு உணவருந்திக் கொண்டிருந்த எல்லாருமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அதை சட்டை செய்ததாய்த் தெரியவே இல்லை.

சில நொடிகள் சம்பாஷணைக்குப் பிறகு, “அப்பறம்? இன்னைக்கு என்ன வசூல்?” என்றார் அதே சத்தமான குரலில்.

நான், திடுக்கிட்டு -  நிமிர்ந்து நேராய் அவரையே பார்த்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை.

“அவ்ளோதானா? இதை வெச்சுட்டு என்னய்யா பண்ணப்போற? கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது? டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ?”

இதற்கு எதிர்முனை, ‘உனக்கு?’ என்று கேட்டிருக்கவேண்டும் என்பது இவரது பதிலில் தெரிந்தது.

“ப்ச்..  இங்க அதவிட மோசம் மாப்ள. காலைல இருந்து ஒண்ணும் சிக்காம, சாயந்தரம் ஒரே ஒரு மணல் லாரிக்காரான் வந்தான். வெறும் 400 ரூவாதான் கறக்க முடிஞ்சது. கடுப்பாய்டுச்சு மாப்ள இன்னைக்கு”

பொது இடத்தில், நான்கைந்து பேர் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவகத்தில் லஞ்சப் பரிமாற்றம் குறித்து வெளிப்படையாய், இத்தனை சத்தமாய்ப் பேசிக் கொள்வது குறித்த கவலை கிஞ்சித்தும் அவருக்கு இருக்கவில்லை. அதை ஏதோ ‘இன்னைக்கு எங்க பாஸ் என்னைப் பாராட்டினார்’ என்று ஊழியர்கள் செய்தி பரிமாறிக் கொள்வதைப் போல, பெருமையாய்ப் பகிர்ந்து கொள்கிறார்.

எனக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பனிடம் புலம்பிக் கொண்டே, அவசர அவசரமாய் அந்த இடம் விட்டு நகர்ந்தேன். கை கழுவிட்டு, பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகபட்சமாய் அந்தக் காவல்துறை நண்பரைக் கடக்கும்போது அவரை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் பார்க்கவில்லை என்றதால் இருக்கலாம்.

வெளியே வந்து பைக் எடுக்க நிற்கையில் நண்பன் சொன்னான். “அவனுக்கே அக்கறை இல்லை, பயம் இல்லை. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற?”

“இல்ல பாஸ். முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். இத்தனை பேர் கவனிக்கறாங்கன்னுகூட தெரியாதா? பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது?”

“தைரியமா பேசறான்னா அவ்ளோ லஞ்சம் குடுத்துதான் அவனும் வேலை வாங்கீருப்பான். அத அடைக்கணும்ல?”

‘அது சரி” என்ற நான் ஒரு நிமிஷம் நின்றேன். போனமுறை இதைப்போன்ற ஷாப்பிங் மால் விவகாரம் ஒன்றைப் பகிர்ந்தபோது, நண்பர்கள் ‘நானா இருந்தா சும்மா வந்திருக்க மாட்டேன். நாலு கேள்வி கேட்டுட்டுதான் வந்திருப்பேன்’ என்றெல்லாம் உசுப்பேற்றியது ஞாபகம் வந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘ப்ச்’ என்று பைக்கை எடுக்கப் போனேன்.

திடீரென்று ஒன்றை கவனித்து, “இரு வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு, நேராக அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன்.

சாப்பிட்டு முடித்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “என்ன?” என்பதாய் புருவமுயர்த்தினார்.

“உங்க பைக்கை, க்ராஸா நிறுத்திருக்கீங்க. என் பைக்கை எடுக்க முடியல. கொஞ்சம் வர்றீங்களா?” என்றேன். இப்போது என் குரல் சாதாரணத்தை விட கொஞ்சம் கடுமையாய், உயர்ந்திருந்தது.

“சைடுல தள்ளி வெச்சுட்டு எடுத்துப் போங்க பாஸ்”

“இல்லைங்க.. சைடு லாக் பண்ணீருக்கு. நீங்களே வந்து எடுங்க” என்றேன்.

அவர் மிகுந்த சலிப்புடனே எழுந்து வெளியே வந்தார். Anti Snatching Squad என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தன் பைக்கை சைட் லாக் விடுவித்து நகர்த்தினார்.


அப்போது நான் என் பைக்கை எடுத்தவாறே, என் நண்பனைப் பார்த்து சொன்னேன்.

“நான் சொன்னேன்ல.. ? இவருதான் பாஸ்”

என் நண்பன் குழப்பமாய்ப் பார்க்க, அந்த போலீஸ்காரரும் என்னைப் பார்த்தார்.

“ஒண்ணும் இல்ல சார்.. வெறும் நானூறுதான் வருமானம் வந்துச்சுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம் சார்.. வர்ட்டுங்களா?” என்று பைக்கை உதைத்து விரட்டினேன்.

இன்றைக்கிலிருந்து அவர் திருந்துவாரா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர் வாங்கும் லஞ்சப்பணத்தை பொது இடங்களில் இவ்வளவு சத்தமாய்ப் பகிர்ந்துகொள்ள மாட்டாரென்பது மட்டும் நிச்சயம்.
.

Sunday, September 7, 2014

கேள்வி கேட்டா தப்பா சார்?

வரிசையில் நான் முதல் ஆள். Counter Opening Time: 8.45 AM என்றிருந்தது. நான் வாட்சைப் பார்த்தேன். 9.01 என்று காட்டியது. கொஞ்சம் தள்ளி, சலவைக்கல் பெஞ்ச்சில் உமாவும், மகள்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அது கோவையின் ஒரு Shopping Mall. ‘8.45க்கு டிக்கெட் வாங்கிட்டு, மால் ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு, 9.30 ஷோ பார்க்கலாம்’ என்பது எங்கள் திட்டம்.

என் வாட்ச், ‘9..02’ என்றபோது சாவகாசமாக அரட்டை அடித்தபடி மூன்று பேர் கவுண்டர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளிருந்த, ஸ்க்ரீன் உயர்த்தப்படவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான்கைந்து கவுண்டர்கள் முன்னிலும் அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர்.

9.03

9.04

9.05

9.06

இப்போது மாலின்,  பணிப்பெண் ஒருத்தி சீருடையில் அந்த கவுண்டர் கதவைத் திறந்து, ஒரு கையில் கதவைப் பிடித்தவாறே உள்ளிருந்த ஒருத்தியிடம் 500 ரூவாய்த் தாளை நீட்டி டிக்கெட் கேட்டார். உள்ளிருந்த பெண்ணும் ஜாலியாக சிரித்துக் கொண்டு, ஏதோ அரட்டை அடித்தபடியே அவளுக்கு முதல் டிக்கெட்டை வழங்க ஆயத்தமானார்.

வழக்கம்போல என்னுள் இருந்த அம்பி விழித்துக் கொள்ள, “ஏங்க 8.45 கவுண்டர் ஓபன்னு போட்டிருக்கு. டிக்கெட் வாங்கிட்டு சாப்டுட்டு படம் பார்க்கலாம்னு வந்தா, 9.10 ஆகப்போவுது.. இன்னும் டிக்கெட் இஷ்யூ ஆரம்பிக்காம இருக்கீங்களே?’ என்றேன்.

நான் சொன்னது உள்ளிருந்தவர்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை. பாதிக் கதவை திறந்தபடி நின்றிருந்த பெண் நான் சொன்னதை உள்ளே வழிமொழிந்தார்:

”எட்டே முக்கால்ன்னு போட்டு, எட்டேமுக்காலுக்குத் தொறக்கலியாம். இப்டி லேட் பண்ணினா எப்டி டிஃபன் சாப்டு படம் பார்க்கறதுன்னு கேட்கறாரு” என்றார், கொஞ்சம் அதிகபட்ச டெசிபலில்.

அதற்கு உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வர சட்டென்ற ஒரு பயங்கரச் சிரிப்பு அவர்களுக்குள்ளே பரவியது.

‘என்ன சொன்னாங்க?’ என்று கேட்டேன் சற்றே கோபமுற்ற நான்.

“அவங்க என்கிட்ட சொன்னாங்க”

“நான் சொன்னத உள்ள சொன்னீங்கள்ல? அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்கிட்டயும் சொல்லுங்க”


“அவங்க என்கிட்டதான் சொன்னாங்கன்னு சொல்றேன்ல?”

இதற்குள் உள்ளே இருந்த பெண், ‘ஏய்.. உள்ள வந்து கதவைச் சாத்துடி. இப்டி பாதிக் கதவை தொறந்து நின்னு பேசாத’ என்று அதட்ட அந்தப் பெண்ணும் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்களில் கண்ணாடியைத் தடுத்திருந்த திரை உயர்த்தப்பட, என் முன்னே இருந்த கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பெண்ணும், அவருடன் வெளியிலிருந்து வந்த பெண்ணும் நின்றிருந்தனர். என்னைப் பார்த்ததும், அந்தப் பெண், டிக்கெட் வழங்கும் பெண்ணிடம் ஏதோ சொல்ல, டக்கென்று அவர் சீட் மாறி வேறு கவுண்டரில் சென்றமர்ந்தார். இப்போது நான் நின்றிருந்த கவுண்டரில் டிக்கெட் வழங்க யாருமில்லை.

நான் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மாலின் ஊழியப் பெண் வெளியே வந்து என்னை அவசரமாய்க் கடந்து சென்று விட, மற்ற டிக்கெட் கவுண்டர் வழியே ஆளாளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏதுமறியாத என் மகள் மீரா என்னிடம் வந்து, ‘என்னாச்சுப்பா.. ஃபோன் குடுங்க நான் அந்தக் கவுண்டர்ல நின்னு வாங்கிடறேன்’ என்று என் ஃபோனை வாங்கி இன்னொரு வரிசையில் நின்றாள். இதையெல்லாம் முகத்தில் வெற்றிக் களையுடன் டிக்கெட் கொடுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

நுழைவுச் சீட்டு கிடைத்ததும், நேராக மேலே திரையரங்குக்குப் போனோம். லிஃப்ட் கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்த வரிசையில் போய் நின்றோம். 20 பேர்கள் இருந்த வரிசை, என் முன்னே நான்கைந்து பேராக குறைந்ததும் கவனித்தேன். கீழே 500 ரூபாயைக் கொண்டு வந்து டிக்கெட் வாங்கிய பெண் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், அவர் அருகே நின்று கைப்பயைச் சோதித்துக் கொண்டிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த அம்மணி என் முன் நின்றவர்களை விடுத்து, நேராக என்னைப் பார்த்தார்.

‘நான் சொன்னேன்ல.. இவன்தான் கீழ ரூல்ஸ் பேசினது’ – இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது உ.கை.நெ.கனி.

எனக்கு மீண்டும் ஒரு மாதிரி அவமான உணர்வு மேலிட, அவர்கள் அருகே சென்றதும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன்:

“ஜெயிச்சாச்சா? நான் நியாயமாக் கேட்ட கேள்விய உள்ள கிண்டலா சொல்லி, அந்தம்மாவை சீட் மாறி உட்கார வெச்சு எனக்கு லேட்டா டிக்கெட் கெடைக்க வெச்சதுல ஒரு சந்தோஷம் உங்களுக்கு.. இங்க இவங்ககிட்ட என்னைப் பத்தி கமெண்ட் பண்றதுல ஒரு சந்தோஷம். இப்ப நல்லா ஃபீல் பண்றீங்கள்ல?”

இதைக் கேட்டதும் சற்றுத் தள்ளி இருந்த சஃபாரி ஆசாமி வந்தார்.

”என்னம்மா ப்ரச்னை?’

“தெரியல சார். கீழயும் இப்டித்தான் ஏதோ கேட்டு ப்ரச்னை பண்ணாரு”

“என்ன சார் வேணும்?”

“கஸ்டமர் கேர்தான் சார் வேணும். வேறென்ன வேணும்? 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம்? 8.45க்கு போட்டுட்ட்டு 9.10 வரைக்கும் கவுண்டர் திறக்கல. அதக் கேட்டதுக்குத்தான் இத்தனையும்....”

இதற்குள் உமாவும் மகள்களும், ‘வாங்க போலாம்’ என்றழைக்க, நானும் நகர்ந்தேன்.

இடைவேளையில் நடந்தவற்றை என் மகள்களிடம் பகிர்ந்து கொண்டேன். படம் முடிந்ததும், ‘வெளில போறப்ப அந்தப் பொண்ணைப் பார்த்து மறுபடி கேட்கலாமாப்பா?’ என்றாள் மீரா. ‘வெளில போற வழி வேற.. அதுனால அவங்களைப் பார்க்கப் போறதில்ல” என்றேன்.

ஆனால், சாப்பிட்டு விட்டு வேறு வழியாக எஸ்கலேட்டரில் இறங்க, கீழே அந்தப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தார்.

“ப்பா.. அந்தக்கா நிக்குது. ஏதும் கேட்கப் போறீங்களா?’

”இல்ல குட்டீம்மா. அவங்க கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நினைக்கறேன்” என்றேன்.

கீழே இறங்கி, அவரைக் கடக்க எத்தனிக்கையில் என்னைத் தடுத்து, “ஸாரி சார்.. நான் பண்ணது தப்புதான். ஃபேமலியோட, ஒரு லீவு நாளைக்கு வந்த உங்க மூடை ஸ்பாய்ல் பண்ணீட்டேன். மேனேஜர்ட்ட சொல்லி, கரெக்ட் டைமுக்கு கவுண்டர் திறக்க வைக்கறேன்” என்று சொல்வாரென்று நினைத்தேன். ம்ஹும். முன்னைவிடக் கடுமையாக முறைத்துவிட்டுக் கடந்தார்.


அடுத்தமுறை அங்கு செல்கையில், இந்தச் சம்பவம் மறந்து - அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்கும் மனோபாவம் எனக்கு வாய்க்கவேண்டும். பார்ப்போம்!
.