Thursday, July 28, 2011

அவியல் 28.07.2011

வர் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அன்றைக்கு புதிதாக ஒரு பெண், அலுவலகத்துக்கு வரவே அனைவரும் 'ஹாய் ப்ரியா… ஹாய் ப்ரியா’ என்று வரவேற்றிருக்கிறார்கள். நம்மவரும், பழைய ரிப்போர்டர் போல என்று நினைத்துக் கொண்டு ‘பிரியா நீ.. வாங்கித்தருவியா பிரியாணி’ என்று மொக்கையாகச் சொல்லிவிட்டு இவர் சொன்னதுக்கு இவரே சிரித்து ரசித்திருக்கிறார்.

அந்தப் பெண் சட்டை செய்யாமல் நேராக மேனேஜர் சீட்டுக்குப் போக அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

நம்மவர் பயந்தவாறே பக்கத்து சீட்டில் விசாரிக்க ‘அவங்கதான் ஓனர் பொண்ணு’ என்றார்களாம்.

‘நாளைக்கு வேலை இருக்கான்னு தெரியல.. என்னடா பண்றது நான்?’ என்று கேட்டார்.

”நேராப்போய் சொல்லுங்க. ‘மொத்தமா மூணு தப்பு நடந்திருக்கு. நீங்க மொதலாளி பொண்ணா பொறந்தது மொத தப்பு. உங்க பேரை ப்ரியான்னு வெச்சுகிட்டது ரெண்டாவது தப்பு. வேற பேரா இருந்திருந்தா எனக்கு அந்த ரைமிங் வந்திருக்காது. மூணாவது தப்பு நான் உங்களை அப்படிக் கலாய்ச்சது. ரெண்டு தப்ப உங்க மேல வெச்சுட்டு ஒரு தப்புக்காக என்னைத் தண்டிக்கப்போறீங்களா?’ன்னு கேளுங்கன்னேன்.

என்ன ஆச்சோ! ஒரு வாரமா ஃபோனையும் காணோம். கூப்டாலும் எடுக்கலை.

--

ப்போதோ அவியலில் ம்யூசிக் சேனல்களில் பாடலைக் குறிப்பிடுவதோடு, பாடல் எழுதியவரையும், இசையமைப்பாளரையும் குறிப்பிட்டால் என்ன என்று கேட்டதாக ஞாபகம். சில சேனல்களில் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இப்போது வேணாம்டா என்று சொல்லத் தோன்றுகிறது. அதுவும் சன் ம்யூசிக் செய்கிற கொடுமை தாங்கமாட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.


காதலின் தீபமொன்று பாடல் வைரமுத்து எழுதியதாகக் காட்டுகிறார்கள். அது பஞ்சு அருணாசலம் எழுதியது. இதைக் கூட மன்னித்துவிடலாம். நல்ல வரிகள் – ஆகவே ஒரு பிரபல கவிஞர் ஞாபகத்துக்கு வரலாம். இன்னொன்றைப் பார்த்துதான் நான் ஆடிப்போனேன். ஒரு முறை அல்ல, ஒன்றிரண்டு முறைகளுக்கு மேல் இந்தப் பாடல் போடும்போதெல்லாம் இப்படித்தான் போடுகிறார்கள்.

அது:

பாடல்:மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: சுந்தர் சி பாபு.

ங்கொய்யால.. கோர்ட்ல இருக்கற கேஸ்கூட கேஸா, இதுக்கும் ஒண்ணு போடலாம்னான்னு பார்க்கறேன்.

** **

ண்பன் ஒருத்தன் அவன் அப்பாவைப் பற்றி எப்போதுமே - ‘எனக்கு அவர் எந்த கஷ்டமும் வெச்சதே இல்ல' என்பதாய் - பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான்.

“எனக்கு தேதிகளை ஞாபகம் வெச்சுக்கற சிரமம் கூட இல்லைப்பா-ன்னு எங்கப்பாகிட்ட சொல்லீட்டே இருப்பேன். அவர் பொறந்தது ஜனவரி 1, நான் பொறந்தது ஆகஸ்ட் 15. இந்த மாதிரி ஸ்பெஷல் தேதிகளா அமைஞ்சிருக்கு பாரு” என்பான்.

சில வருடங்கள் கழித்து சென்ற வாரம் கோவை வரும் வழியில் யார் யாரிடமோ விசாரித்து என் நம்பர் கண்டுபிடித்து என்னை வந்து சந்தித்துச் சென்றான்.

“அப்பா இறந்துட்டார்டா. தெரியுமா?” என்றான். “இல்லைடா.. எப்ப என்றேன்?”

“போன வருஷம் ஃபெப்ரவரி 14 அன்னைக்கு”

எனக்கு என் அப்பா இறந்த தேதி ஞாபகம் வந்தது. 07.07.07

** ** **

சிக்னலின் வாகனத்தை நிறுத்தும் போது சிக்னல் டைமர் 45 செகன்டுக்கு மேல் காண்பித்தால் பெட்ரோல் சேமிக்க, உங்கள் வாகனத்தை அணைத்துவிடுவது உசிதம். 45 செகன்டுக்கு கம்மியாக இருந்து வாகனத்தை அணைத்தால், திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோல், அணைத்தபோது சேமித்த பெட்ரோலைவிட அதிகமாகத்தான் இருக்கும் - என்று எப்போதோ / எதிலோ படித்த ஞாபகம்.

இதுபற்றி ஆட்டோமொபைல் துறையிலிருக்கும் நண்பனிடம் கேட்டபோது ‘அதெல்லாம் அப்ப. இப்ப அட்வான்ஸ் மாடல் இஞ்ஜின்தான். பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.

அப்படியா?


** **


தெய்வத்திருமகள் பார்த்த ஒரு நண்பர் பேசும்போது ‘படத்துல நிலாவைப் பார்க்கறப்ப எல்லாம் மீரா ஞாபகம் வருது. ஏன்னு தெரியல’ என்றார். இன்னொரு நண்பர் மெய்ல் அனுப்பியிருந்தார் ‘நிலாவைப் பார்க்கறப்ப மேகா ஞாபகம் வந்துச்சு’ என்று.

படத்தில் நிலாவின் அப்பா பெயர் கிருஷ்ணா என்றிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதை விடவும் ஆழந்து யோசித்தால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நாயகனும் - சாலை விதிகளையெல்லாம் மதித்துக் கொண்டு - என்னைப் போலவே கொஞ்சம் மெண்டலாகத்தான் இருக்கிறான்.

** ** **
.

Monday, July 25, 2011

அப்பாவின் சைக்கிள்

ப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.

அப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.

திடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.

ஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.

சைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)நான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.


ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.

நானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.

ஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.

என்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை.


.

Friday, July 22, 2011

ஐந்து நிமிடம் ப்ளீஸ்....

‘வாழ்க்கையில என்ன இருந்து என்னா ஆவப்போவுது.. ஒரு தம்பி - தங்கச்சி இல்லாம போயிடுச்சே’

‘எனக்கு இருக்குற திறமைக்கு என் கிட்ட ஒரு பிள்ளையை குடுத்து பாரு நான் வழிகாட்டியா இருந்து எப்படி பெரிய ஆள் ஆக்குறேன்னு” என்றெல்லாம் நினைப்பவரா? அப்ப நீங்க போக வேண்டிய இடம் - “வாழை”.

நாம வாழ்க்கையில இந்த அளவு உயர்ந்து இருக்க என்ன காரணமுன்னு யோசிச்சி பாத்தா யாராச்சும் ஒருத்தர் நம்மளை நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலயும் ‘இது பண்ணு தம்பி.. இதை படி தம்பி’ன்னு வழி நடத்தி இருப்பாரு. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை.

வாழையின் நோக்கமே இந்த மாதிரி வழிகாட்டி இல்லாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியா ஒருவரை நியமனம் செய்வதே.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே, வாழையில நான் என்ன பண்ணலாமுன்னு கேக்கறீங்களா? அப்ப கீழ இருக்குற மேட்டரை படிங்க.

வாழையில் இருக்கும் நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்:-

வழிகாட்டிகள்
தொண்டர்கள் மற்றும்
நன்கொடையாளர்கள்.


வாழையில் வழிகாட்டியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு தம்பி/ward அளிக்கப்படுவார். என்னாடா இது.. வழிகாட்டி, Mentor, கிண்டாருன்னெல்லாம் சொல்றாங்களே இதுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கணும் போலயேன்னு நெனைச்சி பயந்துடாதீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க?அடிக்கடி போன் போட்டு பேசுவீங்க, போயி பாப்பிங்க, இதை பண்ணுடா அதை பண்ணுடான்னு சொல்லுவிங்க இல்லயா.. அந்த வேலயத்தான் நீங்க இங்க செய்யப்போறீங்க. வாழைக்கு பெண் வழிகாட்டிகள்/Mentorகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.

தொண்டர்கள் வாழைக்கு தேவையான அலுவலக ரீதியான பணிகள், இன்ன பிற வேலைங்க இருக்கும் இல்லையா.... அதுல உதவலாம்.

நன்கொடையாளர்களை பத்தி பெருசா விளக்கம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.

இது பற்றி மேலும் விவரம் அறியவும், வாழையோடு இணைந்துகொள்ளவும் 24 ஜுலை 2011 அன்று சென்னையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நிகழவிருக்கும் வாழையின் ஓர் அறிமுக நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுங்கள்.


IEEE Madras Section, (Opp. to Anna Centenary Library)
25, Gandhi Mandapam Road, Kotturpuram
Chennai, Tamil Nadu

இது பற்றிய மேலும் விவரம் அறிய Kalyanஐ அணுகவும் (9952992454)


வாழையின் இணையதள முகவரி http:http: //www.vazhai.org/

**


நன்றி: சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com/


.

Wednesday, July 20, 2011

க்ளோபல் வார்மிங் கவிதை.

நேற்றைய அவியலில் சொல்லியிருந்தேனல்லவா? நண்பர் சௌந்தர் எழுதிய கவிதை பற்றி..

வைரமுத்து தேர்வு செய்வதால் அவர் பாணியிலேயே எழுதியிருக்கிறார்.

படியுங்கள்..

****** ********** **********

மனிதா!

கிஷ்கிந்தா வாசிகளிடமிருந்து
கிளைபிரிந்து வந்தவனே!

வரம் கொடுத்த பூமிக்கு
ஜூரம் பிடிக்கச் செய்தவனே!

நீர்தேடி நெடும் பயணம் செல்கிறாய் – நிலவுக்கு
பிராணவாயு தேடி பிரயாணம் செய்கிறாய் - செவ்வாய்க்கு

நீ இருக்க இடம் கொடுத்த பூமிக்கோ
இன்னலைத் தவிர என்ன கொடுத்தாய்?

நிலமகளைத்துளையிட்டு நீரை உறிஞ்சினாய்

உனக்கு அது நீர்
பூமிக்கு அது செந்நீர்

பாவம்!

நீ உறிஞ்சிய உதிரத்தால்
உடல் நடுங்குகிறாள் நிலமாதா நீயோ
நிலநடுக்கம் வந்துவிட்டதாய்
நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்

அடப்பாவி!
நீ வீடு கட்டிக் குடியேற
நிலத்தடி நீருக்கே சமாதி கட்டப் பார்க்கிறாயே

மனிதா
அகழ்வாரைக்கூட தாங்கும் அன்னை - புகை
தருவோரால் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் ..
அறிவாயா நீ?

ஆகாயத்தில்
ஓசோன் படலத்து ஓட்டையாம்
உனக்குத் தெரியுமா?

விருட்சங்கள் வெட்டி வெட்டி
இலட்சங்கள் சேர்க்கிறாயே
ஓசோனின் ஓட்டையை
காசு தந்து அடைத்திடுவாயா?

மனிதா
பண்ணிய பாவத்துக்கு
பரிகாரம் சொல்கிறேன் கேள்!

நீ ஒன்றும் பூமியை பூக்களால் அர்ச்சிக்க வேண்டாம்
புகையால் அச்சுறுத்தாமல் இரு
நீ ஒன்றும் மரங்களுக்கு நீர் கூட ஊற்றவேண்டாம்
பாலூற்றாமல் இரு
பூமிக்கு பொன்னை அள்ளி இறைக்க வேண்டாம்
மண்ணை அள்ளி அள்ளி இறைக்கவிடாமல் இரு

போதும் மனிதா போதும்
பூமியைச் சுரண்டி நீ வாழ்ந்தது போதும்
இனியேனும் இந்த பூமியை வாழவிடு!!

** ** ** ** ** ** ** ** ** **


பிடித்திருந்தால் 9865 005 345 இந்த எண்ணுக்கு அழைத்து அவரை வாழ்த்துங்கள்.


.

Tuesday, July 19, 2011

அவியல் 19.07.2011

திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி விட்டதால் காவல்துறை அங்கங்கே எச்சரிக்கை தட்டிகளை வைத்து பொதுமக்களை உஷார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தட்டியில் ‘உங்கள் வாகனங்கள் திருடு போகாமல் இருக்க பத்திரமாக பூட்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் – இப்படிக்கு உங்கள் நண்பன், காவல்துறை” என்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோ ஹோண்டா வாகனங்கள் என்று வேறு!

பல இடங்களில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக நான் செல்லும் பாதையில் ஒரு வெள்ளுடை வேந்தர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நிறுத்தியதும் நான் சொன்னேன்:

“நீங்க எதிர்பார்த்தது என்கிட்ட கிடைக்காது சார்”

அவர் என்னை ஒரு மார்க்கமாக – சிக்கினாண்டா சிவகிரி என்பது போல – பார்த்து “லைசென்ஸ், ஆர்சி, இன்ஷ்யூரன்ஸ் எதுவுமே இல்லையா?” என்று கேட்டார்.

“அதில்லை சார்.. எல்லாம் இருக்குன்னு சொல்ல வந்தேன்”

ஒரு நிமிடம் யோசித்தவர் டக்கென்று தோளில் தட்டி சிரித்து “போய்யா.. போ..” என்றார். ரசனைக்காரர்!

** **

சௌ
ந்தர் என்ற என் நண்பரைப் பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா? (இல்லையா?) நேற்று அவரைச் சந்தித்தேன். சூரியன் பண்பலையில் ஏதோ க்ளோபல் வார்மிங் சம்பந்தமான கவிதை போட்டி ஒன்று அறிவித்தார்களாம். வைரமுத்து நடுவர். அதற்கொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றார். (சௌந்தர் நன்றாக கவிதை எழுதுவார் – என்னை விட – என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

“சொல்லட்டுமா?” என்றார். சொன்னார்.

‘மனிதா...’ என்று ஆரம்பித்தார்.

‘ஏ மனிதா’ இல்லையா? இந்த மாதிரி கவிதை எல்லாம் ‘ஏ மனிதா-ன்னு ஆரம்பிக்கணுமே’ என்றேன். இல்லை என்றார். சரி.. அவர் அழைக்கும் மனிதனின் அப்பா பெயர் A வில் ஆரம்பிக்காது போல என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லுங்கள்’ என்றேன்.

உண்மையாகவே அவர் கவிதை நன்றாகவே இருந்தது. முன்னர் சொன்ன ‘ஏ மனிதா..’ கிண்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டவர், ‘நிஜம்ம்ம்ம்ம்மா நல்லா இருக்குய்யா’ என்றபோது கிண்டல் பண்ணாதீங்க என்றார். போட்டி முடிவு வந்தபின், அவர் கவிதை தேர்வானாலும், ஆகாவிட்டாலும் ஒருநாள் என் பதிவில் எழுதுகிறேன். நீங்களே சொல்லுங்கள்.

** **

மே
ற்கண்ட பத்தி பற்றிய இன்னொரு விஷயம்: கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர் அலுவலகத்திலிருந்துதான் பண்பலை கேட்டிருக்கிறார் சௌந்தர். அவர் நண்பர்தான் எழுதத் தூண்டியிருக்கிறார். அடுத்தநாள் – புதன் – கடைசி நாள். ‘இன்னைக்கு எழுதி நாளைக்கு அனுப்பணும். சான்ஸ் இல்லை’ என்றிருக்கிறார் சௌந்தர். ‘நீங்க எழுதுங்க. கொண்டு போய் சேர்த்தறது என் வேலை’ என்றிருக்கிறார் நண்பர்.

செவ்வாய் இரவு எழுதி, புதன் அதிகாலை நண்பர் அலுவலகத்தில் ஜன்னலைத் திறந்து போட்டுவிட்டு வந்துவிட்டாராம். நண்பர் சூரியன் அலுவலகத்திற்கு தொலைபேசி கேட்டு, புதன் மதியத்துக்குள் கோவை சென்று நேரடியாக சமர்ப்பித்து விட்டு வந்தாராம்.

”வைரமுத்து செலக்ட் பண்றாரோ இல்லையோ.. உங்க ஃப்ரெண்டு இவ்ளோ சிரமமெடுத்தார் பாருங்க உங்க கவிதைக்கு... அதுவே உங்களுக்கு கிடைச்ச பரிசுதான்” என்றேன். சரிதானே?

** **

ட்சி மாற்றம் நடந்தபின் நீதிமன்றம், வழக்குகள் என்று நிறைய காட்சிகள் நடப்பது வழக்கம். நித்தியானந்தா, ரஞ்சிதா கோஷ்டி ப்ரஸ் மீட், கமிஷனர் ஆஃபீஸ் என்று பிஸியாக இருக்கிறார்கள். நான் அவர்கள் சம்பந்தப்பட்ட பேட்டிகள், காட்சிகள் எதுவும் பார்க்கவில்லை. (அதாவது, இப்போது.) நேற்று ஒரு வார இதழில் ரஞ்சிதாவின் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நித்தி மேல் கோபத்தோடு கொஞ்சம் பொறாமையும் வந்தது. நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.

இந்த கோர்ட் சீன்களில் அயர்ச்சியைத் தருவது சமச்சீர் கல்வி தொடர்பான இவர்களின் பந்தாடல். நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில், ‘இல்ல்ல்ல.. நாங்க சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று அட்வகேட் ஜெனரல் டெல்லி கிளம்பி சென்று விட்டார் அப்பீல் செய்ய. குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ஃபீஸும் கட்டிவிட்டு ஒன்றும் அவர்கள் சொல்லிக் கொடுக்காமல் இப்படி இழுத்தடிப்பது எரிச்சலையே தருகிறது. அடுத்த வாரம் MID TERM எக்ஸாமாம். என்ன கேள்வி கேட்க என்று ஆசிரியர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

எல்லா பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து புரட்சியில் இறங்காதவரை இதற்கு விடிவில்லை. சென்ற முறை ஏதோ கமிஷன் வாங்கிக் கொண்டு.. ச்சே... கமிஷன் அமைத்து இவ்வளவுதான் கட்டணம் என்றார்கள். ஒன்றும் பெரிய மாற்றமிருக்கவில்லை. இப்போது இது. விடிவே இல்லையா நமக்கு?

** **

தெய்வத்திருமகள் படம் பார்க்கும்போது இரண்டு மூன்று இடங்களில் தொண்டை அடைத்தது உண்மை. பெண்களும், குழந்தைகளுக்கும் கண்ணீர் வருகிறது. அந்த மாதிரி ஒரு காட்சியின் போது, முன் சீட் அம்மணி கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண்மணி கேவிக் கொண்டிருந்தார். (வீட்டில் என்ன ப்ரச்சினையோ...)

க்ளைமாக்ஸில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அவ்ளோ பெரிய மனிதருக்கு விக்ரமை வீட்டில் வைத்துக் கொள்வதில் என்ன ப்ரச்சினை? அனுஷ்கா தனியாக இருப்பாரே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்தாரா.. அல்லது இந்த மாதிரியான உணர்ச்சிமயமான படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியா?

** **

வழக்கம்போல சட் சட்டென சொல்ல வந்ததைச் சொல்ல முடிவதால் ட்விட்டரிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

சில ட்விட்டர் அப்டேட்ஸ்:


‘நீ நடுத்தெருவுலதான் நிப்ப’ என்று திட்டுவாங்கியவர்கள்தான் இன்றைக்கு மினி பஸ் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.


பதிவுல கமெண்ட் மாடரேஷன் போல, மனைவி நம்மகிட்ட பேசறப்ப மாடரேட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்? வேணுங்கறத மட்டும் ரிலீஸ் பண்ணிக்கலாம்!

தூங்கப்போகிறேன். நான்கு நாட்களாக ஒரு தொடர் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்றைக்கு பகுதி 5. க்ளைமாக்ஸாக இருக்கலாம்.

இப்பல்லாம் துணையில்லாம யாருமே டூ வீலர் ஓட்றதில்ல. எல்லா வண்டிலயும் யாரோ ஒருத்தர் 'துணை'.

விஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே! நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.

கலைஞர் TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை.

கோபம் வந்தால் ஐந்து நிமிடம் அமைதியாக இருங்கள். #அடிங்... அது முடிஞ்சா நான் ஏண்டா கோபப்படப்போறேன்?

நாம் கேட்ட சரக்கைத் தராத டாஸ்மாக் உள்ளவரை தமிழகம் தன்னிறைவை அடைந்ததென்பதை ஏற்கமுடியாது.

‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.


ட்விட்டரில் தொடர: http://twitter.com/#!/iParisal


** **.

Sunday, July 17, 2011

தெய்வத்திருமகள் - விமர்சனம்மிகவும் அலப்பறையெல்லாம் இல்லாமல் ஒரு படம் எடுத்து, குறித்த நேரத்தில் அதை விளம்பரப்படுத்தி, வெற்றியும் கண்டிருக்கிறார் விஜய்.

கதை?

கேட்டிருப்பீர்கள். சொன்னாலும் சுவாரஸ்யம் குறைகிற சமாச்சாரமொன்றுமில்லை. மனதளவில் குழந்தையாகவே இருக்கும் கிருஷ்ணாவுக்கு (விக்ரம்) குழந்தை பிறக்கிறது. ஐந்து வயது வரை அந்தக் குழந்தை நிலாவை (சாரா) கிருஷ்ணா வளர்க்கிறார். அங்கே ஒரு ட்விஸ்ட். குழந்தையின் தாத்தா, சாராவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார். வழக்கறிஞரான அனுராதா (அனுஷ்கா) கிருஷ்ணாவிடம் குழந்தையை மீட்டுத் தருகிறேன் என உறுதியளிக்கிறார். குழந்தையின் தாத்தா பெரிய புள்ளி. மனநலம் பாதிப்பான கிருஷ்ணாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, அனுராதா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கான வழக்கை மூத்த வழக்கறிஞர் பாஷ்யத்திடம் (நாசர்) ஒப்படைக்க, அனு அவ்வளவு பெரிய வழக்கறிஞரிடம் சில பல தில்லுமுல்லு வேலைகளை செய்து, குழந்தையை கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பதும், அதன் பிறகு நடப்பதுமே கதை.

மதராசப்பட்டிணம் போலவே, நேர்த்தியான கதை சொல்லல். எந்த இடத்திலும் தொய்வில்லை. நகைச்சுவை என்கிற பெயரில் ஆபாசமோ, ரசிக்க இயலாத எள்ளலோ இல்லை. சந்தானத்தைக் கூட அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சோகம் என்கிற பெயரில் சுவாரஸ்யம் குன்றுகிற மிகைசோகமில்லை.

வசனங்கள் நச் என்றால் (‘அம்மா எங்க? / ‘சாமிகிட்ட’ / ‘ஏன் சாமிக்கு அம்மா இல்லையா?’) பல இடங்களில் வசனங்களே இல்லாமல் காட்சி அமைத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர். அதுதான் பாராட்டப்பட வேண்டிய அம்சமாக படத்தில் எனக்குப் படுகிறது. ஜன்னலில் சைகையால் சாராவும் விக்ரமும் பேசிக் கொள்வது, க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் உட்பட பலதும்.

உதாரணத்திற்கு ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதுள்ள போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்கிறார்.. அதற்கு விக்ரமின் ரியாக்‌ஷனை (அதுவும் சைகையில்தான்) மக்கள் புரிந்து கொண்டு கைதட்டுவது என்பது அசாதாரண விஷயம். சபாஷ் விஜய்!
விக்ரம், குழந்தை சாரா. இரண்டு பேரும் பார்ட்னர்ஷிப்பில் பின்னியிருக்கிறார்கள். நிச்சயமாக விக்ரமை விட கூடுதல் ரன் எடுத்திருப்பது சாரா-தான். அதுவும் கடைசி கோர்ட் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார். இனி இவரை பேட்டிகள், விளம்பரங்கள் என்று பலதிலும் பார்க்கலாம். நல்ல தேர்வு.

அனுஷ்கா, அமலா பால் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சந்தானமும் அவ்வாறே. எல்லா நடிகர்களையும் சரிவர – மிகையுமின்றி குறையுமின்றி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பாடல்களை விடவும் பின்னணி இசை பேசுகிறது. ஒளிப்பதிவும் அபாரம். ஊட்டி காட்சிகளும், விழிகளில் ஒரு வானவில் படமாக்கப்பட்ட விதமும் அதற்கு சான்று.

இது ஏதோ - I AM SAM – ஆங்கிலப்படத்தில் தழுவல் என்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை.

வெகுநாட்களுக்குப் பிறகு – மகாநதிக்குப் பிறகு என்றே சொல்லலாம் – அழவைக்கிற படம். ஆனால் சோகம் என்று சொல்வதற்கில்லை. பாசத்தால் அழவைக்கிறது படம்.


சபாஷ் விஜய் & டீம். கீப் கோயிங்!


.

Wednesday, July 13, 2011

காமெடி பீஸ்


து நடந்து ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு மேல் இருக்கும்.

அவர் எங்கள் அலுவலத்தில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். (வேலை செய்துகொண்டிருந்தார் என்று சொல்ல மனசாட்சி தடுக்கிறது) குறிப்பிட்ட அந்த நாளில் எனக்கொரு 15,000 தேவையாய் இருந்தது. கையிருப்பு போக 9000 குறைவாக இருக்கவே ஒரு அலுவலக நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நம்ம ஆள் குறுக்கே வந்தார்.

“என்ன கிருஷ்ணா.. ஃபைனான்ஷியல் ப்ராப்ளம்?” என்றார் சிதம்பரம் கணக்காய்.

“ஆமா சார்…”

“என்கிட்ட எல்லாம் கேட்க மாட்டீங்களா” என்று உரிமையார் சொல்லவே, முன் அமர்ந்திருந்தவரை எந்திரிச்சுப் போய்யா என்று சொல்லாத குறையாக துரத்தி விட்டு, இவரிடம் ‘ஒரு நைன் தவுசண்ட் வேணும் சார்.. ஒன் வீக்ல தந்துடறேன்’ என்றேன்.

அவர் தன் மொபைலை எடுத்தார். “என் பேங்க்ல பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு மொபைல்லயே பார்க்கலாம்’ என்றார். ‘பேங்க்ல இருக்கும். உன் அக்கவுண்ட்ல இருக்குமா’ என்று கேட்கத் தவறிவிட்டேன்.

பார்த்தவர், என்னிடம் திரும்பி, விரல்களில் எண்ணிக்கை செய்தவாறே..
‘ஒம்பதாயிரம் போதுமா’ என்றார்.. போதும் தெய்வமே என்று சொல்ல வந்து, தெய்வத்தை கட் செய்தேன்.

இப்போது அவர் மணி பார்த்தார். “ம்ம்.. 12 ஆச்சு. கரெக்டா ரெண்டரை மணிக்கு வாங்கிக்கோங்க.. சாப்டுட்டு வரும்போது ஏடிஎம்ல எடுத்துட்டு வர்றேன்” என்றார்.

** **

நான்கு மணி. அதற்குள் அவர் என் டேபிளை இரண்டு மூன்று முறை கடந்திருந்தார். கடக்கும்போதெல்லாம் அவசர அவசரமாகவே...

நான் நிறுத்தி “சார்... என்னாச்சு?” என்றேன்.

“ஓ... மறந்துட்டேன்.. கரெக்டா 5 மணிக்கு வாங்கிக்கோங்க”

நான்: “மணி நாலரை..”

“இங்க இருக்கற ஏடிஎம் போக எவ்ளோ நேரம் வேணும்? வந்துடுவேன்” என்றார்.

அஞ்சு. ஆறு. ஏழு.

அதுவரை என் பக்கமே அவர் வரவில்லை. ஏழரைக்கு நானே போய்.. “சார்.. வேணாம்.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..: என்றேன் அவர் என் பக்கம் வருவதற்கு சங்கடப்படுகிறார் என்பதறிந்து.

“ச்சே... என்ன கிருஷ்ணா? நானாத்தானே வந்து ஹெல்ப் பண்றேன்னேன்.. ஏன் என்னை ஒதுக்கறீங்க? நான் உங்க ஃப்ரெண்ட் இல்லையா?”

“ஐயோ அப்படியில்லைங்க.. நீங்க பிஸின்னு நினைக்கறேன்.. டைமிருக்காது உங்ககிட்ட. அதான்..” - இழுத்தேன்.

“அப்டில்லாம் இல்ல. நைட் நீங்க போறதுக்குள்ள உங்க கைல நைன் தவுசண்ட் இருக்கும்”

9 மணிக்கு நான் கிளம்பும்போது அவர் கேட்டில் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் ‘கிருஷ்ணா.. வெளில மெய்ன் கேட்ல வெய்ட் பண்றேன். வாங்கிக்கோங்க” என்றார். நான் சரி என்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. நானும் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஏமாற்றமிருக்கவில்லை.

இரண்டு நாள் அதோ இதோ என்று ஓடியது. இடையில் வேறொரு நண்பரிடமிருந்து அந்தத் தேவை பூர்த்தியாகிவிட்டிருந்தது. தானாக வந்து உதவுகிறேன் பேர்வழி என்று சொன்னவரைப் பார்க்கும்போதெல்லாம் அவராக வந்து இதோ இதோ என்று டயலாக் விட்டுக் கொண்டிருந்தார்.

மூன்றாவது நாள். அவர் அலுவலக விஷயமாக பெங்களூர் கிளம்பிக் கொண்டிருந்தவர் அஃபீஷியல் டூர் என்பதால் அட்வான்ஸ் வாங்க என் கையெழுத்துக்காக வந்தார். நான் ஒன்றும் பேசாமல் அட்வான்ஸ் ஸ்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

அருகிலிருந்த ஒரு மெமோ பேப்பரை எடுத்தார்.

“இதுல உங்க அக்கவுண்ட் நம்பரை எழுதுங்க கிருஷ்ணா” என்றார்.

“எதுக்குங்க?”

“நான் சொன்ன மாதிரி 9,000 இல்ல.... பத்தாயிரமா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஒரு வாரம்ன்னு சொன்னீங்கள்ல? பத்து நாள் டைம் எடுத்துக்கோங்க. அப்பறம் குடுத்தா போதும்” என்றார்.

அந்தத் தேவை முடிந்தது என்று சொன்னதும் ‘ப்ச்.. விளையாடாதீங்க.. நான் சொன்ன மாதிரி தரலைன்னு கோவம் உங்களுக்கு” என்றார்.. அதெல்லாம் இல்லை என்றபோதும் விடாமல் பேச ஆரம்பித்தார்.


எனக்கு அந்த விளையாட்டு பிடித்துப் போயிருந்தது. அக்கவுண்ட் நம்பரை எழுதிக் கொடுத்தேன்.

அடுத்த நாள் ஏதோ ஒரு தருணத்தில் எனக்கு அலுவலத்தில் போரடிக்கவே அவருக்கு அலைபேசினேன்.

“சார்.. பணம் போட்டிருக்கீங்களா?”

“ஓ! கிருஷ்ணா.. மறந்தே போய்ட்டேன்.. நல்ல வேளை.. இங்க பக்கத்துல SBI இருக்கு. நான் ட்ரான்ஸ்ஃபர் பண்றேன்” என்றார்.

நாலு மணிக்கு அவராகவே கூப்பிட்டு “பேங்க் போனேன் கிருஷ்ணா.. நீங்க அக்கவுண்ட் நம்பர் எழுதிக் கொடுத்த பேப்பரை சூட்கேஸ்லயே வெச்சதால போட முடியல.. நாளைக்கு பண்ணிடவா?” என்றார்.

நான் END CARD போடும் எண்ணத்துடன் ‘ரீல் அந்துடுச்சு சார். முடியல என்னால. விட்ருங்க..” என்றேன். உண்மையாக அதை அவரிடம் சொல்லும்போது சிரித்து விட்டேன்.

“பார்த்தீங்களா.. கோச்சுட்டீங்க?” என்றார்.

“ஐய.. கோவமெல்லாம் இல்லைங்க.. எனக்கு பணமும் கிடைச்சு, அதைக் குடுத்தவருக்கும் நான் குடுத்துட்டேன்.. மேட்ச் முடிஞ்சுது. இன்னும் நான் ஓவர் போடுவேன்னு நிக்கறீங்க” என்றேன்.

“ப்ச்... நல்லா தெரியுது நீங்க கோச்சுட்டீங்கன்னு. கண்டிப்பா நாளைக்கு உங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் அவரும் என்னிடம் கேட்கவில்லை. நானும். எதாவது பேசப்போனால் கூட இதைப் பற்றி பேசுவாரோ என்று எனக்கு அச்சமாக இருக்கும்.

முடிந்தது அந்த விஷயம்.

அதன்பிறகு அவர் வேறு அலுவலகத்துக்கு மாற்றலாகி சென்று விட்டார்.

போன வாரம் எங்கள் அலுவலகம் பக்கம் வந்தார்.

“காஃபி சாப்பிவோமா கிருஷ்ணா?”

“கண்டிப்பா” என்றபடி நடந்தேன். அவர் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்தார்.

“ரெண்டு காஃபி என்றார்”

வந்தது. சாப்பிட்டோம்.

நான் காசை எடுத்தேன். டக்கென்று என் கையைத் தடுத்தார்.

“என்ன பழக்கம் இது? வெய்ட்..” என்றவர் கேண்டீன்காரரைப் பார்த்து “எவ்ளோ ஆச்சுங்க?” என்றார்.

“எட்டு.. பதினாறு.... இருவத்தி ஒன்ரை ஆச்சுங்” என்றார் கடைக்காரர்.

இவர் என்னை முறைத்தவாரே.. “நாந்தானே கூப்ட்டேன். அப்பறம் எப்படி நீங்க காசெடுக்கலாம்?” என்றபடியே பாக்கெட்டில் கைவிட்டார். சட்டைப் பாக்கெட். பின் பேண்ட் பாக்கெட். அப்படியே ஒவ்வொரு பையாக துழாவினார்..

கடைக்காரர் பக்கம் திரும்பி “எவ்ளோ சொன்னீங்க?”

“இருவத்தி ஒன்ரைங்க”

“ஓகே.. என் கணக்குல வைங்க.. வந்து தர்றேன்” என்றார்.

நான் பொறுக்க மாட்டாமல் இருவது ரூவாயை எடுத்து அவரிடம் கொடுத்து “நீங்களே குடுங்க” என்றேன்.

“ப்ச்.. கிருஷ்ணா.. என்னை அசிங்கப்படுத்தறீங்க.. நாந்தானே உங்களைக் கூப்ட்டேன். அப்ப நாந்தானே குடுக்கணும். பத்து ரூவாதான் இருக்கு. மத்தது பெரிய நோட்டா இருக்கு. அதான்...” என்றார்.

“சரிங்க.. இதை வாங்கி நீங்களே குடுங்க.. நான் சிகரெட்டுக்கு காசு தரமாட்டேன்னு உங்களுக்கு தெரியும். அதுனால இத நீங்களே குடுத்துட்டு 4 ரூவா மட்டும் எனக்கு குடுங்க” என்றேன்.

“சரி கிருஷ்ணா.. இப்டி பண்லாம். இந்த இருவது ரூவாயை நான் கடனா வாங்கிக்கறேன்.. நாளைக்கு திருப்பித் தர்றேன். சரியா?” என்றபடி வாங்கி கடைக்குக் கொடுத்தார்.

அதை நான் திருப்பிக் கேட்கவே இல்லை. அவராக இரண்டு தினம் முன்பு வந்து “கிருஷ்ணா உங்க மேல எனக்கு கோவம்” என்றார்.

“ஏங்க?”

“அன்னைக்கு இருவது ரூவா வாங்கினேன்ல. நீங்க இதுவரைக்கும் கேட்கவே இல்லை. நான் உங்கமேல காட்ற உரிமையை நீங்க என் மேல காட்ட மாட்டீங்கறீங்க” என்றார்.

“சரி.. குடுங்க..” என்றேன்.

“நாளைக்கு தர்றேன். ஆனா நீங்க மறக்காம கேட்கணும்”

“சரிங்க”

“நான் ஒண்ணு சொன்னா சொன்ன மாதிரி! யார்கிட்ட வேணும்னா கேளுங்க” என்றார்.

பின்னால் அவரது அசிஸ்டெண்ட் சிரிப்பை அடக்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.

“இன்னொண்ணும் சொல்றேன் கிருஷ்ணா.. அன்னைக்கு நீங்க கேட்ட மாதிரி 10000 ரூவா உங்க அக்கவுண்ட்ல போடுவேன்.. பத்து நாள் கழிச்சு தந்தீங்கன்னா போதும்” என்றார்.

இப்போது எனக்கு நிஜமாகவே மயக்கம் வருவது போல் இருந்தது.

** **

Monday, July 11, 2011

கார்க்கி - 25 (மீள்பதிவு)

ன்றைக்கு ஒரு பழைய பதிவு. எழுதி வெகு நாட்களாகிவிட்டது. வாரம் ஒன்றாவது எழுதுடா என கட்டளையிட்டிருக்கிறார் தோழி.

ட்விட்டர் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அதன் 140 எழுத்துக்குள்ள சொல்லீட்டு ஓடு என்கிற சவால் பிடித்திருக்கிறது. இருந்தாலும், எழுதாவிட்டாலும் உயரும் பின் தொடர்பவர்களுக்கு ‘ஏதாச்சும் செய்யணும் பாஸ்’ என்பதால்.. வாரம் 2 / 3 தொடரும்.

எழுதுவது குறைய, இன்னொரு காரணம். எழுதி எழுதி நம் எழுத்தே நம்மைப் பார்த்து பல்லிளிப்பதுதான். ‘ஏண்டா இதைப் பதிவுல போட்டே ஆகணுமா’ என்று என் எழுத்து என்னைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாமல் ட்ராஷிவிடுகிறேன்!

திரும்ப இந்த வாரத்திலிருந்து எழுத முயல்கிறேன். ஒன்றிரண்டு ஃப்ளாஷ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன மூளையில்.

எழுதும் முன் ரி ஃப்ரெஷுக்காக, பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலொன்று - ட்விட்டர் உலகப் பிரபலம் என் நண்பன் கார்க்கியைப் பற்றி நான் எழுதிய பழைய பதிவு ஒன்று.

இதை எழுதும்போதிருந்ததை விட இன்றைக்கு கார்க்கி அடைந்திருக்கும் புகழ் பலமடங்கு. அதற்காகவே இதை மீள் பதிவு செய்யத் தோன்றுகிறது..

கடைசி பாராவில், வலைப்பதிவுகளுக்குப் பதில் ட்விட்டர் என போட்டுக் கொள்ளலாம். பல மாறவில்லை. எவை மாறிவிட்டன என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

-------------------------
கார்க்கி. இளையதளபதியின் இனிய ரசிகன். இணைய தளபதி. என்ன விமர்சனங்களையும் எதிர்கொண்டு எழுதி எழுதி மேற்சென்று கொண்டிருப்பவர்.
இணைய எழுத்தால் நிறைய வாசகர்களைப் பெற்றவர்கள் பலர். இவர் ரசிகர்கள் - குறிப்பாக - ரசிகைகளைப் பெற்றிருக்கிறார். புட்டிக் கதைகள், காக்டெய்ல் இவர் ஸ்பெஷாலிடி. காதல் சம்பந்தப்பட்ட பதிவுகளில் ரசனைக்காரர். கேட்டல் ‘எல்லாம் இன்வால்வ்மெண்ட்தான் சகா’ என்பார். இந்த வாரம் கார்க்கி - 25.


மீபகாலமாக அந்த சிரிப்பு பதிவருக்கு ஃபோன் செய்து குட் நைட் சொன்ன பின்பே தூங்க செல்கிறார். ஹைதையில் ஃபோனும், காதுமாக அலைபவர், சென்னையில் இருந்தால் மட்டும் ஃபோனையே எடுப்பதில்லை.

டம், பொருள் பார்க்காமல் மொக்கை போடுவது கார்க்கியின் வழக்கம். பேசுபவர் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் அவர் சொன்னதுக்கு பதிலாக மொக்கைப் போட்டு பிரச்சினையை இலகுவாக்க பார்ப்பார். பல நேரங்களில் பூமராங் ஆனாலும் விடாமல் செய்வார். இதை மொக்கை என்று இவர் சொல்லிக் கொண்டாலும், ‘அவன் இருந்தா கலகலன்னு இருக்கும்பா’ என்று கார்க்கி இல்லாதபோது நண்பர்கள் சொல்லிக் கொள்வதுண்டு.

ஜினியை மட்டுமே தலைவர் என்று அழைப்பார். விஜயின் தீவிர விசிறி என்றாலும் தலைவன் அல்ல என்பதே கார்க்கியின் ஸ்டேட்மெண்ட். மற்ற பிடித்தவர்கள் லிஸ்ட் பெரியது.ஆனால் பிடிக்காதவர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த், அஜித், ஸ்ரீகாந்த் என்று ஒரு சிலரே உள்ளார்கள்.

பைக், ஷ்ர்ட், கார் என எதுவானாலும் சிவப்பு மற்றும் அந்த ஷேட் நிறங்களே விரும்புவார். ஆரஞ்சு ஷேடில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சட்டைகள் வைத்திருக்கிறார். பைக் கூட சிவப்புதான். கார் மட்டும் அம்மாவின் சாய்ஸ் என்பதால் க்ரே நிற i10. ஆரஞ்சு நிறத்தை இவர் ரசிப்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கிசுகிசு இருக்கிறது!

பைக்கில் ஸ்டிக்கரிங் ஒர்க் செய்வது கார்க்கியின் passion. அடிக்கடி மாற்றினாலும் முகப்பு கண்ணாடியில் இருக்கும் கீழ்கண்ட வாசகம் மட்டும் மாறவேயில்லை

K

A

R U L E S

K

I

க்கா மகன் பப்லு என்றால் மட்டும் கார்க்கி அடங்கிவிடுவார். சிறுவயதிலே அம்மா, அப்பா எப்போதும் உடன் இல்லாமல் போனதால் அவன் மீது அளவில்லா பாசம். இப்போதும் கார்க்கி சொல்வதே பப்லுவுக்கு வேதம். அதனாலோ என்னவோ ஏழு வயதிலே மாமாவைப் போல் மொக்கை மன்னன் ஆகிவிட்டான்,

கிரிக்கெட் பைத்தியம் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார். எப்போது அழைத்தாலும் கிரிக்கெட் விளையாட மட்டும் நோ சொல்ல மாட்டார். இண்டோர் கேம்ஸில் கேரம், செஸ் விளையாடுவார். கார்ட்ஸும் கார்க்கியின் ஃபேவரிட். இன்னொரு இண்டோர் கேம்... எனக் கேட்டால் ‘வேணாம் சகா எழுதாதீங்க’ என்கிறார்.

ரு முறை வித்யாதர் என்ற அமைப்புக்கு 5000 நன்கொடை தருபவர்களுடன் விஸ்வனாத் ஆனந்த் செஸ் ஆடினார். ஒரே நேரத்தில் 25 பேருடன் அவர் ஆடுவார் என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மூவ் செய்து விட வேண்டும். எப்படியோ ஆனந்தின் முக்கிய காய்களை சரிக்கு சமமாக வெட்டி மேட்ச்சை டிரா செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்வார்.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. யாராவது பிடித்தாலும் விலகி விடுவார். நண்பர்கள் வாங்கி வர சொன்னாலும் மறுத்துவிடுவார். ஏனோ சிகரெட் மட்டும் கொடுத்து வைத்திருக்கிறது.

ல்லா நடிகைகளையும் சைட் அடித்தாலும் மூன்றே மூன்று பேர்தான் கார்க்கியின் ஆல்டைம் ஃபேவரிட். நதியா, ஷாலினி, மாளவிகா.

ரொம்ப உரிமை இருக்கும் ஆட்களிடம் மட்டுமே சத்தம் போட்டு பேசுவார். இதனாலே அம்மாவுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு. ‘அவங்க சொன்னா கம்முன்னு போற, நான் சொன்னா மட்டும்தான் இப்படி கத்துவ’ என்று அம்மா சொல்லும்போதெல்லாம் அமைதியானாலும், அடுத்த நாள் மீண்டும் கத்திவிடுவார்.

குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் கைக்குழந்தைகளை தூக்குவது கார்க்கிக்கு பிடிக்காத ஒன்று. ஏடாகூடமா தூக்கி ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவார்.

த்ரியில் தொடங்கி வில்லு வரை விஜயின் எல்லாப் படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறார். சிங்கப்பூரில் இருந்த போதும் இந்தப் பழக்கத்தை விடவில்லை.சென்னை உதயம் தியேட்டர் தான் விஜய்க்கு கோட்டை என்பார்.

லுவலகத்தில் டென்ஷனான சம்யங்களில் யுட்யூபில் வடிவேலு காமெடியை பார்த்து சிரிப்பது கார்க்கியின் வழக்கம்.சமீபத்திய ஃபேவரிட் காட்சி இதோ. மற்ற சமயங்களில் முக்கிய கிரிக்கெட் மேட்ச்களை பார்ப்பார்.

வெளியே தெரியாத இன்னொரு விஷயம் கார்க்கி wrestling ரசிகர். இரவு 12 ஆனாலும் பார்த்துவிட்டுதான் தூங்குவார். undertaker,stone cold, hitman, rock எல்லாம் இவரின் ஆல்டைம் ஃபேவரிட்ஸ். இப்போதைய சாய்ஸ் John cena.

சை என்றால் சோறு தண்ணி வேண்டாம் கார்க்கிக்கு. டீ.ஆர் மகாலிங்கத்தில் தொடங்கி ஸ்ரீகாந்த் தேவா வரை அனைவரது பாடல்களும் கேட்பார். கிடார் கார்க்கியின் ஸ்பெஷல் என்பதால் அதை நிறைய பயன்படுத்தும் ஆட்களுக்கு ரசிகர் ஆகிவிடுவார். பாப் ஆட்களில் மைக்கேல் ஜேக்ஸனும், எல்விஸ் பிரெஸ்லியும் இவரது ஃபேவரிட். ஷகீராவின் இடுப்பும் இவருக்கு பிடித்தமானதே.

ங்கம் அணிவதே பிடிக்காது. அம்மாவின் வற்புறுத்தலால் ஒரே ஒரு செயின் அணிந்திருக்கிறார். செப்புலதான் மோதிரம் போட வேண்டுமென்பார். சொக்கத்தங்கம் வேலைக்காவாதாம். அதனால் செப்பு கலக்க வேண்டுமென்பார்

காதியபத்தியத்தை தீவிரமாக எதிர்ப்பவர் என்றாலும் கோக், KFC, pizzaa என பன்னாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். ‘வேலை செய்றதே அமெரிக்கா கம்பெனி அப்புறம் எதுக்குடா நான் பேசணும்’ என்று சொல்வார்.

ஜீன்ஸீல் Levis தான் அவரின் சாய்ஸ். சில மாதம் முன் சற்று குண்டான போது ஓரங்கட்டப்பட்ட ஜீன்ஸுகள் மீண்டும் புழக்கத்தில் வந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார். இன்னும் கொஞ்சம் குறைக்க மீண்டும் டான்ஸ் கிளாஸ் போக முடிவெடுத்துள்ளார்.

காரை விட பைக் ரைடிங்கை விரும்புவார். நேரம் கிடைக்கும் போது, ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் பீச்சுக்கு செல்வார். அங்கே ஒரு பியரோடு (நன்றாக படிக்கவும். ‘ய’ - ‘க’ அல்ல!) சில மணி நேரங்களை கடத்திவிட்டு ஒரு லாங் ரைடு போவது கார்க்கிக்கு பிடித்தமான ஒன்று.

நாய்கள் மற்றும் பெட் அனிமல்கள் கார்க்கிக்கு அலர்ஜி. நாய் வளர்ப்பவர்கள் வீட்டுக்கு செல்லவே மாட்டார்.

வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால், என்ன சொன்னாலும் நீ சின்னப்பையன் சும்மா இரு என்று மற்றாவர்கள் சொல்வதை வெறுப்பார். முக்கிய முடிவகளில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.

ன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் என்று யாராவது சொன்னால் கோவப்படுவார். அப்படிப்பட்ட புத்தகங்கள் படிப்பது சுத்த வேஸ்ட் என்பார். இருந்தாலும் Alchemist மட்டும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பார்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு இவர் அடிமை. இடையில் அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடலை எழுதிய போது “இவருக்கு ஏன் இந்த சின்னப்பசங்க வேலை” என்று ஒதுக்கினாலும் விடமுடியாமல் போனது. இன்றும் யாராவது வைரமுத்துவை குறைத்து பேசினால் முடிந்தவரை விவாதம் செய்வார்.

லைப்பதிவுகள் எழுத வந்த பின்பு நிறைய நல்ல மாற்றங்கள் தனக்குள்ளே வந்திருப்பதாக நம்புகிறார். எனவே பிளாக் மூலம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாகவே வைத்திருக்கிறார். என்ன வேலை இருந்தாலும் மெயில் அனுப்பும் வலையுலக நபர்களுக்கு மட்டும் பதில் அனுப்புவதை முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். வலைப்பதிவு, வலைப்பதிவாளர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே எப்போதும் இருப்பார்.


.