Wednesday, July 13, 2011
காமெடி பீஸ்
Monday, November 2, 2009
ஆள விடுங்க சாமிகளா....
குடும்பத்தோட ஊட்டி போனான் சரவணன். ஊட்டியில் கொடுமையான விஷயம் வழித்தடம் கேட்கறது. கேட்டா ஊட்டிய பத்தி ஒனக்கென்ன தெரியும்ங்கற மாதிரியேதான் பதில் சொல்வாங்க. ஒரு வளைவுல ரோடு ரெண்டா பிரியுதே-ன்னு நிறுத்தி ஒரு நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர் போட்டவர்கிட்ட (ஊட்டில ஸ்வெட்டர் போட்டிருந்தா மாக்ஸிமம் அவர் உள்ளூர்க்காரரா இருப்பார். அதுவும் நேவிப்ளூ கலர் ஸ்வெட்டர்!) ‘ஊட்டி நேராவா?”ன்னு கேட்டான் சரவணன்.
”இல்ல ரைட் டர்ன் எடுத்துப் போங்க”ன்னாரு. சரி.. ஒரு பொது அறிவுக்காக இருக்கட்டுமேன்னு “நேராப் போனா எங்க போகும்?”ன்னு கேட்டான் இவன்.
அவ்ளோதான்.. அதென்னவோ ராணுவத் தடவாளம் இருக்கற ரகசிய ரூட்டோ என்னமோ.. உடனே மூஞ்சி அவருக்கு கடுமையா ஆகிடுச்சு... “ஹலோ நீங்க எங்க போகணும்?”ன்னு கேட்டார். சரவணனுக்கு டரியலாய்டுச்சு. ஏதாவது தப்பா கேட்டுட்டோமோன்னு நடுங்கீட்டே.. “ஊ..ஊட்டிதாங்க போகணும்”னான்.
“அதான் நேராப் போனா போகாதுன்னு சொல்லீட்டேன்ல? ரைட்ல போங்க”
இவன் விடல.. “இல்லீங்க... இந்த ரூட் எங்க போகும்ன்னு...”
“ஊட்டிதானே போகணும் நீங்க? ஊட்டிதானே? போங்க.. ரைட் எடுத்து போன்னா போய்யா”ன்னு சொல்லிகிட்டே பக்கத்துல இருந்தவர்கிட்ட “இப்படிப் போனா அங்கியும் இங்கியும் சுத்தும்.. இதெதுக்கு கேக்கறான் அவன்? ரைட்ல போன்னா போக வேண்டியதுதானே?”ன்னு முனகினார். இவன் பொண்டாட்டி இவனைப் பார்த்து.. “சரி.. சரி.. காரைத் திருப்புங்க”ன்னு சொல்லவே. ‘ங்க’ – ‘ய்யா’வாய்டுச்சு ‘டா’வாகறதுக்குள்ள போயிடலாம்னு திரும்பீட்டான்.
அதே மாதிரி ஒருத்தரைக் கேட்டா அவர்கூட இருக்கற ரெண்டு மூணு பேர் கூட்டா சேர்ந்து கும்மியடிச்சு பதில் சொல்லி குழப்பறது-அடுத்த நாள்- ஊட்டிக்குள்ள இன்னொரு இடத்துல நடந்தது.
பைகாரா ஃபால்ஸுக்குப் போகணும் முடிவு பண்ணினாங்க. ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்ததும் காரை ஓரங்கட்டி நிறுத்தி இறங்கிப் போய்க் கேட்டான்.
“சார் பைகாரா ஃபால்ஸ் எப்படிப் போகணும்?”
“பை காரா?”
“ஆமாங்க பைகாராதான்”
“இல்ல... பை காரா?”
-இதென்னடா வம்பாப்போச்சு.. “பைகாராதாங்க”
“ஐயோ.. கார்ல போறீங்களான்னு கேட்டேன்..”
‘அடக் கொடுமையே By Carஆ-ங்கறதயா அப்படிக் கேட்டான்’ னு நெனைச்சுட்டு ‘ஆமாம்’னான்.
“இதே ரூட்ல நேராப் போனீங்கன்னா...” ன்னு ஆரம்பிச்சான். ‘ஊட்டில எல்லா ரூட்டுமே வளைஞ்சு வளைஞ்சுல்ல போகும்.. அதெப்படி நேராப்போறது’ன்னு குதர்க்கமா நெனைச்சவன் “சொல்லுங்க”ன்னான்.
“சிக்னல் ஒண்ணு வரும்.. அந்த சிக்னல்லேர்ந்து ரைட்ல போகக்கூடாது... லெஃப்ட்ல போனீங்கன்னா”
-ரைட்ல போகக்கூடாதுன்னா அத ஏன் சொல்லணும்? நேரடியா லெஃப்ட்ல போன்னு சொல்ல வேண்டியதுதானே??
“ரோடு ரெண்டா பிரியும்.. அதுலயும் லெஃப்ட் பிடிச்சு போங்க.. 24 கிலோமீட்டர்.. பைகாரா வரும்”
ஓரளவு இதை மனதில் வைத்துக் கொண்டு திரும்பிட்டான்... “சார்..” என குரல் கேட்டது... பார்த்தா அவனுக்கு வழி சொன்னவரோடு இன்னொருவர் நின்று கொண்டிருந்தார். “எங்க போகணும்?”
“பைகாரா”
“நேராப் போய் லெஃப்ட்ல போங்க”
அதற்குள் முதலாமவர் “நீ சொல்றது சிக்னலுக்கு முன்னாடி வர்ற லெஃப்ட்.. சிக்னல்ல லெஃப்ட் போனாத்தான் கரெக்டா வரும்”
“இல்லடா... இந்த ரூட்ல சிக்னலுக்கு முன்னாடி எங்கடா லெஃப்ட் வருது?”
“ஆமா வருதுல்ல” – இது புதிய குரல். அவர்களோடு இன்னொருவரும் சேர்ந்திருந்தார். மூணாவதா இன்னொருத்தரா? கடவுளே..
“யோவ்.. இந்த ரோட்ல எங்கடா லெஃப்ட் வருது?”
“நம்ம கிறிஸ்டி வீடு இருக்குல்ல? அதுக்கு அடுத்ததா....”
“கிறிஸ்டியா?.. ஆமா.. அவ ஊர்லேர்ந்து லீவுக்கு வந்திருக்காளாமே?”
சரவணனுக்கு கடுப்பாச்சு.. இருந்தாலும் கிறிஸ்டிங்கற பேர் பிடிச்சிருந்தது. அதுனால பொறுமையா நின்னுட்டிருந்தான். கிறிஸ்டி ஏர் ஹோஸ்ட்ரஸா இருக்காங்க. இப்ப ஏதோ லீவு போலிருக்கு. வந்திருக்காங்க.. இவங்க மூணுபேரும் அடுத்தநாள் கிறிஸ்டி வீட்டுக்கு மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு போகப் போறாங்க. ஒருவழியா எல்லாம் முடிவானப்பறம்தான் ஒருத்தன் அட்ரஸுக்காக நிக்கறாங்கறதே அவங்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
“நீங்க என்ன பண்றீங்க....”
“நான் கோவைல மொபைல் ஷாப் வெச்சிருக்கேன்.. க்ளாட் டு மீட் யூ.”ன்னான் சரவணன்.
“அதில்லீங்க.. இப்ப என்ன பண்றீங்க..”
“இப்ப வீக் எண்ட்க்காக ஊட்டி வந்திருக்கேன்..”
“ஐயோ கடவுளே.... பேச விடுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா.. நேராப் போயி..”
“ஒண்ணும் பண்ணல.. கெளம்பறேன்” னான் இவன்.
அதுக்குள்ள பின்னாடிலேர்ந்து இன்னொரு குரல் “நீங்க எங்க போகணும்க”ன்னு கேட்டது. ரஜினி படமா இருக்கேன்னு (எங்கேயோ கேட்ட குரல்) திரும்பினான் சரவணன்.
நேத்து எண்டராகும்போது ஊட்டிக்கு ரைட்ல போகச் சொன்ன நேவிப்ளூ ஸ்வெட்டர் பார்ட்டி!
‘ஐயோ ஆள விடுங்கப்பா’ன்னு ஓடி வந்தவன்தான். அதுக்கப்பறம் யார்கிட்டயும் வழியே கேட்கல. அங்கங்க இருக்கற போர்டைப் பார்த்து போய்ட்டே இருந்தான்!
.
Friday, July 31, 2009
டென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....
இது ஆரம்பிச்சது மொதமொதல்ல தாமோதரன்ங்கற பையனோட கைங்கர்யத்துலதான். மூணு நாலு வருஷத்துக்கு முன்ன இருக்கும். தாமோதரன்கற பையன் எங்க எம்ப்ராய்டரி செக்ஷன்ல வேலை செஞ்சுட்டு இருந்தான். ஒரு செல்ஃபோன் வாங்கி அதுக்கு ஜிப் வெச்ச மாதிரி கவர் விப்பாங்களே அதைப் போட்டிருந்தான். எனக்கென்னவோ அந்த மாதிரி செல்ஃபோனை கவர் பண்ணினா பிடிக்காது. அதுனால அவனைப் பார்த்து ‘இதெதுக்குங்க’ன்னு கேட்டேன். அவன் நான் அந்த கவரைப் பார்த்த்தே இல்லைன்னு நெனைச்சு அவன் ‘சார்.. இந்த கவர் போட்டா ரொம்ப சேஃப் சார்’ன்னு ஆரம்பிச்சு அதோட மகத்துவங்களையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சான். நான் அவனை ஓட்டறதுக்காக ‘ஐ! இப்படியெல்லாம் கூட விக்கறாங்களா?’ன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போ என்கிட்ட அறிவழகன் வந்து நான் தாமோதரனை ஓட்டறேன்னு புரிஞ்சுட்டு “டேய் கிருஷ்ணா.. இதப்பார்றா.. ஜிப் எல்லாம் வெச்சிருக்கு!”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூறு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்?”ன்னு கேட்டேன். அறிவழகன் “போடா இங்க பாரு சார்ஜர் போடற இடத்துல ஓட்டை போட்டிருக்கு. ஐ.. இங்க பாருடா இயர் ஃபோன் மாட்டற இடத்துல கூட ஓட்டை இருக்கு. ரோப் மாட்ட ரிங் குடுத்திருக்காங்க. இவ்ளோ வேலை செஞ்சிருக்காங்க. நிச்சயமா இருநூறுரூபாக்கு மேல இருக்கும்”ன்னான். நாங்க சண்டை போட்டுட்டு இருந்தோம். தாமோதரன் ‘சார் வெறும் பதினைஞ்சு ரூபா சார்.. நம்புங்க சார்’ன்னு சீரியஸா சொல்லிகிட்டே இருந்தான். ‘போப்பா.. அவ்ளோ விலைன்னு சொன்னா நாங்க ஏதாவது நெனைப்போம்ன்னு நீ பொய் சொல்ற. ஜிப்பெல்லாம் கூட இருக்கு. அதெப்படிப்பா பதினைஞ்சு ரூபாய்க்கு குடுப்பான்’ன்னு அவனைப் பேச விடாம நாங்க மறுபடியும் 150, 200ன்னு பேசிப் பேசி அவன் பாவம் எங்களை விலக்கி விடற அளவு பண்ணினோம்.
இன்னைக்கும் யாராவது மாக்கானுக மாட்டினா ‘டேய் இன்னொரு தாமோதரன்டா’ம்போம். அவன் என்னதுன்னு கேட்டா ‘எங்களுக்கு தாமோதரன்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தார். ரொம்ப ஜீனியஸ். நீங்களும் அவரை மாதிரியே அறிவாளியா இருக்கீங்க’ன்னு சொல்லுவோம்.
ஒரு நாளைக்கு ரெண்டு பேருமா வெளில போக வேண்டி வந்தது. எப்பவுமே பைக்ல போகும்போது அவன் ஓட்டீட்டு போவான். (பைக்கை) நான் பின்னாடி உட்கார்ந்து ஐபாட்ல ஏதாவது பாட்டு போட்டுட்டு சத்தமா பாடீட்டே வருவேன். அவனும் கத்தி பாடீட்டே வருவான்.. ரோட்ல போறவங்களைப் பத்தி எங்களுக்கு கவலை இருக்காது. இந்த மாதிரி வந்துட்டு இருக்கறப்போ ஒரு வேன் போய்ட்டு இருந்தது. அந்த வேன் சடார்னு ப்ரேக் போட்டது. பார்த்தா ஒரு மொபெட்கார்ர் அந்த வேனுக்கு முன்னாடி க்ராஸ் பண்ணிருக்காரு. அவர் க்ராஸ் பண்ணி வந்து நின்னது - எங்களுக்கு ஜஸ்ட் சில இஞ்ச்கள் முன்னால. அறிவழகன் சடார்னு ப்ரேக் அடிச்சு ரொம்ப கோவமா திட்டறதுக்கு வாயெடுத்தான். நான் உடனே இறங்கினேன். நான் திட்டத்தான் போறேன்னு அவன் அமைதியா இருந்தான். டிவியெஸ்காரரை ரொம்ப எரிச்சலோட, சுத்தி இருக்கற ஆளுக பத்து பதினைஞ்சு பேர் பார்த்துட்டிருந்தாங்க. நான் இறங்கி நேரா அவர் மொபட் முன்னாடி நின்னு ‘கைகுடுங்க’ன்னு கை நீட்டினேன். அவர் முழிச்சாரு. ‘சும்மா கைகுடுங்க சார்’ன்னு சொல்ல அவர் கையை நீட்டினார். பிடிச்சு ரொம்ப அன்பா ஷேக் ஹாண்ட் பண்ணி ‘சூப்பர் ட்ரைவிங்’ன்னு பாராட்டி பைக்ல வந்து ஏறிட்டேன். கிளம்பும்போது அவர்கிட்ட சத்தமா ‘இது உங்களுக்கு செகண்ட் லைஃப். புதுசா பிறந்திருக்கீங்க.. அதான் கைகுடுத்தேன்’ன்னு சொன்னேன்.
இன்னொரு நாளைக்கு நான் என் பைக்லயும் அவன் அவன் பைக்லயும் வந்துட்டிருந்தோம். பாதி தூரம் வந்துட்டு இருந்தப்போ ‘என்னமோ மாதிரி இருக்குடா’ன்னான். ‘இப்ப என்ன மூடை மாத்தணுமா.. இரு’ன்னு முன்னாடி போன பைக்குக்கு ஒரு சைடு அவன் போகவும் நான் அந்த பைக்குக்கு வலது பக்கம் என் பைக்கை விட்டேன். (அதாவது எங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு புதியவரின் பைக்!) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற? எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற?’ன்னு உரக்க திட்ட ஆரம்பிச்சேன். அறிவழகனுக்குப் புரிஞ்சுடுச்சு. அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பிச்சான். நடுவுல பைக்ல வந்தவர் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டு ஸ்பீடா போகப் பார்த்தார். நாங்க விடாம பைக் ஓட்டீட்டே வாக்குவாதம் பண்ணிட்டு வரவும் அவர் ‘விடுங்க சார் விடுங்க சார்’ன்னு ரெண்டு பேரையும் பார்த்து மாறி மாறி சொல்லிட்டு ஒரு கட்டத்துல எஸ்கேப் ஆகிட்டார். உடனே நாங்க வேறொரு பைக்காரரை செலக்ட் பண்ணி இதே மாதிரி பண்ணினோம். கிட்டத்தட்ட ஆறெழு பேர்.
இதோட க்ளைமாக்ஸ் நல்லா இருந்தது. எங்க ஆஃபீஸ் இருக்கற ரோட்ல வந்து இதே வேலையைச் செஞ்சுட்டே வந்தமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவர் என்னடா சண்டை போட்டுட்டே ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்குள்ள போறாங்க’ன்னு நெனைச்சிடக்கூடாதுல்லயா... அதுனால அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. என் பைக்கை இடிச்சியில்ல.. வாய்யா உள்ள வந்து எங்க ஓனரைப் பார்த்து பதில் சொல்லீட்டு போ’ன்னு அவனை கூப்ட்டேன். அவனும் ‘தப்பு உன்மேலதான். வா.. எங்க வேணாலும் வந்து சொல்லுவேன்’ன்னு சொல்லீட்டே பைக்கை உள்ளே விட்டான்.
பைக்கை ஸ்டாண்ட்ல போடும்போது அறிவழகன் தாங்க முடியாம சிரிக்க ஆரம்பிச்சான். அப்போதான் கவனிச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவரும் யாரையோ பார்க்க எங்க ஆஃபீஸ்தான் வந்திருக்காரு. அவரைப் பார்த்ததும் நான் சைகை காமிச்சேன். அறிவழகன் உடனே சுதாரிச்சுட்டு ‘வா.. மேனேஜரா.. ஓனரா.. யாரை வேணும்னாலும் கூப்டு’ன்னுட்டே எங்கூட வந்தான். அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்த்துட்டே செக்யூரிடிகிட்ட பாஸ் போட போனாரு.
ரெண்டுமூணு நாள் முன்னாடி நானும் அறிவழகனும் பயங்கரமா சிரிச்சுட்டே ஃபேக்டரிக்குள்ள போய்ட்டு இருந்தோம். எதிர்ல பார்த்தா அன்னைக்கு நடுவுல மாட்டிட்டு ஆஃபீஸ்க்கு வ்ந்த ஆளு. அன்னைக்கு இண்டர்வ்யூ வந்தாராம். ‘உள்ளதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்’ன்னார். ‘ரெண்டு பேரும் அன்னைக்கு அவ்ளோ சண்டை போட்டுட்டீங்க?’ன்னு கேட்டார். ‘ஆமா சார். பஞ்சாயத்துக்கு ஓனர்கிட்ட கூப்ட்டு போனேன்ல.. பைக்ல சைடு மிர்ரர் உடைச்சதுக்கு இவன் காசு தரணும்னு வந்தது. பார்த்தா இவனுக்கு வேலையில்லைன்னு தெரிஞ்சது. உடனே ஓனர் இங்கயே வேலை செய். முதல் மாச சம்பளத்துல கழிச்சுக்கலாம்’ன்னாரு. இங்கயே வேலைக்கு சேர்ந்துட்டான். இப்போ ராசியாய்ட்டோம்’ன்னேன். அவரும் ‘ச்சே.. செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குங்க’னாரு.
இன்னொரு தாமோதரன்!
.
Friday, October 3, 2008
அதிஷாவைக் காதலிக்கும் இளம்பெண்! (சிறப்புப் புகைப்படத்துடன்!)

நம்ம வலையுலக இளஞ்சிங்கம் அதிஷா இன்னைக்கு ஒரு பதிவு எழுதியிருக்காரு. யாரோ சேர நன்னாட்டு மங்கையொருத்தி தனக்கு காதல் கடிதம் எழுதியிருக்காங்களாம். சந்தோஷமா அதைப் பகிர்ந்துகிட்டிருக்காரு. அர்த்தம் புரியலையாம்... இதோ அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு..
പ്രിയനേ,
ப்ரியனே (நாசமாப்போக!)
അങെങ്ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു.
நீங்க எழுதற ஒவ்வொரு வரியிலயும் நான் உங்களை நேசிக்கறேன். (செருப்புலயே அடி!)
അങിലാതെ ഞാനില്ല.
நீங்களில்லாமல் நானில்லை. (என்ன கொடுமைடா இது!)
എന്നെ മനസിലാകുമെന്നു കരുതുന്നു.
என்னைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். (பழகிப்பாரு... அப்புறமா, நீ இந்தாளைப் பத்திப் புரிஞ்சுக்குவ!)
വരവും കാത്തു ഞനിരിക്കും.
வரவும் காத்து நான் இருப்பேன். (விளங்கினாப்லதான்!)
പിരിഞിരിക്കുന്ന ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪ഷങളാകുന്നു.
பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு ஒவ்வொரு வருடங்கள்தான். (ஏதும் கடன் பாக்கியா?)
സ്നേഹപൂ൪വം
காதலுடன் (ம்க்கும்!)
ചി൯മയ
சின்மய
எனக்கு கேத்தரின், ரீட்டா மாதிரி ஆங்கில மங்கையரிடமிருந்து ச்சாட் பண்ணலாமா-ன்னு நெறைய மெயில் வருது. அதெல்லாம் ஸ்ட்ரெய்ட்டா ட்ராஷுக்குத்தான் போகும். இந்த மனுஷன் பதிவாப் போட்டு தன்னோட சம்மதத்தைக் கோடிட்டு காமிச்சிருக்காரு.
அப்ப அன்னைக்கு கோவைல நீ காமிச்ச பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போற அதிஷா? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்!
இனி.. சிறப்புப் ‘புகை’ப்படம்:-

வர்ட்டா!
Saturday, September 27, 2008
பீர்பாட்டில் திறக்கிறேன்....

வால்பையன் மன்னிக்கவும்!
எனக்கு பீர் அறிமுகமானது நண்பனின் செந்தூர் ஒயின்ஸ் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பிறர் பீரடிப்பதைப் பார்க்க மட்டுமே செய்தேன். பதினொன்ணு, பனிரெண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாள் (மப்பில் தேதி,கிழமை மறந்துவிட்டது) நானும் ஒரு பீரடிக்க ஆரம்பித்தேன். அதுவும் தற்செயலாகவே கிங்ஃபிஷ்ராக அமைந்துவிட்டது. சில ஊறுகாய், மிக்சருடன் ஆரம்பித்த எனது பீர் இப்போது பல ஆயிரங்களைக் கடந்துவிட்டது.
ஆனால் சில நாட்களாக இத்தோடு பீரடிப்பதை விட்டே ஓடிப்போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு மனஉளைச்சல். நான் ஏதோ விளையாட்டுக்கு ஸ்ட்ராங் அடிக்கப் போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு டூப்ளிகேட் சரக்கு விற்ற டாஸ்மாக் சூபர்வைசரைப் பகைத்துக் கொண்டது.
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பீருக்கு வரிசையாக பத்து ஊறுகாய் கொடுக்கக் சொன்னார் அந்த டாஸ்மாக் சூபர்வைசர். சால்னாக்கடைக்காரரும் கொடுத்தார். அதில் ஒன்று மட்டுமே சாப்பிட்டேன். மற்றவை எல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பக்கத்திலேயே அவர் இருந்தாலும், நான் மப்பில் இருந்ததால்... சரியாகத் தெரியாமல் அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு ஊறுகாய்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் சாப்பிட்டேன் என்று நானே கூறினேன். அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு ஊறுகாய் திருப்பிக் கொடுப்பது பிடிக்காது என்று நினைத்தேன். அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
கடைசியாக சாப்பிட்ட டூப்ளிகேட் பீரில் நான் ஏதும் மிக்ஸ் செய்யவில்லை. டாஸ்மாக் சூபர்வைசரின் அந்த சதியின்போது , பீரடித்து இறுதியாக "இந்த பீருக்கு நீங்கள் செவன் அப் மிக்ஸ் பண்ணி என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் சால்னாக்காரர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். 'போடாங்கொய்யால... ம**” என்று திட்டிவிட்டார். மப்பில் சூடு சொரணை இருக்குமா என்ன? நானும் பின்விளைவாக "என்னடா சூபர்வைசரிடமிருந்து இன்னும் பதிலில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்றும் எழுதியிருந்தேன்.
அதை அவர் கண்டுகொள்ளவில்லை. நான் எப்பொழுது பீரடித்தாலும் எனக்கு மப்பு அவ்வளவாய் ஏறாது. இருந்தாலும் ஒரு பீரடித்து ஏறவில்லை என்றால் அதன்பின் இன்னொரு பீர் என் டேபிளுக்கு வருவது போல் ஆர்டர் செய்து விடுவேன். அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன், மற்ற டேபிளுக்கு பீர் வந்ததால், என் டேபிளுக்கு பீர் தருவீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.
அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு பீர் எடுக்க வேண்டியதாயிற்று. சமீபத்தில் மப்படித்த போது, சவுண்டு சந்திரனும் மஜாவேந்திரனும் பாரிலேயே ப்ளாட் ஆனபோதுகூட டாஸ்மாக் சூபர்வைசர் எழுப்பிவிடப் போனபோது நானும் கைகொடுத்து தூக்கிவிட்டு ஒரே ஒரு ஸ்மைல் மட்டும் காட்டினேன். சூபர்வைசர் எனது ஸ்மைலிற்கு திரும்ப சிரிக்கக்கூட இல்லை. ஆனால் அதன் பின் அவர் சிரித்தால் எனக்குத் தெரியும் வண்ணம் திரும்பி உட்கார்ந்தேன். முகத்தில் அவர் சிரிக்காமல் என் பின்னால் போய் முதுகில் சிரித்தது தெரிந்தது.
நான் என்ன துரோகம் அவருக்கு செய்தேன். நான் பீரடிக்கும் பாரில் எல்லாம் எனக்கு ஊறுகாய் தரக்கூடாதெனவும், நான் மப்பில் உளறுபவன், பீருக்கு காசுதராமல் போவேன் எனவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது, எனக்கு வேறு பெயரில் சொந்தமாகவே ஒரு பார் இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.
அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். என் பீருக்கு நான் காசு கொடுக்காமல், கொடுக்க முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கடங்காரன் அல்ல நான்.
இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது. எனக்கு கோட்டர் கோயிந்தசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆனால் மப்பு என்ற வார்த்தை போதையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். (ரெண்டும் ஒண்ணுதாண்டா வென்ரு!) நான் வாழ்க்கையில் அடித்த ஒரே ஹா(ர்)ட் சிக்னேச்சர்மீது ஆணையாக நான் காசுகொடுக்காமல் போனதில்லை, போவதில்லை, போகப்போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.
இந்த வீணாய் போன பார் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் நல்ல சால்னாக்களை என்று சொல்லி வந்தேன், ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு சூபர்வைசர், நான் தான் மப்படித்து உளறுவேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
எனக்கு கிங்ஃபிஷர் பீர் தவிர வேறொரு பீரும் பிடிக்கும். அதுவும் இதே பாரில்தான் அடித்திருக்கிறேன். எனது போதை நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன். பக்கத்துக் கடைகளிலிருந்து சில முக்கியமான சைட் டிஷ்களைத் சேர்த்து அப்போது அடிப்பேன். இதற்காக நான் கடைக்காரனுக்கு பணம் கொடுப்பதால் அந்த பணத்திற்குண்டான மரியாதையின் பொருட்டு அந்த பீரை முழுக்க முழுக்க நானே குடிக்கும் வழக்கம் வைத்திருக்கிறேன். இது தவிர நான் வேறு சரக்கெதுவும் அடிப்பதில்லை.
பொதுவாக நான் எந்த பாருக்கும் ஆதரவாளன் இல்லை. மப்படித்துவிட்டு உளறுவதும் எனக்கு பிடிக்காது, ஆனால் டாஸ்மாக் பார் சூபர்வைசர்களின் போதை உளறல்கள் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில சூபர்வைசர்களால் நான் சால்னாக்கடைக்கார நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு. நான் பீரடித்து எந்த புரட்சியையும் செய்து வி்ட போவதில்லை, சர்ச்சைக்குரிய பார்களில் எனக்கு சைட் டிஷ் கொடுத்து எனக்கு யாரும் போதையேற்றப் போவதில்லை. எனக்கு காசு செலவாவதே மிச்சமாகிறது.
இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே பார்ட்டி என்ற பெயரில் அரைமப்பு ஆறுமுகம் சார், நண்பர் மட்டை மனோகரனின் உளறல்களை கிண்டலடித்து நானும் மட்டையாகும் நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு பார் ஏதாவதிலும் கச்சேரி நடந்திருக்கலாம்.
வேறு இடத்தில் நான் அப்படியேதேனும் மப்பில் உளறியிருந்தால் என்னை மன்னித்து, நான் உளறக்கூற முடியாத அளவுக்கு ஃபுல்மட்டையாக இன்னொரு பீர் எனக்கு ஆர்டர் செய்துவிட்டு, காசையும் செட்டில் செய்து விடுங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்.
இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு பீர் ஆர்டர் செய்யப்போகும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் எனது (எத்தனையாவது என்று தெரியவில்லை) பீர் முடிந்தது.
யோவ்... அடுத்த பீர் கொண்டுவாய்யா.....ங்கொய்யாஆஆஆஆஅல!
(முக்கியக் குறிப்பு: வால்பையனிடம் முன் அனுமதி பெறப்பட்ட எதிர்பதிவு. இதைப்படித்து கும்மி, மொக்கையே சரணம் என்று திருந்தி வருமாறு வால்பையனுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது!)
Monday, June 30, 2008
ஒரு சாமியார் உருவாகிறார்!
காட்சி - 1
இடம்: தரகர் வீடு
பாத்திரங்கள்: அண்டா, குண்டா.. ச்சே.. தரகர் தங்கமணி, வீரபாண்டி.
தரகர்: அடடே! வாங்க வீரபாண்டித்தம்பி!
வீ.பா: நான் வீரபாண்டி தம்பி இல்ல. வீரபாண்டியே நாந்தான்.
தரகர்: கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா! சும்மா பாசமா தம்பி'ன்னு கூப்பீட்டேன்..
வீ.பா: வேணாம். கூப்பிடாதீங்க. சொத்துல பங்கு கேட்டுடுவேன்.. (சுற்றிலும் பார்த்து) எங்க உங்க சம்சாரத்தைக் காணோம்?
தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!
வீ.பா: யோவ்.. வீட்ல இல்லியான்னு கேட்டேன். சரி.. வீடு பாக்கச் சொன்னேனே.. என்னாச்சு?
தரகர்: வீடு இருக்கு தம்பி. சின்னதா ஒரு ரூம். பாத்ரூம்.. டாய்லெட்.. அவ்ளோதான். பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து நேராப் போய் ரைட்ல கட் பண்ணினா வீடு வந்துடும்..
வீ.பா: வீடு வந்துடுமா? என்னய்யா.. நடமாடும் வீடா? வாடகை எவ்ளோ? வீட்டுக்க்காரர் யாரு?
தரகர்: வாடகை ரொம்பக் கம்மிதான். ஹவுஸ் ஓனர் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. ரொம்ப நல்லவரு. கறை படியாத கைக்காரர்!
வீ.பா: ஏன்.. இங்க் பேனாவே யூஸ் பண்ண மாட்டாரா?
தரகர்: லஞ்சமே வாங்க மாட்டாருன்னேன்பா..
வீ.பா: இப்ப யாருமே லஞ்சம் வாங்கறதில்ல.. ஒன்லி `அன்பளிப்பு'தான்!
தரகர்: எல்லாத்தையும் விட தண்ணி கஷ்டமே இல்ல..
வீ.பா: பககத்துலயே டாஸ்மாக்கா? சரி.. எப்ப அங்க போலாம்?
தரகர்: கிளம்புங்க.. இப்பவே போலாம்.
காட்சி - 2
இடம்: புதிய வீடு
பாத்திரங்கள்: வீட்டுக்காரர், அவரது மகள், வீரபாண்டி & தரகர்
(தரகர் கதவைத் தட்டுகிறார்)
தரகர்: என்னங்க.. சார்.. ஹலோ..
வீ.பா: போதும்யா.. விட்டா மைக் டெஸ்டிங் மாதிரி பேசிட்டே போற..? பொறு.. வருவாங்க..
(கதவு திறந்து ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் நிற்கிறாள் ஒரு இளம்பெண்)
பெண்: யாருங்க வேணும்?
வீ.பா: வீட்டுக்காரர் இல்லையா?
(அவள் வெட்கமாய் நெளிகிறாள்)
வீ.பா: நெளிஞ்சது போதுங்க.. உடைஞ்சிடப் போறீங்க..
பெண்: எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்க..
வீ.பா: அதுக்கு நான் என்னங்க பண்றது?
தரகர்: (இடைமறித்து) உங்க வீட்டுக்காரர் இல்லீங்க.. ஹவுஸ் ஓனரைக் கேட்டோம்..
பெண்: ஓ! அப்பாவா?
வீ.பா: அது எனக்கெப்படிங்க தெரியும்?
தரகர்: (வீரபாண்டியிடம்) அடி வாங்காம போகமாட்ட போல..
பெண்: உள்ள வந்து உட்காருங்க.. (சொல்லிவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, இருவரும் சோபாவில் அமர்கிறார்கள்)
வீ.பா: யாருய்யா இந்தப் பொண்ணு? மாதாஜி திவ்யாதேவி மாதிரி?
தரகர்: ஐயோ.. அந்த மாதிரி இல்லிங்க.. கொஞ்சம் பக்தி ஜாஸ்தி.
(வீட்டு ஓனர் வருகிறார்)
ஓனர்: வீட்டைப் பாத்தீங்களா?
வீ.பா: பாத்துட்டோங்க.. அதுசரி.. ஏன் வீட்டு வெளி சுவத்துல பூரா காவி அடிச்சிருக்கு?
ஓனர்: அதுவா? மொதல்ல அங்க ஒரு சாமியார் இருந்தார்..
வீ.பா: சாமியாரா? அப்ப இந்நேரம் வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருக்குமே?
ஓனர்: அந்த மாதிரி இல்ல. ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தின ஒரிஜினல் சாமியார்.. சரி.. எப்ப பால் காய்ச்சுவீங்க?
வீ.பா: தினமும் காலைல பால்காரன் வந்ததும் பால் காய்ச்சுவோம்
ஓனர்: யோவ்.. வீட்டுக்கு எப்ப குடி வர்ற-ன்னு கேட்டேன்..
வீ.பா: நாளைக்கே வந்துட்டா போச்சு!
காட்சி: 3
(புதிய வீட்டிற்கு குடி போன ஒரு வாரத்தில் வீரபாண்டியின் வேலை போய்விடுகிறது. வெறுத்துப் போய் அவன் அமர்ந்திருக்க கமிஷன் பணத்திற்காக தரகர் வருகிறார்)
தரகர்: தம்பி.. உங்க கம்பெனிக்கு போயிருந்தேன்.. வேலையை விட்டு நிறுத்தீட்டாங்களாமே.. ஏன் தம்பி?
வீ.பா: ஆங்? எல்லாரும் தூங்கும்போது, நான் மட்டும் வேலை செஞ்சேன்னுதான். நீ வேற ஏன்யா! டெம்பரவரி தானே.. வேணாம்னதும் வீட்டுக்குப் போடான்னுடாங்க..
தரகர்: சாப்பாடு, வாடகையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க?
வீ.பா: அதான் யோசிக்கறேன். இருக்கறத வெச்சு ஒருமாசம் ஓட்டிடுவேன்.. (இந்த நேரத்தில் வெளியே ஒரு கிராமவசியின் குரல் கேட்கிறது)
கி.வாசி: சாமி.. சாமி..
வீ.பா: (வெளியே வந்து) யாரு வேணும்?
கி.வாசி: சாமி.. நீங்கதான் இந்த வீட்ல இருக்கற சாமியாரா? சாமி.. என் பசுமாடு ஒண்ணு காணல.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுங்க சாமீ..
வீ.பா: யோவ்.. என்னய்யா இது என்னை பேச விடாம.. நானே வேலை தேடீட்டு இருக்கேன்.. இதுல இவன் மாட்டை வேற தேடணுமாம்.
கி.வாசி: சாமி.. எப்படியாச்சும் மனசு வைங்க சாமி..
வீ.பா: (எரிச்சலோடு) போய்யா மொதல்ல.. (என்று கிராமவாசியைத் துரத்த அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான்) போய்யான்னா.. (என்று கத்தியபடி கீழே இருக்கும் கல் ஒன்றை எடுத்து எறிகிறான் வீரபாண்டி) இனிமே இந்தப் பக்கம் வந்தே... அவ்வளவுதான்..
தரகர்: தம்பி.. நம்ம கமிஷன்...
வீ.பா: நீ வேற கமிஷன், கமிஷன்னுகிட்டு.. என் ஃப்ரண்டு ஒருத்தன் எனக்குப் பணம் தரணும். ரெண்டு பேருமா போலாம். அதை வாங்கி உனக்குத் தர்றேன்
(மறுபடி வெளியே கிராமவாசியின் குரல் கேட்கிறது)
கி.வாசி: சாமீ.. சாமீ..
வீ.பா: இன்னும் போகலியா இவன்.. இவனை... (கோபமாய் வெளியே வர கிராமவாசி பசுமாட்டுடன் நிற்கிறார்)
கி.வாசி: சாமீ... எங்க கிராமத்துல சொன்னாங்க.. சாமியார் எதையுமே குறிப்பாத்தான் சொல்லுவாருன்னு. நீங்க கல்லைத்தூக்கி எறிஞ்சீங்களா.. சரீன்னு அந்த திசைலயே போனனா, என் பசுமாடு கெடச்சுடுச்சு! என் கூட வந்த பயலுக எல்லாம் உங்களைப் பாத்ததே இல்லியாமே.. பஸ் ஸ்டாண்டுலதான் இருக்கானுவ.. உங்களுக்கு பூஜை போடணுமில்லா.. இருங்க கூட்டியாரேன்.. (சொல்லிவிட்டு ஓடுகிறான். வீரபாண்டி தலையிலடித்தபடி உள்ளே போகிறான்)
தரகர்: தம்பி.. போலாமா உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு?
வீ.பா: இருய்யா.. குளிச்சுட்டு வரேன்
காட்சி: 4
(குளித்துவிட்டு வந்த வீரபாண்டி தலைசீவி விட்டு, விபூதியை எடுத்து நெற்றியில் வைக்கப் போக, வெளியே ஏதோ குரல் கேட்கிறது. விபூதிக் கையுடன் வெளியே வருகிறான். அங்கே கிராமவாசியும், அவன் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சிறு கூட்டமாய் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன் தரகர் அமர்ந்திருக்கிறார்)
தரகர்: நம்ம வீரபாண்டிச் சாமி ரொம்ப அடக்கமானவரு.. தான் கடவுளோட மறு அவதாரம்கிற கர்வமே இல்ல..
வீ.பா; (கோபமாய்) கர்வப்பட இதென்ன கலெக்டர் வேலையா? போங்கய்யா.. நான் சாமியாருமில்ல.. ஒண்ணுமில்ல...
கூட்டத்தில் ஒருவர்: என்னா அடக்கம்.. என்னா அடக்கம்..
மற்றொருவர்: `நான்' கிறது ஒண்ணுமில்ல ன்னு எவ்ளோ எளிமையா சொல்றாரு!!
கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..
கூட்டம்: ஜே!
கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..
கூட்டம்: ஜே!
வீ.பா: சும்மா கத்தாதீங்க. நான் சாமியாரே (அதற்குள் தரகர் அவனது வாயைப் பொத்தி, காதில் கிசுகிசுப்பாய்..)
தரகர்: தம்பி.. சும்மா இருங்க.. இதை விட்டா சூப்பர் பிஸினசே இல்ல! (கூட்டத்திடம்) நீங்க சொல்லுங்க..
கூட்டம்: வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!
(இந்த நேரத்தில் வீட்டு ஓனரின் மகள் கையில் ருத்திராட்ச மாலையுடன்
வர.. கூட்டம் அவளப் பார்த்து..)
“சிஷ்யாதேவிக்கு ஜே! ஜே!”
வீரபாண்டி வெறுப்புற்றவனாய் `என்னமோ பண்ணுங்க' என்று கையை உதற கையிலிருந்த விபூதி சிதறுகிறது.. அதைப் பார்த்த தரகரும், வீட்டு ஓனரின் மகளும் கூட்டத்தினரோடு சேர்ந்து கோஷமிடுகிறார்கள்..
“வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!”
(வீரபாண்டி திகைத்து நிற்கிறான்)
பின்குறிப்பு: இன்றைக்கு புதிதாய் எழுத மூடு வராததால் (தப்பிச்சீங்க!) 1995 அக்டோபர் மாதம் உங்கள் ஜூனியர் மாத இதழில் நான் எழுதிய இந்த நாடகம் சின்ன சின்ன திருத்தங்களோடு..
”இதுக்கு நீ தர்ற ஊசிப்போன அவியலோட மொக்கையே பரவால்லியேடா”- ங்கறவங்கல்லாம் கையைத்தூக்குங்க'
அப்படியே இருங்க! இனி நான் அவியல் போடறப்பதான் கையை இறக்கணும்!