Friday, February 27, 2009

பெயரில் என்ன இருக்கிறது?


பெயரில் என்ன இருக்கிறது?

ஷேக்ஸ்பியர் தொடங்கி நீலபத்மநாபன் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள். ஆமாம்.. பெயரில் என்ன இருக்கிறது...?

யோசித்துப் பார்த்தால் ஒன்றுமில்லைதான். ஆனால் ஒரு பெயரை வைக்க, நமக்குத் தெரிந்தவர்கள் ‘என் பையனுக்கு/பொண்ணுக்கு ஒரு நல்ல பேர் சொல்லுங்க சார்’ எனும்போது அப்படி நினைக்க முடிகிறதா?

நியூமராலஜி கந்தாயங்களை விடுங்கள். ‘நாம வைக்கற பேரு நல்லாயிருக்கணும், பெரிசானா சம்பந்தப்பட்டவங்க நம்மளைத் திட்டக்கூடாது’ என்று எப்படியெல்லாம் யோசிக்கிறோம்!

நான் என் முதல் மகளுக்குப் பெயர் வைக்க மிகவும் யோசித்தேன். யாரிடமாவது ‘ஐடியா சொல்லுங்க’ என்று கேட்டால் ‘மொத லெட்டர் என்ன?’ என்று கடுப்பேற்றினார்கள். அப்போது நான் வைரமுத்துவின் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்த நேரம். ‘சிகரங்களை நோக்கி’ படித்துக் கொண்டிருந்தேன். ‘ஓவியா’ என்ற அதில்வரும் கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு அந்தப் பெயரை வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

நண்பர் ஒருவரது கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் ‘மச்சான்’ என்றழைக்கும் எனது நண்பர் ஒருவர்தான் மீரா என்ற பெயரைச் சொல்ல.. உடனே மிகப் பிடித்துப்போய், சைக்கிளை அவசர அவசரமாக மிதித்து, நகராட்சி அலுவலகம்போய், அந்தப் பெயரை பர்த் சர்ட்டிஃபிகேட்டில் பதிவுசெய்து, பிறகுதான் உமாவிடமே அந்தப் பெயரைச் சொன்னேன்! இரண்டாவது மகளுக்குப் பெயர் வைக்கும்போது வழக்கமான எல்லாப் பெற்றோர்கள் போலவே (ரைமிங் முக்கியம்..!) மீராவுக்கு ரைமிங்காக மேகா என்று சட்டென்று வைத்துவிட்டோம்!

அதேபோல கதைகள் எழுத ஆரம்பித்தபோது என் சொந்தப் பெயரிலேதான் எழுதினேன். கவிதைக்கு வேறொரு புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது ‘சட்’டென்று அம்மா, அப்பா பெயர்களின் (அனந்தலட்சுமி-பாலசுப்ரமணியன்) முதல் பகுதிகளை இணைத்து ‘அனந்த்பாலா’ என்று வைத்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்த ஒரு பெயர்.

அதேபோல எழுத்தாளர் சுஜாதா (இன்றைக்கு அவரை நினைக்காமல் இருக்க முடியுமா!) கணையாழியின் கடைசி பக்கங்களில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் எழுதி, அவரே சுஜாதா என்ற பெயரின் ஸ்ரீரங்கம் எஸ்.ஆரை வம்புக்கிழுத்ததெல்லாம் படித்து, நாமளும் ரெண்டு மூணு புனைப்பெயர் வெச்சுகிட்டா என்ன’ என்று நினைத்து ஒரு சில கதைகளை ‘சத்ரியன்’ என்ற பெயரில் அனுப்பினேன்!

இதைவிடக் கூத்து என்னவென்றால்... விவேக்-ரூபலா, பரத்-சுசீலா, நரேன்-வைஜயந்தி, போல நாளைக்கு நாம ஃபேமஸ் எழுத்தாளராகும்போது நம்ம டிடக்டீவ்க்கு என்ன பேர் வைக்க என்று விட்டத்தைப் பார்த்து யோசித்து, யோசித்து அஷோக்ராஜா என்ற பெயரையும் வைத்து ஒரு நாவல் ஐந்தாறு அத்தியாயங்கள் எழுதினேன். நல்லவேளை தமிழர்கள் தப்பித்தார்கள்!

வலைப்பதிவு ஆரம்பித்தபோது, இந்தக் குழப்பமெல்லாம் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். (நானெல்லாம் எப்படி வலைப்பதிவு ஆரம்பிச்சேன்னு இல்ல!) அதாவது ப்ளாக்கரின் உள்ளே புகுந்து அது பெயர் கேட்டபோது, அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் இந்த பரிசல்காரன் என்ற பெயரை நானாக செலக்ட் செய்து அடித்துவிட்டேன். (இந்தப் பெயர்க்காரணம் கேட்பவர்களுக்கு.. இதோ இந்தப் பதிவில் பதிலிருக்கிறது!) மிகவும் யோசித்து செய்யும் எதையும் விடவும், டக்கென்று வந்துவிழுகிற சில, நல்லவண்ணம் க்ளிக் ஆகும் என்பதற்கு இந்தப் பெயரே உதாரணம்.

சென்றவாரம் கிழக்கு பதிப்பக முதன்மை உதவி ஆசிரியர்களில் ஒருவரும், பதிவருமான ச.நா.கண்ணன் திருமணத்துக்குப் போக முடிவெடுத்து காலை ஆறரை மணிக்கு நண்பர் வெயிலானின் அலுவலக வாசலில் பைக்கை நிறுத்த.. அங்கிருந்த வாட்ச்மேன் பெரியவர் “யாருங்க நீங்க?” என்றார். “இல்லீங்க வெயிலான் சாருக்காக வெய்ட் பண்றேன்” எனக்கூற அவருக்குப் புரியவில்லை. எனக்கு அவசரத்தில் வெயிலானின் நிஜப்பெயரே ஞாபகத்துக்கு வரவில்லை. யோசித்து ‘உங்க மேனேஜர் ரமேஷ்’ என்றபோதும் அவர் யோசனையாகவே தலையசைத்தார். பிறகு வெயிலானிடம் இதுபற்றிச் சொன்னபோது ‘ஸ்ரீகாந்த்னு சொன்னாத்தான் தெரியும்” என்றார்.

திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளரான ஈரவெங்காயம் சாமிநாதன் பெயரை எனது அலைபேசியில் ஈரவெங்காயம் என்று சேமித்து வைத்திருந்து, அவர் அழைப்பு வரும்போதெல்லாம் ஒரு புன்னகையோடுதான் எடுக்கிறேன். (ஈரவெங்காயம் காலிங்...) நேற்று சந்தித்தபோது தன் வலைப்பெயரை மாற்றப் போவதாகச் சொன்னார். மாற்றாதீர்கள்.. நாங்கள் உங்கள் பெயரைச் சுருக்கி.. ஈ.வெ.சா (ஈர வெங்காயம் சாமிநாதன்!) என்று கூப்பிடுக் கொண்டிருக்கிறோம்.. அது நல்லாயிருக்கு!

வடகரை வேலன் அண்ணாச்சியை அழைத்து ‘வேலனா.. நாங்க ஐ.சி.ஐ.சி.ஐ-லேர்ந்து பேசறோம்’ என்று நாமக்கல் சிபி கலாய்த்தபோது அவர் சொன்னாராம்.. ‘என்னை வேலன்னு பதிவர்களைத் தவிர யாரும் கூப்பிடமாட்டாங்க.. ஏன்னா என் பேரு ராஜேந்திரன்’ என்றாராம். (அடுத்ததாக கலாய்க்கறவங்க நோட் பண்ணிக்கங்கப்பா!) அதைவிடவும் நாங்களெல்லாம் ‘அண்ணாச்சி... அண்ணாச்சி’ என்றழைப்பதில்தான் அவர் இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும். அவரது ஜிமெயில் ப்ரொஃபைலில் அவரே மாற்றிவிட்டாரே... அண்ணாச்சி என்று!

ஈரோட்டுத் தொழிலதிபர் நந்து... ‘நிலா ஃபாதர்தானே நீங்க’ என்று பலரும் கேட்கும்போதெல்லாம் எத்தனை அகமகிழ்வார் என்பதை ஒரு மகளின் தந்தையாய் என்னாலும் உணரமுடிகிறது.

நான் மிகவும் மதிக்கும் பதிவர்களில் ஒருவரான எழுத்தாளர் பைத்தியக்காரனை அழைத்து நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தேன்.. ‘எப்படி இப்படியொரு பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்க நினைத்தேன். அல்லது ‘எப்படி எல்லாருக்கும் பொதுவானவொரு பெயரை நீங்கள் மட்டும் வைக்கலாம்’ என்றும் கேட்டிருக்கவேண்டும்! அவர் என்னோடு நெருங்கிய நண்பராய்ப் பேசிக் கொண்டிருந்ததில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கவே நேரம் சரியாய் இருந்தது. ‘நான் சாதாரணமானவன்தாங்க பரிசல்.. நேர்ல பார்த்தா தோள்ல கைபோட்டு பேசுவேன்’ என்றார். என் தோளில் விழுவது உங்கள் கைக்கு சாதாரணமாக இருக்கலாம். என் தோளுக்கு எவ்வளவு பெரிய விஷயமது!

ச.நா.கண்ணன் திருமணத்தில் எழுத்தாளர்கள் பா.ராகவன், மருதன், முத்துக்குமார் ஆகியோரைச் சந்தித்து கிருஷ்ணகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்ததாக ‘பரிசல்காரன்’ என்று சொன்னபோது ‘ஓ! அது நீங்கதானா’ என்று அவர்கள் சொன்னபோதும், குலுக்கிய கையை இன்னும் அழுத்தமாய்ப் பிடித்தபோதும் மிக மகிழ்வாய் இருந்தது.

பெயரில் என்னவோ இருக்கிறது!

Thursday, February 26, 2009

ப்ளாக்கராக ஆய பயனென் கொல்….

அது அந்த ஊரின் மிகப் பெரியதொரு க்ளப். உறுப்பினர்களும், பெரிய பணக்காரர்களுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த க்ளப்பில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்ததை நானறிந்தேன். கேரம் விளையாட்டில் எனக்கிருக்கும் ஆர்வம் காரணமாகவும், சில பல விதிமுறைகளை அறியும் பொருட்டும் அந்த ஊரின் கேரம் க்ளப் செகரெட்டரி யாரெனவும், அவரது எண்ணை அறியவும் அங்கே சென்றேன்.

ரொம்ப ஃபார்மலா இருக்குல்ல எழுத்து.. சரி.. விடுங்க.. ஃபார்மல்லேர்ந்து, நார்மலுக்கு வரேன்.

உள்ள போய் நேரா இருக்கற நாற்காலில இருந்த ஒருத்தர்கிட்ட “இங்க கேரம் டோர்னமெண்ட் நடந்ததுன்னு கேள்விப்பட்டேன். எனக்கு..”

“யாருப்பா அது? என்ன வேணும்?” – நான் தொடருமுன் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல். தடித்த குரல்.

திரும்பிப் பார்த்தேன். பெரிய மேஜையும், சுழல் நாற்காலியுமாய் இருந்த வெள்ளைச் சட்டை மனிதனொருவர் என்னை அழைக்க... “அவர்தான் மேனேஜர். அவர்கிட்ட கேளுங்க” என்றார் முதலாமவர்.

சரின்னு அவர்கிட்ட போனேன்.

“சார். எங்க கம்பெனில கேரம் டோர்னமெண்ட் வைக்கலாம்னு இருக்கோம். அதுக்கு சில ரூல்ஸ் பத்தின விளக்கம் தேவைப்படுது. உங்க க்ளப்ல கேரம் டோர்னமெண்ட் நடந்ததுல்ல? இந்த ஊர் கேரம் க்ளப் ப்ரசிடெண்ட், செகரெட்டரி நம்பர் எதாவது..”

“மொதல்ல உன் பேரென்னன்னு சொல்லுப்பா”

“கிருஷ்ணகுமார்ங்க”

“கிருஷ்ணகுமார்னா? என்னமோ பில்கிளிண்டன் மாதிரி சொல்ற? எங்கிருந்து வர்ற தம்பி?”

“என் பேர் கே.பி.கிருஷ்ணகுமார்ங்க” இந்த முறை இனிஷியலோடு சொன்னேன். “எங்க கம்பெனி பேரு.. “ தொடருமுன் அவரே இடை மறித்தார்...

“கே.பி.கிருஷ்ணகுமாரா? இருங்க ஒரு நிமிஷம்” என்றவர் மேஜைப் பேப்பர்களை அலசி அந்த வார இதழை எடுத்தார். குமுதம். அதன் அட்டைப் படத்தைப் பார்த்ததுமே நான் நிமிர்ந்தேன்

“நீங்க வலைப்பூ எதாவது எழுதறீங்களா?” என்றவர் அந்தக் குமுதத்தை புரட்டினார்.

“ஆமாங்க. நீங்க தேடறது என்னைப் பத்தித்தான்” என்று குமுதத்தில் அந்தப் பக்கத்தை அவருக்கு எடுத்துக் கொடுத்தேன். டாப் டென் வலைப்பூக்கள் என்று என் வலைப்பூ 6வதாக எழுதப் பட்டிருந்தது அதில். அதில் திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமாரின் வலைப்பூ என்று ஸ்பெசிபிக்காக குறிப்பிட்டிருந்ததே அவரது கவனத்தைக் கவர்வதற்குக் காரணம்.

அதற்குப் பிறகு அவர் எனக்குத் தனி நாற்காலி கொணரச் செய்ததும், நானும் அவரும் பேசிக் கொண்ட விஷயங்களும் இந்தப் பதிவிற்கு அநாவசியம்!

***********************

அடிக்கடி என் பதிவில் எங்கள் எம்.டி, எங்கள் எம்.டி என்று குறிப்பிடும் எங்கள் எம்.டி.க்கு (மேடம்) நானொரு ப்ளாக்கர் என்பது தெரியாது.

கடந்த வாரத்தில் ஒருநாள் எங்கள் அலுவலகத்திற்கு எங்கள் எம்.டி-யின் நண்பர் ஒருவரிடம் எங்கள் மேடம் “நான் கடவுள் பார்த்தாச்சா?” என்று கேட்க.. அவர் உடனே சொன்னார்...

“இன்னும் பார்க்கல. ஆனா கிருஷ்ணா எழுதின ரிவ்யூ படிச்சதுமே உடனே பார்க்கணும்னு தோணிச்சு. அருமையா எழுதியிருந்தார்” என்றார்.. என்னை அருகிலேயே வைத்துக் கொண்டு.

உடனே எம்.டி.. “கிருஷ்ணா எழுதின ரிவ்யூவா? என்ன சொல்றீங்க?” என்று கேட்க நான் வலைப்பதிவு எழுதுவதை ஏற்கனவே அறிந்திருந்த அவரும் “என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா? அவரு ஃபேமஸ் ப்ளாக்கர்” என்று என் பிரஸ்தாபங்களை எடுத்து விட... “என்னப்பா எப்பவுமே என்கூடவே இருக்க. சொல்லவேல்ல? எங்க உன் பேஜை ஓப்பன் பண்ணிக் காமி” என்றார்.

காண்பித்தேன். தமிழ் படிக்கத் தெரியாததால் “என்னப்பா இங்லீஷ்ல இல்லியே.. நானெப்படிப் படிக்க?” என்றார். மிகவும் சந்தோஷப்பட்டார். அலுவலகத்தில் இருந்த சீனியர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டார்.

பிறகு தனியாக என்னை அழைத்தார்.

“என்னோட பழைய லேப்டாப் ஒண்ணு இருக்கு. நாளைக்கு கொண்டுவரேன். அத வெச்சுக்க. எங்கியாவது போகும்போது ஒனக்கு ஈஸியா இருக்கும்ல?” என்றார். அதே மாதிரி கொண்டுவந்து கொடுத்தார். இதோ.. அதில்தான் அடித்துக் கொண்டிருக்கிறேன் இந்தப் பதிவை!

*********************

டிஸ்கி: எனக்குக் கிடைத்திருக்கும் எண்ணிலடங்கா நண்பர்களுக்கு முன் மேலே குறிப்பிட்ட இரண்டுமே மிக மிகச் சாதாரணப் பயன்கள்தான்..!

Wednesday, February 25, 2009

அவியல் – 25.02.2009

கோவை, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டேன். வருடா வருடம் அங்கு செல்வது வழக்கம். இந்தமுறை இயற்கை சூழ்ந்த அந்த மலையடிவாரத்தில் அத்தனை வாகனங்கள் போக்குவரத்தாலும், கூட்டத்தினாலும், சத்தங்களினாலும் என்ன நிகழும் என்ற பார்வையோடு கலந்து கொள்ளுங்கள் என்றார் அண்ணாச்சி (வடகரை வேலன்). அது பற்றித் தனியே.. அப்புறமாய்..

ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது. அத்தனை கூட்டத்தை சமாளிக்க பல வழிகள் செய்யப்பட்டிருந்தாலும் நிறைய குறைபாடுகள். எனக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் மட்டும்..

ஆறுமணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிக்கு மூன்று மணிக்கே சென்று சேர்ந்தோம். நானும் நண்பர் ஒருவரும் நின்று பழரசம் அருந்திக் கொண்டிருந்த போது, பத்தடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டிருந்த நீலநிற ட்ரம் ஒன்றில் ஒருவர் A4 சைஸிலான பாதாம்பால் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டிருந்தார். அந்த ஸ்டிக்கரின் ஒட்டும் பகுதியில் இருக்கும் பேப்பரைக் கிழித்துக் கீழே போட்டுவிட்டு, ட்ரம்மில் அதை ஒட்டுவார். இப்படியே நாலைந்து ட்ரம்களில் அவ்ர் ஒட்டியபோது அவர் அருகில் சென்று அந்த ட்ரம்மைப் பார்த்தேன். குப்பை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ட்ரம்!

“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”

உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.

****************

இன்னொன்று....

அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!

*******************

இங்கே நான் இருக்கும் பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் ஒரு சின்ன போஸ்டர் அங்கங்கே தென்படுகிறது. ராஜபக்‌ஷேவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயாம். தீர்வு என்னவென்பதை தீர யோசிக்காமல் இந்த மாதிரி கோமாளித்தனமான வேலைகளை இந்த மாதிரி ஒருசிலர் செய்வதைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இதேபோல தர்மபுரியில் ‘ஒகேனக்கல் 2025’ என்ற அமைப்பை நடத்தும் சிலர் தர்மபுரியை வல்லரசு மாவட்டமாக 2025க்குள் மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்களாம். முதல்கட்டமாக நயன்தாரா நடிக்கும் தியேட்டர்களிலெல்லாம் நல்ல பாம்புகளை விடப் போகிறார்களாம். அவர் கவர்ச்சியாக நடிக்கிறார், கலாச்சாரத்தைக் கெடுக்கிறார் என்பதால் இப்படியாம். அடுத்தகட்டமாக நமீதா, அசின், ப்ரியாமணி, தமனா என்று லிஸ்ட் இருக்கிறதாம். இவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடும் விஜய், அஜீத் உட்பட எல்லாருக்கும் இதே எச்சரிக்கைதானாம். அப்படியும் அடங்கவில்லை என்றால் அவர்கள் வீடுகளில் நல்லபாம்பை விடுவார்களாம்.

வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது..

“போங்கடா.. போய்ப் புள்ளகுட்டியப் படிக்க வைங்கடா.. கப்பித்தனமாப் பேசிகிட்டு....”
**********************

வர வர தொலைக்காட்சியைத் திறந்தால் திகட்டுகிற அளவுக்கு சேனல்கள். ஒவ்வொரு சேனலும் ஒரே மாதிரி, செய்திகள், காமெடி, படங்கள் என்று தங்களுக்குள் பல சேனல்களைக் காட்டி வெறுக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடிவேலுவுக்கு தான் நடித்த காட்சி ஒவ்வொருமுறை ஒளிபரப்பப்படும்போதும் ஏதாவது தொகை சென்று சேருமானால் அவர் இந்நேரம் உலக நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருப்பார். அவ்வப்போது மனதைத் தளர்த்திக் கொள்ள பார்த்த வடிவேலுவின் நகைச்சுவைகளைப் பார்த்தாலே திகட்டுகிற அளவுக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். அவருக்கும், சினிமாவிற்கும் இது நிச்சயமாக நல்லதல்ல. எல்லாரும் ஒருவித வெறுப்புதட்டிய மனோநிலையில் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.

***********************

பிப்ரவரி 15ம்தேதி மகளை ஹிந்தித் தேர்வு ஒன்றில் விட்டுவிட்டு வரும்போது ஒருபக்கம் நல்ல கூட்டம். ‘எப்படீங்க இப்படிப் பண்ணலாம்? அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கே இப்படிப் பண்ணலாமா?’ என்றெல்லாம் பேச்சுகள்!

விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.

ங்கொய்யால!

***********************

பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு

இந்தக் கவிதைக்ககானப் பாராட்டுக்களை பின்னூட்டத்திலும் திட்டுக்களை தனியே மெயிலிலும் சொல்லுங்கப்பா. (மெய்ல் பாக்ஸ் இன்னைக்கு ஃபுல் ஆகப்போகுது!)

மனசாட்சி: இந்தக் கவிதைக்காக திட்டு வாங்க மாட்ட.. இதை கவிதைன்னியே அதுக்குத்தாண்டா ஒனக்கு திட்டுவிழப்போகுது!)

*

Tuesday, February 24, 2009

டுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் – கலைஞர் கடிதம்

சென்னை: 24 பிப்ரவரி 2009
 
ஏ.ஆர். ரகுமான் நேற்று ஆஸ்கார் விருது வாங்கியது அறிந்ததே. அவர் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் அறிந்ததே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் அறிந்ததே. இரண்டு ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்பதும் அறிந்ததே. அவர் ஒரு தமிழர் என்பதும் அறிந்ததே. அதற்கு நமது முதல்வர் கலைஞர் பொருணாநிதி அவர்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவார் என்பது மட்டும் அறியாததே. மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கு அவரச அவரசமாக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு:
 
“சில ஆண்டுகளுக்கு முன்… அம்மையாரின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த காலமது.  கடற்கரையில் அமர்ந்தவாறு அம்மையாரின் அராஜக அரசியலை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ ஒரு மகிழ்வுந்தில் இருந்து வந்த ஒரு பாடல் என்னையும், பேராசியரையும் ஊக்கமளித்து, உற்சாகமூட்டியது. தம்பி இரசினிகாந்து நடித்த திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற அந்தப் பாடலை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் புல்லரிக்கும். மருத்துவமனையில் மருத்துவர்கள் உடல் புல்லரிப்பது உங்களுக்கு நல்லதல்ல என்று சொல்லிவிட்டதால் அந்தப் பாடலை நினைக்க மாட்டேன் என்று எள்ளி நகையாடுகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். என் தமிழனின் பாடலை நினைத்து புல்லரித்தாலும், பாடலைப் பாடி பல் வலித்தாலும் என் தமிழனுக்காக அதை பொறுத்துக் கொள்வேன் என்பதை இந்த நாடறியும்.
 
அந்தக் கடற்கரை நிகழ்வில் அந்தப் பாடல் எந்தப் படமென்று பேராசிரியரிடம் விசாரித்தேன். அவர் ரத்தக் கண்ணீருக்குப் பிறகு தமிழ்ப்படங்கள் பார்க்கவில்லையாதலால் வேறு வழியின்றி மதுரை தந்த சொத்து, மக்களின் முத்து பழகிரியிடம் அந்தப் பாடலின் இசையமைப்பாளர் யாரென்று விசாரிக்கக் கூறினேன். ஏழு ஆட்டோக்களில் ஆட்களை சென்னை அனுப்பி, மூன்று பஸ்களைக் கொளுத்தி, அந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்று கண்டறிந்து சொன்னார். அப்போதே பழகிரியிடம் சொன்னேன். ‘இந்தத் தம்பி தமிழகத்துக்கு ஒரு நாள் ஆஸ்கார் வாங்கித்தருவானடா’ என்று. அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை என்பதை நீ மறந்துவிடக்கூடாது உடன்பிறப்பே.
 
இதோ.. இன்றைக்கு தமிழகம் முழுவதும் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொன்னான ஆட்சியிலே, மருத்துவமனையில் அமர்ந்தவாறும், படுத்தவாறும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த கடினமான தருணத்திலும், கடிதம் எழுதாதீர்கள் என்று மருத்துவர்கள் கட்டளையிட்ட போதும் அதையெல்லாம் புறந்தள்ளி ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைக்காவிட்டால் தமிழகத்தில் என்ன நடக்கும் என்பதையும், என் உடன்பிறப்புகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் விளக்கி ஒராக் பொபாமாவுக்கு ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினேன். அதைப் படித்த பொபாமா உடனே என்னை தொடர்பு கொண்டு ஆவன செய்வதாக அறிவித்ததை சில தீய சக்திகள் இருட்டடிப்புச் செய்ததை நீ அறியமாட்டாய்.
 
உடன்பிறப்பே.. ரகுமான் ஆஸ்கார்க் வாங்க அவர் பாடிய பாட்டை விடவும், நான் பட்டபாடு என்னவென்பதை யாரறியாவிடினும் நீ அறியமாட்டாய் என்பதை நான் அறிவேன். ஆகவேதான் இந்த அவசரக் கடிதத்தை உனக்கு எழுத நேர்ந்தது. உடனே இளைஞர் பாசறை சார்பாகவும், கழக உடன்பிறப்புகள் சார்பாகவும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல்வேறு விழா எடுத்து ‘ஏண்டா ஆஸ்கார் வாங்கினோம்’ என்று அவரை நினைக்கவைக்க.. இன்றே உறுதியெடு. இல்லையேல் உயிரைவிடு’
 
-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
 
ஆஸ்கார் வாங்கியது என்னால்.. முதல்வர் பதவி விலகட்டும் – பயலலிதா அறிக்கை

கொ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெ.பயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

’ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது குடும்ப சொத்தை மேலும் பெருக்கவும் அவர் செய்யும் நாடகங்களில் ஒன்றாக ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைக்க தான்தான் காரணம் என்று குள்ளநரித்தனமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பொருணாநிதி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டசபையிலும் எனது கொ.தி.மு.க  உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எனது உத்தரவின் பேரில் பங்கேற்று பாதியில் திரும்பி வந்த கழக உறுப்பினர்கள் சொன்ன தகவலின் படி, அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் காற்றில் பறக்க விட்டு. ஏ.ஆர்.ரகுமானுக்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுத்ததை விடுத்து ஏதேதோ பிதற்றியிருக்கிறார் பொருணாநிதி.

 
காவல்துறை முதல்வரின் ஏவல்துறையானதும், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என்று பலரும் இந்த மைனாரிட்டி அரசின் முதல்வராக உள்ள பொருணாநிதியின் ஆட்சியில் வன்முறை வெறியாட்டம் போடுவதையும், ஆஸ்கார் நேரடி ஒளிபரப்பின் நடுநடுவே சேனல் மாற்றி மாற்றி  மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
 

ரத்தத்தின் ரத்தங்களே… ஏ.ஆர்.ரகுமான் 1992ல்தான் தனது முதல் படத்துக்கு இசையமைத்தார் என்பதையும், அப்போதைய நிரந்தர முதல்வர் உங்கள் அன்புச் சகோதரி, பொனமனச் செல்வி, புரட்சித் தலைவியாகிய நான்தான் என்பதையும் நீங்கள் மறந்துவிட்டாலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது உங்கள் கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. அங்ஙனம் மறந்துவிட்டால் இந்த குள்ளநரிக் கூட்டமும், அவர் தூண்டிவிடுகிற காவல்துறையும் மக்களிடம் தவறான தகவலைச் சொல்லி ஏமாற்றும் என்பதை பலமுறை இந்தத் தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்போது இயக்குனர்  பாலச்சந்தர்  என்னிடம் எட்டுமுறை அப்பாய்ண்மெண்ட் வாங்கி, ஒம்பதாவது முறை என்னைச் சந்தித்து தானொரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், அதற்கு மணிரத்னத்தை இயக்குனராக்க விரும்புவதாகவும் அறிவித்தார். பலத்த யோசனைக்குப் பிறகு அதை ஒத்துக் கொண்டேன் நான். தமிழக அரசு அவரது திரைப்படத்திற்கு ஆவன செய்யும் என்றும் உறுதி அளித்தேன். மணிரத்னமும் ஒன்பது முறை என்னைச் சந்திக்க முயற்சித்து, ஒன்பதாவது முறையே என்னைச் சந்தித்து அந்தப் படத்திற்கு ரோஜா என்று பெயரிட விரும்புவதாகக் கூறினார். உடனே செல்வமணியைத் தொடர்பு கொண்டு அவரை சமாதானப் படுத்தி, அந்தப் பெயர் வைக்க அனுமதி அளித்தேன். கூட்டணி தர்மத்தை மீறக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நேரு குடும்பத்திலிருந்தும் அனுமதி வாங்கிக் கொடுத்தவள் உங்கள் சகோதரி, பொன்மனச் செல்வி, புரட்சித் தலைவி என்பதை இங்கே நினைவூட்டுகிறேன்.

அந்தச் சந்திப்பின்போதுதான் புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப் போவதாக மணிரத்னம் அவர்கள் என்னை அனுமதி கேட்டார். தமிழக நலனுக்காக அதை அனுமதிக்கும் வேளையில், அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பொருணாநிதி சட்டத்தை மதிக்காமல் அதற்கு எவ்வளவு இடையூறு செய்தார் என்பதை செலக்டீவ் அம்னீஷியா வந்தவர் போல தனக்குச் சாதகமாக மறந்துவிட்டார்.

கட்டுப்பாடின்றி காட்டுதர்பார் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க இந்த மைனாரிட்டி தி.மு.க அரசு தயாரா என்பதைக் கேட்கும் இந்த வேளையிலே ஏ.ஆர்.ரகுமானின் வெற்றிக்கு அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துச் சொல்ல நானும் என் கழகக் கண்மணிகளும் மறக்கவில்லை என்பதை தமிழக மக்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.’ –

இவ்வாறு அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

Monday, February 23, 2009

FLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்! சபாஷ் ஏ.ஆர். ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக நம் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று நிமிடங்களுக்கு முன் ஆஸ்கார் விருது பெற்றார்.

இதுவரை மொத்தமாக ஸ்லம்டாக் மில்லியனர் ஐந்து ஆஸ்கார்களைத் தட்டிச் சென்றது.

மியூசிக் ஒரிஜனல் ஸ்கோர்க்காக அவர் இந்த விருதைப் பெற்றார்.

இதோ... இதை எழுத எழுத இரண்டாவது ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்
‘ஜெய்ஹோ' பாடலுக்காக BEST SONG பிரிவில். மொத்தம் ஆறு அவார்ட் படத்துக்கு!

ஆஸ்கர் மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசி விருதை வாங்கிக் கொண்ட ரஹ்மானே... உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம்.

டிஸ்கி: ங்கொய்யால.. ஃப்ளாஷ் நியூஸ்னு அடிச்சு பதிவப் போட்டுட்டு தமிழ்மணம் போய்ப் பார்த்தா மொதப் பக்கத்துல இருக்கற 16 பதிவுல 14 பதிவு இந்த நியூஸை மொதல்லியே சொல்லீடுச்சு! கிருஷ்ணா.. நீ ரொம்ப லேட்டுடா!!!

Saturday, February 21, 2009

பரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி!மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள்

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?

அரசியல்வாதிகள் மக்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்!

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

SW இஞ்சினயர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

புதுப் ப‌திவ‌ர்க‌ள் பின்னூட்ட‌ பிதாம‌க‌ன்க‌ளிட‌ம் கேட்கும் 10 கேள்விக‌ள்

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

காத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்!

பாட்டிகளிடம் பத்து கேள்விகள்!

பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

கும்மி பின்னூட்டவாதிகளிடம் 'பத்து' கேள்விகள்!

இன்டர்வியூவில் கேட்கப்படும் 10 கேள்விகள்.

நர்சிம் - பத்து கேள்விகள்

ரசிகர்கள் நடிகர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்இப்போ பரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி...

ஒனக்கு இது தேவையாடா?
.

Friday, February 20, 2009

இந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நேற்றைக்கும் ஒரு நேரடி ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டது. சென்றமுறை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைக் காண்பித்தார்களல்லவா? இந்தமுறை சட்டத்தை படித்து முடித்தவர்களும், அதே போலீஸும். சென்றமுறை பேசாமல் வேடிக்கை பார்த்த போலீஸ் இந்தமுறை அதிரடியாகக் களமிறங்க வேண்டியதாயிற்று. காரணம் இந்தமுறை போட்டியாளர்களில் ஒருவராக அவர்கள் இருந்ததுதான்.

உயர்நீதிமன்ற வளாகம். ராமானந்த் சாகரின் மகாபாரதத்தில் பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு நிற்பதுபோல ஒருபுறம் போலீஸ் லத்தி, தடுப்பான்களுடன் நிற்க ஐம்பது-நூறடி தூரத்தில் வழக்கறிஞர்கள் நிற்கின்றனர். எந்தப்பக்கத்திலிருந்து முதலில் என்று தெரியவில்லை.. கற்கள் வீச்சு ஆரம்பமாகிறது. வழக்கறிஞர்களில் ஒருவர் தைரியமாக (!!) முன்னே வந்து பெரிய சைஸ் செங்கல்லைத் தூக்கி வீசுகிறார். போலீஸ் ‘ங்கொய்யால.. நாங்ளும் வீசுவோம்ல’ என்பது போல அவர்களும் கற்களை வீசுகின்றனர்.

கொஞ்சநேரத்தில் ‘ஷூட்.. ஷூட்’ என்ற குரல் ஒலிக்க, வக்கீல்கள் சிதறி நாலாபுறமும் ஓட கண்ணீர் புகை குண்டுகளும், வான் நோக்கிய துப்பாக்கிச் சூடும் நடக்கிறது.

வீரமிக்க நமது காவல்துறையினர் அருகிலிருக்கும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அடித்துக் கொண்டும், அவற்றின்மீது கற்களை வீசிக்கொண்டும் முன்னே செல்கின்றனர்.

வெள்ளைச் சட்டையோடு வருவோரையெல்லாம் லத்தியில் அடித்துத் தாக்குகின்றனர் போலீஸார். ‘நீதி எங்கே.. நீதிபதி எங்கே’ என்று நம் மனசு நினைக்கும்போது அங்கே வருகிறார் நீதிபதி.. தலையில் ரத்தத்தோடு! அவரை கைத்தாங்கலாக ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். “CONTROL THIS SITUATION. WHERE IS SP?” என்று கேட்டபடி பதட்டமாகவே வண்டி ஏறுகிறார் அவர். எஸ்.பி. எங்கே யாரை அடித்துக்கொண்டிருக்கிறாரோ அவரை எங்கே தேட என்று நினைத்த காவலர்கள் மீண்டும் களத்தில் இறங்கி போரிட ஆரம்பிக்கின்றனர்.

காட்சி மாறுகிறது. உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற காவல்நிலையம். அதற்குள் இருக்கிற பீரோ, மேஜை, நாற்காலிகள் எல்லாமே வெளியே கொண்டுவரப்பட்டு திகுதிகுவென எரிந்துகொண்டிருக்கிறது. பீரோவில் இருந்த கோப்புகள் வெளியே விழ ஒரு வெள்ளைச் சட்டைக்கார்ர் அதைச் சரியாக எடுத்து தீயில் போடுகிறார். பாவம். அவரோட கேஸ் கட்டா இருக்கும். என்ன நிலைமைல இருக்கோ.. என்ன கஷ்டமோ!

என்ன நடக்குது தமிழ்நாட்ல?

இன்றைக்கிலிருந்து உண்மையாக நடந்தது என்ன என்ற விபரங்கள் தெரியவரும். என் வக்கீல் நண்பன் ஒருத்தன் ‘இது முன்னரே திட்டமிட்டது. மொத நாளே நாளைக்கு இருக்கு உங்களுக்கு’ என்றபடியேதான் போலீஸ் திரிந்தனர் என்கின்றான்.

ஆனால் அந்தக் கற்களும், லத்தியும் நேற்றைக்கு வந்ததல்ல. பல தலைமுறை தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது இவர்களுக்கிடையேயான பகை. நேற்றைக்கு நடந்ததும் வெறும் முன்னோட்டம்தான். இதன் பின்விளைவுகளும், இன்னும் பல சண்டைகளும் நேரடியாக – மறைமுகமாகத் தொடரத்தான் போகிறது.

எனக்கிருக்கும் கேள்வி: தோற்றத்தில் சக மனிதனாய்ச் சிரித்துப் பழகிக்கொண்டிருக்கும் உங்களுக்குள் இவ்வளவு பகையை சேர்த்து வைக்க எப்படி முடிகிறது?

கல்வியும், இந்தச் சமூகமும் உங்களுக்குக் கற்றுத் தந்தது என்ன? இதையா? நேரடியாகவோ, மறைமுகமாகவோ இது போன்ற நிகழ்வுகளுக்கு சக மனிதன் என்கிற முறையில் நானும் ஒரு காரணம்தான். நான்.. நாங்கள் என்ன செய்ய வேண்டும் இப்போது?

என் தலைமுறையிலேயே இதெல்லாம் நடக்கிறதே.. என் மகன், மகள் தலைமுறை எப்படி இருக்கும்?

இனி பள்ளிக்கூடத்தில் போர்க்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைக் கட்டாயப்பாடமாக்கத்தான் வேண்டும்போல இருக்கிறதே! பள்ளியிலேயே கத்தி, துப்பாக்கி பயிற்சி கொடுக்கவேண்டுமா?

ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கவே முடியாது. ‘சண்டை போட்டா பழசு மறந்துடும்’ என்ற ‘அமாவாசை’யின் தத்துவத்தைத் தான் ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றனர்.

பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை.. ஸ்ரீஇலங்காவில் பாதுகாப்பில்லை என்கிறோம். அங்கே தீவிரவாதிகளால், இராணுவத்தால் இப்படிச் சண்டைகள் நடக்கிறது. இங்கே மனிதனோடு மனிதனாய்ப் பழகும் இவர்களுக்குள் இவ்வளவு வன்மமா? கைது செய்து வரச் சொன்னால்.. கண்ணில் பட்ட வாகங்களை எல்லாம் நொறுக்க யார் சொல்லிக் கொடுத்தார்கள் போலீஸுக்கு? சென்னையில் இது நடந்தது என்று பதிலுக்கு கோவையில் ரகளையில் ஈடுபட்டு காவல்துறை வாகனம் ஒன்றில் கண்ணாடியை உடைத்த வக்கீல்கள் இந்தச் சமூகத்திலிருந்து கற்றுக் கொண்டது என்ன? தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் விட்டுச் செல்வது அந்தக் கற்களைத்தானா?

கடைசியில் என்மீதே எனக்கு பயமாய் இருக்கிறது. சென்றமுறை சட்டக்கல்லூரி சம்பவத்தின்போது ‘ஐயோ.. இப்படியெல்லாம் நடக்கிறதே’ என்று இரண்டு நாட்கள் அந்த்த் தாக்கத்திலேயே இருந்தேன். நேற்றைக்கு அத்தனை சமூகச்சீர்கேடான காட்சிகளைப் பார்த்தபிறகும் அடுத்த பத்து நிமிடத்தில் AMERICA’S FUNNIEST VIDEOS பார்த்துச் சிரிக்கமுடிந்தது என்னால்.

சிலரிடம் பேசியபோதும் இதையே உணர முடிந்தது. புதியபடம், நேரடி கலைநிகழ்ச்சிகள் எல்லாம் போரடித்து இப்பொதைய ட்ரெண்ட் இதுதான் என்பது போல ஆகிவிட்டது. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது மதுரையில் மூன்று பஸ்கள் எரிக்கப்பட்டதாய் செய்தி சொல்கிறது.

ஒன்றும் சொல்வதற்கில்லை!

Thursday, February 19, 2009

மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?

3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?

5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?


6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது?

7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க?

9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?


10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?

********

ச்சாய்ஸில் விடப்பட்ட கேள்விகள்:-


அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது ச்சின்னப்பையனுக்கோ, தாமிராவுக்கோ தெரியுமா?

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?

Wednesday, February 18, 2009

அளவாப் பேசுங்கப்பா!

நண்பர் ஒருத்தர் அந்தப் பெட்டிக் கடைக்குப் போய் நின்று கேட்டார்.

"ரெண்டு சிசர் ஃபில்டர்.. ஒரு நிஜாம் பாக்கு குடுங்க"

வேறு யாருக்கோ, எதுவோ கொடுத்துக் கொண்டிருந்த கடைக்காரர், அதை முடித்து இவர் பக்கம் திரும்பி...

"வாங்க.. என்ன கேட்டீங்க?"

"ரெண்டு சிசர் ஃபில்டர்.. ஒரு நிஜாம் பாக்கு"

"சிசர் ஃபில்டர்.." என்றபடி பாக்கெட்டை எடுத்து.. "சிசர் ஃபில்டர் எவ்வளவு?"

"ரெண்டு"

"ரெண்டு சிசர் ஃபில்டர்...ம்ம்.. இந்தாங்க.. வேறென்ன கேட்டீங்க? பபிள்கம்மா?"

"பபிள்கம் இல்ல. நிஜாம் பாக்கு"

"பபிள்கம்தானே கேட்டீங்க?"

"இல்லீங்க. பாக்கு"

"ஓ! பாக்கா? என்ன பாக்கு?"

"நிஜாம் குடுங்க"

"நிஜாம் பாக்கு"என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தேடி அந்த ஜாடியை எடுத்து "நிஜாம் பாக்கு எவ்வளவு?"

"ஒண்ணு குடுங்க"

"ரெண்டு வாங்கிக்கோங்க"

"ஒண்ணு போதுங்க.."

"ரெண்டு வாங்கிக்கோங்க. சில்லறைக்கு சரியா இருக்கும்ல"

இவர் வெறுத்துப்போய் "சரி குடுங்க"

"இந்தாங்க"

வாங்கிக்கொண்ட இவர் பத்து ரூபாய் எடுத்து நீட்ட.

"என்ன வாங்கினீங்க?"

"ரெண்டு சிசர்ஃபில்டர்.. ரெண்டு நிஜாம் பாக்கு"

"ரெண்டு சிசர் ஃபில்டர்.. ரெண்டும் ரெண்டும் நாலு... அப்பறம்?"

"யோவ்.. பாக்கியே வேணாம் வெச்சுக்கய்யா" என்றபடி ஓடி வந்துவிட்டார் இவர்!

இது ஒரு சின்ன இடத்துல நடக்கற சின்ன உதாரணம். ('சின்ன' உதாரணமா!) எத்தனை இடத்துல இப்படி தேவையே இல்லாம, எக்கச்சக்கமா பேசிகிட்டிருக்கோம் நாம!

எங்க ஃபேக்டரில ஒரு செக்‌ஷன்ல வேலை செய்யற ரெண்டு பேருக்குள்ள பயங்கர சண்டை. ஃபேக்டரியிலிருந்து நூறடி தூரத்துல இருக்கற ஆஃபீஸ் பில்டிங்குக்கு அவங்க சண்டை போடற சத்தம் கேட்டது.

என்ன சண்டைன்னு எங்க எம்.டி.ரூம்ல கூப்ட்டு விசாரிச்சோம். ரெண்டு பேரும் வந்தாங்க. ஒருத்தன் ஒண்ணுமே பேசல. ஒருத்தன் 'அவன் அந்த ஆர்டர்ல அந்தத் தப்பு பண்ணினான்.. இந்த ஆர்டர்ல இந்தத் தப்பு பண்ணினான்.. அவங்ககிட்ட அப்படிச் சொல்லியிருக்கான்.. இவங்ககிட்ட இப்படிச் சொல்லியிருக்கான்' னு ஆரம்பிச்சு அவனைப் போட்டு இஷ்டத்துக்கு கம்ப்ளெய்ண்ட் பண்ண ஆரம்பிச்சான். மூச்சு விடாம பேசிகிட்டே இருந்தான். எங்க எம்.டி-வேற அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டே இருக்க, இவனுக்கு உற்சாகம் பொறுக்கல.

எல்லாத்தையும் முடிச்சுட்டு எங்க எம்.டி. பேசாம இருந்தவன்கிட்ட திரும்பி, "அவன் சொல்றதெல்லாம் நிஜமா?"ன்னு கேட்டார்.

இவன் பொறுமையா சொன்னான். "அவர் சொல்றது எல்லாம் நிஜமில்லைங்க. ஆனா கொஞ்சம் உண்மைதான். அவர் சொல்றப்போதான் நான் இந்தந்த தப்பு பண்ணியிருக்கேன்னு எனக்கே தெரிஞ்சதுங்க. எல்லார் முன்னாடியும் ஸாரி கேட்டுக்கறேன். இவர் அதையெல்லாம் அப்பப்பவே சொல்லி என்னை எச்சரிச்சிருக்கலாம். இருந்தாலும் இப்ப ஒண்ணும் தப்பில்ல"ன்னு சொன்னவன் அவனைக் கம்ப்ளெய்ண்ட் பண்ணினவன்கிட்டயே திரும்பி "ஸாரிங்க"ன்னு மட்டும் சொல்லி டக்னு ரூமை விட்டு வெளில போய்ட்டான்.

எங்க எம்.டி. 'பாவம்ப்பா. உணர்ந்துட்டான் பாரு'ன்னு உருகீட்டார். அதுவுமில்லாம கம்ப்ளெய்ண்ட் பண்ணினவனைப் பத்தி 'என் முன்னாடியே இவ்ளோ பேசறான் பாருங்க"ன்னு சொன்னார்.

பின்னாடி நான் கேள்விப்பட்டது எம்.டி. ரூம்ல ஒண்ணுமே பேசாம இருந்து ஸாரி கேட்டவன்தான் செக்‌ஷன்ல அளவுக்கதிகமா பேசி அலப்பறை பண்ணுவானாம். அங்க அவ்ளோ பேசறவன் எம்.டி ரூம்ல அமைதி வேஷம் போட்டு நல்லபேர் வாங்கீட்டான்! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு வேறொரு செக்‌ஷனுக்கு இன்சார்ஜ் தேவைப்பட்டப்போ இவனுக்கு அடிச்சது லக்!

ஆக, எங்கே எவ்வளவு பேசணும்கறதும் முக்கியம்.

எங்கே பேசணும்கறதுக்கு இன்னொரு நல்ல உதாரணம் வேணும்னா இதைச் சொல்லலாம்...

நாக்கைப் பார்த்து பல் சொல்லிச்சாம். ‘நான் தான் உன்னை அரண்போல நின்னு பாதுகாக்கறேன். நான் இல்லீன்னா உனக்கு பாதுகாப்பில்லை’ன்னு சும்மா டீஸ் பண்ணிகிட்டே இருந்ததாம்.

நாக்கு ஒண்ணுமே பேசாம இருந்து, ஒரு பெண் வந்தப்ப ‘சூப்பர் ஃபிகர்’ன்னுச்சாம். அந்தப் பொண்ணு விட்ட அறைல ரெண்டு பல்லு கழண்டுச்சாம்.

நாக்கு ‘என்ன? பார்த்தியா? சும்மா லொள்ளு பேசக்கூடாது.. சரியா?’ன்னு எச்சரிச்சதாம்!

அதுனால அளவாப் பேசுங்க.. எடம் பார்த்துப் பேசுங்க..!

டிஸ்கி: டெம்ப்ளேட் மாத்தினதைச் செக் பண்ண இந்த போஸ்ட். மொக்கையா இருந்தா மன்னிச்சுடுங்கப்பா!

Monday, February 16, 2009

சிவா மனசுல சக்தி – விமர்சனம்

எப்போதுமே ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்துக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கும் நாயகன் நாயகி. கலாய்த்தல் ஒரு கட்டத்தில் நாயகிக்கு எரிச்சலை உண்டு பண்ண நாயகனைப் பிரிய அவர் எடுக்கும் முடிவெடுத்துப் போக, க்ளைமாக்ஸில் அவரை நாயகன் அடைந்தாரா என்பதே SMS.

தனுஷூக்கு ஏற்ற பாத்திரம். ஜீவாவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருடன் வரும் சந்தானம் – காமெடி தர்பாரே நடத்தியிருக்கிறார். `நாளைக்கு அவகூட எனக்கு டேட்டிங்’ என்று ஜீவா சொல்லும்போது, ‘பேரிச்சம்பழமா’ என்கிறார். சத்யம் தியேட்டரில் அங்கங்கே ஜோடி ஜோடியாக உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘இதென்ன தியேட்டரா.. இல்ல செவுரு வெச்ச மெரினாவா?’ என்கிறார். கவுண்டமணி போல எல்லாரையும் எல்லாப் படத்திலும் கலாய்க்கும் இவரை சவுண்டுமணி என்றழைக்கலாம்! இவர் வரும் காட்சியில் எல்லாம் தியேட்டரில் எல்லாரும் தங்களை மறந்து சிரித்து மகிழ்வதைக் காணமுடிந்தது.

நாயகி – அனுயா. ஒரு புதுமுக நடிகை இப்படி படம் முழுவதும் நடித்துக் கொண்டே இருப்பது ஆச்சரியம்தான். ஆனால் அதுவே அயர்ச்சியையும் தருகிறது!

இசை-யுவன். ‘என்னடா கண்ணெல்லாம் மஞ்சளா பூத்துப் போயிருக்கு?’ என்று அம்மா ஊர்வசி கேட்கும்போது பின்னணியில் பீர் பாட்டில் திறக்கும் சத்தம் கேட்கிறது. இதொன்றைத் தவிர சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ‘ஒரு கல்.. ஒரு கண்ணாடி’ பாடலைத் தவிர மற்ற பாடல்கள் திரையில் எடுபடவில்லை.

முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படம். இளைஞர் கூட்டத்தை தியேட்டரில் காணமுடிகிறது. வெளியே வரும் சிலரிடம் விசாரித்தபோது ‘சரி காமெடிங்க’ என்று பலர் சிரித்துக் கொண்டே வருவதையும் காண முடிகிறது.

எல்லாம் சரி...

படம் விகடன் தயாரிப்பாச்சே. இதை மட்டும் எழுதி விட்டுவிட முடியுமா? பக்கத்துவீட்டுப் பையன் கம்மியா மார்க் எடுத்தா ‘அடுத்த எக்ஸாம் நல்லாப் பண்ணுப்பா’ என்ற ஒரே வரி அட்வைஸோடு நிறுத்திவிடலாம். நம்ம பையன்னா, என்னென்ன தப்பு பண்ணியிருக்கான்னு பார்க்கணும்ல? விகடன் நம்ம வீட்டுப் பையனில்லையா? சும்மா விடலாமா?

படம் ஆரம்பித்த முதல் செகண்டில் ஹீரோ வருகிறார். இரண்டாவது செகண்டில் ஹீரோயின் வருகிறார். மூன்றாவது செகண்டில் ஹீரோ அவரைக் காதலிக்க ஆரம்பிக்க, ஹீரோயினை ஃப்ரெண்ட்ஷிப் பிடித்து விடுகிறார். இதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கோவையிலிருந்து பல முறை சென்னைக்கு ட்ரெயினில் போய் வரும் எனக்கு இப்படி காலியான ட்ரெயினையும், பேசினவுடன் ஃப்ரெண்ட்ஷிப்பாகி கதவருகே அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டு நாயகி பேசுவதையும் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. இப்படி பார்வையாளர்களுக்கு அந்நியமான காட்சிகள் நிறைய.

படத்தில் சினிமாத்தனமாய்ப் பல காட்சிகள். அந்த ட்ரெய்னில் நாயகி தனியாய் இருப்பது, நாயகியைப் பெண் பார்க்க ஆர்யா (ஆமாங்க!!) வரும் ஹோட்டலுக்கு ஜீவா வருவது, கடைசி காட்சியில் ஹீரோயின் அப்பா ஞானசம்பந்தத்தின் மாப்பிள்ளை ஹீரோயின் மயக்கமுறும்போது திடீர் டாக்டராகி நாடி பிடிப்பது (அவர் டாக்டர்னு சொல்லணுமா- என்று கேட்காதீர்கள். அப்படி ஒரு மாப்பிள்ளை இருப்பதே சொல்லவில்லை) ஒரு காட்சியில் எனக்கு நீயும், உன் அண்ணனும்தான்’ என்கிறார் ஞானசம்பந்தம். அப்புறம் எப்படி கோவையில் அவர் வீட்டில் இன்னொரு மகளும், மாப்பிள்ளையும் வந்தார்கள் என்பது தெரியவில்லை.

பட்த்தில் பல க்ளைமாக்ஸ்கள். பல இடங்களில் இந்த இடத்தில் படம் முடிஞ்சு போனா நல்லா இருக்கும் என்று நமக்குத் தோன்றுகிறது. அது அதிகமாகி, அதிகமாகி.. படம் முடிஞ்சா நல்லா இருக்கும் என்று எல்லாருக்குமே தோன்றுகிறது. என் ஒரு நண்பன்.. ‘நீ எனக்கு வேண்டாம்’ என்று ஹீரோயின் கோவித்துவிட்டுப் போகும் காட்சியில் தியேட்டரை விட்டு வெளியே வந்து, கொஞ்ச நேரத்தில் யாரும் வெளியே வராத்தைக் கண்டு மறுபடி உள்ளே போய் உட்கார்ந்தானாம்.

நாயகன்-நாயகி கலாய்ப்பது ஒரு கட்டத்தில் எல்லாருக்குமே சலிப்பைத் தருகிறது. ‘ஒண்ணு சேரணுமே இவங்க’ என்றூ பார்வையாளர்களுக்குத் தோன்ற வேண்டும். ‘ஒண்ணு சேரக்கூடாதுடா’ என்றுகூடத் தோன்றலாம். ஆனால் ‘சேருங்க.. சேராமப் போங்க’ என்று பார்வையாளரைப் பார்வையாளராயே ஆக்கிவிடுகிறார்கள். படத்துக்கு விகடன் விளம்பரப் படுத்தியிருந்ததுபோல இளைஞர்கள் ஜீவாவுக்கும், இளைஞிகள் அனுயாவுக்கும் சப்போர்ட் பண்ணுவதுபோல ஒரு காட்சி அமைப்பும் இல்லை.

விகடன் தயாரிப்பு என்பது சரி. பட்த்தில் முதல் வசனமே ‘ஆல் நியூ ஆனந்தவிகடன்’ என்பதுதான். அதுக்காக ஒரு காட்சியில் விகடனை டேபிளில் நிற்கவைத்து (அப்பத்தானே அட்டைப் படம் தெரியும்!) ஒரு பெண் படித்துக் கொண்டிருப்பதுபோலக் காட்டியதெல்லாம் ஓவர்.
டாஸ்மாக்-கில் காதலைச் சொல்லும் காட்சி புதுசு. பாராட்டலாம்.

காமெடிதான் படத்தின் பலம்.

சிவா மனசுல சக்தி - வி கடனுக்காகப் பார்க்கலாம்!

முதல் நாளே படம் பார்த்து.., இப்படி இந்தப் பதிவை முடிச்சுட்டு ஆஃபீஸ்ல அஞ்சாறு பேரை நேத்துப் போய்ப் பார்க்கச் சொல்லியிருந்தேன். அவங்களைக் கேட்டா, வந்த கமெண்ட்ஸ்...

‘ரொம்ப நாளாச்சுங்க... இவ்ளோ காமெடியா ஒரு படம் பார்த்து..’

‘ஒரு தடவை பார்க்கலாம் சார்’

‘கவர்ச்சி.. ஆபாசம்னு இல்லாம நல்ல படம்தான் சார்’

‘க்ளைமாக்ஸ் இழுத்துட்டாங்க..’
‘ப்பா.. காமெடின்னா சரியான காமெடிங்க...’

ம்ம்ம்ம்!

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

Friday, February 13, 2009

அவியல் – 13.02.2009

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!
************************
கரண்டைக் கட் பண்றது யாருன்னு நமக்கெல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கரண்டைக் கண்டுபிடிச்சது யாரு?

தாமஸ் ஆல்வா எடிசன்?

இல்ல! கரண்டைக் கண்டுபிடிச்சது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அவரு மழை பெய்யும்போது பட்டம் விட்டிருக்காரு. மழை நின்னிருக்கு. அப்போ மழை பெய்யறப்போ மாஞ்சாக்கயிறிலேர்ந்து ஒரு வைப்ரேஷன் மாதிரி வந்ததை உணர்ந்து, அப்படிக் கண்டுபிடிச்சதுதான் மின்சாரம். ஆனா அதைப் பயன்படுத்தற விதமா பயன்படுத்தணும்டா-ன்னு பல்பைக் கண்டுபிடிச்சதால தாமஸ் ஆல்வா எடிசன் அதிகமா பேசப்படறாரு!

****************************
பாரிஸில் ஒரு பிரபல ஓவியரின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ஆதாம் ஏவாள் குறித்த ஒரு நிர்வாண ஓவியம். அந்த ஓவியம் முன் நான்கைந்து குழந்தைகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி ஒருவர் ‘இதேதடா.. வில்லங்கமான படம் முன் குழந்தைகள் இருக்கிறார்களே’ என்று அருகே போக, ஒரு சிறுமி அருகிலிருந்த சிறுவனைப் பார்த்துக் கேட்ட்து காதில் விழுந்தது.

“டே.. இதுல எது ஆம்பள.. எது பொம்பள?”

அட்டா.. வில்லங்கமான கேள்வி கேட்டுவிட்டாளே’ என்று இவர் இன்னும் அருகே சென்றபோது அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...

“எப்படித் தெரியும்? அவங்கதான் ட்ரெஸ்ஸே போடலியே!”

குழந்தைகள்!

ஹூம்! நாம் தான் ‘பெரியவர்கள்’ ஆகிவிட்டோம்!!

*********************

உமா கேட்ட ஒரு கேள்வி அர்த்தமுள்ளதாக இருந்தது..

“இந்த சன் டி.விக்காரங்க சினிமா கே.டி-வில போடுவாங்க... பாட்டு சன் மியூசிக்ல போடுவாங்க. நியூஸ் சன் நியூஸ்ல போடுவாங்க. குழந்தைகள் ப்ரோக்ராம் சுட்டில போடுவாங்க. இப்போ காமெடிக்குன்னு ஆதித்யா-ன்னு ஆரம்பிச்சுட்டாங்க”

“சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை?”

“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க? வெறும் சீரியலேவா?”

இது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்!

************************

நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்!

****************
திருவனந்தபுரம் ஹைகோர்ட்டில் ஒரு பெரிய ஓவியம் வைத்திருக்கிறார்களாம். இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம். ஒருத்தரிடம் மட்டும் கூடுதலாக பேப்பர் கட்டு ஒன்று இருக்குமாம்.

அனுசரித்துப் போங்கள். வழக்கு நடத்த ஆரம்பித்தால் சட்டிதான் மிஞ்சும் என்பதே அதன் பொருளாம். அப்போ அந்த பேப்பர் கட்டு?

ஜெயிச்சவனுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா அந்த தீர்ப்பு நகல் இருக்குமாம். சபாஷ்!

********************
முரளிகண்ணன்( வரவேற்பறை), செல்வேந்திரன் (கவிதைகள்) என்று விகடனில் கலக்க, கார்க்கி, கேபிள் சங்கர், தாமிரா யூத் ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இடம்பெற என்று எல்லாருக்கும் வாழ்த்துகள் சொல்வதை விட முக்கியமாய் விகடனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இப்படி எங்களை ஊக்குவிப்பதற்கு. (ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்!)

********************
கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்ற கடிதத்தொகுப்பை சோர்வுறும்போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம். இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது “அவரு அவர் நண்பர்களுக்கு எழுதின கடிதத்தைப் படிச்சா உங்களுக்கு எப்படி ரி-ஃப்ரெஷ் ஆகும்?”ன்னு கேட்டார்.

அவருக்கு பதிலாய் இதோ அந்தப் புத்தகத்தில் அங்கங்கே நான் அடிக்கோடிட்டவையில் சில..

* வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு வேலைதான் எப்போதுமே வாழ்க்கையாகிவிடுகிறது

* வாழ்க்கை எப்போதுமே ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை.

* தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.

* எதையாவது தொடர்ந்தும், எதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை.

* மூக்குத்தி இல்லாமலும் அழகாக இருக்கிற மூக்கு உலகத்தில் எவ்வளவு இருக்கிறது.

* தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.

*****************

Thursday, February 12, 2009

பின்நவீனத்துவப் பித்தனானேன்!கொஞ்ச நாள் நல்லாத்தாங்க போய்ட்டிருந்தது... ஏதோ ரெண்டு படம் பார்த்தமா.. விமர்சனம்கற பேர்ல என்னமோ சினிமாவையே கண்டுபிடிச்சவன் மாதிரி அது சொத்தை, இது நொள்ளைன்னு விமர்சனம் போட்டமா, நாலைஞ்சு பதிவர்கள்கூட சந்திப்பைப் போட்டு அதைப் பதிவாப் போட்டமா, அவியல், பொரியல்ன்னு எதுனா செஞ்சு வெந்தும் வேகாமக் குடுத்து படிக்கறவங்கள நொந்து நூடுல்ஸ் ஆக்கினோமான்னு ஒரு மாதிரிப் போய்ட்டிருந்தது.

நேத்திக்கு அந்த நண்பனைப் பார்த்ததிலேர்ந்துதாங்க இந்தப் பிரச்னை. 'ஒன்னைப் பார்க்க ஆஃபீஸ் வரணும்டா'ன்னான். வாடா-ன்னேன். ஏதோ கொஞ்ச நேரம் பேசினோமா, அவியலுக்கு ரெண்டு மேட்டர் தேத்தினோமான்னு போகும்ன்னு நெனைச்சுதான் வரச் சொன்னேன். வந்தான்.

வந்து ஆஃபீஸ்ல ஒக்கார்ந்தான். ஆஃபீஸ் பாய்கிட்ட காபி சொன்னேன். அவன் 'இவரு வேலை செய்யணும்னு ஒக்கார்றதே இந்த ரெண்டு மணிநேரம்தான். அதுக்கும் ஒரு ஆள் வந்து ஆப்பு வெச்சுட்டாண்டா' –ங்கறாமாதிரி என் நண்பனை ஒரு பார்வை பார்த்துட்டு நகர்ந்தான்.

"சொல்லுடா" ன்னேன்

"கொஞ்சநாளா உன் வலைப்பூவை படிச்சிட்டிருக்கேண்டா"

ஆஹா.. அச்சடா! அதுதான் மூஞ்சிய இப்படி வெச்சுட்டு வந்தானா..

"என்னடா எப்பப் பார்த்தாலும் உன் வலை நண்பர்கள் பத்தியே எழுதற? உன் ப்ளாக்கை ஒரு நாளைக்கு 1000 பேர் படிச்சாங்கன்னா அதுல வலையில எழுதாத, வெறும் வாசகர்கள்தான் 80% இருக்காங்க. அவங்களுக்கு இது அந்நியமாப் படும் இல்லையா?"

"அந்நியமாப் படலாம். அநியாயமாத்தான் படக்கூடாது"

அவன் குனிஞ்சான். செருப்பை எடுக்கறானோன்னு பயந்து.. "இரு முழுசா சொல்லிடறேன். சுஜாதா பாலகுமாரனைப் பத்தி எழுதினா சூப்பர்னு ரசிக்கறோம். ரஜினி கமலைப் பத்திப் பேசினா 'ஆஹா'ன்னு பார்க்கறோம். அதே மாதிரி என் துறை நண்பர்களைப் பத்தி நான் சொன்னா ஏன் பிடிக்கலங்கற?"

"பிடிக்கலன்னு சொல்லல.. சரி... நீ ஏண்டா பின்நவீனத்துவ பாணில எழுதக் கூடாது?"

இங்கதாங்க விதி விளையாட ஆரம்பிச்சது.

"பின்நவீனத்துவம்னா என்னடா"ன்னு நான் கேட்டேன்.

"எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"

"நீ சொல்ற மாதிரி பார்த்தா 'இப்படித்தான் இருக்கணும் என் எழுத்து'ன்னு நீ நெனைக்கறப்ப நான் என் இஷ்டத்துக்கு எழுதிகிட்டிருக்கேனே.. நான் பின்நவீனத்துவவாதியா?"

மறுபடி குனிஞ்சான்.

"சரி... சொல்லு"ன்னேன்.

"சாருவோட ஜீரோ டிகிரி படிச்சிருக்கியா"ன்னான்.

நான் குமுதம் அரசு மாதிரி ஹி..ஹின்னு சிரிச்சு, ராஜேந்திரகுமார் பாணில 'ஙே'ன்னு முழிச்சேன்.

"சொல்லுடா"ன்னான்.

நான் ரொம்ப சன்னமான குரல்ல "படிச்சேன்"ன்னேன்.

"டேய்.. அதுக்கேண்டா ஏதோ செக்ஸ் புக்கைப் படிச்சவனாட்டம் நெளியற?"

"சொல்ல வந்ததச் சொல்லீட்டுக் கெளம்பு. என்னை வம்புல மாட்டிவிடாதே."

"அது பார்த்தீன்னா எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காது. அந்த மாதிரின்னு வெச்சுக்கலாம்"

"ஓ அதுதான் போஸ்ட் மார்ட்டனிஸமா?"

"போஸ்ட் MODERNISM. போஸ்ட் MORTERNISM இல்ல"

"ஓ! அது மார்டனிஸமா? நான் படிச்சவனுக்கு ஒண்ணும் புரியாம செத்து சுண்ணாம்பாகறதால போஸ்ட் மார்ட்டனிஸம்ன்னு நெனைச்சுட்டேன்!"

மறுபடி குனிஞ்சான். இனிமே ஆஃபீஸ்க்கு வரவங்க செருப்பை வெளிலயே விட்டுட்டு வரச் சொல்லணும்டா'ன்னு நெனைச்சுகிட்டேன்.

"இதுக்கு அடுத்தது இது. அதுக்கு அடுத்தது அதுன்னு நாம ஒரு பிம்பம் வெச்சிருப்போம். அந்த பிம்பங்களை உடைத்தெறிந்து, ஒரு பிரதிக்குள்ளிருந்து இன்னொரு பிரதியைப் பகடி செய்ய.."

இப்போ நான் குனிஞ்சேன். "டேய்.. ஒழுங்காத்தாண்டா பேசிகிட்டிருந்த?"ன்னு கேட்டேன்.

"இதுதான் உன்னை மாதிரி ஆளுகளுக்கு புரியவும் செய்யாது. சொன்னாலும் கேட்க மாட்டீங்க" னான்.

"சரி சொல்லு"

"இப்போ ஒரு படம் இருக்கு. நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்ய மாட்டான். அப்போ அது பின்நவீனத்துவப் படமாகுது"

"உதாரணம்?"

"நான் கடவுளை எடுத்துக்கலாம்"

"அதான் ஏற்கனவே எடுத்துட்டாங்களே"

"மூடிட்டு கேளுடா.."

"என்னடா.. நீ சொல்றப்ப சும்மா கேட்டுட்டிருந்தா நான் சாதாரண ஆளு. நான் என்ன சொல்லணும்ன்னு நீ நெனைக்கறப்ப நான் வேற சொல்றேனே.. நான் பின்நவீனத்துவவாதியாகிட்டு வரேண்டா"

"நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல ஆர்யா அம்மாவைப் பார்க்கும்போது இத்தனை வருஷம் கழிச்சுப் பார்க்கறோமேன்னு எந்த டயலாக், உணர்ச்சிவசப்படுதல்னு எதுவுமே இல்ல. வழக்கமா ஹீரோ கால்ல, ஹீரோயின் விழுந்தா எடுத்து ஆரத்தழுவற சீன் எதுவுமே இல்ல. அதுதான் பின்நவீனத்துவம்"

எனக்கு கோவம் வந்துச்சு. "டேய் லூஸு. அப்படிப் பார்த்தா அவன் அம்மா சாதாரண அம்மா மாதிரி உருகிட்டுதானே இருக்காங்க. அதே மாதிரி நீ பூஜாவை ஏன் ஹீரோயின்கற? ஒரு பின்நவீனத்துவவாதியாப் பார்த்தா அவ ஹீரோயினே இல்ல. நீ சொல்றா மாதிரி சாதாரணமா நடக்கறத காட்டாம வேறுபடுத்திக் காட்டறது பின்நவீனத்துவம்ன்னா ராமநாராயணனும், பேரரசுவும்தான் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பின்நவீனத்துவவாதிகள். பாம்பு லெட்டர் படிக்கும்.. ஒருத்தன் ஸ்க்ரீன்ல இருக்கற நூறு பேரையும் ஸ்க்ரீனுக்கு முன்னாடி இருக்கற 1000 பேரையும் ஒருசேரக் கொல்லுவான்"

“ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. பின்நவீனத்துவத்தைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு பின்நவீனத்துவவாதியா மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்”

“புரியறதுக்கும் தெரியறதுக்கும் என்னடா வித்தியாசம்?”

“அங்க பாரு அது என்ன?”

“பேப்பர் வெய்ட்”

“அது ஒனக்குத் தெரியுதா?”

“தெரியுது?”

“அது பேப்பர் வெய்ட்னு தெரியுது. ஆனா அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரியுமா?”

“புரியல..”

“ஆங்... அதுதான் மேட்டர். அது பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா தெரியுதுன்னு சொல்லலாம். அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லலாம்”

“புரியல”

“நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”

“சரி... ரெண்டும் வேண்டாம். இப்போ நீ அடுத்து என்ன சொல்லணும், என்ன செய்யணும்னு எந்தக் கட்டுக்குள்ளும் உன்னை அடைக்க முடியாம நீ ஆய்ட்டீன்னா நீ பின்நவீனத்துவவாதி”

“அப்ப அந்தப் படத்துல ஆர்யா பின்நவீனத்துவவாதி. கரெக்டா?”

“ஆங்... இப்பதான் நீ ஓரளவு புரிஞ்சுட்டிருக்க”

ஓரளவுக்கே காசி கஞ்சாவை ஒசில அடிச்ச மாதிரி இருக்கேன்னு மெரண்டு ஒக்கார்ந்திருந்தேன். அவன் “அப்ப நான் கெளம்பறேன்”ன்னான்.

“கெளம்பறதுன்னா கெளம்பு. இல்லீன்னா என்னமோ பண்ணி நாசமாப் போ. எனக்கென்ன?”ன்னேன்.

”வெரிகுட். இதான்.. இப்படித்தான்”னுட்டே போய்ட்டான்.

அப்போ டம்ளர் எடுக்க வந்த ஆஃபீஸ் பாய்கிட்ட “எனக்கு இன்னொரு காஃபி”ன்னேன்.

“சார்.. சும்மா சும்மா உங்க இஷ்டத்து காபி கேட்காதீங்க. என்னால போட்டுட்டு வரமுடியாது” னான் அவன்.

ஆஹா.. இத்தனை நாள் இவன் இப்படிப் பேசினதில்லையே.. ஒருவேளை ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டானோன்னு, இவனும் பின்நவீனத்துவவாதி ஆகறானோன்னு நான் யோசிச்சுகிட்டிருப்பவே எங்க எம்.டி வந்தார்.

“கிருஷ்ணா... அந்த ரிப்போர்ட் ரெடியா?”ன்னு கேட்க..

“அது இன்னும் முடியல. எப்ப முடியும்னு சொல்ல முடியாது”ன்னேன்.

அவரு சிரிச்சுகிட்டே போக.. ‘ஊரு நாடெல்லாம் ரிஸஷன் பேய் பிடிச்சு ஆட்டிகிட்டிருக்கு. நாம இப்படி ஒரு பதிலைச் சொல்லியும் கோவப்படுவார்னு பார்த்தா.. சிரிச்சுட்டுப் போய்ட்டாரே.. இப்படி எதிர்பார்க்காததச் செய்யறதால இவரும் பின்நவீனத்துவவாதியா?’ன்னு ஒரு சிந்தனை எனக்குள்ள ஆரம்பிக்க.. என் ஃபோன் ஒலிச்சது.

மனைவி calling....

‘ஆஹா.. சாப்பிட ஏன் இன்னும் வரலன்னு திட்டுவாளே’ன்னு நான் எடுக்க...

“மணி என்னாச்சு? ஒங்க இஷ்டத்துக்கு வருவீங்க. நான் ஒக்கார்ந்து சோறு போடணுமா”ன்னு ஆரம்பிச்சு கன்னா பின்னான்னு அர்ச்சனை ஆரம்பிச்சது.

அப்பத்தான் புரிஞ்சது... பின்நவீனத்துவக் கட்டுடைத்தலில் கொஞ்சமும் மாற்ற முடியாமல் இருப்பது மனைவிகளைத்தான் என்பது.

Wednesday, February 11, 2009

காதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில டிப்ஸ்!


கலாச்சாரத்தைக் காப்பாத்த சில அமைப்புகள் ஜரூரா கெளம்பீட்டாங்கப்பா. காதலர் தினத்தன்னிக்கு ஜோடியா சுத்தற காதலர்களுக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.

முருகன்-வள்ளி ஆரம்பிச்சு பல இந்துக் கடவுள்களும், இலக்கிய இதிகாசங்களும் கொண்டாடின காதல் இவங்களுக்கு இப்படி வெளையாட்டாப் போச்சு. பாவம் அவங்களே பயந்து பயந்து காதலிச்சிட்டிருக்காங்க... உங்க வீரத்தை அவங்ககிட்டயா காட்டணும்? இதுக்கு பதிலா பொது இடத்துல சிகரெட் பிடிக்கறவங்க, குப்பை போடறவங்க இவங்களைப் பாத்தா தண்டிப்போம்னு கெளம்பினாக் கூட ஒரு அர்த்தம் இருக்கு!

கர்நாடகாவில் ராமசேனா அமைப்பு அறிவித்ததும், கோவையிலும் சில இந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று தனிமையில் ஜோடியாக சுற்றும் (அதெப்படிடா தனிமைல, ஜோடியா சுத்த முடியும்ன்னு கேட்கப் படாது!) காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போகிறார்களாம்.

சரி... இவங்களை எப்படி சமாளிக்க?

***********

வீட்டில் சம்மதமும் வாங்கி எளிமையாக திருமணம் நடக்க வேண்டும்.. அதே சமயம் ஊரில் எல்லாருக்கும் தெரியப்படுத்தவும் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அமைப்பினர் சுற்றும் இடங்களுக்கு ஜோடி ஜோடியாகப் போய் நின்று கொண்டு, தங்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் 25, 30 பேரை அங்கங்கே ஒளிந்திருக்கச் சொல்லலாம். அமைப்பினர் வந்து திருமணத்தை நடாத்தி (இப்படித்தான் சொல்லணும்க!) கொடுத்ததும் எல்லாரும் ஓடி வந்து கைகுலுக்கிப் பாராட்டி பரிசளித்துவிட்டுப் போகச் செய்யலாம்! அவங்க மூஞ்சில ஈ ஆடாது!

*********************

இந்த அமைப்பினரின் வீட்டில் இருக்கும், காதலித்து அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர், இளைஞிகள் அன்றைக்கு தைரியமாக ஜோடியாகச் சுற்றலாம். அப்ரூவல் வித் இம்மீடியட் ஆக்‌ஷன்!

************************

அறுபதாம், எண்பதாம் கல்யாண நாள் கொண்டாடும் ஜோடிகள் இவர்களுக்கு முன் நின்று கொண்டு கல்யாணம் நடத்தி வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். நாங்களும் ஜோடிகள் தானே என்று

*********************************

வெறும் மஞ்சச் சரடு தாலியைக் குடுத்தா கட்ட மாட்டேன். ஒரு கிராம் தங்கமாவது இருக்கணும்னு ரகளை பண்ணணும் பையன். அப்படி, ஒரு கிராமோட குடுத்தா, கட்டீட்டு அதே மாதிரி ஊர்ல ஒரு எட்டு இடத்துல போய் ஒரு பவுனைத் தேத்திடுங்க.. அப்படியே பக்கத்து ஊருக்குப் போயி.. அங்க ஒரு எட்டு எடம்.... அப்படியே...

*********************

பொண்ணு பார்த்து ரிஜக்ட் ஆன பசங்களுக்கும், பசங்க வேணாம்னு சொன்ன பொண்ணுங்களுக்கும் இது பம்பர் சான்ஸ். ஓரளவு உங்களுக்கு ஏத்த மாதிரி பொண்ணு/பையன்கிட்ட அவங்க வர்ற நேரம் பார்த்து டபக்ன்னு போய் ஒக்கார்ந்துக்கோங்க. மத்தத அவங்க பார்த்துப்பாங்க!

*************************


ஜோடியா உட்கார்ந்து பேசிகிட்டிருக்கணும். அவங்க பக்கம் வந்ததும் கடுமையா ஜோடிகளுக்குள்ள சண்டை போட்டுக்கணும். மறுபடி அவங்க குழம்பி அந்தப் பக்கம் போனப்பறம் பேசணும்.. இப்படியே கடுப்படிக்கணும்...

*************************************

ஜோடியா இருக்கறப்போ வந்து தாலி கட்டுன்னு சொன்னா “மாங்கல்ய தாரண மந்திரத்தை யாரு ஓதுவாங்க?’ ன்னு கேட்டு முழுசா எல்லா மந்திரத்தையும் சொல்லச் சொல்லணும். சொல்லலீன்னா விடாம சொல்லு சொல்லுன்னு ராவடி பண்ணனும்.

**************************

என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க..) இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து "ஹை! அப்பா அம்மா கல்யாணத்தப் பார்த்துட்டேனே"ன்னு கைதட்டி குதிச்சு கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையையும் தீர்த்த மாதிரி ஆச்சு!

****************************

உங்க ஐடியாக்களையும் பின்னூட்டத்துல போட்டுத் தாக்குங்க..

Tuesday, February 10, 2009

நான் கடவுள் - சபாஷ்!

ஒரு திரைப்படம் பார்க்கச் செல்பவரின் மனநிலை எவ்வாறானதாக இருக்கும்? கொண்டாட்டத்தை எதிர்பார்த்தோ, எந்திரத் தன்மை வாய்ந்த தன் வாழ்வுச் சூழலிருந்து விலகி சற்று மாறுதலான ஒய்வுதேடி தங்கள் இறுக்கத்தைத் தணித்துக் கொள்ளவோதான் இந்நாட்களில் திரைப்படம் பார்க்கச் செல்பவரின் மனநிலை இருக்கும்.

பாலா படத்தைப் பொறுத்தவரை... ‘இந்த மாதிரியெல்லாம் இருக்காது.. இவரு படம் வேறமாதிரி’ என்று ரசிகனை தன் தளத்தை நோக்கி இழுத்துவந்து உட்கார வைப்பதில் பாலா ஜெயிக்கிறார்.

இன்றைய தமிழ்ச்சினிமாச் சூழல் என்பது - ரசிகத்தன்மையைப் பொறுத்தவரை- கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்துவருகிறது. ஒரு திரைப்படத்தின் ஓபனிங் கதாநாயகர்களுக்காகத்தான் இருந்துவருகிறது. பாலாவின் நான் கடவுள் பாலாவுக்காக மட்டுமே இந்த ஓபனிங்கை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல கொஞ்சம் இளையராஜாவுக்காகவும். இருவருமே ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள். அதில் இளையராஜா கொஞ்சம் அதிகமாகவே.


நேர்மையாய் இருப்பவர்களுக்கே இந்த ஆடை தெரியும் என்று சொல்லப்பட்டு, நிர்வாண மன்னனை எல்லோரும் பாராட்டியதுபோல நான் பாராட்டத் தயாரில்லை என்கிறார்கள் சில பேர். மெத்தச்சரி.

எல்லாரும் பாராட்டுவதற்காகப் பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக சிலர் திட்டுவதும்.

திட்டும் அளவுக்கு அப்படி ஒன்றும் கேவலமான புரிதலற்ற படமில்லை நான் கடவுள்.

பல வருடங்களுக்கு முன் ஜோசியர்கள் சொல்கேட்டு தந்தையால் காசியில் விடப்பட்ட நாயகனைத் தேடி வரும் தந்தை, நாயகனைத் தன்னுடன் கூட்டிப் போக விழைகிறார். நாயகனின் குரு, “நீ ஒரு சாதாரண மனிதனல்ல, உனக்கு சொந்த பந்தங்கள் இருக்கக் கூடாது. போய் அவற்றைக் களைந்துவிட்டு வா” என்கிறார்.

குருவிடம் இருந்த காலங்களில் ஒரு அகோரியாக இருந்தவன் நாயகன்.


(வட நாட்டில்... மண்டை ஓட்டில் உணவருந்தும் ஒரு அகோரி)
(படக்காட்சி அல்ல)

(அகோரி என்பவர்கள் நரமாமிசம் உண்டு வாழ்பவர்கள் என்ற கருத்துண்டு. ஓரளவு உண்மையாயினும் இவர்கள் தாமாக உயிர்களை அழித்துக் கொல்வதாக எங்கும் சொல்லப் படவில்லை. இன்றளவும் வாரணாசி உட்பட சில வட நகரங்களில் அகோரிகள் சாதாரண மனிதர்கள் போலவே உலாவருகின்றனர் எனச் சொல்லப்படுகிறது.)

அவ்வாறு அகோரியாக இருந்த அவன் சொந்த பந்தங்கள் என்ற பற்றை..., அந்த ஊரில் அவனிருக்கும்போது அவனிடம் ‘சாமி… சாமி..’ என்று பற்று வைக்கும் அம்சவல்லியின் பற்றை, எவ்வாறு அறுத்தெறிகிறார் என்பதே கதை. தனது பற்றை அறுக்க அம்சவல்லிக்கு அவர் அந்த முடிவைத் தரவில்லை... அவளது துன்பங்களிலிருந்து அவளை விடுவிக்கவே அந்த முடிவு என்பதும் ஒரு கோணம்.

நாயகியரின், பெண்களின் இடை உடைகளில் சதையைக் காட்டும் படங்களுக்கு மத்தியில் மாற்றுத் திறன் கொண்ட எண்ணற்ற பிச்சைக்காரர்களின் முகங்களைக் காட்டி கலங்க வைத்திருக்கிறார் பாலா. பிச்சைப்பாத்திரம் பாடலை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்ட என் தோழி ஒருத்தி ‘ஐயோ இந்தப் படத்துக்கு நான் போக மாட்டேன்ப்பா’ என்று சொன்னதுதான் இந்தப் படத்தின் பலமும் பலவீனமுமாய் இருக்கிறது!

அப்புறம் பாலாவின் பாத்திரத் தேர்வுகள்..

ஆர்யாவுக்கும், பூஜாவுக்கு இது வாழ்நாள் முழுதும் சொல்லிக் கொள்ளக் கூடிய படம். மீடியாக்களில் சொல்லவில்லை என்றால் நாயகி பூஜாதான் என்பதை எவராலும் கணிக்க முடியாது.

காசியில் ஆர்யாவின் குருஜி-யில் தொடங்கி, பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் அந்தத் தாத்தாவின் (கவிஞர் விக்ரமாதித்யன்) மடியில் மழலை சிரிப்பு சிரித்தபடியே இருந்த குழந்தை உட்பட ஒவ்வொரு கேரகடர்களும் அற்புதம். எந்தக் குறையுமில்லை. அந்த வில்லன் தாண்டவன்... பேச்சிலும், பாடி லாங்குவேஜிலும் ஆர்.பி.விஸ்வத்தை உரித்து வைத்திருக்கிறார். நல்லதொரு வரவு. (பேரு ராஜேந்திரன்-னு படிச்சதா ஞாபகம்!)


பிச்சைக்காரர்கள் வாழ்வைக் காட்டும்போது எங்கே சோக வயலினுடன் தூங்க வைத்துவிடுவார்களோ என்று நினைத்தால் அவர்களுக்குள் இருக்கும், கிண்டல் கேலியை படம் நெடுகிலும் தூவி பார்வையாளர்களை கவர்கிறார் இயக்குனர்.

தன் தந்தையை விட்டு வரும்போது அவருக்காக அழும் அம்சவல்லி, தாண்டவன் & கோ-விடம் சிக்கியதும் இங்கே இவர்களுக்காக அழும்போது, அவர்கள் அவர்கள் வாழ்வை எவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர்.

காசியிலிருந்து படம் மலைக்கோயிலுக்கு வரும்போது கண்ணைமூடிக் கொண்டு படம் வேறு தளத்திற்குப் பயணிக்கிறது என்று சொல்லக்கூடிய பின்னணி இசை அபாரம். நாயகனை அனுப்பும்போது குருஜி பேசுமிடத்திலும், அம்மாவிடம் அப்பா நாயகன் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தான் என்று சொல்லுமிடத்திலும் இசை மூலமாகவே படத்தை விளக்கியிருக்கிறார் ராஜா. அந்த சிவோஹம் பாடலும், வீட்டு மாடியில் உடுக்கையடிக்கும்போதும், தந்தை நாயகனைக் கண்டு கொள்ளும் காட்சியிலும் ஒலிக்கும் பின்னணி இசைக்கு என்ன கொடுத்தாலும் தகும்.

இயக்குனர், இசைக்கு அடுத்து பார்வையாளர்களின் அதிக கைதட்டலை படத்தின் வசனங்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம் சில ஆழமான வசனங்களுக்கு மக்கள் தரும் கரவொலி அவர்களின் ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்துவதால். வசனகர்த்தா திரு.ஜெயமோகனிடம் இதுகுறித்துப் பேசியபோது “பல இடங்களில் அந்தந்தக் கேரக்டரைப் பேசவைத்துப் பதிவு செய்யப் பட்டது. ஸ்பாட் ரெகார்டிங். அந்த சமயத்தில் அந்த கேரக்டர் என்ன சொல்லும் என்பதைத்தான் வசனமாய் எழுதினேன்” என்றார். என்றாலும் ‘நெருப்புல ஏதுடா சுத்தம், அசுத்தம்’ என்று நாயகன் கேட்பதும், பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் அமைச்சரவை ஒதுக்குவதும், காவல் நிலையத்தில் பூஜா குடும்பத்தினர் ஆடிப்பாடும்போது நடக்கும் சம்பாஷணைகளும் ஜெயமோகனின் ஆளுமையைக் காட்டுகிறது. சபாஷ் ஜெமோ!

குறைகள்?

திரைக்கதை நேர்த்தியில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார். அதேபோல பாலா படம் என்றால் இப்படித்தான் என்ற கட்டுக்குள் பாலா மாட்டிக் கொண்டுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாயகன் யாருக்கும் அடங்கமாட்டான் (சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள்), அவ்வளவு ஈஸியாக காதலிக்க மாட்டான் (சேது நீங்கலான மற்ற படங்கள்) என்பது போன்ற ரிபீடேஷன்கள்.

சேதுவின் பாண்டிமடம், நந்தாவில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போன்றே இதில் பிச்சைக்காரர்களின் இடமும். நன்றாகத்தான் இருக்கிறதெனினும்... மாற்றமில்லாவிட்டால் ஒருவித லேபிளில் பாலா மாட்டிக் கொள்ளும் அபாயமிருக்கிறது.

அதேபோல இந்தப் படத்துக்காக ராஜா போட்ட இரண்டு நல்ல பாடல்களை படத்தில் சேர்க்காததற்கு பாலாவிற்கு குட்டு!

“ஒண்ணும் புரியல... ஆனாலும் ரெண்டரை மணிநேரம் ஒக்கார வெச்சுட்டாருடா” என்ற கமெண்டை வெளியே வருகையில் கேட்க முடிந்தது.

வெற்றி, தோல்வி என்பதற்கப்பாற்பட்டு பாலா பாராட்டுக்குரியவர் என்பதை நிரூபித்துவிட்டார்.நான் கடவுள் – எனக்குப் பிடிச்சதுப்பா!

Thursday, February 5, 2009

அவியல் 05.02.09

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி என்றால் என் மனைவிக்கு அவ்வளவு பயம். ஏற்கனவே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு பலமுறை பர்ஸை சோதனை செய்துவிட்டு அனுப்பியும், க்ரெடிட் கார்டு மூலம் செலவழித்துவிட்டு வந்ததில் அவருக்கு ஏமாற்றம். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருப்பதால் நானும் வாங்கும் மனநிலையில் இல்லை.

நண்பர் செல்வேந்திரனுடன் ஞாயிறன்று திரு.ஞானசம்பந்தனின் உரை கேட்கச் சென்றிருந்தோம். ஏதோ கட்சி மீட்டிங்கிற்குப் போனது போல எல்லாருமே அரசியல்வாதிகளாக இருந்தார்கள். ‘முடிஞ்சா ஒக்கார்ந்து கேளுடா’ என்பது போல பேசினார்கள். செல்வேந்திரன் ‘இதுபோன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பேச வேண்டிய விஷயங்களை எழுதிக் கொடுக்கும் பணியை ஆரம்பிக்கலாம் போல இருக்கிறதே’ என்று சொன்னார். வந்தவர்கள் எல்லாம் அழைப்பிதழை வைத்துக்கொண்டு ‘................ அவர்களே, .................... அவர்களே’ என்றது மகா அறுவை. ரொம்பக் கீழே போய், திருவள்ளுவர் அவர்களே, பாரதியார் அவர்களே என்று சொல்லாமல் விட்டது தேவலை.

எட்டாம் தேதிவரை நடைபெற இருக்கிறது இந்தப் புத்தகக் கண்காட்சி. கண்காட்சியின் பொருட்டு திருப்பூருக்கு வர விழையும் வலைப்பதிவு நண்பர்கள் ஒரு மெயிலில் தெரிவித்தால் நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.


*****************************************

கல்கத்தாவின் தெருவோரத்தில் கிடக்கிறார் அந்தப் பெரியவர். உடம்பில் அங்கங்கே புண்களுடம் ரத்தம் வழிய கிடந்தவரை நாள்முழுக்கக் கடந்துசென்ற எவரும் கண்டுகொள்ளாதபோது, அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய அந்த மூதாட்டி, பெரியவரைக் கைத்தாங்கலாக காரில் ஏற்றி தான் சார்ந்த மருத்துவமனையில் சேர்க்கிறார். ஓரிரு நாளில் குணமாகிக் கண்விழிக்கிறார் பெரியவர். சிலுவை அணிந்த அந்த மூதாட்டி அன்னை தெரசா என்பதில் சஸ்பென்ஸ் தேவையில்லை. பெரியவரைப் பார்த்து அன்னை தெரசா யாரென்று கேட்க, பெரியவர் சொல்கிறார். “நான் காளிகோயில் பூசாரி அம்மா. இத்தனை வருடங்களாகப் பூஜை செய்கிறேன். காளி உங்கள் வடிவில் காட்சி தந்துவிட்டாளம்மா” என்கிறார்.

‘மதமெனும் பேய் பிடியாதிருக்க..’ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சியில் செவ்வாயன்று திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போது இதுபோன்ற நிறைய சம்பவங்களைச் சொல்லி, முடிவில் “கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார். இலக்கியக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதிகளுக்கிடையில் இவர் ஒரு விதிவிலக்கு. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக கூட்டத்தைக் கட்டிப் போட்டார். பேசிமுடித்து மேடையிலிருந்து இறங்கி காருக்குச் செல்லும் வரை அவரோடு பேசியது ஒரு நல்ல அனுபவம்.

*******************************************
இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.


தோனியின் வீரர்கள் இப்படிப் பாடுபட்டு வெற்றிபெற, ‘மகேந்திரசிங் தோனியா, மச்சக்கார தோனியா’ என்றும், LADY LUCK IS WITH DHONI என்றும் அவரது உழைப்பை அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்படுத்துவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

*********************************************

மகள்கள் ஏதோ எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது என்னையும் செய்யச்சொல்ல, சும்மா ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இருவரும் ‘அப்படி இல்லப்பா.. இப்படி’ என்று என்னை அமுக்க, முதுகில் பயங்கரமான சுளுக்கு. நேற்று முழுவதும் வலி. சும்மாவே படுத்துக் கிடந்து, நேற்று மாலை பொறுக்க முடியாமல் டாக்டரிடம் போக அவர் ஏதோ சால்டரிங் கம்பிபோல ஒன்றால் ஷாக் குடுத்து, மாத்திரை தைலம் கொடுத்தார். ம்ஹூம். உமாவின் நண்பி ஒருவரது அப்பா சுளுக்கெடுப்பார் என்று கேள்விப்பட்டுப் போனோம். ‘எங்கே வலி’ என்று கேட்டார். வலது முதுகு என்று சட்டையைக் கழட்டப் போக, ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று இடது கையைப் பிடித்து, முழங்கைக்கு அருகில் எண்ணையைப் போட்டு சுளுக்கெடுத்தார். ‘முதுகுல பிடிப்பு. இங்க வழிக்கிறாரே’ என்று கேட்டபோது, ‘மாறுகால் மாறுகைலதான் சுளுக்கெடுக்கணும். நிஜமா சுளுக்கா இருந்தா இதுல சரியாய்டும். இல்லீன்னா எக்ஸ்-ரே எடுத்துத்தான் பார்க்கணும்’ என்றார். பிரமிப்பாய் இருந்தது. ஓரளவு சரியாகி, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
*******************************************

சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:

“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”

**************************************
"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"

-நான் சொன்னது!

*

Tuesday, February 3, 2009

ஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2

ஒரு வ்யூ பாய்ண்டில் வாகனத்தை நிறுத்திப் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த வனக்காவலர் ஒருவர் அந்த இடத்தைக் குப்பை போட்டு அசுத்தப் படுத்துவதைக் கண்டித்து சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போனார். அவருக்கு எங்கள் நன்றி.

அப்போ WALKவாதமா ‘நடக்க’ ஆரம்பிச்சு கோவை வர்ற வரைக்கும் பல தளங்கள்ல தொடர்ந்தது. அருமையான பல நீயா நானா ப்ரோக்ராம்கள் நடந்தது.

தொட்டபெட்டால இருந்து ஊட்டியப் பார்க்கலாம்னு போனோம்.

இந்த இடத்துல (தொட்டபெட்டால இல்லீங்க. பதிவுல இந்த இடத்துல) ஒரு மேட்டர். நான் ஆஃபீஸ்ல மொத தடவையா வேற பக்கம் போறதா சொல்லி லீவு வாங்கியிருந்தேன். (அந்த சண்டே எங்களுக்கு வேலை) எல்லாம் ஃபிக்ஸ் ஆனப்பறம் எங்க MD ‘நான் ஊட்டிக்கு போகணும். காட்டேஜ் புக் பண்ணு’ன்னுட்டாங்க. ஒரு வழியா எங்க ப்ளானோட மிக்ஸ் ஆகாம அவங்களுக்கு புக்கிங் பண்ணிக் குடுத்தேன்.

தொட்டபெட்டால அத்தனை காரைப் பார்த்ததும் எங்கே எங்க எம்.டி-யும் இங்க இருந்தா என்ன பண்றதுன்னு பயந்துட்டேதான் இருந்தேன். அப்படியும் பார்த்தா இவர்தான் “அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’னு சொல்லிக்கலாம்னு நம்ம நண்பர்கள் தைரியம் குடுத்தாங்க. அப்படியும் குல்லா, கண்ணாடி, மாஸ்க்னு வித்தியாசமான கெட்டப்போடதான் தொட்டபெட்டால சுத்தினேன்.

அங்கே நாங்க தொப்பி வாங்கிட்டிரும்போது ஒரு முக்கியமான இயற்கைக் காட்சியைப் பார்த்த தாமிரா அத அப்படியே தன் கேமராவுல படம்பிடிச்சார்.

ஒரு பூ. அதோட இதழ்ல இருந்து தேன் வடியறா மாதிரி இருந்தது. அது நீரா, இல்ல ஃப்ளாஷுனால தெரிஞ்சதான்னு தெரியல. ஆனா எக்ஸலண்டா இருந்தது. நாங்க எல்லாருமே பார்த்து பிரமிச்ச படம் அது. ‘அதை பப்ளிஷ் பண்ணாதீங்க’ன்னு தாமிரா கேட்டுகிட்டதால படத்தை வெளியிட முடியல. அவர் ஏதோ காம்பெடிஷனுக்கு அதப் பயன்படுத்தப் போறாராம்.

அங்கிருந்து கிளம்பும்போது லதானந்த் அங்கிளைச் சந்தித்தது ஒரு இன்ப அதிர்ச்சி! காலில் சுளுக்கு ஏற்பட்டு, வலியோடிருந்த தருணத்திலும் நாங்கள் இருக்கும் இடம் கேட்டுக் கேட்டு வந்து சந்தித்தார். கொஞ்சநேரம் பேசிவிட்டு விடைபெற்றுப் போனார். பிறகு நாங்கள் கிளம்பிச் செல்ல, முன்னே சென்று கொண்டிருந்த அவர் தனது சஃபாரியை நிறுத்தி ‘அந்த’ப் பரிசை அளித்தார். ஊட்டியின் குளிருக்கு இதமான அந்தப் பரிசுக்கு அவருக்கு நன்றி!

அங்கிருந்து கிளம்பி மசினகுடி காட்டேஜ். உள்ள போகும்போதே பக்கத்து காட்டேஜ்ல வோடஃபோன் HR டீம் வந்திருக்குன்னாங்க. ‘HR டீம்ன்னா நிச்சயமா அதுல கேர்ள்ஸ் இருப்பாங்க’ங்கற சந்தோஷத்துல உற்சாகத்தோட உள்ளே போனோம்.

அருமையான காட்டேஜ். கான்க்ரீட் கட்டடங்களால் சூழப்பட்ட நகரத்திலிருந்து மேலே பார்க்கும்போது ஒண்ணுமே தெரியாம இருந்தது. இங்க மேல பார்த்தா நட்சத்திரக் கூட்டம் அவ்வளவு அழகா தெரிஞ்சது. எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் இருக்கும் அதே வானம் எவ்வளவு அழகா, நட்சத்திரக் கூட்டங்களோட இங்கே தெரியுதுன்னு ஆச்சர்யமா இருந்தது. நட்சத்திரங்களை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்திட்டிருந்து, இப்படி வெளில இவ்வளவு நிஜ நட்சத்திரங்களைப் பார்க்க சந்தோஷமா இருந்தது.

அடுத்த நாள் காலைல அஞ்சுமணிக்கு எழுந்து காட்டுல இருக்கற மான்களைப் பார்த்துட்டு, பக்கத்து காட்டேஜ்ல இருக்கற மான்களைப் பார்க்கலாம்னா எல்லாரும் எஸ்கேப் ஆகியிருந்தாங்க. அப்போ என்கூட இருந்த ஒரு நண்பர் கேட்டார்: “ஆண்கள் அறையின் ஜன்னலில் ஜட்டி காயறதை என்னால புரிஞ்சுக்க முடியுது. பெண்கள் அறை ஜன்னலோரம் பீர் பாட்டில்கள் இருக்கறத புரிஞ்சுக்க முடியல”ன்னு. நான் சொன்னேன். “எல்லா ஆண்களும் ஜட்டி போட மாட்டாங்க, எல்லாப் பெண்களும் பீர் குடிக்க மாட்டாங்க”

அதற்குப் பிறகு கிளம்பி ஒரு ஆற்றில் அட்டகாசமான குளியலும், கருத்துப் பரிமாற்றமும் நிகழ்த்திவிட்டு கோவை திரும்பினோம்!

இவ்வளவுதானா?

ஆமா... அவ்வளவுதான்!

சரி... ஆளாளுக்கு இந்தப் பிரயாணத்தை ‘ஆஹா.. ஓஹோங்கறீங்களேடா.. தாங்கல. அப்படி என்னதான் விசேஷம் இதுல?’ன்னு கேட்கறவங்களுக்காக..

நீங்கள் ஒரு பயணம் போறீங்க. ம்ம்ம்.. ஒரு ஆறுபேர்னு வெச்சுக்கங்க. உங்களுக்கு டி.வி.டில அன்பே சிவம் பார்க்கணும்னு தோணுது. இன்னொருத்தருக்கு குருவி படம் பார்க்கணும்னு இருக்கு. இன்னொருத்தருக்கு குசேலன் பார்க்கணும்னு இருக்கு. எப்படி இருக்கும்?

எங்க பயணத்துல எல்லாருக்கும் ஒரே கருத்துதான். ஆணியப் புடுங்க வேண்டாம்னு வடிவேலு சொன்னமாதிரி.. டிவிடியே போடவேண்டாம்!

'நான் கடவுள்' பாட்டு கேட்டீங்களான்னு ரொம்பத் திமிரோட நான் கேட்கறேன். என்னமோ எனக்குத்தான் ரசனை இருக்குங்கறா மாதிரி. உடனே செல்வேந்திரன் அவரோட செல்லுல அந்தப் பாடலை ஒலிக்க வைக்கறாரு. எல்லாரும் கண்ணைமூடி அதைக் கேட்கறோம். கும்க்கி அவரோட எம்.பி3 ல இருந்து அண்ணாச்சிக்கு போட்டுக் காட்டறாரு. எல்லாரும் மயங்கிக் கிறங்கி ரசிக்கறோம்! எனக்கு பேச்சே வரல. அந்தப் பாடல்ன்னு இல்ல என்ன பாட்டு பத்தி அது சூப்பர்லன்னு பேச்சு வந்தாலும் அந்தப் பாட்டை எங்க எழுவர்ல யார்கிட்டயாவது இருந்தது. முக்கியமா செல்வேந்திரன்கிட்ட. தாமிரா ‘தேரே மேரே பீச்மே' எனக்குப் புடிச்ச பாடல்ன்னு சொல்ல அதைக்கூட அவர் செல்லுல இருந்து ஒலிபரப்பி பிரமிக்க வைச்சார்!

கல்யாண்ஜியப் பத்தி பேசறோம், நாஞ்சில் நாடனைப் பத்திப் பேசறோம், ச.தமிழ்ச்செல்வனைப் பத்திப் பேசறோம், சாருவைப் பத்திப் பேசறோம், தங்கமணிகளைப் பத்திப் பேசறோம், விஜய் ஏசுதாஸ் பத்திப் பேசறோம், விகடனைப் பத்திப் பேசறோம், ரசிச்ச விளம்பரங்களைப் பத்திப் பேசறோம், பதிவர்களைப் பத்திப் பேசறோம்...

எல்லா டாபிக்கையும் ஆரம்பிக்கறதுதான் ஒருத்தர். தொடரறது இன்னொருத்தர், முடிக்கறது இன்னொருத்தர்ன்னு போய்ட்டே இருக்கு. (கார்க்கி சொன்ன டகீலா மேட்டர் தவிர.. அதுமட்டும் எங்க எல்லாருக்கும் புதுசு!) ‘ஒரு கவிதைல கல்யாண்ஜி என்ன சொல்றாருன்னா’ அப்படீன்னு கும்க்கி ஆரம்பிச்சா அந்தக் கவிதையை வரிகளோட சொல்றாரு வடகரை வேலன் அண்ணாச்சி. ஒரு பதிவுல இதப் படிச்சேன்னு ஏதோ ஒரு பாய்ண்டை யாரோ சொன்னா, அது இவரோட பதிவு, அதோட URL இது-ன்னு எடுத்து விடறாரு வெயிலான். சினிமா பத்திப் பேசினா தகவல்களை அள்ளித் தெறிக்கறாரு கார்க்கி. ஒரு இடத்தை, ஒரு காட்சியை நாங்க ரசிச்சுகிட்டிருக்கறப்போ, டக்னு வந்து “இந்தப் படத்தைப் பாருங்க”ன்னு நாங்க ரசிச்ச காட்சியை தன்னோட ஒளிப்பேழைல சிறைப்படுத்தி பிரமிக்க வைக்கறாரு தாமிரா. இப்போதைய தப்பித்தலை விட நெடுநாளைய திட்டமிடலும், தீர்வுகளுக்கான யோசனையும் தேவைங்கறாரு கும்க்கி. (எங்க எல்லாரையும் சகிச்சுட்டு வந்ததுக்கே அவருக்கு கோடி கும்பிடு!)

இந்த இடத்துல கும்க்கிக்கு ஒரு வார்த்தை..

“சட்டம்.. ஒழுங்குங்கறது தனிமனித.....”

ஹலோ... கும்க்கி.. எங்க ஓடறீங்க... ஓடாதீங்க... சரி. சரி.. நான் பேசல.. அண்ணாச்சி.. அவரைப் புடிங்க....”

டிஸ்கி: வீட்டுல சிஸ்டத்துல வைரஸ் இஷ்டத்துக்கு விளையாடுது. சரியா எழுத முடியல. ஆஃபீஸ்ல ஆணி அதிகம். நேரம் கிடைக்கறப்போ ஊட்டில அப்பப்போ நடந்த விவாதங்களின் தொகுப்பை வசனமா எழுதறேன்.