Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Wednesday, February 11, 2009

காதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில டிப்ஸ்!


கலாச்சாரத்தைக் காப்பாத்த சில அமைப்புகள் ஜரூரா கெளம்பீட்டாங்கப்பா. காதலர் தினத்தன்னிக்கு ஜோடியா சுத்தற காதலர்களுக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.

முருகன்-வள்ளி ஆரம்பிச்சு பல இந்துக் கடவுள்களும், இலக்கிய இதிகாசங்களும் கொண்டாடின காதல் இவங்களுக்கு இப்படி வெளையாட்டாப் போச்சு. பாவம் அவங்களே பயந்து பயந்து காதலிச்சிட்டிருக்காங்க... உங்க வீரத்தை அவங்ககிட்டயா காட்டணும்? இதுக்கு பதிலா பொது இடத்துல சிகரெட் பிடிக்கறவங்க, குப்பை போடறவங்க இவங்களைப் பாத்தா தண்டிப்போம்னு கெளம்பினாக் கூட ஒரு அர்த்தம் இருக்கு!

கர்நாடகாவில் ராமசேனா அமைப்பு அறிவித்ததும், கோவையிலும் சில இந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று தனிமையில் ஜோடியாக சுற்றும் (அதெப்படிடா தனிமைல, ஜோடியா சுத்த முடியும்ன்னு கேட்கப் படாது!) காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போகிறார்களாம்.

சரி... இவங்களை எப்படி சமாளிக்க?

***********

வீட்டில் சம்மதமும் வாங்கி எளிமையாக திருமணம் நடக்க வேண்டும்.. அதே சமயம் ஊரில் எல்லாருக்கும் தெரியப்படுத்தவும் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அமைப்பினர் சுற்றும் இடங்களுக்கு ஜோடி ஜோடியாகப் போய் நின்று கொண்டு, தங்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் 25, 30 பேரை அங்கங்கே ஒளிந்திருக்கச் சொல்லலாம். அமைப்பினர் வந்து திருமணத்தை நடாத்தி (இப்படித்தான் சொல்லணும்க!) கொடுத்ததும் எல்லாரும் ஓடி வந்து கைகுலுக்கிப் பாராட்டி பரிசளித்துவிட்டுப் போகச் செய்யலாம்! அவங்க மூஞ்சில ஈ ஆடாது!

*********************

இந்த அமைப்பினரின் வீட்டில் இருக்கும், காதலித்து அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர், இளைஞிகள் அன்றைக்கு தைரியமாக ஜோடியாகச் சுற்றலாம். அப்ரூவல் வித் இம்மீடியட் ஆக்‌ஷன்!

************************

அறுபதாம், எண்பதாம் கல்யாண நாள் கொண்டாடும் ஜோடிகள் இவர்களுக்கு முன் நின்று கொண்டு கல்யாணம் நடத்தி வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். நாங்களும் ஜோடிகள் தானே என்று

*********************************

வெறும் மஞ்சச் சரடு தாலியைக் குடுத்தா கட்ட மாட்டேன். ஒரு கிராம் தங்கமாவது இருக்கணும்னு ரகளை பண்ணணும் பையன். அப்படி, ஒரு கிராமோட குடுத்தா, கட்டீட்டு அதே மாதிரி ஊர்ல ஒரு எட்டு இடத்துல போய் ஒரு பவுனைத் தேத்திடுங்க.. அப்படியே பக்கத்து ஊருக்குப் போயி.. அங்க ஒரு எட்டு எடம்.... அப்படியே...

*********************

பொண்ணு பார்த்து ரிஜக்ட் ஆன பசங்களுக்கும், பசங்க வேணாம்னு சொன்ன பொண்ணுங்களுக்கும் இது பம்பர் சான்ஸ். ஓரளவு உங்களுக்கு ஏத்த மாதிரி பொண்ணு/பையன்கிட்ட அவங்க வர்ற நேரம் பார்த்து டபக்ன்னு போய் ஒக்கார்ந்துக்கோங்க. மத்தத அவங்க பார்த்துப்பாங்க!

*************************


ஜோடியா உட்கார்ந்து பேசிகிட்டிருக்கணும். அவங்க பக்கம் வந்ததும் கடுமையா ஜோடிகளுக்குள்ள சண்டை போட்டுக்கணும். மறுபடி அவங்க குழம்பி அந்தப் பக்கம் போனப்பறம் பேசணும்.. இப்படியே கடுப்படிக்கணும்...

*************************************

ஜோடியா இருக்கறப்போ வந்து தாலி கட்டுன்னு சொன்னா “மாங்கல்ய தாரண மந்திரத்தை யாரு ஓதுவாங்க?’ ன்னு கேட்டு முழுசா எல்லா மந்திரத்தையும் சொல்லச் சொல்லணும். சொல்லலீன்னா விடாம சொல்லு சொல்லுன்னு ராவடி பண்ணனும்.

**************************

என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க..) இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து "ஹை! அப்பா அம்மா கல்யாணத்தப் பார்த்துட்டேனே"ன்னு கைதட்டி குதிச்சு கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையையும் தீர்த்த மாதிரி ஆச்சு!

****************************

உங்க ஐடியாக்களையும் பின்னூட்டத்துல போட்டுத் தாக்குங்க..