Thursday, February 7, 2013

அவியல் 07.02.2013


முகப்புத்தகத்தில் இல்லாத, என் லட்சக்கணக்கான (யாருப்பா இவ்ளோ சத்தமா சிரிக்கறது?) வலை வாசகர்களுக்காக அதில் நானெழுதியவற்றின் தொகுப்பு:

--------------------------


நேத்து நடந்தது இது: 

பேங்க்ல அளவான கூட்டம். எனக்குக் கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்தார் அந்த நடுத்தர வயசுக்காரர். திடீர்னு அவர் மொபைல் 'விநாயகனே.. வினை தீர்ப்பவனே'ன்னு அலறீச்சு.

இவர் ஃபோனை எடுத்து, 'சொல்லு மாப்ளே'ன்னார் சவுண்டா. பேங்க்ல சுத்தி நின்னவங்கள்லாம் அவரை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. இவரு அதையெல்லாம் கண்டுக்காம, 'மாப்ள.. பன்னெண்டு மணிக்கு வந்துடவா?'ன்னாரு.

இப்ப கவுண்டர்ல இருந்த ஒரு வங்கி அதிகாரி எழுந்து நின்னு, 'ஹலோ.. இது பேங்க்'னாரு.

நம்மாளு 'டக்'னு கொஞ்சம்கூட டெசிபலைக் கொறைக்காம அதே சவுண்ட்ல சொன்னாரு:

"
பேங்க்ல இருக்கேன் மாப்ள. கொஞ்சம் மெதுவா பேசு"

_____________________________________________

ந்த விஸ்வரூபம் பிரச்சினை ஒரு வழியா முடிவுக்கு வருதுன்னு நினைக்கறேன். ஆளாளுக்கு எல்லாரையும் கேள்வி கேட்டுக் கொல்றாய்ங்க. அரசைப் பார்த்து சிலர் கேட்க, கமலைப் பார்த்து சிலர் கேட்க, இஸ்லாமிய அமைப்பைப் பார்த்து சிலர் கேட்க.. பதில் வருதோ இல்லியோ, கேட்டுட்டே இருக்காங்க.

நம்ம பங்குக்கும் யார்கிட்டயாச்சும், இது சம்பந்தமா கேட்கணும். ஆனா பாருங்க.. நம்ம மூஞ்சி சீரியஸா கேட்க சரிவராத மூஞ்சி. நான்லாம் கை வெடிகுண்டை எடுத்துட்டுப் போனாலே, 'ஏன்யா கத்திரிக்கா இவ்ளோ முத்தலா இருக்கு?'ன்னுட்டுப் போய்டுவாங்க. இந்த மூஞ்சியை வெச்சுகிட்டு நான் யார்கிட்ட, என்ன கேட்கறது?

இப்படிலாம் சிந்திச்சுட்டே கக்கூஸ்ல ஒக்கார்ந்து தினத்தந்தி படிச்சுட்டிருந்தப்பதான், நான் ஏன் குருவியார்கிட்ட இது சம்பந்தமா கேட்கக்கூடாது?'ன்னு தோணிச்சு.

இதோ என் கேள்விகள்:

1.
குருவியாரே.. விஸ்வரூபம் பேச்சு வார்த்தைக்கு வந்த இசுலாமிய அமைப்புத் தலைவர்களைப் பார்த்து கமல் சிரித்தாரா.. பதிலுக்கு அவர்களும் சிரித்தார்களா?

2.
குருவியாரே.. அவர்களிடம் கமல் 'வணக்கம்' என்றாரா.. 'சலாம்' என்றாரா? 

3.
குருவியாரே, வடமொழிச் சொல்லான 'ஸ்' தலைப்பில் உள்ளதே.. அது சரியா?

4.
குருவியாரே, அடுத்ததாக பிராமணர் சங்கம் கோவமாக இருக்கிறதாமே? அவர்களும் தடை கோருவார்களா?

5.
குருவியாரே, வடமொழிச்சொல்லான 'ஸ்'ஸை எடுத்து வெளியிட்டால், "'விசுவரூபம்' என்பதில் என் பெயர் உள்ளது.. என் அனுமதி பெறவில்லை" என்று விசு வழக்குப் போடுவாரா?

6.
குருவியாரே, விஸ்வரூப வழக்குகளுக்கென்று தனி நீதிமன்றம் அமைக்கப்படுமா?

7.
குருவியாரே, 'கமல் மீசை எடுத்திருக்கிறார், இது திராவிடக் கலாச்சாரத்திற்கு எதிரானது. தமிழனாக அவர் மீசை வைத்திருக்கவேண்டும்' என்று குருமாஅழகன் வழக்குப் போட வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் உண்மையா? 

8.
குருவியாரே, படத்தில் அவர் தமிழ் நாட்டுப்புற ஆடல்கலைகளை உபயோகப்படுத்தாமல் கதக்-கை காட்டியிருப்பது எங்கள் மனத்தை புண்படுத்துகிறது என்று யாரும் கிளம்பவில்லையா?

பாக்கி கேள்விகளை அன்புள்ள அல்லிகிட்ட கேட்டுக்கறேன்.

-------------------

ளம்பெண்களின் டி-ஷர்ட் வாசகங்கள் பல 'ஆஹா.. ஓஹோ' ரகம். சமீபத்தில் 'Push & Pull' என்ற வாசகமிட்ட டி ஷர்ட் அணிந்த பெண்ணைப் பார்த்தேன். என் சந்தேகம் அது டிஷர்ட்டில் இருக்க வேண்டியதா என்பதே.

அதை விடுங்கள்.

நுட்ப காமெடியில் (Sorry Jemo) சுஜாதா கில்லாடி என்றாலும், டிஷர்ட் வாசகத்தில் நம்ம பட்டுக்கோட்டை பிரபாகரை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது! சுசீலா பனியன் வாசகங்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்! (யாராச்சும் தொகுத்திருக்காங்களா அதை?)

என் தோழி ஒருத்தியிடம் கேட்டேன்:

'
நீ ஏன் எப்பவுமே ப்ளெய்ன் டிஷர்ட்டே போடற? எதாச்சும் வித்தியாசமான வாசகம் இருக்கற டிஷர்ட்..' -நான் கேட்கக் கேட்க இடைமறித்துச் சொன்னாள்:

'
வாசகத்துக்காகவா டிஷர்டைப் பார்க்கறாங்க?" 

ப்ப்ப்பளாஆஆஆர்!

--------------------------

ந்த துணிக்கடைல ஐநூறு ஓவாய்க்கு துணியெடுத்தா கட்டைப் பைக்கும், காலண்டருக்கும் போராடறது, தண்ணி பாட்டில் வாங்கினா பத்திரமா அதை வூட்ல கொண்டாந்து குப்பை சேர்க்கறது, எங்காச்சும் ஓசில ஃப்ளைட்ல போனா, பேக்ல மாட்டீருக்கற டேகை ரெண்டு மூணுவாரமா கழட்டாம சீன் போடறதுன்னு நம்ம மக்களுக்கே உரிய பழக்கங்கள் சில எனக்கும் உண்டு. 

அதுல சமீபமா சேர்ந்திருக்கறது, வெளியூர்ல நல்ல ஹோட்டல்ஸ்ல தங்க நேர்ந்தா, அங்க ஓசில தர்ற சோப்பு, சீப்பு வகையறாக்களை மறக்காம வீட்டுக்கு எடுத்துட்டு வர்றது.

பேனா, பேப்பர்ஸ், ஷேவிங் க்ரீம்+ரேஸர், சோப்பு, ஷவர் கேப், ப்ளாஸ்திரி, காது கொடையற பஞ்சு, தீப்பெட்டின்னு பலதும் தந்து பார்த்திருக்கேன். இந்த வாட்டி புவனேஸ்வர்ல தங்கின New Marrion ஹோட்டல்ல, ஸ்லிப்பர் தந்தாங்க! 

'அட..'ன்னு வியந்தேன். ஒன் யூஸ் ஸ்லிப்பர். நான் ஏற்கனவே ஸ்லிப்பர் கொண்டு போனதால அதை அப்டியே எடுத்து வெச்சுட்டேன். போதாததுக்கு, மூணாவது நாள் ரூம் சர்வீஸ்ல சொல்லி இன்னொண்ணும் வாங்கி எடுத்து வெச்சுகிட்டேன்!

'
வெக்கமே இல்லியாடா ஒனக்கு?'-ன்னு சந்தானம் வாய்ஸ்ல நீங்க கேக்கறது, எனக்கும் கேட்குது. நம்ம வூட்டு ஒரு மாசவாடகைய ஒரு நாளைக்கு வாங்கறாங்க பாஸ்! சும்மாவா? அதும் நானெல்லாம் ஒண்ணுமேல்ல.. நானாவது அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற டெய்லி காச்சி. என்னை விட பெரிய பெரிய பணக்கார லார்ட் லபக்குதாஸ்லாம், ஹோட்டல்ல விரிக்கற Bed Spread, டர்க்கி டவல்-லாம் எடுத்துட்டு வருவாங்களாம்! அக்காங்!


சைடு குறிப்பு: இதை முகப்புத்தகத்தில் பகிர்ந்தபோது, ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றின் மேலாளரான நண்பர் ஒருவர் மெசேஜில் வந்து, ‘அதெல்லாம் உங்களுக்காக வைக்கறதுதான். எடுத்துட்டுப் போனாலும் நோ ப்ராப்ளம். ஒரே நாள்ல நாலைஞ்சு கேட்டாதான் தப்பு’ன்னாரு!

----------------------------------


முழுக்க காவியுடையில், முற்றும் துறந்த முனிவர் கோலத்தில் ஒருவரை புவனேஸ்வர் ஏர்போர்ட்டில் பார்த்தேன். எல்லா காலை விமானங்களும் தாமதம் ஆனதால், செக்யூரிட்டி செக் இன் முடிந்து காத்திருப்புப் பகுதியில் நிற்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம். அந்த சாமியார் அமர்ந்திருந்த சீட் அருகே நின்று கொண்டிருந்தேன்.

அவர் எழுந்தார். சீட் கெடச்சுடுச்சுன்னு டக்னு போனா, படார்னு அவர்கிட்ட இருந்த லேப்டாப் பேகை அதுல வெச்சு, 'ஐ வில் கம் பேக்'னாரு.

நமக்குன்னா மட்டும் இப்டித்தான். முற்றும் துறந்தவர்கூட சீட்டைத் துறக்க மாட்டீங்கறாரு!

-----------------

Sunday, February 3, 2013

கடல் - மணிரத்னம் - நெஞ்சுக்குள்ளே

டல் படத்தின் மிக ஹிட்டான ஒரு பாடல் ‘நெஞ்சுக்குள்ளே.. ஒம்ம முடிஞ்சிருக்கேன்…’. முதன்முதலில் அஃபீஷியலாக இந்த படத்தின் இந்தப் பாடலைத்தான் வெளியிட்டார்கள். இணையம் முழுவதும் பரவி, இணையம் அல்லாத இடத்திலும் பரவி சக்கை போடு போட்டது நெஞ்சுக்குள்ளே பாடல்.


’லப்பரு வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே’ இந்த வரிகள் சிலரை வதைத்தது, ‘ச்சே.. வைரமுத்துதானே.. அவரால் மட்டும்தான் இப்படி கதாபாத்திரத்தோடு ஒன்றி அந்த வட்டார வழக்கிலேயே எழுதமுடியும்’ என்றார்கள். ஆம். வைரமுத்துதான். அவரே ட்விட்டரில் இந்தப்பாடலை பகிர்ந்தார், ‘காசநோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையிலே ஆசநோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலியே’ –இந்த வரிகளை தாறுமாறாகப்பேசிக்கொண்டார்கள்.

இரண்டொரு நாட்களுக்கு முன் அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்தேன். வெளி மாநிலம். அவர்களுக்கு தமிழ் தெரியாது,. ஆனால் மணிரத்னத்தை தெரியும். கடல் ரிலீஸ் என்று பேச்சு அடிபட்டதும், “அந்த ‘நெஞ்சுக்குள்ளே’ பாடல் அதுலதானே?” என்கிறார்கள்.

முதல் சரணம் முடிந்ததும் ரகுமானின் ‘ஏஹேஹே.. நாநா’ அவர்களை ஈர்த்திருக்கலாம். மொழி தெரிந்தவர்களுக்கோ.. ‘ஏலே இளஞ்சிறுக்கி’ கவர்ந்திருக்கலாம்.

அந்தப் பாடல் யாருக்காகப் படமாக்கப்பட்டது மணிரத்னம் அவர்களே? படத்தில் அர்ஜூனைக் காதலிப்பவராக வருகிறார் லக்‌ஷ்மி மஞ்சு, மனதால் அர்ஜூனைக் காதலிக்கிறார். அவர்தான் இந்த ‘லே..’ வழக்கைப் பயன்படுத்துகிறார். இந்தப் பாடல் அவரது கேரக்டருக்காக உருவாக்கப்பட்டதுதான். ஐயமில்லை. அந்தப் பாடல் வரிகளும் அதைத்தான் சொல்கிறது.

ஆனால்..

ஆனால்.. படத்திலோ… கொஞ்சம் கொஞ்சம்தான் அந்தப் பாடல் காண்பிக்கப்படுகிறது. மாண்டேஜாக. யாருக்கு? கௌதமின் நாயகி துளிசிக்காக!

துளசி, இந்தப் படத்தில் நர்சிங் படிக்கும் மாடர்ன் பெண்ணாகத்தான் காட்டியிருக்கிறீர்கள். பிரசவம் பார்க்கப்போகும்போது கூட ஸ்லீவ்லெஸ்ஸில் செல்லுமளவு மாடர்னாக. அவர் ஒரு காட்சியிலும் இந்த ‘வாலே.. போலே..’ வசனம் பேசியவரில்லை. அவருக்கான மாண்ட்டேஜில் இந்த’ நெஞ்சுக்குள்ளே’ பாடலைப் புகுத்தியிருக்கிறீர்கள்.இதை என்னால் எப்படி ஒன்றிப் பார்க்கமுடியும்? காட்சிமுழுவதும் ஸ்டைலிஷாகப் பேசும் ஒரு பெண், “வண்ணமணியாரம்… வலதுகை கடியாரம்’ என்று பாடுவதாகக் காட்டினால் எப்படி என்னால் பொருத்திப் பார்க்கமுடியும்?படத்தில் கௌதம், இந்தத் துளசியை விட்டுப் பிரிவதே இல்லை. அப்படியிருக்க, ‘நீர் போனபின்னும் நிழல்மட்டும் போகலியே போகலியே’ என்ற வரிகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்னுள்?என்ன காரணத்தினாலோ, அர்ஜுனின் காதலியாக நடித்தவரின் காட்சிகள் வெட்டுப்பட்டுவிட்டன. எனின், அந்தப் பாடல் ஹிட் என்பதால் ‘அதை இந்த நாயகி (துளசி)க்குப் பொருத்தலாம்’ என்ற எவரோ ஒருவரின் யோசனைக்கு நீங்கள் தலை சாய்த்திருக்கிறீர்கள். அப்படி ஒத்துக் கொண்ட நீங்கள், இந்தப் படத்தின் கடுமையான விமர்சனத்தையும் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.

யிரே படத்தை ஏதோ ஒரு B செண்டரில் பார்க்கிறீர்கள். நான்காவது சீனில் உங்கள் சீட்டுக்கு முன் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் முண்டாசைக் கழட்டி உதறியபடி, ‘என்னா படமெடுக்கறானுக’ என்று வெளியே போகிறார். ‘என்றைக்கு அவரை என்னால் திருப்திப்படுத்த முடிகிறதோ அன்றைக்கு நான் ஒப்புக் கொள்வேன் நானும் ஒரு இயக்குனர் என’ என்று சொல்லிவிட்டு நீங்களும் வெளியேறுகீர்கள்.

நீங்கள் ஒரு பேட்டியில் சொன்னவிஷயம் இது.

படமெல்லாம் அவ்வளவு நேர்த்தியாய் தரவேண்டாம். ஒரு பாடலை தகுந்த காரணகாரியங்களோடுத் தரத்தவறியிருக்கிறீர்கள். இந்தப் பாடலை நீங்கள் வெட்டியிருந்தால்கூட நான் வருத்தப்பட்டிருக்கமாட்டேன்.

நான் கடவுள் படத்தின் ஆகச்சிறந்த பாடலாக (அதன் இசைக்காக) – ‘அம்மா உன் பிள்ளைநான்’ பாடலை நான் கூறுவதுண்டு. இன்றைக்கும் அந்தப்பாடலைக் கேட்டு சிலிர்த்தேன் நான். ஆனால், அந்தப் பாடல் , படத்தில் இல்லை.


இந்தப் பாடலையும், அவ்வாறே நீங்கள் நீக்கியிருக்க வேண்டும். காரணம், அந்தப் பாடல் பெற வேண்டிய புகழையெல்லாம் அதைக் கேட்ட காதுகள், தந்துவிட்டன. இப்போது கண்களோ – அதை நீங்கள் வலிந்து புகுத்திய விதம் கண்டு - ஜீரணிக்க முடியாமல் அழுதுகொண்டிருகின்றன.

இதை வெறும் விமர்சனமாக ஒதுக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால், நீங்கள் உங்களையே சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தருணமிது! 

ப்ளீஸ் மணி... உங்களிடம் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.