Saturday, October 31, 2009

கண்டேன் காதலை – விமர்சனம்மிகப்பெரிய தொழிலதிபர் மகன் சக்தி (பரத்), காதல் தோல்வி காரணமாக மனது வெறுத்து கால்போன போக்கில் போகையில், இரயில் பயணத்தில் துறுதுறு அஞ்சலியை( தமன்னா)ச் சந்திக்கிறான். அவளது வீடு வரை சென்று தங்குகிறான்.

அவளது பேச்சும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணமும் அவனைக் கவர்கிறது. அவளுக்கு, முறைமாமனை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. ஆகவே சக்தியின் உதவியுடன் தன் காதலன் கௌதமை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

வீட்டை விட்டு வந்ததுமே, அஞ்சலி தன் காதலன் கௌதமைத் தேடி ஊட்டி சென்றுவிட, சக்தி புத்துணர்ச்சியோடு திரும்ப சென்னை வந்து, சரிந்து கிடக்கும் தன் பிஸினஸை வெற்றிப் பாதை நோக்கித் திருப்புகிறான். அஞ்சலி எப்படி எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு முடிவெடுக்கிறாளோ அப்படி தன் தொழிலின் ஒவ்வொரு அடியையும் மிக ஸ்போர்டிவாக அதே சமயம் – சரியான முடிவுகளை எடுத்து முன்னேறுகிறான்.

அங்கே அஞ்சலி வீட்டில் எல்லாரும், அவள் சக்தியைக் காதலித்து அவனுடன் ஓடிவிட்டதாகக் கருதுகிறார்கள். ஒன்பது மாதங்களுக்குப் பின் தொலைக்காட்சி ஒன்றில் சக்தியின் பேட்டியை கண்டு, அவனைத் தேடி வந்து அஞ்சலியைப் பற்றிக் கேட்கிறார்கள். அப்போதுதான் அஞ்சலி, தன் காதலனுடன் வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதையே அறிகிறான் சக்தி.

பிறகு அஞ்சலியைத் தேடிப் போன சக்தி என்னவாகிறான், அஞ்சலி கௌதமுடன் சேர்ந்தாளா என்பதையெல்லாம் வெ.தி.கா.

பரத் இடைவேளை வரை அமைதியாய் இருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் நடிக்கிறார். ஓகே.

இடைவேளை வரை பேசிக் கொண்டேஏஏஏஏஏ இருக்கிறார் தமன்னா. ஒருகட்டத்தில் இது போதும்டா சாமி எனுமளவு ஓவர்டோஸாகப் போய் விடுகிறது.

படத்தில் ஹீரோ, ஹீரோயினைவிட அதிக கைதட்டல்கள் வாங்குவது லொள்ளுசபா சந்தானம். ஏற்கனவே இவரை கவுண்டமணியின் அடுத்த வாரிசாக – சவுண்டுமணி- என்று ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் படத்தில் அதை அப்படியே நிரூபித்திருக்கிறார்.

பாடல்கள் அருமை. படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் ஆர்ட் டைரக்‌ஷன். பாடல் காட்சிகளிலும், மற்ற சீன்களிலும் கண்ணுக்கு உறுத்தாத அழகான கலைநயத்தைக் காட்டியிருக்கிறார். சபாஷ்!

வசனம் – ஒரிஜினலின் அப்படியேயான தழுவலாவெனத் தெரியவில்லை. பல இடங்களில் நன்றாகவே வந்திருக்கிறது. சன் டி.வி-யின் உபயத்தால் வசனங்கள் வருமுன்னரே ரசிகர்கள் கைதட்டுவதைக் காண (கேட்க?) முடிகிறது.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஜவ்வாய் இழுப்பது. பல இடங்களில் ‘போதும் முடிங்கப்பா’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. கொஞ்சம் செதுக்கி இருந்தால் இன்னும் காணச் சுகமாயிருந்திருக்கும்!

கண்டேன் காதலை – தமன்னா + சந்தானத்துக்காக ஓடும். சன்.டி.வி- அதைச் செய்யும்.

பி.கு – 1: JAB WE MET ஒரிஜினல் டிவிடி வாங்கி வைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இந்தப் படம் வரப்போகிறது என்பதால் அதைப் பார்க்காமல் வைத்திருக்கிறேன். தியேட்டர் கமெண்டுகளில், ‘இந்தில நல்லா பண்ணியிருந்தாங்கப்பா’வைக் கேட்க முடிந்தது.

முக்கியமான பி.கு: 2:- உ.போ.ஒ – மாற்றுப்பார்வை விமர்சனங்களால் தாக்குண்டு, இதில் மாற்றுப்பார்வை பார்த்து ஏதேனும் நுண்ணரசியல் படத்தில் இருக்கிறதாவென ஆராய்ந்தேன். ஒன்று கிடைத்தது.

பரத்தும் தமன்னாவும் இரயிலைத் தவற விட்டு ஓர் ஊரில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ஊரில் நடுரோட்டில் மாருதி வேன் வைத்து, விபச்சாரிகள் கஸ்டமர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரௌடிகள் தமன்னாவைத் துரத்துகிறார்கள். லாட்ஜூகள் விபச்சார கஸ்டமர்களுக்காக வாடகைக்கு விடப்படுகிறது. இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!

.

Friday, October 30, 2009

ஒன்... டூ... த்ரீ...

தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன். திருப்பூரின் சாலைவழி ஒன்றில் அலுவலக நண்பரோடு காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த சாலையில் இன்னும் டிவைடர்கள் போடப்படவில்லை. தீபாவளி நெரிசல். வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. திடீரென பயணிகள் யாருமில்லாத கல்லூரிப் பேருந்து ஒன்று வலதுபுறமாக - வாகனம் எதிரில் வரும் பாதையில் நுழைந்து - முந்திச் செல்லப் பார்த்தது. அதற்குள் எதிரில் தனியார் பேருந்து ஒன்றும் வரவே, சடாரென அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலானது சரியாக.

போக்குவரத்து சரியாவதற்கு சற்று முன், நான் இறங்கி அந்த அத்துமீறிய பேருந்தில் ஏறினேன். நேரே டிரைவரிடம் சென்றேன். டிரைவர் சுற்றியிருப்பவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், எப்படியாவது முந்தி தன் வாகனத்தை நுழைப்பதில் மும்மரமாக இருந்தார். அருகில் இன்னொருவர் இருந்தார். இருவரையும் பார்த்த நான் “R.T.O. கார் பின்னாடி நிக்குது. நீங்க ராங் ரூட்ல உள்ள நுழைஞ்சத பார்த்துட்டாரு அவரு. உங்களை நாளைக்கு ஆர்.டி.ஓ. ஆஃபீஸ்ல வந்து பார்க்கச் சொல்லியிருக்காரு. நம்பரை நோட் பண்ணி வெச்சிருக்காரு. மறக்காமப் போய்ப் பார்த்துடுங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.

பிறகு ஆர்.டி.ஓ ஆஃபீஸில் தெரிந்த நண்பரை அழைத்து அந்த வாகன எண்ணைச் சொல்லி, ‘நாளைக்கு வந்து பார்ப்பாரு' என்று சொல்லிவிட்டேன்.

“அவன் போனா என்னாகப் போகுது? எதுனா சம்திங் வாங்கீட்டு விடுவாங்க. அவ்ளோதான்” என்றார் உடன் வந்த நண்பர்.

“அது இப்ப செஞ்ச தப்புக்கு தண்டனையா இருக்கட்டுமே. இனிமே இந்த மாதிரி ஓவர்டேக் பண்ணும்போது கொஞ்சமாவது யோசிப்பான்ல” என்றேன்.

என்றேன்தான்.... என்றேனே தவிர, எனக்கும் அவன் போன்றவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

’உச்’ கொட்டுவதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்!

*********************************

மீபத்தில் ஒரு பயணத்தின்போது பார்த்தது.

ஒரு மொபைல் ஃபோன் கடையில் ‘இவ்விடம் குறைந்த விலை சைனா ஃபோன்கள் விற்பனைக்கு உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஐம்பதடி தூரத்தில் (‘அளந்துட்டே போனீங்களா’ன்னு கேட்கப்படாது!) இன்னொரு கடையில் ‘இவ்விடம் விலை குறைந்த சைனா மொபைல்கள் விற்கப்பட மாட்டாது’ என்றெழுதி வைத்திருந்தார்கள்.

‘அசத்தல்டா!’ என்று மனதில் பாராட்டிவிட்டுப் போனேன்.

**************************

ண்பன் ஒருவன் வேலை அவனுக்குத் தெரிந்த நண்பனுக்கு கேட்டு அழைத்திருந்தான். வரச் சொல்லு என்றேன். வந்தான். நான்தான் இண்டர்வ்யூ எடுத்தேன். என்னை அந்த இளைஞன் பார்த்ததில்லை. ஆகையால் வந்து அமர்ந்தவுடனேயே ‘எனக்கு கிருஷ்ணகுமார் சாரைத் தெரியும்’ என்றான். ‘சரி இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு, வழக்கமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவனுக்கு எப்படியாவது கிருஷ்ணகுமாரைப் பார்க்க வேண்டும் என்ற intention இருந்து கொண்டே இருந்தது. அதனால் அவனால் எதற்கும் சரிவர பதில் சொல்ல இயலவில்லை. நானும் ‘நான்தான் நீங்கள் கேட்கும் கிருஷ்ணகுமார்’ என்று சொல்லவும் இல்லை.

யோசித்த நான் இன்னொரு அலுவலக நண்பனை அழைத்து - சொல்லிவைத்து - ‘இவர்தான் கிருஷ்ணகுமார்’ என்று அறிமுகப்படுத்தினேன். இவன் அவருடன் கைகுலுக்கி இன்னார் சொல்லிவிட்டார்’ என்றான். அலுவலக நண்பர் ‘சரி’ என்றுவிட்டு என்னைப் பார்த்து ‘பார்த்து பண்ணுங்க சார்’ என்றுவிட்டு போனார்.

அந்த இளைஞன் பிறகு பதில் சொல்லும்போது கம்ஃபர்டபிளாக உணர்ந்தான். வேலையிலும் சேர்ந்து விட்டான்.

ஒருவாரம் முன்பு என்னை வந்து சந்தித்தான். “சாரி சார்.. நீங்கதான் அவர்னு ரெண்டு நாள் முந்திதான் தெரியும்” என்றான். ‘பரவால்ல.. உனக்கு தகுதி இருந்ததாலதான் சேர்ந்த. ஆனா அன்னைக்கு நான்தான் அதுன்னு தெரிஞ்சா கொஞ்சம் அசால்டா பதில் சொல்லுவன்னுதான் சொல்லல’ என்றேன்.

நான் செய்தது ஒருவிதத்தில் சரி.. இன்னொரு விதத்தில் தவறு.

என்னவென்று யோசியுங்கள்!


.

Thursday, October 29, 2009

பூக்களோடு சில நேரம்... (Photos)


ரொம்ப நாளாச்சு, ஃபோட்டோ எடுத்து... அதைப் பதிவாப் போட்டு..

இது சமீபத்தில் எடுத்ததில் சில...


.

Friday, October 23, 2009

கார்க்கி - 25


கார்க்கி. இளையதளபதியின் இனிய ரசிகன். இணைய தளபதி. என்ன விமர்சனங்களையும் எதிர்கொண்டு எழுதி எழுதி மேற்சென்று கொண்டிருப்பவர்.
இணைய எழுத்தால் நிறைய வாசகர்களைப் பெற்றவர்கள் பலர். இவர் ரசிகர்கள் - குறிப்பாக - ரசிகைகளைப் பெற்றிருக்கிறார். புட்டிக் கதைகள், காக்டெய்ல் இவர் ஸ்பெஷாலிடி. காதல் சம்பந்தப்பட்ட பதிவுகளில் ரசனைக்காரர். கேட்டல் ‘எல்லாம் இன்வால்வ்மெண்ட்தான் சகா’ என்பார். இந்த வாரம் கார்க்கி - 25.


மீபகாலமாக அந்த சிரிப்பு பதிவருக்கு ஃபோன் செய்து குட் நைட் சொன்ன பின்பே தூங்க செல்கிறார். ஹைதையில் ஃபோனும், காதுமாக அலைபவர், சென்னையில் இருந்தால் மட்டும் ஃபோனையே எடுப்பதில்லை.

டம், பொருள் பார்க்காமல் மொக்கை போடுவது கார்க்கியின் வழக்கம். பேசுபவர் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் அவர் சொன்னதுக்கு பதிலாக மொக்கைப் போட்டு பிரச்சினையை இலகுவாக்க பார்ப்பார். பல நேரங்களில் பூமராங் ஆனாலும் விடாமல் செய்வார். இதை மொக்கை என்று இவர் சொல்லிக் கொண்டாலும், ‘அவன் இருந்தா கலகலன்னு இருக்கும்பா’ என்று கார்க்கி இல்லாதபோது நண்பர்கள் சொல்லிக் கொள்வதுண்டு.

ஜினியை மட்டுமே தலைவர் என்று அழைப்பார். விஜயின் தீவிர விசிறி என்றாலும் தலைவன் அல்ல என்பதே கார்க்கியின் ஸ்டேட்மெண்ட். மற்ற பிடித்தவர்கள் லிஸ்ட் பெரியது.ஆனால் பிடிக்காதவர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த், அஜித், ஸ்ரீகாந்த் என்று ஒரு சிலரே உள்ளார்கள்.

பைக், ஷ்ர்ட், கார் என எதுவானாலும் சிவப்பு மற்றும் அந்த ஷேட் நிறங்களே விரும்புவார். ஆரஞ்சு ஷேடில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சட்டைகள் வைத்திருக்கிறார். பைக் கூட சிவப்புதான். கார் மட்டும் அம்மாவின் சாய்ஸ் என்பதால் க்ரே நிற i10. ஆரஞ்சு நிறத்தை இவர் ரசிப்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கிசுகிசு இருக்கிறது!

பைக்கில் ஸ்டிக்கரிங் ஒர்க் செய்வது கார்க்கியின் passion. அடிக்கடி மாற்றினாலும் முகப்பு கண்ணாடியில் இருக்கும் கீழ்கண்ட வாசகம் மட்டும் மாறவேயில்லை

K

A

R U L E S

K

I

க்கா மகன் பப்லு என்றால் மட்டும் கார்க்கி அடங்கிவிடுவார். சிறுவயதிலே அம்மா, அப்பா எப்போதும் உடன் இல்லாமல் போனதால் அவன் மீது அளவில்லா பாசம். இப்போதும் கார்க்கி சொல்வதே பப்லுவுக்கு வேதம். அதனாலோ என்னவோ ஏழு வயதிலே மாமாவைப் போல் மொக்கை மன்னன் ஆகிவிட்டான்,

கிரிக்கெட் பைத்தியம் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார். எப்போது அழைத்தாலும் கிரிக்கெட் விளையாட மட்டும் நோ சொல்ல மாட்டார். இண்டோர் கேம்ஸில் கேரம், செஸ் விளையாடுவார். கார்ட்ஸும் கார்க்கியின் ஃபேவரிட். இன்னொரு இண்டோர் கேம்... எனக் கேட்டால் ‘வேணாம் சகா எழுதாதீங்க’ என்கிறார்.

ரு முறை வித்யாதர் என்ற அமைப்புக்கு 5000 நன்கொடை தருபவர்களுடன் விஸ்வனாத் ஆனந்த் செஸ் ஆடினார். ஒரே நேரத்தில் 25 பேருடன் அவர் ஆடுவார் என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மூவ் செய்து விட வேண்டும். எப்படியோ ஆனந்தின் முக்கிய காய்களை சரிக்கு சமமாக வெட்டி மேட்ச்சை டிரா செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்வார்.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. யாராவது பிடித்தாலும் விலகி விடுவார். நண்பர்கள் வாங்கி வர சொன்னாலும் மறுத்துவிடுவார். ஏனோ சிகரெட் மட்டும் கொடுத்து வைத்திருக்கிறது.

ல்லா நடிகைகளையும் சைட் அடித்தாலும் மூன்றே மூன்று பேர்தான் கார்க்கியின் ஆல்டைம் ஃபேவரிட். நதியா, ஷாலினி, மாளவிகா.

ரொம்ப உரிமை இருக்கும் ஆட்களிடம் மட்டுமே சத்தம் போட்டு பேசுவார். இதனாலே அம்மாவுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு. ‘அவங்க சொன்னா கம்முன்னு போற, நான் சொன்னா மட்டும்தான் இப்படி கத்துவ’ என்று அம்மா சொல்லும்போதெல்லாம் அமைதியானாலும், அடுத்த நாள் மீண்டும் கத்திவிடுவார்.

குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் கைக்குழந்தைகளை தூக்குவது கார்க்கிக்கு பிடிக்காத ஒன்று. ஏடாகூடமா தூக்கி ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவார்.

த்ரியில் தொடங்கி வில்லு வரை விஜயின் எல்லாப் படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறார். சிங்கப்பூரில் இருந்த போதும் இந்தப் பழக்கத்தை விடவில்லை.சென்னை உதயம் தியேட்டர் தான் விஜய்க்கு கோட்டை என்பார்.

லுவலகத்தில் டென்ஷனான சம்யங்களில் யுட்யூபில் வடிவேலு காமெடியை பார்த்து சிரிப்பது கார்க்கியின் வழக்கம்.சமீபத்திய ஃபேவரிட் காட்சி இதோ. மற்ற சமயங்களில் முக்கிய கிரிக்கெட் மேட்ச்களை பார்ப்பார்.

வெளியே தெரியாத இன்னொரு விஷயம் கார்க்கி wrestling ரசிகர். இரவு 12 ஆனாலும் பார்த்துவிட்டுதான் தூங்குவார். undertaker,stone cold, hitman, rock எல்லாம் இவரின் ஆல்டைம் ஃபேவரிட்ஸ். இப்போதைய சாய்ஸ் John cena.

சை என்றால் சோறு தண்ணி வேண்டாம் கார்க்கிக்கு. டீ.ஆர் மகாலிங்கத்தில் தொடங்கி ஸ்ரீகாந்த் தேவா வரை அனைவரது பாடல்களும் கேட்பார். கிடார் கார்க்கியின் ஸ்பெஷல் என்பதால் அதை நிறைய பயன்படுத்தும் ஆட்களுக்கு ரசிகர் ஆகிவிடுவார். பாப் ஆட்களில் மைக்கேல் ஜேக்ஸனும், எல்விஸ் பிரெஸ்லியும் இவரது ஃபேவரிட். ஷகீராவின் இடுப்பும் இவருக்கு பிடித்தமானதே.

ங்கம் அணிவதே பிடிக்காது. அம்மாவின் வற்புறுத்தலால் ஒரே ஒரு செயின் அணிந்திருக்கிறார். செப்புலதான் மோதிரம் போட வேண்டுமென்பார். சொக்கத்தங்கம் வேலைக்காவாதாம். அதனால் செப்பு கலக்க வேண்டுமென்பார்

காதியபத்தியத்தை தீவிரமாக எதிர்ப்பவர் என்றாலும் கோக், KFC, pizzaa என பன்னாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். ‘வேலை செய்றதே அமெரிக்கா கம்பெனி அப்புறம் எதுக்குடா நான் பேசணும்’ என்று சொல்வார்.

ஜீன்ஸீல் Levis தான் அவரின் சாய்ஸ். சில மாதம் முன் சற்று குண்டான போது ஓரங்கட்டப்பட்ட ஜீன்ஸுகள் மீண்டும் புழக்கத்தில் வந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார். இன்னும் கொஞ்சம் குறைக்க மீண்டும் டான்ஸ் கிளாஸ் போக முடிவெடுத்துள்ளார்.

காரை விட பைக் ரைடிங்கை விரும்புவார். நேரம் கிடைக்கும் போது, ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் பீச்சுக்கு செல்வார். அங்கே ஒரு பியரோடு (நன்றாக படிக்கவும். ‘ய’ - ‘க’ அல்ல!) சில மணி நேரங்களை கடத்திவிட்டு ஒரு லாங் ரைடு போவது கார்க்கிக்கு பிடித்தமான ஒன்று.

நாய்கள் மற்றும் பெட் அனிமல்கள் கார்க்கிக்கு அலர்ஜி. நாய் வளர்ப்பவர்கள் வீட்டுக்கு செல்லவே மாட்டார்.

வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால், என்ன சொன்னாலும் நீ சின்னப்பையன் சும்மா இரு என்று மற்றாவர்கள் சொல்வதை வெறுப்பார். முக்கிய முடிவகளில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.

ன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் என்று யாராவது சொன்னால் கோவப்படுவார். அப்படிப்பட்ட புத்தகங்கள் படிப்பது சுத்த வேஸ்ட் என்பார். இருந்தாலும் Alchemist மட்டும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பார்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு இவர் அடிமை. இடையில் அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடலை எழுதிய போது “இவருக்கு ஏன் இந்த சின்னப்பசங்க வேலை” என்று ஒதுக்கினாலும் விடமுடியாமல் போனது. இன்றும் யாராவது வைரமுத்துவை குறைத்து பேசினால் முடிந்தவரை விவாதம் செய்வார்.

லைப்பதிவுகள் எழுத வந்த பின்பு நிறைய நல்ல மாற்றங்கள் தனக்குள்ளே வந்திருப்பதாக நம்புகிறார். எனவே பிளாக் மூலம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாகவே வைத்திருக்கிறார். என்ன வேலை இருந்தாலும் மெயில் அனுப்பும் வலையுலக நபர்களுக்கு மட்டும் பதில் அனுப்புவதை முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். வலைப்பதிவு, வலைப்பதிவாளர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே எப்போதும் இருப்பார்.


*********************

கார்க்கி 25ஐ நான் எழுதியபிறகு பரிசல் 25ஐ எழுதி பரஸ்பர முதுகு சொறிதலை செய்வது வேறு யாராக இருக்கும்? கார்க்கியேதான். பரிசல் - 25 படிக்கத் தவறாதீர்கள்!


.

Thursday, October 22, 2009

Butterfly Effect - சிறுகதை


வாட்சைப் பார்த்தேன். மணி எட்டேமுக்கால் என்றது. அலுவலகத்திலிருந்து கிளம்பி, பஸ் ஸ்டாப் போனேன். உமா வேலை முடிந்து பஸ்ஸில் வந்திறங்கி, எனக்காக காத்துக்கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்.

வீட்டினுள் சென்றதும் வீடு இருந்த கோலத்தைக் கண்டு முகம் மாறினாள்.


"மீரா”

“என்னம்மா?”

“ஆறாங்க்ளாஸ் போற நீ... இன்னும் சின்னக் குழந்தை மாதிரி வீட்ல ஒரு வேலையும் செய்யாம வீட்டை எப்படி வெச்சிருக்க பாரு.”

“இல்லம்மா.. ஹோம் வொர்க் செய்ய லேட் ஆயிடுச்சு.. அதுமில்லாம ஏழு மணிக்கு போன கரண்ட் இப்போதாம்மா வந்தது..”"இங்க பாரு.. டீப்பாய் எந்த இடத்துல இருக்குன்னு.. ஏன் இப்படி நடுக்கூடத்துக்கு வந்துது?""இல்லம்மா, கரண்ட் போனப்ப எமர்ஜன்சி லைட்-கிட்ட வெச்சு எழுதறதுக்காக நான்தான் தள்ளி வெச்சேன்""ஐயோ... என்னடி இது டிரெஸ்ஸை கழ்ட்டி வாஷிங் மிஷின்ல போடாம இப்படி பெட் மேல போட்டு வெச்சிருக்க?""இதோ.. எடுத்துப் போட்டுடறேன்மா"உமா ஒவ்வொன்றாகத் திட்ட மீரா பயத்துடனும், நடுக்கத்துடனும் அவள் சொன்ன வேலைகளை செய்து கொண்டே இருந்தாள்.எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. சின்னவள் மேகா எங்கே அடுத்து தனக்கு ஏதாவது திட்டு விழுமோ என்று பரிதாபமாக அக்கா செய்யும் வேலைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.


உடை மாற்றி விட்டு சமையலறைக்குள் போன உமா மீண்டும் "மீரா" என கத்தினாள்.இந்தமுறை மீரா வந்து நின்றபோது அவள் கால்கள் நடுங்கியதை நான் கவனித்தேன்."எ..எ..என்னம்மா" மீராவின் குரல் உடைந்திருந்தது."லஞ்ச் பாக்சைகூட க்ளியர் பண்லியா நீ?""அம்.. அம்மா.. ப்ளீஸ்மா.. ஒரு பத்து நிமிஷம் சோபால உக்காரும்மா. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிடறேன்""போ.. மீரா" வெறுப்புடன் சொல்லிவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு சோபாவில் போய் அமர்ந்த அம்மாவைப் பார்த்து கண்ணில் நீர்வர நின்றுகொண்டிருந்தாள் மீரா."ஏம்ப்பா.. குழ்ந்தையை திட்டற?" நான் வாய் திறந்தேன்."காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கெல்லாம் ரெடி பண்ணிட்டு ஏழு மணிக்கு கிளம்பி வேலைக்குப் போய், நைட் ஒம்பது மணிக்கு வந்து வீடு இந்தக் கோலத்துல இருந்தா நான் பேசாம இருக்கணும். அப்படித்தானே?"நான் ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டேன்.மீரா டிபன் பாக்சை சிங்க்-ல் போட்டுவிட்டு, வீடு முழுவதும் பெருக்கினாள். அம்மாவின் பக்கமே செல்லாமல் அக்கா பின்னாலேயே நடந்து, அவள் கூட்டும் போது, அங்கங்கே இருக்கும் பொருட்களை எடுத்து வைத்து உதவிக் கொண்டிருந்தாள் மேகா.அவள் எல்லா வேலைகளையும் செய்து விட்டு சோபாவில் கண்மூடிப் படுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் போய்.. "அம்மா.. எழுந்திரும்மா.." என்று எழுப்பினாள். உமா எழுந்து சமையலறை சென்றுவிட, தனியாக நின்று கொண்டிருந்த மீராவை என்னருகில் அழைத்து அமரச் சொன்னேன்."ஏன் குட்டிம்மா.. எப்பவுமே அம்மாகிட்ட எவ்ளோ நல்ல பேர் வாங்குவ.. இன்னைக்கு ஏன் இப்படி திட்டு வாங்கற?"நான் கேட்டதை கவனிக்காமல் அவள் கண்கள் எங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.. அவள் கண்கள் பார்த்த திசையை நோக்கினேன்..ஒரு பட்டாம்பூச்சி வீடு முழுவதும் சுற்றுவதும், ட்யூப்லைட்-ல் அமர்வதுமாய் விளையாடிக் கொண்டிருந்தது."மீரா" நான் அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயற்சித்தேன்.."என்னப்பா"


"ஏன்ப்பா இப்படி அம்மாகிட்ட திட்டு வாங்கிக்கற-ன்னு கேட்டேன்"

"இல்லப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு, ட்யூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் இதெல்லாம் பண்ணீடுவேன். இன்னைக்கு என்னாச்சுன்னா.." சொல்லிக் கொண்டே வந்தவள் திடீரென கண்கள் விரிய..


"மேகா.. மேகா. அங்க பாரு அந்த பட்டர்ப்ளை உன்னோட ஸ்கூல்பேக்-ல உக்காந்துடுச்சு"


"ஐ!" - மேகா உற்சாகமானாள்.


"இன்னைக்கு என்னாச்சு? என்னமோ சொல்ல வந்த?"


"இதோ.. இந்த பட்டர்ப்ளை இருக்குல்லப்பா.. அது வீட்டு முழுக்க பறந்துட்டு இருந்ததுப்பா.. அதப் பார்த்துட்டு இருந்ததுல பண்ணாம விட்டுட்டேன்ப்பா.. அதுக்கப்புறம் கரண்ட் வேற போச்சா.. பண்ண முடியல" என்றவள்...


"ஐ! மேகா.. இப்போ அது உள்ள போகுது.. என்னோட பேக்-ல உக்காருதா-ன்னு பாக்கலாம் வா" என்று எழுந்து ஓடினாள்.


எனக்கு பேச்சே வரவில்லை.

***********************

# வழக்கம் போல பதிவுகள் எழுதாததால், வழக்கம்போல இது ஒரு மீள்பதிவு.

# வழக்கம்போல பதிவுகள் நாளை வரலாம். அல்லது வழக்கம்போல வராமல் போகலாம். வழக்கம்போல வந்தாலும், அது வழக்கம்போல இல்லாமல் சற்றே சிறப்பாக இருந்தால் நலமென்பதால், வழக்கம்போல எழுதாமல் காலதாமதமாகிறது!


**************************

.

Tuesday, October 13, 2009

வண்ணங்களில் சில எண்ணங்கள்

கருப்பு: கண்டனம். ஜ்யோவராம் சுந்தர் மீது நடந்த வன்முறைக்கு. இங்கே நான் வன்முறை எனக் குறிப்பிடுவது அவர் மூக்கில் விழுந்த குத்தை அல்ல. அந்தக் குத்து விடுமுன் அழைக்கப்பட்டு நம்பிக்கையோடு திரும்பினாரே, அந்த நம்பிக்கையை ரோசா வசந்த் சிதைத்ததுதான் மிகப் பெரிய வன்முறை. ‘எனக்கு உங்களுடைய ஒரு கருத்தில் உடன்பாடில்லை ஜ்யோவ். வாருங்கள் சண்டையிடலாம்’ என்றே அழைத்திருக்கலாம். எழுத்திற்காக மூக்கில் அடிவாங்க நேருமென்றால் எழுத்தாளர்கள் எல்லாருமே ப்ளாஸ்திரி சுற்றப்பட்ட மூக்கோடுதான் இருக்க வேண்டிவரும். ‘உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன்.

சிகப்பு: வன்முறை. மீண்டும் போன பாராவின் டாபிக்கே வருகிறது. வேண்டாம். சிகப்பு - ரத்தம். ம்ஹூம். மறுபடி அங்கேயே போகிறது விஷயம்.
ம்ம்ம்ம்....

உறவினர் ஒருவரின் சிகிட்சை காரணமாக மருத்துவமனை செல்ல நேர்ந்தது. அப்போது அவசர சிகிட்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரக்சரில் கொண்டு வரப்பட்டார் ஒரு இளைஞர். தலைமுழுக்க வறுமையின் நிறம் சூழந்திருந்தது. பைக் விபத்து. எப்போதுமே ஹெல்மெட் போடுவாராம். அன்றும் போட்டிருந்தாராம். ‘அப்புறம் எப்படி?’ என விசாரிக்கையில், ஹெல்மெட்டின் பட்டியை (STRAP) போட மாட்டாராம். எதிரில் வந்த காரால் எகிறி அடிக்கப்பட்டதில் பத்தடி உய்ரத்தில் பறந்தபோது ஹெல்மெட் கழன்று எங்கோ விழுந்திருக்கிறது. எத்தனையோ நண்பர்களுக்கு இதை நான் சொல்லியிருக்கிறேன். அன்றைக்கு, அதுவும் அத்தனை ரத்தத்தோடு அந்த இளைஞனைப் பார்த்த பிறகு இதனைக் கேள்விப்பட்டதும் அவனது அஜாக்கிரதைக்காக மனதுக்குள் அவனைத் திட்டினேன். Get well soon buddy!

பச்சை: பசுமை. மரங்கள். இயற்கையின் காதலன் நான். எங்கே மரம் வெட்டப்பட்டாலும் என் மனம் அழும். எங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஒரு மரம் வெட்டப்பட்டது. வேறு எந்த வழியுமில்லாமல் போனது. அன்றைக்கு முழுதுமே ஏதோ கொலையாளி போல என்னை நானே உணர்ந்தேன். பிராயச்சித்தமாக குறைந்தது ஐந்து மரங்களையாவது நட எண்ணம். நிச்சயம் செய்வேன்.

நீலம்: அன்பு. என் இப்போதைய அன்பை ஆதிமூலகிருஷ்ணனுக்கு அளிக்கிறேன். வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. அந்த விஷயத்தில் ஆதியின் சிரமத்தை நானும் அறிவேன். அதையெல்லாம் மீறி நேரமொதுக்கி என்னை வரைந்து பரிசளித்த அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தவிரவும், ஒருவன் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள எவ்வளவும் சலிக்க மாட்டான். தன்னைத் தவிர, தன்னை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது தான் நேசிக்கும் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல அந்தப் படத்தை வரையும் வரை அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் என்பதைவிடவும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆதி... உங்கள் திறமைக்கும், அன்பிற்கும்..... I LOVE YOU DA!

மஞ்சள்: எச்சரிக்கை. நாட்டை செல்ஃபோன் வியாதி மிகத் தீவிரமாக பற்றிக் கொண்டு வருகிறது. ஒரு ஃபோன் என்பதைத் தாண்டி, இரண்டு ஃபோன்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. (அதில் ஒன்று டபுள் சிம் ஃபோன்!) பொது இடத்தில் புகைக்கத் தடை இருப்பதுபோல (இருக்கிறதுதானே?) செல்ஃபோன் பேசவும் தடைவிதிக்கலாம். விதிக்கும் காலம் வரலாம். அத்தனை உரக்கக் காதலிக்கிறார்கள் ஃபோனில். அத்தனை உரக்கச் சிரிக்கிறார்கள். அத்தனை உரக்க உரையாடுகிறார்கள். அத்தனை உரக்கக் கட்டளையிடுகிறார்கள். அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது. அவர்களின் வெட்கம் என்னைப் பற்றிக் கொள்கிறது. மருத்துவமனையில் சிலரின் வேதனை முகங்களுக்கு நடுவே, அவர்களின் சிரிப்பொலி எனக்கு எரிச்சலைத் தருகிறது. அவர்கள் வீட்டு சாம்பாரில் என்ன காயென்று எனக்குத் தெரிகிறது. அவர்களின் கோவம் என்னை நடுங்கச் செய்கிறது. அவர்களின் கட்டளை என்னையும் செலுத்துகிறது. அவர்களுக்கு நடுவே, அலைபேசியை மௌனித்து வைத்திருக்கும் நான் அந்நியனாகிறேன். என்னிடம் அலைபேசி இல்லையென்று அவர்கள் நினைப்பார்களோ, அப்படி இருப்பது கௌரவக்குறைவோ எனும் பேதமை எண்ணம் என்னைச் செலுத்த, வெறுமனே எடுத்துப் பேசுகிறேன். கத்துகிறேன். சிரிக்கிறேன். தொலைக்காட்சியை இடியட் பாக்ஸ் என்கிறீர்கள். அதன் அப்பனுக்கு அப்பனை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு திரிகிறோம். உபயோகிக்கும் முறை தவறி. உடனடியாக எல்லாரும் அலைபேசி சாத்தானிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Be Alert!

வெண்மை: அமைதி. ஒன்றுமே எழுதாமல் அமைதியாகவே இருக்கிறேன். விட்டால், எதையும் பேசாமல் ரொம்பவும் அமைதியாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசை எனக்கும்கூட கொடுத்துவிடுவார்கள் என்பதால் இதை எழுதுகிறேன். வெண்மை சமாதானத்திற்கும் அடையாளமாகச் சொல்வார்கள். பதிவுலகின் சண்டைகளும், பொறாமைகளும், சமாதானமடைய என்னை நானே வேண்டிக் கொள்கிறேன். அதை நோக்கி அனைவரும் செயல்படலாம். ஆதிமூலகிருஷ்ணன் ஒன்றை ஆரம்பித்தது போல, எல்லாரும் பகைமைகளை, வேதனைகளை மறக்கச் செய்ய ஏதாவது எழுதி, நம்மை படிக்க மட்டுமே வரும் இணைய வாசகர்களை ஆற்றுப்படுத்தலாம். Let’s Make it Happen!.

Wednesday, October 7, 2009

ரஜினியின் எந்திரன் படப் பாடல்கள் – ஒரு இசை ரசிகன் பார்வையில்


மூணாறு அல்லது வால்பாறை.. சரியாக ஞாபகமில்லை. இதில் ஏதோ ஒரு ஊரில் நண்பர்களோடு சுற்றுலாவில் இருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு கடையிலிருந்து அந்தப் பாடல் கேட்டது...

“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலுந்தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நல்லவங்க பேச்சுக்காரன்
நல்லாப்பாடும் பாட்டுக்காரன்...”

எங்களை அந்த இடத்திலேயே நிற்க வைத்து, அந்தக் கடைக்காரரிடம் விசாரிக்க வைத்தது அந்தப் பாடல்.

“பாட்ஷாவாணு. ரஜினி ரஜினிதன்னே. எந்தா ஒரு ஸ்பீடு ஈ பாட்டில” என்றவாறு அந்த மலையாளத்துக்காரர் இசையமைத்த தேவாவை விடுத்து ரஜினியைப் பாராட்டினார். அன்றைக்குத்தான் கேசட் ரிலீஸாகி இருந்தது. தனது அடையாளத்தை மறைத்து சூப்பர் ஸ்டாரை மனதில் கொண்டுவந்த தேவா ஜெயிச்சுட்டாருடா என்று பேசிக்கொண்டோம் நாங்கள். அந்தப் படத்தில் இந்த ஒரு பாடல்தவிர 'பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' என்ற எஸ்.பி.பியின் சிம்மகர்ஜனையில் வரும் பிட் பாடல் மனதைக் கவர்ந்தது. மற்றபடி அழகு அழகு, தங்கமகன் இன்று, ஸ்டைலு ஸ்டைலுதான் போன்ற பாடலுக்கெல்லாம் கிடைத்தது படத்தாலான ஹிட்டே தவிர... பாடலுக்கான ஹிட் ஆகவில்லை. எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ ஓரளவு ஹிட்டானது என்றே சொல்லவேண்டும்.

(ஆட்டோக்காரன் பாடலில் வரும் அஜக்குன்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான் ‘அர்த்தமற்ற வரிகள்’ என்று சர்ச்சைக்குள்ளானபோது லியோனி சொன்னார். ‘அர்த்தமற்றதுன்னு சொல்லக்கூடாது, அதான் அவரே அர்த்தம் சொல்லீட்டாரே.. அஜக்குன்னா – அஜக்குதான். குமுக்குன்னா – குமுக்குதான்!’)

அடுத்த படம் முத்து. நான் பெங்களூரில் இருந்தேன் ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலாக தலைவருக்கு இசை. சொதப்புவாரோ என்று பயந்துகொண்டே இருந்தோம். (லேட்டாக 2002ல் சொதப்பினார்!). கேசட் வந்த அன்று காலை வாங்கி, அண்ணனின் வாக்மேனில் கேட்டபோது இரண்டாவது பாட்டை கேட்கவே முடியாமல் அந்த ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாட்டையே திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். குலுவாலிலேயும், கொக்கு சைவக் கொக்கும், பிட் சாங்கான விடுகதையாவும் ஏமாற்றவில்லை. அந்தத் தில்லானா தில்லானா! – இந்தப் படத்திற்குப் பிறகுதான் க்ளைமாக்ஸுக்கு முன்னால் இப்படி ரசிகர்களைக் கட்டிப் போட ஒரு பாட்டு வைக்கும் ட்ரெண்டையே கொண்டுவந்ததா? (முரளிகண்ணன் & கேபிள் சங்கர் – ப்ளீஸ் ஹெல்ப்!) என்ன பாட்டு.. என்ன இசை! ஏ.ஆர்.ரகுமானுக்கு சபாஷ் போட வைத்தது!

1995ல் இரண்டே மாத இடைவெளியில் அடுத்தடுத்து வந்து விருந்து படைத்த அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு 1997ல் அருணாச்சலம், 1999ல் படையப்பா. இதில் அருணாச்சலம் படத்தின் ‘அதாண்டா இதாண்டா’ ரஜினிக்காக மட்டுமே ஹிட் ஆனது. ‘சிங்கமொன்று புறப்பட்டதே’வும் அதே மாதிரிதான். மற்றபடி நகுமோ, மாத்தாடு மாத்தாடு, அல்லி அல்லி அனார்கலி எல்லாம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அண்ணாமலை, பாட்ஷாவில் கூட நல்லாப் பண்ணினாரே தேவா.. இப்படி ஏமாத்திட்டாரே’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.

படையப்பாவில் INTRO SONGஆன ‘எம் பேரு படையப்பா’ ஓகே சொல்லவைத்தது. இந்தப் படத்தில் தன்னைவிட ரம்யாகிருஷ்ணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ரஜினி. அவர் எண்ணம் போலவே ஏ.ஆர். ஆரும் ரம்யாகிருஷ்ணன்-ரஜினி பாட்டான 'மின்சாரப் பூவே’ பாடலை மிக அருமையாக அமைத்திருந்தார். மற்ற வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, ஓஹ்ஹோஹோ கிக்கு ஏறுதே பாடல்களும் நன்றாகத்தான் அமைந்திருந்தன என்றாலும் ஏ.ஆர்.ரகுமான் தேவாவின் ஸ்டூடியோவில் உட்காருந்து கம்போஸ் பண்ணியிருப்பாரோ என்பது போல இருந்தது பாடல்கள்.


மூன்று வருடம் கழித்து பாபா(2002). ஏற்கனவே சொன்னதுபோல மண்டை காய வைத்துவிட்டார் ஏ.ஆர். ரகுமான். மாயா மாயா பாடல் மட்டும் ஏதோ பரவாயில்லை ரகம். மற்ற பாடல்கள் – கேட்கவே வேண்டாம்!

அதன் பின் 2005ல் சந்திரமுகி. காய்ந்து கிடந்த ரஜினி படப் பாடல் பிரியர்களை விருந்து வைத்துக் கவர்ந்தார் வித்யாசாகர். தேவுடா தேவுடா, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், அத்திந்தோம் எல்லாமே ஓக்கே என்றாலும் 'ரா ரா சரசகு ராரா' அள்ளிப்போனது பாராட்டுக்களை. சபாஷ் வித்யாசாகர்!

சிவாஜி. இரண்டு வருட இடைவெளி. பல்லேலக்கா பல்லேலக்காவென்று ரஜினி ஸ்பீட் பாடல். அதிரடிக்காரன் மச்சான், சஹாரா சாரல் தூவுதோ, ஒரு கூடை சன்லைட், வாஜி வாஜி என்று ரஜினி ரசிகனை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் பாடல்கள். ஹிட்டா... ஹிட்டில்லையா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

அதன்பின் குசேலன். சொல்வதற்கே ஒன்றுமில்லாத பாடல்கள். பேரின்பப் பேச்சுக்காரன் பாடல் மட்டும் ஓகே ரகம். ஆனால் இரைச்சலால் அந்தப் பாடலும் காணாமல் போனது. சொல்லம்மா சொல்லம்மா நல்ல மெலடி. ஆனால் டைரக்டர் பி.வாசு ஒட்டு மொத்த படத்தையே சொதப்பியதில் இந்தப் பாடல் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஆட்டுக் குட்டியானது!

இதெல்லாம் எதற்குச் சொல்லவருகிறேன். (அதானே)

'ரஜினி படமா என்ன பாட்டு வேணா போடு என்று நினைக்கிறார்களோ’ என்று நினைக்கவைத்து வைக்கிறார்கள் இப்போதெல்லாம். தளபதி வந்தபோது தினமும் விசாரித்து விசாரித்து கேசட் வந்த அன்று முதல் ஆளாய் வாங்கி அந்த ஜாங்குஜக்கு ஜஜக்கு ஜக்கு என்று ஆட்டம் போட்டதும், காட்டுக்குயிலு மனசுக்குள்ள என்று கத்தியதும், சின்னத்தாயவள் என்று உருகியதும்... அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரஜினிக்காக மட்டுமல்ல இசைப் பிரியர்களுக்காகவும் ஹிட்டானதும் யாராவது மறுக்க முடியுமா?

மன்னன், எஜமான், தர்மதுரை, வீரா, ராஜாதிராஜா என்று எல்லா பாடல்களையும் இசைப் பிரியர்களையும் மனதில் வைத்து, ரஜினிக்கும் தக்கவாறு இசையமைத்த காலம் எங்கே போயிற்று?

2010ல் எப்படியும் வரப்போகிறது எந்திரன். ஒன்றிரண்டு பாடல்கள் கம்போஸ் செய்திருக்கலாம். மற்றவற்றிலாவது இதைக் கருத்தில் கொள்வார்களா ஷங்கரும், ரகுமானும், சூப்பர் ஸ்டாரும் - லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் - சன் பிக்சர்ஸும்?

என்னைப் போன்றவர்களுக்கு விருந்தளிப்பார்களா?

பொறுத்திருந்து பார்க்கலாம் – ஸாரி - கேட்கலாம்!

*
நன்றி: முரளிகண்ணன் & டைரக்டர் (கேபிள்) சங்கர்!
*

(இது ஒரு மீள்பதிவு. இன்னும் ஒரு வருஷம் கழிச்சும் எழுதலாம்போல.... அப்பவும் பாடல்கள் வரப்போறதில்ல!)

.

Tuesday, October 6, 2009

கிருஷ்ணகதா 06.10.09

“அன்புள்ள பரிசல்.... வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி என்று அறிந்து கொண்டேன். ஆனால் எழுத்து என்பது வரவே இல்லை. என்ன எழுதினாலும் அது நீங்களெல்லாம் எழுதுவது போல வருவதில்லை” – இந்தக் கருத்துடன் மாதத்திற்கு ஒரு ஆறரை பேரின் (கவனியுங்கள்... லட்சமெல்லாம் இல்லை) மின்னஞ்சல்கள் வந்துவிழுகின்றன.

‘என்னைப்போல எழுதவரவில்லையென்றால் அதற்கு சந்தோஷம்தானே படவேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், எழுத யோசனை கேட்டு வரும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் கதையொன்றுண்டு.

சாமுராய்களின் ஆயுதம் கத்தி. கத்திச்சண்டை வீரனென்று சொல்லிக் கொள்வதில் மிகப் பெருமை கொள்பவர்கள் அவர்கள். சாமுராய் பிரிவைச் சார்ந்த ஒரு பெரிய கத்திச்சண்டை வீரன் இருந்தான். நிக்கிச்சி அவன் பெயர். அவனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் நிக்கிச்சி. இந்த நிக்கிச்சி-2 ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவனுக்கு கத்திசண்டையோ, வேறு கலைகளோ வரவே இல்லை. நிக்கிச்சி மிக வெறுப்பாகி, “நீ என் மகனே இல்லை. போடா” என்று வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

நிக்கிச்சி-2 மிகவும் வருத்தத்துடன், மலையொன்றின் மீதிருந்த பான்சி என்ற வீரரைத் தேடிப்போனான். இந்தச் சண்டை வீரர்கள் ஜென் குருமார்களும் கூட. நிக்கிச்சி-2, பான்சியிடன் சென்று தன் கதையைச் சொன்னதும், அவர் இவனை மூன்றடி நடக்கச் சொன்னார்.

அவன் நடந்ததைப் பார்த்த பான்சி, “மன்னித்து விடு. நீயெல்லாம் வீரனாக வாய்ப்பே இல்லை. புறப்படு இங்கிருந்து” என்றுவிட்டார். நிக்கிச்சி-2 அழமாட்டாத குறையாக அவரது காலில் விழுந்து கெஞ்சினான்.

“உனக்குக் கற்றுத்தர உன் முழு ஆயுளும் தேவைப்படும்” என்றார் பான்சி. ‘அதற்குள் என் தந்தை இறந்து விடுவார். கத்திச்சண்டையில் நான் வீரனாகி அவருக்குக் காட்டவேண்டும்’ என்றான் இவன்.


பான்சி யோசித்து, “சரி.. பத்து வருடங்களில் சொல்லித்தருகிறேன். உன்னை நான் வீரனாக்கும் வரை நான் என்ன சொன்னாலும், செய்தாலும் என்னோடே இருக்க வேண்டும். என் முதல் நிபந்தனை என்ன தெரியுமா?” என்றார். அவனும் ஒப்புக்கொண்டு முதல் நிபந்தனையைக் கேட்டான்.

“இன்றிலிருந்து நீ கத்தியைப் பற்றிப் பேசவே கூடாது. சமையல் வேலை செயது, பாத்திரம் கழுவி பராமரித்துக் கொண்டு இங்கேயே இரு” என்றார். அவனும் ஒப்புக் கொண்டான்.

ஒரு வருடம்.
இரண்டு வருடம்.
மூன்று வருடம்.

கத்தி என்ற பேச்சே இல்லை. ஆனால் நிக்கிச்சி-2 தன் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்தான். ஏன் எதற்கு என்றே கேட்கவில்லை. என்றேனும் ஒரு நாள் குரு தனக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார் என்று நம்பினான்.


பயிற்சிக்காலம் நான்கு வருடங்களைத் தொட்டது.

நிக்கிச்சி-2 பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். பயிற்சிக்கு பயன்படுத்தும் மரத்தாலான வாளோடு வந்த பான்சி, நிக்கிச்சி-2வின் பின்னால் வந்து ஓங்கி அடித்தார். துள்ளி விழுந்தானவன். அவனுக்குள் எதிர்ப்புத்தன்மை உருவானது. ஆனாலும் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. தாவிக் குதித்து மறுபுறம் போனான். மறுபடி அவனைத் தாக்கினார் பான்சி. அப்படியும் இப்படியும் குதித்து, ஓடி கடுமையான காயங்களுடன் தப்பித்தான் நிக்கிச்சி-2.

பிறகு சில நாட்கள் எப்போதும்போலக் கடந்தது. ஒரு நாள் திடீரென்று அதேபோல தன் தாக்குதலை ஆரம்பித்தார் பான்சி. இவ்வாறு அவ்வப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தாக்கத் தொடங்கினார்.

இதனால் எப்போதும் ஒருவித விழிப்புணர்வு நிலையிலேயே இருக்க ஆரம்பித்தான் நிக்கிச்சி-2. ஆறாவது வருடத்தில், திருப்பித் தாக்காவிட்டாலும் பான்சி தாக்குதல் நட்த்துகையில் லாவகமாக விலகிப் போக ஆரம்பித்தான் அவன். ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் என்னென்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான் அவன். ஊருக்கு வந்து தன் தந்தையிடம் கத்திச் சண்டையில் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தான்.


ஆக பயிற்சி என்பது ஆளாளுக்கு மாறுபடும். எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்கும் சாமுராய் போல உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து வந்தீர்களானால் தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். ஒன்றுமில்லாவிட்டால் இன்றைக்கு கவனித்ததையெல்லாம் எழுதி, எதிலுமே எனக்கு எழுத எதுவுமே (எத்தனை எ?) கிடைக்கவில்லையே எனக்கூட எழுதலாம்!

கடைசியாக....

என் நண்பன் ஒருவன் சேலத்தில் இருக்கிறான். சி. கண்ணன். (இதோ இந்தக் கடிதம் பற்றிய பதிவில் அவனைக் குறிப்பிட்டிருக்கிறேன்) அந்தக் கண்ணனை போன மாதம் ஒருநாள் வேறொரு நண்பர் மூலமாக கண்டுபிடித்துவிட்டேன்.

‘நீயெல்லாம் வலைப்பூ எழுத ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்டா’ என்றேன். எப்படி ஆரம்பிக்க என்று கேட்டான்.

“உன் மெய்ல் ஐ.டி. குடு. அதுக்கு விவரமா அனுப்பறேன்”

அவன் கேட்டான்:

“மெய்லா.. அப்டீன்னா? ஸ்பீட் போஸ்ட் மாதிரி ஏதாவதா?”

இவனுக்குத் தேவை வேறுவிதமான பயிற்சி.

.