Showing posts with label அனுபவம். நிகழ்வுகள். Show all posts
Showing posts with label அனுபவம். நிகழ்வுகள். Show all posts

Wednesday, March 9, 2011

பெயர்க்காரணம்

வலையுலகம் ஆரம்பித்த நாட்தொட்டு இருக்கிற தொடர்பதிவுகளில் இந்தப் பெயர்காரணம் தொடர்பதிவு முன்னிலை வகிக்கிறது. பன்னெண்டாயிரத்து நானூத்தி நாப்பேத்தேழாவது தடவையாக ஒரு பிரபல பதிவர் என்னை இந்தத் தொடர்ப்பதிவுக்கு அழைத்தது மட்டுமில்லாமல் ஃபோனில் கன்னா பின்னாவென்று திட்டு வேறு. ‘பெரிய ஆள்ன்னு நெனைப்பு அதுனாலதான் பதிவெழுதலயா’ என்று. ஐய.. அப்படியெல்லாம் இல்லீங் என்று அவரை சமாதானப்படுத்தி வேறு கதைகள் பேசி வைத்தாலும், அவர் அழைத்ததை உதாசினப்படுத்தியது (சி-யா சீ-யா?) தவறுதான்.நம்ம வாழ்க்கை வரலாறை பிச்சுப் பிச்சு அங்கங்கே ஏற்கனவே எழுதி இருக்கறவங்களையெல்லாம் ஏற்கனவே சோதிச்சுட்டதால - புதுசா மறுபடி எதுக்கு எழுதிட்டுன்னு அதையே இங்கன எடுத்துப் போட்டிருக்கேன்..

புட்ச்சுக்கங்க!

________________________

நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்

நான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது! (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்!) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்!

எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....

அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!

பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!

1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல  போஸ்ட்டில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.

போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.

இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.

பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!

நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில். (கொஞ்சம் ஓவர்தான்ல? ஸாரி!)

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!

எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!

என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!

.

Monday, March 22, 2010

காஃபி-பெங்களூர்-செல்வேந்திரன்

பெங்களூர் செல்லும்போது சேலத்தில் ஏறிய பெரிய மனிதருக்கு 45 வயதிருக்கலாம். ஏறியதுமே அமைதியாக படுத்துறங்க ஆரம்பித்தார். பெங்களூர் எட்டுவதற்கு அரைமணி நேரம் முன்னதாக எழுந்தவர் பேச்சுக் கொடுத்தார். காஃபி பிஸினஸ் செய்வதாகச் சொன்னார்.

எனக்கு காஃபி என்றால் கொள்ளை இஷ்டம். நடுவில் 2007 பிப்ரவரியிலிருந்து 2009ன் ஏதோ ஒரு மாதம் வரை காஃபி, டீ எதுவுமே சாப்பிடவில்லை. காரணம் ஏதுமில்லை. காஃபி குடிக்கும் பழக்கத்தை என்னால் விட முடியாதோ என்று ஒரு பயம் வந்தபோது நிறுத்தி, அப்படியெல்லாம் இல்லை என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொள்ள இரண்டரை ஆண்டுகள் ஆனது. மீண்டும் ஆரம்பித்தேன்.

சரி.. சுயபுராணம் போதும். அவர் காஃபி சம்பந்தப்பட்ட தொழில் என்றதும் உற்சாகமாய்ப் பேசினேன். காஃபி பற்றி அவர் சொன்ன சில தகவல்கள்.

இன்ஸ்டண்ட் காஃபி உடம்புக்கு நல்லதே அல்லவாம். ருசியான காஃபி குடிப்பதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள். நரசுஸ் ஒரு உதாரணம் என்றார். கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் காஃபி சாப்பிடுங்கள் என்றார். காரணம், காஃபி மிஷன் சூடாக சூடாகத்தான் சுவைமிக்க காஃபி உருவாகும் எனவும், கூட்டம் அதிகமென்றால் மிஷின் இயங்கிக் கொண்டே இருக்கும் எனவும் சொன்னார்.

உலகத்திலேயே இத்தாலிதான் காஃபி பிரியர்களின் சொர்க்கம் என்றார். இத்தாலியில் ஒரு கடைக்கு, கடை திறக்கும்போது சென்றாராம். மிஷினை சூடாக்குவதற்காக 30, 35 காஃபிகளை உருவாக்கி அதை வெறுமனே கொட்டி, பிறகுதான் இவருக்கு காஃபி கொடுத்தார்களாம்.

இத்தாலியின் LAVAZZA காஃபிதான் சுவை மிகுந்தது என்றார். (BARISTA விடம் தான் அதற்கான உரிமம் இருக்கிறது)

கண்டோண்ட்மெண்டில் இறங்கியவருடன் பேச்சுக் கொடுத்தபடியே அவர் வீட்டுக்குப் போய் காஃபி சாப்பிடும் திட்டம் இருந்தது. இறங்கித் திரும்பி ஒரு ஃபிகரைப் பார்க்கும் இடைவெளியில் எஸ்கேப்பாகி விட்டார்.

*************************************************

சீதோஷ்ண நிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரின் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வால்மார்ட், நைகி உட்பட பிரபலமான பல ப்ராண்டுகளின் கூட்டு முயற்சியில் உருவான Environment, Health & Safety Summit 2010 க்கு சென்றிருந்தேன். ‘ஒருமுறை துணியை வாஷிங் மிஷினில் போட்டெடுக்க 65 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறீர்கள் தெரியுமா’ என்பது போன்ற பலதும் பேசி எதிர்காலத்தைக் குறித்த பயத்தை விதைத்துக் கொண்டிருந்தனர். ஏதாச்சும் செய்யணுமே என்ற உந்துதல் எல்லாரிடமும் விதைக்கப்பட்டது. மேஜையில் வைக்கப்பட்ட சாக்லெட் பேப்பரை, பிரித்து கவரைக் கீழே போடாமல் சாக்லெட் சாப்பிட்டு, நாசூக்காக கைகள் குலுக்கி, புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டிருந்த மனிதர்கள் உலகமெங்கிலுமிருந்தும் வந்திருந்தனர். மெய்ல்களில் விரல்கள் மூலம் சந்தித்தவர்களின் முகங்களைப் பார்க்கும் ஆவல் எல்லோரிடமும் இருந்தது. ‘ஓ.. நீங்கதானா அது?’ என்ற குரலை எல்லா பாஷைகளிலும் கேட்க முடிந்தது. இரண்டு நாட்களிலும் எல்லார் குரலிலும் மென்மையும் நளினமும் தவழ்ந்தது.

அங்கு வந்திருந்த நான்கைந்து பேரையாவது, MG ரோடில் ஏதாவது ஒரு பப்பில் சந்திக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை.

**********************

பட்டிக்காட்டான் என்றெழுதும் திருஞானசம்பந்தம், மற்றும் பதிவுகள் படிக்க மட்டுமே செய்யும் கோபிநாத் இருவரையும் அங்கே சந்தித்தேன். திருவை வலுக்கட்டாயமாக FORUM Shopping Mallக்கு அழைத்துச் செல்லச் சொல்லி வன்முறை செய்தேன். இம்மியளவும் புன்னகை மாறாமல் அழைத்துச் சென்றார். என்னை விட்டுவிட்டு அவர் அறைக்குச் செல்ல நள்ளிரவாவது ஆகியிருக்கும். அடுத்த நாள் அதிகாலை எழுந்து பெங்களூரின் ட்ராஃபிக்கில் ஊர்ந்து அவர் ஆஃபீஸ் செல்ல வேண்டும். பாவம். அன்புதான் மிகப் பெரிய வன்முறை!

அடுத்த நாள் மாட்டியவர் கோபிநாத். தேவனின் மாலதி கதை முதற்கொண்டு வீட்டில் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாராம். ‘நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்’ என்றார் என்னைப் பற்றித்தெரியாமல். இலவசப் புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருப்பேனா நான்?

தனது காரில் பெங்களூரை இரண்டே மணிநேரத்தில் சுற்றிக் காட்டினார். வியப்பாக இருந்தது.

இறங்கும்போது, என் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் கேட்டார். அவர் பாக்கெட்டில் இருந்த பேனாவையே உரிமையோடு எடுத்து கையொப்பமிட்டேன்.

‘நல்லாருக்கே பேனா?’ என்றேன் லவட்டும் நோக்கில்.

‘அது யு.எஸ். போனப்ப ஒரு கொழுப்புல வாங்கினது’ என்றார்.

ரொம்பவும் வெய்ட்டாக இருந்தது. ‘3000 ரூவா இருக்கும்போல’ என்றேன். அதிகமாகவே சொல்லிவைப்போமே என்று.

‘இல்லைங்க.. பதினாலாயிரம்’ என்றார்.

என் வாழ்க்கையில் பதினாலாயிரம் ரூபாய்ப் பேனாவைத் தொட்டு எழுதிய பேறைத் தந்தமைக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன்.

******************************************


‘என்னங்க செல்வேந்திரன் இப்படி எழுதிட்டாரு’ என்று எனக்கும் ‘நீங்க சொன்னது கரெக்ட் செல்வா.. சரியா எழுதிருக்கீங்க’ என்று செல்வாவுக்கும் ஃபோன் கால்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அப்படிச் சொல்வது ஒரே ஆட்கள்தானா என்பதை நானும் செல்வாவும் பகிர்ந்து கொள்வதில்லை.

நண்பன் லக்கிலுக்கைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. இதோ அவர் ஒருமுறை எழுதிய பதிவு:

“ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.


ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?


எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.”


எழுதியபின் ஆசிரியன் செத்துவிடுகிறான்.. அதுசரி.. உன்னோடதப் படிச்சா வாசகன் சாவறானேய்யா என்று கேட்பீர்களானால்....

ஹி...ஹி...ஹி...



.

Friday, October 30, 2009

ஒன்... டூ... த்ரீ...

தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன். திருப்பூரின் சாலைவழி ஒன்றில் அலுவலக நண்பரோடு காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த சாலையில் இன்னும் டிவைடர்கள் போடப்படவில்லை. தீபாவளி நெரிசல். வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. திடீரென பயணிகள் யாருமில்லாத கல்லூரிப் பேருந்து ஒன்று வலதுபுறமாக - வாகனம் எதிரில் வரும் பாதையில் நுழைந்து - முந்திச் செல்லப் பார்த்தது. அதற்குள் எதிரில் தனியார் பேருந்து ஒன்றும் வரவே, சடாரென அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலானது சரியாக.

போக்குவரத்து சரியாவதற்கு சற்று முன், நான் இறங்கி அந்த அத்துமீறிய பேருந்தில் ஏறினேன். நேரே டிரைவரிடம் சென்றேன். டிரைவர் சுற்றியிருப்பவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், எப்படியாவது முந்தி தன் வாகனத்தை நுழைப்பதில் மும்மரமாக இருந்தார். அருகில் இன்னொருவர் இருந்தார். இருவரையும் பார்த்த நான் “R.T.O. கார் பின்னாடி நிக்குது. நீங்க ராங் ரூட்ல உள்ள நுழைஞ்சத பார்த்துட்டாரு அவரு. உங்களை நாளைக்கு ஆர்.டி.ஓ. ஆஃபீஸ்ல வந்து பார்க்கச் சொல்லியிருக்காரு. நம்பரை நோட் பண்ணி வெச்சிருக்காரு. மறக்காமப் போய்ப் பார்த்துடுங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.

பிறகு ஆர்.டி.ஓ ஆஃபீஸில் தெரிந்த நண்பரை அழைத்து அந்த வாகன எண்ணைச் சொல்லி, ‘நாளைக்கு வந்து பார்ப்பாரு' என்று சொல்லிவிட்டேன்.

“அவன் போனா என்னாகப் போகுது? எதுனா சம்திங் வாங்கீட்டு விடுவாங்க. அவ்ளோதான்” என்றார் உடன் வந்த நண்பர்.

“அது இப்ப செஞ்ச தப்புக்கு தண்டனையா இருக்கட்டுமே. இனிமே இந்த மாதிரி ஓவர்டேக் பண்ணும்போது கொஞ்சமாவது யோசிப்பான்ல” என்றேன்.

என்றேன்தான்.... என்றேனே தவிர, எனக்கும் அவன் போன்றவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

’உச்’ கொட்டுவதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்!

*********************************

சமீபத்தில் ஒரு பயணத்தின்போது பார்த்தது.

ஒரு மொபைல் ஃபோன் கடையில் ‘இவ்விடம் குறைந்த விலை சைனா ஃபோன்கள் விற்பனைக்கு உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஐம்பதடி தூரத்தில் (‘அளந்துட்டே போனீங்களா’ன்னு கேட்கப்படாது!) இன்னொரு கடையில் ‘இவ்விடம் விலை குறைந்த சைனா மொபைல்கள் விற்கப்பட மாட்டாது’ என்றெழுதி வைத்திருந்தார்கள்.

‘அசத்தல்டா!’ என்று மனதில் பாராட்டிவிட்டுப் போனேன்.

**************************

நண்பன் ஒருவன் வேலை அவனுக்குத் தெரிந்த நண்பனுக்கு கேட்டு அழைத்திருந்தான். வரச் சொல்லு என்றேன். வந்தான். நான்தான் இண்டர்வ்யூ எடுத்தேன். என்னை அந்த இளைஞன் பார்த்ததில்லை. ஆகையால் வந்து அமர்ந்தவுடனேயே ‘எனக்கு கிருஷ்ணகுமார் சாரைத் தெரியும்’ என்றான். ‘சரி இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு, வழக்கமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவனுக்கு எப்படியாவது கிருஷ்ணகுமாரைப் பார்க்க வேண்டும் என்ற intention இருந்து கொண்டே இருந்தது. அதனால் அவனால் எதற்கும் சரிவர பதில் சொல்ல இயலவில்லை. நானும் ‘நான்தான் நீங்கள் கேட்கும் கிருஷ்ணகுமார்’ என்று சொல்லவும் இல்லை.

யோசித்த நான் இன்னொரு அலுவலக நண்பனை அழைத்து - சொல்லிவைத்து - ‘இவர்தான் கிருஷ்ணகுமார்’ என்று அறிமுகப்படுத்தினேன். இவன் அவருடன் கைகுலுக்கி இன்னார் சொல்லிவிட்டார்’ என்றான். அலுவலக நண்பர் ‘சரி’ என்றுவிட்டு என்னைப் பார்த்து ‘பார்த்து பண்ணுங்க சார்’ என்றுவிட்டு போனார்.

அந்த இளைஞன் பிறகு பதில் சொல்லும்போது கம்ஃபர்டபிளாக உணர்ந்தான். வேலையிலும் சேர்ந்து விட்டான்.

ஒருவாரம் முன்பு என்னை வந்து சந்தித்தான். “சாரி சார்.. நீங்கதான் அவர்னு ரெண்டு நாள் முந்திதான் தெரியும்” என்றான். ‘பரவால்ல.. உனக்கு தகுதி இருந்ததாலதான் சேர்ந்த. ஆனா அன்னைக்கு நான்தான் அதுன்னு தெரிஞ்சா கொஞ்சம் அசால்டா பதில் சொல்லுவன்னுதான் சொல்லல’ என்றேன்.

நான் செய்தது ஒருவிதத்தில் சரி.. இன்னொரு விதத்தில் தவறு.

என்னவென்று யோசியுங்கள்!


.

Friday, July 18, 2008

அவியல் – ஜூலை 18

நேற்று முழுவதும் இணையம் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை! அப்படி ஒன்றிரண்டு முறை வந்தபோதும், இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருந்ததால் பலருக்கும் போய் பின்னூட்டம் போட முடியவில்லை. இதுபற்றி எழுதும் போது, நண்பர் சென்ஷி எனக்கெழுதிய ஒரு மடல் நினைவுக்கு வருகிறது. இதோ அது..


“சில நாட்களாக என்று சொல்ல முடியாமல் பல நாட்களாகவே இணையத்தொல்லை இருந்து வருகிறது.
பதிவை படித்துவிட்டு பின்னூட்டமிட செல்லும்போது இணையத்தொடர்பிலிருந்து பதிவுகள்
விடுபட்டு தன்னிச்சையாக அதிகாரம் புரியும் மோசமான சர்வாதிகாரியின் வாயிலிருந்து
வெளிவரும் சிகரெட் புகைபோல் மாறி மீண்டும் சுயாட்சியை தேடச்சொல்கிறது.

கடினம்தான். பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்லும் அவலநிலை
காதலியை தூர இருந்து ரசிக்கும் மனோபாவம் ஒத்ததை விட அவள் கணவனுடன் செல்லும்
துர்பாக்கியத்தை பெற்றவனாகவே கருதுவேன்.
எனினும்.. கலங்க வேண்டாம்.. கலக்கம்
வேண்டாம். ரோஜாவில் அமர்ந்து தன்னை அழகாக்கிக்கொண்ட அந்த பனித்துளியென்ற
உவமானத்தில்‌ உங்கள் பதிவில் எனது பின்னூட்டம். அந்த முத்து நீர் மொட்டுக்கள் சூரிய
வரவால் காற்றில் கலப்பதுபோல் நானும் என் பின்னூட்ட எழுத்துக்களுடன் உங்களை தேடி
வருவேன். வந்து கொண்டே இருப்பேன்.”

என்னடா இது, இவரு சாதரணமாப் பேசறதே இந்தமாதிரி பின்நவீனத்துவமாகத்தான் இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டேன். என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு எப்போதும் ஏதாவதொரு பதிலை, நன்றியைத் தெரிவிப்பது என் வழக்கம். எத்தனையோ பணிகளுக்கிடையே, நம்மை மதித்து வந்து போகிறார்களே என்ற அன்பில். நேற்று அதுவும் முடியவில்லை. இந்த சென்ஷியின் பதிலை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதோடு நான் என் பின்னூட்டத்திலேயே எழுதிய ஒன்றையும் இங்கே எடுத்து இடுகிறேன்.

இடையறாத பணியினாலும்,
இடையே வந்தபோதெல்லாம்
இடையூறு செய்த
இணையத்தொடர்பாலும்
இடைவிடாது
இங்குவந்து நன்றிசொல்ல
இயலாமைக்கு வருந்துகிறேன்!

---------------

”சுப்பிரமணியபுரம்” படம் பார்த்தேன்! என்ன ஒரு இயல்பான படம்! படத்தில் என்னை மிகக் கவர்ந்தவர் சசிக்குமார்! சச்சினும், சேவாக்கும் ஆடும்போது, சேவாக்கை அடித்து ஆடவிட்டு பார்ட்னர்ஷிப் கொடுத்துக் கொண்டே, சேவாக் அவுட் ஆனால், பிறகு சச்சின் வெளுத்துவாங்குவாரே, அதே போல ஜெய்யை முதலிலிருந்தே அடித்து ஆடவிட்டு, அவர் இறந்ததும் தூள் கிளப்பிவிட்டார்! சசிக்குமார் எந்த ஒரு ஃபிரேமிலும் படம் பார்ப்பவர்களை அவர் ஒரு நடிகரென்று நினைக்காத வண்ணம் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ! அப்புறம் அந்த ஹீரோயின் சுவாதி! எனக்கு நான் சைட்டடித்த பழைய ஃபிகர்களையெல்லாம் ஞாபகத்துவர வைத்துவிட்டார்! (அடுத்த படத்தில் இவரை அரைகுறை ஆடையோடு எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்!)

-------------------------------

சுப்பிரமணியபுரம் படம் பார்க்கும்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு பொறம்போக்கு கதையை சொல்லிக்கொண்டே வந்தான். வேண்டுமென்றே மாற்றி, மாற்றிச் சொன்னான். க்ளைமாக்ஸின் போது எனக்கும் அவனுக்கும் சண்டையாகி விட்டது. கேட்டால் `நான் என் ஃப்ரண்டுகிட்டதான் பேசினேன்.. நீங்க காதைப் பொத்திகிட்டு இருக்கலாம்ல’ என்று வேறு வியாக்கியானம் கொடுத்தான். வேறு சிலரும் எனக்கு சாதகமாகப் பேசியதால் மூடிக்கொண்டு போய்விட்டான். இந்த மாதிரி படத்தை ரசிக்க விடாமல், கதை சொல்லுபவர்களுக்கு பயந்தேதான் முதல் நாளிலேயே படம் பார்க்க விரைவேன்.

டிஸ்கி: என் பைக்கில் பாரதியார் படம் போட்டு `அச்சம் தவிர்’ என்று எழுதி வைத்துள்ளேன். அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.

-----------------------------------

இதுவும் சுப்பிரமணியபுரம் படம் பற்றித்தான். இசை ஜேம்ஸ் வசந்தன்! அருமை! `கண்கள் இரண்டால்’ பாடல் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இது எந்தப் பாடலின் சாயல் என்று தெரிகிறதா?

கவிக்குயில் படத்தில் தலைவர் இளையராஜா இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய `சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ பாடலின் சாயலிருக்கிறதா? ஒருவேளை அந்தப் பாடலின் ராகத்திலேயே (ரீத்திகௌலா) இதுவும் அமைக்கப்பட்டிருக்கிறதோ? தெரியல சாமி!

”சின்னக்கண்ணன் அழைக்கிறான்..
ராதையைப் பூங்கோதையை
அவள் மனக்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி..”

ச்சே! என்னா ஒரு பாட்டு!
---------------------

ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன சைஸ்தான் அழகு! எங்காவது பயணிக்கும்போது, ஈஸியாக எடுத்துச்சென்று படிக்க வசதியாய், கைக்கு அடக்கமாய் இருந்தது. இதுபற்றி பதிவுலக நண்பர் வடகரைவேலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது “அவங்களோட மத்த எல்லா பத்திரிகைகளும் பெரிய சைஸ்லதான் வருது. இதுமட்டும் ச்சின்னதா வர்றதுல டெக்னிக்கலா இழப்பிருக்கு. அதுனால மாத்தீருப்பாங்க” என்றார். ”அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன ஃபார்மெட் தானே?” என்று நான் கேட்பதற்குள் என் அலைபேசியில் பாட்டரி தீர்ந்துவிட்டது! ஆப்செட் ப்ரஸ் வைத்திருக்கும் அவர் இதுபற்றி விளக்குவார்!

--------------------------------------

சென்னை செல்வதற்காக என் கஸின் ப்ரதர் (கிரேசி கிரியின் அண்ணா) திருப்பூர் ரயில் நிலையம் வந்திருந்தார். ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அங்கேயிருந்த ஒரு அறிவிப்பை கவனித்தேன்.
`பயனிகள் கவணிக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

“பாருண்ணா, தமிழை எப்படிக் கொலைபண்ணியிருக்காங்கன்னு” என்று காட்டினேன். அவர் பார்த்துவிட்டுச் சொன்னார்.

“மூணு சுழி ண வரவேண்டிய இடத்துல ரெண்டு சுழி னவும், ரெண்டு சுழி ன வரவேண்டிய இடத்துல மூணு சுழி ண வும் வந்திருக்கறத சொல்றயா?”

“ஆமா”

“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”

சந்தோஷம்! மகிழ்ச்சி!

--------------------------

இன்றைக்கு நான் குறிப்பிடப் போகும் கவிதையும் `எங்கே இந்தக் கவிஞர்கள்’ வரிசையில் வராது. காரணம் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது அடிக்கடி பத்திரிகைகளில் வந்துகொண்டுதானிருக்கிறது. பலமுறை நான் சொன்னதுபோல எனக்கு மிகப் பிடித்த, மிக மிகப் பிடித்த கவிஞர் ரவிசுப்பிரமணியம் அவர்கள் மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இதோ!

மரித்துப் போனது
மனிதமனம்
பக்கத்துவீட்டு
மரணம்
எதிர்வீட்டுத்
திருட்டு
அடுத்தவீட்டுப் பெண்
ஓட்டம்
கோடி வீட்டுத்
தகராறு
நமக்கேன் வம்பு.
கதவை மூடு.


டிஸ்கி: கொஞ்சநாளாக தமிழ்மணத்தை திறக்கவே பயமாயிருக்கிறது!

------------------------