Monday, August 30, 2010

இனிதே நடந்தது வலைப்பதிவர் பட்டறை

நேத்திக்கு சேர்தளம் சார்பா வலைப்பதிவு துவங்கல் சம்பந்தமாக பயிற்சிப் பட்டறை நடத்தறதா அறிவிச்சிருந்தோம். சரியா ரெண்டரை மணிக்கு துவங்கறதா இருந்துச்சு. சேர்தளத்தை சேர்ந்த நாங்க ஒரு அஞ்சாறு பேரு ஒண்ணு ஒண்ணரைக்கெல்லாம் போய் சேர்களை அங்க போட, டேபிள்களை இங்க போட, கொண்டு வந்திருந்த லேப்டாப்களை (ஆமா பன்மைதான். மூணு நாலு பேர் கொண்டு வந்திருந்தாங்க) வெச்சு கனெக்‌ஷன் (இண்டர்நெட் கனெக்‌ஷன்ப்பா) கரெக்டா இருக்கான்னு செக் பண்ணன்னு பிஸியா இருந்தாங்க.. சாமிநாதனும், சொல்லரசன் ஜேம்ஸும், நிகழ்காலத்தில் சிவாவும் செட் பண்ணி வெச்சிருந்த ப்ரொஜக்டருக்கு வெளிச்சம் வராம ஜன்னல்களை அடைக்க-ன்னு பயங்கர முஸ்தீபுகள்ல இறங்கிட்டிருந்தோம். (ஆக்சுவலா பட்டறை நடந்த இடம் மாடி. அதுனால ஏறிகிட்டிருந்தோம்தான் சரி!)

முரளிகுமார் பத்மநாபன் (ஆமா.. இந்த வார விகடன்ல ரெண்டு கவிதை எழுதின கவிஞர்தான்) ரெண்டு மூணு ‘சக்திமுனைஅறிமுகத்தை’ தயார் செய்து வெச்சிருந்தார்.

சக்திமுனை அறிமுகம்? - பவர்பாய்ண்ட்ப்ரசண்டேஷனுக்கு தனித்தனியா தமிழ் தேடினப்ப இதுதாங்க கிடைச்சது. எங்க தலைவர் வெயிலான் சரியான தமிழ்ப் பைத்தியம்க. எல்லாத்துக்கும் தமிழ்லதான் எழுதணும்பாரு. இப்படித்தான் ‘இற்றைப்படுத்துதல்’ன்னு ஒரு வார்த்தையை ப்ரசண்டேஷன்ல எழுதி வெச்சிருந்தார். அந்த இற்றைப்படுத்துதலுக்கு என்ன அர்த்தம்ன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள அது என்னைப் படுத்திடுச்சு! என்னன்னு நீங்க யோசிங்க.. பின்னூட்டத்துல எங்க தலைவர் பதில் சொல்லுவாரு. (அப்பாடா... ஒரு பின்னூட்டம் உறுதி!)

அதும்போக ப்ரசண்டேஷனுக்கு ரெடி பண்ணின எல்லாவற்றையும் ஒரு மென்தகடுல (ஆமா தல.. குறுந்தகடுக்கும் மென்தகடுக்கும் இன்னா டிஃபரண்டு?) போட்டு பல காப்பி எடுத்து வர்ற எல்லாருக்கும் குடுக்க எடுத்து வெச்சிருந்தாரு. வெயிலானும், முரளியும் இவ்வளவெல்லாம் பண்றாங்களேன்னு பார்த்தா அந்தப் பக்கம் ராமன் சேர்தளம் - திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்ன்னு மூணு தட்டி ரெடி பண்ணி வெச்சிருந்தார். அதையெல்லாம் போய் அங்கங்க கட்டி வெச்சுட்டு வந்து உட்கார்ந்தோம். ரெண்டரை மணிக்கு ஒருத்தரையும் காணல.

கரெக்டா கொஞ்ச நேரத்துல கவின்னு ஒருத்தர் வந்தாரு. சென்னைல இருந்து வந்திருக்கறதாகவும், பத்து நிமிஷம் முன்னாடி பேப்பர் பார்த்திட்டிருந்தப்ப அதுல இருந்த செய்தியைப் பார்த்துட்டு பட்டறைக்கு வந்ததாகவும் சொன்னார். (ஆமாம்.. தினமலர்ல இன்றைய நிகழ்வுகள்ல பதிவர் பட்டறை குறித்து வந்திருந்தது)

அப்ப ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரத்துல நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் வந்தாங்க











































அப்படீன்னு எழுத ஆசையாத்தான் இருக்கு. ஆனா அவ்வளவெல்லாம் வரல. உங்ககிட்ட சொல்றதுக்கென்ன? ஒரு பத்து, பதினைந்து புதிய முகங்கள் வந்திருந்தாங்க. திருப்பூர்ல இருந்துட்டே பதிவெழுதற சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகி வந்திருந்து சேர்தளம் கூட்டத்துக்கு வந்த முதல் பெண்மணி-ன்னு வரலாற்றுல அவங்க பேரை வரவெச்சுகிட்டாங்க.

கடலையூர் செல்வம் அருமையான ஒரு இண்ட்ரோ குடுத்தாரு. வலைப்பூன்னா என்ன அதனோட வரலாறு என்னன்னு செம ஃப்ளோவுல பேசினாரு. அதுக்கப்பறம் வலைப்பூ ஆரம்பிக்கறது எப்படி, பின்னூட்டம் போடறது எப்படின்னெல்லாம் பேச ஆரம்பிச்சேன் நான். (கூட்டம் முடிஞ்சப்பறம் - புதுசா ஆரம்பிக்கறவங்களுக்கு தேவையானதையும் தாண்டி கமெண்ட் மாடரேஷன், அனானி கமெண்ட்ஸ், ப்ளாக்கர் செட்டிங்ஸ்ன்னு கொஞ்சம் இழுவையா பேசினதா ஃப்ரெண்ட்ஸ் திட்டினாங்க.. சரி நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கலாம்கன்னேன்)

நடுவுல ப்ரேக் விட்டு கூல்ட்ரிங்ஸ், பிஸ்கெட்டெல்லாம் குடுத்தோம். அதுக்கப்பறம் தமிழ்ல தட்டச்சுவது எப்படின்னு NHM Writerஐப் பத்தி ஒரு விளக்கம் கொடுத்தார் நண்பர் முரளி.

முடிக்கும்போது ஒரு நண்பருக்கு அங்கயே அப்பவே வலைப்பூ ஆரம்பிக்கறது எப்படின்னு டெமோ பண்ணினோம். இதோ வெண்புரவி என்கிற அந்த வலைப்பூ!

எல்லாம் முடிஞ்சப்பறம் தலைவரோட நன்றியுரைக்கப்பறம் வந்திருந்த எல்லாருக்கும் மென்தகடு வழங்கப்பட்டது. எல்லாருமே ஒரு நல்ல மனோபாவத்தோட பாராட்டினாங்க. இந்தத் தொடக்கம் எங்களுக்கு வலைப்பூ தொடங்க பயனுள்ள விஷயங்களோடு இருந்தது. ரெண்டு மூணு மாசம் கழிச்சு வேறு சில சந்தேகங்கள் வரலாம்.. அப்ப ஒரு ஃபாலோ அப் கூட்டம் நடத்தினா நல்லதுன்னு சிலர் கருத்து தெரிவிச்சாங்க. அதைக் கருத்துல எடுத்துட்டோம்.

மொத்தத்துல முதல் முயற்சியான இந்த நிகழ்வுல எதாவது குறைகள் இருந்திருந்தா வந்திருந்தவங்க பொறுத்துக்கணும். ஓரிரு கல்லூரிகள்ல வலைப்பூ சம்பந்தமான பயிற்சியளிக்க அழைச்சிருக்காங்க.. அடுத்தடுத்த மாதங்களில் அதற்கான வேலைகள் நடக்கும். எப்படியும் இந்த வருஷத்துக்குள்ள திருப்பூர்-கோவை-ஈரோட்ல நிறைய பேரை ப்ளாக் ஆரம்பிக்க வைக்காம விடப்போறதில்ல... ஆமா!


பதிவர் பட்டறைக் குறித்து தினமலர் செய்தி:







http://epaper.dinamalar.com/Dm/Coimbatore/2010/08/30/index.shtml


(அதிலிருக்கற கிருஷ்ணமூர்த்தியை, கிருஷ்ணகுமார் என்று திருத்தி வாசிக்கவும்)
.

Thursday, August 26, 2010

சேர்தளம் -அ றி வி ப் பு

அன்பு நண்பர்களே,

புதிய வலைப்பதிவுகள் தொடங்குவது, எழுதுவது, தமிழில் தட்டச்சு செய்வது, படங்கள் இணைப்பது, மற்றும் தமிழ் வலைப்பதிவின் இதர அம்சங்கள் குறித்து சேர்தளம் சார்பில் திருப்பூரில் பயிற்சிப் பட்டறை நடத்தவிருக்கிறோம்.
அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 29 ஆகஸ்டு 2010
ஞாயிறு
நேரம் : 2.30 to 4.30 - மதியம்
இடம் : குமரன் ரோடு,
அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடி,
திருப்பூர்.

தொடர்புக்கு:
முரளிகுமார் பத்மநாபன்: 98433 41223 (murli03@gmail.com)
வெயிலான்: 909 54 79 79 1 (veyilaan.ramesh@gmail.com)
பரிசல்காரன்: 95 66 5432 62 (kbkk007@gmail.com)

*

Wednesday, August 25, 2010

ஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்


(இது ஒரு மீள்பதிவு )

******************************

எனக்கு அவனை பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். இடையில் தொடர்பற்றுப் போனது. இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மீண்டும் அவனோடு பழக்கம்.

அவன் ஒரு குடிகாரனல்லன். ஆனால் அவ்வப்போது குடிப்பான்.

டாஸ்மாக் பார்களைப் பொறுத்தவரை அதன் ஒழுங்கின்மை அவனுக்கு மிகவும் பாதிப்பைத் தரும். ஆனால் ஒரு சில சிறப்பானவைதான்.

பொள்ளாச்சியில் ஒரு டாஸ்மாக் பார். (அப்போது ஏது டாஸ்மாக்? செந்தூர் ஒயின்ஸ் என்று ஞாபகம்) அது அவனுக்கு மிகப் பிடித்தமானது. காரணம் அங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம். இன்று வரை அவனுக்கு அந்த சுகம் வேறெங்கும் கிட்டவில்லை.

சாம்பார் வடை என்றதும் அவனுக்கு வேறொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருமுறை அவன் திண்டுக்கல்லோ, ஒட்டன்சத்திரமோ போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சாம்பார் வடை கேட்டான். சர்வர், “சாம்பார் இருக்கு, வடை இருக்கு. ரெண்டையும் தர்றேன் சாப்பிடுங்க” என்றிருக்கிறான். இவன் “இல்லீங்க உளுந்து வடையை சாம்பார்ல ஊறவெச்சிருப்பாங்க. அதுதான் சாம்பார்வடை” என்றிருக்கிறான். சர்வரோ விடாப்பிடியாய் ‘நான் முப்பது வருஷமா பல ஊர்ல பல ஹோட்டல்ல சர்வர் வேலை பாத்தவன். சாம்பார் வடைன்னு ஒண்ண நான் கேள்விப்பட்டதே இல்ல’ என்றிருக்கிறான். இவனுக்கு கோவம் வந்து வாக்குவாதமாகி, கவுண்டர் ஆசாமி வந்து சமாதானப் படுத்தி.... ப்ச்.. அது தனிக் கதை! (அதுதான் சொல்லீட்டில்ல! அப்பறம் என்ன!!)

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆங்... டாஸ்மாக் பார்களைப் பற்றி...

சென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது். டாஸ்மாக் பார்களில் இருக்கும் எந்தவிதக் கூச்சல், குழப்பமோ, பீடி, சிகரெட் குப்பைகளோ, சர்வரின் அலம்பல்களோ அங்கே பார்க்க முடியவில்லை. ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு பணிவிடை இருந்ததாம். ‘இல்லீன்னா நாங்கல்லாம் இங்க வருவோமா?’ என்று அவன் நண்பர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவனிடம் இதைச் சொன்னபோது நம்பவே இல்லை. 'மொதல்லயே அடிச்சுட்டுப் போயிருப்ப. டாஸ்மாக் பார் ஏ.ஸியாம்... பெரிய ஸ்க்ரீன்ல படமாம்' என்று கிண்டலடித்தான். ஒருமுறை அவனை அங்கே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

கோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.

தனியார் பார்களில் சைட் டிஷ்களுக்கு ஆகும் நேர விரயம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ஒருமுறை நண்பர்களோடு சென்றிருந்தபோது ‘பள்ளிபாளையம்’ என்று அவர்கள் ஆர்டர் செய்தார்கள். ‘அதென்னடா’ என்று விசாரிக்க (நண்பனுக்கு நான்வெஜ் பரிச்சயமில்லை) ‘சிக்கனை அந்த ஊர் ஸ்டைலில் செய்வார்கள்’ என்று பதில் வந்தது. அந்த பள்ளிபாளையம் வர ‘கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருடா’ என்று அவர்கள் சொல்ல இவன் ஸ்போர்க்கால் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு ‘நல்லாத்தான் இருக்கு’ எனச் சொல்ல ‘நீ எடுத்தது தேங்கா. சிக்கனைச் சாப்பிடு’ என்று மிரட்டப் பட்டிருக்கிறான்.

இரண்டாவது முறை அந்த பள்ளிபாளையத்தை ஆர்டர் செய்து அரை மணிநேரம் கழித்து வந்தபோது உப்பு அதிகம் என்று சொல்லி திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட அந்த பள்ளிபாளையம் அதே ப்ளேட்டில் கொஞ்சம் சூடுசெய்யப் பட்டு எந்த மாறுதலுமின்றி வந்தபோது ‘ஆங்.. இது ஓக்கே’ என்று நண்பர்களால் பாராட்டப் பட்டு உட்கொள்ளப் பட்டபோது இவன் எந்த வித்தியாசமுமறியாமல் சர்வரைக் கேட்டபோது ‘மாஸ்டர் கால்மணிநேரம் கழிச்சு இதையே குடுன்னு குடுத்தார். மப்பு ஏறியிருக்கும்ல.. அதான் ஒண்ணும் வித்தியாசம் தெரியல’ எனச் சொல்லப்பட்டான்.

அவனை நான் மதிக்கக் காரணம் குடித்துவிட்டு உளறவோ, கூத்தடிக்கவோ அவனுக்குத் தெரியாது. அதிக பட்சம் அவன் குடித்துவிட்டுச் செய்யும் கொடுமை என்னோடு பேசிக் கொண்டிருப்பதுதான்.

“டேய்.. நீ பெரிய எழுத்தாளனாடா?”

எனக்கு பகீர் என்றாகும். எழுத்தாளன் என்பதே பெரிசு. இதில் பெரிய எழுத்தாளன் வேறா.. அடக் கடவுளே....

“எழுத்தாளன்னெல்லாம் இல்லடா. ஏதோ கிறுக்கீட்டிருக்கேன்”

“அப்ப நான் சொல்றத எழுதுடா”

“சொல்லு”

“நேத்து என் கம்பெனில ஒரு நாதாரி என்ன பண்ணினான் தெரியுமா?”

“தெரியாது... சொல்லு”

“அவனுக்குக் கீழ வேலை பாக்கற ஒரு பொண்ணுக்கு ஒடம்பு சரியில்ல. காய்ச்சல்-ன்னு லீவு கேட்டிருக்கு. இவன் வேணும்னே அவ கழுத்துல கை வெச்சுப் பார்த்து, ‘காய்ச்சலெல்லாம் இல்லியே’ ன்னுருக்கான்.அதுக்கு அந்தப் பொண்ணு ‘உள் காய்ச்சல் இருக்குங்க’னிருக்கு. அதுக்கு இந்தக் கம்மனாட்டி என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?”

“...........”

“’உள் காய்ச்சல்ன்னா.. உள்ள கை வெச்சுப்பார்க்கவா’ ன்னிருக்கான்”

“அவனைச் செருப்புல அடிக்கலியா நீ?”

“எனக்கு மேல வேலை செய்யற நாயி அவன். ஒண்ணும் பண்ண முடியல. இப்படித்தான் போன மாசம் என்னாச்சுன்னா..”


இப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.


அது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்..


*

Tuesday, August 24, 2010

அவியல் 24.08.2010

ஒரு விழாவிற்கு குடும்பத்தோடு சென்றிருக்கிறார் நண்பர் அப்துல்லா. அவரது மனைவியிடம் யாரோ ‘உங்களுக்கு ரெண்டுமே மகளாமே? மகன் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார்கள். நம் அப்துல்லா சும்மா இருப்பாரா? ‘அவங்களுக்காவது ரெண்டு பொண்ணுங்களோட ஒரு பையனும் இருக்கான்.. எனக்கு மூணுமே பொண்ணுங்க’ என்றாராம் மனைவியின் தோளைப் பிடித்தபடி.

சமீபத்தில் நான் மிக மிக ரசித்த விஷயம் அவரது இந்தப் பதில்.

****************************************

ரோபோ இந்தி இசைவெளியீடு. ரஜினியின் பேச்சைப் பாருங்கள். தன்னைப் பற்றித் தானே எப்படி கமெண்ட் அடித்துக் கொள்கிறார் என்று கவனியுங்கள்.. கொஞ்சம் சிரத்தையாக கவனித்தால் சூப்பர் ஸ்டார் ஏன் ஸ்டைல் மன்னன் என்பதும் தெரியும்...





இதில் ஸ்டைலுக்கு எங்கே விளக்கம் என்று கேட்கிறீர்களா? ‘நான்’ என்பதைச் சுட்டிக் காட்ட நீங்கள் எப்படி கைகாட்டிக் கொள்வீர்கள்? ஒரு அரைநிமிடம் யோசியுங்கள்.

யோசிச்சாச்சா? சரி... இதில் 2.12 நிமிடத்தில் ரஜினி ‘நான்தான் ஹீரோ’ எனும்போது எப்படி அவர் கை காட்டிக் கொள்கிறார் என்று மீண்டும் கவனியுங்கள்.

படையப்பாவில் கே.எஸ்.ரவிகுமார் எழுதியது மெத்தச் சரி: ஸ்டைல் இவரது ரத்தத்திலேயே இருக்கிறது!

*****************************************

செல்வா என்றொரு பதிவர் இருக்கிறார். என் நண்பன். நாள்தவறாமல் - தினமும் - ஒரு மொக்கையை எஸ்ஸெம்மெஸ் அனுப்பும் நண்பன். ரொம்பவும் வெறுப்பில் இருக்கும்போது இவன் அனுப்பும் எஸ்ஸெம்மெஸ் ஆறுதல் தரும்.

இரண்டு நாள் முன்பு இவன் அனுப்பிய ஒரு கேள்வி மண்டையைக் குழப்பியது. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்:

‘இந்தத் தவளை இருக்குல்ல தவளை.. அது உட்கார்ந்திருக்கா.. நின்னுகிட்டிருக்கா.. இல்ல படுத்துட்டிருக்கா? இதுல ஏதோ ஒண்ணுதான் பதில்ன்னா அதோட மத்த ரெண்டு வடிவத்தோட போஸ் எப்படி இருக்கும்?’

ஹையோ... ஹையோ!!

**********************************************

நான் மகான் அல்ல படத்துக்குப் போனப்ப பாஸ் என்கிற பாஸ்கரன், மங்காத்தா மற்றும் கீழ இருக்கற படத்தோட -ன்னு மூணு ட்ரெய்லர் போட்டாங்க. அதுல அனானிமஸா எல்லாராலும் ரசிக்கப்பட்டது இந்தப் படத்தோட ட்ரெய்லர்தான்:


படம் பேரு: ‘வ க்வாட்டர் கட்டிங்’ (எழுத்துப் பிழையெல்லாம் இல்லை. வ - க்வாட்டர் கட்டிங்தான் பேரு) ஆண்டவா வரி கிரின்னுட்டு பேரை மாத்தாம இருக்கணுமே..

அதுல வ-வுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியல. ஆனா ரகளையா இருக்கு ட்ரெய்லர். நீங்களே பாருங்க...




இந்த ட்ரெய்லர் பார்க்கறப்ப எனக்கு கார்க்கியும், வெண்பூவும் நினைவுக்கு வந்தாங்க.. கார்க்கி ஏன்னு சிவா எண்ட்ரி பார்த்தா உங்களுக்கு தெரியும். (சிவா 1:26ல கேட்கற கேள்வியும் மாடுலேஷனும் செம!)

வெண்பூ ஏன்-னா, எஸ்பி சரணைப் பார்த்தா எனக்கு வெண்பூ ஞாபகம் வரும். பாடி சைஸும், பாடி லேங்க்வேஜும் ஒரு காரணம். அதுவும் இதுல சரண் 1:47 நிமிஷத்துல சொல்றதப் பார்த்தா கன்ஃபர்மா இனி எஸ்பிசரண்னா வெண்பூ ஞாபகம்தான் வரும்!

*******************

என்னைக் கவர்ந்த கவிதை:

யாரென்று தெரியாது
சிரித்து விட்டுப் போனாய்

குளுமை குளுமை

உனக்குத் தெரிந்திருக்கலாம்

சூழலுக்கு அர்த்தமூட்ட
இப்படித்தான்
கற்றுப் பழக வேணும்
சிரிப்பை

வாய்ப்பு நேர்ந்தால்
அடுத்தமுறை சந்திக்கும்போது

நான் சிரிப்பேன்
முதலில்

-ரவி சுப்பிரமணியன்


*

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல

ஒரு சினிமாவுக்குப் போனா நான் ஒரு சாதாரண பார்வையாளன். எனக்கு மாஸான வேட்டைக்காரனும் பிடிக்கும். க்ளாஸான மொழியும் பிடிக்கும். மொத்தத்துல ஏதாவது ஒரு தாக்கம் அந்தப் படம் எனக்குத் தரணும் அவ்வளவே..

நான் மகான் அல்ல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். சந்தேகமே இல்லை. படத்தின் நாயகனான ஜீவா (கார்த்தி) எதைப் பற்றிய கவலை, சிந்தனைகளென்று ஏதுமில்லாத சாதாரணன். குடித்து விட்டு வண்டி ஓட்டி போலீஸைப் பார்த்து ‘நியூ இயர் மாமே....’ அன்று அலப்பறை செய்கிறவனாய்த்தான் அவரது எண்ட்ரியே வருகிறது. சமுதாயச் சீர்கேடு, நாட்டு முன்னேற்றம் என்ற எந்த ஜல்லியும் அடிக்கவில்லை அவன். அதே போல வீடு பற்றிய கவலையும் இல்லை. வேலையில்லாமல் சுற்றித் திரிகிறான். அதற்காக சில படங்களில் காட்டியதுபோல சுத்தமாக பொறுப்பற்றவனுமல்ல. தேவை வரும்போது அதற்குண்டான முயற்சியை எடுப்பவனாகத்தான் இருக்கிறான். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கு சுசீந்திரனுக்குப் பாராட்டுகள்.

இப்படியான ஒருவனது தந்தை, நகரில் நடக்கும் இரட்டைக் கொலை ஒன்றின் சாட்சியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் – அந்தக் கும்பலால் கொல்லப்பட, இவன் எப்படி பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை. தன் தந்தைக்காக என்று மட்டுமில்லாமல் சமுதாயத்துக்காகவும்தான் என்று சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

முதல்பாதி – நேரம் போவதே தெரியவில்லை. அவ்வளவு கலகலப்பு. என்னடா இது ட்ரெய்லரில் வயலண்டான படமாகக் காட்டினார்களே.. இவ்வளவு ஜாலியாகப் போகிறதே என்றுதான் நினைக்க வைக்கிறது. ஆனாலும் அந்தக் கல்லூரிக் கும்பலைக் காட்டும்போதெல்லாம் கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்குகிறது.

இரண்டாம் பாதியில் திரைக்கதை விறுவிறுப்பாகிறது. பின் வழக்கமான முடிவு.

காஜல் அகர்வாலை எனக்குப் பிடிக்கவில்லை. படத்தில் அவருக்கும் வேலையொன்றும் இல்லை. அவர் அப்பா மூலம் அந்த தாதா அறிமுகமாகிறார் என்பதற்கும், முதல் பாதி கலகலப்புக்கும் மட்டுமே காஜலின் காதல் உதவியிருக்கிறது.

முதல்பாதியின் கலகலப்புக்கு (இதோட மூணாவது தடவை இதைச் சொல்லிட்டேன்) 90% பங்கு பாஸ்கர்சக்தியின் வசனங்கள். வாய்ப்பே இல்லை..! பின்னியிருக்கிறார் மனுஷன். எல்லாமே நண்பர்களுக்குள் சடார் சடாரென்று அள்ளிவிடும் வசனத் துணுக்குகள் என்றாலும் தியேட்டரில் பல வசனங்களுக்கு க்ளாப்ஸ் அள்ளுகிறது. உதாரணத்துக்கு தோசை சுடும் தோழியின் கணவரிடம் கார்த்தி சொல்வதும், கார்த்தி வசூல்செய்து வந்து கொடுத்த செக்கைப் பார்த்து அவர் நண்பர் சொல்வதும்... ஹாட்ஸ் ஆஃப் டு யூ பாஸ்கர் சக்தி!

டைரக்டருக்கு இரண்டு விஷயங்களுக்காக என் கைகுலுக்கல்கள். ஒன்று திரைக்கதை. அந்தக் கும்பலை வெறும் ஓரிரு காட்சிகள் மட்டும் காட்டி பார்வையாளர்களை –இவனுங்க எப்படா கார்த்திகூட மோதுவானுக-என்று tempo ஏற்றிய திரைக்கதை உத்தி பிரமாதம்.

இரண்டாவது அந்த வில்லன் குழுவின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்திருக்கும் நடிகர்கள். சத்தியமாக அவர்களை நேரில் பார்த்தால் நான் கொஞ்சம் பயந்து ஒதுங்கித்தான் செல்வேன். அந்தப் பரட்டைத் தலையனையும், கொஞ்சம் தலைசாய்த்து முட்டைக்கண்ணில் பார்க்கும் அவனையும் என்னால் மறக்கவே முடியவில்லை. என்ன ஒரு உடல்மொழி!!

யுவனின் இசையில் ‘வா வா நிலவைப் பிடிச்சுத் தரவா’ ஏற்கனவே என் ஃபேவரைட்டாக இருந்து, படம் பார்த்தபிறகு அவரது குரலில் வரும் ‘இறகைப் போலே அலைகிறேனே’ அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. பின்னணி இசை – கொஞ்சம் அடக்கி வாசித்து வில்லன்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலெல்லாம் மிரட்டலாகக் கொடுத்திருக்கிறார்.

காஜலின் அப்பா மூலம் அறிமுகமாகும் தாதாவுக்கும் கார்த்திக்கும் பாரில் நடக்கும் உரையாடல் சுவாரஸ்ய ட்விஸ்ட்! அவர்களின் சந்திப்பை அப்படியே விடாமல் படம் நெடுக கொண்டு சென்றிருப்பதும் பாராட்டுக்குரிய அம்சம்.

கார்த்தியின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ் மிக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல கார்த்தியின் நண்பனாக வருபவரும். (புரோட்டா ஈட்டர்!)

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அட்டகாசம். அந்த 19 வயதுப் பையன்களின் வெறி நம்மை என்னவோ செய்கிறது. மொத்தப் படத்திலும் இவர்கள் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் அவர்களின் செயற்கையற்ற நடிப்பும், அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் (ஒளிப்பதிவு: மதி) படம் பார்த்து இரண்டு நாளாகியும் என்னிலிருந்து அவர்கள் பற்றிய பய உணர்வை அகலாமலே வைத்திருக்கிறது.

நான் மகான் அல்ல: ஒரு சாதாரண ஒன்லைன் அசாதரணமான ஓர் இயக்குனரிடம் கிடைத்தால் எப்படி படமாக்கப்படும் என்பதற்கான உதாரணப் படம்.


.

Monday, August 9, 2010

அவியல் 09.08.2010

பதினைந்து வருஷத்துக்கு மேல் இருக்கும். நான் சென்னைக்கு என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வெளியில் எல்லாம் போக அனுமதியில்லை. ஓர் இடத்திற்கு மட்டும் போக அனுமதி வாங்கினேன். அது 757, அண்ணா சாலை. விகடன் அலுவலகம்.

உறவினர் வீடு இருந்தது தேனாம்பேட்டை DMS அருகில். எப்படிப் போகவேண்டும் என்றுகூடத் தெரியாது. இதே ரோடுதான் என்று யாரோ சொல்ல, நடந்து.. நடந்து..
யாரைப் பார்க்கப் போகிறேன் என்றே தெரியாமல் போய்க் கொண்டிருந்தேன். விகடன் மதனுக்கு சில கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன்.. பதிலும் வந்திருக்கிறது.. ஆனால் என்ன சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள? விடுவார்களா?

கேள்விகளோடு அண்ணாசாலை விகடன் அலுவலத்தை நெருங்கும் முன் என் செருப்பு அறுந்தது. அறுந்த செருப்பை தூக்கி ஓரமாகப் போட்டாலும், மனசுக்குள் ஏதோ நெருடல்.. இந்தக் கோலத்தில் எப்படிப் போக?

திட்டத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு- விகடன் அலுவலகத்தின் முன் இருந்த போர்டை மட்டும் பார்த்துவிட்டு- திரும்பிவிட்டேன்.

போன வாரம் விகடனில் என் புகைப்படத்துடன் வலைப்பதிவுகள் குறித்து நான் சொன்ன சில வரிகள் வந்திருந்தபோது இதெல்லாம் நினைவுக்கு வந்தது. இதென்ன பெரிய சாதனை? ஒருவகையில் ஒன்றுமில்லைதான். ஆனாலும் ஏதோ ஒரு சந்தோஷம்... இதெற்கெல்லாம் காரணமான உங்களுக்கு..... அதேதான்! வேறென்ன சொல்லமுடியும்?!?!

உடன் வந்திருந்த கேபிள் சங்கர், விக்னேஸ்வரி, தீபா, சுந்தர்ராஜன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

விகடனை வீட்டிற்கு கொண்டுபோனபோது உமா கேட்டார்:

‘சந்தோஷம்தானே?’

‘டபுள் சந்தோஷம்’

‘எதுக்கு டபுள் சந்தோஷம்?’

‘என் ஃபோட்டோ வந்த விகடன்ல அட்டைப்படத்துல யார்னு பார்த்தியா?’

பார்த்தார். நமீதா.

‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன?

******************************************************

சென்ற ஆகஸ்ட் 1-க்கு ஸ்டாலின் திருப்பூர் வருகைய ஒட்டி பதினைந்து நாட்கள் முன்பிருந்தே கழக உடன்பிறப்புகள் வைத்த ஃப்ளக்ஸ் பேனர்களால் நகரமே அல்லோல கல்லோலப்பட, அவரும் எதுக்கு இத்தனை அலப்பறை என்று டோஸ் விட்டாராம். அதன்பிறகு சில பேனர்கள் அகற்றப்பட்டது.

சொல்ல வந்தது அதுவல்ல. (அப்பறம் எதுக்குடா சொன்ன?)

உலகத்தமிழ் மாநாட்டின் போது மேயர் செல்வராஜ் ஆலோசனைப்படி என்று வைக்கப்படிருந்த ஒரு பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. சங்ககாலப் பாடல்களில் கபிலர் குறிப்பிட்டிருந்த 99 வகை மலர்களையும் புகைப்படம் எடுத்து, மலரின் பெயர்களோடு நீஈஈளமான பேனர் ஒன்று தபால்நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. அருகில் கபிலர் எழுதிய பாடலும்.

அந்த முயற்சி தொடர்ந்தால் நன்றாக இருக்கும்!

********************************************

ரமேஷ் வைத்யா. திடீரென அழைத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு சிலசமயம் மூளைக்கும், பல சமயம் இதயத்துக்கும் வேலை வைப்பார். சில நாட்களுக்கு முன் ‘போன்ற, முதலிய, ஆகிய - இந்த மூன்று வார்த்தைகளுக்குமான வேற்றுமைகள் என்ன?’ என்று கேட்டிருந்தார். கவிஞர்.மகுடேசுவரனுடனான சந்திப்பில் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்க அவரும் ஒரு பதிவிட்டு் இது பற்றி எழுதினார்.

அதற்கு முன்பாகவே நான் இதை ட்விட்டரில் கேட்க, எழுத்தாளர் ச.ந. கண்ணன் வந்து சொன்னது நச்சென்று புரிந்தது. அது இதோ உங்களுக்காக:

முதலிய பயன்படுத்தும்போது ஒன்றைப் பயன்படுத்தலாம். உதா: ரஹ்மான், ரோஜா முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

உள்ள அனைத்தையும் சொல்லும்போது ஆகிய பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் ஆதித்யா, சிரிப்பொலி ஆகிய நகைச்சுவை சேனல்கள் உள்ளன.

சிலவற்றை மட்டும் சொல்லும்போது போன்ற பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் சன் டிவி, விஜய் டிவி என்பன போன்ற டிவி சேனல்கள் உள்ளன.

அவருக்கு என் நன்றி!

***************************************************

என் வலைநட்புகளில் ஆதி கொஞ்சம் ஸ்பெஷல். தன் ரசனை மற்றும் வெளிப்படையான பேச்சுகள், விமர்சனங்கள் என்று என்னை எப்போதும் வியக்க வைப்பவர். ‘ஒரு சிறுகதை.. ஒரே ஒரு சிறுகதை எழுதி இலக்கிய உலகில் பெயர் வாங்கியவர்கள் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா பரிசல்? அந்த மாதிரி ஒரு நல்ல கதை எழுதணும்ப்பா’ என்பார்.

அடுத்ததாக குறும்படம் எடுக்கும் முயற்சியில் கால்பதித்துள்ளார். இன்றைக்கு ரிலீஸான அவரது இரவின் நிறம் குறும்படத்திற்கு உங்கள் ஆதரவு நிச்சயமாக தேவை.

ஃபோனில் ஏதோ நாலு வார்த்தை சொன்னதற்காக டைட்டிலில் என் பெயரையும் போட்டிருக்கும் ஆதிமூலகிருஷ்ணனுக்கு நன்றியும், அதே டைட்டிலில் தேவையில்லாமல் தன் பெயர் வரும்போது நக்கல் வரியைச் சொருகியதற்காக குட்டும்.

************************************

ரெண்டு நன்றி சொல்லியாச்சு. இன்னொரு நன்றியும் சொல்லி ஹாட்-ட்ரிக் அடிச்சுக்கறேன்.

எங்க சேர்தளம் தலைவர் வெயிலானுக்கு.

எதுக்கு? இந்த டெம்ப்ளேட்டை வடிவமைச்சுக் குடுத்ததுக்கு. நான் வலைப்பூ ஆரம்பிச்சு டெம்ப்ளேட் நல்லாருக்குன்னு நிறைய பேர் வாயால/மெய்லால கேட்கறது இப்பத்தான்!

*********************************

இந்த வாரக் கவிதை:

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு

-பசுவய்யா

**********************************

ட்விட்டர் அப்டேட்ஸ்:

புதிய மனிதா பாடலில் ‘கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்’ வரி/மெட்டு செம்மொழிப் பாடலை நினைவுபடுத்துகிறது...

விகடன்ல வந்ததால ‘விகடன் புகழ்’னு போட்டுக்கலாமான்னு பார்த்தேன். “அந்த 40000ஐ தர்ற வரைக்கும் ‘கடன் புகழ்’ன்னு போடு”ங்கறாரு நண்பர்..

திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!

3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் என்கிறார்களே.. நீதித்துறைக்கு நல்ல டேபிள், சேர் கூடவா இல்லை? #டவுட்டு

ஒரு Dept. Store இருந்தபோது அலைபேசி ஒலிக்க, சுற்றியிருந்த நான்கைந்து பேர் அவர்கள் மொபைல் என்று நினைத்து Pocketஐ துழாவுகிறார்கள். ‘தான தோம் தனன’ (பூக்கள் பூக்கும் தருணம்) தமிழ்நாட்டின் COMMON Ring Tone ஆகிவிட்டது.

சச்சின் 115* - செஞ்சுரி அடிக்கறதுன்னா இந்தாளுக்கு விளையாட்டா இருக்கு!

தில்லாலங்கடி வெள்ளி ரிலீஸ். சன் டிவி கணிப்புப் படி அடுத்த நாள் சனிக்கிழமை அது மாபெரும் வெற்றியடைந்துவிட்டது. அப்ப ஞாயிற்றுக்கிழமை அதைத் தூக்கீட வேண்டியதுதானே?

64 ஆண்டு சராசரி ஆயுள் வாழும் மனிதன் பிறக்க கர்பத்தில் இருக்கும் காலம் 10 மாதம். அதற்கான புணர்ச்சிக்காலம் அதிகபட்சம் 20 நிமிடங்கள். ஏழு நாள், பதினாலு நாள் ஓடற இரண்டரை மணி நேரப் படத்தை ஏன் வருஷக்கணக்கா எடுக்கறாங்க? #டவுட்டு

மறுபடி ஊரெங்கும் போஸ்டரில் சிரிக்கிறார் நித்யானந்தா. போஸ்டரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் மக்கள்!

வீட்டுக்கு வரச்சொன்னேனே எங்க இருக்க’ன்னு கேட்கறான் நண்பன். நான் ட்வீட்டுக்குன்னு நெனைச்சு இதைத் திறந்து வெச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்:)

வரவா நான் வந்தால் வரவா இல்லை தரவா காசு தந்தால் வரவே என்றான். தரவே வருவாய் என்றால் வருவாய் தர வருவாய் என்றேன். #தமிழ்விளையாட்டு

கேட்டாள் பாமா ‘மாமா பாடலாமா?’ ’மாட்டேன்மா’ என்றார் மாமா. #தமிழ்விளையாட்டு


கரகர குரலில் ப்ரியா கரகரப்ரியா பாடும்போது நறநறன்னு பல்லைக்கடிக்கின்றனர் நவயுவதிகள் சிலர் #தமிழ்விளையாட்டு



.

Thursday, August 5, 2010

என்னமோ போங்க...

நேத்து இங்க்லீஷ் நியூஸ் சேனல்களை மேய்ஞ்சுட்டு இருந்தேங்க. (எதைக் காமிச்சாலும் எருமை மாடு மாதிரி சொரணையில்லாம பாக்கறதால மேய்ஞ்சுட்டுன்னுதான் சொல்ல வேண்டியதா இருக்கு!) Headlines Today-வுல ஏதோ அடிதடியைக் காட்டிட்டு இருந்தாங்க.

போபால்-ல ஒரு சீரியல் நடிகையின் காதலனை அவ அப்பாம்மா நடுரோட்டில் போட்டு பின்னி எடுத்துகிட்டிருந்தாங்க.

அவன் பேரு ஜஹாங்கீர். அந்த நடிகைகூட காதலாய் இருந்தானாம். கல்யாணமெல்லாம் பேசினாங்களாம். திடீர்னு அவளுக்கு சீரியல் சான்ஸ் அடிக்க அவங்க வீட்ல ஜகா வாங்க ஆரம்பிச்சாங்களாம். என்னன்னு கேட்கப்போனவனுக்கு அடி-உதை.

‘அதெல்லாம் சும்மா கப்ஸா. அவன் எனக்கு ஃப்ரெண்டு அவ்வளவுதான்’ என்கிறாள் அந்தப் பெண். ‘எனக்கு வயசே 17தான் ஆவுது. மைனர் நான். அதெப்படி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றான். நான் பாம்பே போனா அங்கயும் வந்து தொந்தரவு பண்றான். அதுனால என் பேரண்ட்ஸ்ட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினேன்’ என்கிறாள் மேலும்.

விடுவார்களா நம் மீடியா மன்னர்கள். அவன் தலையில் கட்டோடு ஆசுபத்திரியில் இருக்க (இல்லை வீடுதானான்னு தெரியலை) அவன்கிட்ட ஒரு மைக்கு, இவ எங்கியோ இருக்கா, இவகிட்ட ஒரு மைக்கு குடுத்து ‘ம்ம்..இப்ப நீங்க சொல்லுங்க.. இப்ப நீங்க சொல்லுங்க’ன்னு பேட்டி!

அவ சொல்றா.. ‘அவன் நான் படிக்கற காலத்துலேர்ந்தே டார்ச்சர். நல்ல ஃப்ரெண்டுதான். ஆனா அதுக்காக கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு ஒரே குடைச்சல்..ச்சே’ன்னு.

இவன் உடனே ‘இருங்க இருங்க’ன்னு ஒரு லேப்டாப்பை எடுத்து தெரியுதா தெரியுதான்னு கேட்கறான். மீடியா ஆசாமி ‘நல்லாத் தெரியுது. எங்க கேமரா உங்க லேப்டாப்பை க்ளோஸப்ல காமிக்குது’ன்னு வழியறாரு.

அந்த லேப்டாப்ல அவனும் அந்தப் பொண்ணும் கன்னத்தோட கன்னம் வெச்சு, அவன் மேல அவ சாஞ்சுகிட்டுன்னு நாலைஞ்சு ஸ்டில்ஸ். ‘இது எங்க பண்ணை வீட்டுல எடுத்தது.. இது இங்கன எடுத்தது’ விளக்கம் குடுக்கறாரு இவரு.

‘அதெல்லாம் ஒரு ஃப்ரெண்ட்ஷிப்ல எடுத்தது. காசுக்கே ஜிங்கி அடிக்கற இவனை எவ லவ் பண்ணுவா’ங்கறா அவ.

‘யாரு நானா காசில்லாதவனா? முப்பது கோடி என் பேர்ல இருக்குடி.. வர்றியா பார்க்கறியா?’ - அவன்.

‘ம்க்கும். முன்னூறு ரூவாய்க்கு வக்கில்ல உனக்கு’ - இது அவ.

‘ஏய்... என் ஃபார்ம் ஹவுசுக்கு வாடி. காட்டறேன்.. எங்கப்பா எனக்கு எவ்ளோ சொத்து வெச்சிருக்காருன்னு காமிக்கறேன்’ - இது அவன்.

எல்லாமே லட்சம் பேர் பார்க்கற தொலைக்காட்சில ஒளிபரப்பாகுதுன்னு தெரிஞ்சு பேசறாங்க.

புரச்சி என்னான்னா ஆம்பளை கல்யாணம் பண்ணிக்கங்கறான், அவ போடாங்கறா.. அவ்ளோதான். மத்தபடி இந்த நியூஸ்ல பெரிசா ஒரு மண்ணையும் காணோம். ஆனா இதுபோதும் நாலஞ்சு நாளைக்கு நம்மளுக்குப் பொழுது போவும்...

இவங்களும் எல்லாத்தையும் ஒளிபரப்பிட்டு ‘ஐயா காதலர்களே, காதலிகளே.. நீங்க இப்படி இருக்காதீங்க.. உங்க வாழ்க்கையப் பொதுவுல போட்டுத் தாளிக்காதீங்க’ன்னு அட்வைஸ் வேற..


தேபோல நாலஞ்சு வாரம் முந்தி நியூஸ்9 சேனல்ல மைசூர்ல நடந்த ஒரு கல்யாணம் காமிச்சாங்க. செம புரச்சிங்க. பாருங்களேன்....



இந்தக் கேஸு ரிவர்ஸு. அவன் ஜாலியா பழகீட்டு இருந்துட்டு ஏதோ எஸ்கேப்பாகலாம்னு இருந்திருக்கான்போல. புடிச்சு சிக்க வெச்சுட்டாங்க! (அவனைப் பாருங்களேன்... எனக்கென்னமோ எல்லா புருஷங்களோட மனசுக்குள்ள இருக்கறதை வெளில செஞ்சு காமிச்சுட்டாருன்னு தோணுது. என்ன சரிதானே ஆதி?)

இந்தக் கல்யாணம் பண்ணின மாப்பிள்ளை இப்ப எப்படி குடும்பம் நடத்தறாரு? அந்தப் பொண்ணு எப்படி இருக்காங்க? ஏதாவது அப்டேட் போடறாங்களா இந்த மீடியாஸ்? தெரியல.

என்னமோ போங்க. அவங்களும் எதையெதையோ ஒளிபரப்பறாங்க நம்மளும் பார்க்கறோம்.

சொல்லறேன்னு திட்டாதீங்க. இந்திய சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக இன்னாருக்கும் இன்னாருக்குமான முதலிரவுக் காட்சியை உங்கள் எக்ஸ்ஒய்இஸட் சேனலில் காணத்தவறாதீர்கள்ன்னு வந்தாலும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.

டிஸ்கி: கடைசி பத்திக்கு ‘அதெல்லாம் ஏற்கனவே வந்திருச்சே’ன்னு பின்னூட்டம் வரப்போகுதோன்னு டரியலா ஒருக்கு!


.

Tuesday, August 3, 2010

அவியல் 03.08.2010

கவிஞர். மகுடேசுவரனுடனான சந்திப்பு குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்த பாடில்லை. ‘இப்பொழுது இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் நடுவில் ஏன் அதிகம் எழுதவில்லை’ என்று கேட்டதற்கு அவர் ‘போதுமென்று நினைத்ததுதான்’ என்று கூறியதும் காரணமாக இருக்கலாம்.

********************

டாகடர்கள் பற்றிய விஜய் டிவி நீயா நானா’ வில் எழுத்தாளர் ஜெயமோகனின் நியாயமான கேள்விகளுக்கு எதிர்கேள்விகள் கேட்டே கடத்தினரே ஒழிய நேரடியான பதிலை அவர்கள் சொன்னார்களில்லை. அதுவும் விதண்டாவாதம் போல பேசிவிட்டு அது சரி என்பது போல அவர்கள் கைதட்டிச் சிரித்துக் கொண்டது அதைவிடவும் கேவலமாகவே இருந்தது. மக்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறைகளில் மேல் முழு நம்பிக்கை இல்லை. வெறுப்புதான் இருக்கிறது. வேறு வழியில்லை என்பதால் போகவேண்டியிருக்கிறது என்று ஜெமோ சொன்னது நூற்றுக்கு நூறு சரி.

இதைப் படியுங்கள்...

பீகாரில் மின்சார வசதியே இல்லாத கிராமங்களிலிருந்து வரும் நோயாளிகளை எக்ஸ்ரே எடுத்து வரும் படி அருகிலிருக்கும் எக்ஸ்ரே செண்டருக்கு அனுப்புவார்கள் டாக்டர்கள். அங்கே எக்ஸ்ரே இருக்காது. ஆளுயர ஃப்ரிட்ஜ் இருக்கும். அதன்முன் நோயாளியை நிற்க வைத்து படக்கென்று கதவைத் திறந்து மூடுவார்கள். லைட் வேறு எரியுமா... கிராமத்து ஆசாமியும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார். கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பழைய எக்ஸ்ரே ஒன்றைக் கொடுத்து விடுவார்கள். டாக்டர் அதைப் பார்த்து சிகிட்சை என்ற பெயரில் ஏதாவது சொல்லி அனுப்புவார். மீண்டும் அந்த பழைய எக்ஸ்ரே அந்த செண்டருக்கே போய்விடுமாம்.

நம்பவே முடியவில்லையல்லவா? விகடன் பிரசுரமான ‘போஸ்ட் மார்ட்டம்’ நூலில் படித்தது இது. டாக்டர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்று தனது Trick or Treat ஆங்கிலப் புத்தகத்தில் எழுதிய டாக்டர் கே.ஆர். சேதுராமன் (புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர்) ஜூனியர் விகடனில் எழுதிய தொடர்தான் போஸ்ட் மார்ட்டம். இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும் மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று புரியும்.

****************************************

சில பிரபலங்கள் வரும் விளம்பரங்கள் எரிச்சலடையச் செய்கிறது. உச்சபட்ச உதாரணம் விவேக் வரும் நாதெள்ளா ஜூவல்லரிஸ் விளம்பரம். ஒரு க்ரியேட்டிவிட்டியும் இல்லாத தட்டையான விளம்பரம். பிரகாஷ்ராஜ், நாசர், அர்ஜூன், நமீதா என்று ஆறுக்கொரு இரும்புக் கம்பியை விளம்பரம் செய்கிறார்கள். சூர்யா வரும் விளம்பரங்கள் ஓரளவு பரவாயில்லை என்று நினைத்தால் அவரும் நவரத்னா தைலத்தின் மொக்கையான ஸ்க்ரிப்டில் நடித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆசிஷ் வித்யார்த்தி ஏதோ ஒரு ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ் விளம்பரத்தில் வந்து மகனைத் திட்டிவிட்டுப் போகிறார்.

நான் சொல்வது பொருட்களின் தரம் பற்றியெல்லாம் இல்லை. விளம்பரங்களின் க்ரியேட்டிவிட்டியை. கொஞ்ச நாட்களாகவே நல்ல க்ரியேட்டிவான விளம்பரங்களையே காணமுடியவில்லை.

******************************************

கவி.மகுடேசுவரனுடனான சந்திப்பில் கி.ராஜநாராயணன் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது எழுத்தில் எழுத முடியாத ’ஊமையன் சாட்சி சொல்லும் கதை’ யூ டியூபில் இருக்கிறது என்றேன். செல்வேந்திரன் இதையெல்லாம் சொல்ல மாட்டீரா ஐயா’ என்று கடிந்து கொண்டார். அவருக்காக...




****************************************

ஈரவெங்காயம் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் சேர்தளம் (திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்) பொருளாளர் சாமிநாதன் பூந்தளிர் என்று தன் வலைப்பூ பெயரை மாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கும். நான் உட்பட பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது அவரது கவிமுகம்.

சமீபத்தில் அவர் தன் வலையில் எழுதிய நானும் மரணமும் கவிதை கவிதையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடிக்கடி அவர் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா.

***********************************
கார்க்கி சொன்னது போல எந்திரன் பாடல்களை ஹெட்ஃபோனில் கேட்கும்போது புதுப்புது ஒலிகள் கேட்டு புல்லரிக்க வைக்கிறது. இரண்டு நாட்களாக அங்குமிங்கும் கேட்ட வரையில் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பது தெரிகிறது. புதிய மனிதா முந்திக் கொண்டிருக்கிறது. ரஜினி உருவாக்கிய ரோபோ ‘என் தந்தைமொழி தமிழல்லவா’ என்று சொல்வதில் கவிஞர் வைரமுத்து தெரிகிறார். அந்தப் பாடலில் எந்த வரி வசீகரன் பாடுவது, எந்த வரி சிட்டி பாடுவது என்று தெரியவில்லை. ஆவலாக இருக்கிறது திரையில் காண.

(வசீகரன் = விஞ்ஞானி ரஜினி, சிட்டி = ரோபோ ரஜினி)

**************************************************

.

Monday, August 2, 2010

எந்திரன் - இசை

ஜினியைப் பற்றி கே.பாலச்சந்தர் கல்கி தொடரில் ஒருமுறை குறிப்பிட்டிருந்தது..

ஒரு நடிகனுக்கு அவன் கேரியரில் ஐந்து நிலைகள்.

1) இந்தப் படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் யார் என எல்லாராலும் கேட்கப்படுவது முதல்நிலை.

2) இந்தப் படத்தில் இன்ன பாத்திரத்தில் நடித்தவர் சூர்யகுமார் என்று மக்களால் அறியப்படுவது சொல்லப்படுவது இரண்டாம் நிலை.

3) அந்தப் படத்தில் சூர்யகுமார் நடித்திருக்கிறார் என்று மக்கள் பார்க்க வருவது மூன்றாம் நிலை.

4) சூர்யகுமார் நடித்திருக்கும் படம்தான் பார்க்க வேண்டும் என்று மக்களை நினைக்க வைப்பது நான்காம் நிலை.

5) ஏதாவது ஒரு படத்தில் ஏதாவது ஒரு சீனில் சூர்யகுமார் என்று பெயர் வந்தாலே விசிலடித்து மக்கள் ரசிப்பது ஐந்தாவது நிலை.

இதைச் சொன்ன கே.பாலச்சந்தர், அடுத்த வரியாக ‘ரஜினிகாந்த் இந்த ஐந்து நிலைகளையும் தாண்டி எங்கேயோ போய்விட்டார்’ என்றிருப்பார்.




அது கிட்டத்தட்ட பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது அதே ரஜினிகாந்த் அதையும் தாண்டி எங்கேயோ போய்தான் விட்டார். அவர் பெயர் வந்தால், அவர் பேசினால், பேசாவிட்டால் எல்லாமே நியூஸ்தான். அப்படிப்பட்டவர் ஏன் ரிஸ்க் எடுத்து சவாலான கேரக்டரில் எல்லாம் நடிப்பதில்லை?

சேலத்தில் ஒரு திரையரங்க முதலாளி தனது தியேட்டர் இருக்கும் வீதியில் காரில் நின்று கொண்டிருந்தபோது அந்த வீதியில் போண்டா, வடையைத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் தனது மனைவியிடம் ‘அடுத்தவாரம் சாமான்லாம் அதிகமா வாங்கணும் புள்ள. தலைவர் படம் ரிலீஸ் ஆகுதுல்ல’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அடுத்தவாரம் அவரது திரையரங்கில் ரஜினி படம். சேலம் விநியோகஸ்தராகவும் இருக்கும் அவர் சென்னையில் ரஜினியைச் சந்தித்தபோது இதைச் சொல்லி ‘உங்க படம் ரிலீஸ்னா வீதில வடை போண்டா விக்கிறவர் வரைக்கும் பிழைக்க முடியுது சார்’ என்றாராம். ‘இந்தக் காரணத்துனாலதான் ரிஸ்க் எதுவும் எடுக்காம மக்களுக்கு பிடிச்ச மாதிரி கேரக்டர்ஸ் மட்டும் பண்றேன்’ என்று சொன்ன ரஜினி, ‘இப்ப தயாரிப்பாளர்களுக்குத்தான் பஞ்சம். அடுத்த முறை என்னைச் சந்திக்கறப்ப ஒரு வெற்றிப்பட தயாரிப்பாளரா உங்களை நான் பார்க்கணும்’ என்றாராம் சிரித்தபடி. அதேபோல தனது இரண்டாவது படம் நல்ல வெற்றியை ஈட்ட ரஜினியைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் கஜினி தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்.

சும்மா இருந்தாலே நியூஸ் என்ற நிலையில் சூப்பர் ஸ்டாரை வைத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எந்திரன் படம் இயக்குகிறார் என்றதுமே காட்டுத்தீயாக அதைப் பற்றி நியூஸ்கள். எப்படா படம் ரிலீஸ் என்றிருந்த ரசிகர்களுக்கு இப்போது இசை வந்து கொஞ்சம் தீனி போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது.

31ம்தேதி இசை வெளியீடு என்றதும் நான் வழக்கமாக வாங்கும் சி.டி.கடைக்கு ஃபோன் செய்தபோது ‘காலைல ஏழு மணிக்கெல்லாம் கடையைத் திறந்துடுவோம்’ என்றார்கள். எட்டு மணிக்கு அலுவலகம் செல்லும் வழியில் போய் வாங்கும்போது அந்தக்கடையிலும், பக்கத்துக் கடையிலுமாக மொத்தம் 20, 25 பேர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ரஜினிக்கு மட்டும்தான் இது சாத்தியம். (தளபதி கேசட் ரிலீஸ் ஆனபோது உடுமலையில் ஒரு கேசட் செண்டரில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸை அழைத்திருந்தார்கள். இன்றைய டவுன்லோடிங் யுகத்தில் 25 பேரே ஜாஸ்திதான்!)

பாடல்கள் குறித்த எனது ஒருவரி விமர்சனமும் பிடித்த வரிகளும்..

1) புதிய மனிதா..
குரல்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான், கதீஜா ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து

மெதுவாக ஆரம்பிக்கும் பாட்டில் ‘நான் கண்டது ஆறறிவு’ என்று எஸ்.பி.பி-யின் கம்பீர குரல் வரும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

கவர்ந்த வரிகள்: ஆரம்ப வரிகளான ‘எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து, வயரூட்டி, உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி அழையாத உடலோடு வடியாத உயிரோடு..’

2) காதல் அணுக்கள்...
குரல்கள்: விஜய் ப்ரகாஷ், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

ஒருமாதிரி ஹஸ்கியாக விஜய் ப்ரகாஷ் இந்தப்பாடலை ஆரம்பிக்கும் இடம் மிக அற்புதம்.

கவர்ந்த வரிகள்: ஆரம்ப வரிகள் மற்றும்.. ‘நீ முற்றும் அறிவியல் பித்தன் ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்’

3) இரும்பிலே ஓர் இருதயம்
குரல்கள்: A R ரஹ்மான், Kash n' Krissy
வரிகள்: மதன் கார்க்கி

இந்தப் பாடலின் ஆரம்ப இசை இனி தியேட்டர்களில் ஸ்க்ரீனை உயர்த்தும்போது உபயோகப்படுத்தப்படலாம். பாடலில் பெண்குரல் வசீகரிக்கிறது.

கவர்ந்த வரிகள்: ‘உயிரியல் மொழிகளில் எந்திரன்தானடி. உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி’

4) சிட்டி டான்ஸ் ஷோ கேஸ்

5) அரிமா அரிமா..
குரல்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் என்று ரஜினி புகழோடு ஆரம்பிக்கும் டூயட்!

கவர்ந்த வரிகள்: ‘அஃறிணையின் அரசன் நான். காமுற்ற கணினி நான். சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான்...’

6) கிளிமாஞ்சாரோ..
குரல்கள்: ஜாவேத் அலி, சின்மயி
வரிகள்: பா.விஜய்

முதல்வனே வனே-வை ஞாபகப்படுத்தும் பாடல்.

கவர்ந்த வரிகள்: ‘வேர்வரை நுழையும் வெய்யிலும் நான் - நீ இலைத்திரை ஏன் இட்டாய்?’

7) பூம் பூம் ரோபோடா..
குரல்கள்: யோகி பி, கீர்த்தி சகாதியா, ஸ்வேதா மோகன், தன்வீ ஷா
வரிகள்: மதன் கார்க்கி

ஆரம்பமே கலக்கல். டெக்னிகல்+காதல் கலந்து வாலி இன்னும் இளமையானால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி எழுதியிருக்கிறார் கார்க்கி. துள்ளலான பாடல்.

கவர்ந்த வரிகள்: ஏறக்குறைய எல்லாமே...

இரண்டு நாளில் கேட்டதில் சட்டென எனக்கு பிடித்த மாதிரி இந்தப்படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தினால்...

1) பூம் பூம் ரோபோடா
2) காதல் அணுக்கள்
3) இரும்பிலே ஒரு இருதயம்
4) புதிய மனிதா
5) கிளிமாஞ்சாரோ
6) அரிமா அரிமா

விண்ணைத் தாண்டி வருவாயா-வில் புதிய முயற்சிகளும், மெலடி, ஸ்பீட் என்று எல்லா வகையையும் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான் ரஜினி + ஷங்கர் படத்தில் ஏதும் முயற்சிக்க முடியாமல் நின்றிருப்பது தெரிகிறது. பார்க்கலாம் போகப் போக என்ன தாக்கத்தைத் தருகிறதென்று..


.

Sunday, August 1, 2010

நண்பர் தின வாழ்த்துகள்!

லகின் அனைத்து மூலைகளிலும் உள்ள நண்பர்களுக்கு நண்பர்தின வாழ்த்துகள்.

‘மூலையில இருக்கறவங்களுக்கு மட்டும்தான் வாழ்த்துகளா? செண்டர்ல இருக்கறவங்களுக்கு?’ன்னு என்னை மாதிரியே யோசிக்கறவங்களுக்கு ஸ்பெஷல் நண்பர்தின வாழ்த்துகள்.

அப்புறம் ஒரு நியூஸ்...

தினமலர் கோவைப் பதிப்பு சண்டே ஸ்பெஷல்-ல நம்ம திருப்பூர் வலைத்தளக் குழுமமான ‘சேர்தளம்’ அமைப்பினரின் சந்திப்பு பற்றிய செய்தி ஒண்ணு வந்திருக்கு.. அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கறதுல படா குஷியாய்க்கறேன்...



இது படம்.

நியூஸைப் பெரிசாப் படிக்க - இந்த லிங்கை க்ளிக்குங்க...



.