பதினைந்து வருஷத்துக்கு மேல் இருக்கும். நான் சென்னைக்கு என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வெளியில் எல்லாம் போக அனுமதியில்லை. ஓர் இடத்திற்கு மட்டும் போக அனுமதி வாங்கினேன். அது 757, அண்ணா சாலை. விகடன் அலுவலகம்.
உறவினர் வீடு இருந்தது தேனாம்பேட்டை DMS அருகில். எப்படிப் போகவேண்டும் என்றுகூடத் தெரியாது. இதே ரோடுதான் என்று யாரோ சொல்ல, நடந்து.. நடந்து..
யாரைப் பார்க்கப் போகிறேன் என்றே தெரியாமல் போய்க் கொண்டிருந்தேன். விகடன் மதனுக்கு சில கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன்.. பதிலும் வந்திருக்கிறது.. ஆனால் என்ன சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள? விடுவார்களா?
கேள்விகளோடு அண்ணாசாலை விகடன் அலுவலத்தை நெருங்கும் முன் என் செருப்பு அறுந்தது. அறுந்த செருப்பை தூக்கி ஓரமாகப் போட்டாலும், மனசுக்குள் ஏதோ நெருடல்.. இந்தக் கோலத்தில் எப்படிப் போக?
திட்டத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு- விகடன் அலுவலகத்தின் முன் இருந்த போர்டை மட்டும் பார்த்துவிட்டு- திரும்பிவிட்டேன்.
போன வாரம் விகடனில் என் புகைப்படத்துடன் வலைப்பதிவுகள் குறித்து நான் சொன்ன சில வரிகள் வந்திருந்தபோது இதெல்லாம் நினைவுக்கு வந்தது. இதென்ன பெரிய சாதனை? ஒருவகையில் ஒன்றுமில்லைதான். ஆனாலும் ஏதோ ஒரு சந்தோஷம்... இதெற்கெல்லாம் காரணமான உங்களுக்கு..... அதேதான்! வேறென்ன சொல்லமுடியும்?!?!
உடன் வந்திருந்த கேபிள் சங்கர், விக்னேஸ்வரி, தீபா, சுந்தர்ராஜன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
விகடனை வீட்டிற்கு கொண்டுபோனபோது உமா கேட்டார்:
‘சந்தோஷம்தானே?’
‘டபுள் சந்தோஷம்’
‘எதுக்கு டபுள் சந்தோஷம்?’
‘என் ஃபோட்டோ வந்த விகடன்ல அட்டைப்படத்துல யார்னு பார்த்தியா?’
பார்த்தார். நமீதா.
‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன?
******************************************************
சென்ற ஆகஸ்ட் 1-க்கு ஸ்டாலின் திருப்பூர் வருகைய ஒட்டி பதினைந்து நாட்கள் முன்பிருந்தே கழக உடன்பிறப்புகள் வைத்த ஃப்ளக்ஸ் பேனர்களால் நகரமே அல்லோல கல்லோலப்பட, அவரும் எதுக்கு இத்தனை அலப்பறை என்று டோஸ் விட்டாராம். அதன்பிறகு சில பேனர்கள் அகற்றப்பட்டது.
சொல்ல வந்தது அதுவல்ல. (அப்பறம் எதுக்குடா சொன்ன?)
உலகத்தமிழ் மாநாட்டின் போது மேயர் செல்வராஜ் ஆலோசனைப்படி என்று வைக்கப்படிருந்த ஒரு பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. சங்ககாலப் பாடல்களில் கபிலர் குறிப்பிட்டிருந்த 99 வகை மலர்களையும் புகைப்படம் எடுத்து, மலரின் பெயர்களோடு நீஈஈளமான பேனர் ஒன்று தபால்நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. அருகில் கபிலர் எழுதிய பாடலும்.
அந்த முயற்சி தொடர்ந்தால் நன்றாக இருக்கும்!
********************************************
ரமேஷ் வைத்யா. திடீரென அழைத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு சிலசமயம் மூளைக்கும், பல சமயம் இதயத்துக்கும் வேலை வைப்பார். சில நாட்களுக்கு முன் ‘போன்ற, முதலிய, ஆகிய - இந்த மூன்று வார்த்தைகளுக்குமான வேற்றுமைகள் என்ன?’ என்று கேட்டிருந்தார். கவிஞர்.மகுடேசுவரனுடனான சந்திப்பில் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்க அவரும் ஒரு பதிவிட்டு் இது பற்றி எழுதினார்.
அதற்கு முன்பாகவே நான் இதை ட்விட்டரில் கேட்க, எழுத்தாளர் ச.ந. கண்ணன் வந்து சொன்னது நச்சென்று புரிந்தது. அது இதோ உங்களுக்காக:
முதலிய பயன்படுத்தும்போது ஒன்றைப் பயன்படுத்தலாம். உதா: ரஹ்மான், ரோஜா முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
உள்ள அனைத்தையும் சொல்லும்போது ஆகிய பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் ஆதித்யா, சிரிப்பொலி ஆகிய நகைச்சுவை சேனல்கள் உள்ளன.
சிலவற்றை மட்டும் சொல்லும்போது போன்ற பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் சன் டிவி, விஜய் டிவி என்பன போன்ற டிவி சேனல்கள் உள்ளன.
அவருக்கு என் நன்றி!
***************************************************
என் வலைநட்புகளில் ஆதி கொஞ்சம் ஸ்பெஷல். தன் ரசனை மற்றும் வெளிப்படையான பேச்சுகள், விமர்சனங்கள் என்று என்னை எப்போதும் வியக்க வைப்பவர். ‘ஒரு சிறுகதை.. ஒரே ஒரு சிறுகதை எழுதி இலக்கிய உலகில் பெயர் வாங்கியவர்கள் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா பரிசல்? அந்த மாதிரி ஒரு நல்ல கதை எழுதணும்ப்பா’ என்பார்.
அடுத்ததாக குறும்படம் எடுக்கும் முயற்சியில் கால்பதித்துள்ளார். இன்றைக்கு ரிலீஸான அவரது இரவின் நிறம் குறும்படத்திற்கு உங்கள் ஆதரவு நிச்சயமாக தேவை.
ஃபோனில் ஏதோ நாலு வார்த்தை சொன்னதற்காக டைட்டிலில் என் பெயரையும் போட்டிருக்கும் ஆதிமூலகிருஷ்ணனுக்கு நன்றியும், அதே டைட்டிலில் தேவையில்லாமல் தன் பெயர் வரும்போது நக்கல் வரியைச் சொருகியதற்காக குட்டும்.
************************************
ரெண்டு நன்றி சொல்லியாச்சு. இன்னொரு நன்றியும் சொல்லி ஹாட்-ட்ரிக் அடிச்சுக்கறேன்.
எங்க சேர்தளம் தலைவர் வெயிலானுக்கு.
எதுக்கு? இந்த டெம்ப்ளேட்டை வடிவமைச்சுக் குடுத்ததுக்கு. நான் வலைப்பூ ஆரம்பிச்சு டெம்ப்ளேட் நல்லாருக்குன்னு நிறைய பேர் வாயால/மெய்லால கேட்கறது இப்பத்தான்!
*********************************
இந்த வாரக் கவிதை:
உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு
-பசுவய்யா
**********************************
ட்விட்டர் அப்டேட்ஸ்:
புதிய மனிதா பாடலில் ‘கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்’ வரி/மெட்டு செம்மொழிப் பாடலை நினைவுபடுத்துகிறது...
விகடன்ல வந்ததால ‘விகடன் புகழ்’னு போட்டுக்கலாமான்னு பார்த்தேன். “அந்த 40000ஐ தர்ற வரைக்கும் ‘கடன் புகழ்’ன்னு போடு”ங்கறாரு நண்பர்..
திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!
3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் என்கிறார்களே.. நீதித்துறைக்கு நல்ல டேபிள், சேர் கூடவா இல்லை? #டவுட்டு
ஒரு Dept. Store இருந்தபோது அலைபேசி ஒலிக்க, சுற்றியிருந்த நான்கைந்து பேர் அவர்கள் மொபைல் என்று நினைத்து Pocketஐ துழாவுகிறார்கள். ‘தான தோம் தனன’ (பூக்கள் பூக்கும் தருணம்) தமிழ்நாட்டின் COMMON Ring Tone ஆகிவிட்டது.
சச்சின் 115* - செஞ்சுரி அடிக்கறதுன்னா இந்தாளுக்கு விளையாட்டா இருக்கு!
தில்லாலங்கடி வெள்ளி ரிலீஸ். சன் டிவி கணிப்புப் படி அடுத்த நாள் சனிக்கிழமை அது மாபெரும் வெற்றியடைந்துவிட்டது. அப்ப ஞாயிற்றுக்கிழமை அதைத் தூக்கீட வேண்டியதுதானே?
64 ஆண்டு சராசரி ஆயுள் வாழும் மனிதன் பிறக்க கர்பத்தில் இருக்கும் காலம் 10 மாதம். அதற்கான புணர்ச்சிக்காலம் அதிகபட்சம் 20 நிமிடங்கள். ஏழு நாள், பதினாலு நாள் ஓடற இரண்டரை மணி நேரப் படத்தை ஏன் வருஷக்கணக்கா எடுக்கறாங்க? #டவுட்டு
மறுபடி ஊரெங்கும் போஸ்டரில் சிரிக்கிறார் நித்யானந்தா. போஸ்டரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் மக்கள்!
வீட்டுக்கு வரச்சொன்னேனே எங்க இருக்க’ன்னு கேட்கறான் நண்பன். நான் ட்வீட்டுக்குன்னு நெனைச்சு இதைத் திறந்து வெச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்:)
வரவா நான் வந்தால் வரவா இல்லை தரவா காசு தந்தால் வரவே என்றான். தரவே வருவாய் என்றால் வருவாய் தர வருவாய் என்றேன். #தமிழ்விளையாட்டு
கேட்டாள் பாமா ‘மாமா பாடலாமா?’ ’மாட்டேன்மா’ என்றார் மாமா. #தமிழ்விளையாட்டு
கரகர குரலில் ப்ரியா கரகரப்ரியா பாடும்போது நறநறன்னு பல்லைக்கடிக்கின்றனர் நவயுவதிகள் சிலர் #தமிழ்விளையாட்டு
.
41 comments:
nalla irukunga
அவியல் எப்பவும் தனி ருசி தான்.
வாழ்த்துகள் பரிசல்..
விகடன் அலுவலகத்தை வெளியில் இருந்து பார்த்து பின் விகடனுக்குக்குள்ளேயும் தன்னைப் பார்த்ததற்கு வாழ்த்துக்கள். அவியலும் நல்ல சுவை
வாழ்த்துக்கள் பரிசல்... பிஞ்ச செருப்பு, விகடன் வாசல் பகிர்வு அருமை...
அன்பின் பரிசல்
நல்வாழ்த்துகள் - இன்னும் முன்னேற நல்வாழ்த்துகள்
அவியல் ருசியே தனிதான்
போன்ற - முதலிய - ஆகிய - அருமையான விளக்கம்
தளத்தின் வடிவமைப்பு கண்ணைக் கவர்கிறது - பார்த்த உடனே மனம் மகிழ்கிறது - வெயிலான் பாராட்டுகள்
நல்வாழ்த்துகல் பரிசல்
நட்புடன் சீனா
வாழ்த்துகள் பரிசல்.
வாழ்த்துகள் பரிசல்....
அவியல் நல்லாத்தான் இருக்கு.சாப்பாட வையுங்கப்பா
அவியல் நல்ல சுவை...
வாழ்த்துகள்.......
அவியல் சுவையும் அது இருக்கும் பாத்திரமும் (டெம்ளேட்) அருமை.
"மறுபடி ஊரெங்கும் போஸ்டரில் சிரிக்கிறார் நித்யானந்தா. போஸ்டரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் மக்கள்!"
Superb....
விகடனில் வந்தததற்கு வாழ்த்துக்கள் பரிசல்..
நித்தி மேட்டர் கலக்கல்.
டெம்பிளேட் கலக்கல்.
ஆனந்த விகடனில் கே கே.. வாழ்த்துக்கள்.. ஆனந்தம்.. நித்யா'னந்தம்..
ஸ்வாமி சொன்னா மாதிரி பாத்திரம் சூப்பர்.
//தராசு said...
நித்தி மேட்டர் கலக்கல்.//
???? வெளங்கலையே???
விகடனில் பேட்டி வாசித்தேன்; வாழ்த்துக்கள்; பசுவய்யா கவிதை ஏற்கனவே வாசித்துள்ளேன்; அருமை
வாழ்த்துக்கள் ..... விகடனில் உங்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
அருமையான அவியல்ல்ல்...!
//முதலிய பயன்படுத்தும்போது ஒன்றைப் பயன்படுத்தலாம். உதா: ரஹ்மான், ரோஜா முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
உள்ள அனைத்தையும் சொல்லும்போது ஆகிய பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் ஆதித்யா, சிரிப்பொலி ஆகிய நகைச்சுவை சேனல்கள் உள்ளன.
சிலவற்றை மட்டும் சொல்லும்போது போன்ற பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் சன் டிவி, விஜய் டிவி என்பன போன்ற டிவி சேனல்கள் உள்ளன. //
வரையறை(Scope) என்பதுதான் இப்பதங்களின் தன்மையை நிர்ணயிக்கிறது.
வரையறைக்குள் இருக்கும் சிலவற்றைக் குறிக்கும் போது, முதலிய எனும் பதம் பாவிக்கப்படுகிறது.
வெயிலான், பரிசல்காரன் முதலான திருப்பூர் பதிவர்கள் வந்திருந்தனர்.
வரையறைக்குள் இருக்கும் அனைத்தும் குறிப்பிடப்படும் போது, ஆகிய எனும் பதம் பாவித்திடல் வேண்டும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த அனுபவம் பெற்றவர் பரிசல்காரன்.
வரையறைக்குள் இல்லாத ஒன்றையும், உவமைப்படுத்திக் குறிப்பிடப் பாவிப்பது, போன்ற எனும் பதம்.
மும்பை தேசாய், டில்லி காந்தி திரையரங்கம் போன்ற திரையரங்குகளும் தமிழகத்தில் உள்ளன. இங்கே தமிழகம் என்பது வரையறை....
திருப்பூர் ஃப்ளக்ஸ் மேட்டர் காரணம் அது இல்லைங்கோவ்... அது பாலிடிக்ஸ் தனியா சொல்லுறேன்...
//சென்ற ஆகஸ்ட் 1-க்கு ஸ்டாலின் திருப்பூர் வருகைய ஒட்டி பதினைந்து நாட்கள் முன்பிருந்தே கழக உடன்பிறப்புகள் வைத்த ஃப்ளக்ஸ் பேனர்களால் நகரமே அல்லோல கல்லோலப்பட, ///
அவரு வருவதற்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிவிட்டாலும் பேனர்கள் வைக்கப் போடப்பட்ட குழிகளை அகற்றமாட்டார்கள்.
ஏற்கெனவே திருப்பூரில் சாலை வசதி மிக மிக அருமையா இருக்கு .. இப்ப இந்த குழிகள் அதவிட அருமை ..!!
வாழ்த்துக்கள் நண்பரே.
ஸ்ரீ....
தலைப்பில் இருக்கும் பரிசல் (உண்மையான பரிசல்) வரைபடம் நண்பர் கனலியுடையது.
அவருக்கு நன்றி!
வாழ்த்துகள் பரிசல்
rather than the template, i m really happy for the change in 'about me' lines!!
with the kind of flair u hav in writing, i firmly believe u could make that part even better :)
அண்ணா..
முதலிய, ஆகிய, போன்ற ஆகிய வார்த்தைகளின் வித்தியாசத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..
//‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன?//
மனம் விட்டு.. வாய் விட்டு சிரிச்சேன் அண்ணே..
//சச்சின் 115* - செஞ்சுரி அடிக்கறதுன்னா இந்தாளுக்கு விளையாட்டா இருக்கு!//
ரசிச்சேன்..
சுவாரசியம் உங்கள் கைப்பழக்கம்.
பதிவு அருமை.........வாழ்த்துகள்
Hello krishna sir,
Naan 1 Year a unga blog paakurean. unga photo vikadanla paarthathu romba makilchi. vaalthukkal sir.
வாழ்த்துக்கள்.. புது வீட்டுக்கும்..
வாழ்த்துக்கள் பரிசல்....
விகடன் பற்றிய செய்தி பகிர்வு நெகிழ்வு..
சார், சிவகாசி பக்கம் வந்தா போன் செய்ங்க. என் நம்பர் - 9994044777. கண்டிப்பா ஒரு வாட்டீ வர்ரீங்க.
வாழ்த்துகள் பரிசல்!
வழக்கம்போல் அவியல் அருமை!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
அவியல் நல்லாவே வெந்து ஸாரி... வந்து இருக்கு.. அப்புறம் எனக்கும் இந்த மாதிரி பத்தி எழுதும் இடம் நல்லா அகலமா இருக்குறமாதிரி டெம்ப்ளேட் வேணும்... கொஞ்சம் தயவு பண்ணுங்களேன் தல
முதலிய-ஆகிய- போன்ற பயனுள்ள பகிர்வு. நன்றி பரிசல்.
நண்பர் பழமைபேசியின் விளக்கத்திற்கும் நன்றி.
நான் சென்னை வந்தபோதும் விகடன் வாசலுக்கு ஏதோ ஒரு பெரும் ஆர்வத்தோடு சென்று வந்தது நினைவில் வருகிறது. நான் வாசலோடு நின்று விடாமல் மேலே புத்தகப்பிரிவுக்கு சென்று விகடன் பிரசுர புத்தகம் சில வாங்கித் திரும்பினேன். எனது ஒருபக்கக்கதை வெளியான போது ஏற்பட்ட மகிழ்ச்சியை உணர்வோர் உணர்வர்.
யாரும் சொல்லாமலே ரமேஷ் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக இப்படித்தான் நான் எண்ணினேன். அப்போ எனக்கு தமிழறிவு நிறைய இருக்கிறதா? அவ்வ்.. போங்கு இது.
குறும்படம் சும்மா டைம்பாஸ்தான். அதிலும் உருப்படியாக எதுவும் செய்வோம் இனி. பாராட்டுக்கு நன்றி. (கொஞ்சம் ஓவரோ?)
சுராவின் கவிதையின் முடிவு பிரமிப்பு.
ட்விட்டர் வரிகள்.. பல ரசனை, சில அல்ல.
//
‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன?//
:)))
விகடனில் ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து வைத்து இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்..
நல்லா இருக்கு பரிசல். விகடனில் வந்தமைக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
Post a Comment