(இது ஒரு மீள்பதிவு )
******************************
எனக்கு அவனை பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். இடையில் தொடர்பற்றுப் போனது. இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மீண்டும் அவனோடு பழக்கம்.
அவன் ஒரு குடிகாரனல்லன். ஆனால் அவ்வப்போது குடிப்பான்.
டாஸ்மாக் பார்களைப் பொறுத்தவரை அதன் ஒழுங்கின்மை அவனுக்கு மிகவும் பாதிப்பைத் தரும். ஆனால் ஒரு சில சிறப்பானவைதான்.
பொள்ளாச்சியில் ஒரு டாஸ்மாக் பார். (அப்போது ஏது டாஸ்மாக்? செந்தூர் ஒயின்ஸ் என்று ஞாபகம்) அது அவனுக்கு மிகப் பிடித்தமானது. காரணம் அங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம். இன்று வரை அவனுக்கு அந்த சுகம் வேறெங்கும் கிட்டவில்லை.
சாம்பார் வடை என்றதும் அவனுக்கு வேறொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருமுறை அவன் திண்டுக்கல்லோ, ஒட்டன்சத்திரமோ போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சாம்பார் வடை கேட்டான். சர்வர், “சாம்பார் இருக்கு, வடை இருக்கு. ரெண்டையும் தர்றேன் சாப்பிடுங்க” என்றிருக்கிறான். இவன் “இல்லீங்க உளுந்து வடையை சாம்பார்ல ஊறவெச்சிருப்பாங்க. அதுதான் சாம்பார்வடை” என்றிருக்கிறான். சர்வரோ விடாப்பிடியாய் ‘நான் முப்பது வருஷமா பல ஊர்ல பல ஹோட்டல்ல சர்வர் வேலை பாத்தவன். சாம்பார் வடைன்னு ஒண்ண நான் கேள்விப்பட்டதே இல்ல’ என்றிருக்கிறான். இவனுக்கு கோவம் வந்து வாக்குவாதமாகி, கவுண்டர் ஆசாமி வந்து சமாதானப் படுத்தி.... ப்ச்.. அது தனிக் கதை! (அதுதான் சொல்லீட்டில்ல! அப்பறம் என்ன!!)
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆங்... டாஸ்மாக் பார்களைப் பற்றி...
சென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது். டாஸ்மாக் பார்களில் இருக்கும் எந்தவிதக் கூச்சல், குழப்பமோ, பீடி, சிகரெட் குப்பைகளோ, சர்வரின் அலம்பல்களோ அங்கே பார்க்க முடியவில்லை. ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு பணிவிடை இருந்ததாம். ‘இல்லீன்னா நாங்கல்லாம் இங்க வருவோமா?’ என்று அவன் நண்பர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவனிடம் இதைச் சொன்னபோது நம்பவே இல்லை. 'மொதல்லயே அடிச்சுட்டுப் போயிருப்ப. டாஸ்மாக் பார் ஏ.ஸியாம்... பெரிய ஸ்க்ரீன்ல படமாம்' என்று கிண்டலடித்தான். ஒருமுறை அவனை அங்கே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
கோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.
தனியார் பார்களில் சைட் டிஷ்களுக்கு ஆகும் நேர விரயம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ஒருமுறை நண்பர்களோடு சென்றிருந்தபோது ‘பள்ளிபாளையம்’ என்று அவர்கள் ஆர்டர் செய்தார்கள். ‘அதென்னடா’ என்று விசாரிக்க (நண்பனுக்கு நான்வெஜ் பரிச்சயமில்லை) ‘சிக்கனை அந்த ஊர் ஸ்டைலில் செய்வார்கள்’ என்று பதில் வந்தது. அந்த பள்ளிபாளையம் வர ‘கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருடா’ என்று அவர்கள் சொல்ல இவன் ஸ்போர்க்கால் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு ‘நல்லாத்தான் இருக்கு’ எனச் சொல்ல ‘நீ எடுத்தது தேங்கா. சிக்கனைச் சாப்பிடு’ என்று மிரட்டப் பட்டிருக்கிறான்.
இரண்டாவது முறை அந்த பள்ளிபாளையத்தை ஆர்டர் செய்து அரை மணிநேரம் கழித்து வந்தபோது உப்பு அதிகம் என்று சொல்லி திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட அந்த பள்ளிபாளையம் அதே ப்ளேட்டில் கொஞ்சம் சூடுசெய்யப் பட்டு எந்த மாறுதலுமின்றி வந்தபோது ‘ஆங்.. இது ஓக்கே’ என்று நண்பர்களால் பாராட்டப் பட்டு உட்கொள்ளப் பட்டபோது இவன் எந்த வித்தியாசமுமறியாமல் சர்வரைக் கேட்டபோது ‘மாஸ்டர் கால்மணிநேரம் கழிச்சு இதையே குடுன்னு குடுத்தார். மப்பு ஏறியிருக்கும்ல.. அதான் ஒண்ணும் வித்தியாசம் தெரியல’ எனச் சொல்லப்பட்டான்.
அவனை நான் மதிக்கக் காரணம் குடித்துவிட்டு உளறவோ, கூத்தடிக்கவோ அவனுக்குத் தெரியாது. அதிக பட்சம் அவன் குடித்துவிட்டுச் செய்யும் கொடுமை என்னோடு பேசிக் கொண்டிருப்பதுதான்.
“டேய்.. நீ பெரிய எழுத்தாளனாடா?”
எனக்கு பகீர் என்றாகும். எழுத்தாளன் என்பதே பெரிசு. இதில் பெரிய எழுத்தாளன் வேறா.. அடக் கடவுளே....
“எழுத்தாளன்னெல்லாம் இல்லடா. ஏதோ கிறுக்கீட்டிருக்கேன்”
“அப்ப நான் சொல்றத எழுதுடா”
“சொல்லு”
“நேத்து என் கம்பெனில ஒரு நாதாரி என்ன பண்ணினான் தெரியுமா?”
“தெரியாது... சொல்லு”
“அவனுக்குக் கீழ வேலை பாக்கற ஒரு பொண்ணுக்கு ஒடம்பு சரியில்ல. காய்ச்சல்-ன்னு லீவு கேட்டிருக்கு. இவன் வேணும்னே அவ கழுத்துல கை வெச்சுப் பார்த்து, ‘காய்ச்சலெல்லாம் இல்லியே’ ன்னுருக்கான்.அதுக்கு அந்தப் பொண்ணு ‘உள் காய்ச்சல் இருக்குங்க’னிருக்கு. அதுக்கு இந்தக் கம்மனாட்டி என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?”
“...........”
“’உள் காய்ச்சல்ன்னா.. உள்ள கை வெச்சுப்பார்க்கவா’ ன்னிருக்கான்”
“அவனைச் செருப்புல அடிக்கலியா நீ?”
“எனக்கு மேல வேலை செய்யற நாயி அவன். ஒண்ணும் பண்ண முடியல. இப்படித்தான் போன மாசம் என்னாச்சுன்னா..”
இப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.
அது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்..
*
18 comments:
kalakkal
நமக்கு குடிக்கிற பழக்கம் இல்லன்னாலும் நண்பர்கள் குடிக்கும் போது அவர்களுடன் சைடிஷ் சாப்பிடும் பழக்கம் உண்டு.. சில சமயங்களில் அவர்கள் பேசுவது எரிச்சலாக இருந்தாலும் கேட்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்... திடீரென்று கொவப்படுவார்கள்..சட்டென்று பாசமாக பேசுவார்கள்.. ரோட்டல போறவன் வரவனையல்லாம் சண்டைக்கு கூப்பிடுவார்கள்.. அதிலும் லவ் பண்ணின கதைகளை பற்றி சுவாரசியமாக பேச ஆரம்பித்து திடீரென அழ ஆரம்பித்து விடுவார்கள்.. அவர்களை சமாதனப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்... இப்படி என்ன தான் அலப்பறை செய்தாலும் அவர்களை அரவணைக்கத் தான் தோன்றுமே தவிர என்றுமே அப்புறப்படுத்த தோன்றியதில்லை..
நண்பர்கள் நண்பர்களாக இருக்கும் நேரம் இந்த டாஸ்மார்க் நேரம் தான்
\\(இது ஒரு மீள்பதிவு )\\
\\அது தனிக் கதை! (அதுதான் சொல்லீட்டில்ல! அப்பறம் என்ன!!)\\
\\எனக்கு பகீர் என்றாகும். எழுத்தாளன் என்பதே பெரிசு. இதில் பெரிய எழுத்தாளன் வேறா.. அடக் கடவுளே....\\
இப்படி சந்தோஷ் சுப்ரமண்யம் படத்துல வருகிற பிரகாஷ்ராஜ் மாதிரி எங்க ஆட்டத்தையும் நீங்களே ஆடினா என்னத்த பின்னூட்டம் போடறது:)
//
அது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்
//
அவர் கூட அடுத்த ரவுண்டு கிளம்பிட்டீங்களா???
வணக்கம். இந்த பதிவிற்காக நீங்கள் முத்தமிழ் அறிஞர்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
சென்னையில் சின்மயா நகர்ல இன்னும் இருக்கு.. அடுத்த தடவை வரும் போது போலாம்..:)
நண்பரே வணக்கம்,
நான் இப்போதுதான் புதிதாக எழுத வந்துள்ளேன். இதுவரை நான் படித்த பதிவுகளில் உங்களுடையதும் எனக்கு மிக பிடித்தமான ஒன்று. காரணம் மிக எளிய எழுத்து நடை, அருகில் உட்கார்ந்து பேசுவது போலான சொல் பிரயோகம். இது போன்ற எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நானும் சில பதிவுகள் எழுதியுள்ளேன். உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
http://yaavarumnalam.blogspot.com/
நன்றி.
தலைப்பு மிகவும் கவனமாக எடுத்து கையாளப்பட்டுள்ளது :-)
ஆமா இதெல்லாம் அவர் செஞ்சதா? இல்லை? நம்புறோம்!!!!
நல்லா இருக்குண்ணே.. இந்த நண்பனை டெய்லி கண்ணாடியில மீட் பண்ணுவீங்களோ?
:)
சூ..சூ..சூப்பர்
yuvakrishnava antha kudikaaran?
superb! :-))
மீள் பதிவிற்கு நன்றி கிருஷ்ணா!
கிருஷ்ணா பதிவு அருமை...
//
அது இப்'போதை'க்கு நிற்காது.
//
Keep Going.
//நன்றாக இருந்தது ...இது ஒரு மீள் பின்னூட்டம்
அச்சச்சோ.. மாப் என் கைல குடுத்துடாந்திங்க..
நல்லா இருக்கு.
Close to T.Nagar (in Chennai) there is a bar called - ARUNA. Excellent service I had over there. Especially KF with Rasa Vadai.. Hmmmmm.. One server boy Mr.Manikandan, used to serve us. He used to bring more rasa vadai plates for me...
Post a Comment