Wednesday, October 27, 2010

நீயா நானா - சில குறிப்புகள்

“சார்.. நல்லா உடம்பு வந்துடுச்சு உங்களுக்கு”

“என்ன போஸ் குடுத்துட்டிருக்க? எப்ப பேசுவ?”

“ஐ.. ஷர்ட் சூப்பர்”

“கிருஷ்ணா.. இது லைவ்வா? நீ சென்னைல இருக்கியா?”

“ஹலோ சார்.... நீங்களா அது? நீங்களா.. நீங்கதானா? ரொம்ப குண்டா இருக்கீங்க சார்..”

ஒரு ஒன்றரை மணிநேர ப்ரோக்லாம்ல மூணு நாலு வாட்டி டிவில மூஞ்சி வந்ததுக்கு எத்தனை ஃபோனு.. எத்தனை எஸ்ஸெம்மெஸ்ஸு.. என்னென்ன க்ரிடிக்ஸு.. பாராட்டு.. கிண்டலு..... அப்ப்பப்பப்பா... ரஜினிகாந்தையெல்லாம் கோயில் கட்டிக் கும்பிடணும்டா சாமி!

** ** ** **





போன வியாழக்கிழமை செல்வேந்திரன்தான் கூப்ட்டார். விஜய்லேர்ந்து அழைப்பு வரும்ன்னு. கொஞ்ச நேரத்துல வந்துச்சு.. ‘வெள்ளிக்கிழமை மூணு மணிக்கு வாங்க. 4 மணிக்கு ஷூட்’னாங்க.. ஏற்கனவே போன நம்ம மக்கள்ஸ்.. ‘மூணு மணின்னா ஆரம்பிக்கவே எட்டாகும்’னாங்க. நான் அன்னைக்கு நைட் கிளம்பியே ஆகணும். அதுனால போவோம்.. 9க்குள்ள ஷூட் முடியும்னா கலந்துப்போம்.. இல்லைன்னா வந்துடலாம்னு போனேன்.

அஞ்சரைக்கு ஷூட் ஆரம்பிச்சு, எட்டேமுக்காலுக்கெல்லாம் முடிச்சுட்டாங்க..

புதிய பண்டிகை நாட்கள் தேவையா இல்லையாங்கறதுதான் தலைப்பு. பண்டிகை நாட்கள்னா ஃப்ரெண்ட்ஷிப் டே, வாலண்டைன் டே, மதர்ஸ் டே... இப்படி...

தேவையில்லைங்கற டாபிக்ல நான்.

இளையராஜாவுக்கு முதல்ல கரண்ட் போச்சாம், சச்சின் ஃபர்ஸ்ட் மேட்ச்ல டக் அவுட்டாம்.. அதே மாதிரி நான் செட்டுக்குள்ள போனதும் இருந்த ஒரு பெரிய இடைவெளில தொபுக்கடீர்ன்னு விழுந்தேன். (நான் உட்கார்ந்திருக்கறதுக்கு முன்னாடி கருப்புல தெரியறது குழி..! தரை இல்ல..)

சரி.. இனி சில கணக்கு. இது தோராயக் கணக்குதான்...

மொத்த ஒளிபரப்பு நேரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். அதுல கோபிநாத் பேசறது அரை மணி நேரம் வரும். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம்.

இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ஒரு 45 பேர் இருப்பாங்க. ஆக, ஒரு நிமிஷம் பேச சான்ஸ் கிடைச்சா நீங்க போன ஜென்மத்துல யாரோ வயசானவங்களுக்கு ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணிருக்கீங்கன்னு அர்த்தம்.

இதுல ஏன் பேசல ஏன் பேசலன்னு கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல?

எனக்கு அஞ்சு வாட்டி சான்ஸ் கிடைச்சுது. நானும் பேசினேன். ரெண்டு எடிட்டிங்ல போக, மூணு வாட்டி பேசினதைக் காமிச்சாங்கன்னாங்க. (நான் பார்க்கல... ட்ராவல்ல இருந்தேன்) அது போக ரெண்டு மூணு வாட்டி க்ளோஸப்ல காட்டினாங்க... இதுக்கு மேல அடிக்கடி என்கிட்ட மைக்கைக் குடுத்துப் பேச்ச் சொல்ல நான் என்ன அன்னைக்கு வந்த ரேடியோ ஜாக்கி சிவசங்கரி மாதிரி KNOWN FIGURE ஆ?

:-)

ஆனா இந்தப் பக்கம் ஒரு பத்து பேரு, அந்தப் பக்கம் ஒரு பத்து பேரு ஒண்ணுமே பேச சான்ஸ் கிடைக்காம உட்கார்ந்திருப்பாங்க. அவங்கதான் பாவம்.

ஆகவே நண்பர்களே...

**** ***** ******


# எந்த டாபிக் சொல்லி பேசக் கூப்டாலும், அதுல உங்களுக்கு உடன்பாடா இல்லையான்னு யோசிச்சு ஒத்துக்கோங்க. நான் “ஸ்பெஷல் டேஸ் தேவையில்லைன்னு பேச வர்றீங்களா’ன்னு கூப்டதுக்கு சரின்னுட்டுப் போய்ட்டேன். ஆக்சுவலா என் போன்ற கொண்டாட்ட மனநிலை கொண்டவனுக்கு (நன்றி: சாரு) இந்த நாட்களை ஆகோஷிப்பது பிடிக்கவே செய்கிறது. (ஆதாரம்: இதோ)

அந்த மாதிரி நமக்கு மனதளவில் உடன்படாத பக்கத்துக்குப் போய் உட்கார்ந்தா இப்படி சரியானபடிக்கு பேச முடியாமப் போகலாம்.

# முதல் வரிசைல முதல் ஆளா உட்காரச் சொன்னா, சொன்னவனை கிழக்க பார்த்து நிக்க வெச்சு சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மறுத்துடுங்க. என்னை இப்படித்தான் அசிஸ்டெண்ட் ஒருத்தர், ஒரு பொண்ணுகிட்ட ‘இவரை ஏ-ஒன்ல உட்கார வைங்க’னாரு. அந்தப் பொண்ணும் கூட்டீட்டுப் போய் ஃபர்ஸ்ட் ரோ-வுல, ஃபர்ஸ்டா உட்கார வெச்சுது. நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....

என்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். அதே நாலாவது, அஞ்சாவது ஆளா இருந்தா கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சுதாரிச்சுக்கலாம்.

# ஆடத் தெரியாதவனுக்கு’ன்னு நெனைக்காதீங்க. இதையும் மீறி என்னாகுதுன்னா, எதிரணில யாராவது பேசறப்போ உங்களுக்கு சரியானதொரு பாய்ண்ட் ஞாபகத்துக்கு வந்து, பேசலாம்னு பார்த்தா மைக் அஞ்சாவது லைன்ல ஒருத்தன்கிட்ட இருக்கும். அவன் என்னமோ உங்க ஜென்ம விரோதி மாதிரி மூஞ்சியை வெச்சுகிட்டு, கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.

அதையும் மீறி.. திரும்பி அவன் குடுக்கலாம்னு முடிவு பண்ணி பாஸ் பண்ணினாலும் அந்த மைக் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உங்ககிட்ட வரணும். ம்ஹூ.. சான்ஸே இல்லை.

இந்த மைக் பாஸிங் விளையாட்டு போன பத்தாவது நிமிஷமே எனக்குப் புரிஞ்சு போய், ‘போங்கடா’ன்னு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்துட்டேன். அப்படியும் ஒருக்கா மைக் கேட்டதுக்கு, ஒருத்தன் கேஸ் போட்டுடுவான் போல.. அப்படிப் பார்த்தான்.. விட்டுட்டேன்.

# டிஃபன், டீ, காஃபி, கேசரி, சுண்டல் எல்லாமே தர்றாங்க. நல்லாருக்கு.

# அங்க போய் உங்க மேதாவித் தனத்தைக் காட்டறத அவங்க விரும்பறதே இல்லை. போனமா, பேசினமா வந்தமான்னு இருக்கணும். ஒருத்தன் கோபிநாத்கிட்ட ட்ரெடிஷனல் டே பத்திப் பேசி ‘நீங்களே வேட்டி கட்டறதில்லையே’ன்னு கேட்டு எடிட்டிங்ல மாட்டிகிட்டான். தேவையா இது?

# டைரக்டர் ப்ரேக் டைம்ல வந்து டிப்ஸா தர்றாரு. அவரோட டெடிகேஷன் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

# போன வெள்ளிக்கிழமை ஷுட் பண்ணினது, அஞ்சாறு வாரம் கழிச்சு வரும்ன்னு நெனைச்சேன். ஞாயிறன்னைக்கே போட்டுட்டாங்க..!

மறுபடியும்...

அழைத்துப் பேசிய, காலாய்த்த, எஸ்ஸெம்மெஸ்ஸிய, மெய்ல் அனுப்பிய, பாராட்டிய, திட்டிய அனைவருக்கும் நன்றி.

----------------------

நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.

‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’
--------------------------------------------

நிகழ்ச்சியின் லிங்க் இங்கே.

*** *** ***

Monday, October 25, 2010

க்ரிக்கெட்டும் நானும்... (மீள்ஸ்)


ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!


.

Wednesday, October 20, 2010

கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு



கம் ஆன், காமினி


அந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. சுத்தம் என்பதை விட வெறுமையாக இருந்தது என்பது தான் சரியான வார்த்தை. அவள், அவன் மற்றும் அந்த சித்திரத்தைத் தவிர அவ்வறையில் வேறு பொருட்கள் இல்லை. மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும் காமினியின் பார்வை சுற்றுப்புறத்தை ஆழமாக அளவிட்டுக் கொண்டிருந்தது. அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். வேறு யாரும் தேடி கண்டுபிடிக்கும் முன் வைரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வம், வெறி அவள் முகத்தில் தெரிந்தது.

‘ஆளையும் முழியையும் பாரு’ என்று சிவாவை முறைத்துக் கொண்டே, ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அதே சித்திரத்தை திரும்பவும் ஆராய்ந்தாள். அதில் சந்திரமுகி படத்தில் வருவது போல ஒரு கதவு, அதன் கீழே ஒரு மிதியடியில் “Welcome Back” என்று எழுதப்பட்டிருந்தது. வைரத்தை அடையும் ஒரே வழி இதில் மறைந்துள்ள செய்தியை அறிவது தான், ஆனால்...

Welcome Back.. மறைந்துள்ள செய்தி.. இந்த எண்ணம் ஓடியதும், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காமினி சட்டென்று எதிர்புறம் திரும்பினாள். படத்திற்கு நேர் எதிரே உள்ள சுவற்றை தட்ட, சுவற்றோடு ஒன்றி போய் இருந்த கதவு திறந்து கொண்டது. அந்த அறையின் சுவற்றில் பெரிதாக 234445387 என்ற நம்பர் எழுதியிருந்தது. அதன் பக்கத்தில் கண், கடல் ஆகிய படங்களும், அதன் அருகில் ‘நீ’ என்ற வார்த்தையும் எழுதியிருந்தது. சிவா அவளை குழப்பத்துடன் பார்க்க, காமினி ஒரு புன்னகையுடன் தன் கைபேசியை இயக்கிக் கொண்டிருந்தாள்.

‘என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில உள்ள SM ஹாஸ்பிடலோட நம்பர் அது. கண் – Eye = I, கடல் – Sea = C, நீ = U. ஸோ, அந்த ஹாஸ்பிடலோட ICU வார்ட்ல ஏதோ குறிப்பு இருக்கு.. சீக்கிரம் அங்கே போவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்’ என்று அவள் சொல்லி முடிக்கும் நேரம் சிவா காமினியின் மூக்கில் ஒரு கர்சீப்பை வைத்து அழுந்த மூடினான். இது என்ன வாசனை, என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே காமினி மூர்ச்சையானாள்.

------------------------------------------------

மயக்கத்தில் இருந்து காமினி எழுந்த போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள். முகத்தில் மாஸ்க், கையில் ட்ரிப்ஸ் மற்றும் சில வயர்களும், அங்கிருந்த மெஷின்களும் அவளை பயமுறுத்தின. டாக்டர் சிவாவிடம் “உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில எழுந்திடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல இருவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.

‘சிவா ஆபத்தானவன். ஏதோ சதி நடக்கிறது. இவனிடம் இருந்து முதலில் தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள். குறிப்பில் இருந்த அறை இதுவாகத் தான் இருக்கும் என்பது புரிய, அறை முழுவதையும் கண்களால் துழாவினாள். எழுந்து தேடலாம் என்று மாஸ்க்கை கழட்ட போகும் போது டாக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார். வேறு வழியில்லாமல் பாதி முடிய கண்களால் அசுவாரசியமாக நோட்டமிட்டவள் பார்வையில் அது பட்டது.

ரிப்போர்ட்டில் எதையோ எழுதிவிட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். நல்லவேளை சிவாவிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே பைப்பை பிடித்து இறங்கியவள், பைக்-கை ஸ்டார்ட் செய்து அவள் வருகைக்காக ரெடியாக நின்ற சிவாவை பார்த்து திகைத்தாள்.

‘உனக்கு.. உங்களுக்கு எப்படி நான் வருவது தெரியும்’ என்று திணறியவாறே கேட்டாள். ‘என் மனைவி என்றவுடன் உன் பல்ஸ் ரேட் ஏறியதை அந்த மெஷின் காட்டிவிட்டது. மயக்கம் தெளிந்து விட்டதால், குறிப்பை கண்டுபிடிக்க உனக்கு டைம் கொடுத்து விட்டு, உனக்காக இங்கே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்’ என்றான் சிவா. ‘சரி, என்ன கண்டுபிடுத்தாய்’ என்று கேட்டவன், அவள் பதில் சொல்ல தயங்கவும், ‘என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது, போலிஸுக்கு தகவல் கொடுக்கக் கூடாது என்பது உனக்கு இடப்பட்ட உத்தரவு. மறந்து விடாதே’ என்று அழுத்தமாக கூறினான்.

காமினி அந்த அறையில் இருந்த எடுத்து வந்த டவலை அவனிடம் காண்பித்தாள். ‘இந்த டவலில் இருக்கும் Patternஇல் Morse Code உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், ரகசிய செய்திகள் இந்த முறையில் நெய்யப்பட்டு, ஒற்றர்கள் அணியும் ஆடைகளில் சேர்க்கப்பட்டன. இது ஒரு வகை Steganography. இந்த காலத்தில் படங்களுக்குள் செய்திகளை ஒளித்து இண்டெர்நெட் மூலமாக அனுப்புவது போல’ என்று சொல்லிவிட்டு அந்த டவலை ஆராய்ந்தாள். இன்னும் அங்கே நிற்பது ஆபத்து என்பதால், இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி அருகிலிருக்கும் பார்க்-கில் நுழைந்தனர்.

அந்த டவலில் இருக்கும் குறிப்பை படித்து கண்டுபிடிக்க காமினிக்கு அரை மணி நேரமானது. முடித்ததும், அந்த பேப்பரை சிவாவிடம் நீட்டினாள். அவ்வளவு நேரம் சோம்பலுடன் படுத்துக் கொண்டிருந்த சிவா ஆர்வத்துடன் எழுந்து படித்தான். அதில்..

55, LAKSHMANAN ST, GANDHI NAGAR, PALLAVARAM

A THEFT REVISION

என்று எழுதியிருந்தது. “அந்த அட்ரெஸ் காலையில் நம்ம முதலில் இருந்த அதே இடம் தான். ஆனா, ரெண்டாவது லைன் தான் என்னன்னு புரியல. எதற்கும் அங்கேயே போய் பார்ப்போம்” என்றாள் காமினி.

அடுத்த பதினைந்து நிமிடத்தில், காலையில் பார்த்த அதே ‘Welcome Back’ அவர்களை திரும்பவும் வரவேற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மூலை முடுக்கு எல்லாம் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்வளவு அலைந்த பின்னும் வைரம் கிடைக்கவில்லை என்ற நினைப்பு சோர்வை அதிகமாக்கியது. எரிச்சல் மேலிட அவனுடைய டீசர்ட்டில் இருந்த “Admirable?? I’m real bad!!” என்பதை பார்த்த உடன் கைபேசியை இயக்கினாள்.

வியப்பு மேலிட சிவாவைப் பார்த்து “Anagram!! வார்த்தை விளையாட்டு!! A THEFT REVISION என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை பிரித்து சேர்த்தால் ‘IT IS OVER THE FAN’ என்று வருகிறது” என்றாள். தாமதிக்காமல், சிவா ஃபேனை கழட்ட மேலிருந்து ஒரு வெல்வட் டப்பா கீழே விழுந்தது. உள்ளே பளபளவென்ற வைரமும் ஒரு அட்ரஸும் இருந்தது. நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த அட்ரஸுக்கு இருவரும் விரைந்தனர்.

அந்த வீட்டின் வரவேற்பறையை நுழைந்த அந்த நிமிடம், “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. உடனே, காமினி அவன் பின்புறம் பார்த்து “நீங்களா??” என்று அதிர்ச்சியுடன் திடுக்கிட்டாள். அதைக் கேட்டு சிவா தடுமாறிய அந்த நொடியில் அவளுடைய கராத்தே கை கொடுக்க, அடுத்த நொடி துப்பாக்கி காமினியிடம் இடம் மாறியிருந்தது. அதே நேரம், அறைக்குள் வந்து கொண்டே,காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“இல்லை, என்னை அறியாமல் எதாவது சதி வேளையில் ஈடுபடுத்த பட்டிருக்கிறேனோ-ன்ற சந்தேகம் இருந்ததால், காலையில் இருந்து இங்கே நுழையும் வரை உள்ள தகவல்களை எல்லாம் என் மொபைல் வழியாக ஒரு mailஆக போலீசுக்கு எழுதி வைத்திருக்கிறேன். நாளை 10 மணிக்கு முன் நான் அதை delete செய்யாவிட்டால் அது automatically send ஆகிவிடும்.” என்று சொல்லிவிட்டு பரந்தாமனை பார்த்தாள்.

பரந்தாமன் சிரித்த படியே “வெல்டன் காமினி.. எங்கள் குழுவில் Investigative Journalist-ஆக சேர்வதற்கு முழு தகுதியும் உனக்கு இருக்கிறது. இந்த வேலைக்காக நாங்கள் தேர்வு செய்த ஐந்து பேரில் நீ தான் முதலில் வைரத்தை கண்டுபிடித்திருக்கிறாய். உங்களுடைய அறிவையும், ஆர்வத்தையும், தைரியத்தையும் சோதிப்பதற்காகவே இந்த போட்டி. உங்களை கண்காணிக்க ஒரு சீனியரை ஒவ்வொருவருடனும் அனுப்பி வைத்தோம். அப்படி உன்னுடன் வந்தவர் தான் சிவா.


எங்களை முழுவதாக நம்பாமல், நாங்களும் உன்னை சதி வேலையில் ஈடுபடுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணி போலிசுக்கு mail எழுதிய உன் சாமர்த்தியத்தை பாராட்டுகிறேன். நாளையில் இருந்து நீ வேலையில் சேரலாம்” என்றார். காமினி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தன்னுடைய லட்சிய கனவான வேலையை பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தாள்.

*******************************************

குறிப்பு: நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த படி - அனு எழுதிய சிறுகதை இது. பின்னூட்டங்கள் மட்டுமே எழுதி வந்தவரின் இந்த முதன் முயற்சியைப் பாராட்டுவோம்.
-பரிசல்காரன்
.

Tuesday, October 19, 2010

சவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு - (2)

.
முந்தைய நாற்பது கதைகளின் இணைப்பிற்கு இங்கே செல்லவும்.

---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------


41. காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

42. காமினி - பிரபாகரன்.ஜி.

43. டைமண்ட் 2 - முகிலன்

44. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ

45. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி

46. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்

47. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்

48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்

49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்

51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி

52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

53. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி

54. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி

இவர் எழுதிய கதைகள் இரண்டு. இவர் வலைப்பூ இணைப்பும் கொடுக்கவில்லை. வலைப்பூவில் எழுதியிருந்து அதைத் தெரிவித்தால் இணைப்பு கொடுக்கிறேன். இல்லை அவர் விருப்பமுடன் - அனுமதி அளித்தால் - என் வலைப்பூவிலேயே அவர் கதையை வெளியிடுகிறேன்.

அப்டேட்: இவரும் வலையில் வெளியிட்டுவிட்டார். இணைப்பு அளிக்கப்பட்டு விட்டது.

55. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி

56. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்

57. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா

58. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி

59. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

60. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி

62. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்

63. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்

64. திருடி - சாம்ராஜ்ப்ரியன்

65. காமினி - அப்பாவி தங்கமணி

இவர் இன்னும் கதையை தன் வலையில் வெளியிடவில்லை. ஆகவே கதைக்கு இணைப்பு கொடுக்காமல் அவர் பெயருக்கு, அவரது வலைப்பூவையே இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.


66. காம்ஸ் - விசா

67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி

இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்.

அப்டேட்: இவர் வலையில் வெளியிட்டு விட்டார். இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.

68. காதல் ரோபோ - ஷைலஜா

69. அதே நாள் அதே இடம் - சத்யா

70. எந்திரன் - நீச்சல்காரன்

71. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

72. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்

73. பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்

74. கம் ஆன், காமினி - அனு

இவருக்கும் வலைப்பூ இல்லை. பின்னூட்டத்திற்காக துவங்கிய ப்ரொஃபைல் இணைப்புதான் கொடுத்திருக்கிறேன். இவர் அனுமதி கிடைக்குமாயின் என் வலையில் இவர் கதை வெளியிடப்படும்.

75. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்

76. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி

77. சிவா - ஸ்டார்ஜன்

78. காடு வித்து கழனி வித்து - கிரி

79. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்

80. காமினியீயீயீயீ - இரும்புத்திரை

81. தொலைந்து போன நிஜங்கள் - HVL

82. காணாமல் போன கதை - நந்தா

83. சவால் - புதுவை பிரபா

83. வைரம் உன் தேகம் - அபி


__________________________________________________

யாருடைய கதையாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

மீண்டும்... நன்றியும் வாழ்த்துகளும்!


.

Sunday, October 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு (1)

பிரமிப்பாய் இருக்கிறது என்ற சொல்லைப் படித்திருக்கிறேன்.. எழுதியிருக்கிறேன்..

உணர்வது இதுவே முதல்முறை!

நாங்கள் அறிவித்த இந்த சிறுகதைப் போட்டிக்கு பதிவர்களின் ஆதரவு, முழுக்க முழுக்க அன்பு வயப்பட்டதேயன்றி வேறில்லை. கிட்டத்தட்ட 75 + கதைகள்.

அனைத்தையும் தொகுத்து இங்கே தரச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற்கட்டமாக 40 கதைகளின் அணிவகுப்பு இங்கே.

மற்றவை அடுத்த பதிவில்.

பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்..

***********************


1. காமினி - பலா பட்டறை ஷங்கர்

2. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்

3. விபூதி வாசனை - விதூஷ்

4. டைமண்ட் - முகிலன்

5. தெய்வம் - பலா பட்டறை ஷங்கர்

6. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்

7. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்

8. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்

9. மணிகண்டன் விஸ்வநாதன் (இவர் எழுதின கதை இங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது)


டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.


(முற்றும்)

இதுதான் அவர் எழுதி அனுப்பின கதை. லிங்கெல்லாம் குடுக்கல.. பாராட்டறவங்க இங்கயே அவரைப் பாராட்டலாம்.



10. காமினி என் காதலி - ஆசியா உமர்

11. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்

12. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்

13. எஸ்கேப் - ரோமியோ

14. டைமண்ட் - சுபாங்கன்

15. காமினி - மயில் ராவணன்

16. காமினி என்னைக் காப்பாத்து - விஜி

17. காமினி - கோபி ராமமூர்த்தி

18. கேரக்டர் காமினி - அன்னு

19. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

20. அய்யோ! தீ!! தீ!!! - சி. எஸ். வீரராகவன்

21. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை

22. இனிமேல் வசந்தம் - வானதி

23. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி

24. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்

25. காட்சிப்பிழை - செல்வகுமார்

26. அக்டோபர் 1: கவர் ஸ்டோரி - கோபி ராமமூர்த்தி

27. கமான்.. கமான்.. காமினி - வித்யா

28. கணினி எழுதும் கதை - கோபி ராமமூர்த்தி

29. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்

30. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி

31. காமினி - ராஜகுரு பழனிசாமி

32. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி

33. டைமண்ட் - குகன்

34. நண்பண்டா - இம்சை அரசன் பாபு

35. வெல்டன் காமினி! - டி வி ராதாகிருஷ்ணன்

36. உளவாளி - குகன்

37. வைர விழா - R V S

38. நடுநிசி மர்மம் - இரகுராமன்

39. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஜி.ஒய். ராமன்

40. காமினி - நசரேயன்


(பிற கதைகளின் தொகுப்பு அடுத்த பதிவில் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில்..!)


குறிப்பு:

வலைப்பூ இணைப்பு தவறாக இருந்தாலோ, நீங்கள் வலையில் எழுதி நான் இணைப்பு கொடுக்காமல் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.




.

Thursday, October 14, 2010

சவால் சிறுகதைப் போட்டி - அப்டேட்

வால் சிறுகதைப் போட்டிக்கு இதுவரை ஐம்பது கதைகள் வந்திருக்கின்றன.

உங்கள் ஆர்வமும், பங்கேற்பும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

கதைகளின் பெயர் மற்றும் இணைப்பை நாளையோ, நாளை மறுநாளோ தருகிறேன்.

சிறுகதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15 அக்டோபர் இந்திய நேரம் 12 மணி.

முடிவுகள் நவம்பர் 15 அன்று வெளிவரும்.

நேரடியாக, மறைமுகமாக இந்த சிறுமுயற்சிக்கு உதவிய, உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

போட்டி பற்றி அறிய http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html


.

Tuesday, October 12, 2010

பொக்கிஷம்

ண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.

“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”

“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”

“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.

இதிலென்ன இருக்கு?

பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!

***** ***** ***** ***** *****

ந்தக் கவிஞர் தனது நண்பர்களோடு சிற்றுண்டிக்கு செல்கிறார். தோசை கொண்டுவரச் சொல்கிறார்கிறார்கள். பணியாளர் தோசையுடன் வரத் தாமதமாகிறது. தூரத்தே அவன் வரும்போது நண்பர்கள் கவிஞரிடம் “அவனுக்கு சட்’டென்று ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள். பக்கத்தில் அவன் வந்ததும் ‘பட்’டென வெண்பா சொல்கிறார் கவிஞர்....

“ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா
போண்டா எடுத்துவா போ”

யாரந்தக் கவிஞர்...? கடைசியில் பார்ப்போம்.

***** ***** ***** ***** *****

சில மளிகைக்கடை அண்ணாச்சிகளின் சின்னச் சின்ன தொழில் நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்தக் கூடியவை! வாடிக்கையாளர்கள் அரை கிலோ சர்க்கரை கேட்டால் கொஞ்சமாக தராசில் எடுத்துப் போட்டுவிட்டு, பிறகு டப்பாவிலிருந்து தராசிலிருக்கும் பொட்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நிறுத்துவார்கள். அப்படியின்றி, அதிகமாகப் போட்டுவிட்டு, தராசிலிருந்து எடுத்து தங்கள் மூட்டையில் சேர்ப்பது போல போடமாட்டார்கள்.

நின்று., பார்த்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு மனதளவில் இது திருப்தி தரும். அதேபோல 25 பைசா, ஐம்பது பைசா பாக்கி இருந்தால் ஒரு ரூபாயாகக் கொடுத்துவிட்டு ‘அப்புறமா வரும்போது குடுங்க’ என்பார்கள்! கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி!

***** ***** ***** ***** *****

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.

‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.

அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!

இதேதான் மூன்றாவது நாளும்.

நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.

ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!

***** ***** ***** ***** *****

திமூலகிருஷ்ணன் பத்தின ஒரு மேட்டர்...

நம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.

‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!


***** ***** ***** ***** *****

ங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய நண்பன். இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது. சமீபமாக அவனுடன் வெளியில் செல்லும் போது பர்சை ஒன்றுக்கு பலமுறை திறந்து பார்த்துக் கொள்வதைக் கவனித்தேன்.

‘தம்பி... என்னத அப்படி அடிக்கடி பார்த்துக்கற?” நேரடியாகவே கேட்டேன்..

பர்சைத் திறந்து அதை எடுத்தான். 10000, மற்றும் 1000 ருபையா (இந்தோனேஷியன் கரன்ஸி) நோட்டுகள்.

“கல்யாணத்து வந்த எங்க சொந்தக்காரர் குடுத்தார் சார். இந்தியன் ருபீஸா மாத்தற வரைக்கும் பத்திரமா வெச்சுக்கணும்ல சார். எவ்வளவு சார் வரும் ரூபாய்ல?” என்று கேட்டார்.

“பார்த்து சொல்றேன்” என்று அலுவலகம் வந்து xe.com பார்த்தேன்.

11000 இந்தோனேஷியா ருபையா = 50.78 இந்தியன் ரூபாய்கள் என்று வந்தது.

வெறும் அம்பது ரூபாய் 78 காசு!

சொன்னேன்.

“அடுத்த லீவுக்கு அந்தாளு வரட்டும் சார்” என்றான்.

“அப்படியெல்லாம் சொல்லாதப்பா” என்றதுக்கு சொன்னான்.


“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.

பாவமாய் இருந்தது!

***** ***** ***** ***** *****

ரு சோக்கு....

ர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.

ரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா?”

இவன் சொன்னான்:

“இல்ல சார். டெத்”

**********************************

அந்தக் கவிஞர் வைரமுத்து.

***




டிஸ் சாவி: தலைப்பு கொஞ்சம் ஓவர்தான்.. அதுக்கான அர்த்தம் புரிஞ்சவங்க விட்டுடுங்க.. மத்தவங்க மன்னிச்சுடுங்க..!




.

Sunday, October 10, 2010

சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர் - புத்தக விமர்சனம்

ண்பரொருவர் ஒரு மாதத்திற்கு முன் அழைத்துப் பேசினார்:

‘உங்களுக்கு கேபிள் சங்கர் நல்ல ஃப்ரெண்ட்தானே?’

‘ஆமா.. ஏங்க?’

‘அப்பறம் ஏன் அவரோட சினிமா வியாபாரம் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதல இன்னமும் நீங்க? பொறாமைதானே?’

அப்ப ‘போய்யா’ ன்னு சிரிச்சுட்டு விட்டுட்டேன்.. ஆனா படிச்சப்பறம் அந்தாளு மேல எக்கச்சக்க பொறாமை வருது!

வழக்கமா ஃப்ரெண்ட்ஸோட படைப்புகளுக்கு விமர்சனம் எழுதறப்ப கொஞ்சம் சங்கடம் இருக்கும். (அதுனாலதான் எந்திரன் விமர்சனம் எழுதலயான்னு கேட்கப்படாது..) சொன்னா ஏதாவது நினைச்சுக்குவாரோ, சொல்லலாமோ – கூடாதோங்கறது ஒண்ணு. ரெண்டாவது - குழு, சொறியறதுன்னு சொல்றதுக்குன்னே ஒரு கும்பல் இருக்கே.. அனானி ஆப்ஷன் இல்லாததால நமக்காகவே ஒரு ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணி திட்டீட்டுப் போறாங்க.. விரலுக்கு எட்டுற இடத்துல அரிச்சாகூட சொறிஞ்சு விட்டுக்கறதுக்கு பயமா இருக்கு. சுய சொறிதலாமே... ஹும்.. கஷ்டகாலம்!

முக்கியமான மூணாவது - படிக்கறப்ப இதை எழுதினது நம்ம ஃப்ரெண்டுங்கறதை மறந்துட்டு படிச்சாதான் சரியா விமர்சனம் பண்ண முடியும். அதுனாலயே கேபிள் சங்கரோட இந்தப் புத்தகம் வந்தப்ப படிக்காம, கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்..
பத்து நாள் முன்னாடிதான் படிக்க எடுத்து ரெண்டொரு நாள்ல படிச்சும் முடிச்சுட்டேன்.. மனுஷன் பிரிச்சு மேஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும்!

இவர் விமர்சனம் எழுதறப்ப ஏதோ தெரிஞ்சதை - அறிஞ்சதை (ரெண்டும் ஒண்ணுதானா?) வெச்சு எழுதறாருன்னு ஆரம்பத்துல நினைச்சதுண்டு. இந்த புக்கைப் படிச்சப்பறம்தான் அதுல விழுந்து புரண்டிருக்கார்.. ஏன்.. நிறைய இழந்திருக்காருன்னும்கூட தெரிஞ்சுகிட்டேன்.

புக்ல பொதுவா எனக்குப் பிடிச்சது சினிமாவை - கலையை வாழ வைக்கறேன் பேர்வழின்னு புகழ்ந்து, துதி பாடாம – அதை ஒரு தொழிலா, வியாபரமா பார்த்து அந்த வியாபாரம் சம்பந்தமா ஒவ்வொரு மூலை முடுக்கையும் அலசி ஆராய்ஞ்ச விதம். ஒண்ணையும் விடலைன்னா, ஒண்ணையுமே விடலை மனுஷன். ஃபாரின் ரைட்ஸ்லேர்ந்து தியேட்டர்ல முறுக்கு சுண்டல் விக்கறது வரைக்கும் சினிமா மூலமா எப்படியெப்படி சம்பாதிக்கலாம், எங்கெங்க சறுக்கல் வரும்னு தெளிவா புட்டுப் புட்டு வெச்சிருக்காரு!

முன்னுரையில அவர் சொல்றது கவனிக்கப்பட வேண்டிய ஒண்ணு. ‘ஒரு திரைப்படம் தயரிப்பதற்குப் பின்னணியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியிடுவதற்கும் வேண்டும்’

இந்த வரி எவ்வளவு உண்மைன்னு புத்தகம் படிச்சு முடிச்சப்பறம் தெரியுது!
பதினைஞ்சு அத்தியாயமா பிரிச்சி, விநியோகத்தின் ஒவ்வொரு நுணுக்கமான பக்கங்களையும் விரிவா அறிமுகம் செஞ்சிருக்காரு கேபிள் சங்கர். நான் உடுமலைல இருக்கறப்ப ஃப்ரெண்ட்ஸ் நாலைஞ்சு பேரு, தியேட்டர்ல தெரிஞ்சவர் மூலமா படம் வெளிவந்த அன்னைக்கே ஒசில பார்க்கலாமான்னு போராடுவோம். அவரு ‘ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லாம படம் பார்க்கலாம்ன்னு அந்தப் பக்கமே வந்துடாதீங்கடா’ன்னு மெரட்டுவாரு. ஏன்னு இதைப் படிக்கறப்பத்தான் தெரிஞ்சது. ஒவ்வொரு தியேட்டர்லயும் விநியோகஸ்தரோட ரெப்ரசெண்டிடீவ் இருப்பாராமே!

சரி.. புத்தகத்துல குறைகள்?

சின்னச் சின்னதா ரெண்டு..

என்னதான் இது தொழில் சம்பந்தமான புத்தகமா இருந்தாலும், சினிமாங்கற சுவாரஸ்யமான களத்தைப் பத்தி எழுதறதால அங்கங்க ஒண்ணு ரெண்டு ஸ்டில்ஸ் இருந்திருக்கலாம். இது ஒரு கட்டத்துல, சீரியஸாவே போய்க்கிட்டிருக்கறதால வர்ற அயர்ச்சியைத் தடுத்திருக்கும்.

ரெண்டாவது.. புத்தகத்துல அங்கங்க விஜய்காந்தை ஞாபகப்படுத்தும் புள்ளி விவரக்கணக்குகள். நிச்சயமா போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல எனினும், அவற்றிற்கான மூலம் என்ன, எங்கிருந்து ஆசிரியர் இந்தத் தகவல்களைத் திரட்டினார் என்று Annexure ல் குறிப்பிட்டிருந்தாரேயானால், இன்னும் அவற்றின் நம்பகத்தன்மை பல மடங்கு கூடியிருக்கும்.

என்ன சொன்னாலும், சினிமா விநியோகம் பத்தின டாப் டூ பாட்டம் அலசலை எளிமையா புரியற மாதிரி சொல்லப்பட்ட புத்தகம் இதுங்கறதுல மாற்றுக்கருத்து இல்லை.. பின்ன சும்மாவா வந்த வேகத்துல வித்துத் தீர்ந்து ரெண்டாவது பதிப்பும் கலக்கிட்டிருக்கு?


சபாஷ் நண்பா!


சினிமா வியாபாரம்
ஆசிரியர்: சங்கர் நாராயண்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-

லைன்ல நின்னு வாங்காம - ஆன் லைன்ல வாங்க இங்கே க்ளிக்கவும்.


*

Friday, October 1, 2010

எந்திரன் (நண்பனின் பார்வையில்)

மான்செஸ்டரிலிருந்து நண்பர் செந்திலுடனான உரையாடலில் இருந்து..

******************

படம் எங்க பார்த்த?

லிவர்பூர்ல், சினி வேர்ல்ட்ல பார்த்தேன். உள்ள போறப்ப ‘ச்சே.. இந்தப் படத்தை இந்தியால ரஜினி ஃபேன்ஸ் கூட பாத்திருக்கணுமே’ன்னு நெனைச்சேன். ஆனா அந்தக் குறையே இருக்கல. செம க்ளாப்ஸ், செம சவுண்டு.. சான்ஸே இல்ல...

படம்?

மாஸ் ஹிட்... உழைப்புக்கு பலன் இருக்குங்கறதுக்கு உதாரணம் இந்தப் படம்.. 60 வயசுல ரஜினி இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கணும்கற தேவையே இல்ல.. சம்பாதிச்சத உட்கார்ந்து சாப்ட்டுட்டுப் போகலாம்.. ஆனா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு ஷூட்டிங்லன்னு படம் பார்த்தா தெரியுது.. சும்மா உட்கார்ந்து சாப்பிடணும்னு நெனைக்கறவங்கள்லாம் ரஜினியைப் பார்த்துக் கத்துக்கலாம்..

படத்துல சூப்பர் ஸ்டார் யார்?

சிட்டிதான்! ஆனா அதைவிட.... வேணாம்.. போய்ப் பாரு..

காமெடி?

டைமிங் காமெடிதான். செமயா இருக்கு...!

வசனம்?

சுஜாதா –ஷங்கர் – மதன் கார்க்கின்னு போடறாங்க. ஆனா அப்பட்டமா சுஜாதாவோட மூளை, சுஜாதாவோட பேனாவை உணர்ந்தேன். ட்ரெய்லர்ல நீங்க பார்த்த ‘நக்கலா, இல்ல நிக்கல்’ உட்பட பல வசனத்துல சுஜாதா தெரியறாரு.. இந்தப் படத்தைப் பார்க்கறப்ப சுஜாதா இல்லைங்கற ஃபீலே எனக்கு இருக்கல..

ஐஸ்வர்யா?

ராவணனைவிட நல்லா காமிச்சிருக்காங்க. ஃப்ரெஷ்ஷா இருக்காங்க..

ம்யூசிக்?

ஆஸ்கார் குடுத்தது சரிதாண்டான்னு ப்ரூவ் பண்ணிருக்காரு ரஹ்மான். ஃபாரின்னுதான் பேரு.. தியேட்டர்ல சவுண்ட் எஃபெக்ட்டெல்லாம் அவ்ளோ சரியில்ல.. ஆனா சவுண்ட் எஃபெக்ட், பின்னணி எல்லாத்துலயும் மெனக்கெட்டதுக்கு பலன் இருக்கு.

ஷங்கர்?

இந்தியனா, தமிழனா நம்ம எல்லாருமே பெருமைப்பட்டுக்கலாம். க்ளிஷேவான டயலாக்தான் இது. ஆனா இதுதான் உண்மை.. ஹாலிவுட் தரத்துக்குன்னு சொல்லிக்கறது சும்மா இல்ல.. நெஜமாவே ஹாலிவுட் தரம்தான்..

படத்துல உனக்குப் பிடிச்சது?

க்ளைமாக்ஸ்.. ப்பா!! சான்ஸே இல்ல.. க்ளைமாக்ஸுக்காகவே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வரும். இது உண்மை..! கடைசில பதினைஞ்சு நிமிஷத்துக்கு படத்துல பங்காற்றினவங்க பேரைப் போடறாங்க.. கார் ஓட்டுனர் உட்பட. இங்க எல்லாரும் அப்ப கைதட்டினாங்க.. சந்தோஷமா இருந்துச்சு..


வேற ஏதாவது?

தியேட்டர்க்குள்ள போறப்ப இந்தப் படத்து போஸ்டர் எங்கயாவது ஒட்டிருந்தா, அதுக்குப் பக்கத்துல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு ஃபேஸ்புக்ல போடணும்னு நெனைச்சிருந்தேன். ஒரு போஸ்டர்கூட இல்ல. மத்த எல்லா படப் போஸ்டரும் ஒட்டிருந்தாங்க.. அப்பறம் வெளில வர்றப்பதான் பார்த்தோம்.. போஸ்டரை சீலிங்க்ல ஒட்டிருந்தாங்க.. டாப்ல! அப்பவே நினைச்சுட்டேன்.. படம் டாப்தான்-ன்னு!

அதே மாதிரி வெளில வர்றப்ப நிறைய பேர் சொன்னாங்க.. ‘படம் பட்டாசுடா’ன்னு!

கடைசியா ஒரு கேள்வி: உன் ஃபேவரைட் ஹீரோ யார்டா?

என்ன கிருஷ்ணா தெரியாத மாதிரி கேட்கற?

ப்ச்.. எனக்குத் தெரியும்.. நீ சொல்லு..

ஒன் & ஒன்லி கமல்!



*