Friday, December 31, 2010

2010ன் டாப் 5 நிகழ்வுகள்

டாப் 5ன்ன உடனே உலகம் பூராவும் நடந்ததோட டாப் ஃபைவ்ன்னு நினைச்சு வந்துடாதீங்க. என் லைஃப்ல நடந்த டாப் 5.

.

என் புத்தக வெளியீடு.
நான் எழுதிய கதைகளைத் தொகுத்து ஒரு மகராஜன் புத்தகமாய் போட, அது ஃபிப்ரவரி 14ம்தேதி, வெளியிடப்பட்டது. வாசகர் கடிதம், துணுக்கு, கேள்வி என்று ஆரம்பித்து இந்த நிலைவரை வந்தது ஆச்சர்யம்தான். இதற்கான தகுதி இருக்கிறதா என்ற வாதத்திற்கெல்லாம் வராமல், கடலோரக் கிளிஞ்சலைப் பொறுக்கி முத்தென நினைத்து குதூகலப்படும் குழந்தையின் மனப்பாங்குடன் அதை அள்ளியெடுத்து வாசித்துப் பாராட்டி, விமர்சித்து, குட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு.

விபத்து. ஃபிப்ரவரியின் ஒரு சனிக்கிழமை நேர்ந்தது அந்த விபத்து. காரில் சீட் பெல்ட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. தலையில் பெரும் காயத்தோடு, பத்துக்கும் மேற்பட்ட தையல்கள். விபத்து நடந்த கணத்திலிருந்து மீண்டும் அன்றாட நிகழ்விற்குத் திரும்பும் வரை உற்சாகமோடே இருந்த என் மனநிலையை -வேறு வழியின்றி - நானே மெச்சிக் கொள்கிறேன். என்னவாயிற்று என்று பதறிய நட்புகளுக்கு நானெழுதிய பதிவிற்கு, நான் மிக மதிக்கும் பல பெரிய பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தன. சுஜாதாவின் எழுத்தை நினைவுபடுத்தியது என்று மிகப்பிரபலம் ஒருவர் சொன்னதை சுஜாதா கேட்டால் சிறு புன்னகையுடன் கடப்பார். எனக்கது புக்கர்.

வேலைமாற்றம். பத்து முழு வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து தனிப்பட்ட சில காரணங்களுக்காக அந்நிறுவனத்தை விட்டு புதிய இடத்தில் சேரும்போது, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் மனவலியை உணர்ந்தேன். ஆறு மாதங்கள் ஆனது மனதளவில் அதை ஏற்க. புதிய இடம், புதிய வேலை தந்த சவால்கள் பிடித்திருந்தது. என்னை நானே உணர முடிந்தது. COMFORT ZONEலிருந்து தாவுவதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்ததன் மூலம் என்னை நானே மெருகேற்றிக்கொள்ள இந்த மாற்றம் உதவியது. என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. அலுவகத்தில் நல்ல நண்பர்கள் என்று நினைத்து நட்பு பாராட்டிய சிலரின் நிறங்கள் வெளுத்தன. என்னையும் அவ்வாறே அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். பத்து வருடங்கள் பழகிய ஒருவனை, ஒரே வாரத்தில் மறக்கும் வரம் கிடைக்கப் பெற்ற மாமனிதர்கள் புண்ணியாத்மாக்கள் என்பதைத் தவிர சொல்வதற்கொன்றுமில்லை. வியாபாரக் கண்ணோட்டம் என்பது வியாபாரத்திற்கு மட்டுமல்ல நான் கொண்டாடும் நட்புகளுக்கும்தான் என்று சொன்னார்கள் சிலர். நீ என் மகன், நீ என் தோழன், நீ என் சகோதரன், நீ என் எல்லாம் என்றவர்களெல்லாம் ‘ஹலோ.. ஐ’ல் காண்டாக்ட் யூ லேட்டர்’க்கு மாறினார்கள். பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்தபோதும் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லா தெய்வப்பிறவிகள் என்னைச் சுற்றி இருந்திருக்கிறார்கள், அவர்களைச் சுற்றி நானும் அளவளாவி நடந்திருக்கிறேன் என்பன போன்று பல உண்மைகள் எனக்குத் தெரிவித்தது இந்த வேலை மாற்றம்.

சவால் சிறுகதைப் போட்டி. தமிழுக்கு நம்மால் ஆன ஏதேனும் சிறு பங்காய் இருக்க வேண்டும் என்று கூட்டம் போட்டு, திட்டமிட்டு என்றெல்லாம் இல்லாமல் உங்களில் ஒரு.. மன்னிக்க இருவராய் நானும் ஆதியும் ஆரம்பித்த சவால் சிறுகதைப் போட்டி எங்கள் வலையின் ‘டாக் டாப் 2010’ ஆனது. சவால் சிறுகதை என்று தேடினால் கூகுளாண்டவரை லட்சத்துக்கு மேற்பட்ட முடிவுகளோடு வந்து நிற்க வைத்தது. வருடா வருடம் ஏதேனும் ஒரு போட்டி எங்களின் பங்களிப்பாய் இருக்க வேண்டும் என்று திட்டமிட வைத்தது. எங்கெங்கே சறுக்கினோம் என்பதுணர்ந்து சரி செய்து இன்னும் வேகமாய், திடமாய் போட்டி நடத்த அனுபவம் கொடுத்தது. சில விமர்சனங்கள், பல பாராட்டுகள் என எங்களைச் செலுத்திய இந்த அனுபவம் மறக்க முடியாத நிகழ்வு.

நீயா நானா பங்கேற்பு: திருச்சி ஹலோ எஃப் எம் நண்பர் ராஜா, திருநெல்வேலி ஹலோ எஃப். எம். எழுத்தாளர் தமயந்தி என சிலர் அவ்வப்போது அழைத்து என்னை பண்பலையில் பேச வைத்து பெரிய மனுஷனாக்குவதுண்டு. நானும் வெங்காய விலை முதல் ஒயிட் ஹவுஸில் வெள்ளையடித்த வரலாறு வரை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு சொதப்புவேன். இதையெல்லாம் கண்ட சின்னவள் மேகா ‘நீங்க எப்பப்பா டிவில வருவீங்க’ என்று கேட்டு வைத்தாள். ‘டி வி எஸ்-ஸில் வருவதென்றால் அன்றைக்கே வரலாம். டிவியிலா?’ என்று வழக்கம்போல மொக்கை போட்டேன். அவள் கேட்ட நேரம் அடுத்த நாளே விஜய் டிவியிலிருந்து அழைப்பு வர, சென்று வென்று வந்தேன். அந்தக் கதையை நீங்களும் படித்திருப்பீர்கள். மற்றபடி அதில் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.


2010ல் எனக்குக் கிடைத்து நான் பொக்கிஷமாய் வைத்திருக்கும் இரண்டு பொருட்கள்: நண்பன் ஒருவன் பரிசாய்த் தந்த பைனாகுலரும், பதிவர் கோபி தந்த 18000 பெறுமானமுள்ள (ஆம். பதினெட்டாயிரம் ரூபாய்!) MONTE BLANC (மா’ம் ப்ளா - என்றுதான் உச்சரிக்க வேணுமாமே?) பேனாவும்.


முக்கிய இந்த ஐந்து நினைவுகள் / இரண்டு பரிசுகள் தவிர்த்து, பிற வழக்கம்போல.


நீ எத்தனை முட்டினாலும் மோதினாலும் பெண்ணென்பது பெரும் சக்தி என்பது தெரிந்தது. அவளன்றி அணுவும் அசையாது, அசைக்க நினைத்தாலும் முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. நான் சொல்லும் அந்தப் பெண் மனைவி என்பது உ. கை நெ.கனி. சில பல வேளைகளில் மௌனமே ஆயுதம். பேசி ஒன்றும் ஆவதற்கில்லை என்பது உட்பட பல பால பாடங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்தது.

சில நட்புகள் காட்டிய அன்பின் ஆழம் இதயத்தை வருடியது. சுகம், சோகம் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கிடைத்த நட்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நானும். நீ உன்னைப் பற்றிய எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனேனும் உலகில் இருப்பான் என்பார்கள். எனக்கது ஒன்றுக்கு மேற்பட்டதாய் இருக்கிறது. அவர்களுக்கும் நான் அவ்வாறே என்பதில் ஒரு மகிழ்ச்சி.

இந்த வருஷத்தில் நீ கற்றுக் கொண்டதென்ன? புத்தாண்டில் என்ன உறுதிமொழி எடுக்கப் போகிறாய் என்றெல்லாம் என்னை நானே கேட்டுக் கொள்வதில்லை. புத்தாண்டென்றால் நான் எதிர்பார்ப்பது உறுதிமொழியோ, வோட்காவோ, பீரோ அல்ல.. தடித் தடியான டைரிகள். ஏனோ இந்த வருடம் அவை அதிகம் வரவில்லை.

இரண்டாயிரத்துப் பதினொன்று எல்லாருக்கும் இதமாய் அமைய...

பதிவர்களுக்கு: எழுத நினைத்தது உடனே வார்த்தைகளாய் வந்து விழ, எழுதிய பதிவுகள் உடனே ஹிட்டாக, வலைப்பூவின் ஹிட் கவுண்டர் நிரம்பி வழிய, பின்னூட்டங்கள் தேவையில்லை என்று நீங்கள் பெட்டியை மூடுமளவு பின்னூட்டங்கள் வந்து விழ, சைடு பார் முழுவதும் நிரம்பும் வண்ணம் ஆயிரமாயிரம் ஃபாலோயர்கள் வர, உங்கள் பெயர் பஸ், டிவிட்டர் உட்பட எங்கேயும் கிழிந்து தொங்கி பஞ்சராகாமல் இருக்க...

வாசகர்களுக்கு: படிக்கும் பதிவுகள் உங்கள் மனம் கவர, சோகமாய் இருக்கும்போது நினைத்துச் சிரிக்கும் பதிவுகள் வர, சண்டை சச்சரவுப் பதிவுகள்-பஸ்கள்-ட்விட்டர்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க, அப்படியே பட்டாலும் அவற்றைப் படித்து மண்டை குழம்பாமல் இருக்க, உங்களுக்குப் பிடித்த பதிவர்கள் இடைவெளியில்லாமல் எழுதிக் கொண்டே இருக்க (ஹி..ஹி..)

குடும்பஸ்தர்களுக்கு: புக்கிங் செய்ய அழைத்த உடன் கேஸ் கம்பெனிக்காரன் உங்கள் அழைப்பை அட்டெண்ட் செய்ய, உங்கள் நண்பனோடு ஒரு லார்ஜ் அடிக்க நினைக்கையில் மனைவி மனமார அனுமதி அளிக்க, முக்கியமான மேட்ச்களின் போது ரிமோட் உங்கள் ஆளுமையில் இருக்க, சேமிப்பென்று பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும் கடன் என்ற ஒன்றை நாடாமல் வாழ, மனைவி / கணவன் பரஸ்பரம் அன்பால் தங்களிணையை ஆள, உங்கள் குழந்தைகள் படிப்பின் நம்பர் ஒன் ஆகாவிட்டாலும் பண்பில் சிகரமாய்த் திகழ,

உத்தியோகஸ்தர்களுக்கு: பணி செய்யும் இடத்தில் நீங்கள் செய்த வேலைக்கு உங்களுக்கே பாராட்டுக் கிடைக்க, அப்ரைசலின் போது உங்கள் ஜாதகக்கட்டத்தில் சுக்கிரன் சிரிக்க, அட்டெண்டன்ஸ் ரிப்போர்ட்டில் LATE COMERSல் உங்கள் பெயர் வராமலிருக்க, கேட்டபோதெல்லாம் முகச் சுளிப்பில்லா பர்மிஷன்/லீவு கிடைக்க..........

பொதுமக்களுக்கு: 2011 தேர்தல் சமயத்தில் கூம்பு வடிவ மைக்குகள் உங்கள் வீட்டருகில் கட்டப்படாமல் இருக்க, உங்கள் நேர்மையைச் சோதிக்கும் வண்ணம் கையூட்டுகள் உங்களைக் கவராமல் இருக்க, நீங்கள் செல்லும் வழியில் குண்டு குழியில்லாத சாலைகளிருக்க, அப்படியே இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லாமலிருக்க, அப்படியே இருந்தாலும் அப்போது வாகனமேதும் கடக்காமல் இருக்க, விலையேற்றம் என்பது தவிர்க்கவே முடியாது வேறு வழியே இல்லையென்பதை உணர்ந்து, இனிமேலும் நீங்கள் புலம்பாமல் நாட்களைக் கடத்த...


இன்னும்..
இன்னும்.. உயரங்கள் பல தொட

வாழ்த்துகள்!


.

(தொடர்புடைய பதிவு: சொல்லாததும் உண்மை. 2010 புத்தாண்டுக்கு எழுதியது)

.

Tuesday, December 28, 2010

மைனாவும் மன்மதன் அம்பும்


கா
ந்தி செத்துட்டாரா, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா, சக்கரம் கண்டுபிடிச்சாச்சா - இப்படீன்னெல்லாம் கேட்காம கம்முன்னு படிங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு தமிழுக்கு - வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாச்சும் - சேவை இல்லீன்னா இடியாப்பம் செய்யலாம்ன்னு இருக்கேன். புரிஞ்சுக்கங்க.. ஆமா...

----------------

மொதல்ல மைனா.

எனக்கு ஒரு வியாதி இருக்கு. சோகப்படம்னா அந்தத் தியேட்டரைச் சுத்திதான் ஆஃபீஸூக்கே போவேன். அதென்னமோ சோகரசம் பிடிக்கறதில்லை. ‘அதான் வாழ்க்கையே முழுக்க சோகமா இருக்கே.. அப்பறம் என்ன தியேட்டர்லயும் போய்’ அப்படீன்னெல்லாம் காரணம் சொல்ல விரும்பல. போனமா ரெண்டரை மணி நேரம் ஜாலியா ரசிச்சமா வந்தமான்னு இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.

மைனா வர்றதுக்கு முன்னாடிலேர்ந்தே ஊரே ‘மைனா.. மைனா’ன்னு பேசிகிட்டிருந்துச்சு. காட்டுக்குள் பருத்திவீரன்னு கமெண்ட்ஸ் வேற. சென்னைலேர்ந்து வர்ற ப்ரிவ்யூ தகவல்கள் ‘படம் டாப்பு. ஆனா சோகமா முடியுது’ன்னு சொல்லிச்சு. முதல் மரியாதை, பருத்தி வீரன் உட்பட பல படங்களை சோகம் அதிகமா இருக்கும்ன்னு ரொம்பவே லேட்டாத்தான் பார்த்தேன். அதே மாதிரிதான் ஆச்சு மைனாவுக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சுதான் படம் பார்த்தேன். செமயான படம். படத்துல எனக்குப் பிடிச்சது தம்பி ராமையாவோட கேரக்டர்தான். கைதியோட வீராப்பா இருக்கறதும், அவன் கோவப்படறப்ப ‘ஜெயில்ல வெச்சு நொங்கெடுத்துடலாம்’ன்னு இன்ஸ்பெக்டர்கிட்ட (வார்டன்?) சொல்றதும், அவனால காப்பாத்தப்படறப்ப அவனுக்கு சப்போர்ட்டா இருக்கறதும்-ன்னு அவரோட கேரக்டரை அற்புதமா செதுக்கின இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுகள். அதே சமயம் ஒவ்வொரு மனநிலைக்குத் தகுந்தாப்ல உடல்மொழி காட்டி நடிச்ச தம்பி ராமையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!!

முடிவைப் பத்தி பேசிகிட்டிருக்கறப்ப ‘யதார்த்த சினிமான்னா சோகமாத்தான் இருக்கணும்’ன்னு நண்பர்கள் சொன்னாங்க. இந்த கான்செப்ட் என் மரமண்டைக்குப் புரியவே இல்ல. நாட்டுல நூத்துல 10 பேருக்கு இந்த மாதிரி நடக்குமா? அது யதார்த்தமா? ஒண்ணுமே புரியலப்பா...

அமலா பால், (ஸ்ஸ்ஸ்......) இன்ஸ் வீட்டுக்குப் போவாம, தம்பி ராமையா வீட்டுக்குப் போய் நல்லா இருந்திருக்கலாம்ன்னு தோண வைக்கறதுதான் படத்தோட வெற்றியோ என்னமோ..!

படத்தோட ஒட்டி வர்ற நகைச்சுவை அபாரம். ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன்.

விமர்சனத்தை முடிக்கறப்ப மைனா – நைனா போனா வந்தான்னு ஏதாவது சொல்லணும்ல... ம்ஹும்.. ஒண்ணும் தோணல.. விட்டுடுங்க.

------------------------------------------

நெக்ஸ்ட்.. மன்மதன் அம்பு... ஸாரி... மன் மதன் அம்பு

நான் பல படங்களுக்கு முதல் நாளே படத்துக்குப் போகறதுக்குக் காரணம், ரெண்டாவது நாளே விமர்சனங்களைப் போட்டுத் தாக்கி ஒண்ணு எதிர்பார்ப்பைக் கூட்டுவாங்க.. இல்லைன்னா இவ்ளோதானான்னு நினைக்க வைப்பாங்க. முதல்நாள்ன்னா ப்ளெய்னா போய்ட்டு வர்லாம். அதான்.

மன் மதன் அம்பு- நான் கொஞ்சம் எதிர்பார்ப்போடத்தான் போனேன். காரணம் கமல் மட்டும் அல்ல. கமலைவிட ஒரு படி மேல கே.எஸ்.ரவிகுமாருக்கான எதிர்பார்ப்பு. ஆனா அது புஸ்ஸுன்னு போச்சு!

கமல் கதை, வசனத்தோட நின்னிருக்கலாம். இயக்கத்தோட, திரைக்கதையையும் கே எஸ் ஆர்கிட்ட குடுத்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டார். கே எஸ் ஆர் படத்துல தெரியவே இல்லை. ஒரே ஒரு இடம் தவிர – நீலவானம் பாட்டு. (அந்தப் பாட்டோட பிக்ச்சரைசேஷன் ஐடியா அவரோடதாத்தான் இருக்கும்ன்னு வெச்சுகிட்டா) ஒருவேளை கமலின் யோசனையாகக் கூட இருக்கலாம். பாட்டு ஆரம்பிச்சு முடியறவரைக்கும் முழுமையா பின்னோக்கிப் போய் கமலோட கதையைச் சொல்றது தமிழ்ச் சினிமாக்குப் புதுசுன்னு நினைக்கறேன். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனையோ கேபிள் சங்கரையோத்தான் கேட்கணும்.

படம் ஆரம்பிச்சு சூடு பிடிக்கவே அரைமணி நேரமாச்சு. சீரியஸான ஜானரும் அல்லாம, காமெடியான ஜானரும் அல்லாம ரெண்டுங்கெட்டான் மாதிரிப் போனது படத்தோட மைனஸ்.

படத்தின் என்னைக் கவரோ கவரென்று கவர்ந்த மகாப்பெரிய அம்சம் வசனம். பல இடங்களில் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. பின்னால் இருக்கிறவருக்கு மறைக்குமென்பதால் அடக்கிக் கொண்டேன்.

படத்தின் க்ளைமாக்ஸ் பழைய எஸ் வி சேகர் ட்ராமாக்களைப் போல, முடிஞ்சாச் சரி பாணியில் இருந்தது நிறைவின்மையைத் தந்தது. அதுவும் மாதவன் சங்கீதா சேரணும்ன்னு ரசிகன் நினைக்கவே இல்ல. கமல் த்ரிஷாகூட அப்படித்தான். இன்னும் அந்த சீனையெல்லாம் கலகலப்பா கொண்டு போக க்ரேஸி மோகனை வெத்தலைப் பெட்டியோட ஆழ்வார்ப்பேட்டைக்குக் கூப்பிட்டிருக்கலாம் கமல்.

படத்துல நான் ரொம்பவும் எதிர்பார்த்த கமல் கவிதை கட். அதே மாதிரி உய்ய உய்ய பாடல் (சூர்யா டான்ஸ் பிரமாதம்) விட்டு விட்டு வர்றதும் ‘பெப்’பைக் குறைத்தது.

படத்தில் கமலுக்கு இணையாக.. ஒரு படி மேலேயே தூள் கிளப்பியிருப்பவர்கள் மாதவன் & சங்கீதா. சங்கீதா டைட்டான காஸ்ட்யூமில் ரொம்ப லைவ்வாக பப்ளிமாஸாக இருக்கிறார். த்ரிஷா, சங்கீதா என்று எல்லாரையும் சொந்தக்குரலில் பேச வைத்து ட்ரில் வாங்கியிருக்கிறார்கள். சபாஷ்.

படம் பிடிச்சுதா, பிடிக்கலையான்னு கேட்டேன் உமாகிட்ட. கமல் ரசிகை வேற.

‘பிடிக்கலைன்னு சொல்லல. ஆனா பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’

சரிதான்!.

Monday, December 27, 2010

சிறுகதைகள் பற்றி சங்கமம் நிகழ்வில் பெருமாள் முருகன்


செ
ன்ற வருடம் போலவே இந்த வருடமும் சிறப்புற நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தினர் நடத்திய சங்கமம்-2010 நிகழ்வின் சில துளிகளை பல வலைப்பூக்களில் இன்று காண்பீர்கள். என் பங்கிற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதில் இருந்து சில....


‘சிறுகதைகளை உருவாக்குவோம்’ என்கிற தலைப்பில் பேசினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

• முன்னைப் போல வார / மாத இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. அதிக பட்சம் ஒரு சிறுகதை, சில சமயம் அதற்கும் இடமில்லை என்கிற போக்கே இருக்கிறது. ‘உயிர் எழுத்து’ இதழ் மட்டும் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு சிறுகதைக்கு இடமளிக்கிறது.

• சிறுகதை எழுதுவதில் / சிறுகதை வாசிப்பதில் / சிறுகதை வெளியிடுவதில் என்று மூன்று நிலைகளிலும் ஒரு தேக்க நிலை தற்போதைய காலகட்டத்தில் இருக்கிறது.

• கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வியல் முறையைப் பதிவு செய்யும் சிறுகதைகள் அதிகம் வரவில்லை. இன்றைய வாழ்வைப் பதிவு செய்வது அவசியம். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைப் பதிவு செய்திருப்பார்கள். அந்தப் போக்கு இப்போது இல்லை.

• இந்த மாதிரியான நேரத்தில் சிறுகதைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. அதற்கு இணையமே சிறந்த வழி.

• எழுதுவதற்கு, வாசிப்பு என்பது மிகவும் அவசியம். வேலைப்பளு காரணமாக வாசிப்பு குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. வாசிப்பையும் ஒரு வேலையாகப் பாவித்து தினமும் செய்தால் இந்த மாதிரி சொல்ல நேராது.

• எழுதுபவர்களுக்கு சின்னச் சின்ன யோசனைகள்:

1) குறைந்தது மாதம் ஒரு சிறுகதை படியுங்கள். கட்டாயமாக இதைச் செய்யுங்கள். மாதம் ஒரு சிறுகதை வாசிப்பதென்பது என்பது நிச்சயமாக கடினமான விஷயமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக இதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2) பகிர்ந்து கொள்ளக் கூடிய ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் எழுத்தாளர்களுக்கு இந்த ஆசை, பேராசையாகவே இருக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

3) கதை எழுத தீவிர கவனிப்பு மிக முக்கியம். Observation. கவனிக்கும் தன்மை இருந்தால்தான் நடக்கும் சம்பவங்களிலிருந்து, சிலதைத் தேர்ந்தெடுத்து கொஞ்சம் கற்பனை கலந்து எழுத்தில் கொணர முடியும்.

4) எழுதுவதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளுங்கள். எழுதாமல் கதை வராது. எழுதிய உடனும் கதை வராது. முதல் கதையே மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் எல்லாரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜெயமோகன் - விகடன் உட்பட - சில இதழ்களில் பல கதைகள் வெளிவந்து, நெடுநாட்கள் கழித்து கணையாழியில் ‘நதி’ என்றொரு கதை எழுதினார். அந்தக் கதையைத்தான் தன் முதல் கதை என்று குறிப்பிடுவார். ‘அதற்கு முன் நிறைய கதைகள் வந்தனவே?’ என்று கேட்டால், ‘அவையெல்லாம் பயிற்சிக்காக எழுதியவை’ என்பார்!

5) சம்பவங்களிலிருந்து விதிவிலக்குகளைத் தேர்வு செய்து எழுதுங்கள். அன்றாட நடப்புகளை, விதிக்குட்பட்டு நடக்கும் நிகழ்வுகளை / மனிதர்களை கதை வடிவில் கொண்டு வந்து எழுதுவது – அதை வாசகர்களுக்குச் சுவைபடச் சொல்வது கொஞ்சம் சிரமம். அசோகமித்திரன், வண்ணதாசன் போன்றோர் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

உதாரணமாக கந்தர்வன் ஒரு சிறுகதை எழுதினார். பனைமரத்தைப் பிடுங்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. பனைமரத்தைப் பிடுங்கும் மனிதன் என்றாலே அவன் சமூகத்தில் இருக்கக்கூடிய மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து வேறானவன். இதுதான் சிறுகதைக்குத் தேவை.

6) வாசகர்களுக்குக் கருத்தெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் எழுதுகிற கதையில், அதன் போக்கில் சொல்லப்பட்டவற்றை வாசகன் படித்துக் கொள்ளட்டும். வலிந்து திணிக்கப்பட்ட நீதிபோதனைகளை எவரும் விரும்புவதில்லை.

இவையாவும் மேம்போக்காகச் சொல்லப்பட்டவையே. சிறுகதையுலகு ஒரு கடல். அவற்றின் துளியின் துளி பற்றியே பேசியிருக்கிறேன் என்றார்.

முடிக்கும் முன் தி.ஜானகிராமனின் ‘காண்டாமணி’ என்றொரு கதையைச் சொன்னார்.

உணவுச் சாலை நடத்தும் ஒருவர், ஒரு நாள் - தன் முதல் வாடிக்கையாளருக்கு சாம்பார் ஊற்றிவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த சாம்பாரில் பல்லி விழுந்திருப்பதைக் கவனிக்கிறார். சாம்பாரைக் கொட்டி விட்டு, பிற வாடிக்கையாளர்களுக்கு புதிய சாம்பார் சமைக்கிறார். முதலில் உண்ட வாடிக்கையாளருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று குற்றவுணர்ச்சி. அவரோ சென்று விட்டார். ஒன்றும் ஆகிவிடக் கூடாதே என்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்.

துரதிருஷ்டவசமாக அந்த வாடிக்கையாளர் மறுநாள் இறந்துவிடுகிறார். நெஞ்சு வலி என்று சொல்லப்படுகிறது. தன் கடைச் சாம்பாரின் பல்லி விஷம்தான் காரணம் என்று இவர் நினைத்துக் கொள்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் கடை வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார். வெளியில் தெரியாமல் தன் கடைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் அருகிலேயே இருக்கும் கோயிலொன்றுக்கு காண்டாமணியை உபயம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார். அதுபோலவே காண்டாமணியை கோயிலுக்கு உபயம் செய்கிறார்.

ஒவ்வொரு முறை அந்த காண்டாமணி அடிக்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் வாடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த மணியை திரும்ப வாங்கிக் கொள்கிறார்.

இதுதான் கதை. இதில் எந்த வித நேரடியான நீதிபோதனைகளும் இல்லை. நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த, நீங்கள் மறக்க நினைக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் ஏதேனும் நிகழ்வைப் பொருத்திப் பார்க்கச் செய்கிற கதை. இப்படி வாசகனை, கதையோட்டத்துடன் இணைத்துச் செல்லும் கதைகளே வெற்றிபெறும் என்று சொல்லி முடித்தார் பெருமாள் முருகன்.

__________________________________

சங்கமம் குறித்த முழுத் தகவல்களுக்கு ஈரோடு கதிரின் இந்த இடுகையைச் சுட்டவும்.


.