Thursday, September 29, 2011

சவால் சிறுகதைப் போட்டி –2011

சென்ற வருடம் யாருக்கோ நான் அலைபேசியபோது எதிர்முனை சொன்ன ‘மை நேம் ஈஸ் யாமினி’ ஒரு பொறியாக மனதில் விழ, மிஸ்.யாமினி என்ற தொடர் ஒன்றை எழுதினேன். அதற்கு கொஞ்ச நாள் முன் ஆதியும், ஒரு மினி தொடர் எழுதியிருந்தார்.

இதுபற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது - மனதில் சிறு பொறியாகத் தோன்றி, பின்பு பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு.. மாற்றுக்கருத்துகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடத்தித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் சென்ற செப்டம்பரில் ‘சவால்சிறுகதைப்போட்டி’யை அறிவித்தோம். அதன் பின் நிகழ்ந்தது அந்த ஆச்சரியமும், பரபரப்பும், சுவாரசியங்களும் நிறைந்த நிகழ்வு.

அந்த முதல் அறிவிப்பு : இதோ இங்கே.

பொதுவான சிறுகதைப் போட்டியாக இல்லாமல், சிறுகதையில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் விடுத்த 'சவால்’ நண்பர்களை ஆர்வத்தில் தள்ளியிருக்கவேண்டும். அதன் பின்னர், எதிர்பாராத வகையில் சரியாக 84 சிறுகதைகள் போட்டிக்கு வந்தன. சக பதிவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோர் நடுவராக இருந்து வெற்றிபெற்ற கதைகளை தேர்ந்தெடுத்தனர். 84 கதைகளிலிருந்து முதல் கட்டமாக 15 கதைகளும் அதிலிருந்து 5 கதைகள் பரிசுக்குரியதாகவும் தேர்வுசெய்யப்பட்டன. முதல் பரிசுகளை சத்யா, பார்வையாளன், ஸ்ரீதர் நாராயணன் ஆகியோரும், ஆறுதல் பரிசுகளை வித்யா, RVS ஆகியோரும் தட்டிச்சென்றனர். சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. போட்டி குறித்த எங்கள் அனுபவங்கள் சுருக்கமாக இங்கே.

போட்டியின் முடிவுகள் இங்கே இருக்கின்றன.

வலையுலகில் ஒரு சிறிய சலசலப்பை உண்டுபண்ணிய நிகழ்வென்றே இதுகுறித்து சில மூத்த பதிவர்கள் எண்ணம் பகிர்ந்தார்கள்.

விதிமுறைகள் கடுமையாக இருந்தது, அடுத்த முறை இவை எளிமையாக்கப்படவேண்டும் எனவும், இவ்வளவு சீரியஸாக இந்தப்போட்டி நடத்தப்படும் என்று நாங்கள் எதிர்பர்க்கவில்லை எனவும் பாராட்டியும், குட்டியும் ஏராளமான கருத்துகளை எதிர்கொண்டோம். தொடர்ந்து வேறு போட்டிகள் நடத்தப்படுமா என்று ஆவலோடு நண்பர்கள் அவ்வப்போது கேட்டவண்ணமும் இருந்தனர். எங்களுக்கும் உள்ளூர ஆவல் இருந்தாலும் எடுத்துக்கொண்ட சிரமம் பயமுறுத்த ’வருடம் ஒருமுறை’ (சற்றேறக்குறைய செப்டம்பரில்) என முடிவு செய்தோம்.

அதன்படி இதோ.. 2011 ன் ‘சவால் சிறுகதைப்போட்டி’க்கான அறிவிப்பு.

முன்னதாக இன்னுமொரு முக்கியமான கூடுதல் தகவல். சமீபத்தில் ‘பதிவர்களால் பதிவர்களுக்காக..’ எனும் கேப்ஷனுடன் சிறப்பாக அறிமுகமாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘யுடான்ஸ்’ (www.udanz.com) எனும் புதிய தமிழ் வலைப்பூ திரட்டியை அறிவீர்கள். அதன் நடத்துனர்கள், நம் நண்பர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜோஸப் பால்ராஜ் ஆகியோர் தன்முனைப்போடு இந்த சிறுகதைப்போட்டியை ’யுடான்ஸு’டன் இணைந்து வழங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்வோடு ஒப்புக்கொண்டோம். போட்டிக்கான பரிசுத்தொகையை ‘யுடான்ஸ்’ ஏற்றுக் கொண்டது. அதன்படி ‘யுடான்ஸ்’ இணையதளத்தோடு நாங்கள் கரம் கோர்த்து இந்த ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம். யுடான்ஸ் திரட்டியில் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளும், அறிவிப்பும் காணக்கிடைக்கும்.

இனி களம் உங்களுடையது. மூத்த, இளைய பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்திக்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்-

பரிசல்காரன்
ஆதிமூலகிருஷ்ணன்.



*

சிறுகதைக்கான சவால் :



இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.



*

பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்..

சவால் சிறுகதைப்போட்டி -2011

விதிமுறைகள் :

1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்படவேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக்கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.

5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.

6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.

8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.

9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.

10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.

11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com

13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.

வாழ்த்துகள்!

.

Friday, September 23, 2011

எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை

எழுத்தாளர் எஸ்.ரா-வுடனான சந்திப்பிற்கு திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான சேர்தளம் ஏற்பாடு செய்திருக்கிறது. நண்பர்கள் வருகை தருமாறு சேர்தளம் சார்பில் வரவேற்கிறோம்.

இதைப் பற்றிய கட்டுரை நண்பர் முரளிகுமார் பத்மநாபன் பதிவிலிருந்து...

----

எஸ்.ராமகிருஷ்ணன், விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்தவர். வெகுஜன பத்திரிக்கையான ஆனந்தவிகடனில் வெளியான இவரது கட்டுரைகளில் மூலம் பரவாலாக அறியப்பட்டவர் என்றாலும் தன்னுடைய பிரத்யேக எழுத்து நடையின் மூலம் தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், புத்தக அறிமுகங்கள், உலக சினிமாக்களின் அறிமுகங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிவரும் முழு நேர எழுத்தாளர்.

டால்ஸ்டாயின் எழுத்து பாசமிக்க தாத்தாவின் கரங்களைப்போல நெருக்கமும் வலிமையும் கொண்டது. அந்தக் கரங்கள் மண்ணோடு நேரடியாகத்தொடர்பு கொண்டது. உலகின்மீது அதீத நம்பிக்கை கொண்டவை. அவரைக் கட்டிக்கொள்ளவும் அவரது அனுப்வங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர் தோளில் கைபோடும் நண்பனாக என்னால் ஒருபோதும் கொள்ளமுடியாது. இதற்கு நேர்மாறாக தாஸ்தாயெவ்ஸ்கியிருந்தார். அவரது கதைகளைப் படிக்கத்துவங்கியதும், அவர் உரிமையுடன் தோள்களில் கைபோட்டுக்கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் தனது இயலாமையை, புறக்கணிப்பை அதன் ஊடாகவும் தான் வாழ்வில் கண்டு மகிழ்ந்த சின்னஞ்சிறு சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வார். கனவுகளைப் பற்றி பேசுவார், வலிகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வார். உலகம் அழகான பெண்களின் காதலுக்காக மட்டுமே இயங்குகிறது என்று உற்சாகம் கொள்ளச் சொல்வார்.

இது டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாயெவ்ஸ்கி பற்றி தன்னுடைய ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. எஸ்.ரா, இவர்களைப் படித்த அளவிற்கு நான் எஸ்.ராவைப் வாசித்திராத பொழுதும் இவரைப்பற்றி சொல்லவும் பேசவும் நிறைய இருக்கிறது என்னிடம்.

முதலில் ஆனந்த விகடனில் வெளிவந்த இவரது துணையெழுத்தில்தான் எஸ்.ராவை வாசிக்கத்தொடங்கினேன். தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி போன்ற கட்டுரைகள் இவரது எழுத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் சுற்றியலைந்த அனுபவத்தை தேசாந்திரியில் அப்படியே தன் எழுத்துக்களில் பகிர்ந்திருப்பார். முன் அறிமுகம் இல்லாத மனிதர்களோடான ஸ்னேகம் என்பது எவ்வலவு அலாதியானது என்பதை இவரது எழுத்தில் உணரலாம். இருட்டில் விளக்கோடு உதவிய ஆட்டோகாரர், பாம்புக்கடிக்கு மருந்திட்டு காப்பாற்றிய ஏழை விவசாயி, அடுத்தவேளை சோற்றிற்கின்றி அலைந்த நேரங்களில் சந்தித்த மனிதர்கள் என இவரது கட்டுரையில் வருகிற மனிதர்கள், மனிதம் நிரம்பியவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ, சக மனிதர்களோடான பரஸ்பர அன்பையும் நம்பிக்கையையும் மனதில் விதைக்கும் படியாக இருக்கிறது.

குறிப்பாக கதாவிலாசத்தில் வரும் கட்டுரைகள், அந்த எழுத்தாளர்களைப்பற்றிய வெறும் தகவல்களாகவோ, புள்ளிவிபரங்களாகவோ, அவர்களின் உயர்த்திச் சொல்லவேண்டிய எந்த கட்டாயங்களையோ சுமந்து நிற்பதில்லை. மாறாக, அவர்களின் வாழ்வை, எழுத்தின் மீதான அவர்களின் ஆளுமையை, அவர்களின் வாயிலாகவே சொல்லவைக்கிறது. வண்ணநிலவனையும், பஷீரையும், கு.அழகிரிசாமியையும் தேடித்தேடிப் படிக்கச் செய்கிறது. இன்னும், வாசிப்பு உலகில் அடியெடுத்து வைக்கும் எவருக்கும் அறிமுகமாய் என்னுடைய விரல்கள் இவரது கதாவிலாசத்தை நோக்கியே நீண்டிருக்கும். ஒரு எழுத்தாளனாய் தன் சமகால, முன்னோடி எழுத்தாளர்களை, அவர்களின் எழுத்துக்களின் மீதான தனது காதலை எந்தவித பிணக்குமின்றி எழுதுவது இவரது தனித்தன்மை.

இவரது எழுத்துக்களில் இன்னும் வசீகரமானது, இதுவரை அறியப்படாத பல விஷயங்களை, கவிதைகளை, கதைகளை அதன் வரிகளை, மேற்கோள்களாக காட்டுவதுதான். இவருடைய ஏதோவொரு கட்டுரையில் வரும் ஜென் கவிதையொன்றில் “மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது” இந்தவரிகளை எத்தனை முறை வாசித்திருப்பேனென்று தெரியாது. இதுபோன்ற வரிகள் அடுத்தடுத்ததாக புதிய புத்தகத்தின் மீதான தேடலை ஆரம்பித்து வைக்கிறது. இந்த தேடலை இவரது எழுத்துக்கள் இயல்பாக செய்துபோகிறது.

இவரது சமீபத்திய புத்தகமான வாசகபர்வத்தின் முன்னுரையில் “ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு, மெளனமும் பதற்றமும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாக எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது” என்று ஒரு வரி வரும். அதை என்னாலும் உணரமுடிகிறது என்பது ஒரு பெருமிதம் கலந்த மகிழ்ச்சியே.

எஸ்.ராவின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாய் ஏழு வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். அவரை மட்டுமல்ல, எப்படி வாசிக்க வேண்டும், எவரையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தபடியே ஜி.நாகராஜனை, புதுமைப்பித்தனை, சம்பத்தை, பஷீரை, வண்ணதாசனை, எம்.எஸ்ஸை, நகுலனை, வண்ணநிலவனை, போர்ஹேவை, செகாவை இன்னும் பலரை. பாரதியார் கதைகள் கூட எழுதுவார் என்றோ வண்ணதாசன் என்று ஒரு ஆளுமை இருக்கின்றார் என்பதோ தெரியாத நான் இவர்களைப் வாசித்திருக்கிறேன் என்றால், இத்தனைக்கும் காரணமான ஒரு மனிதரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்குமல்லவா?

என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் சில நண்பர்கள் என்னிடம் “முரளி, உன்னுடைய தொடர்ச்சியான வாசிப்பனுபவம் உன் உன் எழுத்துக்களில் தெரிகிறது, அது உன் எழுத்துக்களில் சின்னச்சின்ன மாறுதல்களைப் பிரதிபலிக்கிறது” என்று சொல்கின்றனர். இதற்கு என்னுடைய பதில் ஏற்கனவே என்னுடைய ஒரு பதிவில் எழுதியது போல “என்னுடைய ஒவ்வொரு பதிவையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாய் உணர்கிறேன். மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும், அதுதான் விதி”. இப்பொழுது சந்தோஷமான அந்தத் தருணம் நெருங்கி விட்டது. என் ஆதர்ச எழுத்தாளரை சந்திக்கவிருக்கிறேன், சொல்லப்போனால் கையைப்பிடித்து அழுத்தமாக ஒரு நன்றி சொல்லப் போகிறேன்.

இதற்கு முன்பாக இரண்டு முறை நேரில் சந்தித்திருந்தாலும் அதிகம் அவருடன் உரையாட முடியவில்லை. அதிலும் கடந்தமுறை மதுரையில் நடந்த விழாவில் செகாவ் பற்றியும் கிரேக்கத்து முயல் பற்றியும் அவர் பேசியதிலிருந்து, கூடுமான வரை விரைவில் அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன். சமீபத்தில் நெடுங்குருதி குறித்த ஒரு கட்டுரையை அவருக்கு அனுப்பியிருந்தேன், அது குறித்த தொடர் உரையாடலில் சேர்தளம் – திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக அவரை திருப்பூருக்கு அழைத்திருந்தோம். அவரும் வரச் சம்மதித்திருக்கிறார். வருகிற ஞாயிறு மாலை, அரோமா ஹாலில் ஒரு கலந்துரையாடல் போல நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.




எங்களைப் போல அவரை சந்திக்க, கலந்துரையாட விருப்பமிருக்கும் நண்பர்கள் தங்களது வருகையை பதிவுசெய்துகொள்ளுங்கள். முன்னேற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும்.

இந்தியா முழுவதும் நடந்து திரிந்த ஒரு தேசாந்திரியான இவருடன் இலக்கற்ற பயணம் மற்றும் அவரது எழுத்துக்கள் குறித்தான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் இதையே அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

-முரளிகுமார் பத்மநாபன்


...

Thursday, September 22, 2011

ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை

போனவாரத்தில் ஒரு நாள். நிறுவனத்தின் வாசல் அருகே “சரி.. கிளம்பறேன்” என்று நான் ஆயத்தமானபோதுதான் அவன் வந்தான்.

“சார்.. சார்.. எங்க போறீங்க?”

“திருப்பூர் வரைக்கும் ஒரு வேலையா போறேன்.. நாலு மணிக்குள்ள போகணும். போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன்”

“சார்... அப்டியே XXXX பேங்ல இந்தப் பணத்தைப் போட்டுடுங்க சார்.. ஊர்ல மாமா எடுத்துக்குவார்”

“லேட்டாகுமா?”

“ச்சே.. இல்ல சார்.. அந்த பேங்ல கூட்டமே இருக்காது. போனா அஞ்சு நிமிஷத்து வேலை”

** ** **

சொன்னது போலவே கூட்டம் இருக்கவில்லை. இரண்டே பேர் தான் அமர்ந்திருந்தனர்.

இடது வலது புறங்களில் இருந்த நாற்காலிகளை வயசான சிலர் ஆக்ரமித்திருக்க, ஓரிருவரே இளம் வயதினராக இருந்தனர். இரண்டு கவுண்டர்கள் இருக்க நான் எதில் பணம் கட்ட என்று தெரியாமல் அருகே சென்றேன். அமர்ந்திருந்த ஒருவர் தடுத்தார்.

“ஹலோ... உட்கார்ந்திருக்கோம்ல”

‘இப்ப என்ன நின்னுட்டிருக்கன்னா சொன்னோம்?’ என்று நினைத்தவாறே, “அதான் கவுண்டர்ல யாரும் இல்லீங்களே” என்று கேட்டேன்.

“அவர்தான் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றார் கவுண்டர் ஆசாமியைக் காட்டி.

நான் அமர்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைத் தடுத்த அந்த வாடிக்கையாளர் “எவ்ளோ பணம் எடுக்கறீங்க?” என்று கேட்டார்.

“பணம் எடுக்கலைங்க.. டெபாஸிட் பண்ண வந்தேன்”

“ஓ.. ஸாரி.. ஸாரி.. அப்ப அந்த செகண்ட் கவுண்டர் போங்க” என்று வழிந்தார்.

இரண்டாவது கவுண்டர் அருகே சென்றேன். கெச்சலாக ஒடிந்த உருவத்தில் ஒரு வயசானவர் அமர்ந்திருந்தார். குனிந்து கீபோர்டில் எழுத்துகளைத் தேடித் தேடி ஒற்றைவிரலால் தட்டிக் கொண்டிருந்த அவரின் தலை மேலிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது.

சிறிது விநாடிகள் நின்ற நான், அவர் தலை உயராததால் “எக்ஸ்யூஸ்மீ” என்றேன்.

-மெ
-து
-வா
-க

நிமிர்ந்தார். ‘என்ன?’ என்றார் கண்களால்.

நான் நிரப்பப்பட்ட செலானை நீட்டினேன். இரண்டாயிரத்து முப்பது ரூபாய். நான்கு ஐநூறு ரூபாயும், மூன்று பத்து ரூபாயும் இருந்தன.

வாங்கியவர், கண்ணாடியை மேலே ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு ரூபாயாக எண்ணினார்.

“ரெண்டாயிரத்து முப்பதா?”

“ஆமா சார்”

மறுபடி இரண்டு முறை ஒவ்வொரு நோட்டையும் எண்ணினார். அதில் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் தனியே எடுத்தார். ஒவ்வொரு நோட்டையும் தலைக்கு மேல் தூக்கிப் பார்த்தார். தடவிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த ஒரு மெஷினில் வைத்து சோதித்தார். பத்து ரூபாய் நோட்டுகளை கையாலேயே தடவிக் கொடுத்தார். மீண்டும் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து எண்ணினார்.

“ரெண்டாயிரத்து முப்பது. இல்லையா?”

நான்: “ஆமா சார்”

நான் கொடுத்த செலானை எடுத்தார். டேபிளில் எதையோ தேடினார். பேனா. எல்லாவற்றையும் எடுத்து தேடினார். ட்ராவைத் திறந்து பார்த்தார். கீபோர்டை நகர்த்திப் பார்த்தார். ம்ஹூம். கையைலிருந்த பணத்தை டேபிளில் வைத்து ஒரு பேபப்ர் வெய்ட்டை அதன் மீது வைத்துவிட்டு, நாற்காலியைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி, கீழே தேடினார். விழுந்திருந்தது போலும். ஒரு பெருமூச்சை உதிர்த்தவாறே குனிந்தார். அவர் கைகளுக்கு அந்தப் பேனா எட்டவில்லை.

நாற்காலியை விட்டு எழுந்தார். குனிந்து அந்தப் பேனாவை எடுத்தார். அதை டேபிளின் மேல் வைத்துவிட்டு, நின்றவாறே பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்தார். முன் நெற்றியை அழுந்தத் துடைத்துக் கொண்டார். கைக்குட்டையை இருந்த மடிப்பு கலையாமல் அதே மாதிரி மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். கம்பிகளைத் தாண்டி, கவுண்டருக்கு வெளியே யார் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டார். அவர் பார்வைக்கு மறைக்காமல் இருக்க நான் கொஞ்சம் நகர்ந்தேன். முழுவதும் நோட்டமிட்டுவிட்டு அமர்ந்தார்.

பேப்பர் வெய்ட்டை நகர்த்தி, மறுபடி ஒருமுறை அந்த ஏழு நோட்டுகளையும் எண்ணினார். செலானை எடுத்து, அதில் இருந்த டினாமினேஷனை சரிபார்த்து டிக் அடித்தார்.

கண்ணாடியை கொஞ்சம் இறக்கி விட்டு கணினித் திரையைப் பார்த்தார். கணினியில் எதையோ டைப்பினார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார். மறுபடி எதையோ டைப்பியவர், செலானில் இருந்த வங்கிக் கணக்கு எண்ணை, ஒவ்வொரு இலக்கமாய் மிகப் பொறுமையாய் சரிபார்த்து சரிபார்த்து அடித்தார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார்.

செலானையும், கணினித் திரையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ஒண்ணு.. ஒண்ணு. மூணு.. ஆறு..” என்று கணக்கு எண் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே சரிபார்த்தார். செலானிலும், கணினியிலும் தெரியும் பெயரை சரிபார்த்தார்.

மீண்டும் செலானைப் பார்த்தவர் கேட்டார்: “ரெண்டாயிரத்து முப்பது?”

நான்: “ஆமா சார்”


இப்போது தொகையை கணினியில் அடிக்கும் முறை. ஒவ்வொரு எண்ணையும் பொறுமையாக அடித்தார். கண்ணாடியை இறக்கிக் கொண்டார். செலானையும் கணினித் திரையையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லிக் கொண்டார்.

கண்ணாடியை சரிசெய்தவாறே என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்து ‘ஆமா சார்’ என்று பதில் சொல்ல தயாராய் இருந்தேன். ம்ஹூம்.

மீண்டும் செலானின் இடது வலப் புறங்களில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவாறே தேதி, கணக்கு எண், பெயர், தொகை, கையொப்பம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து டிக் அடித்தார். வலப்புறம் இருந்த சீல் ஒன்றை எடுத்து டமார் டமார் என்று டேபிள் அதிர சீல் வைத்தார். சீல் மேல் கையொப்பமிட்டார்.

செலானின் மறுபாதியைக் கிழித்தார். என்னிடம் கொடுக்க நீட்டியவர், மீண்டும் கையை இழுத்துக் கொண்டார். கையில் மறுபாதியைப் பிடித்தவாறே கணினித் திரையில் எதையோ சரிபார்த்தார். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு என்னிடம் நீட்டினார்.

வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

** ** **

நேற்றைக்கு அலுவல் வேலையாக வெளியே போக பைக்கை எடுத்தேன். அவன் ஓடிவந்தான். ‘சார்.. ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை’ என்றான்.

“நான் எங்கயும் போகலைப்பா. வண்டில காத்து இருக்கான்னு பார்க்க எடுத்தேன்” என்றபடி மறுபடியும் பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினேன்.

** ** **

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும்


து நேற்று திருப்பூரில் நடந்தது.

காதல் தம்பதிகள். ஆறு வயதுப் பெண்குழந்தை. திருப்பூரில் தொழில் நிலைமை சரியில்லாததால் ஆறுமாதம் அங்கும் இங்கும் கடன் வாங்கியிருக்கிறார் கணவர். கடன் தொல்லை. அதனால் குடும்பச் சண்டை. சமாதானம் பேச சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் அவர்களை சென்னைக்கே வந்து குடியிருக்கச் சொல்கிறார்கள். பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில்தான் பெண்ணின் தாய்வீடு. ஓடிச் சென்று ஓர் அறையில் புகுந்து தாளிட்டுக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து இவர்கள் சென்று பார்க்க, சேலையை மாட்டி தற்கொலைக்கு முயன்றது தெரிகிறது.

ஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவரை உடனே ஓர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். கணவர் பின்னாலேயே இன்னொரு ஆட்டோவில் வருகிறார். வழியில் ஆம்புலன்ஸ் வர, ஆட்டோவை நிறுத்தி, உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த அவரின் கணவர், தான் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார். பதட்டம். கவனமின்மை. எதிரில் வரும் ஒரு லாரி அந்தக் கணவர் மீது மோதுகிறது.

இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார்கள்.




அந்த ஆறு வயதுக் குழந்தையின் கதி????

விபத்து என்பது எங்கே-எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. எங்கேயும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.

--- --

வி
பத்து நடக்கும்போது, அதைக் கேட்கும்போதோ நமக்கு ஏற்படும் பதட்டமும், விளைவுகளும் எழுத முடியாது. எழுதினாலும் உணரமுடியாது. எங்கேயும் எப்போதும் நம்மை உணர வைக்கிறது. விபத்து நடக்கும் பேருந்தினுள்ளே நாமும் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துவக்க காட்சியிலேயே அந்த விபத்தைக் காட்டி விடுகிறார்கள். எனினும், இடைவேளைக்குப் பின் அதைக் காட்டும்போது, தியேட்டரில் பலரும் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. அவ்வளவு நேர்த்தியாக, அவ்வளவு ஆழமாக படமாக்கிய வேல்ராஜுக்கு சபாஷ்! அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட்! இன்னும் நடுங்குகிறது!

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கும் விபத்து நடக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அனன்யாவும், மற்றொரு பேருந்தில் ஜெய், அஞ்சலி, சர்வா-வும் பயணிக்கிறார்கள். அங்கிருந்து 4 மணி நேரம் முன்பு, அதிலிருந்து ஆறுமாதம் முன்பு என்று சர்வா-அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ஜெய்-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்டுகிறார் இயக்குனர். அந்த திரைக்கதை உத்தி ரசிக்க வைக்கிறது. விபத்தில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.





சர்வா-அனன்யா காட்சிகளில் அனன்யாவின் சந்தேகப்பேர்வழியான பாத்திரப்படைப்பை இயக்குனர் காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஒரு காட்சியில், பேருந்துக்காக நிற்கும் அனன்யா, ஓரடி பின் சென்று அங்கிருக்கும் பலகையில் அவர்களுக்கான பேருந்து எண் இருக்கிறதா என்று சரிபார்க்கிறார். மூன்று நான்கு செகண்ட் வரும் அந்தக் காட்சியில் அவரது சந்தேக புத்தியைப் பதிவு செய்த விதம் நன்று. அதே அனன்யா, விபத்தில் மருத்துமனையில் இருக்க, அங்கு வரும் அனன்யாவின் சித்தி சர்வா-வைப் பார்த்து ‘இவர் இருக்காரு.. அமுதாவுக்கு ஒண்ணும் ஆகிருக்காது’ என்று சொல்கிற வசனம் மூலம் எல்லாவற்றையும் புரிய வைத்து விடுகிறார்கள்.







ஜெய்-அஞ்சலி. ஒரு காதலியை இப்படி யாரும் சித்தரித்து நான் பார்த்ததில்லை. அஞ்சலியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் இந்தப் படத்தின் மகாப் பெரிய ப்ளஸ். தன்னை உருகிக் காதலிக்கும் ஜெய்-யிடம் அவர் ஐ லவ் யூ சொல்லும் தொனி… இதுவரைக்கும் யாரும் இப்படிச் சொல்லிருக்க மாட்டார்கள். ஜெய்யின் நடிப்பும் கச்சிதம். படம் முழுவதும் அஞ்சலியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். ‘கட்டிக்கோ’ என்று அஞ்சலி சொல்ல, ‘கல்யாணத்துக்கு அப்பறம்க’ என்று ஜெய் சொன்னதும், அஞ்சலி ‘நீ கல்யாணத்துக்கு அப்பறம் கட்டிக்கோ.. நான் இப்ப கட்டிக்கறேன்’ என்று அணைத்துக் கொள்ளுமிடம் கவிதை. அந்தக் காட்சி மற்றும் பாடல் காட்சியில் மாண்டேஜ்கள் தவிர வேறெந்த இடத்திலும் அஞ்சலி, ஜெய்-யை காதல் பார்வையே பார்ப்பதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன் அன்பை இறுதிக் காட்சி நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு ஸ்ட்ரிக்டாக தான் இருப்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறது. அத்தனை யதார்த்தமான வசனங்கள்தான் காரணம்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட். நா.முத்துக்குமாரின் வரிகள் ஈர்க்கின்றன. மாசமா பாடலைத் தவிர பிற எல்லாமே மாண்டேஜ். கோவிந்தா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய் பாடல்களின் காட்சிகள் ரசனையோ ரசனை. அதுவும் சொட்டச் சொட்ட பாடலில் அஞ்சலி தன் தோழிகளுடன் ஜெய் அறைக்குச் செல்லும் காட்சி கொள்ளை ரசனை.

படத்தில் பேருந்து சாலைகளில் செல்லும் வேகத்தைப் படமாக்கிய விதமும், அதற்கான பின்னணி இசைக் கோர்ப்பும் அபாரம். ஒரு காட்சியில் இரண்டு பெரிய வாகனங்களை ஆம்னி பஸ் இடது புறமாக சாலையில் இறங்கி முந்திச் செல்லும் காட்சியில் தியேட்டரில் பலர் ஐயோ அம்மா என்று கத்துகிறார்கள். இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.

நேற்று வெளியான இன்னொரு படம் வந்தான் வென்றான். அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது வந்தது. வென்றது.


.

Friday, September 9, 2011

கண்ணம்மா

“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.

பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.

நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”

“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”

“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.

மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.

நான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.

நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.

“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.

அவரிடம் சொல்லி, கேட்டேன்.

“எந்த பாலுங்க?”

“என்ர மவன்தான்”

உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.

“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.

“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.

அதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.

என்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.

அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.

அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.

“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர் “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.

நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.


.

Tuesday, September 6, 2011

ஒரே தகவல்

டந்த மூன்று மாதங்களாக பெரிசாக எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. இது பற்றி இப்போதுதான் முதல்முதலாகச் சொல்கிறேன். முதலிலேயே சொல்லியிருந்தால் மொத்தியிருப்பீர்கள் என்று தெரியும். எழுதாமல் இருப்பது எப்படி என்று எழுதுவதற்காக, எழுதாமல் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக எழுதாமல் இருந்து அதிலேயே மூழ்கி விட்டேன். எழுதாமல் இருப்பது என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அது ஒரு வெட்டித்தனம். ஒன்றை எழுதுகிறீர்கள். அதை வெளியிட்டுவிட்டால் எல்லாரும் உங்களை மண்டையிலேயே போடுவார்கள். “இதை நான் நம்ப மாட்டேன்” என்று யாராவது சொன்னால் அது மடமை. எழுதுவது படிப்பவரை சோதித்துப் பார்க்கும் செயல். அது ஒரு விஞ்ஞான உண்மை. அதே போன்றதுதான் எழுதாமல் இருப்பதும். என்னுடைய எழுத்து ஒருவருக்கு இலக்கிய ரீதியாக இன்பம் தருகிறதோ இல்லையோ, அதில் உள்ள ஒரு சில வார்த்தைகளின் சூட்சுமங்கள் அதை வாசிப்பவரின் வாழ்வில் மிகப் பெரிய எரிச்சலை உண்டு பண்ணும். அதில் முக்கியமானவை உங்கள் கையையே கடித்துக் கொள்வது, மண்டையைப் பிய்த்துக் கொள்வது. இதை நான் வெறுமனே பரபரப்புக்காக சொல்லவில்லை. என் எழுத்தைப் படித்து, அதில் நான் சொல்லியிருக்கும் ஒரு விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 48 நாட்கள் மங்காத்தா பார்க்க வேண்டும் என்பது போன்ற நடைமுறை சாத்தியமில்லாத எதுவும் நான் சொல்வதில் இருக்காது. ட்விட்டர், பஸ்ஸ், ப்ளாக், ஃபேஸ்புக் ஆகியவற்றை விலக்க வேண்டும் என்பது போன்ற மனித விரோத பத்தியங்களும் இல்லை. “அப்படிப்பட்ட விஷயத்தை நீயே முயற்சி செய்து மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாமே?” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். எனக்கும் மெண்டல் பட்டம் வேண்டும்தான். ஆனால் அது என்னை எழுதியவர்களை ஆக்கி, அதை ரசிப்பதன் மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

.

Friday, September 2, 2011

கடுகு


# ஃபேஸ்புக்ல என்னை க்ரூப்ல இணைச்சவங்க, ஒரு மெய்லுக்கு ஒரு ரூவா கொடுத்தாலே ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுவேன் போலிருக்கே.. #முடியல


# 'கருப்புப் பேரழகா கண்ணுக்குள்ள நிக்கறியே ஜோரா..' பாடல் டான்ஸுடன்.. விநாயகர் சிலையருகே.. சதுர்த்தி விழாவாம்! பொருத்தமாத்தான் போடறாங்க!


# பின்னால ஒருத்தன்: 'இனிமேதான் படமே' #டேய்.. இன்னும் அரை மணிநேரத்துல முடியப்போகுதுடா...


# மங்காத்தாவை 'மங்காத்தாடா'-ன்னு இப்பதான் சொல்றாங்க. விஜய்யோட நண்பனை, 'நண்பேன்டா'ன்னு தமிழ்நாடே எப்பவோ சொல்ல ஆரம்பிச்சாச்சு!


# ஸ்ரீகாந்த்தேவா, தேனிசைத் தென்றல் தேவா-வின் இரட்டைக் குழந்தையா?

# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா?

# இமேஜைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே.

# ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ

# 'உயர்தர சைவ உணவகம்' - இத ஹோட்டல் பேருக்குப் பின்னால டிஃபால்ட்டா வெச்சுக்கறாங்க. அதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல!

# 'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.

# அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்.

# என் வயதை, நான் பிறந்த நாளை வைத்துக் கணிக்கிறேன். நான் வாழ்ந்ததை, உன்னைப் பார்த்த நாளை வைத்துக் கணிக்கிறேன். #Feelings

# நீயின்றி அமையாது வாழ்வு. #Feelings

# மழை வருவது போலிருந்தால் எல்லாரும் குடை தேடுகிறார்கள். நான் உன்னைத் தேடுகிறேன். #Feelings

# '3 நீங்க எடுத்துட்டு, 1 மட்டும் ஆளுக்குப் பாதியா? தேவையில்ல.. அதையும் நீங்களே வெச்சுக்கங்க' என்ற இந்திய அணியின் ஆண்மையைப் பாராட்டுகிறேன். -Test

# திருமணநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை சிறையில் சென்று சந்திக்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.

# ஒருத்தன் நல்லா பாடினா 1ஸ் மோர் கேட்கற மாதிரி.. நல்லா விளையாடறாங்கன்னு தொடர்ந்து விளையாடச் சொல்லி ரசிக்கறாங்களோ?-Followon

# 'தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை' - ஜெ. #வெவரம்மா நீங்க! பட்டியல்தான் இல்லைன்னிருக்கீங்க!

# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா?

# பாட்டுப் போட்டின்னா பாட மட்டும் சொல்லுங்கடா.. மேக்கப் பண்ணிகிட்டு ஆடறது, ஓடறதுன்னு மகா கொடுமை பண்றாங்க...

# பில்லியனில் இளம்பெண் வைத்து வண்டி ஓட்டுபவர்களை நாம் முந்தினால், அதன் பின் அவர் நம்மை அவ்வளவு சீக்கிரம் முந்துவதில்லை #அவதானிப்பு

# 'The word Krishna means the person who is attractive to everyone' - இப்ப படிச்சிட்டிருக்கற கட்டுரைல இருந்து. கரெக்டாதான் சொல்லிருக்காங்க.

# சரக்கடிக்கும்போது நண்பர்களுக்குள் பின்பற்ற வேண்டுமென்று சொல்லிக்கொள்கிற விதிமுறைகளனைத்தும் அதிகபட்சம் 2வது ரவுண்ட் வரையே நீடிக்கிறது.

# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்! #நட-ராஜா

# அழைக்கும் நபர் எதிர்முனையில் என்ன மாதிரியான முகபாவனை காட்டிவிட்டு உங்கள் ஃபோனை எடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளாதவரை நீங்கள் பாக்யசாலி!

# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க?'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்!

# மதியம் சாப்பாட்டுக்கு ஆர்டர் சொல்லிவிட்டேன். இதோ அலைபேசியைத் திறந்து அன்னா ஹசாரேவை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஆதரிக்கப் போகிறேன்.


# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்!


# படு கேவலமான விளம்பர ஸ்கிரிப்டில் நடிப்பதில் வடக்கே ஷாரூக்குக்கும், தெற்கே சூர்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

# சிநேகா, திவ்யா, அனுஷ்கா, தீபிகா, கோபிகா என்றொருவன் கலந்துகட்டி ரசிக்கத் தொடங்கும்போது தேசிய ஒற்றுமை உருவாகிறது.

# முதல் இன்னிங்ஸை விட 20 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணியை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

# ஹோட்டலில் ஒருகுழந்தையை அவள் அம்மா உரக்க அழைத்ததில் மொத்த ஹோட்டலும் அந்தக் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் பெயர்தான் காரணம். #காஞ்சனாஆஆ

# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல.

# ஒரு நண்பரிடமிருந்து வந்த மெய்ல் இப்படி ஆரம்பிக்கிறது: “Dear my 5278 readers..” - அவ்வ்வ்வ்...........


** ** **

(ஆஃபீஸில் ட்விட்டர்/ஃபேஸ்புக் தடை என்று சொன்ன நண்பர்களுக்காக....)



.