Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, October 5, 2014

அர-மெட்-ஜீ-பேங்!

சமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்!

1. அரண்மணை:
மூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம்பிப் போனோம்.

சந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.

‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா?” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.

“படம் எப்டி?” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா? இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.
--------------

2. மெட்ராஸ்:

நல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.

ரஞ்சித் - Waiting For Your Hat trick Movie!
---------------------------------------

3. ஜீவா:

சமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா!.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா!’


குறியீடுகள் என்று பார்த்தால், இதிலும்.  கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல!

பாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.

OUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு? “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.


ச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
-----------

4. BANG BANG

மெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா!
.

Saturday, March 16, 2013

பரதேசி - நியாயம்ம்மாஆஆஆஆரேஏஏஏஏஏஏ...!



ரதேசி திரைப்படத்தின் விமர்சனத்தையெல்லாம் எழுதுமளவு கொஞ்சம் கூட அருகதையெல்லாம் இருக்கிறதா எனக்கென்று தெரியவில்லை. பாலா என்கிற படைப்பாளி இன்னும் என்னை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எனக்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்காது. ஆனால்- பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி, பாலா எதைப் படைத்தாலும் பார்த்துக் கொண்டாடுவேன். பரதேசியும் அப்படியே.

கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இந்நேரம். அதைக் காட்சிப்படுத்திய விதம் பாலாவுக்கு மட்டுமே வாய்க்கிற வித்தை. இடைவேளையில் அந்த ஒற்றைக் கை, அசைத்து அழைக்கியிலேயே அழவைத்துவிடுகிறான் மனுஷன். இடைவேளைக்குப் பின், தொடரும் காட்சிகளில் அறைகிறது உண்மைகள். 

அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் கருத்தகன்னியாக நடித்திருக்கும் நடிகை, அவர் கணவனாக நடித்தவர், அதர்வாவின் பாட்டி என்று எல்லோரையும் நடிக்க வைத்தவிதத்திலேயே ‘அடிக்கிறாரா பாலா’ என்று விமர்சித்தவர்களையெல்லாம் அடித்துவிட்டார். கொட்டடித்தபடி ‘நியாயம்மாஆஆஆரேஏஏஏ’ என்கிற அதர்வா, கடைசியில் அதே நியாயம்மாஆஆஆரேஏஏஏ-வை நியாயமே இல்லாமல் நடந்து கொள்பவர்களையும் பார்த்துக் கதறிக் கேட்கிற இடம் வலி. இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கதறல்.

கேமரா- செழியன். முதல் சீனில் இதுதான் இவர்கள் உலகம் என்று சந்து பொந்தெல்லாம் ஓடி, சாலூர் கிராமத்தைக் காட்டும் செழியனின் கேமரா, கடைசிக் காட்சியில் 360 டிகிரி கோணத்தில் தேயிலைத் தோட்டத்தைக் காட்டியதன் மூலமே ‘இனி இதுதான் இவர்கள் உலகம் என்று சொல்லாமல் சொல்லி - கனக்க வைக்கிறது.

நாஞ்சில் நாடனின் வசனம், படத்துக்குப் பொருந்தி வருகிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல், சாலூர் கிராமத்தில் பெரிசுகளெல்லாம் பேசிக் கொள்வதை வசனப்படுத்திய விதம் அருமை. மந்திரி என்றாலே இனி சிரிப்புதான் வரும். 

இசை: ஜி.வி.பிரகாஷ். பாடல்களெல்லாம் சரி. ஆனால், இசைப்பது மட்டும் இசையல்ல. சில இடங்களில் மௌனமும் இசை என்பதை இவர் உணரவேண்டும். பின்னணி இசையில், கடைசி சில இடங்களில் இசை தூக்கலாக இருப்பது உறுத்துகிறது.

கவிஞர் வைரமுத்து, கலை இயக்குனர் பாலசந்தர், கேமராமேன் செழியன் - மூவரும் தங்கள் ஷோகேஸில் ஓர் அடுக்கை காலி செய்து வைக்கலாம். இந்தப் படத்திற்கான விருதுகளை அடுக்கிவைக்க.

இயக்குனர் பாலா?

ஒரு புதிய, பெரிய ஷோகேஸுக்கு ஆர்டர் செய்துவிடுங்கள்.

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும்


து நேற்று திருப்பூரில் நடந்தது.

காதல் தம்பதிகள். ஆறு வயதுப் பெண்குழந்தை. திருப்பூரில் தொழில் நிலைமை சரியில்லாததால் ஆறுமாதம் அங்கும் இங்கும் கடன் வாங்கியிருக்கிறார் கணவர். கடன் தொல்லை. அதனால் குடும்பச் சண்டை. சமாதானம் பேச சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் அவர்களை சென்னைக்கே வந்து குடியிருக்கச் சொல்கிறார்கள். பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில்தான் பெண்ணின் தாய்வீடு. ஓடிச் சென்று ஓர் அறையில் புகுந்து தாளிட்டுக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து இவர்கள் சென்று பார்க்க, சேலையை மாட்டி தற்கொலைக்கு முயன்றது தெரிகிறது.

ஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவரை உடனே ஓர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். கணவர் பின்னாலேயே இன்னொரு ஆட்டோவில் வருகிறார். வழியில் ஆம்புலன்ஸ் வர, ஆட்டோவை நிறுத்தி, உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த அவரின் கணவர், தான் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார். பதட்டம். கவனமின்மை. எதிரில் வரும் ஒரு லாரி அந்தக் கணவர் மீது மோதுகிறது.

இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார்கள்.




அந்த ஆறு வயதுக் குழந்தையின் கதி????

விபத்து என்பது எங்கே-எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. எங்கேயும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.

--- --

வி
பத்து நடக்கும்போது, அதைக் கேட்கும்போதோ நமக்கு ஏற்படும் பதட்டமும், விளைவுகளும் எழுத முடியாது. எழுதினாலும் உணரமுடியாது. எங்கேயும் எப்போதும் நம்மை உணர வைக்கிறது. விபத்து நடக்கும் பேருந்தினுள்ளே நாமும் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துவக்க காட்சியிலேயே அந்த விபத்தைக் காட்டி விடுகிறார்கள். எனினும், இடைவேளைக்குப் பின் அதைக் காட்டும்போது, தியேட்டரில் பலரும் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. அவ்வளவு நேர்த்தியாக, அவ்வளவு ஆழமாக படமாக்கிய வேல்ராஜுக்கு சபாஷ்! அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட்! இன்னும் நடுங்குகிறது!

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கும் விபத்து நடக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அனன்யாவும், மற்றொரு பேருந்தில் ஜெய், அஞ்சலி, சர்வா-வும் பயணிக்கிறார்கள். அங்கிருந்து 4 மணி நேரம் முன்பு, அதிலிருந்து ஆறுமாதம் முன்பு என்று சர்வா-அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ஜெய்-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்டுகிறார் இயக்குனர். அந்த திரைக்கதை உத்தி ரசிக்க வைக்கிறது. விபத்தில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.





சர்வா-அனன்யா காட்சிகளில் அனன்யாவின் சந்தேகப்பேர்வழியான பாத்திரப்படைப்பை இயக்குனர் காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஒரு காட்சியில், பேருந்துக்காக நிற்கும் அனன்யா, ஓரடி பின் சென்று அங்கிருக்கும் பலகையில் அவர்களுக்கான பேருந்து எண் இருக்கிறதா என்று சரிபார்க்கிறார். மூன்று நான்கு செகண்ட் வரும் அந்தக் காட்சியில் அவரது சந்தேக புத்தியைப் பதிவு செய்த விதம் நன்று. அதே அனன்யா, விபத்தில் மருத்துமனையில் இருக்க, அங்கு வரும் அனன்யாவின் சித்தி சர்வா-வைப் பார்த்து ‘இவர் இருக்காரு.. அமுதாவுக்கு ஒண்ணும் ஆகிருக்காது’ என்று சொல்கிற வசனம் மூலம் எல்லாவற்றையும் புரிய வைத்து விடுகிறார்கள்.







ஜெய்-அஞ்சலி. ஒரு காதலியை இப்படி யாரும் சித்தரித்து நான் பார்த்ததில்லை. அஞ்சலியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் இந்தப் படத்தின் மகாப் பெரிய ப்ளஸ். தன்னை உருகிக் காதலிக்கும் ஜெய்-யிடம் அவர் ஐ லவ் யூ சொல்லும் தொனி… இதுவரைக்கும் யாரும் இப்படிச் சொல்லிருக்க மாட்டார்கள். ஜெய்யின் நடிப்பும் கச்சிதம். படம் முழுவதும் அஞ்சலியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். ‘கட்டிக்கோ’ என்று அஞ்சலி சொல்ல, ‘கல்யாணத்துக்கு அப்பறம்க’ என்று ஜெய் சொன்னதும், அஞ்சலி ‘நீ கல்யாணத்துக்கு அப்பறம் கட்டிக்கோ.. நான் இப்ப கட்டிக்கறேன்’ என்று அணைத்துக் கொள்ளுமிடம் கவிதை. அந்தக் காட்சி மற்றும் பாடல் காட்சியில் மாண்டேஜ்கள் தவிர வேறெந்த இடத்திலும் அஞ்சலி, ஜெய்-யை காதல் பார்வையே பார்ப்பதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன் அன்பை இறுதிக் காட்சி நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு ஸ்ட்ரிக்டாக தான் இருப்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறது. அத்தனை யதார்த்தமான வசனங்கள்தான் காரணம்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட். நா.முத்துக்குமாரின் வரிகள் ஈர்க்கின்றன. மாசமா பாடலைத் தவிர பிற எல்லாமே மாண்டேஜ். கோவிந்தா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய் பாடல்களின் காட்சிகள் ரசனையோ ரசனை. அதுவும் சொட்டச் சொட்ட பாடலில் அஞ்சலி தன் தோழிகளுடன் ஜெய் அறைக்குச் செல்லும் காட்சி கொள்ளை ரசனை.

படத்தில் பேருந்து சாலைகளில் செல்லும் வேகத்தைப் படமாக்கிய விதமும், அதற்கான பின்னணி இசைக் கோர்ப்பும் அபாரம். ஒரு காட்சியில் இரண்டு பெரிய வாகனங்களை ஆம்னி பஸ் இடது புறமாக சாலையில் இறங்கி முந்திச் செல்லும் காட்சியில் தியேட்டரில் பலர் ஐயோ அம்மா என்று கத்துகிறார்கள். இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.

நேற்று வெளியான இன்னொரு படம் வந்தான் வென்றான். அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது வந்தது. வென்றது.


.

Sunday, July 17, 2011

தெய்வத்திருமகள் - விமர்சனம்



மிகவும் அலப்பறையெல்லாம் இல்லாமல் ஒரு படம் எடுத்து, குறித்த நேரத்தில் அதை விளம்பரப்படுத்தி, வெற்றியும் கண்டிருக்கிறார் விஜய்.





கதை?

கேட்டிருப்பீர்கள். சொன்னாலும் சுவாரஸ்யம் குறைகிற சமாச்சாரமொன்றுமில்லை. மனதளவில் குழந்தையாகவே இருக்கும் கிருஷ்ணாவுக்கு (விக்ரம்) குழந்தை பிறக்கிறது. ஐந்து வயது வரை அந்தக் குழந்தை நிலாவை (சாரா) கிருஷ்ணா வளர்க்கிறார். அங்கே ஒரு ட்விஸ்ட். குழந்தையின் தாத்தா, சாராவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார். வழக்கறிஞரான அனுராதா (அனுஷ்கா) கிருஷ்ணாவிடம் குழந்தையை மீட்டுத் தருகிறேன் என உறுதியளிக்கிறார். குழந்தையின் தாத்தா பெரிய புள்ளி. மனநலம் பாதிப்பான கிருஷ்ணாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, அனுராதா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கான வழக்கை மூத்த வழக்கறிஞர் பாஷ்யத்திடம் (நாசர்) ஒப்படைக்க, அனு அவ்வளவு பெரிய வழக்கறிஞரிடம் சில பல தில்லுமுல்லு வேலைகளை செய்து, குழந்தையை கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பதும், அதன் பிறகு நடப்பதுமே கதை.





மதராசப்பட்டிணம் போலவே, நேர்த்தியான கதை சொல்லல். எந்த இடத்திலும் தொய்வில்லை. நகைச்சுவை என்கிற பெயரில் ஆபாசமோ, ரசிக்க இயலாத எள்ளலோ இல்லை. சந்தானத்தைக் கூட அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சோகம் என்கிற பெயரில் சுவாரஸ்யம் குன்றுகிற மிகைசோகமில்லை.

வசனங்கள் நச் என்றால் (‘அம்மா எங்க? / ‘சாமிகிட்ட’ / ‘ஏன் சாமிக்கு அம்மா இல்லையா?’) பல இடங்களில் வசனங்களே இல்லாமல் காட்சி அமைத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர். அதுதான் பாராட்டப்பட வேண்டிய அம்சமாக படத்தில் எனக்குப் படுகிறது. ஜன்னலில் சைகையால் சாராவும் விக்ரமும் பேசிக் கொள்வது, க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் உட்பட பலதும்.

உதாரணத்திற்கு ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதுள்ள போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்கிறார்.. அதற்கு விக்ரமின் ரியாக்‌ஷனை (அதுவும் சைகையில்தான்) மக்கள் புரிந்து கொண்டு கைதட்டுவது என்பது அசாதாரண விஷயம். சபாஷ் விஜய்!




விக்ரம், குழந்தை சாரா. இரண்டு பேரும் பார்ட்னர்ஷிப்பில் பின்னியிருக்கிறார்கள். நிச்சயமாக விக்ரமை விட கூடுதல் ரன் எடுத்திருப்பது சாரா-தான். அதுவும் கடைசி கோர்ட் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார். இனி இவரை பேட்டிகள், விளம்பரங்கள் என்று பலதிலும் பார்க்கலாம். நல்ல தேர்வு.

அனுஷ்கா, அமலா பால் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சந்தானமும் அவ்வாறே. எல்லா நடிகர்களையும் சரிவர – மிகையுமின்றி குறையுமின்றி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பாடல்களை விடவும் பின்னணி இசை பேசுகிறது. ஒளிப்பதிவும் அபாரம். ஊட்டி காட்சிகளும், விழிகளில் ஒரு வானவில் படமாக்கப்பட்ட விதமும் அதற்கு சான்று.

இது ஏதோ - I AM SAM – ஆங்கிலப்படத்தில் தழுவல் என்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை.

வெகுநாட்களுக்குப் பிறகு – மகாநதிக்குப் பிறகு என்றே சொல்லலாம் – அழவைக்கிற படம். ஆனால் சோகம் என்று சொல்வதற்கில்லை. பாசத்தால் அழவைக்கிறது படம்.


சபாஷ் விஜய் & டீம். கீப் கோயிங்!


.

Saturday, June 18, 2011

அவன் இவன் - திரை விமர்சனம்


ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. ஏன் எழுதறதில்லைன்னு இதுவரைக்கும் கிட்டத்தட்ட... ம்ம்ம்.. இருங்க எண்ணிப்பார்த்துட்டு சொல்றேன்... ஆங் – மூணு பேர் கேட்டிருக்காங்க. அவங்க்கிட்ட இந்த வாரம் எழுதறேன், அவன் இவன் விமர்சனத்திலிருந்து எழுதறேன்னெல்லாம் சொல்லி வெச்சிருக்கேன். அதுக்காகவாவது என்னமாச்சும் எழுதணும்..

  • விஷாலுக்கு நல்ல கேரக்டர். நல்ல கேரக்டர் விஷால் உனக்குன்னு சொன்ன பாவத்துக்கு என்னென்னமோ பண்ணீருக்காரு மனுஷன். நல்லாத்தான் இருக்கு. ‘விஷாலுக்கு இது ஒரு மைல்கல். தேசிய விருது அப்டிக்கா இப்டிக்கா’ன்னெல்லாம் விமர்சனம் வரும். படிச்சுக்கோங்க. ஓபனிங் சீன்ல போடற ஆட்டம், மேடைல நவரச நடிப்புன்னு மனுஷன் கொஞ்சம் பண்ணீருக்காரு.
  • ஆர்யா விஷாலோட அம்மாவோட சக்காளத்தியோட மகன். அதாவது தம்பி. அண்ணனை திட்டீட்டே இருக்கற - அப்பாலிக்கா அண்ணனைப் புரிஞ்சுக்கற பாத்திரம்.
  • ஹைனஸ்ங்கற பாத்திரத்துல ஊர் ஜமீனா ஜி. எம். குமார். அம்மணமால்லாம் நடிச்சிருக்காருப்பா.. சப்போர்ட்டிங் ஆக்டர் தேசிய விருது நெக்ஸ்ட் இயர் உங்களுக்குத்தாண்ணே-ன்னு ஒரு லைட்பாயாவது கண்டிப்பா அவர்கிட்ட சொல்லிருப்பான்.
  • படம் லீனியரா, நான் லீனியரா, ஆடா ஈவனான்னெல்லாம் தெரியல. கடேசி 25 நிமிஷத்துலதான் கதை ஆரம்பிக்குது. அதுவரைக்கும் என்னென்னமோ பண்றாங்க.
  • நான் என்ன நினைக்கறேன்னா - விஷாலும் ஆர்யாவும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்க பாலாகிட்ட போயிருக்காங்க. அவர் ‘சரி நான் சொல்ற மாதிரியெல்லாம் பண்ணுங்க. ஷூட் பண்ணிக்கறேன்.. கடைசில ரெண்டு சீனைக் காமிச்சு கதை மாதிரி பண்ணி தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிடலாம்’ன்னு சொல்லீருப்பாரு போல.
  • போலீஸ் ஸ்டேஷன்ல உயரதிகாரியை ஒரு குட்டியூண்டு பையன் யோவ் சொட்டைங்கறான். அந்த ஆஃபீஸர் படம் பூராவும் அழுது வடிஞ்சுட்டு, காமெடி பீஸாவே இருக்கான். எந்த ஊர்லய்யா போலீஸ் இப்டி இருக்கு? அடிங்...
  • ஆரம்ப டியா டியா டோலுக்கப்பறம் பாட்டுங்கற எதுவும் ஒட்டல. ராசாத்தி போல வரியெல்லாம் மாத்தி – கொலை. இசை யுவன் ஷங்கர் ராஜா. ம்ம்.. ஆரண்யகாண்ட்த்துக்கு திருஷ்டி.
  • சக்களத்தி சண்டை, கெட்ட வார்த்தைகள், சுடுகாடு, விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கை (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ப்ப்பா.....), சாவுன்னு பாலா ஒரு வட்டத்துக்குள்ளயே சுத்திட்டு இருக்காரு. வெளில வரணும்.
  • ஒரு ஜட்ஜுக்கு லாக்கர் பூட்டைத் தொறந்து ஹெல்ப் பண்றாரு ஆர்யா. ஜட்ஜுகிட்ட எனக்கு பதிலுக்கு நீங்க உதவணும்கறாரு. அப்பறம் ஒண்ணையும் காணோம். பூட்டைத் திறக்காமயே இருந்திருக்கலாம்.
  • சின்னப்பசங்களை திருத்தற படமெல்லாம் எவனும் எடுக்க வேண்டாம். அதிகப்ரசிங்கத்தனமா பேசற பசங்களை கேரக்ட்ரா வெச்சு எடுக்கறது ஒரு ஸ்டைலாய்ட்டு வருது. கடுப்பாகுது யுவர் ஆனர்.
  • அப்படி ஒரு சூப்பர் ஃபிகர் (மதுஷாலினி) குடிச்சுட்டு கூத்தடிக்கற ஆர்யாவை லவ் பண்ணுமாம். போலீஸ்காரி (ஜனனி ஐயர்) அரவாணியா, திருடனான்னு தெரியாம பொறுக்கித்தனமா சுத்தற விஷாலை லுக்கு விடுமாம். நம்பீட்டோம்யா. பாலா படமாச்சே...
  • வேற என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்கு படம் பார்த்தாச்சுங்கற திருப்தி இல்லை. ஆனா பார்க்கலைன்னா விட்டுட்டோமேன்னு வருந்திருப்பேன். அந்த மாதிரி ஆளுக ஒருக்கா பார்த்துக்கலாம்.

வேறு சில:

நண்பர் ஒருத்தர் படம் பார்க்கணும்ன்னு ஃப்ரெண்ட்ஸுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணீருக்கார். 1200 ரூவா. ஊஊஊஊஊஊஊஊஊஊஊ... இப்படி ஒரு படத்துக்கு கூட்டீட்டு வந்ததுக்கு நீ தாடா காசு-ங்கறாங்களாம்.

இடைவேளையில் ட்விட்டர், வலைப்பூ எல்லாம் இல்லாமல் இன்ஸ்டண்டாக விமர்சனம் எழுதிவிட்டார் ஒருத்தர் நாலு சீட் தள்ளி. கொர்ர்ர்ர்ர்ர்.. குறட்டை. எனக்குத் தெரிந்து அவன் இவன் விமர்சனங்களிலேயே பெஸ்ட் அதுதான்.

புதுப் படம் வந்தால் முதலில் ஒரு வாரத்துக்குள்ள பாத்துடணும். இல்லைன்னா புக்ல விமர்சனம் வந்துடும்’ என்று நினைப்பேன். பிறகு வலைப்பூ வந்த பின் ரிலீஸ் அன்னைக்கே.. இப்ப என்னடான்னா இந்த ட்விட்டர் வந்தபிறகு முதல் ஷோ-வே போய் விட வேண்டும் போல. பிரித்து மேய்ந்துவிடுகிறார்கள்.


அவன் இவன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா.



.





Saturday, May 7, 2011

எங்கேயும் காதல்


டை
ட்டில் பாடலுக்கு பிரபுதேவாவே ஆடியிருக்கிறார். டான்ஸ் கிங். நன்றாகவே. அதுவும் இந்த மாதிரி மெலடிக்கு மூவ்மெண்ட்ஸ் அமைப்பது சிரமம். கலக்கியிருக்கிறார். பாடல் பாடும்போது கீழே ‘இந்தப் பாடல் நயன்தாராவிற்கு டெடிகேட் செய்யப்படுகிறது’ என்று போடாத குறைதான். ஒன்றும் தப்பில்லை பிரபு. இட்ஸ் ஓகே!

டக்கென்று ஆரம்பித்துவிட்டதோ விமர்சனம்? சரி போனால் போகிறது. படித்துவிடுங்கள்..

நாயகன் / நாயகியை அறிமுகப்படுத்தும் விதமும், ப்ரகாஷ்ராஜின் எண்ட்ரியும் ரசிக்கும்படி இருந்தது. காமெடி என்கிற வஸ்துதான் படத்தில் இல்லாமல் போய்விட்டது. ராஜூ சுந்தரம் படாத பாடு படு(த்து)கிறார். கொடுமை. அதுவும் அந்த கார் காமெடி. உவ்வேஏஏஏ… சென்சார் போர்டில் இந்த மாதிரி காமெடிகளையும் கத்திரி வெட்டி அனுப்பினால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.

பாடல்கள் ஹிட்தான். அதற்காக தொடர்ந்து பாடல்களேவா? கண்ணை மூடிக் கொண்டு உட்காந்தால், வீட்டில் ஆடியோ சிடி கேட்பது போலவே இருக்கிறது! ‘நங்காய்’ பாடல் அதிக பட்ச கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது. அது படமாக்கப்பட்ட விதமும்.

ஜெயம் ரவி – ஓகே. ஹன்சிகா –அறிமுகம் என்று காட்டுகிறார்கள். அவரும் சும்மா காட்டாமல் நடித்திருப்பது ஆச்சர்யம். இடைவேளைக்குப் பின் - காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் - தன் திறமையை நிரூபித்திருக்கிறார். சில காட்சிகளில் நமீதாவை நினைவுபடுத்துகிறார். கொஞ்சம் அந்நியத்தன்மை இருப்பதால் பச்சக் என்று ஒட்ட மறுக்கிறார்.

மற்றபடி, விமர்சனத்தில் நான் கதை சொல்லப் போவதில்லை. பாடல்களைத் தவிர கேமரா சூப்பரு, எடிட்டிங் தேவலாம், அந்த இந்தக் காட்சியில் இந்த மாதிரி அமைத்திருந்தால் அந்த மாதிரி இருக்கும் இந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சொல்ல அது பற்றித் தெரிந்த நம்ம கேபிள் சங்கர் இருக்கிறார்.

இனி படத்துக்கு சம்பந்தமில்லாத சில:

பிரபுதேவாவின் ரசிகைகளை நயன்தாராவுடனான அவரது காதலுக்கு முன் – காதலுக்குப் பின் என இருவகையாகப் பிரிக்கலாம். நிறைய பேருக்கு – குறிப்பாக அவரது பெண் ரசிகைகளுக்கு – அவர் ரம்லத்தை விட்டு நயன் கரம் பிடித்தது பிடிக்காமல் போய்விட்டது.

வழக்கம் போல குடும்பத்தோடுதான் நேற்றைக்கும் படத்துக்குப் போனோம். உமாவுக்கு முன்பெல்லாம் பிரபுதேவாவைப் பிடிக்கும். நயன் காதலுக்குப் பிறகு பிடிப்பதில்லை. அதே போல ப்ரகாஷ்ராஜையும். ஆனால் ப்ரகாஷ்ராஜைக் கூட கொஞ்சம் பிடிக்கும். பிரபுதேவாவை ஏனோ பிடிப்பதில்லை. (எனக்கு இரண்டு பேரையுமே பிடிக்கும். அதெல்லாம் தனிப்பதிவாகப் போடவேண்டிய விஷயம். இங்கே வேண்டாம்!) பிடிக்காது என்பதால் அரைமனதோடுதான் படம் பார்த்தார். படம் முன் பாதி சுமார். பின் பாதி கொஞ்சம் தேவலாம் என்பது அவர் விமர்சனம். மாப்பிள்ளை தந்த மரண அடியால் இது தேவலாம் ரேஞ்சுக்கு தேறிவிட்டது.


எங்கேயும் காதல் -

இளைஞர்களுக்கு:

தவறவிடாமல் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் - நீங்கள் ரொம்ப நாட்களாக ரூட் போட்டுக் கொண்டிருக்கும் நண்பி இந்தப் படத்துக்கு போலாமா என்று அழைத்தால்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பார்க்க வேண்டிய படம்: ஓசி டிக்கெட் கிடைத்தால்.

குடும்பஸ்தர்களுக்கு:

பார்க்கலாம்: போஸ்டரில் மட்டும்.



முக்கியக் குறிப்பு:

1. உங்கள் அட்ரஸ் பாரில் www.Google.com என்று டைப் செய்யவும்

2. அதில் இடது மேல் மூலையில் images செலக்ட் செய்யவும்.

3. அதில் engeyum kaadhal stills என்று அடிக்கவும்.

4. இந்தப் படத்தின் ஸ்டில்ஸ் வரும். உங்களுக்குப் பிடித்தமானதைப் பார்த்துக் கொள்ளவும். (உப குறிப்பு: ஹன்சிகாவை பார்க்க வேண்டுமென்றால் hansika stills என்று அடிக்கவும்)

ஸாரி. ஃபோட்டோஸ் அப்லோடு ஆக கொஞ்சம் நேரமெடுக்கிறது.

.
.

Sunday, April 10, 2011

மாப்பிள்ளை - கொலைவெறி..

கீழ இருக்கற ஸ்டில்லைப் பாருங்க...

அங்க கெடக்கறது நான். சுத்தியும் இருக்கறது படத்தோட டைரக்டர், நடிகர்கள், முக்கியமா விவேக்ன்னு கற்பனை பண்ணிக்கோங்க.


ரெண்டு மணிநேரம்.. தெளியத் தெளிய அடிச்சுட்டாங்க... வீட்ல கூட்டீட்டுப் போனதுக்கு, பொண்டாட்டி மகளிர் போலீஸ்ல போய் வன்கொடுமை சட்டத்துல புகார் குடுக்கவான்னு கேட்கறாங்க. குழந்தைங்க ரெண்டு மணிநேரமா என்கிட்ட பேசல.


ஆடுகளம் நல்லாருந்துச்சுன்னா அவருக்கு திருஷ்டி கழியணும்தான். அதுக்காக இப்படியா?


விவேக்கெல்லாம் %^$%#%^#ட்டு வேற ஏதாவது வேலைக்குப் போகலாம். சேர்த்து வெச்ச பேரையெல்லாம் கெடுத்துக்க வேணாம். அவரு மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அநியாயம்.


இந்தப் படத்தை எடுத்தவங்களையும், நடிச்சவங்களையும்கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இந்தப் படத்துக்கு ப்ரிவ்யூன்னு ஒண்ணு போட்டிருப்பாங்கதானே.. அப்ப இந்தப் படத்தை ‘சூப்பர்ங்க.. நிச்சயம் ஹிட்டுதான்’ன்னு எவனாவது ஒருத்தன் சொல்லிருப்பான்ல? அத நம்பித்தானே இவங்க படத்தை வெளியிடறாங்க? அவனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்.


கொலைமுயற்சில இவங்க மேல கேஸ்போடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.


படுபாவிங்க...



.



Monday, January 17, 2011

காவலன்-ஆடுகளம்-சிறுத்தை: ஒரு மிக்ஸிங் ரிப்போர்ட்

பொங்கலுக்கு வந்துள்ள படங்களில் எல்லோரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் இந்த மூன்று படங்களுக்கும் சம இடமுண்டு.

எனின் – இந்த மூன்றில் எது டாப்? கதையைப் பொறுத்தவரை காவலனும், கதைக்களத்தைப் பொறுத்தவரை ஆடுகளமும், கமர்ஷியலுக்கு சிறுத்தையும் என மூன்றுமே ஜாக்பாட் அடித்திருக்கின்றன.

சிறுத்தை - கல்லாவை மட்டும் குறிவைக்கும் கமர்ஷியல் மசாலா. கார்த்தி தூள் கிளப்பியிருக்கிறார். அதுவும் ரத்னவேல் பாண்டியனாக வெறிக்கும் கண்களும், முறுக்கிய மீசையுமாய் அவர் பார்க்கும் பார்வையில் கனகச்சிதமாய்ப் பொருந்தியிருக்கிறார். அண்ணனை விட அந்த உடுப்புக்கு இவரே பொருத்தம்.

தமன்னா - வாங்கிய சம்பளத்தில் 30% தானும் நடித்து, 70% இடுப்பையும் நடிக்க வைத்திருக்கிறார்.

சந்தானம் - படத்தில் செகண்ட் ஹீரோ. பல இடங்களில் வயிறு நோகச் செய்யும் சிரிப்பு வெடிகள்.


ஆடுகளம் - அட்டகாசம்.

எடுத்துக் கொண்ட கதைக்களனுக்கு வெற்றிமாறனுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. சேவல் சண்டையில் ஊரே வியக்கும் நபரான பேட்டைக்காரனின் பாத்திரப்படைப்பும், அதில் நடித்துள்ள கவிஞர் ஜெயபாலனின் உடல்மொழியும், அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் ராதாரவியின் உழைப்பும் - ஒன்று சேர்ந்து மனசை அள்ளுகிறது. அந்தக் காதல் படத்தோடு ஒட்டவில்லை. ஒரே ஒரு ஃபோன் போட்டு பேட்டைக்காரன் குறித்து தனுஷிடம் சொல்லும் சீன் தவிர அந்தக் காதலால் என்ன பயன்.. ஆங்.. ரெண்டு அருமையான பாடல் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆத்தி ஆத்தி & அய்யய்யோ. ஆத்தி ஆத்தி ஹிட்.. SPB தன் மகனுடன் பாடிய ஐயையோ நெஞ்சு’ பாடலைக் கேளுங்கள். ஏதோ போகிற போக்கில் ஜாலியாகப் பாடியிருக்கிறார் மனுஷன்.

தனுஷ்! என்ன எழுதுவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு உடல்மொழி எந்த நடிகருக்கும் இருக்கிறதா என்பது சந்தேகமே. அதை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன். உட்காரும் ஸ்டைலாகட்டும், ஏண்ணே இப்படிச் செஞ்ச என்று பேட்டைக்காரனிடம் மருகும் இடமாகட்டும், பாரில் நண்பன் பேட்டைக்காரனைப் பற்றித் தவறாகச் சொல்ல, கோவப்படும் இடம் என்று பல இடங்களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

இடவேளைக்கு முன் வரும் சேவல்சண்டை - இதயத்துடிப்பை எகிறச் செய்கிறதென்றால் அதற்கான முழுப் பாராட்டும் வெற்றிமாறனையும், சேவல் சண்டைக்கு கிராஃபிக்ஸ் அமைத்த குழுவுக்கும்தான். சபாஷ்!

பின்னணி இசையில் ஒருபடி மேலேறிவிட்டார் ஜி வி ப்ரகாஷ். ஏதோ கத்தியை சீவுவதைப் போல ஒரு வித ஒலி அங்கங்கே வருகிறது. மிகவும் அருமை.


காவலன்:

விஜய் படங்களிலேயே என் ஃபேவரைட் படமான வசீகராவுடன் இதுவும் லிஸ்டில் சேர்ந்துவிட்டது. விஜய் படத்துல கதையே இருக்காது என்று சொல்பவர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும். அரசியலெல்லாம் வேண்டாம் விஜய். ரெண்டு கமர்ஷியல் குடுங்கள், நடுநடுவே இப்படி ஒரு படம் கொடுங்கள்.. நாங்கள் இருக்கிறோம் உங்களைக் கொண்டாடுவதற்கு!

எத்தனை நாளாயிற்று இப்படி அருமையான முடிச்சுகளுடன் கதையுள்ள படங்களைப் பார்த்து! சபாஷ் சித்திக்!

விஜய் - பெர்ஃபார்மென்சில் கலக்குகிறார். பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். தன் காதலியை சந்திக்க பார்க்குக்கு போக ஆரம்பிக்கும் சீனில் துவங்கி, பார்க் சீன் முடியும் வரை அவரது நடிப்பு - பாராட்ட வார்த்தைகளே இல்லை. அடிதடி, ஏஏஏஏஏஏஏஏஏஏய், பஞ்ச் டயலாக்ஸ், உயிர்த்தெழுதல் ஏதுமில்லாத விஜயையும் நன்றாகவே ரசிக்க முடிகிறது!

வடிவேலு - வழக்கம்போல்.

ஒரே குறை, படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்த பிறகும் நீட்டிக் கொண்டே போனது பிடிக்கவில்லை. மாது ரயிலில் கட்டிப் பிடித்த இடத்திலேயே படம் முடிந்துவிட்டது - பிறகு மீராவைச் சேர்த்துவைக்க வேண்டும் என்பது யார் இட்ட கட்டளை? புரியவில்லை.

பாடல்களில் ‘யாரது... யாரது’ சொல்லாமல் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது! டிபிகல் வித்யாசாகர் மெலடி. இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்!

மூன்று படங்களிலும் முதலிடத்துக்கான என் ஓட்டு - அருமையான கதை + அதைத் தேர்ந்தெடுத்து நடித்த விஜய்க்காக - காவலனுக்கு. ஆடுகளம் - அதேதான். இடைவேளைக்குப் பின் கொஞ்சம் ஸ்லோ ஆகிவிட்டதால் -ஒரு பாய்ண்ட் வித்தியாசத்தில் இரண்டாமிடம்.

நான் பார்த்த மூன்று தியேட்டர்களிலும், மூன்று படங்களைப் பற்றிய நெகடீவ் & பாசிடீவ் கமெண்டுகளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் மூன்று படங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மக்களைக் கவரவே செய்திருக்கிறது. நல்ல கதைக்களன் கொண்ட ஆடுகளமும், காவலனையும் நீங்கள் கொண்டாடாவிட்டால் இழப்பு உங்களுக்கில்லை. மறுபடியும் அடுத்த படத்தில் விஜய் மண்ணுக்குள் புதைந்து, சட்டை கலையாமல் வெளியே வருவார். அதையும் திட்டத் தயாராக இருங்கள்.


.

Wednesday, September 1, 2010

பார்க்கவே முடியாத படங்கள் மூன்று...

நானொரு ஞாபகமறதிக்காரன். வாரத்தில் ஆறுநாளைக்காவது வீட்டை விட்டு வந்தபிறகு வண்டி சாவி, ஹெல்மெட், நோட், பேனா என்று எதற்காவது மீண்டும் போய் எடுத்துவருவேன். (வாரத்தில் மற்றொரு நாள் விடுமுறை என்றறிக)

தன்மாத்ரா (ஒரிஜினல்) டிவிடி வாங்கி நானும் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கம்பெனி குவார்டர்ஸில் இருந்த சமயம். திடீரென்று ஃபேக்டரியின் ஃபயர் சைரன் ஒலிக்க என்னமோ ஏதோ என்று ஓடி ஃபேகடரிக்குள் போய்விட்டேன். (அது தவறுதலாக ஒரு தொழிலாளி சுவிட்சை அழுத்தியதால் வந்தது) அப்படியே கொஞ்சநேரம் அங்கிருந்த சக அலுவலக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் உமாவிடமிருந்து ஃபோன்.. “சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்று.

போனால் அழுகையின் விளிம்பில் இருந்தது கண்கள். என்னைப் பார்த்ததும் அழுதே விட்டார்! தன்மாத்ரா பார்த்ததன் விளைவு!

இந்தப் படத்தில் அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் மோகன்லால் தவறுதலாக ஃபைலை ஃப்ரிட்ஜூக்குள் வைப்பார். அப்புறம் காய்கறி வாங்கி ஆஃபீஸூக்கு வருவார்.. இப்படி பல காட்சிகள். அதைப் பார்த்ததும் உமாவுக்கு என் ஞாபகம் வந்துவிட்டதாம்!

அந்தளவுக்கெல்லாம் இல்லைப்பா நான் என்று நினைத்துக் கொண்டாலும் படம் பார்க்கும்போது பீதியாகவே இருந்தது. ‘என்ன படம் எடுக்கறானுக’ என்றும் தோன்றியது. மோகன்லால் நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே அப்படி ஆகிவிட்டிருந்தாரா என்று தோன்றவைத்த படம் தன்மாத்ரா.

இன்னொரு முறை பார்ப்பீர்களா என்று கேட்டால் மாட்டவே மாட்டேன் என்று சொல்லும் முதல் படம் தன்மாத்ரா.

*************************************

இன்னொரு படம் மகாநதி.

‘எங்கேயோ தெக்குதிசை காணாத தூரம்தான்..’ என்று கமல் குரல் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஓர் உருண்டை வயிற்றிலிருந்து கிளம்பி தொண்டையை அடைத்துக் கொள்ளும். வலிக்க வலிக்க ஏமாற்றப்படும்போதெல்லாம் ‘போதும்டா.. நான் பாவம்டா’ என்று கண்களாலேயே நடிப்பார் கமல். மகளை விபசார விடுதியில் பார்க்கும்போதும், அப்போது அவள் சொல்கிற வசனமும்.. கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

இப்பொழுதும் இந்தப் படம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் அந்தச் சேனலுக்கு தப்பித்தவறிக்கூட ரிமோட் பட்டன் தாவிவிடாமல் பார்த்துத் தாண்டிச் செல்வேன்.

யதார்த்தமான படம்தான். ஆனாலும் வலிக்கிறதே.. என்ன செய்ய?

**************************

அப்பறம் மூன்றாம் பிறை...


செமயான படம்தான். ஆனா திரும்பத் திரும்ப பார்த்து என்னாச்சுன்னா ஆரம்பத்துலேர்ந்தே அந்த க்ளைமாக்ஸ்தான் மனசுல போட்டு அழுத்தமா உட்கார்ந்துடுச்சு. கமல் இவ்ளோ பண்ணியும் கடசில குரங்கு சேட்டையெல்லாம் பண்ணி அநாதையான பார்வை பார்த்துட்டு நிக்கத்தான் போறாரு.. இவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறதால இந்தப் படம் பார்க்கறதில்ல..

படமாவது பார்க்கலாம்.. ஆனா அந்த க்ளைமாக்ஸ் வந்தா என் வீட்டு ரிமோட் பட்டன் தானா வேலை செஞ்சுடும்.

பாலு மகேந்திரா சாரைப் பார்த்தா, ஏன் சார்.. தொலையுது.. சேர்ந்துட்டுதான் போகட்டுமேன்னு கேட்கணும்னு நினைப்பேன்.. ஒரு ஜெர்கினு, ஒரு வாட்சு, எதைப் பார்த்தாவது அவளுக்கு ஞாபகம் வந்து தொலைக்கற மாதிரி மாத்திருக்கலாம்ல?


அப்படியா ஒருத்தி பழசை மறந்துட்டுப் போவா.. அதும் சரிதான்.. அவளுக்காவது நோய், நிறைய பேர் நல்லா இருந்தே மறக்கறாங்களேன்னு தேத்திக்குவேன்.

அதுவும் ஓடி வரும்போது கம்பத்துல முட்டிகிட்டு விழுவாரு பாருங்க கமல்...

கொடுமை!!


*****************

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல

ஒரு சினிமாவுக்குப் போனா நான் ஒரு சாதாரண பார்வையாளன். எனக்கு மாஸான வேட்டைக்காரனும் பிடிக்கும். க்ளாஸான மொழியும் பிடிக்கும். மொத்தத்துல ஏதாவது ஒரு தாக்கம் அந்தப் படம் எனக்குத் தரணும் அவ்வளவே..

நான் மகான் அல்ல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். சந்தேகமே இல்லை. படத்தின் நாயகனான ஜீவா (கார்த்தி) எதைப் பற்றிய கவலை, சிந்தனைகளென்று ஏதுமில்லாத சாதாரணன். குடித்து விட்டு வண்டி ஓட்டி போலீஸைப் பார்த்து ‘நியூ இயர் மாமே....’ அன்று அலப்பறை செய்கிறவனாய்த்தான் அவரது எண்ட்ரியே வருகிறது. சமுதாயச் சீர்கேடு, நாட்டு முன்னேற்றம் என்ற எந்த ஜல்லியும் அடிக்கவில்லை அவன். அதே போல வீடு பற்றிய கவலையும் இல்லை. வேலையில்லாமல் சுற்றித் திரிகிறான். அதற்காக சில படங்களில் காட்டியதுபோல சுத்தமாக பொறுப்பற்றவனுமல்ல. தேவை வரும்போது அதற்குண்டான முயற்சியை எடுப்பவனாகத்தான் இருக்கிறான். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கு சுசீந்திரனுக்குப் பாராட்டுகள்.

இப்படியான ஒருவனது தந்தை, நகரில் நடக்கும் இரட்டைக் கொலை ஒன்றின் சாட்சியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் – அந்தக் கும்பலால் கொல்லப்பட, இவன் எப்படி பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை. தன் தந்தைக்காக என்று மட்டுமில்லாமல் சமுதாயத்துக்காகவும்தான் என்று சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

முதல்பாதி – நேரம் போவதே தெரியவில்லை. அவ்வளவு கலகலப்பு. என்னடா இது ட்ரெய்லரில் வயலண்டான படமாகக் காட்டினார்களே.. இவ்வளவு ஜாலியாகப் போகிறதே என்றுதான் நினைக்க வைக்கிறது. ஆனாலும் அந்தக் கல்லூரிக் கும்பலைக் காட்டும்போதெல்லாம் கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்குகிறது.

இரண்டாம் பாதியில் திரைக்கதை விறுவிறுப்பாகிறது. பின் வழக்கமான முடிவு.

காஜல் அகர்வாலை எனக்குப் பிடிக்கவில்லை. படத்தில் அவருக்கும் வேலையொன்றும் இல்லை. அவர் அப்பா மூலம் அந்த தாதா அறிமுகமாகிறார் என்பதற்கும், முதல் பாதி கலகலப்புக்கும் மட்டுமே காஜலின் காதல் உதவியிருக்கிறது.

முதல்பாதியின் கலகலப்புக்கு (இதோட மூணாவது தடவை இதைச் சொல்லிட்டேன்) 90% பங்கு பாஸ்கர்சக்தியின் வசனங்கள். வாய்ப்பே இல்லை..! பின்னியிருக்கிறார் மனுஷன். எல்லாமே நண்பர்களுக்குள் சடார் சடாரென்று அள்ளிவிடும் வசனத் துணுக்குகள் என்றாலும் தியேட்டரில் பல வசனங்களுக்கு க்ளாப்ஸ் அள்ளுகிறது. உதாரணத்துக்கு தோசை சுடும் தோழியின் கணவரிடம் கார்த்தி சொல்வதும், கார்த்தி வசூல்செய்து வந்து கொடுத்த செக்கைப் பார்த்து அவர் நண்பர் சொல்வதும்... ஹாட்ஸ் ஆஃப் டு யூ பாஸ்கர் சக்தி!

டைரக்டருக்கு இரண்டு விஷயங்களுக்காக என் கைகுலுக்கல்கள். ஒன்று திரைக்கதை. அந்தக் கும்பலை வெறும் ஓரிரு காட்சிகள் மட்டும் காட்டி பார்வையாளர்களை –இவனுங்க எப்படா கார்த்திகூட மோதுவானுக-என்று tempo ஏற்றிய திரைக்கதை உத்தி பிரமாதம்.

இரண்டாவது அந்த வில்லன் குழுவின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்திருக்கும் நடிகர்கள். சத்தியமாக அவர்களை நேரில் பார்த்தால் நான் கொஞ்சம் பயந்து ஒதுங்கித்தான் செல்வேன். அந்தப் பரட்டைத் தலையனையும், கொஞ்சம் தலைசாய்த்து முட்டைக்கண்ணில் பார்க்கும் அவனையும் என்னால் மறக்கவே முடியவில்லை. என்ன ஒரு உடல்மொழி!!

யுவனின் இசையில் ‘வா வா நிலவைப் பிடிச்சுத் தரவா’ ஏற்கனவே என் ஃபேவரைட்டாக இருந்து, படம் பார்த்தபிறகு அவரது குரலில் வரும் ‘இறகைப் போலே அலைகிறேனே’ அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. பின்னணி இசை – கொஞ்சம் அடக்கி வாசித்து வில்லன்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலெல்லாம் மிரட்டலாகக் கொடுத்திருக்கிறார்.

காஜலின் அப்பா மூலம் அறிமுகமாகும் தாதாவுக்கும் கார்த்திக்கும் பாரில் நடக்கும் உரையாடல் சுவாரஸ்ய ட்விஸ்ட்! அவர்களின் சந்திப்பை அப்படியே விடாமல் படம் நெடுக கொண்டு சென்றிருப்பதும் பாராட்டுக்குரிய அம்சம்.

கார்த்தியின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ் மிக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல கார்த்தியின் நண்பனாக வருபவரும். (புரோட்டா ஈட்டர்!)

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அட்டகாசம். அந்த 19 வயதுப் பையன்களின் வெறி நம்மை என்னவோ செய்கிறது. மொத்தப் படத்திலும் இவர்கள் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் அவர்களின் செயற்கையற்ற நடிப்பும், அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் (ஒளிப்பதிவு: மதி) படம் பார்த்து இரண்டு நாளாகியும் என்னிலிருந்து அவர்கள் பற்றிய பய உணர்வை அகலாமலே வைத்திருக்கிறது.

நான் மகான் அல்ல: ஒரு சாதாரண ஒன்லைன் அசாதரணமான ஓர் இயக்குனரிடம் கிடைத்தால் எப்படி படமாக்கப்படும் என்பதற்கான உதாரணப் படம்.


.

Monday, June 21, 2010

ராவணன் - 15

தை - எல்லா பதிவுகளிலும் படித்திருப்பீர்கள். படிக்காவிட்டாலும் இராமயணம் தெரிந்திருக்கும். விமர்சனமும் நிறைய படித்திருப்பீர்கள். படம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் நிச்சயம் எப்படியாவது பார்த்து விடுவீர்கள். என்னாத்துக்குப் பார்த்துட்டு என்று நினைப்பவர்கள் என் விமர்சனம் பார்த்து ஒன்றும் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என்று தோன்றவில்லை. ஆகவே விமர்சனம் என்று முழுதாக இல்லாமல் ராவணன் சம்பந்தமான என் எண்ணச் சிதறல்கள்....

*************************************************

1) திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டரில் பையாவிற்குப் பிறகு சுறாவை திரையிடவில்லை. சக்தி ஃப்லிம்ஸ் அதிபர் திரு. சுப்ரமணியத்தின் தியேட்டர். கையச் சுட்டுக்கறதுதான் மிச்சம் என்று நினைத்திருப்பதாக கேள்வி. மொழியாக்கப் படங்களை இரண்டு வாரமாக திரையிட்டவர்கள் ராவணனை நம்பி எடுத்திருந்தார்கள்.


2) ஆன்லைனில் வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்கெல்லாம் வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது. சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு சென்றோம். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் மணிரத்னபுராணம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

3) தியேட்டர் வாசலில் விக்ரம் ரசிகர் மன்ற கட் அவுட்கள். சற்றுத் தள்ளி நாப்பது அடிக்கு நீஈஈஈளமாக ஒரு கட் அவுட் இருந்தது. யாருக்கு என்று பார்த்தேன். ‘நவரச நாயகன் கார்த்திக்’ பல வேடங்களில் இருந்தார்.





4) விக்ரம் ப்ருத்வியின் மனைவி ஐஸ்வர்யாராவைக் கடத்துவதற்கான பின்னணியான ஃப்ளாஷ்பேக் எந்தவித சலனத்தையும் பார்வையாளார்களிடையே ஏற்படுத்தவில்லை. ஷங்கரின் இந்தியன் கஸ்தூரி மரண ஃப்ளாஷ்பேக்கையும், ஜீன்ஸின் நாசர்-கீதாவை ராதிகா சந்தேகித்து வசவும் ஃப்ளாஷ்பேக்கையும் உதாரணமாகச் சொல்லலாம். (சட்டென்று நினைவுக்கு வருகிறது. தட்ஸ ஆல்)

5) மேக்கிங்- அபாரம். ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாய் இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை பிரமாதப்படுத்தியிருப்பவர்கள் காமிராமேன்கள் சந்தோஷ் சிவனும், மணிகண்டனும்தான். எந்தகாரணம் கொண்டும் சின்னத்திரையில் பார்த்துவிடாதீர்கள்.


6) வசனம் – சொதப்பல். சுஜாதாவை மிஸ் செய்கிறோம் என்பது தெரிகிறது.

7) பின்னணி இசையில் புதிய உத்திகளை ரஹ்மான் பரீட்சித்திருக்கிறார் என நினைக்கிறேன். எனக்கு பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது. இசைக்கருவிகள் என்றில்லாமல் கோரஸை வைத்து அதிக இடங்களில் பின்னணி இசை கோர்க்கப்பட்டிருந்தது கவர்ந்த்து. அதுவும் அரேபிய பாணியில் பெண் குரல் ஒன்று பாடுமே, மிகவும் அருமை.

8) ராவணன், ராமன், சீதா, லஷ்மணன், அனுமார், விபீஷணன் எல்லாரையும் வேறு வகைகளில் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் புராதனமான கதையை நவீனமாக்குகிறேன் பேர்வழி என்று சொதப்பியிருக்கிறார்கள். சீதை பாதியில் ராவணனிடம் சலனப்படுவது போலவே பொதுஜனங்கள் நினைக்கும் வண்ணம் ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் குழப்புகிறது.

9) பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் குறையில்லை. ஆனால் மிகவும் எதிர்ப்பார்த்திருந்த ‘உசுரே போகுதே’ தவறான இடத்தில் வருகிறது. இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கலாம். அந்த இடத்தில் ‘கோடு போட்டா’ பாடலை நுழைத்திருக்கலாம்.


10) ‘சோத்துல பங்கு கேட்டா இலையப் போடு இலையை
சொத்துல பங்கு கேட்டா தலையைப் போடு தலையை’

‘வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குப் புரிகின்றது
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குப் புரிகின்றதா?’

வைரமுத்து = வைரமுத்து!

11) ஆர்ட் டைரக்டர் படம் நெடுக வியாபித்து உழைத்திருக்கிறார். அவருக்கும் ஷொட்டு. ப்ரியாமணி கல்யாணம் நடைபெறும் இடம், கோடு போட்டா’ பாடல் நடைபெறும் இடம் எல்லாம் ஆர்ட் டைரக்‌ஷனா லொகேஷனா என்று தெரியவில்லை. லொகேஷன் ஒவ்வொன்றும் மிகப் பிரமாதம். கண்ணிலேயே நிற்கிறது.

12) போலீசாக ப்ருத்விராஜ். அப்படி என்ன விக்ரம் தப்பு செய்தார் என்று இவர் துரத்துகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவரி வசனத்திலாவது போலீஸ் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. அதனால் விக்ரம் மீது பரிதாபமோ, ஹீரோயிஸமோ ஒன்றுமே பார்வையாளனுக்குத் தோன்றவில்லை. அதேபோல அவனைப் பிடிக்கப் பாடுபடுகிறாரே எஸ்.பி என்று ப்ருத்விராஜ் பக்கமும் பார்வையாளன் சாயமுடியவில்லை. கிடைத்த கேப்பில் ஐஸ்வர்யா ராயை ஸ்க்ரீனில் சைட்டடித்துத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. (இது பொதுக்க்ருத்து. எனக்கு ஐஸ் மாதிரியான அழகு ‘பொம்மைகள்’ பிடிப்பதில்லை!)

13) ஐஸ்வர்யா படம் முழுவதும் ஜாக்கெட்டைத் திருப்பிப் போட்ட மாதிரியான காஸ்ட்யூமில் இருக்கிறார். அவ்வளவு இறக்கம். உலக அழகி என்பதற்காக இப்படிக் காட்ட வேண்டியதில்லை.

14) விக்ரம், பிரபு, கார்த்திக் என்று ஒவ்வொருவரும் முதலில் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும்போது கைதட்டல் பெறுகிறார்கள். ஆனால் மூன்றோ நான்கோ சீன்களில் வந்தாலும், வரும் சீன்களில் எல்லாம் கைதட்டல் வாங்குவது ஒரே ஒருவர். அவர் - ரஞ்சிதா.

15) விக்ரம் – நடிப்பு வழக்கம்போல அபாரம். மணிரத்னத்தின் சிரமப்படலும் படம் முழுக்கத் தெரிகிறது. ஆனால் நாங்கள் - அட்லீஸ்ட் நான் - மணிரத்னத்திடம் அடுத்ததாக எதிர்பார்ப்பது தமிழுக்கான தமிழ் ரசிகர்களுக்கான ABC செண்டர்களுக்கான ஒரு படம். செய்வீர்களா?


ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை.

.

கொசுறு:- படம் ஆரம்பிக்குமுன் மக்களிடையே மணிரத்னபுராணம் என்று சொன்னேனல்லவா? படம் முடிந்தபிறகு ஓர் இளம்பெண் சொன்னது: ‘விக்ரம், ஐஸு, ப்ருத்விராஜ்ன்னு மூணு பேரை வெச்சுகிட்டு ஒரு ரொமாண்டிக்கான படம் எடுக்காம என்ன படம் எடுத்திருக்காங்க?’

.

Saturday, April 3, 2010

பையா - ஹையா!!!!!!!!!!!!


ண்டதும் காதல் வயப்படுகிற ஹீரோ. அந்த ஹீரோவிடம் எதேச்சையாக உதவி கேட்டுச் சேரும் ஹீரோயின். இருவருக்கும் இருவேறு வில்லன் கோஷ்டிகள். ஹீரோ இரு கோஷ்டிகளையும் சமாளித்து, ஹீரோயின் கரம் பிடிக்கும் சாதாரணக் கதைதான். ஆனாலும்.. பையா சளைக்க வைக்காமல் கவர்கிறான்.

வேலை தேடும் ஹீரோ, அவனுக்கு உதவும் நான்கைந்து நண்பர்கள் என்று கொஞ்சம் தொய்வாக ஆரம்பிக்கும் படம், தமன்னா கார்த்தியின் காரில் ஏறியவுடன் சூடு பிடிக்கிறது. எதற்காக எங்கு போகிறார் என்பது தெரியாமல் ஹைவேயில் கார் சீறிப்பாய்கிறது. திடீரென வில்லனின் ஆட்கள் துரத்த அவர்களை கார்த்தி பந்தாட இன்னும் ஸ்பீடாகிறது படம்.

தமன்னாவின் கதையை ஃப்ளாஷ்பேக்கில் காட்டாமல், சுருக்கமாக அவர் வாயாலேயே சொல்ல வைத்தது சிறப்பு. இல்லாவிட்டால் படம் கொஞ்சம் தொய்வடைந்திருக்கும்.

இடைவேளைக்குப் பிறகு இருவரும் மும்பை சென்று சேர்ந்துவிட அங்கே இருவர்களின் வில்லன் கோஷ்டியும் ஒன்று சேர்ந்துவிடுகிறது. அதன்பிறகு வழக்கமான சண்டை, வழக்கமான க்ளைமாக்ஸ்.


கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆக்‌ஷன் படம். முகத்தில் ஒரு ரஃப்னஸ் இருப்பதால் பொருத்தமாகத்தான் இருக்கிறது. தமன்னா, பெரிதாக ஒன்றுமில்லையெனினும் குறைவில்லாமல் தன் பாத்திரத்துக்குப் பாந்தமாய் நடித்திருக்கிறார். ‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை!



இடைவேளைக்குப் பின் நண்டு ஜெகனின் ஸ்லாங்கும், காமெடியும் சிரிக்க வைக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா - க்ரேட்! ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது பின்னணி இசை துள்ளி விளையாடுகிறது. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். ‘என் காதல் சொல்ல’ க்ளாப்ஸை அள்ளுகிறதென்றால், சஸ்பென்ஸாக சிடியில் வராத இன்னொரு பாடலை அவரே பாடி மெய் மறக்கச் செய்கிறார். அதென்ன யுவன், காதல் சம்பந்தமான சோகப்பாட்டென்றால் அவ்வளவு இன்வால்வ்மெண்ட் உங்களுக்கு?


காமிரா - மதி. ஹைவே துரத்தல்கள், மண் புழுதிச் சண்டைகள், இரவு காட்டுக்குள் நடக்கும் சேஸிங், அடடா மழை பாடல் காட்சிகள் - எதை விடுப்பதென்று தெரியாமல் எல்லா இடங்களிலும் பாராட்ட வைக்கிறார்.

படத்தில் எந்த ட்விஸ்டோ, சஸ்பென்ஸோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேவையுமில்லை. கமர்ஷியலாக ஸ்பீடாகப் போகிறது. ‘ஒருத்தன் இத்தனை பேரை அடிக்கறதெல்லாம் நம்பவா முடியும்’ என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ஹீரோயிஸத்தை ரசிக்க முடிந்தால் படம் உங்களுக்கு(ம்) பிடிக்கும்.

ஆம். எனக்குப் பிடித்தது!


.

Saturday, January 30, 2010

தமிழ்ப்படம் - விமர்சனம்



ஒரு படத்தின் முதல் நாளிலேயே இத்தனை பேர் மனைவி, குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வருவதை வெகுநாட்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தமிழ்ப்படம் டீம்!


இந்தப்படத்தின் பெயர் தமிழ்படம் என்றிருந்த. ‘ப்’இல்லாமலிருப்பது தமிழ்ப்படங்களை ஒரு வித நக்கல் செய்யும் பாணி என நினைத்தேன்.கடைசியாக ப் சேர்த்திருக்கிறார்கள்.. ஏனென்று தெரியவில்லை.

தியேட்டருக்குள் போகும்போதே பலர் ‘விளம்பரங்களைப் பார்த்தே வயிறு வலி வந்திடுச்சு. முழுப்படமும் எப்படி கலாய்ச்சிருப்பாங்கன்னு பார்க்கலாம்’ என்ற ஆவல் மேலீட்டோடு பேசிக் கொண்டே வந்ததைக் கேட்க முடிந்தது.

அவர்களின் ஆவலுக்கு சரியான தீனி போட்டிருக்கிறார்கள்!




கதை.?

தமிழ்ப்படங்களின் கதை என்ன? அதுதான் தமிழ்ப்படத்தின் கதையும்.

சினிமாபட்டி என்ற ஊரில் ஆண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்ல வேண்டுமென்பது நாட்டாமை தீர்ப்பு. (ஏன்..? படம் பாருங்கள்!) அதிலிருந்து பாட்டியால் தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ, சின்ன வயதில் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ஒரு கும்பலின் அக்கிரமத்தைப் பார்க்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. உடனேயே பெரியவனாகி (உடனேயா.. எப்படி? படத்தைப் பாருங்கள்!) போய் அந்த அக்கிரமக்காரர்களை அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவர்கள் அதே மார்க்கெட்டில், அதே டிரஸ்ஸுடன் லூட்டி அடித்தபடி இருக்கிறார்கள்!

ஹீரோ ஆயாச்சா? உடனே ஓபனிங் சாங், ஹீரோயின், லவ், அப்பா எதிர்ப்பு, முகம் தெரியா வில்லன், பழிவாங்கல், ஃப்ளாஷ் பேக், ஹீரோ அப்பாவைத்தேடி கிராமம் புகல், குடும்பப்பாட்டு, ஃபேமலி ஒன்று சேர்தல், வில்லன் கைது, கோர்ட்டில் வழக்கு, நீதிபதி தீர்ப்பு.. இத்யாதி.. இத்யாதி...

யப்பா சாமி! இப்படி படம் முழுக்க சிரிச்சு கைதட்டி ஒருத்தன் பார்க்க முடியுமா! பார்க்க வைத்திருக்கிறார்கள். சீன்களைச் சொல்வதினால் ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது.. ஆனால் அதை அவர்கள் காட்டியிருக்கும் விதம்... ..

எத்தனை சீன்களைச் சொல்லலாம்!

ஹீரோ சென்னைக்கு வந்ததைக் காட்ட - எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கேமரா முன் ஒரு ஆட்டோக்காரர் வந்து வசவுகிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. இனி டைரக்டர்கள் அந்த இடத்தில் கேமரா வைப்பார்களா என்பது சந்தேகமே!

பச்சை மஞ்ச பாட்டின்போது ஒரு கீழே போடுகிறார்கள்: ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா’ இரண்டு செகண்டில் அதன் கீழேயே வேறொரு வரி வருகிறது.. போய்ப் டத்தில் பாருங்கள்.

நாயகியின் அப்பா, நாயகி மீது வைத்திருக்கும் அன்பைக் காட்ட - நாயகியின் புகைப்படத்தைக் கோணலாக மாட்டிய வேலைக்காரிக்கு ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை என்பதையும் அதற்கு அந்த வேலைக்காரி காட்டும் எக்ஸ்ப்ரெஷனையும்... ப.பா!

அதே அப்பா, காபி கொண்டு வரும் வேலைக்காரனைத் திட்டி கோப்பையைத் தட்டி விடுகிறார். ‘கேட்டா அடுத்த நிமிஷம் வரணும்டா’ என்று. இந்த சீன் எதற்கு என்று பார்த்தால்---

பின்னொரு நாள் அவரிடம் ஹீரோ சவால் விடும்போது ‘ஒரு காபி கொண்டு வா’ என்கிறார். வெளியே போகும் ஹீரோ ஒரு குட்டிப் பாட்டுக்குப் பின் பணக்காரனாகி இவர் வீட்டுக்கு வருகிறான். அந்த ஹீரோ வரும்போது, அப்பாவுக்கு காபி வருகிறது! கைகுடுங்க டைரக்டர் சார்!

ஹீரோ பணக்காரனானால் என்னென்ன அவன் பேரில் வரும்? ஸ்கூல், காலேஜ், இண்டஸ்ட்ரீஸ்? ம்ஹூம்... இதில்.. ப.பா!

காவல்துறை ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. அங்கே டீ கொண்டு வருபவர்... ம்ம்ம்ம்.. அஸ்கு புஸ்கு.. படத்தை பாருங்க! அதேபோல அந்த மீட்டிங்கிலேயே ஒரு கருப்பு ஆடு இருப்பதை ஹீரோ கண்டுபிடித்து தோலுரிப்பதும் அருமை!

க்ளைமாக்ஸில் ஹீரோ மருத்துவமனையில் இருக்கிறார், ஹீரோயின் வில்லனால் சுடப்படுகிறார்.. ஹீரோ வந்து காப்பாற்றுவாரில்லையா? அப்படித்தான் இதிலும். ஆனால் அவர் வருவதற்கு நடுநடுவே ஒன்றைக் காட்டுகிறார்கள் பாருங்கள்...


ஹீரோவின் வீடு - அட்டகாசம்.

அப்பாவைத் தேடிப்போகும் ஹீரோவின் குடும்பப்பாடலாய் ஒரு பாடலைப் போடுகிறார்கள். தியேட்டர் அடங்க மறுக்கிறது. அவ்வளவு க்ளாப்ஸ்!

ஹீரோ ஒவ்வொருவரையும் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் படு சுவாரஸ்யம்!

கஸ்தூரி - இவ்வளவு செக்ஸியாய் ஸ்லிம்மாய்.. ஒரு பாடலுடன் போகிறாரே என ஏங்க வைக்கிறார். ஓ மகஸீயா, பச்ச, குத்துவிளக்கு, ஒரு சூறாவளி எந்தப் பாடலும் தியேட்டரில் சொதப்பவில்லை. ஓ மகஸீயாவில் டாலாக்கு டோல் டப்பிமா வரிக்கு சிவாவின் எக்ஸ்ப்ரஷனுக்கு தியேட்டர் குலுங்குகிறது.

அதேபோல அந்த டூயட் முடிந்தபின், தோளில் பையுடன் வீட்டுக்கு வரும் சிவாவை ‘எங்கடா ரெண்டு நாளா ஆளைக் காணோம்’ என்று பாட்டி கேட்க, ‘ஒரு டூயட்டுக்கு கொழும்பு போயிருந்தேன் பாட்டி’ என்கிறார் பாருங்கள்.. அசத்தல்!





சிவாவைத்தவிர வேறு யாருமே இந்த கேரக்டருக்குப் பொருந்துவார்களா என்பது சந்தேகமே. ஹீரோக்களின் அலட்டலை தன் அலட்டாத நடிப்பில் காண்பித்து பின்னி எடுத்துவிட்டார். என்ன.. சில சீன்களில் ரொம்பவும் லோ வாய்ஸில் பேசுகிறாரா... தியேட்டர் சிரிப்பொலியில் ஒன்றுமே கேட்பதில்லை.

ஒவ்வொரு சீனிலும் இது எந்தப்படத்திற்கான கிண்டல் என்று சுவாரஸ்யமாக தியேட்டரில் பார்வையாளர்கள் பேசிக் கொள்வதிலிருந்தே படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவிட்டது.

வசனம். கே. சந்துரு. (சொல்லியே ஆகணும். எனக்கு பின்னூட்டமெல்லாம் போட்டிருக்காரு இந்த மனுஷன்!) சூப்பர்! (இது பின்னூட்டம் போட்டதால இல்ல என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்வீர்கள்!) எல்லாமே டைமிங் காமெடி வசனங்கள்தானே என்றில்லாமல் மிகுந்த சிரத்தையோடு எழுதியிருக்கிறார். குறிப்பாக கிராமம் பற்றி சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள்.

இந்த ஹீரோ என்ற வகைதொகையில்லாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தாலும் எதுவுமே புண்படும்வகையில் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது. உள்ளே போகும்போதும் வரும்போதும் இவ்வளவு உற்சாக முகங்களைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது.

தமிழ்ப்படம் நல்லால்ல என்று இனி யாரும் சொல்ல முடியாது!


தமிழ்ப்படம் - சரவெடி சிரிவெடி!




.

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்



நேற்றைக்கு மதியம் வரை ரிலீஸா, இல்லையா என்று எல்லாரையும் எதிர்பார்ப்பில் வைத்திருந்து, ரிலீஸாகிவிட்டது - ஆயிரத்தில் ஒருவன்.

*******

பண்டைய சோழர் காலத்து மன்னன் ஒருவன் பாண்டிய மன்னர்களுடனான போரின்போது தன் மகனை (இளவரசனை) ஒருவரிடம் கொடுத்து, எத்தனை ஆண்டுகாலமாயினும் இவனைக் காப்பது உன் பொறுப்பு’’ என்றுவிட்டுப் போகிறான்.

------------டைட்டில்---------------

பண்டைய சோழர்கள் இருந்த இடத்தைத் தேடிச் செல்லும் அகழ்வாராய்ச்சியாளர் பிரதாப் போத்தனைக் காணவில்லை. அவரைத் தேடும் குழுவின் தலைமையாய் ரீமாசென் பலத்த பாதுகாப்போடு கிளம்புகிறார். கூடவே பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவையும் (அவரும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிலிருக்கிறார்) அழைத்துச் செல்கிறார். வியட்நாம் அருகே இருக்கும் அந்த இடத்திற்கு கப்பலில் செல்லும்போது உதவியாளர்களார் கார்த்தி தலைமையிலான கோஷ்டி வருகிறது.



கப்பலிலிருந்து மாறி, இவர்கள் செல்லும் படகு ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் படகோட்டிகள் எத்தனை கொடுத்தாலும் இதற்கு மேல் வரமுடியாது என்று போய்விட, இவர்களே படகைச் செலுத்தி கரை நோக்கி செல்கிறார்கள்.

கரையை அடையுமுன்னே, கடலிலிருந்து வரும் ஒரு ஜந்து இவர்களை சாரமாரியாகத் தாக்க, பலர் மடிந்து விழ.. போகுமிடத்தின் விபரீதம் புரிய ஆரம்பிக்கிறது.

ஓலைச்சுவடியின் செய்தி மூலம், அந்த இடத்தை அடையுமுன் இதுபோன்ற ஏழு தடங்கல்களை இவர்கள் கடக்க வேண்டும் என்றறிகிறார் ஆண்ட்ரியா. பலவித சிக்கல்களுக்குப் பிறகு, கடந்து சோழர்கள் இருந்த இடத்தை கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா அடைகிறார்கள்.

அங்கே...

அந்த சோழர் பரம்பரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

அதன்பிறகு என்ன நடந்தது.. தஞ்சை மண்ணைத் தொட வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாய் காத்திருந்த அந்த சோழர்கள் ஆசை நிறைவேறியதா என்பதையெல்லாம் திரையில் கண்டு களியுங்கள்.


கொஞ்சம் சிக்கலான திரைக்கதையால் பலருக்கும் புரியாத வண்ணம் இருப்பதுதான் படத்தின் மைனஸ். அதுவும் படத்தில் பல இடங்களில் பின்நவீனத்துவம் புகுந்து விளையாடியிருகிறது!

படத்தின் ஹீரோ சத்தியமாக ரீமா சென்தான்! கார்த்திக்கு வேலையே இல்லை. படத்தில் ஹெல்பர் கேரக்டரில் வருகிறார். அவர் வேலையும் படத்தில் அது்தான். ஹீரோவாச்சே என்று கடைசியில் அவரை சோழர்களைக் காக்க வந்த தூதுவராய்க் காட்டியிருக்கிறார்கள்.



ரீமா சென். ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா மாதிரி ரீமாவுக்கு ஆயிரத்தில் ஒருவன். எந்த நடிகையும் நடிக்கத் தயங்கும் பல காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரதாப் போத்தனைக் கண்டுபிடிக்க இவர் ஏன் பிரயத்தனப்படுகிறாரென்று பார்த்தால், இவர் சோழர்களைப் பழிவாங்க வந்த பாண்டிய வம்சத்தவர்!





மன்னர் பார்த்திபன் (ஆம். ஆர். பார்த்திபன்) & கார்த்தி தலைமையில் சோழர்களுக்கும், அதிரடிப்படைக்கும் நடக்கும் போர் - தமிழ்சினிமாவிற்கு புதுசு. அந்தப் போர் முறையும், அதைப் படமாக்கிய விதமும் - ராம்ஜியின் கேமராவுக்கு வாழ்த்துகள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்ற இருவர்: காஸ்ட்யூம் டிசைனர் இரம் அலி. ஆர்ட் டைரக்டர் சந்தானம். பண்டைய காலம், பண்டைய காலத்தவர்கள் இன்று வாழும் இடம் எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சோழர்கால ஒவியம் மூலம் நடப்பதை கண்டறியும் யுத்தியும் அபாரம்.

இசை:- வழக்கமாய் யுவனோடு கைகோர்க்கும் இவர், இப்போது ஜீ.வி.ப்ரகாஷ்குமாரோடு கைகோர்த்திருக்கிறார். ‘ப்ரகாஷா? செல்வராகவன் படத்துக்கா?’ என்று கேட்டவர்களை ஏற்கனவே சிறப்பான பாடல்களால் வாயடைத்தார். படத்தில் நில்லாடிய சபையெங்கே என்று பார்த்திபன் பாட, ஒரு மாதிரி நெஞ்சையடைக்கிறது.

பிடிபட்ட சோழ மக்களை அதிரடிப்படை கொடுமைப்படுத்துவதும், பார்த்திபனின் பாத்திரப்படைப்பும் இலங்கைத் தமிழர் நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. :-(

தயவு செய்து குழந்தைகளோடு பார்க்காதீர்கள். இது அவர்களுக்கான படமல்ல. அதேபோல சில பெண்களும் படத்தை வெறுக்கக் கூடும்.


ஆயிரத்தில் ஒருவன் - நூற்றில் ஒரு படம்!



.

Monday, January 4, 2010

விஜய்: ரசிகனும் விமர்சகனும்



மீபத்தில் (அல்லது) சென்ற வருடம் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது நான்கைந்து பேர் கொண்ட கொலைவெறிக் கும்பல் ஒன்று “நீ எப்படி வேட்டைக்காரன் பாஸ்ன்னு எழுதலாம்” என்று என்னைத் தாக்க முற்பட்டது குறித்து திரைத்துறையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்க வந்த மற்றொரு நண்பர் (இவரொரு விஜய் ரசிகர் என்பதறிக) அவரோடு உரையாடினார். அந்த உரையாடலின் சிறு பகுதி:-

**************************************

“நானும் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்.. ஒப்பனிங் லைன் மட்டும்தான் சொன்னேன். ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான். ஒரு ஆளு ஊர்லேர்ந்து சென்னைக்கு வந்து பெரிய தாதாகிட்ட அடியாளா சேரணும்னு ட்ரை பண்றான். அவனை காமெடி பீஸாவே எல்லாரும் பார்ப்பாங்க.. ஒரே ஒரு கட்டத்துல, அந்த தாதாவோட குருவா இருக்கறவரை இவன் காப்பாத்தறான். அப்பறம் ரெண்டு தாதா க்ரூப்புக்கும் சண்டை. யாராலன்னு பார்க்கறப்ப, ஹீரோ! க்ளைமாக்ஸ் என்னான்னா, “நீ ரௌடியா இருக்கறதுன்னா இரு. இல்லையா ஒண்ணு நாங்க உன்னை காலி பண்ணீடுவோம், இல்லையா ரெண்டு க்ரூப்ல ஒருத்தர் உன்னைப் போட்டுவாங்க”ன்னு போலீஸ் சொல்லுது. ஹீரோ என்ன முடிவெடுக்கறாங்கறதுதான் க்ளைமாக்ஸ்!” இப்படிதான் ஆரம்பிகிறார் அந்த விமர்சகர் உரையாடலை. எதிரில் விஜய்யின் ரசிகர் இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“இது நான் கண்டுபிடிச்சேன்னு சொல்ல மாட்டேன். பாட்ஷாவோட வேற ட்ரீட்மெண்ட்ல ஆன ஸ்க்ரிப்ட். அவ்ளோதான். ஆனா அதுக்குள்ள ப்ரகாஷ்ராஜ் விஜய்யைப் பார்த்து போக்கிரியைப் பத்தி பேசி, நம்ம கழண்டுக்க வேண்டியதாச்சு” குரலில் வருத்தமில்லாமல் சொல்வதை ரசிகர் ஆர்வமாய்க் கேட்கிறார்.
“விஜய்க்கு தேவை சாதாரண கதைதான். ஆனா பவர்ஃபுல் ஸ்கிர்ப்ட் தேவை. அத ஏன் யாரும் பாக்கறதில்லைன்னுதான் எனக்கு வருத்தம்”

“கரெக்ட் சார். என் வருத்தமும் அதுதான். ஒரு விஜய் ரசிகனா நான் பார்க்கறது என்னான்னா ஒரு படத்துல கதை மத்த மேட்டரெல்லாம் என்னான்னு பார்ப்பேன்.. அப்பறம் விஜய் ரசிகனான எனக்கு அவர் என்ன தர்றாருன்னு பார்ப்பேன்.. அப்படி பிரிச்சுதான் பார்ப்பேன். மத்த படங்களை நான் பார்க்கறதுக்கும் விஜய் படத்தை பார்க்கறதுக்கும் இதுதான் வித்தியாசம்”

“ஆனா ஒண்ணுப்பா... நடிக்கறதுக்குன்னு வந்துட்டா விஜய்யோட டெடிகேஷன் யாராலயும் அடிச்சுக்க முடியாது”

“எப்படிச் சொல்றீங்க?”

“நான் 27 நாள் இருந்தேன். போக்கிரி ஷூட்டிங்க்ல. நானும் நடிக்க போயிருந்தேன். மூணு சீன் நடிச்சும் ஒரு ஃப்ரேம்ல கூட வர்ல அதுவேற விஷயம். ஆனா ஸ்பாட்ல விஜயோட இன்வால்வ்மெண்டும், டெடிகேஷனும் பார்த்து அசந்துட்டேன்.”

“ஆமாமா.. நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி ஆயிரத்தெட்டு குத்தம் குறை சொல்லுவாரு. கௌதம்மேனன் கூட சொல்லிருந்தார். ஆனா ஒத்துகிட்டு ஃபீல்டுக்கு வந்தா ஒரு கேள்வி கேட்காம நடிப்பாராமே?”


“ஆமாமா”

“திருமலை, கில்லி, மதுரை, திருப்பாச்சின்னு கலெக்‌ஷன்ல பெரிய நாலு படம் நடிச்சு அடுத்ததா ச்ச்சின்ல நடிக்கறாரு. அதுல மாஸ் ஹீரோன்னு எதுவும் காமிச்சுக்காம ஜாலியா நடிப்பாரு. வசீகராவுலயே சின்னப்பொண்ணு கால்ல விழுந்தெல்லாம் நடிச்சாரு. அதுமாதிரி விஜய்ட்ட பிடிச்சது அவர் டைரக்டருக்கு கொடுக்கற மரியாதை”

ரசிகர் தொடர, இடை மறிக்கிறார் விமர்சகர்: “மரியாதையெல்லாம் ஒண்ணும் கிடையாது.விஜய் படத்துல டைரக்டர் ஒண்ணும் கிடையாது. விஜய் கோவிச்சுட்டு செட்டை விட்டு போய்ட்டா மொத்தமும் காலி. அந்த பயத்தோடவேதான் வேலை செய்யணும். பிரபுதேவாவே ஒண்ணும் பண்ண முடியாது. விஜய்யை திட்டறதுக்கு பதிலா பக்கத்துல நிக்கறவனைத் திட்டலாம். அவ்ளோதான்”

“மரியாதையே இல்லைன்னா அப்பறம் எப்படி மறுபடி விஜய்கூடவே பண்றாங்க?”

“காசுதான். மத்தவங்க படம்னா 1000ஆ.. விஜய் படம்னா 5000!. பண்ணமாட்டாங்களா?”

“ஆனா என்னதான் கிண்டல் பண்ணினாலும் விஜய் படம் ஓப்பனிங் பிரமிக்க வைக்குதா இல்லையா? 2000ல என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு நாலு ஃப்ளாப்புக்கப்பறம் ‘குஷி’க்கான ஓப்பனிங் எல்லாரையும் பிரமிக்க வெச்சுது. அதே மாதிரி புதிய கீதை, வசீகரா, பகவதி எல்லாம் ஃப்ளாப். திருமலைக்கு சரியான ஓப்பனிங்”

“கரெக்ட்தான். விஜய்யும் அஜீத்தும் இன்னைக்கு டாப் லிஸ்ட்ல இருக்காங்கன்னா எத்தனை ஃப்ளாப் குடுத்தாலும், மொத நாள் ஒப்பனிங் உலகம் பூரா இருக்குங்கறதுதான்”

“ஆமாம். அதுவும் என்கூட முதல்நாள் ஷோ பார்த்துட்டு வெறுத்து வித்தியாசமா விமர்சனம் எழுதினவர், அவரோட மகன் அடம்பிடிச்சான்னு அடுத்த நாளே குடும்பத்தோட போயிருக்காரு. நானும் தனியாப் பார்த்தேன். அடுத்த நாள் என் ரிலேஷன் பையனோட போய்ப் பார்த்தேன். இந்த ஃபேமலி ஆடியன்ஸ் மத்தவங்களுக்கு இல்லைங்கறதுதான் உண்மை. அதுதான் விஜய் படம் நூறு நாள் ஓடறதோட காரணம்”

“நூறுநாள், நூத்தம்பதுநாள் ஓட்டறதுக்கு பின்னாடி வேற ஒரு பெரிய கதை இருக்கு. அது நடிகனுக்காகன்னு நம்பீட்டிருந்தா உங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது”

“அப்பறம்?”

“தியேட்டர் வாடகை தயாரிப்பாளர்தான் குடுக்கணும் பார்த்துக்கங்க.. அதெல்லாம் சினிமா ரகசியம்பா”

-என்றவர் மேற்கொண்டு இதைப் பற்றி பேசமறுக்கிறார்.

அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...

அது....


நீங்களே சொல்லுங்களேன்..


.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்!



ஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!

வேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது...?


வழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி... ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.

விஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.



அனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!

முதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.

படத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா! குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு!) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு!

விஜய்?

ஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக்கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்....

சீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி - க்ளாஸ்! அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது!

வசனங்கள் - பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.

இசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல!) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்‌ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.

இடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் - விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்!


வேட்டைக்காரன் - 42%



.

Saturday, September 19, 2009

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்


மேலே படத்தில் காண்பது நீங்கள்..நான் உட்பட நம்மைப் போல் ஒருவன்தான். மும்பையில், கோவையில், சென்னையில் குண்டு வெடிக்கிறதா அது நமக்கு வெறும் செய்திதான். கொஞ்சம் தெரிந்த ஆசாமிகள் ஏதாவது மரணமடைந்தவர்கள் லிஸ்டில் இருந்தால் ஒரு எக்ஸ்ட்ரா ‘உச்’ உறுதி. அதேபோல தியாக மரணம் (உன்னிகிருஷ்ணன், ஹேமந்த் கார்க்கரே) என்றால் அதன் காரணமாக இருக்கும் தீவிரவாதத்தை எதிர்த்த கவிதைகளும், விவாதங்களும் சூடுபறக்கும். கொஞ்ச நாள் கழித்து எந்திரன் ஸ்டில்களோ, வேட்டைக்காரன் வெளியீட்டுத் தேதியோ மீடியாக்களில் முந்திக் கொள்ளும்.


இப்படி இருக்கும் சாமான்யன் - COMMON MAN - கொஞ்சம் வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்தால்?



சாதாரணமான ஒரு காலை நேரம். நகரின் முக்கியமான போலீஸ் ஸ்டேஷன் உட்பட ஆறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்துவிட்டு வீட்டுக்கு காய்கறியும், வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள ஒரு மிகப்பெரிய கட்டிட மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு போலீஸ் கமிஷனரை ஆட்டு விக்கிறான் ஒரு பொதுஜனம். அவனது கோரிக்கை, கைது செய்து வைத்திருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்பதே.

கமிஷனர் இதை எப்படிக் கையாளுகிறார், அவன் கமிஷனரை எப்படி ஆட்டுவிக்கிறான் என்பதே உன்னைப் போல் ஒருவன்!

ஒரு நாள். காலை ஏழு டூ மாலை ஏழுதான் முழுக்கதையும்.

பின்னி எடுத்துவிட்டார்கள்! ஒரே ஸ்க்ரீனில் பத்து உடை, உடல்மொழியோடு அசத்திய கமலுக்கு ஒரே உடை. சாதாரணப் பொதுஜனத்தின் பயத்தை ஒரு ஷாட்டில் தன் உடல்மொழிமூலம் காட்டியிருப்பார் (போலீஸ் ஜீப்பைப் பார்க்கும் அந்தக் கடைசி காட்சி) - Class!

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் - இரண்டு. வசனங்கள் & இசை.

கமிஷனர் மோகன்லாலுக்கும், ஹோம் செக்ரட்டரி லக்‌ஷ்மிக்கும் நடக்கும் விவாதம் - மிகவும் குறிப்பிடத்தக்கது. (Blaming, Responsibility)

அதேபோல கமலுக்கும், மோகன்லாலுக்கும் நடக்கும் Common Man, Super Man, Invisible Man விவாதமும்.

இந்தப் படத்திற்கு காமெடி தேவையில்லை என்றாலும் பரத் ரெட்டி தன் மனைவியிடம் ‘எதுக்காவது நீ யெஸ்னு சொல்லியிருக்கியா’ எனும்போது கையிலிருக்கும் குழந்தையைக் காட்டி ‘இதுக்கு?’ என்பது, எம்.எஸ். பாஸ்கரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசும் வசனங்கள் உட்பட பல வசனங்களில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

இன்னொன்று பின்னணி இசை. ஸ்ருதி கலக்கியிருக்கிறார். முக்கியமாக இரண்டு இடங்களைக் கவனியுங்கள். ஒன்று போலீஸ் ஸ்டேஷன் வாஷ் ரூமில் பாமை கமல் வைக்கும்போது வரும் பின்னணி இசை. இன்னொன்று கமல் அந்தக் கட்டத்தின் மேலேறிப் போகும் சீன். அத்தனை பெரிய மாடி ஒவ்வொன்றாய் ஏறுவதை சலிக்காமல் ரசிகனைப் பார்க்க வைப்பது இசை. குறிப்பிட்ட இடத்தில் இசை நின்று, அவர் படியேறுவதன் சப்தங்களை மட்டும் கொடுத்து, மாடியை அடையும்போது மீண்டும் பின்னணி இசை கொடுத்து.... ஸ்ருதி.. ஹாட்ஸ் ஆஃப் டு யூ!

மோகன்லால், லக்‌ஷ்மி, பரத் ரெட்டி, கணேஷ், அனுஜா ஐயர் அந்த கம்ப்யூட்டர் இளைஞன் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாய் செய்திருக்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் - A MUST WATCH MOVIE

கேபிள் சங்கர்ஜிக்கு:- அந்த கம்ப்யூட்டர் இளைஞன் மேமாதம் படத்தில் வினீத்துடன் சிறுவனாய் நடித்தவன்தானே?


.

Saturday, September 12, 2009

ஈரம் - விமர்சனம்


ஒரு அபார்ட்மெண்டில் குறிப்பிட்ட ஃப்ளாட்டிலிருந்து வழிகிற நீர் ஃப்ளாட்டை முழுதும் ஈரமாக்கி பைப்பில் வழிய, என்னவென்று பார்க்கிறார் வாட்ச்மேன். படத்தின் நாயகி சிந்துமேனன் குடியிருக்கும் ஃப்ளாட்டிலிருந்து வழிகிறது நீர்.

‘மேடம் மேடம்’ என்று கதவு தட்டுகிறார்..

அங்கே.....

**************************

கல்யாணியம்மா பாத்திரம் கழுவ பைப்பைத் திறக்கிறார். தண்ணீர் வரவில்லை.
வெறுப்போடு மாவரைக்க கிரைண்டரைப் போடுகிறார். மின்சாரமில்லை. அப்போது தொலைபேசி மணி ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென்று சிங்க்’கில் திறந்து வைத்திருக்கும் பைப்பிலிருந்து தண்ணீர் வருகிறது. ஓரத்தில் வைத்திருக்கும் கரண்டி வழியே, வழிகிற நீர்.. நேராக.....

*****************************

தியாகராஜன் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். திடீரென புயல் காற்று வீசுகிறது. மழைத்துளி கன்னத்தில் விழுகிறது. குடையைத் திறக்க முயற்சிக்கிறார். குடை அவர் கையை விட்டுப் பறந்து செல்கிறது. பறந்து செல்லும் குடையின் முனை அவரை நோக்கி நிற்கிறது. எதுவோ, என்னவோ அவரைக் கலவரப்படுத்த மிரள்கிறார்.. இரண்டடி பின்வாங்குகிறார். திடீரென அந்தக் குடை பறந்து வந்து அவர் கழுத்தில்....

**************************

இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்புடைய மிஸ்டர். எக்ஸைத் தேட, அவன் சிக்குகிறான். ஒரு தியேட்டரில்... அவனைத் தொடரும் அசிஸ்டெண்ட் கமிஷனர், டாய்லெட்டில் அவன் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவனைத் தாக்குவது யாரென்று பார்க்கிற ஏ.சி-க்கு அதிர்ச்சி....

*********************

கொலைகளை விசாரிக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி. அவ்வப்போது நடக்கும் சம்பவங்களிலிருந்து தனக்கும் சிந்துவுக்குமான காதலை அவர் நினைவு கூர்வது நல்ல திரைக்கதை.


மிருகம் படத்தில் நடித்த ஆதி, இதில் ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. அண்டர்ப்ளே. ஆனா குரல்ல போலீஸ் ஆஃபீஸரா இருக்கறப்ப காமிக்கற அதே விறைப்பை, காதல் பண்ணும்போதும் காமிக்கறாரு. மத்தபடி நல்லா பண்ணிருக்காரு. (குரல் அவரோடதா.. உண்ணி மேனனா? மலையாள வாடை!)

ஹீரோயின் - சிந்து மேனன். ஸ்பெஷலா ஒண்ணுமில்ல. சாதாரண குடும்பப் பொண்ணா வந்து, குடும்பப் பொண்ணா சாகறாங்க.

சிந்துவின் கணவனாக நந்தா. அவருக்கும் நல்ல ஸ்கோப். இடைவேளை வரை ஒன்றுமில்லாமல்... இடைவேளையிலிருந்து க்ளைமாக்ஸ் வரை மிக நல்ல வேடம்.



சிந்துவின் தங்கையாக சரண்யா மோகன். நத்திங் க்ரேட் அண்ட் நத்திங் வேஸ்ட்.

கடைசியில் ப்ரஸ்மீட்டில் வில்லன் வாக்குமூலம் கொடுக்கும்போது, ‘எதுக்குய்யா இப்படி ஃபார்மலா திருந்தின மாதிரி காமிக்கறாங்க’ என்று நாம் யோசிக்கும்போது ஒரு சின்ன டயலாக் மூலம் ‘அட’ என்று நிமிர வைக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

படத்தில் ப்ளஸ்.. மேக்கிங். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதோ ஒரு இடத்தில் ஈரம் தெரிகிறது. அதைத் திணிக்காமல் யதேச்சையாகக் காண்பித்ததில் இயக்குனர் மிளிர்கிறார்.

இன்னொரு ப்ளஸ் பின்னணி இசை. தமன். மிரட்டலா இருக்கு.

ஈரம் - ஷங்கர் தயாரிப்பென்றால் தைரியமாகப் பார்க்கலாம் என்று நிரூபிக்கிற படம்.


.

Monday, June 22, 2009

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் டென் எதிர்பார்ப்புகள்

10. கண்டேன் காதலை




தமிழ்சினிமாவில் இந்தி படங்களை ரீமேக் செய்வது குறைவு. இந்தப் படம் JAB WE MET என்ற சூப்பர் ஹிட் இந்திப் படத்தின் ரீமேக். பரத் - தமன்னா நடிக்கும் இந்தப் படம் கதை விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது. (பர்சனலாக பரத்-தை ஷாகீத் கபூரின் இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் மறுக்கிறது!)


9. மெட்ராஸ் பட்டிணம்





ஆர்யா நடிக்கும் இந்தப் படம் 1940களின் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

8. இது மாலை நேரத்து மயக்கம்




தனுஷ் ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம். ஆனால் செல்வராகவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக இந்தப் படம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் உலாவருகின்றன.


7. விண்ணைத்தாண்டி வருவாயா



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கம். சிம்பு-த்ரிஷா நடிப்பில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வரவிருக்கும் படம்.


6. கோவா




சென்னை 600028 மற்றும் சரோஜா பட வெற்றிக்கூட்டணி.

5. ஆடுகளம் & ஆதவன்




ஐந்தாம் இடத்தை இரண்டு ‘ஆ’ படங்கள் பகிர்ந்து கொள்கின்றன. முதலாவது தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ஆடுகளம். பொல்லாதவன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது!





அடுத்தது ஆதவன். கமர்ஷியல் ஹிட் கொடுப்பதில் நம்பர் ஒன் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம். சூர்யா படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புள்ள அம்சமாக இருக்கிறது.


4. அசல்



சரணின் இயக்கத்தில் அஜீத்!


3. வேட்டைக்காரன்



விஜய்...!


2. உன்னைப்போல் ஒருவன்




A WEDNESDAY என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக். கமலுடன் மோகன்லாலும் இணைந்து நடித்துள்ளார்.


1. எந்திரன்


என்ன சொல்ல?



.

(thanks for the images: sify, galatta, behind woods... )

Tuesday, March 31, 2009

சைக்கோ - PSYCHO







1960ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.

அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.

ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள் காதலி மரியான் (JANET LEIGH). திருமணத்தைத் தள்ளிப்போடும் காதலனுடனான சிறுவிவாதத்திற்குப் பிறகு அவள் தனது அலுவலகத்திற்குப் போகிறாள்.

புதியதாக ஒரு சொத்து வாங்க 40000 டாலர்களை மொத்தமாக ஒரு செல்வந்தர் கொடுக்க.. அதை வாங்கியவள் ‘வங்கியில் அதை டெபாசிட் செய்திவிட்டு அப்படியே வீட்டுக்குப் போகிறேன்’ என்று பாஸிடம் அனுமதி பெற்றுச் செல்கிறாள். அங்கேதான் படமும், அவள் வாழ்க்கையும் திசை மாறுகிறது.

ஏதோ ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்று ஆடைகளை ஒரு சூட்கேஸில் பேக் செய்து காரில் கிளம்புகிறாள் அவள். ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வந்து, காரை விற்று வேறு கார் மாற்றி… நார்மென் பேட்ஸ் (ANTONY PERKINS) என்பவருக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்குகிறாள். 12 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் யாருமில்லை.

அந்த இரவில் உணவு கிடைப்பது அரிதென, நார்மென் பேட்ஸ் அவரது வீட்டில் டின்னருக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் செல்கிறார். அங்கே நார்மென் பேட்ஸுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கேட்கிறாள் மரியான். சற்று நேரத்தில் நார்மென் பேட்ஸ் விடுதிக்கே உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு குளிக்கச் செல்கிறாள் மரியான் . அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. திடீரென வந்த யாராலோ குரூரமாகக் குத்திக் கொலை செய்யப் படுகிறாள்.




காலையில் வந்து பார்த்த நர்மென் பேட்ஸுக்கு அதிர்ச்சி. அவசர அவசரமாக எல்லா ரத்தக் கறைகளையும் துடைத்து விடுதியை சுத்தப்படுத்தி காரையும், இறந்த மரியானையும் ஒரு புதைகுழியில் தள்ளிவிட்டு எப்போதும் போல விடுதிக்கு வந்துவிடுகிறார்.

அங்கே மரியானைக் காணாத அவளது தங்கை லைலா (VERA MILES), மரியானின் காதலன் சாமிடம் அவள் போயிருக்கக்கூடும் என்று நினைத்து அவனைத் தேடிப் போகிறாள். அவள் காதலனுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. இடையில் ரூ.40000த்தை
தொலைத்த முதலாளி அனுப்பி வரும் ப்ரைவேட் டிடக்டீவ் ஆர்பகாஸ்ட் என்பவரும் தேடுதல் வேட்டையில் இறங்கி.. நார்மன் பேட்ஸின் விடுதிக்கு சென்று.. அவர் மீது சந்தேகம் கொண்டு – பேட்ஸின் வீட்டிற்கு செல்ல.. யாராலோ குத்திக் கொலை செய்யப் படுகிறார். பேட்ஸின் வீட்டிற்கு செல்லும் முன் லைலாவிற்கு தொலைபேசிய டிடக்டீவ் பேட்ஸின் வீட்டில் பேட்ஸின் வயதான தாயை மரியான் சந்தித்திருக்கக் கூடும் அங்கேதான் ஏதேனும் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்.




கடைசியாக இதற்கெல்லாம் என்ன காரணம் என அறிய சாம், லைலா இருவரும் செல்கின்றனர். பேட்ஸின் விடுதியில் அறை எடுத்துத் தங்கி.. பேட்ஸிடம் சாம் பேச்சுக் கொடுத்த வண்ணம் இருக்க.. பேட்ஸின் வீட்டிற்கு சென்று அந்த வயதான தாயாரைப் பார்க்க லைலா போகிறாள்..

அங்கே....

வயதான தாயென்று யாருமே இல்லை.

அப்படியானால் கொலை செய்ததெல்லாம்...?

அந்த வயதான தாய்தான். எப்படி?

படம் பாருங்கள்!

1960ல் வெளியான கருப்பு வெள்ளைப் படம். ச்சான்ஸே இல்லை. அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை (ஜோசப் ஸ்டெஃபானோ. ராபர்ட் BLOCHன் நாவலைத் தழுவி). நார்மென் பேட்ஸாக நடித்த ஆண்டனி பெர்கின்ஸ்-சின் நடிப்பு பிரமாதம். அதுவும் இறுதிக் காட்சியில் அவர் கண்களில் தெரியும் அமானுஷ்யம்... இன்னும் பயமுறுத்துகிறது!

அருமையான கேமரா கோணங்கள் (ஜான் ரஸல்) படம் ஆரம்பிக்கும்போதே அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகர் முழுவதும் பறவை போல பறந்து சாம்-மரியான் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு ஜன்னலின் லேசாக திறந்திருக்கும் ஸ்க்ரீனின் கீழ்ப்பகுதியில்தான் உள்ளே போகிறது காமிரா. ங்கொய்யால 1960ல ஒரு மனுஷன் இப்படி சிந்திச்சிருக்கான் பாருடா என்று பிரமிக்கத் தோன்றுகிறது.

அதெபோல மரியானைப் பின்தொடரும் போலீஸ் கார் பாதை மாறுவதைப் பார்த்து அவள் முகம் நிம்மதி அடைவதை நமக்கு உணர்த்த காரோட்டும் அவள் முகத்தை நமக்கு காட்டி, அவள் பின்னால் தெரியும் காரின் பின்கண்ணாடியில் போலீஸ் கார் வேறு பாதைக்கு மாறுவதையும் நமக்கு காட்டி, இவள் அதை ரிவர்வ்யூ மிர்ரரில் பார்ப்பதையும் நமக்குக் காட்டி.... மூன்று கோணங்களில் எடுக்க வேண்டிய காட்சியை ஒரே கோணத்தில் அடக்கி.... ப்பா!

அதேபோல ஷவரை குளிப்பவரது கோணத்தில் எடுத்திருப்பது.. டிடக்டீவ் மாடிப்படி ஏறுகையில் கீழிருந்து மேல் இல்லாமல் மாடி ஏறும் அவர் காலில் முட்டிக்கு நேராக கேமராவைக் காண்பித்திருப்பது என்று காமிரா.. பல இடங்களில் சபாஷ் வாங்குகிறது.

அடுத்து முக்கியமானது – இசை: பெர்னார்ட் ஹெர்மான். துல்லியமான இசை. எங்கெங்கே மௌனம், எங்கெங்கே இசை என்பதை மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்சாக்! என்ன ஒரு டைரக்‌ஷன். இரண்டாவது முறை பார்க்கும்போது மரியானின் முக பாவங்களிலேயே அவள் ஒரு முடிவுடன் இருக்கிறாள் என்பதை உணர்த்தியிருப்பார்.

மரியான் காரில் செல்லச் செல்ல அங்கே அவளது அலுவலகத்தில் அவள் குறித்து எடுக்கப் படும் நடவடிக்கைகளை பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பார். மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!

அவளது உடலை காருடன் புதைகுழியில் தள்ளியதோடு இல்லாமல், கார் உள்ளே செல்லச் செல்ல நார்மென் பேட்ஸ்சின் முக பாவங்களில் அவரது உணர்வைக் காட்டியிருப்பார்.


இறுதியாக நார்மென் பேட்ஸின் தாயார் குறித்தும், நார்மென் பேட்ஸ் குறித்தும் சைக்கியாட்ரிஸ்ட் பேசும் வசனங்கள் அத்தனை ஷார்ப்.

அதேபோல அந்த விசாரணை முடிந்து, நார்மென் பேட்ஸ் குளிருக்குப் போர்வை கேட்க... கொடுத்ததும், தேங்க்ஸ்’ என்கிறார்.. அவரது தாயார் குரலில்! என்ன ஒரு டைரக்டரய்யா இவர்!

இதுவரைக்கும் இந்த ஒரு படத்தில் பாதிப்பில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வந்தாயிற்று என்கின்றனர் உலக சினிமா ஆர்வலர்கள்.

எப்பாடு பட்டாவது தேடிப்பிடித்துப் பாருங்கள்...

சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!