Sunday, October 5, 2014

அர-மெட்-ஜீ-பேங்!

சமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்!

1. அரண்மணை:
மூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம்பிப் போனோம்.

சந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.

‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா?” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.

“படம் எப்டி?” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா? இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.
--------------

2. மெட்ராஸ்:

நல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.

ரஞ்சித் - Waiting For Your Hat trick Movie!
---------------------------------------

3. ஜீவா:

சமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா!.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா!’


குறியீடுகள் என்று பார்த்தால், இதிலும்.  கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல!

பாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.

OUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு? “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.


ச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
-----------

4. BANG BANG

மெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா!
.

1 comment:

maithriim said...

ஒரே கல்லுல நாலு மாங்காய் :-)

amas32