Saturday, January 30, 2010

தமிழ்ப்படம் - விமர்சனம்



ஒரு படத்தின் முதல் நாளிலேயே இத்தனை பேர் மனைவி, குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வருவதை வெகுநாட்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். ஹாட்ஸ் ஆஃப் டு தமிழ்ப்படம் டீம்!


இந்தப்படத்தின் பெயர் தமிழ்படம் என்றிருந்த. ‘ப்’இல்லாமலிருப்பது தமிழ்ப்படங்களை ஒரு வித நக்கல் செய்யும் பாணி என நினைத்தேன்.கடைசியாக ப் சேர்த்திருக்கிறார்கள்.. ஏனென்று தெரியவில்லை.

தியேட்டருக்குள் போகும்போதே பலர் ‘விளம்பரங்களைப் பார்த்தே வயிறு வலி வந்திடுச்சு. முழுப்படமும் எப்படி கலாய்ச்சிருப்பாங்கன்னு பார்க்கலாம்’ என்ற ஆவல் மேலீட்டோடு பேசிக் கொண்டே வந்ததைக் கேட்க முடிந்தது.

அவர்களின் ஆவலுக்கு சரியான தீனி போட்டிருக்கிறார்கள்!




கதை.?

தமிழ்ப்படங்களின் கதை என்ன? அதுதான் தமிழ்ப்படத்தின் கதையும்.

சினிமாபட்டி என்ற ஊரில் ஆண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்ல வேண்டுமென்பது நாட்டாமை தீர்ப்பு. (ஏன்..? படம் பாருங்கள்!) அதிலிருந்து பாட்டியால் தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ, சின்ன வயதில் மார்க்கெட்டில் மாமூல் வாங்கும் ஒரு கும்பலின் அக்கிரமத்தைப் பார்க்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. உடனேயே பெரியவனாகி (உடனேயா.. எப்படி? படத்தைப் பாருங்கள்!) போய் அந்த அக்கிரமக்காரர்களை அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவர்கள் அதே மார்க்கெட்டில், அதே டிரஸ்ஸுடன் லூட்டி அடித்தபடி இருக்கிறார்கள்!

ஹீரோ ஆயாச்சா? உடனே ஓபனிங் சாங், ஹீரோயின், லவ், அப்பா எதிர்ப்பு, முகம் தெரியா வில்லன், பழிவாங்கல், ஃப்ளாஷ் பேக், ஹீரோ அப்பாவைத்தேடி கிராமம் புகல், குடும்பப்பாட்டு, ஃபேமலி ஒன்று சேர்தல், வில்லன் கைது, கோர்ட்டில் வழக்கு, நீதிபதி தீர்ப்பு.. இத்யாதி.. இத்யாதி...

யப்பா சாமி! இப்படி படம் முழுக்க சிரிச்சு கைதட்டி ஒருத்தன் பார்க்க முடியுமா! பார்க்க வைத்திருக்கிறார்கள். சீன்களைச் சொல்வதினால் ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதுதான் நடக்கிறது.. ஆனால் அதை அவர்கள் காட்டியிருக்கும் விதம்... ..

எத்தனை சீன்களைச் சொல்லலாம்!

ஹீரோ சென்னைக்கு வந்ததைக் காட்ட - எழும்பூர் ரயில் நிலையத்தைக் காட்டுகிறார்கள். அப்போது கேமரா முன் ஒரு ஆட்டோக்காரர் வந்து வசவுகிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை. இனி டைரக்டர்கள் அந்த இடத்தில் கேமரா வைப்பார்களா என்பது சந்தேகமே!

பச்சை மஞ்ச பாட்டின்போது ஒரு கீழே போடுகிறார்கள்: ‘இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் சிவா’ இரண்டு செகண்டில் அதன் கீழேயே வேறொரு வரி வருகிறது.. போய்ப் டத்தில் பாருங்கள்.

நாயகியின் அப்பா, நாயகி மீது வைத்திருக்கும் அன்பைக் காட்ட - நாயகியின் புகைப்படத்தைக் கோணலாக மாட்டிய வேலைக்காரிக்கு ஒரு தண்டனை கொடுக்கிறார். என்ன தண்டனை என்பதையும் அதற்கு அந்த வேலைக்காரி காட்டும் எக்ஸ்ப்ரெஷனையும்... ப.பா!

அதே அப்பா, காபி கொண்டு வரும் வேலைக்காரனைத் திட்டி கோப்பையைத் தட்டி விடுகிறார். ‘கேட்டா அடுத்த நிமிஷம் வரணும்டா’ என்று. இந்த சீன் எதற்கு என்று பார்த்தால்---

பின்னொரு நாள் அவரிடம் ஹீரோ சவால் விடும்போது ‘ஒரு காபி கொண்டு வா’ என்கிறார். வெளியே போகும் ஹீரோ ஒரு குட்டிப் பாட்டுக்குப் பின் பணக்காரனாகி இவர் வீட்டுக்கு வருகிறான். அந்த ஹீரோ வரும்போது, அப்பாவுக்கு காபி வருகிறது! கைகுடுங்க டைரக்டர் சார்!

ஹீரோ பணக்காரனானால் என்னென்ன அவன் பேரில் வரும்? ஸ்கூல், காலேஜ், இண்டஸ்ட்ரீஸ்? ம்ஹூம்... இதில்.. ப.பா!

காவல்துறை ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துகிறது. அங்கே டீ கொண்டு வருபவர்... ம்ம்ம்ம்.. அஸ்கு புஸ்கு.. படத்தை பாருங்க! அதேபோல அந்த மீட்டிங்கிலேயே ஒரு கருப்பு ஆடு இருப்பதை ஹீரோ கண்டுபிடித்து தோலுரிப்பதும் அருமை!

க்ளைமாக்ஸில் ஹீரோ மருத்துவமனையில் இருக்கிறார், ஹீரோயின் வில்லனால் சுடப்படுகிறார்.. ஹீரோ வந்து காப்பாற்றுவாரில்லையா? அப்படித்தான் இதிலும். ஆனால் அவர் வருவதற்கு நடுநடுவே ஒன்றைக் காட்டுகிறார்கள் பாருங்கள்...


ஹீரோவின் வீடு - அட்டகாசம்.

அப்பாவைத் தேடிப்போகும் ஹீரோவின் குடும்பப்பாடலாய் ஒரு பாடலைப் போடுகிறார்கள். தியேட்டர் அடங்க மறுக்கிறது. அவ்வளவு க்ளாப்ஸ்!

ஹீரோ ஒவ்வொருவரையும் கொல்ல போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் படு சுவாரஸ்யம்!

கஸ்தூரி - இவ்வளவு செக்ஸியாய் ஸ்லிம்மாய்.. ஒரு பாடலுடன் போகிறாரே என ஏங்க வைக்கிறார். ஓ மகஸீயா, பச்ச, குத்துவிளக்கு, ஒரு சூறாவளி எந்தப் பாடலும் தியேட்டரில் சொதப்பவில்லை. ஓ மகஸீயாவில் டாலாக்கு டோல் டப்பிமா வரிக்கு சிவாவின் எக்ஸ்ப்ரஷனுக்கு தியேட்டர் குலுங்குகிறது.

அதேபோல அந்த டூயட் முடிந்தபின், தோளில் பையுடன் வீட்டுக்கு வரும் சிவாவை ‘எங்கடா ரெண்டு நாளா ஆளைக் காணோம்’ என்று பாட்டி கேட்க, ‘ஒரு டூயட்டுக்கு கொழும்பு போயிருந்தேன் பாட்டி’ என்கிறார் பாருங்கள்.. அசத்தல்!





சிவாவைத்தவிர வேறு யாருமே இந்த கேரக்டருக்குப் பொருந்துவார்களா என்பது சந்தேகமே. ஹீரோக்களின் அலட்டலை தன் அலட்டாத நடிப்பில் காண்பித்து பின்னி எடுத்துவிட்டார். என்ன.. சில சீன்களில் ரொம்பவும் லோ வாய்ஸில் பேசுகிறாரா... தியேட்டர் சிரிப்பொலியில் ஒன்றுமே கேட்பதில்லை.

ஒவ்வொரு சீனிலும் இது எந்தப்படத்திற்கான கிண்டல் என்று சுவாரஸ்யமாக தியேட்டரில் பார்வையாளர்கள் பேசிக் கொள்வதிலிருந்தே படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவிட்டது.

வசனம். கே. சந்துரு. (சொல்லியே ஆகணும். எனக்கு பின்னூட்டமெல்லாம் போட்டிருக்காரு இந்த மனுஷன்!) சூப்பர்! (இது பின்னூட்டம் போட்டதால இல்ல என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்வீர்கள்!) எல்லாமே டைமிங் காமெடி வசனங்கள்தானே என்றில்லாமல் மிகுந்த சிரத்தையோடு எழுதியிருக்கிறார். குறிப்பாக கிராமம் பற்றி சண்முகசுந்தரம் பேசும் வசனங்கள்.

இந்த ஹீரோ என்ற வகைதொகையில்லாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருந்தாலும் எதுவுமே புண்படும்வகையில் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது. உள்ளே போகும்போதும் வரும்போதும் இவ்வளவு உற்சாக முகங்களைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது.

தமிழ்ப்படம் நல்லால்ல என்று இனி யாரும் சொல்ல முடியாது!


தமிழ்ப்படம் - சரவெடி சிரிவெடி!




.

Saturday, January 23, 2010

கனலி

அவர் என் பதினைந்து வருடகால நண்பர். முகம்மது உசேன் அவர் பெயர். உடுமலைப்பேட்டையில் வ.ஊ.சி. வீதியில் ‘கனலி கலைக்கூடம்’ என்ற பெயரில் ஆர்ட்ஸ் நடத்தி வந்தார். மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர். பெரியாரின் கொள்கைகளில் பிடிப்பானவர். கனலி என்றுதான் அவரை அழைப்போம்.

சின்னக் கடை. ஆனால் எங்கள் நட்பு வட்டாரத்திற்கு விசாலமான இடமாக அந்தக் கடை இருந்தது. கனலி நிஜமான ஒரு கலைஞன். மனிதன். ரசிகனாய் வாழ்க்கை நடத்தி வந்தார். நான், செந்தில், செந்தில்குமரன் என்று எங்களைச் சார்ந்த யாருக்கேனும் ஏதேனும் மன உளைச்சலோ, சங்கடங்களோ இருப்பின் அவரைத் தேடி ஓடுவோம்.

"வாங்க கிருஷ்ணா.. பாட்டு கேக்கலாமா?" என்பார். இரண்டு பெரிய ஸ்பீக்கர் கொண்ட அசெம்பிள் செய்யப்பட்ட ப்ளேயர் வைத்திருந்தார். எங்களுக்கென்றே ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் வைத்திருப்பார். ‘ஆலோலம் பாடி..’ என்று இசைஞானியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தால் எங்கள் உலகம் வேறு திசை நோக்கி பயணிக்கும். இசை குறித்த கலந்துரையாடலில் ஆரம்பித்து உலகின் எல்லா சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராய்வோம். ஏதேனும் போர்டு வரைந்து கொண்டே எங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார் கனலி.

படம் வரைவதிலோ, போர்டுகள் எழுதுவதிலோ இறங்கிவிட்டால் முழு மனதுடன் பணி புரிவார். எளிதில் திருப்திப்பட மாட்டார். அவரது சொந்தக் கடை விளம்பர போர்டு வைப்பதற்கு என்ன அக்கறை எடுப்பாரோ அதே அக்கறையை ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வரும் முகம் தெரியாத ‘திருவிழா வருதுங்க. நம்ம ரசிகர் மன்றம் சார்பா ஒரு தட்டி வைக்கணும்’ என்று வரும் ஆர்டர்களுக்கும் காட்டுவார். நான் குற்றங்கள் கண்டுபிடித்தே பழக்கப் பட்டவன். நான் போகும்போது என்ன எழுதி/வரைந்து கொண்டிருந்தாலும் சரி நான் ஏதாவது சொல்வேனா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்.

ரேட்டில் கறாராக இருப்பார். ‘மத்த பக்கம் இப்படி அப்படி’ என்று வாடிக்கையாளர்கள் சொல்லும்போது சின்ன புன்னகையோடு தலையாட்டுவார். சொன்ன நேரத்திற்கு ஆர்டரை முடிப்பது, பில் கொடுப்பது, ஒரு ஆர்டருக்கான படங்களுக்காக பழைய புத்தகக்கடைகளில் அலைந்து படம் தேர்வு செய்வது என சின்னத் தொழிலானாலும் ஒரு கார்ப்பரேட் அம்சங்களுடன் நடத்துவதில் அவருக்கு பிரியம் அதிகம்.

கடைக்கு காலை பத்து மணிக்குத்தான் வருவார். தனது டி.வி.எஸ்-சில் கூலிங்க்ளாசுடன் வந்து கடைதிறந்து அன்றைய வேலைகளைத்திட்டமிடுவார். தனது வண்டியை அப்படி பார்த்துப் பார்த்து வைத்திருப்பார். தினமும் துடைத்து பளபளப்பாயிருக்கும். வெளியில் வேலை என்றால் கடைமுன் வைத்திருக்கும் சின்ன கருப்பு போர்டு ஒன்றில் எங்கே வேலை செய்துகொண்டிருக்கிறார், எத்தனை மணிவரை அங்கிருப்பார் என்று எழுதிவைத்துவிட்டு தான் கிளம்புவார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கானது. கேரம்போர்டில் உட்கார்ந்தால் மாலை வரை விளையாடுவார். ஏதாவது படத்திற்கு ஈவ்னிங் ஷோ போகாமலிருக்க மாட்டார்.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன் "ப்ளக்ஸ் பேனரெல்லாம் வந்துடுச்சு கிருஷ்ணா. இனி இந்தத் தொழில்ல காலத்தை ஓட்டறது கஷ்டம்தான். நானும் திருப்பூர் வர்லாம்னு இருக்கேன்" என்றார். கடையை மூடிவிட்டு குடும்பத்தோடு திருப்பூர் வந்தார். சொந்தக்காரர் ஒருவரின் மீன் கடையில் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தார். ஒரு முதலாளியாக கடை நடத்திக் கொண்டிருந்தவரை கொதிக்கும் எண்ணைச் சட்டி முன் கரண்டியோடு தினமும் பார்ப்பது கொடுமையான விஷயம். அவருக்கு ஏற்ற வேலை தேடிக் கொடுக்க எனக்கு சிரமமாக இருந்தது. பெரிய நிறுவனங்களில் சேர்த்துவிட்டால் ஏதேனும் ஒரு இன்சார்ஜுக்கு கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சின்னதொரு கம்பெனியில் முதலாளிக்கு அடுத்து இவர் இருக்கும்படியான ஒரு போஸ்ட்டில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து மாறி இப்பொழுது சின்னதொரு பிரிண்டிங் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

அவர் கடை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது `dr ஆர்ட்ஸ்' (இவரும் எங்கள் நண்பர்தான்!) நடந்துவருகிறது. கம்ப்யூட்டர் ஒன்று வைத்து, ப்ளக்ஸ் போர்டு டிசைன் செய்து வருகிறார் DR. கனலி இருக்கும்போது ரோட்டிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ஒரு பெரியாரின் படத்தை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது மலேசியா முருகன் ப்ளக்ஸில் பிரம்மாண்டமாய் நிற்கிறார். (‘பில்லா படத்துக்கு வெச்சதுங்க’)

சில மாதங்களுக்கு முன் செந்திலுடன் வீட்டிற்கு வந்தார் கனலி. பேசும்போது அவரைப்பற்றி சொன்னார்..

"எப்படி இருந்தேன் கிருஷ்ணா நான்? ஒரே மாசத்துல புரட்டிப்போட்ட மாதிரி ஆய்டுச்சு என் வாழ்க்கை. நான் சொல்றத மட்டும்தான் நான் கேட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படி முடியல கிருஷ்ணா. எல்லார்கிட்டயும் பொறுமையா இருக்கவேண்டியதாயிருக்கு. இதுதான் வாழ்க்கை. பிரிண்டிங் ஆர்டர் எடுத்துட்டு அம்பது கிலோ, அறுபது கிலோ மூட்டையை என் வண்டில வெச்சுட்டு ஓட்ட முடியாம ஓட்டி, இந்த ரெண்டு வாரத்துல மூணு தடவை விழுந்துட்டேன். வண்டி எப்படி வச்சிருந்தேன்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க. முன்னாடி டயர்ல உள்ள இருக்கற ட்யூப் தெரியுது. மூட்டையை சுமந்துட்டு மாடில இருக்கற பிரிண்டிங்குக்கு தனி ஆளா ஏறி கொண்டுபோறேன்.. மூவாயிரத்தி ஐநூறு ரூபா சம்பளம். அதுல எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வாழ்ந்துட்டிருக்கேன். சினிமாக்கு போறதில்லை, பாட்டு சி.டி. வாங்கறதில்ல, புத்தகமெதுவும் வாங்கறதில்லை, மனைவி, குழந்தைகளை வெளில கூட்டிப் போறதில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட எனக்காக ஒதுக்க முடியல. ஒரு கலைஞனா இருந்த நான், இப்படி இருக்கேன். மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்."

செந்திலும், நானும் அவருடன் கிளம்பி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கனலியை அனுப்பிவிட்டு வரும்போது எப்போதும் கண்ணில் படும் சில ப்ளக்ஸ் பேனர்கள் கண்ணில் பட்டது.

இப்போது அவை வேறு மாதிரி தெரிந்தது.


.

Friday, January 22, 2010

க்ரிக்கெட்டும் நானும்

நேற்று (இன்றெழுதப்பட்ட (21 ஜன. ‘10) இந்தப் பதிவு நாளை (22 ஜன) வருமானால் இந்த நேற்றை ‘நேற்று முன்தினம்’ என திருத்தி வாசிக்கவும்!) ஜெயா ப்ளஸ் சேனலில் க்ரிக்கெட் பற்றிய ஓர் அலசலில் ச.நா.கண்ணனுடன் நண்பர் முரளிகண்ணனும் பங்கேற்று சிறப்பாகப் பேசினார். முதலில் அவருக்கு வாழ்த்துகள்.

அழைத்துப் பாராட்டி ‘ஏங்க என்கிட்ட சொல்லவேல்ல? கார்க்கி சொல்லித்தான் தெரிஞ்சது’ என்றபோது உங்களுக்கு க்ரிக்கெட் பிடிக்குமான்னு தெரியல அதான் சொல்லல’ என்றார்.

இந்தா பிடி, அடுத்த பதிவுக்கான மேட்டரை என்று சொல்வது போல இருந்தது அவர் பதில். அதனால் இதோ எனக்கும் க்ரிக்கெட்டுக்குமான ஸ்னானப்ராப்தி:




ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!


.

ஒரு விடை


ன் முந்தைய ஒரு கேள்வி பதிவுக்கு ரொம்ப சிம்பிளான பதில்..

ஊராரோட பாராட்டுக்களை ஏத்துகிட்டிருப்பேன்’கறதுதான். .

கதையை முடிக்கும்போதுதான் நான் சொன்னேன்..நீங்க அவன் இடத்துல இருக்கீங்கன்னு. நீங்கதான் அது! பண்ணியாச்சு, காப்பாத்தியாச்சு. அப்புறமும் நானா இருந்தா அப்படிச் செஞ்சிருப்பேனாங்கற சந்தேகம் ஏன் உங்களுக்கு? பின்னோக்கி மாதிரியான சிலர்தான் நாந்தான் அந்தச் சிறுவன்னாங்க. இருந்தாலும் பல பின்னூட்டங்கள் சபாஷ் போட வெச்சுது. வால்பையனோடது மாதிரி சிலது மனசு விட்டு சிரிக்க வெச்சுது.

அதுல ஒருத்தரான வெ.ராதாகிருஷ்ணன் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு யோசிச்சு சீரியஸா எழுதினதால என் மின்னஞ்சலுக்கு அவர் முகவரியை அனுப்பினார்னா, ஒரு புத்தகம் பார்சல் செய்யப்படும்!

இந்திய முகவரி ப்ளீஸ்!


.

Wednesday, January 20, 2010

ஒரு கேள்வி


அந்த ஊர்ல மழை பெய்ஞ்சு தண்ணி ஊருக்குள்ள வந்தா ஊருக்கு ஆபத்துன்னு ஒரு பெரிய மதகு கட்டி வெச்சிருந்தாங்க. ரொம்ப வருஷமா ஊருக்குள்ள தண்ணி வர்ற அளவுக்கு பெரிசா மழையொண்ணும் வரல. அதனால அந்த மதகைப் பத்தி யாரும் அவ்வளவா கண்டுக்கல.

ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு நாள். மாலை மயங்கி, இரவு துவங்கும் நேரம். (லேசா இருட்டீடுச்சுங்கறத ஏண்டா இப்படி எழுதி சாவடிக்கற?) ஊர்ல லேசா மழை பெய்ய ஆரம்பிக்குது. வேகமெடுக்குது. அந்த ஏரி வேகமா நிறைஞ்சுட்டே இருக்கு. அந்த வழியா மாடு மேய்ச்சுட்டு இருந்த சிறுவன் ஒருத்தன் வீட்டுக்கு வேகமா ஓடறான். ஓடற வழில இந்த ஏரிய தடுத்துட்டு இருக்கற மதகுல ஒரு இடத்துல ஓட்டை. அதுவழியா கொஞ்சம் கொஞ்சமா நீர் கசியறதப் பார்க்கறான்.

மழையைப் பொருட்படுத்தாம நின்னு அவனோட கையால அதை அடைச்சு பிடிச்சுக்கறான். முடியல. பக்கத்துல இருந்த செடி கொடிகளைப் பிடுங்கி அதை வெச்சு ஒருமாதிரி அடைச்சு கையை வெச்சு முட்டுக் குடுத்துக்கறான். ஒரு மாதிரி தண்ணி நின்னுடுச்சு.

விடிய விடிய அங்கயே நின்னு, ஊருக்குள்ள தண்ணி போய் குடிசைகளை அழிக்காம காப்பாத்தினான். கருக்கல்ல அந்த வழியா வந்த பெரியவர் ஒருத்தர் அவனைப் பார்த்து, உடனடியா ஆளுகளைக் கூப்ட்டு அந்த துவாரத்தை சரி செஞ்சுடறாரு. ஊரே இந்தப் பையனைப் புகழுது. ‘நீதாண்டா ஹீரோ’ங்குது.

என் கேள்வி:


நீங்க அவன் இடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?


.

Tuesday, January 19, 2010

ஒன்... டூ.. த்ரீ...

புதியதாய் ஒரு புத்தகத்தை வாங்கி புரட்டிப் பார்க்கும் அதே சந்தோஷம் புதியதாய் வெளியாகும் படப்பாடல் சி.டி.யை வாங்கி கவரைப் பிரித்து, பாட்டு எழுதியவர்கள், பாடியவர்கள் என்று பார்க்கும்போதும் அப்படியே இருக்கிறது. அந்த உற்சாகம் மட்டும் எனக்கென்னவோ குறையவே இல்லை.

அந்த வகையில் எனக்கு சென்ற வாரம் நல்ல வேட்டை. விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, தமிழ்படம் என்று மூன்று சி டிக்கள்.

கோவா பாடல்களில் முதல் பாடல் மாஸ் ஹிட்டாகப்போவது உறுதி. ‘ஏழேழு தலைமுறைக்கும்’ என்று ஆரம்பிக்கும்போதே அடி அமர்க்களப்படுத்துகிறார் யுவன். இது அவர்களின் குடும்பப்பாடலாக ஒலிக்கிறது. ஒரே ராஜா வீட்டுப் புராணம்தான். தவிரவும், யுவன் மட்டும் ‘ஏலேலு தலைமுறைக்கும்’ என்கிறார். (சி டி கவரிலும் YEZHEZHU என்று போடாமல் YELELU என்றுதான் போட்டிருக்கிறார்கள்.) கோவாவில் இளையராஜாவை அப்படியே ஃபாலோ செய்திருக்கிறார். தீம் சாங்கில் மட்டும் யுவன் டச்.

விண்ணைத்தாண்டி வருவாயா - எல்லாராலும் எதிர்பார்கப்பட்ட ஹோசானா - மாஸ் பீஸ். பாடலின் ஆரம்பவரிகளில் தாமரை இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே!”

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று சுவாரஸ்யமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அவனுக்கு எப்படி இரண்டு இதயங்கள்? அவளுடைய இதயத்தையும் சேர்த்து இரண்டா? இப்படி அப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

மற்ற பாடல்களில் ஓமனப் பெண்ணே பிடித்தது.

Dark Horse என்பார்களே.. அப்படி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தந்தது தமிழ்படம் பாடல்கள். இசை கண்ணன் என்று ஒருவர்.

‘பச்ச மஞ்ச கருப்புத்தமிழன் நான்’ என்றொரு ஹீரோ இண்ட்ரோ சாங்.

‘சுனாமியின் பினாமியே

குள்ளநரிகளை ஒழிக்க வந்த நல்ல நரியே
கன்னி கழியாத கவர்ச்சிக் கண்ணனே
நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்
ஒரப்பனுக்குப் பிறந்த ஆம்பளை’ என்று ஆரம்பமே படு அமர்க்கள்ம்.

‘ஆஸ்கார் எல்லாம் எனக்கு அம்பாசிடர் காருடா
ஸ்லம்டாக் கூட எனக்கு சப்ப மேட்டர்டா’ -
வரிகள் ஒவ்வொன்றும் அதிரடி. இந்தப் பாடலைக் கேட்டபின் யாரும் தன்னை பச்சைத்தமிழன் என்று பறைசாற்றிக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

வரிகளைக் கூர்ந்து கவனிக்கும் என் போன்றவர்களுக்கு ஜாக்பாட் ஹரிஹரன், ஸ்வேதா மோகனுடன் சேர்ந்து பாடியுள்ள ‘ஓ மகஸீயா’ பாடல். இத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை ஒட்டுமொத்தமாக ஒரே பாடலில் கடந்த வருடங்களில் நான் கேட்டதேயில்லை. பாடல் எழுதியவர் என்று அமுதன் & சந்துரு என்று பெயர் போட்டிருக்கிறார்கள்! எத்தனை சிரமப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் தெரிகிறது. அற்புதமான மெலடி! அதுவும் ஹரிஹரன் அவ்வளவு சிரத்தையுடன் இதைப் பாடுகையில்... கலக்கல்!

ஐட்டம் சாங்கான ‘குத்துவிளக்கு’ பாண்டி படத்தின் ‘குத்துமதிப்பா’வின் நோட்ஸ்களோடு ஒத்துப் போயிருக்கிறது. அடுத்த பாடலான ‘ஒரு சூறாவளி கிளம்பியதே’ சபதப்பாடல். எப்படித்தான் சங்கர் மகாதேவன் சிரிக்காமல் பாடினாரோ என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. ஜனவரி 29க்காக காத்திருக்கிறேன். அன்றுதான் படம் ரிலீஸாம்.

ஆஃபீஸுக்கு லீவு போட்டுவிட்டுப் பார்த்தாலும் பார்ப்பேன். அவ்வளவு ஆவலாய் இருக்கிறேன்.

******************************


பொங்கல் விடுமுறைக்கு மதுரை-திருச்செந்தூர் பயணித்தேன். (நன்றி: சீனா ஐயா) மதுரையில் இருந்தபோது சூரிய கிரகணத்தால் கோவில்களுக்கு விடுமுறை. வீதிகளில் அங்கங்கே CM அழகிரிக்கு வாழ்த்து போஸ்டர்கள். (பக்கத்தில் சென்றபோதுதான் அது Chemical Minister என்று தெரிந்தது) மதுரையில் திருமலைநாயக்கர் மஹால் சென்றேன். சென்ற முறையை விட அதி சுத்தமாக இருந்தது.

மதுரை டூ திருச்செந்தூர். நெல்லைக்கு அப்புறம் திருச்செந்தூர் வரை சாலையில் இருபக்கமும் பசுமை கண்ணைக் கொள்ளை கொள்கிறது.

திருச்செந்தூர். கோவிலில் ஒரு பாதுகாப்புமில்லை. நிறைய பேர் க்ளாக் ரூமைப் பயன்படுத்தாமல் தாங்கள் கொண்டு வந்த சூட்கேஸ், பேக்குகள் சகிதம் ஆலயத்தினுள் பிரவேசித்துக் கொண்டிருந்தனர். சுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்ளேயும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் இருந்தது. திடீரென்று பத்து பேரை நடுவில் ராஜமரியாதையோடு கொண்டு சென்றார்கள். திடீரென்று லைனில் நிற்பவர்களை பின்னுக்குத் தள்ளினார்கள். ஒரு வரைமுறையோ, மண்ணாங்கட்டியோ எதுவுமே இல்லை. பத்து லட்சம் கொடுத்தால் ஒரு மணி நேரம் சிலையை வைத்துக் கொண்டு பீச்சில் விளையாடிவிட்டு வரலாம் என்று அறிவிக்காத குறை.


எனக்கு கடல் அருகில் இருப்பதால் திருச்செந்தூர் பிடிக்கும்.

திருச்செந்தூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, ஆதியை அழைத்தேன். ‘வர்ற வழில வனத் திருப்பதின்னு ஒரு கோயில் இருக்கு மிஸ் பண்ணீடாதீங்க’ என்றார். தேடிப் பிடித்து போனேன்.










கோவிலுக்கு முன்னால் செல்லும்போதே காரை நிறுத்திய செக்யூரிடி அலுவலர் ஒருவர் கார் நம்பரைக் குறித்துக் கொண்டு, நிறுத்த இடம் தேடி விசிலடித்து பார்க் செய்ய உதவுகிறார். நீஈஈஈஈஈளமான க்யூ. ஆனால் அமைதியாக வரிசையாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு குப்பை இல்லை. சத்தம் இல்லை. நேரமின்மையால் கோயிலுக்குள் செல்லவில்லை. ஆனால் ஊழியர்கள் எல்லாரையும் அமைதியாக வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். பொதுமக்களும் சீரான இடைவெளியில் சென்று கொண்டே இருந்தார்கள். தரிசனம் முடித்து வெளிவரும் எல்லாருக்கும் அன்னதானம். இவ்வளவு நேர்த்தியாய் இருப்பதுதான் தனியார் வசம் கோயில்கள் இருப்பதன் சிறப்பு என நினைத்துக் கொண்டேன்.

“உள்ள உண்டியல்கூட இல்ல” என்று பேசிக்கொள்வது கேட்டது.

விசாரித்தேன். யாரிடமும் நன்கொடை வாங்குவதில்லையாம். தனியார் நடத்தும் கோயிலான இங்கு எல்லா செலவும் அவர்தான் செய்கிறாராம். 2009 ஜூன் அல்லது ஜூலைதான் கும்பாபிஷேகம் நடந்ததாம்.

யாரென்று கேட்டேன். சொன்னார்கள்.

“சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்”


**************************************

போகும் வழியில் (ஜனவரி 16 அன்று) பார்த்தேன் இந்தப் போஸ்டரை. டிசம்பர் 18 ரிலீஸான இந்தப்படம் ஜனவரி 16 அன்று 40 நாட்களைத் தொட்டிருக்கிறது. சபாஷ்!





‘காலத்தை வென்றவன் நீ’ என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடலாம்.

‘இதைப்போய் வேலை மெனக்கெட்டு ரோட்ல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு..’ என்று உமா திட்டினார்.

இன்று காலை அண்ணாச்சி (மேல சொன்ன அண்ணாச்சி இல்ல, நம்ம அண்ணாச்சி வடகரைவேலன்) மெயிலில் என்ன கொடுமை இது?’ என்று கோவையில் எடுத்த இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார்!




ஒண்ணும் தப்பில்லைங்கறேன்...


.

Monday, January 18, 2010

குட்டி – திரை விமர்சனம்




தான் காதலிக்கும் பெண் தன்னைக் காதலிக்காவிட்டால் காதலன் என்ன செய்வான்?

அமைச்சரின் மகன் அர்ஜூன்(புதுமுகம் தியான்) மேலிருந்து கீழே குதிப்பேன் என்கிறான். கீதாவும் (ஸ்ரேயா – ஸாரி – ஸ்ரியா) ஐ லவ் யூ சொல்லிவிடுகிறாள். ஆனால் குட்டி (தனுஷ்) அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் தன் காதலைத் தொடர்கிறான்.

இடையில் குட்டியால் எரிச்சலடையும் அமைச்சர் மகன், அவனை மிரட்ட ‘நான் என்ன பண்ணினா உனக்கென்ன? உன் லவ் மேல உனக்கு நம்பிக்கையில்லா’ என்று கேள்விகேட்டு, அவன் வாயை அடைத்துவிடுகிறான் குட்டி. ‘அன்போ, வெறுப்போ ஏதோவொரு வழியில் என் காதலை நீ உணர்ந்தால் அதுபோதுமெனக்கு’ என்று கீதாவிடம் சொல்கிறான்.

இறுதிவரை அவர்களோடே திரியும் குட்டியின் காதல் என்னவானது, கீதாவிற்கு அவன்மீது ஏதாவது FEEL வந்ததா என்பதைச் சொல்லும் படம்தான் குட்டி.


இது தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆர்யாவின் ரீ மேக் என்றார்கள். ‘ரீ மேக் எல்லாம் ஓகேங்க.. அதுக்காக அதே சைக்கிள், அதே WRIST BAND எல்லாத்தையும் கேட்டு வாங்கீட்டு வர்றதா?’ என்றார் நர்சிம். நான் இதன் மூலத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அந்த அமைச்சர் மகன், ஸ்ரியா எல்லாருமே வசனத்துக்கு லிப் சின்க் ஆகாமல் பேசுவதும், பாடல்களில் தெறிக்கும் தெலுங்கிசையும் டப்பிங்கா, ரீமேக்கா என்று யோசிக்க வைக்கிறது.

ஸ்ரியா, தான் காதலிக்கிறோமா இல்லையா என்ற குழப்பத்திலேயே படம் முழுவதும் இருக்கிறார் என்பதை அவர் நடிப்பின் மூலம் காட்டிக் கொள்கிறார். அமைதியான நடிப்பு. புதுமுகம் தியான் தனுஷுக்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறாரென்றாலும், ஒரு சில இடங்களில் தன் காதலை இவன் ஜெயித்து விடுவானோ என்று பதைபதைப்பதை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறார்.

படம் முழுவதும் வியாபித்து பின்னி பெடலெடுத்திருக்கிறார் தனுஷ்.



இந்த மாதிரி கேரக்டரென்றால் மனுஷன் ஜஸ்ட் லைக் தட் அநாயாசமாகச் செய்துவிடுகிறார். ஊரிலிருந்து திரும்பி வந்த அர்ஜுன் நண்பர்களோடு சேர்ந்து மிரட்ட வரும்போது, பேசியே அவர்களை சமாளிப்பதாகட்டும், காம்படிடர் தியானை ‘பாஸ்’ என்று அழைப்பதாகட்டும், எம்.பி. ராதாரவியின் வீட்டில் சென்று அவரிடம் சரிக்கு சமமாக பேசுவதாகட்டும் எல்லா இடங்களிலும் தனுஷ் சபாஷ் வாங்குகிறார். அதில் அதிகபட்ச க்ளாப்ஸ் திருமண கோலத்தில் இருக்கும் ஸ்ரியாவுடன் அவர் பேசும் காட்சி.


தியானின் நண்பனாக வரும் ஸ்ரீநாத்தின் காமெடி ரசிக்க வைக்கிறது. போலவே அவருடன் வரும் அந்த குண்டு மொட்டை கேரக்டரும். (நான் சொன்னேன்ல?) ‘காமெடி டைம்’ ஆர்த்திக்கு தனுஷின் நண்பன் (ஆமாம், நண்பன்!) கேரக்டர். அவருக்கும் இது ஒரு நல்ல படம்.

இசை – தெலுங்கு வாடை அதிகம். ஆனால் திரையில் நெளிய வைக்கவோ, கேண்டீன் போகவோ தேவையில்லாமல் உட்கார வைக்கிறது. அது போதுமே.


சரியான மாஸ் ஸ்டோரி. அதற்கான அழகான வசனங்கள். நிறைவான பாத்திரங்கள். இவையிருக்கும் ஒரு படம் மக்களைக் கவராமல் போகுமா என்ன?

குட்டி – கெட்டி!


.

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்



நேற்றைக்கு மதியம் வரை ரிலீஸா, இல்லையா என்று எல்லாரையும் எதிர்பார்ப்பில் வைத்திருந்து, ரிலீஸாகிவிட்டது - ஆயிரத்தில் ஒருவன்.

*******

பண்டைய சோழர் காலத்து மன்னன் ஒருவன் பாண்டிய மன்னர்களுடனான போரின்போது தன் மகனை (இளவரசனை) ஒருவரிடம் கொடுத்து, எத்தனை ஆண்டுகாலமாயினும் இவனைக் காப்பது உன் பொறுப்பு’’ என்றுவிட்டுப் போகிறான்.

------------டைட்டில்---------------

பண்டைய சோழர்கள் இருந்த இடத்தைத் தேடிச் செல்லும் அகழ்வாராய்ச்சியாளர் பிரதாப் போத்தனைக் காணவில்லை. அவரைத் தேடும் குழுவின் தலைமையாய் ரீமாசென் பலத்த பாதுகாப்போடு கிளம்புகிறார். கூடவே பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவையும் (அவரும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிலிருக்கிறார்) அழைத்துச் செல்கிறார். வியட்நாம் அருகே இருக்கும் அந்த இடத்திற்கு கப்பலில் செல்லும்போது உதவியாளர்களார் கார்த்தி தலைமையிலான கோஷ்டி வருகிறது.



கப்பலிலிருந்து மாறி, இவர்கள் செல்லும் படகு ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் படகோட்டிகள் எத்தனை கொடுத்தாலும் இதற்கு மேல் வரமுடியாது என்று போய்விட, இவர்களே படகைச் செலுத்தி கரை நோக்கி செல்கிறார்கள்.

கரையை அடையுமுன்னே, கடலிலிருந்து வரும் ஒரு ஜந்து இவர்களை சாரமாரியாகத் தாக்க, பலர் மடிந்து விழ.. போகுமிடத்தின் விபரீதம் புரிய ஆரம்பிக்கிறது.

ஓலைச்சுவடியின் செய்தி மூலம், அந்த இடத்தை அடையுமுன் இதுபோன்ற ஏழு தடங்கல்களை இவர்கள் கடக்க வேண்டும் என்றறிகிறார் ஆண்ட்ரியா. பலவித சிக்கல்களுக்குப் பிறகு, கடந்து சோழர்கள் இருந்த இடத்தை கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா அடைகிறார்கள்.

அங்கே...

அந்த சோழர் பரம்பரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

அதன்பிறகு என்ன நடந்தது.. தஞ்சை மண்ணைத் தொட வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாய் காத்திருந்த அந்த சோழர்கள் ஆசை நிறைவேறியதா என்பதையெல்லாம் திரையில் கண்டு களியுங்கள்.


கொஞ்சம் சிக்கலான திரைக்கதையால் பலருக்கும் புரியாத வண்ணம் இருப்பதுதான் படத்தின் மைனஸ். அதுவும் படத்தில் பல இடங்களில் பின்நவீனத்துவம் புகுந்து விளையாடியிருகிறது!

படத்தின் ஹீரோ சத்தியமாக ரீமா சென்தான்! கார்த்திக்கு வேலையே இல்லை. படத்தில் ஹெல்பர் கேரக்டரில் வருகிறார். அவர் வேலையும் படத்தில் அது்தான். ஹீரோவாச்சே என்று கடைசியில் அவரை சோழர்களைக் காக்க வந்த தூதுவராய்க் காட்டியிருக்கிறார்கள்.



ரீமா சென். ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா மாதிரி ரீமாவுக்கு ஆயிரத்தில் ஒருவன். எந்த நடிகையும் நடிக்கத் தயங்கும் பல காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரதாப் போத்தனைக் கண்டுபிடிக்க இவர் ஏன் பிரயத்தனப்படுகிறாரென்று பார்த்தால், இவர் சோழர்களைப் பழிவாங்க வந்த பாண்டிய வம்சத்தவர்!





மன்னர் பார்த்திபன் (ஆம். ஆர். பார்த்திபன்) & கார்த்தி தலைமையில் சோழர்களுக்கும், அதிரடிப்படைக்கும் நடக்கும் போர் - தமிழ்சினிமாவிற்கு புதுசு. அந்தப் போர் முறையும், அதைப் படமாக்கிய விதமும் - ராம்ஜியின் கேமராவுக்கு வாழ்த்துகள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்ற இருவர்: காஸ்ட்யூம் டிசைனர் இரம் அலி. ஆர்ட் டைரக்டர் சந்தானம். பண்டைய காலம், பண்டைய காலத்தவர்கள் இன்று வாழும் இடம் எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சோழர்கால ஒவியம் மூலம் நடப்பதை கண்டறியும் யுத்தியும் அபாரம்.

இசை:- வழக்கமாய் யுவனோடு கைகோர்க்கும் இவர், இப்போது ஜீ.வி.ப்ரகாஷ்குமாரோடு கைகோர்த்திருக்கிறார். ‘ப்ரகாஷா? செல்வராகவன் படத்துக்கா?’ என்று கேட்டவர்களை ஏற்கனவே சிறப்பான பாடல்களால் வாயடைத்தார். படத்தில் நில்லாடிய சபையெங்கே என்று பார்த்திபன் பாட, ஒரு மாதிரி நெஞ்சையடைக்கிறது.

பிடிபட்ட சோழ மக்களை அதிரடிப்படை கொடுமைப்படுத்துவதும், பார்த்திபனின் பாத்திரப்படைப்பும் இலங்கைத் தமிழர் நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. :-(

தயவு செய்து குழந்தைகளோடு பார்க்காதீர்கள். இது அவர்களுக்கான படமல்ல. அதேபோல சில பெண்களும் படத்தை வெறுக்கக் கூடும்.


ஆயிரத்தில் ஒருவன் - நூற்றில் ஒரு படம்!



.

Monday, January 11, 2010

அவியல் 11.01.2010

‘கிரேஸி’ கிரி! ஜோதிட நம்பிக்கைகள் மீது நிறைய கேள்விகளை வைத்திருப்பவன். அவனது அம்மாவுடன் ஊருக்குச் சென்றிருந்தபோது, அவரது வற்புறுத்தலில் ஒரு ஜோதிடரைக் காணச் செல்கிறான். ‘இன்னும் வரன் அமையலை’ என்பதே குறை. அந்த ஜோதிடர் சில பல ஆராய்தல்களுக்குப் பின் சொல்கிறார். ‘கஷ்டகாலமா இருக்கு. அதான் இப்படி. பரிகாரம் பண்ணனும். 15000 ஆகும்’ என்கிறார். இவனது அம்மா அப்பாவியாய் ‘ஒரு அஞ்சு ரூபாய்ல முடிக்கக் கூடாதாங்க?’ என்று கேட்கிறார். ஜோதிடர் மறுபடி ‘கஷ்டகாலம்னு சொன்னேன்ல? ஐயாயிரத்துலயெல்லாம் முடிக்க முடியாது’ என்று மறுக்கிறார்.

கிரி கேட்டானாம்: “கஷ்டகாலம் உங்களுக்கா எனக்கா சாமீ?”

**********************************

சல் பாடல்கள். வரிகள் முழுதும் வைரமுத்து. நாயகன் துதிப்பாடலில் (காற்றை நிறுத்திக் கேளு) ‘நண்பரை மன்னித்தழுவான்’ என்று வருகிறது ஒரு வரி. மன்னித்ததிற்கெதற்கு அழவேண்டுமென்று தெரியவில்லை. சுனிதா மேனனின் குரல், மாடுலேஷன் எல்லாமே 007-ன் கோல்டன் ஐ பாடலை நினைவுபடுத்துகிறது. கேட்க சுகமாய்த்தான் இருக்கிறது. அதேபோல ‘அதிரிபுதிரி பண்ணிக்கடா’ பாடலின் ‘டொட்டொடய்ங்’ கமீனே-வின் ‘ஆஜா ஆஜா தில் ச்சோடே’ பாடலின் ‘டண்டடாய்ங் டடடாய்ங்’வை நினைவு படுத்துகிறது. பரத்வாஜ் இந்திப் பாடல்களின் ரசிகர் என்பது அவரது முந்தைய படப் பாடல்களிலும் தெரியும்.

படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் - ஷமீராவுக்காகவும்.

**************************************

சில விளம்பரங்கள். ஒரு வயதானவர் கேரம் விளையாடுகிறார். இந்தப் புறமிருந்து ஸ்ட்ரைக்கரைச் சுண்டி விட்டு மறுபடி அந்தப் புறம் சென்றமர்ந்து அவரே விளையாடுகிறார். மறுபடி இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று ஒருவரே இருவருக்குமான ஆட்டத்தை ஆடுகிறார்.

விளம்பரம் சொல்கிறது: SILENCE IS NOT ALWAYS GOLD என்றுவிட்டு ‘உங்கள் பழைய மொபைல்களை முதியோர் இல்லங்களுக்கு பரிசளியுங்களேன்’ என்கிறது. அவர்கள் தனிமையை மறந்து நண்பர்களுடன் பேசவாவது செய்யலாமே. ஏர்செல்லின் விளம்பரம் இது.

இன்னொன்று: கண்பார்வையற்ற முதியவர் ஒருவர் ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருக்கிறார். எதற்கோ எழப்போனவர் ரேடியோவைத் தட்டிவிடுகிறார். கீழே விழுந்து பழுதாகிவிடுகிறது ரேடியோ. சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த அபார்ட்மெண்டின் இரு இளைஞர்களிடம் ‘என்னாச்சு’ என்று கேட்கிறார் தாத்தா. ‘ஒன்றுமில்லை’ என்ற ஒரு இளைஞன் அவனாகவே கமெண்ட்ரி சொல்ல ஆரம்பிக்கிறான். தொண்டை கரகரக்கிறது. நிறுத்துகிறான். மறுபடி தாத்தாவிடமிருந்து ‘என்னாச்சு’ கேள்வி. ‘விளம்பரம்க’ என்ற மற்றொரு இளைஞன் விக்ஸ் மாத்திரையைக் கொடுத்துக் கொண்டே விக்ஸுக்குண்டான விளம்பரப் பாடலைப் பாடுகிறான். மாத்திரை சாப்பிட்ட பிறகு இன்னும் பலமாக கமெண்ட்ரியைத் தொடர்கிறான் இவன். அபார்ட்மெண்டே கூடிநின்று க்ரிக்கெட் க்ரவுண்ட் ஆடியன்ஸ் போல கூக்குரலிடுகிறது. சச்சின் பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றி என்று முடித்துவிட்டு ‘வரேன் தாத்தா’ என்று கிளம்புகிறான் இளைஞன். வாசலை நெருங்கும் அவனிடம் சொல்கிறார் தாத்தா: “தம்பி... நியூஸ் வெச்சுட்டுப் போப்பா”

விக்ஸ் விளம்பரம்.

********************************

பொங்கல் ரிலீஸ்களில் ஆயிரத்தில் ஒருவன் டாப் எக்ஸ்பெக்டேஷனில் இருக்கிறதென்றாலும் பலபேர்களோடு பேசியதில் ‘போர்க்களம்’ சைலண்டாக பலரை கவர்ந்திருக்கிறதென்பது தெரிகிறது. எனக்கு இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமும் ஆயிரத்தில் ஒருவனுக்கு நிகரான ஆர்வத்தைத் தருகிறது. கார்ட்டூன் காலத்திலிருந்து சிம்புதேவனின் ரசிகன் நான். கௌபாய் காலத்துப் படம்.

ஆடியோ சி டி கவர் பார்த்தீர்களா?

***************************

பிரபல குறும்பட இயக்குனரும் பதிவருமான ஆதிமூலகிருஷ்ணன் திருப்பூர் வந்திருந்தார். சனிக்கிழமை இரவு வந்தவருடன் நீண்ட நேரம் நண்பர்கள் உரையாடினோம்.

வெயிலான் போல ஆதியும் அதிகம் பேசாமல் அதிகம் கவனிப்பவர். அதேபோல செல்வேந்திரனிடமும், ஆதியிடமும் நான் வியக்கும் விஷயம்: இவர்கள் இருவரும் பேசுவது அப்படியே எழுதும் வடிவிலேயே இருக்கும். கொஞ்சமாக ஆனால் தீர்க்கமாகப் பேசுவது ஆதியிடம் நான் ரசிக்கும் அம்சம்.

அதே போல ஆதி ஒரு புகைப்படம் எடுக்க, எடுத்துக் கொள்ளும் (வாக்கியம் கரெக்டா?) சிரமங்களை குறும்படமாக எடுக்கலாம். (கேபிள் சங்கர்ஜி: நோட் திஸ் பாய்ண்ட். நீங்க பண்ணலாம்)

எங்களை புகைப்படம் எடுக்க அவர் மேற்கொண்ட வித்தைகளைப் பாருங்கள். கடைசிப் புகைப்படத்தில் அவர் நினைத்த ரிசல்ட் கிடைத்ததென்பதை அவர் புன்னகை சொல்லும்.







ஆதியுடனான சந்திப்பின்போது எங்களைக் கவர்ந்தவர்கள் இருவர். ஈரோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் பூபதி. திருப்பூர் பதிவர் பேரரசன் செந்திலின் தம்பி தினேஷ். இருவருமே வலைப்பதிவராகக் கூடிய அத்தனைத் தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தினேஷ் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டாரென நினைக்கிறேன். சந்திப்பில் அவர் கேட்ட ஒரு கேள்வி, கேள்வியை விட அவர் கேட்ட விதத்தில் எல்லாரையும் கவர்ந்தது. (ஐ ஏ எஸ் தேர்வுகளுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பணியை இவருக்குக் கொடுக்கலாம்.)

பூபதி போன்ற உற்சாகமான மனிதரை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை. பார்த்த மாத்திரத்தில் நண்பராகிறார் எல்லோரிடமும். இவருடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கலந்துரையாடி பதிவிட இருக்கிறேன். வெய்ட்டீஸ்ஸ்ஸ்....

அடுத்தநாள் பூபதி இரண்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார். ஒன்று ஏ ரகம். அப்புறம் சொல்கிறேன். இன்னொன்று ஆஹா ரகம்.

அதாவது ஹெல்மெட்டின் முக்கியத்துவத்திற்காக அசத்தலான விளம்பர ஐடியா என்று ஒன்று அனுப்பிருந்தார். விநாயகர் படத்தைப் போட்டு அருகில் வாசகம்:


“உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்குமே என்னைப் போல Replacement கிடைக்காது”

************************************

இந்த (சென்ற?) வருடத்தின் புத்தகக் கண்காட்சி நிறைவடைந்துவிட்டது. நண்பர்கள் அழைப்பால் எல்லா நாளும் நானும் அங்கிருந்தேன்.

இனி யாரிடமிருந்தும் பா.ராவைப் பார்த்தேன். எஸ்.ராவைப் பார்த்தேன், பஜ்ஜி சாப்ட்டேன், அதை வாங்கினேன் இதை வாங்கினேன் பதிவுகளை எதிர்பார்க்க முடியாது. பு.கா.பதிவுகளில் டாப் ஜ்யோவ்ராம் சுந்தருடையது. அவர் எழுதியதால் மட்டுமே அது டாப். அதையே நான் எழுதியிருந்தால் ‘ஏதோ ஒண்ணு குறையுதே’ என்றிருப்பார்கள். ஒருவிதமான பகடிப் பதிவு அது!

நிற்க.

ஏழுகோடி புத்தகங்கள் விற்பனை என்கிறார்கள். பிரமிப்பாய் இருந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் வாங்கியதான கணக்கு.

என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?


.

Wednesday, January 6, 2010

கிஸ்..... கிஸ்.........





தியைக் கொண்டாடும் பதிவரது அலுவலகத்தில் மாதாந்திரக் கொண்டாட்டத்தின் போது இந்தப் பதிவர் பரிந்துரைத்த விளையாட்டு என்ன தெரியுமா?

அவர் அடிக்கடி கலாய்க்கும் கவிஞரின் கவிதையைக் கொடுத்து ‘இதற்கு உங்களுக்குத் தெரிந்த பொழிப்புரை தாருங்கள்’ என்பதுதானாம்.

மிகவும் கிண்டலானதாக அந்த செஷன் போகுமென்று எதிர்பார்த்தவருக்கு ஏக அதிர்ச்சி!


அவர்கள் வியந்து, பல கோணங்களில் அந்தக் கவிதையை அர்த்தங்கள் பல சொல்லிப் பாராட்ட.. அசடு வழிந்தாராம் இவர்!

*****************************

திவுலகில் தீவிரமாக ‘இருந்த’ அந்த மூன்றெழுத்து பதிவருக்கு விரைவில் டும்டும். தனது சொந்த ஊருக்கும் தலைநகருக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறாராம். இடையில் பத்திரிகை அசைன்மெண்டுக்காக வேறொரு ஊர் என்று வேறு அலைச்சலாம்.

ஆகட்டும்டா தம்பி ராசா........

************************************

2010ல் கொஞ்சமாவது உயரத்துக்குப் போவாய் என நண்பர்கள் வாழ்த்தியதில் சந்தோஷமாய் இருந்த பதிவருக்கு ஒரு நற்செய்தி வந்ததை அந்த வாழ்த்துக்களோடு ஒப்பிட்டு ‘உயரத்துக்கு போய்ட்டேன்ல’ என்கிறாராம் அவர்.

ஆம். 2வது ஃப்ளாட்டிலிருந்த சிங்கிள் பெட்ரூம் வீட்டை காலி செய்து மூன்றாவது ஃப்ளாட்டிலிருக்கும் டபுள் பெட்ரூமுக்கு குடிபோகிறாராம்!

உயரம்!

************************

யர் பதிவர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்... ஒரு மார்க்கமான தலைப்பில் அவரது கதைகள் பதிப்பாக வரவிருக்கின்றன. அதுவல்ல அவரது சந்தோஷத்துக்கு காரணம்.. தனது நண்பர் கதைகளையும் சிபாரிசு செய்து அவருக்கு உதவியிருப்பதுதான் தனக்கு மகிழ்ச்சி என்கிறார். அவருக்கிருக்கும் ஒரே குழப்பம்:

என்ன பெயரில் எழுத என்பதுதானாம்.


வெட்கப்படாதீங்க பாஸு.. உங்க பேர்லயே போடுங்க!


****************************************

திருப்பூர்/ஈரோட்டைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் வலைப்பதிவர் குழுமம்/பேரவை என்று ஆரம்ப அமர்க்களங்கள் களை கட்டுகிறதாம்.

முத்தாய்ப்பான செய்தி என்னவென்றால் வெகுநாள் முன்பு திமுகவிலிருந்து பிரிந்த கட்சி தலைவரைத் திருப்பிப்போட்ட ஊரில் சங்கத்திற்கு தலைவர் இல்லையாம். தலைவியாம். சங்கத்தின் முக்கியமான மூன்று பொறுப்புகளையும் அந்தத் தலைவி வீட்டுப் பெண்களே ஆக்ரமிக்கிறார்களாம்.

பணக்காரதேவர்தலைவன் சொன்ன சேதி இது!


*********************************
க ஏமாற்றத்தில் இருக்கிறார் அந்த பதிவர். தோழரின் ஃப்ளவர் புக்ஸ் தொகுப்பில் தனது படைப்பு இல்லையென்று.

‘குடுத்திருக்கலாம்ல’ என்று நண்பர் கேட்டதுக்கு ‘என்னோடதை வேற யாராவது பரிந்துரைப்பாங்கன்னு விட்டுட்டேன்’ என்கிறாராம்.

கான்ஃபிடென்ஸ் ஓகே... ஓவர் கான்ஃபிடென்ஸ் ஒடம்புக்கு ஆகாது மாப்ளே!

*****************************************

பிரச்சினைகளென்றால் தீர்க்கும் அந்தப் பதிவர் தனது நண்பரின் பிரச்சினையைத் தூக்கிக் கொண்டுவந்து பொதுவில் வைத்து நண்பர்களோடு வைத்து விவாதித்தபோது கிடைத்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், ஆரோக்கியமான கருத்து மோதல்களும் அவரை மிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியதாம்.

‘ரொம்பவும் பிரமிப்பாவும் பெருமையாவும் இருக்குப்பா நம்ம நண்பர்களை நெனைச்சா’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!

*****************************************

ரம்பப்பதிவர் கருப்புடையூருக்கு விஜயம் செய்கிறாராம். ‘நண்பனைப் பார்க்க’ என்று சொல்லப்பட்டாலும் வேறெதும் சர்ப்ரைஸ் இருக்கிறதா என வலையுளவுத் துறை கண்கொத்திப் பாம்பாய் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதாம்! இதற்கு நடுவில் இங்கே வா, அங்கே வா என்று ஏகப்பட்ட அழைப்புகளால் குழம்பிப் போயிருக்கிறாராம். இரண்டு நாளில் எங்கெங்கே செல்ல என்று.


இங்க வராமப் போனீங்க...... அவ்ளோதான்!

***************************************

ண்பர்களுக்கு இடையே இருந்த மின்னஞ்சல் குழுவிலிருந்து சிலசிறு சங்கடங்களால் பிரிந்துபோன அவரும், அவனும் மீண்டும் குழுவில் இணைந்ததில் குழுவே கலகலப்பாக இருக்கிறதாம். 2010ன் மகிழ்ச்சியான செய்தி அது என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.

இருந்தாலும் இவனழைத்து வராத அவன், சுவைப்பதிவர் அழைத்ததும் வந்ததேன் என விசாரணை நடக்கிறதாம்.

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா...

********************************

‘சும்மா வெளையாட்டா ஆரம்பிச்சேன் விளம்பரத்தை’ என்று ஆரம்பத்தில் சொன்ன அவர் இப்போது விளம்பரக் கட்டணத்தை உயர்த்துமளவு அதற்கு வரவேற்பு என்பதில் மகிழ்சியோடிருக்கிறார். சமீபத்தில் அழைத்து கேட்ட கஸ்டமருக்கு முன்பைவிட இருமடங்கு என கட்டணம் சொல்ல ‘அவ்ளோதானா.. ஓகே’ என அவர் சொல்லவும்.. துள்ளிக் குதித்தாராம் இவர்!

இப்போது தன் நண்பர்களையும் அழைத்து ‘வெளம்பரத்தைப் போடுங்க மச்சான்ஸ்’ என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிறாராம்.

நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...


***************************



.

Monday, January 4, 2010

அளவில்லா அன்போடு...



தூரத்தில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்க, செய்யும் வேலைக்கு துரோகமாக வேலை நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்தக் கடிதத்தை.

பழைய ஞாபகங்கள் விடாமல் துரத்துகின்றன வெயிலைத் துரத்தும் நிழலாய்.

ஒரு கதையோ, எதுவோ எழுத எழுதப்படாத நாட்குறிப்பு எடுத்து, எழுதிப் படித்து, படித்து எழுதி, அடித்துத் திருத்தி மறுபடி எழுதி ஒரே அமர்வில் நான்குமுறை அதை கூறுபோட்டு மனதிலேயே லே அவுட் அமைத்து முடித்து நாடார் கடைக்குச் சென்று பேப்பர் வாங்கி கோடு போடாமல் மார்ஜின் மடக்காமல் வைத்து -ஆனாலும் நேராக- ஒவ்வொரு பத்தியின் ஆரம்ப வரிகளை நீலத்திலும் மீதமுள்ளதை கருப்பிலும் வித்தியாசப் படுத்தி எழுதி, படித்துப் பார்த்து கவருக்குள் போட்டு அனுப்பி முடித்துக் கொண்டிருந்தாய்.

இப்போது இந்தக் கடிதத்தை எம்மெஸ் வேர்டில் தட்டச்சிக் கொண்டிருக்கிறாய். தவறுகள் எதுவும் வந்தால் Back Space. வண்ணம் கொடுக்க Text Color Editor. அது மட்டுமில்லாமல் Margin, Header, Footer, Page Layout என்று எல்லாவற்றிற்கும் பில்கேட்ஸ் துணைக்கு வருகிறார். இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று புலம்புகிறாய். அது உன் எழுத்தின் உயரமென்பதை அறியாதவனாய்.

ஞாபகமிருக்கிறதா உனக்கு? ஒரு பத்திரிகை அந்த மாதத்தின் சிறப்பு வாசகராய் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், ஆகவே வாசகர்கள் அதிலுள்ள கூப்பனில் பெயர் விலாசமெழுதி அனுப்பச் சொல்லியும் அறிவித்திருந்தார்கள். குறிப்பிட்ட அந்த வாசகரே கலந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்கு பரிசு. இல்லையேல் கலந்து கொள்பவர்களில் அவர் பெயரைக் கொண்டவருக்குப் பரிசென்று. நீ அதில் கலந்து கொள்ளவில்லை. அடுத்தமாதம் இதழ் வந்தபோதுதான் தெரிந்தது – கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஜெயித்திருந்தார். காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்தது உன்னை. நீ அனுப்பாததால் அந்த கிருஷ்ணகுமாருக்கு பரிசு.

ஏற்கனவே நீ ஒரு சுயதம்பட்டக்காரனென்ற பெயருண்டு. இதைச் சொல்லி அதை உறுதிப்படுத்த இங்கே குறிப்பிடவில்லை. அப்போது இதழில் வெளியான அந்த கிருஷ்ணகுமாரின் முகவரிக்கு நீ ஒரு கடிதமெழுதினாய். அவர் பதிலெழுதினார். பிறகு நீ தொடர்ந்தாய். அவர் அவனாய் மாறி தொடர்ந்தான். எத்தனை கடிதங்கள். எத்தனை பகிர்தல்கள். பிறிதொரு மழை நாளில் பேருந்துகள் சில மாறி அவன் வீடு கண்டுபிடித்து அவனோடு உரையாடி, உண்டு, பேசி மகிழ்ந்து…

இப்போது தொடுதிரை அலைபேசியில் ஒரு விரல் அசைவில் நூறு நண்பர்களை அழைக்கிறாய். கதைக்கிறாய். சிரிக்கிறாய். அழுகிறாய். பாடுகிறாய். படுத்துகிறாய். கேட்கிறாய். வியக்கிறாய். பாராட்டுகிறாய். பாராட்டுப் பெறுகிறாய்.


எதிலும் மேலே இருந்த கடிதங்கள் தந்த அந்நியோன்யத்தை உணர்கிறாயா? ஏன்?

மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஏன் உனக்கு இந்த மகிழ்வைத் தர மறுக்கிறது? நீ மாற்றத்தை ஏற்க மறுக்கிறாயா நண்பா… இல்லை., எல்லோர்க்கும் இப்படித்தானா?

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து செஸ் அல்லது கேரம் எடுத்து தம்பியோடு விளையாடுவாய். ஒரு மணிநேரமோ, இரண்டு மணி நேரமோ ‘வந்து சாப்பிடப் போறீங்களா இல்லையா’ என்ற அன்னையின் விளி கேட்கும் வரை அது தொடரும். பிறகும் அது தொடரும்.

இப்போது அலைபேசியின் அப்ளிகேஷனில் நீயும் அதே விளையாட்டில் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் உன் முகம் தெரியா நண்பனும் மோதிக் கொள்கிறீர்கள். ‘என்ன இருந்தாலும் அந்த மாதிரி இல்லை’ என்று புலம்புகிறாய். உன் வீட்டில் இப்போதும் சதுரங்க அட்டையும், கேரம் போர்டும் இருக்கிறதென்பதை மறந்து.

கோவிலுக்குச் செல்கிறாய். ஆராதனையின் போது ஒலிக்கும் இயந்திர மணியோசை உன்னைக் கொன்றெடுக்கிறது. நீ ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்போதும் அந்த டமடம சத்தம் உன்னை துரத்தியடிக்கிறது. மணியோசை தரும் நாதம் அதிலில்லையே என மனதோடு அழுகிறாய். அதை ஏற்காத உன் மனது கோவிலிலும் இல்லாமல், உன்னிடமும் இல்லாமல் எங்கெங்கோ அலைகிறது.

நீ விட்டு விடுதலையாகி வர வேண்டியது உன் நினைவுகளிலிருந்துதான். இதே கடிதத்தை இப்படி உன் மகளெழுதக்கூடும்: ‘அப்போதெல்லாம் கணினியைத் திறந்து யோசித்து யோசித்து எழுதி அதைத் திரையில் பார்த்து மகிழ்ந்து அனுப்பி பிரசுரித்து.. இப்போது நான் நினைப்பது நினைத்து முடிக்குமுன் எழுத்தில் வருகிறது. அதிலிருந்த உணர்வு இதிலில்லை’ என்று. மாற்றங்களால் ஆனது உலகு.

இன்னும் எத்தனை காலத்திற்குதான் அம்மியில் அரைத்த சுகம் மிக்ஸியில் இல்லை, ஆக்கிப்போடும் சாப்பாட்டுச் சுவை OVEN சமையலில் இல்லை என்றெல்லாம் புலம்பப் போகிறாய்? அவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இனி நீ அவற்றைத் தவிர்க்கவியலாதென்பதும்.



அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். வேறு விமானங்கள். அதே பாதை. வேறு வேறு வாகனங்கள். எல்லாவற்றையும் எப்போதும் எல்லாரும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பா..

ஏற்கத்துவங்கு. புன்னகை தானாய் வரும். எல்லாம் மாறும்.


அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா


.

விஜய்: ரசிகனும் விமர்சகனும்



மீபத்தில் (அல்லது) சென்ற வருடம் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது நான்கைந்து பேர் கொண்ட கொலைவெறிக் கும்பல் ஒன்று “நீ எப்படி வேட்டைக்காரன் பாஸ்ன்னு எழுதலாம்” என்று என்னைத் தாக்க முற்பட்டது குறித்து திரைத்துறையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்க வந்த மற்றொரு நண்பர் (இவரொரு விஜய் ரசிகர் என்பதறிக) அவரோடு உரையாடினார். அந்த உரையாடலின் சிறு பகுதி:-

**************************************

“நானும் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்.. ஒப்பனிங் லைன் மட்டும்தான் சொன்னேன். ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான். ஒரு ஆளு ஊர்லேர்ந்து சென்னைக்கு வந்து பெரிய தாதாகிட்ட அடியாளா சேரணும்னு ட்ரை பண்றான். அவனை காமெடி பீஸாவே எல்லாரும் பார்ப்பாங்க.. ஒரே ஒரு கட்டத்துல, அந்த தாதாவோட குருவா இருக்கறவரை இவன் காப்பாத்தறான். அப்பறம் ரெண்டு தாதா க்ரூப்புக்கும் சண்டை. யாராலன்னு பார்க்கறப்ப, ஹீரோ! க்ளைமாக்ஸ் என்னான்னா, “நீ ரௌடியா இருக்கறதுன்னா இரு. இல்லையா ஒண்ணு நாங்க உன்னை காலி பண்ணீடுவோம், இல்லையா ரெண்டு க்ரூப்ல ஒருத்தர் உன்னைப் போட்டுவாங்க”ன்னு போலீஸ் சொல்லுது. ஹீரோ என்ன முடிவெடுக்கறாங்கறதுதான் க்ளைமாக்ஸ்!” இப்படிதான் ஆரம்பிகிறார் அந்த விமர்சகர் உரையாடலை. எதிரில் விஜய்யின் ரசிகர் இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“இது நான் கண்டுபிடிச்சேன்னு சொல்ல மாட்டேன். பாட்ஷாவோட வேற ட்ரீட்மெண்ட்ல ஆன ஸ்க்ரிப்ட். அவ்ளோதான். ஆனா அதுக்குள்ள ப்ரகாஷ்ராஜ் விஜய்யைப் பார்த்து போக்கிரியைப் பத்தி பேசி, நம்ம கழண்டுக்க வேண்டியதாச்சு” குரலில் வருத்தமில்லாமல் சொல்வதை ரசிகர் ஆர்வமாய்க் கேட்கிறார்.
“விஜய்க்கு தேவை சாதாரண கதைதான். ஆனா பவர்ஃபுல் ஸ்கிர்ப்ட் தேவை. அத ஏன் யாரும் பாக்கறதில்லைன்னுதான் எனக்கு வருத்தம்”

“கரெக்ட் சார். என் வருத்தமும் அதுதான். ஒரு விஜய் ரசிகனா நான் பார்க்கறது என்னான்னா ஒரு படத்துல கதை மத்த மேட்டரெல்லாம் என்னான்னு பார்ப்பேன்.. அப்பறம் விஜய் ரசிகனான எனக்கு அவர் என்ன தர்றாருன்னு பார்ப்பேன்.. அப்படி பிரிச்சுதான் பார்ப்பேன். மத்த படங்களை நான் பார்க்கறதுக்கும் விஜய் படத்தை பார்க்கறதுக்கும் இதுதான் வித்தியாசம்”

“ஆனா ஒண்ணுப்பா... நடிக்கறதுக்குன்னு வந்துட்டா விஜய்யோட டெடிகேஷன் யாராலயும் அடிச்சுக்க முடியாது”

“எப்படிச் சொல்றீங்க?”

“நான் 27 நாள் இருந்தேன். போக்கிரி ஷூட்டிங்க்ல. நானும் நடிக்க போயிருந்தேன். மூணு சீன் நடிச்சும் ஒரு ஃப்ரேம்ல கூட வர்ல அதுவேற விஷயம். ஆனா ஸ்பாட்ல விஜயோட இன்வால்வ்மெண்டும், டெடிகேஷனும் பார்த்து அசந்துட்டேன்.”

“ஆமாமா.. நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி ஆயிரத்தெட்டு குத்தம் குறை சொல்லுவாரு. கௌதம்மேனன் கூட சொல்லிருந்தார். ஆனா ஒத்துகிட்டு ஃபீல்டுக்கு வந்தா ஒரு கேள்வி கேட்காம நடிப்பாராமே?”


“ஆமாமா”

“திருமலை, கில்லி, மதுரை, திருப்பாச்சின்னு கலெக்‌ஷன்ல பெரிய நாலு படம் நடிச்சு அடுத்ததா ச்ச்சின்ல நடிக்கறாரு. அதுல மாஸ் ஹீரோன்னு எதுவும் காமிச்சுக்காம ஜாலியா நடிப்பாரு. வசீகராவுலயே சின்னப்பொண்ணு கால்ல விழுந்தெல்லாம் நடிச்சாரு. அதுமாதிரி விஜய்ட்ட பிடிச்சது அவர் டைரக்டருக்கு கொடுக்கற மரியாதை”

ரசிகர் தொடர, இடை மறிக்கிறார் விமர்சகர்: “மரியாதையெல்லாம் ஒண்ணும் கிடையாது.விஜய் படத்துல டைரக்டர் ஒண்ணும் கிடையாது. விஜய் கோவிச்சுட்டு செட்டை விட்டு போய்ட்டா மொத்தமும் காலி. அந்த பயத்தோடவேதான் வேலை செய்யணும். பிரபுதேவாவே ஒண்ணும் பண்ண முடியாது. விஜய்யை திட்டறதுக்கு பதிலா பக்கத்துல நிக்கறவனைத் திட்டலாம். அவ்ளோதான்”

“மரியாதையே இல்லைன்னா அப்பறம் எப்படி மறுபடி விஜய்கூடவே பண்றாங்க?”

“காசுதான். மத்தவங்க படம்னா 1000ஆ.. விஜய் படம்னா 5000!. பண்ணமாட்டாங்களா?”

“ஆனா என்னதான் கிண்டல் பண்ணினாலும் விஜய் படம் ஓப்பனிங் பிரமிக்க வைக்குதா இல்லையா? 2000ல என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு நாலு ஃப்ளாப்புக்கப்பறம் ‘குஷி’க்கான ஓப்பனிங் எல்லாரையும் பிரமிக்க வெச்சுது. அதே மாதிரி புதிய கீதை, வசீகரா, பகவதி எல்லாம் ஃப்ளாப். திருமலைக்கு சரியான ஓப்பனிங்”

“கரெக்ட்தான். விஜய்யும் அஜீத்தும் இன்னைக்கு டாப் லிஸ்ட்ல இருக்காங்கன்னா எத்தனை ஃப்ளாப் குடுத்தாலும், மொத நாள் ஒப்பனிங் உலகம் பூரா இருக்குங்கறதுதான்”

“ஆமாம். அதுவும் என்கூட முதல்நாள் ஷோ பார்த்துட்டு வெறுத்து வித்தியாசமா விமர்சனம் எழுதினவர், அவரோட மகன் அடம்பிடிச்சான்னு அடுத்த நாளே குடும்பத்தோட போயிருக்காரு. நானும் தனியாப் பார்த்தேன். அடுத்த நாள் என் ரிலேஷன் பையனோட போய்ப் பார்த்தேன். இந்த ஃபேமலி ஆடியன்ஸ் மத்தவங்களுக்கு இல்லைங்கறதுதான் உண்மை. அதுதான் விஜய் படம் நூறு நாள் ஓடறதோட காரணம்”

“நூறுநாள், நூத்தம்பதுநாள் ஓட்டறதுக்கு பின்னாடி வேற ஒரு பெரிய கதை இருக்கு. அது நடிகனுக்காகன்னு நம்பீட்டிருந்தா உங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது”

“அப்பறம்?”

“தியேட்டர் வாடகை தயாரிப்பாளர்தான் குடுக்கணும் பார்த்துக்கங்க.. அதெல்லாம் சினிமா ரகசியம்பா”

-என்றவர் மேற்கொண்டு இதைப் பற்றி பேசமறுக்கிறார்.

அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...

அது....


நீங்களே சொல்லுங்களேன்..


.

Saturday, January 2, 2010

அவதார் – அதிசயம் & அட்டகாசம்!

.


2154ல் நடக்கும் கதை. பண்டோரா எனும் கிரகத்தில் இருக்கும் ஒரு கனிமத்தை கைப்படுத்த மனிதர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக டி.என்.ஏ. கலப்பு செய்து பண்டோரா கிரகத்தின் நவி மனிதர்களைப் போல, மனிதர்களை மாற்றி ஊடுருவ வைக்கிறார்கள் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர். அப்படிச் செல்லும் ஒருவன் இறந்துவிட, ஒரே ஜீன் உள்ள அவன் சகோதரனின் டி.என். ஏ- தான் ஒத்துப்போகும் என்று அவனுக்காக அவன் சகோதரன் அனுப்பப்படுகிறான். விஞ்ஞானக் கூடத்திற்கு அந்தச் சகோதரனின் எண்ட்ரியுடன் தான் படம் ஆரம்பமாகிறது.

அந்த கிரகத்தில் நவி மனிதனாக நுழைந்தவுடன் அதன் இயற்கை அமைப்பு, வாழ்வியல், அவர்களின் பழக்கங்கள் நாயகனை மிகவும் கவர்ந்துவிட, அவர்களில் ஒருவனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான். இடையே நவி இனப் பெண்ணோடான காதலும். ஒரு கட்டத்தில் மனிதர்கள் முழுமையாக பண்டோரா கிரகத்தின்மீது சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் போரைத் தொடுக்க ஆரம்பிக்க, நவி இனத்தினருக்குத் தலைமை தாங்கி போரிடுகிறான்.
இறுதியில் – வென்றது யார் என்பதே அவதார்.





‘மேக்கிங் மேக்கிங்’ என்று சொல்வார்களே அப்படியென்றால் என்னவென்பதை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார். ஹீரோவும், ஹீரோயினும் ஓடுகிறார்கள். காமெரா கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் அவுட் ஆகிறது. அப்போதுதான் நமக்குத் தெரிகிறது – அவர்கள் ஓடுவது ஒரு மரக்கிளையில்!



சொல்லப்போனால் – ஒரு மசாலாப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு வந்திருக்கிற அவதார் நிச்சயமாக கமர்ஷியல் படம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு, ஒரு காரணம் என்று நம்பவைத்திருக்கிறார்கள்.
பண்டோரா கிரகத்தின் மனிதர்கள் மட்டுமல்ல மரம், செடி, கொடிகள், விலங்குகள்கூட நாயகனை ஏற்றுக் கொள்ள தாமதமாவதையும், கொஞ்சம் கொஞ்சமான பழக்கத்துக்குப் பிறகு அவை ஏற்பது போலவும் சித்தரித்திருப்பது அழகு.

பண்டோரா கிரகம்! அத்தனை அழகு! ஃப்ளோரசெண்ட் செடி-கொடிகள், கலாச்சாரம், விலங்குகளின் உணர்வுகள், செடி கொடிகளுக்கும் அந்த கிரகத்தினருக்கும் இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு என்று ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதுவும் பண்டோரா கிரகத்தினரின் மொழியை தனியாக ஒரு பேராசியர் குழு வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. (நாம் பன்ச் டயலாக்குகளுக்கு எடுக்கும் சிரமத்துக்கு கிஞ்சித்தும் குறையாதது அது!)




நவி இன மக்கள் – நீள உடல். நீல நிறம். நடை, பேச்சு, உடல்வாகு எல்லாவற்றிலும் ஒரே மாதிரி எல்லா நவி கதாபத்திரங்களையும் நடிக்கவைத்திருக்கிறார்கள்.

நான் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனியாக பூச்செண்டு கொடுக்க நினைப்பது – பெண் கதாபாத்திரங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம்: ஹீரோவின் சீனியரான பெண் அதிகாரி முதலில் அவரைப் புரிந்து கொள்ளாமல், பிறகு புரிந்து கொண்டு அவருடன் நவி இன மக்களுக்காக போராடுகிறார்.

போர் விமான பைலட்களில் மற்ற எல்லாரும் குண்டு மழை பொழிய, ஒரே பெண் பைலட் – மனமில்லாமல் திரும்புகிறார். பின்னர், விஞ்ஞானக் குழுவால் நாயகன் அடைத்து வைக்கப்படும்போது அவர்தான் காப்பாற்றுகிறார்.
அதேபோல நவி இனத்தின் தலைவன் மகள் இவரை பஞ்சாயத்துக்கு (அப்படித்தான் தெரிகிறது) கொண்டு செல்லும்போது அவருக்கும், தலைவிக்கும் நடக்கும் வாக்குவாதத்தின்போது சும்மாதான் இருக்கிறார் தலைவர்! தங்களுக்காக போராடிய இருவர் உயிருக்கு ஆபத்து நேரும்போது நடக்கும் பிரார்த்தனைக்கும் தலைவிதான் தலைமை. இப்படி கிடைக்கும் இடங்களிலெல்லாம் பெண்மையைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குனர்.

3 டி-யில் பார்ப்பது சிறப்பு. நாமே அவர்களின் கிரகத்திற்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஒரு தியேட்டர் (Kanagadara) தவிர வேறெங்கும் 3 D இல்லை என்று கேள்விப்பட்டேன். எப்படியேனும் நிச்சயமாகப் பார்த்துவிடுங்கள். தவிர்க்கக்கூடாத படம் இது!

அவதார் – பிரமிப்பு!


.

Friday, January 1, 2010

20பத்தாண்டு வாழ்த்துகள்!

இன்னைக்கு
என்னதான்
நீங்க
மாங்கு மாங்குன்னு
ஒலக மேட்டரெல்லாம்
அலசி ஆராய்ஞ்சு
பதிவெழுதினாலும்
(நாம என்னைக்கு
அப்படியெல்லாம்
எழுதியிருக்கோம்கறது
வேற விஷயம்)
வர்ற
கமெண்ட் பூரா
ஒரே மேட்டராத்தான்
இருக்கப் போகுது.

ஹாப்பி நியூ இயர்ன்னு.

அதுனால நானே சொல்லிக்கறேன்..

Happy News year!

20பத்தாண்டு வாழ்த்துகள்!


அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

குறிப்பு: இது ஒரு எண்டர் பதிவு!

.