Showing posts with label Avatar Review in Tamil. Show all posts
Showing posts with label Avatar Review in Tamil. Show all posts

Saturday, January 2, 2010

அவதார் – அதிசயம் & அட்டகாசம்!

.


2154ல் நடக்கும் கதை. பண்டோரா எனும் கிரகத்தில் இருக்கும் ஒரு கனிமத்தை கைப்படுத்த மனிதர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக டி.என்.ஏ. கலப்பு செய்து பண்டோரா கிரகத்தின் நவி மனிதர்களைப் போல, மனிதர்களை மாற்றி ஊடுருவ வைக்கிறார்கள் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர். அப்படிச் செல்லும் ஒருவன் இறந்துவிட, ஒரே ஜீன் உள்ள அவன் சகோதரனின் டி.என். ஏ- தான் ஒத்துப்போகும் என்று அவனுக்காக அவன் சகோதரன் அனுப்பப்படுகிறான். விஞ்ஞானக் கூடத்திற்கு அந்தச் சகோதரனின் எண்ட்ரியுடன் தான் படம் ஆரம்பமாகிறது.

அந்த கிரகத்தில் நவி மனிதனாக நுழைந்தவுடன் அதன் இயற்கை அமைப்பு, வாழ்வியல், அவர்களின் பழக்கங்கள் நாயகனை மிகவும் கவர்ந்துவிட, அவர்களில் ஒருவனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான். இடையே நவி இனப் பெண்ணோடான காதலும். ஒரு கட்டத்தில் மனிதர்கள் முழுமையாக பண்டோரா கிரகத்தின்மீது சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் போரைத் தொடுக்க ஆரம்பிக்க, நவி இனத்தினருக்குத் தலைமை தாங்கி போரிடுகிறான்.
இறுதியில் – வென்றது யார் என்பதே அவதார்.





‘மேக்கிங் மேக்கிங்’ என்று சொல்வார்களே அப்படியென்றால் என்னவென்பதை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார். ஹீரோவும், ஹீரோயினும் ஓடுகிறார்கள். காமெரா கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் அவுட் ஆகிறது. அப்போதுதான் நமக்குத் தெரிகிறது – அவர்கள் ஓடுவது ஒரு மரக்கிளையில்!



சொல்லப்போனால் – ஒரு மசாலாப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு வந்திருக்கிற அவதார் நிச்சயமாக கமர்ஷியல் படம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு, ஒரு காரணம் என்று நம்பவைத்திருக்கிறார்கள்.
பண்டோரா கிரகத்தின் மனிதர்கள் மட்டுமல்ல மரம், செடி, கொடிகள், விலங்குகள்கூட நாயகனை ஏற்றுக் கொள்ள தாமதமாவதையும், கொஞ்சம் கொஞ்சமான பழக்கத்துக்குப் பிறகு அவை ஏற்பது போலவும் சித்தரித்திருப்பது அழகு.

பண்டோரா கிரகம்! அத்தனை அழகு! ஃப்ளோரசெண்ட் செடி-கொடிகள், கலாச்சாரம், விலங்குகளின் உணர்வுகள், செடி கொடிகளுக்கும் அந்த கிரகத்தினருக்கும் இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு என்று ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதுவும் பண்டோரா கிரகத்தினரின் மொழியை தனியாக ஒரு பேராசியர் குழு வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. (நாம் பன்ச் டயலாக்குகளுக்கு எடுக்கும் சிரமத்துக்கு கிஞ்சித்தும் குறையாதது அது!)




நவி இன மக்கள் – நீள உடல். நீல நிறம். நடை, பேச்சு, உடல்வாகு எல்லாவற்றிலும் ஒரே மாதிரி எல்லா நவி கதாபத்திரங்களையும் நடிக்கவைத்திருக்கிறார்கள்.

நான் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனியாக பூச்செண்டு கொடுக்க நினைப்பது – பெண் கதாபாத்திரங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம்: ஹீரோவின் சீனியரான பெண் அதிகாரி முதலில் அவரைப் புரிந்து கொள்ளாமல், பிறகு புரிந்து கொண்டு அவருடன் நவி இன மக்களுக்காக போராடுகிறார்.

போர் விமான பைலட்களில் மற்ற எல்லாரும் குண்டு மழை பொழிய, ஒரே பெண் பைலட் – மனமில்லாமல் திரும்புகிறார். பின்னர், விஞ்ஞானக் குழுவால் நாயகன் அடைத்து வைக்கப்படும்போது அவர்தான் காப்பாற்றுகிறார்.
அதேபோல நவி இனத்தின் தலைவன் மகள் இவரை பஞ்சாயத்துக்கு (அப்படித்தான் தெரிகிறது) கொண்டு செல்லும்போது அவருக்கும், தலைவிக்கும் நடக்கும் வாக்குவாதத்தின்போது சும்மாதான் இருக்கிறார் தலைவர்! தங்களுக்காக போராடிய இருவர் உயிருக்கு ஆபத்து நேரும்போது நடக்கும் பிரார்த்தனைக்கும் தலைவிதான் தலைமை. இப்படி கிடைக்கும் இடங்களிலெல்லாம் பெண்மையைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குனர்.

3 டி-யில் பார்ப்பது சிறப்பு. நாமே அவர்களின் கிரகத்திற்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஒரு தியேட்டர் (Kanagadara) தவிர வேறெங்கும் 3 D இல்லை என்று கேள்விப்பட்டேன். எப்படியேனும் நிச்சயமாகப் பார்த்துவிடுங்கள். தவிர்க்கக்கூடாத படம் இது!

அவதார் – பிரமிப்பு!


.