Tuesday, March 29, 2011

களை கட்டிய கருத்தரங்கம்

திருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கூட்டி, திருப்பூர் மக்களுக்கான அவர்கள் திட்டங்களை விளக்க, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பொருளில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன்.

உள்ளே செல்கிற போதே வேட்பாளர் ஒருவர் ‘இது நியாயமா.. இல்லை நியாயமா என்று கேட்கிறேன்..’ என்று என்னைப் பார்த்து விரல் நீட்டி கேட்க, ‘லேட்டாப் போனதுக்குதான் திட்றாரோ’ என்று ஒரு கணம் பயந்தவாறே இடம் தேடி அமர்ந்தேன். அவர் திருப்பூருக்கு யாரோ செய்த துரோகம் என்று யாரையோ காற்றில் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் கூட்டத்தைப் பார்த்தேன். கணிசமான கூட்டம் வந்திருந்தது. பெரிய அறிவிப்போ பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனர்களோ இல்லாமல் காந்தி படம் போட்ட நோட்டீஸ் துண்டு இத்தனை பேரைச் சேர்த்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

பேசிக்கொண்டிருந்தவர் முடிக்க அடுத்ததாக எம் எஸ் உதயமூர்த்தியின் மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் விருமாண்டி மீசையுடன் வந்தார். ரொம்ப அடக்க ஒடுக்கமான வேட்பாளர் இவர்தான் என நினைக்கிறேன். குனிந்த தலை நிமிராமல் பேசினார். (நிமிர்ந்தால் எழுதியதைப் படிக்க முடியாமல் போவதும் காரணம்) பூராவும் படித்துவிட்டு நான் சொன்னதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். 37 பேர் கைதட்டினார்கள்.

அடுத்ததாக பா ஜ க வேட்பாளர். ’எங்கள் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா’ என்று பேச ‘ஏன்.. உங்களுக்கே தெரியலையா?’ என்று கேட்க நினைத்ததை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒவ்வொருவராக கிட்டத்தட்ட ஏழோ, எட்டோ வேட்பாளர்கள் பேச அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உட்கார்ந்திருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் (சிட்டிங் எம் எல் ஏ-ங்க) கோவிந்தசாமி வந்தார். கடந்த காலத்தில் என்னென்ன செய்தேன் என்று சொல்லித்தான் நான் ஓட்டு கேட்கப் போகிறேன் என்று சிலவற்றைச் சொன்னார். பேசி முடித்து அவர் கிளம்ப எத்தனிக்கையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் ஒரு துண்டுச் சீட்டை எழுதி நீட்ட ‘சாய ஆலைப் பிரச்னைக்கு என்ன தீர்வு தருவீர்கள்’ என்று கேட்க அப்போதுதான் ஞாபகம் வந்த அவர் ‘இதை நான் மறக்கவில்லை. (அப்பறம் ஏன் பேசல?) ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களேயானால்’ என்று ஒரு பதினைந்து நிமிட எக்ஸ்ட்ரா மொக்கையைப் போட்டுவிட்டுப் போனார். வராவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றே அவர் வந்திருந்ததாய்த் தோன்றியது.

காங்கிரஸ் வேட்பாளர் உள்ளேயே வரிசையாக அமர்ந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. வேட்பாளர்களுக்குப் பின் வாக்காளர் சார்பில் பேச மேடையேறி நின்றிருந்த பாரதி கிருஷ்ணகுமார் கொஞ்சம் ரௌத்ரம் பழகலாமா என்று யோசிப்பதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் விடுத்த வேண்டுகோளால் கூட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

திருப்பூரின் இன்னொரு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரைத் தவிர எல்லாரும் வந்திருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைத் தந்தது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.


பேசிய வேட்பாளர்கள் எல்லாருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. அது -

-என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில்..
-நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்
-ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்

இந்த மூன்று வரிகளை எல்லாருமே பேசினார்கள்.

மேடையிலிருந்த பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தார். ‘தேர்தலை நேர்மையாக நடத்தும் திறன் நம் தேர்தல் கமிஷனுக்கு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை’ என்றார். அப்படியாயின் ஏன் அவர்கள் எங்கெங்கே எப்படி எப்படி சோதனை நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே நாளிதழ்கள் மூலம் அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்றார். சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.

முன்பெல்லாம் வரி கட்டுகிறவர்கள் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்கள். அம்பேத்கர்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற மசோதாவை கொணர்ந்தார் என்றார். நேருவும் அதை வழிமொழிந்தார் என்றார். 1951ல் நடந்த முதல் பொதுத் தேர்தல் பற்றி சொன்னார். 1951 அக்டோபர் 24 முதல் 1952 ஃபிப்ரவரி 24 வரை நான்கு மாதங்கள் நடைபெற்றதாம்.

ஓட்டுக்கு உப்புமா கொடுத்தார்களாம் 1952களில்! அப்பவே...!

அதே போல கள்ள ஓட்டு பற்றியும் சொன்னார். ஜனாதிபதி ஆர்.வி. வெங்கட்ராமனின் ஓட்டை யாரோ போட்டிருந்தார்களாம். சரி.. அவரைத்தான் தெரியாது. சிவாஜி கணேசனையுமா தெரியாது? அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா?”

கடைசியாக அவர் சொன்ன இரண்டு லியோ டால்ஸ்டாயின் கதைகள்தான் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு சுவையாக முடித்தது. இரண்டு கதைகளுக்கும் வலிக்க வலிக்க கைதட்டினார்கள் பார்வையாளர்கள். அதுவும் இரண்டாவது கதையின்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் எழுந்து நின்று விடாமல் இரண்டு நிமிடம் கைதட்டியதில் அவரே பேச்சற்றுப் போனார்.

என்ன அந்தக் கதைகள்?

அடுத்த பதிவில்!

(எப்பூடி??)


.

Friday, March 25, 2011

திருப்பூரில் ஒரு கருத்தரங்கம்


ந்தப் பிரபல அரசியல்வாதியின் மகள் இந்து மருத்துவக் கல்லூரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி. முதல் வகுப்பில் தேறுவார் என எதிர்பார்த்திருக்க – முடிவு வெளியாகிறது அவர் தேர்வில் தவறிவிட்டதாக. சக மாணவிகளெல்லாரும் திகைக்க, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடிவெடுக்கிறார் இந்து. தந்தையிடம் பேசியபோது – அனுமதி கிடைக்கவில்லை அவரிடமிருந்து!

‘மறு மதிப்பீடு செய்து, நீ உரிய மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்தாலும் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக உல்கம் பழி சொல்லும். ஆகவே அடுத்த தேர்வுக்கு நீ தயாராகு’ என்கிறார் அவர். மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டார்!

அதன் பின் இந்திய நிதியமைச்சராக, பிரமராகவெல்லாம் பணியாற்றிய அவர் பதவிக்காலம் முடிந்து ஒரு அடுக்கு மாடிக் கட்ட்த்தில் வசித்து வந்து, அந்த அடுக்கு மாடிக் கட்ட்ட உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை வெளியேறுமாறு தீர்ப்பளிக்க, மனமுடைந்த மருமகள் மன்நிலை பாதிக்கப்பட்டு மரித்தார்.

அந்த அரசியல்வாதி யார்?

மொரார்ஜி தேசாய்!

இந்தத் தகவலை நான் படித்தது தமிழருவி மணியன் எழுதிய ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற நூலில். இதுபோல இப்போது கேட்டால் ‘இப்படியெல்லாம் இருந்திருக்காங்களா?’ என்ற அதிர்ச்சியில் நமக்கே மாரடைப்பு வந்துவிடும் போல பல சம்பவங்களை சொல்லியிருக்கிறார் அவர். தமிழருவி மணியனிடம் எனக்குப் பிடித்தது இது போன்ற நல்லவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, வெறும் எழுத்தில் அதைக் காட்டிவிட்டுப் போகாமல் சொந்த வாழ்க்கையிலும் அவர்களைப் பின்பற்றுவதுதான்.

தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சி அரசியல் சாராத சமுதாய அமைப்பொன்றை நிறுவி நடத்தி வருகிறார். அதன் சார்பில் வரும் ஞாயிறு – 27.03.2011 அன்று- திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடாகியிருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம் நாங்கள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்று விளக்க, எங்கே போகிறோம் நாம் என்ற தலைப்பில் வாக்காளர் சார்பில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச இருக்கிறார்.

அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அமர்ந்து தங்கள் திட்டங்களை விளக்கப் போகிறார்களா?

ஆம்! உங்களைப் போலவே நானும் வெகு ஆர்வமாக இருக்கிறேன் பங்கு கொள்ள..

திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் யாவரும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தொடர்புக்கு:
96 888 111 8
0421 - 43 222 82


.

இந்தியா டீமை இன்னும் என்னென்னெல்லாம் சொல்லித் திட்டலாம்?



ன்னெல்லாம் பேசணுமோ பேசியாச்சு!

ஒண்ணுக்கும் ஆகாத டீம்.. பவுலிங்கே இல்லை...


பாரேன்.. பங்களாதேஷ் முண்ணூறை நெருங்கீட்டானுக.. கொஞ்சம் கம்மியா எடுத்திருந்தோம்னா சங்குதான் நமக்கு..


327 எடுத்தும் ஜெயிக்காம ட்ரா பண்றானுக பாரு... இவனுக வேலைக்காக மாட்டானுக..


விட்டா அயர்லாந்து ஜெயிச்சிருக்கும். 46வது ஓவர் வரைக்கும் முக்கறானுகப்பா..



நெதர்லாந்து கூட வெறும் 190 எடுக்க, அஞ்சு விக்கெட் கொடுக்கறானுக..


அதெல்லாம் கூடப் போகட்டும். சவுத் ஆஃப்ரிக்கா மேட்ச்ல தோத்ததுக்கு காரணம் சச்சின் செஞ்சுரி அடிச்சதாலயாம்!

அதுவும் நெஹ்ராவுக்கு லாஸ்ட் ஓவர் குடுத்ததுக்கு தோனியை அன்னைக்குப் பொறந்த குழந்தைகூடத் திட்டிருக்கும்!

அடாடாடாடாடா!!!

ஏங்க கப்பு வேணுமா வேண்டாமா? இந்தியா ஜெயிக்கணுமா வேணாமா? சும்மா தொட்டது 90க்கும் நெகடீவாப் பேசறதுக்குன்னே திரிஞ்சா எப்படீங்க?

எங்க ஆஃபீஸ்ல ஒருத்தன் இருக்கான்.. நேத்து மேட்ச் ஆரம்பிக்கறப்பவே வந்தான்:

‘எனக்கென்னவோ இன்னைக்கு டவுட்தான்ப்பா’

‘என்ன டவுட்டு?’

‘அவனுக மூணு வருஷமா வொர்ல்ட் சாம்பியன்ஸ்...’

‘இருந்துட்டுப் போட்டும்..

அதுமில்லாம வரலாறு என்ன சொல்லுதுன்னா...’

‘சார்.. நீங்க வரலாறுல பி ஏ -வா எம் ஏ வா?’ன்னு கேட்டேன்...

‘சொல்றத முழுசாக் கேளு.. இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவை நாம ஜெயிச்சதே இல்ல..’

‘சரி..’

‘அதுனால இன்னைக்கு டவுட்டுதான்..ஆனா ஒரே ஒரு சான்ஸ் இருக்கு’

‘என்னது அது..?’

‘சேவக் 50 ஓவர் நின்னு ஆடினான்னா...’

‘நின்னுட்டு எப்படிய்யா ஆட முடியும்?’

‘ப்ச்.. கேளுய்யா.. 50 ஓவர் முழுசா வெளையாண்டா ஜெயிக்கலாம்’

‘வேற என்னென்ன ஜோசியம் சொல்வீங்கடா நீங்க? டேய்.. அந்தக் காலமெல்லாம் போயாச்சுடா.. எவன் விளையாண்டாலும், இல்லைன்னாலும் ஜெயிப்போம்.. பாரு நீ’ன்னேன் நான்.

‘டாஸ் ரொம்ப முக்கியம்’னான்.

‘டாஸ் போடற காசு வேணா ரொம்ப முக்கியமா இருக்கலாம்.. இன்னைக்குப் பாரு ஆட்டத்தை’ன்னேன்.

ஆஸ்திரேலியா டாஸ் ஜெயிச்சாங்களா... வந்துட்டான் மறுபடியும் அவன்.
‘ப்ச்.. அவ்ளோதான்ப்பா..’னான்.

ஐய்யய்யய்ய.. இவனொருத்தன்னு நெனைச்சுட்டே ‘போடா.. போய் வேலையப் பாரு’ன்னேன்.

பாண்டிங் ஆடிட்டிருக்கறப்ப மறுபடி வந்தான் ‘ஒரு விக்கெட்டை எடுக்க முடியல நம்மாளுகளால..’ன்னான்.

‘அதான் எதிர்ல விக்கெட் விழுந்துட்டே இருக்கேடா’ன்னேன்.

பாண்டிங் செஞ்சுரி அடிச்சுடுவான் போல இருக்கே’

‘அடிக்கட்டும். ஊருக்குப் போறப்ப ஒரு செஞ்சுரியோட போகட்டுமேடா.. உனக்கேன் காண்டு?’ன்னேன்.

260 அடிச்சாச்சு. அப்பயும் வந்து குய்யோ முறையோன்னான்.

அடிச்சாச்சு. இப்ப காலிறுதில ஜெயிச்சாச்சு...

அப்புற‌ம் வ‌ந்து இப்ப‌டிதான்யா ஆட‌ணும்.. என்ன‌ம்மா ஆடினான் யுவி? ஆஸி எல்லாம் ஜெயிக்கும்னு எப்ப‌டி ந‌ம்பினோமோ? சொத்தை டீமா இருக்கு. இன்னும் ஏதேதோ பாராட்டி சொன்னான்.அவ‌ன் திட்டின‌துல‌ எப்ப‌டி ஒரு லாஜிக்கும் இல்லையோ, அதே போல‌ அவ‌ன் பாராட்டின‌துல‌ம் ஒரு லாஜிக்கும் இருப்ப‌தாக‌ தெரிய‌லை. அப்ப‌டி என்ன‌டா புட‌ல‌ங்காய் லாஜிக்னு கேட்கிற‌வ‌ங்களுக்கு..

முத‌ல் மேட் ப‌ங்க‌ளாதேஷ் கூட‌. அதுவும் அவ‌ங்க‌ நாட்டுல‌ ந‌ட‌க்கிற‌ முத‌ல் வேர்ல்ட் க‌ப் மேட்ச். எல்லோரும் என்ன‌ விரும்புவாங்க‌? தோத்தாலும் 300 ர‌ன் அடிக்க‌ணும்னுதானே விரும்புவாங்க‌? செம‌ ப‌வுலிங் விக்கெட் த‌யார் செஞ்சு, இந்தியா 180க்கு அவுட்டாகி அதையும் அவ‌னுங்க‌ அடிக்க‌ முடியாம‌ 170ல‌ அவுட் ஆனா எப்ப‌டி இருக்கும்? அந்த‌ பிட்ச்சுல‌ 170 அடிச்ச‌தே பெரிய‌ சாத‌னைன்னு சொல்ற‌வ‌ங்க‌ள‌ விட‌ 180 அடிக்க‌ முடியலையான்னு ஏமாந்து போற‌வ‌ங்க‌தான் அதிக‌ம். இப்ப‌ ந‌ம்ம‌ ஆட்க‌ள் சொல்ல‌லையா, இந்தியாகிட்ட‌ 291 அடிச்சிட்டானேன்னு. அந்த‌ லாஜிக் தான் முத‌ல் மேட்சுக்கு பிட்ச்ச‌ அப்ப‌டி த‌யார் செய்ய‌ கார‌ண‌ம்.நாம‌ 70 ர‌ன் வித்தியாச‌த்தில‌ ஜெயிச்சோம். அது சாதார‌ண‌ மார்ஜினா என‌க்கு தெரில‌.

அடுத்து இங்கிலாந்து.அதுல‌ நாம‌ க‌டைசில‌ விக்கெட்ட‌ க‌ட‌க‌ட‌ன்னு விட்ட‌து த‌ப்புதான். அதுக்கு ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌ல‌. நாம‌ 10 ர‌ன் க‌ம்மியா அடிச்சோம்ன்ற‌து உண்மை. ஆனா இங்கிலாந்து ப‌வுலிங் சொத்தையான்னு பார்க்க‌ணும். செளத் ஆஃப்ரிக்கா கூட‌ 176 அடிக்க‌விடாம‌ செஞ்ச‌வ‌ங்க‌தானே அவ‌ங்க‌? என்ன‌தான் ப‌வுலிங் பிட்ட்ச்சா இருந்தாலும் தென்னாப்பிரிக்கா பேட்டிங் லைன் அப்க்கு அது கொஞ்ச‌ம் ஈசிதானே? அதுல‌ ந‌ம்ம‌ ஆளுங்க‌ 10 ர‌ன் க‌ம்மியா அடிச்ச‌து த‌ப்புதான். ஆனா பெரிய‌ த‌ப்பு இல்லை. இதான் என் லாஜிக்.

அடுத்த‌ மேட்ச் அய‌ர்லாந்த். அதுல‌ நாம‌ 46 ஓவ‌ர்ல‌ அடிச்சோம். தோனி இந்த‌ தொட‌ர்ல‌ அவ்ளோ ந‌ல்ல‌ ஃபார்ம்ல‌ இல்லை. அவ‌ர் அந்த‌ மேட்ச்சுல‌ அவ‌ரோட‌ கான்ஃபிடென்ட்ட‌ ர‌ன் அடிச்சு ஏத்திக்க நினைச்சாரு. அதான் அவ்ளோ பொறுமையா ஆடினார்ன்னு நான் நினைக்கிறேன். யூசுவ் வ‌ந்த‌வுட‌னே ப‌ந்து எப்ப‌டி தெறிச்சு ஓடுச்சுன்னு நினைவிருக்கா? தோனி அடிக்க‌டி சொல்ற‌ வாச‌க‌ம்.”Dont Always play for crowd. Play for the game”.

அடுத்த‌ காமெடி ச‌ச்சின் ச‌த‌ம‌டிச்ச‌தால‌தான் செள‌த் ஆஃப்ரிக்கா கூட‌ தோத்தோமாம். ஒரு ஸ்கூலில் 100% ரிச‌ல்ட் வ‌ர‌லைன்னு வைங்க‌. ஆனா முத‌ல் மார்க் ந‌ம்ம‌ பைய‌ன்னு வ‌ச்சிக்குவோம். மொத்த‌ ஸ்கூலும் பாஸ் ஆகாத‌த‌ற்கு உங்க‌ பைய‌ன் தான் கார‌ண‌ம். அவ‌ன் ராசியில்லை. அவ‌ன ரெண்டாவ‌து ரேங்க் போடுங்க‌ன்னு ம‌த்த‌ பேர‌ன்ட்ஸ் சொன்னா எப்ப‌டி இருக்கும் உங்க‌ளுக்கு? ஃபேக்ட் வேற‌ .ஒப்பினிய‌ன் வேற‌.அத‌ ப‌த்தி த‌னிப்ப‌திவுல‌ பார்ப்போம். ஒரு வ‌ரில‌ சொன்னா ச‌ச்சின் 100% அடிச்சா 69% இந்தியா ஜெயிச்சிருக்கு. இது பான்டிங், ஜெய‌சூர்யா போன்ற‌ ப‌ல‌ பேர‌ விட‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ர்சேன்ட்டேஜ்.

வெஸ்ட் இன்டீஸ்கூட‌ 80 ர‌ன் வித்தியாச‌த்துல‌ ஜெயிச்சோம். ஆனா அதையும் சில‌ பேர் பாகிஸ்- ‍வெஸ்த் இன்டீஸ் மேட்ச் அப்போ கிண்ட‌ல் அடிச்சாங்க‌. அதுக்கு விள‌க்க‌ம் சொன்னா கார்த்திக்கிற்கு அம்மா ப‌தில் சொன்ன‌ மாதிரி ஆயிடும். அத‌னால‌ விட்டுடுவோம்.

இப்போ பாகிஸ்தான் தான் செம‌ ஸ்ட்ராங்னு சொல்லிட்டு திரிய‌றாங்க‌. புத‌ன்கிழ‌மை நைட்டு அவ‌ங்க‌ளுக்கும் இருக்கும். இப்போ என்ன‌ செய்ய‌லாம்?



னக்கு சமீபத்துல வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ்ஸை சொல்லி இத முடிக்கறேன்..

படுக்கையறையில் மனைவியும் கணவனும் அமைதியாக ஆளுக்கொரு திசை பார்த்துப் படுத்திருக்கிறார்கள்.

மனைவி: (மனதுக்குள்) என்னாச்சு.. ஏன் பேசாம படுத்திருக்காரு? ஏன் என்கிட்ட பேச மாட்டீங்கறாரு? வேற எவளாவது அவரோட மனசுல வந்துட்டாளா? நான் அலுத்துட்டேனா அவருக்கு? முகத்துல சுருக்கம் வந்தது காரணமா இருக்குமோ? ஓவரா மேக்கப் போடறன்னு சொல்லுவாரு.. அது பிடிக்காததாலயோ? நான் அசிங்கமாய்டேன் போல அவருக்கு.. கன்னா பின்னான்னு வெய்ட் போட்டுட்டேனோ.. இல்லியே.. ரொம்ப தொண தொணக்கறதால விலகிப் போறாரோ.. ஏன் இப்டி அப்செட்டா இருக்காரு?


கணவன்: (மனதுக்குள்):
















“ச்சே.. போயும் போயும் தோனி, நெஹ்ராகிட்டயா அந்த ஓவரைக் குடுக்கணும்?”

.

Monday, March 21, 2011

அவியல் 21 மார்ச் 2011

சென்ற மாதத்தில் ஒருநாள் திருவண்ணாமலை அருகே ஓர் ஊரில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள்.

தாய்மார்களா? டாஸ்மாக் வேண்டும் என்றா? – ஆமாம்.

காரணம் – கடைசியில்!

-----------------------------

வீடு கட்ட லோன் அப்ளிகேஷனில் விவரங்கள் எழுதும்போது தெரிஞ்சவங்க நம்பர் குடுங்க என்றார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு விஷயம் சொன்னார். ஒரு வாடிக்கையாளர் தனக்குத் தெரிந்தவர் என்று ஒரு நண்பரின் பெயரைக் கொடுத்தாராம். வங்கி நபர் அந்தக் குறிப்பிட்ட நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ‘செல்வராஜையும் தெரியாது.. ஒரு மங்கா மடையனையும் தெரியாது’ என்று அவர் கட் செய்து விட்டாராம். வங்கி நபர், உடனே விண்ணப்பதாரரைத் தொடர்பு கொண்டு ‘அவரு தெரியாதுங்கறாரே’ என்று கேட்டதும் ’ஒரு நிமிஷம் இருங்க’ என்று வங்கி நபரையும் லைனில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நண்பருக்கு அலைபேசி டக்கென்று கான்ஃப்ரென்ஸ் கால் போட்டிருக்கிறார். அழைப்பு போனதும் அந்த நண்பர் பேசியது:

‘ஏய்.. செல்வராஜு... சொல்லுடா மாப்ள.. என்ன திடீர்னு..’

‘இல்ல மாம்ஸ்... ஹவுசிங் லோன் போட்டிருக்கேன்.. உன் நம்பர் குடுத்திருக்கேன். பேங்க்லேர்ந்து கூப்பிடுவாங்க..’

‘அதுதான் நேத்தே சொன்னியே மாப்ள... கூப்டா பேசிடறேன் சரியா.. வேற எதுனா இருக்கா?’

இல்லை என்ற விண்ணப்பதாரர் லைனைக் (நண்பரையும்?) கட் செய்துவிட்டு, வங்கி அப்ளிகேஷனில் வேறு நண்பர் பெயரை எழுதிக் கொடுத்தாராம்.

-----------------------

சின்ன மகளின் வகுப்பில் ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை. அவளது தோழி ஒருத்தி மார்க் கம்மியாகிவிட்டதாம். பஸ்ஸில் வரும்போது அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏன் கம்மியாச்சு என்று கேட்டதற்கு ‘நான் எக்ஸாமுக்கு முந்தி ஒருவாட்டி சுவாதியை உதைச்சேன்ல.. அதுனாலதான்’ என்றாளாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறாள் பெரியவள். நாம் யாரையாவது உதைத்தால் அவர்கள் புத்தி நமக்கு வரும்.. நம்ம அறிவு அவங்களுக்குப் போகுமாம்’ என்றிருக்கிறாள். இதை அவர்கள் விளையாட்டாகச் சொல்ல நான் கேட்க நினைத்தேன்: ‘அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?’

ஆனால் கேட்கவில்லை. சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..

------------------

லகக்கோப்பை க்ரிக்கெட் காலிறுதிக்கு வந்துவிட்டது. என்னமோ ஏதோ என்று விளையாடுகிறார்கள் என்று இந்திய அணியை விமர்சிக்கிறார்கள் சிலர். இருக்கலாம். ஆனாலும் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் முன்னூறுக்கு மேலெடுத்து, எதிரணியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்வார்களென்பதும் கற்பனை சுகம் மட்டும்தான்.

அஸ்வினை சரிவரப் பயன்படுத்தாமை, மிடில் ஆர்டர் சொதப்பல்கள் என்று தோனி கவனிக்க வேண்டியவற்றை கவனித்து அணியைச் செலுத்தினால் ஆஸியை ஜெயிக்கலாம். ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் வழிந்து, ஜெயிச்சா ஜெயிக்கட்டும்.. இல்லைன்னா விடுங்க என்றே பார்ப்பதாய்ப் படுகிறது. உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!

இந்த உலகக் கோப்பையில் உண்மையாகவே கவனிக்கப்பட வேண்டிய அணி - அயர்லார்ந்து! இங்கிலாந்தின் இமாலய ஸ்கோரை போகிற போக்கில் எடுத்து ஜெயித்ததும், கடைசி லீக் மேட்சில் நெதர்லாந்தின் 306ஐ துரத்தி எடுத்ததும் சாதாரண விஷயமில்லை. 2015ல் பத்து அணிகள்தான் என்பதால் அயர்லாந்து வருமா வராதா என்கிற ஐயமிருக்கிறது. வரவேண்டும்!

-------------------------


ரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞர் க்ரைண்டர் அல்லது மிக்ஸி என்றால் ஜெயலலிதா என்ன தருவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தொடர்ந்து தடையில்லா மின்சாரம் போன்ற சில காமெடி அறிவிப்புகள் இருந்தாலும், தேர்தல் அறிக்கையை மிகக் கவர்ச்சியாக அறிவிப்பதில் திமுக கவனமாகவே இருக்கிறது.

என்னுடைய ஏமாற்றம் குஷ்பூவுக்கு சீட் கொடுக்காதது. இதைத் தட்டிக் கேட்க ஒருவர் கூடவா இல்லை? என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்! ச்சே..

வைகோவுக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டியதில்லை. ஜெயிக்கிற குதிரைக்குத்தான் பணம் என்பதுபோல தேமுதிகவை அழைத்துப் பேசிய அம்ம்ம்ம்ம்மா, கூடவே ஐந்து வருடம் இருந்த வைகோவை நடத்திய விதம் கண்டிக்க வேண்டியது. நானெல்லாம் கண்டித்து ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப் போவதில்லை என்பது வேறுவிஷயம்! நண்பர் ஒருவர் கூறியதைப் போல ஜெ கூட்டணியில் வைகோ / நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்கள் யாருமே இல்லை என்பதே நிஜம்.

----------

முதல் பாராவில் கேட்டதற்கான பதில்: அவர்கள் ஊரில் டாஸ்மாக் இல்லாததால் ரொம்ப தூரம் போகிறார்களாம் கணவன்மார்கள். திரும்பி வருகையில் விபத்து நேர்கிறதாம். தொடர்ந்து பலரையும் இழந்திருக்கிறார்கள். ‘குடிக்கறத நிறுத்துங்கன்னா கேட்கப்போறதில்ல.. ஊருக்குள்ளாறயே ஒரு டாஸ்மாக் இருந்தா இங்கனயே குடிச்சுட்டு இங்கனயே கெடப்பாங்கள்ல’ என்று ஒரு தாய்க்குலம் மீடியா நீட்டிய மைக்கில் உச்சஸ்தாயியில் சொல்ல - வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். லேடரல் திங்கிங்!


-----------------

Wednesday, March 9, 2011

பெயர்க்காரணம்

வலையுலகம் ஆரம்பித்த நாட்தொட்டு இருக்கிற தொடர்பதிவுகளில் இந்தப் பெயர்காரணம் தொடர்பதிவு முன்னிலை வகிக்கிறது. பன்னெண்டாயிரத்து நானூத்தி நாப்பேத்தேழாவது தடவையாக ஒரு பிரபல பதிவர் என்னை இந்தத் தொடர்ப்பதிவுக்கு அழைத்தது மட்டுமில்லாமல் ஃபோனில் கன்னா பின்னாவென்று திட்டு வேறு. ‘பெரிய ஆள்ன்னு நெனைப்பு அதுனாலதான் பதிவெழுதலயா’ என்று. ஐய.. அப்படியெல்லாம் இல்லீங் என்று அவரை சமாதானப்படுத்தி வேறு கதைகள் பேசி வைத்தாலும், அவர் அழைத்ததை உதாசினப்படுத்தியது (சி-யா சீ-யா?) தவறுதான்.நம்ம வாழ்க்கை வரலாறை பிச்சுப் பிச்சு அங்கங்கே ஏற்கனவே எழுதி இருக்கறவங்களையெல்லாம் ஏற்கனவே சோதிச்சுட்டதால - புதுசா மறுபடி எதுக்கு எழுதிட்டுன்னு அதையே இங்கன எடுத்துப் போட்டிருக்கேன்..

புட்ச்சுக்கங்க!

________________________

நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்

நான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது! (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்!) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்!

எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....

அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!

பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!

1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல  போஸ்ட்டில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.

போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.

இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.

பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!

நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில். (கொஞ்சம் ஓவர்தான்ல? ஸாரி!)

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!

எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!

என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!

.

Thursday, March 3, 2011

அவியல் 03 மார்ச்.2011

னித வளத்துறையில் பணிபுரியும்நண்பர் பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நேர்முகத்தேர்வு செய்துகொண்டிருந்தார். வழக்கமாக, வேலைக்கு வருபவர்களின் ரெஸ்யூமைப் பார்த்து பலவித அட்வைஸ்களை அள்ளி வழங்கும் குணம் கொண்டவர் அவர். அன்றைக்கு சீக்கிரமே இண்டர்வ்யூவை முடித்துவிட நான் கேட்டேன்.. ‘நான் வந்துட்டேன்னு அவசர அவசரமா முடிச்சீங்களா?’

“ஐய.. இல்ல கிருஷ்ணா.. போன மாசம் ஒருத்தன் வந்தான். ரெண்டு ரெண்டு வருஷத்துக்கு ஒரு கம்பெனி மாறிட்டிருந்தான். நல்ல கேண்டிடேட். ஏழு வருஷத்துல நாலு கம்பெனியா-ன்னு அவனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணினேன். செலக்ட்டும் ஆய்ட்டான். அடுத்த நாள் வர்ல. ஃபோன் பண்ணிக் கேட்டா, ‘ஒரே கம்பெனில வேலை செய்யணும்ன்னு நீங்க அட்வைஸ் பண்ணினத ராத்திரி பூரா யோசிச்சேன் சார். ஐநூறு ஆயிரத்துக்காக அடிக்கடி கம்பெனி மாற்றது எவ்ளோ முட்டாள்தனம்ன்னு புரிஞ்சது சார்.. அதான் பழைய கம்பெனிக்கே போய் ரீ-ஜாய்ன் பண்ணிட்டேன்’ங்கறான். எங்க டைரக்டர் என்னைத் திட்டாத குறை. அதுலேர்ந்து அட்வைஸ் பண்றதைக் கொறச்சுட்டேன்” – என்றார்.

ஓவர் அட்வைஸ் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது!

---------------------

லகக் கோப்பை சூடுபிடித்திருக்கிறது. இருப்பினும் முந்தைய வருடங்களில் இருந்த பரபர சுவாரஸ்யம் குறைவு. அட்டவணையை வீட்டுச் சுவற்றில் ஒட்டி, யூகங்களோடு உண்மை ரிசல்ட்டை ஒப்பிடுவது, நகத்தைக் கடித்துக் கொண்டு எல்லா மேட்சையும் பார்ப்பது குறைந்துவிட்டது. ஆயினும் முக்கிய மேட்ச்களைத் தவற விடுவதில்லை.

இந்திய – இங்கிலாந்து மேட்ச் ஒரு த்ரில்லர். முடிவு எதிர்பாராதது. மேட்ச் நம் பக்கமும், அவர்கள் பக்கமும் சாய்ந்து சாய்ந்து கடைசியாக சமநிலையில் முடிந்தது. ‘எப்படிடா ட்ரா ஆச்சு?’ என்று கேட்ட நண்பனிடம் சொன்னேன்:

‘சச்சின் செஞ்சுரி போட்டா தோக்கும்ன்னு பேசுவாங்க. யுவராஜ் ஃபிஃப்டி போட்டா ஜெயிக்கும்ன்னு சொல்லுவாங்க. இந்த மேட்ச்ல ரெண்டுமே நடந்துச்சா.. அதான் இப்டி’

எனக்கு இரண்டிலுமே நம்பிக்கையில்லை!

நேற்றைய இங்கிலாந்து-அயர்லாந்து மேட்ச் சரவெடி. ஓ-ப்ரெய்ன் 50 பந்துகளில் சதமடித்து கதி கலங்க வைத்துவிட்டார். அயர்லாந்து நேற்று செய்த அதே வேலையைத் தான், ஞாயிறு நமக்கெதிராக இங்கிலாந்து செய்தது. ஆயினும் முக்கியக் கட்டத்தில் விக்கெட்டுகள் விழ, ஆட்டம் மாறுவதை உணர்ந்துகொண்டு அட்லீஸ்ட் ட்ராவேனும் செய்து காட்டிய தோனிக்கு சபாஷ்.

---------------------------

பெ
ரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் கணிப்பைக் கேட்டேன். தி.மு.க-வின் சாதனை என்னவென்று கேட்டேன்.

“மக்களின் சகிப்புத்தன்மையை அதிகரிச்சதுதான் அவங்க சாதனை” என்றார்.

நான்: ‘அப்டீன்னா?’

“ஒரு மணி நேரம் கரண்ட் கட்டா? மொதல்ல கொஞ்சம் எதிர்த்தாங்க. 2 மணி நேரமாச்சு. போங்கடான்னு சகிச்சுட்டாங்க. இப்ப 4 மணி நேரம், 5 மணி நேரம்கூட கரண்ட் கட். எவனும் கேட்கறதில்லை. தலையெழுத்துன்னு சகிச்சுட்டுப் போய்டறான். மொதல்ல எல்லாம் ஆந்திராவைப் பாரீர், கர்நாடகாவைப் பாரீர்ன்னு கலைஞர் அறிக்கை விடுவார். இப்ப எவனும் கேட்கறதுமில்ல. அவரும் கண்டுக்கறதில்லை. விலைவாசி எவ்ளோ எகிறினாலும், தன்னோட வாழ்க்கை ஸ்டைலை மாத்திக்கறானே ஒழிய எதிர்க்கறதில்ல. எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் சகிச்சுப் போகணும்கற மனநிலைக்கு தன்னை தயார்படுத்திகிட்டான் பார்த்தியா?”

நான் ஒன்றுமே பேசவில்லை.

-----------------------------

தி
ருச்சிக்கு பிரகாஷ்ராஜும், ராதாமோகனும் வந்திருக்கிறார்கள். ஹலோ எஃப் எம்மில் பணிபுரியும் நண்பர் ராஜா அவர்களை நிற்க வைத்து சுற்றிப் போடுவதுபோல செய்திருக்கிறார். ‘ஏன் செல்லம்?” என்று கேட்ட பிரகாஷ்ராஜிடம் ‘பரிசல்காரன்னு ஒருத்தர் பயணம் விமர்சனத்துல எழுதிருந்தாருங்க.. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து நிக்க வெச்சு சுத்திப்போடச் சொல்லி’ என்றாராம்.

நன்றி ராஜா.

-------------------

ழுதுவதைக் குறைத்துக் கொண்டு வாசிப்பை அதிகப்படுத்தியிருக்கிறேன். வேலைப்பளு, நேரமின்மை என்பது போன்ற டிஃபால்ட் காரணங்கள் ஒருபுறம்... மற்றொரு காரணம்: முன்பெல்லாம் நான் எழுதும் மளிகை லிஸ்ட் கூட எனக்கே அவ்வளவு பிடித்திருந்தது. உடனேயே அதற்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேல்ஸ்மேனிடமும், கேஷ் கவுண்டர் ஆசாமியிடமும் பின்னூட்டம் வாங்கும் ஆவலும் இருந்தது. இப்போதெல்லாம் என்ன எழுதினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. (உனக்குமா-ன்னு கேட்காதீங்க!) ஆக அவ்வப்போது எழுதினால் போதுமென்று முடிவு கட்டிவிட்டேன்.

கடந்த மாதம் படித்த புத்தகம்: மணல்கடிகை. எம். கோபாலகிருஷ்ணன். திருப்பூரில் சாதாரணச் சிறுவர்கள் ஐவரின் வாழ்வில் நடக்கும் சகல சம்பவங்களையும் அழகாகக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர். வெகுநாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படித்திருக்கிறேன். படிக்கும்போது நடந்த சுவாரஸ்ய விஷயம்: கதையில் சிலர் திருப்பூரிலிருந்து சிவன்மலைக்குச் செல்லும் கட்டம் வருகிறது. அந்த அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது நான் கம்பெனி காரில் சிவன்மலையிலிருந்து திருப்பூர் வந்துகொண்டிருந்தேன். அவர்கள் படியூரைத் தாண்டி வாகனத்தில் செல்லும் வரியை நான் படித்துக் கொண்டிருந்தபோது, நானும் அதே படியூரைத் தாண்டி வந்து கொண்டிருந்தேன்!

தற்போது இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டிருப்பது.. சுஜாதாவின் ‘பதவிக்காக’. படிக்க ஆரம்பித்த அன்று சுஜாதாவும், பா.ராகவனும் சேர்ந்து என் கனவில் வந்தார்கள். நானும் வெயிலானும் சாமிநாதனும் அன்னபூர்ணாவில் அவர்களோடு காஃபி சாப்பிட்டுக் கொண்டிருக்க, பா.ராகவன், சுஜாதாவிடம் ‘அங்க போய்ட்டு வந்துடலாமா?’ என்று கேட்கிறார். சுஜாதா என்னைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்து ‘வெய்ட் பண்ணுங்க.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவேன்’ என்றுவிட்டுச் சென்றார். இன்னமும் காத்திருக்கிறேன்.. கனவிலாவது வருவாரென.

இதில் என் மண்டையைக் குழப்புகிற விஷயம் என்னவென்றால், நான் பார்க்க வேண்டும் என்று துடித்த / நான் பார்த்தே இராத என் ஆதர்சமான சுஜாதா என்னை என்ன சொல்லி அழைத்தார் என்பதை எத்தனை முறை யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை. கிருஷ்ணா என்றாரா.. பரிசல் என்றாரா? அடுத்த முறை வரும்போது கேட்க வேண்டும்.


.