Friday, July 23, 2010

கவிஞருடன் ஒரு சந்திப்பு

உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
*************

ஊர்தோறும் சுடுகாடு
ஒருபோதும் குறையலியே
வாழ்க்கை பற்று.

*****************

மேற்கண்ட கவிதைகள் எங்கள் ஊர்க்காரர் மகுடேசுவரன் எழுதியவை.


மகுடேசுவரன் எழுதிய பல கவிதைகள் எங்கள் தலைவர் வெயிலானின் வலைத்தளத்திலும், பிற நண்பர்களின் வலைத்தளத்திலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.


அண்ணாச்சியின் பதிவில் மகுடேசுவரன் கவிதை - http://www.vadakaraivelan.com/2009/05/5509.html


வெயிலானின் பதிவுகளில் மகுடேசுவரன் கவிதை - http://veyilaan.wordpress.com/2010/04/23/checking/ / http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_7649.html


குணா என்ற பதிவரின் பார்வையில் மகுடேசுவரன் - http://espalani.blogspot.com/2009/05/blog-post_23.html

காமக் கடும்புனல் கவிதைத் தொகுப்பு பெரிதும் பேசப்பட்டது - புத்தக மதிப்புரை - ஆர்.பி.ராஜநாயஹம்

இப்போது பாடலாசிரியராகவும்/வசனகர்த்தாவாகவும் புது அவதாரமெடுத்திருக்கிறார் - http://www.pesumcinema.com/news1.asp?imgNo=554http://vaarthaikal.wordpress.com/2010/04/15/magudeswaran/

நீங்கள் கவிதை எழுத ஆசைப்படுகிறீர்களென்றால், மகுடேசுவரனின் கவிதைகளைப் படியுங்கள் என்று சுஜாதாவே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் கவிதைகள் அச்சுக்கு வருமுன்னே, அவரது அழகான கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிற எங்கள் வெயிலானின் நெடுநாள் திட்டமாக கவிஞர் மகுடேசுவரனுடன் ஒரு சந்திப்பை இந்த ஞாயிறு திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிறோம்

அவரது வலையகம்: http://kavimagudeswaran.blogspot.com/

காமக் கடும்புனல் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்களுக்காக..
(இங்கிருந்து எடுக்கப்பட்டது)

(கடைசி கவிதையை தவிர்க்காமல் படியுங்கள்.. கொங்குதமிழ் என்றால் என்னவென்று அறிய...)

உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
‘உன் தாயாருடையதைப்
போலிருந்ததா’
என்றாள் மானபங்கப்பட்டவள்


முறையல்லாதன செய்கிறாய்....
சொன்னால் கேள் அண்ணா.....
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்.இப்பொழுது தெரிகிறது
பிரம்மச்சரியம்
கடும் நோன்பு
முதிர் கன்னிமை
கொடிய பட்டினி


ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகளல்லாத
பரஸ்திரீமரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலொன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்.... ஆமா....

*********************************


சந்திப்பு பற்றி:


நாள்: 25 ஜூலை 2010 ஞாயிறு
நேரம்: மாலை 5.30
இடம்: பதிவர் ராமனின் அலுவலகம். குமரன் சாலை, திருப்பூர் (அரோமா உணவகம் எதிரில் - மாடியில் ஜிகுஜிகு ஃப்ளோரசண்ட் வண்ணமடித்த பில்டிங்!)

தொடர்புக்கு அலைபேசி எண்கள்:

செந்தில்நாதன்: 98947 83597
ராமன்: 96006 00688
முரளிகுமார் பத்மநாபன்: 98433 41223

வெயிலான்: 90954 79791
பரிசல்காரன்: 95665 43262


.

Wednesday, July 21, 2010

மனைவி கணவனின் மூஞ்சிலயே குத்துவிட நினைக்கும் பத்து தருணங்கள்!
1) அன்னைக்குத்தான் வேலையெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு அக்கடான்னு உட்காருவாங்க. நம்மாளு திடீர்னு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸோட வீட்டுக்குப் போய் ‘யாரு வந்திருக்காங்க பாரு டார்லிங்’ன்னு டின்னருக்கோ, லஞ்சுக்கோ அடியப் போடும்போது....

2) ஒரு மாசமா சிரமப்பட்டு அவங்க மனசுல நெனைச்சமாதிரி வீட்ல அங்கங்க அந்தந்தப் பொருட்களை செட் பண்ணி, இண்டீரியரை நல்லவிதமா ரசனையா பண்ணி வெச்சிருப்பாங்க. டக்னு ஏதோ அவசரத்துக்கு ஒரு நாள் அம்மா வீட்டுக்கோ, வேற எங்கயாவதோ போய்ட்டு வருவாங்க. வந்து பார்த்தா வீடு பழையபடி கந்தலா கலைஞ்சிருக்கும் பாருங்க.. அப்ப ஒரு குத்து..

3) அன்னைக்குன்னு புருஷன் மேல ரொம்ப பாசம் பொங்கும்.. பாவம்யா அவன்னு தோணும். சரின்னு டின்னருக்கு அவருக்குப் பிடிச்ச டிஃபன் ஏதாவது செஞ்சு ஹாட் பாக்ஸ்ல வெச்சிருப்பாங்க. பிடிச்ச சட்னி, சாம்பார்ன்னு ரெடியா இருக்கும். அன்னைக்குன்னு ஒரு ஃபோன் கூட பண்ணாம நம்மாளு ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு போய்ட்டு, அவங்க கூப்பிடறப்பவும் ‘இதோ வந்துட்டேன்மா.. வந்துட்டே இருக்கேன்’ன்னு அடிச்சு விட்டுட்டு ’கண்டுபிடிக்க மாட்டா ஸ்மெல் இல்ல’ன்னு ஒரு நம்பிக்கைல வீட்டுக்குப் போவான். கதவைத் திறந்த உடனே மனைவியைப் பார்த்து கேனத்தனமா அசடு வழியறதுலேர்ந்தே அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அப்ப தோணும் இவன் மூக்குலயே ஒரு குத்து விட்டா என்ன’ன்னு..

4 - அ) குழந்தைகளைக் கூட்டீட்டு எங்கயாவது போலாம்ன்னு ப்ளான் பண்ணச் சொல்லுவாங்க. நம்மாளும் ப்ளானெல்லாம் பக்காவா போடுவாரு. கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி ‘லீவு சாங்ஷன் ஆகல’ அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டு ரெண்டு நாள் மூட் அவுட்லயே இருக்க வெச்சுட்டு, அப்பறமா ஏதோ எவரெஸ்ட்ல ஏறினவனாட்டம் ‘எப்படியோ சமாளிச்சுட்டேன் போலாம்’ன்னு சொல்லுவான் பாருங்க.. ‘எதுக்குய்யா டென்ஷனைக் குடுக்கற?’ன்னு ஒரு குத்து விடணும்னு தோணும் அப்ப..

4 -ஆ) டூர் போறப்ப அல்லது எங்கயாவது பிரயாணம் போறப்ப பஸ்ல/ட்ரெய்ல ஏறி எல்லாம் உட்கார்ந்த பிறகு ‘இரு வர்றேன்’னு தம்மடிக்க (அ) புத்தகம் வாங்கன்னு இறங்கிப்போவான் நம்மாளு. வண்டி எடுத்து கொஞ்சம் மூவ் ஆகும். மனைவி அவ்ளோ படபடப்பா தேடுவாங்க.. இவன் சாவகாசமா ஒரு இளிப்பு இளிச்சுட்டு வந்து உட்காருவான் பாருங்க.. எல்லார் முன்னாடி இருந்தாலும் பரவால்லன்னு அப்ப விடணும் ஒரு குத்து...

5) கல்யாணம், காட்சின்னு எங்கயாவது போனா அவங்க ஏதாவது பேசிகிட்டே வந்துட்டு இருப்பாங்க.. நம்மாளு சைஸா ஏதோ ஒரு செவப்புச் சேலைல வர்ற ஃபிகரை ரூட் விட்டுட்டு இருப்பான். அத கவனிக்காம அவங்க ’என்னங்க.. சரிதானே நாஞ்சொல்றது’ன்னு கேட்டு திரும்புவாங்க. இவன் தலையும் புரியாம வாலும் புரியாம ஒரு முழி முழிப்பான்லயா அப்ப விடணும்னு தோணும் அவன் சைட்டடிச்ச கண்லயே ஒரு குத்து...

6)அவங்க அம்மாவோ, அப்பாவோ வரும்போது வீட்டுக்கு வர்ற நம்மாளு, சிரிச்ச முகமா இல்லாம முஞ்சிய ஒரு மாதிரி வெச்சுகிட்டு வாங்க எப்ப வந்தீங்கன்னுகூட கேட்காம நேரா உள்ள போகும்போது அம்மாப்பா அவங்களை சங்கடமா ஒரு பார்வை பார்ப்பாங்க.. அப்ப டக்னு உள்ளாற போய் அவன் மூஞ்சிலயே ஒரு குத்து...

7) பையனோ, பொண்ணோ ஆசையா வந்து அவன் மேல விழுவாங்க... எங்கயோ இருக்கற எரிச்சலை அவங்க மேல காட்டி எரிஞ்சு விழும்போது குட்டீஸ் பாவமா ஒரு பார்வை பார்க்கும் அவங்கம்மாவை. அப்ப தோணும் அவங்களுக்கு...

8) மனைவி தனக்குப் பிடிச்ச/ரொம்ப நாள் தேடிகிட்டிருந்த கலர்ல ஒரு ட்ரெஸ்ஸை க்டைல பார்த்து கண்கள் விரிய.. ‘ஹை.. இதத்தாங்க தேடிகிட்டிருந்தேன்’ன்னு சத்தமா சொல்லிகிட்டே கைல எடுத்து ‘எப்படீங்க இருக்கு இது?’ன்னு கேட்பாங்க. நம்மாளு ஒரு சைஸா மூஞ்சிய வெச்சுகிட்டு ‘ம்ஹூம்’ன்னு உதட்டைப் பிதுக்கி ‘என்ன கலர்டி இது? இதுக்கா இந்த பில்டப்பு’ங்கறா மாதிரி ஒரு போஸ் குடுப்பான் பாருங்க.. அப்ப விடணும் அந்த வாய்லயே ஒரு குத்து..


9) எங்கயாவது ரொமாண்டிக்கான டூர் போயிருப்பாங்க. குட்டீஸ் வெளில விளையாடிகிட்டிருக்கும். மனைவி அந்த இயற்கையை ரசிச்சுகிட்டே ஒரு கப் டீயோ காபியோ கைல எடுத்துட்டு புருஷன்கூட வந்து உட்காரலாம் இங்க’ன்னுஅவனைத் தேடுவாங்க. நம்மாளு யாரு.. அங்கயும் பெரிய போர்வையைப் போத்திட்டு என்னமோ வெட்டி முறிச்சாப்ல தூங்கீட்டிருப்பான். அப்ப எழுப்பி கன்னத்துலயே ஒரு குத்து விடணும்னு தோணும் அவங்களுக்கு..

10) ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது நாலு வார்த்தை பேசி நேரங்காலமா தூங்காம கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு....
ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.........

Tuesday, July 20, 2010

சினிமிக்ஸ்

ணிசார் கொஞ்சம் ஏமாற்றி விட்டதால் கொஞ்ச நாளைக்கு தியேட்டர்கள் இருக்கும் வீதி வழிகூடப் போகாமல் சுற்றித்தான் போய்வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு களவாணி ஹிட் என்று நண்பர்களிடமிருந்து தகவல். போகலாம் என்றால் போகிற மாதிரி பக்கத்து தியேட்டர் ஒன்றிலும் அது திரையிடப்படவில்லை. அப்பறம் பார்த்துக்கலாம் என்று இருந்து விட்டேன்.

அதற்கடுத்த வாரம் ஆனந்தபுரத்துவீடும், மதராசப்பட்டினமும் ரிலீஸ். ஷங்கர் தயாரிப்பென்றால் கண்ணை மூடிக்கொண்டு போய், கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கலாமே என்று நினைத்தேன். ஆனாலும் மதராசபட்டிணம் மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. காரணம் ஒன்று: அதன் பீரியட் ஃபிலிம் என்ற அட்ராக்‌ஷன். இரண்டாவது: விஜய். அவரது கிரீடம் பார்க்கவில்லை. ஆனாலும் அவரது இரண்டாம் படமான பொய் சொல்லப்போறோம் அவ்வளவு பிடித்திருந்தது. மூன்றாவது காரணம்: அதன் விளம்பரங்கள். ரொம்பவும் எளிதான தீம். ஆனால் எஃபெக்டீக்வாக செய்திருந்தார்கள்.

முதலில் ஆனந்தபுரத்து வீடு என்று முடிவாகி ரிலீஸான வெள்ளி போக நினைத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக வயிற்றுவலி அந்த எண்ணத்தில் மண்ணைப் போட்டதால் மகாலட்சுமி நகர் வீட்டுக்குப் போனேன். (அட.. எங்க வீட்டுக்குத்தாங்க..) சமீபகாலங்களில் – அதாவது ஓரிரு வருடங்களில்- வெள்ளி அல்லது சனிக்கிழமை மிஸ் ஆனால் பிறகு அந்தப் படத்துக்கே போவதில்லை. ஆக இவை இரண்டையும் களவாணி லிஸ்டில் விடுபட்டவைகளில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தமிழக ஏமி ரசிகர் மன்றத் தலைவர் சங்கரநாராயண் அழைத்து ‘படத்தை மிஸ் பண்ணாதீங்க தல’ என்று செல்லமாக மிரட்டி படத்தை சிலாகித்து இரண்டொரு வார்த்தைகள் அரைமணி நேரம் பேசினார். ஆகவே என்னுள் இருந்த சினிமனப்புயல் ஆ.வீ-யிலிருந்து மதராசபட்டிணத்தின் மீது மையம்கொண்டது.

இந்த நிலையில் சென்ற வாரம் சொந்த ஊரான உடுமலை விஜயம் செய்யவேண்டி இருந்தது. போன இடத்தில் ஒரு நாள் ஃப்ரீயாக இருக்கிற சூழல்.

தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து டாக் (TALK Not DOG!) நன்றாக இருப்பதால் மீண்டும் வேறொரு தியேட்டரில் களவாணி போடப்பட்டிருந்தது. ஆக காலை ஷோ களவாணி, இரவு ஷோ மதராசபட்டிணம் என்று நானே என்னிடம் பேசி முடிவு பண்ணி கிட்டத்தட்ட நினைவு தெரிந்து ஒரே நாளில் இரண்டு படம்!


களவாணியில் ஹீரோயின் ஓவியாவின் அண்ணனாக வரும் திருமுருகன் என்னை ரொம்பவும் கவர்ந்தார். அலட்டாத இயல்பான நடிப்பு. செமையான பாடி லாங்குவேஜ். அதேபோல எந்தப் பிரச்சினையையும் வழக்கமான பதிலுக்கு பதில் அடிதடி என்பதுபோல இல்லாமல் எல்லா சண்டையையுமே விட்டுப் பிடிக்கிறார்கள். பிராக்டிகலாக இருந்தது. பார் சண்டை, எதிரி கிராமத்துப் பெண்ணைக் கடத்துவது என்று ஒவ்வொரு பிரச்சினையின் போதும் உடனே பதிலுக்கு ஓடாமல் ரியலாக என்ன நடக்குமோ அப்படி திரைக்கதை அமைத்துக் கொண்டுபோன விதத்துக்காக இயக்குனருக்கு ஷொட்டு!

விமல் கனகச்சிதம். அதுவும் அந்த யமஹா அவரைப்போன்ற இளைஞர்களின் கனவு பைக்! அதில் விமல் வெள்ளுடையில் சாய்ந்து வரும் ஸ்டைல் நன்றாகவே பொருந்தியிருக்கிறது அவருக்கு!

கடைசியில் மச்சானும் மாப்பிள்ளையும் ஒன்றாக பீர் அடித்தபடி இரண்டு ஊர்களுக்கும் நெடுநாள் இருக்கும் கோயில் சிலை பிரச்சினைக்கு போகிற போக்கில் தீர்வு காண்கிறார்கள். ‘வெரிகுட்ரா’ என்றபடி வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.

மதராசபட்டிணம் – ஆகஸ்ட் 15 –தாய்மண் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அழகான காதலையும் ஆங்கிலேயர் காலத்தையும் மிக்ஸிங் செய்து அசத்தலாகக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவாக சீரியஸ் தனமும் இல்லாமல் நடுநடுவே இயல்பான நகைச்சுவை வேறு. வெற்றிக்கு கேட்கவா வேண்டும். எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. ஆகஸ்ட் 15ல் ஆர்யா-ஏமியை போலீஸ் துரத்துவது ரொம்ப லெங்க்த்! அதேமாதிரி கடைசியில் துரையம்மா காலேஜ், துரையம்மா அறக்கட்டளை, துரையம்மா இஸ்திரிக்கடை என்று விக்ரமனையும், தமிழ்ப்படத்தையும் ஞாபகப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். என்ன ஆனாலும் க்ளைமாக்ஸில் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

ஜீவி ப்ரகாஷின் இசை – டாப் க்ளாஸ். அதேபோல ஆர்ட் டைரக்‌ஷன்.

தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்டதும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.

இசை:

யுவனின் இசையில் பாணாகாத்தாடி, தில்லாலங்கடி, காதல் சொல்ல வந்தேன். நான் மகான் அல்ல என்று சென்ற வாரம் யுவன் வாரம்.

காதல் சொல்ல வந்தேனின் ஓ ஷலா பிடித்தது. பாணாகாத்தாடியில் யுவன் பாடிய தாக்குதே கண் தாக்குதே அருமையான மெட்டு. மெட்டுக்கேத்த வரிகள். (வாலி!) ரசிக்க வைத்தது. தில்லாலங்கடியில் சொல்பேச்சு கேட்காத (சித்ரா-ஷ்ரேயா கோஷல்) பாடலில் யுவனின் குரலில் வரும் ‘நம்தும்னா தும்தரே’ சூப்பர். அதேபோல கைலாஷ்கேர், ரஞ்சித் குரலில் மெமரி லாஸ் பாடலும் கவர்கிறது. ஹிட்டாகிவிடும். நான் மகான் அல்ல ராகுல் நம்பியாரின் ‘வாவா நிலவைப்பிடிச்சு’ - பிடிச்சு.

இவை முதல்கட்ட கவனஈர்ப்புத் தீர்மானங்களே. கேட்கக் கேட்க என்ன ஆகுமெனத் தெரியவில்லை.

ஒரு விஷயம்: தில்லாலங்கடிக்கு ‘திருதிரு துருதுரு’ ஆடியோ சிடியை இலவசமாகத் தந்தார்கள். ‘நான் மகான் அல்ல’வுக்கு... ‘ஜக்குபாய்’.

.

Thursday, July 15, 2010

இவனெல்லாம் உருப்படுவானா சார்? (புனைவு)

சம்பவம் – 1

காலை எட்டு மணி. இவன் குடும்பத்தோடு அந்த இரயில் நிலையத்திற்குள் நுழைந்தான். பிளாட்ஃபாரத்துக்குள் ‘போய்ட்டு ஃபோன் பண்ணுங்க’ளுக்கும், காபி டீ, காபி டீக்களுக்கும் நடுவில் பயணிகளை கவனிக்கச் சொல்லிக் கொண்டிருந்தது பெண் குரல். இவன் நீஈஈஈஈளமாக நின்று கொண்டிருந்த க்யூவின் வால் பிடித்து நின்றான். மனைவி, குழந்தைகளை ‘அப்படி வெய்ட் பண்ணுங்க.. டிக்கெட் வாங்கீட்டு வர்றேன்’ என்றான்.


க்யூ மெது மெதுவாக டிக்கெட் கவுண்ட்ரை நோக்கி நகர ஆரம்பித்தது. இவன் இருந்த க்யூவுக்கு அருகில் ரிசர்வேஷன் கவுண்டர் முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டிருந்தன.
அப்போதுதான் திடீரென உள்ளே வந்தார் ஒரு காக்கிச் சட்டைக்கார போலிஸ்காரர். இடையூறாக நின்று கொண்டிருந்த பயணிகளை ஓரமாக நிற்கச் சொன்னார். அவர் குரலில் கடுமை கூடி இருந்தது. பெண்கள், குழந்தைகள் எல்லாரிடமும் அதட்டும் குரலில் பணித்துக் கொண்டிருந்தார். இவன் அவரது நடவடிக்கைகளை கவனிக்கத் துவங்கினான். என்ன இந்தாளு வர்றவன் போறவன்கிட்டயெல்லாம் எரிஞ்சு விழுந்துட்டிருக்கான் என்றார் இவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர். அந்தப் போலீஸ்காரருக்கு எல்லாரும் தன்னை பய உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒருவித மிதப்பைத் தந்திருக்கக் கூடும். முன்னை விடவும் நடையில் கடுமை கூட்டிக் கொண்டு அந்த ரிசர்வேஷன் கவுண்டர் முன் வந்து நின்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு அகலமாக தன் பார்வையை வீசினார். இரண்டாவது வரிசையில் ஒரு நாற்காலி காலியாக, ஒரு லெதர் பை வைக்கப்பட்டு இருந்ததை கவனித்து அதனருகில் வந்து நின்றார்.


‘ஏய்.. அந்தப் பையைத் தூக்கிப் போட்டுட்டு சேர்ந்து உட்காருங்க’ என்றார். உடனே அருகில் அமர்ந்திருந்த இளைஞன் ‘திஸ் ஈஸ் மை ஃப்ரெண்ட்’ஸ் பேக். ஹி ஈஸ் கமிங் சார். கோயிங் ஃபார் ஏ டி எம்’ என்றான் உடைந்த ஆங்கிலத்தில். அவ்வளவுதான். ஏதோ வெறி வந்தவரைப் போல அந்தப் போலீஸ்காரர் பாய்ந்து வந்து அவன் சட்டையப் பிடித்துத் தூக்கினார். ‘டேய்.. நாயே.. என்னடா இங்கிலீஸு? எட்ரா அந்த பேகை. எடுத்துட்டு நீயும் வெளில ஓடிப்போய்டு’ என்றார்.. இல்லையில்லை... என்றான். இளைஞன் தீனமான குரலில் ‘ஐ டோண்ட் நோ டமில் சார்.. வாட் மிஸ்டேக் சார். வி ஆர் வெய்ட்டிங் ஃப்ரம் ஏர்லி மார்னிங் சார்’ என்றான். அவன் சட்டைக் காலர் போலீஸ்காரன் கையில் இருந்தது.


வடநாட்டு இளைஞன். மொழி தெரியவில்லை அவனுக்கு. அதைப் பற்றியெல்லாம் போலீஸ்காரன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் சட்டையைப் பற்றியவாறே தரதரவென இளைஞனை இழுத்து கொஞ்ச தூரம் கொண்டு விட்டான். திரும்பி ரிசர்வேஷன் நாற்காலி வரிசையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து ‘அந்த ரெண்டு சேர்லயும் மாறி சேர்ந்து உட்காருங்க. அவனுக வந்தா விடக்கூடாது ஆமா’ என்றான். அமர்ந்திருந்தவர்கள் அந்த அதிகாரத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டவர்களாக சடாரென மாறி உட்கார்ந்தார்கள். எவருக்குமே எதற்காக அந்தப் போலீஸ்காரன் அப்படிச் செய்தான் என்பது தெரியவில்லை.
’பாவம்க அந்தப் பையன். இங்க்லீஷ்ல கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசிட்டான் போல.. அதுனாலதான் இந்தக் கதி’ என்றார்கள் சிலர். இந்த போலீஸ்காரன் எப்பவுமே இப்படித்தான் என்றார்கள் சிலர். இது நடந்தபிறகு அந்த வழியாக போலீஸ் வந்தபோதெல்லாம் சுற்றிலும் நிசப்தம் நிலவியது.


இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இவன், தன் முறை வந்ததும் டிக்கெட் வாங்கிக்கொண்டு அமைதியாக மனைவி, குழந்தைகளை அழைத்துக்

கொண்டு பிளாட்ஃபாரத்துக்குள் சென்றான்.

*****************************
சம்பவம் – 2

இவன் அந்தச் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். இரைச்சலோடு வாகனங்கள் இவனைக் கடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர என்று அந்த ஊரின் எல்லா வாகனங்களும் அந்த வழியாகத்தான் செல்வதுபோல இருந்தது அவனுக்கு.


கொஞ்ச நேரத்தில் கேட்டது சைரன் ஒலி. புழுதி பறக்க ட்ராஃபிக் போலீஸ்
வாகனம் ஒன்று எல்லாரையும் ஒதுங்கிச் செல்ல சொன்னபடி பறந்தது. வாகன ஓட்டிகள் சடாரென சாலையின் ஒரு பகுதியில் தங்கள் வாகனங்களைச் செலுத்த ஆரம்பித்தனர். ஒரு சிலர் ஓரமாக நிறுத்தியே விட்டனர். அதில் இவனும் ஒருவன்.


அது ஒருவழிப் பாதை. ட்ராஃபிக் போலீஸ் வாகனத்தைத் தொடர்ந்து ஸ்கார்ப்பியோ, சுமோ என்று பெரிய பெரிய கார்கள் சைரன்களோடும், கட்சிக் கொடிகளோடும் மின்னல் வேகத்தில் இவன் நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்தது. கிட்டத்தட்ட இருபது கார்கள். எல்லாம் போனபிறகு மறுபடி சீராக எல்லாரும் தங்கள் வாகனங்களைச் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த ஹார்ன் ஒலியோடு இவனைக் கடந்த கட்சிக் கொடி பறந்த சுமோ ஒன்று சடாரென ப்ரேக்கிட்டு நின்றது. அது நின்ற வேகத்தில் அருகில் சென்று கொண்டிருந்த எல்லா இருசக்கர வாகனங்களும் நின்றன. காரின் ட்ரைவர் மிக வேகமாக இறங்கினான். அப்போதுதான் இவன் கவனித்தான். காருக்கு சற்று முன் வலதுபுறம் திருப்பவேண்டி ஒரு நடுத்தர வயதுக்காரர் தனது ஸ்கூட்டியைத் தடுமாறி நிறுத்தியிருந்தார். இந்த ட்ரைவர் ஓடிச் சென்று அந்த ஸ்கூட்டியில் ஆடிக் கொண்டிருந்த சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, அவரிடம் ஏதோ சொல்லியபடி மறுபடி அதே வேகத்தில் தன் காரில் வந்தமர்ந்து காரைச் செலுத்திச் சென்றான். ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு கட்சிக்காரர் ட்ரைவர் செய்வதை மிதப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.


சாலையில் இருந்த எல்லாருமே அந்த நடுத்தர வயதுக்காரரை பாவமாகவே பார்த்தனர். எல்லா கார்களோடும் சேர்ந்து செல்ல வேண்டிய ஏதோ ஒரு பிரமுகரின் கார், கொஞ்சம் தாமதமாகப் பின்தொடரவே செல்லும் வேகத்தை அந்த ஸ்கூட்டிக்காரரின் செயல் மட்டுப்படுத்தியதே அவர்களின் கோபத்துக்குக் காரணம் என்று பேசியபடி கலைந்து கொண்டிருந்தனர். கலெக்டர் ஆஃபீஸ்தான் எல்லா காரும்போகுது.. போனா சாவியை வாங்கிக்கலாம் என்று யாரோ அவருக்கு சொன்னார்கள். இது நடந்த இடத்துக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கும் ஏழு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். அலுவலக வேலையாக வெளியில் வந்த இவனுக்கு நேரமாகி விட்டிருந்தது. தனது பைக்கை விரட்டியபடி அந்த இடத்தைக் கடந்தான் இவன்.
********************************

முதல் சம்பவத்திலாவது பரவாயில்லை.. இவன் குடும்பத்தோடு இருந்தான். இரண்டாவது சம்பவத்தில் இவன் கொஞ்ச நேரம் நின்று அந்த ஸ்கூட்டிக்காரரின் வேதனையில் பங்கெடுத்திருக்கலாம். எல்லாரும் அவரவர் வேலையப் பார்த்துக் கொண்டு நகர, அந்த நடுத்தர வயதுக்காரர் தனக்கு ஏன் இது நேர்ந்தது என்று தெரியாமலே பாவமாக சாவி எடுக்கப்பட்ட ஸ்கூட்டியை தள்ளிச் சென்ற காட்சி கொடூரமானது. பள்ளிக்குச் சென்ற மகளை அழைத்து வருவதற்காக அவர் சென்று கொண்டிருக்கக்கூடும். மருத்துவமனையில் இருக்கும் யாரோவைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கக்கூடும். எதுவாயினும் அவருக்கு அந்த நேரத்தில் நிகழ்ந்தது கொடுமை. குறைந்தபட்சம் சாவியை எடுத்தாலும் வயர்களைப் பிடுங்கி ஸ்கூட்டியைச் செலுத்திப் போக அவருக்கு உதவிவிட்டு வந்திருக்கலாம். இந்த லட்சணத்தில் தனது பைக்கில் அச்சம் தவிர் என்று பாரதியார் வாசகம் வேறு ஒரு கேடு இவனுக்கு...


நீங்களே சொல்லுங்க சார்.. இவனெல்லாம் உருப்படுவானா?.

Wednesday, July 14, 2010

அவியல் 14.07.2010

உடுமலை தளி ரோட்டில் பைக்கில் நின்று கொண்டிருந்தேன். (யாருய்யா அது… ‘பைக் மேலயா நின்னீங்க?’ன்னு பின்னூட்டம் போட நினைக்கறது?) கொஞ்சம் கசங்கலான ஆடைகளோடு ஒரு பெரியவர் அருகே வந்தார். கையில் ஒரு துண்டுச் சீட்டு. ’இது எங்க கிடைக்கும் தம்பி?’ எனக் கேட்டார். சீட்டைப் பிரித்துப் பார்த்தேன்.

PAN NUMBER என்று எழுதப்பட்டிருந்தது.

அவரை ஒரு மாதிரி பார்த்தேன். ‘இது எதுக்கு கேட்கறீங்க?’ அவர் விடாமல் ‘இது எந்தக் கடைல கிடைக்கும்ன்னு சொல்லுங்க. இந்த வீதிலதான் ஏதோ கடை சொன்னாங்க’ என்றார். நான் அவரிடம் ‘இதெல்லாம் கடைல கிடைக்காதுங்க.. சரி.. எதுக்கு இதைக் கேட்கறீங்க’ என்றேன். 'பாங்குல பணம் போடப் போனேன் தம்பி. அதுக்கு இது வேணும்கறாங்க' என்றார். அப்போதுதான் புரிந்தது.


பெரிய தொகை எதுவோ வங்கியில் டெபாசிட் செய்யப் போயிருக்கிறார் போல என்று எண்ணிக் கொண்டே அவருக்கு எப்படி உதவலாம் என்று யோசித்துக் கொண்டே இறங்க எத்தனித்தபோது, ‘விடுங்க தம்பி.. நான் பேங்கலயே போய் சண்டை போடறேன்.. ஒரு மணி நேரமா இது கிடைக்காம திண்டாடறேன். லட்சக்கணக்குல என் பணத்தை அவங்ககிட்ட குடுத்து வைக்கறேன். நான் ஏன் இதை வாங்க அலையணும்?’ வேணும்னா அவங்க வாங்கித்தரட்டுமே’ என்று சலித்துக் கொண்டபடி போனார்.

பாவமாகத்தான் இருந்தது.
******************************
எனது அவியல்களில் முடிந்தவரையில் உண்மைச் சம்பவங்களையே தருகிறேன். சுவாரஸ்யத்துக்காக நடையில் சில மானே தேனே பொன்மானே போட்டிருக்கலாம். ஆனால் மையக்கரு நிஜமாக நடந்ததாகத்தான் இருக்கும். ரொம்ப டுபாக்கூராக இருந்தால் ‘அது மட்டும் என் கற்பனை’ என்று டிஸ்கியில் அசடு வழிந்திருப்பேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. ரெகுலராக அவியலில் ‘அது உண்மையா நடந்ததா? இது உண்மையா நடந்ததா' என்று ஒரு பின்னூட்டமாவது வருகிறது. (சொல்லீட்டியில்ல.. இதுலயும் போடறோம் பாருடா’ன்னு கிளம்பினீங்க.. அவ்ளோதான்.. ஆமா..) அடுத்து வரும் பத்தியைப் பார்த்து ‘இது டுபாக்கூர்.. உங்க பொண்ணு இப்படிக் கேட்டிருக்காது’ன்னுடாதீங்க!
*************************
திங்கள் இரவு வீட்டில் சப்பாத்தி. சப்பாத்திக்கு நிலக்கடலை சட்னி வைத்திருந்தார் உமா. நன்றாகத்தான் இருந்தது டேஸ்ட், எனினும் ‘என்ன நிலக்கடலை சட்னி?’ என்று கேட்டு வைத்தேன். பொட்டுக்கடலை இல்ல.. 'பொட்டுக்கடலை வாங்கிட்டு வா’ன்னா உங்க சின்ன மக போமாட்டீன்னுட்டா’ என்றார். வீட்டு எதிரிலேயே கடை.

மேகாவை அழைத்து 'அம்மா சொன்னப்ப ஏம்மா போகல?' என்று கேட்டேன். 'ஹோம்வொர்க் இருந்ததுப்பா' என்றாள். 'எதிர்லயேதானே கடை.. போய்ட்டு வர எவ்ளோ நேரமாகும்? என்றேன்.

'அம்மா நூறு பொட்டுக்கடலை வாங்கிட்டு வரச் சொன்னாங்கப்பா.. நூறு எண்ணி தர்றதுக்கு நேரமாகும்ல?' என்றாள். எல்லாரும் சிரித்து விட்டோம். சாப்பிட்டு முடித்து அவளை கடைக்கு அழைத்துச் சென்று நூறு என்றால் நூறு கிராம் என்பதை விளக்கி எடைக்கல் இருந்தால் காண்பிக்கலாம் என்று கேட்டேன். கடைக்காரர் சொன்னார். ‘என்னண்ணா நீங்க.. அதெல்லாம் இல்ல. எலக்ட்ரானிக் ஸ்கேல்தான்’

எலக்ட்ரானிக் யுகத்தில் காணாமல் போனவற்றில் எடைக்கல்லும் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.

(இதை எழுதும்போது ஐந்து கிலோ, பத்து கிலோ என்று பெரிய பெரிய எடைக்கற்களை தராசில் வைத்து விறகு வாங்கிக் கொண்டு சைக்கிளில் போன நாட்கள் ஞாபகம் வருகிறது.)
**************************
செம்மொழி மாநாட்டைப் பற்றி என்ன நினைக்கறீங்க என்று சில நாட்கள் முன்பு சில பேர் கேட்டார்கள். ஏதேதோ சொல்லி வைத்தேன். கரிசல் காட்டு எழுத்தாளர் கிராவின் கதை ஒன்று.


அழகு என்ற தங்கள் மகனை தமிழ் படிக்க நகரத்துக்கு அனுப்பினர் கிராமத்துப் பெற்றோர். ரொம்ப நாட்கள் கழித்து அவனும் படித்து திரும்பி வந்தான். வந்ததுமே ’அன்னாய்.. தாதாய்’ என்றான் பெற்றோரைப் பார்த்து. அவர்களுக்கு திக்’கென ஆயிற்று. ‘ஏலே அளகு.. என்னசாமி ஆச்சு உனக்கு?’ என்றிருக்கிறார்கள். இவன் தொடர்ந்து ‘அன்னாய்.. தாதாய்...அயிற்சி மிக்கது. அடிசில் புக்கி, சிறிதே அன்னம் கொணர்க’ என்றானாம்.


ஏதேதோ பாஷை பேசறான்.. இவன வடநாட்டுப் பேய்தான் பிடித்துவிட்டது என்று நினைத்து ஓர் அறையில் அவனைப் பூட்டி, பூசாரியைக் கொண்டு வரலாம் என்று கிளம்பினார்கள். பூட்டும் வரை ‘அன்னாய்... தாதாய்..’ என்று புலம்பியிருக்கிறான் அவன். இவர்கள் போய் சிறிது நேரம் கழித்து பூசாரியோடு வந்து கதவைத் திறந்ததுமே அவன் ‘ஆத்தோவ்... வகுறு பசிக்குல்ல.. கஞ்சி ஊத்து’ என்றிருக்கிறான்.


பூசாரியக் கூட்டீட்டு வந்ததுல சரியாப்போச்சுபோல என்று அவர்களும் நினைத்து மகிழ்ந்தார்களாம்!


****************************

‘இப்போவெல்லாம் ஏன் அவியல்ல படிச்ச/பிடிச்ச கவிதை போடறதில்ல?’ என்று லண்டனிலிருந்து கேட்ட புவனாவுக்காக......

சைக்களில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை

-கல்யாண்ஜி

(லண்டன்ல புவனான்னு யாராவது இருப்பாங்கள்ல? அப்ப சரி...)

******************************

நம்ம சகா கார்க்கி நேத்து கூப்ட்டான். ‘நன்றி பரிசல்.. ட்விட்டர்ல வைரமுத்து ஸ்பெஷல் நான் ஆரம்பிச்ச உடனே நீங்களும் வந்து பிடிச்ச வரிகளா போட்டுத் தாக்கினதால அது சூப்பர் ஹிட் ஆய்டுச்சு பாருங்க..’ என்றான்.

‘நமக்குள்ள தேங்க்ஸா? ஒத விழும்’ என்றேன். ‘அப்ப இந்தா புடிச்சுக்கோங்க.. அடுத்த தோழி அப்டேட்ஸ்ல வரப்போற ஒரு மேட்டர். உங்களுக்காக எக்ஸ்ளுசீவா சொல்றேன்’ என்றான்.

இதோ அது..

‘வீட்டுக்குப் போக பைக்கில் ஏறியபிறகு முத்தமிடாதே தோழி. ட்ராஃபிக் போலீஸ் மது அருந்திய பின் வாகனம் ஓட்டுகிறேன் என்கிறார்கள்’

**************************

.

Sunday, July 11, 2010

இந்தாங்க பதில்...

இதுக்கு முன்னாடி கடினமா கேள்விக்கு பதில் சொன்ன அனுபவம் உண்டா ? (பிரியமுடன் பிரபு)


உண்டு. உங்கள் ஜூனியர் மாத இதழில் சில வாசகர்களை தேர்வு செய்து அந்த வாசகர்களையே ஆசிரியர் குழுவாக இருக்கப் பணித்தார்கள். அப்போது எனக்கு இரண்டு கேள்வி கொடுத்தார்கள். ஒரு கேள்வியும் பதிலும் நன்றாக நினைவிருக்கிறது.

கேள்வி: உயிருக்குப் போராடும் ஒரு பெண், கற்புக்குப் போராடும் ஒரு பெண் இருவரில் யாருக்கு முதலில் உதவுவீர்கள்?

இதற்கு நான் சொன்ன பதில்: கற்புக்குப் போராடும் பெண்ணுக்கு முதலில் உதவி செய்வேன். உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு முதல் உதவி செய்வேன்.
(எல்லாரும் ஜோரா கைதட்டியாச்சா.. வெரிகுட்!)

******************
நீங்கள் முட்டாள் என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? (வால்பையன் )

நிச்சயமா தெரியும் வால்!


**********************

என் ஆசை நாயகி தமன்னா நடிக்க இருக்கும் அடுத்த தமிழ் படங்கள் எவை? (ராம்ஜி யாஹூ)

அப்பாய்ன்மெண்ட் வாங்கிக் குடுங்க. சமர்த்தா உட்கார்ந்து பேசி, கேட்டுச் சொல்றேனே... (எப்படியெல்லாம் கெளம்பறாங்கப்பா..)

***********************

ஏதாவது வெளியிடங்களுக்கு போகும்பொழுது நாம் அணிந்திருந்த சட்டை போலவே அச்சு அசலாக சட்டை அணிந்திருக்கும் முன் பின் அறிந்திருக்காத ஒருவர் மீது அந்த நேரத்தில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு அவரையே வெறித்து பார்க்கிறோமே ஏன்? (ப்ரியமுடன் வசந்த்)

என் இனமடா நீ என்கிற ஈர்ப்புதான். வேற என்ன?

****************************

பரிசல், சுஜாதா ஒப்பிடுக. (HVL)

நல்ல வேளை இதைப் படிக்க அவர் இல்லை...

***************************

இந்த பின் நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன? (பாலா)

இந்தப் பதிவைப் படிங்க..

*****************************

நண்பர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஏற்படும் சிறு பொறாமையை யும்,அதனால் வரும் ஆற்றாமையையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுவதை எப்படித் தடுக்கலாம்? (M.G.Ravi Kumar)

நாமும் முன்னேற வேண்டும் என்ற தூண்டுதலைத் தரும் சின்னப் பொறாமையை அங்கீகரிக்கலாம். ஆற்றாமையையும், தாழ்வு மனப்பான்மையையும் அண்டவே விடக்கூடாது.

தவிர்க்க ஒரே வழி... நம்மை அவருடன் ஒப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதுதான்.


சிறந்த கேள்விக்கான பரிசு கொடுக்க முடிவு செய்தால் உங்க கதை தொகுப்பை தவிர வேறென்ன தருவீர்கள்? (கார்க்கி)

என் அன்பு.


வாழ்க்கை உங்களுக்கு எப்ப அழகாத் தோணுது? எல்லா சுதந்திரங்களோட முக்கியமா நண்பர்களோட இருந்தப்பவா?.. தவிர்க்க முடியாத,தவிர்க்க கூடாத பொறுப்புகளோடு இருக்கறப்பவா? (சிவக்குமார்)

என்னையும் நம்பி இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களை மாதிரி ஒரு ஜீவன் இருக்குன்னு நெனைக்கறப்ப...


எதுல அதிகமா புல்லரிக்கும்... ஒரு பையன் பொண்ணுகிட்ட ல்வ்வை சொன்னதும் அந்த பொண்ணும் உடனே ஏத்துகிறப்பவா? இல்லை திடீர்னு ஒரு பொண்ணு பையன் முன்னாடி வந்து தானாகவே தன்னோட காதலை சொல்றப்பவா? (சிவக்குமார்)

நிச்சயமா ரெண்டாவதுலதான் சிவா. புல்லரிக்குமான்னு தெரியல. சந்தோஷமா இருக்கும். உலகமே அழகா தெரியும். எதிர்ல வர்றவங்க போறவங்களுக்கெல்லாம் புன்னகையைத் தரச்சொல்லும்..


சமீபத்தில் அட இது ரொம்ப நல்லாயிருக்கே அப்படீன்னு தோணினது?(சிவக்குமார்)


ஹி...ஹி.... சொன்னா வீட்ல அடிவிழும்க. விட்டுடுங்க..


அட கொய்யாலே இவ்வளவு நாளா இது எனக்கு தெரியாம போச்சே..அப்படீன்னு உங்களுக்கு எதேனும் அனுபவம் உண்டா.. (சிவக்குமார்)

நிறைய... முதல் டைம் ஃப்ளைட்ல போறப்ப ஜன்னல் வழியா தெரிஞ்ச விமான இறக்கைகளைப் பார்த்து, கூடவே இன்னொரு ஃப்ளைட்டும் போட்டி போட்டுட்டு வருதுய்யா நெனைச்ச ஆளு நான்..


கடைசியா ஒரு ஹாட் கொஸ்டின்.. செம்மொழி மாநாட்டுக்கு இளையாராஜா இசையமைக்காதில் உங்களுக்கு வருத்தம் உண்டா??இல்லையா??? (சிவக்குமார்)

ஏற்கனவே அவர் இசையமைச்ச நிறைய பாட்டு தமிழை எங்கெங்கெல்லாமோ கொண்டு சேர்த்திருக்கு.. இந்த ஒரு பாட்டு போடலைன்னா என்ன? ஆனா அவரோட மகன் அதுல பங்கு வகிச்சதுல சந்தோஷம்..

வினாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? (வான்முகில்)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அழுதுடுவேன்க..

கி.பி. 2100 -ல் இருக்கப் போகிற உலகமொழிகள் என்னவாயிருக்கும்? குறிப்பா தமிழ் எந்த நிலைமையில இருக்கும்? (க.அண்ணாமலை)

இருக்கப்போகிற உலகமொழிகள் என்னவாயிருக்கும்? அதான் நீங்களே சொல்லிட்டீங்கள்ல... இருக்கும்! தமிழ் அதுபாட்டுக்கு இருக்கும்... யாரும் ஒண்ணும் பண்ண முடியாது...

ஆமா... என்னையெல்லாம் இப்படி கேள்வி கேட்கணும்ன்னு உங்களுக்கு யாரு சொல்லிக் கொடுத்தாங்க???

*******************************************

இனிமே கேள்வி கேளுன்னு சொல்லுவியடா நீ?-ங்கற ஸ்டைலிலயே கேள்வி கேட்ட நண்பர்களுக்கு தேங்க்ஸ்!

Friday, July 9, 2010

ஜோசப் பால்ராஜ் – பேட்டி

வலையுலகின் கடாமுடா சத்தங்களுக்கு மத்தியில் வலையுலகில் பிறர்க்கினியது செய்தே பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் சிலரை பேட்டி கண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இந்தப் பதிவு..

இன்றைக்கு: ஜோசப் பால்ராஜ். பள்ளி கல்லூரிப் படிப்பில் முதல் பெஞ்ச் மாணவன். பகுதி நேரப்படிப்பில் மேற்படிப்பு முடித்து சிங்கையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். நண்பர்களுக்கு மட்டுமின்றி நாடுபவர்களுக்கெல்லாம் உதவும் கர்ணன். (எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.... )

இருவாரங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்த ஜோசப் பால்ராஜுக்கு கோவை செல்ல வழி காட்டும்விதமாக அவருடன் காரில் சென்றவாறே கண்ட பேட்டி..ஜோசப் பால்ராஜ்நீங்க பதிவெழுத வந்தது எப்படி?


2007ல விகடன் வரவேற்பறையில ஆசிப் மீரான் அண்ணாச்சியோட வலைப்பூ அறிமுகத்த படிச்சுட்டு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன். மாரநேரிங்கற பேர்ல.


மாரநேரி?


என் ஊரு. தஞ்சாவூர் பக்கத்துல. ஆரம்பிச்ச புதுசுல தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பத்தியெல்லாம் தெரியாது. நானே எழுதி, மெய்ல் மூலமா இரண்டொரு நண்பர்களுக்கு ஃபார்வர்ட் பண்ணுவேன். அப்பறம் சில பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வர்றதப் பார்த்து பரவால்ல என்னோடத எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க போல’ன்னு நெனைச்சுட்டேன்.. அப்பறமா சிங்கப்பூர்ல புதிய பதிவர்களைக் கண்டா ஆதரிச்சு, அரவணைச்சு வழிகாட்டற கோவி. கண்ணணோட பதிவுல பதிவர் சந்திப்பு குறித்து படிச்சுட்டு அவர் கூட போன்ல பேசினேன். அடுத்த வார இறுதியில என் வீட்டுக்கு வந்தாரு. திரட்டிகள் பத்தியும் எப்படி ப்ளாக்கை மார்கெட்டிங் பண்றதுன்னும் சொல்லிக் கொடுத்தார்... அதுக்கு அப்பறம் தொடர்ந்து சிங்கைப் பதிவர் சந்திப்புகள்ல கலந்துகிட்டு ஜோதியில ஐக்கியமாயிட்டேன். அந்த சமயத்துல அபிஅப்பாவுக்கு சில கேள்விகள்னு கலைஞரை விமர்சிச்சு பதிவு போட்டேன். செம ஹிட்டாச்சு. அதுக்கு லக்கிலுக் பதில் போட்டிருந்தாரு. உடனே லக்கிலுக்குக்கு சில கேள்விகள்னு எழுதினேன். அதுலதான் அப்துல்லா வந்து பதில் சொல்ல, நான் எதிர் கேள்விகேட்கன்னு ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை வந்துச்சு...


என்னது அப்துல்லா சண்டைபோட்டாரா?


‘ஆமா... சண்டை முடிவுல அப்துல்லாவோட நட்பை முறிச்சுக்கற அளவுபோய். இப்ப அப்துல்லா என் நண்பர் இல்லைங்கறன்னு நிலைமைக்கு வந்தாச்சு..


நண்பர் இல்லைன்னு ஆய்டுச்சா? அப்பறம்??


அவர் இப்போ என் குடும்பத்துல ஒருத்தர். நானும் அவருக்கு அப்படியே. இதோ சென்னைல வந்து இறங்கினதுமே ஏர்போர்ட்ல என்னை ரிசீவ் பண்ணி இந்த காரைக் குடுத்தாரு. நாந்தான் வெச்சுட்டு சுத்திகிட்டிருக்கேன்.


இந்த மாதிரி சண்டை போட்டுக்கறவங்கள்லாம் நெருக்கமாய்ட்டா எவ்ளோ நல்லாருக்கும்.. இல்லையா ஜோசப்?


ஆமாண்ணா... கருத்து வேற்றுமைகளை மீறி நட்பு வளரணும். அதானே நட்பு? ஒரே கருத்துள்ள இரண்டு பேர் நட்பா இருக்கறதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?(ஜோசப் பால்ராஜை புகைப்படம் எடுக்க பதிவர்கள் போட்டா போட்டி)(ஆட்டோக்ராஃப் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி)
பதிவுலகத்துக்கு வந்தது மூலம் நீங்க சம்பாதிச்சது என்ன?


என்னை மாதிரி நாடு விட்டு நாடு போறவங்களை அதிகமா பாதிக்கறது தனிமைதான். அது எனக்கு இல்லை. நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான். அதேமாதிரி எந்த நாடு, எந்த ஊர் போனாலும் இறங்கின உடனே என்னை வரவேற்கறது என் பதிவுலக நண்பர்கள்தான். அதைவிட வேறென்ன வேணும். சொல்லுங்க?நீங்க சாதிச்சது?


தனியா நான் எதையும் சாதிச்சேன்னு சொல்ல மாட்டேன். நண்பர்கள் கூட சேர்ந்து மணற்கேணி-2009ஐ சிங்கைல நடத்தினதுல பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.


நான் இடைமறிக்கிறேன்.. ‘சிங்கைநாதனுக்கு நீங்க செஞ்ச உதவியை குறிப்பிட மறந்துட்டீங்களே...?’


‘இல்ல அண்ணா.. அத நான்மட்டுமில்ல.. அதுல பங்குவகிச்ச எல்லாருமே பெருமையா குறிப்பிட்டுக்கலாம். இன்னைக்கு அவர் நல்ல உடல்நலத்தோட, அதைவிட உறுதியான மனபலத்தோட இருக்காரு. அதுக்கு எல்லா பதிவர்களும் நேரடியா, மறைமுகமா அவருக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் நன்றி சொல்லி அந்நியப்படுத்த விருப்பமில்ல. அவர் இப்போ மாற்று இதயத்துக்காக வெயிட்டிங்ல இருக்காரு.சிங்கைநாதனுக்கு உதவினப்ப உங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைச்சதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுல சிறந்ததா எதை நினைக்கறீங்க?


எனக்கு கிடைச்ச பாராட்டு இல்லை, ஒட்டு மொத்த பதிவுலகத்துக்கும் கிடைச்சது அது. குசும்பன் சொன்னது... சிங்கைநாதன் ஓரளவு தேறிவந்த சமயம் ஒருநாள் ஃபோன்ல கூப்பிட்டான் குசும்பன். ‘டேய் ஜோசப்... இனி எனக்கு கவலையில்லைடா.. ஏதாவது ஒண்ணுன்னா நீங்க எல்லாம் இருக்கீங்கடா’ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டான். எனக்கு பேச்சே வர்ல. இந்த செக்யூர் ஃபீலிங்கை ஒருத்தனுக்கு குடுக்க வெச்ச பதிவுலகுக்கு நன்றின்னு நினைச்சுட்டேன்.பதிவுலக சண்டை சச்சரவுகள் குறித்து...


ரெண்டே வகைதான். ஒண்ணு எவனாவது மேல போறான்னா அவனை அமுக்கறது.. இல்லை தான் மேல வரணும்னா வேணும்னே பண்றது.. தான் புகழ் பெறனும்னோ, இல்ல அடுத்தவன் புகழ கெடுக்கனும்னோ செய்யிறது தான்.


இந்தியாவை விட்டுப் போய் வெளிநாட்டுல வேலை செய்யறோமேன்னு வருத்தம் உண்டா?


இல்லைங்க. உண்மை என்னான்னா நான் இந்தியாவில் வேலை தேடும்போது என் கூட இண்டர்வ்யூ அட்டண்ட் பண்ணினவங்ககூட நான் போட்டி போட முடியல. அதே வெளிநாட்டுல ஈஸியா செலக்ட் ஆகி செட்டில் ஆய்ட்டேன். ஆக, என்னைவிட புத்திசாலிகள் இந்தியாவுலதான் வேலை செஞ்சுட்டு இருக்காங்க’ - சிரிக்கிறார்.


புதுசா வர்ற பதிவர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க?


கிண்டலா? நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா? இருந்தாலும் ‘நிறைய படிங்க. நிறைய எழுதுங்க. நட்பு வட்டத்தை பெரிசாக்கிங்கோங்க. வலையை எழுதிப் பழக ஒரு சிறந்த களமா உபயோகப்படுத்தொக்கோங்க’-இந்த மாதிரி என் சீனியர்ஸ் எனக்குச் சொன்னத சொல்லிக்கலாம்’


பேட்டி நிறைவுறுகிறது.


********************************************
நான் ஜோசப் பால்ராஜுடன் கோவையில் சஞ்சய் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கல்லூரியின் முகவரி கேட்கிறார் ஜோசப். உள்ளே சென்று லேடீஸ் ஹாஸ்டலில் ஒரு பெண் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணை சந்திக்க வேண்டும் என்கிறார். நாங்கள் காரில் காத்திருக்கிறோம். இறங்கி ஒரு கவரில் பார்க்கர் பேனா ஒன்றும் சில ஆயிரம் ரூபாய் தாள்களும் வைத்து அந்தப் பெண்ணுக்கு அளித்துவிட்டு வருகிறார்.


நான் கிண்டலாகக் கேட்கிறேன்.. ‘என்னய்யா லேடீஸ் ஹாஸ்டலுக்கெல்லாம் விசிட் போறீங்க??’


ஜோசப் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘இந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லைண்ணா. சிங்கப்பூர்ல இருக்கறப்ப எங்க க்ரூப் மூலமா கேள்விப்பட்டு முழு படிப்புச் செலவும் நான் ஏத்துகிட்டிருக்கேண்ணா.. ‘இந்தியா வந்தா வந்து பார்த்துட்டுப் போங்கண்ணா’ன்னு சொல்லீட்டே இருக்கும். அதான் பார்த்துட்டு வந்தேன்’


காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை.


.

Tuesday, July 6, 2010

அவியல் 06.07.2010கோவை. உறவினர் ஒருவரின் அண்டை வீட்டுக்காரப் பெண்மணி. தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். காரணத்தை என் உறவினர் சொன்னபோது நம்புவதா என்றே தெரியவில்லை. சென்ற வாரம் கோவை சென்றிருந்தபோது அவர் சொன்னது உண்மை என்று உறுதியாக அறிந்ததும் எரிச்சலும் கோவமும் கலந்து வந்தது.

சன் டி.வி-யில் டீலா நோ டீலா ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. கணவன் இந்தியா-பாகிஸ்தான் க்ரிக்கெட் மேட்ச் பார்க்க சேனலை மாற்றியிருக்கிறார். மனைவி மாற்றச் சொல்லும் சமயத்தில் மாற்றாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். கோவத்தில் அதிக அளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டாராம் மனைவி.

இதில் எனக்கு எரிச்சலூட்டிய விஷயம், கணவனின் மனப்போக்குதான். மாத்தித் தொலைச்சுட்டு போகவேண்டியதுதானே.. வீணா அந்தப் பெண்ணின் மனதை ஏன் இவ்வளவு வேதனைப்பட வைக்க வேண்டும் என்று தோன்றியது.

(இதுக்கெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கலாமான்னு அந்தம்மாவை திட்டி ஆணாதிக்கவாதியாகறது பிடிக்கல...)

*******************************

நாட்டரசன்கோட்டையில் கவியரசர் கம்பரது வீடு பராமரிக்கப்படாமல் கண்டுகொள்ளப்படாமல் முள்ளும், செடிகளும் மண்டி இருக்கிறதாம். அதே சமயம் கொச்சியில் வாஸ்கோடகாமாவின் கல்லறையில் இருந்து அவரது உடலை எடுத்துக் கொண்டு போய் போர்ர்சுகல்லில் பெரிய அளவில் கல்லறை எழுப்பி, தகுந்த பராமரிப்புகளுடன் பாதுகாத்து வருகிறார்களாம்!

இன்னொரு விஷயம்:

அமெரிக்காவில் Death Poet Society என்றொரு அமைப்பு 2008லிருந்து இயங்கி வருகிறது. இறந்துபோன கவிஞர்களையெல்லாம் ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

-------------------------

ந்த நண்பர் சில மாதங்களுக்கு முன் அழைத்தார்.

‘சாரு நிவேதிதாவோட புக்ஸ் படிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?’

‘ஒண்ணும் சொல்றதுக்கில்ல. படிங்க...’ன்னேன்.

‘சில புக்ஸ் பேர் சொல்லுங்க’ன்னார்.

‘கோணல் பக்கங்கள் எல்லா தொகுதிகளையும் படிங்க..’ என்று ஆரம்பித்து இருக்கட்டும் என்று ஸீரோ டிகிரியையும் சொல்லிவைத்தேன்.


‘சரி வாங்கிப் படிக்கறேன்...’ என்று வைத்துவிட்டார்.

சென்ற வாரம் அழைத்தார்.

‘கிருஷ்ணா.. அந்த புக்கு மட்டும் கிடைக்கல’ என்றார். அதெப்படி கிடைக்குமே.. இல்லைன்னா நான் வாங்கி அனுப்பறேன் என்று நினைத்தவாறே பேசிக் கொண்டிருந்தேன்.. நடுவே அவர் யாரு அந்த கிரி, எதுக்கு அவரைப் பத்தி சாரு எழுதினார்-என்று கேட்டபோது புரியாமல் முழித்து தொடர்ந்து பேசியபோதுதான் தெரிந்தது. நான் சொன்ன ஸீரோ டிகிரியை அவர் வேறு விதமாகப் புரிந்துகொண்டு கடைகளில் விசாரித்திருக்கிறார் இப்படி..

‘சாரு எழுதின ஈரோடு கிரி’ இருக்கா?’

**************************************

லுவலகத்தில் இரண்டு கடிகாரங்கள். ஒன்று ஃபாஸ்டாகவும், ஒன்று ஸ்லோவாகவும் நேரம் காட்டிக் கொண்டிருந்தது. யாரோ என்னது இது என்று கேட்க தோழி ஒருவர் சொன்னார்:

‘ஃபாஸ்டா ஓடற வாட்ச் நீங்க ஆஃபீஸுக்குள்ள வர்றப்ப டைம் பார்க்கறதுக்கு. மெதுவா ஓடறது வீட்டுக்குப் போறப்ப டைம் பார்க்கறதுக்கு...’


************************************

கீழே படத்தில் பெரிய சைஸில் இருக்கும் நண்பன் ரங்கராஜ். ஒரு வருடங்களாகப் பழக்கம். அலைபேசியில், மின்னஞ்சலில். வாடா போடா பழக்கம்! ஆனால் இரு வாரங்களுக்கு முன்தான் அவனை நேரில் பார்த்தேன். படத்தில் உடனிருப்பது கார்க்கியின் பப்லுபோல - இவனது தங்கை மகன் சூர்யா.

காமிக்ஸுகளின் ரசிகன். வீடு முழுவதும் வோட்கா பாட்டில்களில் பூச்சாடி வைத்திருக்கிறான். நேரில் பார்த்தபிறகுதான் தெரிந்தது... மனுஷன் செம பிஸி மேன். வாரத்தில் ஆறு நாட்களில் நான்கு ஊரில் இருக்கிறான். ரங்க்ஸுக்கு பெரிய தொழிலதிபராக வேண்டுமென்பது லட்சியம், ஆசை, அவா.

வாழ்த்துகிறேன் நண்பா.. உனக்குள் இருக்கும் தீயை அப்படியே அணையாமல் வைத்திரு!

(பதினைஞ்சு வருஷமா தம்மடிக்கறன்னு கேள்விப்பட்டேன்.. அந்தத் தீயை மட்டும் அணைச்சுடேன்.. ப்ளீஸ்...)

*******************************************

ட்விட்டர் அப்டேட்ஸ்:

# பெண்ணை ஆதிக்கம் செய்வது பெண்ணாதிக்கம்தானே.. அதில்கூட ஆணாதிக்கம் என்று தன்பெயர் வருமாறு ஆண்கள் எழுதுவது ஆணாதிக்கத்தின் உச்சம்!

# க்ரிக்கெட் ஸ்கோர் ஒவ்வொரு நிமிடத்துக்கும் அப்டேட் ஆகும். இதென்னடான்னா அரை மணி நேரமா ஒரே ஸ்கோரா இருக்கு.. போரிங்பா! #FIFA


# நான் போயிருந்தால் ஃபெட்னாவுக்குப் போன கிட்னா என்ற தலைப்பில் ஒரு வாரம் எல்லாரையும் அறுத்துத் தள்ளியிருக்கலாம்.. மிஸ்ஸிங்... #Fetna

# உதட்டில் அழுத்தமாய் முத்தம் கொடுத்தால் இரக்கமே இல்லையா என்கிறாள் தோழி. ர எனக்கு ற எனக் கேட்கிறது. #ஃபீலிங்ஸ்# சிங்கம் ரிலீஸான சில நாட்களிலேயே சூர்யா-ஜோவுக்கும் சிங்கம் ரிலீஸ் ஆனது. (மகன்) ஒருவேளை மகள் என்றால் பெண் சிங்கம் என்று ட்வீட்டியிருக்கலாம்.

# நகைக் கடையில் காசாளரிடம் பணம் கொடுக்க நீண்ட க்யூவைக் கண்டேன். கடைக்காரர்களின் வாங்கும் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

# //இன்றுடன் சொம்மொழி மாநாடு நிறைவு// பாதில இருக்கற ரோடு வேலை இன்னபிற-க்களை இனிமே என்ன பண்ணப்போறீங்கன்னு பார்க்கறோம் - கோவை மக்கள்.

# ஓரன் பாமூக்கின் ம்யூசியம் ஆஃப் இன்னொசன்ஸ், ஓஷோவின் த ந்யூ டா(வ்)ன், எஸ்.எல்.பைரப்பாவின் பருவம், ஜெயந்தன் கதைகள், ராஸலீலா,வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள், பஞ்சதந்திர கதைகள், கலைஞரின் தொல்காப்பியம் போன்ற பெரிய சைஸ் புத்தகங்களை இன்று எடுத்தேன். மகள்களின் ஸ்கூல் புக்கிற்கு அட்டைபோட்டேன். வெய்ட் வைக்க தேவைப்பட்டது... (மூன்று ட்விட்களின் தொகுப்பு)

# ஆணின் வெற்றிக்கு முன் பெண் இருக்கிறாள் எனலாமா இனிமேல்? பின்னால் என்றால் அதுவும் ஆணாதிக்கம் ஆகிவிடுமே?

# நமீதா தினமும் செலக்ட் செய்யும் நபரில் நான் இருக்க வாய்ப்பே இல்லை. அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். Only Non Celebrity என்று.

# ரொம்ப நேரமாக ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். என்ன வேண்டும் என்றார். ஒரு ட்விட்டுகாக நின்று கொண்டிருக்கிறேன் என்றேன். கிடைத்துவிட்டது.


**************************

Sunday, July 4, 2010

ஃபெட்னாவில் அப்துல்லா...

இந்திய நேரப்படி இன்று 04.07.2010 ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு நண்பர் எம்.எம்.அப்துல்லா FETNA விழாவில் படித்த கவிதை... உங்களுக்காக..

******************************************


தமிழ் நம் ஆதித் தாய்.
தமிழ் நமக்கு அகிலத்தை
அறிமுகம் செய்த தந்தை.
தமிழ் நம் அறிவை
விரிவு செய்த ஆசான்.
தமிழ் நாம் தினமும்
வழிபடும் தெய்வம்!

தமிழ் நம்மை நனைக்கும் மழை.
தமிழ் நம்மைத் தாங்கும் பூமி.
தமிழ் நாம் சுவாசிக்கும் காற்று.
தமிழ் நம்மைக் காக்கும் வானம்.
தமிழ் நம் உணர்வின் நெருப்பு.

தமிழ் உலகெங்கும் விதைத்துச்
செழிக்கும் விதை.
தமிழ் உலகெல்லாம்
கிளை விதித்த வேர்.
தமிழ் உலகெல்லாம்
கிளை விதைத்த வேர்.
தமிழ் உலகெங்கும்
பறக்க வைக்கும் சிறகு.
தமிழ் உலகையே
ஒன்றுபோலாக்கும் உறவு.

ஓலைச் சுவடிகளில் ஓய்வெடுத்த
நம் தமிழ்
அச்சுச் சிறகசைத்து
அகிலமெல்லாம் பறக்கிறது.

உயிர்பொருளாய் கருதும்
நம்மொழி
மென்பொருளாய் மாறி
மேதினியில் சிறக்கிறது.

இலக்கியங்களை
அடுக்கி வைத்தால்
இமயம்வரை உயர்கிறது.
இலக்கணங்கள் மாறாமல்
இளமையுடன் வளர்கிறது.எம்மொழி என்றாலும்
நட்புக்கொடி படர்கிறது.
செம்மொழி என்றாகி
சீர் பயணம் தொடர்கிறது.

அறிவியலை வளர்க்கிறது
எம் தமிழில்
அத்தனையும் இருக்கிறது.
புவியியலைக் கடந்தும்
பூலோகம் முழுதும் பரவி
புது வரலாறு படைக்கிறது.

திருக்குறக்குளாய் சூல் கொண்டு
இன்று ஹைக்கூவாய் மலர்கிறது.
திருப்புகழாய் ஒலித்து
இன்று திசையெல்லாம் ஜொலிக்கிறது.

ஆயகலைகள் அறுபத்தி நான்கோடு
அத்தனை கலைகளும்
கருக் கொண்டது தமிழில்தான்.
உருக்கொண்டு உலகெல்லாம்
கலை வளர்த்தது அதன் பின்தான்.

தமிழ்த் தாய்க்கு
ஆயிரம் கருப்பைகள்.
அதனால்தான் இலக்கியப் பிள்ளைகள்
அன்றாடம் பிறந்தபடி இருக்கின்றனர்.

தமிழ்த் தாய்க்கு லட்சம் கரங்கள்.
அதனால்தான்
நாடுகளைக் கடந்து
மதங்களை இணைத்து
மனங்களை அணைக்கிறது.

தமிழ்த் தாய்க்கு கோடிவிழிகள்.
அதனால்தான்
உலக வரைபடத்தின்
பூமிப் பரப்பெங்கும்
புத்தொளியாய்ச் சுடர்விடுகின்றது.

அன்னை மண்ணைவிட்டு
அயல் மாநிலம் சென்றாலும்
அயல் தேசம் சென்றாலும்
யாரொருவர் தமிழ் பேசி வந்தாலும்
நமக்குத் தாய்ப் பாசம் பொங்குகின்றது.
அன்பு நதி அங்கேயே தங்குகின்றது.

நிறங்கள் வேறு வேறு
மதங்கள் வேறு வேறு
வாழ்க்கை வேறு வேறு
வசிப்பிடம் வேறு வேறு
மொழி மட்டும் ஒன்றே ஒன்று.
அந்த மொழிதான் நம்மை இணைக்கிறது
ஒரே மழையில் நம்மை நனைக்கிறது.

உதடுகளில் தமிழ்
உட்கார்ந்து கொண்டால்
இதயத்தில் ஈரம் கசிந்து
அன்பு வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இரத்த நாளங்களில்
பாச மொழி பாய்கின்றது.

நாம் இருக்கிறோம்
வேறு வேறாய்.
நம்மை இணைக்கிறது தமிழ்
ஆணி வேராய்.

தாய்த் தமிழ்
வேர்களாய் இருக்கட்டும்.
நாம்
விதைகளாய்
விழுதுகளாய்
கிளைகளாய்
மலர்களாய்
காய்களாய்
கனிகளாய்
இலைகளாய்ப்
புதுத் தளிர்களாய்
வேர்களைக் காத்திடுவோம்.

பூக்கும் ஒவ்வோரு பூவையும்
வேர்களுக்கே பரிசளிப்போம்.

விழுதுகளுக்கு
விருதுகள் குடுப்போம்.

விதைகளைக் காத்து
புதுப்புது இடங்களில்
தாவிடுவோம்.

காய்,கனிகளை
ஒருவொருக்கொருவர்
பரிமாறிக் கொள்வோம்.

தளிர்களைத் தாலாட்டித்
தமிழ்ப்பாலைத் தாய்ப்பாலாய்க்
கொடுப்போம்.

வேர்கள் தமிழில்தான்
விரிந்து இருக்கின்றன.
விழுதுகளாய் உலகமெங்கும்
விளைந்து இருக்கின்றோம்.

வித்தியாசம் இல்லாமல்
விழுதுகள் நான் ஒன்றிணைவோம்
வேர்களை வனங்குவோம்.

வேர்களை
பலப்படுத்துவோம்

வேர்களுக்கு
நீர் பாய்ச்சி
உயிர்போல்
அதைக் காத்திடுவோம்.

தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் மட்டும் அல்ல
வேர்!வேர்!வேர்!

வாழ்க தமிழ்!வெல்க தமிழ்!!


.